பாடுகளின் வாரம் வியாழக்கிழமை நிகழ்வு-3(1)

 

பாடுகளின் வாரம்

வியாழக்கிழமை நிகழ்வு-3(1)


கெத்சமனே தோட்டத்திற்குப் போகும் வழியில் இயேசு தம்முடைய சீஷருக்கு உபதேசம்பண்ணுகிறார்  (யோவான் 15)



கனி

 (யோவா 15 : 1-8)


திராட்சச்செடி


நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர் 

(யோவா 15:1).  


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம்  ஆவியின் கனியைக் குறித்துப் பேசுகிறார். இந்தச் சத்தியத்தை  விளக்குவதற்கு செடியை ஓர் உவமையாகக் கூறுகிறார். ""நான் மெய்யான திராட்சச்செடி'' என்று இயேசுகிறிஸ்து தம்மைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அவர் தம்மைப்பற்றி ஒப்பிட்டுக் கூறும்போது மிகவும் சாதாரணமான, எளிமையான காரியங்களோடுதான் தம்மை எப்போதும் ஒப்பிடுவது வழக்கம். அவர் திராட்சச் செடியாகயிருக்கிறார். திராட்சத்தோட்டத்தில் நட்டப்பட்டிருக்கும் செடியாக இருக்கிறவர்தான் இயேசுகிறிஸ்து. அவர் யாரும் நட்டப்படாமல், தானாக முளைக்கிற  களைகளைப் போன்றவரல்ல. இயேசுகிறிஸ்து பூமியில் நாட்டப்பட்டிருக்கிறார். அவரே வார்த்தை மாம்சமானவர். 


திராட்சச்செடியானது வளரும்போது அது படர்ந்து வளரும். இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷம் உலகம்முழுவதும் பிரசங்கிக்கப்படும்போது, அவருடைய இரட்சிப்பு முழு உலகத்தாருக்கும் படர்ந்து கிடைக்கும். திராட்சச்செடியின் கனி  தேவனுக்கு மகிமையைக்கொடுக்கிறது. மனுஷருக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறது.  இயேசுகிறிஸ்துவினுடைய மத்தியஸ்தம் பண்ணும் ஊழியத்தின் கனியும், இதுபோலவே தேவனுக்கு மகிமையாகவும், மனுஷருக்குப் பிரியமாகவும் இருக்கும். 


இயேசுகிறிஸ்துவே மெய்யான திராட்சச்செடி. இந்த உலகத்தில் திராட்சச்செடியாக இல்லாதவர்கள்கூட, தங்களைத் திராட்சச்செடி என்று கூறி மாய்மாலம் பண்ணுகிறார்கள். அவர்களெல்லோரும் கள்ளக்கிறிஸ்துக்களாக  இருக்கிறார்கள். இவர்கள் கனிகொடாத மரத்தைப்போன்றவர்கள். பொய்யின் பிள்ளைகள்.  பொய்யை மாத்திரமே பேசுகிறவர்கள். ஆனால்  இயேசுகிறிஸ்துவாகிய திராட்சச்செடியோ மெய்யான திராட்சச்செடியாக இருக்கிறார். அவர் யாரையும் வஞ்சிப்பதில்லை. மாய்மாலம் பண்ணுவதில்லை. அவர் கனிகொடுக்கிறவராகவே இருக்கிறார். 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் திராட்சச்செடியின் கொடிகளாக இருக்கிறார்கள்.  இந்தத் திராட்சச்செடிக்கு இயேசுகிறிஸ்துவே வேராக இருக்கிறார். ""நாம் வேரைச் சுமக்கவில்லை. வேர் தான் நம்மைச் சுமக்கிறது''

 (ரோம 11:18).

 வேரானது பூமியிலிருந்து

 சத்தான ஆகாரத்தை உறுஞ்சி, தன் செடியிலுள்ள கொடிகளுக்கெல்லாம் கொடுக்கிறது. வேரோடு சார்ந்திருக்கும் எல்லா கொடிகளும் வளரும், கனி தரும். எல்லா கொடிகளுக்கும் வேரே ஆதாரமாக இருக்கிறது.  இதுபோலவே இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நமக்கு, எல்லா ஆதரவுகளும், எல்லா ஆதாரங்களும் இயேசுகிறிஸ்துவிடமிருந்தே வருகிறது. 


ஒரு திராட்சச் செடியில்  ஏராளமான கொடிகள் இருக்கும். இந்தக் கொடிகள் எல்லாவற்றிற்குமே ஒரே ஒரு வேர்தான் இருக்கும். எல்லா கொடிகளும் சேர்ந்து ஒரே திராட்சச்செடியாக இணைக்கப்பட்டிருக்கிறது. அதுபோலவே, இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நாமோ வெவ்வேறு தேசத்தில் இருந்தாலும், நம்முடைய நிறங்களும் பாஷைகளும் வித்தியாசமாக இருந்தாலும், நம்முடைய கலாச்சாரங்கள் வெவ்வேறாக இருந்தாலும், நாம் எல்லோருமே இயேசுகிறிஸ்துவில் சங்கமமாக இருக்கிறோம்.  இயேசுகிறிஸ்துவே நம்முடைய ஐக்கியத்திற்கு மையமாகவும் ஆதாரமாகவும் இருக்கிறவர். 


பிதாவாகிய தேவன் திராட்சத் தோட்டக்காரராக இருக்கிறார். அவரே திராட்சத்தோட்டத்தில், திராட்சச்செடியை நட்டு, அதை வளர்க்கிறவர். பூமி கர்த்தருக்குரியது.  ஆனாலும் நிலத்தைப் பண்படுத்தவில்லையென்றால், அதில் செடி வளராது. வளர்ந்தாலும் கனி தராது. நிலத்தைக் கொத்தி, செடியை நட்டு, எருப்போட்டு, நீர்ப் பாய்ச்சி பராமரித்தால்தான், மரம் 

வளர்ந்து கனிதரும். திராட்சத்தோட்டத்திற்குத் தேவனே சொந்தக்காரர். அவர் திராட்சத்தோட்டக்காரராக இருந்தாலும், அந்தத் தோட்டத்தில் திராட்சச்செடியை நட்டு, அதையும், அதன் கொடிகளையும் பராமரிக்கிற வேலைக்காரராகவும் இருக்கிறார். தேவனைப்போல தம்முடைய திராட்சத்தோட்டத்தை ஞானமாகவும் கவனமாகவும் பாதுகாத்துப் பராமரித்து வருகிற  தோட்டக்காரர் வேறு யாருமேயில்லை. கர்த்தருடைய சபை அவருடைய திராட்சத்தோட்டமாக இருக்கிறது. சபை வளர்ந்து கனி தரவேண்டுமென்றால், தேவனாகிய திராட்சத்தோட்டக்காரரின் பாதுகாப்பும் பராமரிப்பும் சபைக்குத் தேவைப்படுகிறது. 


இஸ்ரவேல் ஜனங்கள் பொய்யான திராட்சச் செடியாக மாறிவிட்டார்கள். அவர்கள் கசப்பான பழங்களைத் தந்தார்கள்.  இயேசு கிறிஸ்து மெய்யான திராட்சச் செடியாக இருக்கிறார். நல்ல பழங்களைத் தருகிறார்.


கனி கொடுக்கிற கொடி


என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி,  அதைச் சுத்தம்பண்ணுகிறார்  (யோவா 15:2).  


இயேசுகிறிஸ்து தம்மைத் திராட்சச்செடியென்று உவமையால் கூறிவிட்டு,  இந்த உவமையின் மூலமாக நம்முடைய கடமையையும் உபதேசம்பண்ணுகிறார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம், திராட்சக் கொடிகளைப் போல இருக்கிறோம். நாம் கனி தரவேண்டும். திராட்சக்கொடியிலிருந்து திராட்சப்பழங்களை எதிர்பார்ப்பதுபோல, நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திலிருந்து, நாம்  ஆவியின் கனிகளை எதிர்பார்க்கவேண்டும். நம்முடைய பேச்சிலும், சிந்தனையிலும், செயலிலும், ஜீவியத்திலும் நாம் ஆவியின் கனியை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். நாம் கனிகொடுக்கும் ஜீவியம் ஜீவிப்பதன் மூலமாக தேவனை மகிமைப்படுத்துகிறோம். பிறருக்கு நன்மை செய்கிறோம். தேவன் நமக்கு நன்மை செய்கிறார். நாம் தொடர்ந்து கனிகொடுக்கிறோம்.    


 இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் ஒவ்வொருவரும் அதிக கனிகளைக் கொடுக்கவேண்டுமென்று கூறுகிறார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் நீதியின் கனிகளைக் கொடுக்கவேண்டும். நம்முடைய கனியில் கிறிஸ்துவைப்பற்றிய அறிவின் சாரம் இருக்கவேண்டும். விசுவாசிகள் ஒவ்வொருவரும் கனி கொடுக்கும்போது, அந்த ஆவியின் கனியில் நீதியின் சுவையும், கிறிஸ்துவைப்பற்றிய அறிவின் சுவையும் கலந்திருக்கவேண்டும். 


கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதைப் பிதாவாகிய தேவன் அறுத்துப்போடுகிறார்.  இது கனிகொடாதிருக்கிற கொடிகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் அழிவு. திராட்சச்செடியில்  ஏராளமான கொடிகள் இருக்கும். அவையெல்லாமே கனிகொடுப்பதில்லை. ஒரு சில கொடிகள் கனி கொடுக்கும். வேறு சில கொடிகள் கனி கொடுக்காது. ஏராளமானோர் தாங்கள் இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதாக  சொல்லுகிறார்கள். ஆனால் அவர்களெல்லோருமே ஆவியின் கனியைக் கொடுப்பதில்லை. ஏதோ ஒரு வகையில் இப்படிப்பட்ட கொடிகள் செடியோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது. 


இதைப்போலவே, கனிகொடாத விசுவாசிகளும் ஊழியம் என்னும் பெயராலோ, அல்லது பாரம்பரியம் என்னும் பெயராலோ  இயேசுகிறிஸ்துவோடு ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பார்ப்பதற்கு செடியோடு ஒட்டிக்கொண்டிருக்கும் கொடிகளைப்போல இருப்பார்கள். ஆனால் விரைவில் உலர்ந்துபோவார்கள். இதைப்போலவே  கனிகொடாத விசுவாசிகளும் இப்போது விசுவாசிகளைப்போல இருப்பார்கள். ஆனாலும் வெகுவிரைவில் இவர்கள் உலர்ந்த எலும்புகளைப்போல மாறிவிடுவார்கள். 


கனிகொடாத ஊழியக்காரர்கள் உண்மையில்லாத ஊழியக்காரர்கள். இவர்கள்  பெயரளவில் ஊழியம் செய்கிறார்கள். இவர்களிடத்தில் கனி எதையும் எதிர்பார்க்க முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு அழிவு நியமிக்கப்பட்டிருக்கிறது. கனிகொடாதிருக்கிற கொடிகள் எதுவோ அவற்றைப் பிதாவானவர் அறுத்துப்போடுகிறார் என்று இயேசுகிறிஸ்து  எச்சரித்துக் கூறுகிறார். 


கனிகொடுக்கிற கொடி எதுவோ அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி பிதாவானவர்  அதைச் சுத்தம்பண்ணுகிறார். ஒரு கொடி கனிகொடுக்கும்போது, அது அதிக கனிகொடுக்குமாறு ஆசீர்வதிக்கப்படுகிறது.  கனிகொடுப்பதற்காக, அதிக கனிகொடுக்கிற  சுபாவம், அதற்கு வெகுமதியாகக் கொடுக்கப்படுகிறது. ஒரு கொடி கனிகொடுத்தாலும், அது இன்னும் அதிகமான கனிகொடுப்பதற்காக, அந்தக் கொடிகள் சுத்தம்பண்ணப்படும். அந்தக் கொடியிலுள்ள கனிகொடுக்கும் சுபாவம் இதன் மூலமாக விருத்தியடையும். 


   விசுவாசிகளாகிய நம்முடைய ஜீவியத்தில் நாம் கனிகொடுக்கும்போது,  தேவன் நம்மை அதிக கனிகொடுக்கும் வண்ணமாக சுத்திகரிக்கிறார். நம்முடைய சிந்தனைகள், செயல்கள், பேச்சுக்கள் எல்லாவற்றையும் சுத்தம்பண்ணுகிறார். அதிக கனிகொடுப்பதற்கு  தடையாக இருக்கும் எல்லா தீயசுபாவங்களையும் நம்மைவிட்டு அகற்றிப்போடுகிறார். ஏற்றவேளை வரும்போது கொடிகளையெல்லாம் தோட்டக்காரர் சுத்தம்பண்ணுவதுபோல, பிதாவாகிய தேவனும் அந்தந்த காலங்களில் நம்மைச் சுத்திகரித்துக்கொண்டேயிருக்கிறார்.  நம்முடைய ஜீவியத்தில் தேவன் நம்மை சுத்தம்பண்ணும்போது, கொடியிலிருந்து சில பகுதிகள் வெட்டப்படுவதுபோல, தேவனும் நம்முடைய ஜீவியத்தின் சில அம்சங்களை நீக்கிப்போடலாம். இவையெல்லாமே தோட்டக்காரராகிய தேவனுடைய பராமரிக்கும் கிரியை. நாம் அதிக கனிகொடுக்க வேண்டும் என்பதற்காகவே, நம்முடைய பிரதான தோட்டக்காரராகிய தேவன் நம்மைச் சுத்திகரிக்கிறார். 


கொடி என்பது இயேசு கிறிஸ்துவின் எல்லா விசுவாசிகளையும் குறிக்கும். கொடியானது கனி தரவேண்டும். கனிதரும் அந்தக் கொடியை நன்றாகச் சுத்தம்பண்ணி, அதிக கனி கொடுக்குமாறு பராமரிப்பார்கள். 


அந்தக் கொடி கனி கொடுக்க வில்லையென்றால், அதைச் செடியில் இராதவாறு அறுத்துப்போடுவார்கள். அறுத்துப் போடுகிறவர் பிதாவானவர். மனுஷனல்ல. தேவனுடைய கரத்திலிருந்து யாராலும் அவருடைய பிள்ளைகளைப் பறித்துக் கொள்ள முடியாது. 


கனிதராத கொடிகளைத் தேவனே அறுத்துப் போடுவார். தேவன் இவ்வாறு அறுத்துப் போடமாட்டார் என்று சொல்வோமென்றால், அவருடைய கிரியைகளை நாம் மட்டுப்படுத்துகிறவர்களாக இருப்போம். கனிகொடாதசெத்துப்போன கொடிகளைத் தேவனுடைய வல்லமையைவிட மகத்துவமானது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருப்போம். 


திராட்சத் தோட்டக்காரனிடம்போய், கனிகொடாத கொடிகளை அறுத்துப் போடக்கூடாது என்று யாராவது சொல்ல முடியுமா. கனிகொடுக்கும் என்று நம்பிதான், தோட்டக்காரர் திராட்சச் செடியை வளர்க்கிறார். கனிகொடுக்கும் கொடியைப் பராமரிக்கிறார். கனிகொடாத கொடியை அறுத்துப் போடுகிறார்.


சுத்தமாயிருக்கிறீர்கள்


நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்

(யோவா 15:3).  


இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து அவருடைய உபதேசங்களைக் கேட்கிறவர்களுக்குத் தெய்வீக ஆசீர்வாதங்கள் உண்டு. இயேசுகிறிஸ்து நமக்குச் சொன்ன உபதேசத்தினாலே நாம் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களும் அவருடைய உபதேசத்தினால் சுத்தமாயிருக்கிறார்கள். யூதாஸ்காரியோத்து இயேசுகிறிஸ்துவை விட்டும், சீஷர்களைவிட்டும் விலகிப்போய்விட்டான். ஆகையினால் சீஷர்களின் கூட்டம் இப்போது சுத்தமாயிருக்கிறது. யூதாஸ்காரியோத்து சீஷர்களைவிட்டு வெளியேறிப்போகும் வரையிலும் அவர்கள் சுத்தமாயில்லை. 


இயேசுகிறிஸ்துவின் ஒவ்வொரு சீஷரும்  பரிசுத்தமாயிருக்கிறார்கள். கிறிஸ்துவின் சத்தியத்தினாலேஅவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறார்கள். அவருடைய  வசனமே சத்தியம் (யோவா 17:17). இந்தச் சத்தியமும் சிலாக்கியமும் எல்லா விசுவாசிகளுக்கும் அருளப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் வார்த்தை நம்மெல்லோருக்கும் உபதேசிக்கப்படுகிறது. கிறிஸ்துவின் வார்த்தையில் சுத்திகரிக்கும் நீதி இருக்கிறது.   அக்கினி தங்கத்தை உருக்கி புடமிட்டுச் சுத்தப்படுத்துவதுபோல கர்த்தருடைய வசனம் நம்மைப் புடமிட்டுச் சுத்தப்படுத்துகிறது. 


நாம் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால்  பிதாவாகிய தேவன் மகிமைப்படுவார். நாமும் இயேசுகிறிஸ்துவுக்குச் சீஷர்களாயிருப்போம். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் மிகுந்த கனிகளைக் கொடுக்கும் வண்ணமாக பரிசுத்தமாயிருக்கவேண்டும். நம்முடைய நற்கிரியைகள் மூலமாகப் பரலோகத்திலிருக்கிற பிதாவின் நாமம் மகிமையடையவேண்டும். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களும் கனிகொடுக்கவேண்டும். அவருடைய விசுவாசிகளாகிய நாமும் கனிகொடுக்கவேண்டும். 


நாம் இயேசுகிறிஸ்துவில் நிலைத்திருக்கிறோம் என்பதை,  கனிகொடுப்பதன் மூலமாகத்தான் நாம் நிரூபிக்க முடியும். நம்முடைய மிகுந்த கனியின் மூலமாக நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் துதிக்கப்படவேண்டும். நாம் எவ்வளவு அதிகமாக கனிகொடுக்கிறோமோ, அவ்வளவு அதிகமாகத் தேவனுடைய நாமம் மகிமைப்படும்.  


என்னில் நிலைத்திருங்கள்


 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள் ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது  (யோவா 15:4,5). 


நாம் அதிக கனிகொடுக்கவேண்டுமென்றால், இயேசுகிறிஸ்துவில் நாம் நிலைத்திருக்கவேண்டும். ""என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்''என்று இயேசுகிறிஸ்து வாக்குப்பண்ணுகிறார். இயேசுகிறிஸ்துவிடம் யாரெல்லாம் வருகிறார்களோ, அவர்களெல்லோரும் இயேசுகிறிஸ்துவில் நிலைத்திருக்கவேண்டும். அப்போது அவரும் அவர்களில் நிலைத்திருப்பார். நாம் இயேசுகிறிஸ்துவில் நிலைத்திருக்கும்போது, அவர் நம்மில் நிலைத்திருப்பாரோ அல்லது நிலைத்திருக்கமாட்டாரோ என்னும் சந்தேகமோ அல்லது பயமோ நமக்குத் தேவையில்லை. இயேசுகிறிஸ்துவுக்கும் அவருடைய விசுவாசிகளுக்கும் இடையிலுள்ள ஐக்கியம், அவரைப் பொறுத்தளவில் ஒருபோதும் மாறுவதில்லை. அவர் வாக்குமாறாதவர். தேவனோடுள்ள நம்முடைய ஐக்கியம் இயேசுகிறிஸ்துவினால் ஒருபோதும் முறிக்கப்படுவதில்லை. 


திராட்சச்செடியில் கொடிகளைப்போல இருக்கும் நாம், திராட்சச்செடியாகிய இயேசுகிறிஸ்துவில் எப்போதும் நிலைத்திருக்கவேண்டும். அப்போதுதான் திராட்சச்செடியின் வேரிலிருந்து சத்தான ஆகாரம் கொடிகளுக்குக் கிடைக்கும். கொடிகள்  செடியோடு நிலைத்திருந்தால்தான் அதற்குக் கிடைக்கும் ஆகாரம் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கும். 


நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில்,     நாம்  இயேசுகிறிஸ்துவில் நிலைத்திருந்தால் மாத்திரமே, நம்மால் கனிகொடுக்க முடியும்.  நிலைத்திருக்காவிட்டால் கனிகொடுக்க முடியாது. ""கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால், அது தானாய் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் கனிகொடுக்கமாட்டீர்கள்'' என்று  இயேசுகிறிஸ்து  தம்முடைய சீஷர்களிடம் கூறுகிறார். நம்முடைய சந்தோஷமும்,                சமாதானமும் நிலைத்திருக்க  வேண்டுமென்றால் நாம் இயேசுகிறிஸ்துவிலும் நிலைத்திருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவில் நிலைத்திருக்கவில்லையென்றால் நாம்     உலர்ந்த எலும்புகளைப்போல ஜீவனில்லாதவர்களாகவே இருப்போம். ஜீவனில்லாத கொடியினால் கனிதரமுடியாது. நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் நன்மை செய்யவேண்டுமானால்  கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. 


இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, அவரிடத்தில் நாம் தொடர்ந்து அன்புகூரும்போது, நம்மால் அதிக கனிகளைக் கொடுக்கமுடியும். நம்முடைய விசுவாசமும் நிலைத்திருக்கவேண்டும். அன்பும் நிலைத்திருக்கவேண்டும். தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்து ஜீவிப்பதுதான் ஆசீர்வாதமான  ஜீவியம்.  இந்த உலகத்தில் இதைவிட பெரிய ஆசீர்வாதம்  வேறு எதுவுமில்லை. நாம் நன்மை செய்யவேண்டியது அவசியம். இயேசுகிறிஸ்துவில் நிலைத்திருந்தால் மாத்திரமே நம்மால் நன்மை செய்யமுடியும். ஏனெனில் நமக்கு நன்மை செய்யும் சுபாவமே இயேசுகிறிஸ்துவிடமிருந்துதான் வருகிறது. 


""என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது'' என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். எல்லா நன்மையையும் வேராக இருக்கும் இயேசுகிறிஸ்துவிடமிருந்துதான் பெற்றுக்கொள்கிறோம். இயேசுகிறிஸ்து அல்லாமல் நம்மால் பெரிய காரியங்களை மாத்திரமல்ல, எந்தக் காரியத்தையும் செய்யமுடியாது. நாம் செய்கிற எந்தக் கிரியையையும் தேவனுக்குப் பிரியமாகயிராது. நாம் கொடுக்கிற கனி தேவனுடைய        நாமத்தை மகிமைப்படுத்தாது. அது நமக்கும் பிரயோஜனமாகயிராது. 


நம்முடைய ஜீவியத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நாம் இயேசுகிறிஸ்துவையே சார்ந்திருக்கவேண்டும்.  ஒரு கொடி படரும்போது அது சுவற்றிலோ, அல்லது வேறு மரத்தின் ஆதரவிலோ படரலாம்.  இந்த ஆதரவு நல்லதுதான். ஆனாலும் அந்தக் கொடியானது அதன் செடியோடு நிலைத்திருந்தால் மாத்திரமே, அதன் வேரிலிருந்து    சத்தான ஆகாரத்தைப் பெற்றுக்கொண்டு, கனிதரமுடியும்.      செடியோடு இணைக்கப்படவில்லையென்றால் கொடி பட்டுப்போகும். அதுபோலவே விசுவாசிகளாகிய நாம் இயேசுகிறிஸ்துவில் நிலைத்திருக்கவில்லையென்றால் உலர்ந்த எலும்புகளைப்போல ஜீவனில்லாமல் பட்டுப்போவோம். 


நிலைத்திரு  என்பதன் கிரேக்க வார்த்தை ""மேனோ''  என்பதாகும். கிறிஸ்துவில் நாம் நிலைத்திருக்க வேண்டும். நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்க வில்லையென்றால், நம்மால் ஆவிக்குரிய கனியைத் தரமுடியாது. ஆகையினால் நாம் கிறிஸ்துவாகிய செடியில் நிலைத்திருக்கும் கொடிகளாக  இருக்க வேண்டும்.


இயேசு கிறிஸ்துவே மெய்யான திராட்சச்செடி. விசுவாசிகள் கொடிகள். விசுவாசிகள் கிறிஸ்துவில் நிலைத்திருப்பது மிகவும் அவசியம். ஒருவன் கிறிஸ்துவில் நிலைத்திருக்கவில்லை என்றால், அவனால் ஆவிக்குரிய கனியைக் கொடுக்க முடியாது. ஆகையினால் தான் இயேசு கிறிஸ்து ""ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது'' என்று கூறுகிறார்.


என்னில் நிலைத்திராவிட்டால்


ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம் (யோவா 15:6).   


நாம் இயேசுகிறிஸ்துவில் நிலைத்திராமல், அவரைவிட்டு விலகிப்போய்விட்டால், நம்முடைய முடிவு பரிதாபமாக அழிந்துபோகும். ""ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால் வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்'' என்று இயேசுகிறிஸ்து, தம்மில் நிலைத்திராமல், தம்மைவிட்டு விலகிப்போகிறவர்களைக்குறித்து எச்சரித்துக் கூறுகிறார். ஒரு சிலர் இயேசுகிறிஸ்துவில் நிலைத்திராமலேயே, தாங்கள் அவரில் நிலைத்திருப்பதாக மாய்மாலம் பண்ணுகிறார்கள்.  மாய்மாலக்காரரின் முடிவு அழிவாகவே இருக்கும். செடியில் நிலைத்திராத கொடிகள்  உலர்ந்துபோகும். அவைகளைச் சேகரித்து அக்கினியிலே போட்டு எரித்துவிடுவார்கள். ஏனெனில் உலர்ந்துபோன கொடிகள் செடிக்குப் பாரமாகவே இருக்கும். 


இயேசுகிறிஸ்துவில் நிலைத்திராமல், அவரைவிட்டு விலகிப்போய்விட்டால், அவரும் அவர்களை விலக்கிப்போடுவார்.   தம்மில் நிலைத்திராதவர்களை இயேசுகிறிஸ்து தம்மைவிட்டு வெளியேற்றிவிடுவார். ஒரு மரத்திலிருந்து பட்டுப்போன கிளை கீழே முறிந்துவிழுவதுபோல, இயேசுகிறிஸ்துவைவிட்டு  விலகிப்போனவர்களும் தங்கள் ஜீவியத்தில் ஜீவனில்லாமல், ஆவிக்குரிய ரீதியாக மரித்துப்போய், அவரைவிட்டு நீங்கிப்போவார்கள்.  ஒரு சிலர் கிறிஸ்துவில் சிறிது காலம் நிலைத்திருப்பார்கள். அதன்பின்பு அவரைவிட்டு விலகிப்போவார்கள். இயேசுகிறிஸ்து தம்முடைய நீடிய பொறுமையினால் அவர்களைத் தம்மிடத்தில் சேர்த்துக்கொள்வதற்கு ஆவலாயிருப்பார். ஆனாலும் அவர்கள் துணிகரமாக இயேசுகிறிஸ்துவைவிட்டு விலகிப்போகும்போது, அவர் அவர்களுடைய ஆவியோடு தொடர்ந்து போராடுவதில்லை. கனிகொடுக்காத கொடிகள் இலையும் கொடுப்பதில்லை. பிரயோஜனமற்ற இப்படிப்பட்ட கொடிகளை மனுஷர் சேர்த்து அக்கினியிலே போடுகிறார்கள். 


சாத்தானுடைய பிரதிநிதிகள்தான், கனிகொடாமல் உலர்ந்துபோன கொடிகளை பொறுக்கி எடுத்து, அவற்றைத் தங்களுக்கு எளிதில் இரையாக்கிப்போடுகிறார்கள். அதை அவர்கள் அக்கினியிலே போடுகிறார்கள். இயேசுகிறிஸ்து இந்த உவûயை மிகவும் சாதாரணமாகக் கூறினாலும், கிறிஸ்துவில் நிலைத்திராதோருக்கு எச்சரிப்பின் வார்த்தைகளாகவே இந்த உபதேசத்தைக் கூறுகிறார். கிறிஸ்துவில் நாம் நிலைத்திராவிட்டால் நமக்கு நிச்சயம் அழிவு வரும். 


விசுவாசி கிறிஸ்துவில் நிலைத்திருக்கவில்லையென்றால், அவனுடைய ஆவிக்குரிய ஜீவியம் உலர்ந்து போகும். உலர்ந்து போன ஜீவியத்தில் ஆவியின் கனியை எதிர்பார்க்க முடியாது. திராட்சைத் தோட்டத்தில்கூட உலர்ந்துபோன கொடி கனிதராது. அப்படிப்பட்ட கனிகொடாத உலர்ந்துபோன கொடிகளை எல்லாம் சேர்த்து, அக்கினியிலே போட்டு, எரிப்பார்கள். 


நிலைத்திருந்தால்


நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்  

(யோவா 15:7,8). 


இயேசுகிறிஸ்துவில் நிலைத்திருப்போருக்குத் தேவனுடைய சமுகத்தில் சிலாக்கியமும் ஆசீர்வாதமும் கிடைக்கும். ""நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் வாக்குப்பண்ணுகிறார். நாம் இயேசுகிறிஸ்துவில் நிலைத்திருப்பதைக் காத்துக்கொள்ளவேண்டும். ""என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்'' (யோவா 15:4) என்று இயேசுகிறிஸ்து ஏற்கெனவே கூறிய உபதேசத்தை  இங்கு மறுபடியுமாகக் கூறுகிறார். ""நீங்கள் என்னிலும்'' என்று கூறிவிட்டு, தம்மைப்பற்றிக் கூறும்போது, ""என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால்'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்துவினுடைய வார்த்தையில்தான் நாம் அவரை ஏற்றுக்கொள்கிறோம், அவரில் நிலைத்திருக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் வார்த்தை நம்முடைய இருதயத்தில் அதிகமாக வாசம்பண்ணும்போது, கிறிஸ்து அங்கு  அதிகமாக வாசம்பண்ணுகிறார்.


நாம் வீட்டில் வாசம்பண்ணுவதுபோல, கிறிஸ்துவின் வசனமும் நம்மிடத்தில் வாசம்பண்ணும்போது, நாம் கிறிஸ்துவில் வாசம்பண்ணுகிறோம். அவர் நம்மில் வாசம்பண்ணுகிறார். நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறோம். அவர் நம்மில் நிலைத்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவோடு நாம் வைத்திருக்கிற ஐக்கியம்        நிலைத்திருக்கவேண்டும். நம்முடைய வேண்டுதல்களினாலும், விண்ணப்பங்களினாலும் நாம் அவரோடு தொடர்ந்து தொடர்பு கொள்ளவேண்டும். அப்போது அவர் ""நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்'' என்று நமக்கு வாக்குப்பண்ணுகிறார். நாம் தேவனிடத்தில்  ஒரு காரியத்தைக் கேட்கும்போது, அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் வாஞ்சை மாத்திரமே நம்மிடத்தில் நிரம்பியிருக்கும். நாம் கேட்டுக்கொண்டதை இயேசுகிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொள்ளும்போது நமக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும். 


