வேதத்தில்பெயர் சொல்லப்படாத பெண்கள் - பகுதி-4. ( Anonymous Women's in the Bible)

 Anonymous Women's in the Bible 


வேதத்தில்பெயர் சொல்லப்படாத பெண்கள்


பகுதி-4


யெரொபெயாமின் மனைவி

 ( 1 இராஜா 14: 1-18, 13: 1-6, 12 : 28-31)


வேதத்தில் பெயர் எழுதப்படாத நபர்களில் இவளும் ஒருவள். சாலொமோன் ராஜா இஸ்ரவேல் தேசத்தை ஆட்சி செய்த காலத்தில் அவன் பாவம் செய்து தேவனை விட்டுத் தூரம் போனபடியால், தேவன் ராஜ்யத்தின் 10 கோத்திரங்களை சாலொமோனின் ஊழியக்காரனாய் இருந்த யெரொபெயாமிடம் ஒப்படைக்கத் தீர்மானித்தார்.

 இதை அகியா தீர்க்கன் மூலம் யெரொபெயாமிடம் அறிவித்தார். எனவே யெரொபெயாமின் மனைவி இஸ்ரவேலின் 12 கோத்திரங்களில் 10 கோத்திரங்களுக்கு ராணியாகும் பாக்கியம் பெற்றாள். சாலொமோனின் மகன் ரெகொபெயாம் யூதா கோத்திரத்தை மட்டும் ஆட்சி செய்து வந்தான். யெரொபெயாமின் வாழ்க்கை தேவனுக்குப் பிரியமாய் இல்லை.


அவனிடம் கர்த்தருக்குப் பயப்படும் பயம் இல்லை. தன்னை ராஜாவாக்கின தேவன் அதில் நிலைத்திருக்கச் செய்வார் என்ற விசுவாசம் அவனுக்கு இல்லை. யூதாவின் ஜனங்கள் எருசலேம் ஆலயத்தில் பலிகளைச் செலுத்தப்போகும்போது தங்கள் ராஜா ரெகொபெயாம் வசமாய் திரும்பி யெரொபெயாமாகிய தன்னைக் கொன்று போடுவார்கள் என சிந்தித்தான். மனுஷருக்குப் பயந்தான். பயம் அவனைப் பாவம் செய்ய வைத்தது. பொன்னினால் 2 கன்றுக்குட்டிகளைச் செய்து பெத்தேல், தாண் ஆகிய இடங்களில் நிறுத்தி அங்கே பலிபீடங்களைக் கட்டினான். ஜனங்களிடம் இவைதான் உங்களை எகிப்திலிருந்து

கொண்டு வந்த தேவர்கள் என்றும் மனம் கூசாமல் அறிவித்தான். லேவி புத்திரராய் இராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான். பெத்தேலில் அவன் கட்டிய பலிபீடத்தின் மேல் பலியிட்டு, தூபம் காட்டி, இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பண்டிகையை ஏற்படுத்தினான்.


ராணியாகிய இந்த யெரொபெயாமின் மனைவி தன் கணவன் தேவனுக்கு விரோதமாய்ச் செயல்பட்ட காரியங்களை அவனிடம் சொல்லி, உணர்த்தி அவைகளை விட்டுவிடச் சொன்னதாக வேதம் கூறவில்லை. இவளும் கணவனுடன் இசைந்து ஒத்துழைத்திருக்கிறாள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. தங்களை இவ்வளவாய் உயர்த்தின தேவனை கணவனோடு சேர்ந்து அவளும் மறந்துவிட்டாள்.


மேலும் யெரொபெயாம் பெத்தேலில் கட்டிய பலிபீடத்திற்கு விரோதமாக, தேவனுடைய மனுஷன் ஒருவன், தாவீதின் வம்சத்தில் பிறக்கும் யோசியாவால் இவை யாவும் சுட்டெரிக்கப்படும் என்று 

1 இராஜா 13:2,3 தைரியமாய் எடுத்துரைத்தான். இதைக் கேட்ட யெரொபெயாம் தான் செய்த பாவத்தை உணர்ந்து உடனே பலிபீடங்களை இடித்துப் போட்டு மனம் திரும்பி ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டிருக்கலாம். இருதயம் மழுங்கிப்போன அவனோ தேவனுடைய மனுஷன் மீது கோபப்பட்டு அவனைப் பிடியுங்கள் என்று தன் கையை நீட்டினான்.

 உடனே ராஜாவின் கை மடக்க முடியாமல் மரத்துப் போயிற்று. தேவ வாக்கின்படி பலிபீடமும் வெடித்து, சாம்பல் கொட்டியது. தேவனுடைய மனுஷனிடம் ராஜா உன் தேவனாகிய கர்த்தரை நோக்கி எனக்காக வேண்டுதல் செய் என்றான் 1 இராஜா 13:6. 

நம் தேவனாகிய கர்த்தர் என்று சொல்ல அவனுக்கு மனமில்லை. ஏனெனில் தன்னை உயர்த்தி

ராஜாவாக்கின தேவனை அவன் அறியவில்லை, அவனுக்காகத் தேவனுடைய மனுஷன் ஜெபித்தபோது ராஜாவின் கை சரியாயிற்று. அற்புதம் நடந்தும் தனக்கு சுகம் கொடுத்த தேவனை யெரொபெயாம் விசுவாசிக்க வில்லை. பொல்லாத வழியை விட்டுத் திரும்பவில்லை. தனக்காக ஜெபித்து உதவிய தேவனுடைய மனுஷனை தன் வீட்டிற்கு அழைத்து வெகுமானம் தருகிறேன் என்றான்.

