Tuesday, 28 September 2021

வாஞ்சை || அறிந்து கொள்வோம் பகுதி-82 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி-82


வாஞ்சை 


"வாஞ்சித்தல்" என்பது "முழு இருதயத்தோடும் விரும்புதல்" என்று அர்த்தப்படும்.


"வாஞ்சை" என்ற வார்த்தையை குறிக்க "taabah"என்ற எபிரெயச் சொல் பயன்படுத்தி உள்ளார்கள்.


நீதி. 13:12 - ல்

நாம் விரும்பியதைப் பெறும்போது, அது ஜீவவிருட்சத்தைப் பெறுவதுபோல இருக்கும் என்று

பவுல் தான் ரோமாபுரியின் விசுவாசிகளைக் காண வாஞ்சிப்பதாகக் கூறியிருக்கிறார் (ரோமர் 1:11). இங்கே வாஞ்சிப்பதைக் குறிக்க "epipothed" என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இது அதிகமான விருப்பத்தைக் குறிக்கும் வார்த்தை ஆகும்.


இஸ்ரவேலர் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே தனது இருதயத்தின் விருப்பம் என்றும் அவர் சொல்லுகிறார் 

ரோமர் 10:1 -இங்கே விருப்பத்தைக் குறிக்க "eudokia" என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்படுகிறது.


நாம் எதை வாஞ்சிக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது.


1.நாம் தேவனுடைய நியாயங்களை வாஞ்சிக்க வேண்டும் -சங். 119:20.


2.நாம் தேவனை வாஞ்சிக்க வேண்டும் - ஏசா26:9. 

அவரைத் தவிர நமக்கு வேறு விருப்பம் இருக்கக்கூடாது.

சங். 73:25.


3.நாம் அதிகாலையில் தேவனைத் தேட வேண்டும். நம் ஆத்துமா அவரை வாஞ்சிக்க வேண்டும்.

சங். 63:1,


4.தேவனுக்குப் பயந்து,அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள வாஞ்சிக்க வேண்டும் -பிர. 12:13.


5.கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மீது வாஞ்சையோடு இருக்க வேண்டும் - சங் 84:2 -இங்கே வாஞ்சையைக் குறிக்க "kāsaph" என்ற எபிரெயச் சொல் பயன்படுத்தி உள்ளார்கள்.


6.தேவனுடைய வல்லமையையும், அவருடைய மகிமையையும் காண வாஞ்சிக்க வேண்டும் - சங். 63:2.


7.நம்முடைய பரமவாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள வாஞ்சையுள்ளவர்களாக இருக்க வேண்டும் - 2 கொரி. 5:2.


8.சக விசுவாசிகளின் நலனைக்குறித்து வாஞ்சை யுள்ளவர்களாக இருக்க வேண்டும். பிலி. 2:26.


9.மற்றவர்கள் மீது வாஞ்சையாயிருந்து தேவனுடைய சுவிசேஷத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் - 1 தெச. 2:8.


10.தேவனுடைய இரட்சிப்புக்காக நாம் தவித்து, அவருடைய வசனத்துக்காகக் காத்திருக்க வேண்டும் - சங். 119:81.


'வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது' 

(நீதி:13:19)



Monday, 27 September 2021

வேலைகள் || அறிந்து கொள்வோம் பகுதி- 81 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி- 81


வேலைகள்


வேதாகமத்தில் ஆதாமுக்கு தான் முதல் வேலை கொடுக்கப்பட்டது அது ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தும் வேலை மற்றும் தோட்டத்தைக் காக்கும் பணியும் கொடுக்கப்பட்டிருந்தது.ஆதி. 2:15).


வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்களில் பெரும்பாலானவர்கள் ஏதேனும் ஒரு வேலை அல்லது தொழில்செய்துவந்தவர்களாக இருந்தார்கள்.


வேலைசெய்வது  என்பது வேதாகம காலங்களில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. தேவன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனை இஸ்ரவேலருக்கு ராஜாவாக அபிஷேகம்செய்தார். ஆண்டவராகிய இயேசு தமது இளவயதில் யோசேப்பின் தச்சுத்தொழிலில் உதவிசெய்தரர்.


பவுல் பல வேளைகளில் கூடாரம் செய்யும் தனது தொழிலைச் செய்து தன் தேவைகளைக் சந்தித்துக்கொண்டார் (அப். 8:3). பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு  மீன்பிடிப்பர்களாக இருந்தார்கள்.

மத்தேயு வரிவசூலில்லவராக வேலைசெய்தார் (மத். 9:9).


வேதத்தில் ஆண்களின் வேலைகள்


1.ஆடுமேய்த்தல்


ஆபிரகாமும், அவன் சந்ததியினரும் அதிகமான ஆடுமாடுகளைக் கொண்டிருந்தார்கள். எனவே ஆடு மேய்ப்பது அவர்களுடைய முக்கிய தொழிலாக இருந்தது. இவர்களுக்குக் கீழாக இவர்களோடு சேர்ந்து வாழும்படி எண்ணற்ற வேலைக்காரர்கள் இருந்தார்கள்.ஆபிரகாமின் நாட்களில் லோத்து பிடிக்கப்பட்டுச் சென்றபோது ஆபிரகாமின் வேலைக்காரர்களில் பலர் ஆயுதம் ஏந்திப் போரிட்டு, லோத்தை மீட்டுவந்தார்கள் (ஆதி. 14:14-16).


