பாடுகளின் வாரம் வியாழக்கிழமை நிகழ்வு -4

 

பாடுகளின் வாரம்

வியாழக்கிழமை நிகழ்வு -4

இயேசு பிரதான ஆசாரியரின் ஜெபத்தை ஏறெடுக்கிறார் (யோவான் 17)



இயேசு கிறிஸ்துவின் ஜெபம் 

யோவா 17 : 1-5


தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து 


இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:  (யோவா 17:1)


இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவினிடத்தில் வேண்டிக்கொண்ட ஜெபம் இந்த அதிகாரத்தில் விவரமாக எழுதப்பட்டிருக்கிறது. வேதாகமத்தில் பல அதிகாரங்களில் இயேசுகிறிஸ்துவின் ஜெபம்  எழுதப்பட்டிருந்தாலும், இந்த அதிகாரத்தில் விவரிவாக எழுதப்பட்டிருப்பதுபோல வேறு எந்த அதிகாரத்திலும் எழுதப்படவில்லை. இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு உபதேசம்பண்ணிக் கொண்டிருக்கிறார். தம்முடைய சீஷர்களைவிட்டு அவர் பிதாவினிடத்திற்குப் போகப்போவதைப்பற்றியும், சீஷர்களுடைய இருதயம் கலங்கக்கூடாது என்றும், இந்த உலகத்தில் அவர்களுக்கு உபத்திரவம் உண்டு என்றும் தம்முடைய சீஷர்களுக்கு உபதேசம்பண்ணுகிறார். இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து பிதாவினிடத்தில் ஜெபிக்கிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகப்போகிறார். இந்த சமயத்தில் அவர்களிடத்தில் விடைபெற்றுக்கொள்ளும் விதமாக இயேசுகிறிஸ்து அவர்களுக்கு ஆறுதலான சத்தியங்களை உபதேசம்பண்ணுகிறார். இந்த ஜெபம் அவருடைய உபதேசத்திற்குப் பின்பு வரும் ஜெபமாகும். 


தேவனிடத்திலிருந்து வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டு, அவற்றை  சீஷர்களிடத்தில் உபதேசம்பண்ணுகிறார். அதன் பின்பு தம்முடைய சீஷர்களுக்காக இயேசுகிறிஸ்து தேவனிடத்தில் பேசுகிறார். 


இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளைப் பிரசங்கம்பண்ணுகிற ஊழியக்காரர்களாகிய நாமும் ஜெபிக்கவேண்டும். பிரசங்கம்பண்ணும் முன்பும், பின்பும் ஜெபிக்கவேண்டும். நாம் பிரசங்கம்பண்ணுகிற வார்த்தைகளுக்காகவும் ஜெபிக்கவேண்டும் அந்த வார்த்தைகளைக் கேட்கிற ஜனங்களுக்காகவும் ஜெபிக்கவேண்டும். நாம் பிரசங்கம்பண்ணுவதற்கு முன்பாக, நாம் பேசவேண்டிய வார்த்தைகளுக்காக ஜெபிக்கும்போது, தேவன் அந்த வார்த்தைகளை ஆசீர்வதிப்பார். வார்த்தைகள் அபிஷேகம்பண்ணப்படும். கேட்போருக்கு மிகுந்த பிரயோஜனமுள்ளதாக இருக்கும். நல்ல பலன் தரும்.


தம்முடைய உபதேசத்தைப் பிரசங்கம்பண்ணி முடித்த பின்பு இயேசுகிறிஸ்து இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறார். தேவன் தமக்குக் கொடுத்த ஊழியத்தை இயேசுகிறிஸ்து ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டு வருகிறார். இயேசுகிறிஸ்துவின் ஊழியமெல்லாமே தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிறது. தம்முடைய உபதேசம்  ஆசீர்வதிக்கப்படவேண்டுமென்பதற்காகவும், தம்முடைய உபதேசத்தைக் கேட்கிற சீஷர்கள்,  சத்திய வசனங்களை தங்கள் இருதயங்களில் ஏற்றுக்கொண்டு, ஆவிக்குரிய ஜீவியத்தில் அவர்கள் வளர்ச்சி பெறவேண்டும் என்பதற்காகவும் இயேசுகிறிஸ்து இப்போது ஜெபிக்கிறார். 


இயேசுகிறிஸ்துவின் ஜெபம் ஒரு குடும்பத்தில் ஏறெடுக்கப்படுகிற குடும்ப ஜெபம் போலிருக்கிறது. கிறிஸ்துவின் சீஷர்களே        அவருடைய குடும்பத்தாராகயிருக்கிறார்கள். நம்முடைய குடும்பம் எப்படியிருக்கவேண்டும் என்பதற்கு இயேசுகிறிஸ்துவின் ஜெபம் ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. இயேசுகிறிஸ்து தம்முடைய குடும்பத்தாரை ஆசீர்வதிக்கிறார். அவர்களுக்காக ஜெபிக்கிறார். அவர்களோடு ஜெபிக்கிறார். நாமும் நம்முடைய குடும்பத்தாரோடு சேர்ந்து தேவனிடத்தில் ஜெபிக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்து ஏறெடுக்கிற ஜெபம், ஓரிடத்திலிருந்து கடந்து போகும்போது விடைபெறுகிறதற்காக ஏறெடுக்கிற ஜெபம் போலிருக்கிறது. நாமும் நம்முடைய சிநேகிதர்களும் விடைபெற்றுப் பிரியும்போது, ஜெபம்பண்ணிவிட்டு பிரிந்துபோவது நல்லது. அப்போஸ்தலர் பவுல் மிலேத்துவில் ஊழியம் செய்த பின்பு, முழங்கால் படியிட்டு அவர்களெல்லோரோடும்கூட ஜெபம்பண்ணினார். அதன்பின்பு அவர்களிடத்தில் விடைபெற்றுக்கொண்டு கடல் பிரயாணம் பண்ணினார்

 (அப் 20:36-38). 


இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் தம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து மரிக்கப்போகிறார். இயேசுகிறிஸ்து இப்போது ஏறெடுக்கிற ஜெபம் அவருடைய பாடுகளுக்கும்  வேதனைகளுக்கும், அவர் தம்மையே பலியாகச் செலுத்தப்போவதற்கும் ஒரு முன்னுரையாக இருக்கிறது. அவர் மனுக்குலத்தின் இரட்சிப்புக்காக அவர் தம்முடைய ஜீவனையே பலியாக ஒப்புக்கொடுக்கப்போகிறார். தேவாலயத்தில் ஆசாரியர் பலிபீடத்தில் பலிசெலுத்துவதற்கு முன்பாக ஜெபம்பண்ணுவதுபோல, இயேசுகிறிஸ்து தம்மையே பலியாக ஒப்புக்கொடுக்கும் முன்பாக ஜெபம்பண்ணுகிறார். நம்முடைய ஜெபங்களெல்லாமே இப்படித்தான் இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் சமுகத்தில் ஜெபம்பண்ணிவிட்டு, நம்மை ஜீவபலியாக அவருடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனிடத்தில் நமக்காகப் பரிந்துபேசுகிறார். அவருடைய பரிந்து பேசும் ஜெபத்திற்கு           இது ஒரு எடுத்துக்காட்டாகயிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின்  பலியினால் தேவாலயத்திலுள்ள திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. தேவனுடைய பரிசுத்த சமுகத்திற்கும்  நமக்கும் இடையிலுள்ள பிரிவினையாகிய நடுச்சுவர் அகன்றுபோயிற்று. இயேசுகிறிஸ்துவின் ஜெபத்தின் மூலமாக நாம் அவருடைய கிருபாசனத்திற்கு முன்பாகத் தைரியமாகக் கிட்டிச்சேரும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். 


இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவினிடத்தில் ஜெபம்பண்ணும்போது, மிகவும் பயபக்தியோடு ஜெபம்பண்ணுகிறார். அவர் தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து ஜெபிக்கிறார். நாமும் ஜெபம்பண்ணும்போது, இயேசுகிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி, தேவனுடைய சமுகத்தில் பயபக்தியோடு நின்று,  நம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து ஜெபிக்கவேண்டும். நாம் ஜெபிப்பதைப் பார்த்து  இப்பிரபஞ்சத்தின் ஜனங்கள் நம்மைப் பரியாசம்பண்ணலாம். ஆனால் இதுதான் இயேசுகிறிஸ்து ஜெபிப்பதற்கு நமக்கு நியமித்திருக்கிற ஒழுங்கும் நியதியுமாகும். மனுஷரைப் பிரியப்படுத்துவதற்குப் பதிலாக தேவனைப் பிரியப்படுத்துவது நமக்கு ஆசீர்வாதமானது. யூதர்கள் தங்கள் ஜனத்தாரை ஜெபம்பண்ண அழைக்கும்போது, ""உங்கள் இருதயங்களை வானத்துக்கு ஏறெடுக்க வாருங்கள்'' என்று கூறி அழைப்பது வழக்கம்.  


""இயேசு இவைகளைச் சொன்னபின்பு'' என்னும் வாக்கியத்தில் இவைகள் என்பது யோவான் 13:32-16:33 ஆகிய வசனங்களைக் குறிக்கும். 


இதன் பின்பு இயேசு கிறிஸ்து நீண்ட ஜெபம் ஒன்றை ஏறெடுக்கிறார். 


இந்த ஜெபத்தை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். அவையாவன:


    1. தமக்காக (யோவான் 17:1-5)


    2.தமது சீஷர்களுக்காக (யோவான் 17:9-19)


    3. எல்லா சீஷர்களுக்காக (யோவான் 17:20-24)


    4. தமது சீஷர்களுக்காக (யோவான் 17:25-26)


பிதாவே வேளை வந்தது


பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்

  (யோவா 17:2). 


இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது, முதலாவதாகத் தமக்காக ஜெபிக்கிறார். தேவனைப் ""பிதாவே'' என்று அழைக்கிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய கண்களை ஏறெடுத்து,  ""பிதாவே'' என்று அழைத்து,  தம்முடைய ஜெபத்தை ஆரம்பிக்கிறார். தேவன் நம்முடைய பிதாவாகயிருக்கும்போது, அவருடைய சமுகத்தில் நெருங்கி வருகிற சிலாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். அவர் நம்முடைய பிதாவாகயிருப்பதினால், அவரிடத்தில்      பெரிய எதிர்பார்ப்புக்களோடு,             அவரை நோக்கிப் பார்க்கிறோம்.  


இயேசுகிறிஸ்து தேவனை அழைக்கும்போது

 ""பரிசுத்த பிதாவே'' 

  (யோவா 17:11) என்றும்  


""நீதியுள்ள பிதாவே''  

 (யோவா 17:25) என்றும் அழைக்கிறார். இயேசுகிறிஸ்து பிதாவைக் கனம்பண்ணி அழைப்பதுபோல, நாமும் அப்படியே அழைக்கவேண்டும். அவரைத் தேடும்போது  நாம் கண்டுகொள்வோம். அவரைப் பெயர்சொல்லி அழைக்கும்போது, அவருடைய குணாதிசயங்களை அவருடைய பெயரோடு சேர்த்து, ""பரிசுத்த பிதாவே'' என்றும், ""நீதியுள்ள பிதாவே'' என்றும் அழைக்கவேண்டும்.


இயேசுகிறிஸ்து தேவனாகவே இருக்கிறார். ஆனாலும் பிதாவினிடத்தில் தம்முடைய ஜெபத்தை ஏறெடுக்கும்போது, முதலாவதாக அவர் தமக்காக ஜெபிக்கிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய தெய்வத்துவத்தில் இருக்கும்போது, அவரிடத்தில் ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது. அவர் தம்முடைய மனுஷத்துவத்திலிருக்கும்போது, அவரே தேவனிடத்தில் ஜெபிக்கிறார். தேவன் எதை       வாங்குவதற்காக கிரயம் செலுத்தியிருக்கிறாரோ, அதை அவர் கேட்டுப்பெற்றுக்கொள்கிறார்.  நாம் தேவனிடத்தில் பெற்றுக்கொள்வது எதற்கும், நாம் ஒரு கிரயமும் செலுத்துவதில்லை.  அவரிடத்தில் பெற்றுக்கொள்வதற்கு நமக்கு ஒரு தகுதியுமில்லை. இயேசுகிறிஸ்து கிரயம் செலுத்தி  பெற்றுக்கொண்டதை, தமது கிருபையினால்  நமக்கு இலவசமாகத் தருகிறார்.  நாம்  அவற்றை அவருடைய கையிலிருந்து ஒரு கிரயமும் செலுத்தாமல் இலவசமாகப் பெற்றுக்கொள்கிறோம். நாம் ஜெபிக்கும்போது, இயேசுகிறிஸ்து நம்முடைய வேண்டுதல்களை அங்கீகரித்து, தம்முடைய கிருபையினால் நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கிறார். ஆகையினால்தான் விசுவாசிகளாகிய நாம் இடைவிடாமல் ஜெபம்பண்ணவேண்டும் என்று  வேதவசனம் கூறுகிறது.


தேவனுடைய சமுகத்தில் நாம் ஜெபிக்கும்போது நமக்கு    ஆசீர்வாதம் உண்டாகும். நாம் கேட்டுக்கொள்வதை அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்கிறோம். நமக்காகப் பரிந்து பேசுகிறவராகிய இயேசுகிறிஸ்து, இப்போது தமக்காகவே ஜெபிக்கிறார். தம்முடைய வேண்டுதல்களைப் பிதாவினிடத்தில் சமர்ப்பிக்கிறார். இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபிப்பதுபோலவே, நாமும் தேவனிடத்தில் ஜெபிக்கவேண்டும். இயேசுகிறிஸ்து மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி வேண்டுதல் செய்தார்  (எபி 5:7). நம்முடைய வேண்டுதல்களும் விண்ணப்பங்களும்  இயேசுகிறிஸ்துவின் ஜெபத்தைப்போலவே இருக்கவேண்டும்.


இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது முதலாவதாகத் தமக்காகவும், அதன் பின்பு தம்முடைய சீஷர்களுக்காகவும் ஜெபிக்கிறார். நன்மை செய்வது முதலாவதாக  நம்முடைய குடும்பத்தில் ஆரம்பமாகவேண்டும்.  அதேவேளையில் நம்முடைய நன்மை நம்முடைய குடும்பத்திற்குள் அடங்கிப் போய்விடக் கூடாது. முதலாவதாக குடும்பத்தினருக்கும், அதன் பின்பு மற்றவர்களுக்கும் நாம் நன்மை செய்யவேண்டும்.  இயேசுகிறிஸ்து தமக்காக பிதாவினிடத்தில் ஜெபிப்பது மிகவும் சிறிய ஜெபமாகவே இருக்கிறது. தமக்காக ஜெபிப்பதைவிட, இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷருக்காக அதிகமாய் ஜெபிக்கிறார்.


நம்முடைய ஜெபங்களை நாம் நமக்காகவும் ஜெபிக்கிறோம். சபைக்காகவும் ஜெபிக்கிறோம். நமக்காக அதிகமாக ஜெபித்துவிட்டு, சபைக்காக ஒரு வார்த்தையில் ஜெபித்து முடித்துவிடக்கூடாது. நமக்காக ஏறெடுக்கும் ஏராளமான விண்ணப்பங்களுக்கு நடுவில், சபைக்காக நாம் ஏறெடுக்கும் விண்ணப்பம் அவற்றிற்கு நடுவில் மறைந்துவிடக்கூடாது. 


இயேசுகிறிஸ்து தமக்காக ஜெபிக்கும்போது இரண்டு காரியங்களை விண்ணப்பம்பண்ணுகிறார். 


அவையாவன: 


1. நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். 


2. உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி செய்யும். ""நீர் என்னை  மகிமைப்படுத்தும்''   என்று   இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவினிடத்தில் வேண்டுதல்பண்ணும்போது, இந்த வாக்கியத்தை இரண்டுமுறை கூறுகிறார். 


இதற்கான காரணத்தை வேதபண்டிதர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். ""உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்'' (யோவா 17:1-3) என்றும், ""நீர் என்னை உம்மிடத்தில் மகிமைப்படுத்தும்'' (யோவா 17:4,5) என்று இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்கிறார். 


இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது ""நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்'' என்று கூறி ஜெபிக்கிறார்.  பிதாவாகிய தேவன் குமாரனை மகிமைப்படுத்தும்போது, குமாரன் மகிமையடைவார். குமாரன் மகிமைப்படும்போது, குமாரன் பிதாவை மகிமைப்படுத்துவார். இந்த உலகத்தில் தாம் மகிமைப்படுத்தப்படவேண்டும் என்று இயேசுகிறிஸ்து பிதாவிடத்தில் ஜெபிக்கிறார். பூமியிலே தேவன் இயேசுகிறிஸ்துவை மகிமைப்படுத்தியிருக்கிறார்.   இயேசுகிறிஸ்து இந்தப் பூமியில் பாடுகளை அனுபவிக்கும்போதும் அவர் மகிமைப்படுத்தப்படுகிறார். அற்புங்களினாலும் அடையாளங்களினாலும் இயேசுகிறிஸ்து மகிமைப்படுத்தப்படுகிறார்.   இயேசுகிறிஸ்து அனுபவித்த பாடுகளினால் பிதாவாகிய தேவனுடைய நீதி விளங்கிற்று. அதேவேளையில்  குமாரனும் மகிமைப்படுத்தப்படுகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய பாடுகள் மூலமாகவும், சிலுவை மரணத்தின் மூலமாகவும், அவர் உயர்த்தப்படுகிறார். அவர் மகிமைப்படுத்தப்படுகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சிலுவையில் சாத்தானையும் மரணத்தையும் ஜெயித்தார். இயேசுகிறிஸ்துவின் சிரசில் சூட்டப்பட்ட முள்முடி மெய்யாகவே அவருக்கு மகிமையின் கிரீடமாயிற்று.  இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவித்த பின்பும்,  பிதாவானவர் அவரைத்       தொடர்ந்து மகிமைப்படுத்திக்கொண்டேயிருக்கிறார். இயேசுகிறிஸ்துவை மரணத்திலிருந்து மறுபடியும் உயிரோடு எழுப்பும்போது, பிதாவானவர் குமாரனை மகிமைப்படுத்துகிறார்.


இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது தம்முடைய வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் பயபக்தியோடு ஏறெடுக்கிறார்.  இயேசுகிறிஸ்துவின் பிரதான ஜெபம் ""உமது குமாரனை மகிமைப்படுத்தும்'' என்பதாகும். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம், விசுவாசத்தினால் தேவனுடைய பிள்ளைகளாகயிருக்கிறோம். அவர் நம்மை சுவீகார புத்திரராக அங்கீகரித்திருக்கிறார்.  புத்திர சுவீகாரத்தின் ஆசீர்வாதங்களையும் சிலாக்கியங்களையும் நாம் பிதாவாகிய தேவனிடத்திலிருந்து கேட்டுப்பெற்றுக்கொள்ளவேண்டும். நாம் பரிசுத்தமாக்கப்பட்டால் மகிமையடையவும் செய்வோம். 


இயேசுகிறிஸ்து பிதாவிடத்தில் ஜெபிக்கும்போது ""வேளை வந்தது'' என்று கூறி ஜெபிக்கிறார். இதற்கு முன்பு தம்முடைய சீஷரிடத்தில் உபதேசம்பண்ணும்போது,  ""என் வேளை இன்னும் வரவில்லை'' என்று கூறினார், இப்போது ""வேளை வந்தது'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்து இந்த வேளையை ""இந்த வேளை'' (யோவா 12:17) என்று கூறியவர், இப்போது ""வேளை'' என்று கூறுகிறார். ""இந்த வேளை'' என்பது மீட்பரின் மரணத்தைக் குறிக்கும் வார்த்தையாகும். இந்த வார்த்தை மீட்பருடைய பிறப்பின் வேளையையும்  குறிக்கும்.  ""வேளை'' என்பது மிகவும் முக்கியமான, விசேஷித்த வேளை. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காலத்தில், பல சம்பவங்கள் நடைபெற்றாலும், இயேசுகிறிஸ்து இங்கு குறிப்பிடுகிற ""வேளை'' யில், நடைபெறும் சம்பவம் மிகவும் முக்கியமானதாகும். இந்தவேளையில் நடைபெறும் சம்பவம் இதற்கு முன்பும் நடைபெறவில்லை. இதற்கு பின்பும் நடைபெறாது. இந்த உலகத்தின் வரலாற்றில், ""இந்த வேளை'' மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த உலக வரலாற்றில், இந்த வேளையில் நடைபெறும் சம்பவத்தைப்போல, இதற்கு முன்பும் நடைபெறவில்லை. இதற்கு பின்பும் நடைபெறாது. 


இயேசுகிறிஸ்து இந்த வேளையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராக ""வேளை வந்தது'' என்று கூறுகிறார். இது யுத்தம்பண்ணுகிற வேளை. பரலோகத்திற்கும் நரகத்திற்கும் இடையே இறுதியான யுத்தம் இப்போது நடைபெறுகிறது. இந்த யுத்தத்தில்  தமக்கு வெற்றியைக் கொடுத்து ""நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்'' என்று இயேசுகிறிஸ்து ஜெபிக்கிறார். இந்த யுத்தத்தில் குமாரனுக்கு தோல்வியும் சோர்வும்  உண்டாகக்கூடாது என்றும் ஜெபிக்கிறார். தேவன் தம்முடைய குமாரனை சிலுவையில் மகிமைப்படுத்துகிறார். இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டாலும், அந்தச் சிலுவை மரம், அவரை மேன்மைப்படுத்தி அழைத்துச் செல்கிற வெற்றியின் இரதமாக இருக்கிறது.  


தாம் மகிமைப்படும்படியான ""வேளை வந்தது'' என்று இயேசுகிறிஸ்து இங்கு அறிவிக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு  சோதனைகள் வரலாம். வேதனைகள் வரலாம்.   மரணம் வரும். இப்படிப்பட்ட துன்பமான நேரங்களில், நாமும் இயேசுகிறிஸ்துவைப்போல  ""வேளை வந்தது'' என்று கூறி ஜெபிக்கவேண்டும். ""ஆண்டவரே, எனக்கு வந்திருக்கும் இந்த வேளையில் நீர் என்னோடு கூடயிரும், உம்முடைய உதவி எனக்கு இந்த வேளையில் அதிகமாய்த் தேவைப்படுகிறது'' என்றும் கூறி நாம் ஜெபிக்கவேண்டும். ""பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே  நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்''   (2கொரி 5:1).  


இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் தமக்காக ஜெபிக்கும்போது ""உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்'' என்று கூறி ஜெபிக்கிறார். இயேசுகிறிஸ்து பிதாவை மகிமைப்படுத்த விரும்புகிறார். தம்முடைய பாடுகளில் பிதாவானவர் தம்மைத் தாங்கவேண்டுமென்றும், இந்தப் பாடுகள் மூலமாக தாம் பிதாவை மகிமைப்படுத்த வேண்டும் என்றும் இயேசுகிறிஸ்து ஜெபிக்கிறார். இயேசுகிறிஸ்து இந்த ஜெபத்தை ஏறெடுத்த சிறிது காலத்திற்குப் பின்பு, சிலுவையின் உபதேசம் இந்த உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும்.  


தேவன் சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவை  மகிமைப்படுத்துவார். மரித்த இயேசுகிறிஸ்துவை  பிதாவானவர் மறுபடியும் உயிரோடு எழுப்பி  குமாரனை மகிமைப்படுத்துவார். சிலுவையில் மரித்த இயேசுகிறிஸ்து மறுபடியும் உயிரோடு எழும்பவில்லையென்றால், சிலுவையின் உபதேசமே ஒன்றுமில்லாமல் போய்விடும். ஆகையினால் இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ""உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்'' என்று கூறி ஜெபிக்கிறார். 


நாம் எப்படி ஜெபிக்க வேண்டுமென்பதற்கு, இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவினிடத்தில் ஏறெடுத்த ஜெபம் நமக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. நாம் ஜெபிக்கும்போது எதற்காக ஜெபிக்கவேண்டும், எப்படி ஜெபிக்கவேண்டும், நம்முடைய ஜெபத்தின் நோக்கம் எப்படி இருக்கவேண்டும் என்பதை இயேசுகிறிஸ்து நமக்கும் கற்றுத்தருகிறார். தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாம் ஜெபிக்கவேண்டும். ""ஆண்டவரே உம்முடைய ஊழியக்காரராகிய எனக்கு இந்தக் காரியத்தைச் செய்யும், இதன் மூலமாக நான் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு இந்தக் காரியத்தை எனக்குத் தயவாய் செய்தருளும்'' என்று கூறி ஜெபிக்கவேண்டும். நாம் வியாதியில் இருக்கும்போது, ""ஆண்டவரே நான் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு இந்த வியாதியிலிருந்து  என்னைக் குணப்படுத்தியருளும்'' என்று கூறி ஜெபிக்கவேண்டும். நாம் தொழில் செய்பவர்களாக இருப்போமென்றால், ""ஆண்டவரே நான் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு, இந்தத் தொழிலில் எனக்கு வெற்றியைத் தாரும்'' என்று கூறி ஜெபிக்கவேண்டும். 


""உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக'' என்பதே நம்முடைய ஜெபத்தின் பிரதானமான வாக்கியமாக இருக்கவேண்டும். ஜெபத்தின் முதல் வார்த்தையும் ""உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக'' என்றுதான் இருக்கவேண்டும். ஜெபத்தின் கடைசி வார்த்தையும் ""உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக'' என்றுதான் இருக்கவேண்டும். ""எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக. அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக'' (1பேது 4:11) என்று அப்போஸ்தலர் பேதுரு நிருபத்தில் எழுதுவதுபோல, நம்முடைய ஜெபமும் செயலும்  அமைந்திருக்கவேண்டும். 


நாம் ஜெபிக்கும்போது தேவனிடத்தில் எதை எதிர்பார்க்கவேண்டும் என்றும், எதை நம்பவேண்டுமென்றும் இயேசுகிறிஸ்து நமக்கு உபதேசம்பண்ணுகிறார். தேவனை மகிமைப்படுத்த வேண்டுமென்பது நம்முடைய பிரதான நோக்கமாக இருக்குமென்றால், அவர் நமக்குப் போதுமான கிருபைகளைத் தருவார்.  தமக்குச் சித்தமான வாய்ப்புக்களை நமக்குக் கொடுத்து உதவிசெய்வார். நம்முடைய இருதயத்தில் தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்னும் எண்ணத்திற்குப் பதிலாக,  நம்மை நாமே மகிமைப்படுத்தவேண்டும் என்னும் எண்ணம், நம்முடைய இருதயத்தின் ஓரத்தில் எங்காவது ஒளிந்துகொண்டிருக்குமானால், தேவன் நம்மை மேன்மைப்படுத்தமாட்டார். நாம் நம்மையே அவமானப்படுத்திவிடுவோம்.


இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது தம்முடைய ஊழியத்தைப்பற்றியும் அறிக்கை செய்கிறார்.  பிதாவை மகிமைப்படுத்தவேண்டும் என்பது இயேசுகிறிஸ்துவின் விருப்பம். தமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஊழியம் நிறைவேறுவதன் மூலமாக தாம் பிதாவை மகிமைப்படுத்துவதாக, இயேசுகிறிஸ்து அறிக்கை செய்கிறார். தேவனுக்கும் மனுஷருக்கும் நடுவில் இயேசுகிறிஸ்து மத்தியஸ்தராக இருக்கிறார். அவருடைய மத்தியஸ்தம்பண்ணும் ஊழியத்தின் வல்லமை இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. 


