பாடுகளின் வாரம் வியாழக்கிழமை நிகழ்வு- 7

 

பாடுகளின் வாரம்

வியாழக்கிழமை நிகழ்வு- 7


அன்னா இயேசுவை விசாரிக்கிறான் 

(யோவான் 18:12-14,19-23)



இயேசுவைப் பிடித்து


அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி, (யோவா 18:12)


இயேசுகிறிஸ்து தம்மைக் கைதுபண்ணுவதற்கு ஒப்புக்கொடுக்கிறார்.  தம்மைப் பிடிக்க வந்தவர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.  அவர் அதில் பிரியப்படவுமில்லை. தம்முடைய வேளை வந்துவிட்டது என்பது இயேசுகிறிஸ்துவுக்குத் தெரியும்.  ஆகையினால்  தம்மைப் பிடிப்பதற்கும், கட்டுவதற்கும் இயேசுகிறிஸ்து தம்மைத்தாமே ஒப்புக்கொடுக்கிறார். இயேசுகிறிஸ்து அனுமதி கொடுப்பதினால் மாத்திரமே, அவரைப் பிடிக்க வந்தவர்கள்  அவரைப் பிடித்துக் கட்டுகிறார்கள். இயேசுகிறிஸ்துவைப் பிடிக்கும்போது ஒரு சிலர் மாத்திரமே அவர்மீது கைபோட்டுப் பிடித்து அவரைக் கட்ட முடியும். ஒரே வேளையில் எல்லோரும் தங்களுடைய கைகளை இயேசுவின்மீது போட்டு அவரைப் பிடிக்கமுடியாது. ஆனால் அவரைப் பிடிப்பதற்கு ஏராளமான போர்ச்சேவகரும் ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும் யூதருடைய ஊழியக்காரனும் இயேசுவைப் பிடித்துக் கட்டுகிறார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. இயேசுவை ஒரு சிலரே பிடித்தாலும், இவர்களெல்லாம் அவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். 


ஜனங்கள் மத்தியில் குழப்பம் உண்டாகும்போது இதுபோலத்தான் நடைபெறும். ஒரு சிலர் மாத்திரமே குழப்பம் செய்வார்கள்.  மற்றவர்களெல்லாம் அவர்களுக்குத் துணையாக இருப்பார்கள். இயேசுகிறிஸ்துவைப் பிடிக்க இவர்கள் பலமுறை முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அவரோ ஒவ்வொரு முறையும் அவர்கள் நடுவிலிருந்து மறைந்து சென்றுவிடுகிறார்.  இயேசுகிறிஸ்துவைச் சாதாரணமாகப் பிடிக்க முடியாது என்பது இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆகையினால் அவர் தப்பித்துச் செல்லக்கூடாதபடிக்கு ஏராளமானோர் கூடிவந்து, அவர்மீது விழுந்து, அவரை எப்படியாவது பிடித்துக் கட்டவேண்டுமென்று  தீர்மானத்தோடு வந்திருக்கிறார்கள். தேவைப்பட்டால் ஆயுதங்களையும் பயன்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்தோடு, பட்டயங்களையும் தடிகளையும் தங்களோடு எடுத்து வந்திருக்கிறார்கள். 


இயேசுகிறிஸ்துவைப் பிடித்தவர்கள் அவரைக் கட்டுகிறார்கள். ""அவரைக் கட்டுகிற சம்பவம்'' யோவான் எழுதின சுவிசேஷத்தில் மாத்திரமே எழுதப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவைப் பிடித்தவுடன் அவரைக் கட்டுகிறார்கள். கைதுபண்ணுகிறார்கள். அவரைத் துன்பப்படுத்துகிறவர்கள்  அவர்மீது மிகுந்த கோபத்தோடிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவைக் கட்டியிருப்பதினால், தங்கள் இஷ்டப்படி அவரைத் துன்பப்படுத்தலாம் என்பது இவர்களுடைய எண்ணம். அவருக்கு வேதனை உண்டாக்கவும், அவமானம் உண்டாக்கவும்        என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்வதற்கு  அவர்கள் ஆயத்தமாகயிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து தம்மைக் கைதுபண்ணுவதற்கு ஒப்புக்கொடுக்கிறார். அவர் தப்பித்துப்போகமாட்டார். ஆனால் சேவகர்கள் அவரைக் கட்டுவதன் மூலமாக, அவர் தப்பித்துப்போகிறவர் போலவும், ஆகையினால் அவரைக் கட்டியிருப்பதாகவும், மற்றவர்களுக்குக் காண்பிக்கிறார்கள்.


இயேசுகிறிஸ்து இன்னும் விசாரிக்கப்படவேயில்லை. அதற்குள்ளாகவே  அவரை விசாரித்து தீர்ந்ததுபோலவும்,   அவருக்கு  மரணதண்டனை கொடுக்கப்பட்டுவிட்டதுபோலவும் பாவித்து, அவரைப் பிடித்துக் கட்டி கைதுபண்ணுகிறார்கள்.  யூதமார்க்கத்துத் தலைவர்கள் இயேசுவைக் கொலைசெய்யவேண்டுமென்று ஏற்கெனவே தீர்மானம்பண்ணிவிட்டார்கள். விசாரிக்கப்படும் முன்பாகவே தீர்ப்பு எழுதப்பட்டாயிற்று. இயேசுகிறிஸ்து தம்முடைய வார்த்தையின் அதிகாரத்தினால், தம்மைத் துன்பப்படுத்துகிறவர்களுடைய மனச்சாட்சிகளைக் கட்டிப்போட்டிருக்கிறார்.  அவர்களுடைய மனச்சாட்சி மழுங்கிப்போயிற்று.  அதனால் அவர்கள் இயேசுகிறிஸ்துவை பழிவாங்கவேண்டுமென்றும், கொலைசெய்யவேண்டுமென்றும் வெறியோடிருக்கிறார்கள். இதனிமித்தமாகவே அவர்கள் இயேசுவைப் பிடித்துக் கட்டுகிறார்கள்.  


இயேசுகிறிஸ்து கட்டப்பட்டிருப்பது மிகவும்  விசேஷமான சம்பவம். அவர்கள் இயேசுவைக் கட்டுவதற்கு முன்பாகவே, இயேசுகிறிஸ்து  மத்தியஸ்த ஊழியத்திற்கு தம்மைத்தாமே கட்டியிருக்கிறார். இயேசுகிறிஸ்து பிதாவின் சித்தத்தைச் செய்வதற்கு தம்மைத்தாமே கட்டியிருக்கிறார். மனுஷர்மீதுள்ள தம்முடைய அன்பின் கயிறுகளினால், இயேசுகிறிஸ்து  பலிபீடத்திலுள்ள கொம்புகளோடு தம்மை ஏற்கெனவே கட்டியிருக்கிறார். பிதாவானவர்  தமக்குக் கொடுத்திருக்கும் ஊழியத்தை நிறைவேற்ற வேண்டுமென்று இயேசுகிறிஸ்து  ஏற்கெனவே தம்மைக் கட்டிப்போட்டிருக்கிறார்.   


