பாடுகளின் வாரம் வியாழக்கிழமை நிகழ்வு- 6

 

பாடுகளின் வாரம்

வியாழக்கிழமை நிகழ்வு- 6 

யூதாஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறான். போர்ச்சேவகர் இயேசுவைப்பிடித்து கட்டி இழுத்துக்கொண்டு போகிறார்கள் 

(மத்தேயு 26:47-56 ; மாற்கு 14:43-52 ; லூக்கா 22:47-53 ; யோவான் 18:2-12)


இனி நித்திரைபண்ணுங்கள்


பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரை பண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளை வந்தது.  என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார் 

(மத் 26:45,46).  


மூன்றாம் முறையாக இயேசு  அவர்களிடம் வரும்போதும் அவர்கள் நித்திரையாயிருக்கிறார்கள். விழித்திருக்க வேண்டியவர்கள் நித்திரை செய்கிறார்கள். ஆபத்து அவர்களுக்கு அருகாமையில் வந்துவிடுகிறது. இயேசு அவர்களை தட்டியெழுப்புவதற்குப் பதிலாக ""இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்'' என்று கூறுகிறார். நித்திரையை விரும்புகிறவர்கள் நித்திரை செய்யட்டும் என்று விட்டுவிடுகிறார்.  


ஆவிக்குரிய நித்திரை மிகவும் ஆபத்தானது. பாவத்திற்குரிய தண்டனை ஆவிக்குரிய நித்திரைக்கும் கிடைக்கும். பல சமயங்களில் ஆவிக்குரிய ரீதியாக விழித்திராமல்  நித்திரை செய்கிறவர்களை கர்த்தர் தண்டித்திருக்கிறார். அவர்கள்மீது தமது நியாயத்தீர்ப்பை தாமதமில்லாமல் கொடுத்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் நல்ல ஆலோசனையின் சத்தத்தைக்கேட்டு நாம் விழித்திராவிட்டால், பட்டயத்தின் சத்தத்தைக்கேட்டு நாம் விழித்திருக்க வேண்டியதுவரும். 


தேவனுடைய ஆலோசனையை கேட்டு விழித்திராதவர்கள், பட்டயத்தின் சத்தத்தைக் கேட்டாவது விழித்திருக்க வேண்டும். ஆபத்தில் சிக்கிவிடாதவாறு எப்படியாவது விழித்திருக்க முயற்சி பண்ணவேண்டும். 


தம்முடைய சத்துருக்கள் நெருங்கி வருவதை இயேசு தமது சீஷர்களிடம் கூறுகிறார்.  ""இதோ மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளை வந்தது'' என்று அறிவிக்கிறார். தம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் இதோ வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்று கூறுகிறார். பாடுகளை அனுபவிப்பது இயேசுகிறிஸ்துவுக்கு  புதுமையல்ல. தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனும், பிடிக்கிறவர்களும் தமக்கு அருகில் வரும்போது  இயேசு ஆச்சரியப்படவில்லை. தமது ஆபத்தை எதிர்பார்த்து அதை சந்திப்பதற்கு ஆயத்தமாக காத்துக்கொண்டிருக்கிறார். 


எழுந்திருங்கள் போவோம் என்று இயேசு கூறும்போது, தப்பித்து ஓடிப்போவோம் என்னும் பொருளில் கூறவில்லை. பாடுகளை சந்திப்பதற்காக போவோம் என்று தமது சீஷர்களை அழைக்கிறார். சோதனைகள் வரும்போது அதை தாங்கிக்கொள்வதற்கு சீஷர்கள் ஆண்டவரிடம் கிருபை பெற்றிருக்கவேண்டும். தேவனுடைய கிருபையை  ஜெபத்தினால் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் சீஷர்களோ  இதுவரையிலும் ஜெபம்பண்ணாமல் நித்திரை பண்ணினார்கள். தேவனுடைய கிருபையை இழந்துபோனார்கள். ஆயத்தமில்லாமல் ஆபத்தை சந்திக்கப்போகிறார்கள். ஆபத்து அவர்களுக்கு அருகாமையில் வந்தபோது அவர்கள் மிகுந்த அதிர்ச்சியடைகிறார்கள். 


இயேசுவைப் பிடிக்கிறார்கள்


யூதாஸ்


அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள் (மத் 26:47). 


இயேசுகிறிஸ்து கெத்செமனே தோட்டத்தில் துக்கமடைகிறார். வியாகுலப்படுகிறார். தமது சீஷர்களோடு பேசுகிறார். அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே காவல் சேவர்கள்  இயேசுவை பிடிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவுக்கு பாடுகளுக்கு மேல் பாடுகள் வந்துகொண்டேயிருக்கிறது. சிறிதும் ஓய்வில்லாமல் அவர் ஒவ்வொரு வேதனையாக அனுபவிக்கிறார்.


இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் பன்னிருவரில் ஒருவராகிய யூதாஸ்காரியோத்து  இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுக்க வருகிறான். இயேசுவைப் பிடிக்கிறவர்களுக்கு யூதாஸ் வழிகாட்டுகிறான் 

(அப் 1:16). யூதாசின் உதவியில்லாமல் இயேசுகிறிஸ்து தனிமையாக இருப்பதை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியாது. யூதாசோடுகூட திரளான ஜனங்களும் வருகிறார்கள். இயேசுகிறிஸ்து இவர்களை பாவிகள் என்று அழைக்கிறார். புறஜாதியார்கள் பாவிகள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களில் அநேகர் சேவகர்கள்.


