பாடுகளின் வாரம் செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 1

 


பாடுகளின் வாரம்: செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 1


 

இயேசு சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று


காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பி வருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதினிடத்திற்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று. சீஷர்கள் அதைக் கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள் 

(மத் 21:18-20).



இயேசு அவர்களை நோக்கி:               நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார் 

(மத் 21:21,22).


காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பி வருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று (மத் 21:18).



இயேசுகிறிஸ்து காலை வேளையில் எருசலேமுக்கு திரும்பி வருகிறார். இங்கு அவர் நிறைவேற்றவேண்டிய ஊழியம் இருப்பதினால், அதற்காக இயேசுகிறிஸ்து இங்கு வருகிறார். அவர் திரும்பி வருகையில் அவருக்கு பசியுண்டாகிறது. தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து, சாதாரண மனுஷனாக தம்மை வெளிப்படுத்தியிருப்பதினால், மனுஷருக்குரிய பசி அவருக்கும் உண்டாகிறது. இயற்கையின் குறைவுகளுக்கு இயேசுகிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்திருக்கிறார். அவர் தரித்திரராக இருப்பதினால் தற்போது அவருக்கு உணவில்லை


தமக்கு பசியுண்டாகும்போது அவர் ஒரு அற்புதத்தை செய்து தமது பசியை போக்கியிருக்கலாம். இதன் மூலமாக அவர்  தமது வல்லமையையும் நீதியையும் வெளிப்படுத்தியிருக்கலாம்.

கனியற்ற அத்திமரம்

அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதினிடத்திற்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று (மத் 21:19).



இயேசுகிறிஸ்து எருசலேமுக்கு திரும்பி வருகையில் வழியருகே ஒரு அத்திமரத்தை காண்கிறார். அவர் அதற்கு அருகாமையில் போகிறார். ஏதாவது கனி இருக்கும் என்று எதிர்பார்த்து அதன் அருகில் போகிறார். அதில் இலைகள் மாத்திரம் இருக்கிறது. ஆனால் ஒரு அத்திப்பழமும் அந்த மரத்தில் இல்லை. இனி ஒருக்காலும் அந்த மரத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்று சபிக்கிறார். உடனே அந்த அத்திமரம் பட்டுப்போயிற்று.



இயேசுகிறிஸ்து இங்கு ஒரு புதுமையான அற்புதத்தை செய்கிறார். இதுவரையிலும் அவர் மனுஷருக்கு நன்மையை மாத்திரம் செய்திருக்கிறார். தமது அற்புதத்தின் மூலமாக 

தம்முடைய கிருபையையும் 

ஆசீர்வாதத்தையும் மாத்திரம் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் இங்கோ தம்முடைய கோபத்துக்கும் சாபத்துக்கும் அடையாளமாக இந்த மரத்தை சபிக்கிறார். இயேசுகிறிஸ்து எந்த மனுஷரையும் சபிக்கவில்லை. இந்த மரத்தைத்தான் சபிக்கிறார்.  இந்த சாபம் நமக்கு ஓர் அடையாளமாகவும், எச்சரிப்பாகவும் இருக்கிறது. 



அத்திமரம் மாய்மாலத்திற்கு அடையாளமாக இருக்கிறது. அத்திமரத்தில்  இலை இருக்கும்போது பொதுவாக அதில் அத்திப்பழங்களும் இருக்கும். ஆனால் இந்த அத்திமரமோ மாய்மாலமாக இருக்கிறது. இதில் இலை மாத்திரம் இருக்கிறது. இலையோடு சேர்ந்து இருக்கவேண்டிய அத்திப்பழம் இதில் ஒன்றுகூடயில்லை. இதுபோலவே கிறிஸ்துவின் ஊழியத்தை செய்கிறோம் என்று கூறும் ஊழியக்காரர்களிடம் இயேசுகிறிஸ்து வல்லமையை எதிர்பார்க்கிறார். வல்லமை இல்லாமல் அவர்கள் மாய்மாலமாக, வெளிவேஷமாக ஊழியம் செய்தால் கிறிஸ்து அவர்களை சபிக்கிறார்


ஒரு சில ஊழியக்காரர்கள் நன்றாக பிரசங்கம்பண்ணுவார்கள். நூதன வார்த்தைகளை பிரசங்கத்தில் பயன்படுத்துவார்கள். இவர்களிடத்தில் ஆவியின் கனி இருக்கிறதா என்று இயேசுகிறிஸ்து தேடிப்பார்க்கிறார். ஆவியின் கனி இவர்களிடம் காணப்படவில்லையென்றால் இயேசுகிறிஸ்து ஏமாற்றமடைந்து வருத்தப்படுகிறார். ஒரு சிலர்  இவர்களைப்போல ஊழியம் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் இவர்களிடத்தில் ஊழியம் இல்லை.