நாம் இயேசுகிறிஸ்துவிலும், அவருடைய வார்த்தை நம்மிலும் நிலைத்திருந்தால் மாத்திரமே, நாம் கேட்டுக்கொள்வதைத் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்வோம். நாம் கிறிஸ்துவிலும், அவருடைய வார்த்தை நம்மிலும் நிலைத்திருக்கும்போது, நம்முடைய சுயஇஷ்டப்படி  நாம் ஜெபிக்கமாட்டோம். தேவனுக்குச் சித்தமானதை மாத்திரமே அவரிடத்தில் கேட்டுக்கொள்வோம். தேவனுடைய வார்த்தை நம்மிடத்தில் நிலைத்திருக்கும்போது, அவருடைய வாக்குத்தத்தங்களும் நமக்குள் வாசம்பண்ணும்.  நாம் ஜெபிக்கும்போது  தேவன் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தங்களை அவருடைய சமுகத்தில் பணிவோடும், பயபக்தியோடும் ஏறெடுப்போம். நமக்குள்வாசம்பண்ணுகிற இயேசுகிறிஸ்து, நம்முடைய ஜெபத்தின் வார்த்தைகளை, ஒழுங்குபடுத்தித் தருகிறார். 


நமது ஜெபங்களுக்கு இயேசு கிறிஸ்து பதில் தரவேண்டுமென்றால், நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். யோவான் 15 ஆவது அதிகாரத்தில் நாம் பல நிபந்தனைகளை வாசிக்கிறோம்.  


 தேவனுடைய பிள்ளைகள் தங்களுடைய தேவைகளை ஜெபத்தில் ஏறெடுக்க வேண்டும். நாம் கேட்டுக் கொள்வதெதுவோ அது நமக்குச் செய்யப்படும் என்பது தேவனுடைய வாக்குத்தத்தம். இரண்டு ஏற்பாடுகளிலுமே நாம் இந்த வாக்குத்தத்தத்தை வாசிக்கிறோம். இயேசு கிறிஸ்து நம்முடைய தேவைகளைச் சந்திப்பார். நாம் ஜெபத்தில் கேட்டுக் கொள்வதை நமக்குச் செய்வார்.


""கர்த்தாவே, உமக்குச் சித்தமானால் எனக்கு  இந்தக் காரியத்தைச் செய்யும்'' என்று நாம் ஜெபிக்கிறோம். இது தவறு ஒன்றுமில்லை. ஆனாலும், தேவனுடைய சித்தம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்பும், அதை அவர் நமக்குச் செய்வாரா என்னும் சந்தேகம் நமக்கு வரக்கூடாது. 


உலகப்பிரகாரமான பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்கவேண்டுமென்று அறிந்திருக்கிறார்கள். நம்முடைய பரலோகப் பிதா நமது தேவையை நன்றாக அறிந்திருக்கிறார். நாம் குறையற்றவர்களாகவும், பரிபூரணமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய சித்தம். 


யோவான் 15:1-8 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிற முக்கிய உபதேசங்கள்


    1. தேவன் திராட்சைத் தோட்டத்துக்காரர்

 (யோவான்  15:1).


    2. கிறிஸ்து திராட்சச்செடி (யோவான் 15:1,5).


    3. விசுவாசிகள் கிறிஸ்துவிலுள்ள கொடிகள் (யோவான் 15:2,5)


    4. இயேசு கிறிஸ்துவில் ஒருவன் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான். அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள். (யோவான் 15:2,6).


    5. இயேசு கிறிஸ்துவில் கனி கொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம் பண்ணுகிறார். (யோவான் 15:2,5).


    6. இயேசு கிறிஸ்துவிலுள்ள ஒவ்வொரு கொடியும் சுத்தமாக இருக்கிறது - தேவனுடைய வார்த்தையினால் இருதயம் சுத்தமாக இருக்கிறது. அவர்கள் ஒளியில் நடக்கிறார்கள்

 (யோவான் 15:3) 

 

    7. கொடிகள் (விசுவாசிகள்) கிறிஸ்துவிலும், கிறிஸ்து விசுவாசிகளிடத்திலும் நிலைத்திருக்க வேண்டும். (யோவான் 15:4-5).


    8. கொடியானது தானாய் கனிகொடுக்கமாட்டாதது.               (யோவான் 15:4-5).


    9. விசுவாசிகள் இயேசு கிறிஸ்துவில்நிலைத்திருக்காவிட்டால், அவர்கள் மூலமாக கனிகொடுப்பதற்கு இயேசு கிறிஸ்து உதவி புரிய மாட்டார்.   (யோவான் 15:4-6).


    10. கிளைகள் கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதை அறுத்து, எரித்துப்போடுவார்கள்.

 (யோவான் 15:6).


    11. விசுவாசிகள் கிறிஸ்துவில் நிலைத்திருந்தால் மட்டும் போதாது. இயேசு கிறிஸ்துவினுடைய வார்த்தைகளும்,விசுவாசிகளிடத்தில் நிலைத்திருக்க வேண்டும். அப்போது அவர்கள்கேட்டுக்கொள்ளும் விண்ணப்பங்கள் அவர்களுக்கு கொடுக்கப்படும். (யோவான் 15:7).


    12. விசுவாசிகள் இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருந்து, அதிக கனிகொடுக்கும் போது பிதா மகிமைப்படுவார். 

 (யோவான் 15:8).


அன்பு (யோவான் 15 : 9-17)


பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல


பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும்   உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள் 

 (யோவா 15:9).   


இயேசுகிறிஸ்து அன்பாகவேயிருக்கிறார். அன்பாகயிருக்கிற இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் அன்பைக்குறித்து உபதேசம்பண்ணுகிறார். 


இயேசுகிறிஸ்து அன்பைப்பற்றி கூறும் உபதேசத்தில் நான்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன


அவையாவன:  


 1. பிதா தம்மிடத்தில் அன்பாயிருப்பது. 

2. தாம் தம்முடைய சீஷர்களிடத்தில் அன்பாயிருப்பது.

 3. சீஷர்கள் தம்மிடத்தில் அன்பாயிருப்பது.

  4. சீஷர்கள் ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பது. 


பிதாவாகிய தேவன் இயேசுகிறிஸ்துவில் அன்பாயிருக்கிறார். இதைச் சொல்லும்போது  ""பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல'' என்னும் வாக்கியத்தை இயேசுகிறிஸ்து பயன்படுத்துகிறார். ஒருவரும் கெட்டுப்போகாமல், எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக, பிதாவானவர் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை இந்த உலகத்திற்குத் தந்தருளி, இந்த உலகத்தின்மீது இவ்வளவாய் அன்புகூர்ந்திருக்கிறார்.  பிதாவாகிய தேவன் இந்த உலகத்து ஜனங்கள்மீது, ஒரு தகப்பன் தன் பிள்ளைகள்மீது அன்புகூருவதுபோல அன்புகூருகிறார். ஆனால் இந்த உலகமோ பிதாவாகிய தேவனிடத்தில் அன்புகூராமல் அவரைப் பகைக்கிறது. 


இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவின் அன்பிலே நிலைத்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் அன்பு நிலைத்திருக்கிறபடியினால், தம்முடைய பாடுகள் வழியாக சந்தோஷமாகக் கடந்துசெல்கிறார். இதனால் பிதாவாகிய தேவன் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின்மீது அன்பில் நிலைத்திருக்கிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறார். இயேசுகிறிஸ்து மீட்பின் பிரமாணத்திற்குக்  கீழ்ப்படிந்து நமக்கு மீட்பை இலவசமாகப் பெற்றுக்கொடுத்திருக்கிறார். குமாரன்  பிதாவின்  அன்பில்        நிலைத்திருப்பதினால், நம்மையும் அந்த அன்புக்கு மறுபடியும் ஒப்புரவாக்கியிருக்கிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறார். போகும்போது தாம் அவர்கள்மீது வைத்திருக்கும் தம்முடைய அன்பை உறுதிபண்ணுகிறார். தம்முடைய அன்பு எப்படிப்பட்டது என்பதை, இயேசுகிறிஸ்து விவரிக்கும்போது ""பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்'' என்று கூறுகிறார். பிதா இயேசுகிறிஸ்துவிடத்தில் அன்பாயிருக்கிறார். பிதாவின் அன்புக்கு இயேசுகிறிஸ்து பாத்திரராகயிருக்கிறார்.  இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் அன்பாயிருக்கிறார். ஆனால் சீஷர்களோ இயேசுகிறிஸ்துவின் அன்புக்குப் பாத்திரராயில்லை. 


பிதாவாகிய தேவன் இயேசுகிறிஸ்துவில் அன்புகூரும்போது, தம்முடைய குமாரனிடத்தில் அன்புகூருவதுபோல அன்புகூருகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் அன்புகூரும்போது, தம்முடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருவதுபோல அன்புகூருகிறார். பிதாவாகிய தேவன் இயேசுகிறிஸ்துவிடத்தில் பிரியமாயிருக்கிறார்.  பிதாவாகிய தேவன் இயேசுகிறிஸ்துவில் நம்மிடத்திலும் பிரியமாயிருக்கிறார். கிறிஸ்துவுக்குப் பிரியமானவர்களாகிய நம்மைப் பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனில் அங்கீகரிக்கிறார்.  


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் அவருடைய அன்பிலே நிலைத்திருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவில் யாரெல்லாம் அன்பாயிருக்கிறார்களோ, அவர்களெல்லோரும்  அவருடைய அன்பில் நிலைத்திருக்கவும் வேண்டும். இயேசுகிறிஸ்துவில் தாங்கள் வைத்திருக்கும் அன்பைக் காத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் விசுவாசிகளுக்கு வரும் எல்லா பிரச்சனைகளும்நமக்குப் பாரமானவைகளாகயிராமல் இலகுவாகயிருக்கும். நாம் கிறிஸ்துவுக்காக பாடுகளையும் வேதனைகளையும் அனுபவிக்கும்போது, அவரிடத்தில் நாம் வைத்திருக்கும் அன்பு தணிந்துபோகாமல், பற்றியெரியவேண்டும். 


என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்


நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள் 

(யோவா 15:10).  


இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறார். அதுபோல சீஷர்களும் அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கவேண்டும். அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டால் மாத்திரமே  அவருடைய அன்பில் நிலைத்திருக்க முடியும்.  இது இயேசுகிறிஸ்து தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தமாகும். இயேசுகிறிஸ்துவின் அன்பில் நமக்கு ஆறுதல் உண்டு. அடைக்கலம் உண்டு. அவர் நாம் தங்கியிருக்கும் தாபரிக்கிறஸ்தலமாக இருப்பார். கிறிஸ்துவின்  அன்பில்  நமக்குப் பாதுகாப்பு உண்டு. நாம் இயேசுகிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்கும்போது, இந்த அன்பில் நிலைத்திருப்பதற்குத் தேவனுடைய கிருபையும் பெலனும் நமக்குக் கொடுக்கப்படும். இவையெல்லாவற்றிற்கும், ""நாம் இயேசுகிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொள்ளவேண்டும்'' என்பது நிபந்தனையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 


கிறிஸ்துவின் சீஷர்கள் இயேசுகிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொண்டு வருகிறார்கள். இந்த விஷயத்தில்  அவர்கள் தங்களுக்குத் தாங்களே உறுதியோடிருக்கிறார்கள். அதேவேளையில் இந்தச் சத்தியத்தை மற்றவர்களுக்கும் உண்மையோடு அறிவிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் கற்பனைகளை மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கு அவருடைய சீஷர்கள் உத்திரவாதம் பெற்றிருக்கிறார்கள்.


சீஷர்கள் தம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவேண்டும் என்பதற்கு, இயேசுகிறிஸ்து தம்மையே முன் உதாரணமாகக் கூறுகிறார். ""நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல'' என்று தம்முடைய அன்பைப்பற்றி சீஷருக்குச் சாட்சியாகக் கூறுகிறார். இயேசுகிறிஸ்து அவர்களுக்குக் கற்பிக்கிற யாவையும் அவர்கள் செய்வார்களானால் சீஷர்கள் இயேசுகிறிஸ்துவுக்குச் சிநேகிதராயிருப்பார்கள்

 (யோவா 15:14). இயேசுகிறிஸ்துவின் உண்மையுள்ள சிநேகிதர்கள் மாத்திரமே, அவருக்கு உண்மையும் கீழ்ப்படிதலுமுள்ள ஊழியக்காரர்களாக இருப்பார்கள். இயேசுகிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிதலே மெய்யான கீழ்ப்படிதலாகும். 


""என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்'' என்னும் வாக்கியம் பரிசுத்த வேதாகமத்தில் 359 தடவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவற்றில் தேவனுடைய கற்பனைகளை மனுஷர் கைக்கொள்ள வேண்டும் என்பதே பிரதானமாயிருக்கிறது. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் இந்தக் கற்பனை மிகவும் முக்கியமானது. விசுவாசிகள் தங்களுடைய ஜீவிய காலம் முழுவதற்கும் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிந்து ஜீவிக்க வேண்டும். 


 நாம் எந்த அளவிற்கு இயேசு கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் விளக்குகிறார். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் நீதிபரராக இருந்ததுபோன்று, நாமும் நீதிமான்களாக இருக்க வேண்டும்.   இயேசு கிறிஸ்து தமது பிதாவிற்குக் கீழ்ப்படிந்தது போன்று, நாமும் இயேசு கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிய வேண்டும். தேவனுக்குக் கீழ்ப்படியாமல், அவருடைய கிருபையை யாரும் எதிர்பார்க்கக்கூடாது.


என்னுடைய சந்தோஷம்


என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன் (யோவா 15:11).  


இயேசுகிறிஸ்துவின் சந்தோஷம் சீஷரில் நிலைத்திருக்கவேண்டும். அவர்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கவேண்டும்.           இதற்காகவே இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடம் அன்பைப்பற்றிப் போதகம்பண்ணுகிறார். சீஷர்கள் அதிக கனியைக்கொடுத்து, இயேசுகிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்கும்போது,       இயேசுகிறிஸ்து அவர்களில் சந்தோஷமாயிருக்கிறார். சீஷர்கள்  கனிகொடுக்கிறவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கும்போது  அது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு மிகுந்த சந்தோஷமாயிருக்கும். அப்போது இயேசுகிறிஸ்துவின் சந்தோஷம் சீஷர்களிடத்தில் நிலைத்திருக்கும். அத்துடன் அவர்கள் சந்தோஷமும் நிறைவாயிருக்கும்.


கிறிஸ்துவின் சீஷர்கள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க வேண்டுமென்பது அவருடைய சித்தம். ""கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்'' (பிலி 4:4) என்று அப்போஸ்தலர் பவுல் எழுதுகிறார். இயேசுகிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்கிறவர்களுடைய சந்தோஷம், நித்திய விருந்து போஜனம்போல சந்தோஷமாயிருக்கும். 


