பாடுகளின் வாரம் வியாழக்கிழமை நிகழ்வு-5

 

பாடுகளின் வாரம் 

வியாழக்கிழமை நிகழ்வு-5


ஸ்தோத்திரப்பாட்டு



அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு,           ஒ-வமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்

 (மத் 26:30).


கர்த்தருடைய பந்தியின் முடிவில் இயேசுகிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் ஸ்தோத்திரப்பாட்டைப்பாடுகிறார்கள். ஒரு சங்கீதத்தை பாடுகிறார்கள். கர்த்தருடைய பந்தியில் சங்கீதம்பாடுவது சுவிசேஷத்தின் நியமனமாகும். கர்த்தருடைய பந்தியில் பங்குபெற்ற பின்பு, இயேசுகிறிஸ்துவின் மூலமாக கர்த்தரிடத்தில் நாம் பெற்றுக்கொண்ட சந்தோஷத்திற்காக தேவனை நன்றியோடு துதிக்கவேண்டும். தேவன் நம்மீது வைத்திருக்கும் மிகப்பெரிய அன்பை நாம் அங்கீகரித்து அவரை போற்றிப் புகழவேண்டும்.  


ஒரு சிலர் வியாதியில் இருக்கும்போதும்,  வேதனையில் தவிக்கும்போதும், பாடுகளை அனுபவிக்கும்போதும் மாத்திரமே கர்த்தருடைய பந்தியை ஆசரிக்கிறார்கள். பாடுகளை அனுபவிக்கும் போது மாத்திரமல்ல, நாம் சந்தோஷமாக இருக்கும்போதும் கர்த்தருடைய பந்தியை ஆசரிக்கவேண்டும். ஆவிக்குரிய ஆசீர்வதங்களை பெற்றுக்கொள்வதற்கு நமது சரீரப்பிரகாரமான வேதனைகள் தடையாக இருக்கக்கூடாது. 


ஸ்தோத்திரபாட்டை பாடினபின்பு இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஒலிவமலைக்கு புறப்பட்டுப்போகிறார்கள். அவர்கள் அந்த வீட்டிலேயே தங்கியிருந்தால், காவல் சேவகர்கள் அந்த வீட்டிற்கு வந்து இயேசுவை கைதுபண்ணுவார்கள். இதனால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். தம்மால் பிறருக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று இயேசுகிறிஸ்து விரும்புகிறார். ஆகையினால் பஸ்காவை ஆயத்தம்பண்ணியிருந்த வீட்டைவிட்டு இயேசு தம்முடைய சீஷரோடு ஒலிவமலைக்கு புறப்பட்டுப்போகிறார். 


பஸ்காவை ஆசரிக்கும்காலம் பௌர்ணமி  காலத்தில் வரும். நிலா வெளிச்சம் தெளிவாக இருக்கும். அந்த நிலவின் வெளிச்சத்தில் இயேசுவும் சீஷர்களும் ஒலிவமலைக்கு புறப்பட்டுப்போகிறார்கள். கர்த்தருடைய பந்தியில் பங்குபெற்ற பின்பு நாமும் கிறிஸ்துவைப்போல, தனிமையான இடத்திற்குச் சென்று தேவனோடு  நெருங்கிய ஐக்கியத்தில் இருக்கவேண்டும். அவருடைய வார்த்தையை தியானிக்கவேண்டும்.  ஜெபத்தில் தரித்திருக்கவேண்டும்.


கெத்செமனேயில் இயேசு


கெத்செமனே என்னப்பட்ட இடம்


அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்- (மத் 26:36).


கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு இயேசுகிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் வருகிறார்கள். இந்த தோட்டத்தில் இயேசுகிறிஸ்து துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்குகிறார். கெத்செமனே  என்னும் பெயருக்கு ஒலிவ ஆலை என்று பொருள். ஒலிவ பழங்களின் கொட்டைகளை பிழிந்து இங்கு ஒலிவ எண்ணெயை தயாரிப்பார்கள். இந்த ஒலிவ எண்ணெயைப்போல  இயேசுகிறிஸ்து கெத்செமனே தோட்டத்தில் பிழியப்படுகிறார். நமக்காக அவர் வேதனையடையவும், வியாகுலப்படவும் தொடங்குகிறார்.           ஒலிவ எண்ணெய் பிழியும் இயந்திரத்திலிருந்து எண்ணெய் வழிந்தோடுவதுபோல, இயேசுகிறிஸ்துவிடமிருந்து  புதிய எண்ணெய் பிழியப்படுகிறது. அது  அவரை விசுவாசிக்கிறவர்கள் எல்லோர்மீதும் வழிந்தோடுகிறது. 


கெத்செமனே தோட்டத்திற்கு தம்முடைய சீஷர்களில் யூதாஸ்காரியோத்தைத் தவிர, மற்ற பதினொரு சீஷர்களையும் இயேசுகிறிஸ்து அழைத்துச் செல்கிறார். யூதாஸ்காரியோத்து இந்த வேளையில் பிரதான ஆசாரியனிடம் இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுப்பதைப்பற்றி  பேசிக்கொண்டிருக்கிறான். 


இந்த தோட்டத்தில் இயேசு ஜெபம் பண்ணும்போது தம்மோடு பேதுரு, யாக்கோபு,  யோவான் ஆகிய மூன்று பேரை மாத்திரம் கூட்டிக்கொண்டு போகிறார். இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது.  கெத்செமனே தோட்டத்தில் ஒரு ஓரத்தில் தங்கியிருந்து தம்மோடுகூட விழித்திருக்குமாறு  இயேசுகிறிஸ்து இந்த மூன்று சீஷர்களிடமும் கூறுகிறார். 


தம்மோடு விழித்திருக்குமாறு தம்முடைய சீஷர்களில் மூன்றுபேரை கூறிவிட்டு இயேசு சற்று அப்புறம் போய் முகங்குப்புற விழுந்து ஜெபிக்கிறார். இதன்பின்பு அவர் தம்முடைய சீஷர்களோடும் கூட சேர்ந்து ஜெபிக்கிறார் (யோவா 17:1). 


இயேசுகிறிஸ்துவோடு கூட சென்ற மூன்றுபேரும் அவர் ஏற்கெனவே மறுரூபமானதற்கு சாட்சிகளாக இருக்கிறவர்கள் (மத் 17:1,2). இயேசுகிறிஸ்துவின் துக்கத்திற்கும், வியாகுலத்திற்கும் சாட்சியாக இருப்பதற்காக இயேசு இம்மூன்றுபேரையும் தம்மோடு மறுபடியும் அழைத்துச் செல்கிறார். இயேசுகிறிஸ்துவோடு  பாடுகளை அனுபவிக்க ஆயத்தமாக இருக்கிறவர்கள், அவரோடுகூட மகிமையில் பங்குபெறுவதற்கும் ஆயத்தமாக இருப்பார்கள்.  நாம் அவரோடுகூட ஆளுகை செய்யவேண்டுமென்று எதிர்பார்ப்போமானால், அவரோடுகூட பாடுஅனுபவிக்கவும் ஆயத்தமாக இருக்கவேண்டும். 