2.வேட்டையாடுதல்


ஈசாக்கின் மூத்த குமாரனாகிய ஏசா போன்ற சிலர் வேட்டையாடும் தொழிலையும் செய்து வந்தார்கள்.


3.விவசாயம்


நோவா திராட்சத்தோட்டத்தை நட்டு அதில் பயிரிடுவதைப் பார்க்கிறோம் (ஆதி. 9:20).


"தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்” என்ற வாக்குத்தத்தம் கொடுக்கப் பட்டிருக்கிறது (நீதி. 12:11).


4.செங்கல் தயாரித்தல்


துவக்கத்தில் இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைப் பட்டுக்கிடந்தபோது பார்வோனுக்காக நகரங்களைக் கட்டும்படி செங்கல் தயாரிக்கும் வேலையில் ஈடுபட வேண்டியிருந்தது (யாத். 1:24).


செங்கல் தயாரிப்புக்குத் தேவைான உபகரணங்கள் கூடக் கொடுக்கப்படாமல் அவர்கள் அதிகமாக நெருக்கப்பட்டார்கள்.பிரமிடு போன்றைகளைக் கட்டுவதற்காக

இவர்கள் பெரியபெரிய கற்களை இழுத்துச் சென்று கட்டிடங்களை அமைத்தார்கள்.


கானான் தேசத்தில் குடியேறியபிறகு இஸ்ரவேல் மக்கள் ஆடுமாடுகளை வளர்ப்பதிலும், பயிரிடுவதிலும்

ஈடுபட்டார்கள்.


லேவியர்கள் தேவனுடைய ஆராதனைக்கடுத்த வேலைகளில் ஈடுபட்டார்கள். ஆலய ஆராதனையில் மட்டுமின்றி, ஆலயத்தைச் சுத்திகரித்தல், பணிமுட்டுகளைப் பராமரித்தல் போன்ற வேலைகளையும் இவர்கள் செய்தார்கள்.

வேதபாரகர்கள் நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.


நியாயாதிபதிகளின் காலம்


நியாயாதிபதிகளின் நாட்களிலும் மக்கள் இதுபோன்ற வேலைகளைத் தொடர்ந்து செய்தார்கள்.

சில வேளையில் அவர்கள் தங்கள் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ளவும், புதிய பகுதிகளைப் பிடிக்கவும் போரிடும் வேலையிலும் ஈடுபட வேண்டியிருந்தது (நியா.4:14).


இராஜாக்களின் காலம்


சவுல் ராஜாவைத் தொடர்ந்து ராஜாக்களின் நாட்களில் அரண்மனைப் பணியாளர்கள் அதிகமானவர்கள் வேலையில் நியமிக்கப்பட்டார்கள்.


போரிடுவதற்காகவும் ஒழுங்கான ஊதியம் பெற்ற போர்வீரர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்கள் காலாட்படை, இரதப்படை, குதிரைப் படை என்று பிரிக்கப்பட்டிருந்தார்கள்.


அரண்மனைகளில் பானபாத்திரக்காரன், சுயம்பாகிகள் போன்றோர் வேலை செய்தார்கள். சிலர் இசைக்கருவிகளை இசைப்பவர்களாவும் பணி செய்திருக்கிறார்கள்.


மக்களிடமிருந்து வரிப்பணம் வசூலிக்கப்படத் துவங்கியபோது அதற்காக ஆயக்காரர்களும் நியமிக்கப்பட்டார்கள்.


ஆலயம், அரண்மனை இவைகளைக் கட்டிய போது கட்டிடக்கலைஞர்களும், கட்டிடத் தொழிலாளிகளும் தேவைப்பட்டார்கள்.


மரவேலை, தோல்வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.


இந்தக் காலகட்டத்தில் வணிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது, பலர் அவர்களிடம் வேலைக்காரர்களாக இருந்தார்கள்.


மக்களின் தேவைகள் அதிகரித்தபோது. மற்றவர்களுக்கு விற்கும்படி அப்பம் சுடுகிறவர்களும், தச்சுத் தொழில் செய்பவர்களும் உருவானார்கள்.


ஆபரணங்களைத் தயாரித்தல்,

சாயம் முக்குதல், சுமைதூக்கிச் செல்லுதல் போன்ற வேலை செய்பவர்களும் உருவாகினார்கள். 

சிலர் மருத்துவர்களாகவும் வேலைசெய்தார்கள்.


புதிய ஏற்பாட்டு காலத்தில் வேலைகள்.


புதிய ஏற்பாட்டிலும் இதுபோன்ற வேலைகள் தொடர்ந்தன.

மகா ஏரோதுவின் காலத்தில் எருசலேமில் இரண்டாவதாகக் கட்டப்பட்ட ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. அவன் தனக்காகவும், ரோமர்களுக்காகவும் பல அரண்மனைகளைக் கட்டினான்.இந்த வேலையில் பலர் ஈடுபட்டார்கள்.


கலிலேயாக் கடல் பகுதியில் மீன்பிடிப்பது,முக்கிய தொழிலாக இருந்தது.


வேதாகம நாட்களில் ஆண்கள் 350க்கும்

மேற்பட்ட வெவ்வேறான வேலைகளில் ஈடுபட்டார்கள் என்று கணக்கிடப்படுகிறது.


பெண்களின் வேலைகள்


துவக்கத்தில் பெண்கள் சமைத்தல், பரிமாறுதல், வீட்டைச் சுத்திகரித்தல் போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபட்டார்கள். ஆபிரகாம் போன்ற வசதிபடைத்தவர்களுக்கு இப்படிப்பட்ட வேலைகளைச் செய்ய பெண் பணியாளர்களும் இருந்தார்கள்.