மனுஷருடைய குற்றவுணர்வு அவர்களுடைய ஆத்துமாக்களோடு  கட்டப்பட்டிருக்கிறது. இதனால் தேவனுடைய நியாயத்தீர்ப்பைப்பற்றிய எச்சரிப்போடு நாம் கட்டப்படுகிறோம். நம்முடைய துன்மார்க்கமும் நம்முடைய ஆத்துமாக்களோடு கட்டப்படுகிறது. சாத்தானுடைய அந்தகார வல்லமையே  நம்முடைய துன்மார்க்கத்தை நம்முடைய ஆத்துமாவோடு கட்டியிருக்கிறது. இந்தக் கட்டுக்களிலிருந்து இயேசுகிறிஸ்து தாமே நம்மை விடுவிக்க முடியும். அவர் நமக்காகத் தம்மைக் கட்டுவதற்கு, ஒப்புக்கொடுத்ததினிமித்தமாக, நம்முடைய கட்டுக்களிலிருந்து நாம் விடுவிக்கப்படுகிறோம். 


இயேசுகிறிஸ்துவினுடைய கட்டுக்களினிமித்தம் நாம் விடுவிக்கப்படுகிறோம்.  நம்முடைய விடுதலை இயேசுகிறிஸ்துவின் கட்டுக்களினால் உண்டாயிற்று. இயேசுகிறிஸ்து பாவத்தின் கட்டுக்களிலிருந்து நம்மைவிடுவித்திருக்கிறார். நாம் விடுவிக்கப்பட்டாலும், தேவனுக்குக் கீழ்படிந்து ஜீவிக்கவேண்டும் என்னும் கட்டுக்களினால் நம்மைக் கட்டுவதற்கு விரும்புகிறார். பாவத்திற்குக் கட்டப்பட்டிருந்த நம்மை, இயேசுகிறிஸ்து விடுவித்து, இப்போது நீதிக்குக்கட்டிப்போடுகிறார். 


இயேசுகிறிஸ்து நமக்காகவே கட்டப்படுகிறார். அந்தக் கட்டுகள் நம்மீது விழவேண்டிய கட்டுக்களாகும். நாம் கட்டப்படக்கூடாது என்பதற்காகவே, இயேசுகிறிஸ்து நமக்கு வரவேண்டிய கட்டுகளை, தம்மீது ஏற்றுக்கொள்கிறார். இந்தச் சத்தியத்தை  விசுவாசிகளாகிய நாம் தியானித்துப் பார்த்து,  அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பின் கயிறுகளினால் அவர் நம்மைக் கட்டுவதற்கு  ஒப்புக்கொடுக்கவேண்டும். அவருக்குக் கீழ்ப்படிந்து அவருடைய சித்தத்தின்படி ஊழியம் செய்ய நாம் கட்டப்படவேண்டும். அவர்மீது அன்புகூர நாம் கட்டப்படவேண்டும். 


இயேசுகிறிஸ்து நமக்காக கட்டப்பட்டதினால், அவருக்காக நாம் கட்டப்படுவது மிகவும் எளிமையான கட்டுக்களாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் கட்டுக்கள் நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறது. நம்மை  சுகந்தவாசனையுள்ளதாக  மாற்றுகிறது. இயேசுகிறிஸ்துவுக்காக நாம் கட்டப்படும்போது நமக்கு வருத்தமோ வேதனையோ உண்டாகாது. சந்தோஷமும் சமாதானமும் பெருகும். பவுலும், சீலாவும் சிறைச்சாலையில் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினிமித்தமாக கட்டப்பட்டிருந்தார்கள். அந்தக் கட்டுக்கள் அவர்களுடைய ஆத்துமாவில்  வேதனை உண்டாக்கவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் சந்தோஷம் நிரம்பிற்று. ஆகையினால்தான் அவர்களால் சிறைச்சாலையில், கட்டுக்கள் மத்தியிலும், கர்த்தரைத் துதித்துப் பாடமுடிந்தது.


இயேசு கிறிஸ்துவைக் கைதுபண்ணுவதற்கு ரோமர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இயேசு கிறிஸ்து மிகப்பெரிய தேசத்துரோகம் பண்ணிவிட்டதாக அவர்மீது யூதர்கள் குற்றம்சுமத்தியிருக்கிறார்கள். அவர் பெரிய கலகக்காரர் என்று நினைத்து, அவரைக் கைதுபண்ணுவதற்காக ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனையே அனுப்பியிருக்கிறார்கள்.


காய்பா


முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான் 

 (யோவா 18:13). 


இயேசுகிறிஸ்துவைப் பிடிக்க வந்தவர்கள் அவரைப் பிடித்து, அவரைக் கட்டி, அவரை பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குக் கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் யோவான் எழுதின சுவிசேஷத்தில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. மற்ற சுவிசேஷங்களில் எழுதப்பட்டிராத சில சம்பவங்கள் யோவான் எழுதின சுவிசேஷத்தில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. சீமோன் பேதுரு இயேசுகிறிஸ்துவை மறுதலித்த சம்பவம் மற்ற சுவிசேஷங்களில், ஒரு கோர்வையாக, தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால்  யோவான் எழுதின சுவிசேஷத்திலோ, பேதுரு இயேசுவை மறுதலித்த சம்பவம், சிறிது சிறிதாக, மற்ற வசனங்களுக்கு நடுவில் இணைக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது. 


இயேசுகிறிஸ்துவை முதலாவதாக மார்க்க ரீதியாக விசாரிக்கிறார்கள். யூதமார்க்கத்துத் தலைவர்கள் இயேசுகிறிஸ்துவின்மீது தங்களுடைய மார்க்கத்தின் பிரகாரமாக குற்றம் சுமத்தி விசாரிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை  மார்க்க ரீதியாக விசாரிப்பதற்கு பிரதான ஆசாரியரும் ஆலோசனைச்சங்கத்தாரும் நியாயாதிபதிகளாக இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை முதலாவதாக யூதருடைய பிரதான ஆசாரியரிடத்தில் கொண்டு வந்தபோதிலும், யூதரும் புறஜாதியாரும் சேர்ந்தே அவரைப்பிடித்து, அவரைக் கட்டி, அவரைப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் மூலமாக யூதரும் புறஜாதியாரும் இயேசுகிறிஸ்துவை விசாரித்து அவரைக் குற்றப்படுத்துகிறார்கள் என்பது உறுதியாயிற்று. இயேசுகிறிஸ்துவை யூதரும் புறஜாதியாரும் விசாரித்துக் குற்றப்படுத்திய, இந்த சம்பவம் ஆவிக்குரிய ரீதியாக மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில்  இயேசுகிறிஸ்து   யூதருடைய பாவங்களுக்காகவும், புறஜாதியாருடைய பாவங்களுக்காகவும் கல்வாரி சிலுவையிலே தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்தார். 


இயேசுகிறிஸ்துவைப் பிடிக்க வந்தவர்கள், அவரைப்பிடித்து அவரைக்கட்டி, முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோகிறார்கள். இயேசுகிறிஸ்துவோடு நடைபெற்ற       யுத்தத்தில் தாங்கள் வெற்றிபெற்றதுபோலவும், இயேசுகிறிஸ்து தோற்றுப்போனதுபோலவும், அவரைப்பிடித்துக் கட்டி, வெற்றிக் களிப்போடும் ஆணவத்தோடும், அவர்கள் இயேசுவை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோகிறார்கள்.  இயேசுகிறிஸ்துவை ஒரு கொடிய குற்றவாளியைப்போல நடத்துகிறார்கள்.  சிறிதுநேரம்கூட தாமதம்பண்ணாமல், கொடூரமான குற்றவாளியைக் கைதுபண்ணி உடனே அழைத்துச்செல்வதுபோல, இயேசுகிறிஸ்துவைப் பிடித்துக் கட்டியவுடன், அவரை அன்னாவிடத்தில் கொண்டுபோகிறார்கள்.


