பாடுகளின் வாரம் வியாழக்கிழமை நிகழ்வு-1

 புதன் கிழமை நிகழ்வு ஒன்று கூட சுவிசேஷ நூல்கலில் குறிப்பிடப்படவில்லை

பாடுகளின் வாரம் 

வியாழக்கிழமை நிகழ்வு-1

இயேசுவும் சீஷரும் பஸ்காவை புசிக்கிறார்கள்

( மத்தேயு 26:17-29; மாற்கு 14:12-25; லூக்கா 22:7-30; யோவான் 13:1-38)


இயேசுகிறிஸ்து சீஷருடைய கால்களைக் கழுவுகிறார்

 (யோவா 13 : 1-5)


பஸ்கா பண்டிகைக்கு முன்னே



பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம்      இவ்வுலகத்தி-ருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார் (யோவா 13:1). 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களை கழுவும் சம்பவம், இதைத் தொடர்ந்து அவர் தம்முடைய சீஷருடனே உரையாடும் சம்பவம் ஆகியவற்றைப்பற்றி வேதபண்டிதர்கள் வெவ்வேறு விதமாக வியாக்கியானம் பண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்து காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலேயே  இந்த சம்பவம் நடைபெற்றது என்று ஒரு சிலர் கருத்துக் கூறுகிறார்கள். இயேசுகிறிஸ்து பஸ்கா போஜனம்பண்ணும் இந்த சமயத்திலேயே கர்த்தருடைய பந்தியையும் ஸ்தாபிக்கிறார் என்றும் ஒரு சிலர் கருத்துக் கூறுகிறார்கள்.  மற்ற சுவிசேஷங்களில் இந்த சம்பவங்கள் விரிவாக எழுதப்படவில்லை. பஸ்கா போஜனம், கர்த்தருடைய பந்தி, இயேசுகிறிஸ்து எருசலேமில் செய்த ஊழியம் ஆகிய எல்லா செய்திகளையும்  யோவான் மொத்தமாக சேகரித்து இந்த சுவிசேஷத்தில் எழுதியிருக்கிறார். இயேசுகிறிஸ்துவினுடைய வரலாற்று அட்டவணைப்பிரகாரம், இந்த சம்பவங்களில் எந்த சம்பவம் முதலாவது நடைபெற்றது என்று தீர்மானம்பண்ணுவது சற்று கடினமாக இருக்கிறது. ""பஸ்கா பண்டிகைக்கு முன்னே'' இந்த சம்பவம் நடைபெறுவதாக யோவான் எழுதுகிறார்.


இயேசுகிறிஸ்து இந்த உலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில்  அன்பு வைத்திருக்கிறார். முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவோடு பன்னிரண்டு சீஷர்கள்  மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிக்கொண்டு வருகிறார்கள். இயேசுகிறிஸ்து மெய்யாகவே இவர்களிடத்தில் முடிவுபரியந்தம் அன்பு வைத்திருக்கிறார்.  இயேசுகிறிஸ்துவுக்கு சீஷர்களே அவருடைய  சொந்த உலகமாக இருக்கிறார்கள். இவர்களே இயேசுவுக்கு நெருங்கிய சிநேகிதர்கள். இயேசுகிறிஸ்து இவர்களை நேசிக்கிறார். தம்மோடு ஐக்கியமாக இருக்குமாறு இவர்களை அழைத்திருக்கிறார். இவர்களோடு அதிகமாக நேரம் செலவுபண்ணுகிறார். அவர்களுடைய பலவீனங்களில் இயேசுகிறிஸ்து இவர்களைத் தாங்குகிறார். அவர்கள் தம்மோடு அதிகமாகப் பேசிப்பழகுவதற்கு வாய்ப்புக்களை உண்டுபண்ணிக் கொடுக்கிறார்.


இயேசுகிறிஸ்து அவர்களிடத்தில் முடிவுபரியந்தம் அன்பு வைத்திருக்கிறார். தம்முடைய அன்பை அவர்களிடத்திலிருந்து அவர் ஒருபோதும் எடுத்துப்போடவில்லை. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காலத்தில் பிரபுக்களும் அதிகாரிகளும் செல்வந்தர்களும் அவருடைய உபதேசத்தைக் கேட்டு அவரிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறார்கள்.  பெரியவர்கள் எத்தனைபேர் தம்மிடத்தில் வந்தாலும் இயேசுகிறிஸ்து தம்முடைய பழைய சிநேகிதர்களை ஒருபோதும் விலக்கி வைத்துவிடவில்லை. இந்த ஏழை மீனவர்கள்மீது அவர் தொடர்ந்து அன்பாகவே இருக்கிறார். அவருடைய அன்பு அவர்களிடத்தில் முடிவுபரியந்தம் இருக்கும். இயேசுகிறிஸ்து பலசமயங்களில் தம்முடைய சீஷர்களைக் கடிந்துகொண்டார். ஆனாலும் அவர்  இவர்கள்மீது அன்பு செலுத்தத் தவறவில்லை.  இவர்களை எப்போதும் இயேசு ஆதரித்துப் பராமரிக்கிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் அன்பு வைத்திருப்பதுபோலவே, அவரை விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலும் அன்பு வைத்திருக்கிறார். இந்த உலகத்தில் நாமே அவருக்குச் சொந்தமானவர்கள். ""இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில்'' என்று குறிப்பிடப்பட்டிருப்பது நம்மைப்பற்றித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  ஏனெனில் நாமே இந்த உலகத்தில் இயேசுகிறிஸ்துவினுடையவர்கள்.




யூதர்கள் தேவனுக்குச் சொந்தமானவர்களாக இருந்தார்கள். தமக்குச் சொந்தமானவர்களிடத்தில் இயேசுகிறிஸ்து முதலாவதாக வந்தார். ஆனால் அவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. பிரதான மேய்ப்பராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய ஆட்டுத்தொழுவத்திற்கு வருகிறார். தம்முடைய ஆடுகளைப்பார்ப்பதற்காக வருகிறார். ஆடுகள் அவருடையது. அவருக்குப் பிரியமான நேரத்தில் அவர் எப்போது வேண்டுமானாலும் தம்முடைய தொழுவத்திற்குள் அவர் வரலாம்.


ஒரு மனுஷனுக்கு அவனுடைய  மனைவியும்  அவனுடைய பிள்ளைகளும் அவனுடையவர்களாக இருக்கிறார்கள். அதுபோலவே நாமும் கிறிஸ்துவினுடையவர்களாக இருக்கிறோம். தம்முடையவர்களிடத்தில் இயேசுகிறிஸ்து விசேஷித்த அன்பு வைத்திருக்கிறார். நாம் இந்த உலகத்தில் இருக்கிறோம். இப்போது அவர் தமக்குச் சொந்தமானதாகிய பரலோகத்திற்குப் போகப்போகிறார். அவர் அங்கு போனாலும்  இந்த உலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பாகவே இருக்கிறார். ஏனெனில் இவர்களுக்கு இயேசுகிறிஸ்துவின் பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படுகிறது. ஒரு வீட்டில் வியாதியாக இருக்கிற குழந்தைக்கு அதிக கவனம் தேவைப்படுவதுபோல, விசுவாசத்தில் பலவீனமாகயிருக்கிற நமக்கு இயேசுகிறிஸ்துவின் உதவி அதிகமாய்த் தேவைப்படுகிறது. இயேசுகிறிஸ்து யாரிடத்தில் அன்பு வைத்திருக்கிறாரோ, அவர்களிடத்தில் முடிவுபரியந்தம் அன்பு வைத்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் அன்பைவிட்டு அவருடைய பிள்ளைகளை யாரும் பிரிக்க முடியாது. அவருடைய அன்பு பரிபூரணமானது. முடிவுபரியந்தம் நிலைத்திருக்கிறது. 


இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்திருப்பதற்கு இந்தக் காலத்தையே ஏற்றகாலமாகத் தெரிவு செய்திருக்கிறார். இதற்கு  இரண்டு காரணங்கள் உள்ளன. அவையாவன: 1. தம்முடைய வேளை வந்ததென்று இயேசுகிறிஸ்து அறிந்திருக்கிறார். 2. இயேசுகிறிஸ்துவைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் யூதாஸ்காரியோத்துடைய இருதயத்தைத் தூண்டுகிறான்.


இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தைவிட்டு பிதாவினிடத்திற்குப் போகும்படியான அவருடைய வேளை வந்திருக்கிறது. இந்த வேளையை அவரும் அறிந்திருக்கிறார்.   இயேசுகிறிஸ்துவுக்கு இப்போது மாற்றங்கள் கடந்து வந்திருக்கிறது. அவர் இந்த உலகத்தைவிட்டுப்  புறப்பட்டுப் போகவேண்டும். இயேசுகிறிஸ்துவைப்போலவே அவருடைய விசுவாசிகளெல்லோரும் இந்த உலகத்தைவிட்டுப் புறப்பட்டுப் பிதாவினிடத்திற்குப் போகவேண்டும். அவர் நமக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொள்ள நாம் பரலோகத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம்.  


இயேசுகிறிஸ்துவின் ஜீவியத்தில் ஒரு மாற்றம் உண்டாயிருக்கிறது. மாற்றத்திற்கான அந்த வேளை  இப்போது வந்திருக்கிறது. இதை இயேசுகிறிஸ்துவும் அறிந்திருக்கிறார். யோவான் இந்த வேளையைக் கிறிஸ்துவின் வேளை என்று குறிப்பிடுகிறார். லூக்கா எழுதின சுவிசேஷத்தில் இந்த வேளை ""அவர்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது'' என்று இயேசுகிறிஸ்து குறிப்பிடுகிறார் (லூக் 22:53).      இயேசுகிறிஸ்துவின் வேளை அவர் ஜெயம் பெறுகிற வேளையாகவே இருக்கும். இயேசுகிறிஸ்து தம்முடைய வேளையை முன்னறிந்தவராக இருக்கிறார். தம்முடைய வேளை வந்தது என்று இயேசு அறிந்திருக்கிறார்.  இந்த வேளை வருவதற்கு முன்பாகவே, இந்த வேளையின் ஆரம்பத்திலிருந்தே, இயேசுகிறிஸ்து இந்த வேளையை அறிந்திருக்கிறார். இப்போது அந்த வேளை வந்துவிட்டது என்பதையும் இயேசுகிறிஸ்து அறிந்தவராக இருக்கிறார். 


""பஸ்கா பண்டிகைக்கு முன்னே'' என்பது நிசான் மாதம் 14 ஆம் தேதி. பஸ்கா பண்டிகைக்கு ஆயத்தநாள் ஆகும். இது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள். கடைசி இராப்போஜனத்தின் போது, யூதாஸ்காரியோத்து இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுக்க சதிபண்ணுகிறான். இந்த சம்பாஷணை இயேசு கிறிஸ்துவும், அவருடைய சீஷர்களும் கெத்செமனே தோட்டத்திற்குப் போகும்போது நடைபெற்றது. 


""முடிவுபரியந்தம்''  என்பது  ஒரு குறிப்பிட்ட காலத்தை வெளிப்படுத்தவில்லை. தம்முடைய சீஷர்களுக்காக இயேசு கிறிஸ்து மிகுந்த தாழ்மையோடு ஊழியம் செய்வதற்கு ஆயத்தமாக இருந்ததைக் குறிப்பிடுகிறது.



போஜனம் பண்ணிக்கொண்டிருக்கையில்


சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்; (யோவா 13:2).


 இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரோடு போஜனம்பண்ணிக்கொண்டிருக்கிறார். அப்போது அவர் தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவுகிற சம்பவம் இந்த வசனப்பகுதியில் எழுதப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து சீஷர்களுடைய கால்களை ஏன் கழுவவேண்டும் என்பதற்கு வேதபண்டிதர்கள் பலவிதமாக வியாக்கியானங்கள் கூறுகிறார்கள். ஞானமுள்ள ஒரு மனுஷன் பொதுவாக அசிங்கமான காரியத்தையோ அல்லது விநோதமான காரியத்தையோ செய்யமாட்டான். அவன் எதைச்செய்தாலும் அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கும். எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்தபின்புதான், தெளிந்த சிந்தனையோடு  செயல்படுவான்.


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவுவது மிகவும் முக்கியமான சம்பவமாகும். அவர் தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவுவதற்கு நான்கு காரணங்களைக் கூறலாம். அவையாவன: 1. தம்முடைய சீஷர்களிடத்தில் தாம் வைத்திருக்கும் அன்பை இந்த சம்பவத்தின் மூலமாக இயேசுகிறிஸ்து சாட்சியாக வெளிப்படுத்துகிறார். 2. தம்முடைய தாழ்மையை இயேசுகிறிஸ்து தாமாகவே வெளிப்படுத்துகிறார். 3. ஆவிக்குரிய சுத்திகரிப்பைக் குறித்து இயேசுகிறிஸ்து இதன் மூலமாக விளக்குகிறார். 4. இந்த சம்பவத்தை  நமக்கும் ஒரு முன்மாதிரியாக வைத்திருக்கிறார்.   


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் மிகுந்த அன்போடு இருக்கிறார். அவர் சீஷர்களின் கால்களைக் கழுவுவது அவருடைய அன்புக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் அன்பு நிலையானது. பெருமைப்படாதது. இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைத்  தமது பணிவிடையின் மூலமாக குணப்படுத்துகிறார். இயேசுகிறிஸ்துவின் செய்கை சீஷர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். சற்று நேரத்திற்கு முன்புதான்  மரியாள் இயேசுகிறிஸ்துவின் தலையில் பரிமள தைலத்தை ஊற்றியபோது, சீஷர்கள் விசனமடைந்தார்கள். இது வீண் செலவு என்றார்கள் (மத் 26:8).  


சீஷர்களுக்கு இயேசுகிறிஸ்துவின்மீது மெய்யான அன்பு இல்லை. ஆனால் இயேசு அவர்களிடத்தில் அன்பாயிருப்பதை தம்முடைய தாழ்மையான செய்கையின் மூலமாக நிரூபிக்கிறார். இயேசுகிறிஸ்துவின் அன்புக்கு முன்பாக நம்முடைய பலவீனங்களெல்லாம் நீங்கிப்போகும். அவர் நம்மை அன்போடு பார்க்கும்போது, நம்மிடத்திலுள்ள பலவீனங்கள்   அவருடைய பார்வைக்குத் தெரியாது. அவருடைய தெய்வீக அன்பு நம்முடைய பலவீனங்களை மறைத்துவிடும். 


யூதாஸ்காரியோத்து இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவன். இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவனுடைய இருதயத்தைத் தூண்டுகிறான். யூதாஸ்காரியோத்தின் காட்டிக்கொடுக்கும் வஞ்சக சுபாவம் இங்குதான் ஆரம்பமாகிறது.  பிசாசு மனுஷனுடைய இருதயத்தை எப்படித் தூண்டுவான் என்று நம்மால் நிதானித்து அறியமுடியாது. தேவனுக்கு விரோதமாக நாம் சிந்திப்பது, செயல்படுவது எல்லாமே பாவமானதுதான். அதிலும் சில பாவங்கள் மற்ற பாவங்களைவிடத் துணிகரமான பாவங்களாக இருக்கும். இப்படிப்பட்ட துணிகரப்பாவங்கள் எல்லோருக்கும் முன்பாக பிரத்தியட்சமாகத் தெரியும்.  இந்தப் பாவங்களைச் செய்கிறவர்களின் இருதயத்தைச் சாத்தான் தூண்டி, அங்கு முட்டையிட்டுக் குஞ்சுபொறிப்பதுபோல, தன்னுடைய நயவஞ்சகத்தை விதைக்கிறான், பெருக்குகிறான். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவிக்கொண்டிருக்கிறார். ஆனால் யூதாசோ இயேசுகிறிஸ்துவைக் காட்டிக்கொடுக்கவேண்டுமென்று தீர்மானம்பண்ணிக்கொண்டிருக்கிறான். இயேசுகிறிஸ்து இந்த உலகத்தைவிட்டு புறப்பட வேண்டிய வேளை நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. இதைத் தள்ளிப்போட முடியாது. தமக்குச் சிறிது காலமே இருக்கிறது என்பதை இயேசுகிறிஸ்துவும் அறிந்திருக்கிறார். இந்தச் சிறிய காலத்தைப் பிசாசும் அறிந்திருக்கிறான். ஆகையினால் தனக்குக் கிடைத்திருக்கும் இந்தச் சிறிய காலத்தை எப்படியாவது பயன்படுத்தி, இயேசுவை அழித்துப்போடவேண்டுமென்று சாத்தான் தீவிரமாகச் செயல்படுகிறான். சாத்தானுடைய கண்ணியில் யூதாஸ் விழுந்துவிடுகிறான். யூதாசை மாத்திரமல்ல, சாத்தான் சீமோனையும்  மற்ற சீஷர்களையும் தன்னுடைய வலையில் சிக்க வைக்கவேண்டுமென்று முயற்சிபண்ணினான். கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோல அவர்களைப் புடைக்கவேண்டுமென்று விரும்பினான்        (லூக் 22:31). 


இயேசுகிறிஸ்து தம்முடையவர்களை சாத்தானுடைய சதிஆலோசனைகளிலிருந்து வேலியடைத்துப் பாதுகாத்துக்கொள்கிறார்.  மந்தையிலுள்ள ஒரு ஆட்டை ஓநாய் திருடிச் சென்றுவிட்டால், மேய்ப்பன் மற்ற ஆடுகள்மீது  அதிக கவனம் செலுத்துவான். ஆடுகளுக்குப் பாதுகாப்பை அதிகரிப்பான். மிகுந்த எச்சரிப்போடு இருப்பான். கிருமிகளினால் வியாதி வரும்போது அந்தக் கிருமிகளைக் கொல்லுவதற்கு மருத்துவர்கள் மருந்து கொடுப்பார்கள். அந்த வியாதி தொற்றுநோய்போல பரவிவிடாமல் இருப்பதற்கு எல்லா முன் எச்சரிக்கை நடவடிக்கைளையும் எடுப்பார்கள். இப்போது சாத்தான் யூதாசின் இருதயத்தைத் தூண்டியிருக்கிறான். பன்னிரண்டு சீஷர்களில் ஒரு சீஷன் சாத்தானுடைய வஞ்சக வலையில் விழுந்துவிடுகிறான். 


யூதாசினுடைய பிசாசுக் குணம் மற்ற சீஷர்களுக்கும் பரவிவிடக்கூடாது. ஒரு சீஷன் தவறு செய்ததினால் இயேசுகிறிஸ்து எல்லோரையும் வெளியே துரத்திவிடவில்லை.  யூதாசின் இருதயத்தில் சாத்தான் புகுந்திருக்கிறான். இயேசுவைக் காட்டிக்கொடுக்கிற வஞ்சக எண்ணம் அவனுடைய உள்ளத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்கூட இயேசுகிறிஸ்து  யூதாசின்மீது அன்பாகவேயிருக்கிறார். மற்ற சீஷர்களை நேசிப்பதுபோலவே அவர் யூதாசையும் நேசிக்கிறார். இயேசுகிறிஸ்து சீஷர்களின் கால்களைக் கழுவும்போது யூதாசின் கால்களையும் கழுவுகிறார். இதுதான் இயேசுகிறிஸ்துவின் மெய்யான அன்பு. யூதாஸ் தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறான்  என்பதை அறிந்திருந்தும் இயேசுகிறிஸ்து அவனிடத்தில் அன்பாகயிருக்கிறார்.


""அவர்கள் போஜனம்பண்ணிக் கொண்டிருக்கையில்'' என்னும் வாக்கியம் கிரேக்க மொழியில் ""அவர்கள் போஜனம்பண்ணி முடித்தபின்பு'' என்றிருக்கிறது. இராப்போஜனத்திற்கு அவர்கள் ஆயத்தமாக்கின பின்பு என்று பொருள்.   முதலாவதாக இயேசு கிறிஸ்து சீஷர்களுடைய கால்களைக் கழுவ வேண்டும்.


ஏற்கெனவே பிசாசானவன் யூதாஸ்காரியோத்தின் இருதயத்தைத் தூண்டிக் கொண்டிருக்கிறான். 



இயேசு எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்


தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்தி-ருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து:  (யோவா 13:3) 


தமக்குச் சொந்தமானவர்களிடத்தில் இயேசுகிறிஸ்து மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். அவருடைய அன்பு பெரியது. தாழ்மையானது.  தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவுவதன் மூலமாக இயேசுகிறிஸ்து தம்முடைய தாழ்மையையும் அன்பையும் வெளிப்படுத்துகிறார்.  தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்திருக்கிறார் என்பதை இயேசுகிறிஸ்து அறிந்திருக்கிறார். போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில், போஜனத்தைவிட்டு எழுந்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவுகிறார். அவரோடுகூட போஜனம்பண்ணிக் கொண்டிருக்கிறவர்களுக்குக்கூட இயேசுகிறிஸ்துவின் இந்தச் செய்கை மிகுந்த ஆச்சரியமாயிற்று. 


கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமக்கு நியமிக்கப்பட்ட பிரகாரமாகவே முன்செல்லுகிறார். எல்லாவற்றையும் செய்ய பிதாவானவர் குமாரனுக்கு அதிகாரங்கொடுத்திருக்கிறார். சகலமும் தம்முடைய பிதாவினால் தமக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது என்று இயேசுகிறிஸ்து அறிவிக்கிறார் (மத் 11:27).  இந்தச் சத்தியத்தை அவர் மறுபடியும் சொல்லும்போது ""தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்திருக்கிறார்'' என்று அறிவிக்கிறார்.


தேவனுடைய எல்லாக் காரியங்களுக்கும் இயேசுகிறிஸ்துவே சுதந்தரவாளியாக இருக்கிறார். இயேசுகிறிஸ்து தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறவர். ஆதியிலிருந்தே பிதாவாகிய தேவனோடு, குமாரனாகிய இயேசுகிறிஸ்து கூடவே இருக்கிறார் என்பதை இந்த வாக்கியம் தெளிவுபடுத்துகிறது. இயேசுகிறிஸ்து தேவனிடத்திலிருந்து, தேவகுமாரனாக வந்திருக்கிறார். தேவனே இவரை அனுப்பியிருக்கிறார். இப்போது இயேசுகிறிஸ்து தேவனிடத்திற்குப் போகப்போகிறார். தேவனிடத்திலிருந்து வந்திருப்பது அவரிடத்திற்குத் திரும்பிப்போகும். பரலோகத்திலிருந்து பிறந்திருக்கிறவர்கள், பரலோகத்திற்குரியவர்கள். அவர்கள் பரலோகத்திற்குப் போவார்கள். 