சீஷர்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கவேண்டும் என்று இயேசுகிறிஸ்து விரும்புகிறார். அதற்காகவே  அவர்களுக்கு இந்த உபதேசத்தைச் சொல்லுகிறார். சீஷர்களுடைய சந்தோஷம் நிறைவாகவும் இருக்கவேண்டும். அதேவேளையில் இயேசுகிறிஸ்துவிலும், அவருடைய அன்பிலும் சீஷர்கள் வைத்திருக்கிற சந்தோஷம் உன்னதமாக உயரவும்வேண்டும். இந்தச் சந்தோஷம் வளர்ந்து பரிபூரணமடையவேண்டும்.   நம்முடைய உள்ளத்தில் இயேசுகிறிஸ்துவின் சந்தோஷம் நிலைத்திருந்தால் மாத்திரமே, நம்முடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும். இயேசுகிறிஸ்துவினால் வரும் சந்தோஷமேயல்லாமல் வேறு எந்தச் சந்தோஷமும் நிறைவாயிருப்பதில்லை. உலகப்பிரகாரமாக நமக்குச் சந்தோஷம் கிடைக்கலாம். ஆனால் அந்தச் சந்தோஷம் நிறைவாயிராது. அது நம்மை  பூரணமாய்த் திருப்திப்படுத்தாது. தம்முடைய வார்த்தையின் மூலமாகத், தம்முடைய பிள்ளைகளுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கவேண்டுமென்று இயேசுகிறிஸ்து  சித்தமுள்ளவராகயிருக்கிறார். 


நமது ஜெபங்களுக்குப் பதில் கிடைக்கும்போது, நம்மிடத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும். அது நிறைவாயிருக்கும். இந்த சந்தோஷம் வேண்டுமென்றால், நாம் இயேசு கிறிஸ்துவிற்கு பரிபூரணமாகக் கீழ்ப்படிய வேண்டும். பிதாவானவர் குமாரனுக்கு எப்போதும் செவிகொடுப்பது போன்று, இயேசு கிறிஸ்து நமக்கு எப்போதும் செவிகொடுப்பார்.  இயேசு கிறிஸ்துவின் சந்தோஷம் நம்மிடத்தில் நிலைத்திருக்கும்போது நமது சந்தோஷம் நிறைவாயிருக்கும்.   நமக்கு சந்தோஷமும் சமாதானமும் வேண்டுமென்றால், நாம் இயேசு கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்னும் நிபந்தனையும் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.  


ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும்


நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது (யோவா 15:12).  


சீஷர்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும்.                இதுவே இயேசுகிறிஸ்துவின் கற்பனையாயிருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் அவரிடத்தில் அன்புள்ளவர்களாக இருப்போமென்றால் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவோம். ""நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும்'' என்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. இதே வாக்கியத்தை இயேசுகிறிஸ்து மறுபடியுமாக ""நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்று இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்'' (யோவா 15:17) என்று கூறுகிறார். 


இயேசுகிறிஸ்துவின் உபதேசங்களில், நாம் தேவனிடத்திலும், மனுஷரிடத்திலும் அன்பாயிருக்கவேண்டுமென்பதே பிரதான கற்பனையாகயிருக்கிறது. தம்முடைய உபதேசங்களெல்லாவற்றிலும் இயேசுகிறிஸ்து  அன்பைக்குறித்து வலியுறுத்திக் கூறுகிறார். நம்முடைய அன்பு சாதாரணமானதாக இருக்கக்கூடாது. இயேசுகிறிஸ்து நம்மில் அன்பாயிருக்கிறதுபோலவே, நாமும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும். இயேசுகிறிஸ்து நம்மில் அன்பாயிருப்பதினால், நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும்.  ""நீ போய் அப்படியே செய்'' என்று கூறுவதுபோல  இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம், நான் உங்களிடத்தில் அன்பாயிருப்பதுபோல, நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார்.


இயேசுகிறிஸ்துவின் இந்தப் பிரதான கற்பனை பல வசனங்களில் கூறப்பட்டிருந்தாலும், அதன் அடிப்படைக் கருத்து ஒன்றுதான். மற்ற எல்லா கற்பனைகளைவிட இந்தக் கற்பனைக்கு  நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதற்காக, இயேசுகிறிஸ்து இதை அதிகமாக வலியுறுத்துகிறார். தம்முடைய சீஷர்களும், விசுவாசிகளும் இனிமேல் எப்படியிருப்பார்கள் என்பதை இயேசுகிறிஸ்து முன்னறிந்திருக்கிறார்.  மனுஷர் மத்தியிலே அன்பு குறைந்துபோகும் என்பதையும், சபையில்கூட விசுவாசிகள் மத்தியிலே அன்பு குறைந்துபோகும் என்பதையும்  இயேசுகிறிஸ்து முன்னறிந்தவராக, இந்தப் பிரமாணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பது தம்முடைய பிரமாணமாயிருக்கிறது என்று கூறிய இயேசுகிறிஸ்து

 (யோவா 15:12), இந்தப் பிரமாணத்தை நமக்குக்  கற்பிப்பதாகவும் கூறுகிறார் (யோவா 15:17). இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்குப் பல கற்பனைகளைக் கொடுத்தாலும், பல உபதேசங்களைக் கற்பித்தாலும், நாம் ஒருவருக்கொருவர் அன்பாயிருக்கவேண்டும் என்பதே இயேசுகிறிஸ்துவின் இருதய வாஞ்சையாக இருக்கிறது.


 பிதாவானவர் குமாரனுக்குக் கொடுத்திருக்கும் கற்பனையையே இயேசு கிறிஸ்துவானவர் நமக்கும் கொடுக்கிறார். இயேசு கிறிஸ்து நம்மிடத்தில் அன்பாயிருக்கிறதுபோல, நாமும் பிறரிடத்தில் அன்பாயிருக்க வேண்டும். இயேசு கிறிஸ்து நமக்காகத் தமது ஜீவனையே கொடுத்தார். நாமும் பிறருக்காக நமது ஜீவனைக் கொடுக்க ஆயத்தமாக இருக்க வேண்டும்.  ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு வேறொன்றுமில்லை.


ஜீவனைக்கொடுக்கிற அன்பு


ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை  (யோவா 15:13). 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் அன்பாயிருக்கிறார். அவருடைய அன்பு பெரியது.  அவர்களுக்காக இயேசு தம்முடைய ஜீவனையே கொடுக்கிறார். ""ஒருவன் தன் சிநேகிதருக்காகத்  தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை'' என்று அன்பின் பிரமாணத்தைத் தம்முடைய சீஷர்களுக்கு உபதேசம்பண்ணுகிறார். இயேசுகிறிஸ்துவிடத்தில் இப்படிப்பட்ட  அன்புதான் காணப்படுகிறது. இயேசுகிறிஸ்துவினுடைய அன்பு நமக்காகத்  தம்முடைய ஜீவனையே கொடுக்கிற அன்பு. இயேசுகிறிஸ்து நம்மில் அன்பாயிருக்கிறதுபோல நாமும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும் என்பதே இயேசுகிறிஸ்துவின் பிரமாணம். அவருடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படியும்போது, நம்மிடத்திலும் நம்முடைய சிநேகிதருக்காக ஜீவனைக்கொடுக்கிற அன்பு காணப்படவேண்டும். 


இயேசுகிறிஸ்துவின் அன்பு உன்னதமானது. நாம் சாதாரண மனுஷராகயிருந்தாலும், தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து, தம்முடைய ஜீவனையே நமக்காகக் கொடுத்து, நம்மிடத்தில் அன்புகூருகிறார். நாம் பிறரிடத்தில் அன்புகூரும்போது அவருடைய அன்பையே நினைத்துப் பார்க்கவேண்டும். நாம் பாவிகளாகயிருக்கும்போதே இயேசுகிறிஸ்து நமக்காகத் தம்முடைய ஜீவனைக்கொடுத்தார். அவருடைய அன்புக்கு நாம் எவ்வளவேனும் பாத்திரவான்களல்ல.  இந்த உலகத்தில் ஒரு சிலர் தங்களுடைய சிநேகிதருக்காக  ஜீவனையே கொடுக்கிறார்கள்.  ஆனால் இயேசுகிறிஸ்துவோ, நாம் அவருக்குச் சத்துருக்களாக இருந்தபோதே அவர் நமக்காகத் தம்முடைய ஜீவனையே கொடுத்தார். 

 ""நாம்பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்

 (ரோம 5:6-8).


 ""நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே''    (ரோம 5:10).



சிநேகிதராயிருப்பீர்கள்


நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால்,  என் சிநேகிதராயிருப்பீர்கள். இனி            நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன் (யோவா 15:14,15). 


இயேசுகிறிஸ்து தம்முடைய     சீஷர்களோடு  சிநேகத்தின் உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேயும் இயேசுகிறிஸ்து அவர்களிடத்தில் அன்பு வைத்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் அவருடைய சிநேகிதராகயிருக்கிறார்கள். பொதுவாக எஜமானுடைய வேலையைச் செய்கிறவர்கள் ஊழியக்காரர்களாகவே இருப்பார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ அவர்களை ஊழியக்காரர்  என்னும் அந்தஸ்திலிருந்து உயர்த்தி, சிநேகிதர் என்னும் அந்தஸ்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் பல சமயங்களில் தங்களுடைய சிநேகத்தை அவரிடத்தில் வெளிப்படுத்தவில்லை. சில சமயங்களில் சிநேகிதர்களாகவும், சில சமயங்களில் சிநேகிதர்களல்லாத சாதாரண ஜனங்களைப்போலவும் இருந்திருக்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ எல்லா சமயங்களில் அவர்களைத் தம்முடைய சிநேகிதர்களாகப் பாவித்து அவர்களிடத்தில் அன்பு கூருகிறார். ""இனி நான் உங்களை ஊழியக்காரர் என்று சொல்லுகிறதில்லை'' என்று கூறிவிட்டு, ""நான் உங்களை சிநேகிதர்'' என்று சொல்லுகிறேன் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார்.  இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் அன்பாயிருப்பது மாத்திரமல்ல, தம்முடைய அன்பையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை  சிநேகிதர் என்று கூறினாலும், அவர்களோ இயேசுகிறிஸ்துவிடத்தில் தங்களைப் பற்றிக்கூறும்போது அவருடைய  ஊழியக்காரர் என்றே கூறுகிறார்கள். 


பேதுரு தன்னை ""இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலன்''  (1பேது 1:1) என்றும்,

 யாக்கோபு தன்னை

 ""தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரன்'' 

(யாக் 1:1) என்றும் அழைத்துக்கொள்கிறார்கள். 


இயேசுகிறிஸ்து நம்மை தம்முடைய சிநேகிதராக அங்கீகரித்து, நம்மைக் கனப்படுத்தியிருக்கிறார். நம்முடைய பார்வை எப்போதும் அவரையே  நோக்கிப் பார்க்கவேண்டும், நம்மை அதிகமாய் நோக்கிப் பார்க்காமல், தேவனையே அதிகமாய் நோக்கிப்பார்க்கும்போது, அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பு நமக்கு வெளிப்படுத்தப்படும். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் அன்புகூரும்போது தம்முடைய மனதிலுள்ள சிந்தனைகள் எல்லாவற்றையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறார். ""என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்'' என்று கூறுகிறார்.  பிதாவாகிய தேவனிடத்தில் தாம் பெற்றுக்கொண்டிருக்கிற எல்லாவற்றையும்  இயேசுகிறிஸ்து நம்மிடத்தில் கொடுத்திருக்கிறார். சகலமும் அவருடைய பிதாவினால் அவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது (மத் 11:27).


 மனுஷனை மீட்பதற்காகத் தேவன் வகுத்திருக்கும்  மீட்பின் திட்டத்தை இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் அறிவிக்கிறார். இதை அவர் அறிவிப்பதற்கும் ஒரு தெய்வீக நோக்கமுண்டு.  சீஷர்கள் மற்றவர்களிடத்திலும் அவர்களுடைய மீட்பைக் குறித்து அறிவிக்கவேண்டும்.


நாம் இயேசு கிறிஸ்துவின் சிநேகதராக இருக்க வேண்டுமென்றால், அவர் நமக்குக் கற்பிக்கிற யாவையும் செய்ய வேண்டும். செய்யாவிட்டால், இயேசு கிறிஸ்துவின் சிநேகிதராக இருக்க முடியாது.


இயேசு கிறிஸ்து நம்மை அடிமைகளாக நடத்துவதில்லை. நாம் பூமியில் அவருடைய பங்காளிகளாகவும், ஸ்தானிகர்களாகவும் இருக்கிறோம். இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் பிதாவின் கிரியையைச் செய்து அவரை மகிமைப்படுத்தியதுபோன்று, நாமும் கிறிஸ்துவின் 


கிரியைகளைச் செய்து, கிறிஸ்துவை மகிமைப்படுத்த வேண்டும்.   இயேசு கிறிஸ்துவின் சுதந்தரமான பிள்ளைகளாக நாம் இருக்க வேண்டுமென்றால், நாமும் அவருடனே கூடப் பாடுபடவேண்டும்.


நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்


நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்                (யோவா 15:16).


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் அன்பாயிருக்கிறார். அவர் அவர்களைத்தெரிந்துகொண்டு, அவர்களை  ஏற்படுத்தியிருக்கிறார். ""ஏற்படுத்துதல்'' என்னும் வார்த்தைக்கு ""பிரதிஷ்டைபண்ணுதல்'' அல்லது  ""ஊழியத்திற்கு நியமித்தல்'' என்று பொருள். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை தம்முடைய ஊழியத்தைச் செய்யும் அப்போஸ்தலர்களாக தெரிந்துகொண்டிருக்கிறார். இந்தத் தெரிந்துகொள்ளுதலை சீஷர்கள் முதலாவதாக ஆரம்பிக்கவில்லை. இயேசுகிறிஸ்துவிடத்திலிருந்தே இந்தத் தெரிந்துகொள்ளுதல் முதலாவதாக ஆரம்பமாயிற்று. இதை அறிவிக்கும் வண்ணமாக இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் ""நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்'' என்று கூறுகிறார். 


தம்முடைய ஊழியக்காரர்களை இயேசுகிறிஸ்துவே தெரிந்துகொள்வதுதான் சரியானது. இயேசுகிறிஸ்து அன்று தம்முடைய சீஷர்களைத் தெரிந்துகொண்டார். அவர் இன்றும் தம்முடைய ஊழியக்காரர்களைத் தெரிந்துகொள்கிறார். ஊழியக்காரர்கள் சில சமயங்களில் தங்களை ஊழியத்திற்கு ஒப்புக்கொடுப்பதாகக் கூறுகிறார்கள். கர்த்தருக்காக ஊழியம் செய்யவேண்டுமென்று  தாங்கள் தெரிந்துகொண்டதாகக் கூறுகிறார்கள். ஊழியக்காரர்கள் தங்களை ஊழியத்திற்கு ஒப்புக்கொடுப்பதற்கு முன்பாகவே, இயேசுகிறிஸ்து அவர்களைத் தெரிந்துகெண்டார்.  ஊழியத்தின் பாதையில் அவர்களை வழிநடத்தி, ஊழிய அழைப்புக்கு அவர்களை உறுதிப்படுத்துகிறார். ஊழியம் கர்த்தருடையது. ஊழியக்காரர்களெல்லோரும் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைத் தெரிந்துகொள்வது மாத்திரமல்ல, அவர் அவர்களைப் பிரதிஷ்டையும்பண்ணுகிறார். ""நீங்கள் போய் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும் நான் உங்களை ஏற்படுத்தினேன்'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் கூறுகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுடைய உள்ளத்தில் வல்மையான நம்பிக்கையை ஊற்றுகிறார். சுவிசேஷத்தின் ஐசுவரியம் சீஷர்களின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறது. அவர்கள் விசுவாசத்தோடும், கீழ்ப்படிதலோடும், உண்மையோடும் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை உலகம் முழுவதும் சென்று அறிவிக்கவேண்டும்.


