பரலோகத்திற்கு போகும் வழி (இயேசுவின் உபதேசம்)

 பரலோகத்திற்கு போகும் வழி

(இயேசுவின் உபதேசம்)


கேட்டுக்குப் போகிற வாசல்


இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர் (மத் 7:13).


இயேசுகிறிஸ்துவிற்கு இரண்டு  வழிகளைப் பற்றி குறிப்பிடுகிறார். ஒன்று பாவத்தின் தீய வழி. மற்றொன்று பரிசுத்தத்தின் நல்ல வழி. எல்லா இடத்திலும் இதுபோல் இரண்டு வழிகள் இருக்கும். ஒன்று சரியான வழி. மற்றொன்று தவறான வழி. ஒன்று நல்ல வழி. மற்றொன்று தீய வழி.  ஒன்று பரலோகத்திற்கு செல்லும் வழி. மற்றொன்று நரகத்திற்கு செல்லும் வழி. நாம் இவ்விரண்டு வழிகளில் எந்த வழியாக செல்ல வேண்டும் என்று தீர்மானம் பண்ணவேண்டும். இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட

 வழி என்று எந்த வழியும் இல்லை. இரண்டு படகுகளில் கால் வைத்து கடலில் பிரயாணம் பண்ணுவது இயலாத காரியம். 


பாவத்தின் வழியும் பாவிகளின் வழியும்  கேட்கப்போகிற வழியாகும். கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. இதன் வழியாக அநேகர் பிரவேசிக்கிறார்கள். கேட்டுக்குப் போகிற வழியில் கட்டுப்பாடு எதுவும் இராது. சுதந்திரம் தாராளமாக இருக்கும். இருதயத்தில் ஆசைகளோடும், இச்சைகளோடும் எவ்வித கட்டுப்பாடு இல்லாமல் கேட்டுக்குப் போகிற வாசல் வழியாக பிரயாணம் பண்ணலாம்.  நமது பேராசைகளையும், பாவங்களையும் கண்டித்து உணர்த்துவதற்கு இந்த பாதையில் யாரும் இருக்கமாட்டார்கள். நமது மனம் விரும்பும் பாதையில் எப்படி வேண்டுமானாலும் போகலாம். நமது கண்களின் இச்சையின் பிரகாரம் நடந்து கொள்ளலாம். இந்த வழியில்  கட்டுப்பாடே இல்லை. 


பாவிகள் இந்த பாதையின் வழியாக போவதற்கு விரும்புகிறார்கள். இது கேட்டுக்குப் போகிறது. இதன் வாசல் விரிவும் வழி விசாலமுமாயிருக்கிறது. ஆகையால் இதன் வழியாக அநேகர் பிரவேசிக்கிறார்கள். இந்த வழியாக போகிறவர்களுக்கு துணைக்கு பலர் வருவார்கள். தனியாக போக வேண்டியதில்லை.  ஏராளமான ஜனங்கள் கூட வருவார்கள். திரளான ஜனங்களை பின்பற்றும்போது ஆபத்து நம்மை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும். கூட்டத்தோடு கூட்டமாக போவது தவறான பாதையாக இருக்கலாம். பொதுவாக ஊரோடு ஒத்துப் போவது நமது சுபாவம். நீரோட்டத்தின் பாதையில் நீந்திச் செல்வது எளிது. எதிர்நீச்சல் போடுவது கடினம். நமது சுபாவம் எப்போதும் எளிதானதையே தெரிந்தெடுக்கும். எல்லோரும் செய்வதை போன்று நாமும் செய்ய வேண்டும் என்று விரும்புவோம். எல்லோரும் அழிந்து போனால் நாமும் அழிந்து போவதற்கு வாய்ப்புள்ளது. ஆகையால் கூட்டத்தோடு போகும்போது மிகுந்த எச்சரிப்போடு இருக்க வேண்டும். நாம் செல்லும் பாதை அழிவுக்கு நேரானதா, அல்லது ஜீவனுக்கு நேரானதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 


நாம் செல்லும் பாதையில் சத்தியத்தைக் குறித்தும், நீதி, நியாயத்தை குறித்தும் கண்டித்து உணர்த்துகிறவர்கள் இருக்க வேண்டும். எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் எப்போதும் மனம் போல வாழலாம் என்று ஜீவிக்க கூடாது. பாவத்தின் வழியில் மாய்மாலம் நிறைந்திருக்கும். நாம் மனந்திரும்பி பரிசுத்தமான பாதையில் செல்லவில்லை என்றால் நமக்கு அழிவு உண்டாகும்.


