பாடுகளின் வாரம் வியாழக்கிழமை நிகழ்வு- 9

 பாடுகளின் வாரம்


வியாழக்கிழமை நிகழ்வு- 9


ஆலோசனைச்சங்கத்தார் இயேசுவை விசாரிக்கிறார்கள்


(மத்தேயு 27:1 ; மாற்கு 15:1,லூக்கா 22:66-71)



நீ கிறிஸ்துவா



 விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி: நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள். நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள்                  (லூக் 22:66-68). 


விடியற்காலம் ஆயிற்று யூதருடைய ஆலோசனைச்சங்கத்தில் ஜனத்தின் மூப்பரும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். பொதுவாக  எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் இவர்கள் இவ்வளவு சீக்கிரமாக கூடிவருவதில்லை. ஆனால் இயேசுகிறிஸ்துவை விசாரிக்க வேண்டும் என்பதற்காக பொழுது எப்பொழுது விடியுமென்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  விடியற்காலம் ஆனவுடனேயே, இவர்கள் கூடிவந்து தங்கள் ஆலோசனைச்சங்கத்தில் இயேசுகிறிஸ்துவைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறவர்கள் நற்காரியங்களைச் செய்வதற்கு சுறுசுறுப்பாக செயல்பட்டால் எல்லோருக்கும் நன்மையாக இருக்கும். ஆனால்  இப்படிப்பட்டவர்கள் தீயகாரியங்களுக்கே ஒன்றுகூடி விரைந்து செயல்படுகிறார்கள். 


யூதருடைய ஆலோசனைச்சங்கத்தார் இயேசுகிறிஸ்துவிடம் ""நீ கிறிஸ்துவா'' என்று கேட்கிறார்கள்.  இயேசுகிறிஸ்து ஏராளமான வார்த்தைகளினால் உபதேசம் பண்ணியிருக்கிறார். ஆனால் அவர் ஒருமுறைகூட தம்முடைய சொந்த வார்த்தைகளினால் அவர் தம்மை கிறிஸ்து என்று கூறியதில்லை. ஆகையினால் தம்முடைய சொந்த வார்த்தையினால் தாமே கிறிஸ்து என்பதை அவர் அங்கீகரிக்க வேண்டுமென்று அவரைக் கட்டாயப்படுத்துகிறார்கள். 


இயேசுகிறிஸ்துவை கிறிஸ்து என்று தாங்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவதாக இவர்கள் கூறியிருந்தால் இவர்களுடைய எண்ணம் மேன்மையானதாக இருக்கும். இயேசுவை கிறிஸ்து என்று விசுவாசிப்பது இவர்களுடைய நோக்கமல்ல. அவரை ஒரு கண்ணியில் சிக்க வைக்கவேண்டும் என்பதே இவர்களுடைய சதிஆலோசனை.


ஆலோசனைச்சங்கத்தாருடைய சதிஆலோசனை நிறைந்த இருதயத்தை இயேசுகிறிஸ்து அறிந்திருக்கிறார். அவர்கள் நீதியும் நேர்மையுமில்லாதவர்கள். அவர்களுடைய வாயின் வார்த்தையில் உண்மையில்லை. ஆகையினால் இயேசுகிறிஸ்து அவர்களுடைய கேள்விக்கு நேரடியாக பதில்கூறாமல் ""நான் கிறிஸ்து என்று உங்களுக்குச் சொன்னாலும் நீங்கள் அதை நம்பமாட்டீர்கள்'' என்று கூறிவிடுகிறார். 


இயேசுவைக் குறித்து ஆலோசனைச்சங்கத்தார் தங்களுடைய உள்ளத்தில் ஏற்கெனவே ஒரு தீர்மானம் செய்திருக்கிறார்கள். இயேசுவைப்பற்றி ஏற்கெனவே தீர்மானம் செய்துவிட்டு, அவரிடம் ""நீ கிறிஸ்துவா'' என்று கேட்பது முறையல்ல. 


