பாடுகளின் வாரம் செவ்வாய்க்கிழமை நிகழ்வு-6

 

பாடுகளின் வாரம் 

செவ்வாய்க்கிழமை நிகழ்வு-6


பத்துக்கன்னிகைகள்


மணவாளன்


அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்   (மத் 25:1).


இயேசுகிறிஸ்து பல உவமைகளைக்கூறி  பரலோக ராஜ்யத்தை விளக்குகிறார். அவருடைய உவமைகளில் சில பரலோக ராஜ்யம் இப்போது எப்படியிருக்கும் என்பதையும், வேறு சில உவமைகள்  அது வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்பதையும் விளக்குகிறது 

    (மத் 13). 

தேவனுடைய ரகசியங்களை இயேசுகிறிஸ்து தமது பிள்ளைகளுக்கு வெளிப்படுத்துகிறார். தேவனுடைய ரகசியம் முடிவு பெறும்போது தேவனுடைய ராஜ்யம் பிதாவிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படும். 


பரலோக ராஜ்யத்தை விவரிப்பதற்கு கலியாணத்தில் நடைபெறும் ஒரு சம்பவத்தை இயேசுகிறிஸ்து இங்கு விவரிக்கிறார். யூதர்களுடைய சமுதாய வாழ்வில் கலியாணம் ஒரு முக்கியமான அம்சம். கலியாண வேளையின்போது மணவாளன் தன் தோழரோடு வருவார். மணவாட்டியின் வீட்டிற்கு இரவுவேளையில் பிந்திவருவார். மணவாட்டி மணவாளனை தன் தோழிமாரோடு  வரவேற்பாள். மணவாளன் மணவாட்டியின் வீட்டிற்கு அருகில் வரும்போது மணவாட்டியின் தோழிகள் தங்கள் கைகளில் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு மணவாளனை வரவேற்பார்கள். மணவாட்டியின் வீட்டிற்கு மணவாளனை அழைத்து வருவார்கள். இது யூதசமுதாயத்தில் திருமண நிகழ்ச்சியின்போது  நடைபெறும் சம்பவமாகும். 


நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மணவாளனாக இருக்கிறார். சபையானது அவருடைய மணவாட்டியாக இருக்கிறது. மணவாளன் மணவாட்டியாகிய தம் சபையின்மீது  மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். உண்மையுள்ள, மாறாத உடன்படிக்கையை மணவாளன் தம்  மணவாட்டியாகிய சபையோடு செய்திருக்கிறார்.  


இந்த உவமையில் கூறப்பட்டிருக்கும் கன்னிகைகள் சபையிலுள்ள விசுவாசிகளாவார்கள். இவர்கள் மணவாட்டியின் சிநேகிதிகள். 


கலியாண வீட்டில் இந்த கன்னிகைகள்  மணவாளனை வரவேற்க வேண்டும். தீவட்டிகளை பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு  எதிர்கொண்டு போகவேண்டும். கலியாண வீட்டின் சந்தோஷத்தில் இது ஒரு முக்கியமான சம்பவம். மணவாளன் வரும்போது இந்த கன்னிகைகளெல்லாம் அவரை வரவேற்பதற்காக காத்திருக்கிறார்கள்.


இயேசுகிறிஸ்துவின் விசுவாசிகளாகிய  நாமும் கிறிஸ்துவுக்கு பணிவிடை ஊழியம் செய்யவேண்டும். அவரை நமது ஊழியத்தின் மூலமாக கனப்படுத்தி மகிமைப்படுத்த வேண்டும்.  அவருடைய பரிசுத்த நாமத்தை உயர்த்தவேண்டும். உயர்த்தப்பட்ட இயேசுகிறிஸ்துவை நாம் துதிக்கவேண்டும். பத்துக்கன்னிகைகளும் தீவட்டிகளை பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டு போவதுபோல, நாமும் இயேசுகிறிஸ்து வரும்போது நமது துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் உயர்த்தி மணவாளனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு எதிர்கொண்டு போகவேண்டும். 


மணவாளனுடைய வருகையை இந்த கன்னிகைகள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  அதுபோலவே இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நாமும் எதிர்பார்க்கவேண்டும். கிறிஸ்தவ மார்க்கத்தில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை பற்றிய உபதேசம் மிகவும் முக்கியமான உபதேசமாகும்.  நம்முடைய ஆவிக்குரிய ஜீவியம் முழுவதும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையோடு தொடர்பு கொண்டிருக்கிறது.


மணவாளனுக்கு எதிர்கொண்டு போகும்போது கன்னிகைகள் தங்கள் கைகளில் தீவட்டிகளை பிடித்திருக்கவேண்டும். தீவட்டிகளை பிடித்திருப்பது மணவாளனை கனப்படுத்துவதற்கும், அவருக்கு ஊழியம் செய்வதற்கும் அடையாளம். கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாக இருக்கிறோம். 


புத்தியுள்ளவர்களும் புத்தியில்லாதவர்களும்


அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள் (மத் 25:2). 


மணவாளனுக்கு எதிர்கொண்டுபோக பத்துக்கன்னிகைகள் புறப்படுகிறார்கள். இவர்கள் பத்துபேரும் ஒரே சுபாவமுடையவர்களல்ல. இவர்களில் ஐந்துபேர் புத்தி உள்ளவர்கள் மீதி ஐந்துபேர் புத்தியில்லாதவர்கள். இவர்கள் பத்துபேருமே ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள். ஆயினும் இவர்களுக்குள் வித்தியாசம் இருக்கிறது. 


இவர்களைப்போலத்தான் விசுவாசிகள் மத்தியிலும் வித்தியாசம் இருக்கும். ஒரே சபையை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆயினும் தேவனுடைய பார்வையில் இந்த விசுவாசிகளெல்லாம் வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். தங்களுடைய ஆத்துமாக்களை பாதுகாத்து பராமரிக்கும் விஷயங்களில் சில விசுவாசிகள் புத்தி உள்ளவர்களாகவும், சில விசுவாசிகள் புத்தியில்லாதவர்களாகவும் இருப்பார்கள். இயேசுகிறிஸ்துவின் மார்க்கமே மெய்யான ஞானம். இதை புரிந்து கொள்ளாத      மதியீனம் பாவம். 


மணவாளனுக்கு எதிர்கொண்டுபோக ஆயத்தமாக இருக்கிறவர்கள் புத்தியுள்ளவர்கள். ஆயத்தம் இல்லாதவர்கள் புத்தியில்லாதவர்கள். 


புத்தியில்லாதவர்கள்


புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு போனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை (மத் 25:3).


புத்தியில்லாத கன்னிகைகள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு போனார்கள். எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை.   சிறிது நேரம் எரிவதற்கு மாத்திரம் அவர்களிடத்தில் எண்ணெய் இருந்தது. அந்த கொஞ்சம் எண்ணெயை வைத்து தாங்களும் தீவட்டி பிடிக்கிறவர்கள் என்று தங்களை காண்பித்துக்கொள்கிறார்கள். மணவாளனைக்கு  எதிர்கொண்டுபோக தங்களுக்கும் ஆர்வம் இருப்பதாக காண்பித்துக்கொள்கிறார்கள். மணவாளன் வருவதற்கு தாமதமானபோதோ, இவர்களுக்குப் பிரச்சனை உண்டாயிற்று. இவர்களுடைய தீவட்டி தொடர்ந்து எரிவதற்கு இவர்களிடத்தில்  போதுமான அளவு எண்ணெயில்லை. ஆரம்பத்தில் சிறிது நேரம் எரிவதற்கு எண்ணெய் இருந்தது. ஆனால் முடிவு வரையிலும் எரிவதற்கு இவர்களிடத்தில் எண்ணெயில்லை. ஆயத்தமில்லாத மாய்மாலக்காரர்களாக இருக்கிறார்கள். 


புத்தியில்லாத கன்னிகைகள் சிந்தையில் தெளிவில்லாதவர்கள். வாழ்க்கையில் நோக்கமில்லாதவர்கள். தங்களுடைய கரங்களில்  தீவட்டிகளை பிடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய இருதயத்திலோ அந்த தீவட்டி எரியவேண்டும் என்னும் சிந்தனையில்லை. இதுபோலவே சில விசுவாசிகளும் இருக்கிறார்கள். விசுவாசி என்னும் பெயரை தரித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய உள்ளத்திலோ தாங்கள் விசுவாசிக்கு ஏற்ற பிரகாரம் ஜீவிக்கவேண்டும் என்னும் சிந்தனையில்லை. ஆயத்தம் இல்லாமல் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் விசுவாசிகளாக இருக்கிறார்கள். அதன்பின்பு விசுவாச ஜீவியத்தில் பாடுகளும், உபத்திரவங்களும், வேதனைகளும், மேடுகளும், பள்ளங்களும் வரும்போது அவற்றை எதிர்கொள்வதற்கு விசுவாசமில்லாதவர்களாக போய்விடுகிறார்கள்.


புத்தியில்லாத விசுவாசிகள் சோதனைகளை சகிக்கமாட்டார்கள். தங்களுடைய ஜீவியத்தில் எப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றாலும், அதை தாங்கிக்கொள்வதற்கு அவர்களிடத்தில் விசுவாசமோ, பெலனோ இராது. சோதனைகளை தாங்கிக்கொள்ள தங்களை ஒருபோதும் ஆயத்தப்படுத்தமாட்டார்கள். மணவாளனுக்கு எதிர்கொண்டுபோக எல்லோரும் தீவட்டி பிடித்துக்கொண்டு போகிறார்கள் என்று நினைத்து, புத்தியில்லாத கன்னிகைகளும் தீவட்டி பிடித்துக்கொண்டு போகிறார்கள். ஆரம்பத்தில் தாங்களும் மணவாளனை வரவேற்க ஆர்வமுள்ளவர்கள் போல காண்பிக்கிறார்கள். ஆனால் இவர்களிடத்தில் போதுமான அளவு எண்ணெயில்லை. ஆயத்தமில்லாமல் வருகிறார்கள். 


விசுவாசிகளில் சிலரும், இவர்களைப் போலவே இருக்கிறார்கள்.  எல்லோரும் சபைக்கு வருகிறார்கள் என்று தாங்களும் வருகிறார்கள். இயேசுகிறிஸ்துவை நேசிப்பதாக ஆரம்பத்தில் காண்பித்துக் கொள்கிறார்கள். ஆனால்  தொடர்ந்து விசுவாச ஜீவியம் ஜீவிப்பதற்கு இவர்களிடத்தில் போதுமான அளவு விசுவாசமில்லை. தங்களை ஆயத்தப்படுத்தாமல்  அழிந்துபோகிறார்கள். எறும்பு வருங்காலத்திற்கு தேவையானதை சேகரிக்கும். அதைப்போல நாமும் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளும்படி வருங்காலத்திற்காக நமக்கு நல்ல     ஆவிக்குரிய ஆகாரத்தை  பொக்கிஷமாக வைத்திருக்கவேண்டும்      (1தீமோ 6:19).  பொறுப்பில்லாமல் ஜீவிக்கக்கூடாது. 


புத்தி உள்ளவர்கள்


புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள் 

(மத் 25:4). 


பத்துக்கன்னிகைகளில் ஐந்துபேர் புத்தி உள்ளவர்கள். இவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூட, தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் ஜீவியத்தில் நல்ல கொள்கையும், நல்ல குறிக்கோளும் உடையவர்கள். தங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளை தெளிவாக திட்டமிட்டு, முடிவு வரையிலும் அந்த வேலையை செய்து முடிப்பார்கள். 


நம்முடைய இருதயமே பாத்திரமாக இருக்கிறது. நமது இருதயத்தில் நமது ஞானமும், நமது பொக்கிஷமும், நம்முடைய எல்லா காரியங்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது.  நமது இருதயம் கெட்டுப்போனால் நம்முடைய சுபாவமும் கெட்டுப்போகும். இருதயம் சுத்தமாக இருந்தால்தான் பேச்சும் சுத்தமாக இருக்கும்.  ஆகையினால் நமது இருதயமாகிய பாத்திரத்தை எப்போதும் பரிசுத்தமாக வைத்திருக்கவேண்டும். 


தேவனுடைய கிருபையே எண்ணெயாக இருக்கிறது. நமது இருதயம் என்னும் பாத்திரத்தில் தேவனுடைய கிருபை நிரம்பியிருக்கவேண்டும். மனுஷருக்கு முன்பாக  நமது வெளிச்சம் பிரகாசிக்கவேண்டும். நமது நற்கிரியைகள் மூலமாக தேவனுடைய நாமம் மகிமைப்படவேண்டும். கிறிஸ்துவின்மீது  நமக்கு விசுவாசமில்லையென்றால், தேவனிடத்திலும் மனுஷரிடத்திலும் நாம் அன்புகூரவில்லையென்றால், நாம் மற்றவர்களுக்கு வெளிச்சம் தரமாட்டோம்.  நாம் மற்றவர்களுக்கு உதவியாக எந்த நற்கிரியையும் செய்யமாட்டோம். 


புத்தியுள்ள ஐந்து கன்னிகைகளும் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போகிறார்கள்.  ஒருவேளை மணவாளன் வருவதற்கு தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். நம்முடைய ஜீவியத்தில்கூட நமக்கு நன்மை மாத்திரமே நடக்கும் என்று நினைத்து இறுமாப்பாக இருந்துவிடக்கூடாது.  உபத்திரவம் வருவதற்கும் நமக்கு வாய்ப்புள்ளது என்று எதிர்பார்த்து, அதற்கு இப்போதே ஆயத்தமாக இருக்கவேண்டும். சத்துருக்கள் ஒரு பட்டணத்தை முற்றிக்கையிடும்போது,     அந்த பட்டணத்திலுள்ள ஜனங்கள்      தங்களுக்கு தேவையானவற்றை பராமரித்து சேமித்து வைத்திருப்பார்கள். அதுபோல சாத்தான் நம்மை முற்றிக்கையிடும்போது அவன்மீது ஜெயம் பெறும் வரையிலும் நமது விசுவாசத்தையும், தேவவசனத்தையும் நமது உள்ளத்தில் நிரப்பி வைத்திருக்கவேண்டும். 


மணவாளன் வர தாமதம்


மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்  (மத் 25:5). 


மணவாளன் வருவதற்கு தாமதமாகிறது. அப்போது மணவாளனுக்கு எதிர்கொண்டு போக புறப்பட்ட பத்து கன்னிகைகளும் நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிடுகிறார்கள். இவர்கள் எதிர்பார்த்த சமயத்தில் மணவாளன் வரவில்லை.  நிச்சயமாகவே நடைபெறும் என்று நாம் எதிர்பார்க்கும் காரியங்களுக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். அது விரைவில் நடந்தாலும், தாமதமானாலும் நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். கிறிஸ்துவின் வருகைகூட தாமதமாவதுபோன்று நமக்குத் தெரிகிறது. ஆயினும் மெய்யாகவே அவருடைய வருகை நிச்சயமாக வரும். 


நமது சித்தத்தின் பிரகாரமாக இயேசுகிறிஸ்து வரவில்லையென்றாலும், தமது சித்தத்தின் பிரகாரமாக தாம் குறித்த வேளையில் அவர் நிச்சயமாகவே வருவார். இயேசுகிறிஸ்துவின் வருகை தாமதமாகும்போது அவருக்காக காத்திருக்கிறவர்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. எந்த நோக்கத்திற்காக காத்திருக்கிறார்களோ அந்த நோக்கத்தை மறந்துவிடக்கூடாது.  இங்கு பத்து கன்னிகைகளும் மணவாளனுக்கு எதிர்கொண்டு போக புறப்பட்டவர்கள். மணவாளன் வர தாமதமானபோது, இவர்கள் தங்கள் கடமையை மறந்துவிட்டு, நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிடுகிறார்கள். தூங்குபவர்கள் ஒருபோதும் ஆயத்தமாக இருக்கமாட்டார்கள். பத்து கன்னிகைகளும் மணவாளனுடைய வருகையையே மறந்துவிட்டு  அயர்ந்து தூங்குகிறார்கள். 


நிச்சயமாக நடைபெறப்போகிற காரியங்கள், நாம் எதிர்பாராத சமயத்தில் திடீரென்று நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது.  ஒரு காரியம் தாமதமாவதினால் அது இனிமேல் நடைபெறாது என்று இறுமாப்பாக இருக்கக்கூடாது. ஒரு காரியம் நடைபெறாது என்பதற்கு தாமதம் அடையாளமாகாது. 


பத்து கன்னிகைகளில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுகூட பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள். ஆனால் இவர்களோ விழித்திருக்க தவறிவிடுகிறார்கள்.  பாத்திரத்தில் எண்ணெய் இருந்தும், தங்கள் சரீரத்தில் நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிடுகிறார்கள். 


கர்த்தருடைய பிள்ளைகளில் சிலர்  இவர்களைப்போலவே இருக்கிறார்கள். கர்த்தருக்காக நீண்டகாலமாக ஊழியம் செய்கிறார்கள். ஆயினும் தேவனுடைய கிருபை  இவர்களிடத்தில் காணப்படுவதில்லை. இவர்களுடைய கிரியைகளும் தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாக இருப்பதில்லை. இவர்கள்  தேவனிடத்தில் அன்புகூருகிறார்கள். ஆயினும்  தேவனிடத்தில் இவர்கள் ஆதியில் கொண்டிருந்த அன்பைவிட்டு விலகிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட ஊழியக்காரர்களிடத்தில் ஆவியானவருடைய அபிஷேகம் இருக்கிறது. ஆனால் இந்த அபிஷேகத்தை பயன்படுத்த வேண்டிய சமயத்திலோ அதை பயன்படுத்தாமல் நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிடுகிறார்கள்.


இதோ மணவாளன் வருகிறார்


நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று (மத் 25:6).


பத்துக்கன்னிகைகளும் தூங்கிக்கொண்டிருக்கும்போது, மணவாளனுக்கு எதிர்கொண்டு போக புறப்படுமாறு இவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்படுகிறது. இவர்கள் எதிர்பாராத சமயத்தில் இந்த அழைப்பு வருகிறது.  நடுராத்திரியிலே, ""இதோ மணவாளன் வருகிறார்.  அவருக்கு எதிர்கொண்டுபோக புறப்படுங்கள்'' என்கிற சத்தம் உண்டாயிற்று. கிறிஸ்துவின் வருகை தாமதமானாலும், அவர் ஏற்ற வேளையில், குறித்த காலத்தில் நிச்சயம் வருவார். அவருடைய வருகை தாமதமாக இருந்தாலும், அவர் நிச்சயமாக வருவார். அவருக்காக காத்திருக்கிறவர்கள் அவரைக் கண்டு ஆறுதல் அடைவார்கள். இரட்சிப்பின் வருஷம் நியமிக்கப்பட்ட பிரகாரம் நிச்சயமாகவே வரும். 


கிறிஸ்துவின் வருகை நமக்கு நடுராத்திரியிலே வரும். அவருடைய வருகையை நாம் எதிர்பாராத சமயத்தில் அவர் வருவார். தம்முடைய ஜனத்திற்கு ஆறுதல் கொடுப்பதற்காகவும், விடுதலையை கொடுப்பதற்காகவும் அவர் வருவார். ஆயினும்  அவருடைய வருகை சமீபத்தில் இருப்பதுபோல நமக்கு தெரிவதில்லை. அவர் தமக்கு சித்தமான, பிரியமான சமயத்தில் வருவார். தமது தெய்வீக ஆளுகையை காண்பிப்பதற்காக தமக்கு ஏற்ற வேளையில் அவர் வருவார். தம்முடைய வருகையின் காலத்தை அவர் நமக்கு அறிவிக்கவில்லை. அவர் வரும்வரையிலும் நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியங்களை நாம் தொடர்ந்து நிறைவேற்றவேண்டும். 


