பாடுகளின் வாரம் செவ்வாய்க்கிழமை நிகழ்வு -8

 

பாடுகளின் வாரம் செவ்வாய்க்கிழமை நிகழ்வு -8

இயேசுவின் சிரசின்மேல் அபிஷேகம்


இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர்போஜனபந்தியி-ருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்         (மத் 26:6,7).


அவருடைய சீஷர்கள் அதைக் கண்டு விசனமடைந்து: இந்த வீண்செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள் (மத் 26:8,9).


இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன்தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன் (மத் 26:10,11).


இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது. இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத் 26:12-13). 


இத்துடன் இயேசு கிறிஸ்துவின் பொதுவான ஊழியம் நிறைவு பெறுகிறது. அவருடைய பாடுகளின் காலம் இதிலிருந்து ஆரம்பமாகிறது. (மத் 26:1-27:66)


பஸ்கா பண்டிகை எகிப்தில் ஆரம்பமாயிற்று. எகிப்தியரின் தலைச்சன் பிள்ளைகள் சங்காரம் பண்ணப்பட்டபோது யூதர்கள் தங்கள் வீடுகளில் பஸ்கா பண்டிகையை ஆசரித்தார்கள். (யாத் 12) நிசான் மாதம் 14-ஆம் தேதி பஸ்கா பண்டிகை துவங்குகிறது. இத்துடன் புளிப்பில்லா அப்பப்பண்டிகையும் 8 நாட்களுக்கு நடைபெறும். எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்கள் விடுவிக்கப்பட்டதை நினைவுகூரும் விதமாக புளிப்பில்லா அப்பப்பண்டிகையை யூதர்கள் கொண்டாடினார்கள். (லேவி 23; யாத் 23:14)


""சிலுவையில் அறையப்படுதல்''  என்னும் வாக்கியத்திற்கு  சிலுவை மரத்தில் ஒரு நபரை ஆணிகளால் அறைதல் என்று பொருள். புதிய ஏற்பாட்டில் 46 இடங்களில் இந்த வாக்கியம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பழங்காலத்தில் பொனீஷியர்களிடம் குற்றவாளிகளைச் சிலுவையில் அறைந்து கொல்லும் வழக்கம் இருந்தது. கிரேக்கரும் ரோமாபுரியாரும் அவர்களிடமிருந்து இந்தப் பழக்கத்தை தங்கள் நாடுகளுக்கும் கொண்டு வந்தார்கள். மிகவும் கொடிய குற்றவாளிகளையும் அடிமைகளையும் துன்புறுத்திக் கொல்வதற்காகச் சிலுவையில் அறையும் தண்டனையைக் கொடுத்தார்கள். கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டான்டைன்  காலம்வரையிலும் சிலுவையில் அறையும் வழக்கம் இருந்தது.


சிலுவையில் அறைதல்


    1. உலகத்தின் பாவங்களுக்காக இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறைதல்  

(மத் 26:2; மத் 27:22-44; 1கொரி 1:23; கலா 3:13; 1பேதுரு 2:24)


    2. இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவோரை சிலுவையில் அறைதல் 

(மத் 23:34; யோவான் 21:18)


    3. நமது பழைய மனுஷனைக் கிறிஸ்துவோடு சிலுவையில் அறைதல்

 (ரோமர் 6:6;  கலா 2:20)


    4. பாவத்தைச் சிலுவையில் அறைதல்  (கலா 2:20; கலா 5:24)


    5. விசுவாசிகளுக்கு உலகமும், உலகத்திற்கு விசுவாசிகளும் சிலுவையில் அறையப் படுதல்

 (கலா 6:14)


    6. மறுதலித்து போனவர்கள் தேவனுடைய குமாரனை மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறார்கள். 

