யாபேசின் ஜெபம் - Daily Devotion

 Daily Devotion

யாபேசின் ஜெபம்


“யாபேஸ் தன் சகோதரைப் பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்; நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்” 

(1 நாளாகமம் 4:9)


யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி, தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக் கொண்டதை தேவன் அருளினார்.”

 (1 நாளாகமம் 4:10)


இந்த ஜெபம் நம் வேத புத்தகத்தில் ஒரு விசேஷித்த ஜெபம்.. மேலோட்டமாகப் பார்த்தால், வேதத்திலேயே மிகச்சிறிய ஜெபம்! 

மற்றும் ஒரே வசனத்தில், 

என்னை” என்ற வார்த்தை மூன்று முறையும், “என்” என்ற வார்த்தை ஒரு முறையும் சொல்லப்பட்டு

 ஒரு சுயநல ஜெபமாகக்காணப்படுகின்றது.. 

ஆனால் இது வேத புத்தகத்தில் ஆவியானவர் எழுதி வைத்திருப்பதால், இந்த ஜெபத்தைக் குறித்து சற்று 

தியானிப்போம்.


"யாபேஸ்"என்றால் "துக்கம்" அல்லது "துக்கத்தை உண்டாக்குபவன்" என பொருளாம்.

அவன் தாய் நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள். யாபேசின் உடன்பிறப்பினரைப் பற்றி ஒன்றும் கொடுக்கப்படவில்லை. ஆனால், ஒன்று உண்மை இவனுடைய பிறப்பின் போது அவன் தாயார் மிகவும் வேதனைப் பட்டிருக்க வேண்டும்..

 தாயின் இந்த சொல் யாபேசை அதிகமாக பாதித்திருக்க வேண்டும்.. ஆகவே, யாபேஸ் “தீங்கு என்னைத் துக்கப் படுத்தாதபடிக்கு” என ஜெபிக்கிறான்.. இதுவே அவன் ஜெபத்தின் மையப்பொருளாகவும் மாறி விடுகின்றது. 

நம் வார்த்தைகள் நம் பிள்ளைகளை பாதித்திடாத படி ஜாக்கிரதையாக இருக்கட்டும்.

யாபேஸ் கனம் பெற்றவனாயிருந்தான். சிறப்பு மிக்கவனாயிருந்தான். அவன் தாயைத் தவிர வேறு ஒருவரையுப் பற்றியும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே தான் 1 சாமுவேல் ஆக்கியோன் வம்ச வரலாற்றுகளை எழுதும்போது இரண்டு வசனங்களில் யாபேசைப் பற்றி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 ஆனால் சமுதாயத்தில் சிறப்பு மிக்கவனாயிருந்தான். இயேசு சொன்னார் “..உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக் கடவது” (மத்தேயு 5:16) 

நம் வீட்டிற்கு அருகில் இருப்பவர்களிடம் நாம் எவ்வாறு இருக்கிறோம்?


அவன் ஆண்டவரிடம் நான்கு காரியங்களைக் கேட்கிறான்.. தனக்கு துக்கம் இல்லாத வாழ்க்கை வேண்டுமென்று கேட்கிற யாபேஸ், 


  1. முதலாவது தன்னை ஆசீர்வதிக்கும்படி கெஞ்சுகிறான்.. “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதியாகமம் 12:2) என்று ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை நம்புவதைப் பார்க்கலாம்.. நாம் எத்தனை குடும்பமாக இவ்வாறு ஜெபிக்கிறோம்? “நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்” (யோவான் 11:40) உங்கள் வீட்டில் கர்த்தருடைய ஆசீர்வாதம் தங்கியுள்ளதா? மறந்து விடாதீர்கள்.. வாக்குத்தத்தத்தைத் தந்து, உங்களை ஆசீர்வதிக்கும்போது உங்கள் பிள்ளைகளையும் உங்களைச் சார்ந்தவர்களையும் நீங்கள் கையிட்டுச் செய்கிற யாவற்றையும் தேவன் ஆசீர்வதிக்கிறார்.


  1. என் எல்லையைப் பெரிதாக்கும்

 (Enlarge my border)

எப்போதாவது இவ்வாறு ஜெபித்தது உண்டா? உங்கள் குடும்பத்தை உயர்த்த கர்த்தர் சித்தம் கொண்டிருக்கிறாரே! உங்கள் ஊழியத்தை விரிவாக்க கர்த்தர் விரும்புகிறாரே!

 யாபேஸ் ஒரு தலைவன்.. அவன் எல்லையைப் பெரிதாக்குவதென்றால், அவன் மூலம் அநேகர் நன்மை பெறுவார்கள்.. நல்ல வாழ்க்கையைப் பெற்றுக்கொள்வார்கள்.. “உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடை செய்யாதே ; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப் படுத்து; நீ வலது புறத்திலும், இடது புறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்..” (ஏசாயா 54:2,3) என்று கர்த்தர் சொல்கிறார். சூழ்நிலைகளுக்கு அப்பால் நீங்கள் பார்க்க வேண்டாம் என்று தேவன் விரும்புகிறார்..

யாபேஸ் கர்த்தருடைய கரத்தின் வல்லமையை அறிந்திருந்தான். மாத்திரமல்ல, கேட்டவுடன் உதவி செய்யும் கரம் என்பதை அறிந்திருந்தான். “எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்று..” எஸ்றா அறிந்திருந்தான் (எஸ்றா 8:22) “என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது, உமது கரம் என்னைத் தாங்குகிறது” (சங்கீதம் 63:8)

 நம்மை நோக்கி நீட்டப்படுகிற தேவ கரத்தைக் குடும்பமாகப் பற்றிக் கொள்வோமா?


  1. தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் (Keep me away from harm)

தீங்கு என்பது நினையாத நேரத்தில் தான் வரும்.. ஏன் இந்த ஜெபத்தை நாம் அடிக்கடி சொல்லக் கூடாது? நம் பிள்ளைகள், கணவர், மனைவி வெளியே செல்லும்போது, ஜெபித்து அனுப்புகிறோமா? காலை, மாலை குடும்ப ஜெபம் உண்டா? கணவர் ஒவ்வொரு நாளும் தன் பிள்ளைகளை எண்ணாகமம் 6:24-26ல் சொல்லப்பட்டது போல்

 “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன் மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக் கடவர்” என்று ஆசீர்வதிக்க வேண்டுமே!

“கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.” (சங்கீதம் 121:5)


ஒவ்வொரு நாளும், யாபேசின் ஜெபம்   நம் குடும்பத்தில் ஒலிக்கட்டும்…….

உம்முடைய மகிமையான கரம் அன்றைக்கு இஸ்ரவேலரை வனாந்தரத்திலே வழி நடத்தின அதே கரம் எங்களையும் வழி நடத்தட்டும்.. ஆமென்!”


Post a Comment

1 Comments