பாடுகளின் வாரம் வியாழக்கிழமை நிகழ்வு-2

 

பாடுகளின் வாரம்

வியாழக்கிழமை நிகழ்வு-2

இயேசு தம்முடைய சீஷர்களை விட்டு கடந்துபோவதைப்பற்றி உபதேசம் பண்ணுகிறார் (யோவான் 14:1-31)


நான் மறுபடியும் வருவேன்

 (யோவா 14 : 1-3)


உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக


உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக;   தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள் 

(யோவா 14:1). 


சீஷருடைய இருதயம் கலக்கமடையக்கூடாது என்று இயேசுகிறிஸ்து  அவர்களுக்குப் பொதுவான எச்சரிப்பைக் கூறுகிறார். ""உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக'' என்று இயேசு தம்முடைய சீஷர்களிடம் அறிவிக்கிறார். அவர்களுடைய இருதயம் கலங்கியிருப்பதை இயேசுகிறிஸ்து அறிந்திருக்கிறார். ஒருவேளை அவர்களுடைய முகத்தோற்றம் இருதயத்தின் கலக்கத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். மனுஷன் முகத்தைப்பார்த்தாலும் இயேசுகிறிஸ்து மனுஷனுடைய இருதயத்தைப்பார்த்து அவர்களுடைய உள்ளத்தை அறிகிறார். நம்முடைய மறைவான வருத்தங்களும், இருதயத்தின் வேதனைகளும், மனதின் பாரங்களும் இயேசுகிறிஸ்துவுக்கு மறைவாயிருப்பதில்லை. 


இயேசுகிறிஸ்து சீக்கிரத்தில் தம்முடைய ஜீவனை சிலுவையில் ஒப்புக்கொடுக்கப்போகிறார். அவருக்கு பாடுகளும் வேதனைகளும் காத்துக்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து ஒருவேளை சீஷர்களின் இருதயம் கலங்கியிருக்கலாம். இவர்களுடைய மனதில் பலவிதமான எண்ணங்கள் உண்டாயிற்று. அவை அவர்களுடைய  இருதயத்தைக் கலங்கச் செய்கிறது. 


தம்முடைய சீஷர்களில் ஒருவன் தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறான் என்று இயேசுகிறிஸ்துச் சொன்னது சீஷர்களின் இருதயத்திற்குக் கலக்கமாயிருக்கிறது. அவர்களுடைய கலக்கத்தைப் பார்த்து இயேசு  அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.  நாம் ஒருவேளை பக்தியுள்ளவர்களாகவும் விசுவாசமுள்ளவர்களாகவும் இருக்கலாம். தேவனுக்கு முன்பாக தாழ்மையோடு ஜீவித்து நம்முடைய ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளலாம். ஆனாலும்  இவைகளுக்கு மத்தியிலும், நம்முடைய     இருதயம் கலக்கமடைவதற்கு வாய்ப்புள்ளது. பரிசுத்தமான சந்தோஷத்திற்கும், இருதயத்தின் கலகக்கத்திற்கும் இடையே சில சமயம் போராட்டங்கள் உண்டாகலாம். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டுக் கடந்துபோகவேண்டுமென்று  இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார். சாதாரணமாக அவர் கடந்துபோவது மாத்திரமல்ல, பாடுகளின் வழியாகவும் இயேசுகிறிஸ்து கடந்துபோகவேண்டும். இயேசுகிறிஸ்துவைச் சத்துருக்கள் சிலுவையில் அறையும்போது, நாம் அதைப் பார்த்தால் நம்முடைய இருதயமும் கலங்கும். இயேசுகிறிஸ்துவின் வேதனையைப்பார்த்து நாம் கலங்குவதைத் தவிர நமக்கு வேறு வழி ஒன்றும் இல்லை. இயேசுவின் சிலுவை மரணத்தினால்  நமக்கு ஆசீர்வாதம் உண்டு. ஆனாலும் அவருடைய மரணமும் பாடுகளும் நம்முடைய இருதயத்தை கலங்கச் செய்யும். நம்முடைய தரிசனம் குறுகியது. இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தைத்தவிர, அதற்கு அப்பால் என்ன நடைபெறும் என்பதை நம்முடைய மனக்கண்களால் பார்க்க முடியாது. 


இயேசுகிறிஸ்து தங்களைவிட்டுப் போய்விட்டால், அதன்பின்பு தங்களுக்கு என்ன ஆகுமோ என்று சீஷர்கள் கலங்குகிறார்கள். ஒருவேளை சீஷர்களுக்கு ஏமாற்றமும் அவமானமும் உண்டாகலாம். இயேசுகிறிஸ்து இஸ்ரவேல் தேசத்தை, ரோமப்பேரரசிடமிருந்து இரட்சிக்கப்போகிறார் என்று ஜனங்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட  இரட்சகரே சிலுவையில் மரித்துப்போனால், இஸ்ரவேலின் விடுதலையை எதிர்பார்க்கிற எல்லோருக்கும் ஏமாற்றமாகவே இருக்கும்.


இயேசுகிறிஸ்து சீஷர்களைவிட்டுப் பிரிந்துபோவது அவர்களுக்கு வருத்தமாக இருக்கும். அவர்களுடைய இருதயம் கலங்கும்.  தங்களோடு கூடவேயிருந்தவர் இப்போது தங்களைவிட்டுப் போகிறாரே என்று கலங்குவார்கள். இவையெல்லாவற்றையும் பார்த்துதான் இயேசுகிறிஸ்து அவர்களிடம் ""உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக'' என்று கூறுகிறார். இந்த வாக்கியத்தில் வரும் மூன்று வார்த்தைகளும் மிகவும் முக்கியமானவை. ""கலங்குதல்'' என்னும் வார்த்தைக்கு ""கடல் அமைதியில்லாமல் கொந்தளிப்பதுபோல தொடர்ந்து கொந்தளிப்பது'' என்று பொருள். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் ""உங்கள் இருதயம் உணர்ச்சிவசப்படவேண்டாம்'' என்று கூறவில்லை. இதற்குப் பதிலாக ""உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக'' என்றே கூறுகிறார். 


பல சமயங்களில் நமக்குப் பலவிதமான இழப்புக்கள் உண்டாகலாம். நாம் எதை இழந்துபோனாலும் நம்முடைய ஆத்துமாவை இழந்துபோகக்கூடாது. அதைப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஆத்துமாவிற்கு இருதயமே பலத்த அரணாகயிருக்கிறது. நாம் எதைச் செய்தாலும் அது நம்முடைய இருதயத்தைப் பாதிக்கும். ஆகையினால் நம்முடைய கலக்கமும், வேதனையும், பாடுகளும், வருத்தங்களும் நம்முடைய இருதயத்தைக் கலங்கப்பண்ணக்கூடாது. 


இயேசுகிறிஸ்து இங்கு கூறும் வாக்கியத்தில் முக்கியமான அடுத்த வார்த்தை ""உங்கள்'' என்னும் வார்த்தையாகும். இவர்களே  இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள். இயேசுவை நெருக்கமாகப் பின்பற்றுகிறார்கள். இவர்களுக்கு இயேசுகிறிஸ்துவை நன்றாகத் தெரியும். மற்றவர்கள் இயேசுவைப்பற்றி அறிந்திருப்பதைவிட இவர்கள்  அவரைக்குறித்து அதிகமாக அறிந்திருக்கிறார்கள். ஆகையினால் இயேசுகிறிஸ்து தாம் செய்கிற எல்லாவற்றையும், தேவனுடைய  சித்தத்தின் பிரகாரமே செய்வார் என்னும் நம்பிக்கை இவர்களுடைய இருதயத்தில் காணப்படவேண்டும். சூழ்நிலைகள் கலக்கமாகயிருந்தாலும், இவர்களுடைய இருதயம் கலங்கக்கூடாது.


இருதயம் கலங்காதிருப்பதற்கு இயேசுகிறிஸ்து ஒரு உபாயத்தையும் கூறுகிறார். அவர்களிடத்தில் ""விசுவாசம்'' இருக்கவேண்டும். இதுவே இயேசுகிறிஸ்துகூறும் உபாயமாகும். ""தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் கூறுகிறார். ஒரு சிலர் இவ்விரண்டு வாக்கியங்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வாசிப்பார்கள். ""தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்'' என்னும் வாக்கியத்திற்கு, ""தேவனுடைய பரிபூரணத்திலும் அவருடைய பராமரிப்பிலும் விசுவாசமாயிருங்கள்''           என்று பொருள். ""என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்'' என்று இயேசுகிறிஸ்து கூறும் வாக்கியத்திற்கு ""அவரிடத்திலும், அவருடைய மத்தியஸ்த ஊழியத்திலும்   விசுவாசமாயிருங்கள்'' என்று பொருள். 


சீஷர்கள் தேவனிடத்தில் விசுவாசமாயிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவும்  இவர்களுடைய விசுவாசத்தை அறிந்திருக்கிறார்.  சீஷர்களுடைய வாழ்க்கையில் கலக்கமான சூழ்நிலைகள் வரும்போது, அவர்கள் ""இயேசுகிறிஸ்துவிடத்திலும் விசுவாசமாயிருக்க வேண்டும்''. தேவனுக்கும் மனுஷனுக்கும் நடுவில் இயேசுகிறிஸ்து மத்தியஸ்தராகயிருப்பதினால், நாம் ""இயேசுகிறிஸ்துவிலும் விசுவாசம் வைக்க வேண்டும். இதை நாம் விசுவாசிக்கும்போது தேவனிடத்தில் நாம் வைத்திருக்கும் விசுவாசம் நமக்கு ஆறுதலைத் தரும்.


தேவனிடத்திலும் இயேசுகிறிஸ்துவிடத்திலும் விசுவாசம் வைத்திருக்கிறவர்கள் பாக்கியவான்கள். நாம் இயேசுகிறிஸ்துவின் மூலமாகத் தேவனிடத்தில் விசுவாசம் வைக்கவேண்டும். தேவனிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறவர்கள் இயேசுகிறிஸ்துவிடத்திலும் விசுவாசம் வைத்திருப்பார்கள். நம்முடைய இருதயம் கலங்காதிருக்க வேண்டுமானால், நாம் இயேசுகிறிஸ்துவின் மூலமாகத் தேவனிடத்தில் விசுவாசம் வைக்கவேண்டும். விசுவாசத்தின் சந்தோஷமே நம்முடைய துக்கங்களையும், கவலைகளையும், வேதனைகளையும், வருத்தங்களையும் நீக்குகிற நல்மருந்தாகயிருக்கிறது. 


யோவான் சுவிசேஷத்தில் காணப்படும் கலங்கிய காரியங்கள்


    1. தண்ணீர் 

(யோவான் 5:4-7)


    2. ஆவி (யோவான் 11:33; யோவான் 13:21)


    3. ஆத்துமா 

(யோவான் 12:27)


    4. இருதயம்

 (யோவான் 14:1,27)



பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள்


என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்-யிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன் (யோவா 14:2).   


இயேசுகிறிஸ்து நமக்கு நித்தியஜீவனை வாக்குப்பண்ணியிருக்கிறார். இந்த வாக்குத்தத்தத்தின்மீது நாம் விசுவாசம் வைக்கவேண்டும். நித்திய ஜீவன்மீது நாம் விசுவாசம் வைக்கும்போது, நாம் தேவனிடத்திலும் இயேசுகிறிஸ்துவிடத்திலும் விசுவாசம் வைக்கவேண்டும்.  வரப்போகிற சந்தோஷத்திற்காக நாம் தேவனையும் இயேசுவையும் விசுவாசிக்க வேண்டும். ஏனெனில் இயேசுகிறிஸ்து வாக்குப்பண்ணியிருக்கும் சந்தோஷம் நித்திய சந்தோஷமாகும். நம்முடைய ஆத்துமா நித்திய காலமாக ஜீவிக்கும். பரலோகம் நித்திய காலமாகயிருக்கும். இயேசுகிறிஸ்து நமக்குக் கொடுக்கப்போகும் சந்தோஷமும் நித்திய காலமாகயிருக்கும். 


இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்கப்போகிறார் என்பதையும், தங்களைவிட்டுப் போகப்போகிறார் என்பதையும் நினைத்துப் பார்க்கும்போது சீஷர்களுடைய இருதயம் கலங்கும். இந்த இருதயக் கலக்கத்திலிருந்து இவர்கள் விடுதலை பெறவேண்டுமானால், தங்களுக்கு வாக்குப்பண்ணப்பட்டிருக்கும் நித்திய சந்தோஷத்தை விசுவாசத்தோடு தியானிக்கவேண்டும். பரிசுத்தவான்களுக்குப் பலவிதமான துன்பங்களும் பாடுகளும் வந்தபோதெல்லாம், அவர்கள் தங்களுக்கு வாக்குப்பண்ணப்பட்டிருக்கும் நித்திய ஜீவனையும், நித்திய சந்தோஷத்தையும் எதிர்பார்த்து, இந்தச் சோதனைகளைக் கடந்தார்கள். தங்களைத் தாங்களே வேதனைகளின் மத்தியிலும் உற்சாகப்படுத்திக் கொண்டார்கள். பரலோகம் எல்லாவற்றையும் மாற்றிப்போடும். 


நமக்கு நித்திய ஜீவனும், நித்திய சந்தோஷமும் நியமிக்கப்பட்டிருக்கிறது என்பதை  நாம் முழுநிச்சயத்தோடு நம்பவேண்டும். ""என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. அப்படி இல்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் கூறுகிறார். பரலோகத்தில் வாசம்பண்ணுகிற அனுபவம், வனாந்தரத்தில் பிரயாணம்பண்ணுகிற  அனுபவம்போல இருக்காது. பரலோகத்தைப்பற்றி  இயேசுகிறிஸ்து இங்கு குறிப்பிடும்போது, அதை ""வாசஸ்தலம்'' என்று குறிப்பிடுகிறார். வனாந்தரத்தில் வாசம்பண்ணுவது கூடாரக் குடியிருப்பைப் போன்றது. 


பரலோகம் ஒரு கூடாரக் குடியிருப்பைப்போல் இருக்காது. அங்கு அநேக வாசஸ்தலங்கள் மாளிகைகளைப்போல இருக்கும். பரலோகம் என்பது பிதாவின் வீடு. இயேசுகிறிஸ்து பரலோகத்தைப்பற்றி சொல்லும்போது ""என் பிதாவின் வீடு'' என்று சொல்லுகிறார். இயேசுகிறிஸ்துவின் பிதாவானவர் நமக்கும் பிதாவாகயிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் மெய்யான விசுவாசிகளெல்லோரும் பரலோகத்திலுள்ள தங்களுடைய பிதாவின் வீட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அன்போடு அழைக்கப்படுகிறார்கள். 


பரலோகத்தில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒவ்வொரு வாசஸ்தலம் தனித்தனியாகக் கொடுக்கப்படும்.  இந்த பூமியில் நமக்குத் தனிநபர் ஆள்தத்துவம் இருக்கிறது. இந்தப் பண்பு பரலோகத்திற்குப் போனாலும் மாறிப்போய்விடுவதில்லை. அங்கும் நாம் தனித்தனி நபர்களாகயிருப்போம். 




பரலோகத்தில் நாம் குடியிருக்கப் போகிற வாசஸ்தலம் வலுவானதாகவும், நீடித்து உழைக்கக்கூடியதாகவும் இருக்கும்.     ஏனெனில் நாம் பரலோகத்தில் நித்திய   காலமாக ஜீவிக்கப்போகிறோம். அங்கு விருந்தாளிகளைப்போல சிறிது நாட்கள் தங்கிவிட்டு, நாம் மறுபடியும் பூமிக்குத் திரும்பி வந்துவிடப்போவதில்லை. பரலோகமே நம்முடைய நித்திய வாசஸ்தலமாகயிருக்கும். நாம் நித்திய காலமாக பரலோகத்தில் இருக்கப்போவதினால், நம்முடைய வாசஸ்தலமும் நித்திய காலமாக உறுதியானதாகவும், வலுவானதாகவும் இருக்கும். 


