பாடுகளின் வாரம் செவ்வாய்க்கிழமை நிகழ்வு -9

 பாடுகளின் வாரம்

செவ்வாய்க்கிழமை நிகழ்வு -9


யூதாஸ்காரியோத்து


அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்          (மத் 26:14.-16). 


யூதாஸ்காரியோத்தும் ஆசாரியரும்


அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்: (மத் 26:14).


இயேசுகிறிஸ்துவின் சிரசின்மீது ஒரு ஸ்திரீ பரிமள தைலத்தை ஊற்றி அவரை மகிமைப்படுத்துகிறாள். இந்த மகிமையான சம்பவத்தை தொடர்ந்து இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவன் அவரை காட்டிக்கொடுக்க முயற்சிக்கும் துயரசம்பவம் நடைபெறுகிறது. கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் மத்தியில் நல்லோரும் பொல்லாதவர்களும் கலந்திருக்கிறார்கள். 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் யூதாஸ்காரியோத்தும் ஒருவன். பன்னிருவரில் ஒருவன் என இவன் இங்கு அழைக்கப்படுகிறான். சீஷர்கள் பெருகினபோது அவர்கள் மத்தியில் பிரச்சனைகளும் பெருகிற்று.  சீஷர்களில் சிலர் கர்த்தரிடத்தில் பயபக்தியாக இருப்பதற்குப் பதிலாக, தங்களுடைய சுயநலன்களை தேட ஆரம்பித்துவிடுகிறார்கள்.  சீஷர்களுக்குள்ளே பிரச்சனை உண்டுபண்ணுகிறவர்களும், அவமானம் உண்டுபண்ணுகிறவர்களும் இருக்கிறார்கள். இயேசுவுக்கு பன்னிரண்டு சீஷர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் துரோகியாக இருக்கிறான். இவன்

 பிசாசுக்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிடுகிறான். எல்லா பரிபூரணமும் பரலோகத்தில்தான் காணப்படும்.  இந்த பூமியில் குறைபாடுகள் உண்டு. மனுஷர்கள்  குறைபாடுடையவர்கள். எல்லா சமுதாயத்திலும்  ஏதாவது ஒரு குறை இருக்கும். எதுவுமே பரிபூரணமாகயிராது. 


இயேசுகிறிஸ்து தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் கூடவே அழைத்துச் செல்கிறார்.  மற்ற ஜனங்களைவிட சீஷர்கள் மாத்திரமே இயேசுவுக்கு அதிக நெருக்கமாக அருகாமையில் இருக்கிறார்கள். ஆயினும் அவர்களில் ஒருவன் இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுக்கிறான். ஒருவனுக்குள் பிசாசு புகுந்துவிடும்போது அவனுக்குள் அன்பு, பயபக்தி, நன்றிவுணர்வு ஆகிய எதுவும் இராது. பிசாசின் கிரியைகளை  தாராளமாக செய்வான். 


எனக்கு என்னகொடுக்கிறீர்கள்


நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள் 

(மத் 26:15).


பிசாசு யூதாஸ்காரியோத்தை பிரதான ஆசாரியனிடம் வழிநடத்துகிறது. இவனும் பிசாசுக்கு கீழ்ப்படிந்து பிரதான ஆசாரியனிடம்  போகிறான். இயேசுவை அவர்களுக்கு காட்டிக்கொடுப்பதற்கு தனக்கு என்ன கொடுக்கப்படும் என்று துரோகத்திற்கு விலை பேசுகிறான். ஆசாரியர்கள் யூதாஸ்காரியோத்தை தேடிப்போகவில்லை. அவர்கள் அவனை தங்களிடம் அழைக்கவில்லை. இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுக்குமாறு ஆசாரியர்கள் அவனிடம் கேட்கவுமில்லை. இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவன் அவரை காட்டிக்கொடுப்பான் என்னும் நம்பிக்கை அவர்களிடத்தில் இல்லை. ஆசாரியர்கள் எதிர்பாராத அதிர்ச்சியான காரியத்தை, இயேசுவின் சீஷர்களில் ஒருவன் செய்யத் துணிகிறான். 