இயேசுகிறிஸ்து வரும்போது அவருக்கு எதிர்கொண்டுபோக நாம் புறப்பட்டுப்போக வேண்டும். அவருக்காக காத்திருக்கிறவர்களுக்கு ""அவருக்கு எதிர்கொண்டுபோக புறப்பட்டுப்போங்கள்'' என்னும் அழைப்பு கொடுக்கப்படும். அவருடைய வருகைக்காக ஆயத்தமாக இருக்கிறவர்களால் மாத்திரமே அவருக்கு எதிர்கொண்டுபோக முடியும். இயேசுகிறிஸ்துவின் வருகையைப்பற்றிய செய்தி நம் எல்லோருக்குமே கொடுக்கப்படுகிறது. அவரை சந்திப்பதற்கு நாம் எல்லோருமே விழித்திருந்து ஆயத்தமாக இருக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்துவின் வருகையின்போது, அவருடைய வருகையை அறிவிக்கும் சத்தம் உண்டாகும். அவருடைய முதலாம் வருகை ரகசியமாக இருக்கும். அப்போது அவருடைய வருகையைப்பற்றிய அறிவிப்பு கொடுக்கப்படாது.  ஆனால் அவருடைய இரண்டாம் வருகையிலோ  அவருடைய வருகையைக் குறித்த அறிவிப்பு உலகம் முழுவதும் எக்காளம் ஊதி அறிவிக்கப்படும். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை ரகசிய வருகையாகயிராது.


யூதருடைய திருமணச் சடங்குகள் மாலை வேளையில் ஆரம்பிக்கும். நடு இரவு வரையிலும் திருமணச் சடங்குகள் நடைபெறும். இந்தத் திருமணத்தில் மணவாளன் வருவதற்கு தாமதமாயிற்று. உரிய நேரத்தில் மணவாளனால் வரமுடியவில்லை. ஆகையினால் மணவாளன் நடுராத்திரியிலே வருகிறான்.


""மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று'' என்பதும் யூதருடைய திருமணச்சடங்கில் ஒரு வழக்கம். மணவாளன் தன் வீட்டிலிருந்து புறப்படும் வேளையிலிருந்தே அவனுடைய தோழர்கள் வழி நெடுக ""மணவாளன் வருகிறார்'' என்று சந்தோஷமாக ஆர்ப்பரித்துக் கொண்டே செல்வார்கள். மணவாட்டியின் வீடு வரையிலும் சந்தோஷமாக சத்தமிட்டுக் கொண்டே வருவார்கள். அவர்களுடைய சத்தம் தான் இந்த வசனத்தில் கேட்கிறது.


 மணவாளனை வரவேற்பதற்காக மணவாட்டி தன்னுடைய தோழிகளில் சிலரை ஏற்கெனவே தெரிந்து வைத்திருப்பாள். அவர்கள் மணவாளனை வரவேற்பதற்காக எதிர்கொண்டு போக வேண்டும். (மத் 25:1,6,10)


எல்லோரும் எழுந்திருந்தார்கள்


அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்  (மத் 25:7).


மணவாளனுடைய வருகையைப்பற்றிய அறிவிப்பு எல்லோருக்கும் கொடுக்கப்படுகிறது. பத்துக்கன்னிகைகளும் அந்த சத்தத்தைக்கேட்டு எழுந்திருக்கிறார்கள். தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்துகிறார்கள். தீவட்டிகளில் எண்ணெயை ஊற்றி, திரிகளை தீண்டிவிட்டு, மணவாளனுக்கு  எதிர்கொண்டுபோக துரிதமாக செயல்படுகிறார்கள். பத்துக்கன்னிகைகளில்  புத்தியுள்ள ஐந்து கன்னிகைகளிடம் மாத்திரமே  எண்ணெய் உள்ளது. புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளிடம் எண்ணெயில்லை. மணவாளன் வரும் சத்தத்தைக்கேட்டு, பத்துக்கன்னிகைகளும் எழுந்திருந்தாலும், ஐந்து கன்னிகைகளின் தீவட்டிகள் மாத்திரமே எரியும் நிலையில் ஆயத்தமாக உள்ளது. மற்ற ஐந்து பேரிடமும் தீவட்டிகள் இருந்தாலும், அவை எரிவதற்கு ஆயத்தமாக இல்லை. 


இயேசுகிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்திருக்கும் நாம், எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். தேவனுடைய வருகை வர காத்திருக்கிற நாம் கறையற்றவர்களும், பிழையில்லாதவர்களுமாய், சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும் (2பேது 3:14). ஒரு சிலர் தங்கள் மரணத்திற்கு ஆயத்தமாக இருப்பார்கள்.  தங்கள் மரணத்திற்கு பின்பு குடும்பத்தினர் குறைவில்லாமல் வாழ்வதற்கு தேவையான பொருளாதார வசதிகளை சேமித்து வைத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள்கூட கர்த்தருடைய வருகைக்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். எஜமான் வரும்போது ""அப்படி செய்கிறவனாக'' காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான் (மத் 24:46). இயேசுகிறிஸ்துவின் வருகையின்போது நாம் தரித்துக்கொண்டவர்களாக இருக்கவேண்டும்.  நிர்வாணிகளாய் காணப்படக்கூடாது (2கொரி 5:3). 


இயேசுகிறிஸ்துவின் வருகையின் நாள் நம்மை சோதித்துப்பார்க்கும் நாளாகவும், நம்மை விசாரிக்கும் நாளாகவும் இருக்கும். அந்த சமயத்தில் நாம் எப்படியிருக்கிறோம் என்பதே மிகவும் முக்கியம். புத்தியில்லாத கன்னிகைகள்   தங்களுக்கு உதவிபுரியாத மாயைகளை நம்பினார்கள். தாங்கள் ஆயத்தமாக இல்லாமல் இருந்ததை அவர்கள் உணராமல் இருந்தார்கள்.  நாம் புத்தியில்லாத கன்னிகைகளைப்போல இந்த உலகத்தில் உணர்வற்றவர்களாக இருக்கக்கூடாது. இயேசுகிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்து அவருக்கு எதிர்கொள்ள நாம் எப்போதும் ஆயத்தமாகவே இருக்கவேண்டும்.


மணவாளனுடைய தோழர்களின் சத்தத்தைக் கேட்டபோது தீவட்டிகளைப் பிடித்திருந்த கன்னிகைகள் தங்கள் தூக்கத்தை விட்டு எழுந்திருந்தார்கள். தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் அவர்களுடைய தீவட்டிகளில் எண்ணெய் இருந்தது. இப்பொழுதோ தீவட்டிகள் தொடர்ந்து எரிய மேலும் எண்ணெய் தேவைப்படுகிறது. ஐந்து கன்னிகைகளிடம் மட்டுமே எண்ணெய் இருக்கிறது. இவர்கள் புத்தியுள்ளவர்கள். மீதி ஐந்து கன்னிகைகளிடம் எண்ணெய் இல்லை. இவர்கள் புத்தியில்லாதவர்கள்.


தீவட்டிகள் அணைந்துபோகிறதே


புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாம-ராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்         (மத் 25:8,9).


புத்தியில்லாத கன்னிகைகளிடம் தீவட்டிகள் இருந்தது. ஆனால் அவர்களுடைய தீவட்டிகள் அணைந்துபோயிற்று. அவர்களிடம்  தீவட்டிகளை தொடர்ந்து எரிய வைப்பதற்கு போதுமான எண்ணெயில்லை. மாய்மாலக்காரர்களும் இந்த உலகத்தில் புத்தியில்லாத கன்னிகைகளைப்போலவே ஜீவிக்கிறார்கள். இந்த உலகத்தில் ஆடம்பரமாக ஜீவிக்கும்போது  தேவனையும், மறுஜீவனையும், நியாயத்தீர்ப்பையும் மறந்துவிட்டு தங்களுடைய  சுயஇஷ்டம்போல ஜீவிக்கிறார்கள். அவர்களுடைய மரணப்படுக்கையில் கர்த்தர் அவர்களுடைய மனக்கண்களை திறக்கும்போது, தாங்கள் புத்தியில்லாதவர்களாகவும், தேவனை சந்திப்பதற்கு ஆயத்தமில்லாதவர்களாகவும் இருப்பதை உணர்ந்து புலம்புகிறார்கள். இப்படிப்பட்ட மாய்மாலக்காரர்கள் மரித்தபின்பு அவர்களுக்கு மிகப்பெரிய துயரம் காத்திருக்கிறது. அவர்களுடைய நியாயத்தீர்ப்பின்போது அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் நரகத்தில்  தள்ளப்பட்டு நித்திய வேதனைகளை அனுபவிப்பார்கள்.


புத்தியில்லாத கன்னிகைகளின் தீவட்டிகள் அணைந்துபோயிற்று. மாய்மாலக்காரர்களின் தீவட்டிகள் இதுபோலவே  அணைந்துபோகும். ஆவியில் ஆரம்பித்த அவர்களுடைய ஜீவியம் மாம்சத்தில் முடிந்துபோகும். அவர்களுடைய ஊழியம் ஒன்றுமில்லாமல் போகும். சமுதாயத்தில் அவர்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையையும்  அழிந்து போகும். அவர்களுடைய நம்பிக்கை வீணாய் போகும். அவர்களுக்கு சமாதானமும் ஆறுதலும் இராது. மாய்மாலமான ஊழியக்காரர்களை இயேசுகிறிஸ்து தமது நியாயத்தீர்ப்பு நாளின்போது ""அக்கிரமச்செய்கைக்காரரே  என்னைவிட்டு அகன்றுபோங்கள்'' என்று கூறி அவர்களை நரகத்திற்கு அனுப்பிவிடுவார் (மத் 7:22,23). 


புத்தியில்லாத கன்னிகைகளுக்கு எண்ணெய் தேவைப்படுகிறது. அவர்களுக்கு தேவைப்படும்போது அந்த தேவையை சந்திப்பதற்கு அவர்களிடத்தில் எண்ணெயில்லை.  உலகப்பிரகாரமான ஜனங்கள் இந்த புத்தியில்லாத கன்னிகைகளைப்போலவே இருக்கிறார்கள். உலகத்திற்கு ஊழியம் செய்து  அதில் சந்தோஷப்படுகிறார்கள். உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கிறார்கள். மரணத்தின் பள்ளத்தாக்கு வழியாக அவர்கள் பிரயாணம் பண்ணும்போது தங்களுடைய பரிதாபமான நிலையை புரிந்துகொண்டு, புலம்புகிறார்கள். 


தீவட்டிகள் அணைந்துபோகும்போது புத்தியில்லாதவர்கள் புத்தி உள்ளவர்களை நோக்கி ""உங்கள் எண்ணெயில் எங்களுக்கு கொஞ்சம் கொடுங்கள்'' என்று கேட்கிறார்கள்.  இந்த கன்னிகைகளைப்போலவே உலகப்பிரகாரமான ஜனங்கள் இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை ஏற்றுக்கொள்ளாமல், அவருடைய கடிந்து கொள்ளுதலுக்கு செவி கொடுக்காமல், தங்கள் சுய இஷ்டம்போல ஜீவிக்கிறார்கள். ஆயினும் தாங்கள் மரிக்கும்போது ஆறுதலான நல்ல வார்த்தையை கேட்கவேண்டுமென்று விரும்புகிறார்கள். மரணப்படுக்கையில்  எல்லோருடைய உதவியையும் கேட்கிறார்கள்.  பாவியாக ஜீவித்தாலும் சமாதானமாக மரிக்கவேண்டுமென்பது இவர்களுடைய எண்ணம். துன்மார்க்கமான காரியங்களை இந்த ஜீவியத்தில் தாராளமாக செய்திருந்தாலும், நியாயத்தீர்ப்பு நாளின்போது  தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவேண்டுமென்று பிறருடைய உதவியை எதிர்பார்க்கிறார்கள். கவனக்குறைவாக ஜீவிக்கிறவர்களுக்கும் மரணம் வரும். நீதிமான் மரிப்பதுபோலவே துன்மார்க்கனும் மரிப்பான். 


துன்மார்க்கன் மரிக்கும்போது    தனக்காக  நல்ல வார்த்தைகளை கர்த்தரிடம் விண்ணப்பம் பண்ணுமாறு  ஊழியக்காரர்களிடம் கேட்டுக்கொள்வான். நியாயத்தீர்ப்பு நாளின்போது இந்த விண்ணப்பம்  பலனளிக்காது. நியாயாசனத்தில் வீற்றிருக்கும் நம்முடைய கர்த்தாதி கர்த்தருக்கு நம்முடைய சுபாவம் அனைத்தும் பூரணமாக தெரியும். அவர் ஒவ்வொரு மனுஷனையும் ஆராய்ந்து அறிந்து வைத்திருக்கிறார்.


இது கிருபையின் காலம். இந்த காலத்தில்  நாம் தேவனுடைய கிருபையை பெற்றுக்கொண்டு அவருக்கு பிரியமாக ஜீவிக்கவேண்டும். அவருடைய கிருபை நமக்கு தேவையில்லையென்று அசட்டையாக ஜீவிக்கக்கூடாது. இந்த பூமியில் நாம் ஜீவிக்கும்போது கர்த்தருடைய வார்த்தை நம்மை பரிசுத்தப்படுத்துவதற்கு ஒப்புக்கொடுத்து ஜீவிக்கவேண்டும். தேவனுடைய பிரமாணம் நம்முடைய ஜீவியத்தின் எல்லாப் பகுதியையும் ஆளுகை செய்யவேண்டும். காலம் தாழ்த்துவது தாமதமாகிவிடும். காலம் கடந்தபின்பு நம்மால் கிரியை செய்யமுடியாது. எல்லாம் முடிந்துபோன பின்பு மறுபடியும் துவக்குவதற்கு வாய்ப்பில்லை.  ஆகையினால் வாய்ப்பு இருக்கும்போதே, நமக்கு கொடுக்கப்படும் வாய்ப்புக்களை பயன்படுத்தி கர்த்தருக்கு பிரியமானவர்களாக ஜீவிக்கவேண்டும்.


புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களிடம்  எண்ணெய் கேட்கிறார்கள். ஆனால் புத்தியுள்ளவர்களோ தங்கள் எண்ணெயை அவர்களுக்கு கொடுக்க மறுத்துவிடுகிறார்கள்.      மூலபாஷையில் ""அப்படியல்ல'' என்று மாத்திரமே  புத்தியுள்ளவர்கள் கூறுகிறார்கள். தாங்கள் மறுப்பதற்கு காரணம் எதையும் கூறவில்லை.  இந்த வசனத்தில்  புத்தியுள்ளவர்கள் புத்தியில்லாதவர்களிடம் ""எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்தில்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள்'' என்று காரணம் கூறுவதாக எழுதப்பட்டிருக்கிறது. மூலபாஷையில் இந்த வாக்கியம் இல்லை. மொழிபெயர்ப்பாளர்கள் இந்த வாக்கியத்தை தங்கள் மொழிபெயர்ப்புக்களில் இணைத்திருக்கிறார்கள்.  


புத்தியுள்ள ஸ்திரீகள் எந்தவிதமான காரணமும் கூறாமல் ""அப்படியல்ல'' என்று கூறி மறுத்துவிடுகிறார்கள். இவர்களுடைய மறுப்பு தெளிவாகவும் தீர்மானமாகவும் இருக்கிறது. பிறருக்கு தேவைப்படும்போது நாம் உதவி செய்யவேண்டும். நம்மை நேசிப்பதுபோல நாம் பிறரையும் நேசிக்கவேண்டும். ஆயினும் நம்மால்  உதவி செய்ய கூடாத ஒரு காலமும் உண்டு.  உதவி செய்யமுடியாத காலத்தில் நாம் உதவி செய்தால், அது நமக்கும் அவர்களுக்கும் போதாமலிருக்கும். மற்றவர்களுக்கு உதவிசெய்யும்போது நாம் நம்முடைய நிலமையையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.  பிறருக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் முதலாவதாக தங்கள் சொந்த குடும்பத்தை பராமரிக்கவேண்டும். நன்மை செய்வது தன் குடும்பத்தில் ஆரம்பமாகவேண்டும். 


புத்தியுள்ளவர்கள் புத்தியில்லாதவர்களுக்கு  உதவி செய்ய மறுத்துவிடுகிறார்கள். ""நீங்கள் விற்கிறவர்களிடத்தில் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள்'' என்று கூறிவிடுகிறார்கள். இரட்சிக்கப்படுகிறவர்கள் தேவனுடைய கிருபையினால் தங்களுடைய ஆத்துமாக்களை தாங்களே காத்துக்கொள்ள வேண்டும். எப்போதுமே மற்றவர்களுடைய விசுவாசத்தையும், ஜெபத்தையும், ஆலோசனைகளையும், உதவிகளையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. பரிசுத்தவான்களின் ஐக்கியத்தினாலும், ஜெபத்தினாலும் நமக்கு பிரயோஜனமுண்டு. ஆயினும் நம்முடைய பரிசுத்தத்திற்கு நாமே உத்திரவாதம் கொடுக்கவேண்டும். மற்றவர்களுடைய பரிசுத்தத்தினால் நாம் பரிசுத்தமாகமுடியாது. நமது இரட்சிப்புக்கு தேவையான தேவகிருபையை நாமே தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும். மற்றவர்களுடைய இரட்சிப்பினால் நாம் இரட்சிப்படைய முடியாது. ஒவ்வொருவரும் தன்னுடைய கிரியைக்குத்தக்காக கர்த்தருக்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டும். நியாயத்தீர்ப்பு நாளின்போது நாம் மற்றவர்களுடைய கணக்குகளை சொல்லிக்கொண்டிருக்க முடியாது.


ஒருவருக்கு தேவகிருபை அதிகமாக இருந்தால், நியாயத்தீர்ப்பு நாளின்போது அவர் அந்த கிருபையை மற்றவருக்கு இலவசமாகவோ, இரவலாகவோ கொடுத்து உதவிபுரிய முடியாது.  நமக்கு வாய்ப்பு கொடுக்கும்போது தேவகிருபையை இயேசுகிறிஸ்துவிடமிருந்து மாத்திரமே நாம் பெற்றுக்கொள்ளவேண்டும். நியாயத்தீர்ப்பு நாளின்போது தேவகிருபையை யாரும் யாரிடமிருந்தும் இரவலாக பெற்றுக்கொள்ள முடியாது. யாருக்கும் இரவலாக  கொடுக்கவும் முடியாது. 


புத்தியுள்ள கன்னிகைகள் புத்தியில்லாத கன்னிகைகளை குறை கூறவில்லை. அவர்கள் ஆயத்தமாக இல்லாததற்காக அவர்களை கடிந்து கூறவுமில்லை. அவர்களுக்கு நல்ல ஆலோசனையை கூறுகிறார்கள். ""நீங்கள் விற்கிறவர்களிடத்தில் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள்'' என்று ஆலோசனை கூறுகிறார்கள். 


ஊழியக்காரர்களாகிய நாம் ஆத்துமாக்களுக்கு தகுந்த சமயத்தில் ஞானமுள்ள ஆலோசனைகளைக் கூறவேண்டும். ஜனங்கள் உலகப்பிரகாரமாக ஜீவிக்கும்போது  அவர்களை வேதவசனத்தின் மூலமாக எச்சரித்து அவர்களுக்கு ஆலோசனை கூறவேண்டும்.  அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கும்போது   அவர்களை சந்தித்து பாவ அறிக்கை செய்யச்சொல்லலாம் என்று கவனமில்லாமல் இருப்பது ஆபத்தில் முடிந்துவிடும். இரட்சிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கும்போது, கர்த்தருடைய கிருபையினால் இரட்சிப்பை பெற்றுக்கொண்டு இயேசுகிறிஸ்துவை சந்திப்பதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும். 