கெத்செமனே தோட்டம். எருசலேமிலிருந்து கீதரோன் பள்ளத்தாக்கின் அருகில் உள்ளது. பட்டணத்தின் மதில் சுவரிலிருந்து 200 கெஜம் தூரத்தில் உள்ள தோட்டம். 

(யோவான் 18:1) 

கெத்செமனே என்பதற்கு ""எண்ணெய் ஆலை'' என்று பொருள். இயேசு கிறிஸ்து எருசலேமில் இருக்கும்போது ஜெபம் பண்ணுவதற்காக அவர் அங்கு விரும்பிச் செல்வது வழக்கம்.  (லூக்கா 22:39; யோவான் 18:2)

 யோசேப்பு, அல்லது நிக்கொதேமு அல்லது எருசலேமில் இயேசுவைப் பின்பற்றிய ஒருவருடைய தோட்டமாக இருக்கலாம். (யோவான் 19:38-39)


துக்கமும் வியாகுலமும்


பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார் (மத் 26:37).


இயேசுகிறிஸ்து ஜெபிக்கும்போது துக்கப்படுகிறார். வியாகுலப்படுகிறார் (லூக் 22:44). வியாகுலம் என்பதற்கு முரண்பாடு என்று பொருள். இந்த வியாகுலம் அவருடைய சரீர வேதனையினால் உண்டானதல்ல. இயேசுகிறிஸ்து தமது ஆவியிலே கலங்கி துயரமடைகிறார் (யோவா 11:33). கிறிஸ்துவின் துக்கம் அவருக்கு பாரமாக இருக்கிறது. 


பிதாவின் சித்தத்தை செய்வதற்கு இயேசுகிறிஸ்து தம்மையே ஒப்புக்கொடுத்திருக்கிறார். சிலுவை மரணம் கிறிஸ்துவுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. தமது மரணத்தைப் பொறுத்தளவில் இயேசுவுக்கு முரண்பாடு எதுவும் இருக்க வாய்ப்பில்லை. பிதாவின் சித்தத்தை இயேசுகிறிஸ்து எப்போதுமே சந்தோஷமாக செய்கிறார். இருப்பினும் அவருக்குள் துக்கமும் வியாகுலமும் இருக்கிறது. 


இயேசுகிறிஸ்து தமது ஆவியில் அந்தகாரத்தின் அதிகாரத்தோடு  போராடிக்கொண்டிருக்கிறார் 

(லூக் 22:53).  பிதா கட்டளையிட்ட பிரகாரம் இயேசுகிறிஸ்து தமது கிரியைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறார். பிதாவின் சித்தத்தை செய்யும்போது அந்தகாரத்தின் அதிகாரத்தோடு  போராட வேண்டிய சூழ்நிலை இயேசுகிறிஸ்துவுக்கு உண்டாயிற்று. இதனால்  இயேசு தமது ஆவியில் கலங்கி வியாகுலப்படுகிறார். சத்துருவை யுத்தக்களத்தில் சந்திப்பதற்கு கிறிஸ்து இயேசு ஆயத்தமாகிறார். நமது இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றும்போது இயேசுகிறிஸ்து தம்மை ஒரு  போர்வீரரைப்போல  வெளிப்படுத்துகிறார்.  


கர்த்தருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி அவருடைய நீதியே அவரை தாங்குகிறது. அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவை தமது சிரசில் தரித்து, நீதியை சரிக்கட்டுதல் என்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்தி, வைராக்கியத்தை சால்வையாக போர்த்துக்கொண்டிருக்கிறார். தம்முடைய சத்துருக்களிடத்தில் உக்கிரத்தை சரிக்கட்டி, தம்முடைய பகைஞருக்கு தக்க பலனையும், தீவுகளுக்கு தக்கபலனையும் சரிக்கட்டுவார்          

  (ஏசா 59:16-18). 


இயேசுகிறிஸ்து இப்போது பாடுகளையும், வேதனைகளையும் சுமந்துகொண்டிருக்கிறார்.  இந்த பாரத்தை பிதாவானவர் கிறிஸ்துவின்மீது சுமத்தியிருக்கிறார். நமது பாவங்களுக்காக அவர் பாடுகளையும் வேதனைகளையும் அனுபவிக்கிறார். நம்முடைய பாவங்கள் அனைத்தையும் தம்மீது ஏற்றுக்கொண்டு பாவமான பாரத்தை சுமக்கிறார். நம்முடைய பாவங்களுக்காக நாம் வருத்தப்படலாம்.   ஆனால் இயேசுகிறிஸ்துவோ நம்  எல்லோருடைய பாவங்களையும் சுமப்பதினால் மிகவும் துக்கமடைந்தவராகவும், வியாகுலப்படுகிறவராகவும் காணப்படுகிறார். 


இயேசுகிறிஸ்து ஜெபிக்கும்போது அவருடைய கண்களுக்கு முன்பாக அவர் அனுபவிக்க வேண்டிய பாடுகளெல்லாம் தெளிவாக தெரிகிறது. தம்மை காட்டிக்கொடுக்கப்போகிற யூதாசை நினைத்துப் பார்க்கிறார். தன்னை மறுதலிக்கப்போகிற பேதுருவை சிந்தித்துப் பார்க்கிறார்.  தம்மீது  பொய்யான குற்றங்களை சுமத்தி சிலுவையில் அறையப்போகும் யூதர்களையும் நினைத்துப் பார்க்கிறார். அவருடைய மரணம் இயேசுவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது. நமது பாவங்களுக்கு பரிகாரமாக இயேசுகிறிஸ்து மரிக்கப்போகிறார். பிதாவோடு நம்மை ஒப்புரவாக்குவதற்காக இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் தம்முடைய சுயஇரத்தத்தையே பலியாக செலுத்தப்போகிறார்.


கர்த்தருக்காக இரத்தசாட்சியாக மரிக்கிறவர்கள் துக்கமடையமாட்டார்கள். வியாகுலப்படமாட்டார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தமது மரணத்திற்கு முன்பாக துக்கமடைகிறார். வியாகுலப்படுகிறார்.  இயேசுவுக்கு இப்போது எந்த ஆறுதலும் ஆதரவுமில்லை. அவருக்கு எல்லாம் மறுக்கப்படுகிறது. இயேசுகிறிஸ்துவிற்கு பிதாவாகிய தேவனுடைய கிருபை சற்று நேரம் மறைக்கப்படுகிறது. பிதாவின் சமுகம் தம்மைவிட்டு சிறிது நேரம் விலகிப்போவதற்காக இயேசுகிறிஸ்து துக்கப்படுகிறார். வியாகுலப்படுகிறார். 


கர்த்தருக்கு இரத்தசாட்சியாக மரிக்கிறவர்கள்மீது தேவஆசீர்வாதம் வந்து தங்கும். இதை எதிர்பார்த்து இரத்தசாட்சிகள்  சந்தோஷமாக மரிப்பார்கள் (மத் 5:10,12). ஆனால் கிறிஸ்துவின் மரணமோ சாபமாக கருதப்படுகிறது. தமது மரணத்தோடு சாபம் இணைக்கப்பட்டிருப்பதை நினைத்து இயேசுகிறிஸ்து துக்கப்பட்டு வியாகுலப்படுகிறார்.  சிலுவையின்கீழ் கிறிஸ்து துக்கப்பட்டது நமது ஆசீர்வாதத்திற்கு அஸ்திபாரமாக இருக்கிறது.  தமது மரணத்தின்போது கிறிஸ்து வியாகுலப்பட்டு குழப்பமடைந்தது நமது தெளிந்த புத்திக்கும், தெளிந்த சிந்தனைக்கும் ஆதாரமாக இருக்கிறது. 