இயேசுகிறிஸ்து இந்தச் சத்தியங்கள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். ஒரு ராஜாவுக்கு வாரிசு பிறக்கும்போது அது தொட்டிலில் படுத்திருக்கும். அந்த ராஜ்யத்தை ஆளுகை செய்யும் அதிகாரம் அந்தச் சிறிய குழந்தைக்குக் கொடுக்கப்படும். ஆனால் அந்தக் குழந்தையோ தனக்கு கிடைத்திருக்கும் அதிகாரம், கனம், மகிமை ஆகிய எதையும் அறிந்துகொள்ளாமல் சும்மா படுத்திருக்கும். இயேசுகிறிஸ்து இதைப்போல ஒன்றும் தெரியாதவராகத் தொட்டிலில் படுத்திருக்கிற குழந்தையல்ல. தாம் உயர்த்தப்படப்போவதையும், தமக்கு மகிமை கொடுக்கப்படப்போவதையும் இயேசுகிறிஸ்து தெளிவாக அறிந்திருக்கிறார். ஆனாலும் இப்போது தம்மைத்தாமே தாழ்த்தி, தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவுகிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களை ஏன் கழுவவேண்டும் என்று பலரும் பலவிதமாகச் சிந்தித்துப் பார்க்கிறார்கள்.  இந்தச் சம்பவம் இப்போது ஏன் நடைபெறவேண்டும் என்றும் சிலர் யோசித்துப் பார்க்கிறார்கள். இயேசுகிறிஸ்து இப்போது தமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பாடுகளை அனுபவிக்க ஆயத்தமாகயிருக்கிறார். இந்தப் பாடுகளுக்கு ஆரம்பமாக, இயேசுகிறிஸ்து தம்மைத்தாமே தாழ்த்துகிறார். இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்கும்போது அவருக்கு ஆதரவும், ஆறுதலும் தேவைப்படுகிறது. 


யூதாஸ்காரியோத்து இப்போது இயேசுகிறிஸ்துவைக் காட்டிக்கொடுக்கப்போகிறான். எல்லாவற்றையும் அறிந்திருக்கிற இயேசுகிறிஸ்து, யூதாஸ்காரியோத்தையும், அவன் தம்மை காட்டிக்கொடுக்கப்போவதையும் அறிந்திருக்கிறார். அதேவேளையில் தாம் தேவனிடத்திலிருந்து வந்திருப்பதையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் அறிந்திருக்கிறார். தமக்கு மகிமை காத்துக்கொண்டிருக்கிறது என்பதற்காக,  தமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியத்தை இயேசுகிறிஸ்து மறந்துவிடவில்லை. 


மனுஷர் எல்லோருமே இயேசுகிறிஸ்துவைவிட தாழ்ந்தவர்கள். அவர் மனுஷரிடத்தில் அன்புகூரும்போது, தம்மைவிட தாழ்ந்தவரிடத்தில் அன்புகூருகிறார். அன்புகூருகிற ஊழியத்திலிருந்து  இயேசுகிறிஸ்து பின்வாங்கிவிடவில்லை. தாம் மகிமையடையப்போவதை நினைத்து, தம்மைவிட தாழ்மையானவர்களிடத்தில் அன்புகூராமல், தமது மகிமையையே அவர் நினைத்துப் பார்த்துக்கொண்டிருக்கவில்லை. தம்மைத் தாழ்மைப்படுத்துவதற்காகவே இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவுகிறார். 


தேவனுடைய நினைவுகள் நம்முடைய நினைவுகள் ஆகாது. ஒருவேளை தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவுவதற்கு இயேசுகிறிஸ்துவுக்கு வேறு விசேஷித்த காரணம் இருந்திருக்கலாம். நமக்கு அது தெரியவில்லையென்றால், தெரியாத காரியங்கள் கர்த்தருக்கே உரியது என்று தீர்மானம் செய்து, அதைக் கர்த்தருடைய சமுகத்தில் அர்ப்பணித்துவிடவேண்டும். 


அடிமைகளே மற்றவர்களுடைய கால்களைக் கழுவுவார்கள். இயேசு கிறிஸ்து ஒரு அடிமையைப் போன்று தம்மைத் தாழ்த்துகிறார். தமது தெய்வத்துவம், அதிகாரம், வரப்போகிற மகிமை ஆகியவற்றைத் தம்மைத் தாழ்த்துவதற்கு முன்பாகச் சிந்தித்துப் பார்க்கிறார். தம்முடைய மேன்மை அதிகமாக இருந்தாலும், இயேசு கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி, சீஷர்களுடைய கால்களைக் கழுவுகிறார்.


போஜனத்தை விட்டெழுந்து


போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,  பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார் (யோவா 13:4,5).  


 இயேசுகிறிஸ்து தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறவர். தேவனிடத்திற்குப் போகப்போகிறவர். மகிமைக்குப் பாத்திரர். ஆனால் நம்முடைய கர்த்தராகிய  இயேசுகிறிஸ்து  தம்மைத்தாமே தாழ்த்துகிறார். மனுஷருக்குப் பரலோகமும் சந்தோஷமும் உறுதிபண்ணப்பட்டால், அவனுடைய உள்ளத்தில் பெருமை வந்துவிடும். ஆனால் இயேசுகிறிஸ்துவோ பரலோகத்திற்குச் சொந்தக்காரர். அப்படியிருந்தும் அவருடைய உள்ளத்தில் பெருமை எதுவுமில்லை. அவர் தம்மையே மரணபரியந்தம் தாழ்த்துகிறார். இயேசுகிறிஸ்துவோடு போஜனம்பண்ணுகிறவர்கள் சாதாரண சீஷர்கள். அவர்களுடைய கால்களைக் கழுவி இயேசுகிறிஸ்து தம்மையே தாழ்த்துகிறார்.


ஒரு மனுஷனுடைய கால்களைக்  கழுவுவது  மிகவும் இழிவான வேலை. வேலைக்காரர்களிலும், கீழ்மட்டத்திலுள்ள வேலைக்காரர்கள்தான் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்வார்கள். இயேசுகிறிஸ்து அப்படிப்பட்ட தாழ்மையான வேலையைச் செய்வதற்குத் தம்மை ஒப்புக்கொடுக்கிறார். இயேசுகிறிஸ்து தம்மைவிட தாழ்ந்தவர்களிடத்திலும் அன்புகூர்ந்து, அவர்களுடைய கால்களைக் கழுவுகிறார். இதனால் அவருடைய சீஷர்களுக்கு மிகுந்த ஆச்சரியம் உண்டாயிற்று. 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவினாலும், இதைத் தம்முடைய சீஷர்களுக்காகவே செய்கிறார். அவர்களும் தம்மைப்போலவே, தங்களைவிட தாழ்ந்தவர்களிடத்திலும் அன்புகூரவேண்டும் என்பதை அவர்களுக்கு   எடுத்துக்காண்பிக்கிறார். சீஷர்கள் தங்களைத் தாழ்த்தவேண்டும். தங்களுடைய சரீரத்தின் மூலமாக வரும் மகிமையை எதிர்பார்க்கக்கூடாது. சரீரத்தின் வசதிகளுக்கும், சொகுசுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல்,  தங்களுடைய சரீரங்களைத் தாழ்த்தி, ஊழியம் செய்யவேண்டும். 


மனுஷர் பொதுவாக தங்களுடைய சரீரத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். தண்ணீரினால் ஒருவேளை  சரீரத்தை அடிக்கடி சுத்தப்படுத்தி அழகுபடுத்தலாம். ஆனால் மனுஷனுடைய கால்களோ அழுக்கு நிறைந்ததாகவே இருக்கும்.  தன்னுடைய முகத்தைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று விரும்புகிற மனுஷன், தன் முகத்தைப்போல தன் கால்களையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று பொதுவாக விரும்புவதில்லை. ஆகையினால் கால்கள் எப்போதுமே அழுக்கடைந்ததாகவும், அசுத்தமானதாகவும் இருக்கும். 


சீஷர்கள் இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்கள். இந்தச் சீஷர்கள்தான் தங்கள் எஜமானரும் ஆண்டவருமாகிய இயேசுகிறிஸ்துவின் கால்களைக் கழுவவேண்டும். இதுதான் உலகத்தின் நியதி.  சில சமயங்களில் வேலைக்காரர்கள் தங்கள் எஜமான்களின் கால்களைக் கழுவும்போது, அவர்களிடத்திலிருந்து ஏதாவது சிறப்பான சலுகைகளை எதிர்பார்த்து இந்த வேலைகளைச் செய்வார்கள். எஜமானிடத்திலிருந்து தங்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்பது உறுதியாகத் தெரிந்தால், வேலைக்காரர்கள் இப்படிப்பட்ட தாழ்மையான வேலைகளைச் செய்யமாட்டார்கள்.  ஒருசிலர் தங்கள் எஜமானிடம் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக அவரை முகஸ்துதி செய்வார்கள். அதிகமாகப் பணிந்து குனிந்து வேலை செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் எப்போதாவது தங்கள் எஜமானனின் கால்களைக் கழுவுவார்கள். 


ஆனால், இங்கோ ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே, தம்முடைய ஊழியக்காரராகிய சீஷரின் கால்களைக் கழுவுகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்திலிருந்து எந்தச் சலுகையும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுடைய  கால்களைக் கழுவுவதுபோல இயேசு நடித்துக் காண்பிக்கவில்லை. மெய்யாகவே அவர்களுடைய கால்களைக் கழுவுகிறார். உண்மையான மனத்தாழ்மையைத் தவிர இயேசுகிறிஸ்துவிடம் வேறு எதுவுமில்லை. ஒரு விளம்பரத்திற்காகவோ, மற்றவர்கள் தம்மை தாழ்மையுள்ளவரென்று புகழவேண்டும் என்பதற்காகவோ, வேறு ஏதாவது கட்டாயத்தின் பேரிலோ இயேசுகிறிஸ்து தம்முடைய  சீஷர்களின் கால்களைக் கழுவவில்லை. மனத்தாழ்மையுள்ளவர் தாழ்மையான ஊழியத்தைச் செய்கிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவுவதற்காகப் போஜனத்தைவிட்டு எழும்புகிறார். இந்த வாக்கியத்திற்கு வேதபண்டிதர்கள் வெவ்வேறு விதமாக வியாக்கியானம்            கூறுகிறார்கள். ""அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்'' (யோவா 13:2) என்னும் வாக்கியம் ஏற்கெனவே  எழுதப்பட்டிருப்பதினால், இயேசுகிறிஸ்து போஜனம்பண்ணி முடித்துவிட்டார் என்றும், அதன்பின்பு அவர் எழுந்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவுகிறார் என்றும் ஒரு சிலர் வியாக்கியானம் கூறுகிறார்கள்.  


""போஜனத்தை விட்டெழுந்து'' என்னும் வாக்கியத்திற்கு மற்றொரு விதமாக வியாக்கியானம் கூறுகிறவர்கள், ""இயேசுகிறிஸ்து போஜனம்பண்ணிக் கொண்டிருக்கிறார் என்றும், இன்னும் போஜனம்பண்ணி முடிக்கவில்லை என்றும், போஜனம்பண்ணும்போது, தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவுவதற்காக,  பாதியிலேயே போஜனத்தைவிட்டெழும்புகிறார்'' என்றும் கூறுகிறார்கள். ஏனெனில் ""அவர் திரும்ப உட்கார்ந்து'' (யோவா 13:12), ""துணிக்கையைத்  தோய்த்து'' (யோவா 13:26) என்னும் வார்த்தைகள் வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆகையினால் இயேசுகிறிஸ்து போஜனம்பண்ணிக் கொண்டிருக்கும்போது, பாதியில் எழுந்து, தம்முடைய சீஷர்களின் கால்களைக்  கழுவுகிறார் என்று இந்த வாக்கியத்திற்கு வியாக்கியானம் கூறுவது சிறப்பாக இருக்கும். 


இயேசுகிறிஸ்து போஜனத்தைவிட்டு எழும்புவதன் மூலமாக நமக்கு சில ஆவிக்குரிய சத்தியங்களை வெளிப்படுத்துகிறார். அவையாவன: 1. தேவனுடைய ஊழியத்தை  செய்வதற்கோ அல்லது மனுஷருக்கு உதவி செய்வதற்கோ, நம்முடைய போஜனத்தைவிட்டு  பாதியில் எழும்பிச் செல்வது நமக்கு  இடையூறாக இருக்கிறது என்று நினைக்கக்கூடாது.  2. நம்முடைய போஜனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. 


நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நமக்குப் பலவிதமான பொறுப்புக்கள் உண்டு. நமது ஆரோக்கியத்திற்காக நாம் புசிக்கிறோம். நமது ஜீவனுக்கு போஜனம் உதவியாக இருக்கும்.  போஜனத்திற்காக நாம் ஜீவிக்கக்கூடாது. கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்கு     ஊழியமே முக்கியமானதாக இருக்கவேண்டும். நாம் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கும் வேளையிலோ, அல்லது நாம் நித்திரையாக இருக்கும் வேளையிலோ, கர்த்தருடைய ஊழியத்தைச் செய்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமென்றால், அந்த ஊழிய வாய்ப்பைப் பயன்படுத்தி ஊழியம் செய்யவேண்டும். தம்முடைய உற்றார் உறவினர் மூலமாகக்கூட, தம்முடைய ஊழியம் தடைபடுவதை இயேசுகிறிஸ்து விரும்பவில்லை. ஊழியத்தை விட்டுவிட்டு இயேசுகிறிஸ்து உறவினரைப் பார்க்கப்போய்விடவில்லை (மாற் 3:33). இங்கு இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரோடு போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில், பாதியிலேயே போஜனத்தைவிட்டு எழுந்து, தம்முடைய சீஷர்மீது தமக்கு இருக்கும்  அன்பை  வெளிப்படுத்துகிறார். 


ஒரு சிலர் போஜனத்திற்கு  முக்கியத்துவம் கொடுப்பார்கள். போஜனப்பிரியராக இருப்பார்கள். போஜனம்பண்ணுவதற்காகவே  தாங்கள் ஜீவிப்பதாக நினைத்துக்கொள்வார்கள். ஊழியத்தைவிட போஜனம்பண்ணுவதற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தால் நம்முடைய நிலமை பரிதாபமாக இருக்கும். இயேசுகிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் போஜனம்பண்ணும்போது, ஒருவேளை தங்கள் பசியை ஆற்றுவதற்காக போஜனம்பண்ணிக்கொண்டிருக்கலாம். போஜனம்பண்ணுவது எல்லோருக்கும் முக்கியமானதுதான். ஆனாலும் இயேசுகிறிஸ்து  போஜனம்பண்ணுவதைவிட்டு எழும்பி ஊழியம் செய்கிறார். போஜனம்பண்ணும்போது நமது போஜனமும், சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று விரும்புவோம். ஆனால் இயேசுகிறிஸ்துவோ போஜனம்பண்ணுவதை விட்டு எழுந்து, அசுத்தமான கால்களைத் தம்முடைய சுத்தமான கைகளினால் கழுவுகிறார். கால்களைச் சுத்தப்படுத்துகிறார்.  தேவபக்தியும் பரிசுத்தமும் எப்போதும் இணைந்தேயிருக்கும். 


ஒவ்வொன்றுக்கும் ஒரு வேளை உண்டு.  போஜனம்பண்ணும்போது போஜனத்தின் ருசியைச்  சுவைப்பதுதான் வழக்கம். போஜனம்பண்ணும் இடத்திற்கு உரிய மரியாதையை நாம் தரவேண்டும். இந்த சமயத்தில் நம்முடைய பேச்சும் செயல்களும் சுத்தமானதாகவும் கண்ணியமானதாகவும் இருக்கவேண்டும். போஜனம்பண்ணும்போது ஒரு சிலர் அதற்குரிய  வஸ்திரம் தரித்திருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ   போஜனம்பண்ணும் விருப்பதை சிலுவையில் அறைந்தவராக, போஜனத்தைவிட்டு எழும்புகிறார். தம்முடைய வஸ்திரங்களை கழற்றி வைத்து, ஒரு சீலையை எடுத்து அரையில் கட்டிக்கொள்கிறார். ஒரு வேலைக்காரரைப்போல  அரையை கட்டிக்கொள்கிறார். இயேசுகிறிஸ்து நமக்காகத் தாழ்மையின் ரூபமெடுத்திருக்கிறார். அதிலும் விசேஷமாக ஒரு வேலைக்காரருடைய  ரூபத்தையும் எடுத்திருக்கிறார். தம்முடைய வஸ்திரத்தைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு சேலையை எடுத்து, அரையில் கட்டிக்கொண்டு  ஒரு வேலைக்காரரைப்போலவே பணிவிடை செய்கிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவும்போது, அவர் வஸ்திரம் தரித்திருப்பாரென்றால், அது அவருடைய ஊழியத்திற்கு இடையூறாக இருக்கும். தாம் செய்ய விரும்புகிற வேலையை நேர்த்தியாகச் செய்யவேண்டும் என்பதற்காக, இயேசு தம்முடைய அரையில் சீலையை கட்டிக்கொள்கிறார். கர்த்தருடைய ஊழியக்காரர்களாகிய நாம், நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஊழியத்தைச் செய்வதற்கு, ஏற்ற வஸ்திரத்தைத் தரித்துக்கொள்ளவேண்டும். நம்முடைய வஸ்திரம்  நமது ஊழியத்தை நேர்த்தியாகச் செய்வதற்கு  உதவிபுரியவேண்டும். ஊழியக்காரர்களுக்கு  ஆடம்பரமோ, வெளிவேஷமோ தேவையில்லை.


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவும்போது, தம்மை எந்த அளவுக்குத் தாழ்த்தவேண்டுமோ அந்த அளவுக்குத் தாழ்த்துகிறார். ஒரு சீலையைக் எடுத்து அரையிலே கட்டிக்கொண்டு, பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவி, தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் சீஷர்களின் கால்களைத் துடைக்கிறார். இயேசுகிறிஸ்து எல்லா சீஷர்களுடைய கால்களைக் கழுவி துடைப்பதுபோல,  யூதாஸ்காரியோத்தின் கால்களையும் கழுவி,   தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் அதைத் துடைக்கிறார். இயேசுகிறிஸ்து சீஷர்களின் கால்களைக் கழுவும்போது யூதாஸ்காரியோத்தும்  அங்கு இருக்கிறான் (யோவா 13:26). தம்மை யூதாஸ்காரியோத்து  காட்டிக்கொடுக்கப்போகிறான் என்பது இயேசுகிறிஸ்துவுக்குத் தெரியும். ஆனாலும் தம்முடைய அன்பை அவனுக்கும் வெளிப்படுத்துகிறார். அவனுடைய கால்களையும் கழுவுகிறார். இந்தக் கால்கள்தான் இயேசுகிறிஸ்துவைக் காட்டிக்கொடுப்பதற்காக, இன்னும் கொஞ்ச நேரத்தில் அவரைவிட்டு விலகி ஓடிப்போகப்போகிறது. ஆனாலும்           இயேசு அவனுடைய கால்களைப் புறக்கணித்துவிடவில்லை. தம்முடைய அன்பை அவனுக்கும் காண்பிக்கிறார். 


போஜன ஆயத்தம் முடிவு பெற்ற பின்பு, இயேசு கிறிஸ்து போஜன மேஜையிலிருந்து எழுந்து, தமது சீஷர்களுடைய கால்களைக் கழுவத் துவங்குகிறார். சீஷர்கள் தங்களுக்குள் யார் பெரியவன் என்று விவாதம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.   இயேசு கிறிஸ்து அவர்களுடைய பெருமையின் ஆவியைக் கடிந்து கொண்டார். ஒரு சிறுபிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அவர்கள் சிறுபிள்ளையைப்போல இருக்க வேண்டும் என்று உபதேசம் பண்ணினார். ஒருவருக்கொருவர் அதிகாரம் செலுத்த முயற்சி பண்ணக்கூடாது. இயேசு கிறிஸ்து ஊழியம் கொள்ள வராமல், ஊழியம் செய்ய வந்தார்.  பல சமயங்களில் இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களின் பெருமையான ஆவியைக் கடிந்து கூறியிருக்கிறார்.    வருஷங்கள் சென்று விட்டதால், சீஷர்கள் இந்த உபதேசத்தை மறந்திருக்கலாம். அவர்கள் உலகப் பெருமையையும், உலக மகிமையையும் நாடியிருக்கலாம். அவர்களுக்குத் தாழ்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறுவதற்காக இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவுகிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய வஸ்திரங்களைக் கழற்றிவைத்தார். அவர் தம்முடைய மேலங்கியைக் கழற்றி வைத்தார். வேலை செய்யும்போதும், தூங்கும்போதும் யூதர்கள் தங்களுடைய மேலங்கியைக் கழற்றி வைப்பது வழக்கம்.


இயேசுகிறிஸ்து ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டார். அடிமையானவன் வேலை செய்யும்போது, அரையிலே தன்னுடைய துணியைக் கட்டிக் கொள்ள வேண்டும். யூதாஸ்காரியோத்தின் கால்களை இயேசு கிறிஸ்து  முதலாவதாகக் கழுவியதாகச் சிலர் கூறுகிறார்கள். தம்முடைய இரக்கத்தினாலே அவனைச் சூழ்ந்து கொண்டார். ஒரு விரோதியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதைக் காண்பிப்பதற்காக இயேசு கிறிஸ்து யூதாசின் கால்களைக் கழுவியிருக்கலாம். 


இயேசுகிறிஸ்து சீஷருடைய கால்களைக் கழுவினார். கழுவுதல் என்பதற்கு இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை ""நிப்டோ''  சரீரத்தில் ஒரு பகுதியைக் கழுவுதல் என்பது இதன் பொருள்.  மற்றொரு வார்த்தை ""பேப்டோ''  சரீரத்தை முழுக்குதல் என்பது இதன் பொருள். பேப்டோ என்னும் கிரேக்க வார்த்தையிலிருந்தேபேப்டைஸ்  ""ஞானஸ்நானம் கொடுத்தல்'' என்னும் சொல் வந்திருக்கிறது. (மத் 3:6)


நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல

(யோவா 13 : 6-11)


என் கால்களைக் கழுவலாமா?


அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்  (யோவா 13:6).   


இயேசுகிறிஸ்து சீஷர்களுடைய கால்களைக் கழுவுவது, மனுஷருடைய ஆத்துமாவில் பாவத்தினால் உண்டாயிருக்கிற அசுத்தங்களைக் கழுவுவதற்கு ஒப்புமையாக இருக்கிறது. இயேசுகிறிஸ்து பேதுருவோடு நடத்துகிற உரையாடலில் இந்தச் சத்தியம் தெளிவுபடுத்தப்படுகிறது. 


இயேசுகிறிஸ்து ஒவ்வொரு சீஷருடைய கால்களாக கழுவிக்கொண்டு, பேதுருவின் கால்களைக் கழுவுவதற்காக அவனிடத்திற்கு வருகிறார். ஒருவேளை அவனுடைய  கால்களைக் கழுவுவதற்கு வசதியாக, இயேசுகிறிஸ்து பேதுருவின் கால்களை நீட்டுமாறு சொல்லியிருக்கலாம். ஒருவேளை சீஷருடைய கால்களைக் கழுவும்போது, பேதுரு முதல் ஆளாக, அவருக்கு அருகில் பந்தியில் அமர்ந்திருக்கலாம். மற்ற சீஷர்களைவிட பேதுரு அதிகமாகப் பேசக்கூடியவன். ஆகையினால் இயேசுகிறிஸ்து பேதுருவின் கால்களை முதலாவதாகக் கழுவுவதற்காக அவனிடத்தில் வந்திருக்கலாம். 


