சாதிக்க தேவை சாதக சிந்தை - Daily Devotion

 Daily Devotion 


சாதிக்க தேவை சாதக சிந்தை

                Bro.Felix

 


அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்.

(நீதி 23:7)


சிந்தை சக்தி வாய்ந்தது 

நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகத்தான் நாம் இருக்கிறோம். நாம் இனி என்ன ஆகப்போகிறோம் என்பதையும் அது நிர்ணயிக்கிறது.

 'ஒரு காரியத்தை செய்ய முடியும் என்று நம்பினாலும், அந்த காரியத்தை செய்ய முடியாது என்று நீங்கள் நம்பினாலும் இரண்டும் சரிதான்'

 என்றார். - ஹென்றி போர்டு.


ஒரு மனிதன் பல வண்ண பலூன்களை பறக்க விட்டுக் கொண்டிருந்தான். ஒரு சிறுவன் வந்து அவனுடைய

சட்டையின் ஓரத்தை பிடித்திழுத்தான். உடனே அந்த மனிதன் திரும்பி பார்க்க சிறுவன் கேட்டான், இந்த கருப்பு பலூன்கூட பறக்குமா?'

அதற்கு அந்த மனிதன், 'மகனே வெளியே தெரியும் வண்ணம் அல்ல அதை பறக்க வைப்பது, உள்ளே உள்ள காற்று' என்று பதிலளித்தான்.

 நம்முடைய வாழ்க்கையிலும் கூட நமக்கு வெளியே என்ன நிகழ்கிறது என்பது முக்கியமல்ல, வெளியே நடப்பது உள்ளே என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதே முக்கியம்.


மாற்றக்கூடியவை, மாற்றக்கூடாதவை என இரண்டு விஷயங்கள் வாழ்க்கை எங்கும் பரவிக்கிடக்கிறது. 

அப்பா, அம்மா, உடன் பிறப்புகள், இவையெல்லாம் மாற்ற முடியாதவை அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவைகள். ஆனால் பழக்கவழக்கங்கள், பிரச்சனைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் இவையெல்லாம் மாற்றக்கூடியவைகள்.


நான் ரசித்த ஒரு ஜெபம் பின்வருமாறு இருந்தது. 


ஆண்டவரே! என் வாழ்வில் மாற்றக்கூடாதவைகள்

எவைகளோ அவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும்

பக்குவத்தையும், மாற்றக்கூடியவைகள்

எவைகளோ அவைகளை மாற்றுவதற்கான தைரியத்தையும்,

எவை மாற்ற முடியாதவை? எவை மாற்றக்கூடியவை? என்று பகுத்தறியும் ஞானத்தையும் எனக்குத் தாரும்.


உன் விசுவாசத்தின்படி உனக்கு ஆகக்கடவது" (மத் 9:29) என்பதே வேதாகம விதி.

 உங்களால் வெற்றி பெற முடியும் என்பதை நீங்கள் முழுமையாய் நம்பி அதையே சிந்திப்பீர்கள் என்றால், என்ன நடந்தாலும் பரவாயில்லை. உங்கள் இலக்குகளை நோக்கி நீங்கள் தொடர்ந்து கொண்டிருப்பீர்கள், எதுவும் உங்களை தடுக்க முடியாது. ஆனால் அநேகர் பயத்தையும், சந்தேகத்தையும் சிந்தித்து, எதிர்பார்த்து அதை பெற்றுக் கொள்கிறார்கள். நாம் எப்பொழுதும் எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அது நமக்கு கிடைத்து விடுகிறது என்பது உண்மையான விஷயம்.


இதில் சாதக சிந்தனையாளர்கள், பாதக சிந்தனையாளர்கள் என்று மக்களை இரண்டு பிரிவாக பிரிக்கலாம்.


சாதக சிந்தனை என்றால் என்ன? (Positive Thinking)


“ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இவன் எம்மாத்திரம் என்றான்

 (1 சாமு 17:26).

