பாடுகளின் வாரம் வியாழக்கிழமை நிகழ்வு-3(2)

 

 பாடுகளின் வாரம்

வியாழக்கிழமை நிகழ்வு-3(2)


கெத்சமனே தோட்டத்திற்குப் போகும் வழியில் இயேசு தம்முடைய சீஷருக்கு உபதேசம்பண்ணுகிறார் (யோவான் 16)


சீஷர்களுக்கு வரப்போகும் துன்பங்கள்

(யோவான் 16 : 1-6)


நீங்கள் இடறலடையாதபடிக்கு


 நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன் (யோவா 16:1).    


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை அனுப்பும்போது, அவர்களிடத்தில் எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடியே சொல்லுகிறார். அவர்கள் சந்திக்க வேண்டிய  துன்பங்களையும் அப்படியே சொல்லிவிடுகிறார்.  இதனால் தாங்கள் போகும் பாதையில், தாங்கள் சந்திக்க வேண்டிய பாடுகளையும் வேதனைகளையும் குறித்து அவர்கள் எச்சரிப்போடு இருப்பார்கள். மேலும் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு செலுத்த வேண்டிய கிரயத்தைப்பற்றி, செல்லும் செலவை உட்கார்ந்து கணக்குப் பார்ப்பார்கள். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம்  அவர்களுக்கு வரப்போகும் துன்பங்களைப்பற்றிப்  பேசுவதற்கு ஒரு காரணமுள்ளது. ""நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்'' என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்படும்போது  சீஷர்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கும்.  இயேசுகிறிஸ்துவில் இவர்கள் வைத்திருக்கும் விசுவாசம் அப்போது அசைக்கப்படும். சீஷர்கள் இடறலடைவதற்கு வாய்ப்புண்டாகும். இயேசுகிறிஸ்து சிலுவையில் தம்முடைய  ஜீவனை ஒப்புக்கொடுத்து மரிக்கும்போது, சீஷர்களுக்குப்  பயங்கரமான சோதனை உண்டாகும்.  இப்படிப்பட்ட சமயங்களில் பக்திமான்கள்கூட தேவனைவிட்டுப் பின்வாங்கிப்போவதற்கு வாய்ப்புள்ளது. எல்லாம் நல்லபடியாக நடந்தால்  நம்முடைய விசுவாசம் உறுதியாக இருக்கும்.  நாம் எதிர்பாராத பிரச்சனைகளும், துன்பங்களும் நமக்கு வந்தால் நம்முடைய விசுவாசம் ஆடிப்போய்விடும். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு வரப்போகும் துன்பங்களை ஏற்கெனவே முன்னறிவித்து, அவருடைய உள்ளத்தில் திகிலும் பயமும் உண்டாகாதவாறு பாதுகாத்துக்கொள்கிறார். துன்பங்கள் வரும்போது அது நமக்கு ஆச்சரியமாகவோ, அதிர்ச்சியாகவோ இருக்கக்கூடாது. துன்பங்களை எதிர்பார்ப்போமென்றால், அதை தாங்கிக்கொள்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளலாம். நம்முடைய வீட்டிற்கு திடீரென்று ஒரு விருந்தாளி வந்தால்,  அவரை எப்படி உபசரிப்பது என்று தெரியாமல் தவிப்போம். அதேவேளையில் நாம் எதிர்பார்க்கிற விருந்தாளி நம்முடைய வீட்டிற்கு வந்தால், அவரை வரவேற்று உபசரிப்பது நமக்கு எளிதாகயிருக்கும். அதுபோலத்தான் நாம் துன்பங்களை எதிர்பார்த்தால், அதை எளிதாகத் தாங்கிக்கொள்ளலாம். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளினால் முன்னெச்சரிப்பைப் பெற்றுக்கொள்ளவேண்டும். முன்னெச்சரிப்பானது, ஆவிக்குரிய யுத்தம்பண்ணுவதற்கு சர்வாயுதவர்க்கங்களை ஏற்கெனவே அணிந்திருந்து ஆயத்தமாகயிருப்பதுபோல இருக்கும்.


புறம்பாக்குவார்கள்


அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்  (யோவா 16:2). 


தம்முடைய சீஷர்களுக்கு எப்படிப்பட்ட துன்பங்களெல்லாம் வரும் என்று இயேசுகிறிஸ்து  அவர்களிடம் முன்னறிவிக்கிறார். சீஷர்களை ஜெப ஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள். அவர்களைக் கொலை செய்வார்கள். 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்கு விரோதமாக  இரண்டு பட்டயங்கள் யுத்தம்பண்ணிக்கொண்டிருக்கும். 


அவையாவன:


 1. மார்க்க ரீதியான பட்டயம் 

2. அதிகாரத்தின் பட்டயம். 


""அவர்கள் உங்களை ஜெப ஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்'' என்று  இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் எச்சரித்துக் கூறுகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை இதற்கு முன்பு எச்சரித்தபோது ""அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்''         (மத் 10:17) என்று ஏற்கெனவே எச்சரித்துக் கூறியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக அவர்கள் சீஷர்களை ஜெப ஆலயங்களுக்குப் புறம்பாக்கிவிடுவார்கள். இஸ்ரவேலின் காணியாட்சிக்கு  இவர்கள் புறம்பே தள்ளப்படுவார்கள். இஸ்ரவேல் ஜனத்தாரோடு இவர்களுக்கு பங்கும் பாத்தியமும்  இல்லாதவர்களைப்போல இவர்களைப் புறம்பாக்குவார்கள். 


சீஷர்கள் சத்தியத்தை உபதேசித்தாலும், ஜெப ஆலயத்தின் மூலமாக இவர்களுக்கு எதிர்ப்புக்களும் வேதனைகளும் உண்டாகும். தேவனுடைய மந்தையில் நல்ல ஆடுகளாக இருக்கும் இவர்களை, ""நரிகள்'' என்று கூறி, இவர்களை மந்தையிலிருந்து துரத்திவிடுவார்கள். பொதுவாக தேவனுடைய சத்தியத்திற்கு உலகத்திலிருந்து வரும் எதிர்ப்பைவிட, ஜெப ஆலயத்திலிருந்தே எதிர்ப்பு அதிகமாக வருகிறது.


சீஷர்களுக்கு ஜெப ஆலயத்திலிருந்து துன்பங்கள் வரும்போது, அதிகாரத்திலிருக்கிறவர்களும், தங்களுடைய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம்பண்ணி, இவர்களைத் துன்பப்படுத்துவார்கள்.  சத்தியத்தை உபதேசம் பண்ணுகிற சீஷர்கள் ""தேவதூஷணம் சொல்லுகிறவர்கள்'' என்று குற்றம்சாட்டப்படுவார்கள். ஜெப ஆலயத்தைவிட்டுப் புறம்பே தள்ளப்படுவார்கள். அவர்களைக் கொன்றுபோடுவார்கள். கிறிஸ்துவின் சீஷர்களைக் கொலை செய்கிறவன்,  ""நான் தேவனுக்குத் தொண்டு செய்கிறேன்'' என்று நினைப்பான். இப்படிப்பட்ட ஒரு காலம் வரப்போகிறது. இந்தக் காலத்தைச் சந்திப்பதற்கு  சீஷர்கள் ஆயத்தமாகயிருக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்களைத் துன்பப்படுத்துகிறவர்கள் துன்மார்க்கர்களாக இருக்கிறார்கள். கொலைசெய்யக்கூடிய கொலை வெறியர்களாக இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து  இங்கு எச்சரித்துக் கூறியதுபோலவே சீஷர்களுடைய வாழ்க்கையில் சம்பவங்கள் நடைபெற்றது. யோவானைத்தவிர, இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் எல்லோரும் இரத்தசாட்சியாக மரித்தார்கள். இவர்களைக் கொன்றுபோட்டவர்களெல்லோரும், தாங்கள் தேவனுக்குத் தொண்டு செய்வதாகவே நினைத்தார்கள். 


தேவனுக்குச் சத்துருக்களாக இருக்கிறவர்கள், துன்மார்க்கராகவும், இரத்த வெறிப்பிடித்தவர்களாகவும் இருக்கும்போது,  தாங்கள் தேவன் மீதுள்ள பக்தியினால், இப்படி நடந்துகொள்வதாகக் காரணம் சொல்லுகிறார்கள்.  தங்களுடைய கொலை வெறியைத் தேவனுக்குச் செய்யும் தொண்டு என்று வியாக்கியானம் பண்ணுகிறார்கள். தேவன் மீதுள்ள பக்திவைராக்கியம் பரிசுத்தவான்களைக்  கொலை செய்கிற அளவுக்கு இவர்களைத் தூண்டுகிறது. 


பிசாசின் கிரியைகள் இதுபோல மிகவும் தந்திரமாக இருக்கும். தேவனுடைய ஊழியம், தேவனுக்குச் செய்யும் தொண்டு என்னும் பெயரில் பிசாசு தன்னுடைய கிரியைகளைச், சபைகள் மூலமாகவும், ஸ்தாபனங்கள் மூலமாகவும் நிறைவேற்றி வருகிறான். கர்த்தருடைய பிள்ளைகள் இதைக் குறித்து மிகுந்த எச்சரிப்போடு இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்து சொன்னதுபோல ""விசுவாசிகளைக் கொலை செய்கிறவன் தான்  தேவனுக்குத் தொண்டு செய்கிறவனென்று நினைக்குங்காலம் வரும்''. அந்தக் காலம் இப்போதே வந்திருக்கிறது. 


ஒரு சிலர் இயேசுகிறிஸ்துவின் உபதேசத்திற்கு எதிர்த்து நிற்கிறார்கள். சத்தியத்தை உபதேசம்பண்ணுகிறவர்களைப் பகைக்கிறார்கள். அவர்களைத் துன்பப்படுத்துகிறார்கள். இவர்களெல்லோருமே  தாங்கள் தேவனுக்குத் தொண்டு செய்வதாகவும், தங்கள் சபைக்கு உதவிசெய்வதாகவும் நினைத்துக்கொண்டு, பரிசுத்தவான்களைத் துன்பப்படுத்துகிறார்கள். வரலாற்றுக் காலத்தில், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு உண்டான துன்பங்களையெல்லாம் நாம் அட்டவணையிட்டுப் பார்த்தால், இப்பிரபஞ்சத்திலிருந்து  அவர்களுக்கு வந்த துன்பங்களைவிட, சபையிலிருந்து வந்த துன்பங்களே அதிகமாக இருக்கும். 


 விசுவாசிகளைத் துன்பப்படுத்துகிறவர்களின் பாவம் தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக இருக்கும். அது மறைவாகயிராது. துன்பப்படுத்துகிறவர்களின்  பாவம் ஒரு புறம் இருக்கும்போது, அவர்கள் பரிசுத்தவான்களைத் ""தேவனுடைய சத்துருக்கள்'' என்று கூறுகிறார்கள். இந்த வார்த்தையைக் கேட்கும்போது பரிசுத்தவான்களின் உள்ளம்  மிகவும் வேதனையடையும். துன்மார்க்கர்கள்  பக்தியுள்ளவர்களைத் ""தேவனுடைய சத்துருக்கள்''   என்று   கூறுகிறார்கள்.


துன்மார்க்கர்கள் தங்களுடைய துன்மார்க்கமான கிரியைகளைத், ""தேவனுக்குச் செய்யும் தொண்டு'' என்று வியாக்கியானம் பண்ணுகிறார்கள். 


பிதாவையும் என்னையும் அறியாதபடியினால்


அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்  (யோவா 16:3).  


இந்த உலகம் இயேசுகிறிஸ்துவின் சீஷர்களைப் பகைக்கிறது. அவர்களைத் துன்பப்படுத்துகிறது. இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் இதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்துகிறார். ""அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்'' என்று கூறுகிறார்.  இயேசுகிறிஸ்துவைத் தங்களுக்குத் தெரியுமென்று  ஏராளமானோர் கூறுகிறார்கள். இது வெறும் நடிப்புதான். மாய்மாலமான வார்த்தைதான். இவர்கள் மெய்யாகவே இயேசுகிறிஸ்துவை அறியவில்லை. 


இயேசுகிறிஸ்துவைப்பற்றி அறியாதவர்களுக்கு தேவனைப்பற்றி ஞானம் இருக்காது. அவர்கள் தேவனை ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டார்கள். இவர்களுக்குப்  பிதாவைப்பற்றியும், இயேசுகிறிஸ்துவைப்பற்றியும் அறிவு இல்லாமல் இருப்பதினால்தான், இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களைத் துன்பப்படுத்தி, அவர்களைக் கொலைசெய்து,  தாங்கள் செய்கிற துன்மார்க்கமான கிரியைகளைத், ""தேவனுக்குச் செய்கிற தொண்டு'' என்று சொல்லுகிறார்கள்.       இவர்கள் கர்த்தருடைய ஊழியத்திற்கும் கொலைவெறிக்கும் வித்தியாசம் தெரியாத துன்மார்க்கராகயிருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவனைப்பற்றியும், கிறிஸ்துவைப்பற்றியும் மெய்யான அறிவுயில்லாமல் இருப்பதே, இவர்கள் பரிசுத்தவான்களைத் துன்பப்படுத்துவதற்கு அடிப்படை காரணமாயிற்று. 


ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை 


 அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை (யோவா 16:4). 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு வரப்போகும் பாடுகளை இப்போது சொல்லுகிறார். அதே வேளையில், இதற்கு முன்பே அவர்களுக்கு  இவற்றைப்பற்றி ஏன் சொல்லவில்லை என்பதற்கான காரணத்தையும் கூறுகிறார். ஆரம்பத்திலேயே பிரச்சனைகளைப்பற்றிப் பேசி அவர்களைச் சோர்வடையச்செய்ய இயேசுகிறிஸ்து விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு. ஏற்றவேளை வரும்போது, இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷருக்கு ஒவ்வொரு சத்தியமாக வெளிப்படுத்துகிறார். ""அந்தக்காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேன் என்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்'' என்று தாம் இவற்றை  இப்போது சொல்லுவதற்கான காரணத்தையும், இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷருக்குத் தெளிவுபடுத்துகிறார். 


சீஷர்களுக்குப் பாடுகளும் துன்பங்களும் வரும்போது, இயேசுகிறிஸ்து தங்களுக்கு இவற்றைப்பற்றி சொல்லிய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, ஆறுதலடைந்திருப்பார்கள். நமக்கு வரப்போகும் துன்பங்களைப்பற்றி நமக்கு  ஏற்கெனவே சொன்னால், அந்தத் துன்பங்கள் வரும்போது அது நமக்கு மிகுந்த பாரமாகயிராது.அதைச் சந்திப்பதற்கும், தாங்கிக்கொள்வதற்கும் நாம் ஆயத்தமாகயிருப்போம். நமக்கு எப்படிப்பட்ட துன்பம் வரும் என்பது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருப்பதினால், அவை வரும்போது அது நமக்கு அதிர்ச்சியாகவோ அல்லது ஆச்சரியமாகவோ இராது. 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் இப்போது அவர்களுக்கு வரப்போகும் துன்பத்தைப்பற்றிச் சொல்லுகிறார். ஆனால்  இதற்கு முன்பே அவர்களிடம் அதைப்பற்றிச் சொல்லவில்லை. இயேசுகிறிஸ்து அவர்களுடனே கூடயிருந்தபடியால், ஆரம்பத்திலே அவர் அவர்களுக்கு இவைகளைச் சொல்லவில்லை. இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரோடு இருந்த காலத்தில், உலகத்தின் கோபத்தையும் விரோதத்தையும் தாமே தம்மீது ஏற்றுக்கொண்டார். ஆவிக்குரிய யுத்தத்தில் இயேசுகிறிஸ்து தாமே முன்னணியில் நின்று சத்துருவோடு யுத்தம்பண்ணினார்.   இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு ஆரம்பத்திலிருந்து துன்பங்களைத்தாங்கிக்கொள்ள உபதேசம்பண்ணிக்கொண்டேயிருக்கிறார்.


இந்தக் காரியங்களை இயேசு கிறிஸ்து தமது சீஷர்களிடம் ஆரம்பித்திலேயே சொல்லவில்லை. சொல்லியிருந்தால், அவர்கள் சோர்ந்து போயிருப்பார்கள். இப்பொழுது, இந்தச் சத்தியங்களையெல்லாம், இயேசு கிறிஸ்து தமது சீஷர்களிடம் சொல்ல வேண்டிய வேளை வந்துவிட்டது. ஆரம்பத்தில் இயேசு அவர்களோடு கூட இருந்தார். இப்போது அவர்களைவிட்டு, இயேசு கிறிஸ்து எடுத்துக் கொள்ளப்படப் போகிறார்.


என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன் 


இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது

 (யோவா 16:5,6).


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை விட்டுப் போகப் போகிறார். இதனால் சீஷர்கள் மிகுந்த துக்கத்தோடிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவும் தம்முடைய சீஷர்களின் துக்கத்தைக் குறித்து அதிக கரிசனையோடிருக்கிறார். ""இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை'' என்று தம்முடைய சீஷரிடத்தில் பரிவோடு பேசுகிறார். தங்களுக்குஆறுதல் தரக்கூடிய விஷயங்களைப்பற்றி சீஷர்கள் இயேசுகிறிஸ்துவிடம் விசாரிக்கவில்லை. அதற்குப் பதிலாக தங்களுடைய துன்பங்களைப்பற்றியும், வேதனைகளைப்பற்றியும் நினைத்து அதிகமாய்  துக்கப்படுகிறார்கள். நமக்கு துன்பம் வரும்போது, அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்காமல், நமக்கு ஒத்தாசை கொடுக்கிற இயேசுகிறிஸ்துவையே நினைத்துக்கொள்ளவேண்டும்.  


இயேசுகிறிஸ்து இப்போது தம்மை அனுப்பின பிதாவினிடத்திற்குப்  போகப்போகிறார்.  பிதாவினிடத்திற்குப் போகுமாறு இயேசுகிறிஸ்துவை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இந்தப் பூமியிலிருந்து அவரை யாரும் துரத்திவிடவில்லை. இயேசுகிறிஸ்து தம்முடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாக, சுயாதீனமாக தம்மை அனுப்பின பிதாவினிடத்திற்குத் தாமாகவே போகிறார். இந்தப் பூமியில் தாம் செய்த ஊழியத்தைக் குறித்து கணக்கு ஒப்புவிப்பதற்காக, இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவினிடத்திற்குப் போகிறார். 


இயேசுகிறிஸ்து சீஷர்களைவிட்டுப் போனபின்பு அவர்களுக்கு என்னென்ன துன்பங்களெல்லாம் வரும் என்று முன்னறிவித்துக் கூறுகிறார். ஒருவேளை இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றி அவருடைய சீஷராகயிருப்பது தாங்கள் செய்த தவறான முடிவோ என்று நினைத்து அவர்கள் சோதிக்கப்படலாம். ஒருவேளை தங்களுடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, பாதி வழியில், தங்களை கைவிட்டுப்போகிறாரோ என்றும் ஏக்கத்தோடு பார்க்கலாம். சீஷர்களின் உள்ளான மனதை இயேசுகிறிஸ்து அறிந்திருக்கிறார். 


தம்முடைய சீஷர்களின் துக்கத்தைப் போக்குவதற்காக இயேசுகிறிஸ்து அவர்களுக்கு ஆலோசனை கூறுகிறார்.    அவர்களுக்காக பரிதபிக்கிறார். அதே சமயத்தில் அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தமாகவும், தெளிந்த சிந்தனையில்லாமல் அவர்கள் துக்கத்தோடிருப்பதற்காகவும், இயேசுகிறிஸ்து அவர்களைக் கடிந்துகொள்ளவும் செய்கிறார். ""எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை'' என்று அவர்களிடத்தில் வருத்தத்தோடு பேசுகிறார். அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கக்கூடிய சம்பவத்தைப்பற்றி அவர்கள் அக்கரையில்லாதவர்களாக இருக்கிறார்கள். 


பேதுரு ஒரு சமயம் 

""நீர் எங்கே போகிறீர்'' என்று இயேசுகிறிஸ்துவிடம் கேட்டான் (யோவா 13:36). 


தோமா கூட இயேசுகிறிஸ்துவிடம் ""ஆண்டவரே நீர் போகிற இடத்தை அறியோமே. வழியை நாங்கள் எப்படி அறிவோம்'' (யோவா 14:5) 

என்று கேட்டான்.  

இவர்கள் ""இயேசுகிறிஸ்து எங்கே போகிறார்'' என்பதை அந்தந்த சமயத்தில் தெரிந்துகொள்ளவேண்டுமென்று ஆவலாகயிருந்தாலும், அதைத் தெரிந்துகொள்ள அவர்கள்  தொடர்ந்து முயற்சிபண்ணவில்லை. அப்படியே மறந்துவிடுகிறார்கள். இயேசுகிறிஸ்துவோ நமக்கு நல்ல போதகராயிருக்கிறார். நாம் ஒரு சத்தியத்தை மறந்துபோனாலும், அதை நமக்குத் திரும்பவும் நினைவுபடுத்துகிறார். பொறுமையோடு உபதேசம்பண்ணுகிறார். 


சாதாரணமாக ஆசிரியர்களுக்குப் பொறுமையிருக்காது. மாணவர்கள் ஆசிரியரிடம்  ஒரே கேள்வியை இரண்டு தரம் கேட்டால், ஆசிரியர்கள் பொறுமையோடு பதில் சொல்லமாட்டார்கள். புரிந்தால் புரியட்டும், புரியாமல்போனால் போகட்டுமென்று அக்கரையில்லாமல் சொல்லிக்கொடுப்பார்கள்.  ஆனால் இயேசுகிறிஸ்துவோ ஒரு தாய் தன் குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொடுப்பதுபோல, நமக்குச் சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கிறார். நமக்கு அறியாத சத்தியங்களைக்கூட எடுத்துக்காட்டுகளினாலும், உவமைகளினாலும் விளக்கிக்கூறி நமக்குப் புரியவைக்கிறார். 