இயேசுகிறிஸ்து அவர்களிடத்தில் ஏதாவது கேள்வி கேட்டாலும் அதற்கும் அவர்கள் பதில் சொல்லமாட்டார்கள். தம்மை விடுதலை பண்ணவும் மாட்டீர்கள் என்று இயேசு அவர்களிடம் கூறிவிடுகிறார். இயேசு தம்முடைய வார்த்தையினாலும் செய்கையினாலும் தம்மைக் கிறிஸ்து என்று நிரூபித்தால், அவர்கள் இயேசுவை விடுதலை பண்ண வேண்டும். இயேசுவை கிறிஸ்து என்று விசுவாசிக்க வேண்டும். ஆனால் அவர்களோ இயேசுவை கிறிஸ்து என்று விசுவாசிக்கவும், அவரை விடுதலை பண்ணவும் மனதில்லாதவர்களாக இருக்கிறார்கள்.  


விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் இயேசுகிறிஸ்துவை கொண்டுவந்து  நிறுத்தினார்கள்.   இரவுமுழுவதும் இயேசு கிறிஸ்துவை விசாரித்தார்கள்.   நடுஇரவிற்கு முன்பாகவே யூதர்களும், பிலாத்துவும் இயேசுவை விசாரித்தார்கள். (யோவான் 19:14) இயேசு கிறிஸ்துவை ஏற்கெனவே வாரினால் அடித்துவிட்டார்கள்.  (யோவான் 19:1)

 நடுஇரவிலிருந்து காலை வரையிலும் அவரைக் கொல்ல வேண்டும் என்னும் முயற்சியைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். விடியற்காலத்தில் இயேசு கிறிஸ்துவை யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு அழைத்துக் கொண்டு வருகிறார்கள். தேவனுடைய குமாரனா, கிறிஸ்துவா என்று இயேசு கிறிஸ்துவிடம் கேள்வி கேட்கிறார்கள். இயேசு கிறிஸ்து கூறும் பதில் அவர்களுக்குத் தேவதூஷணமாக ஆயிற்று. ஆகையினால் அவர்கள் இயேசுவை மறுபடியும் பிலாத்துவிடம் அழைத்துச் செல்கிறார்கள்.

 (லூக்கா 22:66-23:5). 


பிலாத்து இயேசுவை ஏரோதிடம் அனுப்புகிறான். ஏரோது இயேசுகிறிஸ்துவைப் பரியாசம் பண்ணிவிட்டு, அவரை மறுபடியும் பிலாத்துவிடமே அனுப்பி விடுகிறான். பிலாத்து கடைசியில் இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக் கொடுக்கிறான்.

  (லூக்கா 23:6-26)



 இயேசுகிறிஸ்துவே மேசியா. இதை நிரூபிப்பதற்கு அவர் ஏற்கெனவே பல அற்புதங்களைச் செய்திருக்கிறார். ஆனால் அவர்கள் இயேசுவைக் கிறிஸ்து என்று விசுவாசிக்கவில்லை. ஆகையினால் இப்போது இயேசு அவர்களிடம் ""நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலை பண்ணவுமாட்டீர்கள். இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார்'' என்று கூறுகிறார். 



மனுஷகுமாரன்



இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார் (லூக் 22:69).



தாமே கிறிஸ்து என்பதை பூரணமாக நிரூபிப்பதற்கு, இயேசுகிறிஸ்து தம்முடைய இரண்டாம் வருகையைப் பற்றி இங்கு குறிப்பிடுகிறார். ""இது முதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார்'' என்று கூறுகிறார். அதைக் காணும்போது இவர்கள் இயேசுவிடம் ""நீர் கிறிஸ்துவா'' என்று கேட்கமாட்டார்கள். இயேசுவை கிறிஸ்து என்று கூறுவதற்கு எங்களுக்கு மேலும் சில ஆதாரம் தேவையென்று ஒருவரும் சொல்லமாட்டார்கள்.  இயேசுவைக் கிறிஸ்து என்று விசுவாசிப்பதற்கு  இதைவிட வேறு அடையாளமோ, நிருபணமோ  தேவையில்லை.