புத்தியுள்ள கன்னிகைகள் மற்ற கன்னிகைகளுக்கு அவர்களுடைய கஷ்டமான சூழ்நிலையில் நல்ல ஆலோசனைகளை கூறுகிறார்கள். புத்தியுள்ள கன்னிகைகளால் அவர்களுக்கு உதவிபுரிய முடியவில்லை. ஆலோசனை மாத்திரமே கூறமுடிகிறது. ஏற்ற காலத்தில் கூறப்படும் ஆலோசனை    எப்போதுமே பிரயோஜனமுள்ளது. தேவையற்ற, பிரயோஜனமற்ற எதிர்பார்ப்புக்களை கொடுக்காமல் ""நீங்கள் விற்கிறவர்களிடத்தில் போய் உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள்'' என்று நல்ல ஆலோசனையை கூறுகிறார்கள்.  


தீவட்டிக்கு தேவைப்படும் எண்ணெய். ஒருசிலர் எண்ணெயைப் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் என்று கூறுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை வாங்கவோ, விற்கவோ தங்களுக்குள் விருப்பப்பட்டால் பகிர்ந்து கொள்ளவோ முடியாது. ஆகையினால் எண்ணெய் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைக் குறிக்காது என்று சிலர் கூறுகிறார்கள். 

(ஆதி 28:18; 2இராஜா 4:1-6; லூக்கா 7:46; லூக்கா 16:6)


மணவாளன் வந்துவிட்டார் 


அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் க-யாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது (மத் 25:10).


புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளும் எண்ணெய் விற்கிறவர்களிடத்தில் போய்  தங்கள் தீவட்டிகளுக்கு எண்ணெய் வாங்கப்போகிறார்கள். அப்போது மணவாளன் வந்துவிடுகிறார். கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் ஊழியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை ஏற்ற வேளையில் செய்து முடித்துவிடவேண்டும். கடைசியில் செய்து கொள்ளலாம் என்று காலதாமதம் பண்ணக்கூடாது. காலதாமதம் எப்போதுமே ஆபத்தானது. காலதாமதம் பண்ணும் காரியத்தை  ஒரு வேளை நம்மால் செய்து முடிக்க முடியாமலேயே போய்விடலாம். 


தேவனுடைய கிருபையை  குறித்த காலத்தில், ஏற்ற வேளையில் பெற்றுக்கொள்ள வேண்டும். அவசரம் அவசரமாக தேவகிருபையை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைப்பது தவறு. மரணப்படுக்கையில் இருக்கிறவர் அவசரம் அவசரமாக தன்னை மன்னிக்குமாறு ஜெபம்பண்ணும்போது, அவருடைய உள்ளம் குழப்பத்திலேயே இருக்கும். தன்னுடைய முடிவு எப்படியிருக்கும் என்று அவருக்கே தெரியாது. தெளிவற்றவராக இருப்பார். இந்த குழப்பம் காலதாமதத்தினால் வந்த விளைவு. புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளும் தங்கள் தீவட்டிகளை எரிய வைத்து தங்கள் கரங்களில்  பிடிக்க வேண்டிய வேளையில், எண்ணெய் வாங்குவதற்காக போகிறார்கள். காலதாமதம் பண்ணுகிறார்கள். அதுபோலவே ஒரு சிலர் கிருபையை பயன்படுத்த வேண்டிய காலத்தில், கிருபையை பெற்றுக்கொள்வதற்காக முயற்சி பண்ணுகிறார்கள். 


மணவாளன் வந்துவிட்டார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மகா நாளின்போது  தம்முடைய பிள்ளைகளுக்காக மணவாளனாக வருவார். அவர் பரிசுத்த அலங்காரத்துடனே வருவார். தமது மகிமை பொருந்தினவராக வருவார். 


ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூட  கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள். தேவனுடைய சமுகத்தில் ஆயத்தமாக இருக்கிறவர்கள் மாத்திரமே நித்திய மகிமையை பெற்றுக்கொள்ள முடியும். அவரோடு நெருங்கிய ஐக்கியத்தில் இருக்கவேண்டும். இப்படிப்பட்ட பரிசுத்தவான்கள் மாத்திரமே பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பார்கள். 


மணவாளனும் ஆயத்தமாகயிருந்தவர்களும்  கலியாண வீட்டிற்குள் பிரவேசித்த பின்பு கதவு அடைக்கப்பட்டது. இரண்டு காரணங்களுக்காக கதவு அடைக்கப்படுகிறது. கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தவர்கள் அங்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும். கவனக்குறைவினால் கலியாண வீட்டை விட்டு வெளியேறிவிடக் கூடாது. அதற்காக கதவு அடைக்கப்பட்டது. தேவன் ஆதாமை ஏதேன் தோட்டத்தில் வைத்தார். ஏதேன் தோட்டத்தின் கதவு அடைக்கப்படாமல் திறந்து வைக்கப்பட்டிருந்தது.  கதவு திறந்திருந்ததினால் ஆதாம் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறிப் போய்விட்டார். பரிசுத்தவான்கள் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசித்தவுடன் அவர்கள் அங்கு பாதுகாப்பாக  அடைக்கப்பட்டிருப்பார்கள். 


கலியாண வீட்டிற்கு ஆயத்தமில்லாமல் வெளியே இருக்கிறவர்கள் உள்ளே பிரவேசித்து விடாதவாறு கதவு அடைக்கப்படுகிறது. இப்போதோ பரலோக ராஜ்யத்திற்குப் போகும் வாசல் குறுகலாகவும் நேராகவும் இருக்கிறது. ஆயினும் இந்த வாசல் இப்போது திறந்திருக்கிறது. காலம் ஒருநாள் வரப்போகிறது.  அப்போது பரலோகத்தின் வாசல் அடைக்கப்படும்.  பரலோகத்திற்கும் நரகத்திற்கும் இடையே பெரும் பிழப்பு உண்டாகும்.  


 யூதருடைய திருமண வீடுகளில் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். அழைக்கப்படாதவர்கள் வீட்டிற்குள் வரமுடியாது. ஒருவேளை திருடர்களுடைய பயத்தினால் இப்படி கதவுகள் அடைக்கப்பட்டிருக்கலாம்.


மணவாளன், மணவாட்டி, கன்னிகைகள் - இந்த உவமையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சத்தியங்கள்


    1. இயேசு கிறிஸ்துவைத் தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறவர்கள் அனைவருமே தேவனுடைய பிள்ளைகளாகிறார்கள். இரட்சிக்கப் பட்டவர்களுக்குள் வேறுபாடில்லை.

 (மத் 13:38-49;மத் 18:3)     


    2. இந்த உவமையில் எண்ணெய் என்பது பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைக் குறிப்பிடாது. (மத் 25:8)


    3. இரட்சிக்கப்பட்ட

விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். (யோவான் 3:5; ரோமர் 8:9-16) 


இரட்சிப்பு வேறு, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் வேறு. இவ்விரண்டுமே வெவ்வேறு அனுபவங்கள்.

 (லூக்கா 11:13; யோவான் 7:37-39; யோவான் 14:16-17)   


    4. உபத்திரவக் காலம் ஆரம்பமாவதற்கு முன்பாகவே சபை எடுத்துக் கொள்ளப் படும்.


    5. இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்வதற்கு தேவையான பெலனைப் பெற்றுக் கொள்வதற்காக. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் விசுவாசிகளுக்கு அருளப்படுகிறது.

 (லூக்கா 24:49; யோவான் 7:37-39; யோவான் 14:12; அப் 1:4-8)


    6. ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தில்

 எல்லா விசுவாசிகளுமே பங்குபெறுவார்கள். சபை எடுத்துக் கொள்ளப்படும்போது எல்லா விசுவாசிகளும் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.


    7. புதிய எருசலேமில் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் இருப்பார்கள்.     

 (வெளி 21:2,9-10) (எபி 11:10-16; எபி 13:14; யோவான் 14:1-3)


    8.உபத்திரவக்காலத்தில்கூட கிருபையின் கதவுகள் 

யூதருக்கும், புறஜாதியாருக்கும் அடைக்கப்படுவதில்லை. உபத்திரவக் காலத்திலும் திரளான ஜனங்கள் இரட்சிக்கப்படுவார்கள். (அப் 2:16-21; வெளி 7:1-17; வெளி  12:17)          


ஆண்டவரே ஆண்டவரே


பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து. ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள் (மத் 25:11).


 கலியாண வீட்டின் கதவு அடைக்கப்பட்ட பின்பு புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளும் வருகிறார்கள். காலதாமதமாக வருகிறார்கள்.  இதுபோலவே ஏராளமான ஜனங்கள் ஏற்ற காலத்தில் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்காமல், பரலோகத்தின் கதவு அடைக்கப்பட்ட பின்பு, அங்கு பிரவேசிப்பதற்காக கூடி வருவார்கள். ஏசா தன் சுதந்தரவீதத்தின் ஆசீர்வாதத்தை அசட்டைபண்ணி அதை இழந்துபோனான். அதன்பின்பு அவன் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள விரும்பியும் அவனால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஏசாவைப்போல பலர் பரலோக ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை அசட்டை பண்ணுகிறார்கள். மாய்மாலமாக ஜீவிக்கிறார்கள்.பரலோக ராஜ்யத்திற்குள் எப்படியாவது போய்விடலாமென்று இறுமாப்பாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு  பரலோக ராஜ்யத்தின் சந்தோஷம் தூரமாகவே இருக்கும்.  இவர்கள் பரலோக ராஜ்யத்தின்          வாசலுக்குப் போவார்கள். உள்ளே பிரவேசிக்கவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணுவார்கள். ஆனால் பரலோகத்தின் கதவு இவர்களுக்கு அடைக்கப்பட்டிருக்கும். இவர்கள் பரலோகத்திற்கு வெளியேதான் நிற்பார்கள்.  


உங்களை அறியேன்


அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத் 25:12).


கலியாண வீட்டின் கதவை தங்களுக்கும் திறக்கவேண்டுமென்று புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளும் கூறுகிறார்கள். ஆனால் மணவாளனோ ""உங்களை அறியேன்'' என்று கூறிவிடுகிறார். அடைக்கப்பட்ட கலியாண வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. தேடுகிறவர்கள் கண்டடைவார்கள். நாம் கர்த்தரை கண்டடையத்தக்கதாக, அதற்குரிய ஏற்ற காலத்தில் அவரை தேடவேண்டும். காலம் தாமதித்து கர்த்தரை தேடினால் அவரை கண்டுபிடிக்க முடியாது. தட்டுங்கள் அப்போது உங்களுக்கு திறக்கப்படும் என்று கர்த்தர் நமக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார். புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளும் பூட்டப்பட்டிருக்கும் கதவை தட்டுகிறார்கள். ஆனால் காலதாமதம் ஆனதினால்       தட்டியும்  இவர்களுக்கு கதவு திறக்கப்படவில்லை. ஆண்டவரே ஆண்டவரே எங்களுக்கு திறக்கவேண்டும் என்று புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளும் விண்ணப்பம் பண்ணியபோது ""உங்களை அறியேன்'' என்று மணவாளன் கதவை திறக்க மறுத்துவிடுகிறார். 


விழித்திருங்கள்


மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள் (மத் 25:13).


இந்த உவமையின் மையக்கருத்து ""நாம் விழித்திருக்கவேண்டும்'' என்பதாகும். இயேசுகிறிஸ்து ஏற்கனவே இந்த சத்தியத்தை வலியுறுத்தியிருக்கிறார் (மத் 24:42). அதே சத்தியத்தை இங்கு மறுபடியும் கூறுகிறார். விழித்திருப்பது நமது பிரதான கடமை. நாம் விழித்திருந்து ஜெபிக்கவேண்டும். கர்த்தரின் வருகைக்காக நாம் விழித்திருந்து ஆயத்தமாக இருக்கவேண்டும். மிகுந்த எச்சரிப்போடு ஜீவிக்க வேண்டும். கர்த்தருடைய வருகை எப்போது இருக்குமென்று நமக்குத் தெரியாது. மனுஷகுமாரன் வரும் நாளையாவது, நாழிகையையாவது நாம் அறியாதிருக்கிறோம். ஆகையினால் நாம் எப்போதுமே விழித்திருக்கவேண்டும். 


தாலந்துகளின் உவமை


புறத்தேசத்துக்கு பிரயாணம்


அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது. அவனவனுடைய திறமைக்குத் தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான் (மத் 25:14,15).


ஒரு மனுஷன் ƒபுறத்தேசத்திற்கு பிரயாணமாய் போகிறான். அவனிடம் மூன்று ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள். அவன் தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புவிக்கிறான். ஊழியக்காரர்களுடைய திறமைக்குத்தக்தாக அவர்களுக்கு தாலந்துகளைக் கொடுத்து 

அந்த மனுஷன் பிரயாணப்பட்டுப்போகிறான். ஊழியக்காரர்கள் தங்களிடம் கொடுக்கப்பட்ட தாலந்துகளை பயன்படுத்தி, சம்பாதிக்க வேண்டுமென்பது இந்த உவமையின் முக்கிய உபதேசமாகும்.


இந்த ஊழியக்காரர்களை போலவே விசுவாசிகளாகிய நமக்கும் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தாலந்துகளை கொடுத்திருக்கிறார். நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தாலந்துகளை நாம் பயன்படுத்தவேண்டும். நம்மிடம் பொறுப்பாக ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கும் ஊழியங்களில்  நாம்  உண்மையாகவும் விவேகமாகவும், சுறுசுறுப்பாகவும் ஈடுபடவேண்டும். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே நம்முடைய எஜமானாக இருக்கிறார். அவருடைய பிள்ளைகள் எல்லோருமே அவருக்கு ஊழியக்காரர்களாக இருக்கிறோம்.


புறதேசத்திற்கு போகும் மனுஷன் தன் மூன்று ஊழியக்காரர்களிடமும் தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுக்கிறான். அவர்களை சும்மா இருக்க சொல்லாமல், தன் ஆஸ்திகளை நிர்வாகம்பண்ணும் பொறுப்புக்களை தன் ஊழியக்காரர்களுக்கு கொடுக்கிறான்.  தம்முடைய ஊழியக்காரர்கள் ஊழியம் செய்யாமல் சும்மா இருப்பது இயேசுகிறிஸ்துவின் சித்தமல்ல. தங்களிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கும்  ஆஸ்தியின் பங்கிலிருந்து அவர்கள் பணிபுரியவேண்டும். 


கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் இயேசுகிறிஸ்துவிடமிருந்து தங்களிடத்திலுள்ள  எல்லாவற்றையும் பெற்றிருக்கிறார்கள். ஊழியக்காரர்களுக்கு சொந்தமாக எதுவுமில்லை. நம்முடைய பாவம் தான் நமக்கு சொந்தமாக இருக்கிறது. 


நாம் இயேசுகிறிஸ்துவிடமிருந்து தாலந்துகளை பெற்றுக்கொள்ளும்போது, அவற்றை பயன்படுத்த வேண்டும். கிறிஸ்துவுக்காக அவற்றை பயன்படுத்தவேண்டும். நம்மை நம்பி நம்முடைய தேவன் நம்மிடம் ஒப்புக்கொடுத்திருக்கும் தாலந்துகளை அவருடைய நாம மகிமைக்காக பயன்படுத்தவேண்டும். 


தன்னுடைய ஆஸ்திகளை பராமரிக்கும் பொறுப்பை தன் ஊழியக்காரர்களிடம் அந்த எஜமான் நம்பி ஒப்புக்கொடுக்கிறான். அதன்பின்பு அவன் உடனே புறத்தேசத்திற்கு பிரயாணப்பட்டுப்போகிறான். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் உன்னதத்திற்கு ஏறிப்போனபோது மனுஷருக்கு வரங்களை கொடுத்தார். நம்முடைய ஆண்டவர் பரமமேறிப்போனதைப்போல, இந்த மனுஷன் புறத்தேசத்திற்கு புறப்பட்டுப்போனான். 


இயேசுகிறிஸ்து பரமேறிப்போனபோது தம்முடைய சபைக்குத் தேவையான எல்லாக் காரியங்களையும் தம்முடைய ஊழியக்காரரிடம் பொறுப்பாக ஒப்புக்கொடுத்திருக்கிறார். இயேசுகிறிஸ்து தற்போது நம் மத்தியில் பிரத்தியட்சமாக காணப்படவில்லை. ஆயினும் தம்முடைய சபையை பராமரிப்பதற்கு தேவையான அனைத்து காரியங்களையும் கிறிஸ்து இயேசு தம்முடைய ஊழியக்காரர்களிடம் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.  கிறிஸ்து பரமேறிப்போனபோது தம்முடையது அனைத்தையும் தமது சபையிடம் ஒப்புக்கொடுத்திருக்கிறார். 


ஊழியக்காரர்களுக்கு அவர்களுடைய திறமைக்குத்தக்கதாக புறத்தேசத்திற்கு போன மனுஷன் தாலந்துகளை கொடுத்தான். இயேசுகிறிஸ்துவும் தம்முடைய பிள்ளைகளுக்கு தாலந்துகளை கொடுத்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் வெகுமதிகள் விலையேறப்பெற்றவை. அவர் தமது சுயஇரத்தத்தினாலே இவையெல்லாவற்றையும் சம்பாதித்திருக்கிறார். இவை எதுவும் மனுஷருக்குரியதல்ல. எந்த மனுஷனாலும் கிறிஸ்துவின் தாலந்துகளை சம்பாதிக்க முடியாது. அவர் சிலருக்கு அதிகமான தாலந்துகளையும், வேறு சிலருக்கு குறைவான தாலந்துகளையும் அவனவனுடைய திறமைக்குத் தக்கதாக கொடுக்கிறார்.


தேவனுடைய தெய்வீக பராமரிப்பு எல்லோருக்கும் ஒன்றுபோல் கொடுக்கப்படுவதில்லை. தம்முடைய சித்தத்தின் பிரகாரமாகவும், மனுஷருடைய திறமைக்குத்தக்க பிரகாரமாகவும் தேவன் தம்முடைய தாலந்துகளை கொடுக்கிறார். இந்த திறமையும் தேவனிடமிருந்தே வருகிறது. ஆவிக்குரிய வரங்களை தேவன் தமது கிருபையினால் தமது பிள்ளைகளுக்கு கொடுக்கிறார். 


தேவனுடைய பிள்ளைகள் எல்லோருக்குமே குறைந்த பட்சம் ஏதாவது ஒரு தாலந்தாகிலும் கொடுக்கப்பட்டிருக்கும். நாம் ஒவ்வொருவரும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தாலந்துகளை மூலதனமாக வைத்து நமது ஊழியத்தை ஆரம்பிக்கவேண்டும். ஆரம்பத்திலேயே எல்லா தாலந்துகளும் நமக்கு கொடுக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கக்கூடாது. 


நம்முடைய ஆத்துமாவே தேவன் நமக்கு கொடுத்திருக்கும் மிகப் பெரிய தாலந்தாகும். தேவன் நம்மிடம் நம்முடைய ஆத்துமாவை நம்பி ஒப்புக்கொடுத்திருக்கிறார். நாம் அதை பாதுகாத்து பராமரிக்க வேண்டும். நம்மை சுற்றிலுமுள்ள ஜனங்களுக்கு நாம் பிரயோஜனமுள்ளவர்களாக இருக்கவேண்டும். நம்மால் முடிந்த எல்லா உதவிகளையும் நாம் செய்யவேண்டும். மற்றவர்களுக்கு உபகாரம் செய்யவேண்டுமே தவிர, உபத்திரவம் செய்து விடக்கூடாது. 