 இவை யாவையும் கண்டிப்பாய் அவன் மனைவி அறிந்திருப்பாள். அவளும் தேவனிடம் அற்புதம் பெற்ற தன் கணவனை 

தேவனை விசுவாசிக்கும்படி ஊக்குவிக்கவில்லை. யெரொபெயாமின் பாவம் அவன் வீட்டாரின் அழிவுக்குக் காரணமாயிற்று. அவன் மகன் அபியா வியாதியில் விழுந்தான்.


யெரொபெயாம் தன் மகனின் வியாதிக்கு தன் பாவங்கள்தான் காரணம் என உணர்ந்து தேவனிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. தன் மகன் பிழைப்பானா என்பதை அறிய அவனது மனைவியை ராணியாக அல்ல, மாறு வேடத்தில் போய் அகியா தீர்க்கனிடம் விசாரித்து வர சீலோவுக்கு அனுப்பினான். அவளும் மாறு வேடத்திற்கு மறுப்புத் தெரிவிக்காமல் மாறுவேடம் போட்டு தன் மகனுக்கு சம்பவிக்கப் போகிறதைக் குறித்துக் கேட்கப் போனாள். அகியா தீர்க்கன் வயதாகி கண் மங்கலடைந்து பார்க்க முடியாமல் இருந்தாலும் அவன் ஆவிக்குரிய கண்கள் மங்கலாக வில்லை. அவள் வருமுன்பே தீர்க்கனிடம் தேவன் அவளிடம் பேச வேண்டிய காரியங்களைச் சொல்லி வைத்திருந்தார். 

வாசற்படியில் அவள் காலடி சத்தம் கேட்டவுடன் தீர்க்கன் அவளிடம் நீ உன்னை காண்பிக்கிறதென்ன? துக்க செய்தியை உனக்குச் சொல்லுகிறேன்

என்று அவளிடம் (1 இராஜா 14:7-16ல் தேவன் சொன்ன சாபங்களையும், தண்டனைகளையும் அறிவித்தான்.


தீர்க்கன் மூலம் எச்சரிப்பையும், தண்டனைகளையும் கேட்ட யெரொபெயாமின் மனைவியிடம் பாவத்தைக் குறித்த பயமும், நடுக்கமும், எந்தவித மாற்றமும் காணப் படவில்லை. தீர்க்கன் மூலம் தேவன் கொடுத்த எச்சரிப்பை அலட்சியப்படுத்தினாள். 

இந்தக் கடைசி எச்சரிப்பு யெரொ பெயாமுக்கு அல்ல அவன் மனைவிக்குத் தான் முதலில் தெரிவிக்கப்பட்டது. கேட்டு உள்ளம் உடைந்தவளாய், பாவங்களை அறிக்கையிட்டு மனம் திரும்பவில்லையே. தன்னைத் தாழ்த்தி பாவங்களை அறிக்கையிட்டு மனம் திரும்பியிருந்தால் நிச்சயமாய் எல்லா சாபங்களும் மாறி காரியங்கள் நன்மையாய் முடிந்திருக்கும். தாவீது தான் செய்த பாவத்தை அறிக்கையிட்டு மனம் திரும்பியபோது அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவும் தாவீதின் சந்ததியில் பிறந்தார்.

 நம் சந்ததியினர் தேவ கிருபையை அனுபவிக்க நாம் நம்மைத் தாழ்த்த வேண்டும்.


ஆலய ஆராதனை, ஆவிக்குரிய கூட்டங்கள், நற்செய்திக் கூட்டங்கள் இவற்றில் பங்குபெறும்போது அங்கு கொடுக்கப்படுகிற செய்திகள் மூலம் நமது பாவங்களையும், குற்றங்களையும், குறைகளையும் உணர்ந்து குத்துப் படுகிறோமா? அல்லது அவற்றை அலட்சியப்படுத்து கிறோமா? 

ஆம், அவர் பிதாக்களின் அக்கிரமத்தை 3ஆம், 4ஆம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர். ஆனால் நாம் அவருக்குப் பயந்து நடக்கும்போது யாத் 34:6,7ல் சொன்னபடி 1000 தலைமுறை மட்டும் இரக்கம் செய்கிற வராயிருக்கிறார். அக்கிரமத்தையும், மீறுதலையும் மன்னிக்கிறவர் (எபிரெ 4:16) ஆதலால் நாம் இரக்கத்தைப்

பெறவும், ஏற்ற காலத்தில் சகாயம் செய்யும் கிருபையை அடையவும் தைரியமாய் கிருபாசனத்தண்டை சேரக்கடவோம். 

கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது (சங்கீதம் 136:1). 


தேவனால் மன்னிக்க முடியாத பாவமில்லை. அவரால் ஏற்றுக் கொள்ளப்படாத பாவியுமில்லை. நம்முடைய சந்ததி தேவ கிருபையைப் பெற்று ஆசீர்வாதமடைய நாம் நம்மைத் தாழ்த்துவோம். உண்மையாய் அவரை நோக்கிக் கூப்பிட்டால் அவர் நமக்கு இரங்குவார்.

(ஏசாயா 66:2)



Post a Comment

0 Comments