நாம் இந்த பூமியில் ஜீவிக்கும்போது ஒரு பரதேசியைப் போலிருக்கிறோம். இந்த பூமியில் நாம் குடியிருக்கும் வீடுகள் சத்திரங்கள்போலத்தான் இருக்கிறது. சிறிது காலம் இந்தச் சத்திரங்களில் தங்கிவிட்டு, பின்பு பரலோகத்திற்குப் போய்விடுவோம். பரலோகத்தில்தான் நமக்கு மெய்யான நித்திய வாசஸ்தலம் இருக்கிறது. இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவின் வீட்டிலுள்ள வாசஸ்தலங்களைப்பற்றிக் கூறும்போது, அங்கு அநேக வாசஸ்தலங்கள் இருப்பதாகக் கூறுகிறார். ஏராளமான விசுவாசிகள் பரலோகத்திற்கு வருவார்கள். அவர்களெல்லோரும் அங்கு வாசம்பண்ணுவதற்கு அவர்களுக்குத் தனித்தனியாக வாசஸ்தலங்கள் இருக்கும்.


இயேசுகிறிஸ்து நமக்கு வாக்குப்பண்ணியிருக்கும் நித்திய வாசஸ்தலத்தையும், நித்தியசந்தோஷத்தையும் இங்கு உறுதிபண்ணுகிறார். ""அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்'' என்று கூறுகிறார். நம்முடைய விசுவாசத்தையும், தம்முடைய உறுதியான வார்த்தையையும் இயேசுகிறிஸ்து கட்டியெழுப்புகிறார். தம்முடைய வார்த்தையின் பிரகாரமாக அனைத்தும் நடைபெறும் என்று உறுதிபண்ணுகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் அன்பாகயிருக்கிறார். அவருடைய அன்பு உறுதியானது. மெய்யானது.  அவருடைய அன்பு மெய்யானது என்றால், அவருடைய வார்த்தையும் மெய்யாகவே இருக்கும். அவர் மெய்யானவராக இருக்கிறதுபோலவே அவருடைய வாக்குத்தத்தங்களும் மெய்யானதாகவே இருக்கும். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சுபாவத்தில்  மென்மையானவர். தம்முடைய சித்தத்தை யார்மீதும் பலவந்தமாகத் திணிப்பதில்லை. பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் இருப்பதைப்பற்றிக் கூறும்போது, தம்முடைய சீஷர்கள் அதை விசுவாசிக்க வேண்டுமென்று  கட்டாயப்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக ""அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேனே'' என்று மென்மையாகப் பேசுகிறார். அவர் நம்மை அதிகமாய் நேசிக்கிறவர். நம்மீது கரிசனையோடிருக்கிறவர்.  நாம் இயேசுகிறிஸ்துவின் வாக்குத்தத்தை எதிர்பார்த்து ஏமாந்து போவதற்கு அவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டு, தம் பிதாவின் வீட்டிற்குப் போவதற்குக் காரணத்தையும் கூறுகிறார். ""ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்'' என்பதுதான் இயேசுகிறிஸ்து அவர்களைவிட்டு பரலோகத்திற்குப் போவதற்கான மெய்யான காரணம். அவர் நமக்காகப் பரிந்துபேசுகிறவர்.  நமக்காக வழக்காடுகிறவர். பரலோகத்தில் நமக்காக ஒரு ஸ்தலத்தை உறுதிபண்ணப்போகிறார். அந்த ஸ்தலம் நமக்கு நித்தியகாலமாக, நம்முடைய ஸ்தலமாக இருக்கவேண்டும் என்பதற்கு என்னென்ன காரியங்களையெல்லாம் செய்யவேண்டுமோ, அவையெல்லாவற்றையும் இயேசுகிறிஸ்து நமக்காகச் செய்துமுடிக்கப்போகிறார். நாம்  பரலோகத்திற்குப் போகும்போது நமக்கு ஒரு ஸ்தலம் அங்கு ஆயத்தமாகயிருக்கும். பரலோகத்திற்கு எத்தனை விசுவாசிகள் வருகிறார்களோ, அத்தனைபேருக்கும் அங்கு தனித்தனியாக வாசஸ்தலங்கள் ஆயத்தமாகயிருக்கும். 


பரலோகத்தில் நமக்கு சந்தோஷமுண்டு. அது நித்திய சந்தோஷம். அந்த சந்தோஷம் நாம் அனுபவிக்கக்கூடியதாக     இருக்கவேண்டும்.  இயேசுகிறிஸ்துவின் பிரசன்னம் பரலோகத்திலிருக்கும் என்பதே நம்மெல்லோருக்கும் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய சத்தியம். அவரோடுகூட நாம் இருப்பதற்காகவே, அவர் நமக்கு வாசஸ்தலங்களை  ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார். அதற்காகவே அவர் நமக்கு முன்பாகப்போகிறார்.  இயேசுகிறிஸ்து நமக்கு முன்பு பரலோகத்திற்குப் போகவில்லையென்றால், பரலோகம் நம்மை ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாகயிராது. 


உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்


நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்  (யோவா 14:3). 


பரலோகத்திற்குப் போகிற இயேசுகிறிஸ்து  மறுபடியும் இந்த பூமிக்கு திரும்பி வருவார். இந்த சத்தியத்தை நாம் விசுவாசிக்க வேண்டும். ""நான் இருக்கிற இடத்தில் நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து, உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்'' என்று இயேசுகிறிஸ்து கூறுவது நமக்கு மிகுந்த ஆறுதலையும் சந்தோஷத்தையும் கொடுக்கிற வாக்கியமாகும்.  ""மறுபடியும் வருவேன்'' என்று கூறுகிறவர் நிச்சயமாகவே வருவார். அவர் வாக்குமாறாதவர்.  பரலோகத்தில் நமக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின பின்பு அவர் நிச்சயமாகவே வருவார். 


இயேசுகிறிஸ்து தம்மிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறவர்களைத் தம்மிடத்தில் சேர்த்துக்கொள்வதற்காக  மறுபடியும் வருவார். தம்முடைய பிள்ளைகளெல்லோரையும் கூட்டிச் சேர்ப்பதற்காகவே அவர் மறுபடியும் இங்கு வரப்போகிறார். இயேசுகிறிஸ்து எங்கேயிருக்கிறாரோ அந்த இடத்திலே நாமும் இருப்போம். பரலோகத்தின் சந்தோஷம் நமக்கு வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. பரலோகத்தில் இயேசுகிறிஸ்து இருக்கும் இடத்தில் நாமும் இருப்போம் என்பது நம்முடைய சந்தோஷத்தைப்  பரிபூரணமாக்குகிறது. 


இயேசுகிறிஸ்து இப்போது, தம்முடைய சீஷர்களைவிட்டுப் பரலோகத்திற்குப் போகிறார்.  அங்கு சிறிதுகாலம் மாத்திரமே நமக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணிக்கொண்டிருப்பார். அதன்பின்பு அவர் திரும்பி வந்து, நம்மையும் அழைத்துக்கொண்டு பரலோகத்திற்குப் போவார்.  அங்கு அவர் நித்தியகாலமாகயிருப்பார். இயேசுகிறிஸ்துவோடு நாம் பரலோகத்திற்குப் போகும்போது, பரலோகத்தின் மகிமையைப் பார்க்கிறவர்களாக மாத்திரமல்ல, அந்த மகிமையில் பங்கு பெறுகிறவர்களாகவும் இருப்போம். 


இயேசுகிறிஸ்து ஆயத்தம்பண்ணுவது எதுவும் வீணாய்ப்போகாது. அவர் நமக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுகிறார். ஆகையினால் நம்மை நிச்சயமாக அங்கு அழைத்துக்கொண்டு போவார் என்று நாம் உறுதியாக விசுவாசிக்கலாம். ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணி வைத்துவிட்டு, நம்மை அவர் அங்கு அழைத்துக்கொண்டு போகவில்லையென்றால், அந்த ஸ்தலத்தில் நாம் இருக்கமாட்டோம்.  அந்த ஸ்தலம் வெறுமையாக இருக்கும். அது வீணாய்ப்போகும். வீணாய்ப்போவதற்காக இயேசுகிறிஸ்து அங்கு ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணவில்லை. அவர் நமக்காகவே ஆயத்தம்பண்ணுகிறார். நம்மை நிச்சயமாகவே அங்கு அழைத்துச் செல்வார்.  ஏற்றவேளை வரும்போது நாம் இயேசுகிறிஸ்துவோடுகூட பரலோகத்திற்குப் போய், அங்கு அவர் நமக்காக ஆயத்தம்பண்ணி வைத்திருக்கும் வாசஸ்தலத்தில், நித்தியகாலமாக, நித்திய சந்தோஷத்தோடிருப்போம். நமக்குப் பாடுகள் வரும்போது தேவனுடைய ஆசீர்வாதமான இந்த வாக்குத்தத்தத்தை நினைத்து, நமது இருதயத்தின் கலக்கத்தை நீக்கி, சந்தோஷத்தினால் நமது இருதயத்தை நிரப்பவேண்டும்.  


""நான் மறுபடியும் வருவேன்'' என்று இயேசுகிறிஸ்து சொல்லும் இந்த வாக்கியம் சபை எடுத்துக் கொள்ளப்படுவதைக் குறிக்கும். இயேசு கிறிஸ்துவின்இரண்டாம் வருகையைக் குறிக்காது.  சபை எடுத்துக் கொள்ளப்படும்போது இயேசு கிறிஸ்து தமக்காக மரித்த எல்லாப் பரிசுத்தவான்களையும் உயிரோடிருக்கும் பரிசுத்தவான்களையும் எடுத்துக் கொள்வார். அதன்பின்பு, இயேசு கிறிஸ்து அவர்களோடு தமது இரண்டாம் வருகையில் பூமிக்குத் திரும்பிவருவார். கிறிஸ்து பரலோகத்தில் இருக்கிறபடியினால், சபை எடுத்துக் கொள்ளப்படும்போது, நாமும் பரலோகத்திற்குப் போவோம்.  


இயேசுவே வழி 

யோவா 14 : 4-11


வழியை அறிந்திருக்கிறீர்கள்


நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார் (யோவா 14:4). 


பரலோகத்தின் சந்தோஷத்தை இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷருக்கு அறிவிக்கிறார். இதைச் சொல்லி முடித்தபின்பு  தாம் போகிற இடத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்றும், அதன் வழியையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் எந்தச் சத்தியத்தையும் இரகசியமாக மறைத்து வைக்கவில்லை. அவர்களுக்குரியதை ஏற்றவேளை வரும்போது அவர்களுக்கு வெளிப்படுத்திக் கூறுகிறார். ஆகையினால் ""அறிந்திருக்கிறீர்கள்'' என்று அவர்களிடத்தில் அறிவிக்கிறார். 


பரலோகத்தைப்பற்றிய சத்தியம் அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்கு வீடு எது என்றும், வழி எது என்றும் தெரியும். இந்தச் சத்தியம் அவர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை தங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சத்தியத்தை  சீஷர்கள் அறியாதவர்களாக இருக்கலாம்.


வழியை எப்படி அறிவோம்


 தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான் (யோவா 14:5).


தாம் போகிற இடத்தையும் வழியையும் சீஷர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று இயேசு கூறுகிறார். ஆனால் தோமாவோ, அவரிடத்தில்  ""ஆண்டவரே நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம்'' என்று கேட்கிறான். சீஷர்களின் அறிவைப்பற்றி இயேசுகிறிஸ்து சாட்சி கூறும்போது, அவர்கள்  தங்களுடைய அறியாமையை அறிந்துகொள்கிறார்கள். இயேசுகிறிஸ்து கூறும்  சத்தியத்தைக் குறித்து மேலும் அதிகமாக அறிந்துகொள்ள வேண்டுமென்றும், தாங்கள் இதுபற்றி இதுவரையிலும் அறிந்துகொண்டது போதாது என்றும் அங்கீகரிக்கிறார்கள்.


பேதுருவைவிட தோமா மிகவும் கவனமாகவும் கண்ணியமாகவும் பேசுகிறான். பேதுரு இயேசுவிடம் ""நீர் எங்கே போகிறீர்'' என்று வெளிப்படையாகக் கேட்டான். இயேசுகிறிஸ்து போகும் இடத்தைக் குறித்துதான் பேதுருவுக்கு அக்கரையிருக்கிறது. ஆனால் தோமாவோ மிகவும் கண்ணியமாக, இயேசுகிறிஸ்து போகும் இடத்திற்கு வழியைத்   தெரிந்துகொள்ளவேண்டுமென்று கவனமாகக் கேட்கிறான். தன்னுடைய அறியாமையை தோமா வெளிப்படுத்துகிறான். நமக்குத் தெரியாததை தெரியாது என்று சொல்லுவது நல்ல குணம்தான். தெரியாததைத் தெரிந்ததுபோலக் காண்பித்து நடிக்கக்கூடாது.


நல்லோர் இருளிலிருக்கும்போது, தங்களுக்குப் பாதைதெரியாமல் தத்தளிக்கும்போது, தாங்கள் இருளிலிருப்பதை அங்கீகரிப்பார்கள். தங்களுடைய தவறுகளை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வார்கள். தோமாவிடத்தில் உண்மையை ஒப்புக்கொள்ளும்  நற்குணம் காணப்படுகிறது. சீஷர்கள் இயேசுகிறிஸ்துவைப்பற்றி உண்மைக்கு அதிகமாக கற்பனை பண்ணுகிறார்கள். இவர்களுடைய அறியாமைக்கு இவர்களின் விநோதமான கற்பனையும் ஒரு காரணம். இயேசுகிறிஸ்து போகிற இடத்தைச் சீஷர்கள் அறிந்துகொள்ளவில்லை. அவர் இந்தப் பூமியில் ஒரு ராஜ்யத்தை ஸ்தாபிக்கப்போகிறார் என்று சீஷர்கள்  கற்பனை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இதற்காக அவர் ஏதோ                    ஒரு நகரத்திற்குப்போய், அங்கு தம்மை ராஜாவாக அபிஷேகம்பண்ணிக்கொள்வார் என்று சீஷர்கள் ஆசையோடு எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை இயேசுகிறிஸ்து ஒரு நகரத்தைக் கட்டுவார் என்றும், ஆனால் அந்த நகரம்      எங்கு கட்டப்படுமென்று தங்களுக்குத் தெரியவில்லையென்றும் சீஷர்கள் நினைத்திருக்கலாம். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணப்போவதாகக் கூறுகிறார்.     இந்த மாளிகையை அவர் எங்கு கட்டுவாரென்று சீஷர்களுக்குத் தெரியவில்லை. அவர் போகிற இடத்தையும் சீஷர்கள் அறிந்துகொள்ளவில்லை.  அவரிடத்தில் போகவேண்டுமானால் எந்த திசையில் போகவேண்டுமென்றும் அவர்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆகையினால்தான் தோமா ""நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை எப்படி அறிவோம்'' என்று கேட்கிறான். இயேசுகிறிஸ்து பரலோகத்திற்குப் போகிறார் என்னும் சத்தியம்  தோமாவுக்குத் தெரிந்திருந்தால், ""வழியை நாங்கள் எப்படி அறிவோம்'' என்று மாத்திரமே இயேசுவிடத்தில் கேட்டிருக்கமாட்டான்.


நானே வழியாயிருக்கிறேன் 


அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்  (யோவா 14:6).


தோமா சத்தியத்தை அறியாதவனாகயிருந்தாலும், இயேசுகிறிஸ்து  அவனுக்குத் தெளிவான பதிலைக்கூறி, அவனுடைய அறியாமையை நீக்குவதற்கு உதவிபுரிகிறார். தோமா இயேசுவிடம் இரண்டு கேள்விகளைக் கேட்கிறான். அவர் போகும் இடத்தைப்பற்றியும், அதற்கான வழியைப்பற்றியும்  தோமா இயேசுவிடத்தில் கேட்கிறான். இயேசுகிறிஸ்து அவனுடைய இரண்டு கேள்விகளுக்குமே பதில் கூறுகிறார். 


சீஷர்கள்  இயேசுகிறிஸ்துவை அறிந்திருக்கிறார்கள். அவரே வழியாகயிருக்கிறார். அவர்கள் பிதாவையும் அறிந்திருக்கிறார்கள். பிதாவே ஆதியும் அந்தமுமாகயிருக்கிறவர். ஆகையினால்தான் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் ""நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள்'' என்று கூறுகிறார். தேவனிடத்தில் விசுவாசம் வைக்கும்போது அவரே எல்லாவற்றிற்கும் ஆதியும் அந்தமுமாகயிருக்கிறார் என்று நாம் நம்பவேண்டும். இயேசுகிறிஸ்துவிடத்தில் நாம் விசுவாசம் வைக்கும்போது அவரே வழியாகயிருக்கிறார் என்று விசுவாசத்தோடு அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்.