துன்மார்க்கரின் கண்ணியமில்லாத பாவமான ஜீவியம். சுயநல ஜீவியம். பிறருடைய பொருளை இச்சித்து ஜீவிப்பது. மத் 7:12-ல் கூறப்பட்டிருக்கும் உபதேசத்திற்கு கீழ்ப்படியாமல் ஜீவிப்பது.


 இந்த வழியில் ஜீவிப்பது முடிவில் அழிவில் கொண்டு போய்விடும். முடியும் போது தான் இந்தப் பாதை அழிவுக்கு நேரானது என்பது தெரியும்.  இந்த வாசல் வழியாக போனாலும், ஒருவன் தனது பாவமான ஜீவியத்தை உணர்ந்து கர்த்தரிடத்தில் மனந்திரும்பி வந்தால், அவன் கேட்டுக்குப் போகாமல் நித்திய ஜீவனை அடைவான்  (அப் 26:18)


ஜீவனுக்குப் போகிற வாசல்


ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் 

(மத் 7:14).


பரிசுத்தத்தின் பாதை ஜீவனுக்குப் போகிற வாசலாகும். இது இடுக்கமும் வழி நெருக்கமாக இருக்கிறது. மனந்திரும்புவதும் மறுபடியும் பிறப்பது இந்த வாசல். இந்த வாசல் வழியாக நாம் ஜீவனுக்குள் பிரவேசிக்க முடியும். பாவத்தின் நிலையிலிருந்து கிருபையின் நிலைக்கு புதிய பிறப்பின் மூலம் நாம் கடந்து வரவேண்டும். 


இயேசுவை பின்பற்றிய முதலாவது சீஷர்கள் (யோவான் 1:35-51)

""ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்'' என்று இயேசு கூறுகிறார் (யோவா 3:5,6).


ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமாக இருக்கும். சிலர் மாத்திரம் அதை கண்டுபிடிக்கிறார்கள். இதை கண்டுபிடிப்பது கடினம். இதன் வழியாக பிரயாணம் பண்ணுவது கடினம். ஜீவனுக்குப் போகிற வாசல். இரண்டு பாறைகளுக்கு நடுவில் பிரயாணம் பண்ணுவது போன்றது. யோனத்தான் பெலிஸ்தரின் தாணயத்திற்கு போன வழியை போன்று இருக்கும். அந்த வழியின் ஒவ்வொரு பக்கத்திலும் செங்குத்தான பாறை இருந்தது (1சாமு 14:4). 


ஜீவனுக்குப் போகிற வாசலில் பிரவேசிக்கும்போது நமது இருதயம் புதுப்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். பழைய காரியங்களெல்லாம் அழிந்துபோய் நமது ஜீவியம் புதிதாய் இருக்கவேண்டும். பழைய ஆவி நம்மிடத்திலிருந்து அகற்றப்பட்டு கர்த்தர் கொடுக்கும் புதிய ஆவி நமக்குள் இருக்க வேண்டும். ஆத்துமாவில் ஒரு மாற்றம் உண்டாயிருக்க வேண்டும். 


ஜீவனுக்குப் போகிற வாசல் வழியாக பிரவேசிப்பது எதிர்நீச்சல் போடுவது போன்றது. பாதையில் பல இடையூறுகளும், துன்பங்களும், போராட்டங்களும் வரலாம். இவை எல்லாவற்றையும் நாம் கடந்து செல்ல வேண்டும். சுயத்தை வெறுத்து இந்த வழியில் பிரவேசிக்க வேண்டும். ஒரு மனிதன் இந்த உலகம் முழுவதையும் வெறுப்பதற்கு ஆயத்தமாக இருப்பான். ஆனால் அவன் தன்னைத் தானே வெறுக்க மாட்டான். தன்னைத்தான் வெறுத்தால்தான் ஜீவனுக்குப் போகிற வழியில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முடியும்.  


ஜீவனுக்குப் போகிற வாசலில் நேராக நிமிர்ந்து போக முடியாது. ஏனெனில் இந்த வாசல் இறுக்கமாகவும் வழி நெருக்கமாகவும் இருக்கும்.  இந்த வாசலில் செல்லுகிறார்கள் முழங்காலில் பணிந்து செல்ல வேண்டும். சிறு பிள்ளைகளைப் போல நம்மைத் தாழ்த்தி செய்ய வேண்டும். தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை சுமக்கிறவர்களால் மாத்திரமே ஜீவனுப்போகிற வாசல் வழியாக பிரவேசிக்க முடியும். 


