Showing posts with label Daily Devotion ( தின தியானம்). Show all posts
Showing posts with label Daily Devotion ( தின தியானம்). Show all posts

Saturday, 27 March 2021

உணர்வில்லாத இருதயம் -Daily Devotion

  

Daily Devotion

உணர்வில்லாத இருதயம்


 "...உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்." 

(சங்.119:169) 


ஒரு சர்க்கஸில் கோமாளிகள் நின்று எல்லாரையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தனர்.


ஜனங்கள் தங்களையே மறந்து அவர்கள் செய்யும் கோமாளித்தனத்தை ரசித்து பார்த்து கொண்டிருந்தனர். திடீரென்று அந்த சர்க்கஸ் உரிமையாளர் முன்னே வந்து அந்த சர்க்கஸ் கூடாரம் தீப்பிடித்து இருப்பதாகவும், உடனே எல்லாரும் வெளியேறும்படியும் கேட்டுக் கொண்டார். ஆனால் ஜனங்களோ இதுவும் ஒரு சிரிப்புக்காக சொல்லப்படும் காரியம் என்று நினைத்து இன்னும் சிரிக்க ஆரம்பித்தனர். அந்த முதலாளியோ எல்லாரையும் வெளியேறும்படி கெஞ்ச ஆரம்பித்தான்.


 தீ கொழுந்துவிட்டு எறியத் துவங்கியது, பின்னர் தான் மக்களுக்கு புரிய வந்தது. அது சிரிப்புக்காக அல்ல, நிஜம்தான் என்று. ஆனால் ஏற்கனவே, கொட்டகை முழுவதும் தீப்பிடித்து விட்டபடியால் உயிர் பிழைத்தவர்கள் மிகவும் குறைவானவர்களே.


சுகபோகமாய் வாழ்ந்த ஒரு பணக்காரனைக்குறித்து வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. அவன் வீட்டு வாசலில் கொடிய பருக்களோடு பிச்சை எடுத்துக்கொண்டிருந்த லாசருவின் மேல் மனமிரங்கவில்லை. அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வுள்ள இருதயமும் இல்லை. 

மரணம் வரை அவன் இருதயம் உணர்வற்றே காணப்பட்டது. இருவருமே மரித்தார்கள்.


லாசரு பரலோகத்தில்! ஐசுவரியவானோ நரகத்தில்! இப்போதுதான் ஐசுவரியவானுக்கு உணர்வுள்ள இருதயம் வருகிறது. தன்னைப்போல பூமியில் வாழும் தன் சகோதரருக்காக வருத்தப்படுகிறான். அவர்களிடம் லாசருவை அனுப்பும்படி கேட்டுப்பார்க்கிறான், ஆனால் முடியவில்லை.


மேற்கண்ட இரு சம்பவங்களை நாம் பார்க்கும்போது, அற்பமான சந்தோஷத்திற்காக ஜனங்கள் இருதயத்தில் உணர்வில்லாமல் இருந்தனர். ஐசுவரியவான் தனக்கு ஐசுவரியம் கொடுத்த ஆண்டவரை நினைக்காமல்  இருதயத்தில் உணர்வில்லாதவனாய் வாழ்ந்து மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்,


ஆம் பிரியமானவர்களே!

 நமக்கு உணர்வுள்ள இருதயம் வேண்டும். நமக்கு பூமியில் வாழ்வதற்கு கொடுக்கப்பட்ட நாட்கள் மிகவும் சொற்பமான நாட்கள்தான். அந்த நாட்களில் உணர்வுள்ள மனசாட்சியோடு வாழ்வோம். 

நம் அருகில் இருக்கின்றவர்களுக்கு நம்மால் இயன்ற மட்டும் உதவிகள் செய்வோம். உதவிகள் இல்லாமல், ஆதரவற்று இருக்கும் அநேகருக்கு இயேசுவின் அன்பை வெளிப்படுத்துவோம். அழிவு வரும்வரை உணர்வற்று இருப்போமானல் வரும் கோபத்திற்கு எப்படி தப்பித்துக் கொள்ள முடியும்.

தேவனே உணர்வுள்ள இருதயத்தை எங்களுக்கு தாரும்……





Wednesday, 24 March 2021

நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பாதை -Daily Devotion

 Daily Devotion


நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பாதை


பிலிப்பியர் 2:15

கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமா இருக்கும்படிக்கு,



மற்ற மனிதர்கள் செய்யும் தவறுகளில் நாம் இடறலடையாதபடிக்கு நம் சமாதானத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நெடுஞ்சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் ஒரு வாலிபன் தான் நினைத்தபடி வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான். அறிமுகம் இல்லா ஒருவன் அவனுக்கு பலமுறை புத்திமதி கூறியும் அதை அவன் பொருட்படுத்தாமல், முன்பு செய்தது போல செய்து வந்தான். அந்த வாலிபனின் நிலையை கண்ட அந்த மனிதன் குழப்பமடைந்தான் மனம் சலித்து வேதனை கொண்டான்,


இந்த சம்பவத்தில் அந்த வாலிபனே குற்றம் செய்து திரிகின்றான், ஆனால் அந்த வாலிபனின் செயல்களினால் குற்றம் செய்யாத அந்த மனிதன் தான் தன் சமாதானத்தை கெடுத்துக் கொண்டான். 