இயேசுகிறிஸ்துவை ஆசாரியர்களுக்கு காட்டிக்கொடுக்க யூதாஸ்காரியோத்து முன்வருகிறான். எந்தவித குழப்பமுமில்லாமல், கலகமுமில்லாமல், மிகவும் அமைதியான முறையில் இயேசுகிறிஸ்துவை கைதுபண்ணுவதற்கு  தான் உதவிபுரிவதாக யூதாஸ் கூறுகிறான். பிரதானஆசாரியரும், வேதபாரகரும், ஜனத்தின் மூப்பரும் இயேசுவை  தந்திரமாய் பிடித்து கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் யூதாஸ்காரியோத்து அவர்களுக்கு இயேசுவை பிடிக்க உதவிபுரிய முன்வருகிறான். 


பண்டிகை நாளில் இயேசுவை பிடித்தால்  ஜனங்களுக்குள் கலகம் உண்டாகும் என்று ஆசாரியர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆகையினால் அப்படி செய்யலாகாது என்று தீர்மானம்பண்ணியிருக்கிறார்கள். அவர்  தனியாக இருக்கும்போது அவரை ரகசியமாக பிடிக்க வகைதேடிக்கொண்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து எங்கு, எப்போது தனியாக இருப்பார் என்று ஆசாரியர்களுக்குத் தெரியாது. அது சீஷர்களுக்கு மாத்திரமே தெரியும். தனக்கு தெரிந்த இந்த உண்மையை யூதாஸ்காரியோத்து  ஆசாரியரிடம் கிரயத்திற்கு விற்க முன்வருகிறான். 


யூதாஸ்காரியோத்து பிசாசினால் வழிநடத்தப்படுகிறான். பிசாசின் கிரியைகள் எப்போதுமே பரபரப்பாக இருக்கும். அவனுடைய கிரியைகளை அங்கீகரித்துக்கொள்ள துன்மார்க்கர்கள் எப்போதும் ஆயத்தமாக இருப்பார்கள். ஒருவனை மரணப்படுக்கையிலிருந்து எழுப்புவதற்கு உதவிபுரிந்தால்கூட ஜனங்கள் அதை அங்கீகரிக்கமாட்டார்கள். ஆனால் பிசாசின் கிரியைகளை செய்ய முன்வந்தால் ஜனங்கள் அதை அங்கீகரித்து ஆர்ப்பரிப்பார்கள்.


பிரதான ஆசாரியரும், வேதபாரகரும், ஜனத்தின் மூப்பரும் அதிகார ஸ்தானத்தில் இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை பிடித்து அவரை கொலைசெய்ய அவர்களால் முடியும். ஆயினும் அவரை காட்டிக்கொடுப்பதற்கு அவருடைய சீஷர்களில் ஒருவன் அவர்களுக்கு தேவைப்படுகிறான். யூதாஸ்காரியோத்து அவர்களுக்கு உதவிபுரிய முன்வருகிறான். 


நான் இயேசுவை உங்களுக்கு காட்டிக்கொடுக்கிறேன் என்று கூறுகிறான். இயேசுகிறிஸ்துவை கைதுபண்ணி விசாரித்தபோது அவருக்கு விரோதமாக பொய்ச்சாட்டி தேடுகிறார்கள். யூதாஸ்காரியோத்து  இயேசுவுக்கு விரோதமாக பொய்ச்சாட்சி கூற முன்வரவில்லை. சீஷர்கள் மத்தியில் இயேசு தம்முடைய நற்சாட்சியை எல்லா வழிகளிலும் காத்து வந்திருக்கிறார். யூதாஸ்காரியோத்து அவரை காட்டிக்கொடுக்க முன்வந்தாலும், அவருக்கு விரோதமாக பொய்ச்சாட்சி கூறமுன்வரவில்லை. 


 இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுத்தால் தனக்கு என்ன கொடுப்பீர்கள் என்று யூதாஸ்காரியோத்து பிரதான ஆசாரியரிடமும், வேதபாரகரிடமும் ஜனத்தின் மூப்பரிடமும் கேட்கிறான். இயேசுவை காட்டிக்கொடுப்பதன் மூலமாக பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறான். பணத்திற்காகவே அவன் தன் ஆண்டவரை காட்டிக்கொடுக்கிறான். யூதாஸ்காரியோத்திற்கு இயேசுகிறிஸ்துவின்மீது விரோதம் எதுவுமில்லை. வெறுப்பு எதுவுமில்லை.  அவரோடு அவன் இதுவரையிலும் சண்டைபோட்டதுமில்லை. பணத்தின் மீதுள்ள ஆசையினாலேயே யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடுக்க முன்வருகிறான். பணம் யூதாசை துரோகியாக்கிற்று. 