இயேசுகிறிஸ்து பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடை யவும் வியாகுலப்படவும் தொடங்கினார். இவர்கள் இயேசு கிறிஸ்து மறுரூபமானதைக் கண்டார்கள். (மத் 17:1-8) இப்போது அவருடைய துக்கத்தையும், வியாகுலத்தையும் காண்கிறார்கள். (லூக்கா 22:44,53)


மரணத்திற்கேதுவான துக்கம்


அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்-, (மத் 26:38).


இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது.  இயேசுகிறிஸ்து ஜெபிக்கும்போது துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்குகிறார். அப்போது தம்முடைய சீஷர்களிடம் போய் தம்முடைய நிலமையை விளக்குகிறார். தமது துக்கத்தை  சீஷரிடம் பகிர்ந்து கொள்ளும்போது இயேசுவுக்கு சற்று ஆறுதலாக இருக்கலாம். நமக்கு பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்போது நமக்கு தெரிந்தவர்களிடம் அவற்றை பகிர்ந்து கூறி ஆறுதல் பெறுவோம். அதுபோல இயேசுகிறிஸ்து  தமது துக்கத்தை சீஷர்களிடம் கூறுகிறார்.


இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து தமது சரீரத்திலும் ஆத்துமாவிலும் பாடுகளை அனுபவிக்கிறார்.  அவருடைய துக்கம் மிகப்பெரியது. அதிக   துக்கம் கொண்டிருக்கிறார். அந்த துக்கம் மரணத்திற்கேதுவான துக்கமாகும். இயேசுகிறிஸ்துவுக்கு வந்த துக்கம் அவரை கொன்றுபோடும் துக்கமாகும். சாதாரணமாக,  மாம்ச பிரகாரமான மனுஷனால் மரணத்திற்கேதுவான துக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாது. இந்த துக்கம் வரும்போது நம்மால் உயிரோடு பிழைத்திருக்க முடியாது. உடனே மரித்துப்போவோம். ஆனால் இயேசுகிறிஸ்துவின் ஆத்துமாவில் மரணத்திற்கேதுவான துக்கம் வந்தபோதுகூட  அவர் பிழைத்திருக்கிறார். தமது துக்கத்தை சீஷர்களிடம் பகிர்ந்து கூறுகிறார். 


இயேசுகிறிஸ்துவின் துக்கம் உடனே முடிந்துபோய்விடவில்லை. அவர் மரிக்கும் வரையிலும்  மரணத்திற்கேதுவான துக்கம் அவரை வருத்துகிறது. இப்போது அவர் மரணத்திற்கேதுவான துக்கத்தை அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறார். எல்லாம் முடிந்தது என்று கூறி சிலுவையில் தமது ஜீவனை ஒப்புக்கொடுக்கும் வரையிலும், மரணத்திற்கேதுவான இந்த துக்கம் இயேசுவோடு கூடவே இருக்கிறது.  இயேசுகிறிஸ்துவைப்பற்றி ஏசாயா முன்னறிவித்தபோது ""அவர் துக்கம் நிறைந்தவராக இருந்தார்'' என்று கூறியிருக்கிறார் (ஏசா 53:3). 


இயேசுகிறிஸ்து மரணத்திற்கேதுவான துக்கத்தோடு, தம்முடைய சீஷரிடம் ""நீங்கள் இங்கே தங்கி என்னோடே விழித்திருங்கள்'' என்று கூறுகிறார். இயேசுவுக்கு இப்போது உதவி தேவைப்படுகிறது. ஆறுதல் தேவைப்படுகிறது.  தம்முடைய சீஷர்களுக்கு இயேசு பலமுறை உதவிசெய்திருக்கிறார். அவர்களை ஆறுதல்படுத்தியிருக்கிறார். மற்றவர்களுக்கு ஆறுதல் செய்து உதவி செய்யும் இயேசுவுக்கே இப்போது உதவி தேவைப்படுகிறது. தம்முடைய சீஷர்கள் விழித்திருந்து, தம்மை வருத்தும் மரணத்திற்கேதுவான துக்கத்தில், அவர்கள் தனக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருக்கவேண்டுமென்று விரும்புகிறார். அதற்காக அவர்களை விழித்திருக்குமாறு கூறுகிறார். 


நமக்கு பாடுகளும் வேதனைகளும் வரும்போது அவற்றை ஆவிக்குரிய மற்ற சகோதர்களிடம் பகிர்ந்து கூறவேண்டும். பிறருடைய உதவியை கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கங்கொண்டிருந்தபோது, தம்முடைய சீஷர்களை விழித்திருக்குமாறும், தமக்கு உதவிபுரியுமாறும் கூறுகிறார். 


ஜெபம்பண்ணுகிறார்


 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார் (மத் 26:39).


இயேசு துக்கப்பட்டாலும், வியாகுலப்பட்டாலும், இந்த வேதனையின் மத்தியிலும் அவர் பிதாவோடு ஜெபம்பண்ணுவதை நிறுத்தவில்லை. அவருடைய ஜெபத்திற்கு எதுவும் தடையாக இல்லை. அவர் எல்லா வேளைகளிலும் ஜெபம்பண்ணுகிறார். துக்கத்திலும் வியாகுலத்திலும் இருக்கும்போது  பிதாவிடம் ஊக்கத்தோடு ஜெபிக்கிறார். 


இயேசுகிறிஸ்து தமது சீஷர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு சற்று அப்புறம் போய் ஜெபிக்கிறார். தனியாக ஜெபிக்க விரும்புகிறார். இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா கலங்கியிருக்கிறது. மரணத்திற்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. ஆகையினால் தேவனோடு தனித்திருந்து ஆறுதலை பெற்றுக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார். 


நாம் துக்கத்தில் இருந்தாலும், வியாகுலத்திலிருந்தாலும், நம்மால் பேசமுடியாத அளவிற்கு வேதனை நம்மை வருத்தினாலும், நமது தேவன் நமது ஜெப விண்ணப்பங்களை எல்லாம் புரிந்துகொள்கிறார். நமது வார்த்தைகள் அறைகுறையாக வெளிவந்தாலும் நமது பெருமூச்சுக்களையெல்லாம் தேவன் புரிந்துகொள்வார்.  இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கங்கொண்டிருக்கும்போது அவர் தனித்திருந்து ஜெபம்பண்ணுகிறார். இது விசுவாசிகளாகிய நமக்கு ஒரு முன்மாதிரியான ஜெபமாகும். இயேசுவைப்போல நாமும் தனித்திருந்து ஜெபிக்கவேண்டும். 