இந்த சம்பவத்தை நம் வாழ்க்கையோடு இணைத்து சிந்தித்துப் பார்ப்போம். சபையிலுள்ள மனிதன் ஒருவன் தேவனுக்கு எதிரான காரியம் ஒன்றை செய்து விட்டான். அது தவறு என்று அறிந்தும், ஆலோசனைகளை தள்ளிவிட்டு, மனந்திரும்ப மனதில்லாமல் தான் செய்வதை துணிகரமாக செய்து வந்தான். தனக்கும் தேவனுக்கும் இடையிலுள்ள உறவை அவன் உடைத்துப் போடுவதால், அந்த மனிதன் தன் ஆத்துமாவிற்கு

 கேடு விளைவித்துக் கொள்கின்றான்,

அந்த மனிதனின் வாழ்வைப் பார்த்து நாம் இடறல் அடைந்து போகக் கூடாது. மோசே என்னும் தேவ ஊழியர், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை அழைத்து சென்ற போது, அவர்கள் மத்தியிலும் கலகக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகின்ற இருதயமுடையவர்களாக இருந்தார்கள். 


ஆனாலும் காலேப்பு, யோசுவா போன்ற மனிதர்கள் தங்கள் இலக்கின் மேல் தங்கள் கண்களை பதிய வைத்திருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் கலகம் செய்த போதும் அவர்கள் இடறலடையவில்லை. 

தேவனையே நம்பி இருந்தார்கள். அதுபோல, நாமும் நம் கண்களை இயேசுவின் மேல் பதிய வைக்க வேண்டும். 

நமக்கு நியமித்திருக்கிற பாதையில் பொறுமையோடே ஓடக்கடவோம்;. ஒரு வேளை பலர் வழி விலகி போனாலும் அதை குறித்த நம் இடறல் அடையமால் நாம் மாசற்றவர்களாக, தேவ சித்தத்தை நிறைவேற்றுகிற பாதையில் நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பாதையில் சாாியாய் ஒடக்காடவோம் .ஆமேன்….



Tuesday, 23 March 2021

சாதிக்க தேவை சாதக சிந்தை - Daily Devotion

 Daily Devotion 


சாதிக்க தேவை சாதக சிந்தை

                Bro.Felix

 


அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்.

(நீதி 23:7)


சிந்தை சக்தி வாய்ந்தது 

நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகத்தான் நாம் இருக்கிறோம். நாம் இனி என்ன ஆகப்போகிறோம் என்பதையும் அது நிர்ணயிக்கிறது.

 'ஒரு காரியத்தை செய்ய முடியும் என்று நம்பினாலும், அந்த காரியத்தை செய்ய முடியாது என்று நீங்கள் நம்பினாலும் இரண்டும் சரிதான்'

 என்றார். - ஹென்றி போர்டு.


ஒரு மனிதன் பல வண்ண பலூன்களை பறக்க விட்டுக் கொண்டிருந்தான். ஒரு சிறுவன் வந்து அவனுடைய

சட்டையின் ஓரத்தை பிடித்திழுத்தான். உடனே அந்த மனிதன் திரும்பி பார்க்க சிறுவன் கேட்டான், இந்த கருப்பு பலூன்கூட பறக்குமா?'

அதற்கு அந்த மனிதன், 'மகனே வெளியே தெரியும் வண்ணம் அல்ல அதை பறக்க வைப்பது, உள்ளே உள்ள காற்று' என்று பதிலளித்தான்.

 நம்முடைய வாழ்க்கையிலும் கூட நமக்கு வெளியே என்ன நிகழ்கிறது என்பது முக்கியமல்ல, வெளியே நடப்பது உள்ளே என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதே முக்கியம்.


மாற்றக்கூடியவை, மாற்றக்கூடாதவை என இரண்டு விஷயங்கள் வாழ்க்கை எங்கும் பரவிக்கிடக்கிறது. 

அப்பா, அம்மா, உடன் பிறப்புகள், இவையெல்லாம் மாற்ற முடியாதவை அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவைகள். ஆனால் பழக்கவழக்கங்கள், பிரச்சனைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் இவையெல்லாம் மாற்றக்கூடியவைகள்.


நான் ரசித்த ஒரு ஜெபம் பின்வருமாறு இருந்தது. 