(எபி 6:6)

காய்பா அன்னாவின் மருமகன்.  (யோவான் 18:13) இயேசு கிறிஸ்துவைக் குறித்துத் தீர்க்கதரிசனம் கூறியவன். (யோவான் 11:49-51; யோவான் 18:14) இயேசு கிறிஸ்துவின் வழக்கை விசாரித்தவன்.  பேதுருவின் வழக்கையும், மற்ற அப்போஸ்தலர்களின் வழக்குகளையும் விசாரித்தவன். (அப் 4:1-22) இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்து இரண்டு வருஷங்களுக்குப்பின்பு விட்டேலியஸ்   என்பவன் சீரியாவின் ஆளுநரானான். இவன் பிலாத்துவையும், காய்பாவையும் பதவியிலிருந்து அகற்றிவிட்டான். இயேசு கிறிஸ்துவைக் கொலைசெய்ததற்காக மனச்சாட்சியில் குத்தப்பட்ட காய்பா  கி.பி. 35-ஆவது வருஷத்தில் தற்கொலை செய்து கொண்டு மரித்துப்போனான் என்று யோசபஸ் என்னும் திருச்சபை வரலாற்று ஆசிரியர் எழுதியிருக்கிறார்.


பரிமளதைலம்


இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர்போஜனபந்தியி-ருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்

 (மத் 26:6,7). 


இயேசுகிறிஸ்து பெத்தானியாவில் இருக்கிறார். இந்த ஊர் எருசலேமுக்கு மிகவும் அருகாமையில் இருக்கிறது. குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இயேசுவும் அவருடைய சீஷர்களும் இருக்கிறார்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஏராளமான குஷ்டரோகிகளை சுத்தப்படுத்தியிருக்கிறார். அவர்களில் இந்த சீமோனும் ஒருவனாக இருக்கலாம். தன்னை குணப்படுத்தியதற்காக, இயேசுகிறிஸ்துவுக்கு சீமோன் தன் நன்றியை தெரிவிக்கும் வண்ணமாக, அவரை தன்னுடைய வீட்டில் வரவேற்று உபசரிக்கிறான். 


இயேசுகிறிஸ்துவின் சிரசின்மேல் தைலத்தை ஊற்றி அபிஷேகம்பண்ணுகிற ஸ்திரீ  மார்த்தாள், லாசரு ஆகியோரின் சகோதரியாக இருக்கலாம். இவள் விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியை கொண்டு வருகிறாள். இயேசுகிறிஸ்து போஜன பந்தியில் இருக்கும்போது அந்த தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றுகிறாள். இது ஒரு புது மாதிரியான அபிஷேகம். சீஷர்களுக்கு இது ஒரு விநோத அனுபவம். ஆயினும் யூதர்கள் மத்தியில்  ஒரு நபரை இவ்வாறு அபிஷேகம் பண்ணுவது  அவரை அதிகமாக கனப்படுத்துவதை குறிக்கிறது. 


நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மேசியாவாக இருக்கிறார். மேசியா என்னும் பெயருக்கு அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று பொருள். பிதாவினால் அபிஷேகம்பண்ணப்பட்டவர் இங்கு தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படுகிறார். இந்த ஸ்திரீ இயேசுகிறிஸ்துவின்மீது தான் வைத்திருக்கும் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துகிறாள். 


இயேசுகிறிஸ்துவின் சிரசின்மேல் தைலத்தை ஊற்றுகிற ஸ்திரீ மரியாள் அல்ல என்றும், இவள் வேறொரு ஸ்திரீ என்று வேதபண்டிதர்களில் சிலர் கூறுகிறார்கள். ஒரு சமயம் இயேசுகிறிஸ்து பரிசேயர் வீட்டிலே  பந்தியிருக்கையில், பாவியாகிய ஒரு ஸ்திரீ, இயேசுகிறிஸ்துவினுடைய பாதங்களின் அருகே  பின்னாக நின்று  அழுதுகொண்டு, அவருடைய பாதங்களை தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தை பூசுகிறாள் (லூக் 7:38,47). குஷ்டரோகியாயிருந்த

 சீமோன் வீட்டிலே இயேசுகிறிஸ்துவினுடைய சிரசின்மேல் தைலத்தை ஊற்றியது இந்த ஸ்திரீயே என்று  வேதபண்டிதர்களில் சிலர் கூறுகிறார்கள். 


இயேசுகிறிஸ்துவின்மீது  ஒருவர் மெய்யாக அன்புகூரும்போது, அவர் இயேசுவினிடத்தில் சும்மா வரமாட்டார். தன்னிடமுள்ள விலையேறப்பெற்றதை அவருக்கு காணிக்கையாக கொண்டுவருவார். அவருக்கு  எதை காணிக்கையாக கொடுத்தாலும் தன்னுடைய காணிக்கை போதுமானதாகயிராது  என்னும் உணர்வு அவருடைய உள்ளத்தில் இருக்கும். 