தண்ணீர் எடுத்தல்


பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் தங்கள் வீட்டுக்கும், கால்நடைகளுக்கும் தேவையான தண்ணீரைத் தாங்களே எடுத்துவந்தார்கள் (ஆதி. 24:15).


துவைக்கும் பணி


பெண்கள் சிறிய ஓடை மற்றும் ஆறுகளில்  தங்கள் ஆடைகளையும், வீட்டிலுள்ளவர்களின் ஆடைகளையும் துவைத்து, உலர வைத்து, வீட்டுக்கு எடுத்து வந்தார்கள்.


வீட்டுவேலை


வீட்டில் அடுப்புக்குத் தேவையான விறகைச் சேகரித்தல், உணவைச் சமைத்தல், சாப்பிட்ட பிறகு பாத்திரங்களைச் சுத்திகரித்தல் இவை யாவும் பெண்களின் அத்தியாவசியமான வேலைகளாக இருந்தன.


ஆடுமேய்த்தல்


ராகேல் (ஆதி. 29:6), 

மோசே மணந்துகொண்ட சிப்போராள் (யாத். 2:16) போன்றோர் ஆடுகளை

மேய்க்கும் வேலையிலும் ஈடுபட்டிருந்தார்கள்.


தானியம் பொறுக்குதல்


அறுவடை செய்யும்போது கீழே விழும் தானியத்தை ஏழைகளும், பரதேசிகளும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. ரூத் இப்படி கோதுமை மணிகளைப் பொறுக்குவதை நாம் பார்க்க முடியும்(ரூத் 2:17).


ஆடை தயாரித்தல்


நூல் திரித்தல், ஆடைகளை நெய்தல், சித்திர வேலைப்பாடுகளைச் செய்தல் இவைகளும் பெண்களின் வேலைகளாக இருந்தன. சாமுவேலின் தாயாகிய அன்னாள் அவனுக்காகச் சிறிய சட்டையைத் தயாரித்துவந்தாள் என்று நாம் பார்க்கின்றோம்.


நீதிமொழி 31:10-31 வசனங்களில் குணசாலியான ஒரு பெண்ணின் வேலைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இவள் தனது கணவனின் தொழிலில் அவனுக்கு உதவுவது மட்டுமின்றி தானாகவே பல வேலைகளைச் செய்துவந்தாள்.

திராட்சத் தோட்டத்தை நடுதல்,

வாணிபம் செய்தல், நூல் நூற்றல், மெல்லிய புடைவைகளை உண்டுபண்னி விற்பனை செய்தல்.


தொற்காள் ஆடைகளைத் தைத்து, மற்றவர்களுக்கும் கொடுத்துவந்தாள் (அப் 9:36).


தியத்தீரா பட்டணத்தைச் சேர்ந்த லீதியாள் என்பவள் சாயம் தோய்த்த ஆடைகளை பிலிப்பி பட்டணத்தில் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தாள் (அப்.16:14).


தனது கணவன் ஆக்கில்லாவோடு சேர்ந்து பிரிஸ்கில்லாள் கூடாரம் இடம் பணியைச் செய்து வந்தாள் (அப்.18:2, 3). பவுல் அப்போஸ்தலனும் இவர்களுடைய வீட்டில் தங்கி இதே வேலையைச் செய்து உள்ளார்.


வேசிகள்


எரிகோ பட்டணத்து ராகாப் போன்றவர்கள் பிழைப்புக்காக வேசித்தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள்.

இது அவர்களுக்கு ஆதாயம் தரும் ஒரு வேலையாக இருந்தது.

 (நீதி, 2:16-22 5:3-8).

சில விக்கிரகக்கோவில்கள் தாசிகள் என்னப்பட்ட கோவில்தொடர்புடைய வேசிகளும் இருந்தார்கள்.

தேவ கட்டளைப்படி ஓசியா தீர்க்கதரிசி மணந்துகொண்ட கோமேர் என்ற பெண் இப்படிப்பட்டவளாக இருந்திருக்க வேண்டும் (ஓசியா 1:3).


சபை ஊழியர்கள்


ஆதிச் சபையின் காலத்தில் பெபேயாள் போன்ற பெண் ஊழியக்காரர்கள் சபை ஊழியத்தைக் கவனித்து வந்தார்கள். இவள் கெங்கிரேயா பட்டணத்துச் சபையில் ஊழியக்காரியாக இருந்தாள் (ரோமர் 16:1).


வேலைசெய்வதைக் குறித்த வேத  கட்டளைகள்


நம் எல்லோருமே சோம்பேறியாய் இல்லாமல் ஏதே ஒரு வேலைசெய்ய வேண்டும் என்ற கட்டளை வேதாகமத்தில் உள்ளது.


வேலைசெய்யாதவனுக்குச் சாப்பாடு கொடுக்கக் கூடாது என்று பவுல் கட்டளையிட்டிருகிறார் (2 தெச. 3:10). கர்த்தருடைய வருகை சமீபமாயிற்று என்று சொல்லி, வேலைசெய்யாமல் சபையில் பகிந்துகொடுக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டு, வீண்வம்பு பேசித் திரிந்தவர்கள் அந்த நாட்களில் இருந்தார்கள். இவர்கள் வேலைசெய்து, சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிட வேண்டும் என்ற அவர் கட்டளை இட்டார்.


"உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலை செய்யவும்வேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறோம்" என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

 (1 தெச. 4:12). அவர் தனது சொந்தக் கைகளினால் வேலைசெய்து பாடுபட்டிருக்கிறார் (1 கொரி.4:12).


வேலை செய்யாமலிருத்தல் திருடுவதற்கு வழிநடத்துகிறது. "திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்” என்று பவுல் ஆலோசனை கூறுகிறார் (எபே. 4:28).


ஓய்வுநாளில் எந்த வேலையும் செய்யக் கூடாது. என்ற கட்டளை ஆதிகாலத்திலேயே கொடுக்கப் பட்டிருந்தது (யாத். 20:8-10).


"வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்;" (பிர. 5:12)


Monday, 20 September 2021

சாமுவேல் முதலாம் புத்தகம் ||பழைய ஏற்பாட்டின் புத்தக சுருக்கம் ||

 பழைய ஏற்பாட்டின் புத்தக சுருக்கம்


சாமுவேல் முதலாம் புத்தகம்



"மாற்றங்களின் புத்தகம்"


"சாமுவேல்" என்ற பெயருக்கு "தேவனின் நாமம்" அல்லது "தேவன் கேட்டருளினார்" என்று பொருள்.


எபிரேய வேதாகமத்தில் 1,2 சாமுவேலின் புத்தகங்கள் ஒரே புத்தகமாகும் அது "சாமுவேலின் புத்தகம்" என்று அழைக்கப்படும்.


Septuagint என்று அழைக்கப்படும் கிரேக்க மொழிபெயர்ப்பில்தான் முதல் முறையாக இந்தப் புத்தகம் இரண்டு பத்தகங்களாக பிரிக்கப்பட்டது.


ஆசிரியர் மற்றும் சில தகவல்கள்


இந்த புத்தகத்தின்ல் உள்ள முக்கிய நபர்களில் சாமுவேலும் ஒருவர். இளவயதுள்ள தீர்க்கதரிசியாகவும், இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதியாகவும், சவுல், தாவீது என்னும் இராஜாக்களை அபிஷேகம் செய்த ஆசாரியராக இருந்தார்.


சாமுவேலின் பெயரினால் இந்த புத்தகம் அழைக்கப்பட்டாலும் இந்தப் புத்தகத்தை எழுதியவர் இன்னார் என்பது குறிப்பிடப்படவில்லை.


சாமுவேல் இதை எழுதியிருக்கலாம் அல்லது 1சாமு1:4-24:22 பகுதிகள் அவரது மரணம்வரையுள்ள பகுதியை கூறுவதால் அதற்கான தகவல்களை அவர் கொடுத்திருக்கலாம். தாவீது ராஜாவின் பற்றிய குறிப்புகளை சாமுவேலும், நாத்தானும், காத்தும் எழுதிவைத்தாக 1நாளா 29:29-30ல் வாசிக்கிறோம். இவற்றில் எழுதப்பட்ட காரியங்களின் சாட்சியங்களின் அடிப்படையில் பார்க்கும்போது 1,2 சாமுவேலின் புத்தகங்கள் சாமுவேலும், நாத்தானும், காத்தும் எழுதியதை  தீர்க்கதரிசிகளின் குழுவை சேர்ந்த ஒருவரால் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


அதிகாரங்கள் : 31

வசனங்கள்: 810..


1 சாமுவேல் புத்தகம் 110 ஆண்டு கால வரலாற்றை சொல்லுகிறது. 

சாமுவேல் பிறந்த (கிமு. 1120) நியாயாதிபதிகளின் காலம் முடியும் நாட்களில் இருந்து, சவுலின் மரணம் சம்பவித்த காலம் (கிமு 1011) வரையுள்ள காலத்தின் சம்பவங்கள் சொல்லப்பட்டுள்ளது.


புத்தகம்  ஒரு பார்வை


1வது மாற்றம்:


இரண்டு நியாயாதிபதிகளுக்கிடையே தலைமைத்துவத்தில் மாற்றம், ஆசாரியனான ஏலியிடம் இருந்து நியாயாதிபதியான சாமுவேலிடம் தலைமைத்துவம் மாறுகிறது.


2வது மாற்றம்:


இஸ்ரவேல் தேவனை மையமாய் கொண்டிருந்த முறையில் இருந்து அரசனை மையமாய் கொண்டிருக்கும் முறைக்கு மாறுதல். நியாயதிபதியான சாமுவேலிடத்திலிருந்து அரசனான சவுலிடத்திற்கு தலைத்துவம் மாறுகிறது.


3வது மாற்றம்:


அரசனான சவுலிடத்திலிருந்து அரசனான தாவீதிற்கு தலைமைத்துவம் மாறுகிறது.


அதி 1-8: 

இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதியான சாமுவேலின் பிறப்பும் உயர்வும் குறித்து


அதி 9-15: 

சவுலின் அழைப்பு - அபிஷேகம் - ஆட்சி - தள்ளப்படுதல்.


 அதி 16-30: 

தாவீதின் வருகையும் வளர்ச்சியும் 


அதி 31: 

காயப்பட்ட சவுல் தற்கொலை செய்துகொள்ளுதல்.


இந்த புத்தகம் செல்லும் தேவனின் சுபாவங்கள்:


1.கேட்கிற தேவன்

அன்னாளின் ஜெபம் கேட்கப்பட்டது.