எல்லோருமே ஒன்றுபோல் இருப்பதில்லை. நம்முடைய திறமைகளில் வித்தியாசம் இருக்கும்.  நமக்கு கொடுக்கப்படும் வாய்ப்புக்களிலும் வித்தியாசம் இருக்கும். தேவன் நம் ஒவ்வொருவரையும் தம்முடைய ஊழியத்திற்கு அழைக்கிறார். தேவனுடைய ஊழியத்தில் பல பகுதிகள் உள்ளன. அதில் ஒரு பகுதியை ஒரு சிலருக்கும், வேறு பகுதியை வேறுசிலருக்கும் பகிர்ந்து கொடுக்கிறார். நாம் எல்லோருமே வித்தியாசமான ஊழியங்களை செய்தாலும், எல்லோரும் சேர்ந்து தேவனுடைய ஊழியத்தையே செய்கிறோம். நமது சரீரத்தில் பல அவயவங்கள் இருப்பதுபோல தேவனுடைய ஊழியத்திலும் பல பகுதிகள் உள்ளன.


சம்பாதித்தான்


ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக் கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான் (மத் 25:16,17).


மூன்று ஊழியக்காரர்களில் இரண்டுபேர்  உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள். தங்களிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட தாலந்துகளை நல்லமுறையில் பயன்படுத்துகிறார்கள். தங்களிடமுள்ள தாலந்துகளைக் கொண்டு வியாபாரம்பண்ணி மேலும் பல தாலந்துகளை சம்பாதிக்கிறார்கள். தங்களுடைய எஜமான் புறத்தேசத்திற்கு போனவுடனே தாலந்துகளை பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். காலதாமதம் செய்யவில்லை. 


விசுவாசிகளாகிய நமக்கும் 

நமது தேவன் பல ஊழியப்பொறுப்புக்களை கொடுத்திருக்கிறார். நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்களை  காலதாமதம் பண்ணாமல் விரைவாக செய்து முடிக்கவேண்டும். இரண்டு ஊழியக்காரர்களும் போய் வியாபாரம் பண்ணினார்கள். உண்மையான விசுவாசி ஆவிக்குரிய வியாபாரியைப்போல இருக்கவேண்டும். 


வியாபாரம் பண்ணுகிறவர் தான் செய்ய வேண்டிய தொழிலை முதலாவது தெரிந்தெடுப்பார். அதன்பின்பு அந்த தொழிலை எப்படி செய்வது என்று ஆர்வமாக கற்றுக்கொள்வார். தான் செய்யும் தொழில் நன்றாக நடைபெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார். தன்னுடைய வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, மற்ற வேலைகளையெல்லாம் தன்னுடைய தொழிலுக்கு உட்படுத்துவார். தான் செய்யும் தொழிலில் தனக்கு நியாயமாக கிடைத்த வருமானத்தில்  தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்வார். 


நாம் தொழில் செய்வதற்கு முதலீடுபண்ண,  நமக்கு சொந்தமாக மூலதனம் எதுவுமில்லை.  நம்முடைய எஜமானன் நம்மிடம் பொறுப்பாக ஒப்புக்கொடுத்த தாலந்துகளை மூலதனமாக முதலீடுபண்ணி ஊழியம் செய்யவேண்டும். நம்முடைய எல்லா சிந்தனைகளும், செயல்களும்  தேவனை மகிமைப்படுத்த வேண்டும். 


சுவிசேஷத்தின் பிரமாணங்களை நாம் கைக்கொள்ளவேண்டும். பிரமாணங்கள் எந்த நோக்கத்திற்காக நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த நோக்கத்தை நாம் புரிந்துகொண்டு, அதற்கு கீழ்ப்படிந்து ஜீவிக்கவேண்டும். தேவனோடு ஒப்புரவாகி ஐக்கியமாக இருக்கவேண்டும். ஆவியானவர் நமக்கு கொடுத்திருக்கும் வரங்களையும் கிருபைகளையும் தேவநாம மகிமைக்காகவும் பரிசுத்தவான்களின் பிரயோஜனத்திற்காகவும் பயன்படுத்தவேண்டும்.


இரண்டு ஊழியக்காரர்களும் நல்லமுறையில் வியாபாரம்பண்ணுகிறார்கள். தங்களிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட தாலந்துகளை இரட்டிப்பாக்குகிறார்கள். சுறுசுறுப்புள்ளவனுடைய கைகள் ஐசுவரியத்தை சம்பாதிக்கும். நற்கிரியைகளை செய்வதினால் ஐசுவரியமும் ஆறுதலும் பெருகும். நம்முடைய ஆவிக்குரிய ஊழியத்திலும், நாம் சோம்பேறிகளாக இல்லாமல் உற்சாகமாக ஊழியம் செய்யவேண்டும். நாம் கர்த்தரிடமிருந்து எவ்வளவு பெற்றுக்கொண்டோமோ, அதற்கு தகுந்தாற்போல் சம்பாதிக்கவேண்டும். தேவன் நமக்கு ஏராளமான வரங்களை கொடுத்திருந்தால் அவை எல்லாவற்றையுமே நாம் பயன்படுத்தவேண்டும். பெரிய தொழில்களைச் செய்கிறவர்கள் பெரிய நிர்வாகம் பண்ணுவார்கள். அதுபோல ஆவிக்குரிய வரங்களை அதிகமாக பெற்றிருக்கிறவர்கள் பெரிய ஊழியங்களை செய்ய வேண்டும். 


இரண்டு தாலந்துகளை பெற்றுக்கொண்டவன், அந்த இரண்டு தாலந்துகளை மூலதனமாக வைத்து வியாபாரம்பண்ணுகிறான். அவனுடைய வியாபாரம் இரண்டு தாலந்துகளுக்கு ஏற்றாற்போலவே இருக்கும். அவனுடைய தொழிலில் இரண்டு தாலந்துகளுக்குரிய முன்னேற்றமே காணப்படும். 


தேவன் நம்மிடம் எத்தனை       தாலந்துகள் கொடுத்திருந்தாலும், அவற்றை பயன்படுத்துவதற்கு நல்ல வாய்ப்புக்களை தேடிப்பார்க்கவேண்டும். முழு ஆற்றலோடு அவற்றை பயன்படுத்தவேண்டும். நாம் மற்றவர்களைப்போல 

அதிகமாக ஊழியம் செய்யவில்லையென்றாலும், தேவன் நமக்கு கொடுத்திருக்கும் தாலந்துகளுக்கு ஏற்ப குறைவில்லாமல் ஊழியம் செய்யவேண்டும். ஐந்து தாலந்துகளை பெற்றுக்கொண்டவன் ஐந்து தாலந்துகளுக்குகேற்பவும், இரண்டு தாலந்துகளை பெற்றுக்கொண்டவன் இரண்டு தாலந்துகளுக்குகேற்பவும் குறைவில்லாமல் ஊழியம் செய்யவேண்டும். 


புதைத்து வைத்தான் 


ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான் (மத் 25:18).


ஒரு தாலந்தை வாங்கினவன் ஒரு வேலையும் செய்யாமல் சும்மாயிருக்கிறான். நிலத்தை தோண்டி தன் எஜமானுடைய பணத்தை புதைத்து வைக்கிறான். இவன் உண்மையில்லாத ஊழியக்காரன். இவனுக்கு ஒரு தாலந்து மாத்திரமே கொடுக்கப்பட்டது. இவனுடைய திறமையும் ஒரு தாலந்துக்கு மாத்திரமே பெறும். அந்த ஒரு தாலந்தைக்கூட  இவன் பயன்படுத்தவில்லை. அந்த தாலந்தை நிலத்தை தோண்டி புதைத்துவிடுகிறான். இவனைப்போலவே கர்த்தருடைய பிள்ளைகளில் சிலர் இருக்கிறார்கள். தங்களுக்கு கொடுக்கப்படும் தாலந்துகளை பயன்படுத்தாமல்  புதைத்துவிடுகிறார்கள். ஒரு தாலந்து மாத்திரமல்ல, ஒரு சிலர் தங்களுக்கு கொடுக்கப்படும் ஐந்து தாலந்துகளைக்கூட நிலத்தில் புதைத்துவிடுகிறார்கள். தங்களுடைய  திறமைகள், வாய்ப்புக்கள், கல்வியறிவு, ஐசுவரியம் போன்ற எல்லா திறமைகளையும் எந்தவிதத்திலும் பயன்படுத்தாமல் புதைத்துப் போடுகிறார்கள். நம்மிடம் கொடுக்கப்பட்ட தாலந்துகளுக்கு நம்முடைய ஆண்டவர் நிச்சயமாகவே நம்மிடம் கணக்கு கேட்பார். 


ஒரு தாலந்தை வாங்கினவன் அதை நிலத்தை தோண்டி புதைத்து வைக்கிறான். இவனிடம் ஐந்து தாலந்துகளை கொடுத்திருந்தால் அவை அனைத்தையும் 

நிலத்தை தோண்டி புதைத்துப்போட்டிருப்பான். 

 ஒரு சிலரால் தேவனுக்கு அதிகமாக ஊழியம் செய்யமுடியும். ஆனால் தங்களால் முடிந்த அளவிற்கு ஊழியம் செய்யாமல் மிகவும் குறைவாகவே ஊழியம் செய்வார்கள். இதற்கு சில சாக்குபோக்குகளையும் கூறுவார்கள். தாங்கள் சொன்ன பிரகாரம் செய்யமாட்டார்கள்.  தங்களால் முடிந்த பிரகாரமும் செய்யமாட்டார்கள். ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருப்பார்கள். இவர்கள் சோம்பேறிகள்.  இவர்களிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு தாலந்தைக்கூட இவர்கள் முறையாக பயன்படுத்தாமல் அக்கறையில்லாமல் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். 


ஒரு தாலந்தை வாங்கினவனோ போய் நிலத்தை தோண்டி தன் எஜமானுடைய பணத்தை புதைத்து வைக்கிறான். யாராவது இதை திருடிக்கொள்வார்களோ என்று பயந்து  புதைத்துவிடுகிறான். பணம் ஒரு குப்பைமேட்டைபோல் இருக்கிறது. குப்பைமேடாக இருக்கும்போது அதனால் ஒரு பயனுமில்லை.  அந்த குப்பையை எடுத்து நிலத்தில் உரமாக பயன்படுத்தும்போது அது அதிக பயனுள்ளதாக இருக்கும். ஆவிக்குரிய வரங்களும் இதுபோலவே உள்ளது. வரங்களை பயன்படுத்தாமல் குவித்து வைப்பதினால் ஒரு பயனுமில்லை. அதை பயன்படுத்தும் போதுதான் அதனால் பிரயோஜனமுண்டாகும். தேவன் நமக்கு அநேக வரங்களை கொடுத்திருக்கிறார். அவற்றை பயன்படுத்துவதற்காகவே கொடுத்திருக்கிறார். நம்மில் அநேகர் தேவன் நம்மிடம் ஒப்புக்கொடுத்திருக்கும் வரங்களை பயன்படுத்தாமல் புதைத்துப்போடுகிறோம்.


ஒரு தாலந்தை வாங்கினவன் தன் எஜமானுடைய பணத்தை புதைத்து வைக்கிறான்.  இது இவனுடைய பணமல்ல. எஜமானுடைய பணம். ஆனால் இவனோ தன் எஜமானுடைய பணத்தை தன்னுடைய பணம்போல நினைத்து  தனக்கு இஷ்டமானபடி அதை புதைத்து வைக்கிறான். எஜமானுடைய மற்ற இரண்டு ஊழியக்காரர்களும் வியாபாரம்பண்ணி தாலந்துகளை சம்பாதிக்கும்போது இவனோ பணத்தை புதைப்பதற்காக நிலத்தை தோண்டிக்கொண்டிருக்கிறான். இந்த சூழ்நிலையை ஆவிக்குரிய காரியங்களிலும் நாம் பார்க்கிறோம். ஒரு சில ஊழியக்காரர்கள் உற்சாகமாக ஊழியம் செய்கிறார்கள். வேறு சிலரோ எந்த ஊழியமும் செய்யாமல் சும்மாயிருக்கிறார்கள். தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தாலந்துகளை பயன்படுத்தாமல், அதை புதைப்பதற்கு நிலத்தில் குழிதோண்டிக் கொண்டிருக்கிறார்கள். 


கணக்குக் கேட்டான்


வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான் (மத் 25:19).


 புறதேசத்திற்கு பிரயாணப்பட்டுப்போனவன் வெகுகாலமான பின்பு திரும்பி வருகிறான். போகும் முன்பு தன் ஊழியக்காரர்களிடம் அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக தன் ஆஸ்திகளை அவர்களிடம் ஒப்புக்கொடுத்திருந்தான். இப்போதோ அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்த தாலந்துகளுக்கு கணக்கு கேட்கிறான். புறதேசத்திற்கு போனவுடனே எஜமான் கணக்கு கேட்கவில்லை. வெகுகாலமான பின்பு      கணக்கு கேட்கிறான். அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தாலந்துகளை கொண்டு வியாபாரம்பண்ணி சம்பாதிக்க அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கிறான். 


வெகுகாலமாக எஜமான் வரவில்லை. இறுதியாக அவன் திரும்பி வரும் நாள் வந்துவிடுகிறது. எஜமான் திரும்பி வந்ததும் அவர்களிடம் கணக்கு கேட்கிறான். பரமேறிப்போன நம்முடைய ஆண்டவர் இயேசுகிறிஸ்து மறுபடியும் இங்கு திரும்பி வரும்போது நம்மிடமும் கணக்கு கேட்பார். நம்முடைய ஆத்துமாவிற்கு நாம் என்ன நன்மை செய்திருக்கிறோம் என்று நம்மிடம் கணக்கு கேட்பார். அத்தோடு மற்ற ஆத்துமாக்களுக்கும் நாம் என்ன நன்மையை செய்திருக்கிறோம் என்று நம்மிடம் விவரமாக கணக்கு கேட்பார்.  


சம்பாதித்தேன்


 அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்பிவித்தீரே; அவைகளைக் கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான் (மத் 25:20).


ஐந்து தாலந்தை வாங்கியவனும், இரண்டு தாலந்தை வாங்கியவனும் தங்கள் எஜமானுக்கு  உண்மையுள்ள ஊழியக்காரர்களாக இருக்கிறார்கள். தங்கள் எஜமான் கணக்கு கேட்கும்போது அவனுக்கு உண்மையோடும் பணிவோடும் கணக்கு ஒப்புவிக்கிறார்கள். தங்களிடம் ஒப்புவிக்கப்பட்ட தாலந்துகளைக் கொண்டு மேலும் அதிகமான தாலந்துகளை சம்பாதித்ததாக இவ்விரண்டு ஊழியக்காரர்களும் கணக்கு ஒப்புவிக்கிறார்கள். தங்களிடம் ஒப்புவிக்கப்பட்ட தாலந்துகளுக்காகவும், பொறுப்புக்களுக்காகவும் இவர்கள் நன்றியுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.


இவர்களைப்போலவே கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியக்காரர்களும் தங்களிடம் ஒப்புவிக்கப்பட்ட ஊழியங்களுக்காக கர்த்தருக்கு  நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும். ஆண்டவரே அப்பிரயோஜனமான எங்களிடம் இவ்வளவு மகத்துவமான ஊழியத்தை நம்பி ஒப்புக்கொடுத்திருக்கிறீரே என்று நாம் நன்றியோடும் பணிவோடும் கூறவேண்டும். 


இயேசுகிறிஸ்துவிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டதை மறந்து போகாமல் நினைவுகூரவேண்டும். அப்போதுதான் ஆண்டவர் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பது நமக்குத் தெரியும். நாம் பெற்றுக்கொண்ட அளவிற்கு ஏற்றபிரகாரம் அவருக்கு கணக்கு ஒப்புவிக்க நாம் ஆயத்தமாக இருப்போம். 


கர்த்தருக்காக நாம் செய்யும் ஊழியங்களில் வளர்ச்சி காணப்படும்போது நமது உள்ளத்தில் பெருமை வரக்கூடாது. தேவனுடைய கிருபையையும், அவர் நமக்கு கொடுத்திருக்கும் சிலாக்கியத்தையும் நினைத்து அவருக்கு நன்றி கூரவேண்டும். நம்மை நம்பி ஒப்புக்கொடுத்திருக்கும் ஊழியத்தை உண்மையோடு செய்யவேண்டும். தேவன்  நம்மை உயர்த்தும்  போது நாம் தாழ்மையோடு இருக்கவேண்டும். நாம் கர்த்தருக்கு அதிகமாக ஊழியம் செய்யும்போது  அவர் நமக்கு மேலும் பல ஊழியப்பொறுப்புக்களை கொடுப்பார். தேவனிடமிருந்து அதிகமாக பெற்றுக்கொள்கிறவர்களிடம் அதிகமாக எதிர்பார்க்கப்படும்.


தங்கள் எஜமானிடமிருந்து தாலந்துகளை பெற்றுக்கொண்ட இவ்விரண்டு ஊழியக்காரர்களும் அந்த தாலந்தைக்கொண்டு  தாங்கள் சம்பாதித்த தாலந்துகளுக்கு கணக்கு ஒப்புவிக்கிறார்கள். இவர்களைப்போலவே தேவனுடைய ஊழியக்காரர்களும் கர்த்தருக்கு தங்கள்     ஊழியத்தைக்குறித்து   கணக்கு ஒப்புவிக்கவேண்டும். நமது விசுவாசத்தை கிரியையில் காண்பிக்கவேண்டும் (யாக் 3:13).  கிரியையில்லாத விசுவாசம் செத்ததாக இருக்கிறது.


இரண்டு தாலந்தைப் பெற்றுக்கொண்டு வேறு இரண்டு தாலந்தை  சம்பாதித்த ஊழியக்காரன் தன் எஜமானிடம் சந்தோஷமாக கணக்கு ஒப்புவிக்கிறான். ஐந்து தாலந்தை வைத்து வேறு  ஐந்து தாலந்தை சம்பாதித்தவனைப்போல இவனும் சந்தோஷமாக கணக்கு ஒப்புவிக்கிறான். கணக்கு ஒப்புவிக்கும் நாளில் நமது உண்மைக்கும் நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். நமது ஊழியத்தில் எவ்வளவு வளர்ச்சி உண்டாயிற்று என்பதைவிட நமது இருதயத்தின் உண்மையும் நேர்மையும் மிகவும் முக்கியமானது. நமக்கு எவ்வளவு வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்பதைவிட, நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புக்களை எப்படி பயன்படுத்தினோம் என்பது மிகவும் முக்கியம். 


உண்மையாயிருந்தாய்


அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.  இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான் (மத் 25:21-23).


எஜமான் இவ்விரண்டு ஊழியக்காரர்களையும் பாராட்டுகிறான். ""நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே'' என்று அவர்களை புகழ்ந்து கூறுகிறான். நாம் தேவனை இப்போது மகிமைப்படுத்தி கனப்படுத்தினால், ஏற்றவேளை வரும்போது அவர் நம்மை கனப்படுத்துவார். இயேசு கிறிஸ்துவை நாம் இப்போது மறுதலிக்காமல் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டால், ஏற்றவேளை வரும்போது அவரும் நம்மை மறுதலிக்காமல் அங்கீகரித்து ஏற்றுக்கொள்வார். கிறிஸ்துவுக்காக உண்மையாக ஊழியம் செய்கிறவர்களை ""நல்லது உண்மையும் உத்தமமும் உள்ளவர்களே'' என்று அழைப்பார். நம்முடைய ஊழியங்களை அங்கீகரிப்பார். நாம் செய்யும் ஊழியங்களை ஆராய்ந்து, அளவிட்டுப்பார்த்து ""நல்லது'' என்று அறிக்கை செய்வார். 