யூதாசோடுகூட பிரதான ஆசாரியரும் அவனுடைய அதிகாரிகளும் வருகிறார்கள். இவர்களெல்லாம் யூதர்கள். இவர்கள் யூதராகவும் புறஜாதியாராகவும் பிரிந்திருக்கிறார்கள். ஆயினும் இயேசுவைப் பிடிக்கும் விஷயத்தில் பிரிவினை இல்லாமல் ஒன்று சேர்ந்து வருகிறார்கள். 


இயேசுவைப் பிடிக்க வருகிறவர்களின் கைகளில் பட்டயங்களும் தடிகளும் இருக்கிறது.  இவர்கள் போர்ச்சேவகர்களல்ல. கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் சாதாரண ஜனக்கூட்டத்தார். பணம் கொடுத்தால் இவர்கள் எங்கு வேண்டுமானாலும் கூடிவருவார்கள். மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளை வந்திருக்கிறது.  இயேசுவைப் பிடிப்பதற்கு திரளான ஜனங்கள்  கூடிவரவேண்டும் என்னும் அவசியமில்லை. ஒரு சிலராக வந்தாலும், எந்தவித பலாத்காரத்தையும் பயன்படுத்தாமல் இயேசுவை எளிதாக பிடிக்கலாம்.


கசாப்பு கடைக்காரன் ஒரு ஆட்டைப்பிடிப்பதற்கு மிகப்பெரிய பட்டாளத்தை  கூட்டிக்கொண்டு போகமாட்டான். தனியாக சென்று பிடித்துக்கொண்டு வருவான். அதுபோலவே இயேசுகிறிஸ்துவையும் எளிதாக பிடிக்கலாம். என்றாலும் தேவஆட்டுக்குட்டியாகிய  இயேசுகிறிஸ்துவை பிடிப்பதற்கு பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் திரளான ஜனங்களை அனுப்புகிறார்கள்.


 எருசலேமிலுள்ள ஆலோசனைச்சங்கத்தார்  இயேசுவைப் பிடிக்கவேண்டுமென்று தீர்மானம் பண்ணுகிறார்கள். இதற்காக அவர்கள் திரளான ஜனத்தை கூட்டிச்சேர்த்து, அவர்களுடைய கைகளில் பட்டயங்களையும் தடிகளையும் கொடுத்து இயேசுவைப் பிடிக்க அனுப்புகிறார்கள்.  


ரோமப்பேரரசின் அதிபதியாகிய பிலாத்து  இயேசுவைப் பிடிப்பதற்கு கட்டளை கொடுக்கவில்லை. யூதமார்க்கத்துத் தலைவர்களே தங்களுடைய மார்க்கத்தின் பெயரால் இயேசுவைப் பிடிக்க கட்டளை கொடுத்திருக்கிறார்கள். உலகப்பிரகாரமான ஜனங்களைவிட, மார்க்கப்பிரகாரமான ஜனங்களே இயேசுவுக்கு சத்துருக்களாக இருக்கிறார்கள். யூதஜனங்களும் பிரதான ஆசாரியரும் இயேசுவை பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்                (யோவா 18:35).  


காட்டிக்கொடுக்கிறவன் 


அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்-யிருந்தான். உடனே, அவர் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்-, அவரை முத்தஞ்செய்தான் 

(மத் 26:48,49).


யூதாஸ்காரியோத்து இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுக்கிறான். தன்னுடைய பாவமான வேலையை பக்குவமாக செய்கிறான். இயேசுவுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக  அவருக்கு தீமை செய்கிறான். முத்தம் கொடுப்பது நேசத்திற்கும் அன்புக்கும் அடையாளம். ஆனால் அந்த முத்தத்தையே துரோகம்பண்ணுவதற்கு பயன்படுத்துகிறான். 


இயேசுகிறிஸ்துவை பிடிக்க வருகிறவர்களுக்கு யூதாஸ்காரியோத்து ஏற்கெனவே ஒரு அடையாளத்தை சொல்லியிருக்கிறான். ஏனெனில் இரவுவேளையில் அவர்கள் இயேசுவைப் பிடிப்பதற்குப் பதிலாக சீஷர்களில் வேறு யாரையாவது பிடித்துக்விடக்கூடாது. யூதாஸ்காரியோத்து யாரை முத்தம் செய்கிறானோ அவர்தான் இயேசு என்று ஏற்கெனவே அடையாளம் சொல்லியிருக்கிறான்.  


யூதாஸ் யாரை முத்தம் செய்கிறானோ அவரை சேவகர்கள் பிடித்துக்கொள்ளவேண்டும். இதற்கு முன்பு பல சமயங்களில் இயேசுகிறிஸ்துவை பிடிப்பதற்கு யூதமார்க்கத்துத் தலைவர்கள் முயற்சிபண்ணினார்கள். ஆனால் அவர்கள் முயற்சி வீணாயிற்று. அவர்களால் இயேசுவைப் பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை தம்மை பிடிக்க வரும்போதும், இயேசு அவர்கள் மத்தியிலிருந்து கடந்து போய்விடுகிறார்

 (லூக் 4:30). அதுபோல இப்போதும் இயேசு தப்பித்துப்போய்விடக்கூடாது என்பதில் யூதாஸ் மிகவும் கவனமாக இருக்கிறான். 