பேதுருவினுடைய சந்தேகம் தீர்ந்துவிட்டால் எல்லோருடைய சந்தேகமும் தீர்ந்ததுபோல இருக்கும். ஆகையினால் பேதுருவின் கேள்விகளுக்கு இயேசுகிறிஸ்து  பிரதியுத்தரம் கூறுகிறார். பேதுரு இயேசுவை நோக்கி ""ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா'' என்று கேட்கிறான்.  பேதுரு இயேசுகிறிஸ்துவைத்  தன்னுடைய கர்த்தராகவும் ஆண்டவராகவும் அங்கீகரித்திருக்கிறான். அவர் தேவனுடைய குமாரனென்பதை சீஷர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிற கிறிஸ்து என்று சீஷர்கள் விசுவாசிக்கிறார்கள். தாங்களோ இந்தப் பூமியில்  பாவியான மனுஷரென்றும், ஒன்றுக்கும் உதவாத  புழுக்களைப்போல இருப்பதாகவும் சீஷர்கள் நினைக்கிறார்கள்.  அப்படிப்பட்ட பாவிகளாகிய தங்களுடைய கால்களை இயேசுகிறிஸ்து கழுவலாமா என்று அவரிடத்திலேயே பேதுரு கேட்கிறான். 


இயேசுகிறிஸ்து தம்முடைய கைகளினால் பரிசுத்தமான  குஷ்டரோகிகளைச் சொஸ்தமாக்கியிருக்கிறார். குருடருக்குப் பார்வை கொடுத்திருக்கிறார். மரித்தோரை மறுபடியும் உயிரோடு எழுப்பிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் கை பரிசுத்தமானது. வல்லமையுள்ளது. அப்படிப்பட்ட பரிசுத்தமான கையினால் இயேசுகிறிஸ்து தன்னுடைய கால்களைக்  கழுவலாமா  என்று   பேதுரு  கேட்கிறான். பேதுருவுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தால் அவன் இயேசுகிறிஸ்துவின் கால்களைச் சந்தோஷமாகக் கழுவுவான். பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, இயேசுகிறிஸ்துவின் கால்களைக் கழுவி, சீலையினால் அவருடைய கால்களைத் துடைத்து பெருமைப்பட்டிருப்பான். ஆனால் இயேசுகிறிஸ்து   தன்னுடைய பேதுருவின் கால்களைக் கழுவுவதைப் பேதுருவினால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. 


இப்பொழுது நீ அறியாய்


இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார் (யோவா 13:7).  


பேதுருவின் கேள்விக்கு இயேசுகிறிஸ்து பொறுமையோடு பிரதியுத்தரம் கூறுகிறார்.  ""நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய்'' என்று கூறுகிறார். ஆனாலும் பேதுரு இதன் சத்தியத்தை நிரந்தரமாக அறியாமலேயே இருந்துவிடமாட்டான். இனிமேல் அறிவான். இயேசுகிறிஸ்து தன்னுடைய கால்களைக்  கழுவுவதற்குப் பேதுரு இப்பொழுது இடங்கொடுக்கவேண்டும். இதன் காரணத்தைப் பேதுரு இப்பொழுது அறிந்துகொள்ளவில்லையென்றாலும்,  இனிமேல் அவன் இதை அறிந்துகொள்ளப்போவதினால்,  இப்பொழுது இயேசுகிறிஸ்து தன்னுடைய கால்களைக் கழுவுவதற்குப் பேதுரு இடங்கொடுக்கவேண்டும். இயேசுவின் கிரியைகளை இப்போது பேதுரு புரியாமலிருக்கிறான். சத்தியத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் இருளில் இருப்பவன்போல யோசிக்கிறான். 


இயேசுகிறிஸ்துவின் கட்டளை நமக்கு ஆரம்பத்தில் புரியவில்லையென்றாலும், நாம் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய எப்போதுமே ஆயத்தமாக இருக்கவேண்டும்.   இயேசு பேதுருவுக்கு சொன்னதுபோலவே, நம்மிடமும் ""நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது அறியாய், இனிமேல் அறிவாய்'' என்று கூறுகிறார். ஆகையினால் இயேசுகிறிஸ்து செய்கிறது நமக்குப் புரியவில்லை என்பதற்காக, அதை விவாதம்பண்ணிக் கொண்டிருக்கக்கூடாது. நமக்குப் பிடிக்கவில்லையென்றால் இயேசுகிறிஸ்து செய்வது சரியல்ல என்று தீர்மானம்பண்ணிவிடக்கூடாது. இப்போது நமக்கு அவருடைய செய்கைகள் புரியாமற்போனாலும், ஏற்ற வேளை வரும்போது நாம் அதைப் புரிந்துகொள்வோம்.


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவுவது ஏன் என்று பேதுருவுக்கு இப்போது தெரியவில்லை. ஆனால் இனிமேல் அறிந்துகொள்வான். ஆகையினால் அவருடைய செய்கை எப்போதுமே முக்கியமானதுதான். இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியக்காலத்தில் பல காரியங்களைச் செய்திருக்கிறார்.     அவற்றின் மெய்யான பொருளை,       அவருடைய ஊழியக்காரர்களே அப்போது அறிந்துகொள்ளவில்லை. ஆனாலும் ஏற்றவேளை வந்தபோது  அவர்கள் அதை அறிந்துகொண்டார்கள். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில், கர்த்தருடைய சத்தியங்கள் ஒவ்வொன்றாக நமக்கு விளக்கிக் காண்பிக்கப்படும். ஒவ்வொரு சம்பவமும் நடைபெறும்போது, நாம் ஏற்கெனவே நடைபெற்ற சம்பவத்தைப் புரிந்துகொள்வோம்.   சில சமயங்களில் தற்காலத்துப் பாடுகள் நமக்கு அதிக வேதனையைத் தரலாம். ஏன் இந்தப் பாடுகள் என்று நமக்குப் புரியாமற்போகலாம். ஏற்றவேளை வரும்போது கர்த்தர் இதன் அவசியத்தை நமக்குத் தெரியப்படுத்துவார். 


இயேசுகிறிஸ்து நம்முடைய ஜீவியத்தில் கிரியை செய்யும்போது, நமக்குப் பிரியமானபடி,  நம்முடைய சித்தத்தின் பிரகாரமாக அவர் கிரியை செய்யவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. கர்த்தர் தம்முடைய செய்கைகளை நிரூபித்தால்தான் அதை நம்மால் நம்பமுடியும் என்று விவாதம்பண்ணக்கூடாது. கர்த்தருக்குச் சித்தமான காரியம் நம்முடைய ஜீவியத்தில் நடைபெறவேண்டும் என்று எதிர்பார்க்கவேண்டும். கர்த்தர் நம்மை எந்தப் பாதையில் வழிநடத்தினாலும் அதுதான் சரியான பாதையென்று விசுவாசித்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்லவேண்டும்.  இயேசுகிறிஸ்துவே நமக்கு வழியாக இருக்கிறார்.  அவரே ஜீவனுள்ள வழி. 


என் கால்களைக் கழுவப்படாது


பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்            (யோவா 13:8).   


இயேசுகிறிஸ்து தன்னுடைய கால்களைக் கழுவுவதைப் பேதுரு அங்கீகரிக்கவில்லை. ""நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது'' என்று கூறுகிறான். பேதுருவின் வார்த்தை ஒரு காரியத்தைத் தீர்மானமாக மறுக்கும் வார்த்தையாகும். இயேசுகிறிஸ்துவின் செய்கையைத் தன்னால் அனுமதிக்கவே முடியாது என்று மறுத்துவிடுகிறான். பேதுருவின்   வார்த்தையிலும் தாழ்மை இருக்கிறது. மிகவும் கண்ணியமாகவும் மரியாதையாகவும் பேசுகிறான். பேதுரு தன் ஆண்டவரிடத்தில் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறான். அப்படிப்பட்ட ஆண்டவர் தன்னுடைய கால்களைக் கழுவுவதை பேதுருவினால் சகித்துக்கொள்ள முடியவில்லை. 


இயேசுகிறிஸ்து  தம்முடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாகப்  பேதுருவின் கால்களைக் கழுவ வருகிறார். ஆனால் அவனோ மனத்தாழ்மை என்னும் பேரில் இயேசுவின் சித்தத்திற்கு எதிர்த்து நிற்கிறான். பேதுருவைப்போலத்தான் இக்காலத்தில் அநேக விசுவாசிகள், மனத்தாழ்மை என்னும் பேரில் இயேசுகிறிஸ்துவின் சித்தத்திற்கு எதிர்த்து நிற்கிறார்கள். சுவிசேஷத்தின் வார்த்தையை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது, நம்மிடத்தில் மெய்யாகவே மனத்தாழ்மைக்குப் பதிலாக அவிசுவாசமே இருக்கும். 


தன்னுடைய கால்களைக் கழுவப்படாது  என்று கூறும் பேதுருவிடம் ""நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை'' என்று இயேசுகிறிஸ்து கூறிவிடுகிறார். பேதுருவின் கீழ்ப்படியாமையை  இயேசுகிறிஸ்து கடுமையான வார்த்தைகளினால்  எச்சரிக்கிறார். ""நான் உன்னைக் கழுவாவிட்டால்'' என்னும் வாக்கியத்திற்கு  ""உன் கால்களைக் கழுவுவதற்கு எனக்கு நீ தொடர்ந்து அனுமதி மறுத்தால்'' என்று பொருள் கூறவேண்டும். ""என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை'' என்று இயேசு கூறும் வாக்கியத்திற்கு ""என்னுடைய சீஷரில் ஒருவனாக நான் உன்னை அங்கீகரிக்கமாட்டேன்'' என்று பொருள்கூறவேண்டும்.


இயேசுகிறிஸ்துவின் கட்டளைக்குப் பேதுரு கீழ்ப்படியவேண்டும். அவருடைய வார்த்தையை விவாதம்பண்ணிக் கொண்டிருக்கக்கூடாது.  இயேசுகிறிஸ்துவோடு தாங்கள் ஐக்கியமாக இருக்கவில்லை என்று சிந்திக்கிறவர்கள்தான், அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல், அவருடைய வார்த்தையை விவாதம்பண்ணிக் கொண்டிருப்பார்கள். இயேசுகிறிஸ்து பேதுருவின் கால்களைக் கழுவ வரும்போது, அவனுடைய கால்களிலுள்ள அசுத்தத்தை மாத்திரமல்ல, அவனுடைய ஆத்துமாவிலுள்ள அசுத்தத்தையும் கழுவ வருகிறார். இது ஆவிக்குரிய சுத்திகரிப்புக்கு ஒப்புமையாக இருக்கிறது.  


""பாவத்தின் அசுத்தத்திலிருந்து நான் உன் ஆத்துமாவை கழுவாவிட்டால், உனக்கு என்னிடத்தில் பங்கில்லை'' என்று பொருள்படுமாறு இயேசுகிறிஸ்து பேதுருவிடம் கூறுகிறார். யாரெல்லாம் இயேசுகிறிஸ்துவினால் ஆவிக்குரிய ரீதியாக கழுவப்படுகிறார்களோ, அவர்களுக்கு மாத்திரமே இயேசுகிறிஸ்துவிடத்தில் பங்கு உண்டு. இயேசுகிறிஸ்து நம்முடைய ஆத்துமாவின் அசுத்தத்தைக் கழுவுவதே நல்ல பங்கு. இதுவே  தேவையான ஒன்று. நாம் இயேசுகிறிஸ்துவில்  பங்கு வகிக்கும்போது அவர் நம்மைக் கழுவுவதும்  அவசியமாக இருக்கிறது. 


தமது சீஷர்களின் கால்களைக் கழுவுவது இயேசுகிறிஸ்துவிற்கு கண்ணியமான செயல் அல்ல, அவருடைய வயதிற்கு உகந்த செயல் அல்ல என்னும் பொருள்பட பேதுரு இயேசுவிடம் கூறுகிறான். ஒரு சில கிரேக்க வார்த்தைகள் மொத்தமாகச் சேர்க்கப்பட்டு, இந்தப் பொருளைத் தருமாறு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 


சீஷர்களுடைய கால்களைக் கழுவுவதைவிட ஒரு மேலான காரியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களைத் தாழ்த்த வேண்டும் என்னும் உபதேசத்தை இயேசு கிறிஸ்து நடைமுறையில் செயல்படுத்திக் காண்பித்துக் கொண்டிருக்கிறார். நமது ஆத்துமாவில் பெருமை வரக்கூடாது. பெருமை நமது ஆத்துமாவை அழித்துப்போடும்.          


என் தலையும்கூட கழுவ வேண்டும்


அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும், என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான் (யோவா 13:9).


இயேசுகிறிஸ்து பேதுருவை எச்சரித்துக் கூறும்போது, அவன் அவருடைய வார்த்தையைப் புரிந்துகொண்டு, அவருக்கு முழுவதுமாகக் கீழ்ப்படிகிறான். இயேசுகிறிஸ்து தன்னைக் கழுவுவதற்கு ஒப்புக்கொடுக்கிறான். அவரோ அவனுடைய கால்களை மாத்திரமே கழுவுவதற்கு வந்திருக்கிறார். ஆனால் பேதுருவோ அவரிடம்  ""ஆண்டவரே, என் கால்களை மாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும்'' என்று மிகுந்த பணிவோடு கூறுகிறான். பேதுருவின் மனம் வெகுவிரைவில் மாற்றமடைகிறது. நம்முடைய தீர்மானங்களில் நாமும் பிடிவாத குணத்தோடு இருக்கக்கூடாது. ஏனெனில் கர்த்தர் நம்மை மாற்றும்போது எல்லாமே மாறிப்போகும். எப்போதுமே நாம் தேவனுடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும்.  கர்த்தருக்குச் சித்தமானால் நாம் மாறுவதற்கும்  ஆயத்தமாக இருக்கவேண்டும். 


கர்த்தருடைய வார்த்தைக்கு நாம் ஒருபோதும் எதிர்த்து நிற்கக்கூடாது. சற்று நேரத்திற்கு முன்பு ""நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது'' என்று கூறிய பேதுரு, இப்போது ""என் கால்களையும், என் கைகளையும், என் தலையையும் கழுவவேண்டும்'' என்று தன்னை ஒப்புக்கொடுக்கிறான். இயேசுகிறிஸ்துவின் கிரியையை ""அவருடைய  தாழ்மையுள்ள கிரியை'' என்று சிந்தித்துப் பார்த்ததினால், பேதுரு அவருடைய கிரியையை  விரும்பவில்லை. அதன் பின்பு, இயேசுகிறிஸ்து தம்முடைய கிரியையை அவனுக்கு விளக்கிக் கூறியபின்பு, அவருடைய கிரியையானது ""அவருடைய கிருபையின் கிரியை'' என்று புரிந்துகொள்கிறான். அப்போதுதான் அவனுடைய மனக்கண்கள் திறக்கப்படுகிறது.  இயேசுகிறிஸ்துவின் கிருபையுள்ள கிரியை தனக்குத் தேவையென்பதை அங்கீகரிக்கிறான்.    தான் செய்த தவற்றை உணர்த்துகொள்கிறான்.  திருந்துகிறான். நல்லவர்களிடத்தில் பிடிவாத குணம் இருக்காது. தாங்கள் செய்வது தவறு என்பது தெரியவந்தால், நல்லவர்கள் உடனே தங்கள் தவற்றைத் திருத்திவிடுவார்கள். துன்மார்க்கர்தான் விடாப்பிடியாக பிடிவாத குணத்தோடிருப்பார்கள்.  


இயேசுகிறிஸ்துவின் கிருபையின் கிரியையை பேதுரு அதிகமாய் நேசிக்கிறான். கிறிஸ்துவின் கிருபை நம்மைச் சுத்திகரிக்கிறது.  அவருடைய சுத்திகரிக்கும் கிருபை தன் கால்களுக்கு மாத்திரமல்ல, தன் கைகளுக்கும், தன்தலைக்கும் தேவையென்பதை உணர்ந்துகொள்கிறான். தன்னுடைய முழுசரீரத்தையும் இயேசுகிறிஸ்து சுத்திகரிக்க வேண்டுமென்று ஒப்புக்கொடுக்கிறான். கிறிஸ்துவின் சுத்திகரிக்கும் கிருபை பேதுருவுக்கு மாத்திரமல்ல, உலகத்திலுள்ள எல்லா ஜனங்களுக்குமே தேவைப்படுகிறது. நம்முடைய இருதயத்தை இயேசுகிறிஸ்துவினால் மாத்திரமே சுத்திகரிக்க முடியும். 


இயேசுகிறிஸ்து நம்மை சுத்திகரிக்கும்போதுதான், அவரிடத்தில் நமக்குப் பங்கு இருக்கும். துன்மார்க்கருக்கு இயேசுகிறிஸ்துவிடத்தில் பங்கில்லை. நாம் கழுவவேண்டியவர்கள் என்பதையும், நாம் அசுத்தமானவர்கள் என்பதையும் புரிந்துகொண்டு, நம்மைக் கழுவுவதற்கு இயேசுகிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுக்கும்போது, அவர் நம்மைக் கழுவி சுத்திகரிப்பார். நம்முடைய அசுத்தத்தைக் குறித்து நமக்குள் பயம் இருக்கவேண்டும். பேதுருவைப்போல நாமும் பயபக்தியோடு ""என் கால்களை மாத்திரமல்ல ஆண்டவரே, என்னை முழுவதுமாகக் கழுவும்'' என்று ஜெபிக்கவேண்டும். 


நாம் இந்த உலகத்தில் ஜீவிக்கும்போது  நம்முடைய கால்களும், அத்துடன் நம் சரீரத்தின் ஒவ்வொரு அவயவமும் பாவத்தினால் கறைபடுகிறது. நமது சுயமுயற்சியினாலோ அல்லது நமது சுயசக்தியினாலோ அல்லது     நமது சுயபக்தியினாலோ நம்மை நாமே கழுவி நம்மைச் சுத்திகரித்துக்கொள்ள முடியாது. இயேசுகிறிஸ்துவின் கிருபை மாத்திரமே நம்மைச் சுத்திகரிக்கக்கூடியது. அவர் நம்மைக் கழுவினால்   மாத்திரமே நம்மால் சுத்தமாக முடியும். ஆகையினால் நாம் நம்முடைய ஆவிக்குரிய அசுத்தங்களை உணர்ந்து, நம்மைச் சுத்திகரிக்குமாறு இயேசுகிறிஸ்துவிடம் பயபக்தியோடு விண்ணப்பம்பண்ணவேண்டும். 


ஆவிக்குரிய சுத்திகரிப்பைக் குறித்து, இயேசு கிறிஸ்து கூறுவதை பேதுரு கடைசியாகப் புரிந்து கொள்கிறான். ஆகையினால் தம்மை முழுவதுமாகக் கழுவ வேண்டுமென்று இயேசுவிடம் விண்ணப்பம் பண்ணுகிறான்.


நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்


 இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்  (யோவா 13:10). 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் அவரிடத்தில் உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள். கிறிஸ்து அவர்களிடம் ""முழுகினவன் தன் கால்களை மாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும்'' என்று கூறுகிறார். அவனுடைய கைகளும் தலையும் கழுவப்பட்டிருக்கிறது. முழுகினவன் தன் வீட்டிற்கு நடந்துபோகும்போது அவனுடைய கால்களில் மாத்திரமே அசுத்தம்பட்டிருக்கும்.  ஆகையினால் முழுகினவன் தன் கால்களை மாத்திரம் கழுவினால் போதுமானது என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். 


இயேசுகிறிஸ்து முதலில் பேதுருவின் கால்களைத்தான் கழுவுவதற்கு வந்தார். அவனோ ஆரம்பத்தில் இயேசு தன் கால்களை  ஒருக்காலும் கழுவப்படாது என்று கூறிவிடுகிறான். இதே பேதுரு சிறிது நேரத்தில் ""என் கால்களை மாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும்'' என்று கூறுகிறான். இவ்விரண்டு வாக்கியமும் வெவ்வேறு விதமாக இருக்கிறது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் இருக்கிறது.   முதலாவதாகத் தன் கால்களைப்பற்றி மாத்திரம் பேசியவன், இப்போது தன் சரீரம் முழுவதையும் பற்றிப் பேசுகிறான். இயேசுகிறிஸ்து ஞானஸ்நானத்தின் மூலமாகப் பேதுருவை முழுவதுமாகக் கழுவியிருக்கிறார். இதை மறந்துவிட்டுத்தான், அவர் தன் கால்களைக் கழுவப்படாது என்று பேதுரு கூறுகிறான். 


இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிறவர்கள் அவருடைய நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கிறார்கள். நாம்விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். இயேசுகிறிஸ்துவினால் கழுவப்பட்டிருக்கிறோம். ஆகையினால் முழுவதும் சுத்தமாகயிருக்கிறோம். நம்முடைய இருதயத்தில் ஒருவேளை நாம் சாத்தானுக்கு இடங்கொடுத்திருக்கலாம்.  ஆனாலும் நம்முடைய இருதயத்தின் ஒரு பகுதியில் சாத்தான் வாசம்பண்ணலாம். என்றாலும் இயேசுகிறிஸ்து நம்மைக் கழுவும்போது, நம்முடைய இருதயம் இயேசுகிறிஸ்துவுக்கே சொந்தமானது. தமக்குச் சொந்தமான  நம்முடைய இருதயத்தை, இயேசுகிறிஸ்து ஒருபோதும் சாத்தானுக்கு விட்டுக்கொடுக்கமாட்டார். 


இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே நாம் சுத்திகரிக்கப்பட்டிருக்கிறோம். நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். ஆனாலும்  நாம் இந்தப் பூமியில் வாழும்போது, நம்முடைய இருதயம் அசுத்தத்தினால் அன்றாடம் கறைபடுகிறது. ஆகையினால் ஒவ்வொருநாளும்  இயேசுகிறிஸ்து  நம்முடைய இருதயத்தைச்  சுத்திரிக்கவேண்டுமென்று விண்ணப்பம்பண்ண வேண்டும். இயேசுகிறிஸ்து ""கால்களை மாத்திரம்  கழுவ வேண்டியதாயிருக்கும்'' என்று பொருள்படுமாறு சொல்லும்போது ""இருதயத்தை மாத்திரம் சுத்தப்படுத்த வேண்டியதாயிருக்கும்'' என்று சொல்லுகிறார். நம்முடைய இருதயம் ஒவ்வொரு நாளும் நம்முடைய மனந்திரும்புதலினால் புதுப்பிக்கப்பட வேண்டும். நம்முடைய இருதயத்தில் படிந்திருக்கும் பாவக்கறைகளை இயேசுகிறிஸ்து தம்முடைய இரத்தத்தினால் அன்றாடம் கழுவி சுத்தப்படுத்துவதற்கு நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். 