 தாவீது ஒரு சாதக சிந்தை உடையவன். ஆகவே மற்றவர்கள் கோலியாத்தை 'எவ்வளவு உயரம்' என்று பிரமிக்க, தாவீது மட்டும் ‘எம்மாத்திரம்' என்று அற்பமாக பார்க்கிறான்.


சாதக சிந்தனையாளர் என்றால் தங்கள் சிந்தையை ஆள்பவர்கள், பாதக சிந்தனையாளர் என்றால் தங்கள் சிந்தையின் வேலையாட்கள், 


'இருள் அதிகமாகும் பொழுது தான் நட்சத்திரங்கள் பிரகாசிக்கின்றன' என்றார் ஒரு அறிஞர். 

இது போன்ற சாதக சிந்தை நமக்கு நிச்சயம் தேவை. “ஐயோ இருள் என்பார்கள் தோல்வி மனப்பான்மை கொண்டவர்கள். அற்புதமான நட்சத்திரங்கள்' என்பார்கள் வெற்றியின் சிந்தனையை உடையவர்கள். இருவரும் ஒரே வானத்தைதான் பார்த்தார்கள். பிரச்சனைகளை நாம் பார்க்கும் விதத்திலேயே நம்முடைய வெற்றி அமைகிறது. பள்ளங்களை பார்த்து 'அவ்வளவுதான் நம் பயணம் முடிந்தது' என்பான் பாதக சிந்தை கொண்டவன். 

ஆஹா! ஒரு பாலம் அமைக்கும் வாய்ப்பு இதுதான்' என்பான் சாதக சிந்தனை கொண்டவன். இப்படிப்பட்டவர்களை பிரச்சனைகள் சந்திக்கும், ஆனால் சிதைக்காது. “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. 

கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை (2 கொரி 4:8, 9) இது வெற்றியாளர்களின் முழக்கம்.


பிரச்சனைகளை சிறியதாக பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நம்முடைய தேவன் மிகப்பெரியவர். சிலர் சிறியதை பெரியதாய் காட்டும் கண்ணாடியை அணிந்து பார்க்கிறார்கள். லென்ஸை மாற்றுங்கள். பெரியதை சிறியதாய் காட்டும் கண்ணாடி அணிந்து பிரச்சனைகளை பார்க்க வேண்டும்.


'கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால்... உங்களால் கூடாத

காரியம் ஒன்றுமிராது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்"

 (மத் 17:20) என்றார்

இயேசு முடியும் என்றால் முடியும். அதுதான் சாதக சிந்தை 

(If you think You Can, You Can).


அமெரிக்க ராணுவத்தில் உள்ள ஒரு வாசகம், 'கடினமானதை உடனே செய்வோம், முடியவே முடியாது என்பதை சற்று பொறுத்து செய்வோம்'

முடியாது என்பதற்கு விசுவாசம் விடுமுறையில் சென்று விட்டதாக என்று அர்த்தம்.


வேதத்தில் ஓர் எடுத்துக்காட்டு


கானான் என்ற பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை சுற்றிப் பார்ப்பதற்கு பன்னிரெண்டு பேரை மோசேஅனுப்பினான். அவர்கள் அனைவரும் ஒரே தேசத்தைதான் பார்த்தார்கள். ஆனால் வித்தியாசமான பதிலோடு வந்தார்கள். காலேபும், யோசுவாவும் “நாம் உடனே போய் அதை சுதந்தரித்துக் கொள்வோம், நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்" என்று சாதக அறிக்கையை சமர்ப்பித்தார்கள். ஆனால் மீதமுள்ள பத்து பேர்களும் “நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய் வந்தோம். அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான். 

