பாடுகளின் வாரம் வியாழக்கிழமை நிகழ்வு- 10

 


பாடுகளின் வாரம்


வியாழக்கிழமை நிகழ்வு- 10




இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து நான்று கொண்டு செத்துப் போகிறான் 

(மத்தேயு 27:3-10)



யூதாசின் மனஸ்தாபம்



அப்பொழுது, அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: (மத் 27:3).



இயேசுவைக் காட்டிக்கொடுக்க பிரதான ஆசாரியர் யூதாஸ்காரியோத்திற்கு முப்பது வெள்ளிக்காசுகளை கொடுத்திருக்கிறார்கள்.  

அவர்கள் இயேசுவை மரணாக்கினைக்குள்ளாக   தீர்த்துவிடுகிறார்கள். இதைக்கண்ட யூதாஸ்  மனஸ்தாபப்படுகிறான். தன்னுடைய மனதின் வேதனையில் நான்று கொண்டு செத்துப்போகிறான். பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இந்த முப்பது வெள்ளிக்காசினால் யூதாசை தங்களுக்கு சாதகமாக கிரயத்திற்கு வாங்கினார்கள். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவனே இந்த முப்பது வெள்ளிக்காசிற்காக  இயேசுவை காட்டிக்கொடுக்கிறான்.  


யூதர்கள் இயேசுவை துன்புறுத்துகிறார்கள். அவரை மரணாக்கினைக்குள்ளாக தீர்க்கிறார்கள். இதைக்கண்ட யூதாஸ்காரியோத்து மனஸ்தாபப்படுகிறான். குற்றமில்லாத இரத்தத்தை தான் காட்டிக் கொடுத்ததினால்  பாவம் செய்ததாக மனம் வருந்துகிறான். 


இயேசுகிறிஸ்து தமது பாடுகளின் மத்தியிலும் மகிமையடைந்தவராக இருக்கிறார்.  இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக பிசாசு  யூதாசுக்குள் புகுந்தான். ஆனால் இயேசுவோ பிசாசின் சதித்திட்டத்தை முறியடித்து மகிமையடைந்தவராக வெற்றி சிறக்கிறார். இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து தன் பாவமான செய்கைக்காக மனஸ்தாபப்படுகிறான். யூதாஸ்காரியோத்து செத்துப்போனது ஆலோசனைச்சங்கத்தாருக்கு ஓர்       எச்சரிப்பாக இருக்கவேண்டும். இயேசுவை மரணாக்கினைக்குள்ளாக தீர்த்தவர்களுக்கு மன்னிப்பேயில்லை என்பதை யூதாசின் மரணம் உறுதிபண்ணுகிறது.



இயேசுகிறிஸ்துவை மறுதலித்த பேதுருவும்  மனங்கசந்து அழுதான். அவனுடைய மனந்திரும்புதலும் யூதாசின் மனஸ்தாபத்திற்கும் வித்தியாசமிருக்கிறது. பேதுரு மனந்திரும்பி, இயேசுவை விசுவாசித்து தனது பாவமன்னிப்பை  பெற்றுக்கொண்டான். ஆனால் யூதாசோ மனந்திரும்பி, மனஸ்தாபப்பட்டு தனது அழிவை தேடிக்கொண்டான்.



இயேசுகிறிஸ்து மரணாக்கினைக்குள்ளாக  தீர்க்கப்படுகிறார். இதைக் கண்ட யூதாஸ் மனஸ்தாபப்படுகிறான். யூதருடைய கைகளிலிருந்து இயேசுகிறிஸ்து தமது அற்புத வல்லமையினால் தப்பித்துக்கொள்வார் என்று  யூதாஸ் ஒருவேளை எதிர்பார்த்திருக்கலாம். தமக்கு மகிமையாகவும், யூதருக்கு அவமானமாகவும் இயேசு அற்புதம் செய்து அவர்கள் மத்தியில் தப்பிப்பார் என்றும், ஆகையினால் தான் பெற்றுக்கொண்ட முப்பது வெள்ளிக்காசு பாவமான காசாயிராது என்றும்  யூதாஸ் ஒருவேளை நினைத்திருக்கலாம். இயேசுகிறிஸ்து ஏற்கெனவே தம்முடைய முடிவைப்பற்றி சீஷர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எழுதப்பட்டிருக்கும் வார்த்தைக்கு விரோதமாக நாம் எதையும் எதிர்பார்க்கக்கூடாது. இயேசுகிறிஸ்து தம்மைப்பற்றி என்ன வெளிப்படுத்தி இருக்கிறாரோ அது நிச்சயமாகவே நிறைவேறும். எழுதப்படாத ஒன்றை நாம் கற்பனை செய்து பார்த்து, கண்ணியில் சிக்கிக்கொள்ளக்கூடாது. 



யூதாசைப்போலவே நம்மில் பலரும் தேவனுடைய தெய்வீக பிரமாணத்திற்கு முக்கியத்துவம் தராமல், நமது சுயசித்தத்திற்கும், சுயசிந்தனைக்கும், சுயவிருப்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து அழிந்துபோகிறோம். பாவத்தின் பாதை எப்போதுமே சறுக்கலாக இருக்கும். சறுக்கும் பாதையில் நம்மால் நிலைத்து நிற்க முடியாதபோது, வேறு யாராவது வந்து நமக்கு உதவிபுரிவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. பாவத்தின் பாதையிலிருந்து நாம்தான் மனந்திரும்பி வரவேண்டும். நாம் இரட்சிக்கப்படுவதற்கு யாரும் உதவிபுரியவில்லையென்று மற்றவர்களை குறைகூறி ஒரு பயனுமில்லை. 