நாம் பாதையில் நடக்கும்போது, அசுத்தமானது ஒன்று நம்முடைய கண்களுக்குத் தெரிந்தால்,  மிகுந்த கவனமாக அதிலிருந்து விலகிச் சென்றுவிடுவோம். அதுபோலவே நம்முடைய இருதயத்தைத் தீட்டுப்படுத்தும் காரியம் எதுவாகயிருந்தாலும் அதிலிருந்து விலகி, நம்முடைய இருதயத்தை அசுத்தத்திலிருந்து காத்துக்கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்து நம்மைக் கழுவுகிறார் என்பதற்காக, நாம் விரும்பியபடி நம்மை அசுத்தப்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது. அவருடைய கிருபையை  நாம் அசட்டைபண்ணக்கூடாது. 


இயேசுகிறிஸ்து நம்மைத் தமது கிருபையினால் சுத்திகரிக்கும்போது, அவருடைய சுத்திகரிப்பை  அசட்டை செய்துவிடாமல், மிகுந்த எச்சரிப்போடு அவருடைய சுத்திகரிப்பின் கிருபையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். சாத்தான் ஒவ்வொரு நாளும் நம்மைச் சோதிப்பான். இது சோதனைதானே என்று இறுமாப்பாக இருந்துவிடக்கூடாது. சிறிய அசுத்தமாகயிருந்தாலும், வெளியே தெரியாத மறைவான அசுத்தமாகயிருந்தாலும், வெளியே தெரிகிற பெரிய அசுத்தமாகயிருந்தாலும், இயேசுகிறிஸ்து தம்முடைய கிருபையினால் நம்மைக் கழுவுவதற்கு ஆயத்தமாக இருக்கும்போது, அவர் நம்மைக் கழுவுவதற்கு ஒப்புக்கொடுத்தால், நாம் சுத்தமாவோம்.


பஸ்காவிற்கு ஆயத்தம் பண்ணுவதற்காக இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் இரண்டு தடவை ஸ்நானம் பண்ணியிருந்திருப்பார்கள். ஆகையினால் அவர்களுடைய சரீரங்களில் அழுக்கு இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஸ்நானம் பண்ணிய இடத்திலிருந்து பஸ்காவைப்புசிக்கும் இடம் வரையிலும் அவர்கள் தங்கள் பாதங்களால் நடந்து வந்திருக்கிறார்கள். அவர்களுடைய பாதங்களில் தூசியிருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆகையினால் இயேசு, ""முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும்'' என்று கூறுகிறார்.


""நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல''   என்று கூறி இயேசு கிறிஸ்து யூதாஸ்காரியோத்தின் பாவமான நிலைமையைக் குறிப்பிடுகிறார். சீஷர்கள் தங்கள் பாவங்களிலிருந்து கழுவப்பட்டார்கள். ஆனால்யூதாஸ்காரியோத்தோ தன்னுடைய உள்ளத்தில் சாத்தானுக்கு இடம் கொடுத்து, பாவம் செய்யத் துணிகிறான்.  


காட்டிக்கொடுக்கிறவனை அறிந்திருந்தபடியால் 


தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார்  (யோவா 13:11).


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் ""நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்'' என்று கூறிவிட்டு, ""ஆகிலும் எல்லாருமல்ல'' என்றும் கூறுகிறார். யூதாஸ்காரியோத்து தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறான் என்பதை இயேசுகிறிஸ்து அறிந்திருக்கிறார். ஆகையினால் ""நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்களல்ல'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவிவிட்டு ""நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்'' என்று அறிவிக்கிறார்.  ஆனால் தம்முடைய வார்த்தையில் யூதாஸ்காரியோத்தைச் சேர்க்கவில்லை. ஆகையினால் ""ஆகிலும் எல்லாருமல்ல'' என்றும் கூறிவிடுகிறார். 


தாங்கள் எல்லோருமே சுத்தமானவர்களல்ல என்பதைச் சீஷர்கள் அறிந்திருக்கவேண்டும். ஒவ்வொருமுறை நாம்  இயேசுகிறிஸ்துவின் சமுகத்திற்கு முன்பாக வரும்போது ""ஆண்டவரே சுத்தமில்லாதவன்  நான்தானா'' என்று பணிவுடன் விண்ணப்பம்பண்ணவேண்டும். ஞானஸ்நானம் பெற்றதினால் யாரும் சுத்தமாகிவிடுவதில்லை.  ஞானஸ்நானம் ஒருவனையும் பரிசுத்தப்படுத்தாது.  இயேசுகிறிஸ்துவில் நாம் வைத்திருக்கும் விசுவாசத்தை ஞானஸ்நானத்தின் மூலமாக நாம் சாட்சியாக வெளிப்படுத்துகிறோம். 


சில சமயங்களில் நம்முடைய பாவம் மற்றவர்களுக்குத் தெரியாது. நாம் ஒருவேளை பரிசுத்தவான்களோடு நெருங்கிய ஐக்கியத்தில் இருக்கலாம். அப்படியிருந்தாலும் நம்மிடத்திலும்  பாவம் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. யூதாஸ்காரியோத்து இயேசுகிறிஸ்துவோடும், அவருடைய சீஷர்களோடும் நெருக்கமாக இருந்தான். வெளிப்பார்வைக்கு அவன் சுத்தமானவன்போலத்தான் காணப்பட்டான். ஆனால் அவன் இருதயத்தில் சுத்தமாகயில்லை. இயேசுகிறிஸ்துவினால் மாத்திரமே அவனுடைய இருதயத்திலிருக்கும் அசுத்தத்தைப் பார்க்க முடிகிறது. நாமும் இயேசுகிறிஸ்துவின்  சமுகத்தில் வந்து, நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்க்குமாறு பணிவோடு விண்ணப்பம்பண்ணவேண்டும்.  


இயேசுவின் முன்மாதிரி யோவா 13 : 12-17


உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா 


அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய  வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?   (யோவா 13:12)


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவுவது நமக்கு ஒரு முன்மாதிரியாக நியமிக்கப்பட்டிருக்கிறது. தாம் சீஷர்களின் கால்களைக் கழுவும்போது அதற்கான காரணத்தையும் இயேசுகிறிஸ்து  அவர்களிடத்தில் விளக்கிக் கூறுகிறார். அவர்களுடைய கால்களை அவர் கழுவின பின்பு, அவர்களை நோக்கி ""நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா'' என்று கேட்கிறார். அவர்களுடைய கால்களைக் கழுவி முடிக்கும் வரையிலும் இயேசுகிறிஸ்து அதன் விளக்கத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லவில்லை. தம்முடைய செய்கைக்கு அவர்கள் மனப்பூர்வமாக கீழ்ப்படிகிறார்களா என்பதை மாத்திரமே இயேசுகிறிஸ்து சோதித்துப் பார்க்கிறார். இயேசுகிறிஸ்துவின்       சித்தத்திற்கு  சரியான காரணம்  தெரியவில்லையென்றாலும், அதன் காரணத்தை விவாதம்பண்ணிக்கொண்டிருக்காமல், அவருடைய சித்தத்திற்கு ஆரம்பத்திலேயே மனப்பூர்வமாகக் கீழ்ப்படியவேண்டும். இயேசுகிறிஸ்துவின் வார்த்தைக்கும் சித்தத்திற்கும் நாம் கீழ்ப்படியும்போது, அதன் இரகசியங்களை வேளை வரும்போது அவர் நமக்கு  விவரித்துக் கூறுவார். 


சீஷர்களுடைய கால்களைத் தாம் கழுவுவதற்கான காரணத்தை இயேசு அவர்களிடம் விவரித்துக் கூறுவதற்கு முன்பாக, இதன் காரணத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார். ""நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா'' என்று இயேசுகிறிஸ்து அவர்களிடம் கேட்கும்போது, அவர்கள் தேவனுடைய ரகசியத்தை இன்னும் அறியாதிருக்கிறார்கள் என்பதை முதலாவதாக அவர்களுக்கு உணர்த்துகிறார். இதன் பொருளை அறிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆவலையும்  எதிர்பார்ப்பையும் அவர்களுடைய மனத்திற்குள்  தூண்டிவிடுகிறார். இயேசுகிறிஸ்து காரணமில்லாமல் எதையும் செய்யமாட்டார், எதையும் பேசமாட்டார். 


போதகரென்றும் ஆண்டவரென்றும்


 நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்  (யோவா 13:13).  


சீஷர்கள் இயேசுகிறிஸ்துவைப் போதகரென்றும் ஆண்டவரென்றும் சொல்லுகிறார்கள். அவர்கள் சொல்லுவது சரிதான் என்று இயேசு அங்கீகரிக்கிறார். அவர் மெய்யாகவே நம்முடைய மீட்பராகவும் இரட்சகராகவும் இருக்கிறார். அவர் நமக்கு போதகராகவும் ஆண்டவராகவும் இருக்கிறார். அவர் நம்முடைய போதகராக இருக்கிறபடியினால், நம்முடைய ஆசிரியராகவும், நம்முடைய உபதேசியாராகவும் இருக்கிறார்.  அவர் நம்முடைய ஆண்டவராக இருக்கிறபடியினால் அவர் நம்மை ஆளுகை செய்கிறவராகவும், நாம் அவருக்குச் சொந்தமானவர்களாகவும் இருக்கிறோம்.


சீஷர்கள் இயேசுகிறிஸ்துவைப் போதகரென்றும் ஆண்டவரென்றும் சொல்லுவதினால் அவருக்குப் பெருமை ஒன்றும் வந்துவிடப்போவதில்லை. அவர்கள் உள்ளதைத்தான் சொல்லுகிறார்கள். இவ்வாறு அழைப்பதினால் சீஷர்கள் இயேசுவை முகஸ்துதி பண்ணவில்லை. அவர்கள் உண்மையை எடுத்துக்கூட்டியோ, அல்லது மிகைப்படுத்தியோ பேசவில்லை. வருத்தத்தோடும் சொல்லவில்லை. சீஷர்கள் மிகுந்த சந்தோஷத்தோடு இயேசுகிறிஸ்துவைஆண்டவரென்றும் போதகரென்றும் சொல்லுகிறார்கள். 


நாம் இயேசுகிறிஸ்துவை நம்முடைய போதகரென்றும் ஆண்டவரென்றும் சொல்லும்போது, அவர் நமக்குக் கொடுத்திருக்கிற ஆலோசனைகளுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவேண்டிய பொறுப்பு  நமக்கு வந்திருக்கிறது. நாம் அவருடைய வார்த்தையின் பிரகாரம் ஜீவித்து, அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றவேண்டும். இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றும்போது நம்மிடத்தில் உண்மையும் விசுவாசமும் காணப்படவேண்டும். இயேசுகிறிஸ்துவைப்பற்றி நாம் கூறுகிறவார்த்தைகள் கண்ணியமுள்ளதாகவும், அவரை மகிமைப்படுத்தக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.  


இயேசு கிறிஸ்துவிற்குப் போதகர், ஆண்டவர் என்று இரண்டு பட்டங்களைக் கொடுக்கிறார்கள். மிகவும் விசேஷித்த ஞானமுள்ளோருக்கு மட்டுமே இவ்வாறு இரண்டு பட்டங்களைக் கொடுப்பது வழக்கம்.


நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்


ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்  (யோவா 13:14).  


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவுவதினால், நாமும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவவேண்டும்.  இயேசுகிறிஸ்து கூறும் இந்த வாக்கியத்திற்கு  வேதபண்டிதர்கள் இரண்டுவிதமாகப் பொருள் கூறுகிறார்கள். அவையாவன:

 1. நாம் மற்றவருடைய கால்களைக் கழுவவேண்டும்.

 2. நம்மிடத்தில் மனத்தாழ்மை இருக்கவேண்டும். நம்மைவிடத் தாழ்ந்தவரிடத்திலும் அன்புகூரவேண்டும். 


இயேசுகிறிஸ்து ""நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்'' என்று கூறுவதினால், நாம் அவருடைய வார்த்தைகளின் பிரகாரம் ஒருவருக்கொருவர் கால்களைக் கழுவிக்கொள்ளவேண்டும் என்று ஒரு சிலர் இதற்குப் பொருள் கூறுகிறார்கள். நாம் மற்றவர்மீது வைத்திருக்கும் அன்பை  உறுதிபண்ணுவதற்காக நாம் அவர்களுடைய கால்களைக் கழுவவேண்டும். இது ஒரு ஆவிக்குரிய பிரமாணம் என்று இவர்கள் வியாக்கியானம் பண்ணுகிறார்கள். 


மிலான் நகரத்திலுள்ள திருச்சபைப் போதகர் அம்புரோஸ்  என்பவர், இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடித்து, தன்னுடைய சபைக்கு வருகிற அங்கத்தினர்கள் எல்லோரும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவவேண்டும் என்னும் பிரமாணத்தை நடைமுறையில் செயல்படுத்தி வந்தார். நம்முடைய கைகளினால் சபைக்கு வருகிற மற்ற விசுவாசிகளின் கால்களைக் கழுவும்போது நம்முடைய இருதயம் தாழ்மையடையும் என்பது  இவருடைய வியாக்கியானம். இயேசுகிறிஸ்து  சீஷர்களுடைய கால்களைக் கழுவியதைச் சில சபையினர் அதிக முக்கியப்படுத்தி, அதை நடைமுறையில் விதவிதமாகச் செயல்படுத்துகிறார்கள். 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவியதற்கு ஆவிக்குரிய அர்த்தம் கூறுகிறவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.  இயேசுகிறிஸ்து ""நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்'' என்று கூறும்போது அவர் ஆவிக்குரிய உபதேசம் பண்ணுகிறாரென்றும், அதில் மூன்று சத்தியங்களை உபதேசம்பண்ணுகிறாரென்றும்  வேதபண்டிதர்களில் பலர் வியாக்கியானம் கூறுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் உபதேச விவரம் வருமாறு:         

  1. தாழ்ந்தவரிடத்திலும் அன்புகூரும் மனத்தாழ்மை.                         2. தாழ்ந்தவரிடத்திலும் அன்புகூரும் நற்குணத்தை நடைமுறையில் செயல்படுத்துவது. 3. ஒருவருக்கொருவர் பரிசுத்தமாயிருப்பதற்கு  உதவிபுரிவது.


இயேசுகிறிஸ்து மனத்தாழ்மையுள்ளவர் (மத் 11:29). அவருடைய மனத்தாழ்மையை நாமும் கற்றுக்கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் உபதேசம்பண்ணும்போது, அவர்களிடத்தில் மனத்தாழ்மை இருக்கவேண்டும் என்று பல சமயங்களில் சொல்லியிருக்கிறார். ஆனால் சீஷர்களோ இயேசுகிறிஸ்துவின் இந்த முக்கியமான உபதேசத்தை அடிக்கடி மறந்துவிடுகிறார்கள். அவர்களுடைய கால்களை இயேசுகிறிஸ்து கழுவுவதன் மூலமாக, மனத்தாழ்மையைப்பற்றிய உபதேசத்தை சீஷர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.


நாம் பிறர்மீது வைத்திருக்கும் அன்பை பலவிதங்களில் வெளிப்படுத்தலாம். மற்றவர்களுடைய கால்களைக் கழுவுவது அவற்றில் ஒரு வகை. பிறருடைய கால்களை நாம் கழுவும்போது, நம்மை அதிகமாகத் தாழ்த்தி  நம்முடைய அன்பை வெளிப்படுத்துகிறோம். மற்றவருக்கு மெய்யாகவே நன்மை உண்டாவதற்கு நாம் பாடுபடுகிறோம். நாம் பிறருடைய கால்களைக் கழுவுவதினால், அவர்களுடைய கால்களிலுள்ள அசுத்தம் நீங்குகிறது. நாம் மற்றவர்களுடைய கால்களைக் கழுவும்போது நமக்கு சரீரவேதனை உண்டாகலாம். இதற்காக நேரம் செலவுசெய்யவேண்டும். ஆனால் இந்தத் தாழ்மையான ஊழியத்தைச் செய்யும்போது, நமக்கு வேதனை உண்டாகிறது என்றோ, நம்முடைய காலம் வீணாயிற்று என்றோ புலம்பக்கூடாது. 


நம்மைவிட தாழ்ந்தவர்களுடைய  கால்களைக் கழுவும்போது, நம்முடைய தாழ்மைக்குணம் மிகவும் விசேஷித்த வழியில் வெளிப்படும். ஏனெனில் நம்மைவிட தாழ்ந்தவர்களுக்குப் பொதுவாக நாம் கட்டுப்படமாட்டோம். அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்கமாட்டோம். அவர்களுடைய சொற்படி நடக்கமாட்டோம். ஆனாலும் அவர்களுடைய கால்களை நாம் மனப்பூர்வமாக கழுவும்போது, அவர்கள்மீது நாம் வைத்திருக்கும் மெய்யான அன்பு வெளிப்படுகிறது. சில சமயங்களில் நம்மைவிடத் தாழ்ந்தவர்கள் நமக்கு ஏதாவது உதவி செய்தால்கூட அதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். நம்முடைய உள்ளத்தின் பெருமை, அந்தஸ்தின் பெருமை அவர்களோடு நம்மைப் பழகவிடாது. ஒருவருக்கொருவர் கால்களைக் கழுவும்போது  நாம் பிறருடைய கால்களைக் கழுவுகிறோம். அவர்கள் நம்முடைய கால்களைக் கழுவுகிறார்கள். நம்முடைய கால்களை அவர்கள் கழுவுவதற்கு நாம் அனுமதி கொடுக்கிறோம். விசுவாசிகளாகிய நாம் மிகுந்த அன்போடு பிறருக்கு உதவிபுரியவேண்டும். அதேவேளையில்  பிறர் நமக்கு செய்கிற உதவிகளையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.  


நாம் பிறருடைய கால்களைக் கழுவும்போது அவர்கள் சுத்தமடைவதற்கு உதவிசெய்கிறோம். ஒருவருக்கொருவர் கால்களைக் கழுவிக்கொள்ளும்போது, ஒருவருக்கொருவர் சுத்தமடைவதற்கு நாம் உதவியாயிருக்கிறோம். ஆகையினால்தான் இயேசுகிறிஸ்து ""நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்'' என்று கூறுகிறார். பாவத்தின் அசுத்தத்திலிருந்து நாம் ஒருவரையொருவர் கழுவிக்கொள்ளவேண்டும்.   


பிறருடைய கால்களைக் கழுவுகிறவர்கள் தங்களுடைய கால்களையும் கழுவி சுத்தமாக வைத்திருக்கவேண்டும். உதவிபுரிவது முதலாவதாக நமது வீட்டில்தான் ஆரம்பமாக வேண்டும். 


மற்றவர்கள் பாவம் செய்வதற்கு நாம் தூண்டுதலாக இருக்கக்கூடாது. ஆனால் அவர்கள் தாங்கள் செய்த பாவங்களிலிருந்து சுத்தமாவதற்கு நாம் உதவிபுரியவேண்டும். இன்னும் அதிகமான பாவங்களை அவர்கள் செய்துவிடாதவாறு, அவர்களை சுத்தப்படுத்திக்கொண்டேயிருக்கவேண்டும். நம்முடைய அசுத்தம் பிறருக்குப் போய்விடக்கூடாது. ஆகையினால் நாம் சுத்தமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.  பிறருடைய அசுத்தத்தைக் கழுவுவதற்கு முன்பாக நம்முடைய சுத்தத்தைப்பற்றி ஆராய்ந்து பார்க்கவேண்டும். 


நம்மை நாமே சுத்தப்படுத்திக்கொண்டால்  அது போதுமானதல்ல. சுத்திகரிப்பு நம்மோடு முடிந்துவிடுவதில்லை. நம்மோடு கூடயிருக்கும் சகவிசுவாசிகள் பாவத்தில் விழுந்துவிடும்போது, அவர்களுடைய அசுத்தங்களைச் சுத்தப்படுத்துவதற்கு நாம் முன்வரவேண்டும்.  அவர்களுடைய கால்களிலுள்ள அசுத்தத்தைத் தண்ணீரினால் கழுவுவதுபோல, அவர்களுடைய இருதயத்திலுள்ள அசுத்தத்தையும் நம்முடைய கண்ணீரினால் கழுவி சுத்தப்படுத்தவேண்டும்.


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவியபின்பு ""ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்'' என்று கட்டளை கொடுக்கிறார். இயேசுகிறிஸ்து நம்முடைய போதகர். அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும். அவருடைய போதனைகளையும் உபதேசங்களையும் நாம் கற்றுக்கொண்டு அதன் பிரகாரம் ஜீவிக்கவேண்டும். அவர் நம்மைப் பார்த்து ""நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்'' என்று கட்டளை கொடுக்கிறார். 


இயேசு கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி, தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவுகிறார். இயேசு கிறிஸ்துவே இந்தக் காரியத்தைச் செய்யும்போது, அவருடைய சீஷர்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் நிச்சயமாகவே கழுவ வேண்டும். ஒருவனும் தனது சுய மகிமையைத் தேடாமல் பிறனுடைய நன்மையையும் தேட வேண்டும். (பிலி 2:1-7) மற்றவர்களுடைய கால்களைக் கழுவும் செயல் தன்னைத்தான் வெறுத்து, பிறர்மீது அன்பை வெளிப்படுத்தும் செயலாகும். நான்காம் நூற்றாண்டு வரையிலும், திருச்சபையில் விசுவாசிகளுடைய கால்களைக் கழுவும் வழக்கம் இல்லை. புதிய ஏற்பாட்டின் மற்ற புத்தகங்களிலும் இந்தப் பழக்கம் இருந்ததாகக் குறிப்பு எதுவும் இல்லை. ஆதரிக்கப்படும் விதவைகள் பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவ வேண்டும். (1தீமோ 5:10) ஆனால் இந்தப் பழக்கம் சபை ஒழுங்காக நியமிக்கப்படவில்லை.


உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்


 நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்              (யோவா 13:15).


இயேசுகிறிஸ்துவே நமக்கு  முன்மாதிரியாக இருக்கிறார். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில்  அவருடைய அடிச்சுவடுகளை நாம் பின்பற்றிச் செல்லவேண்டும். அவர் நமக்கு நல்ல போதகராகயிருக்கிறார். நமக்குச் சத்தியங்களை உபதேசம்பண்ணும்போது, சத்தியத்தை எடுத்துக்காட்டுக்கள் மூலமாகவும்  நமக்கு விளக்கிக் காண்பிக்கிறார். இயேசுகிறிஸ்து உலகத்திற்கு வந்ததன் நோக்கமே நமக்கு அவர் முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். இயேசுகிறிஸ்து நமக்கு முன்மாதிரியாக இல்லையென்றால் நம்முடைய ஜீவியம் தாறுமாறாக இருக்கும்.  இதை விளக்கும் விதமாக ""நான் உங்களுக்குச் செய்தததுபோல நீங்களும் செய்யும்படிக்கு உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்'' என்று  இயேசுகிறிஸ்து கூறுகிறார்.