தேவனுடைய தெய்வீக திட்டத்தை அவரிடத்தில் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். நமக்கு இந்த உலகத்தில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் வரும் என்பதைத் தேவனுடைய சமுகத்தில் அமர்ந்திருந்து, அவரிடத்தில் கற்றுக்கொள்ளவேண்டும். நம்முடைய உண்மையான நிலமை என்ன, நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதையெல்லாம் இயேசுகிறிஸ்துவிடத்திலிருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் தம்மிடத்தில் நாம் கேட்டுத்தெரிந்துகொள்ளவேண்டுமென்று  சித்தமுள்ளவராகயிருக்கிறார். நாம் கேட்காமல் அமைதியாகயிருப்போமென்றால் ஒன்றையும் தெரிந்துகொள்ளமுடியாது. தேவனுடைய இரகசியத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது.  


நம்முடைய வாழ்க்கையில் எது நடந்தாலும்  அது தேவனுடைய சித்தத்தின் பிரகாரமாகவே நடக்கும் என்னும் நிச்சயம்          நம்மிடம் இருக்கவேண்டும். நாம் தேவனுடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்கள். தேவனிடத்தில் அன்புகூருகிறவர்கள். நமக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது என்று  நாம் அறிந்திருக்கவேண்டும் (ரோம 8:28).  நமக்குத் துன்பங்கள் வரும்போது, ""ஆண்டவரே இது ஏன் எனக்குச் சம்பவிக்கிறது'' என்று கேட்போமானால், அவர் நம்மிடத்தில் ""தம்முடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது'' என்று பதில் கூறுவார். 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் துக்கத்தில் நிறைந்திருக்கிறார்கள். இருதயத்தில் துக்கம் மிகுந்திருப்பதினால், அவர்களால் அந்தத் துக்கத்தைத்தாண்டி, தங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஆசீர்வாதத்தைப்    பார்க்க முடியவில்லை. இயேசுகிறிஸ்து அவர்களைப்பார்த்து ""உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது'' என்று கூறுகிறார். தங்களுக்கு எதிராக வரப்போகும் பிரச்சனைகளை மாத்திரமே சீஷர்கள் சிந்தித்துப்பார்க்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் ஆறுதலான ஆலோசனைகளைப்பற்றி அவர்கள்  சிறிதும் சிந்திக்கவில்லை.  அவர்கள் இருதயம்  துக்கத்தால் நிறைந்திருப்பதினால், அங்கு சந்தோஷத்திற்கு இடமில்லாமல் போயிற்று.  மேகத்தின் ஒரு பகுதி துக்கமாகயிருந்தாலும்,  அதன் மறுபகுதி சந்தோஷமாகயிருக்கிறது. நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நமக்குத் துக்கம் வரும்போது, அதை மாத்திரமே பார்த்து சோர்ந்துபோகிறோம். துக்கத்தைத் தாண்டி இயேசுகிறிஸ்துவின் ஆறுதலான வார்த்தைகளை நாம் கேட்கவேண்டும். 


இயேசுகிறிஸ்துவினுடைய சீஷர்களின் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது. அவர்கள் இப்போதுள்ள ஜீவியத்தின்மீது அதிக பற்றுதலாகயிருக்கிறார்கள். இனிமேல் வரப்போகிற ஜீவனைப்பற்றி அவர்கள் இன்னும் அதிகமாய் சிந்திக்கவில்லை. இயேசுகிறிஸ்து இந்தப் பூமியில், ஒரு உலகப்பிரகாரமான ராஜ்யத்தை ஸ்தாபிக்கப்போகிறார் என்னும் ஆர்வமே சீஷர்களிடத்தில் இருக்கிறது. அவர்கள் அந்த ராஜ்யத்தின் மேன்மையையும், மகிமையையும் மாத்திரமே சிந்தித்துப்பார்க்கிறார்கள். இப்போது இயேசுகிறிஸ்து தாங்கள் எதிர்பார்க்கும் ராஜ்யத்தை ஸ்தாபிக்காமல், பாதியிலேயே விட்டுவிட்டுப் போகிறாரே என்னும் கவலை சீஷர்களுடைய இருதயத்தில் நிரம்பியிருக்கிறது.  தேவனுடைய சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்வதற்கு உலகசிநேகம் எப்போதுமே தடையாகயிருக்கும்.  உலகத்தைப்பற்றிய கவலைகள் நமது இருதயத்தை நிரப்பும்போது அங்கு மெய்யான சந்தோஷத்திற்கு இடமில்லாமல் போய்விடும். 


தேற்றரவாளர்

( யோவா 16 : 7-15)


அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன் 


நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன் (யோவா 16:7).


தேற்றரவாளர் வரவேண்டுமானால் இயேசுகிறிஸ்து அவர்களைவிட்டுப் போவது அவசியமாகயிருக்கிறது. ""நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும். நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார். நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்'' (யோவா 16:7) என்று இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில், தாம் அவர்களைவிட்டுப் போவதன் முக்கியத்துவத்தை ஏற்கெனவே கூறியிருக்கிறார். சீஷர்களுடைய இருதயம் துக்கத்தில் நிறைந்திருந்தாலும், அவர்களிடத்தில் சத்தியத்தை அறிவிக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. ஆகையினால் இயேசுகிறிஸ்து ""நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்'' என்று சொல்லி தம்முடைய வார்த்தையை ஆரம்பிக்கிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டுப்போவது, சீஷர்களுக்குத்தான் பிரயோஜனமாக இருக்கும். அது இயேசுவுக்குப் பிரயோஜனமாயிராது. இயேசுகிறிஸ்து எதைச்செய்தாலும் அதை நம்முடைய பிரயோஜனத்திற்காகவே செய்கிறவர். பல சமயங்களில் எது நமக்கு நன்மையாயிருக்கும்  என்று  நமக்கே தெரியாது. இயேசுகிறிஸ்து எல்லாவற்றையும் அறிந்திருப்பதினால், நமக்கு எது நன்மையாயிருக்குமோ அதை மாத்திரமே நமக்குச் செய்கிறார். நமக்கு எது பிரயோஜனமாகயிருக்குமோ அதை மாத்திரமே  நம்மிடத்தில் பேசுகிறார், அதை மாத்திரமே நமக்குச் செய்கிறார். 


பரிசுத்த ஆவியானவரைத் தம்முடைய சீஷரிடத்தில் அனுப்புவதற்காகவே இயேசுகிறிஸ்து அவர்களைவிட்டுப் போகிறார். ஆகையினால் இயேசுகிறிஸ்து போகிறது அவர்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்.  இயேசுகிறிஸ்து போகாதிருந்தால், தேற்றரவாளர்  சீஷரிடத்தில் வரார். இயேசுகிறிஸ்து தாமே நமக்கு எல்லா வரங்களையும் அருளுகிறவர். நமக்கு வேறொரு வரத்தைக் கொடுப்பதற்கு முன்பாக, தாம் ஏற்கெனவே நம்மிடத்தில் கொடுத்திருக்கிற வரத்தை எடுத்துக்கொள்ளும் அதிகாரம் அவருக்கு உண்டு. நாமோ எல்லா வரங்களையும் நம்மிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்று  விரும்புவோம். சில சமயங்களில் நம்முடைய விருப்பமும் தேவனுடைய சித்தமும் ஒன்றாயிருக்கும். வேறு சில சமயங்களில் இவை இரண்டும் வித்தியாசமாகக் கூடயிருக்கலாம்.   இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தேவன் எதைச் செய்தாலும், அதை அவர் நம்முடைய பிரயோஜனத்திற்காகவே செய்கிறார் என்று நாம் விசுவாசிக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் தம்முடைய இரத்தத்தையே கிரயமாகச் செலுத்தி நமக்கு இரட்சிப்பை உண்டுபண்ணியிருக்கிறார்.  கிறிஸ்து கிரயத்திற்கு வாங்கியிருப்பதன் கனியாக ஆவியானவர் அனுப்பப்படுகிறார்.  இயேசுகிறிஸ்து தம்முடைய மரணத்தினால் இந்தக் கிரயத்தைச் செலுத்தியிருக்கிறார். இந்தச் சத்தியம் இதுவரையிலும் நமக்கு மறைபொருளாகயிருந்திருக்கிறது. இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவினிடத்தில் எப்படி ஜெபிக்கப்போகிறார் என்பதையும், அதனிமித்தமாக பிதாவானவர் நமக்கு பரிசுத்த ஆவியைத் தந்தருளுவார் என்பதையும் இயேசுகிறிஸ்து ஏற்கெனவே தம்முடைய சீஷரிடத்தில் சொல்லியிருக்கிறார். ""நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்கு சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்'' என்று இயேசு தம்முடைய சீஷரிடம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்.  


  நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பரிசுத்த ஆவியானவரின் வரத்திற்காக ஜெபித்திருக்கிறார். அதற்கான கிரயத்தையும் செலுத்தியிருக்கிறார். சீஷர்கள் இப்போது இயேசுகிறிஸ்துவின் சரீரப்பிரகாரமான பிரசன்னத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் சரீரப்பிரகாரமான பிரசன்னத்தில் சீஷர்கள் சார்ந்திருக்கிறார்கள். அவர்களிடத்தில் ஆவிக்குரிய வளர்ச்சி உண்டாகவேண்டும்.  பால்மறக்கிற குழந்தையைப்போல, சீஷர்கள் இயேசுகிறிஸ்துவின் சரீரப்பிரகாரமான பிரசன்னத்தை மறக்கவேண்டும்.  அப்போதுதான்  அவர்களால் பரிசுத்த ஆவியானவருடைய ஊழியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை ஓர் உன்னத அனுபவித்திற்கு அழைத்துச்  செல்ல விரும்புகிறார். அங்கு அவருடைய சரீரப்பிரகாரமான பிரசன்னம் இருக்காது. பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னமே இருக்கும்.  இயேசுகிறிஸ்துவின் சரீரப்பிரகாரமான பிரசன்னத்தைச் சீஷர்கள் மறந்தால் மாத்திரமே, அவர்களால் தேற்றரவாளரின் ஆறுதலையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். அப்படிப்பட்ட உன்னதமான அனுபவத்திற்கு இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைத் தகுதிப்படுத்துகிறார். 


""நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் வாக்குப்பண்ணுகிறார். அவர் சீஷர்களைவிட்டுப்போனாலும், அவர்களிடத்தில்  பரிசுத்த ஆவியானவரை அனுப்புகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்குப் பிரயோஜனம் உண்டாவதற்காகவே அவர்களைவிட்டுப் போகிறார். ஒரு நோக்கத்தோடு அவர் போகிறார். தம்முடைய சீஷர்களை அப்படியே விட்டுவிட்டு, அவர்களை  வருத்தப்பட வைக்கவேண்டுமென்பது இயேசுகிறிஸ்துவின் சித்தம் இல்லை. 


தற்காலத்தில் கர்த்தருடைய சபையில், இயேசுகிறிஸ்துவின் சரீரப்பிரகாரமான பிரசன்னத்திற்குப் பதிலாக, கிறிஸ்துவின் ஆவியானவருடைய பிரசன்னம் அசைவாடிக்கொண்டிருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஆவியானவருடைய பிரசன்னத்தை அதிகமாய் நாடவேண்டும். அதில் பிரியமாயிருக்கவேண்டும். மெய்யாகவே அவர் நம்மைவிட்டுப்போனது நமக்குப் பிரயோஜனமாயிருக்கிறது, இதனால் பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருளப்பட்டிருக்கிறார் என்று விசுவாசித்து, ஆவியானவரின் ஊழியத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சரீரத்தில் இருந்தபோது, அவரால் ஒரே வேளையில் ஒரே இடத்தில் மாத்திரமே இருக்க முடிந்தது. இப்போதோ கிறிஸ்துவின் ஆவியானவர் சர்வவியாபகராகயிருக்கிறார். ஒரே       வேளையில் எல்லா இடத்திலுமிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் எங்கே இரண்டுபேர் அல்லது மூன்றுபேர் கூடியிருக்கிறார்களோ அங்கே ஆவியானவரின் பிரசன்னம் அவர்களோடு கூடயிருக்கிறது. இயேசுகிறிஸ்து தம்முடைய சரீரப்பிரகாரமான பிரசன்னத்தினால் மனுஷருடைய கண்களைத் தம்முடைய பக்கமாக இழுத்துக்கொண்டார். இப்போதோ கிறிஸ்துவின் ஆவியானவர் நம்முடைய இருதயங்களைத் தம்முடைய பக்கமாக இழுத்துக்கொள்கிறார். 


பிரயோஜனமாய் இருக்கும் என்பதற்கான கிரேக்க வார்த்தை ""சம்ப்பெரோ''  என்பதாகும். இயேசு கிறிஸ்து போவதினால் அவர் பரிசுத்த ஆவியானவரைத் தம்முடைய பிள்ளைகளுக்கு அனுப்புவார். ஆகையினால் இயேசு கிறிஸ்து போவது பிரயோஜனமாயிருக்கும்.  இயேசுகிறிஸ்து  கல்வாரி சிலுவையில் மரிக்க வேண்டியது மிகவும் அத்தியாவசியமான காரியம். அவர் மரித்து, பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அவர் போகவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளிடத்தில் வரார்.


கண்டித்து உணர்த்துவார்


அவர் வந்து பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்  (யோவா 16:8).  


இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தை இந்த உலகத்தில் தொடர்ந்து நிறைவேற்றுவதற்குப் பரிசுத்த ஆவியானவரின் வருகை அவசியமாக இருக்கிறது. ""அவர் வந்து பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்''. 


பரிசுத்த ஆவியானவரின் பிரதான ஊழியம் கண்டித்து உணர்த்துவதாகும். ஆவியானவர் வசனத்தினாலும், மனச்சாட்சியினாலும் கண்டித்து உணர்த்துகிறார். உணர்த்துவது என்பது நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.  நீதிபதி எல்லா ஆதாரங்களையும் கூட்டிச்சேர்த்து, தன்னுடைய தீர்ப்பை கூறுவது  ""உணர்த்துவது'' என்று அழைக்கப்படுகிறது.  பரிசுத்த ஆவியானவர் நியாயாதிபதியின் ஊழியத்தைச் செய்கிறார். இயேசுகிறிஸ்துவுக்கும் அவருடைய ஊழியத்திற்கும் சத்துருக்களாக இருக்கிறவர்களின் வாயை அடைத்து அவர்களை அமைதிப்படுத்துகிறார். அவர்களுக்கு எதிராகத் தீர்ப்புச் செய்கிறார்.  


""உணர்த்துவது'' எப்போதுமே பரிசுத்த ஆவியானவரின் ஊழியமாகவே இருக்கும். நாம் ஒருவருக்கு சுவிசேஷத்தை அறிவிக்கலாம். சுவிசேஷத்தைக் கேட்பவர்களும் அதைத்  தங்கள் காதுகளினால் கேட்கலாம். சுவிசேஷம் அவர்களுடைய இருதயத்தில் உணர்த்தப்படவேண்டுமானால், பரிசுத்த ஆவியானவரால் மாத்திரமே அதை அவர்களுக்கு உணர்த்த முடியும். பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே மனுஷருடைய இருதயங்களைத் திறக்கிறவர். மனுஷர்கள் செவிகளில் பேசும்போது, பரிசுத்த ஆவியானவர் மனுஷருடைய இருதயங்களில் உணர்த்துகிறார். 


பரிசுத்த ஆவியானவர் ""தேற்றரவாளர்'' என்று அழைக்கப்படுகிறார். இந்த வசனத்தில் அவர் ""உணர்த்துகிறவர்'' என்றும் அழைக்கப்படுகிறார். நமக்குள் ஆறுதல் வரவேண்டுமென்றால், பரிசுத்த ஆவியானவர் நம்மை உணர்த்தினால்தான் நமக்கு ஆறுதல் உண்டாகும். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் கிரியை செய்யும்போது முதலாவதாக நம்மை உணர்த்துகிறார். அதன் பின்பு நமக்கு ஆறுதலைக்கொடுக்கிறார். ஒரு மருத்துவர் காயத்திற்கு சிகிச்சைக் கொடுக்கும்போது, முதலாவதாகக் காயத்தைக் கழுவி சுத்தப்படுத்துகிறார். அதன்பின்பு காயத்திற்கு மருந்து கட்டுகிறார். இரண்டும் சேர்ந்து நடந்தால்தான் காயம் குணமாகும். அதுபோலவே  பரிசுத்த ஆவியானவர் நம்மை உணர்த்தினால்தான், ஆவியானவர் மூலமாக நமக்கு ஆறுதல் உண்டாகும். 


பரிசுத்த ஆவியானவர் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார் என்று எழுதப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து இந்த உலகத்தை உணர்த்துவதற்கு சுவிசேஷத்தைக் கொடுத்திருக்கிறார். சுவிசேஷம் மெய்யானது என்று பூரணமாய் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சுவிசேஷத்திற்கு விரோதமாக இந்த உலகத்தார் பல எதிர்ப்புக்களைக் கூறினார்கள். அவையெல்லாம் அவமாய்ப்போயிற்று. சுவிசேஷத்தின் ஒவ்வொரு வார்த்தையும் மெய்யானது என்று ஆவியானர் நிரூபிக்கிறார். 


இந்த உலகத்திலுள்ள ஏராளமானோரை  பரிசுத்த ஆவியானவர் கண்டித்து உணர்த்தியிருக்கிறார். அவர்கள் பல காலங்களில்  வாழ்ந்தவர்களாக இருக்கலாம். அவர்கள் பல தேசங்களில் வாழ்கிறவர்களாகவும் இருக்கலாம். எல்லோரையும் உணர்த்துவதுதான் பரிசுத்த ஆவியானவரின் ஊழியம். இந்த உலகம் பாவத்தில் ஜீவிக்கிறது. துன்மார்க்கத்தில் பிரியப்படுகிறது. இப்படிப்பட்ட உலகத்தையும்  ஆவியானவர் கண்டித்து உணர்த்துகிறார். பரிசுத்த ஆவியானவர் பாவிகளை உணர்த்துவது, கர்த்தருடைய  உண்மையுள்ள ஊழியக்காரர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. 


பரிசுத்த ஆவியானவர் செய்யும் ஊழியங்கள்


    1. மறுபடியும் பிறக்க வைக்கிறார்.  (யோவான் 3:3,5) 


    2. ஜீவனைக் கொடுக்கிறார்.  (யோவான் 6:63; ரோமர் 8:11)


    3.பெலனைக்கொடுக்கிறார். (யோவான்7:37-39; யோவான் 14:12-17) 


    4. நித்திய தேற்றரவாளர். (யோவான் 14:16,26; 

யோவான் 15:26) 


    5. சத்தியத்தை உபதேசம் பண்ணுகிறார். (யோவான் 14:17,26; யோவான் 15:26)  


    6. எல்லா சத்தியத்தையும் ஞாபகப்படுத்துகிறார். 

(யோவான் 14:26) 


    7. எல்லா சத்தியத்திற்குள்ளும்

வழிநடத்துகிறார். (யோவான்16:13)


    8. கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறார். (யோவான் 16:13-15)


    9. எல்லா நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறார். (யோவான் 16:13)

    10. கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார். (யோவான்16:14) 


    11. கிறிஸ்துவிற்கு பிரதான சாட்சியாக இருக்கிறார். (யோவான் 15:26)


    12. பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துகிறார். (யோவான் 16:8) 


பரிசுத்த ஆவியானவர் உலகத்தைக் குறித்து கண்டித்து உணர்த்துவார். யூதர்களை மட்டுமல்லாமல், மனுக்குலத்தார் அனைவரையும் பரிசுத்த ஆவியானவர் கண்டித்து உணர்த்துவார்.  


பரிசுத்த ஆவியானவர் பாவத்தைக்குறித்து கண்டித்து உணர்த்துவார். அவிசுவாசமே பாவத்தின் அஸ்திபாரம். பாவசுபாவத்திற்கு அவிசுவாசமே ஆதாரம். அவிசுவாசம் மனுஷரை அழித்துப்போடும்.   


பரிசுத்த ஆவியானவர் நீதியைக்குறித்து கண்டித்து உணர்த்துவார். மனுஷனுடைய நீதி பிரயோஜனமற்றது. கிறிஸ்துவே நமது நீதியாக இருக்கிறார்.   இயேசு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினாலே நாம் நீதிமான்களாக ஆக்கப்படுகிறோம்.         


பாவத்தைக்குறித்து  


அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,  

(யோவா 16:9)


பரிசுத்த ஆவியானவர் பாவத்தைக் குறித்து இந்த உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். இந்த உலகம் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கவில்லை. பாவிகளுடைய பாவங்கள் உணர்த்தப்படவேண்டும். அவர்களிடம் பாவங்களைப்பற்றிச் சொன்னால் மாத்திரம் போதாது. பாவங்களை உணர்த்துவது என்பது சாதாரணமாக வாயினால் சொல்வதைவிட வல்லமையுள்ளது. பரிசுத்த ஆவியானவர் பாவிகளுடைய பாவங்களை அவர்களுக்கு உணர்த்துகிறார். அவர்களுடைய பாவங்களை அவர்களுக்கு உறுதிபண்ணுகிறார். தாங்கள் பாவம் செய்திருக்கிற பாவிகளென்று அவர்களை  ஒத்துக்கொள்ள வைக்கிறார்.


பாவத்தின் சுபாவத்தைக் குறித்தும், பாவத்தின் சாபத்தைக் குறித்தும், பாவத்தினால் உண்டாகும் பயங்கரமான விளைவுகளைக் குறித்தும், பாவத்தின் அசுத்தத்தைக் குறித்தும், இறுதியாகப் பாவத்தினால் வரப்போகிற எல்லாவிதமான பின்விளைவுகளைக் குறித்தும் பரிசுத்த ஆவியானவர் பாவிகளிடத்தில் உணர்த்துகிறார். பாவத்தின் சம்பளம் மரணம். இதைப் பாவிகள் புரிந்துகொள்ளவேண்டும். சாதாரணமாக இதை வாயினால் சொன்னால் அவர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். பரிசுத்த ஆவியானவர் பாவத்தின் விளைவினால் மரணம் உண்டாகும் என்பதை உலகத்திற்கு உணர்த்தினால்தான்,  பாவத்தின் விளைவு பயங்கரமானது என்பது அவர்களுக்குப் புரியும். 