யூதாஸ்காரியோத்து தனக்குத்தானே மனஸ்தாபப்படுகிறான். இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுத்தபோது அவனுக்கு முப்பது வெள்ளிக்காசுகள் மிகவும் முக்கியமானதாக இருந்தது. அது அவனுடைய கண்களின் பார்வைக்கு அருமையாக இருந்தது. ஆனால் இயேசுகிறிஸ்து மரணாக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டதை கண்டபோதோ, அந்த முப்பது வெள்ளிக்காசுகள் அவனுக்கு அருவருப்பாக தோன்றுகிறது. 



 யூதாசின் குற்றமனச்சாட்சி  அவனுடைய சரீரம் முழுவதையும் வேதனைப்படுத்துகிறது. தன்னுடைய பாவமான செய்கைக்காக வருத்தப்படுகிறான். இயேசு மரணாக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டதில் தனக்கும் பங்குள்ளது என்று நினைத்து மனஸ்தாபப்படுகிறான். இயேசுவைக்கட்டி, அவர் முகத்தில் துப்பி, அவரை கன்னத்தில் அறைவதற்கு தானே காரணம் என்று  நினைத்து யூதாஸ் வேதனைப்படுகிறான். இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுப்பதற்கு பிரதான ஆசாரியர் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசை கொடுக்க உடன்பட்டபோது யூதாசின் மனசு சந்தோஷத்தினால் நிறைந்திருந்தது. ஆனால் இயேசு மரணாக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டதைக் கண்டவுடன் யூதாஸ் மனஸ்தாபப்படுகிறான். 



இயேசுகிறிஸ்து தனக்கு செய்த நன்மைகளையெல்லாம் யூதாஸ் நினைவு கூருகிறான். தனக்கு நன்மையை மாத்திரமே செய்த இயேசுவுக்கு விரோதமாக துரோகம் செய்தததை நினைத்து மனஸ்தாபப்படுகிறான்.  அவனுடைய குற்ற மனச்சாட்சி அவனைக் குத்துகிறது. தம்மைக் காட்டிக் கொடுக்கப்போகிற மனுஷனைக்குறித்து ""அந்த மனுஷனுக்கு ஐயோ, அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும்'' என்று இயேசு கூறிய வார்த்தையை யூதாஸ் இப்போது நினைவுகூருகிறான்.  பாவம் செய்யும்போது அது இனிப்பாக இருக்கும். செய்தபின்பு அது கசப்பாக மாறிவிடும். பாவத்தின் பின் விளைவுகளை நாம் புரிந்துகொள்ளாமல் சில சமயங்களில் பாவத்தின் கண்ணியில் சிக்கிவிடுகிறோம்.



யூதாஸ்காரியோத்து மனஸ்தாபப்பட்டு இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக தான் பெற்றுக்கொண்ட  முப்பது வெள்ளிக்காசை பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும்  திரும்ப கொண்டு வருகிறான். இந்த முப்பது காசுகளைத்தான் யூதாஸ் சற்று நேரத்திற்கு முன்பு இயேசுவைவிட அதிகமாக நேசித்தான். இப்போதோ அந்த காசுகள் அவனுக்கு அருவருப்பாக இருக்கிறது. தீமையினால் சம்பாதித்த பணம் நமக்கு சந்தோஷத்தைத் தராது. 



இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுப்பதற்கு முன்பாக, யூதாஸ் மனந்திரும்பி, இயேசுவைக் காட்டிக்கொடுக்காமல், தான் பெற்றுக்கொண்ட முப்பது வெள்ளிக்காசுகளை அவர்களிடமே திருப்பி கொடுத்திருந்தால், யூதாசிற்கு ஒருவேளை ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால் இப்போதோ காலம் கடந்துவிட்டது. தான் செய்த தவறுகளை திருத்திக்கொள்வதற்கு யூதாசிற்கு இனிமேல் வாய்ப்பில்லை. 



தீமையினால் சம்பாதித்த பொருளை தன் வசமாக அவனால்  வைத்துக்கொள்ளவும் முடியவில்லை. முப்பது வெள்ளிக்காசுகளை அவன் பாவம் செய்து சம்பாதித்ததினால், அவனுடைய குற்ற மனச்சாட்சி அவனை குத்திக்கொண்டேயிருக்கிறது. அந்த வெள்ளிக்காசுகளை தன்னைவிட்டு அகற்றிப்போடவேண்டுமென்று யூதாஸ் முடிவுபண்ணுகிறான். தனக்கு அந்த காசுகளை யார் கொடுத்தார்களோ அவர்களிடமே திருப்பி கொடுத்துவிட்டு, தான் மனந்திரும்பி இருப்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்புகிறான். 



இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டான். யூதாஸ்காரியாத்திற்கு இப்போது தான் அவன் செய்த தவறு புரிகிறது. ஆயினும் யூதாஸ் பேதுருவைப் போல மனந்திருந்தவில்லை. இயேசு கிறிஸ்துவிடம் தன்னுடைய பாவங்களுக்காக மன்னிப்புக் கோரவில்லை. சாத்தானுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தான். இயேசுவை விட்டுபிரிந்து தனியாக இருந்தான். தன்னுடைய கோழைத்தனமான செயலுக்காக வெட்கப்பட்டு நான்றுகொண்டு செத்தான். 