மத்தியஸ்தராகிய இயேசுகிறிஸ்து சர்வவல்லமையுள்ளவர். சகல அதிகாரமும் உள்ளவர். இந்த அதிகாரத்தைப் பிதாவாகிய தேவனே குமாரனாகிய கிறிஸ்துவுக்குக் கொடுத்திருக்கிறார். பிதாவானவரே சர்வ அதிகாரத்திற்கும் சொந்தக்காரர். நம்முடைய திருச்சபைகளின் ராஜாதி ராஜாவாக இருக்கும்  இயேசுகிறிஸ்து அதிகாரமில்லாத பொம்மை ராஜா அல்ல. அவர் பிதாவினிடத்திலிருந்து எல்லா அதிகாரத்தையும் தம்மிடத்தில் பெற்றிருக்கிறவர். இந்த உலகத்தின் அதிபதி தன்னிடத்தில் அதிகாரம் இருப்பதுபோல மாய்மாலம் பண்ணுகிறான். ஆனால் அவனிடத்தில் ஒரு அதிகாரமும் இல்லை. சர்வலோகத்தையும் ஆளுகை செய்யும் அதிகாரம் இயேசுகிறிஸ்துவிடம் மாத்திரமே ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அதிகாரத்தைப் பிதாவானவர் இயேசுகிறிஸ்துவுக்குக் கொடுத்திருக்கிறார்.


பிதாவானவர் இயேசுகிறிஸ்துவுக்கு ""மாம்சமான யாவர்மேலும்'' அதிகாரம்கொடுத்திருக்கிறார். எல்லா மனுஷர்மேலும் இயேசுகிறிஸ்துவுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது இயேசுகிறிஸ்து தேவனுக்கும் மனுஷருக்கும் நடுவே மத்தியஸ்த ஊழியம் செய்துகொண்டிருக்கிறார். ""மாம்சமான யாவர்மேலும்'' தேவன் தமக்கு அதிகாரம் கொடுத்திருப்பதாக இயேசுகிறிஸ்து தம்முடைய ஜெபத்தில் குறிப்பிடுகிறார். ""மாம்சமான யாவர்'' என்பது தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிற ஜனத்தைக் குறிப்பிடும் வார்த்தையாகும். இயேசுகிறிஸ்து இந்த ஜனங்களைத் தம்முடைய ஆளுகைக்குட்படுத்தி இரட்சிக்கப்போகிறார். இந்த உலகத்திலுள்ள மனுக்குலத்தாரில், இயேசுகிறிஸ்துவிடம் ஒரு கூட்டம் ஜனத்தார் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லா தேசங்களிலும், எல்லா இனத்தாரிலும் இருக்கிறார்கள். இவர்களெல்லோருமே இயேசுகிறிஸ்துவின் பாதபடியில் அவரைப் பணிந்து கொள்வார்கள். 


ஏதேன் தோட்டத்தில் ஆதாம், ஏவாள் ஆகியோரின் பாவத்தினிமித்தமாக, மனுக்குலம் பாவம் செய்து வீழ்ச்சியடைந்திருக்கிறது. மனுஷன் தன் மாம்சத்தில் பாவம் செய்து வீழ்ச்சியடைந்தவனாக இருக்கிறான். மனுஷனுக்குப் பாவமான மாம்ச சுபாவம் இல்லையென்றால், அவனுக்கு ஒரு இரட்சகர் தேவைப்படமாட்டார். ஆனால் எல்லா மனுஷரும் பாவம் செய்து ஏகமாய்க் கெட்டுப்போயிருக்கிறார்கள். இந்த மனுக்குலத்தாரின்மீது இயேசுகிறிஸ்துவுக்கு சர்வ அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லா நீதியும் இயேசுகிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. தமக்குக் கீழ்ப்படியாதவரை,       தமக்குக் கீழ்ப்படிய வைக்கும் அதிகாரமும் இயேசுகிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 


இயேசுகிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த அதிகாரத்திற்கு  ஒரு தெய்வீக திட்டமும் நோக்கமும் உள்ளது.  பிதாவானவர் தம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் இயேசுகிறிஸ்து   நித்திய ஜீவனைக் கொடுக்கும் பொருட்டாகவே, மாம்சமான யாவர்மேலும் தேவன் அவருக்கு அதிகாரங்கொடுத்திருக்கிறார். மீட்கப்படும்படியாக தெரிந்துகொள்ளப்பட்டோரைப்  பிதாவானவர் இப்போது மீட்பரிடம் ஒப்புக்கொடுக்கிறார். இரட்சிக்கப்படுகிறவர்கள்  இயேசுகிறிஸ்துவுக்குக் கிரீடமாக கொடுக்கப்படுகிறார்கள். அவர்கள் இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியத்தின் கனியாக இருக்கிறார்கள். தம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கும் மனுஷருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் வண்ணமாக, இயேசுகிறிஸ்து அவர்களுக்கு நித்திய ஜீவனைக்கொடுக்கிறார். 


இயேசுகிறிஸ்துவிடம், தம்மிடத்தில் பிதா தந்தருளின யாவருக்கும் கொடுப்பதற்கு ஜீவனும் இருக்கிறது, கிரீடங்களும் இருக்கிறது. இயேசுகிறிஸ்து தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுப்பது நித்திய ஜீவன். இந்த ஜீவன் ஒருபோதும் மரிப்பதில்லை. அதுபோலவே இயேசு  தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுப்பது  நித்திய கிரீடங்கள். இவை ஒருபோதும் மங்கிப்போவதில்லை. இயேசுகிறிஸ்து சர்வ வல்லமையுள்ளவர். நித்திய ஜீவனையும் நித்திய கிரீடத்தையும் தம்முடைய பிள்ளைகளுக்கு, தம்முடைய வல்லமையினாலும், தம்முடைய கிருபையினாலும் கொடுக்கிறார். 


பிதாவானவர் தம்மிடத்தில் ஒப்புக்கொடுத்த ஜனங்களை, இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு ஆவிக்குரிய ஜீவனைக்கொடுக்கிறார். இதுவே அவர்களுக்கு  நித்திய ஜீவனாக இருக்கும். மனுஷருடைய ஆத்துமாவுக்குக் கொடுக்கப்படும். தேவகிருபையானது, அந்த ஆத்துமாவிலுள்ள பரலோக அனுபவமாகயிருக்கும். பிதாவானவர் தம்மிடத்தில் ஒப்புக்கொடுத்திருக்கும் ஜனங்களை, இயேசுகிறிஸ்து பரலோகத்தில் மகிமைப்படுத்துவார். அங்கு அவர்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும். அவர்களுடைய கனி பரிபூரணமாக இருக்கும்.


நாம் தேவனுடைய ராஜ்யத்திலும், அவருடைய மகிமையிலும் பங்குபெறுமாறு அழைக்கப்பட்டிருக்கிறோம். அவருடைய ஆசீர்வாதத்தை நாம் சுதந்தரிக்கும்  வண்ணமாக  அவர் நம்மைத் தம்முடைய புத்திரராக சுவீகாரம்பண்ணியிருக்கிறார். நம்முடைய ஆவிக்குரிய அனுபவத்தில் நமக்கு கடைசியாகக் கிடைக்கப்போகும் ஆசீர்வாதம், நம்முடைய நித்திய ஜீவன் ஆகும். அந்த ஜீவனைப்பற்றி  இயேசுகிறிஸ்து தம்முடைய பிள்ளைகளிடம்  இப்போதே உபதேசம்பண்ணுகிறார். மனுபுத்திரர்மீது  இயேசுகிறிஸ்துவுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து  தம்மிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்களுக்கு  இரட்சிப்பைக்கொடுத்து, அவர்களைத் தேவனுடைய பிள்ளைகளாக மாற்றுகிறார். தேவனுடைய ராஜ்யத்தின் பராமரிப்புக்களும், ஆசீர்வாதங்களும், கிருபையும் இயேசுகிறிஸ்துவிடம் மாத்திரமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையினால் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நடைபெறுகிறது.


நித்திய ஜீவன்


ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் (யோவா 17:3).  


தேவனுடைய தெய்வீகத் திட்டம் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவையும், அவர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். நம்முடைய ஆவிக்குரிய  ஜீவியம் ஒரு பிரயாணம் போலிருக்கிறது. இதற்கு  துவக்கமும் முடிவும் உண்டு. நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தின் முடிவு நித்திய ஜீவன்.  இந்த ஜீவன் நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து இந்த நித்திய ஜீவனைத் தம்முடைய பிள்ளைகளெல்லோருக்கும் வெளிப்படுத்துகிறார்.  பிதாவானவர் தமக்குத் தந்தருளின யாவருக்கும்  இயேசுகிறிஸ்து நித்திய ஜீவனைக்கொடுப்பதாக  உறுதிபண்ணுகிறார். சுவிசேஷத்தின் மூலமாக  நித்திய ஜீவன் அறிவிக்கப்படுகிறது. இதன் இரகசியம் வெளிப்படுத்தப்படுகிறது. இதுவரையிலும் நமக்கு தெரியாமலிருந்த நித்திய ஜீவன், இப்போது இயேசுகிறிஸ்துவின் மூலமாக நம்முடைய கரத்தில் கொடுக்கப்படுகிறது. 


நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதே  நம்முடைய ஜீவியத்திற்கு ஆசீர்வாதமான முடிவாக இருக்கும். இந்த ஆசீர்வாதத்தைப் பற்றிய நிச்சயம் நமக்குள் இருக்கவேண்டுமென்றால், நமக்கு தேவனைப்பற்றியும், இயேசுகிறிஸ்துவைப்பற்றியும் மெய்யான அறிவு இருக்கவேண்டும். ஆகையினால்தான் இயேசுகிறிஸ்து  இதைப்பற்றிச் சொல்லும்போது ""உம்மை அறிவதே, நித்திய ஜீவன்'' என்று வெளிப்படுத்துகிறார். 


ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவையும், அவர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.  தேவனையும் இயேசுகிறிஸ்துவையும் பற்றி அறிந்துகொள்வதில்தான் நித்திய ஜீவன் இருக்கிறது. நாம் இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாக இருக்கும்போது, அதே வேளையில்  இயேசுகிறிஸ்துவில் தேவனோடு ஐக்கியமாகயிருக்கும்போது, நமக்கு நித்திய ஜீவனைப்பற்றிய சத்தியம் வெளிப்படுத்தப்படும்.  தேவனோடு ஐக்கியமாக இருப்பது மிகவும் இனிமையான அனுபவமாக இருக்கும். இதுவே  பரலோகத்தின் அனுபவம். 


தேவனைப்பற்றிய அறிவும், கிறிஸ்துவைப்பற்றிய அறிவும் நித்திய ஜீவனைப்பெற்றுக்கொள்வதற்கு நம்மை வழிநடத்துகிறது. இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை நாம் பெற்றுக்கொள்ளும்போது,  அது நமக்குப் பரலோகத்திற்குச் செல்லும் பாதையைக் காண்பிக்கிறது. கிறிஸ்துவின் சுவிசேஷம் நம்மை தேவனிடத்திற்கு வழிநடத்திச் செல்கிறது. தேவனிடத்தில் நம்மை அழைத்து வருவதற்காகவே இயேசுகிறிஸ்து தம்முடைய ஜீவனைக் கல்வாரி சிலுவையில் ஒப்புக்கொடுத்தார். அவரே மெய்யான தேவனாக இருக்கிறார். அவரே ஒன்றான மெய்த்தேவனாகவும் இருக்கிறார். இயேசுகிறிஸ்துவை ஆராதிப்பதே மெய்யான ஆராதனையாக இருக்கிறது. 


பிதாவாகிய தேவன் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை இந்தப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார். கிறிஸ்துவின் சுவிசேஷம் நம்மை அவரிடத்திற்கு அழைத்துச் செல்கிறது.  ஏதேன் தோட்டத்தில் தேவன் தடைபண்ணின கனியை மனுஷன் புசிக்காமலிருந்திருந்தால், நமக்கு இயல்பாகவே ஒன்றான மெய்த்தேவனைப்பற்றிய அறிவு நமக்குள் இருந்திருக்கும். நாம் அப்போதே நித்திய ஜீவனைப்பெற்றிருப்போம். ஆனால் மனுஷனோ  தேவன் தடைபண்ணின கனியைப்புசித்து பாவம் செய்ததினால், பாவத்தில் வீழ்ந்துபோனான். இதனால் ஒன்றான மெய்த்தேவனைப்பற்றி, நாமாகவே அறிந்துகொள்ளும் சிலாக்கியத்தை நாம் இழந்துவிட்டோம். பாவத்தில் வீழ்ந்துபோன நமக்கு, ஒன்றான மெய்த்தேவனே, தம்மைப்பற்றி அறிவிக்கவேண்டியதாயிற்று. 


இயேசுகிறிஸ்துவை நம்முடைய இரட்சகராக அறிந்துகொள்ளும்போது, நம்முடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படுகிறது. இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதே நித்திய ஜீவன். இந்த நித்திய ஜீவனை மனுஷருக்குக் கொடுப்பதாக இயேசுகிறிஸ்து வாக்குப்பண்ணுகிறார். தேவனோடும் இயேசுகிறிஸ்துவோடும் ஐக்கியமாக இருக்கிறவர்கள், ஏற்கெனவே நித்திய ஜீவனின் காணியாட்சியில் பிரவேசித்திருக்கிறார்கள். அவர்கள் அதன் ஆசீர்வாதத்தைப் பரலோகத்தில் அவர்கள் முழுமையாக அனுபவிப்பார்கள். அவர்கள் இந்தப் பூமியிலும் நித்திய ஜீவனுடைய ஆசீர்வாதத்தின்  ஆரம்பத்தை இப்போதே பெற்றுக்கொள்கிறார்கள். 


தேவனை அறிவதே நித்திய ஜீவன். இதற்காகத்தான் வேதாகமத்தில் ஞானமும் அறிவும் வலியுறுத்திக் கூறப்பட்டிருக்கிறது. அறிதல், அறிவு என்னும் பொருளைத் தரும் வாக்கியங்கள் வேதாகமத்தில் 1,401 இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வேதவாக்கியங்கள் எல்லாமே தேவனை அறியும் சத்தியத்தோடு தொடர்புடையதாக இருக்கும். வேதவசனங்கள் தேவனுடைய நித்திய சித்தத்தை உறுதிபண்ணும். தேவனை அறியாமல் இருப்பதும், அவரை அறிந்து கொள்ள மறுப்பதும் அவரை விசுவாசியாமல் இருப்பதும் வேதவாக்கியங்களில் கடிந்து கூறப்பட்டிருக்கிறது. தேவனைப் பற்றிய அறிவு நமக்கு இல்லையென்றால் அந்த அறியாமை நமது ஆத்துமாவை அழித்துப்போடும். 


பழைய ஏற்பாட்டுக் காலங்களில் பொய்த் தெய்வங்கள் இருந்தன. இவற்றிலிருந்து மெய்யான தேவனை வேறுபடுத்திக் காண்பிப்பதற்காக இந்த வாக்கியம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.       


வேதாகமத்தில் காணப்படும் மெய்யான காரியங்கள்


    1. தேவன்  (யோவான் 17:3)


    2. பிரமாணங்கள்     (நெகே9:13)


    3. வழிகள் (வெளி 15:3)


    4. சாட்சி  (யோவான் 21:24)


    5. வார்த்தை  (1தீமோ 3:1; வெளி 19:9)


    6. சாட்சி  (யோவான் 8:14; யோவான் 19:35)


    7. பழமொழி  (2பேதுரு 2:22)


    8. சாட்சி (எரே 42:5; 

வெளி 3:14)


    9. நியாயத்தீர்ப்பு (சக 7:9; வெளி 16:7)


    10. ஐசுவரியங்கள்

 (லூக்கா 16:11)


    11. ஒளி   (யோவான் 1:9;  1யோவான் 2:8)


    12.தொழுதுகொள்ளுகிறவர்கள்  (யோவான் 4:23)


    13. அப்பம்  (யோவான் 6:32)


    14. திராட்சைச்செடி  (யோவான் 15:1)


    15. பரிசுத்தம்   (எபே 4:24)


    16. உத்தம கூட்டாளி 

 (பிலி 4:3)


    17. ஆசரிப்புக்கூடாரம்

  (எபி 8:2)


    18. இருதயம்  (எபி 10:22)


    19. கிருபை  (1பேதுரு 5:12)


    20. மனுஷர்

   (ஆதி 42:11,19,31,34)





உம்மை மகிமைப்படுத்தினேன்


பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்  (யோவா 17:4). 


இயேசுகிறிஸ்து இந்தப் பூமியில் பிதாவாகிய தேவனை இதுவரையிலும் மகிமைப்படுத்தியிருப்பதாக ஜெபிக்கிறார். இதற்கு  முன்பு ""நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்'' என்று ஜெபித்தவர், இப்போது ""தாம் பிதாவை இதுவரையிலும் மகிமைப்படுத்தியதாகக் கூறி'' ஜெபிக்கிறார். இயேசுகிறிஸ்து மறுபடியுமாக ""நீர் என்னை  உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்'' என்று கூறி ஜெபிக்கிறார். இவ்விரண்டு வாக்கியங்களுக்கும் ஒரு வித்தியாசமுள்ளது. ""நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்'' என்னும் வாக்கியத்திற்குப், பிதாவாகிய தேவன் இந்தப் பிரபஞ்சத்தில்  குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை  மகிமைப்படுத்துவாராக என்பது பொருள். இரண்டாவதாக ஜெபிக்கும்போது, பிதாவானவர் இயேசுகிறிஸ்துவை பரலோகத்திலே மகிமைப்படுத்துவராக என்பது பொருளாகும்.  இந்தப் பூமியில் தம்மை மகிமைப்படுத்துமாறு ஜெபிக்கிற இயேசுகிறிஸ்து, பரலோகத்திலும் தம்மை மகிமைப்படுத்துமாறு ஜெபிக்கிறார். 


இயேசுகிறிஸ்து இந்தப் பூமியில் ஜீவித்ததினால் அவருடைய இருதயத்திற்குள்  ஆறுதலும் சந்தோஷமும் உண்டாயிற்று.   பூமியிலே இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்தியிருக்கிறார். தாம் செய்யும்படி பிதாவானவர் தமக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்திருக்கிறார். இதுவே இயேசுகிறிஸ்துவுக்குச் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொடுக்கிறது. பிதா தமக்கு  நியமித்த ஊழியத்தை இயேசுகிறிஸ்து கணக்குப் பார்க்கிறார். தம்முடைய ஊழியம் நிறைவுபெற்றதைக் கண்டு இயேசுகிறிஸ்துவுக்குச் சந்தோஷம் உண்டாயிற்று. 


தம்முடைய மகிமையைப்பற்றி இயேசுகிறிஸ்து இங்கு குறிப்பிடுகிறார். இந்தப் பூமியில் இயேசுகிறிஸ்துவின் ஜீவியம் முழுவதுமே, வரப்போகிற பரலோக ராஜ்யத்தைப்  பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. இந்த உலகத்தில் மறுபடியும் இயேசுகிறிஸ்து வரப்போகிறார். பிதாவாகிய தேவன் குமாரனுக்கு ஒரு ஊழியத்தை ஒப்புக்கொடுத்திருக்கிறார்.  ஊழியத்தைக் கொடுப்பதோடு, அந்த ஊழியத்தை நிறைவேற்றுவதற்கும் பிதாவானவர் இயேசுகிறிஸ்துவுக்கு உதவிசெய்கிறார்.


பிதாவானவர் தமக்கு நியமித்த கிரியையை  இயேசுகிறிஸ்து செய்து முடித்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் ஊழியம் நேர்த்தியாக செய்து முடிக்கப்பட்டிருக்கிறது. தமக்கு நியமிக்கப்பட்ட ஊழியத்தை எந்தவிதக் குறைவுமில்லாமல் இயேசுகிறிஸ்து பூரணமாக நிறைவேற்றியிருக்கிறார். தம்முடைய ஊழியம் நிறைவடைந்ததினால் இயேசுகிறிஸ்து பிதாவை மகிமைப்படுத்துகிறார். இயேசுகிறிஸ்துவின் ஊழியம் பரிபூரணமாக நிறைவடைந்திருப்பதினால் பிதாவுக்கு மகிமை உண்டாயிற்று. இதே மகிமை மீட்பராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் உண்டாகும். இயேசுகிறிஸ்து எதைத் துவக்குகிறாரோ அதை முடிக்கிறவராகவும் இருக்கிறார். 


நாம் இயேசுகிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றவேண்டும். தேவன் நமக்கு நியமித்திருக்கும் கிரியையைச் செய்து முடிக்கவேண்டும். நம்முடைய ஊழியங்களெல்லாவற்றிலும் தேவனுடைய மகிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அவருடைய மகிமைக்காகவே ஊழியம் செய்யவேண்டும். நம்முடைய வாழ்நாளில் கர்த்தருக்காகச் செய்யும் ஊழியத்தைப் பாதியிலேயே விட்டுவிடக்கூடாது. நம்முடைய ஜீவிய காலம் முழுவதும் நாம் கர்த்தருடைய ஊழியக்காரர்களாக இருக்கவேண்டும். நம்முடைய ஊழியத்தை நாம் நிறைவேற்றும் வரையிலும் நாம் சும்மாயிருக்கக்கூடாது. ஊழியம் செய்துகொண்டேயிருக்கவேண்டும். 


நம்முடைய ஆறுதல் கர்த்தரிடத்தில்தான் இருக்கிறது. சும்மாயிருந்து ஓய்வெடுப்பதினால் உண்டாகும் ஆறுதல் சோம்பேறித்தனமாகவே இருக்கும்.  பிதாவானவர் தாம் செய்யும்படி தமக்கு நியமித்த கிரியையைத் தாம் செய்து முடித்ததாக இயேசுகிறிஸ்து சாட்சி கொடுக்கிறார். இயேசுகிறிஸ்து இரட்சிப்பின் கிரியையைப் பூரணமாக நிறைவேற்றியிருக்கிறார். ஆகையினால் உலக இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பூரண இரட்சகராகவும் இருக்கிறார். தாம் செய்யும் எந்த வேலையையும்  இயேசுகிறிஸ்து அறையும் குறையுமாகச் செய்து  பாதியிலேயே விட்டுவிடுவதில்லை. 


இயேசுகிறிஸ்து பூமியிலே தேவனுடைய சித்தத்தைச் செய்தார். பிரசங்கம், உபதேசம், சுகமாக்குதல், பரிசுத்த ஜீவியம் ஆகியவற்றின் மூலமாக இயேசுகிறிஸ்து தேவனுடைய சித்தத்தைச் செய்து, அவரை மகிமைப்படுத்தினார்.


மத் 4:23; அப் 10:38 ஆகிய வசனங்களில் நாம் வாசிக்கும் கிரியைகளை இயேசு கிறிஸ்து செய்து முடித்தார். மீட்பின் கிரியையை இயேசு கிறிஸ்து இன்னும் சிறிது நேரத்தில் கல்வாரி சிலுவையில் மரித்து, செய்து முடித்து விடுவார். பரலோகத்தில் இயேசுகிறிஸ்து தமது கிரியைகளை இன்னும் செய்து கொண்டிருக்கிறார்.  


என்னை மகிமைப்படுத்தும் 


பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்

 (யோவா 17:5).


இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது ஒரு நிச்சயத்தோடு ஜெபிக்கிறார். தமக்கு முன்பாக ஒரு சந்தோஷம் நியமிக்கப்பட்டிருக்கிறது என்று எதிர்பார்க்கிறார். ஆகையினால் ""இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்'' என்று கூறி ஜெபிக்கிறார். இயேசுகிறிஸ்து  இதே வார்த்தையை ""நீர் உம்முடைய குமாரனை  மகிமைப்படுத்தும்'' (யோவா 17:2) என்று கூறி  ஏற்கெனவே  ஜெபித்திருக்கிறார். பிதாவானவர் குமாரனுக்கு வாக்குத்தத்தைக் கொடுத்திருந்தாலும், இயேசுகிறிஸ்து அந்த வாக்குத்தத்ததிற்காக ஜெபிக்கிறார். ஜெபத்தில் அதைக் கேட்டுப்பெற்றுக்கொள்கிறார். 


தேவன் நமக்குப் பல வாக்குத்தத்தங்களைக்           கொடுத்திருந்தாலும், அவற்றையெல்லாம் நம்முடைய ஜெபத்தில்  கேட்டுப்பெற்றுக்கொள்ளவேண்டும். ஜெபிக்காமல் வாக்குத்தத்தம் நமக்குச் சித்திக்காது. ஜெபிக்காமலேயே வாக்குத்தத்தம்  தானாக நிறைவேறும் என்று எதிர்பார்க்கக்கூடாது. நம்முடைய நம்பிக்கைக்கு ஜெபமே ஆதாரமாக இருக்கவேண்டும். நம்முடைய ஆவிக்குரிய ஜீவனை ஜெபமே வழிநடத்தவேண்டும். 


தம்முடைய மகிமையைப்பற்றி இயேசுகிறிஸ்து ஜெபிக்கும்போது, ""பிதாவானவர் தம்மைப் பூமியிலே மகிமைப்படுத்த வேண்டும் என்று மாத்திரம் ஜெபிக்காமல், ""பிதாவானவர் தம்மை அவரிடத்தில் மகிமைப்படுத்த வேண்டும்'' என்றும் ஜெபிக்கிறார். நாம் இந்தப் பூமியிலிருந்து  பிதாவினிடத்தில் விண்ணப்பங்களை ஏறெடுக்கும்போது நமக்குத் தேவனுடைய கிருபையும் சமாதானமும் கிடைக்கும். பிதாவாகிய தேவனும், குமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் இணைந்து நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கொடுப்பார்கள். அவர்களிடமிருந்து தேவகிருபையையும், தேவசமாதானத்தையும் நாம் பெற்றுக்கொள்கிறோம். இவ்வாறாக பிதாவானவர் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவைத் தம்மில் மகிமைப்படுத்தியிருக்கிறார். 


உலகம் உண்டாகிறதற்கு முன்னே பிதாவினிடத்தில் குமாரனுக்கு மகிமை உண்டாயிருந்தது. அந்த மகிமையினாலே இப்பொழுது, பிதாவானவர் தம்மை, அவரிடத்தில்  மகிமைப்படுத்துமாறு இயேசுகிறிஸ்து ஜெபிக்கிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய தெய்வத்துவத்தில் உலகம் உண்டாகிறதற்கு முன்னே இருந்தவர். சகலமும் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பாக, சிருஷ்டிகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்திலிருந்தார். அவர் மூலமாகவே சகலமும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது.  இயேசுகிறிஸ்து இந்தப் பூமிக்கு வந்ததினால் மாத்திரம் அவருக்கு மகிமை வந்துவிடப்போவதில்லை. அவர் ஏற்கெனவே மகிமையுள்ளவர். உலகம் உண்டாகிறதற்கு முன்னே அவர் மகிமையோடிருந்தவர். எப்போதும் மகிமையோடிருக்கிறவர். 


இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனோடு  நித்திய காலமாக இருக்கிறார். நித்திய காலமாகவே குமாரனுக்குப் பிதாவினிடத்தில்  மகிமை உண்டாயிருக்கிறது. தமக்கு மகிமை உண்டாகவேண்டும் என்பதற்காக, இயேசுகிறிஸ்து மனுக்குலத்தை மீட்டு இரட்சிக்கும் ஊழியத்தைச் செய்யவில்லை. நமக்கு மகிமை உண்டாகவேண்டும் என்பதற்காகவே, இயேசு நம்மை இரட்சிக்கிறார். நித்திய மகிமையுள்ள இயேசுகிறிஸ்து, நம்மை மீட்பதற்காகத் தம்முடைய ஜீவனையே ஒப்புக்கொடுத்திருக்கிறார். ஏனெனில் உலகம் உண்டாகிறதற்கு முன்னே குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்குப், பிதாவினிடத்தில் மகிமை உண்டாயிருக்கிறது. 


இயேசுகிறிஸ்து இந்தப் பூமிக்கு வந்தபோது, தம்முடைய தெய்வீக மகிமையைவிட்டு, தம்மையே தாழ்த்தி, மனுஷரூபமெடுத்து, இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டிருக்கிறார். தம்முடைய மகிமையில்  அவர் மாம்சமாக வெளிப்படவில்லை. இந்தப் பூமியில் இயேசுகிறிஸ்துவின் மனுஷத்துவத்தில், தேவனுடைய மகிமை வெளிப்படவில்லை. இயேசுகிறிஸ்து மறுபடியும் உயர்த்தப்படும்போது, அவர் தம்முடைய மகிமையைத் திரும்பப் பெற்றுக்கொள்வார். 


இந்தப் பூமியிலுள்ள பெரிய தலைவர்களைப்போலவும், இராஜாக்களைப்போலவும் தமக்கு மகிமை உண்டாகவேண்டுமென்று இயேசுகிறிஸ்து ஒருபோதும் ஜெபிக்கவில்லை. இயேசுகிறிஸ்துவுக்கு இந்த உலகத்தைப்பற்றியும் தெரியும். வரப்போகிற பரலோகத்தைப்பற்றியும் தெரியும். ஆகையினால் இயேசுகிறிஸ்து இப்பிரபஞ்சத்தின் மகிமையைத் தேடாமல், வரப்போகிற பரலோகத்தின் மகிமையையே தேடுகிறார். பரலோகத்தின் மகிமையே எல்லா மகிமையிலும் சிறந்தது. கிறிஸ்துவினிடத்தில் பரலோகத்தின் மகிமையைப்பற்றிய சிந்தையே யிருந்தது. கிறிஸ்துவிலிருந்த சிந்தையே நம்மிலும் இருக்கவேண்டும். நாமும் ஜெபிக்கும்போது ""பிதாவாகிய தேவனே, நீர் என்னை உம்மிடத்தில் மகிமைப்படுத்தும்'' என்று கூறி ஜெபிக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது ""நான் உம்மை மகிமைப்படுத்தினேன்'' என்றும், ""இப்போது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்'' என்றும் கூறி ஜெபிக்கிறார். இவ்விரண்டு வாக்கியங்களும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்திருக்கிறது. இயேசுகிறிஸ்துவைப் பிதாவானவர் மகிமைப்படுத்துகிறாரென்றால், அவர்  தம்மில்தாமே மகிமையுள்ளவராக இருக்கிறார். அவர் தம்மில்தாமே, தம்மையே மகிமைப்படுத்திக்கொள்கிறார்.


குமாரனாகிய இயேசுகிறிஸ்து தம்மைத் தாழ்த்துவதினால்  அவருக்கு மகிமை உண்டாயிற்று. அவருடைய மகிமையில்  பிதாவானவர் சந்தோஷப்படுகிறார். இயேசுகிறிஸ்து தம்மைத் தாழ்த்தும்போது அவருக்கு எந்த ஒரு இழப்பும் உண்டாகாது. அவருடைய மகிமை எப்போதுமே அவருடைய மகிமையாகவே இருக்கும். இயேசுகிறிஸ்துவின் மகிமை நித்தியமகிமை. பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலுள்ள உடன்படிக்கையின் பிரகாரம், குமாரனுக்குப் பிதாவினிடத்தில் நித்திய மகிமை உண்டாயிருக்கிறது. இயேசுகிறிஸ்து தமக்கு முன்பாக நியமிக்கப்பட்டிருக்கும் சந்தோஷத்தை நினைத்துப் பார்த்து, தம்முடைய சிலுவையைத் தாங்கிக்கொண்டார். இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது, தாம் உயர்த்தப்படுவதும், தாம் மகிமைப்படுத்தப்படுவதும் பரிபூரணமாகும் என்று எதிர்பார்க்கிறார். ஏனெனில் பிதாவானவர் தமக்கு நியமித்த கிரியையை இயேசுகிறிஸ்து செய்து முடித்திருக்கிறார். 


இயேசுகிறிஸ்துவின் மகிமையினால் பிதாவானவர் திருப்தியடைந்திருக்கிறார். நமக்கும் திருப்தி உண்டாயிருக்கிறது. ஆகையினால்தான் பிதாவானவர் தம்முடைய குமாரனைப்பற்றி சாட்சிகொடுக்கும்போது, ""இவரில் நான் பிரியமாயிருக்கிறேன்'' என்று கூறி சாட்சி சொல்லுகிறார். இதன் மூலமாக ஒரு சத்தியம் தெளிவாகிறது. இந்தப் பூமியில் யாரெல்லாம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களோ, அவர்கள் மாத்திரமே பிதாவினிடத்தில் மகிமைப்படுத்தப்படுவார்கள். 


இயேசு கிறிஸ்து தம்மைத் தாமே வெறுமையாக்கியதை இந்த வசனம் விளக்குகிறது.  இந்த வசனத்தில் இயேசு கிறிஸ்து மூன்று காரியங்களைப் பற்றி கூறுகிறார். அவையாவன:


    1. நித்தியமாக இருப்பது  (மீகா 5:1-2)     

  

    2. தம்மைத் தாமே வெறுமையாக்குவது  

 (லூக்கா 2:40,52)


    3. மகிமையைத் திரும்பப் பெற்றுக் கொள்வது 

  (யோவான் 17:5) 


பிள்ளைகளுக்காக ஜெபம்  

யோவா 17 : 6-10


எனக்குத் தந்த மனுஷர்


நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்  (யோவா 17:6).


இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபிக்கிற போது, முதலாவதாகத் தமக்காக ஜெபித்துவிட்டு, அதன்பின்பு தம்முடைய பிள்ளைகளுக்காக ஜெபிக்கிறார். அவர் உலகத்தாருக்காக ஜெபிக்கவில்லை. ""உலகத்திற்காக வேண்டிக்கொள்ளாமல்,  நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்'' (யோவா 17:9) என்று கூறி ஜெபிக்கிறார். இதனால் இயேசுகிறிஸ்து இந்த உலகத்திலுள்ள மனுஷருக்காக எந்த ஜெபமும் ஏறெடுக்கவில்லை என்று சொல்ல முடியாது. அவர் மனுக்குலத்தார் எல்லோருக்காகவும் ஜெபிக்கிறார். ""நீர் என்னை அனுப்பினதை, உலகம் விசுவாசிக்கிறதற்காக.... வேண்டிக்கொள்கிறேன்'' (யோவா 17:21) என்பதே இயேசுவின் ஜெபம். 


உலகத்திலுள்ள ஜனங்கள் போரடிக்கப்படாத தானியக்கதிர்களைப்போல குவித்து வைக்கப்பட்டிருந்தாலும், இயேசுகிறிஸ்து அவர்களுக்காகவும் ஜெபிக்கிறார். அவர்களை நேசிக்கிறார். அவர்களுக்காக தம்முடைய ஜீவனை கல்வாரி சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுக்கிறார். 


போரடிக்கப்படாத தானியக்குவியலில், கோதுமை மணிகளும் இருக்கும், பதர்களும் இருக்கும். இவை இரண்டையும் பிரிக்கும்போது   கோதுமை மணிகள் களஞ்சியத்தில்  தனியாக    சேர்த்துவைக்கப்படும். பதர்கள் சுட்டெரிக்கப்படும். இந்தப் பதர்களைப்போல பிரயோஜனமில்லாதர்களுக்காக இயேசுகிறிஸ்து ஜெபிப்பதில்லை. இரண்டும் கலந்திருக்கும்போது, கோதுமை மணியைப் பிரித்தெடுக்கவேண்டும் என்பதற்காக, அதற்காகவே ஜெபிக்கிறார். அதுபோலவே இந்த உலகத்தில் கர்த்தருடைய பிள்ளைகளும், பிசாசின் பிள்ளைகளும் இருக்கிறார்கள். உலகத்தார் என்பது பிசாசின் பிள்ளைகளைக்குறிக்கும் வார்த்தையாகும். இயேசு அவர்களுக்காக ஜெபிக்கவில்லை. ஆனால் இந்த உலகத்தில் அவர்களோடு சேர்ந்திருக்கும், தம்முடைய பிள்ளைகளுக்காக ஜெபிக்கிறார். தம்முடைய பிள்ளைகளுக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறார். 


தோட்டக்காரர் திராட்சச்செடியைச் சுத்தப்படுத்தும்போது, கனிதரும் கொடியைப் பராமரித்து, கனிதராத காய்ந்துபோயிருக்கும் சருகுகளை வெட்டிப்போடுவார். கனிதரும் கொடியின்மீது கரிசனையோடிருப்பார். அதுபோலவே இயேசுகிறிஸ்து தம்முடைய பிள்ளைகளுக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறார். இயேசுகிறிஸ்து ஒருபோதும் இந்த உலத்திற்கு எதிராக ஜெபிக்கவில்லை. ஆனால் அவர்  இந்த உலகத்தாருக்காக ஜெபிக்காமல்,  இந்த உலகத்திலுள்ள தம்முடைய பிள்ளைகளுக்காகவே ஜெபிக்கிறார். இந்த உலகத்தின் பிள்ளைகளை  இயேசுகிறிஸ்து சத்துருவின் கைகளிலேயே விட்டுவிடுகிறார். 


இயேசுகிறிஸ்து இந்த உலகத்திலிருந்து யாரைத் தெரிந்தெடுத்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளப்பட்டவர் யாரென்று நமக்குத் தெரியாததினால், நாம் எல்லா மனுஷருக்காகவும் ஜெபிக்கவேண்டும். ""நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள       ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காவும் அப்படியே செய்ய வேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்'' (1தீமோ 2:1-4). யாருக்கெல்லாம் ஜீவன் இருக்கிறதோ அவர்களெல்லாம் இரட்சிக்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆகையினால் அவர்களுக்காக  நாம் ஜெபிப்பது நமக்கு நியமிக்கப்பட்டிருக்கு தேவநியதி. 


இயேசுகிறிஸ்து மனுபுத்திரருக்காக ஜெபிக்கிறார். பிதாவானவர் தமக்குத் தந்த மனுஷருக்காக இயேசுகிறிஸ்து ஜெபம்பண்ணுகிறார். அவர்கள் தம்முடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றும், அவற்றை விசுவாசிக்கவேண்டுமென்றும் இயேசுகிறிஸ்து ஜெபிக்கிறார். இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் தம்மை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்கிறார். இயேசுகிறிஸ்துவின் வேண்டுதல்களும் விண்ணப்பங்களும், இனிமேல் நடைபெறப்போகும் சம்பவங்களுக்காக மாத்திரமல்ல, ஏற்கெனவே நடைபெற்ற சம்பவங்களுக்கும் பிரயோஜனமாயிருக்கிறது.  எல்லா இடங்களிலும், எல்லா காலத்திலுமுள்ள  எல்லா விசுவாசிகளுக்காகவும் இயேசுகிறிஸ்து ஜெபிக்கிறார்.  


தெரிந்துகொள்ளப்பட்டவர்களை, பிதாவானவர் இந்த      உலகத்தில் தெரிந்தெடுத்து, இயேசுகிறிஸ்துவிடத்தில் தந்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவின்சீஷர்கள் பிதாவினால்  தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை அவர்கள் பிரசங்கம்பண்ணவேண்டும் என்பதற்காகவும், கிறிஸ்துவின் சபையை அவர்கள் ஸ்தாபிக்கவேண்டும் என்பதற்காகவும், பிதாவானவர் அவர்களை உலகத்தில் தெரிந்தெடுத்து, இயேசுகிறிஸ்துவுக்குத் தந்திருக்கிறார். 


சீஷர்கள் எல்லாவற்றையும் விட்டு இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிறார்கள். சீஷர்களின் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான தீர்மானம். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்து, அவருடைய சபையை  ஸ்தாபிக்கவேண்டுமென்பதே, சீஷர்கள் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு அடிப்படைக் காரணமாகும். இதுவே சீஷத்துவத்தின் இரகசியம். பிதாவானவர் சீஷர்களை இயேசுகிறிஸ்துவிடம் தரவில்லையென்றால், சீஷர்கள் தங்களை இயேசுகிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுக்கமாட்டார்கள். எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர்கள் இயேசுவைப் பின்பற்றிச் செல்லவுமாட்டார்கள்.  


அப்போஸ்தலர்களும், அப்போஸ்தல ஊழியமும், இயேசுகிறிஸ்து சபைக்குத் தந்திருக்கும் வரமாகும். இயேசுகிறிஸ்து இந்த வரத்தைச் சபைக்குத் தருவதற்கு முன்பாகவே, பிதாவானவர் இந்த வரத்தை இயேசுகிறிஸ்துவுக்குக் கொடுத்திருக்கிறார். இயேசுகிறிஸ்து மனுஷருக்காகவே இந்த வரத்தைப் பிதாவினிடத்திலிருந்து பெற்றுக்கொண்டார். இதை மனுஷருக்குக் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே பெற்றுக்கொண்டார். இயேசுகிறிஸ்துவுக்காக ஊழியம் செய்கிறவர்கள், இதைத் தியானித்துப்பார்த்து, இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்ய நம்மைப் பூரணமாக அர்ப்பணிக்கவேண்டும். 


கர்த்தருடைய ஊழியக்காரர்களாகிய நாம் எல்லோருமே இந்த உலகத்தில் பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். பிதாவானவர் நம்மை இயேசுகிறிஸ்துவிடம் கொடுத்திருக்கிறார். ""பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. அவர் எனக்குத் தந்தவைகளில்  ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில்  அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது''  

(யோவா 6:37,39). 


தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை, குமாரனுக்குக் கொடுக்க, பிதாவுக்கு அதிகாரமுள்ளது. ""அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள்'' என்று இயேசுகிறிஸ்து பிதாவிடம் கூறுகிறார். மனுஷரெல்லோருமே சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டிகள். மனுக்குலத்தார் தேவனிடத்திலிருந்தே தங்களுடைய ஜீவனைப்பெற்றுக்கொள்கிறார்கள். மனுபுத்திரர்  தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், மனுஷருடைய இருதயம் துன்மார்க்கம் நிறைந்ததாக இருக்கிறது. தேவனை வஞ்சிக்கிற சுபாவம் மனுஷரிடத்தில் காணப்படுகிறது. 


மனுஷரெல்லோரும் தேவனைவிட்டு வீழ்ந்துபோனாலும், இந்த மனுக்குலத்திலிருந்து தேவன் தமக்குரியவர்களைத்  தெரிந்துகொள்கிறார். அவர்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்பதற்காகப் பிதாவானவர் அவர்களை இயேசுகிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுக்கிறார். கல்வாரி சிலுவையில் இயேசுகிறிஸ்து சிந்திய இரத்தத்தினால், பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தங்களுடைய ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொள்கிறார்கள். மனுஷருடைய இரட்சிப்பு இயேசுகிறிஸ்துவின்  கிருபாதாரபலியினால் உண்டாயிற்று. இது தேவனுடைய சுத்தகிருபை. மனுஷனுடைய சுயமுயற்சியினாலோ, சுயபக்தியினாலோ ஒருவனும் இரட்சிக்கப்படுவதில்லை. மனுக்குலத்தாரின் இரட்சிப்பு தேவனுடைய கிருபைக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறது. 


இரட்சிக்கப்படுகிறவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். இவர்கள் தேவனுக்காக வேறுபிரிக்கப்பட்டிருக்கிறார்கள். பிதாவானவர் தமக்குத் தந்தவைகளெல்லாம் அவராலே உண்டாயின என்று இயேசுகிறிஸ்து அறிக்கையிடுகிறார். பிதாவானவர் தமக்குத் தந்தவர்களெல்லோருமே அவருடையவர்களாயிருக்கிறார்கள். பிதா அவர்களைக் கிறிஸ்துவுக்குத் தந்தார். பிதாவானவர் தம்மிடத்தில் தந்தவர்களை, இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் கொண்டு வருகிறார். அவர்களெல்லோருமே பிதாவினுடையவர்களாக இருக்குமாறு, இயேசுகிறிஸ்து அவர்களைப் பிதாவின் சமுகத்தில் ஒப்புக்கொடுக்கிறார்.


பிதாவானவர் குமாரனிடத்தில், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களைத் தந்தார். ஒரு மேய்ப்பனிடத்தில் ஆடுகளைத் தருவதுபோல,  அவைகளை மேய்ப்பதற்கும், மேய்ச்சலைக் கண்டடையச்செய்வதற்கும், பாதுகாப்பதற்கும், பிதாவானவர் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களைக் குமாரனிடத்தில்  கொடுத்திருக்கிறார்.  குணமடைவதற்காக நோயாளிகளை வைத்தியரிடம் ஒப்புக்கொடுப்பதுபோலவும்,  கற்றுக்கொள்ளவேண்டுமென்பதற்காக மாணவர்களை ஆசிரியர்களிடம் ஒப்புக்கொடுக்கப்படுவதுபோலவும், பிதாவானவர் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களைக் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுத்திருக்கிறார். 


இந்த உலகத்திலிருந்து தேவன் நம்மைத் தமக்குரியவர்களாகத் தெரிந்தெடுப்பது அவருடைய சுத்தகிருபை. தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் உலகத்தால் அழிந்துபோய்விடக்கூடாது. கனியில்லாதவர்களாகப் பிரயோஜனமற்ற ஜீவிக்கக்கூடாது. அவர்கள் இயேசுகிறிஸ்துவின் பாதுகாப்புக்கும் பராமரிப்புக்கும் உட்படுத்தப்படவேண்டும். அப்போது அவர்களுடைய ஆவிக்குரிய ஜீவியம் கனிகொடுக்கக்கூடியதாக வளம் பெறும். அவர்கள் நிறைவான பலனைத் தருவார்கள்.  


""கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி: அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய  ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணப-யாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.  அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசானாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்'' (ஏசா 53:10,11). 


பிதாவானவர் இந்த உலகத்தில் தெரிந்தெடுத்து, தம்மிடத்தில் தந்தவர்களிடம், இயேசுகிறிஸ்து பிதாவின் வசனத்தை உபதேசம்பண்ணும் ஊழியத்தைப் பொறுப்பேற்றுக்கொள்கிறார். ""நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்'' (யோவா 17:8).  இதுவே கிறிஸ்துவினுடைய உபதேசத்தின் பிரதான திட்டமாகும். தேவனுடைய நாமத்தைப்  பிரஸ்தாபம்பண்ணுவதே கிறிஸ்துவின் உபதேசம்.  தேவனுடைய நாமத்தை ஜனங்களுக்கு அறிவிக்கவேண்டும். அவருடைய வசனத்தை ஜனங்களுக்குச் சொல்லவேண்டும். அவர்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு தேவன்மீது இன்னும் அதிகமாய் அன்புகூரவேண்டும். தேவனை இன்னும் அதிகமாய் ஆராதிக்கவேண்டும். இதுவே கிறிஸ்துவின் சித்தம்.


பிதாவானவர்  தமக்குக் கொடுத்த  ஊழியத்தை இயேசுகிறிஸ்து முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார். அவர் தமக்குத் தந்த மனுஷருக்குப் பிதாவின் நாமத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின்  உபதேசத்தில் விசுவாசம் நிரம்பியிருக்கிறது. பிதாவானவர் தம்மிடத்தில் எப்படிப்பட்ட ஊழியத்தைக் கொடுத்தாரோ, அதைக் குமாரனானவர் அப்படியே செய்து முடித்திருக்கிறார். பிதாவானவர் தமக்குக் கொடுத்த வார்த்தைகளைக், குமாரன் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். 


கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய நாமும், கர்த்தருடைய வார்த்தையைப் பிரசங்கம்பண்ணும்போது, இயேசுகிறிஸ்துவின் இந்த முன்மாதிரியைப் பின்பற்றவேண்டும். பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கொடுக்கும் வார்த்தைகளை மாத்திரமே நம்முடைய பிரசங்கத்தில் பயன்படுத்த வேண்டும். நம்முடைய பிரசங்கத்தின் முக்கியமான பகுதி தேவனுடைய நாமத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் ஊழியம் செய்யும்போது, தம்முடைய நாம மகிமையைத் தேடாமல், பிதாவையே மகிமைப்படுத்தினார். மனுபுத்திரருக்கு தேவனுடைய நாமத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது மாத்திரமே இயேசுகிறிஸ்துவின் ஊழியமாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளும், அவர் செய்த அற்புதங்களும் அடையாளங்களும், தேவனுடைய நாமத்தை வெளிப்படுத்துவதற்காகவே கிரியை செய்கிறது.  


பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தைக் குமாரன் மாத்திரமே பெற்றிருக்கிறார். ஆகையினால் தேவனுடைய இரகசியங்களையும்  தெய்வீக சத்தியத்தையும் மனுக்குலத்திற்கு வெளிப்படுத்தும் சிலாக்கியம் இயேசுகிறிஸ்துவுக்கு மாத்திரமே உண்டு. இயேசுகிறிஸ்து மாத்திரமே மனுஷருடைய ஆவிகளில் பிரவேசிக்கக்கூடியவர். இயேசுகிறிஸ்துவினால் மாத்திரமே மனுஷருடைய இருதயங்களில் கிரியை செய்து, தேவனுடைய இரகசியங்களைப் புரிந்துகொள்வதற்கு  உதவிபுரிய முடியும். 


கர்த்தருடைய ஊழியக்காரர்களாகிய நம்மால் கர்த்தருடைய நாமத்தை அறிவிக்க மாத்திரமே முடியும். ஆனால் இயேசுகிறிஸ்துவால் மாத்திரமே அந்த நாமத்தை  வெளிப்படுத்தவும் முடியும். ஊழியக்காரர்கள் தேவனுடைய வார்த்தையை மனுஷரிடத்தில் பேசலாம். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தம்முடைய வார்த்தைகளை  நம்மோடு பேசுவது மாத்திரமல்ல, அந்த வார்த்தைகளை நம்முடைய இருதயத்திற்குள்ளும் பதியச்செய்கிறார். மெய்யாகவே பிதாவானவர் இந்த உலகத்தில் தெரிந்தெடுத்து, தமக்குத்  தந்த மனுஷரெல்லோருக்கும், இயேசுகிறிஸ்து அவருடைய நாமத்தைச் சீக்கிரமாய் வெளிப்படுத்துவார். சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கும் கட்டளையை, இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியக்காரருக்குக் கொடுத்திருக்கிறார். நாம் விசுவாசத்தோடும் உண்மையோடும் சுவிசேஷத்தை அறிவிக்கும்போது, தெரிந்துகொள்ளப்பட்ட மனுஷருக்கு இயேசுகிறிஸ்து தேவனுடைய நாமத்தை வெளிப்படுத்துவார். 


இயேசு கிறிஸ்து தமக்குத் தந்த மனுஷர் என்று இங்கு குறிப்பிடுவது பன்னிரெண்டு சீஷர்களை மட்டும் என்றில்லாமல் இருபது சீஷர்களையும், அவர்களோடு சேர்ந்து இயேசு கிறிஸ்துவிடம் வந்து அவரை விசுவாசித்த அனைவரையும் குறிக்கும். 


இயேசு கிறிஸ்து இந்த மனுஷரைப் பற்றிக் குறிப்பிடும் காரியங்கள்.


    1. நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்

 (யோவான் 17:6, 22,23).


    2. அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள் (யோவான் 17:6,9).


    3. அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைகொண்டிருக்கிறார்கள்.       (யோவான் 17:6,8).


    4. நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள் 

 (யோவான் 17:7,8,25).

    5. உலகம் அவர்களைப் பகைத்தது. (யோவான் 17:14).


    6. நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல           (யோவான் 17:14-16).


    7.  அவர்களில் நான் மகிமைப் பட்டிருக்கிறேன். (யோவான் 17:10).


    8. நீர் அவர்களை எனக்குத் தந்தீர். (யோவான் 17:2,6,9,11,12,24).


    9. நான் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுத்திருக்கிறேன்.

(யோவான் 17:2-3).


    10. நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக் கொண்டுவந்தேன்; கேட்டின் மகன் கெட்டுப் போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப் போகவில்லை (யோவான் 17:12).


நீர் எனக்கு கொடுத்த வார்த்தைகள்


நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்தி-ருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர்          என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்                 (யோவா 17:7,8). 


பிதாவானவர் தம்மிடத்தில் தந்தவர்களை  இயேசுகிறிஸ்து பாதுகாக்கிறார், பராமரிக்கிறார்.  அவர்களுக்குப் பிதாவின் நாமத்தை வெளிப்படுத்துகிறார். அவர்கள் பிதாவின் வசனத்தைக் கைக்கொள்கிறார்கள். பிதாவானவர் இயேசுகிறிஸ்துவுக்குத் தந்தவைகளெல்லாம் அவரால் உண்டாயின என்று இப்போது அறிந்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து அவர்களுக்குக் கொடுத்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, அவர் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார் என்பதை நிச்சயமாய் அறிந்துகொள்கிறார்கள்.  பிதாவானவர் குமாரனைஅனுப்பியிருக்கிறாரென்றும் விசுவாசிக்கிறார்கள்.  


பிதாவானவர் இந்த உலகத்தில் தெரிந்தெடுத்து, குமாரனிடத்தில் தந்த மனுஷர் மத்தியில், இயேசுகிறிஸ்துவின் உபதேசம் வல்லமையாய் கிரியை செய்கிறது. கிறிஸ்துவின் வார்த்தை வெற்றி பெறுகிறது. பிதாவானவர் தமக்குக் கொடுத்த வார்த்தைகளை இயேசுகிறிஸ்து அவர்களுக்குக் கொடுக்கிறார். அவர்கள் அவைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். ஒரு விதையை ஏற்றுக்கொள்ளும் நிலத்தைப்போல, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கர்த்தருடைய வசனத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். பூமியானது  மழை நீரை ஏற்றுக்கொள்வதுபோல, கர்த்தருடைய பிள்ளைகள் சத்திய வசனத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். தண்ணீரைப் பூமி உறிஞ்சிக் குடிப்பதுபோல, விசுவாசிகள் வசனத்தின் சாரத்தைத் தங்கள் ஆத்துமாவிற்குள் உறிஞ்சி குடித்து, ஆத்தும தாகத்தைத் தணித்துக்கொள்கிறார்கள். 