ஆண்டவரே! என் வாழ்வில் மாற்றக்கூடாதவைகள்

எவைகளோ அவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும்

பக்குவத்தையும், மாற்றக்கூடியவைகள்

எவைகளோ அவைகளை மாற்றுவதற்கான தைரியத்தையும்,

எவை மாற்ற முடியாதவை? எவை மாற்றக்கூடியவை? என்று பகுத்தறியும் ஞானத்தையும் எனக்குத் தாரும்.


உன் விசுவாசத்தின்படி உனக்கு ஆகக்கடவது" (மத் 9:29) என்பதே வேதாகம விதி.

 உங்களால் வெற்றி பெற முடியும் என்பதை நீங்கள் முழுமையாய் நம்பி அதையே சிந்திப்பீர்கள் என்றால், என்ன நடந்தாலும் பரவாயில்லை. உங்கள் இலக்குகளை நோக்கி நீங்கள் தொடர்ந்து கொண்டிருப்பீர்கள், எதுவும் உங்களை தடுக்க முடியாது. ஆனால் அநேகர் பயத்தையும், சந்தேகத்தையும் சிந்தித்து, எதிர்பார்த்து அதை பெற்றுக் கொள்கிறார்கள். நாம் எப்பொழுதும் எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அது நமக்கு கிடைத்து விடுகிறது என்பது உண்மையான விஷயம்.


இதில் சாதக சிந்தனையாளர்கள், பாதக சிந்தனையாளர்கள் என்று மக்களை இரண்டு பிரிவாக பிரிக்கலாம்.


சாதக சிந்தனை என்றால் என்ன? (Positive Thinking)


“ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இவன் எம்மாத்திரம் என்றான்

 (1 சாமு 17:26).

 தாவீது ஒரு சாதக சிந்தை உடையவன். ஆகவே மற்றவர்கள் கோலியாத்தை 'எவ்வளவு உயரம்' என்று பிரமிக்க, தாவீது மட்டும் ‘எம்மாத்திரம்' என்று அற்பமாக பார்க்கிறான்.


சாதக சிந்தனையாளர் என்றால் தங்கள் சிந்தையை ஆள்பவர்கள், பாதக சிந்தனையாளர் என்றால் தங்கள் சிந்தையின் வேலையாட்கள், 


'இருள் அதிகமாகும் பொழுது தான் நட்சத்திரங்கள் பிரகாசிக்கின்றன' என்றார் ஒரு அறிஞர். 

இது போன்ற சாதக சிந்தை நமக்கு நிச்சயம் தேவை. “ஐயோ இருள் என்பார்கள் தோல்வி மனப்பான்மை கொண்டவர்கள். அற்புதமான நட்சத்திரங்கள்' என்பார்கள் வெற்றியின் சிந்தனையை உடையவர்கள். இருவரும் ஒரே வானத்தைதான் பார்த்தார்கள். பிரச்சனைகளை நாம் பார்க்கும் விதத்திலேயே நம்முடைய வெற்றி அமைகிறது. பள்ளங்களை பார்த்து 'அவ்வளவுதான் நம் பயணம் முடிந்தது' என்பான் பாதக சிந்தை கொண்டவன். 

ஆஹா! ஒரு பாலம் அமைக்கும் வாய்ப்பு இதுதான்' என்பான் சாதக சிந்தனை கொண்டவன். இப்படிப்பட்டவர்களை பிரச்சனைகள் சந்திக்கும், ஆனால் சிதைக்காது. “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. 

கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை (2 கொரி 4:8, 9) இது வெற்றியாளர்களின் முழக்கம்.


பிரச்சனைகளை சிறியதாக பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நம்முடைய தேவன் மிகப்பெரியவர். சிலர் சிறியதை பெரியதாய் காட்டும் கண்ணாடியை அணிந்து பார்க்கிறார்கள். லென்ஸை மாற்றுங்கள். பெரியதை சிறியதாய் காட்டும் கண்ணாடி அணிந்து பிரச்சனைகளை பார்க்க வேண்டும்.


'கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால்... உங்களால் கூடாத

காரியம் ஒன்றுமிராது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்"

 (மத் 17:20) என்றார்

இயேசு முடியும் என்றால் முடியும். அதுதான் சாதக சிந்தை 

(If you think You Can, You Can).


அமெரிக்க ராணுவத்தில் உள்ள ஒரு வாசகம், 'கடினமானதை உடனே செய்வோம், முடியவே முடியாது என்பதை சற்று பொறுத்து செய்வோம்'

முடியாது என்பதற்கு விசுவாசம் விடுமுறையில் சென்று விட்டதாக என்று அர்த்தம்.