தன்னுடைய முத்தத்தின் மூலமாக யூதாஸ்காரியோத்து இயேசுகிறிஸ்துவை மற்றவர்களிடமிருந்து வேறுபிரிக்கிறான், காட்டிக்கொடுக்கிறான், அவரை கைது பண்ணுவதற்கு காரணமாக இருக்கிறான். திரளான ஜனங்கள் யூதாசிற்கு  பின்பாக வருகிறார்கள். அவர்கள் கிட்டவந்து இயேசுவின்மேல் கைபோட்டு அவரை பிடிக்கிறார்கள். 


யூதாஸ்காரியோத்து இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுக்கும்போது அவருக்கு அருகாமையில் வருகிறான். அவன் அவருடைய முகத்தை நேருக்கு நேராக பார்க்கிறான். இயேசுகிறிஸ்துவின் கள்ளம் கபடமில்லாத முகத்தை பார்க்கும்போது யூதாஸ் மனந்திரும்பியிருக்கவேண்டும். ஆனால் அவன் பிசாசுக்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டதினால் அவனுடைய இருதயம் கடினமாயிற்று. இயேசுகிறிஸ்துவுக்கு அருகாமையில் வந்தபோதிலும், அவர்மீது அன்புகூராமல், அவரை காட்டிக்கொடுத்து வஞ்சிக்கிறான். 


யூதாசைப்போலவே பேதுருவும் இயேசுவை மறுதலித்தான். ஆனால் இயேசு பேதுருவை நோக்கிப்பார்த்தபோது, அவன் தான் செய்த தவற்றை உணர்ந்து மனக்கசந்து அழுகிறான்.  இயேசுவின் பார்வைக்கு வல்லமையுள்ளது. ஆனால் இந்த யூதாசோ இயேசுவை  முகமுகமாக பார்த்தபோதிலும் அவரை காட்டிக்கொடுத்துவிடுகிறான்.


யூதாஸ் இயேசுவினிடத்தில் வந்து        ""ரபீ வாழ்க'' என்று சொல்லி அவரை முத்தம் செய்கிறான். முத்தம் கொடுப்பது நட்புக்கும் நேசத்திற்கும் அடையாளம். அன்பின் பிரமாணத்தை யூதாஸ் மீறிவிடுகிறான். அன்பின் புனிதமான அடையாளத்தை தனது சுயநலத்திற்காக பயன்படுத்தி, அதை   மாசுபடுத்துகிறான்.


யூதாஸ்காரியோத்து  இயேசுகிறிஸ்துவை முத்தஞ்செய்தான். துரோகச்செயலுக்கு ""யூதாவின் முத்தம்''   என்றொரு வழக்குச்சொல் உள்ளது. இயேசு கிறிஸ்துவின் கூடவே இருந்தவன் அவரையே காட்டிக்கொடுக்கிறான். நிற்கிறேன் என்று நினைக்கிற விசுவாசிகளுக்கு யூதாவின் செயல் ஓர் எச்சரிப்பு.  


சிநேகிதனே


இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவின்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள் (மத் 26:50).


தம்மை முத்தம் செய்த யூதாஸ்காரியோத்தை இயேசு நோக்கிப்பார்க்கிறார். அவனை ""சிநேகிதனே'' என்று அன்போடு அழைக்கிறார். தம்மை காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்தின் துரோகச் செயலை மன்னித்துவிட்டு  இயேசு அவன்மீது அன்புகூருகிறார். யூதாஸ்காரியோத்தின் மூலமாக இயேசுவின் பாடுகள் அதிகரிக்கிறது. தம்மை உபத்திரவப்படுத்தும் யூதாசை சிநேகிதனே என்று அழைக்கிறார். ஆனால் தமக்கு பாடுகள் வருவதை தடைசெய்ய முயன்ற பேதுருவையோ  ""பிசாசே'' என்று கூறி கடிந்துகொள்கிறார். 


இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்க வேண்டுமென்பது பிதாவின் சித்தம். இந்த சித்தம் நிறைவேற யூதாஸ் உதவியாக இருக்கிறான். ஆகையினால் அவன் இயேசுவுக்கு சிநேகிதன். இயேசு பாடுகளை அனுபவிப்பதை பேதுரு விரும்பவில்லை. ஆகையினால் அவன் இயேசுவுக்கு சத்துருவாகிறான்.


இயேசு யூதாஸ்காரியோத்தைப் பார்த்து ""என்னத்திற்காக வந்திருக்கிறாய்'' என்று கேட்கிறார். அவன் சமாதானத்தோடு வந்திருக்கிறானா அல்லது வஞ்சக எண்ணத்தோடு வந்திருக்கிறானா என்பது இயேசுவுக்கு நன்றாக தெரியும். அவன் சத்துருவாக வந்திருப்பதினால் அவன் கொடுத்த முத்தத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விடுகிறது.  அவன் சிநேகிதனாக வந்திருந்தால் அவனோடு கூட வருகிற திரளான ஜனங்கள் தங்கள் கைகளில் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு வரவேண்டியதில்லை. யூதாஸ்காரியோத்து மிகவும் முரண்பாடாக நடந்துகொள்கிறான். ஆகையினால் இயேசு அவனைப்பார்த்து ""என்னத்திற்காக வந்திருக்கிறாய்'' என்று கேட்கிறார். 