தாமே வழியாகயிருப்பதை இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷருக்கு வெளிப்படுத்திக் கூறுகிறார். ""நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்'' என்று இயேசு சீஷர்களிடம் கூறுகிறார். இயேசுகிறிஸ்துவே நம்முடைய மத்தியஸ்தராகயிருக்கிறார். தம்முடைய மத்தியஸ்த ஊழியத்தில் இயேசுகிறிஸ்து வழியாகவும், சத்தியமுமாகவும், ஜீவனுமாகவும் இருக்கிறார். 


இயேசுகிறிஸ்துவே வழியாகயிருக்கிறார். இயேசுகிறிஸ்துவில் தேவனும் மனுஷரும் சந்திக்கிறார்கள். இருவரும் இணைக்கப்படுகிறார்கள். ஜீவவிருட்சத்திற்கு அறியாமையின் வழியில்  நம்மால் போகமுடியாது. அந்த விருட்சத்திற்குப் போக இயேசுகிறிஸ்து வேறொரு வழியாகயிருக்கிறார். சீஷர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து கிறிஸ்துவைப் பின்பற்றும்போது, சீஷர்கள் ஒருபோதும் வழிமாறிப்போய்விடமாட்டார்கள். இயேசுகிறிஸ்துவே வழியாகயிருப்பதினால், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள், சரியான வழியிலேயே போய்க்கொண்டிருக்கிறார்கள். 


இயேசுகிறிஸ்துவே சத்தியமாகயிருக்கிறார். சத்தியம் என்பது தவறுக்கும் பொய்க்கும் எதிரானது. நாம் சத்தியத்தைப்பற்றி விசாரிக்கும்போது, சத்தியத்தைத்தான் நாம் கற்றுக்கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்துவில்தான் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள முடியும். சத்தியம் என்பது ஏமாற்றுத்தனத்திற்கும், மாய்மாலத்திற்கும் எதிராக உள்ளது. சத்தியம் என்பது சத்தியமாகவே இருக்கும். இயேசுகிறிஸ்து சத்தியமாகவே இருக்கிறார். அவரிடத்தில் பொய்யோ, மாய்மாலமோ இல்லை.


இயேசுகிறிஸ்துவே ஜீவனாகயிருக்கிறார். இயேசுகிறிஸ்துவிலும், இயேசுகிறிஸ்து மூலமாகவும் மாத்திரமே நாம் தேவனுக்குள் ஜீவனுள்ளவர்களாகயிருக்கிறோம். கிறிஸ்துவின் மூலமாகவே நாம் தேவனில் பிழைத்திருக்கிறோம். இயேசுகிறிஸ்துவே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார். அவரே ஆதியும், மத்தியமும், அந்தமுமாயிருக்கிறார். அவரே மெய்யான ஜீவனுள்ள வழியாகயிருக்கிறார். இந்த வழியில் சத்தியமும் ஜீவனும் இருக்கிறது. இந்த வழியின் அந்தத்திலும் சத்தியமும் ஜீவனும் இருக்கிறது.  இயேசுகிறிஸ்துவே ஜீவனுக்குப்போகிற மெய்யான வழியாகயிருக்கிறார். மற்ற வழிகள் சில சமயங்களில் சரியான வழிகள் போலத் தெரியலாம். ஆனால் முடிவில் அந்த வழி நம்மை ஜீவனுக்கு வழிநடத்துவதற்குப் பதிலாக, மரணத்திற்கு வழிநடத்தும் மரணவழியாக இருக்கும். 


இயேசுகிறிஸ்துவினாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரமுடியாது. பாவத்தில் விழுந்த மனிதன் தன்னுடைய சுயபக்தியினாலோ, சுயசித்தத்தினாலோ, சுயசுத்தத்தினாலோ  பிதாவாகிய தேவனிடத்தில் வரமுடியாது. பாவியான மனுஷன் தேவனைத் தன்னுடைய பிதா என்று அழைக்க முடியாது.  இயேசுகிறிஸ்துவே தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியஸ்தராகயிருக்கிறார். அவர் மூலமாக மாத்திரமே நம்மால் பிதாவினிடத்தில் வரமுடியும்.  இயேசுவினாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.


இயேசு கிறிஸ்து எவ்வாறு வழியாக இருக்கிறார்


1. தேவனிடத்திற்குச் செல்லும் ஒரே வழி (மத் 7:14)  

      

2. தப்பிச்செல்லும் வழி (1கொரி 10:13) 


3. பரிசுத்தத்திற்குச் செல்லும் வழி (எபி 9:8-15)


4. புதிய ஜீவனுள்ள வழி (எபி 10:20) 


5. சத்தியத்தின் வழி (2பேதுரு 2:2) 


6. சரியான வழி

 (2பேதுரு 2:15)


7. நீதியின் வழி  

(2பேதுரு 2:21)    


என்னை அறிந்தீர்களானால்


என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார் (யோவா 14:7).


 பிதாவாகிய தேவனே ஆதியும் அந்தமுமாகயிருப்பதை இயேசுகிறிஸ்து தெளிவுபடுத்துகிறார். ""என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்'' என்று தம்முடைய சீஷர்களிடத்தில் கூறுகிறார். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் அவரோடுகூட சுமார் மூன்று வருஷமாக இருக்கிறார்கள். ஆனாலும் இயேசுகிறிஸ்துவுக்கும் தங்களுக்குமுள்ள ஐக்கியத்தை அவர்களால் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. தங்களோடு கூடயிருக்கும் இயேசுகிறிஸ்துவையே அவர்கள் இன்னும் சரியாக அறிந்துகொள்ளவில்லை. ஆகையினால்தான் இயேசுகிறிஸ்து அவர்களிடத்தில் ""என்னை அறிந்தீர்களானால்'' என்று கேட்கிறார்.


சீஷர்கள் இயேசுகிறிஸ்துவை அறிந்திருக்கிறார்கள். ஆனால் அவரைப்பற்றி அவர்கள் அறிந்திருப்பது போதாது. இயேசுகிறிஸ்துவை எப்படி அறிந்துகொள்ளவேண்டுமோ அப்படி அவர்கள் இன்னும் அறிந்துகொள்ளவில்லை. அவர்களுடைய அறியாமை இயேசுகிறிஸ்துவுக்கு நன்றாகத் தெரிகிறது. ஆகையினால்தான் இயேசு அவர்களிடம் ""என்னை அறிந்தீர்களானால்'' என்று கூறுகிறார். யூதர்கள் இயேசுகிறிஸ்துவிடம் ஒரு சமயம் ""உம்முடைய பிதா எங்கே'' என்று கேட்டார்கள். இயேசுகிறிஸ்து அவர்களுக்குப் பிரதியுத்தரமாக ""என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள். நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள்'' என்று கூறியிருக்கிறார் (யோவா 8:19). இயேசுகிறிஸ்து யூதர்களுக்குக் கூறிய அதே வாக்கியத்தையே, இப்போது இங்கு  தம்முடைய சீஷர்களுக்கும் கூறுகிறார். 


இயேசுகிறிஸ்துவைப்பற்றி யூதர்களும் அறியவில்லை, அவருடைய சீஷர்களும் அறியவில்லை. யூதர்கள் ஒளியைப் பகைக்கிறார்கள். சத்தியத்தை வேண்டுமென்றே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் இருளின் பிள்ளைகள். ஆகையினால் ஒளியைப் பகைத்து வெளிச்சத்திற்கு வர மறுக்கிறார்கள்.  


சீஷர்களோ வெளிச்சத்தின் பிள்ளைகள். சத்தியம் இவர்களுக்கு விளங்கும்படியாக அறிவிக்கப்பட்டால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள். இவர்கள் இப்போது சத்தியத்தைப்  புரிந்துகொள்ளாமல்  ஆவிக்குரிய பலவீனத்தில் இருக்கலாம். புரிந்துகொள்ள முடியாதபடி இவர்களுடைய அறிவு மந்தமாகயிருக்கலாம். சத்தியத்தைப் புரிந்துகொள்ளக்கூடாது என்னும் தீர்மானம் எதுவும் இவர்களிடத்தில் இல்லை.  ஆகையினால் இயேசுகிறிஸ்து தம்மைப்பற்றி இன்னும் அதிகமாகத் தம்முடைய சீஷருக்கு வெளிப்படுத்துகிறார். ""இது முதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்'' என்று தம்முடைய சீஷர்களிடத்தில் கூறுகிறார்.


இயேசுகிறிஸ்துவின் முகத்தில் நாம் தேவனுடைய மகிமையைக் காணலாம். சீஷர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியுமென்று நினைக்கிறார்கள். ஆனால் தங்களோடு கூடவேயிருக்கும் இயேசுகிறிஸ்துவைப்பற்றி இவர்களால் இன்னும் சரியாக அறிந்துகொள்ள முடியவில்லை. தங்களிடத்தில் போதுமான கிருபையும் ஞானமும் இல்லையென்று சீஷர்கள் நினைக்கிறார்கள். ஆனால் மெய்யாகவே, அவர்கள் நினைப்பதற்கும் அதிகமாக, அவர்களிடத்தில் தேவனுடைய கிருபையும், தேவனைப்பற்றிய ஞானமும் நிரம்பியிருக்கிறது.   


பிதாவை எங்களுக்குக் காண்பியும்


பி-ப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான் (யோவா 14:8).  


இயேசுகிறிஸ்து போகிற இடத்தையும் வழியையும் அறிந்துகொள்ள வேண்டுமென்று தோமா ஆர்வமாயிருக்கிறான். பிலிப்புவோ பிதாவைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்று ஆவலாகயிருக்கிறான். சத்தியத்தை இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள வேண்டும் என்றும், தனக்கு இன்னும் அதிகமான வெளிச்சம் வேண்டும் என்றும் பிலிப்பு விரும்புகிறான். தன்னுடைய ஆர்வத்தின் மிகுதியால் பிலிப்பு இயேசுவினிடத்தில் ""ஆண்டவரே பிதாவை எங்களுக்குக் காண்பியும்'' என்று கேட்கிறான். ""அது எங்களுக்குப் போதும்'' என்றும் கூறிவிடுகிறான். பிதாவைப் பார்க்கவேண்டும் என்னும் ஆர்வம் சீஷர்களிடத்தில் காணப்படுகிறது. பிதாவை ஒருமுறை பார்த்தால் மாத்திரம்கூட, அது தங்களுக்குப் போதுமென்று  பிலிப்பு சொல்லுகிறான். 


தேவனைப்பற்றிய அறிவில், நாம் அவரை நம்முடைய பிதாவாகக் காணும்போது, நம்முடைய ஆத்துமா திருப்தியடையும்.  பிதாவைத் தரிசிப்பது இந்த பூமியின்மேல் பரலோகம் வந்து இறங்குவதுபோல இருக்கும். அந்தப் பிதாவைத் தங்களுடைய சரீரப்பிரகாரமான கண்களினால் பார்க்கவேண்டும்  என்று பிலிப்பு  விரும்புகிறான்.  பிலிப்புவின் கேள்வி அவனுடைய விசுவாசத்தின் பலவீனத்தையும், சுவிசேஷத்தை அவன் இன்னும் புரிந்துகொள்ளாமலிருக்கும் அறியாமையையும்  காண்பிக்கிறது. பிதாவைப் பற்றி சுவிசேஷத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. எழுதப்பட்டிருப்பதற்கு மிஞ்சி நாம் எண்ணவேண்டியதில்லை. நம்முடைய விசுவாசத்தை உறுதிபண்ணுவதற்கு தேவன் வெளிப்படுத்தியிருக்கும் சத்தியமே போதுமானது.  மனுஷப்பிரகாரமாகச் சிந்தித்து, தேவையில்லாமல் விவாதம்பண்ணி, ஆராய்ச்சிபண்ணி, தேவனுடைய சத்தியத்தை உறுதிபண்ண வேண்டும் என்னும் அவசியமில்லை. இயேசுகிறிஸ்துவின் வார்த்தை சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறது. கிறிஸ்துவின் வார்த்தையை விசுவாசிக்கும்போது நம்முடைய ஆத்துமாவிற்குள் ஜீவன் உண்டாகும். நம்முடைய விசுவாசம் கிறிஸ்துவின் வார்த்தையினால் உறுதிபண்ணப்படும். 


என்னைக் கண்டவன் பிதாவைக்கண்டான்


அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?  (யோவா 14:9)


பிலிப்பு இயேசுவிடம் ""ஆண்டவரே பிதாவை எங்களுக்குக் காண்பியும்'' என்று கேட்கிறான். அதற்கு இயேசுகிறிஸ்து ""பிலிப்புவே  இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூடயிருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக்கண்டான். அப்படியிருக்க பிதாவை எங்களுக்குக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்''? என்று கேட்கிறார். 


இயேசு கிறிஸ்து பிலிப்புவிடம் பேசும்போது, அவனை இரண்டு காரியங்களுக்காக கடிந்துகொள்கிறார். 


அவையாவன: 


1. இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுடனே இவ்வளவு காலம் இருந்தும், பிலிப்பு இயேசுவை அறியவில்லை.


 2. பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று தகாதவிதமாய் ஜெபம்பண்ணுகிறான்.


பிலிப்பென்பவன் அந்திரேயா, பேதுரு என்பவர்களுடைய  ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான்.  இயேசுகிறிஸ்துவைப்பற்றி ஆரம்பத்தில் பிலிப்பு சொல்லும்போது ""நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம், யோசேப்பின் குமாரனும் நாசரேத்து ஊரானுமாகிய இயேசுவே அவர்'' என்று நாத்தான்வேலிடம் சாட்சியாக அறிவிக்கிறான் (யோவா 1:45). சீஷர்கள் இயேசுவைத் தேவனுடைய குமாரனென்றும், இஸ்ரவேலின் ராஜா என்றும் ஆரம்பத்திலேயே அறிக்கை செய்தார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவில் பிதா இருப்பதை பிலிப்புவும் மற்ற சீஷர்களும் இன்னும் அறியாதிருக்கிறார்கள்.


இரண்டு நண்பர்கள் ஓர் ஊரில் பல வருஷங்களாக இருந்துவிட்டு, அவர்கள் வேறு ஊருக்குப்பிரிந்துபோகும்போது, ஒருவருக்கொருவர் கடிதத்தொடர்பு வைத்துக்கொண்டு, தங்களுடைய நட்பை வளர்த்துக்கொள்கிறார்கள். இயேசுகிறிஸ்து இந்தப் பூமியிலிருந்து பரலோகத்திலிருக்கும்  தம்முடைய பிதாவினிடத்திற்குப் போகும்போது,  தம்முடைய சீஷர்கள் தம்மோடு ஐக்கியமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். சீஷர்கள் தங்களுடைய ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர்கள் தம்மோடு பேசவேண்டும் என்றும், அவர்களுடைய சந்தோஷத்தையும், துக்கத்தையும், தேவைகளையும் அவர்கள் தம்மோடு பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று இயேசுகிறிஸ்து விரும்புகிறார்.  அவர் இந்தப் பூமியில் இருந்தபோது, சீஷர்களின் தேவைகளைச் சந்தித்ததுபோலவே, இப்போது அவர் தம்முடைய பிதாவோடு இருக்கும்போதும், அவர்களுடைய தேவைகளைச் சந்தித்து, அவர்களைப் பராமரிக்கச் சித்தமுள்ளவராக இருக்கிறார். 


தம்முடைய சீஷர்கள் தம்மோடு பேசவேண்டும் என்று இயேசுகிறிஸ்து விரும்புகிறார். ஜெபத்தின் மூலமாக சீஷர்கள் தம்மிடத்தில்  விண்ணப்பம் பண்ணுவதை இயேசுகிறிஸ்து கேட்கிறார். இயேசுகிறிஸ்து பேசுவதை சீஷர்களும் தங்களுடைய ஆவியினால் கேட்கிறார்கள். இயேசுகிறிஸ்து அன்று சீஷர்களுக்குக் கொடுத்த அதே வாக்குத்தத்தம், இன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து நம்மிடத்திலும் ""என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்'' என்று வாக்குப்பண்ணுகிறார். இந்த வாக்குத்தத்தை நாம் பயன்படுத்தி, மிகுந்த பயபக்தியோடு நம்முடைய தேவைகளை இயேசுகிறிஸ்துவிடத்தில் ஜெபத்தோடு விண்ணப்பம்பண்ணிக் கேட்கவேண்டும்.