உலகத்தார் இயேசுகிறிஸ்துவைத் தேவன் என்று விசுவாசிக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைக்காமலிருப்பதே மிகப்பெரிய பாவம். பரிசுத்த ஆவியானவர் அவிசுவாசத்தின் பாவத்தை உலகத்திற்கு உணர்த்துகிறார். உலகத்தில் எல்லா இடங்களிலும் பாவம் ஆளுகை செய்கிறது.  பாவத்தின் ஆளுகை மிகவும் பெரிதாயிருக்கிறது.  இந்த உலகத்து ஜனங்கள், வரலாற்றுக் காலத்திலும், தற்காலத்திலும் இயேசுகிறிஸ்துவில்  விசுவாசம் வைக்காமல் பாவம் செய்து வருகிறார்கள். இது ஒரு பாவம் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. பரிசுத்த ஆவியானவர் உலகத்து ஜனங்களுடைய அவிசுவாசத்தை அவர்களுக்கு உணர்த்துகிறார். தேவன் தம்முடைய குமாரன் மூலமாக இந்த உலகத்து ஜனங்களிடம் பேசுகிறார். ஆனால் இந்த உலகத்து ஜனங்களோ இயேசுகிறிஸ்து மூலமாகத் தேவன் பேசுகிறார் என்பதைக்கூட அங்கீகரிக்காமல் பாவம் செய்கிறார்கள்.


பாவத்தின் விளைவு மிகவும் பயங்கரமாக இருக்கும். இதனால் மிகப்பெரிய அழிவு உண்டாகும். ஒவ்வொரு பாவமும் அதன் சுபாவத்தில் பாவமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இயேசுகிறிஸ்துவின் மூலமாக பாவத்திற்கு பரிகாரம் இருக்கும்போது, உலகத்து ஜனங்கள் இயேசுகிறிஸ்துவை விசுவாசியாமல், பாவத்தின் பரிகாரத்தைப் பெற்றுக்கொள்ளாமல் போகிறார்கள். உலகத்தாரின் பாவம் பாவமன்னிப்புக்கு விரோதமான பாவமாக இருக்கிறது. எல்லா பாவங்களுக்கும் அடிப்படையாக இருப்பது ஜனங்களுடைய அவிசுவாசமே. விசுவாசத்தில் ஒவ்வொரு ஆத்துமாவும் இயேசுகிறிஸ்துவிடத்தில் இணைக்கப்படவேண்டும். ஒவ்வொரு மனுஷரையும் இயேசுகிறிஸ்து ஆளுகை செய்யவேண்டும். நம்மை இயேசுகிறிஸ்து ஆளுகை செய்யவில்லையென்றால், பாவம் நம்மை ஆளுகை செய்யும். 


நீதியைக் குறித்து 


நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,  

(யோவா 16:10) 


இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவினிடத்திற்குப் போகிறார். சீஷர்கள் இனி அவரைக் காணமாட்டார்கள். ஆகையினால் பரிசுத்த ஆவியானவர் நீதியைக்குறித்து உணர்த்துகிறார். ""நீதி'' என்னும் வார்த்தைக்கு  வேதபண்டிதர்கள் 


இரண்டுவிதமாகப் பொருள் கூறுகிறார்கள். 

அவையாவன:

 1. இயேசுகிறிஸ்துவின் தனிப்பட்ட ஆள்தத்துவப்பண்பின் நீதி. 


2. நம்முடைய இரட்சிப்புக்காகவும், நம்மை நீதிமான்களாக்கும்படியாகவும்  நமக்கு அறிவிக்கப்பட்டிருக்கிற இயேசுகிறிஸ்துவின் நீதி. 


நசரேத்து ஊராராகிய இயேசு நீதிபரராகிய கிறிஸ்து என்று பரிசுத்த ஆவியானவர் இந்த உலகத்திற்கு உணர்த்துவார். இயேசுகிறிஸ்து சிலுவையில் அறைப்பட்டபோது, சம்பவித்தவைகளைக் கண்ட நூற்றுக்கதிபதி ""மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான்'' என்று இயேசுகிறிஸ்துவைக்குறித்து சாட்சி கொடுத்தான் (லூக் 23:47).


பரிசுத்த ஆவியானவர் இந்த உலகத்திற்கு இயேசுகிறிஸ்துவின் நீதியைக்குறித்து உணர்த்துகிறார். இதற்கு அவர் தெரிந்தெடுத்திருக்கிற முக்கியமான உபாயம் ""இனி இயேசுகிறிஸ்துவை அவர்கள் காணமாட்டார்கள்'' என்னும் உபாயமே ஆகும். இயேசுகிறிஸ்து இதுவரையிலும் சீஷர்களோடு  கூடவே இருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சரீரப்பிரகாரமான பிரசன்னத்தினால் சீஷர்களும் பெருமைப்படுகிறார்கள். அவர் எப்போதும் தங்களோடு கூடவேயிருப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தம்முடைய பிதாவினிடத்திற்குப் போகப்போகிறார். அவர் தேவனிடத்திலிருந்து வந்தவர் என்பதற்கு, அவர் தேவனிடத்திற்குப் போகப்போவதும் ஓர் ஆதாரமாகயிருக்கிறது. பரிசுத்தஆவியானவர் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பிரகாரம் வருகிறார்.  இயேசுகிறிஸ்து பிதாவின் வலதுபாரிசத்திற்கு உயர்த்தப்பட்டதற்கு இதுவும் ஒரு ஆதாரமாகயிருக்கிறது. 


பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்களெல்லோரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டார்கள். அந்த சமயத்தில் பேதுரு அங்கு கூடியிருந்த ஜனங்களிடம் பேசும்போது ""அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப்பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்'' (அப் 2:33) என்று பிரசங்கம்பண்ணுகிறார். இயேசுகிறிஸ்துவின் நீதியை பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் உறுதிபண்ணுகிறது. 


பரிசுத்த ஆவியானவர் இயேசுகிறிஸ்துவின் நீதியைக்குறித்து ஜனங்களுக்கு உணர்த்துகிறார். நம்முடைய இரட்சிப்பைக்குறித்த கிறிஸ்துவின் நீதி  நமக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதினால் நாம் நீதிமானாக்கப்படுகிறோம். மனுஷர் ஒவ்வொருவரும் நீதிமானாயிருக்கவேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் நமக்கு உணர்த்துகிறார். இந்த நீதியை எங்கு பெற்றுக்கொள்ளவேண்டுமென்று ஜனங்கள் தெரிந்துகொள்ள விரும்பலாம். ஒருவேளை அந்த நீதியைத் தேடி அலையலாம். 


மனுஷர் தங்களுடைய சுயநீதியைத் தேடுகிறார்கள். சுயநீதியை ஸ்தாபிப்பதற்காக சுற்றி அலைகிறார்கள். தங்களுடைய சுயநீதிக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் ஜனங்களிடம், பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் நீதியை உணர்த்துகிறார். மனுஷன் தன்னுடைய சுயஞானத்தினால் கிறிஸ்துவின் நீதியைப்பற்றி அறிந்துகொள்ள முடியாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் மாத்திரமே,  மனுஷன் கிறிஸ்துவின் நீதியை உணர்ந்துகொள்ள முடியும். ஆவியானவர் உணர்த்தினால் மாத்திரமே மனுஷரால் உணர்ந்துகொள்ள முடியும்.


இயேசுகிறிஸ்து பரமேறி தம்முடைய பிதாவினிடத்திற்குப் போகிறார். இயேசுகிறிஸ்துவின் நீதியை உறுதி செய்வதற்கு, அவர் தமது பிதாவினிடத்திற்குப் பரமேறிப்போவதும் ஒரு சான்றாக இருக்கிறது.   ""நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே'' என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். இயேசுகிறிஸ்து  பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், அவர் இப்போது பிதாவின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார்,என்னும் நிச்சயம் நமக்குள் உண்டாயிற்று. ஆகையினால் இயேசுகிறிஸ்துவின் மூலமாக நாம் நீதிமானாக்கப்படுவோம் என்னும் நிச்சயமும் நமக்குள் உண்டாகும். பரிசுத்த ஆவியானவர் இந்த சத்தியத்தை நமக்கு உணர்த்தும்போது, நமக்குள் இந்த நிச்சயம் உண்டாகும். 


இயேசு கிறிஸ்துவானவர் பிதாவிடம் திரும்பப் போகிறார். பரிசுத்த ஆவியானவர் இந்தப் பூமியில் இயேசு கிறிஸ்துவின் ஸ்தானத்தில் இருந்து, அவருடைய ஊழியத்தைச் செய்வார்.


நியாயத்தீர்ப்பைக் குறித்தும்


இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து உணர்த்துவார் (யோவா 16:11).  


பிசாசானவன் இந்த உலகத்தின் அதிபதியாயிருக்கிறான். இயேசுகிறிஸ்து இந்த உலகத்தின் அதிபதியை நியாயந்தீர்க்கிறார். பிசாசானவன் ஏமாற்றுக்காரனென்றும், வஞ்சிக்கிறவனென்றும் கண்டுபிடிக்கப்பட்டு நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறான். பிசாசானவன் மனுஷருடைய ஆத்துமாக்களில் வஞ்சகமாகக் குடியிருக்கிறான். இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மூலமாக தேவனுடைய கிருபை   மனுஷருடைய இருதயத்தில் கிரியை செய்கிறது.  கிறிஸ்துவின் மூலமாக மனுக்குலத்திற்குஇரட்சிப்பு உண்டாயிற்று. மனுஷர் இரட்சிக்கப்படும்போது, அவர்களுடைய ஆத்துமாவிலிருந்து சாத்தான் வெளியேற்றப்படுகிறான்.


இந்த நியாயத்தீர்ப்பைக் குறித்து பரிசுத்த ஆவியானவர் உலகத்திற்கு உணர்த்துகிறார். இயேசுகிறிஸ்து உலகத்தின் அதிபதியை நியாயந்தீர்ப்பதினால், அவர் சாத்தானைவிட வல்லமையானவர் என்பது உறுதியாயிற்று. இந்த உலகத்திலிருக்கிற சாத்தானைவிட, நமக்குள் இருக்கிற இயேசுகிறிஸ்து பெரியவர். சாத்தானின்  அந்தகார கிரியையின் மூலமாக இந்த உலகத்தின் காரியங்கள் தாறுமாறாயிற்று. எல்லாவற்றிலும் குழப்பம் உண்டாயிற்று. இந்த உலகத்தில் தாறுமாறாக இருக்கும் எல்லாவற்றையும் ஒழுங்கும் கிரமமுமாக  வைப்பது  இயேசுகிறிஸ்துவின் பிரதான ஊழியம்.  சாத்தானுடைய வல்லமையை முறியடிக்கும்போது அவனால் இந்த உலகத்தில் ஒரு குழப்பமும் உண்டுபண்ண முடியாது. சாத்தானுடைய அந்தகார கிரியைகளெல்லாம் முடிவுக்கு வரும்.  இயேசுகிறிஸ்து தம்முடைய சர்வ வல்லமையினால் சாத்தானை அடக்கித் தமக்குக் கீழ்ப்படுத்துகிறார். சாத்தானுடைய வல்லமை அடக்கப்பட்டிருப்பதினால், இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாக வேறு எந்த வல்லமையும் எதிர்த்து நிற்கமுடியாது.  


இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிறவர்கள் நியாயத்தீர்ப்பின் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள்.  இயேசு கிறிஸ்துவைத் தங்களுடைய சொந்த இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக் கொள்ளாதவர்கள் சாத்தானோடு அழிந்து போவார்கள். 


எல்லா விசுவாசிகளும் நியாயந்தீர்க்கப்படுவார்கள். அவர்களுடைய அதிபதியாகிய சாத்தான் கல்வாரி சிலுவையிலே இயேசு கிறிஸ்துவினால் தோற்கடிக்கப்பட்டான். தன்னுடைய அழிவையே சாத்தானால் தடுத்து நிறுத்த முடியாது. பெலனற்றவனாக இருக்கிறான். அப்படிப்பட்ட சாத்தானால் தன்னுடைய பிள்ளைகளை அவர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிற அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது.  


தாங்கமாட்டீர்கள்


 இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்  (யோவா 16:12). 


பரிசுத்த ஆவியானவர் வருவதினால் இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்கு மிகுந்த பிரயோஜனம் உண்டாயிருக்கும். பரிசுத்த ஆவியானவர் இயேசுகிறிஸ்துவின் சத்துருக்களை அழிப்பதோடு, கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு நன்மை செய்யும் ஊழியத்தையும் செய்கிறார். ஆகையினால் இயேசுகிறிஸ்து அவர்களைவிட்டுப்போவது சீஷர்களுக்கு மிகுந்த பிரயோஜனமாயிருக்கும்.  அவர் போனால்தான் பரிசுத்த ஆவியானவர் சீஷர்களிடத்தில் அனுப்பப்படுவார். 


சீஷர்கள் இப்போது மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து தங்களைவிட்டுப் போகப்போகிறார் என்னும் செய்தியினால் அவர்களுடைய  இருதயம் வருத்தத்தினால் நிரம்பியிருக்கிறது. இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷருக்கு இன்னும் அநேக காரியங்களைச் சொல்லவேண்டுமென்று விரும்புகிறார். ஆனால்  அவையெல்லாவற்றையும் சொன்னால் தம்முடைய சீஷர்கள் இப்போது தாங்கமாட்டார்கள் என்பதையும் இயேசு அறிந்திருக்கிறார். இயேசுகிறிஸ்து நல்ல போதகர். தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணும்போது அவர்களால் எவ்வளவு தாங்கிக்கொள்ள முடியும் என்பதை அறிந்து வைத்திருக்கிறார். அவர்கள்மீது தாங்க முடியாத சுமையை ஒருபோதும் ஏற்றி வைக்கமாட்டார். இயேசுகிறிஸ்துவில் ஞானம், அறிவு ஆகிய பொக்கிஷங்கள் மறைந்திருக்கிறது. இயேசுகிறிஸ்துவைப்போல கிருபையுள்ளவர் வேறு ஒருவருமில்லை. அவர் தம்முடைய சீஷருக்காக மனதுருக்கமுள்ளவர். 


இயேசுகிறிஸ்து தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றி அநேக காரியங்களைத் தம்முடைய சீஷருக்குச் சொல்லவேண்டுமென்று விரும்புகிறார். சொல்லுவதற்கும் அநேக காரியங்கள் உண்டு. ஆனால் இப்போது சீஷர்கள் பலவீனமாக இருக்கிறார்கள். இதற்குமேல் அவர்களுக்குச் சொன்னால் அவர்கள் அதைத் தாங்கிக்கொள்ளமாட்டார்கள். இந்தச் சூழ்நிலையில் இயேசுகிறிஸ்து இன்னும் அதிகமாக அவர்களுக்கு உபதேசம்பண்ணினால், அது அவர்களுக்கு ஆசீர்வாதமாகயிராது. அவர்கள் இடறிப்போவதற்கு ஏதுவான தடைக்கற்களாகவே இருக்கும். இயேசுவின் உபதேசத்தினால் அவர்களுக்கு இப்போது ஆத்தும திருப்தி உண்டாகாது. அதற்குப் பதிலாக ஆத்தும வருத்தமே உண்டாகும். 


இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு உபதேசம் பண்ண வேண்டிய சத்தியங்கள் இன்னும் ஏராளமாய் உள்ளது. ஆனால் சீஷர்களோ அதிகமான உபதேசங்களை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக இல்லை. தம்முடைய சீஷர்களின் நிலைமையை உணர்ந்து, இயேசு கிறிஸ்து அவர்களால் எவ்வளவு தாங்கிக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு மட்டும் படிப்படியாக உபதேசம் பண்ணுகிறார்.  ஓய்வுநாள் பிரமாணங்களும், யூதருடைய பண்டிகைகளும் ஒழிந்துபோகும். திருச்சபையிலே யூதர்களைப் போலவே புறஜாதியாரும் சம அந்தஸ்ததில் இருப்பார்கள். இந்த உபதேசங்களை சீஷர்களால் இப்போது தாங்கிக்கொள்ள முடியாது. பரிசுத்த ஆவியானவர் அவர்களிடத்தில் வரும்போது, அவர் மூலமாக இயேசு கிறிஸ்து சகல சத்தியங்களையும் உபதேசம் பண்ணுவார். 


சகல சத்தியத்திற்குள்ளும் 


சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்-, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார் (யோவா 16:13).


இயேசுகிறிஸ்து பரிசுத்த ஆவியானவரை இங்கு ""சத்திய ஆவியானவர்'' என்று அழைக்கிறார். சத்திய ஆவியானவர் வரும்போது  அவர் சீஷர்களை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார்.


 சத்திய ஆவியானவரிடம் இரண்டு ஊழியங்கள் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. 


அவையாவன: 

1. சீஷர்களைச் சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தவேண்டும்.

 2. இயேசுகிறிஸ்துவை மகிமைப்படுத்த வேண்டும். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகப்போகிறார். அவர் போனபின்பு சீஷர்கள்  உபதேசத்தில் வழிவிலகிச் செல்வதற்கு வாய்ப்புள்ளது. தங்களுடைய இலக்கைக் காணமுடியாமல் ஒருவேளை இவர்கள் அலைந்து திரிந்துகொண்டிருக்கலாம். எது சரியான வழியென்றும், அந்த வழியில் எப்படிப்போவது என்றும் சீஷர்களுக்குத் தெரியவில்லை. அவர்களை வழிநடத்த வழிகாட்டுகிறவர் ஒருவர் தேவைப்படுகிறார். பரிசுத்த ஆவியானவர் நமக்கு வழிகாட்டியாகக் கொடுக்கப்படுகிறார். ஆவியானவர் நாம் போகவேண்டிய வழியை நமக்குக் காண்பித்து, அந்த வழியில் நம்மோடு கூட நடந்து வருகிறார்.  ஆவியானவர் அவர்களோடு கூடயிருப்பதினால்  அவர்கள் வழிதப்பித் திரியவேண்டிய அவசியமில்லை. தங்களுடைய முடிவு எப்படியிருக்குமோ என்னும் குழப்பமும் சந்தேகமும் அவர்களுக்கு ஏற்படாது. ஏனெனில்  சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திற்குள்ளும் சீஷர்களை வழிநடத்துவார். 


சத்தியத்தை அறிந்துகொள்வது என்பது வேறு.  சத்தியத்திற்குள் வழிநடத்தப்படுவது என்பது வேறு. சத்தியத்தை அறிந்துகொண்டு, அதை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ளும்போது, நாம் சத்தியத்தில் நடக்கிறோம். பரிசுத்தஆவியானவர் சத்தியத்தை நமக்கு விளக்கிக் காண்பிக்கும்போது, அந்த சத்தியத்திலுள்ள தெய்வீக வெளிச்சத்தை அதிகம் அதிகமாகக் கண்டுகொள்ளுவோம். தேவனுடைய வெளிப்பாடு நமக்கு அதிகம் அதிகமாய் வெளிப்படுத்தப்படும். விசுவாசிகளை ஒரு சத்தியத்திற்குள் வழிநடத்துவதே பெரிய ஊழியமாக இருக்கும். ஆனால் பரிசுத்த ஆவியானவரோ சீஷர்களைச் சகலசத்தியத்திற்குள்ளும் வழிநடத்துகிறார். 


சீஷர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சத்தியங்கள், அவர்களுக்குப் பிரயோஜனமுள்ள சத்தியங்கள், அவர்களுக்குத் தேவையான சத்தியங்கள், அவர்கள் மற்றவர்களுக்கு உபதேசம்பண்ண வேண்டிய சத்தியங்கள் ஆகிய  எல்லா சத்தியங்களுக்குள்ளும் சத்திய ஆவியானவர் இயேசுகிறிஸ்துவின் சீஷர்களை வழிநடத்துவார். பரிசுத்த ஆவியானவர் சத்தியத்திற்குள் அல்லாமல் வேறு எதற்குள்ளும்  வழிநடத்தமாட்டார். ""சகல சத்தியம்'' என்பது சீஷர்களை ஆளுகை செய்யவேண்டிய ""எல்லா சத்தியங்கள்'' என்று பொருள்படும். பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துவது எல்லாமே  சத்தியத்திற்குள்ளாகவே இருக்கும். 


சத்திய ஆவியானவர் சத்தியத்தைத் தவிர  வேறு எதையும் உபதேசம்பண்ணமாட்டார். ஏனெனில் அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல்  தாம் கேள்விப்பட்டவைகள் யாவையும் சொல்லுவார். தாம் கேள்விப்பட்டதை மாத்திரம் பேசுவார். பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள் அவருடைய சொந்த வார்த்தைகளாகயிராமல், இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தைப்பற்றிய சாட்சியாகவே   இருக்கிறது.  இயேசுகிறிஸ்துவின் வசனம் பிரசங்கிக்கப்படும்போது ஆவியானவர் அதை உறுதிபண்ணுகிறார். 


அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் வசனத்தைப் பிரசங்கம்பண்ணும்போது, ஆவியானவர் அதை  அற்புங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதிபண்ணுகிறார். பரிசுத்த ஆவியானவரின்  ஊழியத்தை நாம் சார்ந்திருக்கும்போது, நாம் அசைக்கப்படுவதில்லை. ஆவியானவருடைய  வார்த்தையின்மீது நம்முடைய ஆத்துமா சார்ந்திருக்கும்போது நமக்குள் மிகுந்த சமாதானம் உண்டாகும். ஆவியானவரின் சாட்சிகளெல்லாமே கிறிஸ்துவின் வார்த்தையோடு ஒத்திருக்கும். ஏனெனில் ஆவியானவர் தம்முடைய சுயமாய் ஒன்றும் பேசுவதில்லை. தாம் கேள்விப்பட்டவைகள் யாவையும் ஆவியானவர் சொல்லுவார். 


மனுஷனுடைய வார்த்தையும் அவனுடைய ஆவியும் எப்போதும் ஒத்துப்போவதில்லை. பல சமயங்களில் இவற்றிற்கு இடையே போராட்டம் உண்டாகும். பிரிவினை இருக்கும். ஆனால் தேவனுடைய நித்திய வார்த்தையும், நித்திய ஆவியானவரும் பிரிந்திராமல் எப்போதுமே  ஒன்றாயிருக்கிறார்கள். 