சாத்தான் நம்மைத் தன்னுடைய பாவஇச்சைகளினால் கட்டி, தன்னுடைய சித்தத்தின் பிரகாரம் நம்மைச் செயல்பட வைப்பதற்கு, நம்மை அடிமைப்படுத்தி கட்டியிழுத்துச்செல்கிறான். சாத்தானுடைய அந்தகார வல்லமையிலிருந்தும், அவனுடைய பாவகட்டுக்களிலிருந்தும், நம்மை விடுதலைபண்ணுவதற்காக, இயேசுகிறிஸ்து தம்மையே கட்டுவதற்கு ஒப்புக்கொடுக்கிறார்.  சாத்தானின் பிடியிலிருந்து நம்மை விடுதலைபண்ணுவதற்காக, இயேசுகிறிஸ்து சத்துருக்களின் கைகளில் தம்மையே ஒப்புக்கொடுக்கிறார். அவர்களோ அவரைப்பிடித்து, அவரைக்கட்டி, அவரைத் தண்டிப்பதற்காக இழுத்துக்கொண்டு போகிறார்கள். 


இயேசுகிறிஸ்துவைப் பிடிப்பதற்கு போர்ச்சேவகரையும், யூதருடைய ஊழியக்காரரையும் அன்னா என்பவன்தான் கட்டளைக்கொடுத்து அனுப்பினான். அவர்கள் அவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, இயேசுவைப்பிடித்து, அவரைக்கட்டி,  அவரை  அன்னாவினிடத்திற்குக் கொண்டுபோகிறார்கள்.  இந்த வேளை நடு இரவுவேளையாக இருக்கிறது.  பொதுவாக இரவு வேளையில் சேவகர்கள்  யாரையாவது பிடித்து வந்தால், அவர்களை விடியும் வரையிலும் தங்களுடைய சிறைச்சாலையில் வைத்திருந்துவிட்டு, விடிந்தபின்பு அவர்களை விசாரிப்பதற்காக அழைத்து வருவது வழக்கம். ஆனால் இயேசுகிறிஸ்துவைப் பொறுத்தவரையில், நலமான எந்த வழக்கமும் பின்பற்றப்படவில்லை.   


இயேசுகிறிஸ்துவைத் தோட்டத்தில் இரவுவேளையில் பிடிக்கிறார்கள். அவரைக்கட்டி  அதே இரவுவேளையில், அவசரம் அவசரமாக,    பிடித்து இழுத்து வருகிறார்கள். நியாயம் விசாரிக்கிறவர்கள் சமாதானத்திற்கு ஏதுவாக  தீர்ப்புச்செய்யவேண்டும். சமாதானத்தை உண்டுபண்ணுவதே நியாயாதிபதிகளின் கடமை.  ஆனால் இயேசுகிறிஸ்துவை விசாரிக்கிற நியாயாதிபதிகளோ நியாயமில்லாதவர்களாக இருக்கிறார்கள். நியாயப்படி செய்யவேண்டிய எந்தக் காரியத்தையும் அவர்கள் செய்யவில்லை.  அநியாயக்காரருடைய கைகளில் அதிகார பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.  ஆகையினால் தங்களை எதிர்க்காத இயேசுகிறிஸ்துவை எப்படி வேண்டுமானாலும் துன்பப்படுத்தலாம் என்று நினைத்து, அவரைப் பாடாய்ப் படுத்துகிறார்கள். 


இயேசுகிறிஸ்துவைப் பிடித்து பிரதான ஆசாரியனுடைய அரமனைக்கு அழைத்துக்கொண்டு வருகிறார்கள். வழியில் அன்னாவின் வீடு இருக்கிறது. ஆகையால் முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோகிறார்கள். இயேசுகிறிஸ்துவைப்பிடித்து தாங்கள் வெற்றி பெற்றதை சீக்கிரத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், பிரதான ஆசாரியனுடைய பாராட்டுதலைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவும், அவர்கள் இயேசுவை   அன்னாவிடத்திற்குக் கொண்டுபோகிறார்கள். 


தேவாலயத்தில் பலிசெலுத்துவதற்கு முன்பாக, ஆசாரியன் பலிசெலுத்தப்படும் ஆட்டைச் சோதித்துப் பார்ப்பது வழக்கம். பலி செலுத்தப்படும் ஆடு பழுதற்றது என்பதையும்,  பலிசெலுத்தப்படுவதற்கு தகுதியானது என்பதையும் ஆசாரியன் உறுதிபண்ணவேண்டும். இயேசுகிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக பலியாகச்செலுத்தப்படுகிறார். அவர் தம்மைப் பலிபீடத்தில்  பலியாக ஒப்புக்கொடுப்பதற்கு முன்பாக,  அன்னா என்பவன் ஆட்டைச் சோதித்துப்     பார்ப்பதுபோல, அவரைச் சோதித்துப்பார்த்து, இயேசுகிறிஸ்துவைப் பலியாகச் செலுத்தலாம் என்று அங்கீகரிக்கிறான். ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுகிறிஸ்து கட்டப்பட்டவராக அன்னாவுக்கு முன்பு நிறுத்தப்படுகிறார். அன்னா அவரை அங்கீகரித்து, பலிபீடத்தில் அவரை பலியாகச் செலுத்துவதற்கு அனுமதிக்கிறான். 


இந்த அன்னா  அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருக்கிறான். பெரிய இடத்தில் சம்பந்தம் வைத்திருக்கிறான். அவர்கள் பெரிய இடமாக இருந்தாலும், துன்மார்க்கராக இருக்கிறார்கள். துன்மார்க்கரோடு சேரும்போது அவர்களுடைய  சிந்தனையும் செயல்களும் துன்மார்க்கம் நிறைந்ததாவே இருக்கும். தங்களுடைய துன்மார்க்கக் கிரியைகளை நிறைவேற்றுவதற்கு ஒருவருக்கொருவர் துணையாக நிற்பார்கள். அதுபோலவே இயேசுகிறிஸ்துவைச் சிலுவையில் அறைவதற்கு அன்னாவும் காய்பாவும் துணைநிற்கிறார்கள். 


அன்னா என்பவன் ஆலோசனைச் சங்கத்தின் தலைவனாக இருக்கலாம். பலதடவை இவன் பிரதான ஆசாரியனாக நியமிக்கப் பட்டிருக்கிறான். இவனுக்கு ஐந்து குமாரர்களும், ஒரு மருமகனும் இருந்தார்கள். இவனுடைய மருமகன் காய்பா பிரதான ஆசாரியனாக இருந்திருக்கிறான்.


 பிரதான ஆசாரியருடைய பதவி பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒருவருடைய வாழ்நாள் முழுவதற்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் ரோமருடைய ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு வருஷமும் பிரதான ஆசாரியர் மாறிக்கொண்டே வந்தார்கள். ரோமப்பேரரசின் தேசாதிபதிகள் பிரதான ஆசாரியரை நியமனம் செய்தார்கள்.


காய்பா


ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே  (யோவா 18:14).


