ரெபேக்காள் || அறிந்து கொள்வோம் பகுதி-71 ||

அறிந்து கொள்வோம்

பகுதி-71


ரெபேக்காள்

 

வீடும் சொத்தும் ஒருவனுக்கு வழிவழிச் சொத்தாய் வரலாம்: ஆனால், விவேகமுள்ள மனைவியோ ஆண்டவர் அளிக்கும் கொடை –

நீதி 19 : 14.


ஆபிரகாமுக்கு நூறு வயதாக இருந்தபோது இறைவன் அருளால் பிறந்தவர் ஈசாக்.இப்போது அவருக்குத் திருமண வயது. ஆபிரகாம் தனது நம்பிக்கைக்குரிய வேலையாளை அழைத்தார்.

“ நீ போய் என் மகனுக்கு ஒரு நல்ல பெண்ணைப் பார்.இந்த கானான் நாட்டிலிருந்து அவனுக்குப் பெண் பார்க்க வேண்டாம்.

எனது சொந்த ஊருக்குப் போ. தந்தையின் பரம்பரையிலிருந்து ஒரு நல்ல பெண்ணை பார்.

கடவுளின் தூதர் உனக்கு முன் செல்வார்." என்று சொன்னார்.


பெண் பார்த்தல் தொடர்பாக ஆபிரகாம் இட்ட நிபந்தனைகள் இவை :-


  • ஈசாக்கை அழைத்துக் கொண்டு போகவேண்டாம்.

  • கண்டுபிடிக்கும் அந்தப் பெண் ஒரு வேளை உன்னுடன் வர மறுத்தால் நீ திரும்பி விடலாம்.

  • அதன் பின் ஈசாக்குக்கு நீர் பெண்பார்க்க வேண்டாம்.

வேலையாள் சம்மதித்தார்.

பத்து ஒட்டகங்கள். விலைமதிப்பற்ற பல பரிசுப் பொருட்களோடு, ஆபிரகாமின் தேசம் மெசபடோமியாவிலிருந்து நாகோருக்குப் போனார்.

சுமார் எண்ணூறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, ஒரு மாலைப் பொழுதில் அந்த ஊரை அடைந்தார்.ஊருக்கு அருகே இருந்த கிணற்றின் அருகில் இருந்தார்.திடீரென மனதில் ஒரு எண்ணம்.


மண்டியிட்டு கடவுளிடம் வேண்டினார்.


“கடவுளே, பொதுவாக மாலை வேளைகளில் தண்ணீர் எடுக்க பெண்கள் இங்கே வருவார்கள். அப்படி வரும் பெண்களிடம், எனக்கு குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடு என்று கேட்பேன்".


எந்தப் பெண் தண்ணீரையும் கொடுத்து, உங்கள் ஒட்டகங்களுக்கும் நான் தண்ணீர் மொண்டு தருகிறேன் என சொல்கிறாளோ, அவளே நீர் ஈசாக்கிற்காய் தரப்போகும் பெண் என்பதைப் புரிந்து கொள்வேன். என்று மனதில் வேண்டினார்.


அப்போது ஒரு அழகான பெண் அந்த இடத்தில் தண்ணீர் கொள்ள வந்தாள்.அவள் கிணற்றில் இறங்கி தண்ணீர் மொண்டு கொண்டு மேலே வருகையில், ஈசாக்கின் வேலையாள் மனதில் திட்டமிட்டிருந்தபடி குடிக்கத் தண்ணீர் கேட்டார். அவள் சற்றும் மறுக்காமல் தண்ணீரைக் கொடுத்தாள்.

அவர் குடித்து முடித்ததும், நான் உங்களுடைய ஒட்டகங்களுக்கும் தண்ணீர் இறைத்து ஊற்றுவேன் என்று சொல்லி, பதிலைக் கூட எதிர்பாராமல் காரியத்தில் இறங்கினார்.வேலையாள் ஸ்தம்பித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்.   

தண்ணீர் இறைத்து முடித்ததும் ஆறு கிராம் எடையுள்ள மூக்குத்தியும், நூற்று இருபது கிராம் எடையுள்ள இரண்டு காப்புகளையும் அவளுக்கு பரிசாகக் கொடுத்தார்.

கொடுத்து விட்டு அவள் யார் என விசாரித்தார். அவள் உறவினர் பெத்துவேலின் மகள், ஈசாக்கின் மனைவியாகக் கூடிய உறவு முறைதான் என்பதை அறிந்ததும் உடனே மண்டியிட்டு இறைவனை வணங்கினார்.


இரவில் ஒட்டகங்களும் நாங்களும் உங்கள் இல்லத்தில் தங்கலாமா என வேலையாள் கேட்டார்.

அவளோ சற்றும் தயங்காமல் உடனே ஒப்புக் கொண்டாள்.

அவளுடைய வீட்டுக்குச் சென்றனர்.. ரெபேக்காவின் வீட்டார் நிகழ்ந்தவற்றையெல்லாம் கேட்டு வியந்து கடவுளை மகிமைப்படுத்தினர்.

ரெபேக்காள் ஈசாக்கின் மனைவியாவதற்காக வேலையாளுடனும், தோழியர் மற்றும் தாதியுடனும் புறப்பட்டாள்.

ஈசாக் வேலையாள் தனக்காய்ப் பார்த்து வந்திருந்த ரெபேக்காவைத் திருமணம் செய்து கொண்டார்.திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பார்கள். இந்தத் திருமணம் கடவுளால் நேரடியாகவே நடத்தப்படுகிறது.


ஒரு மணப்பெண் எப்படியிருக்க வேண்டுமோ அத்தனை குணாதிசயங்களும் ரெபேக்காவுக்கு இருந்தன.

  • தினமும் தண்ணீர் எடுக்கும் நிகழ்வு ரெபேக்காவின் உடல் உழைப்பைச் சொல்கிறது.


  • அவர் கன்னியாய் இருந்தார் என்பது அவருடைய வாழ்வின் உடலியல் தூய்மையைச் சொல்கிறது.


  • தண்ணீர் தருவாயா எனும் கேள்விக்கு மறுப்பேதும் இல்லாமல் தண்ணீர் கொடுப்பது அவளுடைய மனித நேயத்தைக் காட்டுகிறது.


  • ஒட்டகங்களுக்கும் தண்ணீர் ஊற்றுகிறேன் என்று என முன்வருவது பிறருக்கு உதவுவதில் ஆர்வமாய் இருப்பதைச் சொல்கிறது !


அது மட்டுமல்லாமல் இந்த பொருத்தம் இறைவனால் வந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டதும், உடனடியாக தன்னை ஒப்புக் கொடுக்கிறார்.

அன்னை வீட்டை விட்டு, சொந்த நாட்டை விட்டுப் போகவேண்டும், காலமெல்லாம் தூரதேசத்தில் வாழவேண்டும், மீண்டும் பெற்றோரைப் பார்க்க முடியாமல் போகலாம் எனும் கவலைகளெல்லாம் அவளை அலைக்கழிக்கவில்லை.


திருமணங்கள் இறைவன் முன்னின்று நடத்தும் திருமணங்களாக அமையும் போது அவை இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுகின்றன.


இறைவனை மறந்து விட்டு படிப்பு, பணம், அந்தஸ்து , அழகு போன்ற மற்ற விஷயங்களின் மீது அதிக கவனம் செலுத்தும் போது திருமணங்கள் பெரும்பாலும் தோல்விப் பயணத்தின் தவறான துவக்கமாகவே அமைந்து விடுகிறது.

திருமணத்தில் தேவ சித்தம் செய்வோம்.


 


Post a Comment

0 Comments