தங்களுக்கு இராஜா வேண்டும் என்கிற ஜனங்களின் சத்தம் கேட்கப்பட்டது.


2.நியாயம் தீர்க்கும் தேவன்

ஏலியின் குடும்பத்தாருக்கான நியாயத்தீர்ப்பு.

கூவுலுக்கான நியாயத்தீர்ப்பு.


3.இளைப்பாறாத தேவன்

ஏலியின் குடும்பத்திற்கு பதிலாக சாமுவேலின் நியமனம்.

சவுலுக்கு பதிலாக தாவீதின் நியமனம்.


தவறு செய்த  அரசன்.


1.சவுலின் மேட்டிமை (துணிகரமான கீழ்ப்படியாமை)


 I வது சோதனை:

கில்காலுக்கு போ. பெலிஸ்தியர்களுடன் யுத்தத்திற்கு ஆயத்தம் செய் ஆனால் 7 நாட்கள் காத்திரு என்று தேவன் சொல்லியும் கீழ்ப்படிய மறுத்தார்.

1சாமு 13:8-11 பழியை ஜனங்கள் மீது போடுவதில் கை தேர்ந்தவன்.


2வது சோதனை

அமலேக்கியர்களோடு யுத்தத்திற்கு போ. ஆனால் எதையும் எடுத்துவராதே.

1சாமு 15:19-21 தலைமைப்பண்பில் உள்ள குறைகள் வெளிப்படுதல். 

பழியை வேறோருவர் மீது போடுதல், மனிதனுக்குப் பயப்படுதல், தலைமைக்கும் தலைமையினால் வழிநடத்தப்படுபவர்களுக்கும் இடையே தொடர்பின்மை.

தன்னைக்குறித்த பிம்பத்தை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளித்தல்.


2.சவுலின் பொறாமை


குறைபாடுகளுக்கான முன்னுதாரணம் ஒப்பிடுதல் போட்டிபோடுதல் இச்சித்தல்.


1சாமு 18:9 அந்நாள்முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான்.


வச 12:16 – சவுல் தேவன் தாவிதோடிருக்கிறதை கண்டான்.


ஜனங்கள் தாவீதை நேசித்தார்கள் சவுலின் குமாரனும், குமாரத்தியும் தாவீதை நேசித்தார்கள்.


3.சவுலின் மறைமுகமான வஞ்சனை 


தனது குடும்பத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்தல்.

மனம்வருந்தவோ, மன்னிப்புக்கேட்கவோ விரும்பாதிருத்தல்.

வசனம் 18:17- தாவீதின் திருமணத்தில் சதி செய்தல்.

வசனம் 22:24 தாவீதை தீங்கின் பாதையில் வைத்தல்.


புத்தகத்தின் முக்கிய பகுதிகள்


  • சாமுவேல் அதி 1-9:-

1.அன்னாள் ஜெபித்தலும், ஜெபம் கேட்கப்படுதலும் (அதி 1)


2 .அன்னாளின் தீர்க்கதரிசன ஜெபம்  ஆலயத்தில் சிறுவனான சாமுவேல்

 (அதி 2)


3.சாமுவேலின் அழைப்பு (அதி 3)


4.கடைசி நியாயாதிபதியின் பணியும், முதல் தீர்க்கதரிசியின் பணியும்

 (அதி 4-8)


5.பெலிஸ்தர்களால் தேவனுடைய பெட்டி பிடிக்கப்படுதல்.

சாமுவேலுக்கு கொடுக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை.

 ஏலி மரணம் மற்றும் அவனது குமாரர் கொல்லப்படுதல் (அதி 4)


6.தேவனுடைய பெட்டியின் நிமித்தமாய் பெலிஸ்தர் தேவனால் தண்டிக்கப்படுதல்.

தேவனுடைய பெட்டி பெத்ஷிமேசிற்கு வருதல் (அதி 5.6)


7.சாமுவேல் முதலாவது மறுமலர்ச்சிக்கு தலமையேற்றல்.

விக்கிரகங்களை விட்டு கர்த்தரிடமாய் திரும்புதல். 

எபினேசரில் வெற்றி. (அதி 7)


8.இஸ்ரவேலர் தேவனை தள்ளிவிட்டு ஒரு இராஜாவை கேட்டார்கள்.

சாமுவேல் எச்சரிக்கை

செய்தாலும் இராஜாவை வாக்குப்பண்ணுதல் (அதி 8)


  • சவுல் (அதி 9-15)


1.இராஜாவாக தெரிவுசெய்யப்படுதல் (அதி 9)


2.இராஜாவாக அபிஷேகம் செய்யப்படுதல்

(அதி 10)


3.சவுலின் ஆட்சி (அதி 11)

சவுல் அம்மோனியர்களை வெற்றிகொள்ளல் (அதி 11).

அதிகாரம் சாமுவேலிடமிருந்து

 சவுலுக்கு மாறுதல் (அதி 12).


4.சவுல் தன் அங்கீகாரத்தை இழத்தல் (அதி 13-15)

சவுல் தேவனுக்கு எதிராக செயற்படுதல் (அதி 13)

யோனத்தானால் பெலிஸ்தியருக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி உண்டாகிறது. ஆனால்

அதற்கான பெருமையை எடுத்துக் கொள்ளுதல் (அதி 14)

ஆகாகின் காரியத்தில் சவுலின் துணிகரமான எதிர்ப்பும், கீழ்ப்படியாமையும் (அதி 15)


  •  தாவீது: (அதி 16-31)


1.தாவீது பயிற்றுவிக்கப்படுதல்

 (அதி 17-18)


காத்தூரானாகிய இராட்சசனை தாவீது கொல்லுதல் (அதி 17).