இயேசுகிறிஸ்துவின் வசனம் சத்திய வசனமாக இருக்கிறது. இயேசுகிறிஸ்து தேவனுடைய வசனத்தை அவர்களுக்குக் கொடுக்கும்போது அவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். வசனத்தின் பிரகாரமாக ஜீவிக்க தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள்.  கிறிஸ்துவின் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிந்தால் மாத்திரமே, அந்தக் கட்டளைகளை நமக்குப் பெற்றுக்கொள்ள முடியும். இயேசுகிறிஸ்து தங்களுக்குக் கொடுத்த வார்த்தைகளை, விசுவாசிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த வசனம் ஒரு சில விசுவாசிகளுக்கு மாத்திரம் புதிதாய்க் கொடுக்கப்படும் வசனமல்ல. எல்லா தேசங்களிலுமுள்ள எல்லா பிள்ளைகளுக்கும், எல்லா காலங்களிலும் வாழும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அனைவருக்கும், பிதாவின் வசனம் கொடுக்கப்படுகிறது. 


பிதாவானவர் தமக்குக் கொடுத்த வார்த்தைகளை,     இயேசுகிறிஸ்து அவர்களுக்குக் கொடுக்கும்போது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். வார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறார்கள். இந்த வார்த்தையை ஏற்றுக்கொண்டதினால், இயேசுகிறிஸ்து பிதாவினிடத்திலிருந்து  புறப்பட்டு வந்தவர் என்பதை நிச்சயமாய் அறிந்துகொள்கிறார்கள். அத்தோடு பிதாவானவர்  குமாரனை அனுப்பியிருக்கிறார் என்பதையும் விசுவாசிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் எல்லா ஊழியங்களும், எல்லா வல்லமைகளும், ஆவியானவரின் எல்லா வரங்களும், எல்லா கிருபைகளும், எல்லா ஆறுதல்களும் தேவனிடத்திலிருந்தே வருகிறது.  தேவனுடைய கிருபையினால் இவை அனைத்தும் திட்டமிடப்பட்டிருக்கிறது. தேவனுடைய நாம மகிமைக்காகவே இவை அனைத்தும் மனுஷருக்குக் கொடுக்கப்படுகிறது. மனுஷனுடைய இரட்சிப்பில் தேவனுடைய     நாமம் மகிமைப்படுகிறது. நம்முடைய ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல்  வேண்டுமானால் நாம் தேவனுடைய வார்த்தையைத் தியானம்பண்ணவேண்டும். அவர் கொடுக்கும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வார்த்தைகளின் கருத்தை அறிந்து அதை விசுவாசிக்கவேண்டும்.  


நாம் நீதிமான்களாக இருக்கவேண்டுமென்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறபடியினால், தேவன் நிச்சயமாகவே நம்மை  நீதிமானாக்குவார். தேவனுடைய சுபாவம் கிருபை நிறைந்ததாக இருக்கிறபடியினால் அவர் நிச்சயமாகவே நம்மை பரிசுத்தப்படுத்துவார்.  தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதை விசுவாசித்து, அதை உறுதியோடு ஏற்றுக்கொள்கிறார்கள். இயேசுகிறிஸ்து தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தவர் என்பதை நிச்சயமாய் அறிந்துகொள்கிறார்கள்.  


நாம் விசுவாசிப்பது என்ன என்பதை, நாம் நிச்சயமாக அறிந்துகொள்ளவேண்டும். சத்தியமாவது என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எல்லா சத்தியங்களையும் நம்மால் பூரணமாக அறிந்துகொள்ள முடியாமல் போகலாம். பரிசுத்த ஆவியானவர் நமக்கு உபதேசம்பண்ணும்போது,  சத்தியத்தை அறிந்துகொள்ள அவர் நமக்கு உதவிபுரிவார். சகல சத்தியத்திற்குள்ளும் ஆவியானவர் நம்மை வழிநடத்துவார். நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்.   ஆகையினால் நம்முடைய விசுவாசம் எப்போதுமே உறுதியுள்ளதாக இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்து தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறவர் என்பதை நாம் நிச்சயமாக அறிந்துகொள்ளவேண்டும். இந்த சத்தியத்தை நாம் நிச்சயமாக விசுவாசிக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்து தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார் என்பதை நாம் நிச்சயமாக அறிந்துகொண்டு, தேவன் அவரை அனுப்பியிருக்கிறார் என்பதை நாம் விசுவாசிக்கும்போது       அவருடைய உபதேசங்களையெல்லாம் நாம் தெய்வீக       சத்தியங்களாக ஏற்றுக்கொள்வோம். இயேசுகிறிஸ்து கொடுக்கும் வாக்குத்தத்தங்களெல்லாம் நிறைவேறும் என்பதற்கு தெய்வத்துவமே அச்சாரமாக இருக்கிறது. 


இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜனங்களுக்காக ஜெபிக்கும்போது, அவர் மிகுந்த சந்தோஷத்தோடு ஜெபிக்கிறார். ஒவ்வொரு வார்த்தையிலும் பிதாவை மகிமைப்படுத்துகிறார். பிதாவின் ஊழியத்தை மனுஷர் மத்தியில் செய்து முடித்திருப்பதாக அறிக்கை செய்கிறார். தேவனுடைய நாமம் இதனால் மகிமைப்படுவதைக் கண்டு இயேசுகிறிஸ்து சந்தோஷப்படுகிறார். நம்முடைய கர்த்தரும் ஆண்டவருமாகிய இயேசுகிறிஸ்து மிகுந்த சந்தோஷத்தோடு பிதாவினிடத்தில் ஜெபிப்பதுபோல நாமும் ஜெபிக்கவேண்டும். 


மனுஷருடைய விசுவாசத்தை இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கிறார். நம்முடைய விசுவாசத்தில் சில குறைகள் காணப்படலாம்.        ஆனாலும் குறைகளை அதிகமாகப் பார்க்காமல், நம்முடைய பலவீனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஜனங்கள் வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றும், அவர்கள் நிச்சயமாய் அறிந்துகொள்கிறார்கள் என்றும், அவர்கள் வார்த்தையை விசுவாசிக்கிறார்கள் என்றும் இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் மனுஷரைக் குறித்து சாட்சி கொடுக்கிறார்.  பிதாவாகிய தேவனிடத்தில் இயேசுகிறிஸ்து நமக்காகப் பரிந்து பேசுகிறார். பிதாவானவர் தமக்குத் தந்த மனுஷருக்காக இயேசுகிறிஸ்து அவரிடத்தில் வேண்டிக்கொள்கிறார். இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை யாரெல்லாம் ஏற்றுக்கொண்டு, அவர் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறவர் என்பதை நிச்சயமாய் அறிந்துகொண்டு, பிதாவானவர் அவரை அனுப்பியிருக்கிறாரென்று விசுவாசிக்கிறார்களோ, அவர்களெல்லோருக்காகவும் இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் பரிந்து பேசி ஜெபிக்கிறார்.


அவர்கள் உம்முடையவர்கள்


நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்  (யோவா 17:9,10). 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்காகப் பிதாவினிடத்தில் விசேஷமாக வேண்டிக்கொள்கிறார். ""அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்கள்'' என்று கூறி ஜெபிக்கிறார். பிதாவானவர் இந்த உலகத்தில் தமக்குரியவர்களைத் தெரிந்தெடுத்து இயேசுகிறிஸ்துவினிடத்தில் தந்திருக்கிறார். அவர்கள் இப்போது இயேசுகிறிஸ்துவின் உபதேசத்திலும், பாதுகாப்பிலும் பராமரிப்பிலும்  இருக்கிறார்கள். பிதாவானவர் தம்மிடத்தில் தந்தவர்களை இயேசுகிறிஸ்து மீட்டுக்கொள்கிறார். நம்மை அவர் தமக்காக மீட்டுக்கொள்ளாமல் தேவனுக்காகவே மீட்டுக்கொள்கிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய ஜெபத்தில் ""அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்கள்''   என்று கூறி ஜெபித்து, தம்முடைய சீஷர்களை பிதாவின் கரத்தில் ஒப்புக்கொடுக்கிறார். நாமும்  தேவனிடத்தில் ஜெபிக்கும்போது ""நான் உம்முடையவனாயிருக்கிறேன், என்னை இரட்சித்துக்கொள்ளும்'' என்று கூறி ஜெபிக்கவேண்டும்.      நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது ""அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்கள், அவர்களை இரட்சித்துக்கொள்ளும்'' என்று கூறி ஜெபம்பண்ணவேண்டும். 


தேவன் நம்மைப் பாதுகாக்கவில்லையென்றால், சாத்தான் நம்மை  அபகரித்துக்கொள்வான். நாம் இந்த உலகத்தில்சிக்கி உலகத்தாரைப்போல மாறிவிடுவோம்.  ஆகையினால் தேவனிடத்தில் நாம் ஜெபிக்கும்போது ""நான் உம்முடையவன், என்னைக் காத்துக்கொள்ளும்'' என்று கூறி ஜெபிக்கவேண்டும். நம்மைத் தேவனிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, தேவன் தம்முடையவர்களைக் காத்துக்கொள்கிறார். 


இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்கிறபோது ""நீர்               எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன், அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே'' என்று கூறி ஜெபிக்கிறார். இவ்வாறு வேண்டிக்கொள்வதற்கு ஒரு ஆதாரமுள்ளது''. இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது ""என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்துவின் இருதயத்தில் இந்த சிந்தையே இருக்கிறது. ஆகையினால்தான் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷருக்காக ஜெபிக்கிறபோது ""அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்கள்'' என்று பிதாவினிடத்தில் சொல்லுகிறார். 


இயேசுகிறிஸ்து கூறும் வாக்கியத்தின் மூலமாக, பிதாவும் குமாரனும் ஒன்றாயிருக்கிறார்கள் என்னும் சத்தியம் உறுதிபண்ணப்படுகிறது. இருவருக்கும் ஒரே சாரமும் ஒரே நோக்கமும் இருக்கிறது. சிருஷ்டிகராகிய பிதாவானவர், தம்முடைய சிருஷ்டிகளைக் குமாரனிடத்தில் ஒப்புக்கொடுக்கிறார். ""சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது'' (மத் 11:27) என்று இயேசுகிறிஸ்து அறிக்கை செய்கிறார். சகலமும் இயேசுகிறிஸ்துவின் பாதபடியில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவின் சித்தத்தின் பிரகாரமாக மனுக்குலத்தை மீட்கும் ஊழியத்தைச் செய்கிறார். 


மனுக்குலத்தை இரட்சிப்பதற்காக இயேசுகிறிஸ்து தம்முடைய இரத்தத்தையே மீட்பின் கிரயமாகச் செலுத்தினார். இந்தக் கிரயத்தினால் வரும் எல்லா சகாயங்களையும்  பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுக்கிறார். இயேசுகிறிஸ்துவின் வார்த்தையும் செயலும் பிதாவை மகிமைப்படுத்துகிறது. ஆகையினால்   ""என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள்''  என்று சொல்லி, தம்முடைய இரத்தத்தினால் கழுவப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டுள்ள எல்லோரையும், இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறார். 


இயேசுகிறிஸ்து யாரையும் நமக்காக இரட்சிக்கவில்லை. தம்மால் இரட்சிக்கப்பட்டவர்களை அவர் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவில்லை. இயேசுகிறிஸ்து இரட்சிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரையும்   பிதாவின் ஊழியத்திற்காக அர்ப்பணிக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சிந்தையே நம்மிடத்திலும் காணப்படவேண்டும்.  இயேசுவைப்போலவே நாமும் ஜெபிக்கவேண்டும்.  நம்முடைய ஜெபத்தில் ""என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள்'' என்னும் வார்த்தை  வெளிப்படவேண்டும். இந்த ஜெபத்தை நாம் ஏறெடுத்து, நம்முடையவைகள் அனைத்தையும்  தேவனுடைய பாதபடியில் அர்ப்பணிக்கவேண்டும்.  நம்முடையவைகள் அனைத்தையும் தேவனுடைய ஊழியத்திற்காகப் பயன்படுத்த வேண்டும். ""ஆண்டவரே என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள். ஆகையினால் என்னிடத்தில் உள்ளவைகள் யாவையும் நீர் காத்துக்கொள்ளும்'' என்று நாம் தேவனிடத்தில் ஜெபிக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்து தம்முடையவைகளைப் பற்றிய  கரிசனையோடிருக்கிறார். ""அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்'' என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். இயேசுகிறிஸ்துவுக்கு இந்த உலகத்தில் பூரண மகிமை உண்டாகவில்லை. சிறிது மகிமை மாத்திரமே உண்டாயிற்று. இயேசுவுக்கு இந்த மகிமையும்  அவருடைய சீஷர்கள்  மத்தியிலே உண்டாயிற்று. ஆகையினால் இயேசுகிறிஸ்து அவர்களுக்காக வேண்டிக்கொள்கிறார். 


தாம் அவர்களில் மகிமைப்படுவதாக இயேசு கூறுகிறார். அவர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தைச் சுமந்துகொள்கிறார்கள். அவர்களில் இயேசுகிறிஸ்துவுக்கு மகிமை உண்டாயிருக்கிறது. இயேசுகிறிஸ்து அவர்களில் மகிமைப்படுகிறார். ஆகையினால் அவர்களைக்குறித்துக் கரிசனையோடிருக்கிறார். அவர்களைப் பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுக்கிறார். பிதாவானவர் குமாரனை மகிமைப்படுத்தவேண்டுமென்று சித்தமுள்ளவராக இருக்கிறபடியினால், அவர்  கிறிஸ்துவின் சீஷர்களைக் காத்துக்கொள்வார். ஏனெனில் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களில் மகிமைப்படுகிறார்.  இயேசுகிறிஸ்து யார் மூலமாக மகிமைப்படுகிறாரோ, அவர்களெல்லோரும்              பிதாவின் கரத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவுக்குரியவர்களாகிய நாம் பிதாவுக்கும் உரியவர்களாக இருக்கிறோம். 


இயேசு கிறிஸ்து தம்மிடத்தில் விசுவாசம் வைத்திருப்பவர்களுக்காக வேண்டிக் கொள்ளும் காரியங்கள்.


    1.  நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்      (யோவான் 17:11,15)


    2. நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும் படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக் கொள்ளும் (யோவான் 17:11,21-23)


    3. அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாய் அடைய வேண்டும். (யோவான் 17:13)


    4. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும். அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்

 (யோவான் 17:17-19; 

யோவான் 10:36)


    5. பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்ததை உலகம் ஏற்றுக் கொள்வதாக.  (யோவான் 17:24)


    6. நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே கூட இருக்க விரும்புகிறேன்.


     7. நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக வேண்டிக் கொள்கிறேன்,   (யோவான் 17:24)


உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும் (யோவா 17 : 11-16)


காத்துக்கொள்ளும் 


நான் இனி உலகத்தி-ரேன், இவர்கள்       உலகத்தி-ருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்

  (யோவா 17:11). 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்காகப் பிதாவினிடத்தில் ஜெபிக்கிறார். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அவர்கள் பெற்றுக்கொள்ளவேண்டுமென்பதே இயேசுகிறிஸ்துவின் பொதுவான ஜெபமாகும். இப்பிரபஞ்சத்தின் ஆசீர்வாதங்களைவிட பரலோகத்தின் ஆசீர்வாதங்களைத் தம்முடைய சீஷர்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று இயேசுகிறிஸ்து சித்தமுள்ளவராகயிருக்கிறார்.  நம்முடைய ஆத்துமா செழிப்பாகயிருப்பதே  நமக்கு மெய்யான செழிப்பாக இருக்கும். நம்முடைய ஆத்துமா வாழ்வது போலவே நாம் செழித்து வாழ்வோம். 


நாம் இந்த பூமியில் இப்போது ஜீவிக்கிறோம். இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவினிடத்தில் நமக்காகப் பரிந்து பேசுகிறார்.  இந்தப் பூமியில் நம்முடைய தேவைகளும், வேதனைகளும் இயேசுகிறிஸ்துவுக்குத் தெரியும்.  பரலோகத்தின் ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக்கொண்டாலும், நாம் இந்தப் பூமியில் இருக்கும் வரையிலும், இந்தப் பூமிக்குரிய காரியங்களும் நமக்குத் தேவைப்படுகிறது. நம்முடைய தேவைகளைப் பிதா தாமே சந்திக்கவேண்டுமென்று இயேசுகிறிஸ்து நமக்காக விண்ணப்பம்பண்ணுகிறார். 


இயேசுகிறிஸ்துவின் ஜெபம் விரிவாகவும் பூரணமாகவும் இருக்கிறது. நம்முடைய ஜெபத்திற்கு இயேசுகிறிஸ்துவின் ஜெபம் முன்மாதிரியாக அமைந்திருக்கிறது. இயேசுகிறிஸ்து இடைவிடாமல் ஜெபிக்கிறார்.  பிதாவினிடத்தில் தாம் கேட்பதைப் பெற்றுக்கொள்வேண்டுமென்று, அதைப் பெற்றுக்கொள்ளும் வரையிலும் போராடி ஜெபிக்கிறார். யாக்கோபு கர்த்தருடைய தூதரோடு போராடியபோது, ""நீர் என்னை  ஆசீர்வதித்தாலொழிய நான் உம்மைப் போகவிடேன்'' என்று போராடி ஜெபித்தான்.  நாமும் அதுபோல போராடி ஜெபிக்கவேண்டும்.  நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்கும் வரையிலும் தொடர்ந்து ஜெபிக்கவேண்டும்.


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்காக ஜெபிக்கும்போது, ""பிதாவானவர் அவர்களை காத்துக்கொள்ளவேண்டும்'' என்பதே முதலாவது ஜெபமாக இருக்கிறது. சீஷர்களுக்கு வரப்போகிற ஆபத்துக்களிலிருந்து தேவன் அவர்களைக் காத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் உலகத்திலிருக்கிறார்கள். இந்த உலகம் சீர்கெட்டுப்போயிருக்கிறது. துன்மார்க்கமான கிரியைகளைச் செய்கிறது. இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்கு இந்த உலகத்தின் மூலமாக ஆபத்துக்கள் வரும். தம்முடைய சீஷர்களைப் பிதாவானவர் இந்த உலகத்தின் ஆபத்துக்களிலிருந்து காத்துக்கொள்ளவேண்டுமென்று இயேசுகிறிஸ்து ஜெபிக்கிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்காக ஜெபிக்கும்போது, அவர்களை  ""நீர் எனக்குத் தந்தவர்கள்'' என்று பிதாவினிடத்தில் கூறுகிறார். இயேசுகிறிஸ்து இனிமேல் உலகத்தில் இருக்கமாட்டார். தம்முடைய சீஷர்களைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகப்போகிறார். இந்த உலகத்திலிருக்கும் தம்முடைய சீஷர்களை இயேசுகிறிஸ்து பிதாவானவரின் பாதுகாப்புக்கும் பராமரிப்புக்கும் ஒப்புக்கொடுக்கிறார். நாம் தேவனுடைய பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் இருப்பது விசுவாசிகளெல்லோருக்கும் ஆறுதலான செய்தியாகும். நாம் கர்த்தருடைய பலத்த கரத்திற்குள் இருக்கும்போது, நம்மை  அவருடைய கரத்திலிருந்து யாரும் பறித்துக்கொள்ளமுடியாது. நாம் அசைக்கப்படுவதில்லை. நாம் தேவனுடைய  பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் இல்லையென்றால்   நமக்கு வேறு மெய்யான பாதுகாப்பு எதுவுமில்லை.


இயேசுகிறிஸ்து தம்முடைய பிள்ளைகளை நேசிப்பதினால், தாம் இந்த உலகத்தில் இனிமேல் இராவிட்டாலும், தம்முடைய சீஷருக்கு    இந்த உலகத்தில் எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று  சித்தமுள்ளவராகயிருக்கிறார். தம்முடைய சீஷரிடத்தில் அன்பாயிருப்பதினால் அவர்களைப் பாதுகாக்கவேண்டுமென்று விரும்பி, அவர்களைத்  தம்முடைய பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுக்கிறார். பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுப்பதற்கு, ""தெய்வீக பாதுகாப்பில் ஒப்புக்கொடுப்பது'' என்று பொருள். 


பிதாவானவர் இயேசுகிறிஸ்துவின் ஜெபத்தைக்கேட்டு, இந்நாள் வரையிலும் விசுவாசிகளைப் பாதுகாத்து வருகிறார். சுவிசேஷ ஊழியமும், சுவிசேஷ சபைகளும் இந்நாள் வரையிலும் இந்த உலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இயேசுகிறிஸ்துவின் ஜெபத்தைக்கேட்டு, பிதாவானவர் இந்தப் பாதுக்காப்பைத் தருகிறார். இயேசுகிறிஸ்து நம்மைப் பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவருடைய தெய்வீக  உபதேசத்திற்கும், போதனைக்கும் நம்மை ஒப்புக்கொடுக்கிறார். நாம்       தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்றால்          நமக்குத் தேவனுடைய வல்லமை தேவை. தேவகிருபையை  பெற்றுக்கொள்ளுவதற்கு மாத்திரமல்ல, நாம்  தேவகிருபையில் நிலைத்திருப்பதற்கும் தேவனுடைய கிருபை நமக்குத் தேவை. 


இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது, பிதாவைப், ""பரிசுத்தப் பிதாவே'' என்று அழைக்கிறார்.  தம்முடைய சீஷர்களைப்பற்றி குறிப்பிடும்போது, ""நீர் எனக்குத் தந்தவர்கள்'' என்று குறிப்பிடுகிறார்.   தேவன் பரிசுத்தப்பிதாவாக இருக்கிறபடியினால் அவர் பாவத்தை வெறுக்கிறார். தம்முடையவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களைப் பாவத்திலிருந்து விலக்கிக் காத்துக்கொள்கிறார். தேவனுக்குரியவர்களும்  பாவத்தை வெறுக்கவேண்டும். தீமையைவிட்டு  விலகி ஜீவிக்கவேண்டும். பிதாவாகிய தேவன், நம்முடைய பரலோகப் பிதாவாகயிருக்கிறபடியினால், அவருடைய பிள்ளைகளாகிய நம்மைப் பாதுகாக்கிறார், பராமரிக்கிறார், காத்துக்கொள்கிறார்.  


நாம் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்வது அனைத்தையும், பிதாவானவருடைய ஈவாகவே பெற்றுக்கொள்கிறோம். இயேசுகிறிஸ்துவின் மூலமாகப் பிதாவுக்கும் நமக்கும் ஐக்கியம் உண்டாயிருக்கிறது. ஆகையினால் இயேசுகிறிஸ்து பிதாவின் 


பாதுகாப்புக்கு நம்மைப்  பாதுகாப்பாக ஒப்புக்கொடுக்கிறார். இயேசுகிறிஸ்து நம்மைப்பற்றிப் பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது ""நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்'' என்று கூறி ஜெபிக்கிறார். நாம் பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது, ""நம்முடைய ஆசைகளை நிறைவேற்றும்'' என்றும், ""நம்முடைய தேவைகளை சந்தியும்'' என்றும் ஜெபிப்பதற்குப் பதிலாக, ""நீர் எங்களை உம்முடைய நாமத்தினிமித்தம் காத்துக்கொள்ளும், ஆசீர்வதியும்'' என்று ஜெபிக்கவேண்டும். அப்போது பிதாவானவர் தம்முடைய நாமத்தினாலே நம்மைக் காத்துக்கொள்வார். 


நமக்கு தேவனைப்பற்றிய அறிவும், தேவனிடத்தில் பயமும் இருக்கவேண்டும். பிதாவின் நாமத்தினால், நமக்குள் தெய்வீக ஞானமும், தெய்வீக பயபக்தியும் இருக்குமாறு, பிதாவானவர் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நாம் செய்யும் ஊழியங்களைப்,  பிதாவானவர் தம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளவேண்டும். கிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்வதற்கு நாம் எப்படிப்பட்ட கிரயத்தைச் செலுத்த வேண்டியதாகயிருந்தாலும்,  அந்தக் கிரயத்தைச் செலுத்தி கிறிஸ்துவின் ஊழியத்தை நாம் தொடர்ந்து செய்யுமாறு, பிதாவானவர் தம்முடைய நாமத்தினாலே நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். 


பிதாவானவர் நம்மைக் காத்துக்கொள்ளும்போது, அவர் நம்மைத் தம்முடைய நாமத்தினாலும், தம்முடைய நாமத்தின் மூலமாகவும் காத்துக்கொள்கிறார். தம்முடைய தெய்வீக பலத்தினாலும், வல்லமையினாலும், அதிகாரத்தினாலும், பலத்த கரத்தினாலும் நம்மைத் தம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்கிறார். தேவனுடைய நாமம் நமக்கு பலத்த துருகமாயிருக்கிறது. 


இயேசுகிறிஸ்து இனிமேல் உலகத்தில் இரார். அவருடைய சீஷர்கள் உலகத்திலிருக்கிறார்கள். அவர்களும் பிதாவையும் குமாரனையும்போல் ஒன்றாய் இருக்கவேண்டும். அதற்காகப் பிதாவானவர் அவர்களை அவருடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்படி இயேசுகிறிஸ்து வேண்டிக்கொள்கிறார். 


இயேசுகிறிஸ்து இனிமேல் உலகத்தில் இருக்கமாட்டாரென்பதே அவருக்குச் சந்தோஷமான செய்தியாகும்.  இயேசு தம்முடைய பிதாவினிடத்திற்குத் திரும்பிப் போகப்போகிறார்.  தம்முடைய ஊழியத்தை நிறைவேற்றிவிட்டுப் பரலோகத்திற்குப் போகப்போகிறார். இயேசுகிறிஸ்து அவருடைய சீஷர்களைவிட்டுப் புறப்பட்டுப்போவது, அவர்களுக்கு வருத்தமாகயிருக்கலாம். ஆனால் இயேசுகிறிஸ்துவுக்கோ இந்த உலகத்தைவிட்டுப்  பரலோகத்திற்குப் போவது பூரண வெற்றியை   அறிவிக்கும் சம்பவமாகும். 


இந்த உலகத்தில் துன்பம் மிகுந்திருக்கிறது. பிரச்சனைகள் நிறைந்திருக்கிறது. இப்படிப்பட்ட உலகத்தைவிட்டு  இயேசுகிறிஸ்து இப்போது புறப்பட்டுப்போகப்போகிறார். இந்த உலகத்தில் இனிமேல் கிறிஸ்து  இருக்கமாட்டார்.   இந்த உலகத்தைவிட்டு அவர் போகும் வேளையானது,  பரலோகத்தில் அவர் வரவேற்கப்படும் வேளையாகவும் இருக்கிறது. 


நாம் இந்த உலகத்திலிருக்கும்போது, நம்மிடத்திலும் இயேசுகிறிஸ்துவின் சிந்தையே காணப்படவேண்டும். நாம் இந்த உலகத்தில்  அதிககாலம் இருக்கமாட்டோம் என்னும் எண்ணம் நமக்குள் எப்போதும் காணப்படவேண்டும். இந்த உலகம் நமக்கு நித்தியமான வாசஸ்தலமல்ல. நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது. ஆகையினால் இப்பிரபஞ்சத்தைவிட்டு, நம்முடைய நித்திய குடியிருப்பான பரலோகத்திற்குப்போவது நமக்குச் சந்தோஷமான அனுபவமாக இருக்கவேண்டும்.  