பிரதான ஆசாரியனையும், யூதமார்க்கத்தின் மற்ற தலைவர்களையும் போலவே, அன்னாவும் இயேசுகிறிஸ்துவைப்பிடித்து கொலை செய்யவேண்டுமென்று வெறியோடிருக்கிறான்.  இயேசுவுக்குச் சீக்கிரமாய் தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்று விரும்பி, கட்டப்பட்டிருக்கும் இயேசுவைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு  அனுப்புகிறான்.


காய்பா இந்த வருஷத்து பிரதான ஆசாரியன். பொதுவாக பிரதான ஆசாரியர்கள், அவர்கள்  உயிரோடிருக்கும்  நாள்வரையிலும் பிரதான ஆசாரியர்களாகவே இருப்பார்கள்.  ஆசாரியப்பட்டம் அவர்களுடைய ஜீவயகாலம் முழுவதற்கும் அவர்கள்மீது பிரதிஷ்டை பண்ணப்படும். இதுதான் பழைய ஏற்பாட்டுக்கால ஒழுங்கு. ஆனால் யூதமார்க்கத்தில், காலப்போக்கில் பல மாற்றங்கள் உண்டாயிற்று.  பிரதான ஆசாரியப் பட்டத்திற்கு போட்டியும் பொறாமையும் ஏற்பட்டது. மார்க்கத்தலைவர்கள் எல்லோருமே பிரதானஆசாரியராக வரவேண்டுமென்று ஆசைப்பட்டார்கள். ஆகையினால் ஆசாரியப் பட்டம் ஒவ்வொரு வருஷத்திற்கும் வெவ்வேறு நபர்களுக்குப்  பிரதிஷ்டைப்பண்ணப்பட்டது. இந்தப் பிரகாரம் காய்பா இந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாயிருக்கிறான்.


பதவிகளுக்காக யூதமார்க்கத்துத் தலைவர்கள் தங்களுக்குள் போட்டி போடுகிறார்கள். தங்களைப்போலவே மற்றவர்களையும் நினைப்பதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் பொறாமைப்படுகிறார்கள். சகோதர சிநேகத்தைப் பிறருக்குக் காண்பிக்காமல் கோபத்தோடும், பொறாமையோடும் ஜீவிக்கிறார்கள். ஜனங்கள் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் ஜீவிக்கும்போது, தேவனோ அவர்களெல்லோரையும் தம்மைவிட்டு விலக்கிவிடுகிறார். காய்பா பிரதான ஆசாரியனாகயிருக்கும் இந்த  வருஷத்தில்தானே, தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் அறைப்படுகிறார்.  


பிரதான ஆசாரியனுடைய பட்டத்திலிருக்கிறவர்கள் தேவனுக்குப் பயந்து பக்திவிருத்திக்கேதுவான நன்மையான காரியங்களைச் செய்யவேண்டும். தீமையான காரியத்தைப் பிரதான ஆசாரியனுடைய ஆசனத்திலிருந்து நிறைவேற்ற வேண்டுமென்றால், அந்த ஆசனத்தில் துன்மார்க்கன் ஒருவன் அமர்ந்திருக்கவேண்டும்.  காய்பா பிரதான ஆசாரியனாகயிருந்தாலும், இவன் துன்மார்க்கனாகயிருக்கிறான். இந்த வருஷத்தில் இவன் தனக்கு அழிவு உண்டாகப்  பிரதான ஆசாரியனாக நியமிக்கப்பட்டிருக்கிறான். இயேசுகிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்து கொல்லவேண்டும் என்று சதிஆலோசனைபண்ணும் துன்மார்க்கக் கூட்டத்தாருக்கு தலைவனாகயிருக்கிறான். 


ஒருவன் எத்தனை நன்மைசெய்தாலும், ஜனங்கள் அவன் செய்த நன்மைகளை மறந்துவிடுவார்கள். ஆனாலும் அவன் செய்த தீமைகளை ஜனங்கள் ஒருபோதும் மறப்பதில்லை.  நன்மை செய்கிறவர்கள் தொடர்ந்து நன்மை செய்துகொண்டேயிருக்கவேண்டும். தீமை செய்தால் நமக்கு அழிவு வரும். ஆகையினால் தீமையைவிட்டு விலகியிருக்கவேண்டும். நமக்கு அழிவு உண்டாகும் என்பது தெரிந்தும் தீமை செய்வது துணிகரமான பாவம். காய்பா துணிகரமாகப் பாவம் செய்கிறான். இயேசுகிறிஸ்துவைச்சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தால் தனக்கு அழிவும் சாபமும் வரும் என்று தெரிந்திருந்தும், அவன் இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்கிறான். காய்பா தன்னுடைய அழிவைத் தானே தேடிக்கொள்கிறான். 


காய்பாவின் துன்மார்க்கமான ஆலோசனை இந்த வசனத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இதற்குமுன்பு இவன்  இயேசுகிறிஸ்துவைப்பற்றி விரோதமாகப் பேசினான். ""ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்கும்'' என்று இவன் யூதருக்கு ஆலோசனை சொன்னான். இவன் ஏற்கெனவே சொன்ன வார்த்தை இந்த வசனத்தில் மறுபடியும் எழுதப்பட்டிருக்கிறது.  இதுவே காய்பாவின் நீதியும் தீர்ப்புமாயிருக்கிறது. நியாயத்தின்படி பேசாமல்,  தன்னுடைய சுயவிருப்பத்தின்படி பேசுகிறான்.  அதிகார ஆசனத்திலிருக்கிறவர்கள் கர்த்தருக்குப் பயந்தவர்களாக, வேத வாக்கியத்தின் பிரகாரம் தீர்ப்புச்செய்யவேண்டும்.  நம்முடைய நீதியும் தீர்ப்பும் தேவனுடைய நீதியாகவும் தீர்ப்பாகவும் இருக்கும் என்று நினைத்து, நம்முடைய மனதிற்குத் தோன்றியதையெல்லாம் தீர்ப்பாக அறிவித்து விடக்கூடாது. 


காய்பா இயேசுகிறிஸ்துவை விசாரிக்கும் முன்பாகவே அவருக்குத் தீர்ப்புச் சொல்லிவிடுகிறான். ""ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்கும்'' என்பது காய்பாவின் தீர்ப்பு. இயேசுகிறிஸ்து இன்னும் விசாரிக்கப்படவே இல்லை. அவர் என்ன குற்றம் செய்தாரென்பது இன்னும் கேட்டு அறியப்படவே இல்லை. அதற்குள் இயேசு மரிக்கவேண்டுமென்று காய்பா பேசுகிறான். நீதியின் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறவன் அநீதியாக நடந்துகொள்கிறான். 


காய்பா சத்துருவாக இருந்தாலும், அவன் மூலமாகவும் சத்தியம் வெளிப்படுகிறது. இயேசுகிறிஸ்து மனுக்குலத்தின் பாவங்களை மன்னித்து அவர்களை இரட்சிப்பதற்காகத் தம்மையே பலியாக ஒப்புக்கொடுக்கிறார். கல்வாரி சிலுவையில் அவர் நமக்காக மரிக்கிறார். இயேசுகிறிஸ்து மரிக்கவேண்டுமென்பது நீதியாக இல்லையென்றாலும், அவர் தாமாக தம்முடைய ஜீவனையே நமக்காக ஒப்புக்கொடுக்கிறார். இது தேவனுடைய பார்வையில் நீதியாகயிருக்கிறது. காய்பாவுக்குத் தேவனுடைய சித்தம் தெரியவில்லை. அவன் தன் சுயவிருப்பத்தைப் பேசுகிறான். இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சி காய்பாவின் வாயிலிருந்தும் அறிவிக்கப்படுகிறது. 