யோனத்தானும் தாவீதும் உடன்படிக்கை செய்தல்.

சவுல் தனது குமாரத்தி மீகாளை தாவீதிற்கு கொடுத்தல் (அதி 18)


2.தாவீது தண்டிக்கப்படுதல் (அதி 19-30) 


சவுல் மீண்டும் தாவீதை கொல்ல முயலுதல்

(அதி 19

தாவீது தப்பிக்க யோனத்தான் உதவுதல் (அதி 20)

தாவீது நோபுக்கும், காத்திற்கும் ஓடிப்போதல்

(அதி 21)

தாவீது தனக்கான சேவகர்களை சேர்த்தல்.

சவுல் கர்த்தரின் ஆசாரியர்களை கொன்றுபோடுதல் (அதி 22)


3.தாவீது பெலிஸ்தரோடு யுத்தம் செய்தல்: 

சவுல் தாவீதை பின் தொடர்தல்.

தாவீதும் உடன்படிக்கை செய்தல்

(அதி 23)


4.என்கேதியில் தாவீது சவுலை கொல்லாமல் தப்பவிடுதல் (அதி 24)


5.சாமுவேலின் மரணம்: 

தாவீதும் அபிகாயிலும் (அதி 25) 


6.சீப் வனாந்தரத்தில் மீண்டும் தாவீது சவுலை கொல்லாமல் தப்பவிடுதல்

 (அதி 26)


7.பெலிஸ்தரின் தேசத்தில் உள்ள சிக்லாகிற்கு தாவீது ஒளிந்துகொள்ளும்படி போகுதல் 

(அதி 27)


8.சவுல் எந்தோரில் உள்ள குறிசொல்லுகிறவளிடத்தில் செல்லுதல் (அதி 28)


9.பெலிஸ்தர் யுத்தத்திற்கு தங்களோடு வரும் தாவீதை நம்புவதற்கு மறுத்தல் (அதி 29)


10.அமலேக்கியர் சிக்லாக்கை கொள்ளையிட்டதால்

தாவீது அவர்களோடு யுத்தம்செய்தல் (அதி 30)


11.சவுல் யுத்தத்தில் பலத்த காயம்பட்டு, தற்கொலை செய்துகொண்டு மரித்தல் (அதி 31)....



Taken from Pr.Thomasraj Notes




Sunday, 19 September 2021

வார் / சவுக்கு || அறிந்து கொள்வோம் பகுதி - 80 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி - 80


வார் / சவுக்கு 


"வார்" அல்லது "சவுக்கு" என்பது தண்டிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. சாலொமோன் சவுக்குகளால் மக்களைத் தண்டித்தான்.1 இராஜா 12:11.


ஒரு மனிதனுக்கு தண்டனை கொடுக்க  நாற்பது சவுக்கு அடிகள் கொடுக்கலாம் என்றுஉபாகமம் 25:3 வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. பிறகு

அது 39ஆகக் குறைக்கப்பட்டது. இதில் 13 அடிகள் விலாப்பகுதியிலும், 26 அடிகள் முதுகிலும் கொடுக்கப்பட்டன என்று நம்பப்படுகிறது.


"யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்" என்றார் பவுல்  (2 கொரி. 11:24). 

ரோமக்குடிமக்கள் சவுக்கினால் அடிக்கப்படக் கூடாது என்ற கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. பவுல் ரோமக் குடிமகன் என்று தெரியாதபடியால் பிலிப்பி பட்டணத்துச் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக அநேகந்தரம் அடிக்கப்பட்டார்.

(அப். 16:22 37). பிறகு ரோமக் குடிமகன் என்று தெரிந்தவுடன் அவர் விடுவிக்கப்பட்டார் என்பது நமக்கு தெரியும்.


இயேசுவின்  முன் எச்சரிப்பு


இயேசு தனது ஊழியர்களை ஆலோசளைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் அவர்களை வாரினால் அடிப்பார்கள் என்று (மத். 10:17-ல் முன் எச்சரிப்பு கொடுத்தார்.

பவுல்  போன்ற ஊழியர்களின் வாழ்க்கையில் இது நிறைவேறியது.துவக்ககாலத்தில் இதைச் செய்த அவரே (அப். 22:19)


இயேசு வாரினால் அடிக்கப்படுதல்


வாரினால் அடிப்பது என்பது ரோமர்களின் கடுமையான தண்டனைகளில் ஒன்றாகும்

சிலுவையில் அறைந்து கொல்லுவது என்பது இதைவிடக் கடுமையான மரண தண்டனை.பெரும்பாலும் இவை இரண்டு தண்டனைகளும் சேர்த்துக் கொடுக்கப்படுவதில்லை இவை இரண்டும் சேர்க்கப்படும்போது அது மிகவும் கொடுமையான தண்டனையாக இருக்கும்.ஒருவேளை இயேசுவை வாரினால் அடிப்பதோடு அவரை அனுப்பிவிடலாம் என்று பிலாத்து நினைத்திருக்கலாம். ஆனால் கூடியிருந்தவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறையும்படி நிர்ப்பந்தித்த படியால் அவன் அவர் சிலுவையில் அறையப்படும்படி ஒப்புக்கொடுத்தான்.