இயேசுகிறிஸ்து கடைசி வாரத்தில் இரண்டு  முறை அபிஷேகம் பண்ணப்படுகிறார். அதன் விவரம் வருமாறு : 


    1. லாசருவின் வீட்டில் - பஸ்காவிற்கு ஆறு நாட்களுக்கு முன்பு (யோவான் 12:1-8)


    2. குஷ்டரோகியாகிய சீமோனின் வீட்டில் - பஸ்காவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு 

(மத் 26:7-13; மாற்கு 14:3-9)


வீண் செலவு என்னத்திற்கு


அவருடைய சீஷர்கள் அதைக் கண்டு விசனமடைந்து: இந்த வீண்செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள் 

(மத் 26:8,9). 


இயேசுகிறிஸ்துவின் சிரசின்மேல் அந்த ஸ்திரீ தைலத்தை ஊற்றுவதை அங்கு அவரோடு போஜன பந்தியிருக்கும் சீஷர்கள் கண்டு விசனமடைகிறார்கள். இந்த வீண் செலவு என்னத்திற்கு என்று கேள்வி கேட்கிறார்கள்.  இந்த ஸ்திரீ இயேசுவின்மீது அளவுக்கு அதிகமாக அன்பு வைத்து, அளவுக்கு அதிகமாக  செலவு செய்கிறாள் என்பது சீஷர்களுடைய குற்றச்சாட்டு. இந்த ஸ்திரீ இயேசுவின் மேலுள்ள அன்பினால் கொண்டு வந்த காணிக்கையை சீஷர்கள் வீண் செலவு என்று வியாக்கியானம் பண்ணுகிறார்கள். 


பிறருக்கு நன்மை செய்யும்போது அதை வீண்செலவு என்று நாம் கருதக்கூடாது.  நம்மால் முடிந்தவரையிலும் உயர்ந்த உதவிகளை செய்யவேண்டும். நன்மை செய்வதை சிலர்   அதிகமாக செய்வார்கள். மற்றவர்கள் அதிகமாக உதவிசெய்யும்போது அவர்களை நாம் குற்றப்படுத்தக்கூடாது. தேவன் நமது அன்பை அங்கீகரிக்கிறார். நமது அன்பு அதிகரிக்கும்போது தேவனுடைய நாமம் மகிமையடையும். 


ஆவிக்குரிய ஜீவியத்தில் சிலர் அதிக வளர்ச்சி பெற்றிருப்பார்கள். ஆவிக்குரிய காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். நம்மைவிட மற்றவர்கள் ஆவிக்குரிய காரியங்களில் அதிகமாக ஈடுபடும்போது நாம் அவர்களை குற்றப்படுத்தக்கூடாது. அவர்களைப்போல நாமும்  ஆவிக்குரிய காரியங்களில் வளர்ச்சி பெறவேண்டும்.


இயேசுகிறிஸ்துவை கனப்படுத்துவதை நாம் வீணானதென்று கூறக்கூடாது. இந்த ஸ்திரீயின் அன்பை இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கிறார். இயேசுகிறிஸ்துவின் நாமத்தை  ஒருவர் துதித்து, போற்றி, கனப்படுத்தும்போது  அது வீணான கிரியையென்று நாம் ஒருபோதும் கூறக்கூடாது. இயேசுவை நாமும் துதிக்கவேண்டும். மற்றவர்களும் துதிக்கவேண்டும். மற்றவர்கள் இயேசுவை துதிப்பதைப்பார்த்து நாம் அவரை இன்னும் அதிகமாக துதிக்கவேண்டும். அதிகமாக துதிப்பது வீணானதென்று குற்றப்படுத்தக்கூடாது. 


இயேசுகிறிஸ்துவின்மீதுள்ள அன்பினால் ஸ்திரீ பரிமளதைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றுகிறாள். ஆனால் சீஷர்களோ இதை வீண்செலவு என்று நினைக்கிறார்கள். இந்த தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று தரித்திரருக்கு கொடுக்கலாமே என்று ஆலோசனை கூறுகிறார்கள். 


ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள் 


 இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன்தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன் (மத் 26:10,11).


இயேசுவின் சிரசின்மீது பரிமளதைலத்தை ஊற்றிய ஸ்திரீயை சீஷர்கள் கடிந்துகொள்கிறார்கள். இயேசுகிறிஸ்துவோ அந்த ஸ்திரீயின் அன்பான கிரியையை அங்கீகரித்து, சீஷர்களை கடிந்துகொள்கிறார்.  இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள் என்று இயேசு தமது சீஷர்களிடம் கேட்கிறார்.  


நல்லவர்கள் நற்கிரியைகளை செய்யும்போது அவர்களுக்கும் சிலர் இடையூறாக இருப்பார்கள். அவர்கள் செய்யும் நற்கிரியைகளை தவறானதென்று கூறுவார்கள். இப்படிப்பட்டவர்கள் தாங்களும் நற்கிரியைகளை செய்யமாட்டார்கள். மற்றவர்களையும் நல்லது செய்யவிடமாட்டார்கள். மற்றவர்கள்மீது புறங்கூறுவார்கள். இயேசுகிறிஸ்து புறங்கூறுவதை அங்கீகரிப்பதில்லை. 


தம் சிரசின்மேல் தைலம் ஊற்றிய ஸ்திரீயை பார்த்து  ""இது வீணான செயல்'' என்று கூறிய சீஷர்கள் அனைவரையுமே இயேசுகிறிஸ்து கடிந்து கொள்கிறார். இந்த சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு நாம் எல்லோரும் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே  பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் (மத் 18:10). சீஷர்கள் இந்த ஸ்திரீயை அற்பமாக நினைக்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ அவளுடைய நற்கிரியையை அங்கீகரித்து அவளுக்கு ஆதரவாக பேசுகிறார்.  


தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள் என்று இயேசு தமது சீஷர்களுக்கு கூறுகிறார். நன்மை செய்வதற்கு  நமக்கு எப்போதுமே வாய்ப்புக்கள் உள்ளன.  நாம் தொடர்ந்து நன்மை செய்து கொண்டிருக்கலாம். நாம் செய்யும் நன்மைகளை வழப்படுத்திக் கொள்ளவேண்டும். நன்மை செய்வதற்கு மனமிருந்தால் நிச்சயமாகவே மார்க்கம் இருக்கும். நன்மை செய்ய விரும்புகிறவர் எப்படியும் நன்மை செய்துவிடுவார். தனக்கு நன்மை செய்ய வாய்ப்பில்லையே என்று புலம்பமாட்டார். 


நாம் பல காரியங்களில் நன்மை செய்தாலும், அவற்றில் ஒரு சில காரியங்கள் மிகவும் விசேஷித்தவையாக இருக்கும். இப்படிப்பட்ட வாய்ப்புக்கள் எப்போதாவது மாத்திரமே வரும். இந்த வாய்ப்புக்கள் வரும்போது அதை பயன்படுத்தி  நாம் நன்மை செய்யவேண்டும். இயேசுகிறிஸ்து  எப்போதும் தமது சீஷர்களிடத்தில் இருக்கமாட்டார். ஆகையினால் அவர் அவர்களிடத்தில் இருக்கும் சமயங்களில் சீஷர்கள் இயேசுவை கனப்படுத்தவேண்டும், மகிமைப்படுத்தவேண்டும். நாம் பொதுவான நன்மைகளை செய்வதைவிட, இதுபோன்ற விசேஷித்த நன்மைகளை செய்வது மிகவும் மேன்மையானது. விசேஷித்த வாய்ப்புக்கள் கிடைக்கும்போது அவற்றை பயன்படுத்த வேண்டும். சாதாரண நன்மை செய்வதைவிட  கர்த்தரிடத்தில் பயபக்தியாக இருப்பதும், அவருடைய சமுகத்தில் வந்து ஸ்தோத்திர பலிகளை ஏறெடுப்பதும் முக்கியமானது.  


தன் சிரசின்மேல் இந்த ஸ்திரீ தைலத்தை  ஊற்றிய கிரியையை இயேசுகிறிஸ்து நற்கிரியை என அழைக்கிறார். சீஷர்கள் எதிர்பார்த்ததைவிட இயேசுகிறிஸ்து அந்த ஸ்திரீயை அதிகமாக புகழ்ந்து கூறுகிறார்.  