பழைய மனுஷனையும், இந்த உலகத்தையும் நாம் களைந்து போட வேண்டும். புதிய மனுஷனை தரித்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவில் நாம் வைத்திருக்கும்   விசுவாசத்தின் நிமித்தம், இந்த உலக ஆசைகள் அனைத்தையும்  ஒதுக்கி வைத்துவிட்டு வரவேண்டும்.


ஜீவனுக்குப் போகிற வாசல்  இடுக்கமாக இருக்கிறது. இந்த வாசலில் சில இடங்களில் அதிக இறுக்கமாக இருக்கும். ஐசுவரியவான்களுக்கு ஜீவனுக்குப் போகிற வாசல் அனைத்தும் மிகுந்த இடுக்கமுள்ளதாகவே இருக்கும். இந்த வாசல் இடுக்கமுள்ளதாக இருந்தாலும் அடைக்கப்பட்டு இருப்பதில்லை. தேவன் இந்த வாசலை நமக்கு விரோதமாக அடைத்து பூட்டி வைப்பதில்லை. நாம் இதன் வழியாக பிரவேசிக்க கூடாதபடிக்கு அவர் சுடரொளி பட்டயங்களை காவலுக்கு வைக்கவில்லை. ஆனால், இந்த வாசல் இப்போது திறந்திருந்தாலும், எப்போதும்  திறந்திருக்காது. ஜீவனுக்கு போகிற வாசலின் கதவு ஒரு நாள் அடைக்கப்படும் (மத் 25:10). 


ஜீவனுக்குப் போகிற வழி நெருக்கமாக இருக்கிறது. ஜீவனுக்குப் போகிற வாசலுக்கு வந்தவுடன் நாம் பரலோகத்திற்கு வந்து சேர்ந்து விடுவதில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டு உடனடியாக கானான் தேசத்திற்கு போய்விடவில்லை. அவர்கள் வனாந்தரத்தின் வழியாக பிரயாணம் பண்ணினார்கள். அதுபோல ஜீவனுக்குப் போகிற வாசலில் பிரவேசிக்க நாம் நெருக்கமான வழியாக கடந்து வரவேண்டும். இந்த வழியில் தெய்வீக பிரமாணங்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். தேவனுடைய பிரமாணங்கள் இந்த வழியை நெருக்கிப் போடுகிறது. தங்களுடைய சுயத்தை வெறுக்கிறவர்களால் மாத்திரமே இந்த நெருக்கத்தை தாக்குப்பிடிக்கமுடியும். 


ஜீவனுக்குப் போகிற வழியில் பிரயாணம் பண்ணும் போது, தினமும் சோதனைகள் வரலாம். இந்த சோதனைகளை எல்லாம் தேவனுடைய கிருபையினால் மேற்கொள்ள வேண்டும். கர்த்தர் நமக்கு நியமித்திருக்கிற எல்லா கடமைகளையும்  நேர்த்தியாக நிறைவேற்றவேண்டும். துன்பங்களை சகித்துக் கொள்ள வேண்டும். எல்லா காரியங்களிலும் மிகுந்த எச்சரிப்போடும் கவனத்தோடு இருக்க வேண்டும்.


ஜீவனுக்குப் போகிற வழி பாடுகள் நிறைந்ததாக இருக்கும். ஆரம்பத்தில் இந்த வழி நெருக்கமாக இருந்தாலும், நாம் இந்த வழியில் செல் பழகி விட்டால் இந்த வழியே நமக்கு ஆனந்தமாக இருக்கும். உபத்திரவம் நமக்கு பிரச்சனையாக இராது. துன்பங்களை சகித்துக் கொள்ள பழகிக் கொள்வோம். இந்த வழி நெருக்கமாக இருந்தாலும் நமது இருதயத்தின் கணிப்புக்கு இது விசாலமானதாக இருக்கும்.    


ஜீவனுக்குப் போகிற வாசல் இறுக்கமாகவும், வழி நெருக்கமாகவும் இருப்பதால் இதை ஒரு சிலர் கண்டுபிடிக்கிறார்கள். இதன் வழியாக செல்ல வேண்டும் என்று ஒரு சிலரே தீர்மானம் பண்ணுகிறார்கள். சிலர் இந்த வழிக்கு அருகில் வந்து அதைக் கண்டு பிடிக்காமல் போய்விடுகிறார்கள். சிலர் இந்த வழி கடினமானது என்று வேறு வழியாக சென்று விடுகிறார்கள். இடுக்கத்தையும், நெருக்கத்தையும் விரும்பாத சிலர் கேட்டுக்குப் போகிற விரிவான வாசலையும், விசாலமான வழியையும் தெரிந்து கொள்கிறார்கள். 