சீஷர்கள் இயேசுகிறிஸ்துவிடத்தில் ஜெபம்பண்ணிக் கேட்கும்போது, தாங்கள் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்பதுபோல அதிகாரத் தோரணையோடு கேட்கக்கூடாது. மிகுந்த பணிவோடும், பயபக்தியோடும் தங்களுடைய தேவைகளை விண்ணப்பம்பண்ணவேண்டும். ""ஆண்டவரே உம்முடைய கிருபை எங்களுக்குக் கிடைக்காவிட்டால்,            நாங்கள் நிர்மூலமாகிவிடுவோம்'' என்பதுபோல பணிவோடு விண்ணப்பம்பண்ணவேண்டும். 


இயேசுகிறிஸ்து நம்மிடத்தில் கூறும்போது ""என் நாமத்தினால் நீங்கள் எதைக் கேட்டாலும் நான் அதைச் செய்வேன்'' என்று கூறுகிறார். அவர் நமக்கு ஒரு சுயதீன உரிமையைக் கொடுக்கிறார். ""எதைக் கேட்டாலும்'' என்னும் வாக்கியத்திற்கு, நமக்கு நன்மையானது எதுவோ, நமக்குரியது எதுவோ, நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது எதுவோ, நமக்கு தேவனுடைய சித்தம் எதுவோ அதையே கேட்கவேண்டும். நம்முடைய சூழ்நிலைகள் மாறலாம். நம்முடைய தேவைகள் மாறலாம். எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா தேவைகளிலும் நாம் இயேசுகிறிஸ்துவின் கிருபாசனத்திற்கு முன்பாக பணிவோடு வருவதற்கு நமக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவும் தம்மிடத்தில் நம்மை அன்போடு வரவேற்கிறார்.


சீஷர்கள் ஜெபம்பண்ணும்போது ""என் நாமத்தினாலே'' கேட்கவேண்டுமென்று இயேசுகிறிஸ்து அவர்களிடம் சொல்லுகிறார். இயேசுகிறிஸ்துவின் பரிந்து பேசுகிற குணாதிசயத்தினால், நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்கும். அவர் பிதாவினிடத்தில் நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்று விசுவாசித்து, அதையே நாம் சார்ந்திருக்கவேண்டும். 


நம்முடைய விண்ணப்பங்களை ""நம்முடைய நாமத்தினால்'' கேட்டால் நாம் ஒன்றும் பெற்றுக்கொள்ளமாட்டோம். ஏனெனில் இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசவில்லையென்றால், நாம் பிதாவின் சமுகத்தில் அந்நியராகவே இருப்போம். நாம் பாவிகளாகயிருக்கிறபடியினால் பரலோகத்தில்  நம்முடைய பெயர்கூட எழுதப்பட்டிருக்காது. நம்முடைய பாவங்களும், நம்முடைய அக்கிரமங்களுமே பரலோகத்தில் குறிக்கப்பட்டிருக்கும். 


இயேசுகிறிஸ்து நமக்காக பரிந்து பேசினால்தான்,        நம்முடைய விண்ணப்பம் பரலோகத்தில் அங்கீகரிக்கப்படும். நாம் பாவிகளாகயிருந்தாலும் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து பரிசுத்தமுள்ளவராகவேயிருக்கிறார். நாம்   பரலோகத்திற்கு அந்நியராகயிருந்தாலும் இயேசுகிறிஸ்து அதன் சொந்தக்காரராகயிருக்கிறார். ஆகையினால் இயேசுகிறிஸ்துவின் நல்ல நாமத்தில் ஜெபிக்கும்போது, நம்முடைய ஜெபம் கேட்கப்பட்டு, நமக்குப் பதில் கொடுக்கப்படுகிறது. 


சீஷர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் கேட்கும்போது, தாங்கள் கேட்டதை  அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். ""என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும்  அதை நான் செய்வேன்'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு வாக்குப்பண்ணுகிறார்  (யோவா 14:13). இந்த வாக்குத்தத்தத்தை மறுபடியுமாக உறுதிபண்ணுகிறார் (யோவா 14:14). இயேசுகிறிஸ்து வாக்குமாறாதவர். தாம் செய்வதாகச் சொன்னதை நிச்சயமாகவே செய்வார். ஒருவவேளை செய்தாலும் செய்வாரென்று நாம் நிச்சயமில்லாமல் நினைக்கவேண்டியதில்லை. அவர் நிச்சயமாவே செய்வார். நாம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஒரு காரியத்தை அவரிடத்தில் கேட்கும்போது, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்து, அவரிடத்தில் நாம் கேட்டுக்கொண்டதைப்  பெற்றுக்கொள்வோம். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் விண்ணப்பத்திற்குச் செவிகொடுப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. குமாரனில் பிதா மகிமைப்படவேண்டும். அதற்காகவே தம்முடைய சீஷர்கள் தம் நாமத்தினாலே எதைக் கேட்கிறார்களோ, அதை அவர்களுக்குச் செய்கிறார். ""உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக'' என்பதே நம்முடைய ஜெபமாக இருக்கவேண்டும். இவ்வாறு ஜெபிக்கும்போது நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்கும். நம்முடைய ஜெபத்தில் தேவைகளை முதலாவதாகச் சொல்லுவதற்குப் பதிலாக, தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும், அவரை ஸ்தோத்தரிக்கவேண்டும். 


தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவதில் நம்முடைய இருதயம் உண்மையுள்ளதாக இருக்குமென்றால், நம்முடைய விண்ணப்பங்கள் எல்லாவற்றிற்கும்  இயேசுகிறிஸ்து பதில் கொடுப்பார். நாம் எதைக் கேட்டாலும் அதை அவர் நமக்குச் செய்வார்.  தம்முடைய சித்தத்தில் இயேசுகிறிஸ்து உறுதியாயிருக்கிறார். குமாரனில் பிதா மகிமைப்படவேண்டும் என்பது கிறிஸ்துவின் சித்தம். நாம் இயேசுவின் நாமத்தினாலே எதைக் கேட்டாலும், அதை அவர் நமக்குச் செய்யும்போது, குமாரனில் பிதா மகிமைப்படுகிறார். 


தேவனுடைய ஞானம், வல்லமை, நன்மை  ஆகியவையெல்லாமே மீட்பராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே மகிமைப்படுகிறது. இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களும் ஊழியர்களும், அவருடைய நாமத்தினாலே பெரிய காரியங்களைச் செய்யும்போது, கிறிஸ்துவின் உபதேசம் உறுதிபண்ணப்படுகிறது, வெற்றி பெறுகிறது.  குமாரனில் பிதா மகிமைப்படுகிறார்.  


விசுவாசிகள் இயேசுகிறிஸ்துவிடம் ஜெபிக்கும்போது அவர் நமது ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கிறார். நம்மை இரட்சிக்கிறார். நமது வியாதிகளைக் குணப்படுத்துகிறார். இதன் மூலமாகப் பிதா இயேசு கிறிஸ்துவில் மகிமைப்படுகிறார். நாம் விசுவாசிக்கும்போது, கேட்பதைப் பெற்றுக் கொள்வோம் என்று சந்தேகப்படாமல் விசுவாசிக்க வேண்டும்.


வேறொரு தேற்றரவாளர் (யோவா 14 : 15-17)


என்னிடத்தில் அன்பாயிருந்தால் 


நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள் 

(யோவா 14:15).


பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதாக இயேசுகிறிஸ்து இங்கு வாக்குப்பண்ணுகிறார். ஆவியானவர் அவர்களுடைய தேற்றரவாளராக இருப்பார். நாம் இயேசுகிறிஸ்துவிடத்தில் அன்பாயிருப்போமென்றால், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவேண்டும்.  நாம் நம்முடைய கடமையைச் செய்யும்போது, நாம் நம்முடைய இருதயம் கலக்கத்தோடிருந்தால், நம்மால் நம்முடைய கடமைகளைச் சரியாகச் செய்யமுடியாது. நமக்குப் பாடுகளும் வேதனைகளும் வரும்போது, நம்முடைய கடமை நமக்கு பெரியதாகத் தெரியாமல், நம்முடைய பாடுகளும் வேதனைகளுமே பெரிதாகத் தெரியும். இயேசுகிறிஸ்துவிடத்தில் சீஷர்கள் மிகவும் அன்பாயிருக்கிறார்கள். அவர் சீஷர்களைவிட்டுப் போகப்போவது அவர்களுடைய இருதயத்தைக் கலங்கப்பண்ணுகிறது. அவர்களுடைய இருதயங்களை வருத்தம் நிரப்புகிறது. 


தம்முடைய சீஷர்கள் தம்மிடத்தில் அன்பாயிருப்பதை இயேசுகிறிஸ்து அறிந்திருக்கிறார். இருதயக் கலக்கத்தினாலும்,  வருத்தத்தினாலும், கண்ணீரினாலும், கவலையினாலும்  இயேசுகிறிஸ்துவின்மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பை அவர்கள் வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, தங்களுடைய அன்பை வெளிப்படுத்த வேண்டும். பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமமானது. கண்ணீரைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலோடு கடமையைச் செய்வது மேன்மையானது. 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம்   ""என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்'' என்று வாக்குப்பண்ணுகிறார். அதைத் தொடர்ந்து இந்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்கு ஒரு நிபந்தனையையும் கொடுக்கிறார். சீஷர்கள் இயேசுகிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்கள் இயேசுவின்மீது அன்பாயிருக்கிறார்கள் என்பது உறுதியாகும்.  


என்றென்றைக்கும் கூட இருக்கும்படி


நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார் (யோவா 14:16).


சீஷர்களுக்கு வேறொரு தேற்றரவாளர்  கொடுக்கப்படுவார். இது புதிய ஏற்பாட்டின் பிரதான வாக்குத்தத்தமாகும். சீஷர்கள் இப்போது  இருதயக் கலக்கத்தோடிருக்கிறார்கள். கண்ணீரிலும் கவலையிலும் நிறைந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஆறுதல் தேவைப்படுகிறது. இவர்களைத் தேற்றுவதற்கு  ஒரு தேற்றரவாளர் தேவைப்படுகிறார். இதற்காக  இயேசுகிறிஸ்து இவர்களுக்குச் சத்திய ஆவியாகிய  வேறொரு தேற்றரவாளரை தந்தருளுவதாக வாக்குப்பண்ணுகிறார்.  இந்தத் தேற்றரவாளர் என்றென்றைக்கும் அவர்களுடனேகூடவே இருப்பார். 


இயேசுகிறிஸ்து தாமே இந்த ஆசீர்வாதத்தை வாக்குப்பண்ணுகிறார். தேற்றரவாளர் என்னும் வார்த்தை இந்த வசனத்திலும்          

1 யோவான் 2:1-ஆவது வசனத்தில்  மாத்திரமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 1யோவான் 2:1-ஆவது வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை ""பரிந்து பேசுகிறவர்'' என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. தேற்றரவாளரே பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராகவும் இருக்கிறார். வேறொரு தேற்றரவாளர் என்னும் வாக்கியத்தை, ""வேறொரு பரிந்து பேசுகிறவர்''  என்று வியாக்கியானம் பண்ணவேண்டும். 


பரிந்து பேசுவதே பரிசுத்த ஆவியானவருடைய ஊழியம். ஆவியானவர் சீஷர்களோடும் மற்றவர்களோடும் கிறிஸ்துவின் பரிந்து பேசுகிறவராகயிருக்கிறார். கிறிஸ்துவின் சித்தத்தையும், எண்ணத்தையும் பரிந்து பேசுவார்.  இந்தப் பூமியில் கிறிஸ்துவின் கரிசனையைப் பாதுகாத்துப் பராமரிப்பார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களோடு இருந்தபோது, அவர் அவர்களுக்காகப் பேசினார். இப்போதோ இயேசுகிறிஸ்து அவர்களைவிட்டுத் தம்முடைய பிதாவினிடத்திற்குப் போகப்போகிறார். இனிமேல்  பிதாவின் ஆவியானவரே அவர்களிலிருந்து பேசுவார். ""பேசுகிறவர்கள் நீங்களல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்''

 (மத் 10:19,20). 


நமக்காக ஒருவர் பரிந்து பேசும்போது, நம்முடைய எண்ணங்களையும் விருப்பங்களையும், இருதயத்தின் பாரங்களையும் குறித்துப் பேசுவார். அவர் நமக்காக சரியாகப் பரிந்து பேசுவாரா என்னும் சந்தேகம் நமக்குத் தேவையில்லை. அவர் நமக்கு வேறொரு போதகராகயிருப்பார். சத்தியத்தை நமக்கு உணர்த்துகிறவராகயிருப்பார். இயேசுகிறிஸ்துவைப் போலவே பரிசுத்த ஆவியானவரும் நமக்கு ஊழியம் செய்வார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களோடு இருந்தபோது அவர் அவர்களுக்குச் சத்தியத்தை உபதேசம்பண்ணினார். அவர்களுடைய கடமைகளைக் குறித்து அவர்களுக்குப் புத்திமதி கூறினார். இப்போது இயேசுகிறிஸ்து அவர்களைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறார். தாம் செய்த ஊழியத்தைத்,  தம்மைப்போலவே செய்வதற்காக, வேறொரு தேற்றரவாளரை அவர்களுக்குத் தந்தருளுகிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களோடு இருந்தபோது, அவர்களுடைய இருதயம் கலங்கியபோதெல்லாம்  அவர்களுக்கு ஆறுதல் சொன்னார். இப்போது  இயேசு அவர்களைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறார். தாம் போனாலும், அவர்களோடு எப்போதும் கூடயிருந்து, அவர்களுக்கு ஆறுதல் சொல்லுகிற வேறொரு தேற்றரவாளரை அவர்களுக்குத் தந்தருளுகிறார்.


பிதாவானவரே பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தருகிறார். இயேசுகிறிஸ்துவை நம்முடைய இரட்சகராக இந்தப் பூமிக்கு அனுப்பின பிதாவானவரே, நம்முடைய தேற்றரவாளரான சத்திய ஆவியானவரையும் அனுப்புகிறார். இந்த ஆசீர்வாதம் நமக்குக் கிடைத்திருக்கும் விதத்தையும் இயேசுகிறிஸ்து விவரிக்கிறார். ""நான் பிதாவை வேண்டிக்கொள்வேன்'' என்று இயேசுகிறிஸ்து  சொல்லும்போது, பிதாவாகிய தேவனும் பரிசுத்த ஆவியானவரை அருளுவதற்கு சித்தமுள்ளவராகயிருக்கிறார் என்பது உறுதியாகிறது. நமக்கும் தேவனுக்கும் இடையே ஒரு மத்தியஸ்தர் வேண்டும். இயேசுகிறிஸ்துவினுடைய மத்தியஸ்தம் பண்ணும்  ஊழியத்தின் கனியாக சத்திய ஆவியானவர் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறார். இயேசுகிறிஸ்து பிதாவை வேண்டிக்கொள்ளவில்லையென்றால், பிதாவானவர் நமக்கு வேறொரு தேற்றரவாளரை  அனுப்பமாட்டார்.   


தேற்றரவாளர் நம்மோடு சிறிது காலம் மட்டும் இருந்துவிட்டு அதன்பின்பு மறைந்துபோய்விடமாட்டார். அவர் என்றென்றைக்கும் நம்முடனேகூட இருப்பார். நமக்கு ஒரு தேற்றரவாளர் தேவையென்பதைக் கூட நாம் அறியாதவர்களாக இருக்கிறோம்.  ஆனாலும் இயேசுகிறிஸ்து நம்மீது கிருபையுள்ளவராக, பிதாவை வேண்டிக்கொள்கிறார். ""அப்பொழுது என்றென்றைக்கும் நம்முடனே கூட இருக்கும்படிக்கு சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை பிதாவானவர் நமக்குத் தந்தருளுவார்''. 


நம்முடைய இருதயம் கலங்கும்போது, தேற்றரவாளர் நம்மை நித்திய காலத்திற்கும் தேற்றுகிறார். அவருடைய ஆறுதலும் தேற்றுதலும் நம்மோடுகூட எப்போதும்  இருக்கும்.   நாம் எந்த இடத்தில் இருந்தாலும் நம்முடைய தேற்றரவாளர் நம்மோடு கூடவேயிருக்கிறார். 