இது அதினுடைய கனி. ஆனாலும்... (எண்ணா 13:27 ) "... நாம் போய் அந்த ஜனங்களோட எதிர்க்க நம்மாலே கூடாது அவர்கள் நம்மைப் பார்க்கிலும் பலவான்கள் (எண்ணா 13:31) 

நல்ல தேசம் ஆனால் தேவையில்லை. நம்மால் முடியாது. முடியாததற்கு ஆசைப்பட வேண்டும், போராடமல் இலகுவாக ஏதாவது கிடைத்தால் அது போதும், பாலும் தேனும் ஓடுகிற சிறந்த தேசத்தை வேறு யாராவது எடுத்துக்கொள்ளட்டும்என்பதுதான் பாதகச் சிந்தனையாளர்களின் அறிக்கை.


பிற்பாடு இந்த பாதக அறிக்கை செய்த பத்து பேரும் வனாந்தரத்தில் மரித்துப் போனார்கள். சுதந்தரிப்போம் என்று சொன்ன யோசுவாவும், காலேபும் மாத்திரம் கானானுக்குள் பிரவேசித்தார்கள். ஆம்! அவரவர் சிந்தித்தது அவரவர்களுக்கு நிறைவேறியது.


பயத்தை மேற்க்கொள்வோம்


பொதுவாக பாதக சிந்தை ஏற்பட இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று தோல்வி பயம்

 (Fear of Failure) மற்றொன்று நம்மை குறித்து நாம் வைத்துள்ள குறைந்த மதிப்பீடு (Low Self-esteem).


மோதிப் பார்க்கும் முன்பே தோற்றுவிடுவோம் என்று முடிவு செய்வதுதான் தோல்வி பயம். இந்த பயம் நம்முடைய கற்பனை சக்தியை தடை செய்கிறது. நம்முடைய மூளையை சிந்திக்கத் தூண்டாமல், உறைய வைத்து விடுகிறது. பயப்படும் 

சமயத்தில் நம் கண் எதிரில் இருக்கும் வாய்ப்புகூட நமக்கு மறைக்கப்பட்டு விடுகிறது. இஸ்ரேவேல் படை வீரர்கள் அனைவரும் நாற்பது நாட்களாக கோலியாத்தை பார்க்கிறார்கள். அவர்களுக்கு அவன் அணிந்திருந்த தலைசீராகவும், மார்க் கவசமும், கையில் பிடித்திருந்த பட்டயமும், காலில் அணிந்திருந்த பெரிய பாதரட்சையும் தான் தெரிந்தது. அதை பார்த்துதான் அவர்கள் பயந்து போனார்கள். அவன் உயரத்தை பற்றி பேசி இன்னும் அவனை உயர்வாய் பார்த்தார்கள். ஆனால் தாவீது அன்றுதான் பார்த்தான். அவன் பதறாமல், பயப்படாமல் பார்த்தான். அவனுக்கு இவன் உடலை மறைத்திருந்த கவசங்கள் தெரியவில்லை. மாறாக சிரசில் மறைக்கப்படாமல் இருந்த ஒரு சின்ன இடம் அவனுக்கு தெரிந்தது. அந்த நெற்றி பகுதியில் கல் அடித்து வெற்றி பெற்றான்.


பல சமயங்களில் நாம் பதற்றமுற்றவர்களாய் நம் அருகில் கிடைக்கும் வாய்ப்பை விட்டுவிட்டு நமக்கு எது தேவையில்லையோ அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


இவ்வுலகில் பயப்படுவதற்கு எதுவுமில்லை, ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான். 

பொதுவாக நமக்கு தெரியாததை குறித்தே நாம் பயப்படுகிறோம். (Fear of Unkown). “பலங்கொண்டு திடமனதாயிரு" என்ற வாக்கியம் வேதத்தில் அடிக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. 'ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்'' (எபி 10:35).


தோல்வியை விட தோற்றுவிடுவோம் என்கிற பயம்தான் மோசமானது என்பது உங்களுக்கு தெரியுமா? தோற்காமல் யாரும் ஜெயித்தது இல்லை. ஒரு கம்பெனி நிர்வாகி தன் அலுவலர்களுடன் பேசும் பொழுது இப்படி சொன்னார், 'நான் உங்கள் எல்லோரையும்விட அதிக வெற்றி பெற்றவன் என்பது உண்மைதான், ஏனென்றால் உங்கள் எல்லோரையும்விட அதிக முறை தோல்விகளை சந்தித்து எழுந்துள்ளேன்.'


தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்


'நீ ஒன்றுக்குமே உதவமாட்டாய், நீ எதை செய்தாலும் அது உருப்படாது, உன்னைவிட அவன் எவ்வளவோ மேல், நீ வாழ்க்கையில் முன்னேறினால் அது உலகில் எட்டாவது அதிசயம்' இப்படி சிறுவயது முதல் பெரியவர்கள் சிறியவர்களை

குறித்து கூறும் வார்த்தைகள் அவர்கள் மனங்களில் புதிய பிள்ளைகள் அதை உண்மை என்று நம்பிவிடுகிறார்கள். அதனால் அவர்களை குறித்த ஓர் குறைந்த மதிப்பீட்டை உருவாக்கிக் கொள்கிறார்கள்.


ஒரு முறை ஒரு தம்பி என்னிடம், 'அண்ணன், உங்களுக்கு என் எதிரியை காட்டுகிறேன்' என்று சொல்லி கண்ணாடி முன் நின்று இவன் தான் என் எதிரி என்று அவனுடைய உருவத்தையே காட்டினான். 

'தம்பி உனக்கு நீயே எதிரியாக இருக்கும் வரை முன்னேறுவது என்பது முடியாத காரியம்' என்று நான் சொன்னேன்.


கானானை சுற்றிப்பார்க்க சென்று பாதக அறிக்கையோடு திரும்பி வந்தவர்கள் 'நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப் போல் இருந்தோம்' என்று சொன்னார்கள். இதுதான் குறைந்த மதிப்பீடு. நம்மால் இந்த பிரச்சனையை சமாளிக்க முடியாது என்று சிந்தித்தோமானால் பிரச்சனை பல மடங்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கும். 


ரோஜர் பானிஸ்டர்


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ படிப்பு மாணவர். 

அவர் 1954-ஆம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி ஒரு மைல் தூரத்தை மூன்று நிமிடம் ஐம்பத்தி ஒன்பது வினாடிகளில் அடைந்தார். அப்பொழுது அது இமாலய சாதனை. 

ஏனென்றால் அதுவரை, நான்கு நிமிடத்திற்குள் ஒரு மனிதனாலும் ஒரு மைல் தூரத்தை கடக்க முடியாது, அப்படி கடந்தால் இதயம் வெடித்து விடும் என்று வல்லுனர்கள் அறுதியிட்டு கூறியிருந்தார்கள். 

ஆனால் ரோஜர் ஓடி கடந்தபிறகு இன்று உயர்நிலை பள்ளி மாணவன்கூட சாதனையை செய்கிறான்.


நம்முடைய உலகத்தின் தவறான கொள்கை, தவறான தகவல்கள் அடிப்படையில் நம்முடைய மனதில் நம்மை பற்றிய குறைந்த மதிப்பீடு பதிக்கப்பட்டுள்ளது. இதை நாம் மாற்றி ஆக வேண்டும். நல்ல செய்தி என்னவென்றால் நம்மால் அதை மாற்ற முடியும் என்பதே.


சிந்தையை சரி செய்ய முடியும்


தோல்வி என்பது ஒரு மனநிலையே அல்லாமல் வேறொன்றுமில்லை...... 


"உங்கள் மனம் புதிதாகிறதினாலே 

மறுரூபமாகுங்கள்'' (ரோமர் 12:2) 


நம் சிந்தையை சரி செய்வதன் மூலம் நம் வாழ்க்கையை சரி செய்ய முடியும் என்பதுதான்.

 இந்த தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு. சிந்தை என்பது நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ளது. தவறான சிந்தையை தொடர்ந்து செயல்பட அனுமதிப்பதும் அதை தடுத்து நிறுத்துவதும் நம்முடைய பொறுப்பில் உள்ளது. 

