பாடுகளின் வாரம் வியாழக்கிழமை நிகழ்வு- 8

 


பாடுகளின் வாரம்


வியாழக்கிழமை நிகழ்வு- 8


பேதுரு இயேசுவை மறுதலிக்கிறான்


(மத்தேயு 26:58,69-75 ; மாற்கு 14:54,66-72 ; லூக்கா 22:54-62 ; யோவான் 18:15-18,25-27)



பிரதான ஆசாரியனுடைய வீட்டில் இயேசு



அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்  (லூக் 22:54). 



பேதுரு தன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கிறான். இயேசுகிறிஸ்துவை பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விடுகிறார்கள். பிரதான ஆசாரியனுக்கு முன்பாக இயேசுகிறிஸ்து விசாரிக்கப்படும் சம்பவம் மற்ற சுவிசேஷங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் லூக்கா எழுதின சுவிசேஷத்தில் இது எழுதப்படவில்லை. இயேசுகிறிஸ்துவை அவர்கள் பிடித்த பின்பு, அவரை பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விடுகிறார்கள் என்று மாத்திரமே  இந்த சுவிசேஷத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 



இயேசுகிறிஸ்துவை பிடித்தவர்கள் மிகுந்த குழப்பத்திலிருக்கிறார்கள். அவரை என்ன செய்வதென்று தெரியாமல், அவரை பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய்விட்டு விடுகிறார்கள். இயேசுகிறிஸ்துவைப் பிடிக்கும்போது அவர்கள் பார்த்த சம்பவத்தையும், அவர்கள் கேட்ட வார்த்தையையும் குறித்து  மனக்கலக்கத்திலிருக்கிறார்கள். பயம் அவர்களை ஆளுகை செய்கிறது. இயேசுகிறிஸ்துவை பிடித்தாலும், அவரை என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. சீக்கிரமாக இந்த பயத்திலிருந்து விடுதலை பெறவேண்டுமென்று விரும்பி, அவரை பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுகிறார்கள். 



இயேசுவை அறியேன்




அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி,  அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான். அப்பொழுது ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக் கண்டு, அவனை உற்றுப்பார்த்து:  இவனும் அவனோடிருந்தான் என்றாள். அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுத-த்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான். ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் க-லேயன்தான் என்று சாதித்தான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று (லூக் 22:55-60). 



பேதுரு இதுவரையிலும் இயேசுகிறிஸ்துவை நெருக்கமாக பின்பற்றிக்கொண்டிருந்தான். ஆனால் இப்போதோ தூரத்திலே அவருக்குப் பின்செல்கிறான். இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பது இவனுடைய மனச்சாட்சியில் பதிந்திருக்கிறது. ஆகையினால் தன்னுடைய மனச்சாட்சியை திருப்திபண்ணுவதற்காக அவரைப் பின்பற்றிச் செல்கிறான். ஆனால் அவருக்கு தூரத்திலே பின்செல்கிறான். தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும், இயேசுகிறிஸ்துவுக்கு வரப்போகிற தண்டனைகளிலிருந்து தன்னை தப்புவித்துக்கொள்வதற்காகவும் மிகவும் கவனமாக அவரோடுகூட நெருக்கமாக பின்செல்லாமல், அவருக்கு தூரமாகவே பின்செல்கிறான். 



இயேசுகிறிஸ்துவுக்கு தூரமாக விலகிப்போகிறவர்கள் துன்மார்க்கருடைய கூட்டத்திலே சேர்ந்துவிடுவார்கள். பேதுருவும் பிரதான ஆசாரியருடைய வேலைக்காரரோடே  சேர்ந்துகொள்கிறான். அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி அதைச் சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள். பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்காருகிறான். அவர்களில் தானும் ஒருவன்போல தன்னைக் காண்பித்துக்கொள்கிறான். இயேசுகிறிஸ்துவோடு தனக்கு இதுவரையிலும்  எந்தவிதமான தொடர்பும் இல்லாததுபோல நடிக்கிறான். ஏனெனில் இயேசுகிறிஸ்து இப்போது மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறார். அவரோடுகூட தானும் அந்த ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதவாறு தப்பித்து விடவேண்டுமென்று அவரைவிட்டு விலகியே செல்கிறான். 



அப்போது ஒரு வேலைக்காரி அங்கு வருகிறாள். பேதுரு பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரர்களோடு நெருப்பண்டையில் உட்கார்ந்திருக்கிறான். இந்த வேலைக்காரி அந்த இடத்தில் அவனை உற்றுப்பார்த்து, இவனும் இயேசுவோடு கூடயிருந்தவன் என்று கூறுகிறாள். அவளுடைய வார்த்தையை அங்கீகரிக்க பேதுருவுக்கு துணிச்சலில்லை. அவளுக்கு பிரதியுத்தரம் கூற பேதுருவுக்கு பெலனில்லை. தான் இயேசுவோடு கூடயிருந்தவன் என்பதை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, தனக்கு இயேசுவையே தெரியாது என்று மறுதலித்துவிடுகிறான். ""ஸ்தீரியே அவனை அறியேன்'' என்று பேதுரு ஒட்டுமொத்தமாக இயேசுகிறிஸ்துவை மறுதலித்துவிடுகிறான். 