பரிசுத்த ஆவியானவர் வரப்போகிற காரியங்களைச் சீஷருக்கு அறிவிப்பார். சீஷரிடத்திலிருக்கிற ஆவியானவர் தீர்க்கதரிசன ஆவியானவராகயிருக்கிறார். ஆவியானவரின் தீர்க்கதரிசனம் சீஷர்களுக்கு மிகுந்த சமாதானத்தைத் தரும். சீஷர்களை வழிநடத்த  ஆவியானவரின் தீர்க்கதரிசன ஊழியம் அதிக பிரயோஜனமுள்ளதாக இருக்கிறது.  சத்திய ஆவியானவர் வரப்போகிற காரியங்களை சீஷர்களுக்குச் சொல்லி, சகல சத்தியத்திற்குள்ளும் அவர்களை வழிநடத்துகிறார். 


நம்முடைய காலத்தில் வரப்போகிற காரியங்களை ஆவியானவர் நமக்கு  விவரமாக அறிவிக்கவில்லையே என்று விசுவாசிகளில் சிலர் ஏமாற்றமடையலாம்.  உலகக்காரியங்களை நமக்கு அறிவிப்பதைவிட,  பரலோகத்தின் காரியங்களை அறிவிப்பதே பரிசுத்த ஆவியானவரின் பிரதான ஊழியமாக இருக்கிறது. நம்முடைய கரிசனை இந்தப் பிரபஞ்சத்தின் மீது இருக்கக்கூடாது. நாம் போகப்போகிற பரலோகத்தின்மீது நாம் அதிக வாஞ்சையுள்ளவர்களாகஇருக்கவேண்டும். பரலோகத்தின் காரியங்களைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்று ஆவலுள்ளவர்களாக காணப்படவேண்டும்.  தேவனுடைய வார்த்தையில் கூறப்பட்டிருக்கிற பரலோகத்தின் இரகசியங்களைப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு அறிவிக்கிறார். 


என்னை மகிமைப்படுத்துவார்


அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.   பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்  (யோவா 16:14,15). 


பரிசுத்த ஆவியானவர் இயேசுகிறிஸ்துவை மகிமைப்படுத்தும் ஊழியத்தைச் செய்கிறார். இயேசுகிறிஸ்துவை  மகிமைப்படுத்துவதற்காகவே பரிசுத்த ஆவியானவர் அனுப்பப்படுகிறார்.  மீட்பரின் மகிமைக்காகப் பரிசுத்த ஆவியானவர்  அவருடைய நாமத்தினாலும், அவருடைய ஊழியத்தைச் செய்வதற்காகவும் அனுப்பப்படுகிறார். பரிசுத்த ஆவியானவரின் வருகையினால் இயேசுகிறிஸ்துவின் ஊழியம் பரிபூரணமடைகிறது. பரிசுத்த ஆவியானவரின்  எல்லாக் கிருபைகளும், எல்லா வரங்களும், அப்போஸ்தலர்களின் எல்லாப் பிரசங்கங்களும்,  அவர்களுடைய எல்லா நிருபங்களும், அந்நிய பாஷைகளும், அற்புங்களும் இயேசுகிறிஸ்துவை மகிமைப்படுத்துவதற்காகவே கிரியை செய்துகொண்டிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களை கிறிஸ்துவிலுள்ள சத்தியத்திற்குள் வழிநடத்துகிறார். இதன் மூலமாக  ஆவியானவர் கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துகிறார்.


இயேசுகிறிஸ்துவின் சத்தியத்தை நமக்கு அறிவிப்பதற்காக, ஆவியானவர் இரண்டு வழிகளில் ஊழியம் செய்கிறார். 


அவையாவன:  

 

 1. இயேசுகிறிஸ்துவின் காரியங்களை ஆவியானவர் நமக்கு அறிவிக்கிறார்.


 2. தேவனுடைய காரியங்களை ஆவியானவர் நமக்கு அறிவிக்கிறார். 


இயேசுகிறிஸ்துவின் காரியங்களை பரிசுத்த ஆவியானவர் நமக்கு அறிவிக்கும்போது, அவர் இயேசுகிறிஸ்துவினுடையதில் எடுத்து நமக்கு அறிவிக்கிறார். பரிசுத்தஆவியானவர் நம்மைப் பெலப்படுத்துவதற்காகவும், உற்சாகப்படுத்துவதற்காகவும் கொடுக்கும் அனைத்துமே இயேசுகிறிஸ்துவினுடையவைகள் ஆகும். ஏனெனில் பரிசுத்தஆவியானவர் இயேசுகிறிஸ்துவினுடையதில் எடுத்து நமக்கு அறிவிக்கிறார், அதையே நமக்குக் கொடுக்கிறார். இந்தப் பூமியில் ஒரு புதிய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காக பரிசுத்த ஆவியானவர் அனுப்பப்படவில்லை. இயேசுகிறிஸ்து இந்தப் பூமியில் ஊழியம் செய்தபோது, அவர் ஸ்தாபித்த அதே ராஜ்யத்தையே, பரிசுத்த ஆவியானவரும் ஸ்தாபிக்கிறார். அதை விஸ்தரிக்கிறார். 


தேவனுடைய காரியங்களையெல்லாம் ஆவியானவர் நமக்கு அறிவிக்கிறார். பிதாவினுடையவைகள் யாவும் கிறிஸ்துவினுடையவைகள். தேவன் நமக்கு  வெளிப்படுத்த வேண்டுமென்று சித்தங்கொண்டிருக்கிற எல்லா கிருபைகளும், சத்தியங்களும் இயேசுகிறிஸ்துவின் கரங்களில் ஒப்புக்கொடுக்கப்படுகிறது. பரலோகக் காரியங்களின் ஆவிக்குரிய எல்லா ஆசீர்வாதங்களையும், நமக்குக் கொடுப்பதற்காக,  அவை பிதாவினால் குமாரனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தம்மிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்கும் ஊழியத்தை குமாரனானவர் பரிசுத்த ஆவியானவரிடத்தில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.  


மறுபடியும் உங்களைக் காண்பேன்

( யோவான் 16 : 16-22)


கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள்


நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்  (யோவா 16:16).


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களோடு  எப்போதுமே ஆறுதலான வார்த்தைகளைப் பேசுகிறார். இன்னும் கொஞ்சக்காலத்திலே சீஷர்கள் இயேசுவைக் காணாதிருப்பார்கள். இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவினிடத்திற்குப் போகப்போகிறார். அவர் தம் சீஷரோடு கொஞ்சக்காலமாத்திரமே இருக்கப்போவதினால், சீஷர்கள் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்துவிடத்தில் தாங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டிய நல்ல விஷயங்கள் இன்னும் இருக்குமானால், அவற்றை இந்தக் கொஞ்சக்காலத்திற்குள் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். சீக்கிரமாய்ச் செயல்படவேண்டும். 


நாம் இப்போது கிருபையின் காலத்திலிருக்கிறோம். இந்தக் காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு நம்முடைய பரிசுத்த ஜீவியத்தில் வளர்ச்சியடையவேண்டும். விரைவில் கிருபையின் காலம் முடிந்துபோகும். அதன்பின்பு  நியாயத்தீர்ப்பின் காலம் வந்துவிடும். கிருபையின் காலமும் நியாயத்தீர்ப்பின் காலமும் ஒன்றுபோல் இருக்காது. 


இயேசுகிறிஸ்து இப்போது  தம்முடைய சீஷருடனே கூடயிருக்கிறார். சீக்கிரத்தில் அவர்களைவிட்டுக் கடந்துபோய்விடுவார்.  இயேசுகிறிஸ்து சீஷர்களோடு கூடயிருப்பதற்கும்,  அவர்களோடு அவர் கூடயில்லாமல் இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. கல்வாரி சிலுவையில் இயேசுகிறிஸ்து தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கப்போகிறார். அவர் மரித்த பின்பு  அவருடைய சரீரத்தை அவர்களால் காணமுடியாது. விசுவாசிகள் மரிக்கும்போது அவர்கள் நம்முடைய கண்களின் பார்வையைவிட்டு மறைந்துபோய்விடுகிறார்கள்.  ஆனாலும் அவர்கள் நம்முடைய சிந்தையின் எண்ணத்தைவிட்டு அவர்கள் மறைவதில்லை.  இயேசுகிறிஸ்து பரமேறிப்போகும்போது,  சீஷர்கள்  வானத்தை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசுகிறிஸ்து அவர்கள் கண்களுக்கு மறைவாய் வானத்திற்கு உயர எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகத்தின் நடுவே கடந்துபோனார். அதன்பின்பு சீஷர்கள்  இயேசுகிறிஸ்துவின் சரீரத்தைப் பிரத்தியட்சமாய் காணவில்லை. 


இயேசுகிறிஸ்து பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே அவரைக் காணாதிருப்பார்கள். ஆனாலும் மறுபடியும் கொஞ்சக்காலத்திலே அவரைக் காண்பார்கள். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டு நிரந்தரமாகக் கடந்துபோய்விடவில்லை. கொஞ்சக்காலம் மாத்திரமே அவர்களைவிட்டு கடந்துபோகிறார்.  இயேசுகிறிஸ்து மரித்து மூன்றாம்நாளிலே உயிரோடு எழும்பினார். உயிர்த்தெழுந்த அவரை  இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் அநேகர் தங்கள் கண்களால் கண்டார்கள். 


இயேசுகிறிஸ்து வானத்திற்கு பரமேறிய பின்பு பரிசுத்த ஆவியானவர் சீஷர்கள்மீது ஊற்றப்படுகிறார்.  பரிசுத்த ஆவியானவரின் வருகை, இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை வந்து சந்திப்பதாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளோடு சிறிது காலம் மாத்திரம் இருந்துவிட்டு பின்பு மறைந்துபோய்விடமாட்டார்.  அவர் நம்மோடுகூட நித்திய காலமாக இருப்பார்.  நாம் இயேசுகிறிஸ்துவைப் பரிசுத்த ஆவியானவரில் காணலாம். இவ்விரண்டு சம்பவங்கள் தவிர இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போதும் நாம் அவரைக் காண்போம். 


தம்முடைய சீஷர்கள் கொஞ்சக்காலத்தில் தம்மை ஏன் காணாதிருப்பார்கள் என்பதற்கான காரணத்தையும் இயேசுகிறிஸ்து        அவர்களிடம் கூறுகிறார். ""இயேசுகிறிஸ்து பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால்'' என்பதே அந்தக் காரணம். 

வேதபண்டிதர்கள் இந்த வாக்கியத்திற்கு பலவிதமாக வியாக்கியானம் கூறுகிறார்கள். இந்த வார்த்தையானது இயேசுகிறிஸ்து பரமேறிப்போவதைக் குறிப்பதற்குப் பதிலாக, அவர் தமது சரீரத்தில் மரித்துப்போவதைக் குறிக்கும் என்பது ஒரு வியாக்கியானம். இயேசுகிறிஸ்து மரிக்கும்போது  கொஞ்சக்காலத்திலே சீஷர்கள் அவரைக் காணாதிருக்கிறார்கள். அவர் மூன்றாம் நாளில்  மறுபடியும் உயிரோடு எழும்பும்போது, சீஷர்கள் கொஞ்சக்காலத்திலே மறுபடியும் அவரைக் காண்கிறார்கள். 


இந்த வாக்கியம் இயேசுகிறிஸ்து பரமேறிப்போவதை குறிக்கும் என்று வியாக்கியானம் பண்ணும்போது, அவர் பரமேறிப்போனபின்பு, கொஞ்சக்காலத்திலே, சீஷர்கள் அவரைக்காணாதிருப்பார்கள்.  காலத்தின் முடிவில் இயேசுகிறிஸ்து மறுபடியும் இந்தப் பூமிக்கு வரும்போது, கொஞ்சக்காலத்திலே அவரை மறுபடியும் காண்பார்கள். விசுவாசிகளாகிய நாம் நம்முடைய சிநேகிதர்களைவிட்டுப் பிரிந்துபோகும்போது, இயேசுகிறிஸ்துவைப்போலவே வாழ்த்துக் கூறவேண்டும். ""கொஞ்சக்காலத்தில்      என்னைக் காணாதிருப்பீர்கள்'' என்று இயேசுகிறிஸ்துவைப்போல நாமும் சொல்லி விடைபெறவேண்டும். விசுவாசிகளாகிய நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துபோகவேண்டியது நிச்சயமாகவே நடைபெறும். ஆயினும் நம்முடைய பிரிவு நித்தியமான பிரியவாக இருக்காது.  நாம் மரித்தாலும் மறுபடியும் சந்திப்போம். 


இயேசு கிறிஸ்து மூன்று இடங்களில் தாம் பிதாவினிடத்திற்குப் போவதைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 


    1. நான் என் பிதாவினிடத்திற்குப் போகிற படியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். (யோவான் 14:12-17,26; 

யோவான் 15:7)  


    2. நான் போகிறதுஉங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து பாவத்தைக்குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.  (யோவான்16:8-11)


    3. நான் பிதாவினிடத்திற்குப் போகிற படியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக் காலத்திலே என்னைக் காண்பீர்கள். 

(யோவான் 16:16)


நமக்கு விளங்கவில்லையே


அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால்,          கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்தென்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதுமன்றி:  கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள் (யோவா 16:17,18).  


இயேசுகிறிஸ்துவின் வார்த்தையைக் கேட்டு சீஷர்கள் குழப்பமடைகிறார்கள். அவர் தங்களைவிட்டுப் போகப்போகிறாரே என்னும் வருத்தம் அவர்களுடைய இருதயத்தில் நிரம்பியிருக்கிறது. ஆகையினால்  இயேசுகிறிஸ்து சொல்லுவது சீஷர்களுக்குச் சரியாகப்புரியவில்லை.  சீஷர்களில் சிலர் ""அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே'' என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொள்கிறார்கள். இந்தச் சத்தியத்தை இயேசுகிறிஸ்து ஏற்கெனவே தம்முடைய சீஷர்களுக்கு உபதேசம்பண்ணியிருக்கிறார். ஆனாலும் சீஷர்கள் அந்தச் சத்தியத்தை புரிந்துகொள்ளாமல் இன்னும் இருளிலிருக்கிறார்கள். 


சீஷர்களின் விசுவாசம் பலவீனமாகயிருக்கிறது. அவர்கள் வேதவாக்கியத்தை அறிந்துகொள்வதிலும்  பலவீனமாகயிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவினிடத்திற்குப் போகப்போவதைப்பற்றி, சீஷர்களிடம்  தெளிவாகச் சொல்லியிருக்கிறார். பலமுறை இதைப்பற்றி சொல்லியிருக்கிறார். தம்மைக் கொன்றுபோடுவார்களென்றும், ஆனாலும் மூன்றாம் நாளிலே தாம் மறுபடியும் உயிரோடு எழும்பப்போவதாகவும், இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.  ஆனால் அவர் சொன்னதன் கருத்து அவர்களுக்குப் புரியவில்லை. ""அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே'' என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொள்கிறார்கள். துக்கம் அவர்களுடைய இருதயத்தில் நிரம்பியிருக்கிறது.  மிகுந்த துக்கத்தோடிருப்பதினால் அவர்களுக்கு  ஆறுதல் தேவைப்படுகிறது. 


தவறுகளினால் துக்கம் உண்டாகிறது.  துக்கப்படும்போது தவறு உறுதிபண்ணப்படுகிறது. இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் துக்கத்தோடிருந்து சத்தியத்தைப்  புரிந்துகொள்ள முடியாமலிருக்கிறார்கள்.  இயேசுகிறிஸ்து இந்தப் பூமியில் உலகப்பிரகாரமான ஒரு ராஜ்யத்தை ஸ்தாபிப்பார் என்று சீஷர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த எண்ணம் அவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் பதிந்திருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் தங்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் இல்லை என்று துக்கப்படுகிறார்கள். 


இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நாம் கூட பல சமயங்களில்  இப்படிப்பட்ட தவறுகளைச் செய்வதற்கு வாய்ப்புள்ளது. நம்முடைய சிந்தனையில் சில எண்ணங்கள் இருக்கும். இயேசுகிறிஸ்துவின் வசனம் நம்முடைய எண்ணத்திற்கு ஒத்துப்போகவேண்டுமென்று எதிர்பார்ப்போம்.  ஆனால் நாம் எதிர்பார்த்த பிரகாரம் வேதவாக்கியம் இல்லாமற்போனால், அது நமக்கு  கடினமான உபதேசமாகத் தெரியும். வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கும் சில சம்பவங்களை நம்முடைய சுயஎண்ணத்தின் பிரகாரமாக வியாக்கியானம் பண்ணுவோம். தேவனுடைய வெளிப்பாட்டிற்கு முக்கியத்துவம் தராமல், சுயசிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நமக்கு குழப்பமும் துக்கமும்தான் இருக்கும். சீஷர்களுக்கு இப்படிப்பட்ட பிரச்சனையே உண்டாயிற்று. 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில்  ""கொஞ்சக்காலத்தில்'' என்னும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார். கொஞ்சக்காலம் என்றால்  எவ்வளவு காலம் என்று சீஷர்களுக்குப் புரியவில்லை. தங்களைவிட்டு அவர் ஏன் சீக்கிரத்தில் கடந்துபோகவேண்டுமென்று சீஷர்கள் யோசிக்கிறார்கள். இதற்கு சரியான காரணம் சீஷர்களுக்குக் கிடைக்கவில்லை. சில சமயங்களில் நமக்கு ஒரு காரியம் சம்பவிக்கும் என்று எதிர்பார்ப்போம். அது நிச்சயமாகவே நடைபெறுமென்று நமக்குத் தெரியும். ஆனால்  அந்தச் சம்பவம் திடீரென்று சீக்கிரமாய்  நடைபெற்றால் நமக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் துக்கம் கலந்த ஆச்சரியத்தோடிருக்கிறார்கள்.  இயேசுகிறிஸ்து மரிக்கப்போகிறாரென்பது சீஷர்களுக்குத் தெரியும். ஆனால் அவர் சீக்கிரத்தில் மரிக்கப்போகிறார் என்பதை நினைக்கும்போது அவர்களுக்கு மிகுந்த துக்கமுண்டாயிற்று.


சீஷர்கள் குழப்பத்திலிருந்தாலும், அவர்கள்  குழப்பத்திலேயே இருந்துவிடவேண்டுமென்று விரும்பவில்லை. ஆகையினால் தங்களிடத்திலுள்ள சந்தேகத்தை மற்றவர்களிடம்  கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள். ""அவர் நம்முடனே சொல்லுகிறதன் கருத்து என்ன'' என்று தங்களுக்குள்ளே பேசிக்கொள்கிறார்கள். ""அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே'' என்றும் சீஷர்கள் தங்களுக்குள்ளே கேட்டுக்கொள்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் தங்களுக்குப் புரியவில்லையென்றால் அதன் அர்த்தத்தை   மற்றவர்களிடத்தில் கேட்டு விசாரிக்கிறார்கள்.   


ஆவிக்குரிய சத்தியங்கள் நமக்குப் புரியவில்லையென்றால், மற்ற விசுவாசிகளிடத்தில் அதைப்பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். தேவனுடைய காரியங்களை ஒருவருக்கொருவர் விசாரித்துத் தெரிந்துகொண்டால், நமக்கு தேவனைப்பற்றிய ஞானம் விருத்தியாகும். சில சமயங்களில் தேவனுடைய இரகசியங்கள் நமக்குப் புரியாமற்போகலாம். மற்றவர்களாலும் அதைத் தெளிவாக விளக்க முடியாமல் போகலாம். இப்படிப்பட்ட சமயங்களில் நாம் கர்த்தருடைய சமுகத்தில் பொறுமையோடு காத்திருக்கவேண்டும். தேவன் தம்முடைய சத்தியத்தின் இரகசியத்தை நமக்கு வெளிப்படுத்துமாறு அவரிடத்தில் பயபக்தியோடு விண்ணப்பம்பண்ணவேண்டும். 


நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ


அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ?  

(யோவா 16:19)


இயேசுகிறிஸ்து ""கொஞ்சக்காலம்'' என்று சொன்னதைக்குறித்து, அவரிடத்தில் கேட்கும்படி  சீஷர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் விரும்புவதை இயேசுகிறிஸ்துவும் அறிந்திருக்கிறார். நம்முடைய பிரச்சனைகளை இயேசுகிறிஸ்துவிடம் கொண்டு வந்தால்தான்  பிரச்சனைகளுக்குத் தீர்வு உண்டாகும். அதை நமக்குள்ளேயே வைத்திருந்தால் நமக்கு வேதனையும் வருத்தமும்தான் உண்டாகும்.  இயேசுகிறிஸ்துவிடத்தில், அவர் ""கொஞ்சக்காலம்''  என்று கூறியதை, சீஷர்கள் கேட்கவேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆனால் கேட்க வெட்கப்படுகிறார்கள். 


சீஷர்கள் தம்மிடத்தில், தாம் சொன்னதைப்பற்றி வெளிப்படையாகக் கேட்காவிட்டாலும், அவர்களுடைய உள்ளத்தை இயேசுகிறிஸ்து அறிந்திருக்கிறார். கேட்கவேண்டுமென்று விருப்பம் இருக்கிறவர்களோடு இயேசுகிறிஸ்து பேசுகிறார்.  இயேசுவின் உபதேசத்தைக் கேட்கவேண்டும் என்னும் ஆர்வம் நம்மிடத்தில் இருந்தால் மாத்திரமே அவர் நமக்கு உபதேசம்பண்ணுவார்.  நம்முடைய அறியாமையை நாம் அறிக்கை செய்து, இயேசுகிறிஸ்துவின் சமுகத்தில் மிகுந்த மனத்தாழ்மையோடு இருக்கும்போது அவர் நம்மை ஆதரிப்பார். இயேசுகிறிஸ்து அவர்களிடம்   ""நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ'' என்று கேட்கிறார். நாம் இயேசுகிறிஸ்துவிடத்தில் விசாரிக்கும்போது, அவர் நமக்குப் போதகம்பண்ணுவார். 