இயேசு ஜெபிக்கும்போது முகங்குப்புற விழுந்து ஜெபிக்கிறார். சாஷ்டாங்கமாக தரையில் விழுகிறார். தரையில் முகங்குப்புற விழுந்து ஜெபிப்பது வேதனைக்கு அடையாளம். தாழ்மைக்கு எடுத்துக்காட்டு. இயேசு தமது துன்பவேளையில் பிதாவுடைய சமுகத்தில் தம்மை தாழ்த்துகிறார். 


இயேசு ஜெபிக்கும்போது ""என் பிதாவே'' என்று அழைக்கிறார். தம்மை சுற்றிலும் பாடுகளும் வேதனைகளும் கரியமேகம்போல இருளாக சூழ்ந்திருந்தாலும், அந்த இருளிலும் இயேசுவால் பிதாவாகிய தேவனை காணமுடிகிறது. ஒரு சிறு பிள்ளை தனக்கு பிரச்சனை வரும்போது தன் தந்தையிடம் ""அப்பா பிதாவே'' என்று கூப்பிட்டு உதவி கேட்பதைப்போல, இயேசு இங்கு ""என் பிதாவே'' என்று கூறி ஜெபிக்கிறார். இயேசுகிறிஸ்துவின் வியாகுலத்திற்கும் வருத்தத்திற்கும், மரணதிற்குகேதுவான துக்கத்திற்கும் பிதாவாகிய தேவனால் மாத்திரமே உதவிபுரிய முடியும்.


""இந்த பாத்திரம் என்னைவிட்டு நீங்க கூடுமானால் நீங்கும்படி செய்யும்'' என்று இயேசு  தமது பிதாவிடம் கெஞ்சி மன்றாடுகிறார். இயேசு தமது பாடுகளை ""பாத்திரம்'' என்று அழைக்கிறார். இயேசுவின் பாடுகள் ஒரு நதியோ அல்லது ஒரு சமுத்திரமோ அல்ல. இது ஒரு சாதாரண பாத்திரம் மாத்திரமே. பாத்திரத்தின் அடிப்பாகத்தை நாம் எளிதாகப் பார்க்க முடியும்.  நாம் பாடுகள் மத்தியில் இருக்கும்போது அந்த பாடுகள் நம்மை மேற்கொள்ளவிடக்கூடாது. பாடுகளை சாதாரண பாத்திரம் என்று நினைத்து, அந்த பாத்திரத்தின் அடிப்பாகத்தை காணவேண்டும். பாத்திரம் விரைவில் வற்றிப்போகும். நமது பாடுகளும் விரைவில் நீங்கும். 


இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனிடம் ""இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்'' என்று வேண்டிக்கொள்கிறார். இந்த பாடுகள் தமக்கு வரக்கூடாது என்றும், இது தம்மைவிட்டு நீங்கவேண்டுமென்றும் ஜெபிக்கிறார். இந்த பாடுகளை அனுபவிக்க வேண்டியது வந்தாலும்  இது நீண்ட காலத்திற்கு இருக்கக்கூடாது என்றும், இந்த பாடுகள் விரைவில் முடிந்துபோகவேண்டுமென்றும் இயேசுகிறிஸ்து ஜெபிக்கிறார். இந்த ஜெபத்தின் மூலமாக இயேசு  தம்மை ஒரு சாதாரண மனுஷனாகவே வெளிப்படுத்துகிறார். எந்த ஒரு மனுஷனாலும்   இயேசுகிறிஸ்துவுக்கு நியமிக்கப்பட்ட  பாடுகளை  தாங்கமுடியாது. வேதனைகளை சகித்துக்கொள்ள முடியாது. இந்த வேதனையிலிருந்தும், பாடுகளிலிருந்தும் விலகிச் செல்லுவதற்கு ஏதாவது வழியிருக்குமா என்றே மனுஷன் பார்ப்பான். இயேசுகிறிஸ்துவும் மனுஷனாக இருக்கிறபடியினால் இந்த பாடுகளின் பாத்திரம்  தம்மைவிட்டு நீங்க வேண்டுமென்று ஜெபிக்கிறார். 


நாம் பாடுகளுக்கு விரோதமாக விசுவாசத்தோடு ஜெபித்தாலும் சில சமயங்களில் பாடுகள் நமக்கு வந்துவிடுகிறது. ஆயினும் ஜெபிக்கிறவர்கள் பாடுகளையும் வேதனைகளையும் பொறுமையோடு சகித்துக்கொள்வார்கள். துன்பத்தின்  மத்தியிலும்  ஜெபிக்கிறவர்கள் நம்பிக்கையோடு இருப்பார்கள்.  இயேசுகிறிஸ்து தம்முடைய பாடுகளைக் குறித்து ஜெபிக்கும்போது ""இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால்'' என்று கூறி ஜெபிக்கிறார். 


பாடுகளின் பாத்திரத்தில் தாம் பானம்பண்ணாமலேயே, தேவன் மகிமைப்படுவாரென்றால், ஜனங்கள் இரட்சிக்கப்படுவார்களென்றால், தாம் பூமிக்கு வந்ததன் நோக்கம் நிறைவேறுமென்றால்,  அந்த பாடுகளின் பாத்திரம் தன்னைவிட்டு நீங்கவேண்டுமென்று இயேசு ஜெபிக்கிறார். பாடுகளின் பாத்திரம் தம்மைவிட்டு நீங்கினால் தேவனுடைய சித்தம் நிறைவேறாது என்னும் சூழ்நிலை உருவாகும்போது, பாடுகளின் அந்த பாத்திரத்தில் பானம்பண்ணுவதற்கு இயேசுகிறிஸ்து ஆயத்தமாக இருக்கிறார். 


நம்முடைய ஜீவியத்தில் பாடுகளும் வேதனைகளும் நீங்கவில்லையென்றால், அவற்றை சகித்துக்கொள்வதற்கு தேவன் நம்மை பெலப்படுத்துமாறு ஜெபிக்கவேண்டும்.  துன்பங்கள் நம்மைவிட்டு நீங்கக்கூடுமானால்  அவை நீங்கவேண்டுமென்று நாம் ஜெபத்தில் விண்ணப்பம்பண்ண வேண்டும். 


இயேசுகிறிஸ்து ஜெபிக்கும்போது  பிதாவின் சித்தத்திற்கு தம்மை பூரணமாக ஒப்புக்கொடுக்கிறார். ""ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது'' என்று ஜெபிக்கிறார். தாம் அனுபவிக்கப்போகும் பாடுகளையும், வேதனைகளையும் நினைத்து  இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது.  


