அறிந்து கொள்வோம் - பகுதி -141 || இந்திய மொழிகளில் வேதாகம மொழிப்பெயர்ப்புகள் || தெலுங்கு பைபிள் மொழிபெயர்ப்பு ||

அறிந்து கொள்வோம் 

பகுதி -141


இந்திய மொழிகளில் வேதாகம மொழிப்பெயர்ப்புகள் 


தெலுங்கு பைபிள் மொழிபெயர்ப்பு 


தெலுங்கு மொழியில் வேதாகமம் 1727ம் ஆண்டிலேயே மொழித்திருப்பம் செய்யப்பட்டு விட்டது. இதை ஜெர்மனியிலிருந்து வந்திருந்த மிஷினரியான பெஞ்சமின் குண்ட்ஸ் என்பவர் மொழி திருப்பம் செய்திருந்தார். இவர் 1732 ல் பழைய ஏற்பாட்டையும் மொழித்திருப்பம் செய்திருந்தார். என்றாலும் அவர் மொழிதிருப்பம் செய்திருந்த பிரதிகள் அச்சிடுவதற்காக ஜெர்மனியிலுள்ள ஹாலேக்கு அனுப்பப்பட்டு அங்கே பிரதிகள் காணாமல் போய் விட்டன. இதன் பின்னர் 1795 ல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டோட்ஸ் என்பவர் வேதாகமத்தை தெலுங்கில் மொழிபெயர்த்தார். இவரது மரணத்திற்குப் பிறகு இவர் பணியாற்றிய கம்பெனியில் இவரது இந்த மொழிபெயர்ப்புக் காகிதங்கள் தேவையற்ற குப்பைகள் என்று கருதப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டன. 

1805 ம் ஆண்டில் செராம்பூரிலிருந்த மிஷினரிகள் வேதாகமத்தை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தனர். 1811 ம் ஆண்டு இதன் அச்சுவேலைகள் நடந்தது. என்றாலும் 1812 ல் இந்த அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அச்சிடப்பட்ட பக்கங்களும், மொழிபெயர்ப்பு மூலப்பிரதிகளும் கருகிவிட்டன.

1804ல் லண்டன் மிஷினரி சங்கத்தைச் சேர்ந்த ஜார்ஜ் க்ரான் ஒகஸ்டஸ் என்பவர் தெலுங்கு மொழிபெயர்ப்பை ஆரம்பித்து, அவரும் முடிக்க முடியாமல் 1808 ம் ஆண்டில் மரித்தார். அதன் பின்பு டெஸ்கிராஞ்சஸ் என்பவர் இந்த மொழிபெயர்ப்பு வேலைகளை ஆரம்பித்து, 1810 வரை கொரிந்தியரின் புத்தகம் வரை மொழிமாற்றம் செய்தார். இவரும் மரித்துவிட, எட்வர்ட் பிரிட்ஜெட் என்பவர் இதன் மீதிப்பகுதியை மொழிமாற்றம் செய்தார்.

1844 ல் ஒரு மொழிபெயர்ப்புக் குழு ஆரம்பிக்கப்பட்டு, 1854-ல் தான் தெலுங்கு மொழியில் வேதாகமம் வெளிவந்தது. 1857-ம் ஆண்டில் புதிய ஏற்பாடும், 1878 ல் பழைய ஏற்பாடும் வெளிவந்தது. இது மறுபடியும் 1911-ல் ஒரு முறையும், 1953 -ல் ஒரு முறையுமாக திருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.




Post a Comment

0 Comments