இயேசு கிறிஸ்து மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதற்காக யூதாஸ் மனஸ்தாபப்பட்டான். தான் செய்த தவறுகளுக்காக யூதாஸ் மனஸ்தாபப் படவில்லை. யூதாஸ் இயேசுவோடுகூடவே இருந்தவன். இயேசு கிறிஸ்துவின் ஜீவியத்திற்கு பலமுறை ஆபத்து வந்த வேளைகளில் அவர் அந்தப் பிரச்சனைகளிலிருந்து தப்பித்து அப்புறம் போனார் என்பது யூதாசிற்குத் தெரியும். அதுபோலவே இயேசு தமது வல்லமையினால் இப்போதும் தப்பித்துக் கொள்வார் என்று யூதாஸ் நினைத்திருக்கலாம். ஆனால் யூதாஸ் நினைத்ததுபோல  அங்கு ஒன்றும் நடைபெற வில்லை. தமது ஜீவனைக் காப்பதற்காக அங்கிருந்து அவர் மறைந்து செல்லவில்லை. தன்னால் இயேசுவிற்கு மரணஆக்கினை வந்துவிட்டதே என்று மனஸ்தாபப்பட்டான்.


யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்தான். முப்பது வெள்ளிக்காசு என்பது அந்நாட்களில் ஒரு வேலையாளுக்கு 115 நாட்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்திற்கு சமமான தொகை.



குற்றமில்லாத இரத்தம் 



குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக் கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள் (மத் 27:4).



யூதாஸ்காரியோத்து பிரதான ஆசாரியரிடத்திலும் மூப்பரிடத்திலும் வந்து அவர்களிடத்தில் பாவஅறிக்கை செய்கிறான். ""குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன்'' என்று அவர்களிடம் பாவஅறிக்கை பண்ணுகிறான். இயேசுகிறிஸ்துவுக்கு மகிமை உண்டாக்க, அவருடைய இரத்தத்தை குற்றமில்லாத இரத்தம் என்று யூதாஸ் அறிக்கை செய்கிறான். இயேசுவின் இரத்தம் குற்றமில்லாத  இரத்தம் என்று கூறுமாறு யாரும் அவனுக்கு பணம் கொடுக்கவில்லை. தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த சத்திய வார்த்தைகளை  அவனாகவே பேசுகிறான். இயேசுவை யாரெல்லாம் குற்றவாளிகளென்று நியாயம் தீர்த்தார்களோ அவர்கள் முன்பாக யூதாஸ் நின்று ""அவருடைய இரத்தம் குற்றமில்லாத இரத்தம்'' என்று சாட்சி பகருகிறான். 



குற்றமில்லாத இரத்தத்தை தான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்று அறிக்கை செய்கிறான். இந்த பாவத்தை  அவன் யார்மீதும் சுமத்தவில்லை. தன் மீதே ஏற்றுக்கொள்கிறான். ""நான் பாவம் செய்தேன்'' என்று அங்கீகரிக்கிறான். தன்னுடைய மனந்திரும்பும் அனுபவத்தில் யூதாஸ்காரியோத்து இவ்வளவு தூரம் முன்னேறி கடந்து வந்திருக்கிறான். ஆயினும் அவன் தன் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை. 



யூதாஸ்காரியோத்து  தேவனிடத்திற்கு போவதற்குப் பதிலாக பிரதான ஆசாரியனிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போனான். தேவனிடத்தில் பாவஅறிக்கை செய்வதற்குப் பதிலாக பிரதான ஆசாரியரிடத்தில் பாவஅறிக்கை செய்கிறான். அவன் இயேசுகிறிஸ்துவிடம் வந்து ""ஆண்டவரே உமக்கு விரோதமாகவும், பாரத்திற்கு விரோதமாகவும் நான் பாவம் செய்திருக்கிறேன், என்னை மன்னியும்'' என்று யூதாஸ் பாவஅறிக்கை செய்திருந்தால், அவனையும் மன்னிப்பதற்கு இயேசுகிறிஸ்து கிருபை நிறைந்தவராக இருக்கிறார்.



பிரதான ஆசாரியரிடத்திலும், மூப்பரிடத்திலும் யூதாஸ் மனஸ்தாபப்பட்டு பாவஅறிக்கை செய்கிறான். ஆனால்  அவர்களோ  அவனுடைய வார்த்தைகளை அலட்சியம்பண்ணுகிறார்கள். ""எங்களுக்கென்ன, அது உன்பாடு'' என்று கூறி அவனை கைவிட்டுவிடுகிறார்கள். யூதாஸ் இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுத்ததை ஆலோசனைச்சங்கத்தார் அலட்சியம்பண்ணுகிறார்கள். அதனால் எங்களுக்கென்ன என்று அலட்சியமாக பேசுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் குற்றமில்லாத இரத்தத்தின்மீது தாங்கள் தாகமாக இருந்ததினால் தங்களுக்கென்ன என்று அலட்சியமாக நினைக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுப்பதற்கு  முப்பது வெள்ளிக்காசுகளைக்கொடுத்து கூலி பொருந்தியதற்காக ""தங்களுக்கென்ன'' என்று கூறுகிறார்கள். குற்றமில்லாத இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தை சிந்துவதற்கு  தாங்கள் காரணமாக இருந்தாலும் ""அதனால் தங்களுக்கென்ன'' என்று அலட்சியம் பண்ணுகிறார்கள். 