தங்களுடைய பழைய சுபாவங்களை மாற்றினால்தான் ஜீவனுக்குப் போகிற வாசல் வழியாக பிரவேசிக்க முடியும். ஒரு சிலர் இந்த வாசலை பார்த்து பிரமித்து நிற்கிறார்கள். உள்ளே பிரவேசிப்பதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. ஒரு சிலர் மாத்திரமே விசுவாசத்தோடு கர்த்தர் தங்களுக்கு உதவி புரிவார் என்னும் நம்பிக்கையில் ஜீவனுக்குப் போகிற இடுக்கமான வாசல் வழியாகவும் நெருக்கமான வழி வழியாகவும் பிரவேசித்து முன்னேறுகிறார்கள். 


ஜீவனுக்குப் போகிற வாசல் வழியாக கூட்டம் அதிகமாக இராது. இங்கு அநேகரை காணமுடியாது. ஒரு சிலரே இதன் வழியாக பிரவேசிப்பார்கள். திரளான கூட்டம் தங்களோடில்லை என்று நினைத்து ஒரு சிலர் சேர்ந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் சோர்ந்து போகக்கூடாது.  ஜீவனுக்குப் போகிற வாசலில் ஜனக்கூட்டம் அதிகம் இல்லாவிட்டாலும், பரலோகத்தில் பரிசுத்தவான்களின் கூட்டம் உள்ளது. அந்த நம்பிக்கையில் மனதில் வைத்து முன்னேறிச் செல்ல வேண்டும். 


ஜீவனுக்குப் போகிற வாசல் வழியாக நாம் பிரவேசித்தால் நமக்குள் ஜீவன் உண்டாயிருக்கும். தேவனுடைய கிருபையும் நன்மையும் நம்மைத் தொடரும். இந்த பாதையின் முடிவில் தேவன் நமக்கு வைத்திருக்கும் நித்திய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பாதையின் வழியாக செல்லும் போது நமக்கு பல பாடுகள் உண்டானாலும், பாதையின் முடிவில் பரலோகம் உள்ளது என்பதை நினைவு கூர வேண்டும்.  பரலோகத்தில் நமக்கு பாடுகள் இல்லை. எல்லாமே ஆனந்த சந்தோஷமாக இருக்கும்.


நமக்கு முன்பாக ஜீவனும் மரணமும் வைக்கப்பட்டிருக்கிறது. நன்மையும் தீமையும் நமக்கு முன்பாக இருக்கிறது. இவ்விரண்டுமே வெவ்வேறு வழிகள். இவை வெவ்வேறு முடிவுக்கு நம்மை அழைத்துச் செல்லும். நாம் எதைத் தெரிந்தெடுக்கிறோம் என்பதே எங்கு போய் சேர்கிறோம் என்பதை முடிவுபண்ணும். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமாகவும், இதன் வழி நெருக்கமாகவும் இருந்தாலும், இதன் வழியாகவே பிரவேசிக்க வேண்டும் என்று நாம் தீர்மானம் பண்ண வேண்டும். 


ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமாக இருப்பதினால், நமது சொந்த முயற்சியினால்  இதன் வழியாக பிரவேசிப்பது கடினம். காலதாமதம் பண்ணாமல் ஜீவனுக்குப் போகிற வாசல் வழியாக பிரவேசிக்க வேண்டும். கர்த்தருடைய சமுகத்தில் நமது ஜெபத்தின் மூலம் தட்டும்போது தேவன் அதன் கதவை திறந்து கொடுப்பார். தமது கிருபையை நமக்கு இலவச ஈவாக கொடுத்து இடுக்கமும் நெருக்கமான இதன் வழியாக நம்மை கரம் பிடித்து அழைத்துச் செல்வார். இந்த பாதையை வாஞ்சையோடு தேடுகிறவர்கள் இதன் முடிவில் உள்ள பரலோகத்தை கண்டடைவார்கள்.


இடுக்கமான வழி ஜீவனுக்கு போகிறது. இந்த வழி நெருக்கமாக இருக்கிறது. நமது ஜீவியத்தை நித்திய ஜீவனுக்கு நேராக வழி நடத்தும் பாதை. இதில் ஒரு சிலர் மட்டுமே நடந்து போகிறார்கள்…..







Post a Comment

0 Comments