தேவகுமாரன்



அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார் 

 (லூக் 22:70). 



இயேசுகிறிஸ்து தம்மை மனுஷகுமாரன் என்று அறிவிக்கிறார். அவர்களோ அவரிடம் ""நீ தேவனுடைய குமாரனா'' என்று கேட்கிறார்கள். தானியேலின் தரிசனத்தை ஆதாரமாக வைத்து இயேசுகிறிஸ்து தம்மை மனுஷகுமாரனென்று வெளிப்படுத்துகிறார். தானியேல் தன்னுடைய தரிசனத்தில் மனுஷகுமாரனை கண்டதைக்குறித்து இவ்வாறு வெளிப்படுத்துகிறார். ""இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இட மட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்''

 (தானி 7:13,14). 


இயேசுகிறிஸ்து மனுஷகுமாரனாக இருப்பாரென்றால், அவர் தேவகுமாரனாகவும் இருப்பார் என்பதை ஆலோசனைச்சங்கத்தார் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் சொல்லுகிறபடியே தாம் தேவனுடைய குமாரனென்பதை இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கிறார். 


எபிரெய மொழியில் ஒரு காரியத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்வதற்குப் பயன்படுத்தும் வார்த்தையில்,  இயேசு கிறிஸ்து தம்மைத் தேவனுடைய குமாரன் என்று கூறினார். இது யூதருக்கு தேவதூஷணமாகத் தெரிகிறது. இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கு அவர்கள் இதை ஒரு காரணமாகக் கூறினார்கள். 



இனி வேறு சாட்சி வேண்டுவதென்ன



அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள் 

 (லூக் 22:71). 


இயேசுகிறிஸ்துவின் வார்த்தையினாலேயே அவரைக் குற்றப்படுத்த வேண்டுமென்பது ஆலோசனைச்சங்கத்தாருடைய வஞ்சகமான திட்டம். இயேசுகிறிஸ்து தம்மை தேவனுடைய குமாரனென்று அங்கீகரித்துக் கூறியவுடன் ""இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன'' என்று கூறுகிறார்கள். இயேசுகிறிஸ்து தம்முடைய வாயினாலே தம்மைப்பற்றி கூறிய வார்த்தைகளே அவரைக் குற்றப்படுத்துவதற்கு போதுமானது என்று தீர்மானம் செய்துவிடுகிறார்கள். மெய்யாகவே இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று நிரூபிப்பதற்கு, அவருடைய வார்த்தையைத் தவிர வேறு சாட்சி எதுவும் அவர்களுக்குத் தேவைப்படவில்லை.  இயேசுகிறிஸ்துவின் வாயினாலே அந்த சத்திய வார்த்தையே அவர்கள் கேட்கிறார்கள். 


இயேசுகிறிஸ்துவை மேசியா என்று அவர்களால் அங்கீகரிக்க முடியவில்லை. தங்களுக்கு ஒரு மேசியா வரும்போது அவர் உலகத்தின் மற்ற இராஜ்யங்களின் ராஜாக்களைப்போல ஆடம்பரமாகவும் விளம்பரமாகவும் வருவார் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ உலகத்திற்குரிய எந்த ஆடம்பரமுமில்லாமல், மிகவும் எளிமையாக இருக்கிறார். மிகவும் அமைதியாக தம்மை தேவனுடைய குமாரனென்று அங்கீகரிக்கிறார். தாங்கள் எதிர்பார்க்கிறபடி இயேசுகிறிஸ்து இல்லாததினால் அவரை மேசியாவாக அவர்களால் அங்கீகரிக்க முடியவில்லை. 



Post a Comment

0 Comments