பேதுருவின் பிரச்சனை இத்துடன் முடிந்துவிடவில்லை. சற்று நேரத்திற்குப் பின்பு  வேறொருவன் அங்கு வந்து அவனைக் காண்கிறான். ""நீயும் அவர்களில் ஒருவன்'' என்று பேதுருவிடம் கூறுகிறான். அதற்குப் பேதுரு ""மனுஷனே, நான் அல்ல'' என்று  மறுபடியும் தனக்கும் தன் ஆண்டவருக்குமுள்ள ஐக்கியத்தை ஒட்டுமொத்தமாக மறுதலித்துவிடுகிறான். 



தன்னுடைய பிரச்சனை  இத்துடன் முடிவடைந்துவிட்டது என்று பேதுரு நினைத்துக்கொண்டிருக்கிறான். ஆனால் ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்குப் பின்பு வேறொருவன் அவனைப் பார்க்கிறான். ""மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன்தான்'' என்று அந்த மனுஷன் சாதிக்கிறான். பேதுருவின் தோற்றம், பேச்சு ஆகியவை அவன் ஒரு கலிலேயன் என்பதை  நிரூபிக்கிறது. ஆகையினால் இவனும் இயேசுவோடு கூடயிருந்தவன் என்று அந்த மனுஷன் உறுதியாக சாதித்துப் பேசுகிறான். அதற்குப் பேதுரு தான் இயேசுவின் சீஷன் என்று சாதாரணமாக மறுதலிப்பதற்குப் பதிலாக, ""மனுஷனே நீர் சொல்லுகிறதை அறியேன்'' என்று கூறிவிடுகிறான். இயேசுகிறிஸ்துவின் வார்த்தையின் பிரகாரம் சேவல் கூவுகிறதற்கு முன்னே பேதுரு இயேசுகிறிஸ்துவை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிக்கிறான். 



இயேசு பேதுருவை நோக்கிப் பார்க்கிறார்



அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ மூன்றுதரம்  மறுத-ப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, வெளியேபோய், மனங்கசந்து அழுதான்  

(லூக் 22:61,62).



பேதுரு இயேசுகிறிஸ்துவை தனக்குத் தெரியாது என்று மூன்றுமுறை மறுதலித்துக் கூறினவுடனே சேவல் கூவிற்று. அந்தவேளையில் இயேசுகிறிஸ்துவும் அவனை நோக்கிப் பார்க்கிறார். தன் ஆண்டவரை  சேவல் கூவுகிறதற்கு முன்னே மூன்றுமுறை தான்  மறுதலிப்பான் என்று இயேசுகிறிஸ்து கூறிய வார்த்தையை பேதுரு நினைவுகூருகிறான். வெளியே போய் மனங்கசந்து அழுகிறான். சிறிய காரியம்கூட பெரிய மனமாற்றத்திற்கு தூண்டுதலாக அமைகிறது.



இயேசுகிறிஸ்து திரும்பி பேதுருவை நோக்கிப் பார்த்த சம்பவம் லூக்கா எழுதின சுவிசேஷத்தில் மாத்திரமே விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. பேதுருவைவிட்டு சற்று தூரத்தில் இயேசுகிறிஸ்து நிற்கிறார். அவருடைய முதுகு பக்கத்தில் பேதுரு பிரதான ஆசாரியனுடைய மற்ற வேலைக்காரரோடு அமர்ந்திருக்கிறான். பேதுரு தம்மை மூன்றுமுறை மறுதலித்ததையும், உடனே சேவல் கூவியதையும்  இயேசுகிறிஸ்துவும் கேட்டுக்கொண்டிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் முதுகுப் பக்கமாக இருப்பதினால், தான் அவரை மறுதலித்தது அவருக்குத் தெரிய வாய்ப்பில்லையென்று பேதுரு நினைக்கிறான். ஆனால் இயேசுகிறிஸ்துவுக்கு மறைவான காரியம் ஒன்றுமேயில்லை. நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில்கூட நாம் பேசியது, செய்தது எல்லாம் இயேசுவுக்கு மறைவாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் நமக்கு நம்மைப்பற்றி தெரிந்திருப்பதைவிட, நம் ஆண்டவர் இயேசுவுக்கு நம்மைப்பற்றி நன்றாகவே தெரியும்.  


பேதுரு தன் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை மூன்றுமுறை மறுதலிக்கிறான். அவரை அறியேன் என்று கூறுகிறான். அவரோடு இருந்தவன் தான் அல்ல  என்று மறுதலிக்கிறான். தன்னையும் இயேசுவையும் சம்பந்தப்படுத்தி சொன்னதை தனக்கு ஒன்றுமே தெரியாது என்று கூறிவிடுகிறான். பேதுரு இயேசுகிறிஸ்துவை கைவிட்டாலும், இயேசுகிறிஸ்து அவனை கைவிடவில்லை. நாம் கர்த்தரோடு எப்படி பழகுகிறோம் என்பதன் அடிப்படையில் அவர் நம்மோடு ஐக்கியம் வைத்திருப்பதில்லை. நாம் தேவனுக்கு செய்கிற பிரகாரம் அவர் நமக்கு பதில் செய்வதில்லை. அவர் கிருபை நிறைந்தவர். எல்லா சூழ்நிலைகளிலும் அவர் நம்மைக் கைவிடாத தேவன். 