வேதத்தில் ஓர் எடுத்துக்காட்டு


கானான் என்ற பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை சுற்றிப் பார்ப்பதற்கு பன்னிரெண்டு பேரை மோசேஅனுப்பினான். அவர்கள் அனைவரும் ஒரே தேசத்தைதான் பார்த்தார்கள். ஆனால் வித்தியாசமான பதிலோடு வந்தார்கள். காலேபும், யோசுவாவும் “நாம் உடனே போய் அதை சுதந்தரித்துக் கொள்வோம், நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்" என்று சாதக அறிக்கையை சமர்ப்பித்தார்கள். ஆனால் மீதமுள்ள பத்து பேர்களும் “நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய் வந்தோம். அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான். 

இது அதினுடைய கனி. ஆனாலும்... (எண்ணா 13:27 ) "... நாம் போய் அந்த ஜனங்களோட எதிர்க்க நம்மாலே கூடாது அவர்கள் நம்மைப் பார்க்கிலும் பலவான்கள் (எண்ணா 13:31) 

நல்ல தேசம் ஆனால் தேவையில்லை. நம்மால் முடியாது. முடியாததற்கு ஆசைப்பட வேண்டும், போராடமல் இலகுவாக ஏதாவது கிடைத்தால் அது போதும், பாலும் தேனும் ஓடுகிற சிறந்த தேசத்தை வேறு யாராவது எடுத்துக்கொள்ளட்டும்என்பதுதான் பாதகச் சிந்தனையாளர்களின் அறிக்கை.


பிற்பாடு இந்த பாதக அறிக்கை செய்த பத்து பேரும் வனாந்தரத்தில் மரித்துப் போனார்கள். சுதந்தரிப்போம் என்று சொன்ன யோசுவாவும், காலேபும் மாத்திரம் கானானுக்குள் பிரவேசித்தார்கள். ஆம்! அவரவர் சிந்தித்தது அவரவர்களுக்கு நிறைவேறியது.


பயத்தை மேற்க்கொள்வோம்


பொதுவாக பாதக சிந்தை ஏற்பட இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று தோல்வி பயம்

 (Fear of Failure) மற்றொன்று நம்மை குறித்து நாம் வைத்துள்ள குறைந்த மதிப்பீடு (Low Self-esteem).


மோதிப் பார்க்கும் முன்பே தோற்றுவிடுவோம் என்று முடிவு செய்வதுதான் தோல்வி பயம். இந்த பயம் நம்முடைய கற்பனை சக்தியை தடை செய்கிறது. நம்முடைய மூளையை சிந்திக்கத் தூண்டாமல், உறைய வைத்து விடுகிறது. பயப்படும் 

சமயத்தில் நம் கண் எதிரில் இருக்கும் வாய்ப்புகூட நமக்கு மறைக்கப்பட்டு விடுகிறது. இஸ்ரேவேல் படை வீரர்கள் அனைவரும் நாற்பது நாட்களாக கோலியாத்தை பார்க்கிறார்கள். அவர்களுக்கு அவன் அணிந்திருந்த தலைசீராகவும், மார்க் கவசமும், கையில் பிடித்திருந்த பட்டயமும், காலில் அணிந்திருந்த பெரிய பாதரட்சையும் தான் தெரிந்தது. அதை பார்த்துதான் அவர்கள் பயந்து போனார்கள். அவன் உயரத்தை பற்றி பேசி இன்னும் அவனை உயர்வாய் பார்த்தார்கள். ஆனால் தாவீது அன்றுதான் பார்த்தான். அவன் பதறாமல், பயப்படாமல் பார்த்தான். அவனுக்கு இவன் உடலை மறைத்திருந்த கவசங்கள் தெரியவில்லை. மாறாக சிரசில் மறைக்கப்படாமல் இருந்த ஒரு சின்ன இடம் அவனுக்கு தெரிந்தது. அந்த நெற்றி பகுதியில் கல் அடித்து வெற்றி பெற்றான்.


பல சமயங்களில் நாம் பதற்றமுற்றவர்களாய் நம் அருகில் கிடைக்கும் வாய்ப்பை விட்டுவிட்டு நமக்கு எது தேவையில்லையோ அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


இவ்வுலகில் பயப்படுவதற்கு எதுவுமில்லை, ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான். 

பொதுவாக நமக்கு தெரியாததை குறித்தே நாம் பயப்படுகிறோம். (Fear of Unkown). “பலங்கொண்டு திடமனதாயிரு" என்ற வாக்கியம் வேதத்தில் அடிக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. 'ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்'' (எபி 10:35).


தோல்வியை விட தோற்றுவிடுவோம் என்கிற பயம்தான் மோசமானது என்பது உங்களுக்கு தெரியுமா? தோற்காமல் யாரும் ஜெயித்தது இல்லை. ஒரு கம்பெனி நிர்வாகி தன் அலுவலர்களுடன் பேசும் பொழுது இப்படி சொன்னார், 'நான் உங்கள் எல்லோரையும்விட அதிக வெற்றி பெற்றவன் என்பது உண்மைதான், ஏனென்றால் உங்கள் எல்லோரையும்விட அதிக முறை தோல்விகளை சந்தித்து எழுந்துள்ளேன்.'


தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்


'நீ ஒன்றுக்குமே உதவமாட்டாய், நீ எதை செய்தாலும் அது உருப்படாது, உன்னைவிட அவன் எவ்வளவோ மேல், நீ வாழ்க்கையில் முன்னேறினால் அது உலகில் எட்டாவது அதிசயம்' இப்படி சிறுவயது முதல் பெரியவர்கள் சிறியவர்களை

குறித்து கூறும் வார்த்தைகள் அவர்கள் மனங்களில் புதிய பிள்ளைகள் அதை உண்மை என்று நம்பிவிடுகிறார்கள். அதனால் அவர்களை குறித்த ஓர் குறைந்த மதிப்பீட்டை உருவாக்கிக் கொள்கிறார்கள்.


ஒரு முறை ஒரு தம்பி என்னிடம், 'அண்ணன், உங்களுக்கு என் எதிரியை காட்டுகிறேன்' என்று சொல்லி கண்ணாடி முன் நின்று இவன் தான் என் எதிரி என்று அவனுடைய உருவத்தையே காட்டினான். 

'தம்பி உனக்கு நீயே எதிரியாக இருக்கும் வரை முன்னேறுவது என்பது முடியாத காரியம்' என்று நான் சொன்னேன்.


கானானை சுற்றிப்பார்க்க சென்று பாதக அறிக்கையோடு திரும்பி வந்தவர்கள் 'நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப் போல் இருந்தோம்' என்று சொன்னார்கள். இதுதான் குறைந்த மதிப்பீடு. நம்மால் இந்த பிரச்சனையை சமாளிக்க முடியாது என்று சிந்தித்தோமானால் பிரச்சனை பல மடங்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கும். 


ரோஜர் பானிஸ்டர்


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ படிப்பு மாணவர். 

அவர் 1954-ஆம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி ஒரு மைல் தூரத்தை மூன்று நிமிடம் ஐம்பத்தி ஒன்பது வினாடிகளில் அடைந்தார். அப்பொழுது அது இமாலய சாதனை. 

ஏனென்றால் அதுவரை, நான்கு நிமிடத்திற்குள் ஒரு மனிதனாலும் ஒரு மைல் தூரத்தை கடக்க முடியாது, அப்படி கடந்தால் இதயம் வெடித்து விடும் என்று வல்லுனர்கள் அறுதியிட்டு கூறியிருந்தார்கள். 

ஆனால் ரோஜர் ஓடி கடந்தபிறகு இன்று உயர்நிலை பள்ளி மாணவன்கூட சாதனையை செய்கிறான்.


நம்முடைய உலகத்தின் தவறான கொள்கை, தவறான தகவல்கள் அடிப்படையில் நம்முடைய மனதில் நம்மை பற்றிய குறைந்த மதிப்பீடு பதிக்கப்பட்டுள்ளது. இதை நாம் மாற்றி ஆக வேண்டும். நல்ல செய்தி என்னவென்றால் நம்மால் அதை மாற்ற முடியும் என்பதே.


சிந்தையை சரி செய்ய முடியும்


தோல்வி என்பது ஒரு மனநிலையே அல்லாமல் வேறொன்றுமில்லை...... 


"உங்கள் மனம் புதிதாகிறதினாலே 

மறுரூபமாகுங்கள்'' (ரோமர் 12:2) 


நம் சிந்தையை சரி செய்வதன் மூலம் நம் வாழ்க்கையை சரி செய்ய முடியும் என்பதுதான்.

 இந்த தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு. சிந்தை என்பது நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ளது. தவறான சிந்தையை தொடர்ந்து செயல்பட அனுமதிப்பதும் அதை தடுத்து நிறுத்துவதும் நம்முடைய பொறுப்பில் உள்ளது. 

நம்முடைய கையை உயர்த்துவதும், கீழே போடுவதும் எப்படி நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ளதோ அது போலதான் சிந்தையும் நம் கட்டுப்பாட்டில் உள்ளது. எதை சிந்திக்க வேண்டும், எதை சிந்திக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும் உரிமை நம்மிடத்தில்தான் உள்ளது.

 பவுல் சொல்வதை கேளுங்கள், “கடைசியாக சகோதரரே, உண்மையுள்ளவைகள் எவைகளோ, ஒழுக்கமுள்ளவைகள் எவைகளோ, நீதியுள்ளவைகள் எவைகளோ, கற்புள்ளவைகள் எவைகளோ, அன்புள்ளவைகள் எவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகள் எவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ, அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்'

' (பிலி 4:8).