எனவே இயேசு அநியாயமான வகையில் இந்த இரண்டு தண்டனைகளையும் சேர்த்து அனுபவிக்க வேண்டியிருந்தது.


அவர் நமது பாவங்களுக்காகவே இந்த இரண்டு தண்டனைகளையும் சேர்த்து அனுபவித்தார் என்பதை நாம் அறிவோம்.யூதர்களின் பழைமையான பிரமாணத்தின்படி நூற்பதற்கு அதிகமான முறை சாட்டையினால் அடிப்பது தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது ரோமர்களின் முறைப்படி தண்டனை கொடுக்கப்பட்டபடியால் இயேசுவானவர் எத்தனை முறை அடிக்கப்பட்டார் என்பது சரியாக தெரியாது.

இந்தச் சாட்டையில் ஒன்றிரண்டு தோல் வார்கள் கட்டப்பட்டிருக்கும். இந்த வார்களில் ஈயக் குண்டுகள் கட்டப்பட்டிருப்பார்கள்.

ஒவ்வொரு முறை அடிக்கும்போதும் தோல் அடிப்பதின் வேகத்தை அதிகரிக்கச் செய்யும். இந்தக் குண்டுகள் சரீரத்தைக் கடுமையாகத் தாக்கி ஆழமான காயத்தை ஏற்படுத்தும்.


இயேசு காசுக்காரர்களைத் தேவனுடைய ஆலயத்திலிருந்து துரத்தியபோது அவர் கயிற்றினால் ஒரு சவுக்கை உண்டுபண்ணி அவர்களை விரட்டினார் யோவ 2:14,15. 

அந்த சவுக்கு யாருக்கும் எந்தக் காயத்தையும் ஏற்படுத்தியிருக்க முடியாது.இயேசுவின் ஆடைகளைக் களைந்து, அவர் தமது கையை நீட்டியபடி திரும்பி நிற்குமாறு செய்து, அப்படியே அவரை ஒரு கம்பத்தில் கட்டிவைத்தார்கள்.

இயேசுவின் தோள்களையும், முதுகையும், கால்களையும் இந்தச் சாட்டை பயங்கரமாகத் தாக்கியது.

முதலில் இந்த வார்கள் தோலைக் கிழிக்கின்றன. பிறகு தொடர்ந்து அடிக்கும்போது, அடியிலுள்ள திசுக்களை வார்கள் தாக்குகின்றன. 

முதலில் தோலிலுள்ள இரத்தக்குழாய்களிலிருந்து இரத்தம் வழிகிறது. பிறகு திசுக்கள் கிழிக்கப்படும்போது, திசுக்களுக்கு அடியிலுள்ள இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனி உடைந்து, இரத்தம் பீறிட்டது.ஈயக்குண்டுகள் முதலில் தோலில் காயங்களை உண்டாக்குகின்றன. ஆனால் தொடர்ந்து தாக்கும்போது அவை குழிகளை உண்டாக்குகின்றன.

இவைகளிலிருந்தும் இரத்தம் பாய்கிறது.

இயேசுவானவரின் முதுகு அடையாளமே தெரியாத வகையில் இரத்தம் தோய்ந்ததாக மாறியது.

இப்படி அந்த தண்டனையை மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்கும் நூற்றுக்கதிபதி அடிக்கப்படுபவர் மரணத்தை நெருங்கிவிட்டாரா என்று கண்காணிப்பான் அப்போது அடிப்பதை நிறுத்தச் சொல்லுவான்.


அரை மயக்கத்திலிருக்கும் இயேசுவின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டபோது அவர் அப்படியே கீழே சரிந்து விழுகிறார். அவருடைய சரீரத்திலிருந்து வெளியேறிய இரத்தத்தின் மத்தியில் அவர் இப்படி விழுந்து கிடக்கிறார்.


"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" என்று ஏசாயா முன்னறிவித்திருந்தார் (ஏசா 53:5).


"நாவின் சவுக்கு" என்ற சொல் யோபு 5:21-ல் சொல்லப்பட்டுள்ளது. இது வார்த்தைகளினால் தாக்குவதைக் குறிக்கிறது.இன்றும்  மத்தியக் கிழக்கு நாடுகளில் வார் அல்லது சவுக்கினால் அடிக்கப்படும் தண்டனை பழக்கத்தில் உள்ளது.

Taken from - "கிறிஸ்துவின் சிலுவை மரணம்" Book




Friday, 10 September 2021

தோப்புக்கள் || அறிந்து கொள்வோம் பகுதி - 79 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி - 79


தோப்புக்கள்


 (GROVES) என்பதற்கான எபிரெய வார்த்தை “அசேரா” (asherah) என்பதாகும். இதற்கு "மரத்தினால் செய்த சிலை" அல்லது "மரத்தூண்" என்று பொருள்.


பாகாலின் சிலையோடு அசேராவையும் வைத்திருப்பார்கள். இது பாகாலின் மனைவியாகக் கருதப்படுகிறது.


வேதாகமத்தின் மொழிபெயர்ப்புக்களில் அசேரா “தோப்புக்கள்” (groves) என்றே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.


"அசேரா"என்னும் வார்த்தை "யசார்” (yashar) என்னும் வினைச்சொல்லிருந்து

வந்திருக்கிறது. இதற்கு "நேராக இருத்தல், நிமிர்ந்திருத்தல், நிறுத்துதல்" என்று பொருள்.