நம்முடைய கையை உயர்த்துவதும், கீழே போடுவதும் எப்படி நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ளதோ அது போலதான் சிந்தையும் நம் கட்டுப்பாட்டில் உள்ளது. எதை சிந்திக்க வேண்டும், எதை சிந்திக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும் உரிமை நம்மிடத்தில்தான் உள்ளது.

 பவுல் சொல்வதை கேளுங்கள், “கடைசியாக சகோதரரே, உண்மையுள்ளவைகள் எவைகளோ, ஒழுக்கமுள்ளவைகள் எவைகளோ, நீதியுள்ளவைகள் எவைகளோ, கற்புள்ளவைகள் எவைகளோ, அன்புள்ளவைகள் எவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகள் எவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ, அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்'

' (பிலி 4:8).


சுற்றம் காப்போம்


நாம் சாதக சிந்தை உள்ளவர்களாய் (Positive Thinking) பேசும்பொழுது எல்லோரும் வரவேற்கமாட்டார்கள். நம்மை அகங்காரம் பிடித்தவர்கள், உலகம் தெரியாதவர்கள், கவலையில்லாதவர்கள் என பலவாறு வர்ணிப்பார்கள், 

தாவீது கோலியாத்தை எதிர்க்க எண்ணியபொழுது அவனுடைய அண்ணன்மார்கள் கைதட்டி அனுப்பவில்லை. அவன் மூத்த சகோதரனாகிய எலியாப்

 “உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன்" என்றான்.

 (1 சாமு 17:28)


நம்முடைய தைரியத்தை குலைப்பவர்களுடன் வாழ்வதை விட மரித்த பிணங்களின் நடுவில் வாழ்ந்துவிடலாம். எப்பொழுதும் தோல்வியையும், பயத்தையும் பேசும் நபருடன் இருக்கும் உறவை உடனடியாக வெட்டிவிடுவதுதான் உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது.


"தாவீது அவனை விட்டு வேறொருவன் இடத்தில் திரும்பி," (1 சாமு 17:29).

பல சமயங்களில் நாம் சரியான நபர்களோடு சரியான நேரத்தில் தொடர்பு வைக்காததினால் அற்புத வாய்ப்புகளை இழந்து போகிறோம். 


மரியாளுக்கு நற்செய்தி கொண்டு வந்த தூதன் அவள் தொடர்ந்து அங்கே இருந்தால் மற்றவர்களுடைய பாதக பேச்சால் பாதிக்கப்படுவாள் என எண்ணி எலிசபெத்து இருக்கும் இடத்திற்கு போகும்படி அவளை அனுப்பிவிடுகிறான். 

ஏனெனில் எலிசபெத்து ஏற்கனவே அற்புதத்தை அனுபவித்தவள். அவளால்தான் சாதக சிந்தையோடு பேசமுடியும். அற்புத சூழ்நிலையை உருவாக்க முடியும்.


தோற்று போகிறவர்கள் ஒருநாளும் வெற்றியாளர்களை பாராட்டமாட்டார்கள். உங்களை சோர்ந்து போகப் பண்ணுகிறவர்களை விட்டு விலகுங்கள்.


தோல்வியையே பேசுபவர்களிடத்தில் உங்கள் தரிசனத்தை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

 

உங்களை ஊக்குவிப்பவர்கள் உங்களை சுற்றி இருக்கட்டும். 'உன்னால் முடியும், தேவன் உன்னோடு இருக்கிறார். நீ தான் பராக்கிரமசாலி, உனக்கு இருக்கும் பெலன் போதும்' என்று சொல்லக் கூடியவர்களிடத்தில் உங்கள் தரிசனத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்; அசாதாரண வாழ்வை ஆரம்பியுங்கள்..




Post a Comment

1 Comments

  1. மிகவும் அருமையான பதிவு. ஆமென்

    ReplyDelete