யூதாஸ் பிரதான ஆசாரியனிடத்தில் வந்து  ""நான் பாவம் செய்தேன்'' என்று அறிக்கை செய்கிறான். ஆனால் அவர்களோ அவனுடைய பாவத்தையும், பாவஅறிக்கையையும் அலட்சியம் செய்து ""அதனால் எங்களுக்கென்ன'' என்று அலட்சியமாக கூறிவிடுகிறார்கள். நாம் மற்றவர்களோடு பாவத்தில் பங்காளிகளாக இருப்போமென்றால், அந்த பாவத்தினால் நமக்கும் தண்டனை கிடைக்கும்.   மற்றவர்கள் பாவம் செய்வதற்கு நாம் உடந்தையாக இருந்துவிட்டு, நமக்கு ஒரு தண்டனையும் வராது என்று நினைக்கக்கூடாது. 



இயேசுகிறிஸ்துவை யூதாஸ் காட்டிக்கொடுத்தான். இது பாவம் என்றால் அது அவனை மாத்திரமே சேரும் என்று பிரதான ஆசாரியரும் மூப்பரும் கூறுகிறார்கள். யூதாஸ்காரியோத்து இயேசுவை அவர்களிடம்தான் காட்டிக்கொடுத்தான். ஆகையினால் யூதாசுக்கு அதிக பாவமுண்டு (யோவா 19:11). யூதாசுக்கு பாவமுண்டு என்பதினால், இந்த பாவத்திலிருந்து பிரதான ஆசாரியரும் மூப்பரும் தப்பித்துக்கொள்ள முடியாது. அவர்களுக்கும் இந்த பாவத்தில் பங்கிருக்கிறது.



இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தை குற்றமில்லாத இரத்தம் என்று யூதாஸ் அங்கீகரிக்கிறான். ஆனால் ஆலோசனைச்சங்கத்தாரோ இயேசுவை நியாயமாக தண்டிப்பதாக தீர்மானம்பண்ணியிருக்கிறார்கள். இயேசு யூதாசுக்கு குற்றமில்லாதவராக இருக்கலாம். ஆனால் ஆலோசனைச்சங்கத்திற்கோ இயேசு  குற்றவாளியாக இருக்கிறார். துன்மார்க்கர்கள் இதைப்போலத்தான் தங்களுடைய துன்மார்க்கமான கிரியைகளை, துன்மார்க்கமான ஆலோசனைகளினால் நியாயப்படுத்துகிறார்கள். ஒரு காரியத்தை பாவம் என்று நினைத்தால்தான் அது அவனுக்கு பாவமாக இருக்கும் என்று துன்மார்க்கர் விவாதம்பண்ணுகிறார்கள். ஒரு நல்லவனை துன்மார்க்கர்கள் துன்பப்படுத்தினாலும், அது துன்மார்க்கருடைய பார்வைக்கு நியாயமாக இருந்தால், அதனால் பாவமில்லை என்பது துன்மார்க்கரின் விவாதம். 



யூதாஸ்காரியோத்து மனஸ்தாபத்தில் இருக்கிறான். இயேசுவைக்காட்டிக் கொடுத்ததற்காக பயப்படுகிறான். தான் பாவம் செய்துவிட்டதாக புலம்புகிறான். அப்படிப்பட்டவனுடைய வார்த்தைகளை பிரதான ஆசாரியரும் மூப்பரும் அலட்சியம்பண்ணுகிறார்கள். இயேசுவை காட்டிக்கொடுப்பதற்கு யூதாஸ் சம்மதித்தபோது  அவர்கள் அவனை சந்தோஷமாக பயன்படுத்திக்கொண்டார்கள். அவன்மீது தங்கள் அன்பை வெளிப்படுத்தி அவனுக்கு முப்பது வெள்ளிக்காசுகளை கூலியாக கொடுத்தார்கள். ஆனால் இப்போதோ யூதாஸ் தன் மனச்சாட்சியில் குத்தப்பட்டு மனஸ்தாபப்படும்போது,  அவர்கள்  அவனுக்கு ஒரு உதவியும் செய்ய முன்வரவில்லை. அவனை அப்படியே கைவிட்டுவிடுகிறார்கள். 



நாம் துன்மார்க்கரோடு கூட்டுச்சேர்ந்து, துன்மார்க்கமான கிரியைகளைச் செய்து, கண்ணியில் சிக்கிக்கொண்டால், அந்த கண்ணியிலிருந்து நம்மை தூக்கிவிடுவதற்கு  துன்மார்க்கர்கள் நமக்கு உதவிபுரிய வரமாட்டார்கள். நாம் பாவத்தில் விழும்போது  பாவத்தில் நமக்கு பங்காளிகளாக இருக்கிறவர்கள் நம்மை பார்த்து நகைப்பார்கள்.   பாவத்தில் பங்காளிகளாக இருக்கிறவர்களால்  தங்களுடைய பாவங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு அவர்களால் ஒருவருக்கொருவர் உதவிபுரிய முடியாது. பாவத்தில் பங்காளிகளான இவர்கள்  பாவத்தை நேசிப்பார்கள், பாவத்தில் தங்கள் உடன்பங்காளிகளாக இருந்தவர்களை வெறுப்பார்கள். இயேசுவோ பாவத்தை மாத்திரமே வெறுக்கிறார். பாவிகளையோ நேசிக்கிறார். 



""குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக் கொடுத்ததினால் பாவஞ்செய்தேன்''  என்று யூதாஸ் புலம்புகிறான். இன்றும் பலர் இப்படித்தான் புலம்புகிறார்கள். யூதாஸ் இயேசுவிடம் பாவஅறிக்கை பண்ணுவதற்குப் பதிலாக ஆசாரியரிடத்திலும், மூப்பரிடத்திலும் வந்து புலம்புகிறான். தம்மிடத்தில் வருகிற யாரையும் இயேசு கிறிஸ்து புறம்பே தள்ளமாட்டார். ஆனால் ஆசாரியரும், மூப்பரும் பாவியை இரட்சிப்பதற்குத் திராணியற்றவர்கள். ஆகையினால் யூதாசைப் பார்த்து, ""எங்களுக்கென்ன, அது உன்பாடு'' என்றார்கள். 



இயேசு கிறிஸ்துவின் இரத்தம் குற்றமில்லாதது. அவர் ஒரு பாவமும் செய்யவில்லை. அவருடைய குற்றமில்லாத இரத்தத்தைக் குறித்து பலர் சாட்சி கூறியிருக்கிறார்கள்.


    1. யூதாஸ் (மத் 27:4)


    2. பிலாத்துவின் மனைவி 

(மத் 27:19)


    3. பிலாத்து (மத் 27:24)


    4. ஏரோது (லூக்கா 23:15)


    5. கள்ளன் (லூக்கா 23:41)


    6. நூற்றுக்கதிபதி 

(லூக்கா 23:47)





யூதாசின் மரணம்



அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்

 (மத் 27:5).



யூதாஸ்காரியோத்து பிரதான ஆசாரியரிடமும் மூப்பரிடமும் பாவ அறிக்கை செய்கிறான். ஆனால் அவர்களோ ""எங்களுக்கென்ன, அது உன்பாடு'' என்று அலட்சியமாக பேசி அவனை அனுப்பிவிடுகிறார்கள். யூதாஸ் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்தில் எறிந்துவிடுகிறான். பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசுகளை தேவாலயத்தின் காணிக்கை காசுகளாக ஏற்றுக்கொள்ளவில்லை.  அந்த காசில் குற்றம் இருப்பதாக கருதுகிறார்கள்.  இது இரத்தக்கிரயமான காசு என்பதினால் இதை காணிக்கை பெட்டியிலே போடலாகாது என்று கூறிவிடுகிறார்கள். 



யூதாஸ்காரியோத்தும் அந்த காசுகளை தன்னிடத்தில் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அது அவனுக்கு பாவத்தின் கிரயமாக இருக்கிறது. அதை வைத்துக்கொள்வதற்கு அவனுடைய மனச்சாட்சி இடங்கொடுக்கவில்லை. இயேசுவைக் காட்டிக்கொடுத்ததினிமித்தமாக அவன் மனஸ்தாப்பட்டுக்கொண்டிருக்கிறான்.  அந்த வெள்ளிக்காசை யூதாஸ் தேவாலயத்தில் எறிந்துவிடுகிறான். பிரதான ஆசாரியர் அதை அங்கீகரித்தாலும், அங்கீகரிக்காவிட்டாலும் அது அவர்களுடைய பொறுப்பில் போய் விடும் என்று நினைத்து தேவாலயத்திலேயே அந்த காசுகளை எறிந்துவிடுகிறான். 



அதன்பின்பு யூதாஸ் அங்கிருந்து புறப்பட்டுப்போய் நான்றுகொண்டு செத்துப்போகிறான். தனிமையான ஓர் இடத்திற்கு புறப்பட்டுப்போகிறான். அவன் தனிமையான இடத்திற்கு போவதற்குப் பதிலாக, இயேசுகிறிஸ்துவிடம் போயிருந்தால் அவனுக்கு  ஆறுதல் கிடைத்திருக்கும். அவனுக்கு இப்போது மனஆறுதல் தேவைப்படுகிறது. அவனுடைய மனதில் ஆறுதல் இல்லாமையினால், மனஸ்தாபப்பட்டு, மனதில் குழப்படைந்து நான்று கொண்டு செத்துப்போகிறான்.


•யூதாஸ் தன் பாவத்தை உணருகிறான்.  தன்னுடைய பாவத்திற்கு தேவனிடமிருந்து கிருபையை எதிர்பார்க்க முடியாது என்று தீர்மானம்பண்ணிவிடுகிறான். ஆனால் இயேசுகிறிஸ்துவோ எல்லா பாவங்களையும் மன்னிப்பதற்கு கிருபை நிறைந்தவர். இயேசுவால்  மன்னிக்கக்கூடாத பாவம் என்று எதுவுமேயில்லை. தேவன் கொடுக்கும் மன்னிப்பை சிந்தித்துப் பார்ப்பதைவிட, தனது பாவத்தின் பாரத்தையே அதிகமாக சிந்தித்துப் பார்க்கிறான். தேவனுடைய கிருபையை  நினைத்துப் பார்ப்பதைவிட இயேசுகிறிஸ்துவின் குற்றமில்லாத இரத்தத்தை தான் காட்டிக்கொடுத்ததையே நினைத்துப் பார்க்கிறான். 