தமது பாடுகளும் வேதனைகளும் தம்மைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கவேண்டுமென்று இயேசு ஜெபிக்கிறார். ஆயினும் அந்த வேளையிலும் தமது பாடுகளைவிட, வேதனைகளைவிட, மரணத்திற்கேதுவான துக்கத்தைவிட பிதாவின் சித்தத்திற்கே இயேசுகிறிஸ்து முக்கியத்துவம் கொடுக்கிறார். மனுக்குலத்தை மீட்பதற்கு, அவர்களுக்கு இரட்சிப்பை உண்டுபண்ணுவதற்கு பிதாவின் சித்தம் எதுவாக இருந்தாலும் அதை செய்வதற்கு இயேசுகிறிஸ்து ஆயத்தமாக இருக்கிறார். ""பிதாவின் சித்தத்தின்படியே ஆகக்கடவது'' என்று ஜெபிக்கிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சித்தத்தை பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கிறார். பிதாவின் சித்தத்திற்கு தம்முடைய சித்தத்தை  உட்படுத்துகிறார், கீழ்ப்படுத்துகிறார். நமது இரட்சிப்பிற்காக இயேசுகிறிஸ்து என்னென்ன கிரியைகளையெல்லாம் செய்தாரோ அவை அனைத்தையும் கிறிஸ்து இயேசு சந்தோஷமாகவும் மனப்பூர்வமாகவும், பூரணமாகவும் செய்து நிறைவேற்றியிருக்கிறார். ஏனெனில் இந்த கிரியைகளெல்லாம் பிதாவின் சித்தம் என்பதை இயேசு அறிந்து வைத்திருந்தார். 


தம்மீது சுமத்தப்பட்ட பாரங்களையும், பாடுகளையும், வேதனைகளையும் சுமக்கும்போதெல்லாம் இவை பிதாவின் சித்தம் என்னும் எண்ணமே இயேசுகிறிஸ்துவின் உள்ளத்தில் ஆளுகை செய்தது. ஆகையினால்  சிலுவையின் மரண பரியந்தம் தம்மை இயேசுகிறிஸ்து பூரணமாக ஒப்புக்கொடுக்கிறார்.  எல்லா வேதனைகளையும் தாங்கிக்கொள்கிறார். பாடுகளை சகித்துக்கொள்கிறார். 


இயேசுகிறிஸ்து வேதனைகளை சுமந்தது  தேவப்பிள்ளைகளாகிய நம் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியாக நியமிக்கப்பட்டிருக்கிறது. தேவன் நமது கரங்களில் கொடுத்திருக்கும் பாத்திரத்தில்  பானம்பண்ணுவதற்கு நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். நமது பாத்திரம் கசப்பானதாக இருக்கலாம், வேதனை நிறைந்ததாக இருக்கலாம். துன்பம் மிகுந்ததாக இருக்கலாம். இதில் பானம்பண்ணும்போது நமக்குள் போராட்டங்கள் உண்டாகலாம். ஆயினும் தேவனுடைய கிருபைக்கும் சித்தத்திற்கும் நம்மை ஒப்புக்கொடுத்து தேவன் நமக்கு கொடுக்கும் பாத்திரத்தில் சந்தோஷமாகவும் நீடிய பொறுமையோடும் பானம்பண்ணவேண்டும். 


இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரிப்பதற்கு முன்பாகவே, சாத்தான் அவரைக் கொல்வதற்குச் சதி பண்ணுகிறான். ஆகையினால், இயேசு தமது சரீரத்தைப் பிதாவிடம் ஒப்புக்கொடுக்கிறார். பிதா அவருடைய ஜெபத்தைக் கேட்டு, மரணத்திலிருந்து மீட்கிறார்  (எபி 5:7; லூக்கா 22:43-44)


 இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிப்பதற்கு முன்பாக அவருடைய ஜீவியத்தின் ஏதாவது ஒரு காலத்தில் அவர் மரித்திருப்பார் என்றால் தேவனுடைய மீட்பின் திட்டம் தோல்வியடைந்திருக்கும். கிறிஸ்து கல்வாரி சிலுவைக்குச் செல்ல வேண்டும். சாத்தானின் வல்லமைகளை நசுக்க வேண்டும். சாத்தானின்மீதும், அவனுடைய அந்தகார சக்திகளின்மீதும் ஜெயம்பெற வேண்டும். 

(கொலோ 2:14-17; 1பேதுரு 2:24). இந்த வியாக்கியானம் தவிர மத் 26:42 ஆவது வசனம் சிலுவையின்மீது அவருடைய மரணத்தின் பாத்திரத்தையும் குறிக்கலாம்.


மறுபடியும் இரண்டாந்தரம், மூன்றாந்தரம்


அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாததாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார் (மத் 26:42).


அவர் மறுபடியும் அவர்களை விட்டுப் போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்- ஜெபம்பண்ணினார் (மத் 26:44).


இயேசுகிறிஸ்து மறுபடியுமாக ஜெபம்பண்ணுகிறார். அவர் மறுபடியும் இரண்டாந்தரம்போய் தமது பிதாவிடம் ஜெபம்பண்ணுகிறார் (மத் 26:42). அவர் மறுபடியும் மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணுகிறார் (மத் 26:44). நம்மை பாடுகளுக்கு விலக்கி காத்துக்கொள்ளவேண்டுமென்றும், நாம் அனுபவிக்கும் பாடுகள் நம்மைவிட்டு நீங்கவேண்டுமென்றும் ஜெபிக்கிறோம். நமது பாடுகளுக்காக ஜெபிக்கும்போது அவற்றை தாங்கிக்கொள்வதற்கு தேவகிருபை நமக்கு வேண்டும் என்றும் விண்ணப்பம்பண்ண வேண்டும். பாடுகள் மத்தியில்கூட நாம் பரிசுத்தமாக இருக்கவேண்டுமென்றும், நமது இருதயம் சோர்ந்துபோகாமல் திடமாக இருக்கவேண்டுமென்றும் விண்ணப்பம்பண்ணவேண்டும்.   


இயேசுகிறிஸ்து ஜெபிக்கும்போது ""உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது'' என்று கூறி ஜெபிக்கிறார். ஜெபத்தில் நமது விருப்பத்தை கர்த்தரிடத்தில் தெரிவித்தாலும், கர்த்தருடைய சித்தத்தை நாம் அங்கீகரித்து  அதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கவேண்டும்.  நமது ஆசைகள் நிறைவேறவேண்டுமென்று விரும்பினால் மாத்திரம் போதாது. கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றவேண்டுமென்பதே நமது விருப்பமாக இருக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்து மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணுகிறார். அவர் ஒருமணி  நேரம் தொடர்ந்து ஜெபிக்கிறார். ஒரு மணிநேரமாக துக்கமடைந்து வியாகுலப்பட்டுக்கொண்டிருக்கிறார். இந்த ஒரு மணி நேரத்தில் அவர் எப்படித்தான் ஜெபித்தாலும், அவருடைய பாடுகள் அவரை நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. இந்த பாடுகளின் மத்தியில் பிதாவின் சித்தத்தை செய்வதற்கு இயேசுகிறிஸ்து தம்மையே ஒப்புக்கொடுக்கிறார். 


இயேசுகிறிஸ்துவின் ஜெபம் வீணாய் போய்விடவில்லை. குமாரனுடைய விண்ணப்பத்தை பிதாவானவர் எப்போதுமே செவிகொடுத்து கேட்கிறார். இயேசு இப்போது  மூன்றுமுறை அதே வார்த்தைகளை சொல்லி ஜெபம்பண்ணும்போது, பிதாவானவர் குமாரனுடைய விண்ணப்பத்திற்கு நிச்சயம் செவிகொடுப்பார். இயேசுகிறிஸ்துவின் பாத்திரம்  அவரை விட்டு நீங்கவில்லை. இந்த பாத்திரம் தம்மைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும் என்று இயேசு ஜெபம்பண்ணுகிறார். ஆனால் பிதாவாகிய தேவன் இந்த பாத்திரத்தை குமாரனைவிட்டு நீக்கிப்போடவில்லை. பாத்திரத்தை நீக்குவதற்குப் பதிலாக   பாடுகளின் பாத்திரத்தில் பானம்பண்ணுவதற்கு பிதாவானவர் குமாரனுடைய ஆத்துமாவை பலப்படுத்துகிறார். வானத்திலிருந்து ஒரு   தூதன் தோன்றி அவரை பலப்படுத்துகிறார் (லூக் 22:43). 