தமக்காக ஊழியம் செய்வதற்கு இயேசு கிறிஸ்து நல்ல ஊழியக்காரர்களை மாத்திரமே அழைக்கிறார். நல்ல ஊழியக்காரர்கள் உத்தமமும் உண்மையும் உள்ளவர்களாக இருப்பார்கள். 


நாம் நன்மையான காரியங்களை நன்றாகச்செய்யும்போது, நமது நல்ல வேலைகளுக்ககாக நாம் பாராட்டப்படுவோம். ஆனால் ஒருசில எஜமான்கள் தங்கள் வேலைக்காரர்களை நல்ல வார்த்தைகளைக்கூறி பாராட்டமாட்டார்கள். தங்களால் பாராட்டப்படுவதற்கு ஊழியக்காரர்கள் தகுதியற்றவர்கள் என்று நினைத்து அமைதியாக இருந்துவிடுவார்கள்.  நம்முடைய எஜமான் இயேசு கிறிஸ்துவோ தம்முடைய ஊழியக்காரர்களை பாராட்டுகிறவர். நம்மை மனுஷர் பாராட்டவில்லை என்றாலும், நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாம் செய்யும் நல்ல ஊழியங்களைப்பார்த்து நம்மை பாராட்டுவார். அவர் நம்மிடம் ""நல்லது, உத்தமமும் உண்மையும் உள்ள ஊழியக்காரனே'' என்று கூறும்போது நமக்கு சந்தோஷமாக இருக்கும். 


இந்த உவமையில் நன்றாக ஊழியம் செய்த தன்னுடைய ஊழியக்காரர்களில் இரண்டுபேரை எஜமான் பாராட்டுகிறான்.  அவர்களுடைய கடினமான உழைப்பிற்கு அவன் வெகுமதி கொடுக்கிறான்.  ""நீங்கள் கொஞ்சத்திலே உண்மையாய் இருந்தீர்கள், அநேகத்தில்மேல் உங்களை அதிகாரியாக வைப்பேன்'' என்று எஜமான் புகழ்ந்து பேசுகிறான்.  ராஜாக்களுடைய அரண்மனைகளிலும், மிகப்பெரிய செல்வந்தர்களுடைய வீடுகளிலும் உண்மையுள்ளவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். நம்பிக்கைக்குரியவர்களை பெரும் பதவிகளில் நியமிப்பார்கள். சிறிய காரியங்களில் உண்மையுள்ளவர்களாக இருக்கிறவர்களுக்கும் பெரிய பொறுப்புக்கள் கொடுக்கப்படும். 


நம்முடைய எஜமான் இயேசுகிறிஸ்து தமக்காக ஊழியம் செய்வதற்கு உண்மையுள்ள ஊழியக்காரர்களை மாத்திரமே அங்கீகரிக்கிறார்.  தம்மை மகிமைப்படுத்துகிற ஊழியக்காரர்களை கிறிஸ்துவும்  மகிமைப்படுத்துகிறார். இந்த பூமியில் கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் தரித்திரர்களாக இருந்தாலும் பரலோகத்தில் அவர்கள் ஜசுவரியவான்களாக இருப்பார்கள். இங்கு அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவும் பாடுகளை அனுபவிக்கிறவர்களாகவும். இருந்தாலும், பரலோகத்தில் அவர்கள் கிறிஸ்துவோடு ஆளுகை செய்கிறவர்களாகவும் இருப்பார்கள்.


நாம் செய்யும் ஊழியத்தின் அளவுக்கும் நமக்கு கொடுக்கப்படும் வெகுமதியின் அளவுக்கும் மிகுந்த வித்தியாசம் இருக்கும். நாம் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாக இருந்தாலும், அநேகத்தின்மேல் அதிகாரியாக வைக்கப்படுவோம். கொஞ்சம் உழியத்தை உண்மையாக செய்தாலும் நமக்கு அநேக ஆசீர்வாதங்கள் கொடுக்கப்படும். நாம் ஒரு சில காரியங்களில் தேவனை மகிமைப்படுத்தினாலும், பல காரியங்களில் நாம் தேவனோடுகூட மகிமை அடைவோம். 


தேவனிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட ஊழியங்களை உண்மையாக செய்யவேண்டும். இந்த உலகத்தில் நாம் தேவனுக்காக கொஞ்சம் ஊழியத்தை செய்தாலும் அதை உண்மையாக செய்யவேண்டும். உண்மையாக ஊழியம் செய்யும்போது நமக்கு பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் நியமிக்கப்பட்டிருக்கும். நாம் தேவனுக்காக கொஞ்சம் செய்தாலும், அதை உண்மையாக செய்யும்போது, நமக்கு மிகுந்த ஆசீர்வாதம் உண்டு. 


உண்மையுள்ள இரண்டு ஊழியக்காரர்களையும் எஜமான் பாராட்டிப்பேசும்போது ""உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி'' என்று கூறுகிறான். நாம் ஆசீர்வதிக்கப்படுவதே நமக்கு சந்தோஷம்.  ஆசீர்வாதமான இடம் நமக்கு சந்தோஷமான இடம். பரிசுத்தவான்களின் ஐக்கியமும், பரிசுத்த தேவனுடைய பிரசன்னமும் நமக்கு மிகுந்த சந்தோஷத்தைக்கொடுக்கும். இந்த சந்தோஷம் பூரணமாக இருக்கும். இதுவே எஜமானுடைய சந்தோஷமாகும். 


தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு தமது சுய இரத்தத்தினால் சம்பாதித்த சந்தோஷத்தை கிருபையாக கொடுக்கிறார். தம்முடைய பாடுகளினாலும், வருத்தத்தினாலும், வேதனையினாலும், நம்முடைய மீட்பர்  சந்தோஷத்தை கிரயமாக வாங்கி மீட்கப்பட்டவர்களுக்கு அதை இலவசமாக கொடுக்கிறார். இது தேவனுடைய சுத்த கிருபை. தம்முடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பதற்கு உண்மையுள்ள ஊழியக்காரர்களை அனுமதிக்கிறார். கர்த்தருடைய ஊழியக்காரர்கள் அவரோடு உடன் சுதந்தரராக இருக்கிறார்கள். மகிமையடைந்த பரிசுத்தவான்கள் கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பார்கள். ஆயத்தமாக இருக்கிறார்கள் கலியாண விருந்தில் பந்தியிருப்பார்கள். பரலோகத்தில் பிரவேசிக்கிறவர்கள் அங்கு நித்திய காலமாக வாசம்பண்ணுவார்கள்.  


ஒரு தாலந்தை வாங்கினவன்


ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். ஆகையால், நான் பயந்துபோய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்           (மத் 25:24,25).


ஒரு தாலந்தை வாங்கினவன் சோம்பலுள்ளவனாக இருக்கிறான். தன் எஜமானுடைய பணத்தை நிலத்தை தோண்டி புதைத்துவைத்துவிட்டான். தன்னுடைய தவறான செய்கைக்கு எஜமானிடம் சாக்குப்போக்கு கூறுகிறான். இவனுக்கு ஒரு தாலந்துதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு தாலத்திற்கு மாத்திரம் இவன் கணக்குகொடுத்தால் போதுமானது. தேவன் நமக்கு கொடுத்ததற்கு மாத்திரமே 

நம்மிடம் கணக்கு கேட்பார். நமக்கு கொடுத்ததற்கு அதிகமாக 

நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டுமென்று எதிர்பார்க்கமாட்டார். ஆனால் நாம் பெற்றுக்கொண்டதற்கு கட்டாயம் கணக்கு ஒப்புவித்தே ஆகவேண்டும். 


ஒரு தாலந்தை வாங்கினவன் தன் எஜமானை நோக்கி ""இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும்'' என்று கூறுகிறான். மற்றவர்களைப்போல தனக்கு கொடுக்கப்பட்ட தாலந்தைக் கொண்டு இவன் அதிகமாக சம்பாதிக்கவில்லையென்றாலும், தனக்கு கொடுக்கப்பட்ட தாலந்தை தான் அழித்துப்போடவில்லையென்று நிதானமாக கூறுகிறான்.  எஜமான் தன்னிடம் கொடுத்ததை பாதுகாப்பாக வைத்திருப்பதே சிறந்த ஊழியம் என்று இவன் நினைக்கிறான். அதிக தாலந்துகளை சம்பாதிப்பதைவிட தன்னிடம் கொடுக்கப்பட்ட தாலந்தை பத்திரமாக வைத்திருப்பது இவனுக்கு முக்கியமானதாக தெரிகிறது. சோம்பலுள்ள ஊழியக்காரர்கள் இவனைப்போலவே இருப்பார்கள். கர்த்தருக்காக எந்த ஊழியத்தையும் பிரயாசப்பட்டு செய்யமாட்டார்கள். ஆயினும் அதிகமாக ஊழியம் செய்கிறவர்களைப்போல தங்களையும் பாராட்டவேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். 


ஒரு தாலந்தை வாங்கினவன்   எஜமானிடம் வந்து ""இதோ உம்முடையதை வாங்கிக்கொள்ளும்'' என்று கணக்கு ஒப்புவிக்கிறான். இவ்வாறு கணக்கு ஒப்புவித்தால் போதுமானது என்று நினைக்கிறான். கர்த்தருடைய பிள்ளைகளில் அநேகர் இப்படித்தான் கர்த்தருக்கு கணக்கு ஒப்புவிக்கிறார்கள். இந்த பூமியில் கர்த்தருக்காக எந்த ஊழியமும் செய்யாவிட்டாலும், பரலோகத்தின் மேன்மை தங்களுக்கு கிடைக்கும் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தங்களுக்கு கொடுக்கப்பட்ட தாலந்தை பாதுகாத்துக்கொண்டால் போதுமானது என்று நினைக்கிறார்கள். தாலந்தை பயன்படுத்தவேண்டும் என்னும் தரிசனம் இவர்களிடத்தில் இல்லை.  தேவன் தங்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை என்று இவர்கள் தவறாக நினைக்கிறார்கள். 


தன் எஜமான் கொடுத்த ஒரு தாலந்தை இவன் நிலத்தைத்தோண்டி புதைத்துவைத்திருக்கிறான். தனக்கு கொடுக்கப்பட்ட தாலந்தை தான் தவறாக பயன்படுத்தவில்லை என்றும், அதை திருடிக்கொண்டு வேறு எங்கும் ஓடிவிடவில்லை. என்றும், அதை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் தன் எஜமானிடம் கூறுகிறான். இதற்காக தன் எஜமான் தன்னை பாராட்டவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறான்.  தான் புதைத்து வைத்திருந்த தாலந்தை மறுபடியும் தோண்டி எடுத்து தன் எஜமானிடம் திரும்பக்கொடுக்கிறான். 


ஒரு தாலந்தை வாங்கினவன் பொல்லாதவனும் சோம்பனுமாக இருந்தாலும் தன்னுடைய சோம்பல் தனத்தை நியாயப்படுத்துகிறான். ""நீர் கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன், ஆகையால் நான் பயந்துபோனேன்'' என்று தன் பயத்தை வெளிப்படுத்துகிறான். பக்தியுள்ளவர்கள் தேவனைப்பற்றி சிந்திக்கும்போது அவருடைய அன்பே அவர்களுக்கு பிரதானமாக வெளிப்படும். தேவனுடைய அன்பை நினைவுகூர்ந்து பரிசுத்தவான்கள் கர்த்தரைத்துதிப்பார்கள். கர்த்தருடைய ஊழியத்தை உண்மையாகவும் உத்தமமாகவும் செய்வார்கள். துன்மார்க்கர்கள் தேவனைப்பற்றி நினைக்கும்போது அவர்களுக்கு பயம் உண்டாகும். தேவனுடைய ஆக்கினையையும் கோபத்தையும் நினைத்து பயப்படுவார்கள். நமக்கு பயம்வரும்போது. நாம் பொல்லாதவர்களாகவும் சோம்பலுள்ளவர்களாகவும் மாறிவிடுவோம். பயம் நம்மை சீரழித்துவிடும்.


ஒரு தாலந்தை வாங்கினவன் தன் எஜமானைப்பற்றி அவர் கடினமுள்ள மனுஷன் என்று அறிந்து வைத்திருக்கிறான். தான் பெற்றுக்கொண்ட தாலந்தை மேலும் அதிகமாக சம்பாதிக்காமல்,  நிலத்தை புதைத்து வைத்ததற்கு காரணம் கூறுகிறான். தன் எஜமான் கடினமுள்ள மனுஷனென்று இவன் எப்படி  அறிந்து கொண்டான் என்று தெரியவில்லை. கர்த்தருடைய ஊழியக்காரர்களில் சிலர் ஒரு ஊழியமும் செய்யாமல் இவனைப்போலவே சாக்குப்போக்கு கூறுகிறார்கள். கர்த்தரை கடினமுள்ளவர் என்று அறிவிக்கிறார்கள். இந்த உலகம்முழுவதும் அவரை நல்லவர் என்றும், அன்புள்ளவர் என்றும் கிருபையுள்ளவர் என்றும், இரக்கமுள்ளவர் என்றும் அறிந்திருக்கும்போது அவருடைய சத்துருக்கள் மாத்திரம் அவரை கடினமுள்ளவர் என்று அறிந்திருக்கிறார்கள். 


இந்த பூமி கர்த்தருடைய நன்மையினால் நிறைந்திருக்கிறது. இவர் கடினமுள்ளவர் அல்ல. இவர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவர் அல்ல. விதைக்கிற இடத்தில் அறுக்காமல் இருக்கிறவரும் அல்ல. விதைத்ததை அறுப்பதற்காக இயற்கையின் மூலமாக பல பராமரிப்புக்களை கொடுக்கிறார். சூரியனை உதிக்கச்செய்து வெளிச்சத்தைக் கொடுக்கிறார். மழையை பெய்யச்செய்து தண்ணீரைக் கொடுக்கிறார். பட்சபாதம் இல்லாமல் நல்லோர்மீதும் பொல்லார் மீதும் தம்முடைய மழையை பெய்யச்செய்கிறார். மனுஷருடைய இருதயங்களை சந்தோஷத்தினாலும் நன்மையினாலும் நிறப்புகிறார். 


துன்மார்க்கர்கள் தங்களுடைய பாவங்களை அங்கீகரிப்பதில்லை. தேவனுடைய கிருபையை புறக்கணித்துவிட்டு பாவத்தில்         ஜீவிக்கிறார்கள்.  பாவமும் அழிவும் இவர்களுடைய வாசற்படியில் படுத்திருக்கும்போது, தங்கள் மீது வந்திருக்கும் சாபத்திற்கு தேவனை குறைகூறுகிறார்கள். நாம் அழிந்துபோனால் நமது சுய பாவமே நமது அழிவுக்கு காரணமாக இருக்கும். நம்முடைய அழிவுக்கு தேவனை ஒருபோதும் காரணமாகக்கூறமுடியாது. 


ஒரு தாலந்தை வாங்கினவன் தான் பயந்துபோனதாக கூறுகிறான். பயப்படுவது அடிமைத்தனத்தின் ஆவி. தேவனிடத்தில் பக்தியில்லாதவர்களும், அன்புகூராதவர்களும், தேவன் கடினமுள்ளவர் என்று தவறாக நினைத்து அவருக்கு பயப்படுவார்கள். தேவனைப்பற்றி தவறான எண்ணம் உடையவர்கள் அவரை விட்டு விலகியே இருப்பார்கள். பயப்படுகிறவர்கள் கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்யமாட்டார்கள். கர்த்தர் மீது மெய்யான அன்புள்ளவர்களே கர்த்தருக்கு அதிகமாக ஊழியம் செய்வார்கள்.  கர்த்தருக்கு பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம். ஆனால் ஒரு தாலந்தை வாங்கினவனுடைய பயம் அவனுடைய பொல்லாத குணத்தினாலும், சோம்பல்தனத்தினாலும் வந்திருக்கிறது. 


ஊழியக்காரன் தன் எஜமானைக் குற்றப்படுத்துகிறான். தனது சோம்பற்தனத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுமாறு கூறுகிறான்.


சோம்பேறி மற்றவர்களைக் குறித்து இப்படித்தான் நினைக்கிறான். மற்றவர்கள் எல்லாம் திறமைசாலிகள். ஆகையினால் அவர்களுக்கு எல்லாக் காரியமும் கைகூடி வருகிறது. வாழ்வில் வளம்பெறுகிறார்கள். ஆனால் தான் மட்டும் ஒன்றுமில்லாதவனாக இருப்பதாக நினைக்கிறான்.  இந்தச் சோம்பேறி ஒருவேலையும் செய்வதில்லை.


 சோம்பேறி பயப்படுவான். எந்த முயற்சியும் எடுக்கமாட்டான். ஏதாவது புதிதாக ஒன்றைச் செய்தால் நஷ்டம் வருமோ என்று பயந்து ஒன்றுமே செய்யமாட்டான்.


பொல்லாதவனும், சோம்பனும்


அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக் கொள்வேனே, என்று சொல்- (மத் 25: 26,27).


ஒரு தாலந்தை வாங்கினவன் கூறிய காரணத்தை அவனுடைய எஜமான் அங்கீகரிக்கவில்லை. அவனுடைய சோம்பல் தனத்திற்காகவும், பொல்லாத சுபாவத்திற்காகவும் எஜமான் அவனை கடிந்துகொள்கிறான். அவனை அழைக்கும்போது ""பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே'' என்னும் வார்த்தைகளால் அழைக்கிறான். சோம்பலான ஊழியக்காரன் பொல்லாதவனாகவும் துன்மார்க்கமான ஊழியக்காரனாகவும் இருப்பான். கர்த்தருடைய ஊழியத்தில் கவனக்குறைவாக இருக்கிறவன். பிசாசின் கிரியைகளை உற்சாகமாகச்செய்வான். 


நமக்கு கொடுக்கப்படும் ஊழியத்தை செய்யாமல் தவிர்ப்பதும் பாவமாகும். செய்யவேண்டிய ஊழியத்தை செய்யாமல் இருந்தாலும் நாம் நியாயந்தீர்க்கப்படுவோம். சோம்பல் தனம் துன்மார்க்கத்திற்கு வழிவகுக்கும் வீடு வெறுமையாக இருந்தால் அசுத்த ஆவிகள் அங்கு வந்து குடிபுகுந்துவிடும். நாம் தூங்கும்போது சத்துரு களைகளை விதைக்கிறான். 


தன்னிடம் ஒரு தாலந்தை வாங்கினவனிடம் எஜமான் தன்னைப்பற்றி கூறுகிறான். தன் ஊழியக்காரன் தன்னைப்பற்றி கூறிய வார்த்தைகளையே அவனிடம் திரும்பக்கூறுகிறான். ""நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே, அப்படியானால், நீ என் பணத்தை காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது'' என்று எஜமான் தன் ஊழியக்காரனிடம் கூறுகிறான். 