இயேசு யூதாசிடம் பேசிக்கொண்டிருக்கையில் யூதமார்க்கத்தின் அதிகாரிகளும், காவல் சேவகர்களும் கிட்ட வந்து இயேசுவின்மேல் கைபோட்டு அவரை பிடிக்கிறார்கள். இயேசுவை தங்களுடைய காவலுக்கு  உட்படுத்துகிறார்கள். இயேசு அவர்களுடைய கைதியாகிறார். திரளான ஜனங்கள் இயேசுவின்மீது கோபமாக கைபோடும்போது அவருக்கு வேதனையாக இருக்கும். அதை தாங்கிக்கொள்வது கடினமாக இருக்கும். அந்த வேதனையை இயேசு நமக்காக சகித்துக்கொள்கிறார். கைது பண்ணும்போதே அவர்மீது கைபோடுகிறவர்கள், கைதுபண்ணியபின்பு அவரை கொடூரமாக துன்புறுத்துவது அதிக நிச்சயம். 


இதற்கு முன்பு பல சமயம் இயேசுவின்மீது கைபோட்டு பிடிக்க  முயற்சி பண்ணினார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சி அனைத்தும் தோல்வியுற்றது. அவர்களால் இயேசுவைப் பிடிக்க முடியவில்லை. இப்போதோ திரளான ஜனங்கள் இயேசுவை சூழ்ந்துகொண்டு அவர்மீது கைப்போட்டு பிடிக்கிறார்கள். தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் இயேசுகிறிஸ்து ஒப்புக்கொடுக்கப்படுகிறார். பிதாவினால் ஒப்புக்கொடுக்கப்பட்ட இயேசுவைத்தான் இவர்கள் பிடித்து,  அக்கிரமக்காரர்களுடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்து கொலைசெய்கிறார்கள் (அப் 2:23).


இயேசுகிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக தண்டிக்கப்படுகிறார். நம்மை பாவத்திலிருந்து விடுவிப்பதற்காக அவர் சிறைப்படுகிறார். இயேசுகிறிஸ்துவை பிடிக்கும்போது அங்கு சீஷர்களும் இருக்கிறார்கள். தம்மை தேடுகிறதுண்டானால்  இவர்களைப் போகவிடுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்காக, சத்துருக்களிடம், பரிந்து பேசுகிறார் (யோவா 18:8).   இயேசு ஒருவனை விடுவிக்கும்போது அவன் மெய்யாகவே விடுதலையாகிறான். 


இயேசு  யூதாசை அன்போடு  சிநேகிதனே என்று அழைக்கிறார். அவனுடைய துரோகச்செயல் தெரிந்தும், அவன்மீது அன்பாக இருக்கிறார். சிநேகிதன் என்னும் சொல் இந்த வசனத்திலும், மேலும் சில வசனங்களில் மட்டுமே வருகிறது.

 (மத் 11:16;  மத் 20:13;  மத் 22:12) இயேசு கிறிஸ்து யூதாசை ஒதுக்கித் தள்ளிவிடவில்லை. அவன் நான்றுகொண்டு சாகாமல் இயேசு கிறிஸ்துவிடம் வந்து தன்னை மன்னித்து விடுமாறு விண்ணப்பம் பண்ணியிருந்தால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நிச்சயமாகவே அவனை மன்னித்திருப்பார். அவர் இரக்கத்தில் ஐசுவரியவான். பேதுருவும், மற்றவர்களும் தவறுகளைச் செய்து விட்டு, இயேசுவிடம் திரும்பி வந்து, மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளவில்லையா.

 (சங் 41:9; சங் 55:12-14)


காதறவெட்டுகிறான்


 அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்    (மத் 26:51). 


இயேசுவோடு இருந்தவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை காதறவெட்டுகிறான். சீஷர்களிடம் மொத்தம் இரண்டு பட்டயங்கள் உள்ளன (லூக் 22:38).  அவற்றில் ஒன்று பேதுருவிடம் உள்ளது. பட்டயத்தை உருவுவதற்கு இது ஏற்ற தருணம் என்று பேதுரு நினைத்து, அதை உருவி வேலைக்காரனை காதறவெட்டிப்போடுகிறான். அவனுடைய காதை வெட்டவேண்டுமென்பது  பேதுருவின் இலக்காக இருந்திருக்காது. அவனுடைய தலையை வெட்டவேண்டுமென்று  குறிபார்த்திருப்பான். அந்த குறி தவறி அவனுடைய காதை வெட்டும்படி ஆயிற்று. 


தன் ஆண்டவருக்காக பேதுரு அநேக காரியங்களை செய்ய ஆயத்தமாகயிருக்கிறான்.  இயேசுவோடுகூட மரிக்கவும் அவன் ஆயத்தமாக இருக்கிறான். தன்னுடைய ஆண்டவருக்கு ஆபத்துவரும்போது, தன்னுடைய பாதுகாப்பைப்பற்றி கவலைப்படாமல்  தைரியமாக செயல்படுகிறான். இயேசுகிறிஸ்துவின்மீது பேதுரு பக்தி வைராக்கியமாக இருக்கிறான். அவருடைய மகிமையிலும், மேன்மையிலும், பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறையோடு இருக்கிறான். பேதுரு உற்சாகமாக இருந்தாலும்  இந்த விஷயத்தில் அவன் ஞானத்தோடு செயல்படவில்லை. இயேசுகிறிஸ்துவின் அனுமதியில்லாமலேயே வேலைக்காரனுடைய காதை வெட்டிப்போடுகிறான்.


