பாடுகளின் வாரம் செவ்வாய்க்கிழமை நிகழ்வு -7

 

பாடுகளின் வாரம் செவ்வாய்க்கிழமை நிகழ்வு -7


சிலுவையில் அறையப்படுவதற்கு


இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்- முடித்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்கா பண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்   (மத் 26:1,2).


அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து, இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள். ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்     

  (மத் 26:3-5).


இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்கப்போகும் வேளை நெருங்கி வருகிறது. அதைக்குறித்து இயேசு தமது சீஷர்களுக்கு அறிவிக்கிறார். தமது பாடுகளைக்குறித்து அவர் ஏற்கெனவே பலமுறை அறிவித்திருந்தாலும், இங்கு மறுபடியும் அறிவிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இரண்டு நாளைக்குப்பின்பு அவர்  சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார். 


இயேசு தமது சீஷர்களிடம் இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடித்த பின்பு  தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படப்போவதைப்பற்றி அறிவிக்கிறார். கிறிஸ்துவினுடைய ஊழியம் பாதியில் நின்றுவிடவில்லை. அவருடைய ஊழியம் பூரணமாக நிறைவேறுகிறது. தம்முடைய சீஷர்களுக்கு தாம் சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டார். 


தங்களுக்கு கட்டுக்களும், பாடுகளும், உபத்திரவங்களும், வேதனைகளும், துன்பங்களும் வரும் என்பதை சீஷர்கள் எதிர்பார்க்கவேண்டும். மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுவார். இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிப்பதும், சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவதும் சீஷர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கக்கூடாது. ஆகையினால் தமது பாடுகளைக் குறித்து இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் சமயம் வாய்க்கும் போதெல்லாம் தெளிவுபடுத்துகிறார்.


 மனுஷகுமாரன் ஒப்புக்கொடுக்கப்படுவார். சிலுவையில் அறையப்படுவார். இது விரைவில் நடைபெறப்போகிறது. இது நிச்சயமாகவே நடைபெறும். நாம் தற்போது அனுபவிக்கும்  பாடுகளே நமக்கு அதிக வேதனையைத்தரும். இனிமேல் வரப்போகிற பாடுகளைப்பற்றி நாம் கவலையற்றவர்களாக இருப்போம். ஆயினும் இயேசுகிறிஸ்து தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படப்போவதை தம் சீஷர்களிடம் முன்னறிவிக்கிறார். வரப்போகிற பாடுகளையும், வேதனையையும், துன்பத்தையும் இயேசு 

தமது சீஷர்களுக்கு நினைவுபடுத்துகிறார்.


பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், ஜனத்தின் மூப்பரும் இயேசுகிறிஸ்துவை தந்திரமாய் பிடித்து கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் ஜீவனுக்கு விரோதமாக இதுவரையிலும் பல சதிஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த சதிகள் எல்லாவற்றையும்விட இந்த சதிஆலோசனை மிகவும் பயங்கரமானது. ஏனெனில் 

இந்த ஆலோசனையில் யூதமார்க்கத்தின் முக்கியமான பிரமுகர்கள் அனைவரும் ஒன்றுகூடியிருக்கிறார்கள். 


காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே இவர்கள் எல்லோரும் கூடிவருகிறார்கள். இயேசுவை தந்திரமாய் பிடித்து கொலைசெய்யும்படி இவர்கள் எல்லோரும் அங்கு சதிஆலோசனைபண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்துவை கொலைசெய்தால் மாத்திரமே  இவர்களுக்கு திருப்தி உண்டாகும். கொலைவெறி பிடித்தவர்களாக அலைகிறார்கள்.  இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தைத் தவிர இவர்களுடைய கொலைவெறியின் தாகத்தை வேறு எதுவும் தணிக்காது.


எல்லோருக்கும் தெரியும் விதமாக, விளம்பரப்படுத்தி இயேசுவை பிடிக்கக்கூடாது என்று தீர்மானம்பண்ணுகிறார்கள். பண்டிகை நாளில் இயேசுவை பிடித்தால் அது பெரிய பிரச்சனையை உண்டாக்கிவிடும். ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகும். ஆகையினால் யாருக்கும் தெரியாமல் தந்திரமாகவும், ரகசியமாகவும் இயேசுவை பிடிக்க ஆலோசனைபண்ணுகிறார்கள். 


பிரதான ஆசாரியரிடத்திலும், வேதபாரகரிடத்திலும், ஜனத்தின் மூப்பரிடத்திலும்  தேவனைக்குறித்த பயமில்லை. அவர்கள் மனுஷரைக்குறித்தே பயப்படுகிறார்கள். தேவனை  மகிமைப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தங்கள் பதவிகளையும் அந்தஸ்துக்களையும் காத்துக்கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். 


Post a Comment

0 Comments