தான் கடினமுள்ள எஜமான் என்பதை அங்கீகரிக்கிறான். தன்னுடைய சுபாவம் கடினமானதாக இருப்பதினால், தன்னுடைய ஊழியக்காரன் மிகவும் கவனமாகவும், சோம்பலில்லாமல் சுறுசுறுப்பாகவும் ஊழியம் செய்யவேண்டும். அப்போதுதான் கடினமான எஜமானை சந்தோஷப்படுத்தமுடியும். அன்பினால் ஊழியம் செய்யாவிட்டாலும், பயத்தினாலாவது ஊழியம் செய்யவேண்டும். 


ஊழியக்காரன் எஜமானை கடினமானவனென்று அறிந்திருக்கிறான். ஆகையினால் எஜமானுடைய பணத்தை ஊழியக்காரன் நிலத்தைத்தோண்டி புதைத்துவைக்கக்கூடாது. குறைந்த பட்சம் காசுக்காரர் வசத்திலாவது  போட்டுவைக்கவேண்டும். எஜமான் வரும்போது அவர் தன்னுடைய பணத்தை வட்டியோடே வாங்கிக்கொள்வார். கடினமுள்ள எஜமான் வட்டிவாங்க யோசிக்கமாட்டார். 


ஒரு சில காரியங்களை நம்மால் செய்ய முடியாது என்றும், அது மிகவும் கடினமானது என்றும் யோசித்து, அந்த வேலையை ஆரம்பிக்கவே மாட்டோம்.  எளிதான, பாதுகாப்பான வேலைகளையே செய்யவிரும்புவோம். ஒரு ஊழியம் கடினமானது என்பதற்காக அதை செய்யாமல் விட்டுவிடக்கூடாது. ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட ஓரளவாவது செய்வது மிகவும் மேன்மையானது. கடினமான ஊழியங்களில் நாம் முழுபலத்தோடு ஈடுபடவேண்டும்.  கடினமான வேலைகளை செய்யவிரும்பாதவர்கள் சாதாரண வேலைகளையும் செய்யமாட்டார்கள். 


எஜமான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவர் என்று ஊழியக்காரன் கூறுகிறான்.  எஜமானைப்பற்றி ஊழியக்காரன் இவ்வாறு கூறுவதற்கு அவனுக்கு உரிமையில்லை. ஏனெனில் எஜமான் இந்த ஊழியக்காரனிடத்தில் ஒரு தாலந்தை விதைத்திருக்கிறான். அவன் வசத்தில் ஒரு தாலந்தை ஒப்புக்கொடுத்திருக்கிறான். சும்மா வைத்திருப்பதற்காக எஜமான் அந்த தாலந்தை அவனுக்கு கொடுக்கவில்லை. அந்த தாலந்தைக்கொண்டு மேலும் பல தாலந்துகள் சம்பாதிப்பதற்காகவே எஜமான் அவனுக்கு ஒரு தாலந்தைக்கொடுத்திருக்கிறான். 


சோம்பேறி எஜமானைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறான். ஆகையினால், இவன் நம்பிக்கையோடு முயற்சி பண்ணியிருக்க வேண்டும். ஆனால் இவனோ தனக்கு கொடுக்கப்பட்ட தாலந்துகளைப் புதைத்து வைத்துவிடுகிறான்.


சோம்பலுள்ள ஊழியக்காரனின் சுபாவங்கள்


    1. நன்றியில்லாதவன்

 (மத் 25:18)


    2. தவறு புரிகிறவன் 

(மத் 25:18,24)


    3. நீதியில்லாதவன் 

(மத் 25:18)


    4. மற்றவர்களிடம் குற்றம் கண்டு பிடிப்பான், மற்றவர்கள்மீது குற்றம் சுமத்துவான்  (மத் 25:24)


    5. தான் செய்வது நியாயமானது என்று சாதிப்பான் (மத் 25:24)


    6. பயப்படுவான் (மத் 25:25)


    7. துன்மார்க்கன் (மத் 25:26) 


உள்ளவனெவனோ


அவனிடத்தி-ருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள். உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்தி-ருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் (மத் 25:28,29).


பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது. அவனிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற தாலந்து அவனைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுகிறது. உள்ளவனெவனோ அவனுக்கு கொடுக்கப்படும். உண்மையும் உத்தமமும் உள்ளவனெவனோ அவனுக்கு தாலந்துகள் கொடுக்கப்படும். உலகப்பிரகாரமான ஐசுவரியங்களும், சொத்துக்களும் உண்மையுள்ளவர்களுக்கு மாத்திரமே பொறுப்பாக ஒப்புக்கொடுக்கப்படும். கர்த்தர் நம்மிடத்தில் பொறுப்பாக ஒப்புக்கொடுத்திருக்கும் எல்லா காரியங்களையும் தேவனுடைய மகிமைக்காக நாம் பயன்படுத்தவேண்டும். பரிசுத்தவான்களின் பிரயோஜனத்திற்காக அவற்றை பயன்படுத்தவேண்டும். 


ஒருவனிடத்தில் உண்மையும், உத்தமமும் இல்லையென்றால் அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். தேவன் நம்மிடத்தில் கொடுத்திருக்கும் தாலந்துகளையும், வாய்ப்புக்களையும் தேவனுடைய நாம மகிமைக்காக பயன்படுத்தவேண்டும். பயன்படுத்தவில்லையென்றால். தேவ கிருபை நம்மைவிட்டு அகற்றப்படும். தேவன் நமக்கு கொடுக்கும் எல்லா வாய்ப்புக்களையும் பயன்படுத்தி ஊழியத்தின் எல்லைகளை விஸ்தாரம் பண்ணவேண்டும். 


ஆவியானவர் விசுவாசிகளுக்கு வரங்களைக்கொடுக்கிறார். வரங்களைப்பெற்றிருக்கிறவர்கள் அவற்றை உண்மையோடும், உத்தமத்தோடும் பயன்படுத்தவேண்டும்.  எந்தெந்த வழிகளிலெல்லாம். வரங்களை பயன்படுத்த முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் அவற்றைப் பயன்படுத்தி தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தவேண்டும். நமக்கு கொடுக்கப்படும் வரங்களை நாம் உண்மையோடும் உத்தமத்தோடும் பயன்படுத்தும்போது கர்த்தர் மேலும் பல வரங்களைத்தருவார். நம்மிடத்தில் உள்ள வரங்களை நாம் அனல்மூட்டி எழுப்பிவிடவேண்டும் இல்லையென்றால் அவை அணைந்துபோகும். 


புறம்பான இருள்


பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்          (மத் 25:30).


பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரன் புறம்பான இருளிலே தள்ளப்படுகிறான். பிரயோஜனமற்ற ஊழியக்காரனுக்கு இதுபோன்ற தண்டனையே கிடைக்கும். சோம்பலான ஊழியக்காரனால் ஒரு பிரயோஜனமும் இராது. திருச்சபையில் சோம்பலானவர்கள் மரத்திலிருந்து உதிர்ந்த இலையைப்போன்று பயன்னற்றவர்களாக இருப்பார்கள். சரீரத்திலிருந்து தரித்துப்போடப்பட்ட அவயவம்போல இருப்பார்கள். சரீரத்தில் அங்கமாக இராத அவயவத்தினால் ஒரு பிரயோஜனமும் இராது. 


ஆவிக்குரிய ரீதியாக ஆராய்ந்துபார்க்கும்போது நாம் எல்லோருமே அப்பிரயோஜனமான ஊழியக்காரர்களாகவே இருக்கிறோம். கர்த்தர் நமக்கு கட்டளையிட்ட யாவற்றையும் செய்து முடித்தபின்பு "" நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரரர், செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம்'' என்று கூறவேண்டும் (லூக் 17:10). கர்த்தருடைய ஊழியக்காரர்கள் நன்மை செய்யவேண்டும். ஆவியின் கனியை வெளிப்படுத்தவேண்டும். நாம் எவ்வளவுதான் நன்மைசெய்தாலும், உற்சாகமாக ஊழியம் செய்தாலும் அதனால் தேவனுக்கு பிரயோஜனமில்லை. ஆயினும் நமது ஊழியத்தின் மூலமாக தேவனுடைய நாமம் மகிமைப்படும். நாம் மிகுந்த கனிகளைக்கொடுப்பதினால் நமது பரலோகப்பிதா மகிமைப்படுவார். நாமும் நம்முடைய ஆண்டவராகிய கிறிஸ்துவுக்கு சீஷராயிருப்போம் (யோவா 15:8). 


பிரயோஜனமற்ற ஊழியக்காரன் புறம்பான இருளிலே தள்ளப்படுகிறான்.  இது ஒரு பூரண இருள். இந்த இருளில் எந்த மனுஷனாலும் கிரியை நடப்பிக்கமுடியாது. சோம்பலான ஊழியக்காரனுக்கு இதுவே சரியான தண்டனை. இவன் உள்ளான இருளில் தள்ளப்படவில்லை. புறம்பான இருளில் தள்ளப்படுகிறான்.  பரலோகத்தின் வெளிச்சத்திற்கு புறம்பே தள்ளப்படுகிறான். கர்த்தருடைய சந்தோஷத்திற்கும் சமாதானத்திற்கும் பாத்திரவானாகயிராதபடி புறம்பே தள்ளப்படுகிறான் உண்மையுள்ள ஊழியக்காரர்கள் கர்த்தருடைய சமூகத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பொல்லாத ஊழியக்காரர்களோ கர்த்தருடைய சமுகத்தைவிட்டு புறம்பே தள்ளப்படுவார்கள். பொல்லாத ஊழியக்காரர்களுக்கு கர்த்தருடைய பந்தியில் இடமில்லை.  புறம்பான இருளில் அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். பொல்லாத ஊழியக்காரனுக்கு இந்த பங்கே நியமிக்கப்பட்டிருக்கிறது. 


மகிமையுள்ள சிங்காசனம்


சோம்பலுள்ள ஊழியக்காரனுக்கு தண்டனை


    1. கடிந்துகொள்ளப்பட்டான் (மத் 25:26)

    2. தன்வாயின் வார்த்தையினாலேயே நியாயந்தீர்க்கப்பட்டான்  (மத்25:26)


    3. நம்பிக்கைக்குரியவனாக நடந்து கொள்ளாததினால் நியாயந்தீர்க்கப் பட்டான்

 (மத் 25:27)

    4. அவனிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த தாலந்துகள் அகற்றப்பட்டன (மத் 25:28-29)


    5. தன்னுடைய எஜமானின் பணியிலிருந்து நிரந்தரமாக அகற்றப்பட்டான். 

(மத் 25:30; மத் 13:42)


இவனும் மற்றவர்களைப் போல ஊழியக்காரன்தான். அவர்களோ பிரயோஜனமுள்ளவர்கள். ஆனால் இவனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. பிரயோஜனமற்ற ஊழியக்காரன் (மத் 25:14,19,30)


மனுஷகுமாரன் வரும்போது


அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார் (மத் 25:31). 


மகா நாளின்போது கடைசி நியாயத்தீர்ப்பு உண்டாகும். இந்த நியாயத்தீர்ப்பு எவ்வாறு நடைபெறும் என்பதைக்குறித்து இயேசுகிறிஸ்து இங்கு விவரிக்கிறார். மனுஷரை நியாயந்தீர்க்கும்போது இயேசுகிறிஸ்து தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். எல்லா மனுஷரும் நியாயந்தீர்க்கப்படப்போகிற ஒரு நாள் வரப்போகிறது. நாம் ஒவ்வொருவரும் இந்த பூமியில் ஜீவித்தகாலத்தில் நாம் செய்த கிரியைகளுக்குத்தக்கதாக நியாயந்தீர்க்கப்படுவோம். மனுஷகுமாரன்   நம்மை நியாயந்தீர்ப்பார். கடைசி நியாயத்தீர்ப்பைப்பற்றி  கூறப்பட்டிருக்கும் இடங்களிளெல்லாம், இயேசுகிறிஸ்து மனுஷகுமாரன் என்றே அழைக்கப்படுகிறார். ஏனெனில் இவர் மனுஷருடைய குமாரர்களை நியாயந்தீர்க்கப் போகிறார். இயேசுகிறிஸ்துவும் மனுஷரில் ஒருவராக இருந்தாலும், அவர் மிகவும் விசேஷித்தவர்.


இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு நியாயந்தீர்க்க வரும்போது அவர் நியாயாதிபதியாக வருவார். அவருடைய வருகை  மகிமை பொருந்தியதாக இருக்கும். தம்முடைய  மெய்யான மகிமையோடு இயேசுகிறிஸ்து தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். இந்த உலகத்தில் கர்த்தருடைய பரிசுத்தவான்கள் மாத்திரமே விசுவாசிக்கும் காரியங்களை, நியாயத்தீர்ப்பு நாளின்போது இந்த உலகத்திலுள்ள எல்லா ஜனங்களும்  தங்கள் கண்களால் காண்பார்கள். இயேசுகிறிஸ்து தமது பிதாவின் மகிமை பொருந்தியவராக மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார் என்று விசுவாசிகள் விசுவாசிக்கிறார்கள். நியாயத்தீர்ப்பு நாளில் விசுவாசிகளும் இதை தரிசிப்பார்கள், அவிசுவாசிகளும் இதை தரிசிப்பார்கள். 


இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகையின்போது அவர் மேகங்களுக்குள் ரகசியமாக வருவார். அந்த மேகம் கரிய மேகமாக இருந்து அவரை மறைக்கும். ஆனால் அவருடைய இரண்டாம் வருகையின்போதோ எல்லாருக்கும் பிரத்தியட்சமாக தெரியும் விதமாக  அவர் மகிமை பொருந்தினவராக பிரகாசமான  மேகத்தின் வழியாக இறங்கி வருவார். 


இயேசுகிறிஸ்து நியாயந்தீர்ப்பதற்காக தமது மகிமையில் வரும்போது அவரோடுகூட  சகல பரிசுத்த தூதர்களும் வருவார்கள். பரிசுத்தமான தேவனை சுற்றிலும் பரிசுத்தமான தூதர்கள் கூடியிருப்பார்கள். மனுஷகுமாரன் இருக்கும் இடம் பரிசுத்தம் நிறைந்ததாகவும் மகிமை பொருந்தியதாகவும் இருக்கும். 


இயேசுகிறிஸ்து தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.       இப்போது அவர் தமது பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். இயேசுகிறிஸ்து இப்போது அமர்ந்திருக்கும் சிங்காசனம் கிருபையின் சிங்காசனமாகும். இந்த கிருபாசனத்தண்டையில் நாம் நம்பிக்கையோடும்  தைரியமாகவும் கிட்டிச்சேரலாம். ஆனால் அவருடைய இரண்டாம் வருகையின்போதோ  அவர் தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் வீற்றிருப்பார். அது நியாயத்தீர்ப்பின் சிங்காசனமாகும். 


இயேசுகிறிஸ்து இந்த பூமியில்  தமது மாம்சத்தில் இருந்த நாட்களில் அவர் மாம்சத்தின் வரையறைகளுக்கு கட்டப்பட்டவராக இருந்தார். சிறைச்சாலையில்  இரும்பு கம்பிகளுக்கு உள்ளே சிறைப்பட்டிருப்பவரைப்போல, இயேசுகிறிஸ்து தமது மாம்சத்தில் சிறைப்பட்டிருந்தார். ஆனால்  அவருடைய இரண்டாம் வருகையின்போதோ அவர் நியாயாதிபதியாக, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் நியாயந்தீர்க்கிறவராக வீற்றிருப்பார்.


சகல ஜனங்களும் சேர்க்கப்படுவார்கள்


அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, (மத் 25:32).


மகாநாளின் நியாயத்தீர்ப்பு எல்லோரும் நியாயந்தீர்க்கப்படுகிற நாளாக இருக்கும். நியாயந்தீர்க்கப்படுவதற்காக சகல ஜனங்களும்  இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாக கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். எல்லா தேசத்தாரும் எல்லா இனத்தாரும், எல்லா சமுகத்தாரும், எல்லா பாஷைகளைப்பேசுகிறவரும் இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாக கூட்டிச்சேர்க்கப்படுவார்கள். இதுவரையிலும் பூமியில் வெவ்வேறு ஸ்தலங்களில் ஜீவித்தவர்களெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு இங்கு கூட்டிச்சேர்க்கப்படுவார்கள். 


""சகல ஜனங்களும்''  என்னும் வாக்கியம் எல்லா தேசங்களிலுமுள்ள எல்லா தனிநபர்களையும்  குறிக்காது. பலர் இயேசுவை அறியாமல் இருப்பார்கள். (ஏசா 2; ஏசா 66:19-21; சக 8:23) இயேசு கிறிஸ்து தமது ராஜ்யத்தை ஸ்தாபனம் பண்ணவரும்போது இஸ்ரவேலுக்கு துன்பம் விளைவித்த ஜனங்களை நியாயம்தீர்ப்பார். (மத் 25:31-46) துன்மார்க்கரின் நியாயத்தீர்ப்பு இனிமேல் வரும்.  (வெளி 20:11-15)


பகலில் செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் ஒன்றாக மேயும். ஆனால் இரவு வேளையிலோ  மேய்ப்பர்கள் அவற்றை வெவ்வேறாகப் பிரித்து கொட்டிகளில் அடைப்பார்கள். (மத் 13:39-50)


வெவ்வேறாக பிரித்து


செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்              (மத் 25:33).


சகல ஜனங்களும் இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாக சேர்க்கப்படும்போது அவர் அவர்களை  வெவ்வேறாக பிரிப்பார். அறுவடையின்போது கோதுமையும் களைகளும் வெவ்வேறாக பிரிக்கப்படுவதுபோல, மீன்பிடிக்கிறவர்கள் நல்ல மீன்களையும் கெட்ட மீன்களையும் வெவ்வேறாக பிரிக்கிறதுபோல, களஞ்சியத்தில்  தானியத்தையும் பதரையும் வெவ்வேறாக பிரிப்பதுபோல இயேசுகிறிஸ்து சகல ஜனங்களையும் வெவ்வேறாக பிரிப்பார். 


மகாநாளின்போது ஜனங்கள் வெவ்வேறாக பிரிக்கப்படும்போது அவர்கள் நித்திய காலத்திற்கு பிரிக்கப்பட்டுப்போவார்கள். மறுபடியும் அவர்கள் ஒன்றுசேர்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போகும். இந்த உலகத்தில் நல்லாரும் பொல்லாரும் சேர்ந்து ஜீவிக்கிறார்கள். துன்மார்க்கரைவிட்டு  பரிசுத்தவான்களால் விலகிப்போக முடியவில்லை. துன்மார்க்கரோடு பரிசுத்தவான்கள் எவ்வளவும் கலந்திருக்கக்கூடாது என்றால் அவர்கள் இந்த உலகத்தைவிட்டு நீங்கிப்போக வேண்டியதாயிருக்கும் (1கொரி 5:10). பரிசுத்தவான்களையும் துன்மார்க்கரையும் இந்த உலகத்தில் வெவ்றோக பிரிப்பது மனுஷருக்கு கூடாத காரியமாக இருக்கும். களைகளை பிடுங்கும்போது கோதுமையையும்கூட வேரோடு பிடுங்குவதற்கு  வாய்ப்புள்ளது. ஆகையினால் இவ்விரண்டுமே அறுப்பு மட்டும் வளரவிடப்படும்            (மத் 13:29). 


மனுஷரை வேறுபிரிப்பது மனுஷரால் கூடாத காரியமாக இருந்தாலும் தேவனால் கூடாதகாரியம் ஒன்றுமில்லை. தம்முடையவர்களை தேவன் அறிந்திருக்கிறார்.  அவர்களை தமக்காக வேறுபிரித்து தம்மிடமாக சேர்த்துக்கொள்கிறார். மேய்ப்பனானவன் தன்னிடத்திலுள்ள ஆடுகளை பிரிக்கும்போது செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிப்பான். அதுபோலவே இயேசுகிறிஸ்துவும் தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, தமக்கு முன்பாக கூட்டிச்சேர்க்கப்படும் சகல ஜனங்களையும் இரண்டு பிரிவாக பிரிப்பார். நீதிமான்களையும் துன்மார்க்கரையும் வெவ்வேறாக பிரித்துவிடுவார். 


நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து  நமக்கு பிரதான மேய்ப்பராக இருக்கிறார். ஒரு மேய்ப்பன் தன் மந்தையை மேய்ப்பதுபோல இப்போது இயேசுகிறிஸ்து சகல ஜனங்களையும்  போஷித்து பராமரிக்கிறார். காலம் ஒரு நாள் வரப்போகிறது. அப்போது நம்முடைய பிரதான மேய்ப்பன் தமக்குரியவர்களையும், தம்மோடு சேராதவர்களையும் வெவ்வேறாக பிரித்து விடுவார். 


கர்த்தருடைய பரிசுத்தவான்கள் செம்மறியாடுகளைப்போல இருக்கிறார்கள். இவர்கள் மென்மையான சுபாவமுடையவர்கள், பொறுமையுள்ளவர்கள், அன்புள்ளவர்கள், பயனுள்ளவர்கள். துன்மார்க்கரோ வெள்ளாடுகளைப்போல இருக்கிறார்கள். வெள்ளாடு மேய்ப்பனுக்கு கீழ்ப்படியாது. தன் இஷ்டம் போல சுற்றி அலையும். துன்மார்க்கரும் வெள்ளாடுகளைப்போல கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் தங்கள் இஷ்டம்போல ஜீவிக்கிறார்கள். 


ஒரே மேய்ச்சல் நிலத்தின்தான் வெள்ளாடுகளும் செம்மறியாடுகளும் பகல்பொழுது முமுவதும் மேயும். ஆனால் இரவுவேளை வரும்போதோ வெள்ளாடுகள் தனியாகவும், செம்மறியாடுகள் தனியாகவும் வேறுபிரிக்கப்பட்டு, அவற்றிற்குரிய கூடாரங்களில் அடைக்கப்படும். 


மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கும்போது, செம்மறியாடுகளை தனக்கு வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளை தனக்கு இடதுபக்கத்திலும் நிறுத்துவார். இதைப்போலவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் தம்முடைய பரிசுத்தவான்களை தமக்கு வலதுபுறத்தில் நிறுத்தி அவர்களை கனப்படுத்துவார். நமது வலதுகையினால் செய்யும் வேலைகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் உள்ளது. 


மனுஷருக்குள் காணப்படும் எல்லா வேறுபாடுகளும், பிரிவினைகளும் நியாயத்தீர்ப்பு நாளின்போது ஒழிந்துபோகும். அவர்களுடைய தேசம், மொழி, நிறம், சபை பாகுபாடு ஆகிய பிரிவினைகள் எல்லாமே மகாநாளின்போது ஒன்றுமில்லாமல் போகும். ஆயினும் ஒரே ஒரு காரியம் மாத்திரமே நியாயத்தீர்ப்பு நாளின்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் ஒருவர் கழுவப்பட்டு தன் பாவங்களற சுத்திகரிக்கப்பட்டவரா இல்லையா என்பதே பிரதானமாக கவனித்துப்பார்க்கப்படும். ஒருவர் பரிசுத்தவானா அல்லது பாவியா என்பதையே  நமது நியாயாதிபதியாகிய தேவன் ஆராய்ந்து பார்ப்பார். இந்த வேறுபாடு மாத்திரமே நியாயத்தீர்ப்பு நாளின்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு சகல ஜனங்களும் இரண்டு பிரிவாக வேறுபிரிக்கப்படுவார்கள். இந்த பிரிவினை நிரந்தரமாக இருக்கும். 


ராஜா


அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் (மத் 25:34).


கர்த்தருடைய பரிசுத்தவான்கள் இயேசுகிறிஸ்துவின் மகிமையுள்ள சிங்காசனத்திற்கு வலதுபுறத்தில் நிறுத்தப்பட்டிருப்பார்கள். அவர்கள் கனப்படுத்தப்படுவார்கள். பிரதான மேய்ப்பராகிய  இயேசுகிறிஸ்து இங்கு ராஜாவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். இயேசுகிறிஸ்து  மேய்ப்பராக இருக்கும்போது அவர் ஆதரிக்கிறார், பாதுகாக்கிறார், பராமரிக்கிறார், போஷிக்கிறார். ஆனால் அவர் ராஜாவாக இருக்கும்போது தமது அதிகாரமுள்ள வார்த்தையை பேசுகிறார். ராஜாவின் வார்த்தைக்கு எப்போதுமே மதிப்பும் மரியாதையும், அதிகாரமுமுள்ளது.


தம்முடைய பரிசுத்தவான்களை பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களென்று இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கிறார். அவர்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று அழைக்கிறார்.  இயேசுகிறிஸ்து ஒருவரை ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று கூறும்போது அவர் மெய்யாகவே ஆசீர்வதிக்கப்பட்டவராகவே இருப்பார். கர்த்தருடைய பரிசுத்தவான்கள் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரிசுத்தவான்களை உலகம் சபித்தாலும், நிந்தித்தாலும், புறக்கணித்தாலும் தேவனோ இவர்களை ஆசீர்வதிக்கிறார். நமது ஆசீர்வாதங்களெல்லாமே பரலோகத்திலிருந்தே நமக்கு வருகிறது. பிதாவாகிய தேவன் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் (எபே 1:3). 


இயேசுகிறிஸ்து பரிசுத்தவான்களை ""வாருங்கள்'' என்று அழைக்கிறார். இயேசுகிறிஸ்து நம்மை வாருங்கள் என்று வரவேற்பது நமக்கு கொடுக்கப்படும் மிகப்பெரிய ஆசீர்வாதமாகும். தம்மிடத்தில் வருமாறு இயேசுகிறிஸ்து நம்மை அழைக்கும்போது, அவர் நம்மை நித்திய காலமாக தமது சமுகத்தில் சேர்த்துக்கொள்வதற்காகவே அழைக்கிறார். இதுவரையிலும் தங்களுடைய சிலுவைகளை சுமந்து பாடுகளை அனுபவித்த பரிசுத்தவான்களை, இப்போதோ தங்களுடைய கிரீடங்களை அணிந்து அவர்களை கனப்படுத்துவதற்காக இயேசுகிறிஸ்து அன்போடு அழைக்கிறார். இயேசுகிறிஸ்துவின் கிருபாசனத்தண்டையில் நாம் இப்போது தைரியமாக கிட்டிச்சேர்ந்தால்தான், நியாயத்தீர்ப்பு நாளின்போது அவருடைய மகிமையுள்ள சிங்காசனத்தண்டையிலும் தைரியமாக கிட்டிச்சேரமுடியும். 


தம்முடைய பரிசுத்தவான்களை இயேசுகிறிஸ்து ""என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே'' என்று அழைக்கிறார். உலகம் உண்டானது முதல் அவர்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளுமாறு அவர்களை அன்போடு அழைக்கிறார். 


பரிசுத்தவான்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகும்  ராஜ்யம் ஐசுவரியம் மிகுந்தது. தேவனுடைய ராஜ்யத்தை இந்த உலகத்து ராஜ்யத்தோடு ஒப்பிடமுடியாது. இந்த உலகத்தின் சகல ஐசுவரியங்களும், கனமும் மகிமையும் தேவனுடைய ராஜ்யத்திலும் இருக்கும். இதைவிட அதிகமாகவே இருக்கும். 


பரிசுத்தவான்கள் இந்த பூமியில் தரித்திராக இருக்கலாம். சிறைப்பட்டவர்களாக இருக்கலாம். எல்லாக் காரியங்களிலும் அழுக்கைப்போல கருதப்படலாம். என்றாலும் இவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளப்போகிறார்கள். தேவனுடைய பார்வையில் விசேஷித்தவர்கள். 


பரலோக ராஜ்யம் இவர்களுக்காகவே ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறது. பரிசுத்தவான்கள் சுதந்தரிக்கப்போகும் ராஜ்யத்தில் சந்தோஷம் மிகுந்திருக்கும்.  தெய்வீக ஆலோசனைகளினால் பரலோக ராஜ்யத்தின் எல்லாக் காரியங்களும் பரிபூரணமாக நிரப்பப்பட்டிருக்கும்.  


பரலோக ராஜ்யம் கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்காக இந்த உலகம் உண்டானதுமுதல் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறது. இது பரிசுத்தவான்களுக்கே உரியது. அவர்களுடைய சந்தோஷத்திற்காகவே இந்த ராஜ்யம் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறது. உலகம் உண்டானது முதலே பரலோக ராஜ்யம் அவர்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறது. பரலோகத்தின் சந்தோஷம் பரிசுத்தவான்களுக்காக திட்டமிடப்பட்டிருக்கிறது.   உலகத்தோற்றத்திற்கு முன்னே பிதாவாகிய தேவன் கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்துகொண்டார் (எபே 1:4). நமது ஆசீர்வாதங்களையும் திட்டமிட்டு வைத்திருக்கிறார். 


பரிசுத்தவான்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளுமாறு இயேசுகிறிஸ்து தம்முடைய பரிசுத்தவான்களை ""வாருங்கள்'' என்று அழைக்கிறார். இந்த ராஜ்யத்தை  அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளவேண்டும். பரலோகத்தின் சுதந்தரவாளிகளை தேவனே தீர்மானம்பண்ணுகிறார். நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருப்பதினால் அவருடைய ஆசீர்வாதங்களுக்கு சுதந்தரவாளிகளாக இருக்கிறோம். நாம் பிள்ளைகளென்றால் சுதந்தரருமாமே. தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வது நமக்கு கொடுக்கப்படும்  மிகப்பெரிய ஆசீர்வாதமாகும். 


நாம் இந்த பூமியில் இருக்கும் காலத்தில் பரலோகத்தின் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வதற்கு  பயிற்சி பெறுகிறோம். சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்கும் காலமளவும் அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை. தகப்பன் குறித்த காலம் வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான் (கலா 4:1,2). அவனைப்போலவே கர்த்தருடைய பிள்ளைகளும் இந்த பூமியில் இருக்கும் காலம் அளவும் பயிற்சி பெற்றுக்கொண்டு, ஆளுகை செய்யப்படுகிறோம். நாம் நியாயம் விசாரிக்கப்படும்போது ""சுதந்தரவாளி'' என்னும் பட்டம் நமக்கு கொடுக்கப்படும். அப்போது நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ""வாருங்கள், உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்'' என்று நம்மை அன்போடு அழைப்பார். 


பசியாயிருந்தேன்


பசியாயிருந்தேன், எனக்குப் போஜனம் கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக் கொண்டீர்கள்;   வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவ--ருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார் (மத் 25:35,36).


நமது சுயநீதியினால் நாம் பரலோகத்திற்கு போகமுடியாது. இயேசுகிறிஸ்துவின் திருரத்தத்தினால் கழுவி சுத்திகரிக்கப்பட்டவர்கள் மாத்திரமே பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடியும். ஆகையினால் பரலோகத்தின் சந்தோஷத்தை பெறுவதற்கு நமது நற்கிரியைகள் ஆதாரமாக இருக்குமென்று நாம் நினைப்பதில்லை. ஆனால் இயேசுகிறிஸ்துவோ இந்த பூமியில் நாம் செய்யும்  நற்காரியங்களை கனப்படுத்துகிறார். நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு வெகுமதி அளிக்கிறார். கீழ்ப்படிதலுள்ள விசுவாசிகளுக்கு பரலோகத்தில் சந்தோஷம் மிகுதியாக இருக்கும். 


தேவனுடைய வாக்குத்தத்தங்களை இயேசுகிறிஸ்து தமது சுயரத்தத்தினால் கிரயத்திற்கு வாங்கியிருக்கிறார். தமது சுயரத்தத்தினால் சம்பாதித்ததையும், தமது வாக்குத்தத்தத்தையும் ஆதாரமாக வைத்தே ""உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய பிள்ளைகளிடம் கூறுகிறார். கிறிஸ்துவின் இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வதற்கு கீழ்ப்படிதல் மாத்திரமே நம்மிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஒரே தகுதியாகும். 


ஏழைகளுக்கு உதவிபுரிவது ஒரு நற்கிரியை. நமது விசுவாசத்தை செயலில் காண்பிக்கும்போது தேவைப்படுபவர்களுக்கு உதவிபுரிகிறோம். கிறிஸ்தவ மார்க்கத்திற்கு அன்பே ஆதாரமாக இருக்கிறது. பிறருக்கு உதவிபுரிவதன் மூலமாக நமது அன்பை நடைமுறையில் செயல்படுத்துகிறோம். நம்முடைய விசுவாசத்தை நம்முடைய கிரியைகளில் வெளிப்படுத்தி காண்பிக்கவேண்டும். இயேசுகிறிஸ்து மூன்றுவிதமான நற்கிரியைகளை இங்கு குறிப்பிடுகிறார். இரட்சிக்கப்பட்ட எல்லோருமே இந்த மூன்றுவிதமான நற்காரியங்களையும் தங்களால் முடிந்தவரையிலும் குறைவில்லாமல் செய்யவேண்டும். 


விசுவாசிகள் தங்கள் சுயத்தை வெறுக்கவேண்டும். இந்த உலக பொருட்களை   போதுமென்ற மனப்பக்குவத்தோடு பயன்படுத்தவேண்டும். நம்மால் நன்மை செய்ய முடிகிற காரியங்களை மாத்திரமே நாம் விரும்பவேண்டும். நமக்கு ஒரு பொருள் வேண்டுமென்று நாம் விரும்பினால், அதை வைத்து என்ன நன்மை செய்யமுடியுமென்று முதலாவதாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். உலகப்பொருட்களின்மீது பேராசைப்படக்கூடாது.  போதுமென்ற மனதோடிருந்து ஏழைகளுக்கு உற்சாகமாக உதவிபுரியவேண்டும்.


நமது சகோதரரை நேசிக்கவேண்டும். நம்மை நேசிப்பதுபோலவே நாம் பிறரையும் நேசிக்கவேண்டுமென்பதே தேவனுடைய இரண்டாவது பிரதான கற்பனை. நமது அன்பை  நன்மை செய்வதன் மூலமாக உறுதிப்படுத்தவேண்டும். அன்பு கூருவதை நடைமுறையில் செயல்படுத்தவேண்டும். நன்மை செய்யவேண்டுமென்று விரும்பினால் மாத்திரம் போதாது. நாம் நன்மைசெய்யவில்லையென்றால்  நமது விருப்பம் பிரயோஜனமற்றது. நன்மை செய்யாதவர்கள் தீமை செய்வார்கள். பிறருக்கு கொடுக்காதவர்கள் தங்களிடமுள்ளவற்றை ஏதாவது தீய வழிகளில் செலவு செய்வார்கள். 


நன்மை செய்கிறவர்கள் அதைத் தங்கள் சுயபெருமைக்காகவோ, சுயவிளம்பரத்திற்காகவோ செய்யக்கூடாது. தேவநாம மகிமைக்காக, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நன்மை செய்யவேண்டும். பிறரை நேசித்து, நாம் அவர்களுக்கு இயேசுவின் நாமத்தினிமித்தம் நன்மை செய்யவேண்டும். தமது நாமத்தினால் செய்யப்படும் நற்கிரியைகளை இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கிறார். வார்த்தையினாலாவது, கிரியையினாலாவது, நாம் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாக  பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரிக்கவேண்டும் (கொலோ 3:17).


பரிசுத்தவான்கள் பரலோக ராஜ்யத்தில் கர்த்தரோடு பந்தியிருந்தாலும் அவர்களில் அநேகர் இந்த பூமியில் ஜீவித்தபோது பசியாகவும், தாகமாகவும் இருந்திருக்கிறார்கள். போதிய உணவு இல்லாமல் வேதனையடைந்திருக்கிறார்கள். அன்றாட போஜனத்திற்கு வழியில்லாமல் துன்பங்களை சகித்திருக்கிறார்கள். அப்பேற்பட்டவர்கள் இப்போது பரலோக ராஜ்யத்தில் தேவனுடைய சமுகத்தில் இருக்கிறார்கள். இவர்கள் பூமியில்  பாடுகளை அனுபவித்தபோது இவர்களுக்கு உதவிபுரிந்தவர்களை இயேசுகிறிஸ்து கனப்படுத்துகிறார். 


பசியாக இருக்கிறவர்களுக்கு போஜனங்கொடுக்கவேண்டும். தாகமாகயிருக்கிறவர்களுக்கு தாகத்தை தீர்க்கவேண்டும். அந்நியராக இருக்கிறவர்களை சேர்த்துக்கொள்ளவேண்டும். வஸ்திரமில்லாதிருக்கிறவர்களுக்கு வஸ்திரம் கொடுக்கவேண்டும். வியாதியாயிருக்கிறவர்களை விசாரிக்கவேண்டும். காவலிலிருக்கிறவர்களை பார்க்க வரவேண்டும். இந்த கிரியைகள் எல்லாவற்றையும் இரட்சிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து சந்தோஷமாக செய்யவேண்டும். இவையெல்லாம் நமது அன்புக்கு ஆதாரங்கள்.  கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு நாம் கீழ்ப்படிந்து ஜீவிக்கிறோம் என்பதற்கு நாமும் செய்யும் நற்கிரியைகள் நமக்கு சாட்சி பகரும். இரக்கம் காண்பியாதவன் இரக்கமில்லாமல் நியாயந்தீர்க்கப்படுவான். 


எப்பொழுது உதவிசெய்தோம்


அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?  எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவ--ருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள் (மத் 25:37-39).


நீதிமான்கள் தங்களுடைய நற்கிரியைகளைக் குறித்து தாழ்வு மனப்பான்மையோடிருக்கிறார்கள். பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்பதற்கு தங்களிடத்தில் எந்த தகுதியுமில்லையென்று தங்களை தாழ்த்துகிறார்கள். இந்த பூமியில் ஜீவித்த காலத்தில் தாங்கள் யாருக்கும் நன்மை செய்யவில்லையென்று நினைக்கிறார்கள். இயேசுகிறிஸ்து கூறிய இந்த நற்கிரியைகளையெல்லாம் தாங்கள் அவருக்கு எப்போது செய்தோம் என்று அவரிடமே கேட்கிறார்கள். 


அன்போடும் கரிசனையோடும் செய்யப்படும் நற்கிரியைகளை இயேசுகிறிஸ்து கனப்படுத்துகிறார். தமது நாமத்தினிமித்தமாக  செய்யப்படும் எல்லா நற்கிரியைகளையும் அவர் அங்கீகரிக்கிறார். அதிநிமித்தம் மிகுந்த சந்தோஷப்படுகிறார். மகிமையடைந்த பரிசுத்தவான்களுக்கு, அவர்கள் இந்த பூமியில் செய்த சாதாரண நற்கிரியைகளுக்குகூட பரலோகத்தில் அதிக வெகுமதி கொடுக்கப்படுகிறது. எளிமையான நற்கிரியைகளும் தாராளமாக போற்றப்படுகிறது.


பரிசுத்தவான்கள் தாங்கள் செய்த நற்கிரியைகளை சுயவிளம்பரம் செய்யமாட்டார்கள். பிரதிபலன் எதிர்பாராமல் நன்மை செய்வார்கள். எனக்கு உதவி செய்தீர்கள் என்று இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்களிடம் கூறியபோது, அவர்கள் இயேசுவிடம் ""ஆண்டவரே நாங்கள் எப்பொழுது  உமக்கு உதவிசெய்தோம்'' என்று கேட்கிறார்கள். மிகுந்த தாழ்மையோடிருக்கிறார்கள். தங்களுக்கு காண்பிக்கப்படும் மகிமைக்கும் புகழ்ச்சிக்கும் தாங்கள் பாத்திரவான்களல்ல என்று தாழ்மையோடிருக்கிறார்கள்.  