பட்டயத்தை உருவுவது கிறிஸ்துவின் சித்தமல்ல. நாம் பட்டயத்தை உருவுவதற்கு முன்பாக பலமுறை யோசிக்கவேண்டும். பட்டயத்தை எடுக்கிறவன் பட்டயத்தால் அழிந்துபோவான். இயேசுவைப் பிடிக்க திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கிறார்கள்.  சீஷர்களிடமோ இரண்டு பட்டயம் மாத்திரமே இருக்கிறது. இரண்டு பட்டயத்தைக்கொண்டு திரளான ஜனங்களோடு யுத்தம்பண்ணுவது இயலாத காரியம். 


உறையிலேபோடு


அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள் (மத் 26:52).


பேதுருவின் செய்கையை இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கவில்லை. அவனை கடிந்துகொள்கிறார். ""உன் பட்டயத்தை திரும்ப அதன் உறையிலே போடு'' என்று கூறுகிறார். பேதுருவின் செய்கைக்காக இயேசு அவனை பாராட்டவில்லை. அவன் நல்லமனதோடு இந்தக் காரியத்தை செய்தாலும் இது கிறிஸ்துவின் சித்தமல்ல. தம்முடைய ராஜ்யத்தை பட்டயத்தினால் ஸ்தாபிக்கவேண்டுமென்பது இயேசுவின் நோக்கமல்ல. இந்த உலகத்திற்கு  சமாதானத்தை கொடுப்பதற்காகவே இயேசுகிறிஸ்து வந்திருக்கிறார். அவர் யுத்தம்பண்ணுவதற்கு வந்தவரல்ல. அவருடைய நாமம் சமாதான பிரபு என்பதாகும்.


புறஜாதியாருடைய அதிகாரிகள் ஜனங்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள். பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் இறுமாப்பாய் ஆளுகை செய்யக்கூடாது. அவர்களில் எவனாகிலும் பெரியவனாக இருக்க விரும்பினால் அவன் மற்றவர்களுக்கு பணிவிடைக்காரனாயிருக்கவேண்டும் என்பதே இயேசுகிறிஸ்துவின் உபதேசம் (மத் 20:25,26).  பட்டயத்தை திரும்ப அதன் உறையிலே போடுமாறு இயேசு பேதுருவிடம் கூறுகிறார்.  அதன்பின்பு பேதுரு தன் பட்டயத்தை உருவவேயில்லை.  


பட்டயத்தை எடுப்பதினால் ஆபத்து உண்டாகும். பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள். பலாத்காரத்தை கையாளுகிறவர்கள் பலாத்காரத்தினால் அழிந்துபோவார்கள். மற்றவருடைய இரத்தத்தை சிந்தி மனுஷன் அமைதி இழந்துபோகிறான். தன்னுடைய சத்துருக்களின் எண்ணிக்கைகளை அதிகரிக்கிறான். சுயபாதுகாப்பாக இருந்தாலும்  மற்றவர்களுடைய இரத்தத்தை சிந்துவது சரியான முறையல்ல. 


பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பிய திரளான ஜனங்கள் பட்டயங்களையும்  தடிகளையும் பிடித்துக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் தங்கள் பட்டயங்களையும் தடிகளையும் நம்புகிறார்கள். பட்டயத்தை எடுக்கிறவர்கள் பட்யத்தால் மடிந்துபோவார்கள். இயேசுகிறிஸ்துவை அழிப்பதற்கு யூதர்கள் ரோமப்பேரரசின் பட்டயத்தை எடுத்தார்கள். முடிவில் ரோமப்பேரரசின் பட்டயமே யூதர்களை அழித்துப்போட்டது. யூதருடைய தேசத்தையும், யூததேசத்தாரையும், யூதருடைய தேவாலயத்தையும் ரோமப்பேரரசின் பட்டயம் அழித்துப்போட்டதாக வரலாறு கூறுகிறது. 


பிதாவை வேண்டிக்கொண்டால்


 நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? (மத் 26:53).


இயேசுகிறிஸ்துவை பாதுகாக்க வேண்டும் என்னும் அவசியம் பேதுருவுக்கு இல்லை.  இயேசு பேதுருவின் பாதுகாப்பில் இந்த பூமியில் ஊழியம் செய்யவில்லை. இயேசு தமது பிதாவை வேண்டிக்கொண்டால் அவர் பரலோகத்திலிருந்து ஏராளமான தூதரை அவருக்கு அனுப்பி தருவார். இயேசு தாமாகவே இந்த பாடுகளை தம்மீது ஏற்றுக்கொள்கிறார்.  பேதுருவினுடைய பட்டயத்தின் உதவியில்லாமலேயே இயேசுகிறிஸ்துவால் தமது சித்தத்தை நிறைவேற்ற முடியும். 


தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு  அவருக்கு நாமோ அல்லது நமது ஊழியமோ தேவையில்லை. நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்பதற்காகவே தேவன் நமக்கு ஊழியம் செய்கிறார்.  தம்முடைய ஊழியத்தை நம்முடைய உதவியில்லாமலேயே தேவனால்     செய்யமுடியும்.  இயேசுகிறிஸ்து சிலுவையில் அறைப்பட்டபோதிலும், சிலுவையில் அறையப்படுவதற்கு அவர் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்திருக்கிறார். சிலுவையில் அறைந்தாலும் இயேசுவை எந்த மனுஷனாலும் கொல்ல முடியாது. அவர் தாமே சிலுவையில் தமது ஜீவனை ஒப்புக்கொடுத்தார். இனிமேல் ஜீவிக்க முடியாது என்று இயேசு மரித்துப்போகவில்லை. நமக்காக அவர் மரிப்பதற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். 


இயேசுகிறிஸ்து பிதாவை வேண்டிக்கொண்டால் அவர் தமது குமாரனுக்கு உதவிபுரிவார். தேவனுடைய பிள்ளைகளுக்கு  இது ஆறுதலான சத்தியம். நம்மை சுற்றிலும் சத்துருக்கள் சூழ்ந்திருக்கும்போது, நமக்கு உதவிபுரியுமாறு நமது பிதாவை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும். நமது உதவிக்காக பட்டயங்களை நோக்கிப் பார்க்கக்கூடாது. மனுஷர்களை நோக்கிப் பார்க்கக்கூடாது. பரலோகத்திலிருக்கும் தேவனையை நோக்கிப்பார்க்கவேண்டும். 


சத்துருக்கள் நம்மை எல்லா திசையிலும்  சுற்றி சூழ்ந்துகொண்டாலும், பரலோகத்தின் வாசலை அவர்களால் அடைக்க முடியாது. பரலோகத்தின் பாதை நமக்கு எப்போதுமே திறந்திருக்கும். தேவனுடைய சித்தமில்லாமல் நம்முடைய சத்துருக்களால் நமக்கு ஒரு தீங்கும் செய்யமுடியாது. நமக்கு யாரும் உதவி செய்யாத சூழ்நிலையில்கூட, நாம் தேவனிடம் விண்ணப்பம்பண்ணி அவருடைய உதவியை பெற்றுக்கொள்ள முடியும். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. 


நாம் எல்லா வேளைகளிலும் விழித்திருந்து ஜெபிக்கிறவர்களாக இருந்தால், நமது சோதனை வேளைகளில் நம்மால் எளிதாக ஜெபிக்க முடியும். பாடுகளின் மத்தியில் நாம் தேவனை நோக்கி ஜெபிக்கும்போது பரலோகத்தின் அமைதி நமக்கு கொடுக்கப்படும். 


பரலோகத்தில் ஏராளமான தேவதூதர்கள் இருக்கிறார்கள். நாம் பரலோகத்திற்கு போகும்போது அங்கு ஆயிரம் பதினாயிரமான  தேவதூதர்கள் இருப்பார்கள் (எபி 12:22). பரலோகத்திலுள்ள தூதர்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு அவருடைய வசனத்தின்படி செயல்படுகிறார்கள். அவர்கள் கர்த்தருக்கு பிரியமானதை செய்து அவருடைய  பணிவிடைக்காரராயிருக்கிறார்கள் (சங் 103:20,21). 


கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்கும்போது, அவருக்கு உதவி தேவைப்பட்டால், ஆயிரமாயிரம் தேவதூதர்கள் வந்து அவருக்கு பணிவிடை செய்வார்கள். பிதாவாகிய தேவன் ஏராளமான தேவதூதரை  இயேசுகிறிஸ்துவினிடத்தில் அனுப்பி வைப்பார்.  நமக்கு உதவிபுரியும் தேவதூதர்களை நாம் ஆராதிக்கக்கூடாது. தூதர்களுக்கும் ஆண்டவராக இருக்கும் தேவனையே நாம் ஆராதிக்கவேண்டும். தூதர்களும் கர்த்தரை ஆராதிக்கிறார்கள். குமாரனுடைய விண்ணப்பத்திற்கு பிதாவானவர் எப்போதும் செவிகொடுத்துக் கொண்டிருக்கிறார். 


இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் 


அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார் (மத் 26:54).


தம்மை பாதுக்காத்துக்கொள்ள வேண்டுமென்று இயேசுகிறிஸ்து எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தம்மை பிடிக்க வருகிறவர்களிடம் தம்மையே ஒப்புக்கொடுக்கிறார். இவ்விதமாய் சம்பவிக்கவேண்டுமென்று வேதவாக்கியத்தில்  ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது. வேதவாக்கியம் நிறைவேறும் விதமாக ஒவ்வொரு காரியமும் சம்பவிக்கிறது. அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை, அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும்,  அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார் என்று ஏசாயா இயேசுவைப்பற்றி முன்னறிவித்திருக்கிறார் 

 (ஏசா 53:7).  இந்த வாக்கியத்தின் பிரகாரமாக அவர் தம்மையே ஒப்புக்கொடுக்கிறார். 


