வேதத்தில்பெயர் சொல்லப்படாத பெண்கள் - பகுதி-6. (Anonymous Women in the Bible )

 

Anonymous Women in the Bible 


வேதத்தில்பெயர் சொல்லப்படாத பெண்கள்


பகுதி-6


லோத்தின் மனைவி


(ஆதி 19:1-26)


லோத்தின் மனைவியின் பெயர் என்னவென்று வேதம் அறிவிக்கவில்லை. லோத்து எப்படி அவளைத் திருமணம் செய்தார்? அவள் எபிரெய வம்சத்தைச் சேர்ந்தவளா? அல்லது சோதோம் கொமோராவின் தேசத்துப் பெண்ணா? என்றும் தெரியவில்லை. 

அவள் பெற்றோரைப் பற்றியும் வேதத்தில் எந்த வரலாறும் இல்லை. ஆனால் 

அவள் கணவனின் பெயர்) 

பேரப் பிள்ளைகளின் பெயர் இடம்பெற்றிருக்கிறது.


லூக்கா 17:32ல் இயேசு 

லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கிறார். நினைக்க வேண்டிய முக்கியமான காரியங்கள் பல இருக்கும்போது லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள் என்று இயேசு சொல்லுகிறாரே என்று நாம் வியப்படையக்கூடும். முற்பிதாக்களின் வரிசையில் வரவேண்டிய நமது மூதாதையரின் மனைவி அந்த உயர் நிலையைத் தவறவிட்ட அவலத்தை நினைத்து நினைத்து நாம் எச்சரிப்படைந்து வாழ்வது அவசியம். அவள் இன்றைக்கும் உப்புத் தூணாக நினைவுச் சின்னமாக கால் கடுக்க நின்றுகொண்டே இருக்கிறாள்.


லோத்து, ஆபிரகாமின் சகோதரனின் மகன். லோத்தின் தகப்பன் இறந்ததால் ஆபிரகாம் லோத்தைத் தன்னிடம் வைத்து பராமரித்து தான் போகும் இடமெல்லாம் கூட்டிச் சென்றான். ஆபிரகாமை மிருக ஜீவனும், வெள்ளியும், பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாய் இருக்கும்படி ஆசீர்வதித்த தேவன், லோத்தையும் ஆசீர்வதித்தார். அவர்களுடைய ஆஸ்தி

மிகுதியாய் இருந்தபடியால் அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண

முடியாமற்போயிற்று.


மந்தை பெருத்தபோது ஆபிரகாமின் மந்தை மேய்ப்பருக்கும், லோத்தின் மேய்ப்பருக்கும் சண்டை வந்தது. ஆபிரகாம் லோத்துடன் சமாதானம் பேசினான். பிரிந்து போகும் வாய்ப்பு கிடைத்தவுடன் லோத்து மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான். அவன் சோதோம் கொமோராவுக்கு அருகான சமவெளியைத் தெரிந்தெடுத்து அங்கு போய் குடியேறினான். சோதோம் கொமோரா பார்ப்பதற்குக் கண்களுக்குக் குளிர்ச்சியாக, கர்த்தருடைய தோட்டத்தைப் போல இருந்ததே தவிர, அதில் சிறப்பான தேவ பிரசன்னம், பரிசுத்தம், நீதி போன்ற ஏதும் இல்லாத இடமாக இருந்தது. இதுவரை ஆபிரகாமோடு சேர்ந்து வாழ்ந்த லோத்து இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்தானோ இல்லையோ தெரியவில்லை. அவளுடைய மனைவியும் கணவனின் தீர்மானத்தை மாற்ற எந்த ஒரு முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஒரு சமயம் லோத்தின் குடும்பம் சிறைப்பட்டுப் பாதிக்கப்பட்டபோது ஆபிரகாம் உடனே ஓடி வந்து உதவினபடியால் லோத்தின் குடும்பத்தினர் பிழைத்தனர். இந்த எச்சரிப்பையும் லோத்தின் குடும்பம் சிறிதளவும் நினைத்துப் பார்த்ததாகத் தெரியவில்லை. சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும், மகா பாவிகளுமாய் இருந்தர்கள் என்று ஆதி 13:13 சொல்கிறது.


அக்கிரமம் நிறைந்த சோதோம் கொமோராவை கர்த்தர் அழிக்கச் சித்தம் கொண்டார். எனவே கர்த்தரால் அனுப்பப்பட்ட தூதர்கள் அழிப்பதற்காகச் சோதோமை நோக்கிப் போனார்கள். சோதோம் வாசலில் உட்கார்ந்திருந்த லோத்து அவர்களை வரவேற்று, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டு விருந்துபண்ணி உபசரித்தான். தூதர்கள் லோத்தின் வீட்டில் படுக்கைக்குச் செல்லும் முன்னதாக சோதோம்

பட்டண மக்கள் (வாலிபர் முதல் கிழவர் வரை உள்ள மக்கள்) தூதர்கள் லோத்தின் வீட்டில் இருப்பதை அறிந்து லோத்தின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு லோத்திடம் உன்னிடத்தில் வந்த மனுஷரை நாங்கள் அறியும்படிக்கு அவர்களை வெளியே கொண்டு வா என்று கேட்டார்கள். 