யூதாஸ் நான்று கொண்டு செத்ததின் மூலமாக, அவன் நரகத்தில் பிரவேசிக்கிறான்.  நரக அக்கினியில் தன்னுடைய சரீரத்தை தள்ளிவிடுகிறான். தன்னுடைய மனஸ்தாபத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்காக, அதைவிட பயங்கரமான நரக அக்கினியில் நித்திய வேதனையில்  சிக்கிக்கொள்கிறான். ஒருவனுக்குள் பிசாசு கிரியை செய்யும்போது அவனுடைய முடிவு இதைப்போன்று பரிதாபமாக இருக்கும். பணஆசை பிடித்தவர்களின் முடிவு யூதாசின் முடிவைப்போலவே பரிதாபமாக முடியும்.


பேதுரு தேவனுடைய நன்மையை கண்டவன். இயேசுகிறிஸ்து பாவிகளை இரட்சித்து தமது கிருபையை வெளிப்படுத்தியதை  பேதுரு பல சமயங்களில் கண்டிருக்கிறான். யூதாஸ்காரியோத்தின் ஜீவியத்திலோ தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்பு வெளிப்படுகிறது. துன்மார்க்கரின் முடிவு பரிதாபமாக இருக்கும். மனஸ்தாபப்படுகிறவர்கள்  தேவனிடத்தில் வரவேண்டும். தேவனுடைய சமுகத்தில் மாத்திரமே ஆறுதலும், நம்பிக்கையும் உள்ளது. மனஸ்தாபப்பட்டுக்கொண்டு, பிசாசின் பிடியில் தொடர்ந்து சிக்கிகொண்டிருந்தால், பிசாசு நம்மை வஞ்சித்து, நமக்கு பரிதாபமான முடிவை ஏற்படுத்திவிடுவான்.


நம்முடைய மனச்சாட்சி நமது பாவத்தைக்குறித்து உணர்த்தும்போது நாம் தேவனுடைய கிருபாசனத்தண்டையில் பணிவோடு வரவேண்டும். தேவன் நம்மை கிருபையாக மன்னிப்பார் என்னும் நிச்சயம் நமக்குள் காணப்படவேண்டும். நமது சொந்த முயற்சியினால் நமக்கு நாமே உதவிசெய்து கொள்ளலாம் என்று இறுமாப்பாக இருக்கக்கூடாது. நமக்கு தேவனுடைய உதவி தேவை. தேவனுடைய கிருபையில்லாமல் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. 


தேவனுடைய பார்வையில் தற்கொலை செய்வது பாவமான கிரியை. இது பிசாசின் கிரியை. பிசாசின் இந்த அந்தகார சக்தியிலிருந்து நம்மை விடுவிப்பதற்கு  இயேசுகிறிஸ்து வல்லராக இருக்கிறார். நம்மை இயேசுவின் கரங்களில் ஒப்புக்கொடுக்கும்போது  நமக்கு சமாதானம் கிடைக்கும். நமது மனஸ்தாபம் நீங்கும். மனஆறுதல் உண்டாகும்.  அதை தொடர்ந்து நமது மனதில் தெய்வீக சமாதானமும், தெய்வீக சந்தோஷமும் உண்டாகும். 



யூதாஸ் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் ஒருவன். இப்போது தன்னுடைய ஜீவனையே முடித்துக் கொண்டான். இயேசு கிறிஸ்துவிற்காகத் தனது ஜீவிய நாளெல்லாம் ஊழியம் செய்வதற்காக அழைக்கப்பட்டவன். இயேசுவிற்காக ஆத்துமாக்களை ஆதாயம் பண்ண வேண்டியவன். வியாதியஸ்தர்களைச் சொஸ்தமாக்க வேண்டியவன். இப்போது நான்றுகொண்டு செத்துப் போனான். 



குயவனுடைய நிலம்



பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்-, ஆலோசனைபண்ணினபின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள். இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள்வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.  இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று             

   (மத் 27:6-10).



 இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுப்பதற்காக யூதாஸ்காரியோத்து முப்பது வெள்ளிக்காசை பெற்றுக்கொண்டு, இயேசுவை காட்டிக்கொடுக்கிறான். குற்றமில்லாத இரத்தத்தை தான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்துவிட்டதாக மனஸ்தாபப்பட்டு, அந்த காசுகளை தேவாலயத்தில் எறிந்துவிட்டு புறப்பட்டுப்போய் நான்று கொண்டு செத்துப்போகிறான். 



பிரதான ஆசாரியரும், மூப்பரும் அந்தக் காசுகளை  இரத்தக்கிரயம் என்று தீர்மானம்பண்ணுகிறார்கள். தேவாலயத்தின் காணிக்கை பெட்டியில் இந்தக் காசுகளை போடக்கூடாது என்று தடைபண்ணுகிறார்கள். அந்தக் காசுகளை  என்ன செய்யலாம் என்று ஆலோசனைச்சங்கத்தார் ஆலோசனைபண்ணுகிறார்கள்.  அந்நியரை அடக்கம்பண்ணுவதற்காக குயவனுடைய நிலத்தை அந்த வெள்ளிக்காசுகளினால் கிரயத்திற்கு வாங்குகிறார்கள். இந்த நிலத்தில்  யூதரல்லாத அந்நியர்கள் மரித்தபின்பு அடக்கம்பண்ணப்படுவார்கள். 