வேதனைகள் மத்தியிலும் பாடுகள் மத்தியிலும் குமாரனானவர் சோர்ந்து போகாமல் இருப்பதற்கு, பிதாவானவர் அவரை பலப்படுத்துகிறார். 


இயேசு கிறிஸ்து தமது ஜீவியத்தில் இந்த இடத்தில் மட்டுமே ஒரே காரியத்தைத் திரும்பத்திரும்பக்கூறி ஜெபம் பண்ணுகிறார். தமது ஜீவனைக் குறித்து தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலுள்ள போராட்டத்தின் நிமித்தமாக இயேசு இந்த ஜெபத்தைத் திரும்பத்திரும்ப ஏறெடுத்திருக்கலாம். (எபி 5:7).


விழித்திருக்கக்கூடாதா 


 பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரை பண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? 

(மத் 26:40).


இயேசு கெத்செமனே தோட்டத்தில் ஜெபம்பண்ணப்போகும்போது தம்மோடு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் கூட்டிக்கொண்டு போகிறார். இங்கே தங்கி என்னோடேகூட விழித்திருங்கள் என்று அவர்களிடம் கூறி, இயேசு சற்று அப்புறம்போய்  தனியாக ஜெபம்பண்ணுகிறார். ஆனால் இந்த மூன்று சீஷர்களோ ஜெபம்பண்ணாமல் நித்திரை பண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்து துக்கத்திலும்  வியாகுலத்திலும் நிரம்பியிருக்கும்போது, சீஷர்கள் நித்திரை மயக்கத்தினால் நிறைந்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் துக்கத்தையும் வியாகுலத்தையும் பற்றி இவர்களுக்கு கவலையில்லை. இயேசுவின் பாடுகள் அவர்களை விழித்திருக்கச் செய்யவில்லை. இயேசு இம்மூன்று சீஷர்களிடம் வரும்போது அவர்கள் நித்திரைபண்ணுகிறார்கள். 


இயேசு இம்மூன்று சீஷர்களுக்கும் மிகுந்த நன்மைகளை செய்திருக்கிறார். இவர்களைக்குறித்து அதிக கரிசனையோடு இருந்திருக்கிறார். மற்ற சீஷர்களைவிட இம்மூன்று பேரையும் தமக்கு மிகவும் அருகாமையில் சேர்த்திருக்கிறார். இவர்கள் இயேசுவின்மீது மிகுந்த அக்கரையோடு இருக்கவேண்டும். விழித்திருந்து ஜெபிக்கவேண்டும். நித்திரைபண்ணாமல் இவர்கள் இயேசுவுக்கு பணிவிடை செய்யவேண்டும். ஆனால் இவர்களோ நித்திரை மயக்கத்தில் இருக்கிறார்கள். விழித்திருந்து இவர்களால் ஜெபிக்கமுடியவில்லை.


இயேசுகிறிஸ்து நம்மையும் விழித்திருந்து ஜெபிக்கச் சொல்கிறார்.  ஆவி உற்சாகமுள்ளது.  மாம்சமோ பலவீனமுள்ளது. ஆகையினால் நாம் விழித்திருந்து ஜெபித்து சோதனைகளுக்கு தப்பித்துக்கொள்ளவேண்டும். நாம் நித்திரை செய்வதுபோல இயேசுகிறிஸ்துவும் நமது ஜெபத்தைக் கேட்காமல் நித்திரை செய்தால் நமது நிலமை மிகவும் பரிதாபமாக இருக்கும். இஸ்ரவேலை காக்கிற தேவன் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும்  நித்திரை மயக்கமாகயிராமல் விழித்திருந்து ஜெபிக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்து தமது சீஷர்கள் மூவருக்கும் விழித்திருக்கவேண்டுமென்று கட்டளை கொடுத்திருக்கிறார். தமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவர்கள் விழித்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் அவர்களோ நித்திரைபண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இயேசுவின்மீது அவர்களுக்கு அன்போ, அக்கறையோ இல்லை.  


இயேசுகிறிஸ்துவைப் பிடிக்கப்போகிறவர்கள் நித்திரை மயக்கமாகயில்லை. அவர்கள் விழித்திருந்து பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு வருகிறார்கள் (மாற் 14:43).  ஆனால் இயேசுகிறிஸ்துவோடு விழித்திருக்க வேண்டுடியவர்களோ நித்திரையாயிருக்கிறார்கள். 


தம்முடைய பாடுகளும், வேதனைகளும் அதிகரிக்கும் வேளையிலும்  இயேசுகிறிஸ்து அமைதியாக இருக்கிறார். பொறுமையாகயிருக்கிறார். தமது சீஷரிடம் கோபப்படாமல் அன்பாகயிருக்கிறார்.  ""நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடே விழிதிருக்கக்கூடாதா'' என்று அவர்களிடம் கரிசனையோடு கேட்கிறார். பொதுவாக துன்பம் மிகுதியானால் பொறுமையிராது. பிரச்சனை அதிகரிக்கும்போது தேவையில்லாமல் கோபம் வரும். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தமது துன்பவேளையிலும் தாழ்மையோடிருக்கிறார். தமக்கு விரோதமாக எழும்பியிருக்கும் சூழ்நிலைகளை சகித்துக்கொள்கிறார். 


இயேசுகிறிஸ்து முகங்குப்புற விழுந்து பிதாவை நோக்கி ஜெபித்த பின்பு அவர் தமது சீஷர்களிடம் வருகிறார். அவர்களிடமிருந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்ப்போடு வருகிறார். ஆனால் சீஷர்களோ அவருக்கு ஆறுதலைக் கொடுக்காமல், அவருடைய துன்பத்தை அதிகரிக்கச் செய்கிறார்கள். தமக்கு ஆறுதல் கொடுக்காவிட்டாலும், அவர்களிடம் இயேசு மறுபடியும் வருகிறார். அவர்களைக் குறித்த கரிசனை இயேசுவுக்கு அதிகமாக இருக்கிறது.  


தாம் பிதாவிடத்தில் ஊக்கமாக ஜெபிக்கும் வேளையிலும் அவர் தமது சீஷர்களைப் புறக்கணித்து விடாமல் அவர்களிடமாக வருகிறார். பிதாவாகிய தேவன் இந்த சீஷர்களை இயேசுவுக்கு கொடுத்திருக்கிறார்.  இவர்கள் இயேசுவின் இருதயத்தில் நிரம்பியிருக்கிறார்கள். சீஷர்களே இயேசுவுக்கு  ஜீவனும் மரணமுமாக இருக்கிறார்கள்.


