வாசல் ஒரு ஆய்வு

 வாசல்


ஒரு ஆய்வு


ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: "நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்"

யோவ 10:7



வேதாகமத்தில் பலவிதமான வாசல்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது குறிப்பாக இடுக்கமான வாசல், விசாலமான வாசல், மோட்ச வாசல், நரக வாசல், பாதாள வாசல்,மரண வாசல், ஜீவ வாசல், என்று பல உண்டு. இங்கு இயேசு தன்னை வாசல் என்று அடையாளப்படுத்துகிறார்.

ஆக வாசலை குறித்து சற்று ஆராய்ந்து பார்ப்போம்.



வாசலைக் குறிக்க "shaar" என்ற எபிரெயச் சொல் வேதாகமத்தில் 300 முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது.


சங். 107:15-ன் படி

வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாசல்கள் இரும்பிலும், மரத்திலும், வெண்கலத்திலும் செய்யப்பட்டிருந்தன.


ஆதி. 22:17- ல்

ஆபிரகாமுக்கு இந்த வாக்குத்தத்தம்

கொடுக்கப்பட்டது.

 "உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்"

சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவது என்பது அவர்களை வெற்றிகொள்வதற்கான அடையாளம்.


மாணிக்கக் கற்களால் செய்யப்பட்ட வாசல்களை குறித்து ஏசா 54:12

" உன் வாசல்களை மாணிக்கக் கற்களும்"சொல்லப்பட்டிருக்கிறது.


பரலோக நகரத்தின் பன்னிரண்டு வாசல்கள் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன என்று

 வெளி. 21:21 சொல்கிறது..

"பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது"


வேதாகமத்தில் பட்டணத்து வாசல்


"இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்” என்று எபிரெயர் 13:12 வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

பழைய ஏற்பாட்டில் பலியிடப்பட்ட மிருகங்களின் உடல்கள் பாளயத்திற்கு புறம்பே சுட்டெரிக்கப்பட்டது. ஆக 

இயேசு நகரத்தின் வாசலுக்கு புறம்பாக்கப்பட்டார்.


உபா. 16:18

பட்டணத்து வாசல்களில் நியாயாதிபதிகள்/ தலைவர்கள் மக்களை நியாயம் விசாரித்தார்கள்.


ஏசா 29:21; எரே. 17:19-20 , 26:10-11

நியாய வாசல் என அழைக்கப்படும் இந்த வாசலிலேயே தீர்க்கதரிசிகள் பெரும்பாலும் மக்களும் ராஜாவுக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.


போவாஸ் பட்டணத்து வாசலிலே தான் ரூத்தை மணந்துகொள்ள விரும்புவதைத் தெரிவித்து, அவளை மீட்டுக்கொள்ள முதல் சுதந்தரவாளியாக இருந்தவனிடமிருந்து அனுமதியைப் பெற்றான் (ரூத் 4:1-11).


யுத்தத்தைக் குறித்த செய்தியை அறிய பட்டணத்து வாசலில் காத்திருப்பதுண்டு. ஏலி இப்படி காத்திருந்தான் என்று

 1 சாமு. 4:18 பார்க்கிறோம்.


1 இரா. 21:13

குற்றவாளிகள் பட்டணத்து வாசலுக்கு வெளியே தண்டிக்கப்பட்டார்கள். பட்டணத்துக்கு வெளியே கல்லெறியப்படுவார்கள் ஸ்தேவான் நகர வாசலுக்கு வெளியே தள்ளப் பட்டு கல்லெறிந்து கொல்லப்பட்டவன்.

 அப். 7:58 - 60.


2 இரா. 7:1

பட்டணத்து வாசல்களில் சந்தையை கூட்டி, பொருட்கள் விற்கப்பட்டது.


யோசு 2:5; நெகே. 13:19.

இரவு வேளையிலும் ஓய்வு நாட்களில் பட்டணத்து வாசல்கள் மூடப்பட்டன. 


எருசலேம் பட்டணத்தின் வாசல்கள்


யூதாவின் மக்கள் பாபிலோனுக்குச் சிறைப் பிடித்துக்கொண்டு போகப்பட்டபோது, எருசலேம் நகரத்தோடு கூட அதன் வாசல்களும் சுட்டெரிக்கப்பட்டன. நெகே. 1:3.