அந்நியர்கள்மீது கூட யூதர்கள்     கருணை காண்பித்து, அவர்களையும் மனிதாபிமானத்தோடு அடக்கம்பண்ணுவதற்கு ஆவன செய்வதுபோல் தோன்றுகிறது. ஆனால் மெய்யாகவே யூதர்களுக்கு புறஜாதியார்மீது அக்கறையில்லை. யூதர்கள் அந்நியரை நேசிக்கிறவர்களாக இருந்தால் தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் கல்லறைகளில்,  தங்களுக்கு அருகாமையிலேயே அந்நியரை அடக்கம்பண்ணுவதற்கு அனுமதி கொடுத்திருப்பார்கள். ஆனால் யூதர்களோ அந்நியர்களை தங்கள் அருகில் நெருங்கவிடாமல் அவர்களை தூரத்திலேயே நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அந்நியர்கள் உயிரோடிருந்தாலும், செத்துப்போனாலும் யூதருக்கு அருகாமையில் வரமுடியவில்லை. பாரபட்சமான, பட்சபாதமான இந்த பாவமான மனப்பாங்கு மண்ணில் அடக்கம்பண்ணப்பட வேண்டும். 



ஆலோசனைச்சங்கத்தார் குயவனுடைய நிலத்தை காலதாமதமில்லால் சடுதியில் வாங்கிவிடுகிறார்கள். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தபின்பு பேதுரு இந்த நிலத்தைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார். 



பிரதான ஆசாரியரும் மூப்பரும் யூதாஸ்காரியோத்து தூக்கியெரிந்த முப்பது வெள்ளிக்காசை கையாளும் விதத்தில்  அவர்களுடைய மாய்மாலம் தெரியவருகிறது. அந்த காசுகளை காணிக்கை பெட்டியில் போடலாகாது என்று தடைபண்ணுகிறார்கள்.  ஆனால் இதே காசுகளைத்தான் இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக யூதாஸ்காரியோத்திற்கு  கூலியாக கொடுத்தார்கள். ஆனால் அதே காசுகள் இப்போது அவர்களுடைய பார்வைக்கு  இரத்தகிரயமாக தெரிகிறது. இரத்தக் கிரயமான காசை காணிக்கை பெட்டியில் போடலாகாது என்று தடைபண்ணுகிறார்கள். 



துரோகியாகிய யூதாஸ்காரியோத்தை கூலிக்கு அமர்த்துவது, ஒரே வேசியை கூலிக்கு அமர்த்துவது போன்ற பாவச்செயலாகும். துரோகியினுடைய கிரயம் ஒரு நாயின் கிரயத்திற்கு சமமானது. அவர்கள் இயேசுவை ஒரு துரோகியாகவே பாவிக்கிறார்கள். இயேசுவின் கிரயமாகிய இந்த முப்பது காசுகளை கர்த்தருடைய ஆலயத்திற்குள் கொண்டு வரக்கூடாது என்று ஆலோசனைச்சங்கத்தார் முடிவு பண்ணுகிறார்கள். இவர்கள் கொசு இல்லாதபடி  வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்கள். 



ஆலோசனைச்சங்கத்தார் தாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஜனங்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.  இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுப்பதற்காக  கொடுக்கப்பட்ட முப்பது வெள்ளிக் காசை வைத்து ஜனங்களுக்கு நன்மை செய்ய முடிவு பண்ணுகிறார்கள். அந்நியரை அடக்கம்பண்ணுவதற்கு ஆலோசனைச்சங்கத்தார் தங்களுடைய சொந்த பணத்தில் நிலம் வாங்குவதற்குப் பதிலாக, யூதாஸ்காரியோத்து தேவாலயத்தில் எறிந்துவிட்ட வெள்ளிக்காசுகளில் குயவனுடைய நிலத்தை வாங்குகிறார்கள். தாங்கள் செய்த பாவத்திற்கு  பரிகாரம் செய்வதுபோல ஜனங்களுக்கு நன்மை செய்கிறார்கள். 



இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக அந்நியருக்கும் புறஜாதியாருக்கும் பாவியாக இருக்கிற ஜனங்களுக்கும் நன்மை உண்டாகிறது. இயேசுகிறிஸ்துவின் இரத்தக்கிரயத்தின் மூலமாக அந்நியர்கள் மரித்தபின்பு அவர்களை அடக்கம்பண்ணுவதற்கு  ஓர் இடம் கிரயத்திற்கு வாங்கப்படுகிறது. இதுவரையிலும் அந்நியரை அடக்கம்பண்ணுவதற்கு சரியான இடம் எதுவுமில்லை. அந்நியர்கள் உயிரோடிருக்கும்போதும், மரித்தபின்பும் கவனிக்கப்படாமலேயே இருந்தார்கள்.  இப்போது  அவர்களுக்கென்று ஓர் இடம் வாங்கப்பட்டிருப்பதினால், அந்நியர்கள் மரிக்கும்போது அவர்களுக்கென்று ஓர் இடம் உண்டாயிற்று.  தங்களுக்கென்று ஒரு கல்லறை பூமி உள்ளது என்றும், அந்த பூமியில் யாருடைய தொந்தரவுமில்லாமல் தங்களுடைய சடலங்களை அடக்கம்பண்ணலாம் என்றும் அந்நியர்கள் ஆறுதலாக இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் இரத்தக்கிரயத்தின் மூலமாக குயவனுடைய நிலம்  அந்நியருக்கு சொந்தமாயிற்று.


