ஆரோன் என்ற ஆறுமுகம் பிள்ளை ||மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு ||

 மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு


ஆரோன் என்ற ஆறுமுகம் பிள்ளை

(Aaron -Arumugam Pillai) 

 

(பார்தலோமேயு சீகன்பாக் மூலம் தரங்கம் பாடியில் ஞானஸ்நானம் பெற்றவர்)

 

                "ஆரோன்" அவர்களின் இயற்பெயர் 'ஆறுமுகம் பிள்ளை". அவர் உயர் சாதியைச் சேர்ந்த ஒரு பணக்கார குடும்பத்தில்1698 -ம் ஆண்டு கடலூரில் பிறந்தார். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியுடன் வர்த்தகம் செய்த அவரது தந்தை சொக்கநாத பிள்ளை, வியாபாரத்தில் பெரும் இழப்பை அடைந்த பின்பு குடும்பத்துடன் அரசபுரத்திற்கு சென்றார். அங்கு அவர்கள் வசித்து வந்த பகுதியில் புராட்டஸ்டன்ட் மிஷன் ஒரு பள்ளியை நிறுவியது. அந்த பள்ளியில் தரங்கம்பாடி லூத்தரன் மிஷனால் அச்சிடப்பட்ட தமிழ் பாடப்புத்தகங்களிலிருந்து தமது கல்வியைப் பெற்றுக் கொண்ட மாணவர்களில் ஆறுமுகமும் ஒருவர்.

 

ஆறுமுகத்திற்கு 19 வயதாக இருந்தபோது சவரிமுத்து என்ற ஆசிரியர் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை அவருக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் 1718 ஆம் ஆண்டில் பார்தலோமேயு சீகன்பாக் என்பவரால் தரங்கம்பாடியில் ஞானஸ்நானம் பெற்றார்.அப்பொழுது அவருக்கு "ஆரோன்" என்ற கிறிஸ்தவ பெயர் வழங்கப்பட்டது. ஆரோன் தனது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எதிர்ப்பை சந்தித்த போதிலும் விசுவாசத்தில் உறுதியாக நின்றார். அவர் ஒரு தமிழ் இறையியல் பள்ளியில் வேதாகமத்தை பயின்றார்.பின்னர் தரங்கம்பாடியில் உள்ள நியூ ஜெருசலேம் சபையில் உதவி கேடெசிஸ்ட், என்றால் கிறிஸ்தவத்தின் நியமங்களைக் கற்பிக்குபவராக நியமிக்கப்பட்டார். தனது மக்களை பற்றி மிகுந்த பாரம் கொண்டிருந்த ஆரோன், அவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க நீண்ட தூர பயணமானாலும் செல்வார். அவர் தமிழ்நாட்டின் பொறையார், சீர்காழி மற்றும் சந்திர்பாடி ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். ஊழியத்திற்க்காக அவர் கொண்டிருந்த வாஞ்சையை கண்ட ஜெர்மன் லூத்தரன் மிஷனரிகள் 1733 ஆம் ஆண்டில் அவரை ஒரு பாதிரியாராக நியமித்தனர். பாதிரியாராக நியமிக்கப்பட்ட முதல் ஐரோப்பியர் அல்லாதவர் அவரே.

 

ஆரோன் நல்ல பேச்சாற்றல் திறன் கொண்டவர்.அவர் கொண்டிருந்த நல்ல தனிப்பட்ட உறவுகள் உள்ளூர் மக்களுக்கு ஆவிக்குரிய ஆறுதலையும் ஐரோப்பியர்களுக்கு ஊழியத்தில் சரியான யோசனைகளையும் வழங்க உதவியது.ஆரோன் தமிழ் மக்களுக்கும் ஐரோப்பிய மிஷனரிகளுக்கும் இடையில் ஒரு பாலமாக மாறினார். அவர் மிகுந்த தைரியம், நேர்மை மற்றும் ஞானமுள்ள மனிதராக வாழ்ந்தார். மோதல்களை எதிர்கொள்ளும் போது வெட்கப்படாமல் நேரடியாக எதிர்கொண்டு அவற்றை சமாதானத்துடன் தீர்த்தார். பகுத்தறிவு விளக்கங்களை கொண்டு உள்ளூர் மக்களிடையே காணப்பட்ட மூடநம்பிக்கைகளை தகர்க்க முயன்றார். அவருடைய ஊழியத்தின் நாட்கள் நீண்டதல்ல. என்றாலும், அவர் பணியாற்றிய பகுதிகளில் கிறிஸ்தவர்களிடமிருந்தும் இந்துக்களிடமிருந்தும் அன்பையும் மரியாதையையும் பெற்றவராக திகழ்ந்தார் இந்த ஆரோன்.   


Post a Comment

0 Comments