சீஷர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு  இயேசு அவர்களை மென்மையாக கண்டிக்கிறார். சீஷர்கள் சார்பாக பொதுவாக பேதுருவே பேசுவார். அந்த பேதுருவிடம் இயேசு தமது வார்த்தைகளை அறிவிக்கிறார். மற்ற சீஷர்களுக்காக பேசுகிற பேதுரு, இப்போது அவர்களுக்காக இயேசுகிறிஸ்துவின் வார்த்தையை பெற்றுக்கொள்கிறான். ""நீங்கள்  ஒருமணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா'' என்று மென்மையாக கண்டிக்கிறார். இந்த சூழ்நிலையிலும் சீஷர்கள் நித்திரையாயிருப்பது இயேசுவுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 


இயேசு தமது சீஷர்களிடம் நன்மையான காரியங்களை எதிர்பார்க்கிறார். அவர்கள் விழித்திருந்து ஜெபிக்க வேண்டியவர்கள். அவர்கள் விழித்திருக்க வேண்டுமென்று இயேசு அவர்களுக்கு  கட்டளை கொடுத்த பின்பும், அவர்கள் நித்திரையாயிருக்கிறார்கள். 


அவர்கள் இயேசுகிறிஸ்துவோடுகூட விழித்திருக்க வேண்டும். இயேசுகிறிஸ்து நித்திரை செய்யாமல் விழித்திருக்கிறார். ஒரு சமயம் கடலில் பெருங்காற்று வீசியபோது இயேசு அவர்களுக்காக நித்திரை செய்யாமல் விழித்திருந்தார். அந்த நன்றியை சீஷர்கள் மறந்துவிடுகிறார்கள். விழித்திருந்து இயேசுவின்மீது தங்கள் நன்றியை காண்பிப்பதற்குப் பதிலாக சீஷர்கள் நித்திரையாயிருக்கிறார்கள். 


இயேசுகிறிஸ்து தமது சீஷர்களிடம் பெரிய காரியங்களை எதிர்பார்க்கவில்லை. மிகவும் சிறிய சாதாரணமான காரியத்தையே எதிர்பார்க்கிறார். தம்மோடேகூட சீஷர்கள் விழித்திருக்கவேண்டும் என்று இயேசு எதிர்பார்ப்பது மிகவும் சாதாரணமான காரியம்.  இயேசு அவர்களை பெரிய காரியத்தை செய்யச் சொல்லியிருந்தால் அவர்கள் ஒருவேளை அதை செய்திருப்பார்கள். தமக்காக மரிக்கவேண்டும் என்று இயேசு சீஷர்களிடம் சொல்லியிருந்தால்  தாங்கள் மரிப்பதற்கு ஆயத்தமாக இருப்பதாக  அறிவித்திருப்பார்கள். ஆனால் இங்கோ மிகவும் சிறிய காரியத்தை இயேசு தம்முடைய சீஷரிடம் எதிர்பார்க்கிறார். ஆனால் அவர்களோ சிறிய காரியத்தில்கூட இயேசுவுக்கு உண்மையாகயில்லை. 


சீஷர்கள் தம்மோடு அதிகநேரம் விழித்திருக்கவேண்டுமென்று இயேசு எதிர்பார்க்கவில்லை. இரவு முழுவதும் இயேசு அவர்களை விழித்திருக்கச் சொல்லவில்லை.  ஒரு மணி நேரம் மாத்திரமே தம்மோடு விழித்திருக்குமாறு இயேசு தமது சீஷர்களுக்கு கூறுகிறார். ஆனால் அவர்களோ அந்த ஒரு மணி நேரம்கூட விழித்திராமல் நித்திரையாயிருக்கிறார்கள்.



சோதனைக்குட்படாதபடிக்கு


 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார் (மத் 26:41).


 நித்திரையாயிருக்கும் சீஷர்களை எழுப்பி  இயேசு அவர்களுக்கு நல்ல ஆலோசனை கூறுகிறார். ""நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்'' என்று ஆலோசனை கூறுகிறார். சோதனையின் வேளை அவர்களை  நெருங்கி வருகிறது. இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்கப்போவது அவருடைய சீஷர்களுக்கு  சோதனையாக இருக்கும். இயேசு வேதனைகளை அனுபவிக்கும்போது       சீஷர்கள்  அவரை விசுவாசியாமல் மறுதலித்துவிடுவார்கள். இயேசுவையே தங்களுக்குத் தெரியாது என்று ஒரே வார்த்தையில் மறுதலித்துவிட்டு அவரைவிட்டு ஓடிப்போய்விடுவார்கள். இப்படிப்பட்ட சோதனையில் சிக்கக்கூடிய வாய்ப்பு அவர்களை நெருங்கி வருகிறது. ஒரு கண்ணியில் சிக்கிக்கொள்ளப்போவதுபோல அவர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். 


ஆகையினால் சோதனைக்குட்படாதபடிக்கு அவர்கள் விழித்திருந்து ஜெபிக்கவேண்டுமென்று இயேசு அவர்களுக்கு ஆலோசனை கூறுகிறார்.  என்னோடு விழித்திருங்கள் என்றும், என்னோடு ஜெபம்பண்ணுங்கள் என்றும் இயேசு தமது சீஷர்களுக்கு நல்ல ஆலோசனை கூறுகிறார். அவர்கள் நித்திரையாக இருப்பதினால் இயேசுகிறிஸ்துவோடு சேர்ந்து ஜெபிக்கும் சிலாக்கியத்தை இழந்துபோகிறார்கள். சீஷர்கள்  தங்களுக்காக ஜெபிக்கவேண்டும். தங்களுக்காக விழித்திருக்கவேண்டும். நித்திரை செய்துவிடாமல் விழிப்பாய் இருப்பதற்கு தேவன் தங்களுக்கு கிருபை தரவேண்டுமென்று ஜெபிக்கவேண்டும். இது அவர்கள் ஜெபிக்க வேண்டிய வேளை. தங்கள் ஜெபவேளையில் சீஷர்கள் நித்திரையாயிருக்கிறார்கள். 


இயேசு தமது சீஷர்களிடம் ""ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது'' என்று மேலும் ஆலோசனை கூறுகிறார். நித்திரை மயக்கத்திலிருக்கும் சீஷர்கள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவர்களுக்காக இயேசுவே கிருபையுள்ள வார்த்தைகளை பேசுகிறார். தமது அன்பை வெளிப்படுத்துகிறார். அன்பு திரளான பாவங்களை மூடும். 


தமது சீஷர்களும் மாம்சமானவர்கள் என்பதை இயேசு நினைவுகூருகிறார். ஆவி உற்சாகமுள்ளதாக இருந்தாலும் மாம்சம் பலவீனமுள்ளதாக இருக்கிறது. சீஷர்களுடைய ஆத்துமாவும் சரீரமும் ஒத்துப்போகவில்லை. ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கிறது. அவர்களுடைய ஆவி உற்சாகமாக இருந்தாலும், அவர்களுடைய சரீரம் பலவீனமுள்ளதாக இருக்கிறது. அவர்களுடைய ஆத்துமா ஜெபிக்க விரும்பியும், அவர்களுடைய சரீரமோ நித்திரையாயிருக்கிறது. அவர்களுடைய ஆவி நன்மையான காரியங்களை செய்யவேண்டுமென்று உற்சாகமாக இருக்கிறது.  ஆனால் அவர்களுடைய சரீரமோ எந்த நற்காரியத்தையும் செய்யவிடாமல் பலவீனமாக இருக்கிறது. 


