வேதத்தில்பெயர் சொல்லப்படாத பெண்கள் - பகுதி -5 Anonymous Women in the Bible )

 Anonymous Women in the Bible 


வேதத்தில்பெயர் சொல்லப்படாத பெண்கள்


பகுதி-5


யோபுவின் மனைவி

      ( யோபு 2:9,10)


வேதத்தில் பெயர் எழுதப்படாதவர்களின் வரிசையில் யோபுவின் மனைவியும் வருகிறாள். அவள் பெயர் என்ன என்று நமக்குத் தெரியவில்லை. யோபு 1:1, யோபுவை உத்தமன், சன்மார்க்கன், தேவனுக்குப் பயந்தவன், பொல்லாப்புக்கு விலகுகிறவன் என்று நற்சாட்சி கூறுகிறது. இப்படி உயர்ந்த குணங்களைக்கொண்ட கணவனைப்பெற்ற பாக்கியசாலி இவள்.

 பண்டைக் காலத்தில் செல்வச் செழிப்புக்கு முக்கிய அடையாளமாகக் காணப்படுவது அவர்களின் கால்நடைகளே. யோபுக்கு 7000 ஆடுகள்,

 3000 ஒட்டகங்கள், 500 ஏர்மாடுகள், 500 கழுதைகள் இருந்தன என்று யோபு 1:2 சொல்கிறது. 

யோபுவின் மனைவி இப்படிப்பட்ட செல்வாக்குள்ள கணவனையே பெற்றிருந்தாள். கண்டிப்பாக நன்றாக வாழ்ந்து எல்லாவற்றையும் அனுபவித்திருப்பாள். 

கர்த்தர் இவர்கள் குடும்ப வாழ்க்கையில் 7 குமாரரையும், 3 குமாரத்திகளையும் கொடுத்து ஆசீர்வதித்திருந்தார். இத்தகைய பத்து குழந்தைச் செல்வங்களும் அவளது பெரும் பாக்கியமே.


ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தரின் சந்நிதியில் வந்தபோது சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான். கர்த்தர் யோபுவைக் குறித்துச் சொன்ன நற்சாட்சியைச் சாத்தான் கேட்டு 'அவன் கர்த்தரிடம் நீர் அவன் கையின் கிரியையை ஆசீர்வதித்ததினால் அவன் சம்பத்து பெருகிற்று. இப்பொழுதும் அவனுக்கு உண்டான ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் நீர் தொட்டால் அவன் உம் முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிப்பான்' என்றான். எனவே கர்த்தர் யோபுவுக்கு 

உண்டான

எல்லாவற்றையும்

 தொட சாத்தனுக்கு அதிகாரம் கொடுத்தார். அந்த அனுமதியுடன் பூமியில் இறங்கிய சாத்தானின் அம்புகளால் ஒரே நாளில் யோபுவின் மந்தைகள் மற்றவர்களால் திருடப்பட்டு கொண்டுபோகப்பட்டன.

 10 பிள்ளைகளும் சடுதியில் மரித்தார்கள். தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையில் நடந்த சம்பாஷணையையும், தேவனின் ஆவல்களையும் அறியாத யோபு, யோபு 1:20,21ல் 'கர்த்தர் கொடுத்தார், காத்தா எடுத்தார், கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்' என்று கூறி தேவனைத் துதித்தான். தனது இழப்புகளினிமித்தம் அவரைத் தூஷிக்கவில்லை.


தனது திட்டங்கள் தோல்வியாகி ஏமாற்றம் அடைந்த சாத்தான் மறுபடியும் தேவ சந்நிதியில் வந்து நின்றான். யோபுவைக் குறித்து தேவன் கூறிய நற்சாட்சி கேட்ட சாத்தான் யோபு 2:4,5 “அவன் எலும்பும், மாம்சமுமாகிய சரீரத்தை நீர் தொடுவீரானால் அவன் உமது முகத்துக்கு எதிரே தூஷிப்பான்" என்று மறுபடியும் கர்த்தரிடம் சொன்னான் (யோபு 2:4,5).

 கர்த்தர் சாத்தானிடம் அவன் உன் கையிலிருக்கிறான். அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு என்றார் (யோபு 2:6). சாத்தான் யோபுவை உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் கொடிய பருக்களால் வாதித்தான், யோபு ஒரு ஓட்டை எடுத்து தன்னைச் சுரண்டிக்கொண்டு வேதனையுடன் சாம்பலில் உட்கார்ந்தான்.

 (யோபு 2:8).