 பரிசுத்த ஆவியானவர் நம்மோடு என்றென்றைக்கும் இருப்பார். நம்மை விட்டு எடுத்துக் கொள்ளப்படமாட்டார். சபை எடுத்துக் கொள்ளப்படும் வரையில் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் நம்மோடு இருப்பார் என்று நினைக்க வேண்டியதில்லை. அவர் இப்போது நம்மோடு இருப்பதுபோலவே, உபத்திரவக் காலத்திலும், ஆயிரம் வருஷ அரசாட்சியிலும் நித்திய காலமாகவும் இருப்பார்.  பரிசுத்த ஆவியானவர் இந்த உலகத்தை விட்டு எடுத்துக் கொள்ளப்பட்டால், மனுஷருக்குப் புதிய ஏற்பாட்டின் ஆசீர்வாதங்கள் எதுவும் கிடைக்காது.


நீங்கள் அவரை அறிவீர்கள்


உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும்  அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள் (யோவா 14:17). 


சத்திய ஆவியானவரே வேறொரு தேற்றரவாளராக இருக்கிறார். சீஷர்கள் அந்தச் சத்திய ஆவியானவரை அறிவார்கள். தேற்றரவாளர் ஆவிக்குரிய வழியில் ஆவிக்குரிய ரீதியாக கிரியை செய்வார். அவர் சத்திய ஆவியாக இருக்கிறார். அவர் சீஷர்களுக்கு  உண்மையுள்ளவராக இருந்து, அவர்களைப் பாதுகாத்து பராமரிக்கும் ஊழியத்தை உண்மையோடு நிறைவேற்றுவார். அவர் அவர்களுக்குச் சத்தியத்தைப் போதிப்பார். சத்திய ஆவியானவர் அவர்களைச் சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார். அதோடுகூட அவர்களுடைய ஊழியத்தின் மூலமாக மற்றவர்களையும் சத்தியத்திற்குள் வழிநடத்துவார். இயேசுகிறிஸ்து சத்தியமாக இருக்கிறார். சத்திய ஆவியானவர் கிறிஸ்துவின் ஆவியானவராக இருக்கிறார். 


உலகம் அந்தச் சத்திய ஆவியானவரை  பெற்றுக்கொள்ளமாட்டாது. ஆனால் சீஷர்களோ  அவரை அறிவார்கள். அவர்கள் சத்திய ஆவியானவரை அறிந்திருப்பதினால், அவர் அவர்களோடே வாசம்பண்ணி அவர்களுக்குள்ளே இருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களும் இந்த உலகமும் இந்த வசனத்தில் வேறு பிரிக்கப்பட்டிருக்கிறது.  சீஷர்கள் இந்த உலகத்திற்குரியவர்களல்ல. இவர்கள் மற்றொரு உலகத்திற்குரியவர்கள். தேவனுடைய சுதந்தரவாளிகள். கர்த்தருடைய பிள்ளைகள். 


ஒரு சிலர் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிக்கொண்டு இதில் ஆசை வைத்திருக்கிறார்கள். இவர்களால் சத்திய ஆவியானவரை பெற்றுக்கொள்ள முடியாது.  இது இவர்களுடைய பரிதாபமான நிலமை. இந்த உலகத்தின் ஆவி எங்கே உயர்த்தப்படுகிறதோ  அங்கே தேவனுடைய ஆவியானவர் இருக்கமாட்டார். உலகத்தின் ஆவிக்குரியவர்கள் தேவனுடையஆவியானவரை வெளியேற்றிவிடுவார்கள். ஆகையினால்தான் இந்த உலகம் சத்திய ஆவியானவரை பெற்றுக்கொள்ளமாட்டாமல் இருக்கிறது. அவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறது.  


ஆவியானவருடைய ஆறுதல்கள் இந்த உலகத்திற்குப் பைத்தியமாகத் தோன்றுகிறது. கிறிஸ்துவின் சிலுவையும், சிலுவையைப்பற்றிய உபதேசமும் இந்த உலகத்திற்குப் பைத்தியமாகவே இருக்கிறது. இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகளிடம் சத்திய ஆவியானவரைப்பற்றியும், அவருடைய  கிரியைகளைப்பற்றியும் நாம் பேசும்போது, அவர்கள் நம்மைப் பைத்தியக்காரரைப்போலப் பார்க்கிறார்கள். இப்பிரபஞ்சத்தின் ஜனங்களால்  சத்திய ஆவியானவரைக் காணவும் முடியாது. அறியவும் முடியாது. 


ஆவியானவரைப் பெற்று  அனுபவித்தால்தான் அவரை அறியமுடியும். கிறிஸ்துவின் சீஷர்கள் சத்திய ஆவியானவரை அறிந்திருக்கிறார்கள். ஆகையினால் அவர் அவர்களுடனே வாசம்பண்ணி அவர்களுக்குள்ளே இருக்கிறார். இயேசுகிறிஸ்துவும் அவர்களோடு வாசம்பண்ணுகிறார். இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாக இருப்பதினால், சீஷர்களால் சத்திய ஆவியானவரை அறிந்துகொள்ள முடிகிறது. கிறிஸ்துவின் வாக்குத்தத்தங்களை நம்புகிற பரிசுத்தவான்கள் ஆவிக்குரிய அனுபவங்களில் வளர்ச்சி பெறுவார்கள். 


சத்திய ஆவியானவர் சீஷர்களுடனே வாசம்பண்ணுகிறார். அவர்களுக்குள்ளே இருக்கிறார். தம்முடைய வாசஸ்தலத்தை ஆவியானவர் மாற்றிக்கொள்வதில்லை. ஆவியானவரை அறிந்திருக்கிறவர்கள் அவரைத்  தங்களுக்குள் எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பதையும் அறிந்திருப்பார்கள். அவரை அன்போடு வரவேற்று தங்களுடனே வாசம்பண்ணுமாறு அழைப்பார்கள். அவர்களுடைய அழைப்பை ஏற்று சத்திய ஆவியானவர் அவர்களுக்குள்ளே இருப்பார். செடியும் அதன் கொடியும் இணைந்திருப்பதுபோல சத்திய ஆவியானவரும் கிறிஸ்துவின் சீஷர்களும் இணைந்திருப்பார்கள்.  இந்த ஐக்கியத்தைப் பிரிக்க முடியாது. 


பரிசுத்த ஆவியானவரின் வரம் ஒரு விசேஷித்த வரமாகும். கிறிஸ்துவின் சீஷர்கள்மீது ஆவியானவரின் வரம் விசேஷித்த விதமாக வந்து இறங்குகிறது. உலகத்தாருக்குக்  கிடைக்காத     ஆவியானவரின் வரம், கிறிஸ்துவின் சீஷர்களுக்கு மாத்திரமே வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. சத்திய ஆவியானவர் கொடுக்கும் ஆறுதல்களை வேறு எந்த ஆசீர்வாதத்தோடும் ஒப்பிட முடியாது.  மிகவும் விசேஷித்த வழியில் ஆவியானவர் கிரியை செய்வார். காற்றின் சத்தத்தை  நாம் கேட்க முடியாது. ஆனால் காற்று வீசுகிறதை நம்மால் உணரமுடியும். அதுபோலவே பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் இருக்கும். அதிக ஆரவாரமில்லாமல், சத்தமில்லாமல், அமைதியாகக்  கிரியை செய்வார். அவருடைய கிரியை அற்புதமாகவும் பலத்ததாகவும் இருக்கும். சத்திய ஆவியானவர் பலத்த கிரியையைச் சீஷர்களுக்குள்ளே செய்கிறார். 


அவிசுவாசிகள்   பரிசுத்த ஆவியானவரைக் காணவும், புரிந்து கொள்ளவும் மறுக்கிறார்கள்.  பரிசுத்த ஆவியானவரைத் தன்னுடைய ஜீவியத்தில் பெற்றுக் கொண்டு, அவரைக் கிரியை செய்வதற்கு இவர்கள் அனுமதிப்பதில்லை.  


பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளுடைய உள்ளத்தில் வாசம் பண்ணுகிறார். அவர்களுக்குள் இருக்கிறார். ஆகையினால் விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவரை அறிந்திருக்கிறார்கள். இயேசு  கிறிஸ்து இந்த வசனத்தில் தமது சீஷர்களிடத்தில் பேசுகிறார். இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் ஒரு குறிப்பிட்ட அளவு கொடுக்கப்பட்டிருக்கிறார். இயேசு கிறிஸ்து பரமேறிய பின்பு, இவர்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை நிறைவாகப் பெற்றுக் கொள்வார்கள்.


பரிசுத்த ஆவியானவர் சீஷர்களோடு இருந்தார்.   அதுமட்டுமல்லாமல் ஆவியானவர் அவர்களுக்குள்ளும் இருந்தார்.  பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் இருந்தாலும், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பூரணமாகப் பெற்றுக் கொள்ளவில்லை.  இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை அளவில்லாமல் கொடுப்பார். 


இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியம்

 (யோவா 14 : 18-24)


உங்களிடத்தில் வருவேன்


நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன்  (யோவா 14:18).  


சிநேகிதர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்துபோகும்போது பிரியாவிடை பெற்றுக்கொள்வார்கள். தங்களுக்காக ஜெபிக்குமாறும், தங்களோடு தொடர்பு கொள்ளுமாறும் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வார்கள். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டுப் பிரிந்து இப்போது தமது பிதாவினிடத்திற்குப் போகப்போகிறார். இயேசுகிறிஸ்து சீஷர்களைவிட்டுப் போனாலும், அவர் அவர்களை மறந்துவிடமாட்டார். அவர்களைத் திக்கற்றவர்களாகவிடமாட்டார். ஒரு சிலர் தங்கள் பழைய சிநேகிதர்களை நீண்ட நாட்களாகப் பார்க்கவில்லையென்றால் அவர்களை மறந்துவிடுவார்கள். இயேசுகிறிஸ்து மனுஷரைப்போலத் தம்முடைய சிநேகிதரை மறந்துவிடமாட்டார். 


தாம் பிதாவினிடத்திற்குப் போனாலும், இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைத் தொடர்ந்துபாதுகாத்து பராமரிப்பதாக வாக்குப்பண்ணுகிறார். ""நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன். உங்களிடத்தில் வருவேன்'' என்று ஆறுதலாகக் கூறுகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டு  முழுவதுமாகப் புறப்பட்டுப்போய்விடவில்லை. திரும்பி வரக்கூடாதவாறுஅவர்களைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்துபோய்விடவில்லை. தம்முடைய பிரத்தியட்சமான சரீரத்தில் இயேசுகிறிஸ்து அவர்களைவிட்டுப் பிரியப்போகிறார். அவருடைய சரீரம் அவர்களைவிட்டுப் பிரிந்துபோனாலும், இயேசுகிறிஸ்துவின் கிருபையும், இரக்கமும், ஆறுதலும் அவர்களைவிட்டு ஒருபோதும் பிரிந்துபோவதில்லை.


இயேசுகிறிஸ்துவை மெய்யாகவே விசுவாசிக்கிறவர்களுக்குத் தங்கள் வாழ்க்கையில்  பலவிதமான அனுபவங்கள் உண்டாகும். பலசமயங்களில் சந்தோஷத்தோடிருப்பார்கள் சில சமயங்களில் மிகவும் வருத்தத்தோடிருப்பார்கள். அந்த வருத்தத்தின் நடுவிலும் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்கு ஆறுதலைக் கொடுப்பார். நம்மைத் திக்கற்றவர்களாகக் கைவிட்டுவிடமாட்டார். தம்மை ""அப்பா பிதாவே'' என்று அழைக்கும்  புத்திர சுவீகாரத்தின் ஆவியை நமக்குக் கொடுத்திருக்கிறார்.  


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் ""உங்களிடத்தில் வருவேன்'' என்று கூறுகிறார். ஆகையினால் அவர் தம்முடைய சீஷர்களைவிட்டு முற்றிலுமாகப் பிரிந்துபோய்விடவில்லை. இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்தாலும், அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து தம்முடைய சீஷர்களிடத்திற்கு வருவார். உயிர்த்தெழுந்த இயேசு பரமேறிப்போனாலும், அவர் ஆவியானவராக, எப்பொழுதும் நம்மோடு கூடயிருக்கிறார். அவருடைய தெய்வீகப் பிரசன்னம் அவருடைய அன்புக்கு அடையாளமாக இருக்கிறது. தமது கிருபையினால் அவர் நம்மைச் சந்திக்கிறார். சந்தித்துக்கொண்டேயிருக்கிறார். அவர் மறுபடியும் நம்மைச் சந்திப்பதற்கு பிரத்தியட்சமாக வரப்போகிறார். இப்பிரபஞ்சத்தில்  நாம் பாடுகளையும் வேதனைகளையும் அனுபவித்து கவலையோடிருந்தாலும், இயேசுகிறிஸ்து ""உங்களிடத்தில் வருவேன்'' என்று  கூறியிருக்கிற வார்த்தையை அனுதினமும் தியானித்துப் பார்த்து  ஆறுதலடைய வேண்டும். அவர் நம்மை திக்கற்றவர்களாக  விட்டுவிட்டுப் போய்விடுகிறவரல்ல. 


திக்கற்றவர்கள்என்பதன் கிரேக்க வார்த்தை ""ஆர்பனோஸ்''  இந்த வாக்கியம் இந்த வசனத்திலும், யாக் 1:27 ஆவது வசனத்திலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு போதகருக்கு அவருடைய சீஷர்கள் அவருக்குப் பிள்ளைகளாக இருப்பார்கள். போதகர் மரித்த பின்பு, சீஷர்கள் அனாதைகளைப் போன்று இருப்பார்கள். இயேசு தமது சீஷர்களைப் பிள்ளைகளே என்று அழைக்கிறார். ஆகையினால், இப்பொழுது தாம் போன பின்பு அவர்களை திக்கற்றவர்களாய் விடேன் என்று வாக்குப் பண்ணுகிறார்.


என்னைக் காண்பீர்கள்


இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்            (யோவா 14:19).  


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போனாலும், சீஷர்கள் அவரோடு தொடர்ந்து ஐக்கியமாயிருப்பார்கள். ""இன்னும் கொஞ்சக்காலத்தில் உலகம் என்னைக் காணாது'' என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். இப்பிரபஞ்சம் இயேசுகிறிஸ்துவை அதிகமாகப் பார்த்துவிட்டதாக நினைத்து திருப்தியோடிருக்கிறது. இயேசுகிறிஸ்து தங்களுக்குத் தேவையில்லையென்று கூக்குரலிடுகிறது. ""இயேசுவைச் சிலுவையிலறையும்'' என்று ஓலமிடுகிறது. அவர்கள் கேட்டுக்கொண்ட பிரகாரமே இயேசுகிறிஸ்து அவர்களைவிட்டு அகன்றுபோய்விடுவார். அதன்பின்பு இந்த உலகம் அவரைக் காணாது. தங்களுடைய அழிவை இந்த உலகத்தார் தாங்களே தேடிக்கொண்டார்கள். இந்த உலகம் அவரைக் காணாவிட்டாலும், கிறிஸ்துவின் சீஷர்கள் அவரைக் காண்பார்கள். இயேசுகிறிஸ்து தமது சீஷர்களைவிட்டுக் கடந்துபோய்விட்டாலும் அவர்கள் அவரோடுகூட ஐக்கியமாகவே இருப்பார்கள். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் ""நீங்களோ என்னைக் காண்பீர்கள்'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்து  இந்த உலகத்தில் ஊழியம் செய்த நாட்களில், சீஷர்கள் அவரை அவருடைய பிரத்தியட்சமான சரீரத்தில்  கண்டார்கள். இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்தாலும், அவர் மூன்றாம் நாளில் மறுபடியும் உயிரோடு எழும்பினார். அவர் உயிர்த்தெழுந்த பின்பு சீஷர்கள் அவரை மறுபடியும் அவருடைய சரீரத்தில் கண்டார்கள்.  கர்த்தரைப் பார்த்தபோது சீஷர்கள் சந்தோஷப்பட்டார்கள். உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து அவர்கள் மத்தியிலிருந்து பரமேறிப்போனார். அவர் பரமேறிப்போனபின்பும்  சீஷர்கள் அவரைத் தங்கள் விசுவாசத்தின் கண்களால் கண்டார்கள். இந்த உலகத்தால் அவரைக் காணமுடியவில்லை. ஆனால் சீஷர்களோ அவரைக் கண்டார்கள்.