லோத்து உடனே வெளியே வந்து, கதவைப் பூட்டி இந்த அக்கிரமம் செய்ய வேண்டாம் என்றும், தன் இரண்டு பெண் பிள்ளைகளை வெளியே கொண்டு வருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள் என்றும் சொன்னான். 


ஆனால் சோதோம் மக்கள் பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது, அவர்களுக்குச் செய்வதைப் பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்பு செய்வோம் என்று சொல்லி லோத்தை நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள். உடனே தூதர்கள் லோத்தை வீட்டிற்குள் இழுத்து கதவைப் பூட்டி வீட்டைச் சுற்றியிருந்த அனைவரின் கண்களையும் குருடாக்கினார்கள். இதன் பிறகு தூதர்கள் தாங்கள் அங்கு வந்த காரணத்தை, இந்த ஸ்தலத்தை அழிக்கப் போகிறோம் என்றார்கள். அதே சமயம் இவர்களுக்குப் பாராட்டின கிருபையை தேவன் இரண்டு

பெண்பிள்ளைகளைத் திருமணம் செய்யப்போகிற வாலிபருக்கும் காண்பிக்கச் சித்தமாயிருந்தார் (ஆதி 19:12). 

லோத்து அவர்களை உள்ளே அழைத்த போது அவர்கள் தங்களை பரியாசம் பண்ணுவதாக நினைத்து உள்ளே வரவில்லை.

அதிகாலை வேளையில் தூதர்கள், லோத்திடம் சோதோமுக்கு வரும் தண்டனையில் அழியாதபடி அவனுடையும் மனைவியையும், இரண்டு பெண் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போகும்படி துரிதப்படுத்தினார்கள். லோத்து தாமதித்தாலும், கர்த்தர் அவன் மீது வைத்த இரக்கத்தினால் அந்தப் புருஷர்கள் லோத்து, மனைவி மற்றும் பிள்ளைகளின் கைகளைப் பிடித்து அவர்களைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். அவர்களை அழிவில் இருந்து பாதுகாக்க நான்கு காரியங்கள் சொல்லப்பட்டது (ஆதி 19:17).

 (1) உன் ஜீவன் தப்ப ஓடிப்போ

 (2) பின்னிட்டுப் பாராதே

 (3) இந்த சமபூமியில் எங்கும்    நில்லாதே

 (4) நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப் போ. 

லோத்து தூதர்களிடம் தன் இயலாமையை கூறி மலைக்குப் பதிலாக பக்கத்தில் உள்ள ஊருக்குப் போக அனுமதி கேட்டான். அதற்கும் அனுமதி கிடைத்தது. லோத்து சோவாருக்குள் வரும்போது சூரியன் உதித்தது. கர்த்தர் வானத்திலிருந்து அக்கினியையும் கந்தகத்தையும் வருஷிக்கப்பண்ணி சோதோம் கொமோராவை அழித்துப்போட்டார். அச்சமயம் லோத்தின் மனைவி பின்னிட்டு சோதோம் கொமோராவை பார்த்து

 உப்புத்தூண் ஆனாள்.


லோத்தின் மனைவி கர்த்தருடைய வார்த்தைக்குச் செவி கொடுக்காமல் தன்னுடைய சுய விருப்பத்திற்கு இடம் கொடுத்தாள். அவள் இருதயம் விட்டு வந்த சோதோமின் இன்பங்களைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது. 

அவள் தனது ஊரையும் உடைமைகளையும் இச்சித்து திரும்பிப் பார்த்தாள். இயேசு சொன்னார்

 உங்கள் பொக்கிஷம் எங்கே

இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் (மத் 6:21). இந்த உலகத்தின் பொல்லாப்புகளிலும், 

அக்கிரமங்களிலும், சிற்றின்பங்களிலும் ஈடுபாடு கொண்டவர்கள், தேவ கோபாக்கினை, தண்டனை மற்றும் அழிவு ஆகியவற்றிலிருந்து தப்புவதில்லை என்று எச்சரிப்பதற்காகவே இயேசு இவ்வாறு கூறினார். 

நம்முடைய பொக்கிஷம் பரலோகத்தில் இல்லாமல், அழிந்துபோகிற இவ்வுலகில் இருக்குமானால் நாம் கர்த்தருடைய ராஜ்யத்தில் காணப்பட முடியாது. மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள் ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள் (ரோமர் 8:13).


லோத்தின் மனைவிக்கு இருந்த இச்சையின் கண்கள் நமக்கு இல்லாதபடி பார்த்துக்கொள்வோம். உலக ஆசை இச்சைகளை நோக்கிப் பார்க்காமலும் பின்மாற்ற வாழ்க்கைக்குச் செல்லாமலும் இருக்க கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக. Amen.


கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டு பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல (லூக்கா 9:62)


Post a Comment

2 Comments