உங்கள் துக்கம் சந்தோஷமாகமாறும்


மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்  (யோவா 16:20).


சீஷர்களுக்கு துக்கமும் சந்தோஷமும் உண்டாகும். ஒரு காரியம் நமக்கு சம்பவிக்கும்போது, அது நம்மை எப்படிப் பாதிக்கிறது என்பதன் அடிப்படையிலேயே, அது நமக்கு சந்தோஷமாகவோ அல்லது துக்கமாகவோ இருக்கும். இயேசுகிறிஸ்து சீஷர்களிடம் சொன்னதைக் குறித்து, அவர்கள் தங்களுக்குள்ளே விசாரிக்கிறதை அறிந்து, தாம் சொன்னதைக் குறித்து அவர்களுக்கு விளக்கம் கொடுக்கிறார். 


""நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் கூறுகிறார். இயேசுகிறிஸ்துவின் தரிசனம் நம்மிடத்தில் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்தே விசுவாசிகளுக்கு சந்தோஷமோ அல்லது துக்கமோ உண்டாகும். 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் இப்போது துக்கமாகவும் இருக்கிறார்கள். சந்தோஷமாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்குத் துக்கம் உண்டாகும் என்று இயேசுகிறிஸ்து முன்னறிவிக்கிறார். ""நீங்கள் அழுது புலம்புகிறீர்கள், நீங்கள் துக்கப்படுவீர்கள்'' என்று  இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் முன்னறிவித்துக் கூறுகிறார். சீஷர்கள் இயேசுகிறிஸ்துவின்மீது அன்பாயிருக்கிறார்கள்.  ஆகையினால் அவருக்காக அழுது புலம்புகிறார்கள். நம்முடைய சிநேகிதருக்கு  உண்டாகும் வேதனை நமக்கே உண்டாவதுபோல இருக்கும். 


சீஷர்கள் தங்களுக்காகவும் அழுகிறார்கள். இயேசுகிறிஸ்து சீஷர்களைவிட்டுப் போகப்போகிறார். இதனால் அவர்களுக்கு வேதனையும் இழப்பும் உண்டாயிற்று. இதற்காக சீஷர்கள் அழுது புலம்புகிறார்கள். தம்முடைய சீஷர்கள் துக்கத்தை எதிர்பார்க்க வேண்டும் என்று இயேசுகிறிஸ்து அவர்களிடத்தில் ஏற்கெனவே முன்னறிவித்து எச்சரித்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் முன்னெச்சரிப்பான வார்த்தையின் பிரகாரம், தங்களை ஆறுதல்படுத்திக்கொள்ள சீஷர்கள் ஆயத்தமாகயிருக்கவேண்டும். பிரச்சனை வருமென்று நமக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருப்பதினால், அதைச் சந்திக்கவும், தாங்கிக்கொள்ளவும், எதிர்கொள்ளவும் நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும். 


சீஷர்கள் அழுது புலம்பும்போது, உலகம் சந்தோஷப்படும். பரிசுத்தவான்களுக்குத் துக்கமாயிருப்பது பாவிகளுக்குச் சந்தோஷமாயிருக்கும். கிறிஸ்துவுக்கு அந்நியராகயிருக்கிறவர்கள் தங்களுடைய மாம்சப்பிரகாரமான சிந்தையில் தொடர்ந்து ஜீவித்துக்கொண்டிருப்பார்கள். உலகமேஇவர்களுக்குப் பெரியதாயிருக்கும். இயேசுகிறிஸ்துவின் சத்துருக்கள் சந்தோஷப்படுவார்கள். இயேசுகிறிஸ்து சீஷர்களைவிட்டும், இந்த உலகத்தைவிட்டும் புறப்பட்டுப்போவதினால், தாங்கள் அவரை வெற்றிகொண்டதாக நினைப்பார்கள். இந்தப் பிரபஞ்சத்தின் ஜனங்கள் அநியாயத்தில் சந்தோஷப்படுகிறார்கள். இவர்களுடைய எண்ணங்களும் மாயை. இவர்களுடைய சந்தோஷமும் மாயை. 


நாம் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக சாஷ்டாங்கமாகப் பணிந்து விழுந்து கிடக்கும்போது, நாம் தோற்றுப்போய்  தரையில் படுத்திருப்பதாக உலகம் நினைத்து சந்தோஷப்படுகிறது. மற்றவர்கள் நம்மைக்குறித்துச் சந்தோஷப்படும்போது நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. தேவனுடைய சமுகத்தில் நாம் கண்ணீரோடு நிற்கும்போது, அவர் நம்முடைய கண்ணீரைத் துடைப்பார். நம்முடைய துக்கம் சந்தோஷமாய் மாறும். நம்முடைய துக்கம் நமக்குள் நிரந்தரமாகயிராது.  கொஞ்சக்காலம் மாத்திரமே இருக்கும். நாம் சிறிது நேரம் அழுது புலம்புவோம். சிறிது நேரம் துக்கப்படுவோம். ஆனாலும் நம்முடைய துக்கம்  சந்தோஷமாக மாறும். சீஷர்கள் தங்களுடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை மறுபடியும் பார்த்தபோது சந்தோஷப்பட்டார்கள். இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்,   செத்தவர்களைப்போல இருந்த சீஷர்களுக்கு உயிர் கிடைத்ததுபோல ஆயிற்று. இயேசுகிறிஸ்துவின் பாடுகளைக்குறித்து சீஷர்கள் துக்கத்தோடிருந்தார்கள். அவர் உயிர்த்தெழுந்ததினால் அவர்களுடைய துக்கம் சந்தோஷமாய் மாறிற்று.  


அப்போஸ்தலர் பவுல் தன்னையும், மற்ற அப்போஸ்தலரையும் எப்படி விளங்கப்பண்ணுகிறார் என்பதைக்குறித்து கொரிந்தியருக்கு எழுதின இரண்டாவது நிருபத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார். ""இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதென்றிலும் இடறல்       உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும் எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம். மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும், கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்தஆவியிலும், மாயமற்ற அன்பிலும், சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்,  கனத்திலும்,கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும்; எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும், அறியப்படாதவர்க ளென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும், துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும்     அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும்  சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்'' (2கொரி 6:3-10). 


நம்முடைய ஜீவியம் துக்கம் நிறைந்ததாக இருக்கலாம்.  துக்கத்திற்கு மத்தியிலும் நம்முடைய இருதயத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கவேண்டும். ஆட்டுக்குட்டியானவரைப் பின்பற்றுகிற விசுவாசிகளெல்லோருமே, அப்போஸ்தலர் பவுலைப்போல சிந்தனையுடையவர்களாக இருக்கவேண்டும். நம்முடைய சூழ்நிலை அழுது புலம்புவதாக இருக்கலாம். நம்முடைய இருதயம் துக்கப்படலாம். ஆனால் இயேசுகிறிஸ்துவோடு நாம் நிலைத்திருப்பதினால் நம்முடைய துக்கம் சந்தோஷமாக மாறும். சகவிசுவாசிகள் அழுது புலம்பி, துக்கப்படும்போது நாமும் அவர்களோடு  துக்கப்படவேண்டும். அழுகிறவர்களுக்காக அழவேண்டும். புலம்புகிறவர்களாகப் புலம்பவேண்டும். தங்களுடைய பாவங்களைக்குறித்து புலம்பாத பாவிகளுக்காகவும், நாம் கர்த்தருடைய சமுகத்தில் அழுது புலம்பவேண்டும். அதேவேளையில் பாடுகளினிமித்தமாக அழுது புலம்புகிற பரிசுத்தவான்களுக்காகவும் நாம் அழுது புலம்பவேண்டும். 


கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் அழுது புலம்பி, துக்கப்படும்போது இந்த உலகமோ சந்தோஷப்படுகிறது. இவர்களுடைய சந்தோஷம் மாயை. இது நிலைத்து நிற்பதில்லை.  இப்பிரபஞ்சத்தின் சந்தோஷமே பிரதான சந்தோஷமென்று உலகத்தார் நினைக்கிறார்கள்.  உலகம் கொடுக்கிற சந்தோஷம் பொய்யான சந்தோஷம். இந்த சந்தோஷத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியாது. துன்மார்க்கரால் தங்களுடைய துன்மார்க்கத்தைத்தான் பிறருக்குப் பகிர்ந்து கொடுக்க முடியும். இவர்கள் எப்படித்தான் சந்தோஷமாக இருந்தாலும், பரலோகத்திற்கு பாத்திரவான்களாக இருக்கிற பரிசுத்தவான்கள், இவர்களுக்கு அந்நியராகவே இருப்பார்கள். 


கர்த்தருடைய பிள்ளைகளிடத்தில்  உலகப்பிரகாரமான துக்கம் இருக்கக்கூடாது.  நாம் ஆவிக்குரிய ரீதியாக மாத்திரமே துக்கப்படவேண்டும். நம்முடைய ஆவிக்குரிய துக்கம் நித்திய சந்தோஷமாக மாறும். நம்முடைய துக்கத்தைச் சந்தோஷம் தொடர்ந்து வருவது மாத்திரமல்ல, நம்முடைய துக்கமே சந்தோஷமாக மாற்றப்படும். தம்முடைய பிள்ளைகளெல்லோரும்  தேவனுடைய ஆறுதலைப் பெற்றிருக்கவேண்டும் என்பது கிறிஸ்துவின் சித்தமாகயிருக்கிறது. 



பிரசவகாலம்


ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள் (யோவா 16:21).


பரிசுத்தவான்களின் துக்கத்தை விவரிப்பதற்காக இயேசுகிறிஸ்து ஸ்திரீயின் பிரசவகாலத்தை உவமையாகக் கூறுகிறார்.  ""ஸ்திரீயானவளுக்குப்  பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்''. ஏதேன் தோட்டத்தில் ஸ்திரீயானவள் தேவன் தடைபண்ணியிருந்த கனியைப் புசித்தாள் (ஆதி 3:16). அதற்கு நியாயத்தீர்ப்பாக, தேவன் ஸ்திரீயிடம் ""நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய்''  என்று கூறினார்.  ஏதேன்   தோட்டத்தில்  தேவன்  ஸ்திரீக்குக் கொடுத்த சாபம் இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்த உலகம் ஆதாம் ஏவாள் மூலமாக சபிக்கப்பட்டிருக்கிறது. பூமியில்  மலரைச் சுற்றிலும் முள் முளைத்திருக்கிறது. 


வருத்தத்திற்கும் சாபத்திற்கும் மத்தியில், தேவன் இந்த மனுக்குலத்திற்கு ஒரு ஆசீர்வாதத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்திருக்கிறார். ஸ்திரீயானவள் பிள்ளை பெற்றவுடனே, ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தான் என்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள். உலகத்தில் ஒரு மனுஷன் பிறந்தான் என்பதே சந்தோஷமான செய்தி. ஆசீர்வாதத்தின் கனி எப்போதுமே சந்தோஷத்தைத் தரும். ஒரு குழந்தை உயிரோடு பிறப்பது அந்தக் குழந்தையின் பெற்றோருக்குச் சந்தோஷமாயிருக்கும். பிறந்த குழந்தையின் வருங்கால வாழ்க்கை எப்படியிருக்கும் என்பது நமக்குத் தெரியாது. அவர்களுக்கு என்ன பிரச்சனைகள் வரும், அது எப்படிப்பட்ட ஆபத்துக்களையெல்லாம் சந்திக்கும் என்பதும் அதன் பெற்றோருக்குத் தெரியாது.  ஆனாலும் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்பதை நினைத்து அதன் பெற்றோர் சந்தோஷப்படுகிறார்கள். 


ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தான் என்கிற சந்தோஷத்தினால், பிள்ளைபெற்ற ஸ்திரீயானவள் அப்புறம் உபத்திரவத்தை நினையாள் என்பதை உவமையாகக் கூறி, இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் வேதனைகளை விளக்குகிறார். கிறிஸ்துவின் சீஷர்களுக்கு இந்த உலகத்தில் உபத்திரவங்கள் உண்டு. நிச்சயமாகவே உபத்திரவங்கள் வேதனையாகத்தான் இருக்கும். ஆனாலும் இந்த உபத்திரவம் நிரந்தரமானது அல்ல. இந்த உபத்திரவத்தின் முடிவில் ஒரு சந்தோஷம் உண்டாகப்போகிறது. பிரசவகாலம்  வேதனை நிறைந்ததாக இருந்தாலும், பிள்ளை பெற்றவுடன், பிள்ளையைப்பார்த்து தாய்  தன் வேதனையை மறந்து சந்தோஷப்படுகிறாள். இந்த சந்தோஷம் அவளுடைய துக்கத்தை மாற்றுகிறது. வேதனையை நீக்குகிறது. கண்ணீரை அகற்றுகிறது. துக்கத்திற்குப் பின்பு சந்தோஷம் உண்டாகிறது. 


கர்த்தருடைய பிள்ளைகளுக்கும் இந்த உலகத்தில் இப்படிப்பட்ட  வேதனைகளும் துக்கங்களும் வரும். தங்களுடைய ஊழியத்தின் கனிகளைச் சீஷர்கள் அறுவடை செய்யும்போது, அவர்களுடைய துக்கமெல்லாம் சந்தோஷமாய் மாறும். இந்த உலகத்தில் தாங்கள் வீணாய்ப் பிரயாசப்படவில்லை என்பதை நினைத்து சந்தோஷப்படுவார்கள். இந்த உலகத்தில் தாங்கள் பட்ட பாடுகளையும், வேதனைகளையும், துன்பங்களையும், துக்கங்களையும் இனிமேல் நினைக்கமாட்டார்கள். சந்தோஷம் வரும்போது  துக்கம் மறைந்துபோகும். 


உங்கள் இருதயம் சந்தோஷப்படும்


அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள்; நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்தி-ருந்து எடுத்துப்போடமாட்டான்              (யோவா 16:22).  


ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலத்தின் துக்கத்தையும், பிள்ளை பெற்றவுடன் அவளுக்கு உண்டாகிற சந்தோஷத்தையும் இயேசுகிறிஸ்து உவமையாகக் கூறி, தம்முடைய சீஷருக்கு உண்டாயிருக்கும் துக்கத்தையும், அது இனிமேல் சந்தோஷமாக மாறப்போவதையும் விவரிக்கிறார். சீஷர்கள் இப்போது துக்கமடைந்திருக்கிறார்கள்.  இயேசுகிறிஸ்து மறுபடியும் அவர்களைக் காண்பார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டுப்போவதினால் அவர்களுக்குத் துக்கம் உண்டாயிற்று. சூரியன் மாலையில் மறைந்தவுடன், சூரியகாந்திப்பூ தன் தலையை  கவிழ்த்துவிடும். அதுபோல, இயேசுகிறிஸ்து தங்களைவிட்டுப் போகப்போகிறார் என்பதை நினைத்து, சீஷர்கள் தங்கள் தலைகவிழ்ந்து துக்கத்தோடிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து தமது சீஷர்களைவிட்டுப் போகப்போவதினால், அவர்கள் துக்கமாயிருப்பது நியாயமான காரணமே. 


சீஷர்கள் இப்போது துக்கமாயிருந்தாலும் இயேசுகிறிஸ்து அவர்களுக்குச் சந்தோஷத்தை திரும்பக் கொடுப்பதாக வாக்குப்பண்ணுகிறார். அவர்களுடைய சந்தோஷத்தை உறுதிபண்ணுவதற்கு இயேசுகிறிஸ்து மூன்று காரியங்களைக் கூறுகிறார். அவையாவன: 1. நான் மறுபடியும் உங்களைக் காண்பேன்.  2. உங்கள் இருதயம் சந்தோஷப்படும். 3. உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரை மறுபடியும் மெய்யாகவே காண்பார். தமக்காகக் காத்திருக்கிறவர்களுக்காக இயேசுகிறிஸ்து தமது கிருபையினால், மறுபடியும் அவர்களை வந்து சந்திப்பார். உலகப்பிரகாரமான மனுஷர் உயர்த்தப்படும்போது, தங்களைவிட தாழ்ந்தவர்களைத் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ சாதாரண மனுஷரைப் போன்றவரல்ல. அவர் பரலோகத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறார். பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்குமாறு உயர்த்தப்பட்டிருக்கிறார். இயேசுகிறிஸ்து உன்னதத்திற்கு உயர்த்தப்பட்டாலும் தம்முடைய சீஷர்களை அவர் மறந்துவிடவில்லை. அவர்களை  மறுபடியும் காண்பதற்கு வருவார்.  இயேசுகிறிஸ்து மறுபடியும் வருவது சீஷர்களுக்கெல்லாம் மறுபடியும் சந்தோஷம் வருவதாக இருக்கும். 


சீஷர்கள் இயேசுகிறிஸ்துவை மறுபடியும் பார்க்கும்போது அவர்கள் இருதயம் சந்தோஷப்படும். இருதயத்திலுள்ள சந்தோஷம் கெட்டியாக இருக்கும். இயேசுகிறிஸ்து கொடுக்கிற சந்தோஷம் மெய்யானது. அது அலைபாயும் சந்தோஷமல்ல. கிறிஸ்துவின் சந்தோஷம் ஒரு இரகசியம். இது நிச்சயமும் இனிமையுமானது. தேவன் தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கும் சந்தோஷத்தை எளிதில் உடைத்துப்போட முடியாது. சீஷர்களிடத்தில் இயேசுகிறிஸ்து கொடுக்கும் சந்தோஷம் நிலைத்திருக்கும். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை மறுபடியும் காணும்போது, அவர்கள் இருதயம் சந்தோஷப்படும். அந்த சந்தோஷத்தை ஒருவனும் அவர்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான். கர்த்தருடைய பிள்ளைகளின் சந்தோஷத்தை சத்துருவால் எடுத்துப்போட முடியுமென்றால், அவன் நிச்சயமாகவே அதை எடுத்துப்போடுவான். ஆனால் அவனால் நம்முடைய சந்தோஷத்தை எடுத்துப்போட முடியாது. இயேசுகிறிஸ்து ""உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து  எடுத்துப்போடமாட்டான்'' என்று கூறுவதற்கு  வேதபண்டிதர்கள் இவ்வாறு விளக்கம் கூறுகிறார்கள். கிறிஸ்துவில்  மகிமையடைந்திருக்கிறவர்களுடைய சந்தோஷம்  நித்திய சந்தோஷமாக இருக்கும். ஆகையினால்  யாராலும் இந்த சந்தோஷத்தை எடுத்துப்போட முடியாது என்று வியாக்கியானம் கூறுகிறார்கள்.  


இந்த உலகத்தில் நம்முடைய சந்தோஷம் நிலைத்திருப்பதில்லை. உலகப்பிரகாரமான பல காரணங்களினால் நம்முடைய சந்தோஷம் துக்கமாக மாறிப்போகிறது. இது உலகத்தின் சந்தோஷம். ஆனால் பரலோகத்தின் சந்தோஷமோ நித்திய சந்தோஷமாக இருக்கும். ஆகையினால் இயேசுகிறிஸ்து இந்த வசனத்தில் கூறுகிற சந்தோஷம், பரிசுத்தவான்களுக்குக் கர்த்தர் கொடுத்திருக்கிற ஆவிக்குரிய சந்தோஷமென்று  விளக்கம் கூறுவது சிறப்பாக இருக்கும். 


இந்த உலகத்தால் கர்த்தருடைய பிள்ளைகளின் சந்தோஷத்தை திருடிக்கொண்டு போகமுடியாது. ஏனெனில் இயேசுகிறிஸ்துவின் அன்பை விட்டு  அவருடைய பிள்ளைகளை யாராலும் பிரிக்கமுடியாது. கர்த்தருடைய கரத்திலிருந்து அவருடைய பிள்ளைகளை யாராலும் பறித்துக்கொள்ள முடியாது. அவர்களை மாத்திரமல்ல பரலோகத்தில் அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் பொக்கிஷத்தையும் யாராலும் திருடிக்கொண்டு போகமுடியாது. 


கேளுங்கள்.... பெற்றுக்கொள்வீர்கள் (யோவான் 16 : 23-27)


என் நாமத்தினாலே  பிதாவினிடத்தில்


அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலேபிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்  (யோவா 16:23). 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் அவரிடத்தில் கேட்கும்போது, கேட்டவைகளெல்லாவற்றையும் பெற்றுக்கொள்வார்கள். 

""கேட்பது'' இருவகைப்படும். 


அவையாவன: 


1. அறியாமலிருக்கிறவர்கள், ஒரு காரியத்தைப்பற்றி அறிந்துகொள்ளவேண்டுமென்று கேட்பது.                   


 2. தேவைகளைச் சந்திக்குமாறு பணிவோடு கேட்பது. இயேசுகிறிஸ்து இந்த வசனத்தில் இவ்விரண்டு விதமான கேட்பதைப்பற்றியும் குறிப்பிடுகிறார். 


இயேசுகிறிஸ்துவிடத்தில் சீஷருக்கு மறைவான காரியம் ஒன்றுமில்லை. அவர் தமது சீஷர்களுக்கு எல்லாவற்றையும் போதித்திருக்கிறார். ""அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றும் கேட்கமாட்டீர்கள்'' என்று  இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் கூறுகிறார். அப்போஸ்தலர்களுடைய நடபடிகள் புஸ்தகத்தில், அப்போஸ்தலர்கள் தங்களுடைய  அறியாமையை நீக்கி, சத்தியத்தை அறிவிக்குமாறு இயேசுகிறிஸ்துவிடம் கேட்கவில்லை. அவர்கள் எப்போதுமே தெய்வீக வழிநடத்துதலின் கீழிருக்கிறார்கள். ஆகையினால் இயேசுகிறிஸ்துவிடம் கேட்பதற்கு  அவர்களுக்கு ஒன்றுமில்லாமல் போயிற்று. நாம் ஒரு காரியத்தைப்பற்றி இயேசுகிறிஸ்துவிடம் கேட்கும்போதே, பாதை தவறி காணாமல் போய்விட்டோம் என்பதுதான் பொருள். அல்லது  எந்த வழியில் போவது என்று தெரியாமல் திகைத்து நடுவழியில் நின்றுகொண்டிருப்போம்  என்று பொருள்.  திகைப்பதைவிடவும், காணாமல்போய்விடுவதை விடவும், இயேசுகிறிஸ்துவிடம் கேட்டு அவருடைய வழியில் நடப்பது மிகவும் மேன்மையானது. 