சுற்றம் காப்போம்


நாம் சாதக சிந்தை உள்ளவர்களாய் (Positive Thinking) பேசும்பொழுது எல்லோரும் வரவேற்கமாட்டார்கள். நம்மை அகங்காரம் பிடித்தவர்கள், உலகம் தெரியாதவர்கள், கவலையில்லாதவர்கள் என பலவாறு வர்ணிப்பார்கள், 

தாவீது கோலியாத்தை எதிர்க்க எண்ணியபொழுது அவனுடைய அண்ணன்மார்கள் கைதட்டி அனுப்பவில்லை. அவன் மூத்த சகோதரனாகிய எலியாப்

 “உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன்" என்றான்.

 (1 சாமு 17:28)


நம்முடைய தைரியத்தை குலைப்பவர்களுடன் வாழ்வதை விட மரித்த பிணங்களின் நடுவில் வாழ்ந்துவிடலாம். எப்பொழுதும் தோல்வியையும், பயத்தையும் பேசும் நபருடன் இருக்கும் உறவை உடனடியாக வெட்டிவிடுவதுதான் உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது.


"தாவீது அவனை விட்டு வேறொருவன் இடத்தில் திரும்பி," (1 சாமு 17:29).

பல சமயங்களில் நாம் சரியான நபர்களோடு சரியான நேரத்தில் தொடர்பு வைக்காததினால் அற்புத வாய்ப்புகளை இழந்து போகிறோம். 


மரியாளுக்கு நற்செய்தி கொண்டு வந்த தூதன் அவள் தொடர்ந்து அங்கே இருந்தால் மற்றவர்களுடைய பாதக பேச்சால் பாதிக்கப்படுவாள் என எண்ணி எலிசபெத்து இருக்கும் இடத்திற்கு போகும்படி அவளை அனுப்பிவிடுகிறான். 

ஏனெனில் எலிசபெத்து ஏற்கனவே அற்புதத்தை அனுபவித்தவள். அவளால்தான் சாதக சிந்தையோடு பேசமுடியும். அற்புத சூழ்நிலையை உருவாக்க முடியும்.


தோற்று போகிறவர்கள் ஒருநாளும் வெற்றியாளர்களை பாராட்டமாட்டார்கள். உங்களை சோர்ந்து போகப் பண்ணுகிறவர்களை விட்டு விலகுங்கள்.


தோல்வியையே பேசுபவர்களிடத்தில் உங்கள் தரிசனத்தை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

 

உங்களை ஊக்குவிப்பவர்கள் உங்களை சுற்றி இருக்கட்டும். 'உன்னால் முடியும், தேவன் உன்னோடு இருக்கிறார். நீ தான் பராக்கிரமசாலி, உனக்கு இருக்கும் பெலன் போதும்' என்று சொல்லக் கூடியவர்களிடத்தில் உங்கள் தரிசனத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்; அசாதாரண வாழ்வை ஆரம்பியுங்கள்..




Sunday, 21 March 2021

கவலைக்குரிய ‘வேரை’ அகற்றுங்கள்! ( சகரியா பூணன்) - Daily Devotion

  Daily Devotion


கவலைக்குரிய ‘வேரை’ அகற்றுங்கள்!


 ( சகரியா பூணன்)



இயேசு கற்பித்தபடி,நம்முடைய தேவைக்காகவும், பிறருடைய தேவைக்காகவும் வாழும் 

வாழ்க்கையை விட்டு விலகி, பண ஆசையில் சிக்குபவர்களுக்கு நிச்சயம் ஏராளமான 

பிரச்சனைகளும் கவலைகளும் தோன்றத்தான் செய்யும்! 

"பண ஆசை எல்லாத் 

தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு 

வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்" என 

பவுல் மிக அருமையாய் சத்தியத்தை எடுத்துரைத்தார்.

(1தீமோ 6:10).இவ்வாறெல்லாம் பண ஆசையும், உலகப் பொருட்களின் மோகமும் ஜனங்களை 

கேட்டுக்குள் நடத்தும் என்பதை இயேசு அறிந்தே "உலகப்பொருட்களுக்கு ஊழியஞ் 

செய்யக்கூடாது" என எச்சரித்து, அதன் தொடர்ச்சியாக "ஆகையால்..... 

கவலைப்படாதிருங்கள்" என தொடர்புபடுத்தி பேசினார் (மத்தேயு 6:24,25). 

எப்போதெல்லாம் உங்களுக்கு கவலை வருகிறதோ, அப்போதெல்லாம் உங்கள் இருதயம் பூமிக்குரிய 'ஏதோ ஒன்றின் மேல்' நாட்டம் கொள்ள முயல்கின்றது என்பதைச் 

சுட்டிக்காட்டும் தெளிவான அறிகுறியாகும்! 


நாம் இப்போது என்ன செய்யவேண்டும்? உங்கள் எல்லாப் 

பொக்கிஷங்களையும் பரலோகத்திற்கு மாறுதல் செய்து விடுங்கள்!இது ஒன்றே 

நீங்கள் கவலையிலிருந்து விடுதலையாவதற்குரிய மாறாத நித்திய வழியாகும். 