நம்முடைய வாழ்க்கையில் நமக்கு துன்பமான வேளைகள் வரும்போது தேவனுடைய வார்த்தையே நமக்கு ஆறுதல் தரும். நாம் எடுக்கவேண்டிய இறுதித் தீர்மானத்தை கர்த்தருடைய வார்த்தையே முடிவுபண்ணவேண்டும். எந்தக் காரியம் நடைபெற்றாலும் அது வேதவாக்கியத்தின்படியே நடைபெறும். நம்முடைய சுயசித்தத்தின்படி நாம் நடந்துகொள்ளாமல், தேவனுடைய சித்தம் என்ன என்பதை வேதவாக்கியத்தின் பிரகாரம்  அறிந்துகொண்டு, அதற்கு நம்மை ஒப்புக்கொடுத்து ஜீவிக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் ஜீவியத்தில் சம்பவிக்கும் ஒவ்வொரு காரியமும் வேதவாக்கியத்தில் ஏற்கெனவே முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. வேதவாக்கியங்கள் நிறைவேறுவதற்கு இயேசுகிறிஸ்து தம்மையே ஒப்புக்கொடுக்கிறார். 


லேகியோன் என்றால் 6000 பேர். பன்னிரெண்டு லேகியோன் என்பது 72,000 தூதரைக் குறிக்கும். ஏசாயா 37:36-இல் நாம் வாசிக்கிற பிரகாரம் ஒரு தூதன் ஒரே இரவில் 185,000 பேரைச் சங்காரம்பண்ணக்கூடியவன்


கள்ளனைப்பிடிக்க


அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறது போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே (மத் 26:55). 


இயேசுவை பிடிப்பதற்கு திரளான ஜனங்கள் கூடிவருகிறார்கள். தம்மை பிடிப்பதை இயேசு கிறிஸ்து தடைபண்ணவில்லை. தப்பித்து ஓடவுமில்லை. ஆயினும் இயேசு  தமது கருத்தை அவர்களோடு பகிர்ந்து கூறுகிறார். விசுவாசிகளாகிய நமக்கும் பாடுகள் வரும்போது, நமது கருத்துக்களை பொறுமையோடு பக்குவமாக எடுத்துக்கூறவேண்டும். பதட்டம் அடையக்கூடாது. நம்முடைய சத்துருக்களாக இருந்தாலும் அவர்களிடமும் நமது நியாயத்தை எடுத்துரைக்கவேண்டும்.


இயேசு கிறிஸ்துவை பிடிக்கவரும்போது ஜனங்கள் ஒரு கள்ளனைப்பிடிக்க புறப்படுகிறதுபோல பிடிக்கவருகிறார்கள். இயேசு கிறிஸ்து ஜனங்களுக்கு விரோதியல்ல. ஜனங்களுடைய பாதுகாப்புக்கு பங்கம்விளைவிக்கிறவரும் அல்ல. ஆயினும் ஜனங்கள் அவரை ஒரு திருடனைப்போல பிடிக்கவருகிறார்கள். இப்படிப்பட்ட பாடுகளை அனுபவிப்பதற்கு அவர் ஒரு பாவியும் அல்ல.  சமுதாயத்தில் இயேசு கிறிஸ்து ஒரு கொள்ளைநோயுமல்ல. 


திரளான ஜனங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு இயேசுவை பிடிக்கவருகிறார்கள். ஒரு திருடனைப்பிடிக்க வருகிறதுபோல இயேசுவை பிடிக்க ஆவேசமாக வருகிறார்கள். ஆனால் இந்த ஜனங்களோ நீதிக்கும் நேர்மைக்கும் கீழ்ப்படியாதவர்கள். தங்களுடைய பாவத்தில் முரட்டாட்டமாக ஜீவிக்கிறவர்கள். இயேசுவை பிடிக்கவருகிற இவர்களே திருடர்களைப்போல இருக்கிறார்கள். 


இயேசுகிறிஸ்து ஜனங்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்துகொள்ளவில்லை. தினந்தோறும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தார். அப்போது அவர்கள் அவரைப்பிடிக்கவில்லை. இப்போது ஜனங்கள் மத்தியில் பெரிய மாற்றம் உண்டாயிருக்கிறது. இயேசுவின் உபதேசத்தைக்கேட்ட ஜனங்கள், இப்போது அவரை ஒரு திருடனைப்போல பிடிப்பதற்கு கூடிவந்திருக்கிறார்கள். இயேசு ஒருபோதும் தம்மை ஒரு திருடனைப்போல காண்பித்துக்கொள்ளவில்லை. தேவாலயத்தில் உபதேசம்பண்ணும் ஒரு போதகராகவே இயேசு தம்மை இதுவரையிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.  இயேசுவின் வாயிலிருந்து கிருபை உள்ள வார்த்தைகளே புறப்பட்டுவரும்.  திருடனுடைய வார்த்தைகளோ, பிசாசின் வார்த்தைகளோ இயேசுவின் வாயிலிருந்து ஒருபோதும் புறப்பட்டு வந்ததில்லை. 


இயேசு கிறிஸ்து ஒரு திருடனைப்போல நீதிக்கும், நியாயத்திற்கும், சட்டத்திற்கும் பயந்து ஒருபோதும் ஓடி ஒழிந்துகொள்ளவில்லை.  அவர் தலைமறைவாக பயந்து ஜீவிக்கவுமில்லை. ஆனால் இந்த ஜனங்களோ  ஒரு கள்ளனைப்பிடிக்க இரவு வேளையில் புறப்பட்டு வருகிறதைப்போல, இயேசுவைப்பிடிக்க பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். 