இயேசுகிறிஸ்து நம்மீது அன்பாகயிருக்கிறார். நமக்குத் தேவையான ஞானத்தைக் கொடுக்கிறார். பல காரியங்களை நம்மால் செய்ய முடியுமென்று கிறிஸ்து எதிர்பார்க்கிறார். அவர் நமக்குச் செய்ததுபோல   நாமும் செய்யவேண்டும். இயேசுகிறிஸ்து எதையெல்லாம் செய்திருக்கிறாரோ, அதையெல்லாம் நமக்கு ஒரு முன்மாதிரியாக  நோக்கிப் பார்க்கவேண்டும். அவருடைய முன்மாதிரியின் பிரகாரமாக ஜீவிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்துவின் ஊழிக்காரர்கள் அவர் காண்பித்திருக்கும் மாதிரியைப் பின்பற்றவேண்டும். இயேசுகிறிஸ்துவின் தாழ்மையும்,         கிருபையும், பரிசுத்தமும் அவருடைய ஊழியர்களிடத்திலிருந்து  வெளிப்படவேண்டும். 


இயேசுகிறிஸ்து அப்போஸ்தலர் பவுலைப் பல இடங்களுக்கு ஊழியம் செய்வதற்காக அனுப்பினார். அவர் பலவிதமான ஜனங்கள் மத்தியில் இயேசுகிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி ஊழியம் செய்யும்போது ""நான் எல்லாருக்கும் எல்லாமானேன்'' (1கொரி 9:22) என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி ஜீவிக்கிறவர்களாகிய நாமும், எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்து சீஷர்களின் அசுத்தமான கால்களைக் கழுவுவதுபோல, நாமும் பாவிகளுடைய கறைபடிந்துள்ள ஆத்துமாக்களைக் கழுவவேண்டும். சீஷர்களின் கால்களைக் கழுவுவதற்காக, இயேசுகிறிஸ்து அவர்களிடத்திலிருந்து ஊதியம் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள்மீது இயேசுகிறிஸ்து வைத்திருக்கிற அன்பு மாறாத அன்பு. அவர்கள் இயேசுகிறிஸ்துவைவிட தாழ்ந்தவர்களாகயிருந்தாலும், அவர்களைத் தம்முடைய சிநேகிதராகவும், சகோதரராகவும் காண்கிறார். கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நம்மிடத்திலும், கிறிஸ்துவின் அன்பு வெளிப்படவேண்டும். நம்மைவிட தாழ்ந்தவர்களிடத்திலும் அன்புகூர நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். நம்முடைய அன்பு மாயமற்றதாகவும் மாய்மாலமில்லாததாகவும் இருப்பது மிகவும் அவசியம்.


எஜமானிலும் பெரியவனல்ல


மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல (யோவா 13:16).  


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவுவதினால், அவர்கள் அவரை  அலட்சியம்பண்ணிவிடக்கூடாது. அவர்களுடைய கால்களை இயேசுகிறிஸ்து கழுவினாலும், அவர் எப்போதுமே ஆண்டவராகவும், இரட்சகராகவும், போதகராகவுமே இருக்கிறார். சீஷர்கள் அவருடைய சீஷர்களாகத்தான் இருப்பார்கள்.  ""ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல'' என்று கூறி, இயேசுகிறிஸ்து தம்முடைய  தாழ்மையையும், அதே வேளையில் தம்முடைய தெய்வீக அதிகாரத்தையும் தம்முடைய சீஷர்களுக்கு விவரிக்கிறார்.  இந்த சத்தியத்தை இயேசுகிறிஸ்து ஏற்கெனவே ""சீஷன் தன் போதகனிலும், தன் எஜமானிலும்  மேற்பட்டவனல்ல'' என்று கூறியிருக்கிறார்              

(மத் 10:24,25). 


இயேசுகிறிஸ்துவின் கட்டளையின் பிரகாரம், சீஷர்கள் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவும்போது, இதை ஒரு விநோத உபதேசம் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. இயேசுகிறிஸ்துவைப்போல               தங்களைத் தாழ்த்துவதற்கு சீஷர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்துவைப்போலத் தங்களைத் தாழ்த்தி, பிறருடைய கால்களைக் கழுவுவது கடினமான காரியம் என்று சீஷர்கள் நினைக்கக்கூடாது.  ஆகையினால்தான் இயேசுகிறிஸ்து அவர்களுக்கு ஒரு மாதிரியை இங்கு வைக்கிறார்.


சீஷர்கள் இயேசுகிறிஸ்துவைவிட தாழ்ந்தவர்கள். ஆனாலும் அவர்களிடத்திலும் இயேசுகிறிஸ்து அன்புகூர்ந்து, அவர்களுடைய கால்களைக் கழுவுகிறார். இதனால் இயேசுகிறிஸ்துவின் தாழ்மையுள்ள அன்பு மாத்திரமே வெளிப்படுமேயல்லாமல், 

அவர் ஒருபோதும் தாழ்ந்துவிடப்போவதில்லை. அவர் ஆண்டவராகவும் எஜமானராகவுமே இருப்பார்.  சீஷர்களும் பிறருடைய கால்களைக் கழுவும்போது, இது தங்களுடைய அந்தஸ்துக்கு இழுக்கான செய்கை என்று  சிந்திக்கக்கூடாது. இவர்கள் இயேசுகிறிஸ்துவைவிட பெரியவர்களல்ல. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல.   இயேசுகிறிஸ்து அவர்களுடைய கால்களைக் கழுவினாலும், அவர்கள் இன்னும் அவருடைய  ஊழியக்காரர்களாகவே இருக்கிறார்கள். இயேசு அவர்களுடைய கால்களைக் கழுவுவதினால், அவர்கள் இயேசுகிறிஸ்துவைவிட பெரியவர்களாகிவிடுவதில்லை.


நாம் கர்த்தருக்காக ஊழியம் செய்யும்போது, நம்முடைய ஊழியம் ஆசீர்வதிக்கப்பட்டால், உடனே நம்மைப் பெருமைப்படுத்தி, நாம் கர்த்தரைவிடப் பெரியவர்களென்று    நினைத்துவிடக்கூடாது.  


நாம் ஒருபோதும் நம்முடைய எஜமானராகிய  இயேசுகிறிஸ்துவிலும் பெரியவர்களல்ல. இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவுவதினால் அவர் தம்மைத்தாமே தாழ்த்துகிறார். இது சாதாரண தாழ்மையல்ல. கண்ணியமும் மகிமையும் நிறைந்த தாழ்மை. 


நாம் பல சமயங்களில் நம்முடைய தகுதிக்குக் குறைந்த காரியங்களைச் செய்ய முன்வரமாட்டோம். ஆனால் இயேசுகிறிஸ்துவோ, தாம் எஜமானராகயிருந்தாலும், தம்முடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவி, தம்மையே தாழ்த்துகிறார். இயேசுகிறிஸ்து செய்வது அவருடைய தகுதிக்குக் குறைந்த செயல்ல. இது  மெய்யாகவே அவருடைய அன்பை வெளிப்படுத்துகிற செயல் மாத்திரமே ஆகும். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே தம்மைத் தாழ்த்தி, தம்மைவிடத் தாழ்ந்தவர்களுக்கு ஊழியம் செய்யும்போது, அவருடைய பிள்ளைகளாகிய நாமும், நம்முடைய இருதயத்தில் பெருமையில்லாமல், நம்மைவிடத் தாழ்ந்தவர்களுக்கும் கிறிஸ்துவின் தெய்வீக அன்பை வெளிப்படுத்தி ஊழியம் செய்யவேண்டும். 


இவைகளைச் செய்வீர்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்


நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள் (யோவா 13:17). 


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவி, அதைத் தொடர்ந்து உபதேசம்பண்ணும்போது, தம்முடைய உபதேசத்தின் முடிவுரையாக ""நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்'' என்று கூறுகிறார். பொதுவாக உலகப்பிரகாரமாகப் பேசும்போது, ஆளுகை செய்கிறவர்களும், அதிகாரத்திலுள்ளவர்களும், தங்களுக்குப் பணிவிடை செய்வதற்கு ஏராளமானோர் உள்ளவர்களும் பாக்கியவான்களென்று சொல்லுவார்கள்.  ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவுவது என்பது உலகப்பிரகாரமாக பெருமைக்குரிய காரியமல்ல. இதைச் செய்வதினால் யாரும் பெருமைப்படவும் முடியாது. ஆனால் இயேசுகிறிஸ்துவோ ""இவைகளைச் செய்வீர்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்'' என்று கூறுகிறார்.


தம்முடைய சீஷர்களுக்கு இயேசுகிறிஸ்து தாழ்மையைப்பற்றி அற்புதமாக உபதேசம்பண்ணுகிறார். தாமே அதற்கு முன்மாதிரியாக இருந்து, அவர்களுடைய கால்களைக் கழுவி, தம்முடைய உபதேசத்தை அவர்களுக்கு விளங்கப்பண்ணுகிறார். சீஷர்களுக்குச் சந்தோஷம் வேண்டும். அந்த சந்தோஷம் பூரணமாக இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டு, அதை அறிந்துகொண்டு, அவைகளின்படி செய்தால் மாத்திரமே நமக்குப் பூரண சந்தோஷம் உண்டாகும். வேதவசனத்தைத் தெரிந்திருந்தால்  மாத்திரம் போதாது. வசனத்தின்படி கீழ்ப்படிந்து ஜீவிக்கவேண்டும். இயேசுகிறிஸ்து சொன்ன பிரகாரம், நாம் செய்தால் மாத்திரமே  பாக்கியவான்களாகயிருப்போம். 


இயேசுகிறிஸ்துவின் எல்லா உபதேசங்களுக்குமே இதுவே அடிப்படைச் சத்தியம். அவருடைய உபதேசத்தை நாம் கேட்கவேண்டும். அத்துடன் நாம் அதன் பிரகாரம் கீழ்ப்படிந்து ஜீவிக்கவேண்டும். நம்முடைய கடமை என்ன என்பதை அறிந்திருப்பது மிகவும் அவசியம். நம்முடைய கடமையை அறிந்திருந்து,  நம்முடைய கடமையை நிறைவேற்றாமல் போனோமானால் நமக்கு சந்தோஷமோ, ஆசீர்வாதமோ கிடைக்காது. ""ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும் அதைச் செய்யாமற்போனால் அது அவனுக்கு பாவமாயிருக்கும்'' என்று யாக்கோபு எழுதுகிறார் (யாக் 4:17).


இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை அறிந்திருந்து, அதன்பிரகாரம் செய்யும்போதுதான் இயேசுகிறிஸ்துவின்  ராஜ்யம்  ஸ்தாபிக்கப்படும். அப்போதுதான் நாம் புத்தியுள்ள வீடுகட்டுகிறவர்களைப்போல இருப்போம். இயேசுகிறிஸ்துவின் எல்லா உபதேசங்களையும் நாம் கேட்கவேண்டும். அவருடைய எல்லா கட்டளைகளுக்கும் நாம் கீழ்ப்படியவேண்டும். கிறிஸ்துவின் கட்டளைகளில் மனத்தாழ்மையைப்பற்றிய கட்டளையே மிகவும் பிரதானமானது. நம்மைநாமே  தாழ்த்தவேண்டும். இயேசுகிறிஸ்து நம்மை இரட்சிப்பதற்காகத் தம்மை மரணபரியந்தம் தாழ்த்தினார். நம்மைத் தாழ்த்துவதைவிட பெரிதான ஊழியம் வேறொன்றுமில்லை.


ஒரு சிலர் இருதயத்தில் பெருமையோடிருப்பார்கள். பிறர்மீது பொறாமைப்படுவது, பிறரை வஞ்சிப்பது ஆகியவைபோல, இருதயத்தில் பெருமையோடிருப்பதும் பாவமான செயல்தான். சீஷர்கள் மனத்தாழ்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆகையினால் இயேசுகிறிஸ்து அவர்களுக்கு இது சம்பந்தமான உபதேசத்தை  எடுத்துக்காட்டோடு உபதேசிக்க வேண்டியதாயிற்று. மற்றவர்கள் நம்முடைய கால்களைக் கழுவும்போது நமக்கு சந்தோஷமாக இருக்கும். இது நல்ல உபதேசமென்று நாம் ஏற்றுக்கொள்வோம். நாமும் மற்றவர்களுடைய கால்களைக் கழுவவேண்டும். அப்போதுதான் நம்முடைய மனத்தாழ்மையும், நம்மைவிட தாழ்வானவர்களிடத்தில் நாம் அன்புகூரும் சுபாவமும் வெளிப்படும்.


இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறவன்

யோவா 13 : 18-20


குதிகாலைத் தூக்கினான்


உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்  (யோவா 13:18).  


யூதாஸ்காரியோத்து இயேசுகிறிஸ்துவைக் காட்டிக்கொடுக்க வேண்டுமென்று சதிஆலோசனைபண்ணுகிறான். இவனுடைய இருதயத்தின் தீயசிந்தனையை இயேசுகிறிஸ்து ஆரம்ப முதலே அறிந்திருக்கிறார். இயேசுகிறிஸ்து எல்லாக் காரியங்களையும், ஏற்றவேளை வரும்போதுதான்   தம்முடைய சீஷர்களுக்கு அறிவிப்பார். இப்போது அந்த வேளை வந்தாயிற்று. ஆகையினால் யூதாஸ்காரியோத்து தம்மைக் காட்டிக்கொடுக்கப்போவதை இயேசுகிறிஸ்து  தமது சீஷர்களுக்கு அறிவிக்கிறார். 


யூதாஸ்காரியோத்தின் வஞ்சக எண்ணத்தைப்பற்றிச் சொல்லும்போது, இயேசுகிறிஸ்து முதலாவதாக ஒரு பொதுவான செய்தியையே அவர்களுக்கு அறிவிக்கிறார்.  ""உங்களெல்லோரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்'' என்று கூறுகிறார். ஆனாலும் வேதவாக்கியம் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது. ""என்னுடனே அப்பம் புசிக்கிறவன் தன் குதிகாலைத் தூக்கினான்''  என்னும் வாக்கியம் 

சங்கீதம் 41:9-ஆவது வசனத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது, ""என் பிராண சிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்''. 


தம்முடைய சீஷர்களெல்லோரும் எல்லா விஷயங்களிலும் சரியானவர்களல்ல என்பதை  இயேசுகிறிஸ்து தெரிந்து வைத்திருக்கிறார். இயேசு அவர்களிடம் ஏற்கெனவே ""நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள். ஆகிலும் எல்லாருமல்ல

'' (யோவா 13:10) என்று கூறியிருக்கிறார்.  சீஷர்களைப்பற்றி நாம் பல காரியங்களை உயர்வாகப் பேசலாம்.  ஆனாலும்  சீஷர்கள் எல்லோருக்குமே  அந்தப் பாராட்டு வார்த்தைகள் பொருந்தாது. சமுதாயத்தில் பொதுவாக நல்லவர்களும் தீயவர்களும் கலந்திருப்பார்கள். அதுபோலவே அப்போஸ்தலர்களில் யூதாசும் இருக்கிறான்.


யார் நல்லவர்களென்பதையும், யார் தீயவர்களென்பதையும் இயேசுகிறிஸ்து அறிந்திருக்கிறார். ""நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்'' என்று இயேசு கூறுகிறார். தெரிந்துகொள்ளப்பட்டவர்களை இயேசுகிறிஸ்து தாமே தெரிந்துகொண்டார். இயேசுகிறிஸ்து யாரைத் தெரிந்திருக்கிறாரோ,  அவர்களைப்பற்றி  அவர் அறிந்தும் இருக்கிறார். தெரிந்துகொண்டவர்களின் சுபாவங்களை இயேசுகிறிஸ்து ஒருபோதும் மறப்பதில்லை. ""தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது. கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்'' (2தீமோ 2:19).


வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவனே அவரைக் காட்டிக்கொடுக்கிறான். தம்முடைய குடும்பத்தில், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிற ஒருவனையும் இயேசுகிறிஸ்து சேர்த்திருக்கிறார்.  வேதவாக்கியம் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே யூதாஸ்காரியோத்து இயேசுகிறிஸ்துவின் சீஷர்களின் ஒருவனாக  தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறான்.


""என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்'' என்று  யூதாஸ்காரியோத்தைக்குறித்து இயேசுகிறிஸ்து பேசுகிறார். அப்போஸ்தலர்களில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்திற்கு, இயேசுகிறிஸ்துவோடு அப்பம் புசிக்கிற மேன்மையான சிலாக்கியம் கிடைத்திருக்கிறது. இயேசுகிறிஸ்து இவனையும் நேசிக்கிறார். பல சமயங்களில் இயேசுகிறிஸ்து  இவனோடு உரையாடியிருக்கிறார். இயேசுவோடு நெருங்கிய ஐக்கியத்தோடிருக்கும் சிலாக்கியம் யூதாஸ்காரியோத்திற்கும் கிடைத்திருக்கிறது. யூதாஸ் இயேசுவோடு அப்பமும் புசித்திருக்கிறான்.   


தம்முடைய சீஷர்களுக்கு என்னென்ன சிலாக்கியங்களையெல்லாம் இயேசுகிறிஸ்து கொடுத்திருக்கிறாரோ, அவையெல்லாவற்றையும்  யூதாசும் பெற்றிருக்கிறான். இயேசுகிறிஸ்து ஊழியம்செய்வதற்காக எங்கெல்லாம் பிரயாணம் பண்ணினாரோ அங்கெல்லாம் யூதாஸ்காரியோத்தும் அவரோடுகூடவே போயிருக்கிறான். போஜனபந்தியில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவோடு யூதாசும் போஜனம்பண்ணியிருக்கிறான். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்கு கிடைத்திருக்கிற எல்லாசிலாக்கியங்களும் யூதாசுக்கும் கிடைத்திருக்கிறது. 


இயேசுகிறிஸ்து ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு திரளான ஜனங்களுக்கு அற்புதமாகப் போஜனம் கொடுத்தபோது, யூதாஸ்காரியோத்தும் அவரோடு கூடயிருந்திருக்கிறான். சீஷர்கள் பந்தியில் அமர்ந்திருக்கும் ஜனங்களுக்கு அப்பத்தையும் மீனையும் பரிமாறியபோது, யூதாசும் அவர்களில் ஒருவனாக எல்லோருக்கும் அப்பமும் மீனும் கொடுத்திருக்கிறான். இயேசுகிறிஸ்துவோடு பஸ்கா போஜனத்தைப் புசித்திருக்கிறான். இயேசுகிறிஸ்துவோடு அப்பம் புசிக்கிறவர்களெல்லோருமே இயேசுகிறிஸ்துவின் மெய்யான சீஷர்களல்ல. இயேசுகிறிஸ்துவோடு  அப்பமும் புசித்துவிட்டு, அவரையே காட்டிக்கொடுக்கக்கூடிய •யூதாசைப்போல துர்குணமுடையவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


யூதாஸ்காரியோத்து தன்னுடைய ஆண்டவரையே காட்டிக்கொடுக்கிறான். இவனுடைய பாவம் பயங்கரமானது. கிறிஸ்துவுக்கு எதிராகத் தன் குதிகாலைத் தூக்கினான். இயேசுகிறிஸ்துவை மறுதலித்ததால்  அவருக்குச்  சத்துருவானான். இக்காலத்து ஊழியக்காரர்களில் சிலர் பார்வைக்கு அப்போஸ்தலர்களைப்போல இருக்கிறார்கள். ஆனால் உள்ளத்திலோ யூதாஸ்காரியோத்தைப்போல வஞ்சிக்கிறவர்களாகக்கூட இருப்பார்கள்.  கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும் சோதிக்கும்போது  நம்முடைய  உண்மையான குணம் வெளிப்படும். கர்த்தருக்கு மறைவானது ஒன்றுமில்லை. 


இயேசு கிறிஸ்து இரவு முழுவதும் ஜெபம் பண்ணி, தமது சீஷர்களைத் தெரிந்து கொண்டார். அவர் யூதாஸ்காரியோத்தையும் தம்முடைய சீஷரில் ஒருவராகத் தெரிந்து கொண்டார். அவன் துன்மார்க்கனாக இருக்க வேண்டுமென்பதோ, அல்லது அவன் துன்மார்க்கனாக ஆகவேண்டுமென்பதோ இயேசு கிறிஸ்துவின் விரும்பமல்ல. ஆனாலும் யூதாஸ்காரியோத்து இயேசு கிறிஸ்துவிற்கு உண்மையுள்ளவனாக இருக்கமாட்டான், அவரைக் காட்டிக்கொடுப்பான் என்பதை கிறிஸ்து தாமே முன்னறிகிறார். அவன் இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்து, தனக்கு அழிவைத் தேடிக் கொள்வான். இயேசு கிறிஸ்து யூதாஸ்காரியோத்தைத் திருத்துவதற்கு முயற்சி பண்ணுகிறார். ஆனால் அவனோ சாத்தானுக்குத் தன் உள்ளத்தில் இடம் கொடுத்து விடுகிறான். வேதவாக்கியம் நிறைவேறுகிறது.


யூதாஸ்காரியோத்து இயேசு கிறிஸ்துவோடு அப்பம் புசித்தான். அது அவனுடைய பாவத்தை அதிகரித்தது. கிழக்குத் தேசத்தில் ஒருவன் தன் விரோதியோடு அப்பம் புசிக்கும்போது அந்த விரோதியைத் தன்னுடைய நண்பனாக்கிக் கொள்வான். உப்பிட்டவனுக்குத் துரோகம் செய்யமாட்டான். ஆனால் இங்கு யூதாஸ்காரியோத்து, இயேசு கிறிஸ்துவோடு போஜனம் பண்ணிவிட்டு, அவரையே காட்டிக்கொடுக்கத் தீர்மானம் பண்ணுகிறான். 


""என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்''  என்னும் வாக்கியம் கிழக்குத் தேசத்தின் வழக்குச் சொல். வளர்த்த கடா மார்பில் பாய்கிறது என்னும் வழக்குச் சொல்லுக்குச் சமமானது. கிழக்குத் தேசத்தில் குதிரையை நன்றாகத் தீனி போட்டு, பராமரித்து வளர்ப்பார்கள். அது தன் எஜமானையே குதிகாலைத் தூக்கி, எத்தி விடும். இது நம்பிக்கைத் துரோகத்தைக் குறிக்கும் வழக்குச் சொல்.


நீங்கள் விசுவாசிக்கும் பொருட்டு


அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்   (யோவா 13:19).