தன் கணவன் கொடிய பருக்களால் கஷ்டப்படுவதைப் பார்த்து மனம் இரங்கி அவரைக் கவனிக்க வேண்டிய மனைவி யோபுவைப் பார்த்து 'நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்' என்றாள். 

மதியீன ஜனங்கள் தேவனுடைய நாமத்தைத் தூஷிப்பார்கள் என்று சங் 74:18 சொல்கிறது. அவள் பேசிய வார்த்தைகள் கொடூரமாய் இருந்தன. கர்த்தர், மனைவியை ஒரு புருஷனுக்கு வாழ்க்கைத் துணையாகக் கொடுக்கிறார்.

மனைவியானவள் கணவனுக்கு ஏற்ற துணையாக இன்பத்திலும், துன்பத்திலும், வாழ்விலும், தாழ்விலும் அவனுடன் நிற்க வேண்டும். 

கணவனைத் தாங்குவதற்காகவே கர்த்தரால் கொடுக்கப்பட்டவள் மனைவி. அதற்கு மாறாக இப்படி கணவனை வார்த்தைகளால் தாக்குவது எத்தனை வேதனையான காரியம்! 


அவளுடைய வார்த்தைகள் சோதனைக் காலங்களில் உத்தமமாய் நிற்க உதவி செய்வதை விட்டுக் கீழே தள்ளி காலால் மிதிப்பதுபோல இருந்தது. பாடுகளின் நேரத்தில்தான் ஒரு மனிதனின் உண்மை

மன நிலைமை வெளிப்படுகிறது. பொன், அக்கினி, ஜுவாலைக்குள் போகும்போது சுத்தப் பொன்னாகப் பிரகாசிக்கும். ஆனால் போலியான பொன் அக்கினி 

ஜீவாலைக்குள் போகும்போது கருகி சாம்பலாகி விடுகிறது. போராட்டத்தின் பாதையில் யோபு பொன்னாக விளங்கினார். ஆனால் யோபுவின் மனைவி தன் உண்மை சுபாவத்தைக் காண்பித்தாள். கர்த்தரைத் தூஷித்தாள். கணவனையும் தேவனை தூஷித்து ஜீவனைவிடச் சொன்னாள். உமக்கு ஒரு முழம் கயிறு இல்லையா? என்று கேட்பதுபோல அவள் வார்த்தைகள் இருந்தன. நன்றாக வாழ்ந்த காலத்தில் எல்லாவற்றையும் சேர்ந்து அனுபவித்த இவள் வேதனையின் நாட்களில் தேவனைத் தூஷிக்கக் கூறியது ஏன்? அவள் பிசாசின் ஆயுதமாக செயல்பட்டாள்.


யோபுவின் நிலைமையோ மனைவியைப் பார்க்கிலும் அதிகமான பாடுகள். சரீரத்தில் கொடிய பருக்கள், புண்கள், மனதிலே கலக்கம். ஆனால் யோபு தன் உத்தமத்தை விட்டுப் பின்வாங்கவில்லை. 

தன் மனைவியிடம் நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோல் பேசுகிறாய். தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான் (யோபு 2:10).

நமது கணவர் அல்லது மனைவி, நண்பர், உற்றார், உறவினர் ஆகியோர் இவ்விதத் துன்பங்களை அனுபவிக்கும் போது அவர்களிடம் நமது அணுகுமுறை எப்படி இருக்கிறது? இப்படிப்பட்ட துயர நேரங்களில் அவர்களிடம் நாம் எப்படிப் பேசுகிறோம்? செயல்படுகிறோம் என்பதைக் கர்த்தர் கேட்கிறார், பார்க்கிறார் என்பதை நாம் மறக்கக்கூடாது. தேவனுக்கு விரோதமாய்ப் பேசுவதற்கு சாத்தான் நம்மைத் தூண்டிவிட இடம் கொடுக்கக்கூடாது.

 எந்தச் சூழ்நிலையிலும் ஒரு போதும் தேவனைத் தூஷிக்கக் கூடாது. மறுதலிக்கக் கூடாது. இரத்தச்சாட்சிகள் தங்கள் விசுவாசத்தினாலும், கர்த்தர் மீது வைத்த அன்பினாலும் கடைசி வரை உண்மையாய் இருந்தார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். 

யோபுவின் நீடிய பொறுமை நம்மில் காணப்படவேண்டும். தேவ நாமத்திற்கு மகிமையாய் வாழ கர்த்தர் நமக்கு

 உதவி செய்வாராக ஆமென்….

Post a Comment

1 Comments