திருவிருந்தில் அப்பமும், ரசமும் பரிமாறப்படுகிறது. அப்பம் இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்கு அடையாளம். இயேசு கிறிஸ்து சரீரப் பிரகாரமாக நம் மத்தியில் இப்போது இல்லை. அவர் பரலோகத்தில் பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். இயேசு கிறிஸ்து தமது இரண்டாம் வருகையின்போது இந்தப் பூமிக்கு வருவார்.  திருவிருந்தில் பரிமாறப்படும் அப்பமும், ரசமும் இயேசு கிறிஸ்துவின் பிட்கப்பட்ட சரீரத்திற்கும், சிந்தப்பட்ட இரத்தத்திற்கும் அடையாளம்.      


அடக்கம்பண்ணுவதற்கு அடையாளம்


 இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது (மத் 26:12).


இயேசுகிறிஸ்துவின் சிரசின்மீது தைலத்தை ஊற்றுவது அவரை அடக்கம்பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் மரணத்தை இவள் ஏற்கெனவே அறிந்திருந்தபடியினால், பரிமள தைலத்தை அவருடைய சிரசின்மேல் ஊற்றுகிறாள். அவரை அடக்கம்பண்ணுவதற்கு  எத்தனமான செய்கையாகவே அந்த ஸ்திரீ அவர் சிரசின்மீது தைலத்தை ஊற்றுகிறாள். இயேசுகிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும்பற்றி அப்போஸ்தலர்களுக்கு தெரிந்திருப்பதைவிட இந்த ஸ்திரீக்கு அதிகமாக தெரிந்திருக்கிறது. அவருடைய மரணத்தைக்குறித்து சீஷர்கள் விசுவாசிப்பதைவிட இந்த ஸ்திரீ அதிகமாக விசுவாசிக்கிறாள். 


தம் சிரசின்மீது அந்த ஸ்திரீ தைலத்தை ஊற்றியதை இயேசுகிறிஸ்து தம்மை அடக்கம்பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது என்று வியாக்கியானம்பண்ணுகிறார். தம்மை பின்பற்றுகிறவர்களின் வார்த்தைகளையும் செய்கைகளையும் இயேசுகிறிஸ்து நல்லமுறையில் வியாக்கியானம்பண்ணி அவர்களுடைய விசுவாசத்தை வளர்ப்பதற்கு உற்சாகப்படுத்துகிறார். தம்முடைய பிள்ளைகள்  சாதாரணமான காரியங்களை செய்தாலும் அதை விசேஷித்த நன்மையான காரியமாக வியாக்கியானம்பண்ணுவது இயேசுகிறிஸ்துவின் சுபாவம். 


இவளை நினைப்பதற்காக


இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத் 26:13).


இயேசுகிறிஸ்துவின் சிரசின்மீது இந்த ஸ்திரீ தைலத்தை ஊற்றுவதை எல்லோரும் நினைவுகூரவேண்டுமென்று இயேசுகிறிஸ்து இங்கு அறிவிக்கிறார். சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் இடங்களிலெல்லாம், இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும். இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை பிரசங்கிக்கிறவர்களும், இயேசுகிறிஸ்துவின் வரலாற்றை எழுதுகிறவர்களும்  இந்த ஸ்திரீ செய்ததை மறந்துவிடாமல் நினைவுகூருவார்கள். சுவிசேஷம் நித்தியமானது. சுவிசேஷத்தின் சத்தம் எக்காள சத்தத்தைவிட அதிக தொனியுடையது. அதிகநேரம் தொனிக்கக்கூடியது. 


சுவிசேஷத்தில் இயேசுகிறிஸ்துவின் மகிமை விவரிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் அவருடைய பரிசுத்தவான்களின் மேன்மையும் மறந்துவிடாமல்  கூறப்பட்டிருக்கிறது. இந்த ஸ்திரீயின் விசுவாசமும் பக்தியும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் இடங்களிலெல்லாம் நினைவுகூரப்படும். நாம் கர்த்தருக்காக செய்யும் காரியங்களை அவர் மறந்துவிடாமல் நினைவுகூருவார்.


 


Post a Comment

0 Comments