இயேசுகிறிஸ்துவின் இரத்தக்கிரயத்தினால் வாங்கப்பட்ட குயவனுடைய நிலம் அக்கெல்தேமா என்று அழைக்கப்படுகிறது. இதற்கு இரத்த நிலம் என்று பொருள். பிரதான ஆசாரியர் இந்த நிலத்திற்கு  இரத்த நிலம் என்று பெயர் கொடுக்கவில்லை.  இந்த நிலத்தை கிரயத்திற்கு வாங்கியதினால், தங்களுடைய துன்மார்க்கமான கிரியைகளும், அதைப்பற்றிய நினைவுகளும் இந்த நிலத்தில் புதைக்கப்பட்டுப்போகும் என்று நினைத்தார்கள். ஆனால் ஜனங்களோ பிரதான ஆசாரியருடைய கொடிய செயலை மறக்காமல், இயேசுகிறிஸ்துவின்  இரத்தக்கிரயத்தினால்  வாங்கப்பட்ட நிலத்தை இரத்தநிலம் என்று அழைத்து, யூதர்கள் இயேசுவுக்கு  செய்த  துன்மார்க்கமான கிரியைகளை நினைவுகூருகிறார்கள். இரத்தக்கிரயத்தினால் வாங்கப்பட்ட நிலம் இந்நாள் வரைக்கும் ஜனங்களால் இரத்தநிலம் என்னப்படுகிறது. 



இயேசுகிறிஸ்துவினுடைய வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவத்தையும் தீர்க்கதரிசிகள் ஏற்கெனவே முன்னறிவித்திருக்கிறார்கள். குயவனுடைய நிலத்தை கிரயத்திற்கு வாங்கியதைக்கூட எரேமியா தீர்க்கதரிசி முன்னறிவித்திருக்கிறார்.  இந்த தீர்க்கதரிசனம் சகரியாவின் புஸ்தகத்தில்  எழுதப்பட்டிருக்கிறது (சக 11:12,13). 


சகரியாவின் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனத்தை மத்தேயு மேற்கோளாக கூறும்போது ""இது எரேமியா தீர்க்கதரிசியால்  உரைக்கப்பட்டது'' என்று எழுதியிருக்கிறார். சகரியாவை அவர் எவ்வாறு எரேமியா என்று கூறுகிறார் என்பது தெளிவாக விளக்கப்படவில்லை. புதிய ஏற்பாட்டு மூலபாஷை சுவடிகள் சிலவற்றில் எரேமியாவின் பெயர் குறிப்பிடப்படாமல், ""தீர்க்கதரிசி ஒருவரால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று'' என்று பொதுவாக உள்ளது. எரேமியாவின் ஆவி  சகரியாவிடமிருந்ததாக யூதர்கள் பொதுவாக கூறுவது வழக்கம். இதன் அடிப்படையில் சகரியாவுக்குப் பதிலாக இங்கு எரேமியாவின் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.


சகரியா புஸ்தகத்தில் இந்த  தீர்க்கதரிசனம்  ஓர் அடையாளமாக முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இயேசுகிறிஸ்துவின் காலத்திலோ இந்த சம்பவம்  பிரத்தியட்சமாக நடைபெறுகிறது.  முப்பது வெள்ளிக்காசுகளால் குயவனுடைய நிலம் கிரயத்திற்கு வாங்கப்படுகிறது. இயேசுகிறிஸ்துவுக்கு அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு முப்பது வெள்ளிக்காசுகள் மாத்திரமே. அவைகளை குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்து விட்டேன் என்று சகரியா முன்னறிவிக்கிறார். இந்த முன்னறிவிப்பு இப்போது பிரத்தியட்சமாக நிறைவேறுகிறது.



முப்பது வெள்ளிக்காசுகள் குயவனுடைய நிலத்திற்காக மதிக்கப்பட்ட கிரயமாகும். இயேசுகிறிஸ்து விலைமதிப்பற்றவர். அவரை பொன்னாலும் வெள்ளியாலும் கிரயத்திற்கு கொள்ளமுடியாது. ஆயினும் இஸ்ரவேல் புத்திரர்  இயேசுவுக்கு கிரயமாக முப்பது வெள்ளிக்காசுகளையே மதிக்கிறார்கள். இஸ்ரவேல் புத்திரர்கள் தங்களுடைய கர்த்தரை  சொற்ப கிரயத்திற்கு மதிக்கிறார்கள். அந்த கிரயத்தினால் குயவனுடைய நிலத்தை மாத்திரமே வாங்கமுடிகிறது. சகரியா இதைப்பற்றி கூறும்போது அந்த காசுகளை குயவனுக்கென்று  கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டதாக எழுதியிருக்கிறார். குயவன் சாதாரண மண்பாண்ட தொழில் செய்கிறவன்.  இஸ்ரவேல் புத்திரர்கள் விலைமதிக்க முடியாத இயேசுவுக்கு  ஒரு சொற்ப கிரயத்தை மதிக்கிறார்கள். 



இயேசுகிறிஸ்து ராஜாக்களையும் இந்த உலகத்திலுள்ள எல்லா மனுஷரையும் மீட்பதற்காக தம்மையே மீட்பின் கிரயமாக செலுத்தியிருக்கிறார். ஆனால் இஸ்ரவேல் புத்திரரோ இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு அடிமைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் கிரயத்தையே கொடுக்கிறார்கள் (யாத் 21:32). ஒரு குயவனுடைய நிலத்திற்கு என்ன கிரயம் கொடுக்கவேண்டுமோ அந்த கிரயத்தை இயேசுவுக்கு கொடுத்தால் போதுமானது என்று தீர்மானம்பண்ணுகிறார்கள். இவையெல்லாம் கர்த்தர் நியமித்தபடி, தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தபடி நிறைவேறுகிறது.




Post a Comment

0 Comments