அத்திமரம் கனிகொடாமல் இருப்பதே ஒரு சாபம். கனிகொடாத அத்திமரத்தை கிறிஸ்து சபிக்கிறார். இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளெல்லாமே பொதுவாக ஆசீர்வாதமாக இருக்கும். ""பலுகிப்பெருகுங்கள்'' என்பதே இயேசுகிறிஸ்துவின் ஆசீர்வாதமான வார்த்தை. ஆனால் இங்கோ அவர் ""கனி உண்டாகாதிருக்கக்கடவது'' என்று சபிக்கிறார். 



இந்த உலகத்தில் நாம் கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்தால்தான் ஊழியத்தில் நிலைத்திருப்போம். பொய்யான ஊழியமும், மாய்மாலமான ஊழியமும் விரைவில் அழிந்துபோகும். அத்திமரத்தில் ஒரு கனியும் இல்லை. இலைகள் மாத்திரமே உள்ளது. விரைவில் இந்த இலைகளும் பட்டுப்போகும். மரத்தில் ஒரு இலைகூடயிராது. 



மாய்மாலக்காரர்கள் சிறிது காலத்திற்கு பகட்டாக இருப்பார்கள். அவர்களினால் ஒரு பிரயோஜனமுமில்லை என்பது தெரியவரும். அப்போது அவர்களிடமுள்ள வரங்கள் ஒளிந்துபோகும். தேவகிருபை அகன்றுபோகும்.  பாசாங்கு செய்கிறவன் வாழ்வடையமாட்டான். 



அத்திமரத்தை பற்றிய காரியம் யூதஜனங்களுக்கும், இஸ்ரவேல் தேசத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இவர்கள் கிறிஸ்துவின் வழியில் நாட்டப்பட்ட அத்திமரத்தைப் போன்றவர்கள். கிறிஸ்துவுக்காக கனி தரவேண்டியவர்கள். ஆனால் இவர்களோ  எந்த கனியையும் தராமல் கிறிஸ்துவை ஏமாற்றிவிடுகிறார்கள். இயேசுகிறிஸ்து இஸ்ரவேல் புத்திரர் நடுவில் வந்திருக்கிறார். அவர்களிடத்தில் ஆவிக்குரிய கனிகள் எதுவும் கிடைக்குமா என்று தேடிப்பார்க்கிறார். கனியைக்கண்டால் கிறிஸ்து சந்தோஷப்படுவார். ஆனால் இயேசுகிறிஸ்துவின் எதிர்பார்ப்பு வீணாயிற்று. இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் கிறிஸ்து எந்த கனியையும் காணவில்லை. கனியில்லாத அத்திமரத்தைப்போல இருக்கிறார்கள். அத்திமரத்தில் இலைகள் மாத்திரம் உள்ளது. இதைப்போலவே இஸ்ரவேல் புத்திரரும் வெளித்தோற்றத்திற்கு பக்தியுள்ள ஜனங்களைப்போல வேஷம் போடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய உள்ளத்திலோ மெய்யான தேவபக்தியில்லை. 


இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவை எதிர்பார்ப்பதாக கூறுகிறார்கள். மேசியாவாகிய இயேசுகிறிஸ்துவோ இப்போது அவர்கள் மத்தியலே வந்திருக்கிறார். ஆனால்    அவர்களோ இயேசுகிறிஸ்துவை மேசியாவாக அங்கீகரிக்கவில்லை. அவரை தேவகுமாரனாக கனப்படுத்தவில்லை. இதனால் அவர்களுக்கு அழிவு உண்டாயிற்று. இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்னும் சாபம் அவர்கள்மீது வந்தது. 



இஸ்ரவேல் ஜனங்கள் இயேசுகிறிஸ்துவை  மறுதலித்த பின்பு, அவர்களிடத்திலிருந்து எந்த நன்மையும் உண்டாகவில்லை. அவர்கள் தொடர்ந்து மோசமான நிலமைக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய இருதயம் கடினமாயிற்று. ஆவிக்குரிய பார்வை குறைந்துபோயிற்று. குருட்டாட்டத்திலும், வெறியாட்டத்திலும் மூழ்கியிருக்கிறார்கள். அத்திமரம் விரைவில் பட்டுப்போனதுபோல இஸ்ரவேல் ஜனங்களும் பட்டுப்போனார்கள். இயேசுகிறிஸ்துவின் இரத்தப்பழி எங்கள்மீதும் எங்கள் பிள்ளைகள்மீதும் வரட்டும் என்று ஆணவமாக கூறினார்கள். அந்த பழி அவர்கள்மீது வந்துவிட்டது.

சீஷர்களின் ஆச்சரியம்

சீஷர்கள் அதைக் கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று! என்று சொல்- ஆச்சரியப்பட்டார்கள் (மத் 21:20).