அதாவது, கவலையின் வேரை அகற்றுவதற்கு ஒப்பாகும்! நீங்கள் மிகவும் அதிகமாய் 

நேசிக்கும் உங்கள் பிள்ளையைக் கூட, தேவனுக்கே திருப்பிக் 

கொடுத்துவிடுங்கள்! உங்களுக்கு மிகவும் பிரியமாய் தோன்றும் அனைத்து இவ்வுலக உடைமைகளையும் தேவனிடமே கையளித்து விடுங்கள்!! அவர் அதை என்ன 

செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரோ அதை அவர் செய்வதற்கு, அவருக்கு முழு 

சுதந்திரம் கொடுத்துவிடுங்கள். 

அவர் விரும்பினால், உங்களின் உலகப் பொருட்கள் 'திருடப்படுவதற்குக்கூட' 

அவர் அனுமதிக்கலாம்! 

அல்லது, அவைகள் உடைந்துநாசமாவதற்கும் 

அனுமதிக்கலாம்! 


இவ்வாறு நம்முடைய எல்லா விருப்பங்களையும் இப்பூமிக்குரியவைகளிலிருந்து 

விலக்கி பரலோகத்தில் மாற்றிவிட்டால், நாம் கவலை கொள்வதென்பது, 

ஒருக்காலத்தும் சம்பவித்திடாது! 


நாம் எப்போதும் 'இயேசு எதை வலியுறுத்தினாரோ' அதை கைக்கொள்ள கவனம் 

கொண்டிருக்க வேண்டும்! ஆகாரத்திற்காக கவலைகொள்ள வேண்டாம் 

என்றும்,"ஆகாரத்தைப்பார்க்கிலும் "ஜீவன்"விசேஷித்தவை அல்லவா?" (மத்தேயு-6:25)என்றே இயேசு இங்கு வலியுறுத்தினார்.


 ஜீவன் என்பது, இயேசுவின் 

ஜீவியமே ஆகும். உங்களுக்கு இயேசுவிடமிருந்த தாழ்மையின் "ஜீவியம்" வேண்டுமா? அல்லது கொழுத்த உணவுப் பதார்த்தங்கள் வேண்டுமா? இன்று ஜனங்கள் 

தங்கள் ஜீவியத்தில் கிறிஸ்துவைப் போலவே மறுரூபமாக

 வேண்டும் என்ற "ஜீவிய"ஆர்வத்தைக்காட்டிலும், உணவின்மீதே அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள்.


கிறிஸ்துவைப்போன்று வாழும் ஜீவியத்தைக்காட்டிலும் உணவா விசேஷித்தவைகள்? 

நிச்சயமாய் இல்லை! 


இவ்வாறு இயேசு காண்பித்த வழியில் சென்ற யாவரும், 

கவலையின் வேரை அகற்றி வாழ்ந்திருக்கிறார்கள்.... நாமும் வாழ்ந்திட முடியும்!!






Saturday, 20 March 2021

திருப்தியான வாழ்வு - Daily Devotion

 Daily Devotion


திருப்தியான வாழ்வு



என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; 

எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்பதியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். 

 (பிலிப்பியர் 4:11-12).



ஒரு சிற்பி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதில் உருவத்தை செதுக்க ஆரம்பித்தார். தலைக்கு மேலே சூரிய வெப்பம் அவரை தாக்கவே, 'சே, இது என்ன வாழ்க்கை, எப்போது பார்த்தாலும், இந்த வெயிலில் நின்று இந்த உளியை கையில் வைத்து செதுக்கி கொண்டே இருக்கிறேனே! எனக்கு வேறு நல்ல வேலையும், எளிதாக அதிகமாக சம்பளமும் கிடைத்தால் நன்றாக இருக்குமே' என்று நினைத்தார். அப்போது அந்த வழியாக அந்த நாட்டு ராஜா குதிரையில் வருவதை கண்டார். ஆ, இந்த ராஜாவை போல் தானிருந்தால் எத்தனை நலமாயிருக்கும் என்று எண்ணினார், என்ன ஆச்சரியம், உடனே அவர் ராஜாவாக மாறினார். அவர் குதிரையில் பயணித்து கொண்டிருந்தபோது, சூரிய வெப்பம் அவர் மேல் அதிகமாக பாய்ந்தபோது, இந்த சூரியன் தான் இந்த ராஜாவை விட பெரியது என்று நினைத்த மாத்திரத்தில், உடனே சூரியனாக மாறினார். அப்படி சூரியனாக பிரகாசித்து கொண்டிருந்தபோது, ஒரு மேகம் தோன்றி, பூமியின்மேல் மழையை பொழிந்தது. தண்ணீரை அடித்து கொண்டு போகிறபோது, ஒரு பெரிய கல்லை தவிர வேறு எல்லாவற்றையும் அது போகிற வழியில் அடித்து கொண்டு சென்றது. உடனே அந்த சிற்பி, ஆ, அந்த கல்தான் மிகவும் உறுதியானது, என்னவந்தாலும் அசையவில்லையே என்று நினைத்த மாத்திரத்தில் உடனே ஒரு பெரிய கல்லாக மாறினார்.