சீஷர்கள் ஒவ்வொரு இடமாகப்போய் கனிகொடுக்கவேண்டும். அவர்கள் உலகம் முழுவதும் சென்று இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணவேண்டும். ஓரிடத்தில் ஓய்வெடுத்து அமர்ந்திருப்பதற்காக  இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைத் தெரிந்துகொள்ளவில்லை. அவர்கள் சும்மாயிருக்கவேண்டுமென்று இயேசுகிறிஸ்து அவர்களைப் பிரதிஷ்டைபண்ணவில்லை. அவர்கள் புறப்பட்டுப்போகவேண்டும். அவர்கள்போய் கனிகொடுக்கவேண்டும். அவர்கள் இருக்கும் இடத்திலேயே சோம்பேறிகளாக இருந்துகொண்டு கனிகளைப் புசித்துக்கொண்டிருக்கக்கூடாது. அவர்களுடைய கனிகளும் நிலைத்திருக்கவேண்டும். அவர்கள் போய் கனிகளும் கொடுக்கவேண்டும்.  


ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுவதற்காக இயேசுகிறிஸ்து அவர்களை அனுப்பவில்லை. தேசங்கள் இயேசுகிறிஸ்துவின் வசனத்தைக் கேட்டு அவருக்குக் கீழ்ப்படியவேண்டும். ஜனங்களைக் கர்த்தரிடத்தில் அழைத்து வருவதற்குச் சீஷர்கள் கருவிகளாகப் பயன்படவேண்டும். தம்முடைய  ஊழியத்தைச் செய்வதற்காகவே இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் போய் கனிகொடுக்கும்படி அவர்களை ஏற்படுத்தியிருக்கிறார். 


தம்முடைய ஊழியத்தைச் செய்யுமாறு இயேசுகிறிஸ்துவினால் பிரதிஷ்டை பண்ணப்பட்டிருக்கிறவர்கள் யாரும் வீணாகப் பிரயாசப்படுவதில்லை. இயேசுகிறிஸ்துவின் சபையானது இந்தப் பூமியிலே ஸ்தாபிக்கப்பட்டு, அதன்பின்பு  சில நாட்களில் மறைந்துபோகிற ஸ்தாபனமல்ல.  ஏதோ இரவில் தோன்றி இரவிலே மறைந்துபோகிற திருச்சபையல்ல. இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் கர்த்தருடைய சுவிசேஷ ஊழியத்தைச் செய்தார்கள். அவர்கள் மரித்துப்போன பின்பு சுவிசேஷ ஊழியம் அவர்களோடு நின்றுபோய்விடவில்லை. ஊழியம் தொடர்ந்தது. சீஷர்கள் மரித்துப்போனார்கள். கர்த்தர் தம்முடைய ஊழியத்தைச் செய்வதற்கு வேறுஊழியக்காரர்களைத் தெரிந்துகொண்டார். அவர்களைப் பயன்படுத்தினார். இயேசுகிறிஸ்துவின் ஊழியம் அக்காலத்திலிருந்து இந்நாள் வரையிலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது.  இக்காலத்தில் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்கிற நாம் மரித்துப்போனாலும், கர்த்தருடைய ஊழியம் நின்றுபோகாமல் தொடரும். அவர்களுடைய கனி இந்நாளிலும்நிலைத்திருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் ஊழியம்  இந்தப் பூமி நிலைத்திருக்கும் வரையிலும் நிலைத்திருக்கும். 


இயேசுகிறிஸ்துவின் கிருபாசனத்தண்டைக்கு முன்பாக சீஷர்கள் பலவிதமான வேண்டுதல்களோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள். இயேசுகிறிஸ்து அவர்கள்மீது அன்பாகயிருக்கிறபடியினால் அவர்கள் கேட்டுக்கொள்வதைக் கொடுப்பதற்குச் சித்தமுள்ளவராகயிருக்கிறார். ""நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வதெதுவோ, அதை அவர் உங்களுக்குக்கொடுப்பார்'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷருக்கு வாக்குப்பண்ணுகிறார். ஒருவேளை அற்புதங்களைச் செய்யும் வல்லமையை  சீஷர்கள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று இயேசுகிறிஸ்து விருப்பமுள்ளவராகயிருக்கலாம்.  நம்முடைய ஜெபத்தினால், தேவனுடைய கிருபையினால், நாம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அற்புதங்களைச் செய்யும் வல்லமையைப் பெற்றுக்கொள்கிறோம். 


கர்த்தருடைய ஊழியத்தைச் செய்கிறவர்களுக்குப் பரலோகத்திலிருந்து உதவி தேவைப்படுகிறது. இந்த உதவியை இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நாம் கேட்டுக்கொள்ளும்போது, பிதாவானவர் அதைத்  தம்முடைய நாம மகிமைக்காக நமக்குக் கொடுக்கிறார். பிதாவாகிய தேவனுக்கும் நமக்கும் இடையில் இயேசுகிறிஸ்து மத்தியஸ்தராகயிருக்கிறார். நாம் தேவனுடைய கிருபாசனத்தண்டையில் போகும்போது, இயேசுகிறிஸ்துவின் நல்ல நாமத்தில் போகிறோம். தேவனுடைய கிருபாசனத்தண்டைக்கு முன்பாக நாம் நிற்கும்போது நமக்குள் பாவங்கள் இருக்கலாம். குற்றவுணர்வு இருக்கலாம். நம்மிடத்தில் பாவக்கறைகள் இருக்கலாம். ஆனாலும் இவைகளுக்கு மத்தியிலும், இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால், கிருபாசனத்தண்டையில் தைரியமாக நிற்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். நம்மிடத்தில் பணிவும், பயபக்தியும், இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் உண்டாகும் தைரியமும் சேர்ந்து காணப்படும்.  இயேசுவின் நாமத்தினாலே நாம் பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ  அதை அவர் நமக்குக் கொடுப்பார். கர்த்தருடைய ஊழியக்காரர்களாகிய நம்முடைய ஜெபத்திற்குப் பிதாவினிடத்திலிருந்து பதில் கிடைக்கும் என்பது  நமக்குக் கொடுக்கப்படும் மிகப்பெரிய ஆசீர்வாதமும், சிலாக்கியமும், சந்தோஷமும், சமாதானமும் ஆகும். 


இயேசு கிறிஸ்து நம்மைத் தெரிந்து கொண்டதற்கான காரணங்கள்


    1. நாம் புறப்பட்டுப் போய் கனிதரவேண்டும்.


    2. நித்திய கிரியைகளைச் செய்ய வேண்டும்.


    3. நம்முடைய ஜெபத்திற்குப் பதிலைத் தரவேண்டும்.


இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரரிடம் காணப்படவேண்டிய சுபாவங்கள்


    1. திராட்சைச்செடியில் நிலைத்திருக்க வேண்டும். (யோவான் 15:5)


    2. தேவனுடைய ஊழியத்தைச் செய்வதற்கு அவர் நம்மைத் தெரிந்தெடுக்க வேண்டும். (யோவான் 15:15)


    3. தேவனுடைய ஊழியத்தை செய்வதற்கு அவர் நம்மை அபிஷேகிக்க வேண்டும். (யோவான் 15:15)


    4. ஊழியக்காரர்கள் கனிதர வேண்டும், சோம்பேறியாக இருக்கக்கூடாது. (யோவான் 6:27; யோவான் 15:16)


    5. ஊழியம் செய்யப் போகிறவர்களாக   இருக்க வேண்டும், காத்துக் கொண்டிருக்கிறவர்களாக இருக்கக் கூடாது. (மத் 28:19-20)


    6. தங்களுடைய கனியைக் காத்துக் கொள்ள வேண்டும். அழித்துப்போடக்கூடாது. (யோவான் 15:16)


    7. பதில் பெறுவதற்காகத் தேவனிடம் ஜெபிக்க வேண்டும்.         (யோவான் 15:16)


    8. எல்லா மனுஷர்களையும் நேசிக்க வேண்டும். (யோவான் 15:12-17)    



இவைகளை உங்களுக்குக் காண்பிக்கிறேன் 


நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன் (யோவா 15:17). 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் பல கற்பனைகளை உபதேசம்பண்ணியிருக்கிறார். இந்தக் கற்பனைகளெல்லாவற்றிலும் ""நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும்'' என்பதே பிரதான கற்பனையாயிருக்கிறது. வருங்காலத்தில் மனுஷர் மத்தியிலே அன்பு குறைந்துபோகும் என்பதையும், சபையிலே விசுவாசிகள் மத்தியிலேகூட அன்பு குறைந்துபோகும் என்பதையும், இயேசுகிறிஸ்து முன்னறிந்தவராக இந்தப் பிரமாணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.  


ஆகையினால் இந்தக் கற்பனையைக் கூறும்போது ""நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்'' என்று கூறுகிறார். ""கற்பிக்கிறேன்'' என்னும் வார்த்தைக்கு ""கட்டளையிடுகிறேன்'' என்று பொருள். இயேசுகிறிஸ்து 

நமக்குப் பல கட்டளைகளை கொடுத்திருக்கிறார். இந்தக் கட்டளைகளெல்லாவற்றிலும், நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும்'' என்பதே இயேசுகிறிஸ்து நமக்குக் கொடுக்கிற பிரதான கட்டளையாயிருக்கிறது. 


பகை

 (யோவா 15 : 18-25)


உலகம் உங்களைப் பகைத்தால்


உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள் (யோவா 15:18). 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் பகையைக்குறித்து உபதேசம்பண்ணுகிறார். பகை என்பது சாத்தானுடைய ராஜ்யத்தின் சுபாவமாயிருக்கிறது. கிறிஸ்துவின் ராஜ்யத்தில் அன்பு நிறைந்திருப்பதுபோல சாத்தானுடைய ராஜ்யத்தில் பகை நிறைந்திருக்கும். தேவனுடைய பிள்ளைகளுக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகளுக்கும் வித்தியாசமிருக்கிறது. உலகம் நம்மைப் பகைக்கும். உலகம் என்பது இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகளைக் குறிக்கும் வார்த்தையாகும். 


இயேசுகிறிஸ்து இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகளை ""உலகம்'' என்று குறிப்பிடுவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன


அவையாவன:         

 1. அவர்களுடைய எண்ணிக்கை. 2. சதிஆலோசனையில் ஒற்றுமை                      3. அவர்களிடத்தில் காணப்படும் பகையின் ஆவி.  


இப்பிரபஞ்சத்தின் ஜனங்கள் திரளான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவுக்கும் அவருடைய உபதேசத்திற்கும் எதிர்த்து நிற்கிற ஜனங்கள்  எப்போதுமே அதிகம்தான். சாத்தானுடைய பிள்ளைகளுக்கும் இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகளுக்கும் வாக்கெடுப்பு நடத்தினால், நிச்சயமாகவே சாத்தானுடைய பிள்ளைகள்தான் அதிக எண்ணிக்கையுள்ளவர்களாக இருப்பார்கள். விசுவாசிகளாகிய நாம் கொஞ்சம் பேராகயிருந்தாலும் கர்த்தர் நம்மோடு கூடயிருப்பதினால்தான் நாம் ஜெயம் பெறுகிறோம். 


துன்மார்க்கர்கள் தங்களுடைய துன்மார்க்க சிந்தனையில் பிரிவினையில்லாமல் ஒற்றுமையாயிருப்பார்கள். பொதுவாக யூதரும் புறஜாதியாரும் ஒத்துப்போகமாட்டார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவையும் அவருடைய ஊழியக்காரர்களையும் துன்பப்படுத்த வேண்டும் என்னும் விஷயத்தில் யூதரும் புறஜாதியாரும் ஒத்துவருகிறார்கள். தங்களுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளையெல்லாம் மறந்துவிட்டு, கிறிஸ்துவையும் அவருடைய ஊழியக்காரர்களையும் துன்புறுத்த வேண்டுமென்று ஒற்றுமையோடும் முனைப்போடும் ஒருமித்து செயல்படுகிறார்கள். 


இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகளிடத்தில் பகைமையின் ஆவி வாசம்பண்ணுகிறது.  கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் பாவிகளின் பாவங்களை வெறுக்கவேண்டும். ஆனால் பாவிகளையோ சிநேகிக்கவேண்டும். எல்லோருக்கும் நன்மை செய்யவேண்டும். நல்லோருக்கும் பொல்லோருக்கும் சூரியன் வெளிச்சம் கொடுப்பதுபோல, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம், நம்மால் செய்ய முடிகிற உதவிகளை எல்லோருக்கும் செய்யவேண்டும். துன்மார்க்கத்தின் ஆவி, பொறாமையின் ஆவி, வஞ்சிக்கிற ஆவி, பிறரைக் கெடுக்கிற ஆவி இவையெல்லாமே இப்பிரபஞ்சத்தின் ஆவிகள்தான். கிறிஸ்துவின் ஆவியை உடையவர்களிடத்தில் இப்படிப்பட்ட துர்க்குணம் எதுவும் காணப்படக்கூடாது. 


தேவனுடைய பிள்ளைகளை உலகம் பகைப்பதற்குக் காரணங்கள்


    1. இயேசு கிறிஸ்து இதை முன்னறிவித்தார். (யோவான் 15:18-21)


    2.கடிந்துகொள்ளப்படுவதை

 உலகம் வெறுக்கிறது.

 (யோவான் 3:19).


    3. இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தின் பிரகாரமாக நாம் ஜீவிக்கும்போதுதுன்மார்க்கருடைய பாவ சுபாவங்கள்          வெளிப்படுத்தப்படுகிறது. 

(ரோமர் 12:2)


    4. இயேசு கிறிஸ்துவின் ஒளியினால் துன்மார்க்கத்தின் இருள் வெளிப்படுத்தப்படுகிறது. (யோவான் 3:18-20; பிலி 2:15).


    5.உலகம்குருடாயிருக்கிறது. 

(2கொரி 4:4).


    6.கிறிஸ்துவின் பிள்ளைகள் உலகத்திற்குரியவர்கள் அல்ல.       (யோவான் 15:19)


    7. கிறிஸ்துவின் பிள்ளைகளோடு உலகம் யுத்தம் பண்ணுகிறது (யோவான் 16:33)

 

    8. உலகம் தேவனுக்கு எதிராக இயல்பாகவே விரோதம் பாவிக்கிறது. (யாக் 4:4;)  

      

    9. உலகத்தின் வழிகளைத் தேவனுடைய பிள்ளைகள் வெறுக்கிறார்கள்.

 (1யோவான் 2:15-17).


    10. தேவனுடைய பிள்ளைகள் உலகத்திலிருந்து வேறுபட்டு ஜீவிக்கிறார்கள். 

(யாக் 1:27)


    11. ஆவிக்குரிய அனுபவங்களை உலகம் புரிந்து கொள்ளவில்லை. (கலா 2:20)

  

    12. உலகம் தேவனைப் புரிந்து கொள்ளவில்லை. (யோவான் 15:21).



உலகம் உங்களைப் பகைக்கிறது 


நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்தி-ருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது (யோவா 15:19). 


