K.T.பால் || அறிந்து கொள்வோம் || பகுதி -122 ||

அறிந்து கொள்வோம்

பகுதி -122


K.T.பால்

(1876-1931)


(தேசிய மிஷனரி சொசைட்டியின் இணை நிறுவனர் மற்றும் இந்தியாவின் முதல் கிறிஸ்தவ அரசியல்வாதி) 


கே.டி.பால் (கனகராயன் திருசெல்வம் பால்) தேசிய விடுதலைப் போராட்ட காலத்தில் இந்திய கிறிஸ்தவ தலைவர்களில் ஒருவராக இருந்தார். தேசிய இயக்கத்தில் கிறிஸ்தவர்கள் பங்கெடுப்பதற்கு அடிப்படையாக கிறிஸ்தவ தேசிய இறையியலை உருவாக்கினார்.1876-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் நாள் சேலத்தில் ஒரு தமிழ் கிறிஸ்தவ குடும்பத்தில் இவர் பிறந்து வளர்ந்தார்.அரசியலில் பங்குபெறுவதற்காக கற்றறிந்த இந்தியர்கள் தேவை என்று இந்திய தேசிய காங்கிரஸ் குரல் கொடுத்து வந்த காலகட்டம் அது.சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து பின்னர் சட்டக் கல்வி பயின்ற கே.டி. பால் பின்னர் அதே கல்லூரியில் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரானார்.


இந்திய மக்கள் சுய விழிப்புணர்வு பெற வேண்டுமென்பதற்காக பாடுபட்டார் இவர். அதற்கு இந்திய சுதேசி சபையின் சாட்சி அவசியம் என்பதை உணர்ந்திருந்தார்.


1914-ஆம் ஆண்டு YMCA அமைப்பின் பொதுச் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார்.இவ்வேளையில் சாதிப் பாகுபாட்டுக்கும், பிற சமுதாய தீய பழக்கங்களுக்கும் எதிராக இவர் போராடினார். கிராமப்புற மறு சீரமைப்புக்காகவும், முதியோர் கல்விக்காகவும் அரும்பாடுபட்டார்.


தேசிய விடுதலைக்கான நடவடிக்கைகளிலும் இவர் ஈடுபட்டார். 1930-ஆம் ஆண்டு இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பின் பிரதிநிதியாக வட்ட மேசை மாநாட்டில் பங்கு கொண்டார்


சபையில் இந்திய தேசிய உணர்வை எழுப்பி, இந்திய கிறிஸ்தவம் வளர்ச்சி பெறுவதற்கு இவர் அரிய பங்காற்றியிருக்கிறார். இந்திய கிறிஸ்தவ சமுதாயத்தைத் தேசிய உணர்வை நோக்கித் திருப்பியவர் இவரே. இந்திய மக்களின் தேசிய உணர்வைத் தட்டியெழுப்ப ஒவ்வொரு பொதுக் கூட்டத்திலும் அறைகூவல் விடுத்தார்.


YMCA பணிக்குப் பிறகு பொதுச் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்தார். கிறிஸ்தவர்களுக்கென தனிப்பட்ட மதச்சார்பான சட்டசபைப் பிரதிநிதித்துவம் பெறுவதைக் கடுமையாக எதிர்த்தார்.தேசிய ஐக்கியத்துக்காகவும் மத நல்லிணக்கத்துக்காகவும் பாடுபட்டார். சபையானது இயேசுவின் அன்பை அனைத்துச் சமுதாயங்களின் மத்தியிலும் பிரதிபலிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.


கே.டி. பால் இந்திய மக்களின் மனதிலும் இந்திய சபையிலும் தேசிய உணர்வை வளர்க்கப் பாடுபட்ட இந்திய கிறிஸ்தவ தலைவராக விளங்கினார்.1931-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் நாள் தனது 55-ஆவது வயதில் இவர் காலமானார்.







Post a Comment

0 Comments