இந்த ஜனங்கள் தினந்தோறும் பகல்வேளையில் இயேசுவை தேவாலயத்தில் பார்த்திருக்கிறார்கள். அவருடைய உபதேசத்தை அவருக்கு அருகில் அமர்ந்து கேட்டிருக்கிறார்கள். அவர் செய்த நன்மைகளைப்பார்த்து சந்தோஷமடைந்திருக்கிறார்கள். பிரதான ஆசாரியனே தேவாலயத்திற்கு பிரதான அதிகாரி. அவனும் இயேசுவை தேவாலயத்தில் தினந்தோறும் பார்த்திருப்பான். இப்போது இயேசு கிறிஸ்து கெத்சமெனே தோட்டத்தில் தனியாக ஜெபித்துக்கொண்டிருக்கிறார். தேவாலயத்தில் இயேசுவை பிடிக்காமல், கெத்சமெனே தோட்டத்தில் இயேசு தனியாக இருக்கும்போது அவரைப்பிடிப்பது பிரதான ஆசாரியனின் கோழைத்தனமாகும். 


இயேசு கிறிஸ்துவின் முகத்தை நேரடியாக பார்ப்பதற்கு பிரதான ஆசாரியனுக்கு துணிவில்லை. இஸ்ரவேல் ஜனத்தாரால் போற்றப்படுகிற இயேசு கிறிஸ்துவை ஒரு கள்ளனைப்போல இரவு வேளையில் பிடிப்பதற்கு பிரதான ஆசாரியரும், ஜனத்தின் மூப்பரும் திரளான ஜனங்களை அனுப்புகிறார்கள்.


வசனங்கள் நிறைவேறும்படி


ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள் 

(மத் 26:56).


தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்று இயேசு கிறிஸ்து தம்மை பிடிப்பதற்கு கூடிவந்திருக்கும் ஜனங்களிடம் கூறுகிறார். வேத பண்டிதர்கள் இந்த வாக்கியத்திற்கு வியாக்கியானம் கூறும்போது, இயேசு கிறிஸ்து இந்த வார்த்தைகளை மெய்யாகவே கூறினாரா என்பதை உறுதியாக கூறமுடியவில்லை என்று கூறுகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை எழுதிய பரிசுத்தவான்களே இந்த வாக்கியத்தை எழுதியிருக்கவேண்டும் என்பது வேத பண்டிதர்களின் வியாக்கியானமாகும். 


இயேசு கிறிஸ்து பாடுகளின் நடுவில் இருக்கிறார். உபத்திரவத்தின் மத்தியில் இருக்கிறார். இந்த சமயத்தில் அவருடைய சீஷர்கள் அவருக்கு ஆதரவாக அவரோடு கூட இருந்து உதவிபுரியவேண்டும். ஆனால் அப்போது சீஷர்கள் எல்லோரும் இயேசுவை விட்டுவிட்டு ஓடிப்போகிறார்கள். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள சீஷர்கள் தப்பித்து ஓடுகிறார்கள். 


தங்களுக்குள்ள எல்லாவற்றையும் விட்டு இயேசுவை பின்பற்றிவரும் சீஷர்கள், இப்போது இயேசுவுக்கு ஆபத்து வந்தவுடன் அவரைவிட்டு ஓடிப்போகிறார்கள். ஏன் ஓடிப்போகிறோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை. சீஷர்கள் பாவம் செய்கிறார்கள். இயேசுவுக்கு உண்மையில்லாமல் நடந்துகொள்கிறார்கள். அவர்கள் இயேசுவை மெய்யாகவே நேசிக்கவில்லை. அவர் எங்கு போனாலும் அவரைப்பின்பற்றுவதாக வாக்குப்பண்ணின சீஷர்கள் இப்போது அவரை விட்டு ஓடிப்போகிறார்கள். இயேசு தம்முடைய பிள்ளைகள் யாரையும் ஒருபோதும் கைவிடமாட்டார். நாம் தான் அவரை கைவிட்டுவிட்டு ஓடிப்போய்விடுவோம். 


சீஷர்கள் இயேசுகிறிஸ்துவை விட்டு ஓடிப்போவது அவருக்கு மிகுந்த துன்பமாக இருந்திருக்கும். இதனால் அவருடைய    வேதனை அதிகரித்திருக்கும். சீஷர்கள் இயேசுவோடுகூட இருந்து அவருக்கு ஊழியம் செய்யவேண்டியவர்கள்.  சோதனைக் காலத்திலும் இயேசுவுக்கு சாட்சியாக இருக்கவேண்டியவர்கள்.  ஜனங்களுடைய பாவங்களுக்காக பலியாக இருக்கிறவர் இப்போது தனிமையாக இருக்கிறார். ஆத்துமாக்களின் இரட்சகர் தனிமையாக பாடுகளை அனுபவிக்கிறார். எல்லாருடைய பாவங்களையும் சுமந்து தீர்க்கிற  இயேசு கிறிஸ்து, அதை தாம் ஒருவராகவே சுமந்து தீர்க்கிறார். இயேசுவுக்கு உதவிசெய்ய யாருமே இல்லை. 




Post a Comment

0 Comments