இப்பிரபஞ்சத்தின் ஜனங்களிடம் பகையின் ஆவி வாசம்பண்ணுகிறது. அவர்கள் இயேசுகிறிஸ்துவின் சீஷர்களையும், இயேசுகிறிஸ்துவையும், பிதாவாகிய தேவனையும் பகைக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவும் தம்முடைய சீஷர்களிடத்தில் இதைப்பற்றிப் பேசும்போது ""உலகம் உங்களைப் பகைக்கிறது'' என்று ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாகப் பேசுகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை ""ஊழியக்காரர்'' என்று சொல்லாமல், ""சிநேகிதர்'' என்று சொல்லுகிறார்.  இயேசுகிறிஸ்து சிநேகிதரைப்போலவே தம்முடைய சீஷரை நேசிக்கிறார். அவர்கள்மீது மிகுந்த அன்போடிருக்கிறார். ஆனாலும் அவர்களுடைய சரீரத்திலும் ஒரு ""முள்'' கொடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் அவர்கள் வேதனைகளையும், பாடுகளையும், நிந்தைகளையும் அனுபவிக்கவேண்டும் என்பதே அந்த ""முள்''. 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில், அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்தை ஒப்புக்கொடுத்திருக்கிறார். அவர்கள் அந்த ஊழியத்தைச் செய்யும்போது அவர்களுக்கு  என்னென்ன தடைகளெல்லாம் உண்டாகும் என்றும், எப்படிப்பட்ட பிரச்சனைகளையெல்லாம் அவர்கள் சந்திக்கவேண்டுமென்றும் அவர்களுக்கு முன்னறிவிக்கிறார். சீஷர்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும். தங்களை சிநேகிக்கும் மற்ற சீஷர்களிடத்தில் மாத்திரம் அன்பாயிருந்தால் போதாது.      தங்களை விரோதிக்கும் இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகளையும் அவர்கள் சிநேகிக்கவேண்டும். சீஷர்கள் சத்துருக்களின் நடுவிலிருக்கிறார்கள்.  இவர்களை உபத்திரவப்படுத்த அவர்கள் ஒற்றுமையாயிருக்கிறார்கள். ஆகவே சீஷர்களும்  கர்த்தரிடத்தில் நிலைத்திருக்கவேண்டும். ஒருவரிலொருவர் அன்புகூர்ந்து சிநேகமாயும் ஒற்றுமையாயும் ஊழியம் செய்யவேண்டும். 


இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களை இந்த உலகம் பகைக்கிறது. அவர்கள்மீது விரோதமாயிருக்கிறது. இயேசுகிறிஸ்து யாரை ஆசீர்வதிக்கிறாரோ, அவர்களை இந்த உலகம் சபிக்கிறது. பரலோகத்திற்குச் சொந்தக்காரர்களாகிய நாம் இந்த உலகத்தில்  அந்நியராகவும் பரதேசிகளாகவும் இருக்கிறோம்.  பரலோகத்தில் நாம் வரவேற்கப்படுகிறோம். ஆனால் இந்த உலகத்திலிருந்தோ துரத்தப்படுகிறோம். 


இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகள் கர்த்தருடைய பிள்ளைகளைத் துன்பப்படுத்துவார்கள். இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து பயபக்தியோடு ஜீவிக்கிற எல்லோருக்குமே உபத்திரவம் உண்டு. நாம் இவ்வுலகத்தில்  பாடுகளை அனுபவிப்பதற்கும் இயேசுகிறிஸ்து இந்தப் பிரபஞ்சத்தில் அனுமதிக்கிறார். ஆடுகளை ஓநாய்கள் மத்தியில் அனுப்புவதுபோலவே இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை அனுப்புகிறார். இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகள் இயேசுகிறிஸ்துவுக்கும், அவருடைய ஊழியக்காரர்களுக்கும் சத்துருக்களாகயிருக்கிறார்கள்.  அது போதாதென்று, அவர்கள்  இயேசுகிறிஸ்துவின் வசனத்தையும் பகைத்து, அதைக் கைக்கொள்ளாதிருக்கிறார்கள். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் ""அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்வார்கள்'' என்று கூறுகிறார். ஆனால் இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகளோ இயேசுகிறிஸ்துவையும் ஏற்றுக்கொள்ளவில்லை, அவருடைய வசனத்தையும் கேட்கவில்லை. உலகத்தாருடைய இருதயத்தில் பகை வாசம்பண்ணுகிறதினால், அவர்களால் இயேசுவையும், அவருடைய சீஷரையும் நேசிக்க முடியவில்லை. 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் இந்த உலகத்தாரல்ல. இந்த உலகம் தன்னுடையதை சிநேகிக்கும். இந்த உலகத்தின் காரியங்களுக்குத்  தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்களை இந்த உலகம் சிநேகிக்கும். உலகத்துத்தலைவர்களை இந்த உலகம் தங்களுடைய சிநேகிராக அங்கீகரிக்கும்.  கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய  நம்மையோ இயேசுகிறிஸ்து இந்த உலகத்திலிருந்து தெரிந்துகொண்டிருக்கிறார்.  ஆகையினால் இந்த உலகம் நம்மைப் பகைக்கிறது. இந்த உலகத்திலிருந்து நாம் வேறு பிரிக்கப்பட்டிருப்பதினால் இந்த உலகத்தாருக்கு  நாம் சத்துருக்களாகயிருக்கிறோம். நமக்கு இந்தப் பிரபஞ்சத்தின் காரியங்களில் பங்கும் இல்லை. பாத்தியமும் இல்லை. 


இயேசுகிறிஸ்து இந்த உலகத்திலிருந்து நம்மைத் தெரிந்துகொண்டு, இதிலிருந்து நம்மைப் பிரித்தெடுத்து, நம்மை பரலோகத்திற்கு சுதந்தரவாளிகளாக  உயர்த்தியிருக்கிறார்.  ஆனால் இந்த உலகமோ நம்மை இப்பிரபஞ்சத்திற்குரியவர்களாக அடிமைப்படுத்தி வைத்திருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறது.  இயேசுகிறிஸ்துவின் மகிமைக்கு முன்பாக இந்த உலகத்தால் எதிர்த்து நிற்கமுடியவில்லை. ஆகையினால் இந்த உலகம் இயேசுவின் பிள்ளைகளைத் தன்னுடைய சத்துருக்களாகப் பாவித்து விரோதிக்கிறது. 


இயேசுகிறிஸ்து தம்முடைய பிள்ளைகளைத்  தமது கிருபையினால் நிரப்புகிறார். சீஷர்கள் இப்பிரபஞ்சத்தை நேசிக்காமல் அதை வெறுக்கிறார்கள். உலகத்தின் பாவங்களுக்கு ஒத்துப்போகாமல்,  உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்காமல், அதற்கு விரோதமாக உபதேசம்பண்ணுகிறார்கள். சீஷர்களின் உபதேசம் இந்த உலகத்திற்குப் பிடிக்கவில்லை. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இவர்களை இவ்வுலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், இவர்கள் உலகத்தின் பாவங்களுக்கு விரோதமாக பிரசங்கிக்கிறபடியினாலும், அவர்களை எப்படியெல்லாம் உபத்திரவப்படுத்த முடியுமோ, அப்படியெல்லாம் இந்த உலகம் உபத்திரவப்படுத்துகிறது. இந்த உலகம் இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகளைப் பகைப்பதற்கு நியாயமான காரணம் எதுவுமேயில்லை. 


மனுஷர் நம்மைப் பகைத்தாலும் நாம் அவர்களிடத்தில் அன்பாயும் மனதுருக்கமாயும் இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் சத்திய வசனங்களை நாம் ஜனங்களுக்குப் பிரசங்கிப்பதினால், ஜனங்கள் நமக்கு மதிப்பும் மரியாதையும் தரவேண்டும். அவர்கள் நம்மிடத்தில் அன்பாயிருக்கவேண்டும். ஏனெனில்    நித்திய ஜீவனுக்குப் போகிற வழியை நாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறோம். அவர்களுக்கு  நன்மை செய்கிற நம்மை உலகம் பகைக்கும்போது, அவர்களைப் பார்த்து நாம் பரிதாபப்படவேண்டும். நம்மைப் பகைப்பதினால் இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகள் சந்தோஷமாயிருக்கிறார்கள். நம்மைப் பகைக்கிறவர்களெல்லாம் ஒன்றுகூடியிருக்கும்போது, இயேசுகிறிஸ்துவோ அவர்களைப் பகைக்காமல் அவர்களையும் நேசிக்கிறார். 


ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல


ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள் (யோவா 15:20).  


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடம் ""நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறுகிறார்.  இயேசுகிறிஸ்துவின் வார்த்தை மிகவும் தெளிவாகயிருக்கிறது. ""ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல'' கர்த்தருடைய ஊழியக்காரர்கள் கர்த்தரைவிட பெரியவர்களல்ல. அவரைவிடச் சிறியவர்கள்தான்.  இது மிகவும் எளிமையான தெளிவான சத்தியம்.  சில சமயங்களில் எளிமையான சத்தியங்கள்கூட நமக்கு முக்கியமான சத்தியமாக இருக்கும்.  


""அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால் உங்களையும் துன்பப்படுத்துவார்கள்'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் கூறுகிறார். இந்த உலகம் இயேசுகிறிஸ்துவைத் துன்பப்படுத்துகிறது. ஆகையினால் அது நம்மையும் துன்பப்படுத்துமென்று நாம் எதிர்பார்க்கவேண்டும். இயேசுகிறிஸ்து சத்தியத்தை உபதேசம்பண்ணியதினால் அவர் உலகத்தாருக்கு சத்துருவானார். அதே சத்தியத்தைத்தான் நாமும் உபதேசம்பண்ணுகிறோம். ஆகையினால் நாமும் இந்த உலகத்திற்கு சத்துருக்களாகவேயிருப்போம். இயேசுகிறிஸ்து  இந்த உலகத்தாரின் பாவங்களைக் கண்டித்து உணர்த்தினார். பரிசுத்தமாக ஜீவிக்கவேண்டுமென்று உபதேசம்பண்ணினார்.  இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை இந்த உலகத்தால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. கர்த்தருடைய ஊழியக்காரர்களாகிய நாமும், அவர் சொன்ன அதே உபதேசத்தைத்தான் சொல்லுகிறோம். ஆகையினால் நம்முடைய உபதேசத்தையும் இந்த உலகம் தாங்கிக்கொள்ளாது. 


இயேசுகிறிஸ்து சர்வவல்லமையுள்ளவர். அவர் சத்தியத்தை ஜனங்களுக்கு உபதேசம்பண்ணுகிறார். ஜனங்கள் தம்முடைய வசனத்திற்குக் கீழ்படியவேண்டுமென்று, தம்முடைய வார்த்தைகளை அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதிபண்ணுகிறார்.  இவையெல்லாவற்றிற்கும் மத்தியிலும் உலகத்தார் இயேசுகிறிஸ்துவின் உபதேசத்திற்குச் செவிகொடாமற்போனார்கள்.  நாமும் கிறிஸ்துவின் உபதேசத்தை ஜனங்களுக்குச் சொல்லும்போது, அந்த வார்த்தைகளுக்கும் அவர்கள் செவிகொடுக்கமாட்டார்கள். அவர்களுடைய உள்ளத்தில் சத்தியத்தை உணர்த்துவதற்கு இயேசுகிறிஸ்து பல காரியங்களைச் செய்தார்.  அவர் செய்ததைவிட பெரிய காரியங்களை அவருடைய ஊழியக்காரர்களாகிய நம்மால் ஒருபோதும் செய்யமுடியாது. ஏனெனில் நாம் ஊழியக்காரர்கள். நம்முடைய எஜமானராகிய இயேசுகிறிஸ்துவை விட நாம் பெரியவர்கள் அல்ல.


இயேசுகிறிஸ்து ஜனங்களுக்கு நன்மையே செய்தார். அவர் நன்மை செய்கிறவராகவே சுற்றி அலைந்தார். ஆனாலும் இந்த உலகம் அவருக்குத்  தீமை செய்தது. நன்மை செய்கிறவர்களுக்கு இந்த உலகம் தீமை செய்வது புதுமையான காரியமல்ல. நாமும் இயேசுவின் நாமத்தினால் நன்மை செய்யும்போது, இந்த உலகம் நமக்குத் தீமை செய்யுமானால் அதைக் குறித்து நாம் ஆச்சரியப்படவேண்டியதில்லை. இது புதுமையான சம்பவமல்ல. ""அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால் உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்'' என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தைக் கேட்டு ஒரு சிலர் மாத்திரமே மனந்திரும்பினார்கள். அதுபோலவே நம்முடைய உபதேசத்தைக் கேட்டும் ஒரு சிலர் மாத்திரமே மனந்திரும்புவார்கள். ஊழியக்காரன் தன் எஜமானிலும் ஒருபோதும் பெரியவனாயிருக்க முடியாது.  


என் நாமத்தினிமித்தமே


அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள் (யோவா 15:21).  


இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகள் இயேசுகிறிஸ்துவை விசுவாசியாமல், தங்கள் பாவத்தில் ஜீவிக்கிறார்கள்.  அவர்களுடைய மனதில் சத்திய வசனத்தைக் குறித்து தப்பான அபிப்பிராயம் இருக்கிறது. வேதவசனத்தை அவமதிக்கிறார்கள். அவர்களால் வசனத்தை இதைவிட அவமதிக்க முடியாது. வசனத்தை வெறுப்பதோடு, வார்த்தையாகிய இயேசுகிறிஸ்துவையும் வெறுக்கிறார்கள். 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்குப் பாடுகள் வருவதற்குப் பல காரணங்கள் உண்டு.  பல சமயங்களில் ""இயேசுகிறிஸ்துவின் நாமத்தினிமித்தம்'' அவர்களுக்குப் பாடுகள் வரும். கிறிஸ்துவின் சீஷர்கள் அவருடைய நாமத்தைத் தரித்திருக்கிறார்கள். இந்த உலகத்தில் இயேசுகிறிஸ்துவின் நாமத்தைப் பிரஸ்தாபம்பண்ணுகிறார்கள். இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களைப் பகைப்பதற்கு இதுவே காரணம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால்தான் அவருடைய ஊழியக்காரர்கள் ஊழியம் செய்ய முடியும். இயேசுவின் நாமம் இல்லையென்றால் நமக்கு ஊழியமும் இல்லை. இந்த உலகம் இயேசுவின் நாமத்தைப் பகைப்பதினால், அவருடைய நாமத்தினால் ஊழியம் செய்யும் நம்மையும் பகைக்கிறது. ""நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்'' என்று பேதுரு எழுதுகிறார்        

  (1பேது 4:14).

 நாம் இயேசுகிறிஸ்துவோடு பாடுகளை அனுபவிப்போமானால், அவரோடுகூட  ஆளுகையும் செய்வோம். 


இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் கிறிஸ்துவின் சீஷர்களை விரோதிப்பதற்கு மற்றும் ஒரு காரணம் உண்டு. அவர்கள் இயேசுகிறிஸ்துவை அனுப்பினவரை அறியாதவர்களாகயிருக்கிறார்கள். அவர்கள் தேவனை அறியவில்லை. பிதாவாகிய தேவனை  அறியாத இவர்கள், அவர் அனுப்பின குமாரனாகிய இயேசுகிறிஸ்துவையும் அறியாதவர்களாகயிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவில் மாத்திரமே நம்மால் தேவனை அறிந்துகொள்ள முடியும். இயேசுகிறிஸ்துவை அறிந்துகொள்ளவில்லையென்றால் தேவனையும் அறிந்துகொள்ள முடியாது. இவர்கள் இயேசுகிறிஸ்துவை அனுப்பின பிதாவானவரை அறியாதபடியினால், இயேசுகிறிஸ்துவின் நாமத்தினிமித்தம், இப்பிரபஞ்சத்தின் ஜனங்கள்  கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்குப் பொல்லாப்புச் செய்கிறார்கள்.


போக்குச் சொல்ல இடமில்லை


நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை  (யோவா 15:22). 


இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகளுக்கு இயேசுகிறிஸ்து தம்முடைய இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிக்கிறார். தங்களுடைய ஆத்துமாக்களை விடுவிக்கும் நற்செய்தியைக் கூறிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் ஜனங்கள்  அன்பாயிருக்கவேண்டும். ஆனால் அவர்களோ  அவரிடத்தில் அன்புகூருவதற்குப் பதிலாக, அவரைப் பகைக்கிறார்கள். இயேசுகிறிஸ்து அவர்களிடத்தில் நற்செய்தியை அறிவிக்காமல் இருந்திருந்தால், அவர்கள் அச்செய்தியைக் கேள்விப்பட்டிருக்கவேமாட்டார்கள். தங்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிடுவார்கள்.       ஆனால் இப்போதோ அவர்களுக்கு இரட்சிப்பின் செய்தி அறிவிக்கப்பட்டிருப்பதினால், தங்கள் பாவத்தைக் குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை. 


""நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது'' என்று இயேசுகிறிஸ்து இப்பிரபஞ்சத்தின் ஜனங்களைப்பற்றிக் கூறுகிறார். ஆனால் இப்போதோ அவர்களுக்குப் பாவம் இருக்கிறது. அவர்களுக்குப் போக்குச் சொல்ல இடமில்லை. இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை அங்கீகரித்து, இயேசுகிறிஸ்துவைத் தங்களுடைய இரட்சராக ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு ஆவிக்குரிய சிலாக்கியங்கள் ஏராளமாய்க் கொடுக்கப்படும். சுவிசேஷத்தின் மூலமாக இயேசுகிறிஸ்து ஜனங்களிடத்தில் பேசுகிறார். சீஷர்களோடு தம்முடைய சுவிசேஷத்தைப் பேசிய அதே ஆண்டவர், இக்காலத்தில் நம்முடனும் பேசிக்கொண்டிருக்கிறார். 


இயேசுகிறிஸ்து பேசுகிற ஒவ்வொரு வார்த்தையிலும் தேவனுடைய கிருபை நிறைந்திருக்கிறது. சுவிசேஷம் மனுஷருடைய ஆத்தும வியாதியைக் குணப்படுத்துகிற ஒளஷதமாகயிருக்கிறது. ஆனால் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டும்,  இன்னும் ஏராளமானோர் சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றக்கொள்ளவில்லை.  இயேசுகிறிஸ்து அவர்களைப்பற்றிப்       பேசும்போது   ""நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது'' என்று கூறுகிறார். அவர்கள் பாவம் செய்தவர்கள்தான். அந்தப் பாவம் வேறு. இயேசுகிறிஸ்து இங்கு குறிப்பிடுகிற பாவம்  வேறு.  அவர்கள் இயேசுகிறிஸ்துவை அவமரியாதை செய்கிற பாவத்தைச் செய்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் வார்த்தையைக் கேட்டும், அந்த வார்த்தையை அவமதிக்கிற பாவத்தைச் செய்கிறார்கள். 


நியாயப்பிரமாணம் இல்லாத இடத்தில்  பாவமென்றால் என்ன என்றே தெரியாது. அதுபோலவே சுவிசேஷமில்லாத இடத்தில் விசுவாசமென்றால் என்னவென்றே தெரியாது.  இது சுவிசேஷத்தை அவமதிக்கிற பாவம். இவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படவில்லையென்றால், இவர்களுடைய பாவம் இவ்வளவு மோசமானதாகயிராது. சுவிசேஷம் அறிவிக்கப்பட்டும், அவர்கள் சுவிசேஷத்தையும் இயேசுகிறிஸ்துவையும் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் இவர்களுடைய பாவம் பெரிதாயிருக்கும். இப்படிப்பட்டவர்களிடத்தில் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷப் பிரசங்கம் வீணாய்ப்போயிற்று. தங்களுடைய பாவத்தைக்குறித்து இவர்களுக்குப் போக்குச் சொல்ல இடம் இருக்காது. இயேசுகிறிஸ்துவின் வார்த்தை   பாவத்தைக்குறித்து அவர்களுக்கு உணர்த்துகிறது. சுவிசேஷத்தின் மூலமாகப் பாவம் எது என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு காரியம் பாவம் என்று தெரிந்திருந்தும், அதை வேண்டுமென்றே செய்கிறவர்கள், துணிகரமாகப் பாவம் செய்கிறார்கள். 


இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து தம்மைப் பற்றி வெளிப்படுத்தியிருக்கிறார். சத்தியத்தை உபதேசம் பண்ணியிருக்கிறார். ஜனங்கள் இயேசுவைக் கண்டிருக்கிறார்கள். அவருடைய உபதேசத்தைக் கேட்டிருக்கிறார்கள். உபதேசத்தைக் கேட்டும் அவருக்குக் கீழ்ப்படியவில்லையென்றால், அது மிகப்பெரிய பாவம். தங்கள் பாவத்தைக் குறித்து போக்குச்சொல்லுவதற்கு அவர்களுக்கு இடமில்லை.


என்னைப் பகைக்கிறவன்


என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான் (யோவா 15:23).  


இந்த உலகம் இயேசுகிறிஸ்துவைப் பகைக்கும்போது, பிதாவாகிய தேவனையும் பகைக்கிறது. இயேசுகிறிஸ்து இந்தச் சத்தியத்தை  இரண்டுமுறை சொல்லுகிறார். ""என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்'' (யோவா 15:23).  ""அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்''

 (யோவா 15:24). இயேசுகிறிஸ்துவையும் பிதாவையும் பகைக்கிறவர்கள் தேவனையும் அவருடைய தெய்வத்துவத்தையும் பகைக்கிறார்கள். தேவன் ஒருவர் இருக்கிறாரென்பதை இவர்களால் மறுக்க முடியாது. இது இவர்களுக்குத் தெரிந்திருக்கிற சத்தியம். ஆனாலும் தேவனென்று ஒருவர் இல்லாதிருந்தால் நன்றாயிருக்குமே என்று ஆசைப்படுகிறார்கள்.


இயேசுகிறிஸ்துவைப் பகைப்பது பிதாவைப் பகைப்பதாகத் தீர்மானிக்கப்படும். குமாரனுக்கு என்னென்ன காரியங்களெல்லாம் சம்பவிக்கிறதோ, அவையெல்லாம் பிதாவுக்கும் சம்பவிக்கிறது. ஆகையினால் இயேசுகிறிஸ்துவையும் அவருடைய சுவிசேஷத்தையும் பகைக்கிறவர்கள் மிகுந்த எச்சரிப்போடு இருக்கவேண்டும்.        அவர்கள் இயேசுகிறிஸ்துவைப் பகைப்பது பிதாவாகிய          தேவனைப் பகைப்பதற்குச் சமமானதாகத் தீர்க்கப்படும்.         இயேசுகிறிஸ்துவுக்குச் சத்துருக்களாகயிருக்கிறவர்கள் தேவனுக்கும் சத்துருக்களாகயிருக்கிறார்கள். 


கர்த்தருடைய பிள்ளைகளில் சிலர் நீதியினிமித்தம் துன்பப்படுகிறார்கள். இவர்களுக்கு இயேசுகிறிஸ்துவின் வாக்கியம் மிகுந்த ஆறுதலாகயிருக்கும். ஏனெனில் இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களைப் பகைக்கிறவர்கள் இயேசுகிறிஸ்துவையே பகைக்கிறார்கள். அவர்கள் இயேசுகிறிஸ்துவைப் பகைக்கும்போது பிதாவாகிய தேவனையே பகைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்குப் போக்குச்சொல்ல இடமில்லை. தேவனுடைய ஆக்கினைக்கு இவர்களால் தப்பிக்கவே முடியாது.  


கண்டும் பகைத்துமிருக்கிறார்கள் 


வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்  (யோவா 15:24).


இயேசுகிறிஸ்து சுவிசேஷச் செய்தியைப் பிரசங்கிப்பதோடு, தம்முடைய வார்த்தையை அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதிபண்ணுகிறார். இப்பிரபஞ்சத்தின் ஜனங்கள் இயேசுகிறிஸ்துவின் வார்த்தையைத் தங்கள் காதுகளினால் கேட்டதோடு, அவர் செய்த கிரியைகளையும் கண்டிருக்கிறார்கள். ""வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால்  அவர்களுக்குப் பாவமிராது'' என்று இயேசுகிறிஸ்து இந்த உலகத்து ஜனங்களைப்பற்றிக் கூறுகிறார். அவர்கள் மத்தியில் அற்புங்களும் அடையாளங்களும் நடைபெறவில்லையென்றால், ஒருவேளை அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படலாம். ஆனால் இயேசுகிறிஸ்துவோ இப்பிரபஞ்சத்து ஜனங்கள் மத்தியில் தம்முடைய தெய்வத்துவத்தையும், தாம் தேவனால் அனுப்பப்பட்டிருக்கிற அவருடைய குமாரன் என்பதையும் நிரூபிப்பதற்குப் போதுமான கிரியைகளை நடப்பித்திருக்கிறார். இப்படிப்பட்ட கிரியைகளை இதுவரையிலும் வேறொருவரும் செய்யவில்லை. 


இயேசுகிறிஸ்துவின் அற்புதங்களும், அவருடைய இரக்கங்களும், அவர் தேவனால் அனுப்பப்பட்டிருக்கிறவர் என்பதற்குச் சாட்சியாயிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் கிரியைகளெல்லாமே விசேஷித்தவை. வேறொருவராலும் அவர் செய்கிற கிரியையைச் செய்யமுடியாது. இயேசுகிறிஸ்து மாத்திரமே பரலோகத்திலிருக்கிற தேவனால் அனுப்பப்பட்டிருக்கிறவர். தேவன் இயேசுகிறிஸ்துவோடு கூடயிருக்கிறார். இயேசுகிறிஸ்துவைப்போல வேறு யாரும் பரலோகத்திலிருந்து அனுப்பப்படவில்லை.  


இயேசுகிறிஸ்து தேவனிடத்திலிருந்து வந்த போகதரென்பதை நிக்கொதேமு அறிந்திருந்தார்.  அவர் இயேசுவினிடத்தில் வந்து ""ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புங்களைச் செய்யமாட்டான்'' (யோவா 3:2) என்று கூறுகிறார். 


இயேசுகிறிஸ்துவின் கிரியைகளெல்லாமே  நற்கிரியைகள். அவை அனைத்தும் இரக்கத்தின் கிரியைகள். இயேசுகிறிஸ்துவின் கிரியைகள் அனைத்தும் பிரயோஜனமுள்ளவை. அவர் இவ்வளவு நற்கிரியைகளைச் செய்திருந்தும்  இந்த உலகம் அவரைப் பகைக்கிறது. இயேசுகிறிஸ்துவின் நற்கிரியைகளைப் பார்த்து, பாவிகள் அவரிடத்தில் அன்புகூருவதற்குப் பதிலாக, அவரை மேலும் அதிகமாகப் பகைக்கிறார்கள். அன்புக்குப் பதிலாகப் பகை பெருகுகிறது. 


ஒருவேளை இப்பிரபஞ்சத்தின் ஜனங்கள்  இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கேள்விப்பட்டு, அவருடைய அற்புத கிரியைகளைப் பார்த்திருக்காவிட்டால், ஒருவேளை இவர்களுக்குப் பாவமிராது. சத்தியத்தை விசுவாசிப்பதற்கு அவருடைய வார்த்தை அது இன்னும் நிரூபிக்கப்படவில்லையென்று சாக்குப்போக்குச் சொல்லுவார்கள். இயேசுகிறிஸ்துவை நன்மை செய்கிறவரென்று ஜனங்கள் அங்கீகரிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் அவரைப் பகைக்கிறார்கள். இயேசுகிறிஸ்து நம்மை தெய்வீக அன்பினால் நேசிக்கிறார். ஆனால் உலகத்து ஜனங்களில் அநேகரை அவருடைய அன்பு ஆளுகை செய்யவில்லை. அவர்கள் சாத்தானின் பிள்ளைகளாக இருக்கிறார்கள். தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவில் அன்புகூருவதற்குப் பதிலாக அவரைப் பகைக்கிறார்கள். 


முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறார்கள்


முகாந்தரமில்லாமல் என்னைப்  பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று (யோவா 15:25).


பிரபஞ்சத்தின் ஜனங்கள் இயேசுகிறிஸ்துவைப் பகைப்பதற்கு நியாயமான  காரணம் எதுவுமேயில்லை. இயேசுகிறிஸ்து இதைப்பற்றிச் சொல்லும்போது ""முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று'' என்று சொல்லுகிறார். இயேசுகிறிஸ்துவைப் பகைக்கிறவர்கள் காரணமில்லாமல்தான் பகைப்பார்கள். ஏனெனில் அவரைப் பகைப்பதற்கு யாராலும் எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்கமுடியாது. 


இயேசுகிறிஸ்து யூதேயா தேசத்தை ஆசீர்வதிப்பதற்காகவே வந்திருக்கிறார். ஆனால் யூதர்களோ அவரைப் பகைக்கிறார்கள். இயேசுகிறிஸ்து யூதர்களை நேசித்தாலும், ""அவர்களுடைய கிரியைகள் பொல்லாதவைகளாகயிருக்கிறது'' என்று உண்மையைப் பேசினார். அவர்களை அழிக்கவேண்டும் என்பதற்காக இயேசு இப்படிச் சொல்லவில்லை. அவர்கள் திருந்தி நன்மை செய்யவேண்டும் என்பதற்காகவே இயேசுகிறிஸ்து அவர்களுடைய குற்றத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவர்களோ இயேசுகிறிஸ்துவின் வார்த்தையைக்கேட்டு மனந்திரும்புவதற்குப் பதிலாக, தங்களுக்குப் புத்திமதி சொன்ன இயேசுகிறிஸ்துவையே பகைக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவைப் பகைப்பதற்கு இது நியாயமான காரணமாகாது.  ஆகையினால்தான் இயேசு அவர்களுடைய பகையைப்பற்றிச் சொல்லும்போது ""முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்'' என்று கூறுகிறார். 


இயேசுகிறிஸ்துவைப் பகைக்கிறவர்கள்  வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறவேண்டும்  என்னும் நோக்கத்தோடு  அவரைப் பகைப்பதில்லை. காரணமில்லாமல் பகைக்கிறவர்களுக்கு வேதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதும் தெரியாது. ஆனால் இயேசுகிறிஸ்துவோ, ஜனங்கள் தம்மைப் பகைப்பதை ஏற்றுக்கொள்கிறார். அவர்கள்மீது கோபப்படுவதற்குப் பதிலாக, வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு, அவர்கள் முகாந்தரமில்லாமல் தம்மைப் பகைப்பதாகக் கூறுகிறார். 


இயேசுகிறிஸ்து வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியத்தைப்பற்றிச் சொல்லுவது, அவரை விசுவாசிக்கிற விசுவாசிகளுக்கு ஓர் ஆறுதலான செய்தியாகும். இதன் மூலமாக இயேசுகிறிஸ்துவில் நாம்     வைத்திருக்கும் விசுவாசம் உறுதிபண்ணப்படும். வேதவாக்கியத்தில் இயேசுகிறிஸ்துவைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற காரியங்களெல்லாம் அவரில் நிறைவேறுகிறது. அவரைப்பற்றி முன்னறிவிக்கப்பட்டிருக்கிற எல்லா சம்பவங்களும் அவரில் நடைபெறுகிறது என்பது  விசுவாசிகளுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. நம்முடைய ஜீவியங்களில்கூட இயேசுகிறிஸ்துவின் சித்தத்தின் பிரகாரமே ஒவ்வொரு காரியமும் நடைபெறும். அவருடைய சித்தமில்லாமல் நமக்கு ஒரு காரியமும் நடக்காது. வேதவாக்கியத்தில் கர்த்தருடைய ஊழியக்காரர்களைப்பற்றி என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதுவே கிறிஸ்துவின் சித்தம். தேவனுடைய சித்தம் மாறுவதில்லை. அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பும் மாறுவதில்லை. பிரபஞ்சத்தின் ஜனங்கள் நம்மைப் பகைப்பதும் குறையப்போவதில்லை. ஏனெனில் எல்லாமே வேதவாக்கியத்தில் எழுதியிருக்கிற பிரகாரமாகவே நடைபெறுகிறது. 