எருசலேம் பட்டணத்தில் பழைய பன்னிரண்டு வாசல்களையும் பிற்காலத்திய வாசல்களையும் சேர்த்து குறைந்தபட்சமாக பதினாறு வாசல்கள் இருந்தன.


1.பென்யமீன் வாசல் - எரே. 37:13.


2.மீன் வாசல் - நெகே. 3:3.


3.ஆட்டுவாசல் - நெகே. 3:1.


4. பழைய வாசல் - நெகே. 3:6, இது ஜெஷானா வாசல் என்று அழைக்கப்பட்டது.


5.இன்னோம் பள்ளத்தாக்கு வாசல்  

  - நெகே 3:13.


6.குப்பைமேட்டு வாசல் - நெகே. 3:14.


7. ஊருணி வாசல் - நெகே. 2:14.

 இது ராஜாவின் தோட்டத்து வாசலாக இருந்தது -2 இரா. 25:4.


8.சீயோன் வாசல். 

-இது தெற்கு அரணில் இருக்கிறது.


9.தண்ணீர் வாசல் -நெகே. 3:26.


10.குதிரை வாசல் - நெகே. 3:28.


11.கிழக்கு வாசல் - நெகே. 3:29.


12.தமஸ்கு வாசல்- இது வடக்கு அரணில் இருக்கிறது.தமஸ்குவுக்கு செல்லும் பாதை அதன் வழியாக செல்கிறது.


13.தங்க வாசல்- இது இப்போது அடைக்க பட்டிருக்கிறது.


14.ஏரோது வாசல் - இதுவும் வடக்கு அரணில் இருக்கிறது.


15.யோப்பா வாசல் - இது மேற்கு அரணில் இருக்கிறது.


16.புதிய வாசல் - இதுவும் மேற்கு அரணில் இருக்கிறது.


பாபிலோன் (ஈராக்) மன்னர் நெபுகத்நேசர் கி.மு. 587- இல் இஸ்ரேலை கைப்பற்றி எருசலேமில் இருந்த தேவாலயம், அரண்மனைகள், பெரிய மாளிகைகள் மற்றும் இதர வாசல்கள் அனைத்தையும் சுட்டெறித்துப்போட்டான். அதன்பிறகு கி.மு. 5- ஆம் நூற்றாண்டில் பெர்சிய மன்னர் அர்தசஷ்டா என்பவரிடம் பணியாற்றிய யூதரான நெகமியா மன்னரின் அனுமதியைப் பெற்று எருசலேமுக்கு வந்து அரண்மனையையும் 12 வாசல்களையும் மீண்டும் கட்டினார். தற்போது உள்ள இந்த வாசல்கள் அனைத்தும் ஒவ்வொரு காலகட்டத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டன. ஒவ்வொரு வாசலும் ஒரு நோக்கத்தோடு கட்டப்பட்டன.

 

ஆட்டு வாசல்:


தேவாலயத்தில் பலி செலுத்தப்படுவதற்காக சந்தைகளில் வாங்கப்படும் ஆடுகள் இவ்வழியாகத்தான் சந்தைக்கு கொண்டு வரப்படும். எனவேதான் இது ஆட்டு வாசல் என அழைக்கப்பட்டது. 


மீன் வாசல்:


 வியாபாரிகள் மீன்களை இந்த வாசல் வழியாகத்தான் கொண்டு வருவார்கள். எனவே, இது மீன் வாசல் என்று அழைக்கப்படுகிறது. 


பழைய வாசல் (ஒலிமுக வாசல்) : 


எருசலேம் நகரில் உள்ள முக்கிய நபர்கள் சமுதாயத்தின் முக்கியமான காரியங்கள், நியாயம், நீதி போன்ற காரியங்களை இந்த வாசல் அருகே உட்கார்ந்து பேசுவார்கள் (ரூத்: 4, 1, 2, 11,நீதி 31: 23, எரே 6: 16).


குப்பைமேட்டு வாசல்:


 நகரில் உள்ள குப்பைகள், பலியிடப்பட்ட ஆடு, மாடுகளின் கழிவுகள் இந்த வாசல் வழியாகத்தான் எடுத்துச் செல்லப்படும்.


கிழக்கு வாசல், ஒலிமுக வாசல் அல்லது தங்க வாசல்:


 எருசலேமில் உள்ள அனைத்து வாசல்களிலும் இது புனிதமானது. ஒலிவ மலையை பார்த்த வண்ணம் இந்த வாசல் அமைக்கப்பட்டுள்ளது. 

