ஃபிரடெரிக் வில்லியம் சாவிட்ஜ் ||மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு ||

  மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு


ஃபிரடெரிக் வில்லியம் சாவிட்ஜ்

 Frederick William Savidge 



ஃபிரடெரிக் வில்லியம் சாவிட்ஜ் 1862 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ்ஷையரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார் . அவரது குடும்பம் பாப்டிஸ்ட் தேவாலயத்தைச் சேர்ந்தது.அவர் முனைவர் பட்டம் பெற்று லண்டனில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தார். வடகிழக்கு இந்தியாவில் மிஷனரிகளின் தேவை இருந்தது என்று அறிந்த அவர் உடனடியாக தனது வேலையை ராஜினாமா செய்தார்.லண்டனில் உள்ள பாப்டிஸ்ட் சபையின் மூலம் தனது வருங்கால மிஷனரி கூட்டாளியான ஜேஎச் லோரனை சந்தித்து இருவரும் நண்பர்களாகி இந்தியாவில் பணியாற்ற ஆர்திங்டன் பழங்குடியினர் மிஷன் வழங்கிய மிஷனரி ஊழிய வாய்ப்பை ஏற்றுக்கொண்டு இங்கிலாந்தை விட்டு வெளியேறினார். அவர் இந்தியாவிற்கு கப்பலில் பயணம் செய்து 1891 நவம்பரில் கல்கத்தா வந்து சேர்ந்தார்.


அவர் 1891ஆம் ஆண்டில் வங்காளத்தை அடைந்தாலும், இன்னும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அவரால் மிசோரமை அடைய முடியவில்லை.கிறிஸ்துவின் சமாதான செய்தியைப் பரப்புவதற்காக அவர் தனது நண்பர் ஜேம்ஸ் ஹெர்பர்ட் லோரெய்னுடன் சேர்ந்து ஒரு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார்.


முதலில் அவர் திரிபுராவில் மிஷனரி வேலையைத் தொடங்கவேண்டியிருந்தது. ஆனால்,உள்ளூர் மகாராஜா அவரை தனது எல்லைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.எனவே, அவர் சிட்டகாங்கிற்குச் சென்று மிசோரம் நுழைவதற்கு அனுமதி கிடைக்க காத்திருந்தார்.இருப்பினும் லுஷாய் பழங்குடியினர் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்ததால் அவரால் அந்த எல்லைக்குள் நுழைய முடியவில்லை. அதனால் அவர் அருகிலுள்ள கசலாங் கிராமத்தில் குடியேற வேண்டியிருந்தது. அங்கு அவர் பசி,காட்டின் பயங்கரமான நிலைமைகள் மற்றும் கடுமையான உடல் நலக்குறைவை அனுபவித்தார். அவரது உடல்நலத்திற்காக அவர் இங்கிலாந்துக்கு திரும்புவது நலமென்று அறிவுறுத்தப்பட்ட போதிலும், இந்த மிஷனரி பின்வாங்காமல் அங்கேயே இருக்க முடிவு செய்தார். இறுதியாக 1894 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அவர்கள் மிசோரமில் உள்ள ஐஸ்வாலுக்கு வந்தடைந்தனர்.


உடனடியாக அங்கு கல்வி சம்பந்தமானப் பணியை மேற்கொண்டார் சாவிட்ஜ். அவரது முதல் முன்னுரிமை மிசோ மொழியின் எழுத்துக்களை உருவாக்குவதாகும்.1894ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அவர் உள்ளூர் மக்களுக்கு கல்வி கற்பதற்காக ஒரு சிறிய பள்ளியைத் தொடங்கினார். பின்னர் அவர் சிறிது நேரம் அருணாச்சல பிரதேசத்தில் பணியாற்றி, மீண்டும் தெற்கு மிசோரம் திரும்பி வந்தார்.


அங்கு தீவிர சுவிசேஷ சேவைக்கு அதிகமாக அவர் அயராது பள்ளிகளை நடத்தினார், சமூகத்தில் சேவைகளை வழங்கினார், மற்றும் சிறிய மருத்துவமனைகளை நடத்தினார். தேவனின் ராஜ்ஜியம் வளர்ந்ததால் மேலும் எல்லா விஷயங்களிலும் இப்பகுதி வளர்ச்சியடைந்தது.

35 வருட தீவிர ஊழியத்தினால்

சாவிட்ஜ் உடல்நிலை மோசமாகி 1925 இல் ஓய்வு பெற்றார்.மிசோரத்தை விட்டு 1925 ஏப்ரல் 13 அன்று இங்கிலாந்து சென்றார்.அவருடன் புதைக்க சேர்கானிலிருந்து ஒரு மண்ணை வீட்டிற்கு கொண்டு வந்தார்.அவர் லண்டனில் வசித்து வந்தார்,ஆனால் நீரிழிவு நோயால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.நீண்ட கடுமையான துன்பங்களுக்குப் பிறகு அவர் 28 செப்டம்பர் 1935 அன்று இறந்தார்.


மிசோரமில் உள்ள மிசோ பழங்குடியினர் ஒரு காலத்தில் நம்பிக்கையற்ற காட்டுமிராண்டிகளாக அறியப்பட்டார்கள்.ஆங்கிலேயர்கள் கூட லுஷாய் மலைகளுக்குள் செல்லத் துணியவில்லை.பேய்களுக்கு பலிகளைச் செலுத்தும் அந்த பழங்குடியினர் எப்பொழுதும் போரிட்டுக் கொண்டிருந்தனர்.ஆனால் இன்று மிசோ மக்களில் 87 சதவீதம் கிறிஸ்தவர்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆமாம்,தேவனின் பார்வையில் அவர்கள் நம்பிக்கையற்றவர்களாக இல்லை. அவர்களையும் பாவத்திலிருந்து மீட்க அவர் தமது ஊழியர்களை அனுப்பினார்.


ஃப்ரெட்ரிக் வில்லியம் சாவிட்ஜ் மிசோ பழங்குடியினரினடையே சேவை செய்த முன்னோடி மிஷனரியாக இருந்தார்.


பிரியமானவர்களே, கர்த்தரை சேவிக்க உங்கள் விலைமதிப்பற்ற மற்றும் உயர்ந்த பட்டங்களை விட்டுக்கொடுக்க நீங்கள் ஆயத்தமா?   



நன்றி: V. வீர சுவாமிதாஸ்



Post a Comment

0 Comments