பேதுரு தன்னுடைய உதடுகளினால் தன் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கிறான்.  ஆயினும் அவனுடைய கண்களோ இன்னும் இயேசுகிறிஸ்துவையே பார்த்துக்கொண்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவும் திரும்பி பேதுருவை நோக்கிப் பார்க்கிறார். தன்னை அவர் நோக்கிப் பார்க்கும்போது, அந்த பார்வையிலுள்ள அர்த்தம் பேதுருவுக்கு நன்றாக புரிகிறது. இயேசுகிறிஸ்துவின் பார்வை உறுதியாக இருக்கிறது. இயேசுவை நான் அறியேன் என்று பேதுரு மறுதலித்தான். இயேசுகிறிஸ்து அவனை நோக்கிப் பார்த்தபோது, ""பேதுரு, மெய்யாகவே நீ என்னை அறியவில்லையா'' என்று அவனிடம் கேட்பது போன்றுள்ளது. 


இயேசுகிறிஸ்துவின் பார்வை மிகவும் தீர்மானமுள்ள பார்வையாகும். உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லாததென்றும்  தீர்மானம் பண்ணும் பார்வை இயேசுவின் பார்வை. பேதுரு இயேசுகிறிஸ்துவை மறுதலித்தபோது, ""பேதுரு என்னை நீ ஏன் மறுதலித்தாய், மற்றவர்களெல்லாம் என்னைப்பற்றி சாட்சி கூறுவதற்கு முன்பாக,  நீ என்னை தேவனுடைய குமாரனென்று அறிக்கை செய்தவனல்லவா, அப்படிப்பட்ட  நீ  என்னை மறுதலிக்கலாமா'' என்று இயேசு கேட்பது போன்றுள்ளது. 



இயேசுகிறிஸ்துவின் பார்வை மனதுருக்கமுள்ள பார்வையாகும். அவர் பேதுருவை மிகவும் கனிவாகவும், அன்பாகவும், கரிசனையோடும் பார்க்கிறார். ""பேதுரு நீ ஏன் என்னை மறுதலித்தாய், உன்னுடைய ஆபத்து வேளைகளில் நான் உன்னோடு கூடயிருந்து  உனக்கு உதவிபுரிகிற தேவனல்லவா'' என்று கேட்பது போன்றுள்ளது. 

 

இயேசுகிறிஸ்துவின் பார்வை வழிநடத்தும் பார்வையாகும். தம்முடைய பார்வையினால் இயேசுகிறிஸ்து பேதுருவின் உள்ளத்தை வழிநடத்துகிறார். அவனுடைய மனச்சாட்சியோடு பேசுகிறார். அவன் தம்மை மறுதலித்தாலும், அவனுடைய மனச்சாட்சி தம்மைப்பற்றி எப்படி சிந்திக்க வேண்டுமென்று இயேசுகிறிஸ்து தம்முடைய பார்வையினாலேயே உணர்த்துகிறார்.  இயேசுகிறிஸ்துவின் பார்வை ஒரு விசேஷித்த பார்வையாகும். பேதுருவின் இருதயத்தில் இயேசுகிறிஸ்துவின் பார்வை அவருடைய இரக்கத்தை ஊற்றுகிறது. 



சேவல் கூவிய சத்தத்தைக் கேட்டு பேதுரு மனந்திருந்தவில்லை.  இயேசுகிறிஸ்து தன்னை பார்த்திருக்காவிட்டால் பேதுரு மனந்திரும்பியிருப்பதற்கு வாய்ப்பில்லை.சேவல் கூவியபோது, கர்த்தரும் அவனைத் திரும்பிப்பார்த்ததினால் பேதுரு மனந்திரும்புகிறான். அப்போது பேதுரு இயேசுகிறிஸ்து தன்னோடே சொன்ன வசனத்தை நினைவுகூருகிறான். ""சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்'' என்று இயேசுகிறிஸ்து பேதுருவிடம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்.  இதை நினைவுகூர்ந்து பேதுரு வெளியேபோய் மனங்கசந்து அழுகிறான். கர்த்தருடைய கிருபையுள்ள ஒரு பார்வை பேதுருவின் இருதயத்தை உருக்குகிறது. தன்னுடைய பாவத்தைக் குறித்து அவனுக்குள் குற்றவுணர்வும் துக்கமும் உண்டாயிற்று. இதன் விளைவாக அவன் மனங்கசந்து அழுகிறான். 


கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். இயேசு கிறிஸ்துவின் இந்தப் பார்வையை பேதுருவால் மறக்கவே முடியாது. அந்தப் பார்வையில் பேதுரு தன்னுடைய உணர்வுகளுக்குத் திரும்பி வருகிறான். தான் செய்த பாவங்களுக்கு மனம் வருந்துகிறான்..


Post a Comment

0 Comments