யூதாஸ்காரியோத்து தம்மைக் காட்டிக்கொடுக்கப்போவதை இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு முன்னமே வெளிப்படுத்துவதற்கான காரணத்தையும் இங்கு தெளிவுபடுத்துகிறார். ""அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும் பொருட்டு'' அதை அவர்களுக்குச் சொல்லுவதாகக் கூறுகிறார். வரப்போகிற காரியங்களை இயேசுகிறிஸ்து முன்னறிந்திருக்கிறார். தாமே மெய்யான தேவன் என்பதை தம்முடைய வார்த்தையின் மூலமாகவும், கிரியைகளின் மூலமாகவும் இயேசுகிறிஸ்து உறுதிபண்ணுகிறார். பழைய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்துவைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருவதையும், அவையெல்லாம் தாமே மேசியா என்பதை நிரூபிப்பதையும் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். 


சீஷர்கள் தங்கள் விசுவாசித்தில் வளரவேண்டும். நிலைத்திருக்க வேண்டும். இதற்காகவே இயேசு கிறிஸ்து பல அற்புதங்களைச் செய்திருக்கிறார். அவர்களுக்கும் அற்புதங்களைச் செய்யும் வல்லமையைக் கொடுத்திருக்கிறார்.


என்னை ஏற்றுக் கொள்கிறான்


நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (யோவா 13:20).


தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிற யூதாஸ்காரியோத்தைக் குறித்து இயேசுகிறிஸ்து பேசும்போது, தம்முடைய சீஷர்கள் சோர்வடைந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை உற்சாகப்படுத்தும்  வார்த்தைகளையும் கூறுகிறார். ""நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்'' என்று இயேசுகிறிஸ்து  ஆறுதலாகக் கூறுவது, அவருடைய சீஷர்களுக்கும், அவருடைய ஊழியத்தைச் செய்கிற எல்லோருக்கும் ஆறுதலான வாக்கியமாகும். சீஷர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்தவேண்டும் என்பதே இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் வலியுறுத்தும் முக்கியமான செய்தி. 


இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகள் தங்களைத் தாங்களே தாழ்த்தி, தங்களைவிட கீழானோருக்குத் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும்போது, அந்த அன்பை அனுபவித்தவர்களில் சிலர் நமக்கு விரோதமாக எழும்பலாம். நாம் யாருக்கு நன்மை செய்தோமோ  அவர்களே நமக்குச் சத்துருக்களாக மாறலாம்.  இப்படிப்பட்ட சத்துருக்கள் மத்தியில் நம்மை ஏற்றுக்கொண்டு, நம்மைக் கனப்படுத்துகிறவர்களும் இருப்பார்கள்  என்பதை  இயேசுகிறிஸ்து சோர்ந்துபோயிருக்கும் தம்முடைய சீஷர்களுக்கு ஆறுதலாகப் பேசுகிறார். கர்த்தருடைய பிள்ளைகளை ஏற்றுக்கொண்டு கனப்படுத்துகிறவர்களை கர்த்தர் கனப்படுத்துவார். 


இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்கிறவர்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். கிறிஸ்துவின் ஊழியம் கனமுள்ளது. இந்த உலகத்தில் பலவிதமான ஜனங்கள் இருக்கிறார்கள். அதுபோலவே கிறிஸ்துவின் ஊழியக்காரர்களும் பலவிதமாக இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியத்தையும், தம்முடைய ஊழியக்காரர்களையும் கனப்படுத்தினாலும், இந்த உலகம் அவருடைய ஊழியத்தையோ அல்லது அவருடைய ஊழியக்காரர்களையோ கனப்படுத்தவில்லை. 


இயேசுகிறிஸ்து யூதாஸ்காரியோத்தைத் தம்முடைய சீஷராக அழைக்கும்போது, அவன் தம்மை காட்டிக்கொடுக்கப்போகிறான் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனாலும் கிறிஸ்து அவனுடைய காட்டிக்கொடுக்கிற சுபாவத்தைப் பார்க்காமல், தம்முடைய சீஷர்களில் ஒருவனாக அவனை அங்கீகரித்து தம்மோடு சேர்த்துக்கொள்கிறார். மற்ற சீஷர்களுக்கு உபதேசம்பண்ணுவதுபோலவே யூதாசுக்கும் உபதேசம்பண்ணுகிறார். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் அவரையே ஏற்றுக்கொள்கிறார்கள். சீஷர்கள் என்று சொல்லும்போது யூதாசும் அவர்களில் ஒருவனாக இருக்கிறான். ஆகையினால் யூதாசை கிறிஸ்துவால் அனுப்பப்பட்ட சீஷனாக ஏற்றுக்கொள்கிறவர்களும், இந்த வாக்கியத்தின் பிரகாரம் அவர்கள் கிறிஸ்துவையே ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இந்த யூதாசோ பின்பு இயேசுகிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்து தன்னுடைய துன்மார்க்கக் குணத்தை வெளிப்படுத்துகிறான். இந்த யூதாசும்  இயேசுகிறிஸ்துவினால் அனுப்பப்பட்ட சீஷர்களில் ஒருவனாகத்தான் இருக்கிறான்.


கர்த்தருடைய பிள்ளைகள் அவரால் அனுப்பப்பட்டிருக்கிற ஊழியக்காரர்களை ஏற்றுக்கொள்ளும்போது, அவர்கள் கர்த்தரையே ஏற்றுக்கொள்கிறார்கள். யாரெல்லாம் இயேசுகிறிஸ்துவின் பெயரைச் சொல்லி ஊழியம் செய்கிறார்களோ அவர்களை நாம் ஏற்றுக்கொண்டு ஆதரிப்பதில் தவறில்லை. ஆனால்  கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் நல்லவர்களாக இல்லையென்றால், அவர்கள் துன்மார்க்க குணமுடையவர்களாகயிருப்பார்களென்றால் நாம்  மிகுந்த எச்சரிப்போடு இருக்கவேண்டும். ஏனெனில் சில சமயங்களில் இயேசுகிறிஸ்துவினால் அனுப்பப்பட்டவர்களை  ஏற்றுக்கொள்கிறோம் என்னும் பெயரில், ஒரு சிலர் திருடர்களை ஏற்றுக்கொள்கிறார்கள். சிலர் தேவதூதர்களைக் கூட ஏற்றுக்கொண்டு உபசரிக்கிறார்கள். நம்மிடத்தில் வருகிறவர்கள்  கர்த்தருடைய உண்மையான ஊழியக்காரர்களா, அல்லது திருட்டுக்குணமுடையவர்களா, அல்லது  தேவதூதர்களா என்பது நமக்குத் தெரியாது. 


ஒரு சில ஊழியக்காரர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக எல்லா ஊழியக்காரர்களையும் ஒட்டுமொத்தமாகக் குறைகூறக்கூடாது. ஒரு சில ஊழியக்காரர்கள்  மோசமானவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக, எல்லா ஊழியக்காரர்களையும் ஏற்றுக்கொள்ளாமல் புறகணித்துவிடக்கூடாது. நாம் பிறருக்கு உதவி செய்யும்போது, ஒரு சிலர் ஏமாற்றி உதவி பெற்றுக்கொள்கிறார்கள். இதற்காக, எல்லோருக்கும் உதவி செய்யாமல் போய்விடக்கூடாது. நாம் பிறருக்கு உதவி செய்யாமல் இருப்பதற்கு ஒரு சில ஏமாற்றுக்காரர்கள்தான் காரணம் என்று நம்முடைய செய்கையை நியாயப்படுத்தக்கூடாது.  இப்படியெல்லாம் நியாயப்படுத்தினால் தேவனுடைய ஆசீர்வாதத்தை நம்மால் பெற்றுக்கொள்ள முடியாது.


இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் தேவனால் அனுப்பப்பட்டிருக்கிறவர்கள் என்று விசுவாசித்து அவர்களை அங்கீகரிக்கவேண்டும். அப்போது இயேசுகிறிஸ்து கூறிய பிரகாரம் ""நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்'' என்னும்   ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும். 


கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் ஏழைகளாகயிருந்தாலும், சரீரத்தில் பலவீனமுள்ளவர்களாகயிருந்தாலும், அவர்கள்  இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை உபதேசம்பண்ணினால் நாம் அவர்களை ஏற்றுக்கொள்வதற்கு யோசிக்கக்கூடாது. அப்படிப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ளும்போது  நாம் கிறிஸ்துவையே ஏற்றுக்கொள்கிறோம். 


இயேசுகிறிஸ்துவையும் தேவனால் அனுப்பப்பட்டவர் என்று விசுவாசித்து அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும். தம்மை ஏற்றுக்கொள்கிறவன் தம்முடைய பிதாவை ஏற்றுக்கொள்கிறான் என்று இயேசுகிறிஸ்து வாக்குப்பண்ணியிருக்கிறார். இயேசுகிறிஸ்துவை  நம்முடைய இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ளும்போது, பிதாவானவர் அவர் மூலமாக அனுப்பியிருக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நாம் பங்காளிகளாகயிருக்கிறோம்.    


ஒருவன் இயேசுவைக் காட்டிக்கொடுப்பான்

யோவா 13 : 21-26


இயேசு ஆவியிலே கலங்கி


இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார்  (யோவா 13:21).


தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனைப்பற்றி இயேசுகிறிஸ்து  மிகுந்த பாரத்தோடு தம்முடைய சீஷர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். இயேசுகிறிஸ்து இந்த வார்த்தைகளைச் சொன்னபின்பு அவர் தம்முடைய ஆவியிலே கலங்குகிறார். ""உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்'' என்று இயேசு தம்முடைய சீஷர்களிடம் சாட்சியாக அறிவிக்கிறார். இயேசுகிறிஸ்து இவ்வாறு பேசுவதினால் யூதாஸ்காரியோத்து இயேசுகிறிஸ்துவை கட்டாயம் காட்டிக்கொடுக்க வேண்டும் என்னும்  அவசியமில்லை. அவன் இந்தப் பாவத்தை செய்தே ஆகவேண்டும் என்று இயேசுகிறிஸ்து தீர்மானம்பண்ணவில்லை. இனிமேல் நடைபெறப்போகிற சம்பவத்தை இயேசுகிறிஸ்து முன்னறிந்திருக்கிறார். யூதாஸ்காரியோத்து இயேசுகிறிஸ்துவைக் காட்டிக்கொடுக்கப்போகிறான் என்பதை அவர் அறிந்திருப்பதினால்தான் இந்த வார்த்தைகளைச் சொல்லுகிறாரேயல்லாமல், அவன் தம்மைக் காட்டிக்கொடுக்கவேண்டுமென்று இயேசுகிறிஸ்து தீர்மானம் பண்ணவில்லை. ஏனெனில் அவர் ஒருபோதும் பாவத்திற்குக் காரணரல்ல. 


யூதாஸ்காரியோத்து இனிமேல் செய்யப்போகிற பாவத்தை இயேசுகிறிஸ்து இப்பொழுதே முன்னிறிந்திருகிறார். நமக்குள்ளே இருக்கிற சிந்தனைகளைப்பற்றி நமக்குத் தெரிவதைவிட  இயேசுகிறிஸ்துவுக்கு நன்றாகத் தெரியும்.  நம்மை  நாம் அறிந்து வைத்திருப்பதைவிட இயேசுகிறிஸ்து நம்மைப்பற்றி அதிகமாகவே அறிந்து வைத்திருக்கிறார். ஆகையினால் மனுஷருடைய செய்கைகள் எப்படியிருக்கும் என்பதை அவரால் முன்னறிந்து பார்க்க முடிகிறது. 


""உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்'' என்று இயேசுகிறிஸ்து சொல்லும்போது, தம்முடைய முன்னறியும் ஆற்றலை வெளிப்படுத்துவதற்காகவோ, அல்லது  வருங்காலத்தில்  நடக்கப்போகும் சம்பவங்களை   சீஷர்களிடத்தில் அறிவிக்க வேண்டும் என்பதற்காகவோ இந்த வாக்கியத்தைச் சொல்லவில்லை. யூதாஸ்காரியோத்தின் நிமித்தமாகவே இயேசு இந்த வாக்கியத்தை இருதய பாரத்தோடு பேசுகிறார். இதைப் பேசும்போது இயேசுகிறிஸ்து தம்முடைய ஆவியிலே கலங்குகிறார். தம்முடைய வார்த்தையைக் கேட்டு யூதாஸ்காரியோத்து தன்னுடைய துன்மார்க்கமான யோசனையிலிருந்து மனந்திரும்பமாட்டானா என்று அவனை ஏக்கத்தோடு பார்க்கிறார்.


பொதுவாக சதிகாரர்களுடைய சதித்திட்டம் எல்லோருக்கும் அம்பலமானால், அவர்கள் தங்களுடைய சதிஆலோசனையைத்  தொடரமாட்டார்கள். தங்களுடைய சதித்திட்டம் எப்பொழுது கண்டுபிடிக்கப்படுகிறதோ அப்பொழுதே அந்தத்திட்டத்தை நிறுத்திவிடுவார்கள். யூதாஸ்காரியோத்தின் சதிஆலோசனையை இயேசுகிறிஸ்து அறிந்து, இப்போது அதை அவனுக்கு வெளிப்படுத்துகிறார். ஒருவேளை யூதாஸ் உடனே திருந்தவில்லையென்றாலும், சீக்கிரத்தில் அவன் திருந்திவிடுவான் என்று எதிர்பார்த்து அவனுடைய சதித்திட்டத்தை அவனுக்கு வெளிப்படுத்துகிறார். 


""உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்'' என்று இயேசுகிறிஸ்து கூறும்போது, தம்முடைய இருதயத்தில் அவர்  தம்முடைய சீஷர்களைக்குறித்து மிகுந்த கரிசனையோடிருக்கிறார். இதைப்பற்றி பேசும்போது இயேசுகிறிஸ்து தம்முடைய ஆவியில் கலங்குகிறார். தம்முடைய சீஷர்களில் ஒருவன் தம்மை விட்டுப்பிரிந்து, பாவத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து விழுந்துவிடும்போது, இந்த வீழ்ச்சி கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின்  ஆவியைக் கலங்கச் செய்கிறது. யூதாஸ் பாவம் செய்யவேண்டுமென்று சதிஆலோசனை பண்ணியபோது இயேசுகிறிஸ்து தம்முடைய ஆவியிலே கலங்கியதுபோலவே, அவருடைய பிள்ளைகளாகிய நாம் பாவம் செய்யும்போது, இயேசுகிறிஸ்து இன்றும் தம்முடைய ஆவியிலேயே கலங்குகிறார். ""உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்'' என்று  ஏக்கத்தோடு, ஆவியில் கலங்கியவராக நம்மைப்பற்றியும் சாட்சிக்கொடுக்கிறார். 


இயேசுகிறிஸ்துவின் இந்த வார்த்தை யூதாஸ்காரியோத்துடைய இருதயத்தைத் தொடுகிறது. இயேசுகிறிஸ்து இவனை ஆவிக்குரிய ரீதியாகப் போஷித்து வளர்த்திருக்கிறார். இவனுக்கு ஏராளமான உபதேசங்களையும் கொடுத்திருக்கிறார். அப்படியிருந்தும் இவன் தம்மைக் காட்டிக்கொடுக்கப்போவதினால் இயேசு தம்முடைய ஆவியிலே கலங்குகிறார். நம்முடைய பிள்ளைகளை நாம் போஷித்து, பராமரித்து வளர்க்கும்போது அவர்கள் நமக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டால் நமக்கு மிகுந்த வருத்தம் உண்டாகும். தங்களுடைய கடமைகளை அவர்கள் சரிவரச் செய்யவில்லையென்றால் நாமும் நம்முடைய ஆவியிலே கலங்குவோம். நம்முடைய ஜீவியம் இயேசுகிறிஸ்துவைப் பிரியப்படுத்துகிற ஜீவியமாக இருக்கவேண்டும்.  


சீஷர்கள் ஐயப்பட்டு


அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள் (யோவா 13:22).  


""உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்'' என்று இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகள் சீஷருடைய உள்ளத்தைத் தொடுகிறது. இந்த வார்த்தை அவர்களுக்கு எச்சரிப்பின் சத்தமாயிற்று. இயேசுவின் வார்த்தையைக்கேட்டு சீஷர்கள் உணர்வடைந்தவர்களாக ""ஒருவரையொருவர்  நோக்கிப் பார்க்கிறார்கள்''. இயேசுகிறிஸ்து யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்களுடைய மனதில் ஐயம் உண்டாயிற்று. அவர்களுக்கு என்ன பேசவேண்டுமென்று தெரியவில்லை. யாரைப் பார்ப்பது என்று புரியவில்லை. அவர்களுக்குள் பயம் உண்டாயிற்று. இயேசுகிறிஸ்து தம்முடைய ஆவியிலே கலங்குவதை அவர்கள்  பார்க்கிறார்கள். இதனால் சீஷர்களும் தங்களுடைய ஆவியிலே கலங்குகிறார்கள்.  இயேசுகிறிஸ்துவைத் துக்கப்படுத்துகிற காரியங்கள் நம்மையும் துக்கப்படுத்துவதாக இருக்கவேண்டும். அவரைக் கலங்கச் செய்கிற காரியங்கள் நம்மையும் கலங்கச் செய்வதாக இருக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்துவைத் தங்களில் யார் காட்டிக்கொடுக்கப்போகிறான் என்பதை அறிந்துகொள்வதற்கு சீஷர்கள் முயற்சிபண்ணுகிறார்கள். ""உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்'' என்று இயேசுகிறிஸ்து கூறிவிட்டு சற்று அமைதியாக இருக்கிறார். தம்முடைய வார்த்தையைக் கேட்டு  ஒவ்வொரு சீஷரும் தங்களைத் தாங்களே ஆராய்ந்து பார்க்கவேண்டுமென்று இயேசு விரும்புகிறார். சீஷர்கள் தங்களைத் தாழ்த்தவேண்டும். இயேசுகிறிஸ்துவைக் காட்டிக்கொடுக்கும் துர்க்குணம் தங்களிடத்தில் இல்லையென்பதை சீஷர்கள் நிரூபிக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின்மீது பக்திவைராக்கியமாக இருக்கவேண்டும். இதற்காகவே இயேசுகிறிஸ்து  இந்த வார்த்தைகளைச் சொன்னபின்பு ஆவியிலே கலங்கி  அமைதியாக இருக்கிறார். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில்கூட, நம்மைப்பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்கு நேரம் செலவிடவேண்டும். இதற்காக நம்முடைய அன்றாட வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு  தேவனுடைய சமுகத்தில் அமைதியாகக் காத்திருந்து பரிசுத்த ஆவியானவர் நம்மைச்  சோதித்துப் பார்க்க அனுமதிக்கவேண்டும். 


யாருமே யூதாஸ்காரியோத்தைச் சந்தேகப்படவில்லை.             (யோவான் 13:22-26) அவன் பணப்பையை வைத்திருக்கிறவன். ஆகையினால் அனைவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரவானாக இருந்தான். அவன் ஒரு நல்ல நடிகனாக இருந்திருக்க வேண்டும். பிசாசின் வல்லமையினால் அவன் தவறு ஒன்றும் செய்யாதவன்போல தன் முகத்தை வைத்திருந்திருக்கலாம்.


இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்


அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான் (யோவா 13:23).   


""உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்'' என்று இயேசுகிறிஸ்து சொன்னதைக்கேட்டு சீஷர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். அவர் யாரைக் குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு ஒருவரையொருவர் நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களில்     யார் இயேசுவைக் காட்டிக்கொடுப்பான் என்பதை அவரிடத்திலேயே கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டுமென்று சீஷர்கள் விரும்புகிறார்கள். இயேசுகிறிஸ்துவிடத்தில் இதைப்பற்றி யார் கேட்பது என்று அவர்களுக்குள் யோசனை உண்டாயிற்று. 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் யோவான் அவருக்கு மிகவும் அன்பானவனாக இருக்கிறான். இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு  யோவானே சரியான நபர் என்று மற்ற சீஷர்கள் நினைக்கிறார்கள். யோவான் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருக்கிறான். அவருக்கு அருகாமையில் இருக்கிறான். 


இயேசுவுக்கு அன்பானவனும், அவருடைய மார்பிலே சாய்ந்துகொண்டிருக்கிறவனும் யார் என்பதற்கு வேதபண்டிதர்கள் பலவிதமாகக் கருத்துக் கூறுகிறார்கள். அது யோவான்தான் என்பது பலருடைய பொதுவானகருத்து. ""பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம்பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான்.  அந்தச் சீஷனே இவைகளைக்குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்''             (யோவா 21:20,24).


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களில் யோவான்மீது மிகுந்த அன்போடிருக்கிறார். ஆகையினால் யோவான் தன்னைப்பற்றி எழுதும்போது ""அவனுடைய சீஷரில் இயேசுவுக்கு  அன்பானவனாயிருந்த ஒருவன்'' என்று குறிப்பிடுகிறான். இவ்வாறு எழுதப்பட்டிருப்பதினால் இயேசுகிறிஸ்து யோவான்மீது மாத்திரமே அன்பாகயிருந்தாரென்றும், மற்ற சீஷர்மீது அன்பாயிருக்கவில்லையென்றும் வியாக்கியானம் பண்ணக்கூடாது. அவர் தம்முடைய எல்லா சீஷரிடத்திலும் அன்பாகவேயிருக்கிறார். ""தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில்அன்பு வைத்தபடியே முடிவுபரியந்தம் அவர்களிடத்தில் அன்பு வைத்தார்'' (யோவா 13:1). இருப்பினும் யோவான் மற்றெல்லா சீஷரிலும் இயேசுவின்மீது மிகுந்த அன்பு வைத்திருந்தான். அவருக்கு அதிக நெருக்கமாகயிருந்தான். இயேசுகிறிஸ்துவும் யோவான்மீது மிகுந்த அன்போடிருக்கிறார். யோவான் என்னும் பெயருக்கு ""கிருபையுள்ளவன்'' என்று பொருள். 


இயேசுகிறிஸ்துவுக்கு பன்னிரண்டு சீஷர்கள் இருந்தாலும் ஒரு சில சீஷர்களைவிட  வேறு சில சீஷர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு மிகவும் நெருக்கமாகயிருந்தார்கள். இயேசுகிறிஸ்து இந்த வாக்கியத்தைப் பேசிக்கொண்டிருக்கும்போது யோவான் ""இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்''. யோவான் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருப்பது, தன்னுடைய ஆண்டவரிடத்தில் அவன் வைத்திருக்கிற விசேஷித்த அன்பை வெளிப்படுத்துகிறது. யாரெல்லாம் இயேசுகிறிஸ்துவின் பாதபடியில் தங்களைத் தாழ்த்தி ஒப்புக்கொடுக்கிறார்களோ, அவர்களெல்லோரும் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருக்கிறார்கள். 