இயேசுகிறிஸ்துவை ஆக்கினைக்குட்படுத்துவதில் காய்பாவும் முக்கிய பங்கு வகிக்கிறான். இந்தப் பாவத்தில் அவனுக்கும் பங்குண்டு. தேவாலயத்தின் சேவகருக்கும், யூதருடைய ஊழியக்காரருக்கும் பிரதான ஆசாரியனே தலைவனாகயிருக்கிறான்.   அவனுடைய ஊழியக்காரர் இயேசுகிறிஸ்துவைப்பிடித்துக் கட்டி இழுத்து வந்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை விசாரிக்கும்போது அவருடைய கட்டுக்களை அவிழ்த்துவிடவேண்டும். இயேசுகிறிஸ்துவின் கட்டுக்களை அன்னாவும் அவிழ்த்துவிடவில்லை. காய்பாவும் அவிழ்த்துவிடவில்லை. அவரைக் கட்டப்பட்டவராகவே வைத்திருக்கிறார்கள். 


இயேசுகிறிஸ்துவைப் பிரதான ஆசாரியரும் ஆலோசனைச்சங்கத்தாரும் விசாரிக்கவேண்டும்.  அன்னா அவர்களில் ஒருவனல்ல. இயேசுகிறிஸ்து விசாரிக்கப்படும்போது அன்னா  அவர்களோடு கூடயில்லை. ஆனாலும் அவர்களுடைய துன்மார்க்கமான கிரியைகளில் அன்னாவுக்கும் பங்குள்ளது. இயேசுகிறிஸ்துவைப் பிடித்துக் கட்டி முதலாவது அவரை அன்னாவினிடத்தில்தான் கொண்டுவந்தார்கள். போர்ச்சேவகர்களும், யூதருடைய ஊழியக்காரர்களும் இயேசுகிறிஸ்துவைப் பிடித்துக் கட்டி தவறுசெய்திருந்தாலும், அன்னா அந்தத் தவற்றை சரிசெய்து, அவருடைய கட்டுக்களை அவிழ்த்துவிட்டிருக்கவேண்டும். ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோ, நாம்   கட்டப்படாமல் விடுதலையாயிருக்கவேண்டும் என்பதற்காக, அவரே கட்டப்பட்டவராகயிருக்கிறார். 


இயேசு கிறிஸ்துவைக் கொலை செய்ய வேண்டுமென்று, காய்பா ஏற்கெனவே தீர்ப்பு வழங்கி விட்டான்.   ஆகையினால் இவனுக்கு இயேசு கிறிஸ்துவினுடைய வழக்கில் தீர்ப்பு கூறுவதற்குத் தகுதியில்லை. இயேசு கிறிஸ்துவோ நீதியாக விசாரிக்கப்படவில்லை. சிலுவையில் மரிப்பதற்கு அவர் எந்தப் பாவமும் செய்யவில்லை. உலகத்தின் பாவங்களை மன்னிப்பதற்கு அவர் தம்மைச் சிலுவையில் மரிப்பதற்கு ஒப்புக்கொடுத்தார்.


பிரதான ஆசாரியன்


பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான் (யோவா 18:19).


இயேசுகிறிஸ்துவின் சிநேகிதனாகிய பேதுரு அவரை மறுதலிக்க ஆரம்பிக்கிறான். கிறிஸ்துவின் சத்துருவாகிய பிரதான ஆசாரியன் அவரைக் குற்றப்படுத்த ஆரம்பிக்கிறான். யூதமார்க்கத்துத் தலைவர்கள்  இயேசுகிறிஸ்துவின்மீது பலவிதமான குற்றச்சாட்டுக்களைக் கூறுகிறார்கள். அவர் தவறான உபதேசங்களைப் போதிக்கிறவர் என்பதே அவர்மீது கூறப்படும் பிரதான குற்றச்சாட்டாகும். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. தங்கள் முயற்சியில் தோல்வியடைந்ததினால், அவர்கள் இயேசுவின்மீது குற்றம்சுமத்த வேறு உபாயத்தைத் தேடுகிறார்கள். இயேசுகிறிஸ்து தேவதூஷணம் சொல்லுவதாக அவரைக் குற்றப்படுத்துகிறார்கள். மற்ற சுவிசேஷங்களிலும் இந்தச் சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது. 


பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும், போதகத்தைக் குறித்தும் விசாரிக்கிறான். இயேசுகிறிஸ்து விசாரிக்கப்படும் விசாரணையே முறையற்று நடைபெறுகிறது. யூதருடைய சட்டதிட்டங்களுக்கு விரோதமாகவே இயேசுகிறிஸ்து விசாரிக்கப்படுகிறார். இயேசுகிறிஸ்துவைப் பிடித்துக் கட்டியிருக்கிறார்கள். ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது அவரைக் கட்டியவர்களுக்கே தெரியவில்லை. என்ன குற்றத்திற்காக அவரைக் கட்டியிருக்கிறோம் என்பது தெரியாமல், கட்டப்பட்டிருக்கும் இயேசுகிறிஸ்துவிடமே, அவர் செய்த குற்றத்தைப்பற்றி,              அவரிடத்தில் விசாரிக்கிறார்கள். இயேசுவின்மீது குற்றம் நிரூபிக்கப்படவேண்டுமென்றால், இப்போது அவர் தம்மீதே குற்றம் சுமத்திக்கொள்ளவேண்டும். ஏனெனில்   பிரதான ஆசாரியருக்கு இயேசுகிறிஸ்துவின்மீது குற்றம் சுமத்த ஒரு குற்றமும் இல்லை. 


பிரதான ஆசாரியனால் இயேசுகிறிஸ்துவின்மீது குற்றம் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆகையினால் அவருடைய வாழ்க்கையிலும், அவருடைய சிநேகிதரிடத்திலும் ஏதாவது குற்றம் கண்டுபிடிக்கமுடியுமா என்று எதிர்பார்க்கிறான். கிறிஸ்துவின் சீஷரைக் குறித்து விசாரிக்கிறான்.  கிறிஸ்துவின் சீஷர்கள் யாரும் எப்போதும் அவரோடு கூடயில்லை என்று பரியாசம்பண்ணுகிறான். கிறிஸ்துவின் சீஷர்கள்  கோழைகள் என்றும், அவர்கள் இயேசுவோடு கூடயிருப்பதற்குப் பயப்படுகிறார்கள் என்றும் பரியாசம்பண்ணுகிறான். பிரதான ஆசாரியன் தம்முடைய சீஷர்களைப்பற்றி பரியாசம்பண்ணுவது இயேசுகிறிஸ்துவின் வேதனையை அதிகரித்திருக்கும். 


