அறிந்து கொள்வோம்
பகுதி -140
இந்திய மொழிகளில் வேதாகம மொழிப்பெயர்ப்பு
ஹிந்தி பைபிள் மொழிபெயர்ப்பு
இந்தியாவில் பல்வேறு விதமான மொழிகள் பேசப்பட்டாலும், பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி ஹிந்தி மொழியாகும். இந்த மொழியில் வேதாகமம் 1800 ம் ஆண்டிலேயே மொழித்திருப்பம் செய்யப்பட்டது. ஆனால் கல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்ட ஃபோர்ட் வில்லியம் கல்லூரியில் பணி செய்த டாக்டர் ஹென்றி கோல்ப்ரூக் என்பவர் முதன் முதலாக இந்தி மொழியில் நான்கு சுவிசேஷங்களை மாத்திரம் மொழி பெயர்ப்புச் செய்து வெளியிட்டார்.
இது 1806ம் ஆண்டில் புழக்கத்திற்கு வந்தது. இதே காலகட்டத்தில் செராம்பூரிலிருந்த மிஷினரிகளும் ஹிந்தி மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மொழி பெயர்த்த வேதாகமம் 1811 ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இவர்கள் வெளியிட்ட வேதாகமம் புதிய ஏற்பாடு முழுமையும் அடங்கியதும். முழுவேதாகமம் வெளியாகும் வரை சிலகாலம் இந்தப் புதிய ஏற்பாடு மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து பழைய ஏற்பாட்டின் நூல்கள் பகுதி பகுதியாக ஹிந்தியில் மொழித்திருப்பம் செய்யப்பட்டன. இவர்களுடைய இந்த மொழிபெயர்ப்பு ஆக்ராவிலிருந்த மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத மொழியமைப்பு கொண்டிருந்ததால், பாப்டிஸ்ட் சபையைச் சேர்ந்த சேம்பர்லியன் என்பவர் இந்த வேதாகமத்தை மேலும் ஒருமுறை திருத்தி வெளியிட்டார். ஆனால், அந்த மொழிபெயர்ப்பிலும் குறைகள் காணப்பட, இன்னொரு மொழி பெயர்ப்பை 1848ல் பாப்டிஸ்ட் சங்கத்தைச் சேர்ந்த வில்லியம் யேட்ஸ் என்பவர் மொழி பெயர்க்க ஆரம்பித்தார். இடையில் இவர் மரித்துவிட, இவரது பணியை வெஸ்லி என்பவர் முடித்தார். இந்தப் பதிப்பு ஜோன் பார்சன் என்பவரால் திருத்தம் செய்யப்பட்டு 1868 ல் வெளியிடப்பட்டது.
இதன் திருத்திய பதிப்பு 1874 ல் வெளியானது இதுவே ஹிந்தியில் அங்கீகரிக்கப்பட்ட வேதாகமமாக இருந்தது, அதன் பின்னர் வட இந்திய வேதாகமச் சங்கத்தார் 1905 ல் வெளியிட்ட திருத்திய வேதாகமப் பதிப்பே சுமார் 60 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்துவந்தது. இதையும் திருத்தி எளிமையான சொற்களுடன் 1955 ல் வெளியிடப்பட்ட வேதாகமமே ஹிந்தி மொழியில் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கிறது. இதைத் திருத்தம் செய்தவர் வி.டி.திவாரி என்பவராவார்.

0 Comments