யோவான் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தாலும், தன்னுடைய பெயரை இங்கு விளம்பரப்படுத்தவில்லை. தன்னுடைய பெயருக்குப் பதிலாக, தன்னைப்பற்றி எழுதும்போது ""இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன்'' என்று மாத்திரமே எழுதுகிறான். தன்னுடைய பெயருக்கு  தனிப்பட்ட முறையில் எந்தவிதமான பெருமையோ, உயர்வோ வரவேண்டுமென்று  யோவான் விரும்பவில்லை. தான்  இயேசுவின்மீது வைத்திருக்கும் அன்பும்,    இயேசு தன்மீது வைத்திருக்கும் அன்பும் மாத்திரமே முக்கியமானது என்று யோவான் தன்னைத்தானே தாழ்த்துகிறான். 


சீமோன் பேதுரு


யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன் பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்  (யோவா 13:24).  


இயேசுகிறிஸ்துவின் மற்ற சீஷர்களைவிட  பேதுரு எல்லாக்காரியங்களிலும் முந்தி செயல்படுகிறவன். புதிதாக ஒரு காரியம் இருந்தால் அதை அறிந்துகொள்ளவேண்டுமென்று பேதுருதான்          முதலில் முன்வருவான். யோவான் இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டிருக்கிறான். பேதுருவோ  இயேசுவைவிட்டு சற்று தூரத்தில் இருந்திருக்கவேண்டும். ""உங்களில் ஒருவன்  என்னைக் காட்டிக்கொடுப்பான்'' என்று இயேசுகிறிஸ்து யாரைக் குறித்து சொல்லுகிறார் என்று விசாரிக்கும்படி, அவருடைய மார்பிலே சாய்ந்துகொண்டிருக்கிற யோவானுக்குப் பேதுரு சைகை காட்டுகிறான். பேதுரு பல சமயங்களில் இயேசுகிறிஸ்துவின் சீஷர்களை இதுபோல வழிநடத்துகிறான்.


நமக்குப் புரியாத காரியம் ஏதாவது இருக்குமென்றால், அந்த சந்தேகத்தை நம்முடைய மனத்திற்குள்ளே அடைத்து வைத்துக்கொள்ளாமல், வெளிப்படையாகக் கேட்டுவிடுவது நல்லது. கேள்வி கேட்பதற்குத் தைரியம் வேண்டும். ஆனாலும் சுயபெருமைக்காகக் கேள்விகளைக் கேட்கக்கூடாது. நாம் கேட்கிற ஒவ்வொரு கேள்வியிலும் நம்முடைய மனத்தாழ்மை வெளிப்படவேண்டும். சந்தேகத்தை நிவிர்த்தி செய்து ஞானத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது மாத்திரமே நம்முடைய கேள்வியின் பிரதான நோக்கமாக இருக்கவேண்டும்.


தேவன் தம்முடைய வரங்களை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகக் கொடுத்திருக்கிறார். வரங்களில் வித்தியாசமுண்டு. சீஷர்களின் சந்தேகத்தை நிவிர்த்தி செய்வதற்காக எல்லோர் சார்பாகவும் பேதுருதான் கேள்வி கேட்கிறான். இது ஒரு வரம்.  ஆனாலும் பேதுருவை விட யோவானே இயேசுவுக்கு அன்பானவனாகயிருக்கிறான். யோவானிடத்தில் காணப்படுவதும் ஒரு வரம்தான். இயேசுகிறிஸ்துவிடம் இப்போது பேதுரு தானாக கேள்விகேட்காமல், இயேசுவின் அருகில் இருக்கும் யோவானை கேட்குமாறு சைகை காட்டுகிறான். யோவானால் இயேசுகிறிஸ்துவிடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்பது மிகவும் எளிது.  இந்தக் கேள்வியைப்பற்றி யோவான் இயேசுவின் செவிகளில் மெதுவாகப் பேசமுடியும். இயேசு கொடுக்கும் மென்மையான பதிலை யோவானால் தனிப்பட்ட முறையில் பெற்றுக்கொள்ளவும் முடியும். 


இயேசுகிறிஸ்துவுக்கு சிலர் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி  அறிந்துகொள்வதும், அவர்களிடத்தில் சிநேகமாகயிருப்பதும் விசுவாசிகளாகிய நமக்கு நல்லது. இயேசுகிறிஸ்துவின் மார்பில் யார் சாய்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து, நமக்காக நல்ல வார்த்தைகளைப் பேசுமாறு அவர்களிடத்தில் கேட்கலாம். மற்றவர்களைவிட நாம் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்து, அவருக்கு அருகாமையில் இருப்போமென்றால், மற்றவர்களுக்காகவும் நாம் இயேசுவிடத்தில் பரிந்து பேசவேண்டும். 


ஆண்டவரே அவன் யார்


அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்  (யோவா 13:25). 


பேதுரு தனக்குச் சைகை காட்டியதை யோவான் புரிந்துகொள்கிறான். தான் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு அவருக்கு அருகாமையிலிருக்கும்  சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ""ஆண்டவரே அவன் யார்'' என்று  யோவான் இயேசுவிடம் கேட்கிறான். இயேசுகிறிஸ்துவின் மற்ற சீஷர்களிடத்தில் யோவான் அன்பு வைத்திருக்கிறான். இயேசுகிறிஸ்துவின் மார்பிலே சாய்ந்திருக்கிறவர்கள், அவருடைய பாதபடியிலே கண்ணீர்விட்டு அமர்ந்திருப்பவர்களை மறந்துவிடக்கூடாது. தங்களுக்குத் தெரியாததும், தாங்கள் அறியாததுமான காரியங்கள் இயேசுவின் பாதத்தில் கண்ணீரோடு அமர்ந்திருக்கிறவர்களுக்கு தெரியும் என்பதை  உணர்ந்துகொண்டு, அவர்களிடத்திலிருந்துகற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாகயிருக்கவேண்டும். 


யோவான் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருக்கிறான். அவருக்கு மிகவும் நெருக்கமாகயிருக்கிறான். இயேசுவுக்கு நெருக்கமாகயிருப்பதைத் தன்னுடைய சுயலாபத்திற்காக யோவான் பயன்படுத்திக்கொள்ளவில்லை. தன் ஆண்டவர்மீது              பயபக்தியோடும்  மரியாதையோடும் இருக்கிறான். இயேசுகிறிஸ்துவின் காதுகளில் மெதுவாகப் பேசினாலும், யோவான் இயேசுகிறிஸ்துவை ""ஆண்டவரே'' என்று பயபக்தியோடு அழைக்கிறான். ஒரு சிலருக்கு ஒருவரிடத்தில்  நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் அவரை மதிக்கமாட்டார்கள். யோவான் இயேசுகிறிஸ்துவிடம் நெருக்கமாகயிருந்தாலும், அவர்மீது யோவான் வைத்திருக்கிற அன்பு குறைந்துபோய்விடவில்லை. நாம் இயேசுகிறிஸ்துவிடம் அதிகமாக நெருங்கிச் சேர சேர, நாம் அவருடைய அன்புக்கு பாத்திரவான்களல்ல என்பதையும், அவருடைய சமுகத்திற்கு நெருங்கி வர நமக்கு எந்தத் தகுதியுமில்லை என்பதையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.         நம்மை நாமே தாழ்த்தி நம்முடைய மனப்பெருமைகளை நம்மைவிட்டு நீக்கிப்போடவேண்டும்.


யூதாஸ்காரியோத்து


இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்-, துணிக்கையைத்  தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்  (யோவா 13:26). 


யோவானுடைய கேள்விக்கு இயேசுகிறிஸ்து காலதாமதம்பண்ணாமல் உடனடியாகப் பதில் கூறுகிறார். எல்லா சீஷர்களுக்கும் கேட்கும்விதமாகப் பேசாமல், யோவானுடைய காதுகளில் மெதுவாகப் பேசுகிறார்போன்று தெரிகிறது. ஏனெனில் யூதாஸ்காரியோத்தின் செய்கையை மற்றவர்கள்  இன்னும் அறிந்துகொள்ளவில்லை. இயேசு யோவானிடம் ""நான் இந்தத் துணிக்கையைத் தோய்ந்து எவனுக்குக் கொடுப்பேனோ அவன்தான்'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்து இந்த வாக்கியத்தைச் சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுக்கிறார்.


தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனை இயேசுகிறிஸ்து               ஒரு அடையாளத்தினால் மற்றவர்களுக்கு அறிவிக்கிறார். யூதாஸ்காரியோத்தினுடைய பெயரை இயேசுகிறிஸ்து யோவானுக்கு சொல்லியிருக்க முடியும். ஆனால் அவர் அவனுடைய பெயரைச் சொல்லவில்லை. நம்மைச் சுற்றிலும் கள்ளச்சகோதரர்கள் இருப்பார்கள். அவர்களின் பெயர்கள் நமக்குத் தெரியாமல் போகலாம். ஆனாலும் அவர்களுடைய கனிகளை வைத்து  நாம் அவர்களைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்து யூதாஸ்காரியோத்தைப்பற்றி குறிப்பிடுவதற்கு ""ஒரு துணிக்கை'' யை ஓர் அடையாளமாகப் பயன்படுத்துகிறார்.


தமக்குச் சத்துருக்களாக இருக்கிறவர்களுக்கு இயேசுகிறிஸ்து சில சமயங்களில் துணிக்கைகளைக் கொடுக்கிறார். துணிக்கை என்பது உலகப்பிரகாரமான ஐசுவரியமாகவோ,  பதவியாகவோ, பட்டங்களாகவோ, உயர்பதவிகளாகவோ இருக்கலாம். மனுஷருக்கு இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களெல்லாம் வந்துவிட்டால் அவர்களுடைய இருதயங்களில் பெருமை வந்துவிடும். துன்மார்க்கமான சிந்தனைகள் அவர்களுடைய இருதயங்களை ஆளுகை செய்யும். துன்மார்க்கருடைய கரங்களில் ஐசுவரியங்களும், பதவிகளும் பெருமைகளும் ஏராளமாய்  உள்ளன.  இவையெல்லாமே இயேசுகிறிஸ்து யூதாஸ்காரியோத்திடம்  துணிக்கையைக் கொடுத்ததுபோல இருக்கிறது. 


யூதாஸ்காரியோத்து தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறான் என்பதை இயேசுகிறிஸ்து அறிந்திருந்தும், அவர் அவன்மீது  அன்பாகவேயிருக்கிறார். தம்மோடுகூட பந்தியிலிருப்பதற்கு அனுமதிக்கிறார். அவனுடைய கால்களையும் கழுவுகிறார். தம்முடைய மரணத்திற்கு அவன் சதிஆலோசனைபண்ணுகிறான் என்பதைத் தெரிந்திருந்தும் இயேசு அவனோடு அன்பாகவேயிருக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மிடத்திலும் கிறிஸ்துவின் சுபாவம் காணப்படவேண்டும். நமக்கு விரோதமாகத் •தீமை செய்கிறவர்கள்மீதும்      நாம் அன்பாயிருக்கவேண்டும். நம்மைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதிக்கவேண்டும். நமக்கு விரோதமாகத் தீங்குசெய்கிறவர்களுக்கு  நாம் நன்மை செய்யவேண்டும். 


""துணிக்கை'' என்பதன் கிரேக்கச் சொல் ""ப்சோமியோன்''  என்பதாகும். இது அவர்களுடைய இராப்போஜனத்தின் ஒரு பகுதி. விருந்து கொடுக்கிறவர் அப்பத்தின் ஒரு பகுதியாகிய துணிக்கையை எடுத்து, ரசத்தில் தோய்த்து, விருந்தினருக்குக் கொடுப்பார். அதைப் பெற்றுக் கொள்ளும் விருந்தினர்கள் கௌரவிக்கப் படுகிறார்கள். இயேசு கிறிஸ்து யூதாஸ்காரியோத்தின் மனச்சாட்சியோடு யோவான் 13:21 ஆவது வசனத்தில் பேசிப்பார்த்தார். இப்பொழுது அவனுடைய இருதயத்தில் பேசிப் பார்க்கிறார். ஆனால் ஒரு பிரயோஜனமும் ஏற்படவில்லை. யூதாஸ்காரியோத்தின் இருதயம் கடினமாயிற்று.


யூதாஸ் புறப்பட்டுப்போகிறான்

யோவா 13 : 27-30 


சாத்தான் அவனுக்குள் புகுந்தான்


அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்  (யோவா 13:27).   


இயேசுகிறிஸ்துவின் எச்சரிப்பின் வார்த்தையைக் கேட்டு யூதாஸ்காரியோத்து  மனந்திரும்பியிருக்கவேண்டும். ஆனால் அவனோ தன்னுடைய துன்மார்க்கமான செயலை உறுதியாகச் செய்யவேண்டுமென்று தீர்மானம்பண்ணுகிறான். தன்னை இப்போது யூதாசு ஆளுகை செய்யவில்லை. அவனை சாத்தான் ஆளுகை செய்கிறான். ""துணிக்கையை அவன் வாங்கினபின்பு சாத்தான் அவனுக்குள் புகுந்தான்''. அவனை ஆளுகை செய்வதற்காக சாத்தான் அவனுக்குள் புகுந்திருக்கிறான். இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவதற்கு சாத்தான் யூதாசை தன் வசப்படுத்தியிருக்கிறான். சாத்தான் அவனுக்குள் புகும்போது சாத்தானுடைய குணம் அவனுடைய இருதயத்தை நிரப்புகிறது. பேராசை வந்துவிடுகிறது. அநீதியாகச் சம்பாத்தியம் பண்ணவேண்டும் என்னும் ஆசை வந்துவிடுகிறது. யூதாஸ்காரியோத்து தன்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்ய ஆயத்தமாகயிருக்கிறான். இதுதான் சாத்தானின் குணம்.


""சாத்தான் அவனுக்குள் புகுந்தான்'' என்னும் வாக்கியத்திற்கு வேதபண்டிதர்கள் வெவ்வேறு விதமாக வியாக்கியானம்பண்ணுகிறார்கள்.  இதற்கு முன்பு சாத்தான் அவனுக்குள் இல்லையா என்று கேள்வி கேட்கிறார்கள். இயேசுகிறிஸ்து இதற்கு முன்னமே தம்முடைய சீஷர்களிடம் ""உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான்'' என்று கூறியிருக்கிறார் (யோவா 7:70). அவர் யூதாஸ்காரியோத்தைக் குறித்துதான் இவ்வாறு சொன்னார். இப்போது  சாத்தான் யூதாசை முழுமையாக ஆளுகை செய்ய அவனை அடிமைப்படுத்தியிருக்கிறான்.  


துன்மார்க்கமான காரியங்களைச் செய்யும்  ஒவ்வொரு பாவியினிடத்திலும் சாத்தான் இருக்கிறான். சாத்தானுடைய ஆளுகை ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சாத்தான் ஒரு சிலர் மூலமாக மிகவும் பலத்த  துன்மார்க்க கிரியைச் செய்வான். ஒரு சில நேரங்களில் ஒரு சில துன்மார்க்கர் மூலமாகச்  சாத்தான் செய்கிற பாவமான கிரியைகளுக்கு  அளவேயிருக்காது. சாத்தான் மிகவும் வல்லமையாக சாத்தான் அவர்கள் மூலமாகக் கிரியை செய்வான். 


""அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு சாத்தான் அவனுக்குள் புகுந்தான்''. அவன் துணிக்கையை வாங்கினபின்பு ஏன் சாத்தான் அவனுக்குள் புகவேண்டுமென்று ஒரு சிலர் கேள்வி கேட்கிறார்கள். இயேசுகிறிஸ்து ஏற்கெனவே ""நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ அவன்தான் என்னைக் காட்டிக்கொடுப்பான்'' என்று கூறியிருக்கிறார். யூதாஸ்காரியோத்து இயேசுகிறிஸ்துவின் கையிலிருந்து துணிக்கையை வாங்கும்போது, அவன்தான் இயேசுவைக் காட்டிக்கொடுக்கப்போகிறான் என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிடுகிறது.  ஆகையினால் யூதாஸ் இனிமேலும் தாமதம் செய்யாமல்  தன்னுடைய உள்ளத்திலுள்ள வஞ்சகமான எண்ணத்தைத் செயல்படுத்த வேண்டுமென்று தீர்மானம்பண்ணுகிறான்.


இயேசுகிறிஸ்து ஒரு சிலரை அதிகமாக ஆசீர்வதிக்கிறார். மிகுந்த ஐசுவரியத்திற்கு அவர்கள் சொந்தக்காரராகிறார்கள். சில சமயங்களில் அதிகமான ஆசீர்வாதம்  ஆசீர்வாதத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக,  சாபத்தைக் கொடுத்துவிடும். தாங்கள் செய்யும் பாவங்களுக்கு இவர்கள் மனந்திரும்பமாட்டார்கள். தாங்கள் ஐசுவரியவான்களாகயிருப்பதினால் தேவனுடைய ஆசீர்வாதம் தங்களிடத்தில் இருக்கிறது  என்றும்,  தாங்கள் ஒரு பாவமும் செய்யவில்லையென்றும்,  தங்களிடத்தில் தேவன் அன்பாயிருக்கிறாரென்றும் இறுமாப்பாகயிருப்பார்கள். தாங்கள் பாவம் செய்திருக்கிறோம் என்னும் உணர்வே இவர்களுக்குள் இருக்காது. 


சாத்தான் யூதாஸ்காரியோத்திற்குள் புகுந்தவுடன், இயேசுகிறிஸ்து அவனை அங்கிருந்து விரைவாக அனுப்புகிறார். ""நீ செய்கிறதை சீக்கிரமாய்ச் செய்'' என்று கூறுகிறார். யூதாஸ்காரியோத்து இயேசுகிறிஸ்துவின் பிரசன்னத்தைவிட்டு விலகிப்போகிறான். கிறிஸ்துவும் அவனைச் சாத்தானுடைய அதிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்துவிடுகிறார். சாத்தான் அவனுக்குள் புகுந்திருக்கிறான் என்பது இயேசுகிறிஸ்துவுக்குத் தெரியும். சாத்தான் மிகவும் அமைதியாக அவனுக்குள் வந்து, இப்போது அவனை முழுமையாக ஆளுகை செய்கிறான். இப்போது யூதாசுக்கு இயேசுகிறிஸ்துவிடத்தில் நம்பிக்கையில்லை. நம்பிக்கையற்றவனாக அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப்போகிறான்.


இயேசுகிறிஸ்து பல சமயங்களில் நம்முடைய பாவங்களை உணர்த்துகிறார். பாவத்தை உணர்த்துவதற்கு அவர் பலவிதமான உபாயங்களைப் பயன்படுத்துகிறார். சில சமயங்களில் இயேசுகிறிஸ்துவின் உபாயங்கள் எதற்கும் நாம் செவிகொடுப்பதில்லை. பாவத்தைக் குறித்து உணர்வடைவதில்லை. துணிகரமாகப் பாவம் செய்கிறோம். அசுத்த ஆவிக்குக் கீழ்ப்படிந்து, மனப்பூர்வமாக அசுத்தமான காரியங்களைச் செய்கிறோம். அப்படிப்பட்ட பரிதாபமான சூழ்நிலையில் பரிசுத்த ஆவியானவர் நம்மைவிட்டு அகன்று போய்விடுகிறார். அப்போது நமக்குப் பரிசுத்த ஆவியானவருடைய ஒத்தாசையோ, உதவியோ  கிடைப்பதில்லை. 


யூதாசுக்குள் சாத்தான் புகுந்தபின்பு, அவன் பாவம் செய்யவேண்டுமென்று தீர்மானமாகயிருக்கிறான். அவனுடைய உள்ளத்தை இயேசுகிறிஸ்து அறிந்தவராக  அவனை அவ்விடத்தை விட்டு சீக்கிரமாய் அனுப்புகிறார். யூதாஸ்காரியோத்து தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறான் என்று இயேசு பயப்படவில்லை. அவர் எந்தப் பாடுகளையும் சந்திப்பதற்கும் தாங்கிக்கொள்வதற்கும் ஆயத்தமாயிருக்கிறார். ஆகையினால்தான் இயேசுகிறிஸ்து யூதாசை நோக்கி ""நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்'' என்று கூறுகிறார். 


சாத்தான் என்னும் சொல் யோவான் சுவிசேஷத்தில் இந்த வசனத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாகவே சாத்தான் தன்னுடைய வஞ்சனையை யூதாசின் இருதயத்தில் விதைத்துவிட்டான்.   இயேசு கிறிஸ்து யூதாசிடம் பேசியபோது, அவன் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினான். இப்போதோ சாத்தான் தன்னை ஆளுகை செய்வதற்கு யூதாஸ் இடம் கொடுத்து விடுகிறான்.


 யூதாஸ் சாத்தானுக்கு இடம் கொடுத்திருப்பது இயேசுவிற்குத் தெரியும். இதற்கு மேல் யூதாசிடம் பேசி, ஒரு பயனும் இல்லை என்பதை இயேசு நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார். ஆகையினால் அவன் செய்யப் போகிற வேலையைச் சீக்கிரமாகச் செய்யுமாறு இயேசு கிறிஸ்து யூதாசை அனுப்புகிறார்.                


ஒருவனும் அறியவில்லை


அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை.  யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன்போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்-யிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள் (யோவா 13:28,29).


""இயேசுகிறிஸ்து இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை''. யூதாஸ் இயேசுகிறிஸ்துவைக் காட்டிக்கொடுக்கப்போகிறானென்று சீஷர்களில் யாரும் சந்தேகப்படவில்லை. தம்மைஅவன் காட்டிக்கொடுக்கப்போவதினால் இயேசுகிறிஸ்து அவனைப்பார்த்து ""நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்'' என்று அவனிடத்தில் சொன்னதாக யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை. ஏனெனில்  யூதாஸ் சீஷர்கள் மத்தியிலே நல்லவனைப்போலவே இருந்திருக்கிறான். 


இயேசுகிறிஸ்துவின்சீஷர்கள் நன்றாக உபதேசிக்கப்பட்டிருக்கிறார்கள். கிறிஸ்துவின் வார்த்தையின் பிரகாரமாக அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். யாரும் யாரையும் சந்தேகப்படுவதில்லை. தங்களில் ஒருவன் இயேசுகிறிஸ்துவைக் காட்டிக்கொடுக்கப்போகிறான் என்னும் சிந்தனையே அவர்களுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அவர்களுடைய பணப்பைக்கு யூதாஸ் பொறுப்பாகயிருக்கிறான்.  இயேசுகிறிஸ்து அவனிடத்தில் கொஞ்சம் பணத்தைக்கொடுத்து பண்டிகைக்குத் தேவையானவைகளை வாங்கிக்கொண்டு வரும்படி அனுப்பியிருப்பார் என்று மற்ற சீஷர்கள் நினைக்கிறார்கள். ஏனெனில் யூதாஸ் பல சமயங்களில் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வருவது வழக்கம். 