பரலோகத்தில் பிரவேசிக்கும் பரிசுத்தவான்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் ஆசீர்வாதங்களை நினைத்து மிகுந்த ஆச்சரியமடைவார்கள். அந்த அளவிற்கு கர்த்தர் அவர்களை மேன்மைபடுத்தி உயர்த்துவார். எப்பொழுது உம்மை பசியுள்ளவராக கண்டோம் என்று அவரிடமே கேட்பார்கள். இந்த பூமியில் நாம் ஜீவிக்கும் காலத்தில் பல சமயங்களில்  பசியால் வாடுகிறவர்களை காண்கிறோம். அப்படிப்பட்டவர்களை காணும்போது அவர்களுடைய பசியை நாம் காணவேண்டும். கிறிஸ்து நம்மோடுகூட இருக்கிறார். நாம் நினைப்பதைவிட அதிகமாகவே நம்மோடுகூட இருக்கிறார். 


அதை எனக்கே செய்தீர்கள்


அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்          (மத் 25:40). 


நீதிமான்களின் கேள்விக்கு இயேசுகிறிஸ்து பதில்கூறுகிறார். மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை தமக்கே செய்ததாக கூறுகிறார். பரிசுத்தவான்களின் நற்கிரியைகள் நியாயத்தீர்ப்பு நாளின்போது நினைவுகூரப்படுகிறது. அவர்களுடைய நற்கிரியைகளில் எதையும் இயேசுகிறிஸ்து மறந்துவிடவில்லை. ஒரு கலசம்  தண்ணீரைகூட  கர்த்தர் தமது ஞாபகப்புஸ்தகத்தில் எழுதிவைத்து நியாயத்தீர்ப்பு நாளின்போது நினைவுகூருகிறார். 


பரிசுத்தவான்கள் செய்த நற்கிரியைகள் மூலமாக அவர்களுக்கு மேலும் பல நன்மைகள் உண்டாகிறது. கொடுக்கிறது. விசுவாசிகளில் அநேகர் ஐசுவரியவான்களல்ல. ஆயினும் அவர்கள் செய்த எளிமையான உதவிகளைகூட  கர்த்தர் நினைவுகூர்ந்து அவர்களை ஆசீர்வதிக்கிறார். விசுவாசிகள் தரித்திரராக இருந்தால் அவர்களை நாம் புறக்கணித்து ஒதுக்கி வைத்துவிடக்கூடாது. கிறிஸ்து அவர்களை அங்கீகரித்திருக்கிறார். தம்மிடமாக சேர்த்துக்கொண்டிருக்கிறார். ஒரு விசுவாசியை கிறிஸ்து அங்கீகரிக்கும்போது நாம் அந்த விசுவாசியை புறக்கணித்து ஒதுக்கிவிடக்கூடாது. 


கர்த்தருடைய பிள்ளைகளை சகோதரர் என்று அழைப்பதற்கு நாம் வெட்கப்படக்கூடாது.  அவர்கள் தரித்திரராக இருந்தாலும், சமுதாயத்தில் மிகவும் தாழ்ந்த நிலமையிலிருந்தாலும் அவர்களும் கிறிஸ்துவின் குடும்பத்தில் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். நம்மைப்போலவே அவர்களும் கிறிஸ்துவுக்குரியவர்கள். இயேசுகிறிஸ்து பரலோகத்திற்கு உயர்த்தப்பட்டவுடன் பூமியிலுள்ள தமது விசுவாசிகளை அவர் மறந்துவிடவில்லை. மனுஷரோடு தாம் வைத்திருந்த தொடர்பை நிறுத்திக்கொள்ளவில்லை. கர்த்தருடைய பிள்ளைகளுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு உதவியையும் தமக்கே செய்வதாக இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கிறார்.  அந்த அளவிற்கு தேவன் தரித்திரர் மீதும், தேவையுள்ளவர்கள்மீதும் அன்பு கூருகிறார். தம்மிடத்தில் வருகிற யாரையும் அவர் ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை.


இஸ்ரவேல் தேசத்திற்கு ஜனங்கள் என்ன செய்தார்களோ அதன் அடிப்படையில் அவர்களுக்கு வெகுமதியோ அல்லது தண்டனையோ கொடுக்கப்படும். இது கர்த்தர் ஆபிரகாமோடு செய்துகொண்ட உடன்படிக்கை. (ஆதி 12:1-3)


சபிக்கப்பட்டவர்களே 


அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் (மத் 25:41).


இயேசுகிறிஸ்து தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார். அவருக்கு வலதுபக்கத்தில் பரிசுத்தவான்களும்,         இடதுபக்கத்தில் துன்மார்க்கரும் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இடதுபக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் துன்மார்க்கரை இயேசுகிறிஸ்து சபிக்கிறார். இயேசுகிறிஸ்துவுக்கு  அருகாமையில் இருப்பது எப்போதுமே ஆறுதலாக இருக்கும். இங்கு நீதிமான்களும் துன்மார்க்கரும்  இயேசுகிறிஸ்துவுக்கு அருகாமையில் இருக்கிறார்கள். ஆனால் துன்மார்க்கர் தமக்கு அருகாமையில் இருப்பதை இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கவில்லை. தம்மைவிட்டு விலகிப்போகுமாறு கட்டளையிடுகிறார். 


நாம் இந்த பூமியில் இருக்கும் காலத்திலெல்லாம் இயேசுகிறிஸ்துவிடம் வருமாறு நமக்கு அழைப்பு கொடுக்கப்படுகிறது.  இயேசுகிறிஸ்துவிடம் வந்தால் நமக்கு ஜீவனும், சமாதானமும், ஆறுதலும் கிடைக்குமென்று சுவிசேஷம் கூறுகிறது.  கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு சிலர் செவிகொடுக்கிறார்கள்.  பலர் செவிகொடுக்காமல் போகிறார்கள். தமக்கு செவிகொடுத்த பரிசுத்தவான்களை தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் இயேசுகிறிஸ்து ""என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே வாருங்கள்'' என்று அழைக்கிறார். தமது சுவிசேஷத்திற்கு செவிகொடுக்காத துன்மார்க்கரை ""சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு போங்கள்'' என்று துரத்துகிறார்.


இயேசுகிறிஸ்துவுக்கு அருகாமையில் வரும் எல்லோருமே அவரிடமிருந்து ஆறுதலையும், சந்தோஷத்தையும், சமாதானத்தையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் துன்மார்க்கரோ இயேசுகிறிஸ்துவிடமிருந்து எந்த ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள். இயேசுகிறிஸ்துவின் ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளாதவர்கள். சாபத்தின் பாரத்தை சுமப்பார்கள். 


இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்களை ""என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே'' என்று அழைக்கிறார். அவர்களுடைய ஆசீர்வாதம் தேவனுடைய சுத்தகிருபையினால் வந்தது. ஆனால் துன்மார்க்கருடைய அழிவோ அவர்களுடைய சாபத்தினால் வந்திருக்கிறது. துன்மார்க்கர்கள்  நித்திய ஆக்கினையை அடைவார்கள். 


இயேசுகிறிஸ்துவின் சமுகத்தைவிட்டு துன்மார்க்கர் அகன்றுபோகும்போது அவர்கள்  ஏதாவது ஒரு இடத்திற்கு போகவேண்டும். இயேசு அவர்களை நித்திய அக்கினிக்கு போகுமாறு அனுப்புகிறார். இந்த அக்கினி நித்திய தேவனுடைய கோபாக்கினையாகும். இந்த அக்கினி பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறது.


நரகத்தின் அக்கினி சாதாரணமாக திடீரென்று தோன்றிய அக்கினியல்ல. இது ஆயத்தம்பண்ணப்பட்ட அக்கினி. திடீரென்று தோன்றும் அக்கினி விரைவில் அணைந்துபோகும். ஆனால் இது ஆயத்தம்பண்ணப்பட்ட அக்கினியாக இருப்பதினால், இது எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் நித்திய அக்கினியாக இருக்கும். இந்த நரகஅக்கினியில் தேவனுடைய கிருபையும் இரக்கமும் இராது. இந்த நித்திய அக்கினியை எதுவும் அணைத்துப்போடாது.


துன்மார்க்கர் நரகஅக்கினியில் இருக்கும்போது அங்கு அவர்கள் தனியாக இருக்கமாட்டார்கள். பிசாசும் அவன் தூதர்களும்  நரகத்தில் துன்மார்க்கரோடு இருப்பார்கள். துன்மார்க்கர் இந்த பூமியில் ஜீவித்தபோது அவர்கள் பிசாசையும் அவனுடைய தூதர்களையும் சேவித்தார்கள். ஆகையினால்  அவர்கள் இருக்கும் இடத்திற்கே துன்மார்க்கரும் அனுப்பப்படுகிறார்கள். இந்த பூமியில் கிறிஸ்துவை சேவிக்கிறவர்கள் அவருடைய சமுகத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.


நித்திய ஆக்கினையை அடைவதற்காக சிலர் சபிக்கப்பட்டு, அக்கினிக்கடலுக்கு அனுப்பப் படுவார்கள்.  மரித்த துன்மார்க்கர் எல்லோருமே நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள். (வெளி 20:4-6,11-15)


நித்திய அக்கினி சாத்தானுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறது.  (யோவான் 3:16-20) மனுஷர்கள் அங்கு போகவேண்டிய கட்டாயம் இல்லை. ஆயினும் மனந்திருந்தவே மாட்டேன் என்று பாவத்தில் வைராக்கியமாக ஜீவிப்போருக்கு வேறு வழியேயில்லை. அவர்கள் நரகத்திற்குப் போவார்கள். சாத்தானோடு நித்திய காலமாக   இருப்பார்கள். (மத் 25:41,46).


நித்தியமான காரியங்கள்


    1. தேவன் (ரோமர் 1:20; ரோமர் 16:26)


    2. பரிசுத்த ஆவியானவர் (எபி 9:14)


    3. ஜீவன் (மத் 19:16,29; 

மத்  25:46; யோவான் 3:16,36; ரோமர் 6:22)


    4. இரட்சிப்பு (எபி 5:9)


    5. மீட்பு (எபி 9:12)


    6. சுதந்தரம் (எபி 9:15)


    7. சுவிசேஷம் (வெளி 14:6)


    8. உடன்படிக்கை (எபி 13:20)


    9. இராஜ்யம் (2பேதுரு 1:11)


    10. மகிமையும், வல்லமையும் (1தீமோ 6:16)


    11. ஆறுதல் (2தெச 2:16)


    12. மகிமை (2தெச 1:10; 1பேதுரு 5:10)


    13. உயிர்த்தெழுந்த சரீரங்கள் (2கொரி 5:1)


    14. காணாதவைகள் (2கொரி 4:18)


    15. வாசஸ்தலங்கள் (லூக்கா 16:9)


    16. அழிவு (2தெச 1:9)


    17. நியாயத்தீர்ப்பு 

(எபி 6:1-2)

    18. ஆக்கினை (மாற்கு 3:29)


    19. அக்கினி(மத் 18:8;மத் 25:41; யூதா 1:7)


    20. தண்டனை (மத் 25:46)


போஜனங்கொடுக்கவில்லை


பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை: தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும்                        காவ-லடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார் (மத் 25:42,43).


துன்மார்க்கர் செய்த துன்மார்க்கமான கிரியைகளைவிட, அவர்கள் செய்த தவறிய நன்மையான கிரியைகளுக்காக அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது. தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தாலந்தை வீணாக செலவு பண்ணுகிறவனைவிட, அதை பயன்படுத்தாமல் பூமியில் புதைத்து வைக்கிறவன் அதிக ஆக்கினையடைவான். நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியத்தை செய்யத் தவறும்போது அதனால் பலருக்கு தீங்கு உண்டாகும். கடமையை செய்யாதிருப்பதும் பாவம். தங்களுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றாமல் ஆயிரக்கணக்கானோர் அழிந்து போயிருக்கிறார்கள். 


தேவனுடைய நியாயத்தீர்ப்பில் விசுவாசம், இரக்கம், நியாயத்தீர்ப்பு ஆகிய மூன்றும் முக்கியமான பகுதிகளாகும். ஏழைகளுக்கு உதவிபுரியாமல் இருப்பது நியாயப்பிரமாணத்தை மீறும் கிரியை. இரக்கம் காண்பியாதவன் இரக்கமில்லாமல் நியாயந்தீர்ப்படுவான். நியாயத்தீர்ப்பு நாளின்போது தங்களுக்கு நன்மை செய்வதற்கு வாய்ப்பு இருந்தபோதிலும்,   அந்த வாய்ப்புக்களை பயன்படுத்தி        நன்மை செய்யாதவர்கள் ஆக்கினைக்குட்படுத்தப்படுவார்கள். 


எப்பொழுது உதவி செய்யாதிருந்தோம்


 அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவ-லடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்             (மத் 25:44).


துன்மார்க்கர் தமக்கு உதவிசெய்யவில்லையென்று ஆண்டவர் அவர்கள்மீது குற்றம் சுமத்துகிறார். இதை கேட்டு துன்மார்க்கர் மிகுந்த ஆச்சரியப்பட்டு  ""நாங்கள் எப்பொழுது உம்மை தேவையுள்ளவராக கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம்'' என்று கேட்கிறார்கள்.   இந்த துன்மார்க்கர்கள் ஏற்கெனவே ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டிருக்கிறார்கள்.  இயேசுகிறிஸ்துவின் மகிமையுள்ள சிங்காசனத்திற்கு இடதுபுறமாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய வார்த்தைகளை எப்படித்தான் கூறினாலும், மறுபடியும் சிங்காசனத்தின் வலதுபுறத்திற்கு வருவதற்கு இவர்களுக்கு வாய்ப்பேயில்லை. ஆயினும் ஆண்டவரிடம் ஏதாவது கூறவேண்டுமே என்று ""உம்மை தேவையுள்ளவராக எப்பொழுது கண்டோம்'' என்று கேட்கிறார்கள். 


தாங்கள் செய்த தவறுகளை துன்மார்க்கர்கள் அங்கீகரிப்பதில்லை. அவர்களுடைய மனச்சாட்சி அவர்களுடைய குற்றவுணர்வை வெளிப்படுத்துகிறது. அவர்களுடைய தவற்றை அவர்களுக்கு உணர்த்துகிறது. தங்களுக்கு தெரிந்திருந்தால் உதவிசெய்திருப்போம் என்று சாக்குபோக்கு சொல்லுகிறார்கள். ஆனால் இனிமேல் உதவிபுரிவதற்கு காலஅவகாசமில்லை. எல்லாம் முடிந்துபோயிற்று. இனிமேல் அவர்களால் எந்த நற்கிரியையும் செய்யமுடியாது. இயேசுகிறிஸ்துவின் மகிமையுள்ள சிங்காசனத்திற்கு இடதுபுறமாக இவர்கள் நிறுத்தப்பட்டுவிட்டார்கள். இவர்களுக்கு ஆக்கினை நியமிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் வழக்காடி பிரயோஜனமில்லை. 


துன்மார்க்கர்கள் தரித்திரரை துன்பப்படுத்தியதாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்களோ இயேசுகிறிஸ்துவையே துன்பப்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் சாதாரணமாக ஏழைகளுக்கும் உதவிபுரியவில்லை, கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கும் உதவிபுரியவில்லை, யாருக்கும் உதவிபுரியவில்லை. உதவிபுரிவது இவர்களுடைய சிந்தனையிலோ செயலிலோ காணப்படவில்லை. உதவிபுரிவது இவர்களுடைய சுபாவமல்ல. 


எனக்கே செய்யாதிருந்தீர்கள்


 அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்  (மத் 25:45).


இயேசுகிறிஸ்து தமது நியாயத்தீர்ப்பின் வார்த்தைகளை இங்கு மறுபடியுமாக உறுதிபண்ணுகிறார். தம்முடைய சீஷர்களுக்கும், தம்மை பின்பற்றுகிறவர்களுக்கும் விரோதமாக  துன்மார்க்கர்கள் என்னென்ன காரியங்களெல்லாம் செய்திருக்கிறார்களோ, அவையெல்லாவற்றையும் அவர்கள் தமக்கு விரோதமாக செய்திருப்பதாக இயேசுகிறிஸ்து இங்கு விவரிக்கிறார். தம்முடைய பிள்ளைகளில் பலர் சாதாரண ஜனங்களாகவும், ஏழை எளியவர்களாகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும், நெருக்கப்பட்டவர்களாகவும் இருந்தபோதிலும், துன்மார்க்கர்கள் அவர்களுக்கு எந்தவித நன்மையும் செய்யாமல் தீமையான காரியங்களையே செய்திருக்கிறார்கள். தம்முடைய பிள்ளைகளின் பாடுகளினால் இயேசுகிறிஸ்து நெருக்கப்படுகிறார். அவர்களுடைய உபத்திரவங்களில் இயேசுகிறிஸ்து வேதனைப்படுகிறார். தம்முடைய பிள்ளைகளை தொடுகிறவன் தமது கண்மணியையே தொடுவதாக கூறி தமது பிள்ளைகளின்மீது இருக்கும் அன்பை இயேசுகிறிஸ்து வெளிப்படுத்துகிறார். 


நித்திய ஆக்கினையும் நித்திய ஜீவனும்


அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார் (மத் 25:46).


துன்மார்க்கர்கள் நித்திய ஆக்கினையை  அடையப்போவார்கள். இவர்கள்மீது நியாயத்தீர்ப்பு விரைவாக அறிவிக்கப்படுகிறது.  தண்டனை வேகமாக நிறைவேற்றப்படுகிறது.  தங்களுடைய சுபாவங்களை மாற்றிக்கொள்வதற்கு துன்மார்க்கருக்கு இனிமேல் வாய்ப்பேயில்லை. அவர்களை மாற்றுவதற்கு தேவனும் தமது கிருபையை இனிமேல் வெளிப்படுத்தமாட்டார். கிருபையின் காலம் முடிவடைந்துவிட்டது. இவர்கள் கிருபையின் நாட்களை பயன்படுத்திக்கொள்ளாமல் அசட்டைபண்ணிவிட்டார்கள். காலத்தை பிரயோஜனப்படுத்திக்கொள்ளவில்லை. 


நீதிமான்கள் நித்திய ஜீவனை அடையப்போவார்கள். இவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பார்கள். பரலோகத்தில் எல்லாமே சந்தோஷமாக இருக்கும். எப்போதும் சந்தோஷமாக இருக்கும். பரலோக சந்தோஷம் நித்திய சந்தோஷம். பரலோகத்தில் முதுமை, வியாதி, மரணம், துக்கம், வருத்தம், கண்ணீர் ஆகிய எதுவுமே இராது. இந்த பூமியில்தான் ஜீவனும் மரணமும், நன்மையும் தீமையும், ஆசீர்வாதமும் சாபமும் நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் எதை தேர்ந்தெடுக்கவேண்டுமென்று நாம்தான் முடிவுபண்ணவேண்டும். நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை வைத்துத்தான் நமது நித்திய முடிவு அமையும். ஆகையினால் இந்த பூமியில் நாம் ஜீவிக்கும்போது        மிகுந்த எச்சரிப்போடும், கவனத்தோடும் ஜீவிக்கவேண்டும். 








Post a Comment

0 Comments