இயேசுகிறிஸ்துவின் சீஷரைக்குறித்து விசாரிக்கிறவன், அவருடைய  போதகத்தைக் குறித்தும் விசாரிக்கிறான். இயேசுகிறிஸ்து தேவதூஷணம் சொல்லுகிறாரென்றும், யூதருடைய சத்தியத்திற்கு விரோதமாகப் போதகம்பண்ணுகிறாரென்றும் அவர்மீது குற்றம் சுமத்த முயற்சிபண்ணுகிறான். இயேசுகிறிஸ்து செய்த அற்புதங்களைப்பற்றி பிரதான ஆசாரியன் ஒன்றும் பேசவில்லை. அவர் செல்லுமிடங்களிலெல்லாம் நன்மை செய்கிறவராகவே சுற்றி அலைந்தார். அற்புங்களையும், அதிசயங்களையும் பற்றிப் பேசினால் இயேசுகிறிஸ்துவைக் குற்றப்படுத்த முடியாது. ஆகையினால் பிரதான ஆசாரியன்  இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமான காரியங்களைப்பற்றி மாத்திரமே அவரிடத்தில் பேசுகிறான்.


இயேசு கிறிஸ்துவினுடைய உபதேசம். தமக்காக அவர் சீஷர்களைச் சேர்த்துக் கொண்டது. புதிய உபதேசங்களைப் பேசி, ஒரு புதிய மார்க்கத்தை ஆரம்பித்தது ஆகிய காரியங்களைக் குறித்து, பிரதான ஆசாரியன் இயேசுவிடம் கேள்வி கேட்கிறான். சட்டப்படி, இயேசு கிறிஸ்துவின்மீது ஏதாவது குற்றம் சுமத்த முடியுமா என்று பார்க்கிறான். ஆனால் அவனுக்கு ஒரு காரணமும் அகப்படவில்லை. இந்த விசாரணை முழுவதும் இரவு வேளையில் நடைபெறுகிறது. இரவு வேளையில் யூதருடைய பிரமாணத்தின் பிரகாரம் யாரையும் விசாரிக்கக்கூடாது. ஓய்வுநாளுக்கு முந்திய நாளிலோ அல்லது பண்டிகையின் முந்திய நாளிலோ யாருக்கும் எந்தத் தண்டனையும் வழங்கக்கூடாது என்பது யூதருடைய பிரமாணம். இயேசு கிறிஸ்துவை விசாரித்த காலத்தில் யூதர்கள் இந்தப் பிரமாணங்கள் எல்லாவற்றையும் மீறிவிட்டார்கள். இயேசுவை இரவு வேளையில் விசாரித்தார்கள். பஸ்காவிற்கு முந்திய நாளில் விசாரித்தார்கள். பண்டிகையின் பிரதான ஓய்வுநாளுக்கு முந்திய நாளில் விசாரித்தார்கள். இயேசு கிறிஸ்து விசாரிக்கப்படும்போது, அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது. 


வெளியரங்கமாய் 


இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை           

 (யோவா 18:20). 


பிரதான ஆசாரியனுடைய கேள்விகளுக்கு இயேசுகிறிஸ்து பொறுமையோடு பதில் சொல்லுகிறார். தம்முடைய சீஷரைக்குறித்து அவன் கேட்ட கேள்விக்கு இயேசுகிறிஸ்து ஒரு பதிலும் சொல்லவில்லை. தம்முடைய சீஷரைப்பற்றி கேட்பது, தேவையற்ற கேள்வியென்று இயேசுகிறிஸ்து தீர்மானம்பண்ணிவிடுகிறார். தம்மைப் பிடிக்க வந்தவர்களிடம், ""அவர்களைப் போகவிடுங்கள்'' என்று இயேசுகிறிஸ்து கூறினார். அவர் தம்முடைய சீஷரிடத்தில் அன்புடனும் கரிசனையுடனும் இருக்கிறார். அவர்களுக்கு ஒரு தீங்கும், பாடுகளும், வேதனைகளும் இப்போது வரக்கூடாது என்பது இயேசுகிறிஸ்துவின் சித்தமாயிருக்கிறது. 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள்  அவருடைய உபதேசத்தைக் கேட்டு, அவர்  தங்களுக்குச் சொன்ன வசனத்தை மாத்திரமே ஜனங்களுக்குப் போதித்தார்கள். இயேசுகிறிஸ்து அற்புங்களை நடப்பிக்கும்போது சீஷர்கள் கூடயிருந்தார்கள்.  பிரதான ஆசாரியனாகிய காய்பா இயேசுகிறிஸ்துவின் சீஷர்களையும் கண்ணியில் சிக்க வைக்க முயற்சிபண்ணுகிறான். ஆனால்  ""அவர்களைப் போகவிடுங்கள்'' என்பதே இயேசுகிறிஸ்துவின் பதிலாக இருக்கிறது. 


கிறிஸ்துவின் சீஷர்கள் கோழைகளென்று  காய்பா குற்றம் சொல்லியிருக்கலாம். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தம்முடைய சீஷர்களைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவர்களைக் குற்றப்படுத்தவுமில்லை. அவர்களை நியாயப்படுத்தவுமில்லை. தம்முடைய உபதேசத்தைப்பற்றி இயேசுகிறிஸ்து கூறும்போது, பிரதான ஆசாரியனிடம் அதைப்பற்றி விசேஷமாக எதையும்  கூறவில்லை.  தம்முடைய உபதேசத்தைக்கேட்ட  ஜனங்களைப்பற்றி மாத்திரமே இயேசுகிறிஸ்து பொதுவாகக் கூறுகிறார். 


இயேசு கிறிஸ்து பிரதான ஆசாரியனுடைய கேள்விக்கு மிகவும் தெளிவாகப் பதில் கூறிவிடுகிறார். எல்லா ஜனங்களுக்கும் மத்தியில் வெளிப்படையாக இயேசு கிறிஸ்து பேசியிருக்கிறார். அவர் இரகசியமாக ஒரு காரியமும் செய்யவில்லை. பிரதான ஆசாரியருக்கு வேவுகாரர்கள் இருந்தார்கள். இயேசு கிறிஸ்துவின் உபதேசம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நியாயப்பிரமாணத்திற்கு எதிராகவும், தீர்க்கதரிசிகளுக்கு எதிராகவும் இயேசு கிறிஸ்து ஒன்றும் பேசவில்லை. தேசத்தில் கலகம் பண்ணவில்லை. இயேசு கிறிஸ்துவின்மீது அவர்கள் கூறிய குற்றச்சாட்டு எதுவும் உண்மையல்ல.


நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன 


நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார் (யோவா 18:21).


இயேசுகிறிஸ்து பிரதான ஆசாரியனிடத்தில் மிகவும் ஞானத்தோடு பேசுகிறார். இயேசுகிறிஸ்துவை அவன் யூதருடைய சட்டத்திற்குப் புறம்பாக விசாரித்துக்கொண்டிருக்கிறான். ""நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன'' என்று கூறி, பிரதான ஆசாரியனுக்கு தம்மிடத்தில் விசாரிக்க அதிகாரம் எதுவுமில்லை என்பதை இயேசுகிறிஸ்து வெளிப்படுத்துகிறார். இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தைக் குறித்து பிரதான ஆசாரியன் ஏற்கெனவே குற்றம் கூறியிருக்கிறான். அப்படியிருக்கும்போது, அவருடைய உபதேசத்தைக் குறித்து அவன் அவர்களிடத்தில் கேட்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை. 


இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைபண்ணினால் அவனை ஜெபாலயத்திற்குப் புறம்பாக்க வேண்டுமென்று  யூதர்கள் ஏற்கெனவே கட்டுப்பாடு செய்திருக்கிறார்கள்

 (யோவா 9:22).  ஏற்கெனவே தீர்மானித்து கட்டுப்பாடு செய்திருக்கும் விஷயத்தைப்பற்றி மறுபடியும் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. தீர்ப்பு வழங்கிய பின்பு விசாரணை தேவையில்லை.  விசாரித்த பின்புதான் தீர்ப்பு வழங்குவது வழக்கம். ஆனால் பிரதான ஆசாரியனுடைய அரமனையில் எல்லாமே முறையில்லாமல் தாறுமாறாக நடைபெறுகிறது. 


பிரதான ஆசாரியன் இயேசுகிறிஸ்துவின் போதகத்தைக் குறித்து விசாரிக்கிறான்.  ஆனால் இயேசுவோ ""நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்து       தம்மைத்தாமே குற்றப்படுத்த விரும்பவில்லை. தம்மை அனுப்பினவர் இன்னாரென்பதையும், தாம் செய்கிற ஊழியம் எப்படிப்பட்டது என்பதையும் பற்றி இயேசுகிறிஸ்து தெளிவோடிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் ஊழியம் உன்னதமான ஊழியம். தம்மைக் குற்றப்படுத்துவது, தம்மை அனுப்பின பிதாவைக் குற்றப்படுத்துவதற்கு சமமமானது என்று  இயேசுகிறிஸ்து கருதுகிறார். ஆகையினால் அவர் ஒருபோதும் தம்மைக் குற்றப்படுத்தமாட்டார்.  


இயேசுகிறிஸ்து உபதேசம்பண்ணும்போது  அந்தரங்கத்தில் ஒன்றும் பேசவில்லை.  ஜெபாலயங்களிலேயும், யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் அவர் உபதேசம்பண்ணினார். அவர் மறைவாக எதையும் செய்யவில்லை. அவருடைய பிரசங்கமும், உபதேசமும், போதனையும் வெளிப்படையாகவே கொடுக்கப்பட்டது. இயேசுகிறிஸ்துவின் உபதேச வார்த்தைகள் தெளிவானவை. எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவை. சத்தியத்தைப் பூரணமாக விளக்கும் வார்த்தைகளையே இயேசுகிறிஸ்து உபதேசம்பண்ணினார்.


இயேசுகிறிஸ்து ஒவ்வொரு முறை உபதேசம்பண்ணும்போதும், ""மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்னும் வாக்கியத்தைப் பயன்படுத்தி தம்முடைய உபதேசத்தை உறுதிபண்ணுகிறார். முதலாவதாகத் தம்முடைய உபதேசம் எப்படிப்பட்டது என்பதை இயேசுகிறிஸ்து விளக்கிச் சொல்லிவிட்டு, அதன்பின்பு தம்முடைய உபதேசத்தைக் கேட்பவர்களைப்பற்றி பொதுவாகச் சொல்லுகிறார். இயேசுகிறிஸ்து உலகத்துடனே பேசினார். காதுள்ளவர்கள் எல்லோரும் கேட்கக்கடவர்கள் என்பதுதான் இயேசுகிறிஸ்துவின் விருப்பம். சமுதாயத்தில் அவர்கள் உயர்ந்தவர்களாக இருந்தாலும், தாழ்ந்தவர்களாக இருந்தாலும், படித்தவர்களாக இருந்தாலும், படிக்காதவர்களாக இருந்தாலும், யூதர்களாக இருந்தாலும், புறஜாதியாராக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும் சத்துருக்களாக இருந்தாலும் இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தைக் காதுள்ளவர்கள் எல்லோருமே கேட்கலாம். 


இயேசுகிறிஸ்து தம்முடைய பிரசங்கத்தைப்பற்றியும், பிரசங்கத்தைக் கேட்பவர்களைப்பற்றியும் சொல்லிவிட்டு, அதன்பின்பு தாம் பிரசங்கம்பண்ணிய ஸ்தலங்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அவர் கிராமங்களிலிருக்கும்போது ஜெபாலயங்களில் பிரசங்கம்பண்ணுவது வழக்கம்.  அவர் எருசலேமுக்கு வருகிறபோதோ  தேவாலயத்தில் உபதேசம்பண்ணுவது வழக்கம்.  பல சமயங்களில் அவர் ஜனங்களுடைய வீடுகளிலும், மலைகளிலும், கடற்கரை ஓரங்களிலும் பிரசங்கம்பண்ணியிருக்கிறார்.  இயேசுகிறிஸ்துவின் பிரசங்கம் ஒருபோதும் மாறுவதில்லை. அவர் வாக்குமாறாதவர். தனி இடங்களில் பிரசங்கம்பண்ணுவதுபோலவே அவர் பொது இடங்களிலும் பிரசங்கம்பண்ணுவார். திரளான ஜனங்கள் மத்தியில் பிரசங்கம் செய்தாலும், இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் அதைக் கேட்கிறவர்களெல்லோருக்குமே பிரயோஜனமுள்ளதாக இருக்கும்.  இயேசுவின் பிரசங்கத்தைக் கேட்கிறவர்கள் கொஞ்சம் பேராகயிருந்தாலும், அநேகம் பேராகயிருந்தாலும் அவர்களெல்லோமே அவருடைய வார்த்தையினால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.  


தம்முடைய பிரசங்கத்தைப்பற்றி ஒவ்வொன்றாகச் சொல்லிவிட்டு, இயேசுகிறிஸ்து  தம்முடைய உபதேசத்தைப்பற்றியும் சொல்லுகிறார். அவர் உலகத்துடனே வெளியரங்கமாய்ப் பேசினார். அந்தரங்கத்திலே அவர் ஒன்றும் பேசவில்லை. ஒளிப்பிடங்களில் அவர் சத்தியத்தை அறிவிக்கவில்லை. இயேசுகிறிஸ்துவின் பிரசங்கமும், அற்புங்களும்  ஏதோ ஒரு மூலையில் நடைபெற்ற சம்பவமல்ல.  அவர் யாருக்கும் பயப்படவில்லை. சத்தியத்தைப் பிரசங்கம்பண்ண அவர் வெட்கப்படவில்லை. இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு இருளிலே சொல்லுகிறதை அவர்கள் வெளிச்சத்திலே சொல்லவேண்டும் (மத் 10:27).   


பிரதான ஆசாரியனுடைய கேள்விக்கு இயேசுகிறிஸ்து நேரடியாகப் பதில்சொல்லாமல்,  தாம் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில்  விசாரிக்குமாறு கூறுகிறார். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களிடத்தில் அவரைப்பற்றிக் கேட்டால் அவரை நல்லவரென்றுதான் சொல்லுவார்கள்.  இயேசுகிறிஸ்து பிரதான ஆசாரியனிடம், தம்மைப்பற்றி தம்முடைய சிநேகிதரிடத்திலோ, சீஷரிடத்திலோ  கேட்குமாறு கூறவில்லை. பொதுநிலை வகிக்கிறவர்களிடம் கேட்குமாறு கூறுகிறார்.  அவர்கள் பாரபட்சமில்லாமல், பட்சபாதம் காண்பிக்காமல் நியாயமாய் தீர்ப்புச் செய்வார்கள். கிறிஸ்துவின் சுவிசேஷம் அதை ஏற்றுக்கொண்டோர் உள்ளத்தில் கிரியை செய்கிறது. சுவிசேஷத்தைப் பெற்றிருக்கிறவர்கள்  அதற்கு சாட்சி கூறுகிறார்கள். 