சீஷர்கள் இயேசுகிறிஸ்துவிடம் கேட்கும்போது, அவர்கள் கேட்பது எதுவும் வீணாய்போகாது. இயேசுகிறிஸ்துவின் சீஷர்களெல்லோருமே அதிகமாய் ஜெபம்பண்ணுகிறவர்கள். தேவனுடைய ஆலோசனைகளையும், வழிநடத்துதலையும், பெலத்தையும், வெற்றியையும் அவர்கள் ஜெபத்தின் மூலமாகவே பெற்றுக்கொள்கிறார்கள். 


தம்மிடத்தில் சீஷர்கள் ஜெபம்பண்ணும்போது அவர்கள் கேட்டுக்கொள்வது கொடுக்கப்படுமென்று இயேசுகிறிஸ்து உறுதிபண்ணுகிறார். இதற்காக   ""மெய்யாகவே மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்னும் வாக்கியத்தை இயேசுகிறிஸ்து இங்கு பயன்படுத்துகிறார். இயேசுகிறிஸ்துவின் கிருபையின் கரம் நம்மீது நீட்டப்பட்டிருக்கிறது. அவருடைய பொற்செங்கோல் நமக்கு நேராக நீட்டப்பட்டிருப்பதினால், நாம் அவரிடத்திலிருந்து  கிருபையும் தயவும் பெற்றுக்கொள்கிறோம்.  ""நீங்கள் என் நாமத்தினாலே  பிதாவினிடத்தில்  கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்'' என்று இயேசுகிறிஸ்து  தம்முடைய சீஷரிடத்தில் வாக்குப்பண்ணுகிறார். 


இயேசுகிறிஸ்துவின் வாக்குத்தத்தம் எல்லாமே நிச்சயமாய் நிறைவேறும். வாக்குத்தத்தத்தை உறுதிபண்ணுவதற்கு அவருடைய வார்த்தையைவிட நமக்கு வேறு எதுவும் தேவையில்லை.


 இயேசுகிறிஸ்து தம்முடைய வாக்குத்தத்தத்தைச் சீஷரிடத்தில் சொல்லும்போது, அதில் அவர் இரண்டு காரியங்களைத் தெளிவுபடுத்துகிறார். 


அவையாவன:           

1. எப்படித் தேடவேண்டும்.

 2. எவ்வளவு விரைவாகத் தேடவேண்டும். 


நாம் ஜெபிக்கும்போது இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே பிதாவினிடத்தில் ஜெபிக்கவேண்டும். பிதாவினிடத்தில் ஜெபம்பண்ணுவது என்பது, நம்முடைய ஆவிக்குரிய தேவைகளையும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் அவரிடத்தில் வாஞ்சையோடு  கேட்பதைக் குறிப்பிடும். ஏனெனில் நம்முடைய ஆவிக்குரிய தேவைகளையும் ஆசீர்வாதங்களையும், பிதாவாகிய தேவனிடத்திலிருந்து மாத்திரமே நாம் பெற்றுக்கொள்ள முடியும். நம்முடைய தேவைகளைப் பிதாவினிடத்தில் கேட்கும்போது, அவரிடத்தில் நேரடியாகக் கேட்காமல், இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே கேட்கவேண்டும். இயேசுவின் நாமத்தினால் கேட்கும்போது நாம் பூரணமாக கிறிஸ்துவைச் சார்ந்திருக்கிறோம் என்பதையும், பிதாவின் சமுகத்தில் வருவதற்கு நமக்கு எந்தத் தகுதியுமில்லை என்பதையும் நாம் அங்கீகரிக்கிறோம். 


நாம் பிதாவினிடத்தில் இயேசுவின் நாமத்தினாலே கேட்கும்போது, நாம் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் நமக்குத் தருவார். நாம் கேட்டுக்கொள்வது நமக்கு உடனடியாகக் கொடுக்கப்படும். ஆகையினால் நம்முடைய தேவைகளை, நம்முடைய மனதில் பூட்டி வைத்திருக்காமல், அவற்றைப் பிதாவின் சமுகத்தில், இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே கேட்கவேண்டும். அப்போது அவற்றை நாம் பெற்றுக்கொள்வோம். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இது மிகப்பெரிய சிலாக்கியமாகும்.


பரிசுத்த ஆவியானவர் கர்த்தருடைய பிள்ளைகளைச் சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துகிறார். இயேசுகிறிஸ்து நமக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பதாக வாக்குப்பண்ணுகிறார். நம்முடைய ஜீவியத்தில் இந்த வாக்குத்தத்தம் நிறைவேறவேண்டுமானால்  நாம் அதற்காக ஜெபிக்கவேண்டும். நம்முடைய ஜெபத்தில் நாம் தொடர்ந்து தரித்திருக்கவேண்டும். சீஷர்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இயேசுகிறிஸ்துவின் சமுகத்தில் ஜெபிக்கிறார்கள். தொடர்ந்து காத்திருந்து ஜெபிக்கிறார்கள். கானான் தேசமே  நாம் ஓய்வு எடுக்கப்போகிற தேசம். அந்த தேசத்தில் மாத்திரமே கனிகள் பரிபூரணமாக இருக்கும். கானான் தேசத்திற்குப் பிரயாணம்பண்ணுகிற பரதேசிகளைப்போல நாம் இந்த உலகத்தில் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம்.  நாம் இயேசுகிறிஸ்துவிடத்தில் கேட்பதும், பெற்றுக்கொள்வதும், நம்முடைய யாத்திரையில் நமக்குக் கிடைக்கும் ஆறுதலும் சமாதானமும் ஆகும்.


""அந்த நாளிலே'' என்னும் வாக்கியத்திற்கு இயேசு கிறிஸ்து பிதாவினிடத்திற்குத் திரும்பிப் போகும் நாளிலே என்று பொருள்.  சீஷர்கள் இயேசுவிடம் ஒன்றும் கேட்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவிடத்தில் கேட்பார்கள். அதை அவர் அவர்களுக்குத் தருவார். 


வேதாகமத்தில் தேவன் தமது பிள்ளைகளுக்கு ஏராளமான காரியங்களை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். விசுவாசிகள் அவற்றில் எதை வேண்டுமானாலும் தங்களுக்குக் கேட்கலாம். அது அவர்களுக்குக் கொடுக்கப்படும்.


உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி


இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள் 

 (யோவா 16:24).


தம்மிடத்தில் கேட்குமாறு இயேசுகிறிஸ்து  தம்முடைய சீஷர்களிடம் சொல்லுகிறார். நம்முடைய விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் நாம் இயேசுகிறிஸ்துவின் சமுகத்தில் கொண்டுவரவேண்டும். இந்தப் பிரபஞ்சத்தின் ராஜாக்களோடும், உயர்பதவி வகிக்கிறவர்களோடும், நாம் நம்முடைய தேவைகளை விண்ணப்பம்பண்ணலாம். அதற்கு அவர்கள் அனுமதி மாத்திரமே கொடுப்பார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தம்மிடத்தில் நாம் விண்ணப்பம்பண்ணவேண்டுமென்று நம்மை அழைக்கிறார்.


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கடந்தகால வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறார்.   இது வரைக்கும் அவர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை.


 இயேசுகிறிஸ்து சொல்லும் இந்த வாக்கியத்திற்கு வேதபண்டிதர்கள்  இரண்டுவிதமாக வியாக்கியானம் கூறுகிறார்கள். 


அவையாவன: 

1. சீஷர்கள் இதுவரையிலும் எப்படிக் கேட்கவேண்டுமோ அப்படி கேட்கவில்லை. 

2. சீஷர்கள் எந்த நாமத்தினால் ஜெபிக்கவேண்டுமோ அந்த நாமத்தினால் ஜெபிக்கவில்லை. 


சீஷர்கள் இயேசுகிறிஸ்துவின் சமுகத்தில் வந்து ஜெபம்பண்ணுகிறார்கள். தங்களுடைய வேண்டுதல்களையும், விண்ணப்பங்களையும் அவரிடத்தில் சொல்லுகிறார்கள். ஆனால் அவர்களுடைய ஜெபத்தில் குறைவுள்ளது. தாங்கள் எப்படிக் கேட்கவேண்டுமோ அப்படிக் கேட்கவில்லை. அவர்கள் இயேசுகிறிஸ்துவிடத்தில் பெரிய காரியங்களைக் கேட்டுப்பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் சீஷர்களோ மிகவும் சாதாரணமான உலகப்பிரகாரமான காரியங்களை மாத்திரமே அவரிடத்தில் கேட்கிறார்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோ  தயாள குணமுள்ளவர். தம்மிடத்தில் இன்னும் அதிகமாய் கேட்குமாறு தம்முடைய சீஷரை அன்போடு அழைக்கிறார். 


அவர்கள் இதுவரைக்கும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் எதையெல்லாம் கேட்கவேண்டுமோ அதையெல்லாம் கேட்காமலேயே இருக்கிறார்கள்.  சீஷர்கள் இயேசுகிறிஸ்துவிடத்தில் ஜெபிக்கும்போது ஆவிக்குரிய வரங்களை அவரிடத்தில் கேட்டுப்பெற்றுக்கொள்ளவேண்டும்.  அவர்கள் மாத்திரமல்ல, நாமும் ஆவியின் வரங்களைக் கேட்டுப்பெற்றுக்கொள்ளவேண்டும்.  


சீஷர்கள் பல சமயங்களில் ஜெபம்பண்ணியிருக்கிறார்கள். ஆனால்  அவர்கள் வெளிப்படையாக ஒருபோதும் ""இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால்'' ஜெபிக்கவில்லை. ஆகையினால் இயேசுகிறிஸ்து அவர்களிடம் ""நீங்கள் என்நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய ஜீவனை இன்னும் சிலுவையில்  ஒப்புக்கொடுக்கவில்லை. அவர் தம்முடைய பிதாவின் கரங்களில், தம்மை  ஜீவபலியாக  இன்னும் அர்ப்பணிக்கவில்லை. 


இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் தம்முடைய இரத்தத்தைச் சிந்தி, நம்மை மீட்பதற்காகத் தம்முடைய சுயஇரத்தத்தையே மீட்பின் கிரயமாகச் செலுத்தியிருக்கிறார். இயேசுகிறிஸ்து  சிலுவையில் நமக்காக மரித்திருப்பதினால், நாம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் எதைக் கேட்கிறோமோ, அதை, நம்முடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிக்கும்போது நம்முடைய ஜெபம் பிதாவின் சமுகத்தில் அங்கீகரிக்கப்படும். இயேசுகிறிஸ்து  பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்திருந்து, நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் பிரசன்னம் பரலோகத்திலிருப்பதினால் நாம் அங்கு அந்நியராகவோ அல்லது ஆதரவற்றவராகவோ  இருக்கமாட்டோம். இயேசுகிறிஸ்துவின் மூலமாகப்  பரலோகத்தில் நமக்கு வரவேற்பும் அங்கீகரிப்பும் கிடைக்கும். 


இயேசுகிறிஸ்து சீஷர்களைவிட்டுப் போனபின்பு, அவர்கள் தம்முடைய நாமத்தினாலே பிதாவினிடத்தில் தொடர்ந்து ஜெபிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.  அவர்கள் கேட்கும்போது பெற்றுக்கொள்வார்கள். ""கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்''  என்று இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷருக்கு வாக்குப்பண்ணுகிறார். சீஷர்களுக்கு என்னனென்ன தேவைகள் இருக்கிறதோ அவையெல்லாவற்றையும் அவர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்கலாம். அப்படிக் கேட்கும்போது அது அவர்களுக்குக் கொடுக்கப்படும் என்று  இயேசுகிறிஸ்து வாக்குப்பண்ணுகிறார்.


கிருபையுள்ள தேவனிடத்தில் நம்முடைய வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் ஏறெடுக்கும்போது, தேவன் தம்முடைய கிருபையினால், நாம் அவரிடத்தில் கேட்டதை அவர் நமக்குத் தருகிறார். இதனால் நம்முடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும். விசுவாசமுள்ள ஜெபம் மிகுந்த வல்லமையுள்ளது. இந்த ஜெபம்தான் நம்முடைய விசுவாசத்தின் சந்தோஷத்தை நமக்கு நிறைவாய்த் தருகிறது.  நாம் எப்போதும் சந்தோஷமாயிருக்க வேண்டுமென்றால், நாம் தொடர்ந்து இடைவிடாமல் ஜெபிக்கிறவர்களாக இருக்கவேண்டும். 


நாம் இயேசுகிறிஸ்துவிடத்தில் ஜெபிக்கும்போது, நம்முடைய நோக்கம் உன்னதமானதாக இருக்கவேண்டும். சமாதானத்திற்காக மாத்திரம் ஜெபிக்காமல், சந்தோஷத்திற்காகவும் ஜெபிக்கவேண்டும். நாம் ஜெபிக்கும்போது நமக்கு சமாதானமும் கிடைக்கும். நம்முடைய சந்தோஷமும் நிறைவாயிருக்கும். 


இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே. நாம்ஜெபிக்கும்போது ""இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம் பிதாவே'' என்று கூறி நமது ஜெபத்தை முடிக்கிறோம். இயேசு கிறிஸ்து பிதாவிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார். ஆகையினால் நமக்காக பரிந்துபேசும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நாம் ஜெபிக்கிறோம். நாம் ஜெபிக்கும் காரியங்களை இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவிடம் பரிந்து பேசுவார். நீதிமன்றத்தில் நமது வழக்குகளை வழக்கறிஞர் நீதிபதியிடம் எடுத்துரைப்பதுபோன்று, இந்தச் சத்தியம் உள்ளது. 


இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நாம் பெற்றுக் கொள்ளும், செய்யும் காரியங்கள்


    1. இரட்சிப்பு

 (மத் 1:21; அப் 4:12)


    2. ஞானஸ்நானம் 

(மத் 28:19; அப் 8:16)


    3. ஐக்கியம் (மத் 18:5; லூக்கா 9:48)


    4. ஆராதனை (மத் 18:20; 2கொரி 1:10)


    5. நற்கிரியைகள் (மாற்கு 9:41)

    6. பிசாசுகளைத் துரத்துவது (மாற்கு 16:17) 


    7. பிரசங்கம் பண்ணுதல் (லூக்கா 24:47)  


    8. வியாதிகளைச் சுகமாக்குதல் (மாற்கு 16:18; அப் 3:6,16)               


    9. நியாயந்தீர்த்தல் (1கொரி 5:1-5)           


    10. ஜெபம் (யோவான் 14:13-15)        


    11. துதி (எபே 5:20; எபி 13:15)


    12. எல்லாக் காரியங்களும் (கொலோ 3:17)


    13. பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளுதல் (லூக்கா 11:13)   

         

    14. கிறிஸ்துவின் கிரியைகளைச் செய்தல் (மாற்கு 16:17-20;  யோவான் 14:12-15).


இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபம் பண்ணுவது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய சிலாக்கியம். அவர் நாமம் வல்லமையுள்ளது. இயேசுவின் நாமத்தில் நாம் எதைக் கேட்டாலும், பிதாவானவர் அதை நமக்குத் தருவார். 


 இயேசு கிறிஸ்து இதுவரையிலும் தம்முடைய சீஷரோடுகூடவே இருந்தார். அவர்களுக்கு எது தேவைப்பட்டாலும், அவர்கள் இயேசு கிறிஸ்துவிடம் நேரடியாகக் கேட்பார்கள். ஆனால் இப்பொழுதோ இயேசு கிறிஸ்து தமது சீஷர்களை விட்டு, கடந்து செல்ல வேண்டிய வேளை வந்துவிட்டது. இனிமேல் அவர்கள் இயேசு கிறிஸ்துவிடம் நேரடியாகக் கேட்பதற்குப் பதிலாக அவருடைய நாமத்தினாலே கேட்பார்கள்.


 இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கேட்பதற்குச் சீஷர்கள் தயங்க வேண்டியதில்லை. விசுவாசத்தோடு கேட்கும் போது, அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.        


 நமக்கு உதவி புரிவதற்காகவே இயேசு கிறிஸ்து நமது ஜெபத்திற்குப் பதில் கொடுக்கிறார். பிதாவிடத்தில் ஜெபிக்கும்போது தேவனுடைய பிதாதத்துவத்தை நாம் அங்கீகரிக்கிறோம். ஆகையினால் ஜெபிக்கும்போது தயக்கம் தேவையில்லை. நாம் விசுவாசத்தோடு ஜெபிக்கலாம்.  


உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்


இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்          

   (யோவா 16:25).  


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் உவமைகளாய்ப் பேசுகிறார். அவர்களுக்குச் சத்தியத்தை உபதேசம்பண்ணுகிறார்.  தேவனைப்பற்றிய அறிவுக்கு நேராக அவர்களை வழிநடத்துகிறார். பிதாவைக்குறித்து வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பதே இயேசுகிறிஸ்துவின் சித்தம். ஆகையினால் இயேசு அவர்களிடத்தில் இதைப்பற்றிச் சொல்லும்போது ""இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்;  காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்''  என்று சொல்லுகிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு மிகப்பெரிய சிலாக்கியத்தைக் கொடுக்கிறார். பிதாவைக்குறித்து இயேசு வெளிப்படையாகச் சீஷருக்கு அறிவிப்பது, அவர்களுக்குக் கொடுக்கப்படும் மிகப்பெரிய சிலாக்கியம். பிதாவை அறிந்திருப்பதே பரலோகத்தின் சந்தோஷமாகும். இயேசுகிறிஸ்துவின் மூலமாக  அவருடைய சீஷர்களுக்குப் பிதாவைக்குறித்து  வெளிப்படையாக அறிந்துகொள்ளும் சிலாக்கியம் கிடைத்திருக்கிறது. அவர்கள் நித்தியகாலமாகப் பிதாவைக் காண்பார்கள். அந்தச் சிலாக்கியம் இப்போதே சீஷருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 


இயேசுகிறிஸ்து தேவனுடைய சத்தியங்களை, தம்முடைய சீஷரிடத்தில் இதுவரைக்கும் உவமைகளாகவே பேசியிருக்கிறார். தம்முடைய உவமைகளின் கருத்துக்களை இயேசு தம்முடைய சீஷரோடு தனித்திருக்கும்போது, அவர்களுக்கு விளக்கிக் கூறுவது வழக்கம். ஆனால் சீஷர்களோ தேவனுடைய இரகசியத்தை உடனடியாக அறிந்துகொள்ள முடியாத மந்தபுத்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆகையினால் இயேசுகிறிஸ்து அவர்களோடு உவமைகளாய் பேசவேண்டியதாயிற்று. முத்திரையிடப்பட்ட ஒரு புஸ்தகத்தைப்பற்றிப் பேசுவதுபோல, இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் உவமைகள் மூலமாகத் தேவனுடைய சத்தியங்களைப் பேசுகிறார்.  


காலம் வரும், அப்பொழுது இயேசுகிறிஸ்து அவர்களுடனே உவமைகளாய் பேசாமல், வெளிப்படையாகப் பேசுவார். இயேசுகிறிஸ்து வெளிப்படையாக அறிவிப்பது எல்லாமே பிதாவைக்குறித்த சத்தியமாகவே இருக்கும். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் ஏற்கெனவே பிதாவைக்குறித்து உபதேசம்பண்ணியிருக்கிறார். ஆனால் அந்தச் சத்தியத்தை சீஷர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுடைய வேதஅறிவு இருளடைந்ததுபோல இருக்கிறது.  இனிமேல் இயேசு அவர்களுக்குப் பிதாவைக்குறித்து வெளிப்படையாக அறிவிக்கும்போது, தேவனுடைய இரகசியங்கள் அவர்களுக்கு வெளிச்சத்தில் விவரிக்கப்படும். 


இயேசுகிறிஸ்து பிதாவைக்குறித்து தம்முடைய சீஷரிடத்தில் இனிமேலும் மறைபொருளாகப் பேசமாட்டார். வெளிப்படையாகவே அவர்களுக்கு அறிவிப்பார். பரிசுத்த ஆவியானவர் சீஷர்கள்மீது ஊற்றப்பட்டபோது, தேவனுடைய காரியங்களைக் குறித்து அவர்கள் விசேஷித்த ஞானத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அப்போஸ்தலர்கள்     பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்ட பின்பு இதுவரையிலும் இல்லாத அளவுக்கு,  தேவனுடைய வார்த்தையிலும், சித்தத்திலும், இரகசியத்திலும்  தெளிவடைந்திருந்தார்கள். 


நாம் இந்தப் பூமியில் இருக்கும்வரையிலும் பிதாவைப்பற்றிய காரியங்களில் ஒரு சில பகுதிகள் நமக்கு இன்னும் மறைபொருளாகவே இருக்கும். நாம் பரலோகத்திற்குப் போகும்போது பிதாவை முகமுகமாகத் தரிசிப்போம். அப்பொழுது இயேசுகிறிஸ்து இங்கு கூறும் வாக்குத்தத்தம் நமக்குப் பூரணமாய் நிறைவேறும். நாம் இந்தப் பூமியில் இருக்கும்போது, இயேசுகிறிஸ்துவிடம் பிதாவைக்குறித்து பல கேள்விகளைக் கேட்போம்.  நாம் பரலோகத்தில் அவரை முகமுகமாகத் தரிசிக்கும்போது, பிதாவைக்குறித்துக் கேட்பதற்கு நம்மிடத்தில் ஒன்றுமேயிராது. அந்தநாளில் நாம்  இயேசுகிறிஸ்துவிடத்தில் ஒன்றும் கேட்கமாட்டோம்.


பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்


அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுகொள்வேனென்று உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.  நீங்கள் என்னைச் சிநேகித்து, நான்  தேவனிடத்தி-ருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்

 (யோவா 16:26,27). 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில்  பேசும்போது, பிதா தாமே அவர்களைச் சிநேகிப்பதாகக் கூறுகிறார். அவர்கள் இயேசுகிறிஸ்துவைச் சிநேகிப்பதாலும், அவர் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தவர் என்று விசுவாசிப்பதினாலும் பிதா தாமே இயேசுகிறிஸ்துவின் சீஷர்களைச்  சிநேகிக்கிறார்.   இயேசுகிறிஸ்து நமக்காக செய்யும் ஊழியத்தைப்பற்றி அப்போஸ்தலர் யோவான் நிருபத்தில் எழுதும்போது ""நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்'' (1யோவா 2:1) என்று எழுதுகிறார்.  


இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறார். அவர் தம்முடைய சீஷரிடத்தில் இதைப்பற்றிச் சொல்லும்போது ""உங்களுக்காக பிதாவை நான் கேட்டுக்கொள்வேன் என்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு இதுவரையிலும் கொடுத்திருக்கிற   சிலாக்கியமே போதுமானது. பரிசுத்த ஆவியானவர் மூலமாகக் கிடைக்கும் உதவியைத் தவிர இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்கு வேறு உதவி எதுவும் தேவைப்படாது. இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவினிடத்தில் பரிந்து பேசி, அவர்களுக்காகப் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார். இயேசுகிறிஸ்து நமக்காக என்ன செய்வதாகச் சொல்லுகிறாரோ  அதைவிட அதிகமாகவே அவர் நமக்கு நன்மை செய்கிறார். 


பிதாவாகிய தேவன் இயேசுகிறிஸ்துவின் சிநேகிதர்களைச் சிநேகிக்கிறார். இவர்கள் தேவனுக்குப் பிரியமானவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சத்தியத்தை இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் சொல்லும்போது ""பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்'' என்று உறுதியோடு வலியுறுத்துகிறார். பிதாவினிடத்தில் நமக்காகப் பரிந்து பேசுவதற்குப் பரிசுத்த ஆவியானவர் தேவைப்படுகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், பிதாவாகிய தேவன் தாமே சீஷர்களைக் சிநேகிப்பது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய சிலாக்கியமாகும். 


பிதாவாகிய தேவன் இயேசுகிறிஸ்துவின் சீஷர்களைச் சிநேகிப்பதற்கு ஒரு காரணமுள்ளது.  அவர்கள் இயேசுகிறிஸ்துவைச் சிநேகிக்கிறார்கள். இயேசுகிறிஸ்து தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தவர் என்று விசுவாசிக்கிறார்கள். அவர்கள் மெய்யாகவே  இயேசுகிறிஸ்துவின் சீஷர்களாகயிருக்கிறார்கள். இதுவே சீஷர்களின் சுபாவம். இயேசுகிறிஸ்து  தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறவர் என்று விசுவாசித்து, சீஷர்கள் அவரைச் சிநேகிக்கிறார்கள். நாம் இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது, நாம் அவரிடத்தில் அன்புகூர்ந்து கிரியை நடப்பிக்கிறோம். நாம் இயேசுகிறிஸ்துவை நம்முடைய இரட்சகர் என்று விசுவாசிக்கும்போது, ""அவர் நம்மீது கிருபையாகவும் இரக்கமாகவும் இருக்கிறார்'' என்று விசுவாசித்து அவரிடத்தில் அன்புகூருவோம். 


தம்மிடத்தில் சீஷர்கள் சிநேகமாகயிருக்கிறார்கள் என்பதை இயேசுகிறிஸ்து மிகுந்த சந்தோஷத்தோடு சொல்லுகிறார். இதனால் பிதாவின் சமுகத்திலும்  சீஷர்களுக்குக் கிருபை கிடைத்திருக்கிறது. பிதா தாமே அவர்களைச் சிநேகிக்கிறார். இயேசுகிறிஸ்துவுக்கு மெய்யான சீஷர்களாகயிருக்கும்போது, அவர்களுக்கு மெய்யான ஆசீர்வாதங்களும், மெய்யான சிலாக்கியங்களும் கிடைக்கும். சீஷர்கள்  இயேசுகிறிஸ்துவைச் சிநேகிப்பதினால், பிதாவானவர் அவர்களைச் சிநேகிக்கிறார்.


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் அவருடைய நாமத்தினால் ஜெபம்பண்ணுவார்கள். ஜெபம்பண்ணும்போது தங்களுடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்குமோ, கிடைக்காதோ என்னும் சந்தேகம் அவர்களுக்குத் தேவையில்லை. தங்கள்மீது சிநேகமாகயிருக்கும் தேவனிடத்தில்தான் 


சீஷர்கள் ஜெபம்பண்ணுகிறார்கள். ஆகையினால் தேவனுடைய கிருபாசனத்தண்டைக்கு வரும்போது, சீஷர்கள் நிச்சயத்தோடும் தைரியத்தோடும் வரலாம். தேவன் நம்மீது சிநேகமாயிருப்பதினால் நம்முடைய உள்ளத்தில்  தேவையில்லாத பயம் இருக்கவேண்டியதில்லை. தேவனிடத்தில் பயபக்தி இருக்கவேண்டும். தேவனுடைய சிநேகத்தை  நாம் பெற்றுக்கொண்டு, அவருக்குப் பிரியமான பிள்ளைகளாக ஜீவிக்கவேண்டும். 


நாம் தேவனிடத்தில் ஜெபிக்கும்போது, இயேசுகிறிஸ்து நமக்காகப் பரிந்து பேசுவதினால், நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்கிறது. இயேசுகிறிஸ்து நம்மை சிநேகிப்பதினால் நமக்காகப் பரிந்து பேசுகிறார். இப்போது ""பிதாவானவரும் நம்மை சிநேகிக்கிறார்'' என்னும் சத்தியத்தை  இயேசுகிறிஸ்து  நமக்கு வெளிப்படுத்துகிறார். இதன் மூலமாக நாம் தேவனிடத்தில் ஜெபிக்கும்போது நமக்கு இரண்டு சிலாக்கியங்கள் கிடைத்திருக்கிறது. அவையாவன: 1. இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறார். 2. பிதாவானவர் தாமே நம்மை சிநேகிக்கிறார். 


நாம் இயேசுவின் நாமத்தில் பிதாவினிடத்தில் ஜெபிக்கும்போது, பிதாவானவரும் நம்மீது அன்பாயிருக்கிறார். அதே சமயத்தில் இயேசுகிறிஸ்துவும் பிதாவினிடத்தில் நமக்காகப் பரிந்து பேசுகிறார். நமக்கு இவ்விரண்டு சிலாக்கியமும் இருப்பதினால், நாம் இயேசுவின் நாமத்தினால் பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்வதெதுவோ அது நமக்குக் கொடுக்கப்படும் என்னும் நிச்சயம்  நம்மிடத்தில் உள்ளது. நாம் ஜெபிக்கும்போது நம்முடைய உள்ளத்தில் தேவனுடைய இந்த நல்ல சுபாவத்தைப்பற்றிய சிந்தனை நமக்குள் நிரம்பியிருக்கவேண்டும்.  இந்தச் சிந்தனையை நமக்குள் உறுதிபண்ணிக்கொள்ளவேண்டும்.  விசுவாசிகள் இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்பாயிருக்கும்போது, பிதாவானவரும் நம்மீது அன்பாயிருக்கிறார் என்னும் சத்தியத்தை நாம் அறிந்திருக்கவேண்டும்.


சீஷர்கள் இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பார்கள். அவர்கள் ஜெபிப்பதை இயேசு கிறிஸ்து அவர்களுக்காக பிதாவிடம் கேட்டுக் கொள்வார். பிதாவானவர் எப்போதும் குமாரனுடைய சத்தத்திற்குச் செவி கொடுக்கிறார். நமக்கு இரட்சிப்பைக் கொடுப்பதற்காகவே இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்தார். பிதாவிடம் நாம் நமக்கு இரட்சிப்பைக் கேட்கும்போது, அவர் அதை நமக்குத் தராமல் இருக்க மாட்டார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அதாவது இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தினாலே நாம் ஜெபிக்கும்போது, நமது ஜெபத்தைப் பிதா எப்போதும் கேட்கிறார், அந்த ஜெபத்திற்குப் பதில் கொடுக்கிறார். இந்த இரகசியத்தை நமக்குச் சொல்வதற்காகவே பிதாவானவர் இயேசு கிறிஸ்துவை நம்மிடத்தில் அனுப்பியிருக்கிறார். 


மறுபடியும் பிதாவினிடத்திற்குப் போகிறேன்

(யோவான் 16 : 28-33)


நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு  


நான் பிதாவினிடத்தி-ருந்து புறப்பட்டு     உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார்  

(யோவா 16:28).


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரைவிட்டுப் போகும்போது  அவர்களிடத்தில்  இரண்டு ஆறுதலான காரியங்களைச் சொல்லுகிறார்


அவையாவன: 

1. இயேசுகிறிஸ்து மறுபடியும் உலகத்தைவிட்டு பிதாவினிடத்திற்குப் போகிறார்.


 2. இயேசுகிறிஸ்துவினிடத்தில் சீஷருக்குச் சமாதானம் உண்டாயிருக்கும். 


இயேசுகிறிஸ்துவின் ஊழியம்  பிதாவினால் நியமிக்கப்பட்டிருக்கிறது. அவர் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார். இப்போது மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறார். இயேசுகிறிஸ்துவின் உபதேசத்திற்கு இந்த வாக்கியம் ஒரு முடிவுரையைப்போல் அமைந்திருக்கிறது. 


இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியத்தை இங்கு சுருக்கமாகக் கூறுகிறார். கிறிஸ்தவ உபதேசத்தைச்  சுருக்கமாகச் சொல்லும்போது,  புதிய விசுவாசிகளும் அதைப் புரிந்துகொள்வதற்கு எளிதாக இருக்கும். புதிய விசுவாசிகளிடத்தில்  ஆழமான சத்தியங்களைச் சொன்னாலோ, அல்லது சாதாரண சத்தியங்களை மிகவும் விரிவாகச் சொன்னாலோ அவர்களால் அதை விளங்கிக்கொள்ளமுடியாது. அவர்கள் பாலை உண்ணத்தக்க குழந்தைகளைப்போல இருக்கிறார்கள். தேவனுடைய சத்தியத்தைச் சுருக்கமாகவும் நாம் சொல்லவேண்டும். ஏற்றவேளையில் அதை நாம் விரிவாகச் சொல்லலாம். 


கர்த்தருடைய சத்தியத்தை விவரிக்கும்போது, ஒரு சத்தியத்தை மற்றொரு சத்தியத்தோடு ஒப்பிட்டுச் சொல்லவேண்டும்.  தேவனுடைய சத்தியங்கள் அனைத்திலும் ஒரு ஒற்றுமையுள்ளது. ஒவ்வொரு சத்தியமும் ஒன்றுக்கொன்று இசைவாயிருக்கிறது. தேவனுடைய பொதுவான சத்தியத்தை விவரிப்பதற்கு, இவை ஒன்றுக்கொன்று உதவியாயிருக்கிறது. இயேசுகிறிஸ்து பிதாவினிடத்திலிருந்துப் புறப்பட்டு இந்த உலகத்திற்கு வந்ததும் ஒரு சத்தியம் தான்.  அதுபோலவே அவர் மறுபடியும் உலகத்தைவிட்டு  பிதாவினிடத்திற்குப்போவதும் ஒரு சத்தியம்தான்.  சீஷர்கள் இவ்விரண்டையும் விசுவாசிக்கவேண்டும். இயேசுகிறிஸ்து தேவனிடத்திலிருந்து வந்தவர் என்பதையும் விசுவாசிக்கவேண்டும்.அவர் மறுபடியும் தேவனிடத்திற்குப் போகிறார் என்பதையும் விசுவாசிக்கவேண்டும். தேவனிடத்திலிருந்து வந்திருக்கும் இயேசுகிறிஸ்து, மறுபடியும் தேவனிடத்திற்குப் போவது அவசியமாயிற்று. 


இயேசுகிறிஸ்து தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறவர் என்னும் சத்தியம் நமக்குத் தெரியவில்லையென்றால், அவர் தேவனிடத்திற்குப் போகிறார் என்னும் சத்தியத்தை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. இயேசுகிறிஸ்துவின் சத்தியத்தை நாம் தியானம்பண்ணும்போது, ஒவ்வொரு சத்தியமாகத் தியானம்பண்ணவேண்டும். எல்லா சத்தியங்களையும் பூரணமாகத் தியானம்பண்ணவேண்டும். ஒரு சத்தியத்தைப் புரிந்துகொள்வதற்கு மற்றொரு சத்தியம் உதவிபுரியும். இயேசுகிறிஸ்துவின்  சகல சத்தியங்களையும் நம்புவதற்கு ஒவ்வொரு சத்தியமும் நமக்கு உதவியாயிருக்கும். ஒரு சத்தியம் புரிந்துகொள்வதற்கு கடினமாயிருக்கும்போது, மற்றொரு சத்தியம்  அதை நமக்கு எளிதாக்கும். 


இயேசுகிறிஸ்து எங்கேயிருந்து வந்தார், அவர் எங்கே போகிறார் என்னும் கேள்விக்கு,  அவர் தாமே சீஷருக்குப்  பதில்கொடுக்கிறார்.  இயேசுகிறிஸ்து பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார். இந்த உலகத்திலே வந்திருக்கிறார். இந்த உலகத்திலுள்ள மனுக்குலத்தாருக்காக வந்திருக்கிறார். இந்த உலகத்தில் இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு ஊழியம் நியமிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஊழியத்தை நிறைவேற்றுவதற்காக இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார். 


 இயேசுகிறிஸ்து பரலோகத்திற்குரியவராகயிருந்தாலும், நம்மீதுள்ள அன்பினால், நம்மோடுகூட வாசம்பண்ணவேண்டும் என்னும் தீர்மானத்தோடு, அவர் இந்த உலகத்திலே வந்திருக்கிறார். தமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியத்தை நிறைவேற்றி முடித்த பின்பு, இயேசுகிறிஸ்து இப்போது மறுபடியும் இந்த உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறார். அவர் தம்முடைய சரீரத்தில் இந்த உலகத்தைவிட்டுப்போனாலும் அவருடைய ஆவிக்குரிய பிரசன்னம் விசுவாசிகளாகிய நம் மத்தியிலே இன்றும் இருக்கிறது. அவருடைய பிரசன்னம் அவருடைய சபையின் நடுவிலிருக்கிறது. முடிவுபரியந்தம் அவருடைய ஆவிக்குரிய பிரசன்னம் நம்மோடும், இந்த உலகத்தோடும் இருக்கும்.



வெளிப்படையாய்ப் பேசுகிறீர் 


அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர்.  நீர் எல்லாவற்றையும்      அறிந்திருக்கிறீர்       என்றும், ஒருவன் உம்மை வினாவ வேண்டுவதில்லையென்றும்,இப்பொழுதுஅறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்தி-ருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள் (யோவா 16:29,30). 


இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தில் சீஷர்கள் திருப்தியோடிருக்கிறார்கள்.  அவருடைய வார்த்தையைத் தெளிவாகப் புரிந்துகொள்கிறார்கள். ""இதோ இப்பொழுது நீர் வெளிப்படையாய் பேசுகிறீர்'' என்று அவரிடத்தில் கூறுகிறார்கள். தெய்வீகச் சத்தியங்களை வெளிப்படையாகப் பேசவேண்டும். அதைக் கேட்பவர்களுக்குப் புரியும் வண்ணமாக எளிமையாகப் பேசவேண்டும். அப்போதுதான்  சத்தியத்தைக் கேட்கிறவர்களுக்கு நன்மை உண்டாகும். நாம் பேசும்போது கேட்கிறவர்களுக்குப் புரியவில்லையென்றால் அவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் உண்டாகாது. இயேசுகிறிஸ்து நம்முடைய ஆத்துமாக்களோடு வெளிப்படையாகப் பேசப் பிரியப்படுகிறார். ஆகையினால் நாம் கர்த்தரிடத்திலும் அவருடைய வார்த்தையிலும் சந்தோஷப்பட்டுக் களிகூரவேண்டும். 


இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தைக் கேட்ட சீஷர்கள் அவரிடத்தில் ""இப்பொழுது அறிந்திருக்கிறோம்'' என்று கூறுகிறார்கள். இயேசுகிறிஸ்து தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறாரென்பதை சீஷர்கள் இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். இந்தச் சத்தியத்தை சற்று நேரத்திற்கு முன்பு, இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் சொல்லும்போது ""நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன்'' (யோவா 16:27) என்று சொன்னார். சீஷர்களும் அதை விசுவாசித்தார்கள். இப்பொழுது  சீஷர்கள் தங்களுடைய விசுவாசத்தை உறுதிபண்ணும்விதமாக  ""விசுவாசிக்கிறோம்'' என்று அறிக்கைபண்ணுகிறார்கள். 


இயேசுகிறிஸ்து சர்வஞானமுள்ளவர். சீஷர்கள் இந்தச் சத்தியத்தைத் தியானம்பண்ணுவதினால் அவர்களுடைய ஆத்துமாவுக்குள் விசுவாசம் உண்டாயிற்று. இயேசுகிறிஸ்து அவர்களுக்கு உபதேசம்பண்ணுகிறார். அவர் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிற போதகரென்பதை அவருடைய சர்வஞானம் நிரூபிக்கிறது. அவர் தீர்க்கதரிசியைவிட மேலானவர். எல்லாக் காரியங்களையும் அறிந்திருக்கிறவர். இயேசுகிறிஸ்துவைப்பற்றி நன்றாக அறிந்திருக்கிறவர்கள், தங்களுடைய அனுபவங்களின் மூலமாகவே அவரை அதிகமாய் அறிந்துகொள்கிறார்கள்.  இயேசுகிறிஸ்துவின் வல்லமை தங்களுடைய ஜீவியத்தில் கிரியை செய்வதினால், அவருடைய வல்லமையைப்பற்றி  அவர்களால் பேசமுடிகிறது. இயேசுகிறிஸ்து அவர்களிடத்தில் அன்பாயிருப்பதினால் அவருடைய அன்பைப்பற்றி சீஷர்களால் பேசமுடிகிறது. சீஷர்கள் இயேசுகிறிஸ்துவிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறார்கள். அந்த விசுவாசம் அவர்களிடத்தில் உறுதிபண்ணப்படுகிறது. ஆகையினால் ""நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவவேண்டுவதில்லை'' என்றும் சீஷர்கள் இயேசுவிடம் சொல்லுகிறார்கள். 


இயேசுகிறிஸ்துவின் உபதேசம் எப்போதுமே தெளிவாகவும் முழுமையாகவும் இருக்கும். நமக்குச் சந்தேகம் உண்டாகாதவாறு  எல்லா சத்தியங்களையும் இயேசுகிறிஸ்து நமக்குத் தெளிவுபடுத்துகிறார். நமக்கு ஆலோசனைகளையும் கட்டளைகளையும் கூறுகிறார். சீஷர்களின் கேள்விகளுக்கு இயேசுகிறிஸ்து பதில் சொல்லுகிறார். பல சமயங்களில் சீஷர்களுடைய இருதயத்தின் நினைவுகளையும் அறிந்து, அவர்களுக்குப் பதில் சொல்லுகிறார். மாணவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லும் ஆசிரியரை  நாம் நல்ல ஆசிரியர் என்று கூறுவோம். ஆனால் இயேசுகிறிஸ்துவோ நம்முடைய இருதயத்தின் நினைவுகளுக்கும் பதில் சொல்லுகிற பிரதான ஆசிரியராகயிருக்கிறார். 


பிதா என்னுடனேகூட இருக்கிறார்


இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன்  இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார் (யோவா 16:31,32). 


சீஷர்கள் இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதாகக் கூறுகிறார்கள். அவரை அறிந்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ அவர்களை மென்மையான வார்த்தைகளினால் கடிந்துகொள்கிறார். ""இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்'' என்று இயேசுகிறிஸ்து கூறும் வாக்கியத்திற்கு   ""இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா'' என்று, இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் கேட்பதாக, வேதபண்டிதர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். சீஷர்களுக்கு  அவர்களுடைய பலவீனம் தெரியவில்லை. இன்னும் கொஞ்சநேரத்தில் அவர்கள் சிதறுண்டு, அவனவன் தன் தன் இடத்திற்குப்போய், இயேசுகிறிஸ்துவைத் தனியே விட்டுவிடுவார்கள். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் வார்த்தைகளையும் அறிந்திருக்கிறார். அவர்களுடைய இருதயத்தின் எண்ணத்தையும் அறிந்திருக்கிறார். ஆகையினால்தான் இயேசு அவர்களிடம் ""இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா'' என்று கேட்கிறார். ஒருவேளை சீஷர்கள் இயேசுகிறிஸ்துவை இப்போது விசுவாசிக்கலாம். தங்களுடைய விசுவாசத்தையும் சீஷர்கள் வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். ஆனாலும் காலம் வரும்போது, இவர்கள் சிதறுண்டு, அவனவன்  தன் தன் இடத்திற்குப்போய், இயேசுகிறிஸ்துவைத்  தனியே விட்டுவிடுவார்கள். இயேசுகிறிஸ்து இதையும் அறிந்திருக்கிறார். 


விசுவாசிகளுக்குப் பாடுகளும் சோதனைகளும் வரலாம். அப்போதும் நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கவேண்டும். சந்தோஷமாக இருக்கும்போது கர்த்தரைத் துதித்துவிட்டு, கஷ்டம் வரும்போது கர்த்தரை மறந்துவிடக்கூடாது. நம்முடைய விசுவாசம் இயேசுகிறிஸ்துவில் நிலைத்திருக்கவேண்டும். சீஷர்கள் இப்போது இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதாக அறிக்கை செய்கிறார்கள். இவர்களுடைய விசுவாசம் நிலைத்திருக்கவேண்டும். தங்களுடைய விசுவாசத்தைச் சீஷர்கள் இப்போது அறிக்கை செய்தாலும், காலம் வரும் போது, இவர்கள் தம்மைத் தனியே விட்டு விட்டுப்போய்விடுவார்களென்று இயேசுகிறிஸ்து  இவர்களைப்பற்றி அறிக்கை செய்கிறார். 