இயேசுகிறிஸ்து பிழைக்கிறபடியினால் அவருடைய சீஷர்களும் பிழைப்பார்கள். இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிக்கப்போகிறார் என்னும் கவலை சீஷர்களுடைய உள்ளத்தில் நிரம்பியிருக்கிறது. அவர் மரிக்கும்போது தாங்கள் என்ன செய்யவேண்டுமென்று சீஷர்களுக்குத் தெரியவில்லை. அவரோடுகூட மரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து மரிக்கப்போகிறார் என்று கலங்கிக்கொண்டிருக்கும் சீஷர்களிடம், ""நான் பிழைக்கிறேன்'' என்று கூறுகிறார். அவர் பிழைக்கப்போவது மட்டுமல்ல, இப்போது பிழைக்கவராகவே இருக்கிறார்.  


நமக்குப் பாடுகளும் வேதனைகளும் வரும்போது, ""நம் மீட்பர் உயிரோடிருக்கிறார்'' என்னும் சத்தியத்தை நினைவுகூரவேண்டும்.  அது நமக்கு ஆறுதலான சத்தியம்.  இயேசுகிறிஸ்து நம்மை திக்கற்றவர்களாக விட்டுவிடமாட்டார். அவர் பிழைக்கிறபடியினால்  நாமும் பிழைப்போம். விசுவாசிகளின் ஜீவியம் இயேசுகிறிஸ்துவின் ஜீவியத்தோடு இணைந்திருக்கிறது. அவர் எது வரையிலும் ஜீவிக்கிறாரோ அது வரையிலும் நாமும் ஜீவிப்போம். நாம் நம்முடைய விசுவாசத்தினால்  இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாக இருக்கும்போது அவரோடுகூட நாமும் பிழைப்போம். நம்முடைய ஜீவியம் இயேசுகிறிஸ்துவிடத்தில் மறைவாக இருக்கிறது.  தலையும் வேரும் உயிரோடிருக்குமென்றால், அவயவங்களும் கிளைகளும் உயிரோடிருக்கும். தலையாகிய கிறிஸ்து உயிரோடிருக்கும்போது அவருடைய அவயவங்களாகிய நாமும் உயிரோடிருப்போம். செடியாகிய கிறிஸ்து உயிரோடிருக்கும்போது செடியின் கொடிகளாகிய நாமும் உயிரோடிருப்போம். 


 இன்னும் இருபது மணி நேரத்தில் இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்துப் போவார். அவரைச் சிலுவையிலிருந்து கீழே இறக்கி, கல்லறையில் அடக்கம்பண்ணுவார்கள். அதன் பின்பு, அவிசுவாசிகளான இந்த உலகம் இயேசு கிறிஸ்துவைக் காணாது.


இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுகிற படியினால், அவருடைய சீஷர்களும் உயிர்த்தெழுவார்கள். அவருடைய உயிர்த்தெழுதல் சீஷர்கள் விசுவாசிக்கும் சத்தியங்களை நிரூபிப்பதாக உள்ளது.ஆகையினால், உலகம் இயேசு கிறிஸ்துவைக் காணாவிட்டாலும், சீஷர்கள் அவரைக் காண்பார்கள்.


அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள் 


நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்        

(யோவா 14:20).


சீஷர்கள் கலங்கின இருதயத்தோடிருக்கிறார்கள்.  இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். தாம் அவர்களைவிட்டுப் போனபின்பு, உலகம் அவரைக் காணாது என்றும், சீஷர்கள் அவரைக் காண்பார்கள் என்றும் கூறி அவர்களை உற்சாகப்படுத்துகிறார். தாம் பிழைக்கிறபடியினால் அவர்களும் பிழைப்பார்கள்  என்று அவர்களுக்கு விசுவாசமுள்ள வார்த்தைகளைக் கூறுகிறார். அதோடு ""நான் என் பிதாவிடம், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்'' என்றும் அவர்களிடத்தில் ஆறுதலாகச் சொல்லுகிறார். இது மகிமையின் இரகசியம். பரலோகத்தில்தான் இந்த இரகசியத்தின் வியாக்கியானம் நமக்குப் பூரணமாகக் கொடுக்கப்படும். இப்போது இதன் முழுமையான தாற்பரியம் நமக்கு வெளிப்படுத்தப்படவில்லை. இந்த வாக்கியத்தின் பிரகாரம் நாம் எப்போது ஆசீர்வதிக்கப்படுகிறோமோ, அப்போது இதன் இரகசியம் நமக்கு வெளிப்படுத்தப்படும்.


பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரி அப்போஸ்தலர்கள்மீது ஊற்றப்பட்டபோது, அவர்கள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை விசேஷித்த வழியில் பெற்றுக்கொள்கிறார்கள்.  பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு சீஷர்களுடைய மனக்கண்கள் பிரகாசமுள்ளதாக திறக்கப்படுகிறது. அவர்கள் தங்களைத் தாங்களே பார்த்து தங்களைப்பற்றி புரிந்துகொள்வதோடு, தங்களுடைய பிரகாசமுள்ள மனக்கண்களினால் தேவனையும்  அவருடைய சத்தியத்தையும், உபதேசத்தையும்  விசுவாசத்தோடு பார்க்கிறார்கள். 


குருடனாகயிருந்தவனை இயேசுகிறிஸ்து இரண்டாந்தரம் தொட்டு, அவனுக்குத் தெளிவான பார்வையைக் கொடுத்ததுபோல, இயேசுகிறிஸ்து ஆவியானவரின் அபிஷேகத்தின் மூலமாகச் சீஷருக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களையும் தெளிந்த பார்வையையும் கொடுக்கிறார். இயேசுகிறிஸ்து அந்தக் குருடனை இரண்டாந்தரம் தொடுவதற்கு முன்பாக, அவன் நடக்கிற மனுஷரை மரங்கள் அசைவதைப்போல பார்த்தான். மரத்திற்கும் மனுஷனுக்கும் அவனால் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. 


சத்திய ஆவியானவரை சீஷர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். அப்போது  இயேசுகிறிஸ்து பிதாவில் இருக்கிறதையும், இயேசுகிறிஸ்துவும் பிதாவும் ஒன்றாயிருப்பதையும் காண்கிறார்கள். தங்களுடைய ஆவிக்குரிய அனுபவத்தின் மூலமாக தாங்கள் கேள்விப்பட்ட உபதேசங்களை இப்போது அனுபவித்துப் புரிந்துகொள்கிறார்கள். தாங்கள் இயேசுகிறிஸ்துவில் இருப்பதையும் இயேசுகிறிஸ்து தங்களிலிருப்பதையும் அனுபவித்து அறிந்துகொள்கிறார்கள்.


இயேசுகிறிஸ்து அவர்களிலிருப்பதும், அவர்கள் இயேசுகிறிஸ்துவிலிருப்பதும் நெருங்கிய ஐக்கியத்தைக் காண்பிக்கிறது. இது பிரிக்க முடியாத ஐக்கியம். கிறிஸ்துவோடு ஐக்கியமாக இருப்பதே விசுவாசிகளுக்கு ஜீவன்.  இந்த ஐக்கியத்தைப்பற்றிய மெய்யான அறிவு  விசுவாசிகளுக்குக் கிடைக்கும்போது, அதுவே அவர்களுக்கு ஆனந்த பாக்கியமாகவும் பூரண திருப்தியாகவும் இருக்கும். 


கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவன்


என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்  (யோவா 14:21). 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் அவருடைய கற்பனைகளைப் பெற்றிருக்கிறார்கள். இந்தக் கற்பனைகளை அவர்கள் கைக்கொள்ளவேண்டும். அவர்கள் மாத்திரமே  இயேசுகிறிஸ்துவிடத்தில் அன்பாயிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவும் அவர்களிடத்தில் அன்பாயிருக்கிறார். இயேசுகிறிஸ்து கூறுகிற இந்தச் சத்தியம் அப்போஸ்தலர்களாகிய அவருடைய சீஷர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறதுபோல எல்லா காலத்திலும், எல்லா தேசங்களிலும் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிற  விசுவாசிகள் எல்லோருக்கும் இந்தச் சத்தியம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 


யாரெல்லாம் இயேசுகிறிஸ்துவின் சீஷர்களாகயிருக்கிறோம் என்று சொல்லுகிறார்களோ அவர்களெல்லோரையுமே  இந்தக் கடமையை நிறைவேற்றுமாறு இயேசுகிறிஸ்து கூறுகிறார். இவையெல்லாம் இயேசுகிறிஸ்துவின் கற்பனைகளாக இருக்கிறபடியினால் நாம் இவைகளைக் கைக்கொள்ளவேண்டும். நம்முடைய தலைகளில்  இயேசுவின் கற்பனைகளை பெற்றிருப்பதினால், அவற்றை நம்முடைய இருதயங்களிலும், ஜீவியங்களிலும் கைக்கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களாகயிருந்து அவருக்கு ஊழியம்  செய்வது  மிகப்பெரிய சிலாக்கியம். இந்த ஊழியத்தைக் கீழ்ப்படிதலோடு செய்யவேண்டும். இயேசுகிறிஸ்துவின் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் யாராலும் அவருடைய சீஷராக இருக்கமுடியாது. 


ஒரு சிலர் இயேசுகிறிஸ்துவைக் குறித்து நன்றாகப் பிரசங்கம்பண்ணுவார்கள். ஒரு சிலரிடத்தில் சாதுரிய வார்த்தைகள்          அதிகமாக இருக்கும். சிலர் நகைச்சுவையோடு பிரசங்கம்பண்ணுவார்கள். ஒரு சிலர் இயேசுகிறிஸ்துவின் ஊழியத்திற்கு அதிகமாகக் காணிக்கைகளைக் கொடுப்பார்கள். தங்களுடைய வீடுகளைக்கூட ஊழியத்திற்கு எழுதி வைத்துவிடுவார்கள். இவையெல்லாம் செய்வதினால் இவர்களால் இயேசுகிறிஸ்துவின்  சீஷராக இருக்கமுடியாது.   அவருடைய கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு, அவைகளைக் கைக்கொள்ளுகிறவர்கள் மாத்திரமே இயேசுகிறிஸ்துவின்          சீஷர்களாக இருக்கிறார்கள். இவர்களே இயேசுகிறிஸ்துவிடத்தில்  அன்பாயிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவும் இவர்களிடத்தில் அன்பாயிருக்கிறார். நாம் இயேசுகிறிஸ்துவிடத்தில் அன்பாயிருக்கிறோம் என்பதை அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்துதான் நிரூபிக்க முடியும். 


தம்முடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, தம்மிடத்தில் அன்பாயிருக்கிறவர்களை இயேசுகிறிஸ்து ஆசீர்வதிக்கிறார். இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்பாயிருக்கிறவர்கள்   பிதாவுக்கு அன்பாயிருப்பார்கள். தேவனிடத்தில் அன்பாயிருப்பதற்கு நமக்குத் தேவகிருபை தேவை. தேவகிருபையில்லையென்றால் நம்மால்  தேவனிடத்தில் அன்பாயிருக்க முடியாது. இந்தக் கிருபையை தேவனே நமக்கு முதலாவதாகக் கொடுக்கிறார். தேவன் நம்மிடத்தில் அன்பாயிருக்கிறார். தம்மிடத்தில் அவர் அன்பாயிருக்கிறதை நாம் அறிந்துகொள்ளவும் உதவிபுரிகிறார். பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருக்கிறார். குமாரனிடத்தில் அன்பாயிருக்கிறவர்கள் அவருடைய பிதாவுக்கும் அன்பாயிருப்பார்கள். இயேசுகிறிஸ்துவிடத்தில்  அன்பாயிருக்கிறவர்களிடத்தில் அவரும் அன்பாயிருப்பார். இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனிடத்தில் அன்பாயிருக்கிறார். சீஷர்களும்  இயேசுகிறிஸ்துவிடத்தில் அன்பாயிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் அன்பே பிரதானமாக இருக்கிறது. தேவன் அன்பாகவே இருக்கிறார். 


இயேசுகிறிஸ்து இப்போது தம்முடைய சீஷர்களைவிட்டு பிதாவினிடத்திற்குப் போகப்போகிறார். அங்கு போனபின்பும் அவர்  தம்முடைய சீஷர்களிடத்தில் தொடர்ந்து அன்பாயிருப்பாரென்பதை இயேசுகிறிஸ்து வாக்குப்பண்ணுகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய இருதயத்தில் தம்முடைய சீஷர்களைப் பெற்றிருக்கிறார். அவர்களுக்காக பிதாவினிடத்தில் எப்போதும் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். 


 தம்மிடத்தில் அன்பாயிருக்கிறவர்களுக்கு இயேசுகிறிஸ்து மற்றுமொரு சிலாக்கியத்தைக் கொடுக்கிறார். இயேசுகிறிஸ்து அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்துவதே அந்தச் சிலாக்கியமாகும். இயேசுகிறிஸ்துவின் அன்பினால் நமக்கு ஆறுதலும் சந்தோஷமும் உண்டாகும். இந்தச் சிலாக்கியம் இயேசுகிறிஸ்துவிடத்தில் அன்பாயிருக்கிற எல்லோருக்குமே வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. இந்த வாக்குத்தத்தத்தில் ஒரு நிபந்தனையும் உண்டு. நாம் இயேசுகிறிஸ்துவிடத்தில் அன்பாயிருக்கிறோம் என்றால், அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளவேண்டும்.


ஸ்காரியோத்தல்லாத யூதா


ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான்  (யோவா 14:22).  


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் அன்பாயிருப்பதை வாக்குத்தத்தமாகக் கூறுகிறார். இயேசுகிறிஸ்துவின் சத்திய உபதேசத்தைக் கேட்கிற சீஷர்களுக்கு அவருடைய வார்த்தைகள் ஆச்சரியமாக இருக்கிறது. சீஷர்களின் சார்பாக  யூதா என்பவன் தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறான். இந்த சுவிசேஷத்தில் இவனுடைய பெயர் ""ஸ்காரியோத்தல்லாத யூதா'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் இரண்டு சீஷர்களுக்கு யூதா என்னும் ஒரே பெயரே வழங்கப்படுகிறது.  ஒருவன்  இயேசுகிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து. மற்றொருவன் யாக்கோபின் சகோதரனாகிய யூதா

 (லூக் 6:16). 


யூதா என்னும் பெயரில் இரண்டு பேர் இருக்கிறார்கள்.  ஒருவன் நல்லவன். மற்றொருவன் கெட்டவன்.  இரண்டு பேருக்குமே ஒரே பெயர்தான். தேவன் நம்முடைய பெயரை வைத்து நம்மை நியாயந்தீர்க்கமாட்டார். நம்முடைய குணத்தை வைத்துத்தான் அவர் நம்மை நியாயந்தீர்க்கப்போகிறார். மனுஷன் முகத்தைப் பார்க்கிறான். பெயரைப் பார்க்கிறான். ஆனால் இயேசுகிறிஸ்துவோ மனுஷனுடைய இருதயத்தைப் பார்க்கிறார். 


அப்போஸ்தலனாகிய யூதா, யூதாஸ்காரியோத்தைப் போலத் துணிகரமாக எந்தப் பாவமும் செய்யவில்லை. ஆனால் யூதாஸ்காரியோத்தோ இயேசுகிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்து, துணிகரமாகப் பாவம் செய்து, நான்றுகொண்டு செத்துப்போனான். இவ்விரண்டு பேருக்கும் வித்தியாசம் இருக்கவேண்டும் என்பதற்காக யோவான் இந்த சுவிசேஷத்தில் இவர்கள் இருவரையும் வித்தியாசம் பண்ணி காண்பிக்கிறார். நாம் மற்றவர்களைப்பற்றி அறிந்துகொள்ளும்போது நமக்குள் நிதானமும் தெளிவும் இருக்கவேண்டும். ஆவிகளைப் பகுத்தறியும் வரம்  நம்மிடத்தில் கிரியை நடப்பிக்கவேண்டும். கெட்டவர்களை நல்லவர்களாகவும், நல்லவர்களைக் கெட்டவர்களாகவும் பார்த்து  ஏமாந்து போய்விடக்கூடாது. 