இயேசுவை அறைந்தான் 


இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான் (யோவா 18:22).


பிரதான ஆசாரியன் இயேசுகிறிஸ்துவை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, அவருக்குச் சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன் அவரை  கன்னத்தில் அறைகிறான். இயேசுவை அறையும்போது ""பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது'' என்றும் கேட்கிறான். இயேசுகிறிஸ்து எந்தக்     குழப்பமும் பண்ணவில்லை. அவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை. அப்படியிருக்கும்போது அவரை அறைவது அநீதியான செயல். இயேசுகிறிஸ்துவின்  கைகள் கட்டப்பட்டிருக்கிறது. பொதுவாக கட்டப்பட்டிருக்கிறவனை அடிப்பது கோழைத்தனமாகவே கருத்தப்படும். 


கைதுபண்ணப்பட்டிருப்பவரை, விசாரித்துக் குற்றத்தை நிரூபிப்பதற்கு  முன்பாக,  தண்டிக்கக்கூடாது. அப்படித் தண்டிப்பது நீதியான செயல் அல்ல. நீதிமன்றத்தில் நீதி காக்கப்படவேண்டும். அமைதி வாசம்பண்ணவேண்டும். ஆனால் பிரதான ஆசாரியனுடைய அரமனையிலோ நீதி காக்கப்படவில்லை. சகலமும் அநீதியாகவே நடைபெறுகிறது. ஆனாலும் இந்த அநீதியான செய்கைகளைப் பிரதான ஆசாரியனோ, அல்லது அவனுடைய அரமனையிலுள்ள வேறு அதிகாரரிகளோ கண்டுகொள்ளவே இல்லை. 


சேவகரில் ஒருவன் இயேசுவை அறையும்போது ""பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது'' என்று கோபத்தோடு கேட்கிறான். குமாரனாகிய இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனிடத்திலேயே பேசக்கூடியவர். யாருக்கு எப்படி உத்தரவு சொல்லவேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். இயேசுவுக்கு யாரும் உபதேசம்பண்ணவேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்தச் சேவகனோ இயேசுகிறிஸ்துவுக்கு உத்தரவு சொல்ல கற்றுக்கொடுக்க முன் வருகிறான். 


இயேசுகிறிஸ்துவை அறைவதினால்  இந்தச் சேவகன் பிரதான ஆசாரியனிடம் நல்ல பெயர் எடுக்க ஆசைப்படலாம். அவனிடத்தில் சில சலுககைகளை எதிர்பார்த்து, அவன் பிரியப்படும்படியாக இயேசுவை அறைந்திருக்கலாம். ""பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது'' என்று கேட்பதன் மூலமாக, இந்தச் சேவகன் ஆசாரியன்மீது தனக்கிருக்கும் மரியாதையையும்  வைராக்கியத்தையும் வெளிப்படுத்தலாம். 


ஆட்சிபுரிகிறவர்கள் துன்மார்க்கராகவும், அவருடைய வேலைக்காரரும் துன்மார்க்கராக இருக்கும்போது, அங்கு துன்மார்க்கத்தைத் தவிர வேறு நல்மார்க்கம் எதையும் காணமுடியாது. தங்களுடைய மேலதிகாரிகள் யாரைத் துன்புறுத்தவேண்டுமென்று  விரும்புகிறார்களோ, அவர்களுடைய விருப்பத்தை இப்படிப்பட்ட அதிகாரிகள் பணிந்து செய்வார்கள். நீதி நியாயத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்.    இவர்கள் மூலமாக இயேசுகிறிஸ்துவின் பாடுகள்  இன்னும் அதிகரிக்கிறது. 


ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே சேவகரில் ஒருவன் இயேசு கிறிஸ்துவிற்குத் தண்டனை கொடுக்கிறான். இயேசு கிறிஸ்து அங்கு நியாயமாக விசாரிக்கப்படவில்லை. இயேசு  அங்கு வருவதற்கு முன்பாகவே அவரைக் கொன்றுபோடவேண்டுமென்று பிரதான ஆசாரியன் தீர்மானம் பண்ணிவிட்டான்.


என்னை ஏன் அடிக்கிறாய்


இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்  (யோவா 18:23). 


தம்மை அறைவதை இயேசுகிறிஸ்து சகித்துக்கொள்கிறார். அதே வேளையில் மிகுந்த பொறுமையோடும் மனத்தாழ்மையோடும், தன்னை அறைந்தவனிடத்தில் மிகவும் நிதானமாகப் பேசுகிறார். ""நான் தகாதவிதமாய் பேசினதுண்டானால் தகாததை ஒப்புவி. நான் தகுதியாய் பேசினேனேயாகில் என்னை ஏன் அடிக்கிறாய்'' என்று அவனிடத்தில் கேட்கிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய உபதேசத்தில், ""ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு'' (மத் 5:39) என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இங்கோ தம்மை அறைந்தவனுக்கு, இயேசுகிறிஸ்து தம்முடைய  மறுகன்னத்தைத் திருப்பிக்கொடுப்பதற்குப் பதிலாக, அவனிடத்தில் ""என்னை ஏன் அடிக்கிறாய்'' என்று கேட்கிறார். 


கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்குப் பாடுகளும், வேதனைகளும், துன்பங்களும் வரலாம். அவற்றை நாம் சகித்துக்கொள்ளவேண்டும். நம்மிடத்தில் நீடிய பொறுமை காணப்படவேண்டும். நாம் துன்பப்படுத்தப்படும்போது நம்மை நாமே நியாயந்தீர்த்துக் கொள்ளக்கூடாது. நாம் துன்பப்படுவதற்கான காரணம் என்னவென்பது நமக்குத் தெரியவில்லையென்றால், நம்மைத் துன்பப்படுத்துகிறவர்களிடம் அதற்கான காரணத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அதில் தவறு ஒன்றுமில்லை.  இயேசுகிறிஸ்துவுக்கு நேரிட்ட இந்த சம்பவம்  நமக்கு முன்மாதிரியாக நியமிக்கப்பட்டிருக்கிறது.  


நீதியினிமித்தமாக நாம் துன்பப்படும்போது பாக்கியவான்களாக இருப்போம். வேதனைகளையும் பாடுகளையும் நாம் சகித்துக் கொள்ளவேண்டும்.  பிசாசைச் சகித்துக்கொள்ளக்கூடாது. பிசாசுக்கு எதிர்த்து நிற்கவேண்டும் என்பதுதான் வேதாகம உபதேசம்.


விசுவாசிகளுக்கு உபத்திரவங்கள் உண்டு. அவர்கள் தங்களுக்கு வரும் பிரச்சனைகளையும், பாடுகளையும் சகித்துக் கொள்ள வேண்டும். அதே வேளையில் தங்கள்மீது யாராவது தவறாகக் குற்றம் சுமத்தும்போதோ, அல்லது தங்களிடத்தில் தவறாக நடந்து கொள்ளும்போதோ அவர்களிடத்தில் நியாயம் கேட்பது தவறு இல்லை. இவ்வாறு செய்வது, மத் 5:39 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கிற பிரமாணத்தை மீறும் செயல் ஆகாது.



Post a Comment

0 Comments