அப்போது ஒரு சிற்பி, ஒரு உளியையும், சுத்தியலையும் கொண்டு வந்து, அந்த கல்லை செதுக்க ஆரம்பித்த போதுதான், அந்த சிற்பிக்கு தன்னுடைய நிலைமையும், தான் எவ்வளவு வல்லமையுள்ளவர் என்பதும் தெரிய வந்தது.


நம்மில் அநேகர் நமக்கு இருக்கிற வசதிகளையும், தேவன் நமக்கு கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களையும் கண்டு, திருப்தி அடைவதில்லை. மற்றவர்களை பார்த்து, அவர்களை போல எனக்கு இல்லையே என்று அதிருப்திபடுகிறவர்களாகவும், அப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று முறையிடுகிறவர்களாகவும் காணப்படுகிறோம். என்னதான் நன்றாக கணவர் வாங்கி தந்திருந்தாலும், அந்த பெண் அணிந்திருப்பது போல இல்லையே என்று குறைசொல்வது சில பெண்களுக்கு இயல்பாகவே காணப்படுகிறது.

 நாம் இருக்கிற நிலைமை நினைத்து திருப்தி அடைவதேயில்லை! எவ்வளவு தான் சம்பளம் உயரட்டும், இன்னும் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எதிர்ப்பார்ப்பது மனிதனின் இயல்பாக மாறிவிட்டது. அந்த சம்பளத்திற்கு ஏற்ற வேலை செய்கிறோமா என்று பார்த்தால், நிச்சயமாக இல்லை.


பவுல் சொல்கிறார், 'என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்பதியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்' என்று. நாம் எந்த நிலைமையில் இருந்தாலும், நாம் மனரம்மியமாக இருக்க கற்று கொள்ளும்போது, தேவன் அதில் மகிழ்ந்து, நம்மை இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்கிறார். தேவன் நம்முடைய பெலவீனங்களை அறிந்திருக்கிறபடியால், நம்மை ஒருபோதும் கைவிடாதவராக நம்மை தாங்கி வழிநடத்த வல்லவர். அவரே நம் தேவைகளில் அவைகளை சந்தித்து, நம்மை அதிசயமாய் வழிநடத்துவார்.


எகிப்திலிருந்து கானானுக்கு சென்ற இஸ்ரவேலர் கர்த்தரையே சார்ந்து ஜீவித்தபடியால், நாற்பது வருடங்கள் அவர்கள் வனாந்தரத்திலே இருந்தபோதும், அவர்களுக்கு ஒரு குறையையும் தேவன் வைக்கவில்லை. அங்கு அவர்களுக்கு சென்னை சில்க்ஸ் மாதிரியும், போதீஸ் டெக்ஸ்டைல் மாதிரியும், கடைகளும், செருப்பு கடைகளும் இல்லை. ஆனால் சிறுபிள்ளைகள் வளர்ந்தபோது, அவர்கள் துணிகளும் அதற்கேற்றாற்போல பெரிதானது. செருப்புகளும் பெரிதானது. அவர்களுக்கு சாப்பிட மாம்சம் வேண்டும் என்று கேட்ட போது, கீழ்காற்று சிவந்த சமுத்திரத்திலிருந்து, காடைகளை கொண்டுவந்து போட்டது. மாராவின் கசந்த தண்ணீர் மதுரமாக மாறியது. ஒருவரும் வியாதிபடுக்கையில் படுக்கவில்லை. கர்த்தர் அதிசயவிதமாக சந்தித்தார். 

அதே தேவன் நம் தேவனாய் மாறாதவராய் இருக்கிறபடியால் நாம் அவரை சார்ந்து கொள்கிறபோது, நம் தேவைகளை அதிசயமாய் சந்திப்பார். நாம் மற்றவர்கள் போல இல்லையே என்று முறுமுறுக்க தேவையில்லை, கர்த்தர் அதினதின் நேரத்தில் நம் தேவைகளை சந்தித்து அதிசயமாய் நடத்துவார். நாம் கர்த்தரையே சார்ந்து கொள்கிறபோது இந்த அற்புதங்கள் நம் வாழ்விலும் நிச்சயமாய் நடக்கும். 

ஆமென் அல்லேலூயா!




டிடாகே (Didache) - அப்போஸ்தலர்களின் போதனை || அறிந்து கொள்வோம் _ பகுதி - 160 ||

அறிந்து கொள்வோம்  பகுதி - 160 டிடாகே (Didache) - அப்போஸ்தலர்களின் போதனை "அப்போஸ்தலர்களின் படிப்பினை" என்பது பொதுவாக Didache (டிடாக...