இயேசுகிறிஸ்து இனி இந்த உலகத்தில் இருக்கமாட்டார். அவர் பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது ""நான் உம்மிடத்திற்கு வருகிறேன்'' என்று கூறுகிறார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் மரிக்கும்போது நமக்கு ஆறுதல் கிடைக்கும். நாம் கிறிஸ்துவுக்காக  ஜீவிக்கிறோம். அவருக்காகவே மரிக்கிறோம். இந்த உலகத்தைவிட்டுக் கடந்துபோவதினால் நமக்கு ஆறுதலும் சந்தோஷம் உண்டாகும்.  நம்முடைய மரணத்தினால் நமக்குப் பாதி ஆறுதல் மாத்திரமே கிடைக்கும். மீதி ஆறுதல் கிடைக்கவேண்டுமென்றால், நாம் இந்த உலகத்தைவிட்டுப் பிதாவாகிய தேவனிடத்திற்குப் போகிறோம் என்னும் சிந்தனை நமக்குள் வரவேண்டும். அப்போதுதான் நம்முடைய சமாதானமும் சந்தோஷமும் பூரணமாயிருக்கும்.  


தேவனை நேசிக்கிறவர்களுக்கு, அவருடைய சமுகத்திற்கு முன்பாக வருவது  மிகுந்த சந்தோஷமாக இருக்கும். மரணத்தின் பள்ளத்தாக்கு வழியாகத்தான், இந்த உலகத்தைவிட்டுக் கடந்து பரலோகத்திற்குப் போகமுடியும்.  மரணத்தின் பள்ளத்தாக்கு வருத்தமும் துக்கமும், கண்ணீரும் நிறைந்ததாக இருக்கும். ஆனாலும் நாம் பிதாவினிடத்திற்குப் போகப்போகிறோம் என்னும் சிந்தனை, மரணத்தின் துக்கத்திலும் நமக்கு சந்தோஷத்தையும் ஆறுதலையும் தரும்.  பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் படித்துவிட்டு, மாலை வேளையில் வீட்டிற்குப் பெற்றோரைப்பார்க்க சந்தோஷமாக வருவதுபோல, நாமும் இந்த உலக வாழ்வை முடித்துவிட்டு, நம்முடைய பரலோகப்பிதாவைப் பார்ப்பதற்கு, மிகுந்த சந்தோஷமாக பரலோகத்திற்கு வரவேண்டும். 


இயேசுகிறிஸ்து இனிமேல் இந்த உலகத்தில் இருக்கமாட்டார். ஆனாலும் உலகத்திலிருக்கிற தம்முடைய சீஷர்களைக்குறித்து மிகுந்த கரிசனையோடிருக்கிறார். ""இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள். நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்'' என்று மிகுந்த கரிசனையோடு ஜெபிக்கிறார்.  சீஷர்கள் இயேசுகிறிஸ்துவின் சரீரப்பிரகாரமான  பிரசன்னத்தை விரும்புகிறார்கள். இயேசுகிறிஸ்துவோ அவர்களைப் பிதாவின் பிரசன்னத்திற்கு ஒப்புக்கொடுக்கிறார். அவர்கள்  பாதுகாக்கப்பட வேண்டுமானால், அவர்களை  இப்போது             அதிகமாய் காத்துக்கொள்ளவேண்டும். பிதாவானவர் தம்முடைய               நாமத்தினாலே அவர்களைக் காத்துக்கொள்ளவில்லையென்றால், அவர்கள் வழிவிலகிக் காணாமல் போய்விடுவார்கள். 


இயேசுகிறிஸ்து இந்த உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்போது, இந்த உலகத்தில் விட்டு வந்திருக்கும் தம்முடைய சீஷர்களைப்பற்றிய கரிசனையோடு  பரலோகத்திற்குப் போகிறார். பிதா தமக்குத் தந்தவர்கள் இப்போது உலகத்திலிருக்கிறார்கள் என்னும் சிந்தனையும், தாம் இனி உலகத்தில் இருக்கமாட்டோம் என்னும் சிந்தனையும் இயேசுகிறிஸ்துவின் இருதயத்தில் நிறைந்திருக்கிறது. பொதுவாக நாம் ஒருவரை  அதிக நாட்களாகக் காணவில்லையென்றால் அவர்களை மறந்துவிடுவோம். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தம்முடைய சீஷர்களைவிட்டுப் பிரிந்துபோனாலும், அவர்களைப்பற்றி மறந்துவிடாமல், அவர்களுக்காகப் பிதாவினிடத்தில் ஜெபிக்கிறார்.  இயேசுகிறிஸ்துவின் சிந்தனையில் சீஷர்களைப்பற்றிய எண்ணம் நிரம்பியிருக்கிறது.  


உலகம் அவர்களைப் பகைத்தது


நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது  (யோவா 17:14). 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள், அவருடைய நாமத்தினிமித்தமாக, இந்த உலகத்தில் பல பாடுகளை அனுபவிப்பார்கள்.  இயேசுகிறிஸ்து பிதாவின் வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். இயேசுகிறிஸ்து இந்த உலத்தாரல்ல. அவரைப்போலவே அவருடைய சீஷர்களும் இந்த உலகத்தாரல்ல. ஆதலால் இந்த உலகம் அவர்களைப் பகைக்கிறது.


இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தம்முடைய சீஷரோடிருந்தபோது, இந்த உலகம் அவர்களைப் பகைத்தது. இயேசுகிறிஸ்து சீஷர்களைவிட்டுத் தம்முடைய பிதாவினிடத்திற்குப் போனபின்பு, சீஷர்மீது இந்த உலகத்தின் பகை குறைந்துபோய்விடவில்லை. இயேசுகிறிஸ்துவின் பிரதான கட்டளைக்குக் கீழ்ப்படிந்து,  அவருடைய சீஷர்கள் உலகமெங்கும் சென்று இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணுகிறார்கள். இவர்கள் செல்லுமிடங்களிலெல்லாம், ""உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்'' என்று சொல்லி அவர்களைப் பகைக்கிறார்கள்.  ஏற்கெனவே பகைத்ததைவிட இப்போது இந்த உலகம் சீஷர்களை இன்னும் அதிகமாகவே பகைக்கிறது.  


உலகம் அவர்களைப் பகைப்பதினால், பிதாவானவர் அவர்களைச் சிநேகிக்கவேண்டுமென்று இயேசுகிறிஸ்து வேண்டிக்கொள்கிறார். உலகத்தின் பகை அவர்களை நெறுக்குகிறபோது, பிதாவின் சிநேகமும் அன்பும் அவர்களுக்குத் தேவைப்படுவதாக இயேசுகிறிஸ்து வேண்டிக்கொள்கிறார். பலவீனமானவர்களைப் பலப்படுத்துவது தேவனுடைய சித்தம். இதனால் தேவனுக்கு மகிமை உண்டாகும். உதவியற்றவர்களுக்கு இயேசுகிறிஸ்து உதவி செய்ய விரும்புகிறார். அதுபோலவே உபத்திரவப்படுகிறவர்களுக்கு இயேசுகிறிஸ்து சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொடுக்கவிரும்புகிறார். இந்த உலகம் சீஷர்களைப் பகைக்கும்போது, பிதாவானவர் அவர்களைச் சிநேகிக்கிறார். 


இந்த உலகம் சீஷர்களை ஒரே காரணத்திற்காகத்தான் பகைக்கிறது.      அவர்கள் இந்த உலகத்திலிருந்தாலும், இந்த உலகத்தாரல்ல. அவர்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு  ஒத்த வேஷம் தரிக்கவில்லை. இயேசுகிறிஸ்துவின் கரங்களிலிருந்து அவர்கள் பிதாவின் வார்த்தையைப் பெற்றிருக்கிறார்கள்.  இந்த உலகமோ தேவனுடைய வார்த்தையைத்  ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. கர்த்தருடைய வார்த்தையை இந்த உலகம் புறக்கணித்துவிட்டது. ஆனால் கிறிஸ்துவின் சீஷர்களோ தேவனுடைய வார்த்தையை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தை உலகத்திற்குப் பிடிக்கவில்லை. சீஷருக்குப் பிடித்திருக்கிறது. ஆகையினால்  இந்த உலகம் அவர்களைப் பகைக்கிறது. 


கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் இந்த உலகத்தில் தேவனுடைய வார்த்தையைப் பெற்றிருக்கிறோம். அவருடைய சித்தத்தின் பிரகாரமாக  ஊழியம் செய்கிறோம். இந்த உலகம் கிறிஸ்துவின் சீஷர்களைப் பகைத்ததுபோல நம்மையும் பகைக்கும். நாமும் இந்த உலகத்திலிருந்தாலும், இந்த உலகத்தாரல்ல. கர்த்தருக்காக ஊழியம் செய்கிற நாம், இந்த உலகத்தில் நமக்கு உபத்திரவம் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. பாடுகள் வழியாகவும், உபத்திரவங்கள் வழியாகவும் நாம் கடந்துசெல்லும்போது, மது தேவனுடைய உதவியும் ஒத்தாசையும் நம்மோடு கூடயிருக்கும்.  


கர்த்தருடைய ஊழியக்காரர்கள் இந்த உலகத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள்  இந்த உலகத்திலிருந்தாலும் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிப்பதில்லை. இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஊழியக்காரர்கள் உலகத்தாரிடம் பிரசங்கம்பண்ணும்போது, அவர்களை உலகத்தின் பிடியிலிருந்து விடுவித்து, கர்த்தருடைய பிரசன்னத்திற்குக் கொண்டு வருகிறார்கள். இரட்சிக்கப்படுகிற ஜனங்கள்  தங்களைவிட்டு நீங்கிப்போய்விட்டதினால், இந்த உலகம் இரட்சிக்கப்படுகிறவர்களையும் பகைக்கிறது, அவர்களுக்கு இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவிக்கும் ஊழியக்காரர்களையும் பகைக்கிறது. 


கர்த்தருடைய பிள்ளைகள் உலகத்துக்கும், உலகத்தின் பாவங்களுக்கும் எதிராகப் பிரசங்கம்பண்ணுகிறார்கள். இந்தப் பிரசங்கத்தை உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையினால்  தங்களுக்கு விரோதமாகப் பிரசங்கம்பண்ணும் கர்த்தருடைய ஊழியக்காரர்களை இந்த  உலகம் பகைக்கிறது.  நம்முடைய பிரசங்க வார்த்தை  நம்முடைய சொந்த வார்த்தையல்ல. கர்த்தருடைய சுவிசேஷத்தை நாம் பிரசங்கம்பண்ணுகிறோம். இயேசுகிறிஸ்துவே தேவனுடைய வார்த்தையை நமக்குக் கொடுத்திருக்கிறார். நம்மிடத்தில் தேவனுடைய வார்த்தை இருப்பதினால் இந்த உலகம் நம்மைப் பகைக்கிறது. நமக்குத் தீங்கு செய்ய முயற்சிபண்ணுகிறது இந்த உலகத்தின் தீமையிலிருந்து பிதாவானவர் நம்மைக் காக்கும்படி, இயேசுகிறிஸ்து நமக்காக வேண்டிக்கொள்கிறார். 


கிறிஸ்துவின் வார்த்தையைப் பெற்றிருக்கிற ஊழியக்காரர்கள், அதைத் தங்களுடைய இருதயங்களில் காத்துக்கொள்ளவேண்டும். கர்த்தருடைய பிரதான கட்டளைக்குக் கீழ்ப்படிந்து பயபக்தியோடும் பொறுமையோடும் உலக ஜனத்தாருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணவேண்டும். இந்த உலகம் நம்மைப் பகைத்தாலும் இந்த உலகத்தின் மூலமாக நமக்குத் தீமை வந்தாலும், இவையெல்லாவற்றிற்கும் நடுவில் தேவனுடைய விசேஷித்த பாதுகாப்பும் பராமரிப்பும் நமக்கு வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. 


கர்த்தருடைய பிள்ளைகளில் சிலர் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணுவதின் நிமித்தமாக இரத்த சாட்சியாக மரித்திருக்கிறார்கள். இவர்கள் கர்த்தருக்காக  சந்தோஷமாகப் பாடுகளை அனுபவித்திருக்கிறார்கள். கர்த்தருடைய சந்தோஷம் இவர்களுக்குள் நிறைவாகயிருப்பதினால் மரணம் இவர்களைப்  பயப்படுத்தவில்லை. தேவனுடைய நாம மகிமைக்காக, இவர்கள் தங்களையே மரணத்திற்குச் சந்தோஷமாக ஒப்புக்கொடுக்கிறார்கள்.


இந்த உலகம் கர்த்தருடைய பிள்ளைகளைப் பகைக்கிறது. ஏனெனில் இவர்கள்  உலகத்தாரல்ல. கர்த்தருடைய ஊழியக்காரர்களிடத்தில்தான், கர்த்தருடைய வார்த்தை மிகுந்த வல்லமையோடு வருகிறது. அவர்கள் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கம்பண்ணும்போது, தேவன் தம்முடைய வார்த்தையை அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதிபண்ணுகிறார். கர்த்தருடைய பிள்ளைகள்  உலகத்திற்கும், உலகத்தின் பாவங்களுக்கும் விரோதமாக இயேசுவின் நாமத்தினால் பிரசங்கம்பண்ணும்போது, உலகத்தார் கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு மனந்திரும்பி இரட்சிக்கப்படுவதற்குப் பதிலாக,  கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்து, அதைத் தங்களுக்குப் பிரசங்கம்பண்ணும் கர்த்தருடைய ஊழியக்காரர்களைப் பகைக்கிறது.   அவர்களுக்கு தீங்கு செய்ய நினைக்கிறது.


தீமையினின்று காக்கும்படி


நீர் அவர்களை உலகத்தி-ருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்  (யோவா 17:15). 


 பிதாவானவர் தமது நாமத்தினாலே சீஷர்களை காத்துக்கொள்ளுமாறு இயேசுகிறிஸ்து விண்ணப்பம்பண்ணுகிறார். சீஷர்கள் இந்த உலகத்தாரல்ல. ஆகையினால் இந்த உலகம் அவர்களைப் பகைக்கிறது.


 இந்த உலகத்தில் சீஷர்களுக்குப் பிரச்சனை உண்டாகக்கூடாது என்றால் அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. 


அவையாவன: 

1. சீஷர்களை இந்த உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். 


 2. பிதாவானவர் சீஷர்களை தீமையினின்று காத்துக்கொள்ளவேண்டும். இவ்விரண்டில் எது நடந்தாலும் சீஷர்களை இந்த உலகத்திலிருந்து காத்துக்கொள்ளலாம். 


இயேசுகிறிஸ்துவோ தம்முடைய சீஷர்களுக்காக ஜெபிக்கும்போது, பிதாவானவர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளவில்லை. அவர்கள் உலகத்தில்தான் இருக்கிறார்கள். உலகத்திலிருந்து அவர்களைக் காப்பதற்காக, அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று இயேசுகிறிஸ்து விண்ணப்பம்பண்ணுகிறார். உலகத்திலிருந்து எடுத்துக்கொள்வது  என்பதற்கு  ""அவர்களுக்கு சரீர மரணம் உண்டாவது'' என்று பொருள். தம்முடைய சீஷர்களுக்கும் சரீர மரணம்  விரைவில் உண்டாகவேண்டும் என்று இயேசுகிறிஸ்து ஜெபிக்கவில்லை.


இந்த உலகம் கிறிஸ்துவின் சீஷர்களைப் பகைக்கிறது. இந்தப் பகையிலிருந்து சீக்கிரமாக விடுதலைபெறவேண்டுமென்றால், இந்த உலகத்தைவிட்டுக் கடந்துபோய்விடுவது ஒரு வழி. பிதாவானவர் வானத்திலிருந்து இரதங்களையும் குதிரைகளையும் அனுப்பி, இந்தப் பூமியில் தீமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் இயேசுகிறிஸ்துவின் சீஷர்களைப், பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். ஆனால்  இப்படிப்பட்ட சம்பவம் தம்முடைய சீஷர்களுக்கு நடைபெறவேண்டுமென்று இயேசுகிறிஸ்து ஜெபிக்கவில்லை. 


இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் ஜெயம் கொள்ளுகிறவராக வந்திருக்கிறார். சோதனைகளைச் சகித்துக்கொள்கிறவராக, நீடிய பொறுமையுள்ளவராக இயேசுகிறிஸ்து அவர்கள் மத்தியிலே இருக்கிறார். பொதுவாக மனுஷனுக்குப் பிரச்சனைகள் அதிகமாகும்போது அவனுடைய பொறுமை அவனைவிட்டு நீங்கிப்போகும். தன்னுடைய ஜீவன் எப்போது முடியுமென்று காத்துக்கொண்டிருப்பான். சில சமயங்களில் பிரச்சனையின் வேதனை தாங்காமல் அவன் தன்னையே மாய்த்துக்கொள்வான். ஆனால் இயேசுகிறிஸ்துவோ எல்லா பாடுகளின் வழியாகச் சென்றாலும், அவர் பொறுமையுள்ளவராக அவையெல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறார். 


இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய சிலுவையை எடுத்துக்கொண்டு அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றவேண்டும். சிலுவையைக் கீழே இறக்கிவைத்துவிட்டு, அதைச் சுற்றி விலகிப் போய்விடலாம் என்று நினைக்கக்கூடாது. இது இயேசுகிறிஸ்துவின் உபதேசமல்ல. 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு,  இந்த உலகத்திலே உன்னதமான ஊழியத்தை நியமித்திருக்கிறார். இந்த உலகம் அவர்களைப் பகைக்கலாம். இந்தப் பகைகளுக்கு மத்தியிலும் கிறிஸ்துவின் சீஷர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியத்தைத் தொடர்ந்து செய்யவேண்டும். இந்த உலகம் தேவனை அறியாமல் ஆவிக்குரிய இருளிலிருக்கிறது. இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வெளிச்சமாகயிருக்கிறார். கிறிஸ்துவின் சீஷர்களும் இந்த உலகத்திற்கு வெளிச்சத்தைக் கொடுக்கிறார்கள். உலகத்தாரின் கிரியைகள்  அந்தகாரமும், பாவமும், துன்மார்க்கமும் நிறைந்ததாக இருக்கிறது. கிறிஸ்துவின் வெளிச்சத்தில் உலகத்தாரின் பாவம் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆகையினால்  இந்த உலகத்தார் கிறிஸ்துவின் வெளிச்சத்தையும், சீஷர்களின் வெளிச்சத்தையும் அகற்றிவிட வேண்டுமென்று  தீர்மானமாயிருக்கிறார்கள். 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் பிரதான கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, உலகம் முழுவதும் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணுகிறார்கள். இவர்களுடைய ஊழியத்தின் மூலமாக ஏராளமான ஜனங்கள்  இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள். இவர்கள் ஒரு காலத்தில்          இந்த உலகத்திற்குரியவர்களாகயிருந்தார்கள்.  இப்போதோ இயேசுகிறிஸ்துவுக்குரியவர்களாகயிருக்கிறார்கள்.  ஆகையினால் இந்த உலகம் அவர்களையும் பகைக்கிறது. இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகள், எல்லோருமே கர்த்தருக்குச் சித்தமானால்,  இரத்தசாட்சியாக மரிக்க ஆயத்தமாயிருக்கிறார்கள். ஆனால் நாமே முன்வந்து மரணத்தைத் தேடிப்போகக்கூடாது.  நமக்கு நியமிக்கப்பட்ட காலத்தில் மரணம் நம்மைத்தேடி வரும். அது வரும்போது அதைச் சந்திப்பதற்கு ஆயத்தமாகயிருக்கவேண்டும். அதுவரையிலும் இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் நமக்குக் கொடுத்திருக்கும் ஊழியத்தைப் பயபக்தியோடும், உண்மையோடும், உத்தமமாகவும் செய்து நிறைவேற்றவேண்டும்.  தேவன் நமக்கு நியமித்து வைத்திருக்கும் ஓட்டத்தை ஓடி முடிக்காமல், பாதிவழியிலேயே ஓட்டத்தை விட்டு விலகிப்போய் செத்துப்போய்விடக்கூடாது. பிதாவானவர் தம்முடைய சீஷர்களை இந்த உலகத்தின் தீங்குகளிலிருந்து காத்துக்கொள்ளவேண்டுமாறு  இயேசுகிறிஸ்து விண்ணப்பம்பண்ணுகிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் அன்பாகயிருக்கிறார். ஆனாலும் தாம் பரலோகத்திற்குப் போகும்போது, தம்முடைய சீஷர்களையும் தம்மோடுகூட, இப்போது பரலோகத்திற்கு அழைத்துச்செல்வது இயேசுகிறிஸ்துவின் சித்தமல்ல. நல்லவர்கள் இந்த உலகத்தின் பாடுகளை அனுபவிக்காமல், அவர்களை இந்த உலகத்திலிருந்து எடுத்துக்கொள்வது நல்லதுதான். சரீர மரணம் குடும்பத்தில் வேதனையை உண்டாக்கினாலும், பரிசுத்தவானின் மரணம் சந்தோஷமான அனுபவமே. ஆனாலும் நம்முடைய விருப்பத்தின் பிரகாரம் இயேசுகிறிஸ்து நமக்கு மரணத்தைக் கொடுப்பதில்லை. தம்முடைய சித்தத்தின் பிரகாரம், தமக்கு ஏற்றவேளையில்தான், நமக்கு மரணத்தைக் கொடுக்கிறார். அதுவரையிலும் இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தை நாம் உண்மையாகச் செய்யவேண்டும். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை அதிகமாக நேசித்தாலும், அவர்களைத் தம்மோடுகூட உடனடியாக பரலோகத்திற்கு அழைத்துச்செல்லாமல், அவர்களை இந்த உலகத்தில் சிறிது காலம் விட்டுச்செல்கிறார்.  அவர்கள் பரலோகத்திற்குள் பிரவேசிப்பதற்கு  பக்குவப்படவேண்டும். சீஷர்களைப்போலவே இன்னும் ஏராளமான பரிசுத்தவான்கள் தங்கள் மரணத்தைச் சந்திக்காமல் இந்தப் பூமியில் உயிரோடிருக்கிறார்கள். இவர்கள்மீதுள்ள அன்பினால் இயேசுகிறிஸ்து இவர்களை மரணத்திற்குப் பக்குவப்படுத்துகிறார். அதேவேளையில் அவர்கள் பரலோகத்திற்குள்  பிரவேசிப்பதற்கும் அவர்களைப் பக்குவப்படுத்துகிறார். 


சீஷர்கள் இந்த உலகத்திலிருக்கும்போது, அவர்களுக்கு இந்த உலகத்தின் மூலமாக பிரச்சனைகள் வரும். அவர்களுக்கு ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்று இயேசுகிறிஸ்து அவர்களுக்காக ஜெபிக்கவில்லை. இந்த உலகத்தில் நமக்குப் பிரச்சனைகள் வந்தாலும், அந்தப் பிரச்சனைகள்  நம்மை மேற்கொள்ளக்கூடாது. நாம் பாடுகளுக்கும், பிரச்சனைகளுக்கும் வேதனைகளுக்கும் கண்ணீர்களுக்கும் அடிமைகளாகிவிடக்கூடாது. இந்த உலகம் நம்மை ஜெயிக்கக்கூடாது. நாம் இந்த உலகத்தை ஜெயிக்கிறவர்களாக இருக்கவேண்டும். இந்த உலகத்தின் பிரச்சனைகளிலிருந்து விலகி ஓடிப்போவதைவிட, இயேசுகிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்து, அந்தப் பிரச்சனைகளைச் சந்தித்து, அவற்றை மேற்கொள்வதன் மூலமாகவே, இயேசுகிறிஸ்துவின் நாமம் அதிகமாய் மகிமைப்படும். உலகத்தின் பிரச்சனைகளுக்குப் பயந்து, தனிமையான இடத்திற்கு ஓடிப்போய், அங்கு தனிமையில் ஜீவித்து, இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வதைவிட, ஜனங்கள் இருக்குமிடத்தில், அவர்கள் மத்தியில், அவர்கள் மூலமாகப் பாடுகள் வந்தாலும், அங்கு இயேசுகிறிஸ்துவுக்கு  ஊழியம் செய்வதுதான் மேன்மையான ஊழியம். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு ஜெபம்பண்ணுவதைப்பற்றிக் கற்றுக்கொடுக்கிறார். ""தீமையினின்று எங்களைக் காத்துக்கொள்ளும்'' என்று சீஷர்கள் அனுதினமும் ஜெபம்பண்ணவேண்டும். தீமையினின்று காத்துக்கொள்ளும் என்பதற்கு தீமை செய்கிறவனிடத்தினின்று காத்துக்கொள்ளும் என்று பொருள்கூறலாம். சோதிக்கிறவனாகிய சாத்தானிடத்தினின்று  காத்துக்கொள்ளும் என்றும் இந்த வார்த்தைக்குப் பொருள் சொல்லலாம். தீமை செய்கிறவன் அதிக தீமை செய்வதினால் சீஷர்களுடைய விசுவாசம் பலவீனமாய்ப் போய்விடக்கூடாது. ஆகையினால் ""நீர் அவர்களைத் தீமையினின்று  காக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்காக பிதாவினிடத்தில் ஜெபிக்கிறார். 


சீஷர்கள் தீங்குசெய்யாதவாறு அவர்களைக் காத்துக்கொள்ளவேண்டும். இந்த உலகத்தின் தீங்குகளிலிருந்தும், இந்த உலகத்திலிருந்து வரும் உபத்திரவங்களிலிருந்தும் பிதாவானவர் கிறிஸ்துவின் சீஷர்களைக் காத்துக்கொள்ளவேண்டும். இந்த உலகத்தின் மூலமாக சீஷர்களுக்கு வரும்பாடுகள், அவர்களைக் குத்துகிற முள்ளைப்போல இருக்கக்கூடாது. சீஷர்களுக்கு ஒரு தீமையும் வராது என்னும் உத்திரவாதம் இல்லை. அவர்கள் இந்த உலகத்தில் இருக்கும் வரையிலும்  இந்த உலகத்தின் மூலமாக அவர்களுக்குத் தீங்குகள் உண்டாகும். தீங்குகள் வந்தாலும், சீஷர்கள் தீங்குகள் வழியாகக் கடந்துபோக வேண்டும். அதற்காகப் பிதாவானவர் அவர்களைப் பலப்படுத்தவேண்டுமென்றும், தீங்குகளை மேற்கொண்டு,  தங்களுடைய இலக்கை நோக்கி முன்னேறிச்செல்ல அவர்களைப் பலப்படுத்த வேண்டுமென்றும், இயேசுகிறிஸ்து விண்ணப்பம்பண்ணுகிறார்.


தம்முடைய சீஷர்கள் எல்லாரும் இந்த உலகப் பாடுகளிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவதற்காக மரித்துப் போகவேண்டுமென்றோ அல்லது உலகத்திலுள்ள ஜனங்களிடமிருந்து தங்களைப் பிரித்து, தனிமையான இடங்களில் வாழவேண்டும் என்றோ இயேசு கிறிஸ்து விண்ணப்பம் பண்ணவில்லை. சோதனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக சீஷர்கள் இப்படி ஓடிப்போவது இயேசு கிறிஸ்துவின் சித்தமல்ல. அவர்கள் இந்த உலகத்திற்கு இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரிகளாகவும், ஒளியாகவும் ஜீவிக்க வேண்டும்.