இந்தத் தூண் தரையிலிருந்து ஒரு கொடிமரம்போல இருக்கும். இது தளிர்த்த மரமாகவும் இருக்கலாம். மரத்தின் உயரமான உச்சிப்பகுதி வெட்டப்பட்டிருக்கலாம். மேலும்,

மரத்தின் தண்டில் ஒரு உருவம் செதுக்கப்பட்டிருக்கலாம். (உபா 16:21). 


இந்தத் தூணானது ஒரு

உருவமாகவும் இருக்கலாம்.இது தரையில் நேராக நிறுத்தப்பட்டிருக்கும். (1 இராஜா 14:15; 1இராஜா 16:33; ஏசா 17:8). பொதுவாக இந்தத் தூண் மரத்தினால் செய்யப்பட்டிருக்கும்.

(நியா 6:26) சில சமயங்களில் கல்லாலும் செய்யப்பட்டிருக்கும். 


இந்தத் தூணைத்தான்

வெட்டிப்போட வேண்டுமென்று தேவன் கட்டளை கொடுக்கிறார் (யாத் 34:13) அதைப் பிடுங்கிப்போடவேண்டும்

 -மீகா 5:14)

சுட்டெரிக்கப்பட வேண்டும் (உபா 12:3) உடைக்க வேண்டும். (2 நாளா 34:4), தோப்புக்கள் என்பது காடுகளிலுள்ள அடர்ந்த மரங்களல்ல (2இராஜா 17.10)


இவற்றைப் பச்சைமரத்திற்குக் கீழும் வைக்கமாட்டார்கள். மரத்தை ஜீவனுக்கு அடையாளமாகக் கருதி, புறஜாதியார் அதைத் தெய்வமாக ஆராதித்தார்கள்.


மரங்களை ஆராதிக்கும் வழக்கம் கானானிய தேசத்தில் ஆரம்பித்து, அதன் பின்பு மற்ற தேசங்களுக்கும் பரவிற்று.


தேவன் தம்முடைய மகிமையை மரத்திற்குக் கொடுக்கமாட்டார். வேறு எந்த விக்கிரகத்தோடும் அவர் தமது மகிமையைப் பகிர்ந்து கொள்வதில்லை. கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பதாகும். (யாத் 34:13-14; 1இராஜா 14:15; 1இராஜா 15:13; 1இராஜா 16:32-33; 2 நாளா 36:14).


கானானியர்கள் தங்களுடைய விக்கிரகாராதனையினால் அழிந்துபோனார்கள். 

தோப்பு விக்கிரகாராதனையைப் பற்றி:

எரே 5:7;எரே 7:30-31; எரே 19:4-5; எரே 32:34-35; ஓசி 4:12-14; ஆமோ 2:7-9 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது. 


இவை தவிர தோப்புக்களைப் பற்றி மேலும் பல வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது.

(யாத் 3413; உபா 7:5; உபா 12:3; உபா 16:21; நியா 3:7; நியா 6:25-30; 1இராஜா 14:15,23; 1இராஜா 15:13; 1இராஜா 16:33; 1இராஜா 18:19; 2இராஜா 13.5; 2இராஜா 17.10,16; 2இராஜா 18:4; 2இராஜா 21:37; 2 இராஜா 23:4-15; 2 நாளா 14:3; 2 நாளா 15:16; 2நாளா 17.6; 2 நாளா 19:3; 2 நாளா 24:18; 2 நாளா 31:1; 2 நாளா 33:319; 2 நாளா 34:3-7; ஏசா 17:8; ஏசா 27.9; எரே 17:2; மீகா 5.14),


அசேரா  என்னும் தோப்பு விக்கிரகத்தைப் பற்றி கூறப்படும் இடத்தில் கர்த்தர் தம்மை எரிச்சலுள்ளவராகக் காண்பிக்கிறார். வேதாகமத்தில் இந்த வசனத்தில் மட்டுமே கர்த்தருடைய பெயர் எரிச்சலுள்ளவர் என்று கூறப்பட்டிருக்கிறது.


அந்நிய தெய்வங்களை ஜனங்கள் சோரமார்க்கமாகப் பின்பற்றுகிறார்கள். *அந்நிய தெய்வங்களின் விக்கிரக ஆராதனையோடு, வேசித்தனமும், விபசாரமும் அவற்றை பிரிக்க முடியாத அளவுக்குக் கலந்திருக்கிறது.

 (யாத் 34:15-16, லேவி 17:7; லேவி 20:5-6; உபா 31.16; நியா 2.17; நியா 8:27.33; நாளா 5:25; 2 நாளா 21:13; சங் 73:27; சங் 106:39; எரே 3:29; எரே 13:27; எசே 6:9; எசே 20:30; எசே 43:7-9; ஓசி 1:2; ஓசி 2:2-4; ஓசி 5:3-4; ஓசி 6:10)


"நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்" (ஏசாயா 42:8) ஆகவே, நம் மகிமையும் புகழ்ச்சியும் துதியும் மனுஷருக்கோ பொருட்களுக்கோ செல்லாதபடி, முழு மகிமையும் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாகும்படி, நம்மைக் காத்துக் கொள்வோம்.


நளதம் (Spikenard) // வெள்ளைக்கல் பரணி (Alabaster box) // அறிந்து கொள்வோம் பகுதி -155 //

அறிந்து கொள்வோம் பகுதி -155 நளதம் (Spikenard) மற்றும் வெள்ளைக்கல் பரணி (Alabaster box)  விவிலிய நூலில் வரும் நளதம் என்னும் தைலம் மணம் மிகுந்...