தேற்றரவாளர் 

(யோவா 15 : 26,27)


என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்


பிதாவினிடத்தில் நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்  (யோவா 15:26).   


தம்முடைய சுவிசேஷத்திற்கு வரும் எதிர்ப்புக்களைக் குறித்து இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் முன்னறிவித்துக் கூறுகிறார். சீஷர்களுக்கு பாடுகளும் உபத்திரவங்களும் வந்தாலும் அவர்களுக்கு இயேசுகிறிஸ்துவின் பாதுகாப்பும் பராமரிப்பும் எப்போதும் கூடவேயிருக்கும். இயேசுகிறிஸ்து தம்மைக்குறித்துச் சாட்சிகொடுப்பதற்காக  சத்திய ஆவியாகிய தேற்றரவாளரை அனுப்புவதாகக் கூறுகிறார். பரிசுத்த ஆவியானவருடைய சாட்சியோடு சேர்ந்து, சீஷர்களும் ஆதிமுதல் இயேசுகிறிஸ்துவுடனே கூடயிருந்தபடியால் அவருக்குச் சாட்சிகளாயிருப்பார்கள்

 (யோவா 15:27).


இயேசுகிறிஸ்துவின் ஊழியம் இந்த உலகத்தில் ""ஆசீர்வதிக்கப்பட்ட சத்தியஆவியானவரால்'' தொடர்ந்து நடைபெறும். ""பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து  புறப்பட்டு வருகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது அவர் என்னைக்குறித்து சாட்சிகொடுப்பார்'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் வாக்குப்பண்ணுகிறார். பரிசுத்த வேதாகமத்தில் இந்த வசனத்தில்தான் பரிசுத்த ஆவியானவரின் ஊழியத்தைப்பற்றி மிகவும் தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. 


இயேசுகிறிஸ்து தேற்றரவாளரைப்பற்றிக் கூறும்போது, அவருடைய சுபாவத்தைப்பற்றிக் கூறுகிறார். அவர் சத்திய ஆவியாகயிருக்கிறார்.  பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு வருகிறார். இயேசுகிறிஸ்து பரிசுத்த ஆவியானவரைப்பற்றிப் பேசும்போது, அவரைத் தனி ஆள்தத்துவப் பண்புள்ள நபராகவே குறிப்பிடுகிறார். பரிசுத்த ஆவியானவர் தெய்வீக ஆள்தத்துவப் பண்புடையவராக, பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு வருகிறார். 


மனுஷனுடைய ஆவி அல்லது மனுஷனுடைய சுவாசம் ""ஜீவசுவாசம்'' என்று அழைக்கப்படுகிறது. இது மனுஷனிடத்திலிருந்து புறப்பட்டு வருகிறது. சில சமயங்களில் மனுஷன் தன் சுவாசக்காற்றை பலமாக ஊதுகிறான். பெருமூச்சாக வெளியிடுகிறான். தான் ஆச்சரியப்படும்போது ஒருவிதமாகவும், அதிக முயற்சிபண்ணும்போது வேறொரு விதமாகவும்  மூச்சுவிடுகிறான். பரிசுத்த ஆவியானவரும் தம்முடைய தெய்வீக வெளிச்சத்தையும் வல்லமையையும் வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துகிறார். 


இயேசுகிறிஸ்து பரிசுத்த ஆவியானவரின்  ஊழியத்தைப்பற்றியும் கூறுகிறார். பரிசுத்த ஆவியானவர் இதுவரையிலும் தம்மை வெளிப்படுத்திய அளவுக்கு அதிகமாக, இப்போது தம்மை வெளிப்படுத்துகிறார். தம்முடைய வரங்களையும், கிருபைகளையும், வல்லமைகளையும் இதுவரையிலும் வெளிப்படுத்தாத அளவுக்கு இப்போது அதிகமாக வெளிப்படுத்துகிறார். இயேசுகிறிஸ்துவானவர்  பிதாவினிடத்திலிருந்து பரிசுத்த ஆவியானவரை  நமக்கு அனுப்பப்போகிறார். இதைப்பற்றி இயேசுகிறிஸ்து ஏற்கெனவே கூறும்போது ""நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்கு சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்'' (யோவா 14:16) என்று கூறியிருக்கிறார்.


நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்போது அவர் உங்களுக்கு பரிசுத்த ஆவியானவரைத் தந்தருளுவார் என்று கூறிய இயேசுகிறிஸ்து, இப்போது, ""நான் உங்களுக்கு  பரிசுத்த ஆவியானவரை அனுப்பப்போகிறேன்'' என்று கூறுகிறார். 


பரிசுத்த ஆவியானவர் அனுப்பப்படுகிறவர்.  இயேசுகிறிஸ்து தேவனுக்கும் நமக்கும் மத்தியஸ்தராகயிருக்கிறார். இப்போது மனுஷருக்கு வரங்களை அருளும்படியாக உன்னதத்திற்குப் பரமேறிப்போயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் பிதாவினிடத்திலிருந்து  புறப்படுகிறவர். இவர் பரலோகத்திலிருந்து மாத்திரமல்ல, பிதாவின் வீட்டிலிருந்து புறப்படுகிறவர். பிதாவின் சித்தத்தின் பிரகாரமாக, அவருடைய நியமனத்தின் பிரகாரமாக பரிசுத்த ஆவியானவர் அனுப்பப்படுகிறார். பரிசுத்த ஆவியானவருக்கு  ஒரு விசேஷித்த ஊழியம் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆவியானவர் அப்போஸ்தலர்களுக்கு   சத்தியத்தைப் அவர்களுக்குப் போதிப்பார். 


பரிசுத்த ஆவியானவர் ""தேற்றரவாளர்'' என்று அழைக்கப்படுகிறார். இந்த வார்த்தைக்கு ""ஒருவர் சார்பாக வழக்காடுகிறவர்'' என்று பொருள் கூறலாம். ஆவியானவர் எப்போதுமே  இயேசுகிறிஸ்துவின் சார்பாக வழக்காடிக்கொண்டிருக்கிறார். துன்மார்க்கமான இந்த உலகத்தில், பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் சார்பாக அவிசுவாசத்திற்கு எதிராக வழக்காடிக்கொண்டிருக்கிறார். இந்த உலகம் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களைப் பகைக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் தேற்றுகிற தேற்றரவாளராக ஊழியம் செய்கிறார். ஆவியானவரின் முக்கியமான ஊழியம் இயேசுகிறிஸ்துவைக் குறித்து சாட்சிகொடுப்பதாகும். 


பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவுக்காக வழக்காடுகிறவர் மாத்திரமல்ல, அவர் கிறிஸ்துவுக்காக சாட்சிகொடுக்கிறவராகவும் இருக்கிறார். ஊழியத்தின் வல்லமையை நாம் பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும். பரிசுத்த ஆவியானவரே கிறிஸ்துவின் ஊழியக்காரர்களைத் தகுதிப்படுத்துகிறார். நம்முடைய உபதேச வார்த்தைகளை அபிஷேகம்பண்ணுகிறார். கர்த்தருடைய பிள்ளைகளைப் பரிசுத்தப்படுத்துகிறார். இவையெல்லாவற்றிலும் அவர் கிறிஸ்துவைக்குறித்து சாட்சிகொடுக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சாட்சி நம்முடைய ஊழியத்தின் வல்லமையிலும், ஊழியக்காரரின் பரிசுத்தத்திலும் வெளிப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் இவ்விரண்டிலும் கவனம் செலுத்தி, இப்பிரபஞ்சத்தின் ஜனங்களோடு இயேசு கிறிஸ்துவை 

குறித்து சாட்சி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.   


எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்


நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்  (யோவா 15:27).


இயேசுகிறிஸ்துவுக்கு சாட்சிகளாயிருக்கும் சிலாக்கியம் அப்போஸ்தலருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் ""நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்'' என்று கூறுகிறார் பரிசுத்த ஆவியானவர் நம்மை அடக்கி ஆளுகை செய்யமாட்டார். ஆவியானவர் நமக்குள்ளே வாசம்பண்ணி நம்மை உற்சாகப்படுத்துகிறார். ஊழியத்தில் பயன்படுத்துகிறார். ஆவியானவர் நம்மை அமைதியாக இருக்க வைத்துவிட்டு தாமாகவே எல்லாக் கிரியைகளையும் செய்து முடித்துவிடுவதில்லை. அவர் நம்மைப் பெலப்படுத்தி கிரியை செய்ய செய்கிறார். 


பரிசுத்த ஆவியானவர் இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறார். அதே வேளையில் கர்த்தருடைய ஊழியக்காரர்களாகிய நாமும் இயேசுகிறிஸ்துவுக்குச் சாட்சிகளாகயிருக்கவேண்டும். நாம் செய்ய வேண்டிய ஊழியம் நம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் சத்தியத்திற்குச் சாட்சிகொடுக்கவேண்டும்.  இயேசுகிறிஸ்துவின் பூரண சத்தியத்திற்கு நாம் சாட்சிகொடுக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியத்திற்கு மாத்திரமே நாம் சாட்சிகொடுக்க வேண்டுமேயல்லாமல், வேறு எதற்கும் சாட்சிகொடுக்கவேண்டியதில்லை. 


இயேசுகிறிஸ்து பிரதான ஆசாரியருக்கு முன்பாகவும் பிலாத்துவுக்கு முன்பாகவும் விசாரிக்கப்பட்டபோது, அவருடைய சீஷர்கள் அவரைவிட்டு ஓடிப்போய்விட்டார்கள். ஆனாலும், பரிசுத்த ஆவியானவரின்     அபிஷேகம் அவர்கள்மீது ஊற்றப்பட்டபின்பு, சீஷர்கள்       பெலனடைந்து  கிறிஸ்துவுக்குத் தைரியமாய்ச் சாட்சிகொடுத்தார்கள். இயேசுகிறிஸ்துவைப்பற்றி  சாட்சிகொடுக்கும்போது, அப்போஸ்தலர்கள் அவருடைய உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகொடுத்தார்கள், தாங்களும் சாட்சிகளாகயிருந்தார்கள். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு தங்களுக்குப் பிரத்தியட்சமாக காட்சிகொடுத்ததாகவும் அப்போஸ்தலர்கள் சாட்சி கொடுக்கிறார்கள்.  இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பின்பு, அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்புநியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே  பிரத்தியட்சமாகும்படி செய்தார் என்று பேதுரு  சாட்சியாக அறிவிக்கிறார் (அப் 10:41). 


இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களே அவருக்குச் சாட்சிகளாகயிருக்கிறார்கள். கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாகயிருப்பது சீஷர்களுக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய சிலாக்கியம். அவர்கள் தேவனோடு உடன் வேலையாட்களாகயிருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் இயேசுகிறிஸ்துவைக் குறித்து சாட்சிகொடுக்கிறார். கிறிஸ்துவின் சீஷர்கள் அவருக்குச் சாட்சிகளாகயிருக்கிறார்கள். சீஷர்கள் கிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்தபோது அவர்களுக்கு இந்தப் பிரபஞ்சத்திலிருந்து எதிர்ப்புக்களும், பாடுகளும் வேதனைகளும் உண்டாயிற்று. இவையெல்லாவற்றிற்கும் மத்தியில், தங்களுக்கு  கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாகயிருக்கக்கூடிய சிலாக்கியம் கிடைத்திருக்கிறது என்பதை நினைவுகூர்ந்து, சீஷர்கள் ஆறுதலடைகிறார்கள். சந்தோஷப்படுகிறார்கள். ஊழியத்தை உற்சாகமாகச் செய்கிறார்கள். இந்த உலகம் சீஷர்களை வெறுத்தாலும் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைக் கனப்படுத்துகிறார். 


இயேசுகிறிஸ்துவுக்கு சாட்சிகளாகயிருக்க  சீஷர்களுக்கு ஒரே ஒரு தகுதி மாத்திரமே இருக்கிறது. அவர்கள் ஆதி முதல் இயேசுகிறிஸ்துவுடனேகூட இருந்திருக்கிறார்கள். இதுவே சீஷர்களிடத்தில் காணப்படுகிற தகுதி. இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தைச், சீஷர்கள் திரளான ஜனங்களோடு, தாங்களும் கேட்டிருக்கிறார்கள். அதற்கும் அதிகமாக, இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களோடு தனிப்பட்ட முறையில் உபதேசம்பண்ணியிருக்கிறார். பலசமயங்களில் இயேசுகிறிஸ்து ஒவ்வொரு ஊராகப் பிரயாணம் செய்து, அங்கு அற்புங்களையும் அடையாளங்களையும் செய்திருக்கிறார். இந்த அற்புதங்களுக்கெல்லாம் அந்தந்த ஊர் ஜனங்கள் சாட்சிகளாகயிருக்கிறார்கள். சீஷர்கள் இயேசுவோடு எல்லா ஊர்களுக்கும் பிரயாணமாய்ப் போவதினால், எல்லா ஊர்களிலும் நடைபெற்ற அற்புதங்களுக்கு அவர்கள் சாட்சிகளாகயிருக்கிறார்கள். 


இயேசுகிறிஸ்துவோடு சீஷர்கள் தங்கள் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும், அன்பிலும் கூடவே இருக்கிறார்கள். கிறிஸ்துவோடு கூடவே இருக்கிறவர்களால் மாத்திரமே அவருக்கு சாட்சிகளாகயிருக்க முடியும். கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் முதலாவதாக அவரைக் கற்றுக்கொள்ளவேண்டும். அதன் பின்புதான் அவரைப்பற்றிப் பிரசங்கம்பண்ணவேண்டும். தேவனுடைய காரியங்களைப் பிரசங்கம்பண்ணுகிறவர்கள், முதலாவதாக அவற்றைத் தங்கள் ஜீவியங்களில் அனுபவித்திருக்கவேண்டும். இயேசுகிறிஸ்து நல்லவரென்பதை ருசிபார்த்திருக்கிறவர்கள் மாத்திரமே ""இயேசுகிறிஸ்து நல்லவர்'' என்று  சாட்சி கூறமுடியும்.  


கிறிஸ்துவின் சீஷர்கள் அவருடனேகூட ஆதி முதல் இருந்திருக்கிறார்கள். சீஷர்களுக்கு கிறிஸ்துவோடு நல்ல ஐக்கியமும், கிறிஸ்துவின் மூலமாய் உபதேசமும், ஆவிக்குரிய அனுபவமும் கிடைத்திருக்கிறது. நாமும் சுவிசேஷத்தை நம்முடைய ஆரம்ப நாட்களிலேயே இருதயத்தில் பெற்றிருந்தால், நம்மாலும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்லமுறையில் ஊழியம் செய்யமுடியும். நீண்ட நாள் அனுபவம் எப்போதுமே பிரயோஜனமுள்ளது. தம்மோடுகூட நீண்டகாலமாக ஐக்கியமாக இருக்கிற தம்முடைய பிள்ளைகளை, இயேசுகிறிஸ்து தம்முடைய உக்கிராண ஊழியத்திற்குப் பொறுப்பானவர்களாக நியமிக்கிறார். 








Post a Comment

0 Comments