யூதாஸ்காரியோத்தல்லாத யூதா, இயேசுகிறிஸ்துவிடம் ""நீர் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தாமல், எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன'' என்று கேட்கிறான். இயேசுகிறிஸ்துவை இவன் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இவனுடைய விசுவாசம் பலவீனமாக இருக்கிறது. மேசியா இந்தப் பூமியில் உலகப்பிரகாரமான ராஜ்யத்தை ஸ்தாபிக்கப்போகிறார் என்று யூதா நினைக்கிறான். உலகத்திற்குரிய ராஜ்யம் ஆரவாரமாகவும், வெளிப்படையான ஆடம்பரமாகவும் ஸ்தாபிக்கப்படும். ஆனால்  இயேசுகிறிஸ்துவின் ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்போது ஆரவாரமோ, ஆடம்பரமோ காணப்படவில்லை. இதனால் சீஷர்கள் சற்று ஏமாந்து போய்விடுகிறார்கள். தாங்கள் எதிர்பார்க்கிற விதமாக இயேசுகிறிஸ்து இவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்திக் காண்பிக்கவில்லை. ஆகையினால்தான் யூதா இயேசுவிடம் ""நீர் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன'' என்று கேட்கிறான். 


யூதா தன்னுடைய விசுவாசத்தில் பலவீனமுள்ளவனாக இருந்தாலும், இயேசுகிறிஸ்துவின்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறான். ஆகையினால் அவரை அழைக்கும்போது ""ஆண்டவரே'' என்று கூப்பிடுகிறான். தேவனுடைய தெய்வீகக் கிருபையை நினைத்து யூதா மிகவும் ஆச்சரியப்படுகிறான். இந்த உலகத்து ஜனங்களுக்குக் கிடைக்காத மிகப்பெரிய சிலாக்கியம் தங்களுக்குக் கிடைத்திருப்பதாக நினைத்து மிகுந்த சந்தோஷத்தோடிருக்கிறான். ஏனெனில் இயேசுகிறிஸ்து தம்மை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தாமல், சாதாரண சீஷர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த சிலாக்கியத்திற்கு தாங்கள் பாக்கியவான்களல்ல என்று சீஷர்கள் நினைக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் அற்புதமான கிரியைகள் நமக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தரும். அவர் நம்மை ஆசீர்வதிப்பதற்கு நாம் தகுதியானவர்கள் அல்ல என்று நினைப்போம்.   தேவனுடைய கிருபை நமக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. கிறிஸ்துவின் ஊழியம் முழுவதையும் அவருடைய கிருபையே ஆளுகை செய்கிறது. 


என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்


இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது (யோவா 14:23,24).


இயேசுகிறிஸ்து மறுபடியுமாகத் தம்முடைய வாக்குத்தத்தத்தின் நிபந்தனையைச் சீஷர்களிடத்தில் கூறுகிறார். அவர்கள் இயேசுகிறிஸ்துவிடத்தில் அன்பாயிருக்க வேண்டும். அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளவேண்டும். அவரிடத்தில் அன்பாயிருந்தால் மாத்திரமே அவருடைய வசனத்தைக் கைக்கொள்ள முடியும்.  அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் மாத்திரமே அவரிடத்தில் அன்பாயிருக்கிறார்கள். வ்விரண்டும் ஒன்றுக்கொன்று இணைந்தேயிருக்கிறது. ஒரு விருட்சத்தில் அன்பு வேராக இருக்குமென்றால், கீழ்ப்படிதல் அதன் கனியாக இருக்கிறது. நம்முடைய இருதயத்தில் இயேசுகிறிஸ்துவின்மீது உண்மையான அன்பு இருக்குமென்றால், அவருடைய வசனத்திற்குக் கீழ்ப்படியவேண்டும் என்னும் விருப்பமும் நம்மிடத்தில் இருக்கும். அன்பு இருக்கிற இடத்தில் கீழ்ப்படிதல் இருக்கும். கீழ்ப்படிதல் இருக்கிற இடத்தில் அன்பு இருக்கும். இயேசு யூதாவிடம்   ""ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்'' என்று கூறுகிறார். 


அன்பு எங்கே இருக்கிறதோ அங்கு கடமையும் இருக்கும்.  கடமை அன்பைப் பின்பற்றும். இது மிகவும் எளிமையான சத்தியம்.  இயேசுகிறிஸ்துவிடத்தில் அன்பாயிராதவன் அவருடைய வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். ஒருவன் இயேசுகிறிஸ்துவை மெய்யாகவே நேசிக்கவில்லையென்றால், அவருக்குக் கீழ்ப்படியவேண்டும் என்னும் அக்கரையும் அவனுக்குள் இராது. இயேசுகிறிஸ்துவிடத்தில் அன்பாயிராதவர்கள் அவருடைய சத்தியங்களை விசுவாசிக்கமாட்டார்கள். அவருடைய ரமாணங்களுக்குக் கீழ்ப்படியமாட்டார்கள். இயேசுகிறிஸ்துவின் வசனங்கள் அவர்களுக்குச் சத்திய வசனங்களாகத் தெரியாது. அவர் ஏதோ  கட்டுக்கதைக்களைக் கூறுவதாக நினைப்பார்கள். அவருடைய வார்த்தைக்குச் செவிகொடுக்கமாட்டார்கள். அவருடைய உபதேசத்தைக் கடினமான உபதேசமென்று அலட்சியம் பண்ணுவார்கள். இப்படிப்பட்டவர்கள் இயேசுகிறிஸ்துவிடத்தில் அன்பில்லாதவர்கள் தம்மிடத்தில் அன்பு இல்லாதவர்களோடு இயேசுகிறிஸ்துவும் வாசம்பண்ணுவதில்லை. 


இயேசுகிறிஸ்து தம்முடைய அன்பையும் சீஷர்களின் அன்பையும் கூறும்போது ""ஒருவன் தம்மிடத்தில் அன்பாயிருந்தால், தாமும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்குத் தம்மை வெளிப்படுத்துவேன்'' என்று கூறுகிறார். ""தம்மிடத்தில் அன்பாயிருக்கிறவன் தம்முடைய  பிதாவுக்கும் அன்பாயிருக்கிறான்'' என்றும் கூறுகிறார் (யோவா 14:21). இயேசுகிறிஸ்து தாம் ஏற்கெனவே கூறிய சத்திய வார்த்தைகளை இங்கு மறுபடியுமாக உறுதிபண்ணுகிறார். நம்முடைய விசுவாசத்தை உறுதிபண்ணும் விதமாக இயேசுகிறிஸ்து இந்த வார்த்தைகளை இங்கு மறுபடியுமாகக் கூறுகிறார். 


இயேசுகிறிஸ்து தம்மை உலகத்திற்கு வெளிப்படுத்தாமல் சீஷர்களுக்கு வெளிப்படுத்தியிருப்பது ஸ்காரியோத்தல்லாத யூதாவுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது.  தம்முடைய சித்தத்தை அவனுக்குத் தெளிவுபடுத்தும் விதமாக, தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்துவது மாத்திரமல்ல ""நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்'' என்றும் கூறுகிறார். ஒருவன் இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்பாயிருந்தால், அவன் அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுவான் அவனிடத்தில்  பிதாவானவர் அன்பாயிருப்பார். அவர்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவார்கள். 


இயேசுகிறிஸ்து இந்தச் சத்தியத்தைக் கூறும்போது ""நான் வாசம்பண்ணுவேன்'' என்று கூறாமல் ""நாங்கள் வாசம்பண்ணுவோம்'' என்று கூறுகிறார். ""நாங்கள்'' என்னும் வார்த்தைக்கு இயேசுகிறிஸ்துவும் பிதாவும் என்பது பொருள். இயேசுகிறிஸ்து எங்கெல்லாம் தம்மை வெளிப்படுத்துகிறாரோ, அங்கெல்லாம் தேவனுடைய சாயல் வெளிப்படுகிறது.


தம்மிடத்தில் அன்பாயிருந்து,      தம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களிடத்தில், இயேசுகிறிஸ்து  தூரத்திலிருந்து அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தாமல், அவர்களிடத்தில் வந்து, அவர்களோடே வாசம்பண்ணுவார். அவர்களுக்கு அருகாமையில், அவர்களோடே வாசம்பண்ணுவார். இயேசுகிறிஸ்து தம்மை வெளிப்படுத்தும்போது, தம்மைக் காணவிரும்புகிறவர்கள் தம்மைக் காணமுடியாதவாறு தூரத்திலிருந்து தம்மை வெளிப்படுத்தமாட்டார்.  ஒரு சில விநாடிகள் மாத்திரம் தம்முடைய தரிசனத்தைக் கொடுத்துவிட்டு         அதன்பின்பு  மறைந்துபோய்விடமாட்டார். தம்மிடத்தில் அன்பாயிருந்து, தம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களிடத்தில், தம்மை வெளிப்படுத்தும்போது இயேசுகிறிஸ்து அவர்களிடத்தில் வந்து  அவர்களோடே வாசம்பண்ணுவார். தமக்குக் கீழ்ப்படிகிற விசுவாசிகளிடத்தில் இயேசுகிறிஸ்து அன்பாயிருந்து, தம்முடைய அன்பில் அவர்களோடு வாசம்பண்ணவும் செய்கிறார்.


இயேசுகிறிஸ்துவின் வாக்குத்தத்தத்தைக் கேட்டு, அவர் கொடுக்கிற கற்பனைகளுக்கு நாம் கீழ்ப்படியவேண்டும். நாம் கேட்கிறவர்களாக மாத்திரமல்ல அதன்படி செய்கிறவர்களாகவும் இருக்கவேண்டும். ஏனெனில் இயேசுகிறிஸ்துவின் வசனம் அவருடையதாயிராமல், அவரை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது. இந்தச் சத்தியத்தை இயேசுகிறிஸ்து பல சமயங்களில் யூதர்களிடத்தில் உபதேசம்பண்ணியிருக்கிறார். ""என் உபதேசம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவன் எவனோ, அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்'' 

(யோவா 7:16,17) என்று இயேசுகிறிஸ்து ஏற்கெனவே கூறியிருக்கிறார். 


நம்முடைய ஜீவனை இயேசுகிறிஸ்துவே ஆளுகை செய்கிறவராக இருக்கவேண்டும்.  அவருடைய வசனமே நம்மை வழிநடத்துகிற பிரமாணமாக இருக்கவேண்டும். அவருடைய வார்த்தைக்குக் கீழ்படிவதே நம்முடைய சித்தமாகயிருக்கவேண்டும். கிறிஸ்து நம்மை ஆளுகை செய்யவேண்டும் என்று ஒப்புக்கொடுப்பது நம்முடைய கடமை. இயேசுகிறிஸ்துவின் வாக்குத்தத்தத்தை சார்ந்திருக்கும்போது நமக்குக் கிடைப்பது  தேவனுடைய ஆறுதலும் சமாதானமும்.


இயேசுகிறிஸ்துவின் வாக்குத்தத்தம் நிச்சயமாக நிறைவேறுமா என்னும் சந்தேகம்  சீஷர்களுக்கு வரவேண்டியதில்லை. இயேசுகிறிஸ்துவின் ஆசீர்வாதம் தங்களுக்குப் போதுமானதா என்றும் சீஷர்கள் யோசிக்க வேண்டியதில்லை. அவர் நம்மைச் சம்பூரணமாக ஆசீர்வதிக்கிறவர். இயேசுகிறிஸ்துவின் வாக்குத்தத்தம் அவருடைய சாதாரண வார்த்தைகளல்ல. சீஷர்கள் கேட்கிற வசனம் இயேசுகிறிஸ்துவினுடையதாயிராமல் அவரை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது. 


""நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்''  என்னும்  இந்த வாக்கியத்தில் ""நாங்கள்'', ""வாசம்பண்ணுவோம்'' என்று பன்மையில் கூறப்பட்டிருக்கிறது. பிதாவும், குமாரனும் ஒற்றுமையாகக் கிரியை செய்கிறார்கள். இருவருமே சர்வ ஞானமுள்ளவர்கள். இயேசு கிறிஸ்து தமது சீஷர்களை விட்டு, புறப்படும் காலத்தையும், இயேசு கிறிஸ்துவின் மகிமை அவரிடம் மறுபடியும் கொடுக்கப்படும் காலத்தையும் இது குறிக்கும்.   இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் 33 வருஷங்கள் மனுஷராக இருந்தபோது, அவர் மனுஷத்துவத்தின் வரையறைக்குட்பட்டிருந்தார். அவரால் ஒரு வேளையில் ஓரிடத்தில் மட்டுமே இருக்க முடிந்தது. ஆனால் இப்போதோ இயேசு கிறிஸ்து சர்வவியாபகராக இருக்கிறார். 


பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன்

 (யோவா 14 : 25-27)


உங்களுக்குப் போதித்து நினைப்பூட்டுவார்


நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன். என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் (யோவா 14:25,26). 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகப்போகிறார். தங்களைவிட்டு அவர் போகப்போவதினால் சீஷர்களுடைய இருதயம்  கலங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இயேசுகிறிஸ்து அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைப் பேசுகிறார். 

தாம் அவர்களை விட்டு போனாலும் அவர்களுடைய ஆறுதலுக்காக, இயேசுகிறிஸ்து அவர்களுக்கு இரண்டு ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார். 

அவையாவன:


 1. பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளர் அவர்களுக்கு அருளப்படுவார். 


2. தம்முடைய சமாதானத்தை இயேசுகிறிஸ்து அவர்களுக்கு வைத்துப்போகிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டுப் போனபின்பு, அவர்களோடு பேசுவதற்கு ஒரு உபாயத்தை உண்டுபண்ணுகிறார். பிதாவானவர்  இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை அவர்களுக்குத் தந்தருளுவார். அவர் எல்லாவற்றையும் சீஷர்களுக்குப் போதிப்பார். இயேசுகிறிஸ்து  தம்முடைய சீஷர்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் ஆவியானவர் அவர்களுக்கு  நினைப்பூட்டுவார். தாம் கொடுத்த  உபதேசத்தை  இயேசுகிறிஸ்து ஒருபோதும் மாற்றிக்கொள்வதில்லை. தம்முடைய சத்திய வார்த்தையிலிருந்து அவர் பின்வாங்கிப்போவதில்லை. அவர் சொன்னது  சொன்னதாகவே இருக்கும். அவர் என்றும் மாறாதவர். அவருடைய வார்த்தையும் மாறாதது.  அவர் நம்மிடத்தில் சொல்லியிருக்கும் வசனத்தின் பிரகாரமாக கிரியை செய்வார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போனபின்பு,   அவர்களோடு பேசுவதற்கு ஒரு உபாயத்தை உண்டுபண்ணுகிறார். 


பிதாவானவர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளனை அவர்களிடத்தில் அனுப்புவார்.  குமாரனாகிய இயேசுகிறிஸ்து பிதாவின் நாமத்தினால் இந்தப் பூமிக்கு வந்தார். பரிசுத்த ஆவியானவரோ இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால், இயேசுகிறிஸ்து செய்ய வேண்டிய ஊழியத்தைத் தொடர்ந்து செய்வதற்காக வருவார். 


பரிசுத்த ஆவியானவருக்கு விசேஷித்த ஊழியம் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் எல்லாவற்றையும் இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்குப் போதிப்பார். சில     சத்தியங்களைச் சீஷர்கள் தாங்களாகவே கற்றுக்கொள்ளவேண்டும். வேறு சில சத்தியங்களை மற்றவர்கள் அவர்களுக்குப் போதிக்கவேண்டும். தேவனுடைய சத்தியங்களை  மற்றவர்களுக்குப் போதிக்கிறவர்கள், முதலாவதாக தேவனால் போதிக்கப்பட்டிருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய சத்தியங்களெல்லாவற்றையும் நமக்குப் போதிப்பார். அத்துடன் இயேசுகிறிஸ்து நமக்குச் சொன்ன எல்லாவற்றையும் நமக்கு நினைப்பூட்டுவார்.


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு ஏராளமான உபதேசங்களைப் போதித்திருந்தார். முக்கியமான உபதேசங்கள் பலவற்றை சீஷர்கள் மறந்துவிட்டார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களிடத்தில் வந்து புதிய சுவிசேஷத்தை அவர்களுக்குப் போதிக்கமாட்டார். இயேசுகிறிஸ்து அவர்களிடத்தில் ஏற்கெனவே உபதேசித்திருந்த சுவிசேஷத்தையே அவர்களுக்கு நினைப்பூட்டுவார். இயேசுகிறிஸ்துவின் சத்திய வசனங்களைப் புரிந்துகொள்வதற்கு ஆவியானவர் சீஷர்களுக்கு உதவிபுரிவார்.  கர்த்தருடைய பரிசுத்தவான்களெல்லோருக்கும்  கிருபையின் ஆவியானவருடைய ஊழியம் தேவையாயிருக்கிறது. இயேசுகிறிஸ்து நமக்குச் சொன்ன எல்லாவற்றையும் நாம் மறந்துவிடாதவாறு, நமக்கு  நினைப்பூட்டுவதற்கு பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனின் ஊழியம் தேவைப்படுகிறது. 


