வார் / சவுக்கு || அறிந்து கொள்வோம் பகுதி - 80 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி - 80


வார் / சவுக்கு 


"வார்" அல்லது "சவுக்கு" என்பது தண்டிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. சாலொமோன் சவுக்குகளால் மக்களைத் தண்டித்தான்.1 இராஜா 12:11.


ஒரு மனிதனுக்கு தண்டனை கொடுக்க  நாற்பது சவுக்கு அடிகள் கொடுக்கலாம் என்றுஉபாகமம் 25:3 வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. பிறகு

அது 39ஆகக் குறைக்கப்பட்டது. இதில் 13 அடிகள் விலாப்பகுதியிலும், 26 அடிகள் முதுகிலும் கொடுக்கப்பட்டன என்று நம்பப்படுகிறது.


"யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்" என்றார் பவுல்  (2 கொரி. 11:24). 

ரோமக்குடிமக்கள் சவுக்கினால் அடிக்கப்படக் கூடாது என்ற கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. பவுல் ரோமக் குடிமகன் என்று தெரியாதபடியால் பிலிப்பி பட்டணத்துச் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக அநேகந்தரம் அடிக்கப்பட்டார்.

(அப். 16:22 37). பிறகு ரோமக் குடிமகன் என்று தெரிந்தவுடன் அவர் விடுவிக்கப்பட்டார் என்பது நமக்கு தெரியும்.


இயேசுவின்  முன் எச்சரிப்பு


இயேசு தனது ஊழியர்களை ஆலோசளைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் அவர்களை வாரினால் அடிப்பார்கள் என்று (மத். 10:17-ல் முன் எச்சரிப்பு கொடுத்தார்.

பவுல்  போன்ற ஊழியர்களின் வாழ்க்கையில் இது நிறைவேறியது.துவக்ககாலத்தில் இதைச் செய்த அவரே (அப். 22:19)


இயேசு வாரினால் அடிக்கப்படுதல்


வாரினால் அடிப்பது என்பது ரோமர்களின் கடுமையான தண்டனைகளில் ஒன்றாகும்

சிலுவையில் அறைந்து கொல்லுவது என்பது இதைவிடக் கடுமையான மரண தண்டனை.பெரும்பாலும் இவை இரண்டு தண்டனைகளும் சேர்த்துக் கொடுக்கப்படுவதில்லை இவை இரண்டும் சேர்க்கப்படும்போது அது மிகவும் கொடுமையான தண்டனையாக இருக்கும்.ஒருவேளை இயேசுவை வாரினால் அடிப்பதோடு அவரை அனுப்பிவிடலாம் என்று பிலாத்து நினைத்திருக்கலாம். ஆனால் கூடியிருந்தவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறையும்படி நிர்ப்பந்தித்த படியால் அவன் அவர் சிலுவையில் அறையப்படும்படி ஒப்புக்கொடுத்தான்.

எனவே இயேசு அநியாயமான வகையில் இந்த இரண்டு தண்டனைகளையும் சேர்த்து அனுபவிக்க வேண்டியிருந்தது.


அவர் நமது பாவங்களுக்காகவே இந்த இரண்டு தண்டனைகளையும் சேர்த்து அனுபவித்தார் என்பதை நாம் அறிவோம்.யூதர்களின் பழைமையான பிரமாணத்தின்படி நூற்பதற்கு அதிகமான முறை சாட்டையினால் அடிப்பது தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது ரோமர்களின் முறைப்படி தண்டனை கொடுக்கப்பட்டபடியால் இயேசுவானவர் எத்தனை முறை அடிக்கப்பட்டார் என்பது சரியாக தெரியாது.

இந்தச் சாட்டையில் ஒன்றிரண்டு தோல் வார்கள் கட்டப்பட்டிருக்கும். இந்த வார்களில் ஈயக் குண்டுகள் கட்டப்பட்டிருப்பார்கள்.

ஒவ்வொரு முறை அடிக்கும்போதும் தோல் அடிப்பதின் வேகத்தை அதிகரிக்கச் செய்யும். இந்தக் குண்டுகள் சரீரத்தைக் கடுமையாகத் தாக்கி ஆழமான காயத்தை ஏற்படுத்தும்.


இயேசு காசுக்காரர்களைத் தேவனுடைய ஆலயத்திலிருந்து துரத்தியபோது அவர் கயிற்றினால் ஒரு சவுக்கை உண்டுபண்ணி அவர்களை விரட்டினார் யோவ 2:14,15. 

அந்த சவுக்கு யாருக்கும் எந்தக் காயத்தையும் ஏற்படுத்தியிருக்க முடியாது.இயேசுவின் ஆடைகளைக் களைந்து, அவர் தமது கையை நீட்டியபடி திரும்பி நிற்குமாறு செய்து, அப்படியே அவரை ஒரு கம்பத்தில் கட்டிவைத்தார்கள்.

இயேசுவின் தோள்களையும், முதுகையும், கால்களையும் இந்தச் சாட்டை பயங்கரமாகத் தாக்கியது.

முதலில் இந்த வார்கள் தோலைக் கிழிக்கின்றன. பிறகு தொடர்ந்து அடிக்கும்போது, அடியிலுள்ள திசுக்களை வார்கள் தாக்குகின்றன. 

முதலில் தோலிலுள்ள இரத்தக்குழாய்களிலிருந்து இரத்தம் வழிகிறது. பிறகு திசுக்கள் கிழிக்கப்படும்போது, திசுக்களுக்கு அடியிலுள்ள இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனி உடைந்து, இரத்தம் பீறிட்டது.ஈயக்குண்டுகள் முதலில் தோலில் காயங்களை உண்டாக்குகின்றன. ஆனால் தொடர்ந்து தாக்கும்போது அவை குழிகளை உண்டாக்குகின்றன.

இவைகளிலிருந்தும் இரத்தம் பாய்கிறது.

இயேசுவானவரின் முதுகு அடையாளமே தெரியாத வகையில் இரத்தம் தோய்ந்ததாக மாறியது.

இப்படி அந்த தண்டனையை மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்கும் நூற்றுக்கதிபதி அடிக்கப்படுபவர் மரணத்தை நெருங்கிவிட்டாரா என்று கண்காணிப்பான் அப்போது அடிப்பதை நிறுத்தச் சொல்லுவான்.


அரை மயக்கத்திலிருக்கும் இயேசுவின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டபோது அவர் அப்படியே கீழே சரிந்து விழுகிறார். அவருடைய சரீரத்திலிருந்து வெளியேறிய இரத்தத்தின் மத்தியில் அவர் இப்படி விழுந்து கிடக்கிறார்.


"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" என்று ஏசாயா முன்னறிவித்திருந்தார் (ஏசா 53:5).


"நாவின் சவுக்கு" என்ற சொல் யோபு 5:21-ல் சொல்லப்பட்டுள்ளது. இது வார்த்தைகளினால் தாக்குவதைக் குறிக்கிறது.இன்றும்  மத்தியக் கிழக்கு நாடுகளில் வார் அல்லது சவுக்கினால் அடிக்கப்படும் தண்டனை பழக்கத்தில் உள்ளது.

Taken from - "கிறிஸ்துவின் சிலுவை மரணம்" Book




Post a Comment

0 Comments