சீஷர்கள் ஒருவரையொருவர் நேசிப்பதுபோலவே, தரித்திரரிடத்திலும் அன்புகூருகிறார்கள். தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தரித்திரருக்கு உதவிசெய்கிறார்கள். தரித்திரருக்கு உதவி செய்வதற்காக எதையாவது வாங்கிக்கொண்டு வருமாறு இயேசுகிறிஸ்து யூதாசிடம் சொல்லியிருப்பார் என்று சீஷர்கள் கள்ளம் கபடமில்லாமல் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.  இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு சிலர் தங்கள் ஆஸ்திகளால் ஊழியம் செய்கிறார்கள் (லூக் 8:3). மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற்றுக்கொண்டுதான் இயேசுகிறிஸ்து,  போஜனம்பண்ணுகிறார். ஆயினும் தம்மிடத்திலுள்ள சிறிது பொருட்களையும் தரித்திரருக்குக் கொடுத்து உதவிசெய்கிறார்.


இயேசுகிறிஸ்து ஐசுவரிய சம்பன்னராக இருந்தாலும், அவர் நம்மை ஐசுவரியவான்களாக ஆக்குவதற்காகத் தாமே தரித்திரரானார். அவர் தரித்திரராகயிருக்கிறபடியினால் பிறருக்கு உதவிபுரிய அவரிடத்தில் ஒன்றும் இல்லை. ஆனாலும் இயேசுகிறிஸ்து ஏதாவது ஒரு வழியில்  பிறருக்கு உதவி செய்துகொண்டு வருகிறார்.  அவரால் பொருள் உதவி செய்யமுடியாமற் போனாலும் மற்ற நற்கிரியைகளைத் தரித்திரருக்குச் செய்கிறார். அவர்களுடைய வியாதிகளை சொஸ்தமாக்குகிறார். தரித்திரருக்கு பிசாசின் பிடியிலிருந்து விடுதலையைக் கொடுக்கிறார். 


யூதருக்கு இது பண்டிகைக் காலம். இதுபோன்ற பண்டிகைக்காலத்தில் யூதர்கள் தரித்திரருக்கு உதவிபுரிவது வழக்கம். இயேசுகிறிஸ்து பஸ்காவை ஆசரிக்கும்போது, ஒருவேளை     தரித்திரருக்கு உதவி செய்வதற்காக எதையாவது வாங்கிக்கொண்டு வரச்சொல்லியிருக்கலாம். தம்மிடத்திலுள்ள கொஞ்சம் அளவு பொருளாதாரத்தை இயேசுகிறிஸ்து தமக்காக மாத்திரம் என்று வைத்துக்கொள்ளாமல், பிறருக்கும் உதவிபுரிய அதை செலவுபண்ணுகிறார். தேவன் நம்மிடத்தில் ஐசுவரியத்தைக் கொடுத்திருப்பாரென்றால்,   அவை முழுவதையும் நமக்காகவே செலவு பண்ணவேண்டுமென்று பேராசைப்படக்கூடாது.  ஏழைகளுக்கு உதவிபுரிய கர்த்தர் நமக்கு ஒரு வாய்ப்புக்கொடுத்திருக்கிறார் என்று நினைத்து  தரித்திரருக்கு சந்தோஷமாய் உதவிபுரியவேண்டும். 


இராக்காலம்


அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது (யோவா 13:30).


இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாக யூதாஸ்காரியோத்து விரைந்து செயல்படுகிறான். தன்னுடைய சதிஆலோசனையை நிறைவேற்றுவதற்கு முன்னேறிப்போகிறான். அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போகிறான். மற்ற சீஷர்கள் மத்தியில் தன்னுடைய காட்டிக்கொடுக்கும் சுபாவம் இன்னும் அதிகமாய் வெளிப்பட்டுவிடுமோ என்று பயந்து, ஒருவேளை அவன் விரைவாக அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போயிருக்கலாம். இயேசுகிறிஸ்துவின் பிரசன்னத்தைவிட்டும், அப்போஸ்தலருடைய ஐக்கியத்தைவிட்டும் யூதாஸ்காரியோத்து விலகிப்போகிறான். 


இயேசுகிறிஸ்து யூதாஸ்காரியோத்தைத் தம்முடையஐக்கியத்திலிருந்து வெளியேற்றவில்லை. அவனை விலக்கி வைக்கவில்லை. அவன் தானாகவே விலகிக்கொள்கிறான். தன்னுடைய வஞ்சகமான எண்ணத்தைச் செயல்படுத்துவதற்காக புறப்பட்டுப்போகிறான். சாத்தான் ஒருவனுக்குள் புகும்போது அவன் அங்கு சும்மாயிருக்கமாட்டான். தன்னுடைய தீயசெயல்களைச் செயல்படுத்துவதற்கு அவனைத் தூண்டுவான். யூதாசுக்குள்  சாத்தான் புகுந்திருக்கிறான். தன்னுடைய சதித்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அவனை அவசரப்படுத்துகிறான். 


இயேசுகிறிஸ்துவைவிட்டு யூதாஸ்காரியோத்து புறப்பட்டுப் போகும்போது அது இராக்காலமாயிருக்கிறது. அது இரவுவேளையாகயிருந்தாலும் யூதாசுக்கு அது பிரச்சனையாகயில்லை. இரவின் குளிரும் இருளும் அவனைப் பாதிக்கவில்லை. அவன் எப்படியாவது பாவம் செய்துவிடவேண்டுமென்று  துணிகரமாகயிருக்கிறான். சாத்தானுடைய பிள்ளைகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பாவமான காரியங்களைச் செய்வார்கள். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் குளிருக்கும், இரவுக்கும் பயந்துவிடக்கூடாது. யூதாஸ்காரியோத்து சாத்தானுக்காக சுறுசுறுப்பாக செயல்படுகிறான். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம், நம் ஆண்டவருக்காக சுறுசுறுப்பாக செயல்படவேண்டும். கிறிஸ்துவின்     ஊழியத்தைச் செய்கிறவர்களிடத்தில் சோர்வும் கோழைத்தனமும் இருக்கக்கூடாது.


பிசாசின் பிள்ளைகள் தங்களுடைய பாவமான கிரியைகளில் ஆர்வமுள்ளவர்களாகவும் வேகமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். கர்த்தருக்காக நாம் ஊழியம் செய்யும்போது நம்மிடத்திலும் ஆர்வமும் வேகமும் இருக்கவேண்டும். யூதாஸ்காரியோத்து புறப்பட்டுப்போவது இரவுவேளையாகயிருப்பதினால் அவனை யாரும்  கண்டுபிடிக்க முடியாது. இரவு அவனை மூடிமறைத்துக்கொள்கிறது. யாருக்கும் தெரியாமல் தனியாகப் புறப்பட்டுப்போகிறான். துன்மார்க்கமான செய்கைகளைச் செய்கிறவர்கள் ஒளியைப் பகைப்பார்கள். இருளை நேசிப்பார்கள். தங்களுடைய கிரியைகள் வெளிப்பட்டுவிடும் என்று நினைத்து        அவர்கள்  ஒளியில் ஒன்றையும் செய்யமாட்டார்கள். அவர்கள் இருளின் பிள்ளைகளாகயிருக்கிறார்கள். இருளில் கிரியை செய்கிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமோ ஒளியின் பிள்ளைகளாகயிருக்கிறோம். வெளிச்சத்தில் கிரியை செய்கிறோம்.


தேவனுடைய மகிமை யோவா 13:31-35


மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார்


அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்  (யோவா 13:31).


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரோடு பந்தியில் அமர்ந்திருக்கும்போது, அவர்களோடு உரையாடிக்கொண்டிருக்கிறார். இந்த வசனத்திலிருந்து, பதிநான்காம் அதிகாரம் கடைசி வரையிலும் இந்த உரையாடல் தொடருகிறது. யூதாஸ்காரியோத்து இயேசுகிறிஸ்து கொடுத்த துணிக்கையை வாங்கினவுடனே பந்தியைவிட்டுப் புறப்பட்டுப்போகிறான். அவன்போன பின்பு இயேசுகிறிஸ்து இந்த உரையாடலை ஆரம்பிக்கிறார். ஜனங்கள் வரங்களை உடையவர்களுக்கும், உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறவர்களுக்கும் செவிகொடுப்பார்கள். அப்படிப்பட்ட அந்தத்திலுள்ளவர்கள் தங்களுக்குக் கிடைத்திருக்கிற சிலாக்கியத்தைப் பயன்படுத்தி ஜனங்களுக்கு நன்மை செய்யவேண்டும். அவர்கள் பிறருக்கும் நன்மை செய்யுமாறு அவர்களை வழிநடத்தவேண்டும்.


இயேசுகிறிஸ்து தம்முடைய மரணத்தையும்  பாடுகளையும் குறித்த இரகசியத்தைத்  தம்முடைய சீஷர்களிடம் கூறுகிறார். இதுவரையிலும் இந்தச் சத்தியங்கள் சீஷருக்கு  மறைபொருளாகவே இருந்திருக்கிறது. இதன் பொருளை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. யூதாஸ்காரியோத்து தம்மைவிட்டுப் புறப்பட்டுப்போகும் வரையிலும்  இயேசுகிறிஸ்து தம்முடைய உரையாடலை ஆரம்பிக்கவில்லை. பொதுவாக நல்ல உரையாடல் நடைபெறுவதற்கு துன்மார்க்கர் தடையாகயிருப்பார்கள். அவர்கள் அந்த இடத்தைவிட்டுப் போனால்தான் அங்கு உரையாடல் நல்லமுறையில் நடைபெறும். யூதாஸ்காரியோத்து இயேசுகிறிஸ்துவை விட்டுப் புறப்பட்டுப்போகிறான். அவன் புறப்பட்டுப்போனபின்பு ""இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார்'' என்று  இயேசு கூறுகிறார்.


இயேசுகிறிஸ்து தம்முடைய பிள்ளைகளைச் சுத்திகரிப்பதினால்  மகிமைப்படுகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சபையிலுள்ள கறைகளையும் அழுக்கையும் பாவங்களையும் அகற்றிப்போடுவதினால்  மகிமைப்படுகிறார். யூதாஸ்காரியோத்து இயேசுவைவிட்டு விரைவாகப் போகிறான். இயேசுகிறிஸ்துவை மரணஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதில் யூதாஸ் தன் பங்கை செய்வதற்கு  விரைந்து போகிறான். ஆகையினால் ""இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார்'' என்று இயேசு கூறுகிறார். இந்த வாக்கியத்திற்கு  ""இப்பொழுது மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுகிறார்'' என்று பொருள் கூறலாம்.


இயேசுகிறிஸ்து தம்முடைய பாடுகளைக் குறித்து சீஷர்களுக்கு உபதேசம்பண்ணுகிறார்.  அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கக்கூடிய வார்த்தைகளையே பேசுகிறார். இயேசுகிறிஸ்து தாமே தம்முடைய பாடுகளில் மகிமைப்படுகிறார்.  மனுஷகுமாரன் மிகப்பெரிய பாடுகளைச் சந்திக்கப்போகிறார். அவருடைய சிநேகிதர்களும்  அவருக்கு விரோதமாக எழும்புகிறார்கள்.  அவருடைய சீஷரில் ஒருவனே அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறான். அவருடைய சத்துருக்கள் அவரைக் கொலைசெய்ய வகைதேடிக்கொண்டிருக்கிறார்கள்.  ஆயினும் இவற்றுக்கு மத்தியிலும்   ""இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார்'' 


இயேசுகிறிஸ்து இப்போது சாத்தான்மீதும், அவனுடைய அந்தகார சக்திகள் அனைத்தின்மீதும் ஜெயம்பெறப்போகிறார். தம்முடைய ஜனங்களை சாத்தானின் பிடியிலிருந்து மகிமையாக விடுதலைபண்ணுவதற்கு, என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்யப்போகிறார். தம்முடைய மரணத்தின் மூலமாக இயேசுகிறிஸ்து மனுஷரை தேவனோடு  ஒப்புரவாக்கப்போகிறார். இதன் மூலமாக மனுஷருக்கு நித்திய நீதியும், நித்திய சந்தோஷமும் கிடைக்கப்போகிறது.


நீடிய பொறுமைக்கும், சுயவெறுப்புக்கும் இயேசுகிறிஸ்து தம்மைத்தாமே மகிமையுள்ள முன்மாதிரியாக ஏற்படுத்தியிருக்கிறார். அவர் சிலுவையின் பாடுகளை அனுபவிப்பது அவருடைய நீடியபொறுமைக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறது. அது மாத்திரமல்ல. மனுஷருடைய ஆத்துமாக்களின்மேல் அவர் பிரியம் வைத்திருக்கிறபடியினால், அந்த ஆத்துமாக்களை இரட்சிப்பதற்காகத் தம்முடைய ஜீவனையே மீட்பின் கிரயமாகச் செலுத்துகிறார்.  இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணமும் பாடுகளும் உலகத்தாருடைய மனதில் ஆச்சரியமாகயிருக்கிறது. இதைப் பார்க்கிறவர்களும், கேள்விப்படுகிறவர்களும் இயேசுகிறிஸ்துவைக்குறித்து பிரமிக்கிறார்கள். 


இயேசுகிறிஸ்து பல அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்திருக்கிறார். இவற்றின் மூலமாக, இயேசுகிறிஸ்து ஏற்கெனவே மகிமையடைந்திருக்கிறார். ஆனாலும் இப்போதோ தம்முடைய பாடுகளின் மூலமாகவும் தாம் மகிமைப்படப்போவதாக இயேசுகிறிஸ்து  சாட்சியாக அறிவிக்கிறார். இயேசுகிறிஸ்துவின் மற்ற மகிமைகள் எல்லாவற்றையும்விட, அவர்  சிலுவை மரணத்தின் மூலமாகவும் தாம் அனுபவித்த பாடுகள் மூலமாகவும் அடைந்த மகிமையே பிரதான மகிமையாகயிருக்கிறது.


தேவன் அவரை மகிமைப்படுத்துவார்


தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாய் அவரை மகிமைப்படுத்துவார் (யோவா 13:32).  


இயேசுகிறிஸ்துவின் பாடுகளில் பிதாவாகிய தேவனும் மகிமைப்படுகிறார். இயேசுகிறிஸ்துவின் பாடுகள் தேவனுடைய நீதியை உறுதிபண்ணுவதற்குப் போதுமானதாகயிருக்கிறது. கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் தேவன் தம்முடைய நீதியைக்குறித்து திருப்தியடைந்திருக்கிறார். ஆகையினால் கிறிஸ்துவின் பாடுகளில் தேவனும் அவரில் மகிமைப்படுகிறார். இயேசுகிறிஸ்துவின் பாடுகள் அவருடைய பரிசுத்தத்தையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. தேவன் அன்பாகவேயிருக்கிறார். தம்முடைய அன்பினால்  இயேசுகிறிஸ்து  சிலுவைப்பரியந்தம் தம்மைத் தாழ்த்தி, தம்முடைய ஜீவனையே நமக்காக ஒப்புக்கொடுத்திருக்கிறார்.


இயேசுகிறிஸ்துவின் பாடுகளினால் பிதாவாகிய தேவன் அவரில் மகிமைப்படுகிறார். தேவன் அவரில் மகிமைப்பட்டிருப்பதினால், பிதாவாகிய தேவன் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை தம்மில் மகிமைப்படுத்துகிறார்.  பிதா தம்மை மகிமைப்படுத்துவார் என்று இயேசுகிறிஸ்து மிகுந்த நிச்சயத்தோடிருக்கிறார். பாதாளமும் பூமியும் இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாக எழும்பிற்று. ஆனால் தேவனோ இயேசுகிறிஸ்துவுக்கு மகிமை உண்டாகும் வண்ணமாக கிறிஸ்துவின் பாடுகளை அனுமதித்திருக்கிறார். இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்கும்போது அற்புதங்களும் அடையாளங்களும் அதோடுகூட நடைபெற்றன.  இதைப்பார்த்த ஜனங்கள் ஆச்சரியமடைந்தார்கள். இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்தவர்கள்கூட ""அவர் தேவனுடைய குமாரன்'' என்று சாட்சியாக அறிவித்தார்கள். இவ்வாறாக இயேசுகிறிஸ்துவின் பாடுகளினால்  பிதாவாகிய தேவன் அவரை மகிமைப்படுத்துகிறார். 


இயேசுகிறிஸ்து தம்மைத்தாமே மகிமைப்படுத்துகிறார். கிறிஸ்து தமக்குத் தாமே மகிமையுள்ளவராகயிருக்கிறார். தம்முடைய ஆள்தத்துவத்தை இயேசுகிறிஸ்து மகிமைப்படுத்துகிறார். இயேசுகிறிஸ்து        மரித்து  மூன்றாம் நாளில் விரைவாக உயர்த்தெழுந்ததினால் அவருக்கு மகிமை உண்டாயிற்று. இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்கும்போதும், சிலுவையில் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கும்போதும், அவர் தமக்கு முன்பாக நியமிக்கப்பட்டிருந்த சந்தோஷத்தையும் மகிமையையும் நோக்கிப்பார்க்கிறார். இந்த மகிமை பெரிதான மகிமையாகயிருக்கிறது. அது மாத்திரமல்ல. இந்த மகிமை வெகுதூரத்திலில்லை. மிகவும் அருகாமையிலிருக்கிறது. இயேசுகிறிஸ்து சீக்கிரமாய் மகிமையடையப்போகிறார். பிதாவானவர் சீக்கிரமாய் அவரை மகிமைப்படுத்துவார்.    


இந்த உலகத்தில் நாம் எவ்வளவுதான் நற்கிரியைகளைச் செய்தாலும், நம்மை அதற்காக யாரும் உடனடியாகப் பாராட்டமாட்டார்கள். நம்முடைய நற்செய்கைகளை பலர் மறந்தேவிடுவார்கள். இது உலகப்பிரகாரமான சுபாவம். ஆனால் பிதாவாகிய தேவனோ இயேசுகிறிஸ்துவின் பாடுகளுக்காகவும் மரணத்திற்காகவும் அவரை சீக்கிரமாய் மகிமைப்படுத்துவார். காலதாமதம் இருக்காது. பிதாவானவர் குமாரனை மகிமைப்படுத்த மறந்துபோய்விடமாட்டார். 


இயேசுகிறிஸ்துவுக்கு அவருடைய பாடுகளினாலும் மகிமை உண்டாயிற்று. அவருடைய பாடுகளிலும் மகிமை உண்டாயிற்று.  பிதாவாகிய தேவன் தம்மில் மகிமைப்படுவதைக் குமாரனாகிய இயேசுகிறிஸ்து காண்கிறார். ஆகையினால் பிதாவானவர் குமாரனைத் தம்மில் சீக்கிரமாய் மகிமைப்படுத்துவார். தேவனுடைய நாம மகிமைக்காக ஊழியம் செய்கிறவர்களை  கர்த்தர் கனப்படுத்துவார். அவர்கள் மகிமையின் சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்வார்கள். தாங்கள் பாடுகளை அனுபவித்தாலும், இதன் மூலமாகக்  கர்த்தர் மகிமைப்படுகிறார்  என்பதை நினைத்துப் பார்த்து, கர்த்தருடைய ஊழியக்காரர்கள் சந்தோஷமாயிருப்பார்கள். இதுவே கர்த்தர் இவர்களுக்குக் கொடுக்கிற ஆசீர்வாதம். கர்த்தரை மகிமைப்படுத்துகிறவர்கள் அவரோடுகூட மகிமைப்படுத்தப்படுவார்கள். 


இன்னும் கொஞ்ச காலம்


பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்              (யோவா 13:33).  


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரோடு உரையாடிக்கொண்டிருக்கும்போது அவர்களுடைய உள்ளத்தைத் தொடும்விதமாக  ஒரு சத்தியத்தை அறிவிக்கிறார். ஆனாலும்  சீஷர்களுடைய இருதயம் இயேசுகிறிஸ்துவின் வார்த்தையை உடனே புரிந்துகொள்ள முடியாதபடிக்கு மந்தமாயிருக்கிறது. 


இயேசுகிறிஸ்து அவர்களை ""பிள்ளைகளே'' என்று அழைக்கிறார். இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் இன்னும் கொஞ்சக்காலம் மாத்திரமே தம்முடைய சீஷர்களோடு இருக்கப்போகிறார். அவர் தம்முடைய சீஷர்களைப் பார்க்கும்போது, அவர்களைச் சிறுபிள்ளைகளாகவே பார்க்கிறார்.  அவர்கள் விசுவாசத்தில் பலவீனமாகயிருக்கிறார்கள். அவர்கள் பிள்ளைகளாகயிருப்பதினால் இயேசுகிறிஸ்துவின் பாதுகாப்பும், பராமரிப்பும், ஆதரவும், அரவணைப்பும் அவர்களுக்கு இன்னும் தேவைப்படுகிறது. இதையெல்லாம் அறிந்திருக்கிறவராக இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைப்பார்த்து ""பிள்ளைகளே இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனே கூடயிருப்பேன்'' என்று கூறுகிறார். 


இயேசுகிறிஸ்து தங்களோடிருக்கிற காலத்தை சீஷர்கள் ஆதாயப்படுத்திக்கொள்ளவேண்டும். நம்முடைய ஆத்துமாக்களின் வளர்ச்சிக்கு ஆவிக்குரிய போஜனம் கிடைக்கும்போது அவற்றைப் பெற்றுக்கொள்ளவேண்டும். ஆவிக்குரிய உதவிகள் எப்போதெல்லாம் நமக்குக் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவற்றைப் பெற்றுக்கொண்டு, நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சியடையவேண்டும். 


சீஷர்கள் இதுவரையிலும் இயேசுகிறிஸ்துவோடு கூடவேயிருந்திருக்கிறார்கள். தம்முடைய பிரத்தியட்சமான சரீரத்தில் இயேசுகிறிஸ்துவும் சீஷர்களோடு கூடவேயிருக்கிறார். சீஷர்கள்  பிள்ளைகளாகயிருப்பதினால், இயேசுகிறிஸ்துவின் சரீரப்பிரகாரமான பிரசன்னம் தங்களோடு எப்போதும் கூடவேயிருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. இயேசுகிறிஸ்து அவர்களைவிட்டுப் போனபின்பு இவர்கள் ஏமாந்துபோய்விடக்கூடாது. இயேசுகிறிஸ்துவின் சரீரப்பிரகாரமான பிரசன்னம் தங்களோடு கூடயிராவிட்டாலும், தாங்கள் எப்படி வாழவேண்டுமென்று சீஷருக்குத் தெரிந்திருக்கவேண்டும். இப்போது பிள்ளைகளாகயிருக்கிற சீஷர்கள், எப்போதுமே  சிறுபிள்ளைகளாகயிருக்க முடியாது. பிள்ளைப்பருவத்தைக் கடந்து வாலிபப்பருவத்திற்கு வளர்ச்சி பெறுவதுபோல,  இவர்களும் வளர்ச்சி பெறவேண்டும். இயேசுகிறிஸ்து தங்களோடு கூடயில்லாமலேயே, இந்த உலகத்தில் இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்வதற்கு  சீஷர்கள் பயிற்சி பெற்றுக்கொள்ளவேண்டும். 




Post a Comment

0 Comments