""தேற்றரவாளன்''  என்பது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கும் வார்த்தையாகும். இதற்கான கிரேக்க வார்த்தை ""பேரக்லேடோஸ்'' என்பதாகும். யோவான் மட்டுமே புதிய ஏற்பாட்டில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்.  தேற்றரவாளன் என்பவருக்கு ஒருவருக்கு உதவி செய்யக்கூடியவர். ஆறுதல் கூறக்கூடியவர் என்று பொருள். இந்தப் பூமியில் பரிசுத்த ஆவியானவர் நமது தேற்றரவாளராக இருக்கிறார். பரலோகத்தில் இயேசு கிறிஸ்து நமது தேற்றரவாளராக இருப்பார். 


என்னுடைய சமாதானம்


சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக (யோவா 14:27).


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டுப் போகப்போவதினால் அவர்களுடைய இருதயம் கலங்கியிருக்கிறது. அவர்களுக்குச் சமாதானத்தைக் கொடுப்பதற்காக, இயேசுகிறிஸ்து அவர்களிடம்   ""சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன்'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்து இந்த உலகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும் முன்பாக தம்முடைய சித்தத்தை உயில் எழுதுவதுபோல நிறைவேற்றி முடிக்கிறார். இயேசுகிறிஸ்து ஒன்றையும் விட்டுவிடாமல், எல்லாவற்றையும் சீராகக் கவனித்து, தம்மிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஊழியத்தை நேர்த்தியாக நிறைவேற்றுகிறார்.  


தம்முடைய ஆத்துமாவைப் பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுக்கிறார். கல்வாரியில் மரிப்பதற்காக ஒப்புக்கொடுத்த தம்முடைய சரீரத்தை யோசேப்பிடம் அடக்கம்பண்ணுவதற்காக ஒப்புக்கொடுக்கிறார். இயேசுகிறிஸ்துவின் வஸ்திரங்கள் போர்ச்சேவர்களுக்குக் கிடைக்கிறது. தம்முடைய தாயாகிய மரியாளைப் பராமரிக்கும் பொறுப்பை  யோவானிடம் ஒப்புக்கொடுக்கிறார். 


எல்லோருக்கும் எல்லாவற்றையும் நேர்த்தியாகக் கொடுத்திருக்கும் இயேசுகிறிஸ்து, தம்மையே பின்பற்றி வந்திருக்கும் சீஷர்களுக்கும், அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கவேண்டுமென்று சித்தங்கொண்டிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் தங்களுக்குள்ளவைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றி வந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்க இயேசுகிறிஸ்துவிடம் பொன்னும் வெள்ளியும் இல்லை. தம்மிடத்திலுள்ள அதைவிட மேலானதை இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுக்கிறார். ""என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்'' என்று தம்முடைய சீஷர்களிடத்தில் ஆறுதலாகக் கூறுகிறார். இயேசுகிறிஸ்து அவர்களைவிட்டுப்போனாலும், அவர் கொடுக்கிற அவருடைய சமாதானம் அவர்களிடத்தில் இருக்கும். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டு கோபத்தோடு அகன்று போகவில்லை. அன்புடன் அவர்களைவிட்டுப் போகிறார். தாம் போகும்போது, தம்முடைய சீஷர்களுக்குத் தேவையான சமாதானத்தை அவர்களுக்குக் கொடுத்துவிட்டுப் போகிறார்.


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்குக் கொடுக்கிற சமாதானம் உலகப்பிரகாரமான சமாதானமல்ல. அது இயேசுகிறிஸ்துவினுடைய சமாதானம். எல்லா ஆசீர்வாதங்களுக்கும், நன்மைகளுக்கும் இயேசுகிறிஸ்து கொடுக்கிற  அவருடைய சமாதானமே போதுமானதாக இருக்கும். தேவனோடு நாம் ஒப்புரவாவதற்கு தேவனுடைய சமாதானம் நமக்கு பிரயோஜனமுள்ளதாக இருக்கும். தேவனுடைய அன்பை பெற்றுக்கொள்வதற்கும் கிறிஸ்துவின் சமாதானம் நமக்கு உதவிபுரியும். இயேசுகிறிஸ்துவின் சமாதானம் நமக்குக் கிடைப்பதினால் நாம் தேவனோடு சமாதானமாக இருப்போம். கிறிஸ்துவின் சமாதானம் நமக்குக் கொடுக்கப்படுவதினால், நம்முடைய மடிகளில்  தேவனுடைய சமாதானம் தங்கியிருக்கும். 


இயேசுகிறிஸ்து இந்த பூமியில் பிறந்தபோது, தேவதூதர்கள் மனுஷரை ஆசீர்வதிக்கும்போது ""உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக'' என்று கூறி தேவனைத் துதித்தார்கள் (லூக் 2:14). தூதர்கள் சொன்ன அந்த சமாதானத்தை இயேசுகிறிஸ்து இப்போது  தம்முடைய சீஷர்களுக்குக் கொடுக்கிறார். 


இயேசுகிறிஸ்து கொடுக்கிற அவருடைய சமாதானம், அவருடைய சீஷர்களுக்கும் அவரை  உண்மையாய்ப் பின்பற்றுகிற அவருடைய விசுவாசிகளெல்லோருக்கும் கொடுக்கப்படுகிறது.  எல்லா காலங்களிலும், எல்லா தேசங்களிலும், இயேசுகிறிஸ்துவை உண்மையாக விசுவாசிக்கிற  விசுவாசிகள் அனைவருக்கும் இயேசுகிறிஸ்து தம்முடைய சமாதானத்தையே கொடுக்கிறார்.  


இயேசுகிறிஸ்து தம்முடைய சமாதானத்தை சீஷர்களுக்குக் கொடுக்கும்போது, அதை உலகம் கொடுக்கிற பிரகாரம் அவர் அவர்களுக்குக் கொடுக்கிறதில்லை. உலகத்தார் ""உங்களுக்குச் சமாதானம்'' என்று உதட்டளவிலும், வார்த்தை  அளவிலும் சொல்லுவார்கள். இது சடங்கு முறைபோல் பயன்படுத்தப்படுகிற ஆசீர்வாதமான வார்த்தை.  ஆனால் இயேசுகிறிஸ்து கொடுக்கிற  அவருடைய சமாதானமோ நமக்கு மெய்யான ஆசீர்வாதமாக இருக்கும். இயேசுகிறிஸ்து தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கிற வரங்கள் எல்லாவற்றையும், இந்த உலகம் கொடுக்கிற பிரகாரமாக கொடுக்கிறதில்லை.  


இந்த உலகம் மனுஷருடைய சரீரத்திற்கே நன்மை உண்டாக வெகுமதி கொடுக்கும். இந்த உலகம் கொடுக்கிற வெகுமதியும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில்தான் இருக்கும். ஆனால் இயேசுகிறிஸ்து கொடுக்கிற கிருபையின் வரங்களோ நம்முடைய ஆத்துமாவுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். இந்த ஆசீர்வாதம் நித்திய ஆசீர்வாதமாக நம்மோடு நித்திய காலமாக இருக்கும். ஆகையினால் இயேசுகிறிஸ்து கொடுக்கிற சமாதானம் நித்திய காலத்திற்கும் பிரயோஜனமுள்ளது. இந்த உலகம் கொடுக்கிற சமாதானத்திற்கும்      இயேசுகிறிஸ்து கொடுக்கிற சமாதானத்திற்கும் வித்தியாசமுண்டு. இயேசுகிறிஸ்து கொடுக்கும் சமாதானம் மெய்யானது. நித்தியமானது.


இயேசுகிறிஸ்து தம்முடைய சமாதானத்தையே தம்முடைய சீஷர்களுக்குக் கொடுப்பதினால், அவர்களைப்பார்த்து  ""உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக'' என்று கூறுகிறார். தம்முடைய உபதேசத்தின் முடிவுரையாக இயேசுகிறிஸ்து  இந்த வாக்கியத்தைக் கூறுகிறார். தம்முடைய உபதேசத்தை ஆரம்பிக்கும்போது ""உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக'' (யோவா 14:1) என்று கூறியவர், இதை முடிக்கும்போதும், முடிவுரையாக ""உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக'' என்று மறுபடியுமாக கூறி முடிக்கிறார். அவர்களுடைய இருதயம் ஏன் கலங்கக்கூடாது என்பதற்கான காரணத்தை இயேசுகிறிஸ்து தம்முடைய உபதேசத்தில் தெளிவுபடுத்துகிறார். 


இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரிப்பதன் மூலமாக அவருடைய பிள்ளைகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம் அவருடைய சமாதானமாகும்.  இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உலகம் கொடுக்கக்கூடிய சமாதானம் போன்று இராது. இது உலக சமாதானம். இயேசு கிறிஸ்து கொடுப்பது தெய்வீக சமாதானம். அவர்கள் சமாதானத்தின் பிரபுவைக் கொலை செய்துவிட்டார்கள்.            இன்னும் அவர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகையினால் அவர் அவர்களை ஆளுகை செய்ய வரும்வரையிலும், அவர்களுக்குச் சமாதானம் இராது. 


இயேசுகிறிஸ்துவின் சந்தோஷம் 

(யோவா 14 : 28-31)


போவேன், திரும்பி வருவேன்


 நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்  (யோவா 14:28).


சீஷர்களுடைய இருதயம் ஏன் கலங்கியிருக்கக்கூடாது என்பதற்கு இயேசுகிறிஸ்து மேலும் ஒரு காரணத்தைக் கூறுகிறார். சீஷர்களைவிட்டு இயேசுகிறிஸ்து  போகப்போவதினால் அவருடைய இருதயம் கலங்கவில்லை. சீஷர்களுடைய இருதயம் மாத்திரமே கலங்கியிருக்கிறது. சீஷர்களை விட்டுப்போவது இயேசுகிறிஸ்துவுக்கு வருத்தமாக இருந்தாலும்


இரண்டு காரியங்கள்  அவருக்கு ஆறுதலாக இருக்கிறது. 


அவையாவன: 

1. அவர் போனாலும் திரும்பி வருவார். 


2. அவர் தம்முடைய பிதாவினிடத்திற்குப் போகிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டு இப்போது புறப்பட்டுப்போனாலும் அவர் மறுபடியும் திரும்பி வரவேண்டும். ""நான் போவேனென்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேனென்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் கூறுகிறார். தம்முடைய பாடுகளிலும் மரணத்திலும் இயேசுகிறிஸ்துவுக்கு  ஆறுதலாகயிருக்கிற சத்தியம், ""அவர் திரும்பி தம்முடைய சீஷர்களிடத்தில் வருவார்'' என்பதுதான். இந்த சத்தியம் நமக்கும் ஆறுதலாக இருக்கவேண்டும். நாம் மரிக்கும்போது, ""நாம் மறுபடியும் வருவதற்காக போகிறோம்'' என்னும் சிந்தனை விசுவாசிகளுக்குள் இருக்கவேண்டும். நாம் மரிக்கும்போது நம்முடைய உற்றார் உறவினர்களைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்துபோய்விடுவதில்லை. அவர்களைப் பார்ப்பதற்கு நாம் மறுபடியும் வருவோம். 


இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவினிடத்திற்குப் போகிறார். பிதா தம்மிலும் பெரியவராயிருக்கிறார் என்று இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கிறார். ஆகையினால் பிதாவினிடத்திற்குப் போவது இயேசுகிறிஸ்துவுக்குச் சந்தோஷமாகயிருக்கிறது. தாம் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால்,    தம்மைப்போலவே சீஷர்களும் சந்தோஷப்படுவார்கள் என்று இயேசுகிறிஸ்து எதிர்பார்க்கிறார். ""நீங்கள் என்னில்  அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச்  சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்து சீஷர்களைவிட்டுப் போகும்போது வருத்தமும் இருக்கிறது. சந்தோஷமும் இருக்கிறது. பிதா இயேசுகிறிஸ்துவிலும் பெரியவராயிருப்பது சந்தோஷமான சத்தியம். இயேசுகிறிஸ்து இந்தப் பூமியில் தம்முடைய சீஷரோடு இருப்பதைவிட, பரலோகத்தில் அவருடைய பிதாவோடு இருப்பது  அவருக்கு மகிமை நிறைந்ததாக இருக்கும்.  அது அவருக்கு உன்னத அனுபவமாக இருக்கும். 


சீஷர்கள் இப்போது இந்த உலகத்திற்குரிய  காரியங்களை மாத்திரமே சிந்தித்துப்பார்க்கிறார்கள். உலகப்பிரகாரமான சந்தோஷத்தைக் குறித்தே அக்கரையோடிருக்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ அவர்களிடத்தில் உன்னத அனுபவத்தைப்பற்றியும், இதைவிட மேன்மையான  சந்தோஷத்தைப்பற்றியும் பேசுகிறார்.  தேவனிடமிருந்து சீஷர்கள் பெரிய காரியங்களை  எதிர்பார்க்கவேண்டும். பிதாவின் ராஜ்யம் இந்த பூமியின் ராஜ்யத்தைவிட பெரியது. இயேசுகிறிஸ்து இந்தப் பூமியின் ராஜ்யத்திலிருந்து  தேவனுடைய ராஜ்யத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறார். அவர் மகிமையோடு  உயர்த்தப்பட்டிருப்பதைப் பார்த்து, அவரிடத்தில்  அன்புள்ளவர்களாயிருக்கிற சீஷர்கள் சந்தோஷப்படவேண்டும். 


 இயேசுகிறிஸ்துவிடத்தில் அநேகர் அன்புள்ளவர்களாகயிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பு தவறான உபதேசத்தின்மீது ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.  இயேசுகிறிஸ்துவின்மீது அன்பாயிருந்தால், தங்களுடைய வாழ்க்கையே வேதனைகளும் பாடுகளும் நிறைந்ததாக இருக்குமென்றும், துக்கமும் துன்பமும் தங்களை நிரப்புமென்றும்  நினைத்துப்பயந்துகொண்டிருக்கிறார்கள்.  இயேசுகிறிஸ்துவினால் தங்களுக்கு வேதனை உண்டாகும் என்பது இவர்களுடைய எண்ணம்.  ஆனால் இயேசுகிறிஸ்துவின் மெய்யான அன்பு  நம்மை வருத்தப்படச் செய்வதற்குப் பதிலாகச் சந்தோஷப்படச் செய்கிறது. இயேசுகிறிஸ்துவிடத்தில் அன்புள்ளவர்கள் அவரில் சந்தோஷமாக இருப்பார்கள்.   


நடப்பதற்கு முன்னமே சொன்னேன்


இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்  (யோவா 14:29). 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைவிட்டுப்போவது, அவருடைய சீஷர்களின் விசுவாசம் உறுதிபடுவதற்கு ஓர் உபாயமாக இருக்கும். ஏனெனில் இது நடக்கும்போது அவர்கள் விசுவாசிக்கும்படியாக, இது நடப்பதற்கு முன்னமே, இயேசுகிறிஸ்து இதை அவர்களுக்குச் சொல்லுகிறார்.


 ""அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்''  (யோவா 13:19). ""அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை'' 

(யோவா 16:4).  


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் தாம் மரிப்பதற்கு முன்பாகவே தமது மரணத்தைப்பற்றிப் பேசுகிறார். இதனால் இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போது அவர்களுடைய விசுவாசம் உறுதியாகும். தம்மைப்பற்றிய காரியங்களை முன்னறிவிக்கிற இயேசுகிறிஸ்து சர்வ ஞானமுள்ளவர். தேவனுடைய இரகசியங்களெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கிறது. தம்முடைய தெய்வீக நோக்கத்தின் பிரகாரமாகவே, தம்முடைய காரியங்கள் அனைத்தையும் இயேசுகிறிஸ்து முன்னறிவிக்கிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை விட்டுப்போவதினால், அவர்களுடைய விசுவாசம் உறுதிப்படும். ஆகையினால் அவர்கள் இருதயம் கலங்கவேண்டியதில்லை. இயேசுகிறிஸ்து பிதாவினிடத்திற்குப் போகிறார்.  ஆகையினால் சீஷர்கள் 

அதை நினைத்து சந்தோஷப்படவேண்டும். 









Post a Comment

0 Comments