யூதாஸ்காரியோத்திற்கு எல்லாம் இருக்கிறது. இருந்தும் ""நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்'' என்று கேட்கிறான். அவனுக்கு அப்பம் தேவையில்லை. வஸ்திரம் தேவையில்லை. அவனுக்கு தேவையானது அனைத்தையும் கொடுத்து இயேசுகிறிஸ்து அவனை பராமரித்து வருகிறார். ஆயினும் யூதாஸ்காரியோத்து தனக்கு உள்ளவற்றில் திருப்தியாகயில்லை. பேராசைப்படுகிறான். இந்த பேராசையினால் ""நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்'' என்று ஆசாரியரிடம் கேட்கிறான். அவனிடத்தில் பணத்திற்கு குறைவில்லை. ஆயினும் பணத்தாசை பிடித்தவனாக இருக்கிறான். பணத்தாசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது. 


பிரதான ஆசாரியரும், ஜனத்தின் மூப்பரும், வேதபாரகரும் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசை கொடுக்க உடன்படுகிறார்கள். நியாயப்பிரமாணத்தின்படி முப்பது வெள்ளிக்காசு  ஒரு அடிமைக்கு நிர்ணயம்பண்ணப்பட்டிருக்கும் கிரயமாகும் (யாத் 21:32). இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு அடிமையின் கிரயத்தை கொடுக்க முன்வருகிறார்கள். 

கிறிஸ்துவை அவர்கள் ஒரு அடிமையைப்போலவே மதிப்பிடுகிறார்கள். 


ஆசாரியர்கள் யூதாஸ்காரியோத்திற்கு முப்பது வெள்ளிக்காசை கொடுக்க உடன்பட்டு  அவற்றை அவனுக்கு கொடுக்கிறார்கள். வேலையை முடிப்பதற்கு முன்பாகவே அவனுக்கு கூலி கொடுக்கப்படுகிறது. அவனை வேறு பக்கம் செல்லவிடாமல் தங்கள் பக்கமாக வைத்துக்கொள்வதற்கு அவனுக்கு உடனடியாக கூலி கொடுத்துவிடுகிறார்கள். அவனை உற்சாகப்படுத்தி வேலையை சீக்கிரமாக முடிப்பதற்கு துரிதப்படுத்துகிறார்கள். 


காட்டிக்கொடுப்பதற்கு


அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான் (மத் 26:16).


முப்பது வெள்ளிக்காசை பெற்றுக்கொண்டவுடன், அதுமுதல் இயேசுவை காட்டிக்கொடுப்பதற்கு யூதாஸ்காரியோத்து சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறான். பாவம் செய்வதற்கு சமயம் பார்த்துக்கொண்டிருப்பது  மிகவும் பரிதாபமான காரியம். துன்மார்க்கர்கள் பாவமான காரியங்களை திட்டமிட்டு செய்வார்கள். அவர்களுடைய இருதயம் தீமையினால் நிறைந்திருக்கும். அவர்களுடைய கால்கள் தீமை செய்ய விரைந்தோடும்.      முப்பது காசை பெற்றுக்கொண்டாலும்,  யூதாஸ்காரியோத்திற்கு மனந்திரும்புவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் பிசாசு அவனை ஆளுகை செய்கிறான். முப்பது காசை பெற்றுக்கொண்டதினால் தன்னுடைய வார்த்தைக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று பிசாசு அவனை வஞ்சிக்கிறான். சொன்ன வார்த்தையை நிறைவேற்றவேண்டும் என்று சாத்தான் அவனுடைய உள்ளத்தில் வலியுறுத்துவதினால், தன் ஆண்டவரையே காட்டிக்கொடுப்பதற்கு

 யூதாஸ் சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறான். தான் செய்த தவற்றை உணர்ந்து மனந்திரும்புவதற்கு சமயம் பார்த்துக்கொண்டிருக்காமல், பாவம் செய்வதற்கு  சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறான்.




Post a Comment

0 Comments