தம்முடைய சீஷர்களின் வீழ்ச்சியை இயேசுகிறிஸ்து இங்கு முன்னறிவிக்கிறார். இன்னும் சிறிதுநேரத்தில் அவர்கள் இயேசுகிறிஸ்துவைத் தனியே விட்டுவிட்டுப்போய்விடுவார்கள். இயேசுகிறிஸ்து முன்னறிவித்த சம்பவம் அன்று இராத்திரியிலேயே நிறைவேறிற்று.  அவர்கள்  இயேசுகிறிஸ்துவைத் தனியே விட்டுவிட்டு சிதறிப்போனார்கள். தங்களுக்கு எங்கே பாதுகாப்பு கிடைக்கும் என்று தேடி ஓடினார்கள்.  விசுவாசிகளாகிய நமக்கோ இயேசுகிறிஸ்துவோடு கூடயிருப்பதுதான் பாதுகாப்பு. 


சீஷர்கள் இயேசுகிறிஸ்துவைத் தனியே விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். அவர்கள் இயேசுகிறிஸ்துவோடு ஊழியம் செய்ய விரும்பினார்கள். அற்புதங்களையும் அடையாளங்களையும் சந்தோஷமாக அனுபவித்தார்கள். ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்கள். இயேசுகிறிஸ்துவைப்பற்றி சாட்சியாக அறிவித்தார்கள். அவரிடத்தில் விசுவாசம் வைத்திருப்பதாக அறிக்கைபண்ணினார்கள். ஆனால் அவருடைய கட்டுக்களைக் குறித்து  சீஷர்கள் வெட்கப்படுகிறார்கள்.அவருடைய பாடுகளில் பங்குபெறுவதற்குப் பயப்படுகிறார்கள்.  இயேசுகிறிஸ்துவோடு கூட இருந்தால் தங்களுக்கு ஆபத்து வருமென்று நினைத்து, அவரைத் தனியே விட்டுவிட்டு, அவனவன் தன் தன் இடத்திற்கு ஓடிப்போகிறார்கள். 


கர்த்தருடைய பிள்ளைகள் சூழ்நிலைகள் நன்றாகயிருக்கும்போது ஐக்கியமாகயிருப்பார்கள்.  சத்துரு இந்த ஐக்கியத்தைத் தாக்கும்போது, சிநேகிதர்கள் பிரிந்துபோய்விடுவார்கள். தங்களுடைய பாதுகாப்பும், தங்களுடைய நலனும் முக்கியமென்று நினைத்து,   சகவிசுவாசிகளுக்கு  உதவிசெய்வதற்குப் பதிலாக, தங்களைக் காத்துக்கொள்ளவே விரும்புகிறார்கள். ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து உதவிசெய்வதற்குப் பதிலாக, தங்களுடைய சுயபாடுகளை மாத்திரம் பார்த்து, சுயநலமாக இருக்கிறார்கள். நமக்கு உதவி தேவைப்படும்போது நம்முடைய சிநேகிதர்கள் நம்மோடுகூட இருக்கவேண்டுமென்று விரும்புவோம். அப்படிப்பட்ட வேளையில்தான் சாத்தான் அவர்களுடைய உள்ளத்தில் கிரியை செய்து, அவர்களை நம்மிடத்திலிருந்து பிரித்துவிடுவான்.


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் இப்போது அவரோடு கூடவேயிருக்கிறார்கள். அவருக்குப் பாடுகளும், அவமானமும், நிந்தையும், மரணமும் வரும்போது, அவருடைய சீஷர்கள் அவரோடு கூடயிருந்து, அவருக்கு ஆதரவாகயிருப்பதற்குப் பதிலாக அவரைத் தனியே விட்டுவிட்டு ஓடிப்போய்விடுகிறார்கள். சீஷர்களின் விசுவாசம்  சோதிக்கப்படுகிறது. சோதிக்கப்படுகிற எல்லோருமே நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பார்கள் என்னும் நிச்சயமில்லை. புடமிடப்படுவது எல்லாமே பொன்னாக விளங்குவதில்லை. பொன் மாத்திரமே புடமிடப்பட்ட பின்பு பசும்பொன்னாக விளங்கும்.  


நம்முடைய ஆவிக்குரிய அனுபவத்தில், நம்முடைய சிநேகிதர்கள் சிலர், சில சமயங்களில், நம்முடைய நம்பிக்கைக்குப் பாத்திரவான்களாக இருக்கமாட்டார்கள்.  நாமும், நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு, பலசமயங்களில் நம்பிக்கைக்குப் பாத்திரவான்களாக இல்லை என்பதை அப்போது நினைவுகூரவேண்டும். சீஷர்கள் இயேசுகிறிஸ்துவைத் தனியே விட்டுவிட்டு, அவர்கள் சிதறுண்டு, அவனவன்  தன் தன் இடத்திற்குப் போய்விடுகிறான். ஒவ்வொருவனும் தன்னுடைய சொந்த வழியின் வழியாகப் போய்விடுகிறான். தனக்குப் பிடித்த வழியின் வழியாகவும், தனக்கு எந்த வழி பாதுகாப்பானது என்று நினைக்கிறானோ அந்த வழியின் வழியாகவும், ஒவ்வொருவனும் ஓடிப்போகிறான். தம்மை இப்படித் தனியேவிட்டுவிட்டு, தம்முடைய சீஷர்களெல்லோரும் ஓடிப்போய்விடுவார்களென்பது இயேசுகிறிஸ்துவுக்கு முன்பே தெரியும். அவர் எல்லாவற்றையும் முன்னறிந்திருக்கிறவர். இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்க வேண்டிய வேளைகளில், சீஷர்கள் அவரோடு கூடயிருந்திருந்தால் அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால் அவர்களோ அவரோடுகூடயிருக்க வேண்டிய நேரத்தில், அவரைத் தனியாக விட்டுவிட்டு ஓடிப்போய்விடுகிறார்கள். சீஷர்கள் தம்மைவிட்டு ஓடிப்போனாலும் இயேசுகிறிஸ்து இன்னும் அவர்கள்மீது அன்பாகவே இருக்கிறார். 


மனுஷருடைய சுபாவங்களைப்பற்றி நமக்கு முன்பே தெரிந்திருந்தால், நாம் அவர்களோடு  மிகுந்த எச்சரிக்கையோடு பழகுவோம்.  நமக்கு  சிலர் தீங்கு செய்வார்கள் என்பது நமக்கு ஏற்கெனவே தெரிந்திருக்குமானால், அவர்களோடுபழகுவதையே நிறுத்திக்கொள்வோம். நமக்கு உதவி செய்யாதவர்களுக்கு உதவி செய்யமாட்டோம்.  ஆபத்து வேளைகளில் நம்மைவிட்டு ஓடிப்போய்விடுவார்கள் என்பது நமக்கு ஏற்கெனவே தெரியுமானால், நாம் அவர்களைவிட்டு அதற்கு முன்பாகவே விலகிப்போய்விடுவோம். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் சுபாவங்களை ஏற்கனவே அறிந்திருக்கிறார். அவர்கள் தம்மைத் தனியே விட்டு ஓடிப்போய்விடுவார்கள் என்பதையும் அறிந்திருக்கிறார். ஆனாலும் தம்முடைய சீஷர்களிடத்தில் இயேசுகிறிஸ்து வைத்திருக்கும் அன்பு சிறிதும் குறைந்துபோகவில்லை. அவர்களிடத்தில் இன்னும் அன்பாகவே இருக்கிறார்.  


தம்முடைய சீஷர்களின் சுபாவம் இயேசுகிறிஸ்துவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும், இயேசு அவர்களிடம் ""இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா'' என்று கேட்கிறார். இயேசுகிறிஸ்துவினிடத்தில்  சீஷர்கள் விசுவாசத்தோடிருப்பதாக அறிக்கை செய்கிறார்கள். ஆனால் இன்னும் சற்று நேரத்தில் அவர்களுடைய வார்த்தைக்கும் செய்கைக்கும் சம்பந்தமே இருக்காது. நாம் கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்திருப்பது தேவனுடைய கிருபை. தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் கிருபையினால் நமக்கு ஆறுதலும் ஆசீர்வாதமும் கிடைக்கிறது. இந்தக் கிருபைகளைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, நம்முடைய துன்மார்க்கமான செய்கைகளினால் உண்டாகப்போகும் ஆபத்துக்களைக் குறித்தும் நாம் நினைவுகூரவேண்டும். நம்முடைய விசுவாசம் வலுவாகயிருக்கலாம். நம்முடைய அன்பு பற்றியெரியக்கூடியதாக இருக்கலாம். இன்று நம்முடைய ஆவிக்குரிய ஜீவியம் பரிசுத்தமுள்ளதாக இருக்கலாம். ஆனாலும் நாளைய தினமானது இன்றுபோல் இருக்கும் என்னும் நிச்சயமில்லை. இன்று நடக்கக்கூடிய  சம்பவங்களை வைத்து, நாளைக்கும் இப்படித்தான் நடக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது. 


நாம் இன்று கர்த்தருக்குள் நிலைத்து நிற்போம். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியம் சுத்தமாக இருக்கும். ஆனாலும் நாம் விழுந்துவிடாதவாறு எச்சரிக்கையோடிருக்கவேண்டும். தன்னை நிற்கிறவனாக எண்ணுகிறவன் விழுந்துவிடாதவாறு மிகுந்த எச்சரிப்போடிருக்கவேண்டும். தம்முடைய சீஷர்களைப்பற்றி இயேசுகிறிஸ்து கடிந்து கூறுகிற சம்பவம் வெகுசீக்கிரத்தில் வரப்போகிறது. ""என்னைத் தனியே விட்டுவிடும் காலம் வரும். அது இப்பொழுது வந்திருக்கிறது'' என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். இயேசுகிறிஸ்துவின்மீது சீஷர்கள் இப்போது மிகுந்த அன்போடிருக்கிறார்கள். இதே சீஷர்கள் சீக்கிரத்தில், இயேசுகிறிஸ்துவைக் குறித்து வெட்கப்பட்டு, அவரை விட்டு ஓடிப்போய்விடுவார்கள். 


சீஷர்கள் இயேசுகிறிஸ்துவைத் தனியேவிட்டு ஓடிப்போனாலும், இயேசுகிறிஸ்து  தனித்திருப்பதில்லை. பிதாவானவர் அவருடனே  கூடயிருக்கிறார். பிதாவானவருக்கும் இயேசுகிறிஸ்துவுக்கும் இடையிலிருக்கும் ஐக்கியம் குமாரனுக்குக் கிடைத்திருக்கும் விசேஷித்த சிலாக்கியமாகும். இயேசுகிறிஸ்துவின் மாம்ச சுபாவத்தைவிட்டு, தேவனுடைய சுபாவம் ஒருபோதும் பிரிந்திருப்பதில்லை. ""பிதாவே ஏன் என்னைக் கைவிட்டீர்'' என்று இயேசுகிறிஸ்து ஜெபித்தாலும், அவர் தேவனை நோக்கிக் கூப்பிடும்போது ""என் தேவனே'' என்றுதான் கூப்பிடுகிறார். தேவனுடைய பிரசன்னம் தம்மோடிருக்கிறது என்னும் நிச்சயம் இயேசுகிறிஸ்துவிடம் உறுதியாக இருக்கிறது.  ஆகையினால் தம்முடைய ஆவியை இயேசுகிறிஸ்து பிதாவின் கைகளில் ஒப்புக்கொடுக்கிறார். தாம் தனியாக இருப்பதில்லை என்பது இயேசுகிறிஸ்துவுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கிறது. ""என்னை அனுப்பினவர் என்னுடனே கூடயிருக்கிறார். பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத்  தனியே இருக்கவிடவில்லை''

 (யோவா 8:29). என்னும் சத்தியமே  இயேசுகிறிஸ்துவுக்கு ஆறுதலைத் தருகிறது. 


இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களாகிய நாமும் ஒருபோதும் தனியாக இருப்பதில்லை. இந்தச் சிலாக்கியம் விசுவாசிகளெல்லோருக்கும் பொதுவானது.  நாம் தனியே இருக்கும்போதுகூட, நாம் மெய்யாகவே தனியாக இருக்கவில்லை. பிதாவாகிய தேவன் நம்மோடு கூடயிருக்கிறார். தேவன் ஒருபோதும்  நம்மைத் தனியாக இருக்கவிடமாட்டார். அத்திமரத்தின் கீழ் நாத்தான்வேல் இருந்தபோது, அங்கும் தேவன் அவரோடு கூடயிருந்தார். பேதுரு மேல்வீட்டரையில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, அங்கும் தேவன் அவரோடு கூடயிருந்தார். நாம் தனிமையாக, வீட்டின் அறையின் கதவைப்பூட்டி ஜெபித்துக்கொண்டிருந்தாலும், அங்கும் நாம் தனிமையாயிருப்பதில்லை. தேவனுடைய பிரசன்னம் நம்மோடு கூடயிருக்கிறது. 


நம்முடைய இருதயம் சுத்தமாயிருக்கவேண்டும். நல்ல இருதயமும், நல்ல தேவனும் எல்லா வேளைகளிலும் ஐக்கியமாக     இணைந்திருக்கும். விசுவாசிகளாகிய நாம் தனியாகப் பாடுகளை அனுபவித்துக்கொண்டிருந்தாலும், அப்போதும் தேவன் நம்மோடு கூடயிருக்கிறார். இந்த உலகம்  நம்மைக் கைவிடலாம். வெறுத்து ஒதுக்கலாம்.  ஆனால் தேவனோ நம்மைத் தனியேவிட்டுவிடுவதில்லை. தேவனுடைய கிருபையின் பிரசன்னம் நம்மோடு கூடவே இருக்கிறது. அதற்காகக் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, அவருடைய பரிசுத்த பிரசன்னத்தில்  மகிழ்ந்து களிகூரவேண்டும். 


நான் உலகத்தை ஜெயித்தேன்


என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார் (யோவா 16:33). 


சீஷர்களுக்கு இந்த உலகத்தில் உபத்திரவம் உண்டு. ஆனாலும் அவர்கள் திடன்கொண்டு சமாதானமாக இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்து இந்த உலகத்தை ஜெயித்திருக்கிறார். தம்முடைய சீஷர்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இயேசுகிறிஸ்து இந்த உபதேசத்தை  அவர்களுக்குச் சொல்லுகிறார். தம்முடைய உபதேசத்தின் முடிவுரையாக, இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் சொல்லும்போது ""என்னிடத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கும்'' என்று கூறுகிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டுப் புறப்பட்டுப்போவது, மெய்யாகவே அவர்களுக்குப் பிரயோஜனமுள்ளதாக இருக்கும். தம்முடைய சீஷர்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கவேண்டும் என்பது இயேசுகிறிஸ்துவின் சித்தமாயிருக்கிறது. அவர்கள் எப்படிப்பட்ட பாடுகளின் வழியாகச் சென்றாலும், எப்படிப்பட்ட வேதனைகளையும் உபத்திரவங்களையும் அனுபவித்தாலும், இயேசுகிறிஸ்துவில் அவர்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவில் உண்டாயிருக்கும் சமாதானமே மெய்யான சமாதானம். இயேசுகிறிஸ்துவின் மூலமாக நாம் தேவனிடத்தில் சமாதானமாக இருக்கிறோம்.  நமக்கு இயேசுகிறிஸ்துவில் சமாதானம் உண்டாயிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளெல்லாம் நமக்குச் சமாதானத்தைக் கொடுக்கிறது. இயேசுகிறிஸ்து நமக்குச் சொல்லுகிற ஒவ்வொரு உபதேசமும், அவரிடத்தில் நமக்கு சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டே சொல்லப்பட்டிருக்கிறது. 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் அவரைத் தனியே விட்டுவிட்டு சிதறுண்டு ஓடிப்போய்விடுவார்கள் தங்களுடைய பாதுகாப்புக்காக அவர்கள் தப்பித்து ஓடுவார்கள். ஆனால் உலகத்தில் அவர்களுக்கு உபத்திரவம் உண்டு என்று இயேசுகிறிஸ்து  தெளிவுபடுத்துகிறார். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் எல்லோருக்குமே இந்த உலகத்தில் உபத்திரவம் உண்டு. ஒரு சிலருக்கு உபத்திரவம் குறைவாகவும், வேறு சிலருக்கு உபத்திரவம் அதிகமாகவும் இருக்கலாம். 


கிறிஸ்துவின் சீஷர்கள் நல்லவர்களாக இருப்பதினால் இப்பிரபஞ்சத்தின் மனுஷர் அவர்களை உபத்திரவப்படுத்துகிறார்கள். அதே வேளையில்  இப்பிரபஞ்சத்தின் ஜனங்கள் துன்மார்க்கராகயிருப்பதினால், தேவன் அவர்களைத் திருத்துகிறார். இது உலகத்து ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை. இதற்காகவும் உலகத்தார் சீஷர்களை உபத்திரவப்படுத்துகிறார்கள். சீஷர்கள் நல்லவர்களாக இருப்பதினாலும், இயேசுகிறிஸ்து  துன்மார்க்கரைத் திருத்தி நல்லவர்களாக ஆக்குவதினாலும், இந்த உலகத்தாருக்கு சீஷர்களைப் பிடிக்கவில்லை. இவ்விரண்டு காரியங்களுக்கும் நடுவில் உலகத்தில் நமக்கு உபத்திரவம் வருகிறது. 


சீஷர்களுக்கு உபத்திரவம் வந்தாலும், இயேசுகிறிஸ்து அவர்களிடத்தில் ஆறுதலாகத்  ""திடன்கொள்ளுங்கள்'' என்று கூறுகிறார்.  அந்த உபத்திரவத்திலும் சீஷர்களின் இருதயம்  சுத்தமாகயிருக்கவேண்டும். கர்த்தரை விசுவாசிக்கிறவர்களுக்கு  சகலமும் நன்மைகேதுவாக நடக்கும் என்று சீஷர்கள் விசுவாசிக்கவேண்டும். இந்த உலகத்தில் நமக்கு உபத்திரவங்கள் வரும்போது, அந்த உபத்திரவங்களுக்கு மத்தியிலும் கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நாம் திடன்கொண்டிருப்பது நம்முடைய கடமை. இப்படிப்பட்ட உபத்திரவக்காலத்திலும் திடமனதோடிருந்து இயேசுகிறிஸ்துவுக்கு நாம் சாட்சிகளாகப் பாடுகளை அனுபவிக்கவேண்டும். உபத்திரவம் நமக்கு வேதனையைத் தரலாம். உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும்,  பரீட்சை நம்பிக்கையும் உண்டாக்குகிறதென்று நாம் அறிந்திருந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டவேண்டும் (ரோம 5:3,4).


தம்முடைய சீஷர்களிடம் இயேசுகிறிஸ்து   ""திடன்கொள்ளுங்கள்'' என்று  ஆலோசனை கூறும்போது, ""நான் உலகத்தை ஜெயித்தேன்'' என்றும் கூறுகிறார். இயேசுகிறிஸ்துவின் வெற்றி, அவரை விசுவாசிக்கிற நமக்கும் வெற்றியாக இருக்கிறது. இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் உலகமெங்கும் சென்று சுவிசேஷத்தை அறிவிக்குமாறு கட்டளை கொடுத்தார். அப்போதும், ""திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்'' என்று கூறியே அவர்களை ஊழியத்திற்கு அனுப்புகிறார்.  இயேசுகிறிஸ்து இந்த உலகத்தின் எல்லா தீமைகளையும் தம்முடைய பாதபடிக்குக்கீழ் அடக்கிப்போட்டு, அவைகளை ஜெயித்திருக்கிறார். அவர் சிலுவையைச் சகித்துக்கொண்டு அதில் வெற்றி சிறந்தார். சிலுவையின் அவமானத்தையும் பாடுகளையும்  நோக்கிப் பார்க்காமல், தம்முடைய பரலோகத்தின் மகிமையை மாத்திரம் நோக்கிப் பார்த்து, சிலுவையை ஜெயித்தார். இந்த உலகத்திலுள்ள தீமைகளைத்  தம்முடைய நன்மையினால் ஜெயித்தார். 


இந்த உலக வராலாற்றில் பல யுத்தங்கள் நடைபெற்றுள்ளன. பலர் ஜெயம் பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் இயேசுகிறிஸ்துவைப்போல இந்த உலகத்தை ஜெயித்தவர் வேறு ஒருவருமில்லை. இயேசுகிறிஸ்து நமக்கு முன்பாகவே இந்த உலகத்தை ஜெயித்திருக்கிறார். ஆகையினால்  இந்த உலகத்தில் நாம் யுத்தம்பண்ணும்போது, நாம் புதிய சத்துருவோடு யுத்தம்பண்ணவில்லை. இயேசுகிறிஸ்துவிடம் ஏற்கெனவே தோற்றுப்போன சத்துருவிடம்தான் யுத்தம்பண்ணுகிறோம். நமக்கு உபத்திரவத்தைக் கொடுக்கிற இந்த உலகம், இயேசுகிறிஸ்துவிடம் ஏற்கெனவே தோற்றுப்போயிற்று. இதை நினைத்து நாம் திடன்கொள்ளவேண்டும்.  


நமக்காக இயேசுகிறிஸ்து இந்த உலகத்தை ஜெயித்திருக்கிறார். யுத்தம் கர்த்தருடையது. யுத்தத்தில் தேவனே நம்முடைய தளபதியாக இருக்கிறார். இயேசுகிறிஸ்துவினால் இந்த உலகம் நமக்கு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து இந்த உலகத்தை முழுவதுமாக ஜெயித்திருக்கிறார். இயேசுகிறிஸ்து இந்த உலகத்தை ஏற்கெனவே ஜெயித்திருப்பதினால், நாம் இந்த உலகத்தோடு மறுபடியும் யுத்தம்பண்ண வேண்டிய அவசியமில்லை. இந்த உலகத்தின்மீது          இயேசுகிறிஸ்து பெற்றுக்கொடுத்திருக்கிற வெற்றியை நாம் சுதந்தரித்துக்கொள்ளவேண்டும். வெற்றியின் பாதையில் விசுவாசத்தோடு முன்னேறிச் செல்லவேண்டும். ""இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம்'' (ரோம 8:37).


Post a Comment

0 Comments