அவர்கள் உலகத்தாரல்ல


நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல  (யோவா 17:16). 


இயேசுகிறிஸ்து இந்த உலகத்தாரல்ல. அவரைப்போலவே அவருடைய சீஷர்களும் இந்த உலகத்தாரல்ல. இவர்கள் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கவில்லை. இந்த விஷயத்தில்  இயேசுகிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் ஒன்றாயிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து இந்த உலகத்திலிருந்தபோது பிதாவானவரும் பாதுகாப்பும் பராமரிப்பும், வழிநடத்துதலும் அவரோடு கூடயிருந்தது. அதுபோலவே நாமும் இந்த உலகத்திலிருக்கும்போது, இயேசுகிறிஸ்துவின் பாதுகாப்பும் பராமரிப்பும் வழிநடத்துதலும் நமக்குத் தேவை. இவற்றை ஜெபத்தின் மூலமாக, விசுவாசத்தில் பெற்றுக்கொள்ளவேண்டும். தேவனுடைய பாதுகாப்புக்கும், பராமரிப்புக்கும், நம்மை விசுவாசத்தோடு தேவனுடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கவேண்டும். பிதாவானவர் இயேசுகிறிஸ்துவில் அன்பாயிருப்பதுபோல நம்மிடத்திலும் அன்பாயிருக்கிறார். நாம் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவருக்குப் பிரியமாக ஜீவிக்கும்போது, பிதாவானவரின் அன்பும் பாதுகாப்பும் நமக்குக் கொடுக்கப்படும். 


இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்குரியவரல்ல. இயேசுகிறிஸ்து ஒருபோதும் தம்மை இந்த உலகத்தாராகக் காண்பித்துக்கொள்ளவில்லை. அவர் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கவுமில்லை. இந்த உலகத்தின்மீதோ அல்லது இந்த உலகத்தின் காரியங்கள்மீதோ இயேசுகிறிஸ்துவுக்குப் பிரியமோ, பற்றுதலோ இல்லை. இந்த உலகத்தின் சம்பத்து எதுவும் அவரிடத்திலில்லை.  அவர் இந்த உலகத்தில் இருந்தகாலத்தில் அவருக்கென்று இப்பிரபஞ்சத்தில் அசையும் 


சொத்துக்களோ, அசையா சொத்துக்களோ எதுவுமில்லை. அவர்  தலைசாய்க்க இடமில்லாதவராகவே இந்த உலகத்திலிருந்தார்.  இந்த உலகத்தின் அரசியல் அதிகாரம், அரசியல் செல்வாக்கு எதுவும் அவரிடத்திலில்லை. 


இயேசுகிறிஸ்துவின் ஆவி இந்த உலகத்திற்கு மரித்தப்போனதாகவே இருந்தது.  இந்தப் பிரபஞ்சத்தின் பிரபுவுக்கு இயேசுகிறிஸ்துவின் ஆவியில் பங்குமில்லை பாத்தியமுமில்லை. கிறிஸ்துவின் ஆவியில் கிரியை செய்ய இப்பிரபஞ்சத்தின் பிரபுவுக்கு ஒரு காரியமுமில்லை. இயேசுகிறிஸ்துவைப்போலவே, அவரை விசுவாசிக்கிறவர்களாகிய நாமும், இந்த  உலகத்திலிருந்தாலும், இந்த உலகத்தாராக இருக்கக்கூடாது. இந்த உலகத்தின் காரியங்களுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து, உலகத்தின் ஆசாபாசங்களில் நாம் சிக்கிக்கொள்ளக்கூடாது. உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கக்கூடாது. இயேசுகிறிஸ்துவை சிநேகிப்பதைவிட,  இந்த உலகத்தை அதிகமாக சிநேகித்து அவஸ்தைப்படக்கூடாது. இந்த உலகத்தின் சிறைசாலையில் அடைக்கப்பட்டு, உலககாரியங்களினால் நாம் ஆளுகை செய்யப்படக்கூடாது. 


கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மை தேவன் இந்த உலகத்திலிருந்து விடுதலை செய்திருக்கிறார். இது நமக்குக் கிடைத்திருக்கும் சிலாக்கியம். நமக்கு விடுதலை வாக்குப்பண்ணப்பட்டிருக்கும்போது, நாம் இந்த உலகத்தின் அடிமைகளாகவே இருப்போமென்று அடம்பிடிக்கக்கூடாது. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் எல்லோருமே இந்த உலகத்திற்கு மரிக்கவேண்டும். இது விசுவாசிகளின் கடமை.  இது விசுவாசிகளின் சுபாவமாக இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் விசுவாசத்தில் பலவீனமாக இருந்தார்கள். அவர்களிடத்தில் பல குறைகள் காணப்பட்டன.  இருந்தாலும் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைப்பற்றிச் சொல்லும்போது ""அவர்கள் உலகத்தாரல்ல'' என்று அவர்களைப்பற்றி சாட்சியாக அறிவிக்கிறார். தம்முடைய சீஷர்கள் உலகத்தார் அல்லாமல் இருப்பதினால், இயேசுகிறிஸ்து அவர்களைப் பரலோகத்தின் பராமரிப்புக்கு ஒப்புக்கொடுத்து, பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறார். 


உம்முடைய வசனமே சத்தியம்

(யோவா 17 : 17-19)


அவர்களைப் பரிசுத்தமாக்கும்


     உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்  (யோவா 17:17). 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் இந்த உலகத்தில்          தீமையினின்று காக்கப்பட்டால் மாத்திரம் போதாது. ""அவர்கள் பரிசுத்தமாக்கப்படவும்வேண்டும்'' என்று இயேசுகிறிஸ்து விரும்புகிறார். இதற்காக இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். ""உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்'' என்பதே இயேசுகிறிஸ்துவின் விண்ணப்பம். அப்போஸ்தலர் பவுல் விசுவாசிகளுக்காக ஜெபிக்கும்போது "" சமாதானத்தின் தேவன் தாமே உங்களைமுற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவிஆத்துமா சரீரம் முழுவதும்,  நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக'' (1தெச 5:23) என்று கூறி ஜெபிக்கிறார். 


தேவனுடைய கிருபையினால் மாத்திரமே நாம் பரிசுத்தமாக்கப்படுகிறோம். எல்லா விசுவாசிகளும் பரிசுத்தமாக்கப்படவேண்டும். ஆகையினால்தான் இயேசுகிறிஸ்து ""உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார். அவர் தம்முடைய சீஷர்களுக்காகவும், நமக்காகவும் ஜெபிக்கிறார். பிதாவானவர் நமக்குள் பரிசுத்தமாக்கும் கிரியை நடப்பிக்கிறவர்.  பரிசுத்தமாக்கும் கிரியை நமக்குள் பரிபூரணமாக நடைபெறவேண்டுமென்றும், அதனால் நல்ல விளைவுகள் உண்டாகவேண்டும் என்றும் இயேசுகிறிஸ்து விரும்புகிறார். பிதாவானவர் நமக்குள் செய்கிற தம்முடைய நற்கிரியையை இன்னும் அதிகமாக செய்யவேண்டுமென்று இயேசுகிறிஸ்து விண்ணப்பண்ணுகிறார். இதன் விளைவாக நம்மிடத்தில் வெளிச்சம் இன்னும் அதிகப் பிரகாசமாக இருக்கும். பிதாவானவர் தம்முடைய பரிசுத்தமாக்கும் கிரியையை நமக்குள் நிறைவேற்றவேண்டுமென்றும், நம்முடைய ஜீவியகாலம் முழுவதும், முற்றும் முழுவதுமாகப் பிதாவானவர் நம்மை பரிசுத்தப்படுத்தவேண்டுமென்றும் இயேசுகிறிஸ்து  பிதாவினிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். 


இயேசுகிறிஸ்து தமக்குரியவர்களைப் பரிசுத்தப்படுத்தவேண்டுமென்று விரும்புகிறார்.  இப்போது நம்மிடத்தில் அவர் எதிர்பார்க்கிற பரிசுத்தம் காணப்படாவிட்டாலும், அவர் நம்மை  தமக்குச் சொந்தவமானவர்கள் என்று அறிவிக்க  வெட்கப்படவில்லை. நாம் பாவிகளாகயிருக்கையிலேயே இயேசுகிறிஸ்து நம்மைத் தேடி இந்தப் பூமிக்கு வந்திருக்கிறவர்.  நம்மீது கிருபையும் இரக்கமும் இருப்பதினால், இயேசுகிறிஸ்து நம்மைப் பிதாவின் கரங்களில் ஒப்புக்கொடுத்து, நம்மைப் பரிசுத்தப்படுத்துமாறு விண்ணப்பம்பண்ணுகிறார். தேவனுடைய கிருபையினால் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறவர்கள் இன்னும் அதிகமாகப் பரிசுத்தமாக்கப்படவேண்டும்.  நம்முடைய பரிசுத்தத்தில் முன்னேற்றம் காணப்படவில்லையென்றால், நாம் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்றுதான் பொருள். முன்செல்லவில்லையென்றால் பின்செல்கிறோம் என்பதே அர்த்தமாம். பரிசுத்தமாயிருக்கிறவன்  இன்னும் பரிசுத்தமாயிருக்கட்டும் என்பதுதான் கிறிஸ்துவின் உபதேசம். நம்மைப் பரிசுத்தப்படுத்துகிற தேவனே, நம்மை நீதிமானாக்குகிறார். 


பிதாவானவர் தம்முடைய சத்தியத்தினாலே, சீஷர்களைப் பரிசுத்தப்படுத்தவேண்டுமென்றுஇயேசுகிறிஸ்து விண்ணப்பம்பண்ணுகிறார். பிதாவின் வசனமே சத்தியம். அந்தச் சத்தியத்தினால் மாத்திரமே நாம் பரிசுத்தப்படுத்தப்படுகிறோம். தேவனுடைய தெய்வீக வெளிப்பாடு, இப்போது எழுதப்பட்டிருக்கிற வார்த்தையாக நம்முடைய கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வசனம் முழுவதும் பரிசுத்தமானது. இதில் எந்தவிதப் பொய்யின் கலப்புமில்லை. தேவனுடைய வார்த்தையில் பிழை எதுவுமில்லை. குறைவு எதுவுமில்லை. சத்திய வசனம் பரிபூரணமாக இருக்கிறது. தேவனுடைய சத்தியத்தைப் பரிசுத்த வேதாகமம் பரிபூரணமாக வெளிப்படுத்துகிறது. சத்திய வசனமே நம்மை உள்ளாகவும் புறம்பாகவும் சுத்தப்படுத்த வேண்டும். நம்முடைய புதிய பிறப்புக்கு சத்திய வசனமே வித்தாகயிருக்கிறது. நம்முடைய புதிய ஜீவனுக்கு  சத்திய வசனமே போஜனமாகயிருக்கிறது. 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்காக ஜெபிக்கும்போது, அவர்களைத்  தம்முடைய விசுவாசிகளாகவும், ஊழியக்காரர்களாகவும் காண்கிறார். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் அப்போஸ்தல ஊழியத்தைச் செய்வதற்கு பிதாவானவர் அவர்களைப் பரிசுத்தப்படுத்தவேண்டும். அவர்களுடைய ஊழியம் பரலோகத்தில் அங்கீகரிக்கப்படவேண்டும். அப்போஸ்தல ஊழியத்தைச் செய்வதற்கு சீஷர்கள் தகுதியுள்ளவர்களாக இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் ஊழியவரங்களும் சீஷர்களுக்கு அருளப்படவேண்டும். 


இயேசுகிறிஸ்து தாமே தம்முடைய சீஷர்களை அழைத்து, அவர்களைத் தம்முடைய ஊழியத்திற்காகப் பிரித்தெடுத்து, தம்முடைய ஊழியத்தைச் செய்வதற்குப் பிரதிஷ்டைபண்ணி அபிஷேகம்பண்ணுகிறார். தாம் அழைத்த ஊழியத்திற்கு அவர்களைத் தகுதிப்படுத்துகிறார்.  அவர்கள் எல்லா தேசங்களுக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கப் புறப்பட்டுப்போகும்போது, பிதாவின் பரிசுத்தமான கரம் அவர்களோடு கூடயிருக்கவேண்டுமென்று இயேசுகிறிஸ்து விண்ணப்பம்பண்ணுகிறார். அவர்கள் இந்த உலகத்திற்கு தேவனுடைய சத்திய வசனத்தைப் பிரசங்கம்பண்ணும்போது, பிதா தம்முடைய  சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கவேண்டுமென்று ஜெபிக்கிறார். பரிசுத்தமில்லாமல் தேவனுக்குப் பிரியமாகயிருப்பது கூடாதகாரியம். பரிசுத்தமில்லாமல் தேவனுடைய ஊழியத்தை யாரும் செய்யமுடியாது. நம்முடைய சுயமுயற்சியினால் யாரும் பரிசுத்தவானாக ஆகமுடியாது. பிதாவானவர் தாமே தம்முடைய சத்தியத்தினால் நம்மைப் பரிசுத்தமாக்கவேண்டும்.  


தம்முடைய சீஷர்கள் பரிசுத்தமாக்கப்படவேண்டுமென்பதில் இயேசுகிறிஸ்து மிகுந்த கரிசனையோடிருக்கிறார்.  இதற்காக அவர் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறார். பிதாவின் கிருபை தம்முடைய சீஷர்களோடு கூடயிருக்கவேண்டுமென்று இயேசுகிறிஸ்து விண்ணப்பம்பண்ணுகிறார். சுவிசேஷ ஊழியர்கள் தங்களுக்காக ஜெபிக்கவேண்டும். விசுவாசிகளும் ஊழியர்களுக்காக ஜெபிக்கவேண்டும். மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற ஊழியக்காரர்களைப் பிதாவானவர் தம்முடைய சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கும்படியாக நாம் ஜெபிக்கவேண்டும். ஊழியக்காரர்கள் தேவனிடத்தில் தங்களைப் பூரணமாக அர்ப்பணிக்கவேண்டுமென்று ஜெபிக்கவேண்டும். அவர்கள் பிரசங்கிக்கிற சுவிசேஷ வார்த்தை முதலாவதாக அவர்களுடைய இருதயத்திற்குள் கிரியை நடப்பிக்கவேண்டும்.  கர்த்தர் நல்லவரென்பதை ருசிபார்த்தவர்களால் மாத்திரமே, மற்றவர்களிடம் கர்த்தர் நல்லவரென்பதை உண்மையான இருதயத்தோடு பிரசங்கம்பண்ண முடியும். நம்மிடத்தில் பரிசுத்தமில்லாமல் மற்றவர்களிடத்தில் பரிசுத்தத்தைப்பற்றிப் பேசிப் பிரயோஜனமில்லை.  


பரிசுத்தமாக்குதல் என்பதற்கான கிரேக்க வார்த்தை ""ஹாகியோஜோ'' தேவனுக்காகவும், தேவனுடைய ஊழியத்திற்காகவும் பரிசுத்தப்படுத்துவது, ஒரு பரிசுத்தமான பயன்பாட்டிற்காக அசுத்தத்திலிருந்து விலகியிருப்பது என்பது இந்த வாக்கியத்தின் பொருள். இதன் அடிப்படைப் பொருள் விலகியிருப்பது என்பதாகும். பாவத்திலிருந்தும், அசுத்தத்திலிருந்தும் நாம் விலகியிருக்கும்போது, நாம் பரிசுத்தமடைகிறோம். தேவனுக்காகவும், தேவனுடைய ஊழியத்திற்காகவும் நாம் நம்மையும், நமது உடைமைகளையும் பரிசுத்தப்படுத்த வேண்டும். 


பரிசுத்தமாக்கப்பட்ட பொருட்கள்


    1. விசேஷித்த நாள்

 (ஆதி 2:3); 


    2. ஆசரிப்புக்கூடாரம்

 (யாத் 29:43-44)


    3. வஸ்திரங்கள்

 (லேவி  8:30)

    4. வீடுகள் (லேவி 27:9-29)


    5. தேவாலயங்கள்

 (2நாளா 7:16-20)


இந்தப் பொருட்கள் எல்லாவற்றையுமே தேவனுடைய பரிசுத்த ஊழியத்திற்காக அவரிடம் அர்ப்பணிக்க வேண்டும். 


பரிசுத்தமாக்குவதற்கு தேவையில்லாதவர்கள்


    1. தேவனுடைய நாமம் 

(எசே 36:23);


    2. தேவன் (1பேதுரு 3:15)


    3. கிறிஸ்து (யோவான் 10:36)           


    4. ஏற்கெனவே பரிசுத்தமாக்கப்பட்ட சீஷர்கள் (யோவான் 13:10)


நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல 


 நீர் என்னை உலகத்தில் அனுப்பினது போல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்  (யோவா 17:18).


இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியத்தைப்பற்றிச் சொல்லும்போது, பிதாவானவர் தம்மை இந்த உலகத்தில் அனுப்பினதாக உறுதிபண்ணுகிறார். இயேசுகிறிஸ்து தாமாக இந்த உலகத்திற்கு வரவில்லை. பிதாவானவர் தாமே அவரை இந்த உலகத்திற்கு அனுப்பியிருக்கிறார். அதுபோலவே  சீஷர்களும் இந்த உலகத்தில் தாங்களாக ஊழியம் செய்யப்போகவில்லை. இயேசுகிறிஸ்து தாமே அவர்களை இந்த உலகத்தில் அனுப்பியிருக்கிறார். இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் சொன்ன உபதேச வார்த்தைகளைப்  பிதாவானவர் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்திருந்தார். பிதாவானவர் தம்மிடத்தில் சொன்ன வார்த்தைகளை மாத்திரமே இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் உபதேசம்பண்ணினார். இயேசுகிறிஸ்து செய்த அற்புதங்களெல்லாமே பிதாவினால் நியமிக்கப்பட்டிருந்தது. இயேசுகிறிஸ்து என்ன செய்யவேண்டுமென்று பிதாவானவர் அவரிடத்தில் சொல்லியிருந்தாரோ,  அதை மாத்திரமே இயேசுகிறிஸ்து இந்தப் பூமியில் செய்தார். கர்த்தருடைய ஊழியக்காரர்களும் இயேசுகிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி ஊழியம் செய்யவேண்டும். அவர் நம்மிடத்தில் கொடுக்கும் வார்த்தையை மாத்திரமே பிரசங்கம்பண்ணவேண்டும். நாம் செய்யவேண்டுமென்று அவர் நமக்குச் சொல்லும் காரியத்தை மாத்திரம் நாம் செய்யவேண்டும். 


தாம் உபதேசம்பண்ணின அதே சத்தியத்தை உபதேசம்பண்ணுவதற்காகவே  இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை இந்த உலகத்தில் அனுப்பியிருக்கிறார். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தபின்பு தம்முடைய சீஷர்களிடத்தில்   ""பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்'' (யோவா 20:21) என்று மறுபடியுமாகக் கூறுகிறார். தம்முடைய சீஷர்களின் ஊழியத்தைப்பற்றிச் சொல்லும்போது, தம்முடைய தெய்வீக ஊழியத்தையும் வெளிப்படுத்திப் பேசுகிறார்.  இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் பிதாவினால் அனுப்பப்பட்டவர். சீஷர்கள் இந்த உலகத்தில் இயேசுகிறிஸ்துவினால் அனுப்பப்பட்டவர்கள். 


இயேசுகிறிஸ்துவின் ஊழியம் மகிமையுள்ளதுபோலவே, சீஷர்களின் ஊழியமும் மகிமையுள்ளது. சீஷர்கள் இயேசுகிறிஸ்துவினிடமிருந்தே சுவிசேஷ ஊழியத்தைப்பெற்றிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து பிதாவுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தராகயிருக்கிறார். சீஷர்கள் செய்யும் ஊழியத்திற்கும், மத்தியஸ்தராகிய இயேசுகிறிஸ்து செய்யும் ஊழியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பிதாவானவர் இயேசுகிறிஸ்துவை இந்த உலகத்திற்கு குமாரனாக அனுப்பியிருக்கிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை இந்த உலகத்தில் ஊழியக்காரராக அனுப்பியிருக்கிறார். 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் இந்த உலகத்தில் ஊழியம் செய்யும்போது அவர்களுக்குப் பல தீங்குகள் உண்டாகலாம். பாடுகளும் வேதனைகளும் உண்டாகலாம். ஏனெனில் இயேசுகிறிஸ்து ஊழியம் செய்தபோது அவருக்கும் பாடுகளும் வேதனைகளும் உண்டாயிற்று. கிறிஸ்துவின் சீஷர்கள் அவருடைய ஊழியத்தையே இந்தப் பூமியில் தொடர்ந்து செய்கிறார்கள். ஆகையினால் அவர்களுக்கும் பிரச்சனைகள் உண்டாகலாம்.  இந்த சூழ்நிலையில் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைக் குறித்து மிகுந்த கரிசனையோடிருக்கிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை கடினமான ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்து அனுப்புகிறார். இந்த ஊழியத்தைச் செய்வதற்குச் சீஷர்களுக்குத் தெய்வீக வல்லமையும் தெய்வீக கிருபையும் தேவை. 


இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியமாக யாரை அனுப்புகிறாரோ, அவர்களோடு கூடயிருக்கிறார். அவர்களைப் பாதுகாக்கிறார்.  அவர்களைப் பராமரிக்கிறார். அவர்களைத் தாங்குகிறார். தேவன் நம்மை எந்த ஊழியத்திற்காக அழைத்திருக்கிறாரோ அந்த ஊழியத்தைச் செய்வதற்கு அவர் நம்மைத் தகுதிப்படுத்துவார். நாம் அந்த ஊழியத்தைச் செய்யும்போது அவர் நம்மோடு கூடயிருந்து நம்மைப் பலப்படுத்துவார். காத்துக்கொள்வார்.  இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைப் பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுக்கிறார். இயேசுகிறிஸ்துவின் ஊழியம் பிதாவினால் நியமிக்கப்பட்டிருக்கிறது. 


கிறிஸ்துவின் சீஷர்களும் அவருடைய ஊழியத்தையே தொடர்ந்து செய்கிறார்கள். ஆகையினால் பிதாவானவர் கிறிஸ்துவின் சீஷர்மீது        மிகுந்த அக்கரையோடும் கரிசனையோடும் இருக்கிறார்.   இயேசுகிறிஸ்து பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டவராகவும் இருக்கிறார் (யோவா 10:36). இயேசுகிறிஸ்துவைப்போலவே சீஷர்களும் பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகவும், கிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்வதற்காக உலகத்தில் அனுப்பப்பட்டவர்களாகவும் இருக்கவேண்டுமென்பது இயேசுகிறிஸ்துவின் சித்தம். 


பிதா குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். அதுபோலவே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் தம்முடைய எல்லா சீஷர்களையும் இந்த உலகத்திற்கு அனுப்புகிறார். இந்த ஜெபத்தில் இயேசு கிறிஸ்து தமது பன்னிரெண்டு சீஷர்களுக்காக மட்டும் என்று ஜெபிக்காமல் தம்முடைய எல்லா சீஷர்களுக்காகவும் ஜெபிக்கிறார். ""நான் இவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறது மல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுகிறேன்.''


என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்


அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்  

(யோவா 17:19).


பிதாவானவர் தம்முடைய சத்தியத்தினாலே சீஷர்களைப் பரிசுத்தமாக்கவேண்டுமென்று இயேசுகிறிஸ்து விண்ணப்பம்பண்ணிவிட்டு, இப்போது ""அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்'' என்று மேலும் விண்ணப்பம்பண்ணுகிறார். இயேசுகிறிஸ்து மத்தியஸ்த ஊழியம் செய்கிறார். தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தராகயிருக்கிறார். இந்த உன்னதமான ஊழியத்தைச் செய்வதற்காக இயேசுகிறிஸ்து தம்மைத்தாமே பரிசுத்தமாக்குகிறார். மத்தியஸ்த  ஊழியத்திற்குத் தம்மைப் பரிபூரணாக அர்ப்பணிக்கிறார். இந்த ஊழியத்தின்  ஒவ்வொரு பகுதிக்கும் இயேசுகிறிஸ்து தம்மைப் பிரதிஷ்டைபண்ணுகிறார். 


இயேசுகிறிஸ்து தமக்கு நியமிக்கப்பட்ட ஊழியத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். இயேசுகிறிஸ்து தம்மை, நித்திய ஆவியினால்,  கறைதிரையில்லாத, பழுதற்ற பலியாகப் பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுக்கப்போகிறார்.தம்முடைய பரிசுத்தத்தைப்பற்றி இயேசுகிறிஸ்து  பிதாவினிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். தம்முடைய சீஷர்களுக்காகப் பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது, அவர்களுக்காக தாம் தம்மைத்தாமே பரிசுத்தமாக்கியிருப்பதைக் குறிப்பிடுகிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் அன்புள்ளவராக இருக்கிறார். தம்முடைய அன்பின் திட்டத்தின் பிரகாரமாக, இயேசுகிறிஸ்து, தம்முடைய சீஷர்களுக்காகத், தம்மைத்தாமே பரிசுத்தமாக்குகிறார். அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி இயேசுகிறிஸ்து அவர்களுக்காகத் தம்மைத்தாமே பரிசுத்தமாக்குகிறார். தம்முடைய சீஷர்கள் தேவனால் அங்கீகரிப்பட்டவர்களாகவும், தேவனுடைய ஊழியத்தைச் செய்வதற்கு தகுதிபெற்றவர்களாகவும் இருக்கவேண்டும் என்பது இயேசுகிறிஸ்துவின் தெய்வீக சித்தமாகும். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் அவருடைய பரிசுத்தவான்களாகவும், ஊழியக்காரர்களாகவும் இருக்கிறார்கள். 


இயேசுகிறிஸ்துவின் ஊழியம் அவருடைய இரத்தத்தினால் கிரயத்திற்கு வாங்கப்பட்டிருக்கிறது. தம்முடைய சுயஇரத்தத்தினால் இயேசுகிறிஸ்து மனுக்குலத்திற்கு மீட்பைச் சம்பாதித்திருக்கிறார்.  மீட்பின் கனியாக, இரட்சிக்கப்பட்டவர்களுக்குத் தேவனுடைய ஊழியம் பகிர்ந்துகொடுக்கப்படுகிறது. விசுவாசிகளுடைய பரிசுத்தம் இயேசுகிறிஸ்துவினுடைய மரணத்தினால் உண்டான கனியாகும்.  சபையைப் பரிசுத்தப்படுத்துவதற்காக, இயேசுகிறிஸ்து தம்மைத்தாமே சபைக்குக் கொடுத்திருக்கிறார். சீஷர்களின் பரிசுத்தத்தை  இயேசுகிறிஸ்து திட்டமிடுகிறார். அதே வேளையில் அவர்களைப் பரிசுத்தமாக்கும் உபாயத்தையும்இயேசுகிறிஸ்து வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்கள் சத்தியத்தினாலே  பரிசுத்தமாக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.