இயேசுகிறிஸ்து அத்திமரத்தை சபிக்கிறார். அது உடனே பட்டுப்போகிறது. அதைக்கண்ட சீஷர்கள் மிகுந்த ஆச்சரியமடைகிறார்கள். கிறிஸ்து சபிக்கும்போது அதன் விளைவுகளை பார்த்து சீஷர்கள் ஆச்சரியமடைகிறார்கள்.  சாபம் காலதாமதமில்லாமல் உடனடியாக நிறைவேறுகிறது. இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய் பட்டுப்போயிற்று என்று சொல்லி சீஷர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.   

மலையைப்பார்த்து

 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார் 

 (மத் 21:21,22).



சீஷர்களும் விசுவாசத்தினால் இயேசுகிறிஸ்துவைப்போல          கிரியை நடப்பிக்கலாம். இயேசுகிறிஸ்து அற்புதம் செய்யும்          விசுவாசத்தை இங்கு        விவரிக்கிறார். ""நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாகயிருந்தால்'' என்று விசுவாசத்தின் அவசியத்தை விளக்குகிறார். தேவனுடைய வல்லமையையும் அவருடைய வாக்குத்தத்தத்தையும் நாம் விசுவாசிக்கவேண்டும். அதை சந்தேகப்படும்போது தேவனுடைய ஆசீர்வாதத்தை நாம் இழந்துபோகிறோம். தேவனுடைய வாக்குத்தத்தம் எவ்வளவு உறுதியானதோ அந்த அளவிற்கு நம்முடைய விசுவாசமும் உறுதியாக இருக்கவேண்டும். 


நம்மிடத்தில் காணப்படவேண்டிய விசுவாசத்தை இயேசுகிறிஸ்து அடையாளமாக கூறுகிறார். "

" இந்த மலையைப்பார்த்து, நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னால் அப்படியாகும்'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு வாக்குப்பண்ணுகிறார். இது யூதர்கள்  மத்தியிலே பயன்படுத்தப்படும் வழக்குச்சொல்லாகும். தேவனால் கூடாதகாரியம் ஒன்றுமில்லையென்று நாம் விசுவாசிக்கவேண்டும் என்பது இந்த வாக்கியத்தின் பொருள். இயேசுகிறிஸ்து எதை வாக்குப்பண்ணியிருக்கிறாரோ அதை நிறைவேற்ற அவர் வல்லவராக இருக்கிறார்.  ஒரு காரியம் நம்மால் கூடாமல் போனாலும், தேவனால் கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்று நாம் விசுவாசிக்கவேண்டும்.     



நம்மிடத்திலுள்ள விசுவாசத்தை நாம் பயபக்தியோடு வெளிப்படுத்தவேண்டும். நாம் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளை கேட்டுக்கொள்வோமோ அவைகளையெல்லாம் பெற்றுக்கொள்வோம். விசுவாசம் ஆத்துமாவைப்போன்றது. ஜெபம் சரீரத்தைப்போன்றது. ஆத்துமாவும் சரீரமும் சேர்ந்துதான் ஒரு நபரை உண்டுபண்ணும் அதுபோலவே விசுவாசமும் ஜெபமும் சேர்ந்துதான் நம்மை ஊழியம் செய்வதற்கு தகுதியான பூரணபுருஷராக்கும். நம்முடைய விசுவாசம் சரியாக இருக்குமென்றால் நம்முடைய ஜெபமும் சரியாக இருக்கும். நம்முடைய ஜெபம் சரியாக இல்லையென்றால் அடிப்படையில் நம்மிடத்தில் விசுவாசம் இருக்காது. 



தேவனிடமிருந்து நாம் எதையாவது பெற்றுக்கொள்ளவேண்டுமென்றால் ஜெபத்திலே அவைகளை விசுவாசத்தோடு கேட்டுக்கொள்ள வேண்டும். நாம் ஜெபத்தில் விசுவாசத்தோடு கேட்டுக்கொள்வதை தேவன் கொடுக்காமல் மறுக்கமாட்டார். நம்மிடத்தில் அவர் விசுவாசத்தை எதிர்பார்க்கிறார். விசுவாசம் தோல்வியடையாது. கேட்கும்போது நாம் பெற்றுக்கொள்கிறோம். விசுவாசிக்கும்போது நாம் பெற்றுக்கொள்கிறோம். 



இயேசுகிறிஸ்து நமக்கு வாக்குப்பண்ணும்போது ""எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ அவைகளையெல்லாம்'' என்று கூறுகிறார். இந்த வாக்கியத்திற்கு ""எல்லாவற்றையும்'' என்று பொருள். இயேசுகிறிஸ்து நமக்கு பல காரியங்களை வாக்குப்பண்ணியிருக்கிறார். அவைகளையெல்லாம் நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவற்றை தேவனிடத்தில்  ஜெபத்திலே விசுவாசமுள்ளவர்களாய்  நாம் கேட்கவேண்டும். விசுவாசமில்லையென்றால் நம்மால் ஒன்றும் பெற்றுக்கொள்ளமுடியாது. விசுவாசம் இருக்குமென்றால் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளலாம்…



Post a Comment

0 Comments