Daily Devotion
உணர்வில்லாத இருதயம்
"...உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்."
(சங்.119:169)
ஒரு சர்க்கஸில் கோமாளிகள் நின்று எல்லாரையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தனர்.
ஜனங்கள் தங்களையே மறந்து அவர்கள் செய்யும் கோமாளித்தனத்தை ரசித்து பார்த்து கொண்டிருந்தனர். திடீரென்று அந்த சர்க்கஸ் உரிமையாளர் முன்னே வந்து அந்த சர்க்கஸ் கூடாரம் தீப்பிடித்து இருப்பதாகவும், உடனே எல்லாரும் வெளியேறும்படியும் கேட்டுக் கொண்டார். ஆனால் ஜனங்களோ இதுவும் ஒரு சிரிப்புக்காக சொல்லப்படும் காரியம் என்று நினைத்து இன்னும் சிரிக்க ஆரம்பித்தனர். அந்த முதலாளியோ எல்லாரையும் வெளியேறும்படி கெஞ்ச ஆரம்பித்தான்.
தீ கொழுந்துவிட்டு எறியத் துவங்கியது, பின்னர் தான் மக்களுக்கு புரிய வந்தது. அது சிரிப்புக்காக அல்ல, நிஜம்தான் என்று. ஆனால் ஏற்கனவே, கொட்டகை முழுவதும் தீப்பிடித்து விட்டபடியால் உயிர் பிழைத்தவர்கள் மிகவும் குறைவானவர்களே.
சுகபோகமாய் வாழ்ந்த ஒரு பணக்காரனைக்குறித்து வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. அவன் வீட்டு வாசலில் கொடிய பருக்களோடு பிச்சை எடுத்துக்கொண்டிருந்த லாசருவின் மேல் மனமிரங்கவில்லை. அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வுள்ள இருதயமும் இல்லை.
மரணம் வரை அவன் இருதயம் உணர்வற்றே காணப்பட்டது. இருவருமே மரித்தார்கள்.
லாசரு பரலோகத்தில்! ஐசுவரியவானோ நரகத்தில்! இப்போதுதான் ஐசுவரியவானுக்கு உணர்வுள்ள இருதயம் வருகிறது. தன்னைப்போல பூமியில் வாழும் தன் சகோதரருக்காக வருத்தப்படுகிறான். அவர்களிடம் லாசருவை அனுப்பும்படி கேட்டுப்பார்க்கிறான், ஆனால் முடியவில்லை.
மேற்கண்ட இரு சம்பவங்களை நாம் பார்க்கும்போது, அற்பமான சந்தோஷத்திற்காக ஜனங்கள் இருதயத்தில் உணர்வில்லாமல் இருந்தனர். ஐசுவரியவான் தனக்கு ஐசுவரியம் கொடுத்த ஆண்டவரை நினைக்காமல் இருதயத்தில் உணர்வில்லாதவனாய் வாழ்ந்து மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்,
ஆம் பிரியமானவர்களே!
நமக்கு உணர்வுள்ள இருதயம் வேண்டும். நமக்கு பூமியில் வாழ்வதற்கு கொடுக்கப்பட்ட நாட்கள் மிகவும் சொற்பமான நாட்கள்தான். அந்த நாட்களில் உணர்வுள்ள மனசாட்சியோடு வாழ்வோம்.
நம் அருகில் இருக்கின்றவர்களுக்கு நம்மால் இயன்ற மட்டும் உதவிகள் செய்வோம். உதவிகள் இல்லாமல், ஆதரவற்று இருக்கும் அநேகருக்கு இயேசுவின் அன்பை வெளிப்படுத்துவோம். அழிவு வரும்வரை உணர்வற்று இருப்போமானல் வரும் கோபத்திற்கு எப்படி தப்பித்துக் கொள்ள முடியும்.
தேவனே உணர்வுள்ள இருதயத்தை எங்களுக்கு தாரும்……
1 Comments
Very true words
ReplyDelete