சத்திய வசனத்திற்கு மனுஷருடைய ஆத்துமாவைப் பரிசுத்தப்படுத்தும் வல்லமை உள்ளது. இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக சத்திய வசனத்திற்கு வல்லமை உண்டாயிற்று. தம்முடைய சீஷர்களின் பரிசுத்தத்திற்காக இயேசுகிறிஸ்து ஜெபம்பண்ணுகிறார். சீஷர்களோடு, அவரை விசுவாசிக்கிற விசுவாசிகளெல்லோரும் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது  இயேசுகிறிஸ்துவின் விருப்பமாகும். விசுவாசிகளாகிய நாமும் நம்முடைய பரிசுத்தத்திற்காக ஜெபம்பண்ணவேண்டும். நாம்  பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதே நம்மைக் குறித்து இயேசுகிறிஸ்துவின் சித்தமாயிருக்கிறது.  


தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்காக இயேசு கிறிஸ்து மரணபரியந்தம் தம்மைத் தாமே வேறு பிரித்து, ஒப்புக்கொடுத்தார். இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக அவரை விசுவாசத்தினால் ஏற்றுக் கொள்கிற அனைவருக்கும் இரட்சிப்பு உண்டாகிறது. அவர்கள் தேவனுடைய வார்த்தையைத் தொடர்ந்து வாசித்து, தியானித்து, அதற்குக் கீழ்ப்படிவதினாலே அவர்கள் தொடர்ந்து பரிசுத்தமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 


ஒருமைப்பாடு  

(யோவா 17 : 20-23 )


என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும்


நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்  (யோவா 17:20).


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் பரிசுத்தத்திற்காகப் பிதாவினிடத்தில் ஜெபித்துவிட்டு, இப்போது அவர்களுடைய ஒருமனப்பாட்டிற்காக ஜெபிக்கிறார். இயேசுகிறிஸ்து இந்த ஜெபத்தில் தம்முடைய சீஷர்களுக்காக மாத்திரம் என்று வேண்டிக்கொள்ளாமல்,  ""இவர்களுடையவார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்துவினுடைய மத்தியஸ்த ஊழியத்தில் ஆர்வமுள்ளவர்கள் மாத்திரமே அவரிடத்தில் விசுவாசம் வைப்பார்கள். 


இயேசுகிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த சீஷர்களும், மற்ற விசுவாசிகளும் அவரைக் கண்டு விசுவாசித்தார்கள். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு, இக்காலம் வரையிலும் இயேசுகிறிஸ்துவை அவருடைய சரீரத்தில் பிரத்தியட்சமாகக் காணமுடியவில்லை. இக்காலத்தில் விசுவாசிகளாகிய நாம், அவரைக் காணாதிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறோம். வசனத்தின் மூலமாகவே,   இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைக்குமாறு ஆத்துமாக்கள் அழைக்கப்படுகிறார்கள். 


இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது, தாம் யாருக்காக ஜெபிக்கிறோம் என்பதை அவர் அறிந்து வைத்திருக்கிறார். இயேசுகிறிஸ்து பிரசித்திப்பெற்ற விசுவாச வீரர்களுக்காகவும் ஜெபிக்கிறார், விசுவாசத்தில் பலவீனமாக இருக்கும் சாதாரண விசுவாசிகளுக்காகவும் ஜெபிக்கிறார். நல்ல மேய்ப்பர் தன்னுடைய மந்தையிலுள்ள நசலான ஆடுகள்மீதும் கவனமாயிருப்பார். 


இயேசுகிறிஸ்துவின் மத்தியஸ்த ஊழியத்தில், அவர் இப்போது இருக்கிறவர்களுக்காகவும் பரிந்து பேசுகிறார். இனிமேல் பிறக்கப்போகிறவர்களுக்காகவும் பரிந்து பேசுகிறார். ஏனெனில் இயேசுகிறிஸ்துவின் மந்தையில் சேராத  ஆடுகள்  இன்னுமும் உள்ளன. அவற்றையும் தேடிக்கண்டுபிடித்து தம்முடைய மந்தையில் சேர்ப்பதே இயேசுகிறிஸ்துவின் ஊழியம்.


நம்மில் ஒன்றாயிருக்கவும்


அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விவசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்  (யோவா 17:21). 


""அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும்'' என்று இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்கிறார். இந்த வாக்கியத்தை இயேசுகிறிஸ்து தம்முடைய ஜெபத்தில் ஏற்கெனவே பயன்படுத்தியிருக்கிறார். ""பரிசுத்த பிதாவே,  நீர் எனக்குத் தந்தவர்கள்  நம்மைப்போல் ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்'' (யோவா 17:11) என்பது இயேசுகிறிஸ்து ஏற்கெனவே ஏறெடுத்திருக்கிற ஜெபமாகும். இப்போது இதே ஜெபத்தை இங்கு மறுபடியும் ஏறெடுக்கிறார். 


இயேசுகிறிஸ்துவின் இருதயம் தம்முடைய பிள்ளைகளின் ஒருமனப்பாட்டைப்பற்றிய சிந்தனையினால் நிறைந்திருக்கிறது. அவர்களெல்லோருக்கும் ஒரே இருதயம் இருந்தால் மாத்திரம் போதாது. அவர்களுக்கு ஒரே வாயும் இருக்கவேண்டும். ஒரே சத்தியத்தையே அவர்கள் அறிக்கை செய்யவேண்டும். இயேசுகிறிஸ்து இங்கு ஏறெடுக்கிற ஜெபம் எல்லா விசுவாசிகளுக்கும்  பொதுவாக ஏறெடுக்கப்படுகிற ஜெபமாகும். ஆகையினால்தான் ""அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்கிறேன்'' என்று கூறுகிறார். பிதாவும் குமாரனும் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கவேண்டும். அவர்கள் ஒருமைப்பாட்டில் தேறினவர்களாகயிருக்கவேண்டும். 


தம்முடைய விசுவாசிகளெல்லோரும் ஒரே சரீரமாக இணைக்கப்படவேண்டுமென்று இயேசுகிறிஸ்து  விரும்புகிறார். பிதாவானவர் தம்முடைய சீஷர்களெல்லோரையும் பார்க்கிறபோது, அவர்கள் பிரிந்திராமல் ஒற்றுமையாக இருக்கிறவர்களாகப் பார்க்கவேண்டும். அவர்கள் பல தேசங்களில் வாழ்கிறவர்களாக இருந்தாலும், பல காலத்தில்  வாழ்கிறவர்களாக இருந்தாலும், அவர்களெல்லோருமே ஒன்றாயிருக்குமாறு கிறிஸ்துவில் தலையாகிய தலையினால் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் உலகமெங்கும் சிதறியிருக்கிறார்கள். அவர்களெல்லோரையும்  கூட்டிச் சேர்த்து ஒன்றாக இணைப்பதற்காக இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்திருக்கிறார். 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்களெல்லோரும் ஒரே ஆவியினாலே உயிரடைந்திருக்கிறார்கள்.  அவர்களெல்லோரும் பிதாவிலும் குமாரனிலும்  ஒன்றாயிருக்கிறார்கள். அவர்களெல்லோருக்குமே ஒரே சாயல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரே ஆவியானவரே  அவர்களை நிரப்புகிறார். ஒரே அதிகாரமே அவர்களை ஆளுகை செய்கிறது. 


சீஷர்களெல்லோரும் அன்பிலும் ஊழியத்திலும் ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களெல்லோருக்கும் ஒரே இருதயமே இருக்கிறது. அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்குமாறு பிதாவானவர் அவர்களை இணைத்திருக்கிறார். சீஷர்களுக்குள் சிறிய சிறிய காரியங்களில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனாலும் தேவனுடைய பிரதான காரியங்களில் அவர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாயிருக்க வேண்டுமென்பதே இயேசுகிறிஸ்துவின் பிரதான ஜெபமாகும். 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்களெல்லோரும்  புதிய இருதயத்தைப் பெற்றிருக்கிறார்கள். அந்த இருதயம் ஒன்றாகவே இருக்கிறது. அவர்களுடைய திட்டங்களிலும் நோக்கங்களிலும்  அவர்கள் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். அவர்களுடைய விருப்பங்களிலும் ஜெபங்களிலும்   ஒன்றாயிருக்கிறார். அவர்களுடைய வார்த்தைகள் மாறலாம், அவர்களுடைய உச்சரிப்புக்கள் மாறலாம். அவர்கள் ஜெபம்பண்ணுகிறவிதம் மாறலாம். இப்படி சில மாற்றங்கள் இருந்தாலும் அவர்களெல்லோரும் ஒரே காரியத்திற்காகவே தேவனிடம் ஒருமனப்பட்டு ஜெபிக்கிறார்கள். 


சீஷர்களெல்லோரும் அன்பிலும் பிரியத்திலும் ஒன்றாயிருக்கிறார்கள். பரிசுத்தவான்களின் ஐக்கியத்திற்காக இயேசுகிறிஸ்து ஜெபம்பண்ணுகிறார். இதே ஜெபத்தை நாமும் ஏறெடுக்கவேண்டும். இப்பிரபஞ்சத்தில் நாம் ஜீவிக்கும் வரையிலும் பரிசுத்தவான்களின் ஐக்கியத்தில் குறைபாடுகள் இருக்கும். விசுவாசிகளுக்குள் சிலபிரிவினைகள் காணப்படலாம். ஆனாலும் நாமெல்லோரும் பரலோகத்திற்குப் போகும்போது, அங்கு நமக்குள் பிரிவினை இராது. நாமெல்லோரும் ஒன்றாயிருப்போம். கர்த்தருடைய பிள்ளைகளெல்லோரும் பரிபூரணமுள்ளவர்களாக  கூட்டி இணைக்கப்படுவோம். 


இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது, தாமும் பிதாவும் ஒன்றாயிருப்பதாகப் பலமுறை குறிப்பிடுகிறார். ""நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல் ஒன்றாயிருக்கும்படி''

 (யோவா 17:11), "

"நீர் என்னிலும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல'' (யோவா 17:21), ""நாம் ஒன்றாயிருக்கிறதுபோல'' (யோவா 17:22) என்னும் வாக்கியங்களை இயேசுகிறிஸ்து தம்முடைய ஜெபத்தில் பயன்படுத்துகிறார். பிதாவும் குமாரனும் ஒன்றாயிருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிற சத்தியம். அவர்கள் இருவருக்குமே ஒரே நோக்கமும், ஒரே சித்தமும் இருக்கிறது.


பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருக்கிறார். குமாரனானவர் பிதாவை  எப்போதுமே பிரியப்படுத்துகிறார். இவர்கள் இருவருக்குமே ஒரே திட்டமே இருக்கிறது. தாமும் பிதாவும் ஒன்றாயிருப்பதைப்பற்றி  இயேசுகிறிஸ்து சொல்லும்போது, ""நீர் என்னிலேயும் நாம் உம்மிலேயும் இருக்கிறதுபோல'' என்று குறிப்பிடுகிறார். தம்முடைய சீஷர்கள் ஒன்றாயிருக்கவேண்டும் என்று இயேசுகிறிஸ்து ஜெபிக்கும்போது, அவர்கள் பிதாவையும் தம்மையும்போல ஒன்றாயிருக்கவேண்டும் என்று விரும்புகிறார். 


தம்முடைய சீஷர்கள் எப்படி ஒன்றாயிருக்கவேண்டும் என்பதையும் இயேசுகிறிஸ்து தம்முடைய ஜெபத்தில் தெளிவுபடுத்துகிறார். பிதாவும் இயேசுகிறிஸ்துவும் ஒன்றாயிருப்பதுபோல, சீஷர்களும் அதுபோலவே ஓரளவு ஒன்றாயிருக்கிறார்கள்.   தெய்வீக சுபாவத்தினாலும், தெய்வீக கிருபையின் வல்லமையினாலும், தெய்வீக ஆலோசனைகளினாலும் அவர்கள் ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஒன்றாய் இணைக்கப்பட்டிருப்பது ஓர் பரிசுத்த இணைப்பாகும். பரிசுத்த நோக்கத்திற்காக இவர்கள் பரிசுத்தமாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஒருமைப்பாட்டிற்கு உலகப்பிரகாரமான நோக்கம் எதுவுமில்லை. உலக ஆதாயத்திற்காக சீஷர்கள்  ஒன்றாய் இணைக்கப்படவில்லை. தேவனுடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாகவும், அவருடைய தெய்வீக திட்டமும் நோக்கமும் நிறைவேற வேண்டுமென்பதற்காகவும் சீஷர்கள்  ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.


தம்முடைய சீஷர்கள் ""நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்கிறேன்'' என்று இயேசுகிறிஸ்து ஜெபிக்கிறார்.       அவர்கள்  பிதாவிலும் குமாரனிலும் ஒன்றாயிருக்கவேண்டும். ஒரே தேவனும் ஒரே மத்தியஸ்தரும் இருக்கிறார்கள். நம்முடைய ஒற்றுமைக்கு இயேசுகிறிஸ்துவே மெய்யான வழியாக இருக்கவேண்டும்.          ஒற்றுமையின் முடிவு தேவனிடத்தில் சேர்வதாகவே இருக்கவேண்டும்.  பிதாவினிடத்திலும் இயேசுகிறிஸ்துவினிடத்திலும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறவர்கள், சீக்கிரத்தில் அவர்களும் ஒருவருக்கொருவர் ஒன்றாக இணைக்கப்படுவார்கள். அவர்களிடத்தில் ஒருமைப்பாடு காணப்படும். 


சிருஷ்டிகருக்கும் மீட்பருக்கும் ஒரே திட்டமும் ஒரே ஆர்வமும் உள்ளது. விசுவாசிகளெல்லோரும் கிறிஸ்துவில் ஒரே சரீரமாக இணைக்கப்படவேண்டும். அப்போதுதான்  தேவனுடைய கிருபையை அவர்கள் தாராளமாகப்பெற்றுக்கொள்வார்கள். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்காகப் பிதாவிடத்திலிருந்து தேவகிருபையைப் பெற்றிருக்கிறார். சீஷர்கள்  ஒன்றாயிருக்கும்போது இயேசுகிறிஸ்துவிடத்திலிருந்துப் அந்தக் கிருபையை பெற்றுக்கொள்வார்கள். 


""நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல'' அவர்களெல்லோரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்கிறேன் என்று இயேசுகிறிஸ்து விண்ணப்பம்பண்ணுகிறார். பிதாவுக்கும் குமாரனுக்கும் ஐக்கியம் அவசியமாயிருக்கிறது.  அவர்கள் இருவரும் தங்கள் சுபாவத்தில் ஒன்றாயிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் சபை கிறிஸ்துவோடு ஐக்கியமாக இருக்கிறது.  குமாரனாகிய இயேசுகிறிஸ்து பிதாவில் இருக்கிறார். பிதாவாகிய தேவன் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவில் இருக்கிறார். நாமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக பிதாவோடு ஐக்கியமாக இருக்கிறோம். நாம் தேவனோடு ஐக்கியமாக இருக்கும்போது, விசுவாசிகளாகிய நாமும் ஒன்றாக இணைக்கப்பட்டிருப்போம். இயேசுகிறிஸ்துவில் நாம் பரிபூரணமடைந்திருப்போம். 


குமாரனைப் பிதா அனுப்பினார் என்பதை இந்த உலகம் விசுவாசிக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகள் தேவனிடத்தில் ஒன்றாயிருக்கும் போது, பிதா குமாரனை அனுப்பினார் என்பதை இந்த உலகம் விசுவாசிக்கும். 


மகிமை


நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன் (யோவா 17:22). 


இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியத்தின் மூலமாகவும், பிரசங்கத்தின் மூலமாகவும் தேவனுடைய வெளிச்சத்தையும், கிருபையையும்  சீஷர்களுக்குக் கொடுக்கிறார். இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தில் ஒரு தெய்வீக திட்டம் இருக்கிறது. பிதாவானவர் தமக்குத் தந்த மகிமையை, குமாரனாகிய இயேசுகிறிஸ்து  தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்திருக்கிறார். இதனால் பிதாவும் குமாரனும் ஒன்றாயிருப்பதுபோல         சீஷர்களும் ஒன்றாயிருப்பார்கள். சீஷர்கள் ஒன்றாயிருக்கவில்லையென்றால், அவர்களிடத்தில் ஆவியின் வரங்கள் வல்லமையாய் கிரியை செய்யாது. 


இயேசுகிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலருக்கு ஊழிய வரங்களைக் கொடுத்திருக்கிறார். இவர்கள் இந்த உலகத்தில் தேவனுடைய ஸ்தானிகர்களாக இருக்கிறார்கள். இது சீஷர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்  விசேஷித்த சிலாக்கியமும் மகிமையும் ஆகும்.  மனுஷர் மத்தியிலே இவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்கிறார்கள். தேவனுடைய ராஜ்யத்தில் தேவனுடைய சிங்காசனத்தையும் ஸ்தாபிக்கிறார்கள். இந்த மகிமை இயேசுகிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை  இந்த உலகத்திற்கு ஊழியம் செய்ய அனுப்பியபோது,  தம்முடைய மகிமையின் ஒருபகுதியை கிறிஸ்துவானவர் தம்முடைய சீஷருக்குக் கொடுக்கிறார். 


இயேசுகிறிஸ்துவின் மகிமை எல்லா விசுவாசிகளுக்கும் பொதுவாகக் கொடுக்கப்படுகிறது. இயேசுகிறிஸ்து பிதாவோடு உடன்படிக்கையில் ஐக்கியமாக இருக்கிறார். உடன்படிக்கையின் இந்த மகிமையைப் பிதாவானவர் மீட்பருக்குக் கொடுத்திருக்கிறார். இந்த மகிமையை மீட்பராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியக்காரர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.  ஊழியக்காரர்கள் ஒன்றாயிருக்கவேண்டும் என்பதற்காகவே இயேசுகிறிஸ்து, பிதாவானவர் தமக்குத்தந்த மகிமையை, அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் மூலமாக மகிமையைப் பெற்றுக்கொண்ட பின்பு, சீஷர்கள் ஒன்றாயிருக்கும் சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்வார்கள். 


பிதாவானவர் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஆவியின் வரத்தைக் கொடுத்திருக்கிறார். இது பிதாவானவர் குமாரனுக்குக் கொடுக்கும் பெரிய மகிமையாகும்.  பிதா தமக்குத்தந்த இந்த மகிமையை இயேசுகிறிஸ்து எல்லா விசுவாசிகளுக்கும் கொடுக்கிறார். இதனால் அவர்கள் எல்லோரும்  ஒன்றாயிருக்கிறார்கள். ஒன்றாயிருக்கவேண்டும் என்னும் கடமை உணர்வு அவர்களுக்குள் உண்டாயிற்று. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய நமக்கு ஒரே தேவனும், ஒரே கிறிஸ்துவும் இருக்கிறார்கள். நம்மெல்லோருக்குமே ஒரே பரலோகத்தைப்பற்றிய நம்பிக்கையிருக்கிறது. நமக்குள் ஒரே சிந்தையே இருக்கவேண்டும். நாமெல்லோரும் சேர்ந்து ஒரே வாயாக, ஒரே நாவாக தேவனுடைய சத்தியத்தை அறிவிக்கவேண்டும். 


உலகப்பிரகாரமான மகிமை மனுஷரைப் பிரித்துவிடும். இப்பிரபஞ்சத்தில் ஒருவர் முன்னேறும்போது மற்றொருவர் கீழே தள்ளப்படுவார். ஒருவருக்கு மேன்மை உண்டாகும்போது மற்றவரின் மேன்மை மங்கிப்போகும். ஆனால் கிறிஸ்துவின் மகிமை உலகப்பிரகாரமான மகிமையைப் போன்றதல்ல. இயேசுகிறிஸ்து     தம்முடைய   மகிமையை   எல்லா விசுவாசிகளுக்கும் கொடுத்தாலும், அவர்களெல்லோருடைய மகிமையும் பிரகாசமாகவே இருக்கும். விசுவாசிகளுக்குள் கிறிஸ்துவின் மகிமை அதிகமாகக் கொடுக்கப்படும்போது, அவர்களுக்குள் பிரிவினை நீங்கும், போட்டி பொறாமைகள் அகன்றுபோகும். தேவனுடைய மகிமை விசுவாசிகளிடத்தில் அதிகரிக்கும்போது, அவர்களுக்குள் ஒற்றுமையும் அதிகரிக்கும்.  


ஒருமைப்பாட்டில் தேறினவர்கள்


ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்  (யோவா 17:23).


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் ஒருமைப்பாட்டில் தேறினவர்களாக இருக்கவேண்டும். இதனால் ""பிதாவானவர் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை அனுப்பியிருக்கிறார்'' என்பதை உலகம் அறிந்துகொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்து இந்தச் சத்தியத்தை இரண்டுமுறை தம்முடைய ஜெபத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ""நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக''  (யோவா 17:21), ""என்னை நீர் அனுப்பினதை உலகம் அறியும்படிக்கு'' (யோவா 17:23) என்று இயேசு ஜெபிக்கிறார். தாங்கள் எதை விசுவாசிக்கிறோம் என்பதை விசுவாசிகள் அறிந்துகொள்ளவேண்டும். சத்தியத்தை ஏன் விசுவாசிக்கிறோம் என்பதை  விசுவாசிகள் புரிந்துகொள்ளவேண்டும். நாம் சத்தியத்தை விசுவாசித்து தேடும்போது அதைக் கண்டுகொள்ளலாம். இயேசுகிறிஸ்து தம்முடைய சத்தியத்தை இங்கு விவரித்துக் கூறுகிறார். 


இயேசுகிறிஸ்து இந்த உலகத்திலுள்ள மனுக்குலத்தார் மீது அன்புள்ளவராக இருக்கிறார். அவர்களுக்குப் பொதுவான நன்மையைத் தருகிறார். எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட வேண்டுமென்பது பிதாவின் சித்தம். குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிடம் இதே சிந்தையே காணப்படுகிறது. ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் இரட்சிக்கப்படவேண்டுமென்பதே இயேசுகிறிஸ்துவின் சித்தமாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய நாமும் பிதாவின் சித்தம் நிறைவேறுவதற்காக  ஊழியம் செய்யவேண்டும். மனுஷரை இரட்சிப்புக்குள் வழிநடத்துவதே நம்முடைய பிரதான ஊழியமாக இருக்கவேண்டும். 


சபையில் விசுவாசிகள் மத்தியில் ஒருமைப்பாடு இருக்கும்போது, அதினால் மிகுந்த பிரயோஜனம் உண்டாகும். விசுவாசிகளின் ஐக்கியமே கிறிஸ்துவின் சத்தியத்திற்கு வெளிப்படையான சான்றாகவும், மேன்மையாகவும் இருக்கிறது. விசுவாசிகள் ஒற்றுமையாக இருந்தால்தான், உலகப்பிரகாரமான ஜனங்கள் நம்மைத் தேடி வருவார்கள். இயேசுகிறிஸ்துவின் சத்தியத்தைப்பற்றி நம்மிடத்தில் விசாரிப்பார்கள்.  விசுவாசிகளின் ஒற்றுமை, கிறிஸ்துவின் உபதேசத்தை இந்த உலகத்திற்குத் தெளிவாக அறிவிக்கும். 


விசுவாசிகள் ஒற்றுமையாக இருந்தால்தான் அவர்களிடத்தில் ஆவியின் கனி வெளிப்படும். உலகத்தார் நம்மைப் பார்க்கும்போது,  அவர்கள் நம்மிடத்தில் இயேசுகிறிஸ்துவைக் காண்பார்கள். நம்முடைய அன்பிலும், ஊழியத்திலும் நாம் ஒருமைப்பாடு உள்ளவர்களாக இருக்கவேண்டும். ஒற்றுமைதான் ஊழியக்காரர்களுக்கு அழகு. நாம் ஒற்றுமையாக இருக்கும்போது மற்றவர்களும் நம்மோடு வந்து இணைந்துகொள்வார்கள். கிறிஸ்தவ உபதேசம்  பிரிவினையைப் போக்கவேண்டும். நமக்குள் பிரிவினை இருந்தால் நம்மால் ஒருபோதும் ""பிரிவினையை நீக்கும்'' ஊழியத்தைச் செய்யமுடியாது. 


நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்கவேண்டும். சமாதானம் உள்ளவர்களால் மாத்திரமே சமாதானம்பண்ணமுடியும். விசுவாசிகளுக்குள் ஒற்றுமை இருந்தால் மாத்திரமே அவர்களில் சமாதானம் இருக்கும்.  ஆகையினால்தான் இயேசுகிறிஸ்து  ஒருமைப்பாட்டைப்பற்றி இங்கு வலியுறுத்திக் குறிப்பிடுகிறார்.  தம்முடைய சீஷர்கள் ஒருமைப்பாட்டில் தேறினவர்களாக இருக்கவேண்டும் என்று ஜெபம்பண்ணுகிறார். 


சீஷர்களிடத்தில் ஒருமைப்பாடு இருக்கும்போது, அவர்களிடத்தில் நல்ல சிந்தனைகள் உண்டாகும். கிறிஸ்துவின் சிந்தனை அவர்களிடத்தில் காணப்படும். பிதாவானவர் இயேசுகிறிஸ்துவை அனுப்பியிருக்கிறார் என்பதை சீஷர்கள் அறிந்துகொள்வார்கள். இந்தச் சத்தியத்தை விசுவாசிப்பார்கள். 


விசுவாசிகளுக்குள் வித்தியாசம் இருக்கலாம். அறிவிலும், ஆற்றலிலும், விவேகத்திலும், வேகத்திலும் நமக்குள் வேறுபாடு காணப்படலாம். ஆனாலும் நாமெல்லோருமே விசுவாசத்தினால் ஒரே சரீரமாக இணைக்கப்பட்டிருக்கிறோம். அன்பினால் ஒரே இருதயமாக மாற்றப்பட்டிருக்கிறோம். விசுவாசிகள் ஒருமைப்பாட்டில் தேறினவர்களாக இருக்கும்போது, பிதாவானவர் குமாரனில் அன்பாயிருக்கிறபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதை உலகம் அறிந்துகொள்ளும்.   


பிதாவானவர் விசுவாசிகளிடத்தில் அன்பாயிருப்பது விசுவாசிகளுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய சிலாக்கியம்.  பிதாவானவர் தாமே விசுவாசிகளிடத்தில் அன்பாயிருக்கிறார். பிதாவின் அன்பு விசேஷித்த அன்பு. பிதா தம்முடைய குமாரனிடத்தில் அன்பாயிருப்பதுபோல விசுவாசிகளிடத்தில் அன்பாயிருக்கிறார். பிதாவின் அன்பு நித்திய அன்பு. இந்த நித்திய அன்பினாலேயே பிதாவானவர் விசுவாசிகளிடத்தில் அன்பாயிருக்கிறார்.


விசுவாசிகளாகிய நாம் ஒருவருக்கொருவர் சுத்த இருதயத்தோடு அன்பாக இருக்கவேண்டும்.  அப்போதுதான் ""பிதாவானவர் நம்மீது அன்பாகயிருக்கிறார்'' என்பது மெய்யான சத்தியமாக இருக்கும்.  நாம் ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பதை இந்த உலகம் பார்க்கும். பிதாவானவர் நம்மில் அன்பாயிருக்கிறதை உலகம் அறிந்துகொள்ளும். யாரிடத்திலெல்லாம் தேவனுடைய அன்பு அதிகமாகயிருக்கிறதோ, அவர்களெல்லோருமே மற்ற விசுவாசிகளிடத்தில் அதிக அன்போடிருப்பார்கள்.