மனுஷருக்குள் இப்படிப்பட்ட முரண்பாடு காணப்பட்டாலும், இயேசு நமது பாவங்களையெல்லாம் மன்னித்து நம்மீது அன்பாகவும் கிருபையாகவும் இருக்கிறார். நம்மோடு ஆறுதலாக பேசுகிறார். நம்மைப்பற்றி  அறிந்து வைத்திருக்கிறார். மாம்சத்தின் பலவீனத்திற்காக இயேசு பரிதாபப்படுகிறார்.  மாம்சத்தின் குறைபாடுகளை இயேசு கிருபையாக மன்னிக்கிறார். நாம் நமது கிரியையினால் இரட்சிக்கப்படாமல் தேவனுடைய கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நாம் நியாயப்பிரமாணத்திற்கு உட்படாமல், தேவனுடைய கிருபைக்கு உட்பட்டிருக்கிறோம். 


ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது. மாம்சத்தைச் சிலுவையில் அறைய வேண்டும். தேவனுடைய சித்தத்திற்கு மாம்சத்தைக் கட்டுப்படுத்தி ஒப்புக்கொடுக்க வேண்டும். ஆவி உற்சாகத்தோடு கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படியும். மாம்சத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.          


நித்திரைமயக்கம்


அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரை பண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது      

    (மத் 26:43).


இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு நல்ல ஆலோசனைகளை கூறிவிட்டு மறுபடியும் ஜெபிக்கப்போகிறார். அவர் திரும்பி வந்தபோதோ  சீஷர்கள் மறுபடியும் நித்திரை பண்ணுகிறார்கள்.  அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரை மயக்கமடைந்திருக்கிறது. இதன்பின்பு இயேசு அவர்களை கடிந்து கொள்ளவில்லை. நாம் ஒருமுறை தவறு செய்யும்போது தேவன் நம்மை கண்டித்து திருத்துவார். நாம் திருந்தாமல், தவறு செய்வதை நமது பழக்கமாக்கிக்கொண்டால், தேவன் நம்மோடு எப்போது போராடிக்கொண்டிருக்கமாட்டார். இயேசு தமது சீஷர்களிடம் இரண்டாம் முறையாக வரும்போது, அவர்கள் நித்திரையாக இருக்கிறார்கள். இயேசு அவர்களிடம் ஒரு வார்த்தையும் கூறவில்லை.  அவர்கள் மறுபடியும் நித்திரை பண்ணுகிறதை இயேசு தமது கண்களால் காண்கிறார். 


சீஷர்கள் விழித்திருந்து ஜெபிக்கவேண்டுமென்று இயேசு அவர்களுக்கு  போதுமான அளவு ஆலோசனை கூறியிருக்கிறார். ஆனால் நித்திரையின் ஆவியை விரட்டுவது கடினமாக இருக்கிறது. அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரை மயக்கம் கொண்டிருக்கிறது. அவர்கள் விழித்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.  ஆனால் அவர்களுடைய கண்கள் அவர்களுக்கு  ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. நித்திரை மயக்கத்தை அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை. அவர்களுடைய நித்திரை மயக்கமான கண்களை கண்டு இயேசு அவர்கள்மீது பரிதாபப்படுகிறார். 


இனி நித்திரைபண்ணுங்கள்


பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரை பண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளை வந்தது.  என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார் (மத் 26:45,46).  


மூன்றாம் முறையாக இயேசு  அவர்களிடம் வரும்போதும் அவர்கள் நித்திரையாயிருக்கிறார்கள். விழித்திருக்க வேண்டியவர்கள் நித்திரை செய்கிறார்கள். ஆபத்து அவர்களுக்கு அருகாமையில் வந்துவிடுகிறது. இயேசு அவர்களை தட்டியெழுப்புவதற்குப் பதிலாக ""இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்'' என்று கூறுகிறார். நித்திரையை விரும்புகிறவர்கள் நித்திரை செய்யட்டும் என்று விட்டுவிடுகிறார்.  


ஆவிக்குரிய நித்திரை மிகவும் ஆபத்தானது. பாவத்திற்குரிய தண்டனை ஆவிக்குரிய நித்திரைக்கும் கிடைக்கும். பல சமயங்களில் ஆவிக்குரிய ரீதியாக விழித்திராமல்  நித்திரை செய்கிறவர்களை கர்த்தர் தண்டித்திருக்கிறார். அவர்கள்மீது தமது நியாயத்தீர்ப்பை தாமதமில்லாமல் கொடுத்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் நல்ல ஆலோசனையின் சத்தத்தைக்கேட்டு நாம் விழித்திராவிட்டால், பட்டயத்தின் சத்தத்தைக்கேட்டு நாம் விழித்திருக்க வேண்டியதுவரும். 


தேவனுடைய ஆலோசனையை கேட்டு விழித்திராதவர்கள், பட்டயத்தின் சத்தத்தைக் கேட்டாவது விழித்திருக்க வேண்டும். ஆபத்தில் சிக்கிவிடாதவாறு எப்படியாவது விழித்திருக்க முயற்சி பண்ணவேண்டும். 


தம்முடைய சத்துருக்கள் நெருங்கி வருவதை இயேசு தமது சீஷர்களிடம் கூறுகிறார்.  ""இதோ மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளை வந்தது'' என்று அறிவிக்கிறார். தம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் இதோ வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்று கூறுகிறார். பாடுகளை அனுபவிப்பது இயேசுகிறிஸ்துவுக்கு  புதுமையல்ல. தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனும், பிடிக்கிறவர்களும் தமக்கு அருகில் வரும்போது  இயேசு ஆச்சரியப்படவில்லை. தமது ஆபத்தை எதிர்பார்த்து அதை சந்திப்பதற்கு ஆயத்தமாக காத்துக்கொண்டிருக்கிறார். 


எழுந்திருங்கள் போவோம் என்று இயேசு கூறும்போது, தப்பித்து ஓடிப்போவோம் என்னும் பொருளில் கூறவில்லை. பாடுகளை சந்திப்பதற்காக போவோம் என்று தமது சீஷர்களை அழைக்கிறார். சோதனைகள் வரும்போது அதை தாங்கிக்கொள்வதற்கு சீஷர்கள் ஆண்டவரிடம் கிருபை பெற்றிருக்கவேண்டும். தேவனுடைய கிருபையை  ஜெபத்தினால் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் சீஷர்களோ  இதுவரையிலும் ஜெபம்பண்ணாமல் நித்திரை பண்ணினார்கள். தேவனுடைய கிருபையை இழந்துபோனார்கள். ஆயத்தமில்லாமல் ஆபத்தை சந்திக்கப்போகிறார்கள். ஆபத்து அவர்களுக்கு அருகாமையில் வந்தபோது அவர்கள் மிகுந்த அதிர்ச்சியடைகிறார்கள். 





Post a Comment

0 Comments