மகிமை 

யோவான் 17 : 24-26


என்னுடனேகூட 


 பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே கூட இருக்க விரும்புகிறேன் (யோவா 17:24). 


பிதாவானவர் தம்முடையவர்களை இயேசுகிறிஸ்துவிடம் தந்திருக்கிறார். அவர்களெல்லோரும் மகிமையடைய வேண்டுமென்று இயேசுகிறிஸ்து  பிதாவினிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். ""நான் எங்கே இருக்கிறானோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்'' என்று இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் தமது விருப்பத்தைத் தெரியப்படுத்துகிறார்.


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்காகப்  பிதாவினிடத்தில்  ஜெபிக்கிற போது, ஒவ்வொரு காரியமாக விண்ணப்பம்பண்ணுகிறார்.      முதலாவதாக  பிதாவானவர் அவர்களைப் பரிசுத்தப்படுத்தவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினார். இப்போதோ தம்முடைய சீஷர்களெல்லோரும் மகிமைப்படும் வண்ணமாக, தம்முடைய வரங்களெல்லாவற்றையும் அவர்களுக்குக் கொடுக்க விரும்புகிறார். நாம் ஜெபிக்கும்போது, நம்முடைய ஜெபம் இயேசுகிறிஸ்துவின் ஜெபத்தைப்போலவே இருக்கவேண்டும். முதலாவதாக தேவனுடைய கிருபைக்காக ஜெபிக்கவேண்டும்.  அதன்பின்பு அவருடைய மகிமைக்காக ஜெபிக்கவேண்டும். தேவன் நம்முடைய ஜெபத்திற்குப் பதில்கொடுக்கும்போது, முதலாவதாக தமது கிருபையையும், அதன் பின்பு தமது மகிமையையும் நமக்குக் கொடுக்கிறார்.


இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபம்பண்ணும்போது ""பிதாவே... நான் விரும்புகிறேன்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார். இதற்கு முன்பு பிதாவினிடத்தில் ஜெபித்தது போலவே, இப்போதும் அவரை ""பிதாவே'' என்றே அழைக்கிறார். இயேசுகிறிஸ்துவைப்போலவே நாமும் தேவனை  ""பிதாவே'' என்று அழைத்து ஜெபிக்கவேண்டும்.  


இயேசு ஜெபிக்கும்போது ""விரும்புகிறேன்'' என்னும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.  அந்த வார்த்தையை விசுவாசிகளாகிய நாம் பயன்படுத்துவது சரியல்ல. பிதாவுக்கும் குமாரனுக்கும் நெருங்கிய ஐக்கியம்  இருப்பதினால், இயேசுகிறிஸ்து ""விரும்புகிறேன்'' என்னும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இயேசுகிறிஸ்து மத்தியஸ்தம்பண்ணும் ஊழியத்தின் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்.  ஆகையினால் அவரால்  ""விரும்புகிறேன்'' என்னும் வார்த்தையைப் பயன்படுத்த முடிகிறது.  


இயேசுகிறிஸ்துவின் வார்த்தை பரலோகத்திலும் பூமியிலும் வல்லமையுள்ளது, அதிகாரமுள்ளது.  இயேசுகிறிஸ்து இந்த ஜெபத்தை ஏறெடுக்கும்போது, ""நான் விரும்புகிறேன்'' என்னும் வார்த்தையைப் பயன்படுத்துவதினால்,  இந்த விஷயத்தில் இயேசுகிறிஸ்துவின் அதிகாரம் தெளிவுபடுத்தப்படுகிறது.  இயேசுகிறிஸ்துவுக்கு நித்திய ஜீவனைக்கொடுக்கும் அதிகாரம் உள்ளது (யோவா 17:2). 

தம்முடைய அதிகாரத்தை அடிப்படையாக வைத்து, இந்த விஷயத்தைப்பற்றி பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது, ""பிதாவே... நான் விரும்புகிறேன்'' என்று கூறி ஜெபிக்கிறார்.  


தெரிந்தெடுக்கப்பட்டவர்களெல்லோரும், தம்மோடுகூட பரலோகத்தில் இருக்கவேண்டுமென்று இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். நாம் பரலோகத்திற்குப்போவோம் என்னும் நம்பிக்கை நமக்கு உண்டு. பரலோகத்தில் நமக்கு  நித்திய சந்தோஷம் நியமிக்கப்பட்டிருக்கிறது.  கிறிஸ்து எங்கே இருக்கிறாரோ அங்கேதான்  நம்முடைய பரலோகம் இருக்கிறது. இயேசுகிறிஸ்து இதைத் தெளிவுபடுத்தும் வண்ணமாக ""நான் எங்கே இருக்கிறோனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார். இயேசுகிறிஸ்து  பரலோகத்திற்குப் போகப்போகிறார். அங்கு நித்தியகாலமாக இருப்பார். 


நாம் இந்த உலகத்தில் இருக்கிறவரையிலும் பரதேசிகளைப்போல இந்தப் பூமியிலே கொஞ்சகாலம் மாத்திரம் தங்கியிருப்போம். நாம் நித்தியகாலமாக இருக்கவேண்டிய ஸ்தலம் இந்தப் பூமியல்ல. பரலோகமே நம்முடைய நித்திய வாசஸ்தலம். பரலோகத்தில் நாம் இயேசுகிறிஸ்துவோடுகூட நித்திய காலமாக இருப்போம். அவருடைய பிரசன்னத்தில் இருப்பதினால் நமக்கு நித்திய சந்தோஷம் உண்டாயிருக்கிறது. இயேசுகிறிஸ்துவோடு கூடயிருக்கும் ஸ்தலம்தான் நம்முடைய பரலோகம். 


பிதாவானவர் இயேசுகிறிஸ்துவுக்கு அவருடைய மகிமையைத் தந்திருக்கிறார். அந்த மகிமையைப் ""பிதாவானவர் அவருக்குத் தந்தவர்கள்'' காணவேண்டுமென்று விரும்புகிறார். மீட்பரின் மகிமையே பரலோகத்தில்  வெளிச்சமாகப் பிரகாசிக்கும்.  ஆட்டுக்குட்டியானவரே புதிய எருசலேமில் விளக்காக இருப்பார் (வெளி 21:23). 


தேவன் தம்முடைய மகிமையைப் பரலோகத்தில் வெளிப்படுத்துகிறார். இந்தப் பூமியில் பிதாவானவர் இயேசுகிறிஸ்து மூலமாக தம்முடைய கிருபையை வெளிப்படுத்துகிறார். இயேசுகிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறவர்கள் அவருடைய மகிமையைக் காண்பார்கள். இது அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிலாக்கியம். இதுவரையிலும் பூமியிலுள்ள விசுவாசிகள்  இயேசுகிறிஸ்துவின் கிருபையை மாத்திரமே பார்த்திருக்கிறார்கள். நாம் பரலோகத்திற்குப்போகும்போது இயேசுகிறிஸ்துவின் மகிமையைக் காண்போம்.  அந்த சாயலாகத்தானே, நாமும் பரலோகத்தில், மகிமையின் மேல் மகிமையடைவோம். 


நாம் மரித்தபின்பு பரலோகத்திற்குப்போவோம் என்பதற்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக நமக்கு நம்பிக்கையும் நிச்சயமும் உண்டாயிற்று. இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் நமக்காக ஜெபிக்கிற போது  ""அவர்களும் என்னுடனே கூடயிருக்க விரும்புகிறேன்'' என்று ஜெபிக்கிறார். நாம் பரலோகத்திற்குப் போகவேண்டுமென்பது இயேசுகிறிஸ்துவின் விருப்பமும் சித்தமும் ஆகும். நாம் பரலோகத்திற்குப் போகவில்லையென்றால் இயேசுகிறிஸ்துவின் விருப்பம் பூரணமாகாது. ஆகையினால்தான் இயேசு பிதாவினிடத்தில் ஜெபிக்கிறபோது, தம்முடைய விருப்பத்தைக் கூறி ஜெபிக்கிறார். இயேசுகிறிஸ்துவின் ஜெபம் நிறைவேறினால்தான், அவருடைய விருப்பம்  நிறைவேறும். பூரணமடையும். ""நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவேண்டும்'' என்பதுதான் இயேசுகிறிஸ்துவின் விருப்பமாகும். 


தம்முடைய விருப்பத்தைப் பிதாவானவர் நிறைவேற்றுவார் என்று இயேசுகிறிஸ்து நிச்சயமாய் நம்புகிறார். ஏனெனில்  உலகத்தோற்றத்திற்கு முன் பிதாவானவர் இயேசுகிறிஸ்துவில் அன்பாயிருந்தார். பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்தபடியினால், அவர் இயேசுகிறிஸ்துவுக்கு அவருடைய மகிமையைத் தந்தார். இயேசுகிறிஸ்துவின் பேச்சிலும் செய்கையிலும் பிதாவானவர் பிரியப்படுகிறார்.  ஆகையினால்தான் பிதாவானவர் எல்லாவற்றையும் இயேசுகிறிஸ்துவின் கரங்களில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். பிதாவானவர் இயேசுகிறிஸ்துவில் அன்பாயிருக்கிறபடியினால், அவருடைய மகிமையை அவருக்குக் கொடுத்திருக்கிறார். உலகத்தோற்றத்திற்கு முன்பே பிதாவானவர் இயேசுகிறிஸ்துவை மத்தியஸ்தராக அங்கீகரித்து அவரிடத்தில் அன்பாயிருக்கிறார். 


தம்முடைய மகிமையில், சீஷர்களும் பங்குபெறவேண்டுமென்று இயேசுகிறிஸ்து விரும்புகிறார். பிதாவானவர் இவர்களை இயேசுகிறிஸ்துவுக்குத் தந்திருக்கிறார். பிதாவானவர் இயேசுகிறிஸ்துவில் அன்பாயிருக்கிறபடியினால், அவருடைய விண்ணப்பம் எதையும் தேவன் மறுக்கமாட்டார்.  அவர் கேட்டுக்கொள்வதையும் விரும்புவதையும்  பிதாவானவர் கொடுப்பார். இந்த ஐக்கியம் அன்பினால் உண்டாயிற்று. இந்த அன்பு தெய்வீக அன்பு. நித்திய அன்பு. உலகத்தோற்றத்திற்கு முன்னே இருக்கிற அன்பு. 


விசுவாசிகள் இந்த உலகத்திற்கு சுவிசேஷச் செய்தியை அறிவிக்க வேண்டும். தங்கள் வாயினால் அறிவித்தால் மட்டும் போதாது. தேவனுடைய சத்தியத்தை இந்த உலகம் அறிய வேண்டும். அதற்காக நாம் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால், பிதாவும், குமாரனும் ஒன்றாயிருப்பது போல விசுவாசிகளும் ஒன்றாயிருக்க வேண்டும். ஆதித்திருச்சபையின்விசுவாசிகள் தங்களுக்குள் ஒருமனப்பட்டிருந்தார்கள்.           ""வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச் செய்கைகளுமுண்டு'' (யாக் 3:16) தேவபிள்ளைகள் ஒற்றுமையாக இருக்கும் போது தேவநாமம் மகிமைப்படும்.


நீதியுள்ள பிதாவே


 நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்  

 (யோவா 17:25). 


இயேசுகிறிஸ்து இப்போது பிதாவினிடத்தில் ஜெபிக்கிறபோது, அவரை ""நீதியுள்ள பிதாவே'' என்று அழைக்கிறார்.  தம்முடைய சீஷர்களை அவர் பரிசுத்தப்படுத்தவேண்டுமென்று ஜெபம்பண்ணியபோது,  ""பரிசுத்த பிதாவே'' என்று அழைத்தார். இப்போது தம்முடைய சீஷர்கள் மகிமைப்படுத்தப்படவேண்டும் என்று ஜெபிக்கும்போது, இயேசுகிறிஸ்து பிதாவை,  ""நீதியுள்ள பிதாவே'' என்று அழைக்கிறார்.


தம்முடைய ஜெபத்தில் இயேசுகிறிஸ்து இந்த உலகத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறார். ""உலகம் உம்மை அறியவில்லை'' என்பதுதான் இயேசுகிறிஸ்து இந்த உலகத்தைப்பற்றிக் கொடுக்கும் சாட்சியாகும். இப்பிரபஞ்சத்தின் மக்கள் தேவனைப்பற்றிய அறியாமையிலிருக்கிறார்கள். அந்தகார இருளில் அமர்ந்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்கு விசேஷித்த கிருபை தேவைப்படுகிறது. சீஷர்கள் இந்த உலகம் முழுவதும் சென்று சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டும். சுவிசேஷ ஊழியம் மிகவும்  அத்தியாவசியமான ஊழியம். அதேவேளையில் இது கடினமான ஊழியம். இந்த உலகம் தேவனை அறியவில்லை. அவர்களுக்கு மத்தியில் சீஷர்கள் தேவனை அறிவிக்கவேண்டும். அவர்களுக்குக் கடினமான ஊழியம் கொடுக்கப்பட்டிருப்பதினால், பிதாவானவர் அவர்களைக் காத்துக்கொள்ளவேண்டுமென்று  இயேசுகிறிஸ்து ஜெபம்பண்ணுகிறார். 


இப்பிரபஞ்சத்தில் தேவனுடைய ஊழியத்தைச் செய்ய, சீஷர்களுக்கு விசேஷித்த சிலாக்கியங்கள் தேவைப்படுகிறது. இதனால்  அவர்கள் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்ய தகுதியடைவர்கள் ஆவார்கள். இந்த உலகம் தேவனை அறியவில்லை. இயேசுகிறிஸ்து பிதாவை அறிந்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள், ""பிதாவானவர் அவரை அனுப்பியிருக்கிறார்'' என்பதை அறிந்திருக்கிறார்கள். ஆகையினால் அவர்கள் தேவனை அறிந்திருக்கிறார்கள். 


இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது, அவர் தம்மைப்பற்றிசொல்லும்போது, ""நான் உம்மை அறிந்திருக்கிறேன்'' என்று கூறுகிறார்.   இயேசுகிறிஸ்து பிதாவை அறிந்திருக்கிறார். பிதாவை இயேசுகிறிஸ்து அறிந்திருப்பதுபோல, வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. ஆகையினால் ""நான் உம்மை அறிந்திருக்கிறேன்'' என்று இயேசுகிறிஸ்து ஜெபிக்கும்போது, இந்த வாக்கியத்தை முழுநிச்சயத்தோடு சொல்லுகிறார். நாமும் தேவனை அறிந்திருக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்து பிதாவை அறிந்திருக்கிறார். அவருடைய    சீஷர்களும் பிதாவை அறிந்திருக்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்து பிதாவை அறிந்திருப்பதுபோல, அவருடைய சீஷர்கள் பிதாவை அறிந்திருக்கவில்லை. ஆகையினால் சீஷர்கள்  தேவனைப்பற்றிய தங்கள் அறிவில் பெருமைப்பட முடியாது. தேவனுடைய சமுகத்தில் நெருங்கிச் சேருவதற்கு நமக்கு ஒரு தகுதியுமில்லை. நம்முடைய சுயபக்தியோ, சுயசக்தியோ, சுயபுத்தியோ ஒன்றுக்கும் உதவாது. இயேசுகிறிஸ்து நம்மீது  கிருபையாகயிருப்பதினாலும், அவர் நமக்காக  பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறதினாலும், தேவனுடைய சமுகத்தில் நெருங்கிச் சேரும் சிலாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. தேவனைப்பற்றி அறிந்துகொள்ளும் பாக்கியமும்  நமக்கு உண்டாயிருக்கிறது. நாம் எப்போதுமே  அபாத்திரராகவே இருக்கிறோம். தேவன் மாத்திரமே பாத்திரராக இருக்கிறார். 


இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபிக்கிற போது, தம்முடைய சீஷர்களைப்பற்றியும் ஜெபத்தில் குறிப்பிடுகிறார். ""நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்'' என்று அறிவிக்கிறார்.  இதனால் இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்கும் இப்பிரபஞ்சத்தின் ஜனங்களுக்கும் ஒரு வித்தியாசம் தெரிகிறது. இவர்கள் தேவனை அறிந்திருக்கிறார்கள். அவரை விசுவாசிக்கிறார்கள். உலகத்தாரோ தேவனை அறிந்திருக்கவில்லை, அவரை விசுவாசிக்கவில்லை. 


தேவனை அறியாத, தேவனை விசுவாசியாத இந்த உலகத்தார் மத்தியில், இயேசுகிறிஸ்துவை அறிந்து, அவரில் விசுவாசமாயிருப்பது தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் கிருபையும் சிலாக்கியமும் ஆகும். தேவனுடைய மகிமை நமக்குக் கொடுக்கப்பட்டதினாலேயே, உலகத்தாருக்கும் நமக்கும்  இடையே வித்தியாசம் உண்டாயிற்று.  இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஒரு குறிப்பிட்ட  காரியத்தை மாத்திரமே கேட்கிறார். தாம் கேட்பதைப் பிதாவானவர் கொடுப்பார் என்னும் நிச்சயம் அவருக்குள் இருக்கிறது. ஏனெனில் அவர் பிதாவை அறிந்திருக்கிறார். பிதாவானவர் குமாரனை அனுப்பியிருக்கிறார் என்பதை அவருடைய சீஷர்களும் அறிந்திருக்கிறார்கள்.  ""பிதாவானவர் இயேசுகிறிஸ்துவை அனுப்பியிருக்கிறார்'' என்பதை அறிந்துகொள்வது, ""பிதாவானவரையே'' அறிந்துகொள்வதாகும். 


பிதாவைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் காரியங்கள்


    1. நீதியுள்ள பிதா (யோவான் 17:25)


    2. பரிசுத்த பிதா   (யோவான் 17:11)


    3. பரலோகப்பிதா

 (மத் 6:14,26,32)


    4. இரக்கங்களின் பிதா   (2கொரி 1:3)


    5. மகிமையின் பிதா  

(எபே 1:17)


    6. ஆவிகளின் பிதா 

(எபி 12:9)


    7. சோதிகளின் பிதா  

(யாக் 1:17)


    8. வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவர் (மத் 11:25)


அன்பு


நீர் என்னிடத்தில் வைத்த அன்பு           அவர்களிடத்தி-ருக்கும்படிக்கும், நானும்            அவர்களி-ருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்  (யோவா 17:26). 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். தேவனைப்பற்றி அறியும் அறிவில் இயேசு தம்முடைய சீஷரை வழிநடத்தியிருக்கிறார். பிதாவானவர் தம்மிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்தில் இருக்கும்படிக்கும், இயேசுகிறிஸ்துவும் அவர்களில் இருக்கும்படிக்கும், பிதாவானவருடைய நாமத்தை இயேசுகிறிஸ்து அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். அந்த நாமத்தை ""இன்னும் தெரியப்படுத்துவேன்'' என்றும் அறிவிக்கிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் பிதாவின் நாமத்தைத் தெரியப்படுத்தியிருக்கிறார்.  இயேசுகிறிஸ்துவோடு மிகவும் நெருக்கமாக இருந்து அவரைப் பின்பற்றிய சீஷர்களிடத்தில், அவர் பிதாவின் நாமத்தைத் தெரியப்படுத்தியிருக்கிறார். இப்போது இந்தச் சத்தியத்தை விசுவாசிகளாகிய நமக்கும் தெரியப்படுத்துகிறார். பிதாவின் நாமம் நமக்குத் தெரியப்படுத்தப்பட்டிருப்பதற்காக, நாம் இயேசுகிறிஸ்துவுக்கு துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் ஏறெடுக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே நமக்குத் தேவனைப்பற்றி  அறிவு உண்டாயிற்று. நாம் தேவனுடைய ஐக்கியத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று இயேசுகிறிஸ்து நமக்காக ஜெபிப்பதற்கு முன்பாக, அவர் நம்மைத் தேவனைப்பற்றி  அறியும் அறிவில் வழிநடத்துகிறார்.


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில்  பிதாவின் நாமத்தைத் தெரியப்படுத்துகிறார். ""இன்னும் தெரியப்படுத்துவேன்'' என்று அறிவிக்கிறார். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு அவர்        தம்முடைய சீஷருக்கு இன்னும் அதிகமான காரியங்களை வெளிப்படுத்தவேண்டுமென்று சித்தமுள்ளவராக இருக்கிறார்.  ""தேவனுடைய ராஜ்யத்திற்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராக காண்பித்தார்'' (அப் 1:3). இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து பரமேறிப்போனபின்பு, பரிசுத்த ஆவியானவர் சீஷர்கள்மீது வந்திறங்கினார். அவர்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம்பண்ணப்பட்டார்கள். பரிசுத்த ஆவியானவர் சீஷர்களைச் சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துகிறார். பரிசுத்த ஆவியானவரின் ஊழியம் எல்லா விசுவாசிகளுக்கும்  கொடுக்கப்பட்டிருக்கிறது.  நம்முடைய இருதயம் இயேசுகிறிஸ்துவில் பிரகாசமாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் அதை மேலும் அதிகமாகப் பிரகாசம்பண்ணச் செய்கிறார்.


இயேசுகிறிஸ்துவின் விண்ணப்பத்தை ஏற்று பிதாவானவர் அவருக்குச் செவிகொடுக்கும்போது, நித்திய சந்தோஷம் உண்டாகும். அந்தச் சந்தோஷமே மெய்யான சந்தோஷமாக இருக்கும். நாம் தேவனோடு ஐக்கியமாக இருப்பதினாலும், இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாக இருப்பதினாலும் நமக்கு மெய்யான சந்தோஷம் உண்டாயிருக்கிறது. இந்தச் சந்தோஷத்தை நமக்குக் கொடுக்கவேண்டுமென்பதற்காகவே, அவர் பிதாவின் நாமத்தை நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். இதன் மூலமாக பிதாவானவர் இயேசுகிறிஸ்துவில் வைத்த அன்பு நம்மிடத்தில் இருக்கும். இயேசுகிறிஸ்துவும் நம்மில் இருப்பார். பிதாவானவர் இயேசுகிறிஸ்துவைத் தம்முடைய அன்பின் ஆவியினால் நிரப்பியிருக்கிறார். அதே ஆவியினால்  விசுவாசிகளாகிய நாமும் நிரப்பப்பட்டிருப்போம். 


இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவின் நாமத்தை விசுவாசிகளுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தினால் தெய்வீக வெளிச்சம் நமக்கு அருளப்பட்டிருக்கிறது.  தேவனுடைய அன்பு நம்முடைய இருதயத்தில் நிரம்பியிருக்கிறது. தேவனுடைய நாமம் நமக்குத் தெரிந்திருப்பதினால், நாமும் இயேசுகிறிஸ்துவோடுகூட தெய்வீக காரியங்களில் பங்குள்ளவர்களாக இருப்போம்.  தேவனுடைய அன்பு நமக்கு வரும்போது, அது நம்மில் நிலைத்திருக்கும்படியாகவே வருகிறது.  தேவனுடைய அன்பு நம்முடைய ஆத்துமாவில் நிரம்பியிருக்கும்போது, நம்முடைய ஆத்துமா தேவனை நோக்கி முன்னேறிச்செல்கிறது. நாம் தேவனுடைய அன்பில் ஆர்வமாயிருக்கும்போது,  அந்த அன்பின் மூலமாக நமக்குக் கிடைக்கப்போகும் ஆறுதலையும் நாடவேண்டும். 


நாம் தேவனை அறிந்திருக்கிறோம். அதேவேளையில் ""நாம் தேவனை அறிந்திருக்கிறோம்'' என்பதையும் அறிந்திருக்கிறோம். தேவனைப்பற்றிய அறிவு நமக்குள் இருக்கும்போதுதான் நமக்குச் சந்தோஷமும், ஆறுதலும் உண்டாகும். நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவஅன்பு  நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது (ரோம 5:3). நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்காகவும், நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற தேவனுடைய அன்புக்காகவும், நாம் இயேசுகிறிஸ்துவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவரையும், தேவனுடைய அன்பையும்  அதிகமாய் வாஞ்சித்து, அதை மேலும் அதிகமாய்ப் பெற்றுக்கொள்ளவேண்டும். 


இயேசுகிறிஸ்து தம்முடைய அன்பினால்  நம்மிலிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே நாம் தேவனுடைய அன்பைப் பெற்றுக்கொள்கிறோம். நாம் இயேசுகிறிஸ்துவில் நிலைத்திருந்தால் மாத்திரமே, தேவனுடைய அன்பு நம்மில் நிலைத்திருக்கும். ஆகையினால் இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது ""நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும்  அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்''  என்று ஜெபிக்கிறார். ""புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச்சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்''        (கொலோ 1:27) என்று அப்போஸ்தலர் பவுல் தன் நிருபத்தில் எழுதுகிறார். 


நாம் தேவனோடு ஐக்கியமாகயிருப்பதும், தேவனுடைய அன்பைப் பெற்றுக்கொள்வதும் விசுவாசிகளாகிய நமக்கு மிகுந்த ஆசீர்வாதத்தைக் கொடுக்கும். தேவனுடைய கரத்திலிருந்து அவருடைய அன்பைப் பெற்றுக்கொண்ட நாமும் அவரிடத்தில் அன்பு கூரவேண்டும். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கரங்களின் மூலமாகவே  தேவனுடைய அன்பு நமக்குக் கடந்துவருகிறது. ஏனெனில்                அவர் நம்மிலிருக்கிறார். பிதாவானவர் விசுவாசிகளிடத்திலும் அன்பாகயிருக்கிறார். இயேசுகிறிஸ்து விசுவாசிகளிடத்தில் இருக்கிறார். இவையெல்லாமே ஒரு தெய்வீக ஐக்கியமாக இருக்கிறது. 


இயேசுகிறிஸ்து நம்மிலிருப்பதே நமக்கு பெரிய ஆசீர்வாதம். இதைத் தவிர  வேறு எந்தக் காரியத்தையும் நாம் விரும்பக்கூடாது. நம்முடைய பிரியம் இயேசுகிறிஸ்துவில் மாத்திரமே இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாகயிருப்பதே நமக்கு கிடைத்திருக்கும் சிலாக்கியம் என்று நினைத்து அதில் திருப்தியோடிருக்கவேண்டும். இயேசுகிறிஸ்து நமக்காகப் பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார். இதுவே நமக்கு தெய்வீக ஆறுதலைத் தருகிறது. இயேசுகிறிஸ்துவின் ஜெபம் இங்கு முடிவுபெறுகிறது. ஆனாலும் கிறிஸ்துவானவர் நமக்காக, இப்போதும் பிதாவின் சமுகத்தில் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். 


யோவான் 17 ஆவது அதிகாரத்தில் தாம் செய்திருப்பதாக இயேசு கிறிஸ்து கூறிய காரியங்கள்


    1. பூமியில் நான் உம்மை மகிமைப் படுத்தினேன் 

(யோவான் 17:4)


    2. நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்           (யோவான் 17:4)


    3. உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்

 (யோவான் 17:6)


    4. நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன் (யோவான் 17:8)


    5. நீர் எனக்குத் தந்தவர்களை நான் காத்துக் கொண்டு வந்தேன்.  

(யோவான் 17:12)


    6. நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்  (யோவான் 17:14)


    7. நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன். (யோவான் 17:18)


    8. நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். (யோவான் 17:22)


    9. நான் உம்மை அறிந்திருக்கிறேன். 

(யோவான் 17:25)......


Post a Comment

0 Comments