இது எருசலேமின் கிழக்கு வாசல், தங்க வாசல், புற வாசல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வாசல் வழியாகத்தான் தேவ மகிமை இறங்கி வருவது வழக்கம். இந்த வாசல் வழியாக வரும்போது தேவாலயத்துக்குள் போகலாம். 


கி.மு. 10- ஆம் நூற்றாண்டில் சாலமோன் கட்டிய தேவாலயத்தின் கிழக்கு பகுதியில் இருந்த இந்த வாசல் கிழக்கு வாசல் என அழைக்கப்பட்டது. இப்போது தங்க வாசலுக்கு அருகே அது இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 


கி.மு. 6-ஆம் நூற்றாண்டின் இறுதியில் எருசலேம் அழிக்கப்பட்ட பிறகு 5-ஆம் நூற்றாண்டில் பெர்சியர்களின் ஆதரவுடன் மீண்டும் இந்த வாசல் நெகேமியாவின் தலைமையில் கட்டப்பட்டது. அப்போது பெர்சியர்களின் தலைநகராக விளங்கிய சூசானின் பெயரால் இது சூசான் வாசல் என்றும் சில காலம் அழைக்கப்பட்டது.


அதன்பின்னர் கி.மு. 1- ஆம் நூற்றாண்டில் ஏரோது மன்னரால் தேவாலயம் புதுப்பிக்கப்பட்டது.இவரால்  இந்த வாசல் மீண்டும் கட்டப்பட்டு ஏரோது வாசல், கிழக்கு வாசல் என அழைக்கப்பட்டது. 


கி.பி. 70- இல் ரோமர்களால் இந்த வாசல் அழிக்கப்பட்டது மீண்டும் அவர்களே கி.பி. 6, 7 -ஆம் நூற்றாண்டுகளில் இந்த வாசலை கட்டினர். அக்காலத்தில் இஸ்ரேலின் அதிபதியாக இருக்கும் நபர் மட்டும் இந்த வழியை பயன்படுத்துவது வழக்கம். குறிப்பாக ஓய்வு நாட்கள், மாத பிறப்புகளிலும் இந்த வாசல் திறக்கப்படும்.

பொதுமக்கள் இந்த வாசல் நடையில் பிரார்த்தனை மட்டும் செய்வார்கள். வரப்போகும் மேசியா கடவுள் இந்த கிழக்கு வாசல் வழியாகத்தான் நுழைந்து எருசலேமுக்கு போவார் என்றும் ஒலிவ மலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான யூதர்கள் அப்போது கல்லறையில் இருந்து உயிர்த்தெழுவார்கள் என்றும் யூதர்கள் பாரம்பரியமாக நம்புகின்றனர். யூதர்கள் நம்பிக்கைப்படி இந்த வழியாக மேசியா நுழையக் கூடாது என்பதற்கு இஸ்லாமிய மன்னர் சுலைமான் இந்த வாசலை மூடிவிட்டார். இப்போதும் இந்த வாசல் மூடப்பட்ட நிலையில் தான் உள்ளது. 

ஆனால், யூதர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மேசியாவாகிய இயேசு இஸ்ரேலில் இருந்தபோது இந்த வாசல் வழியாகத்தான் பலமுறை எருசலேமுக்கு நுழைந்தார். மீண்டும் இயேசு 2வது முறையாக வரும்போது இந்த வாசல் வழியாக எருசலேமுக்குள் நுழைந்து ஆயிரம் ஆண்டுகள் உலகை ஆளுவார். இங்கே மீண்டும் தேவாலயம் கட்டப்படும் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. கி.பி. 70- இல் அழிக்கப்பட்ட தேவாலயம், இன்று வரை கட்டப்படவில்லை…..


பல விதமான வாசல்


பட்டணத்தின் வாசல்

  • ஆதி. 19:1

லோத்து சோதோம் பட்டணத்தின் வாசலில்அமர்ந்திருந்தபோது, இரண்டு தூதர்கள் மனிதர் வடிவில் அவனைத் தேடி வந்தார்கள்.

  • நியா. 16:3

சிம்சோன் காசா பட்டணத்தின் வாசல் கதவுகளை தாழ்ப்பாள்களோடு சேர்த்துப் பெயர்த்து, எபிரோனுக்கு எதிரே இருக்கும் மலைக்கு அவைகளைத் தூக்கிச் சென்றான்.


இரண்டு வாசல்கள்

  • எசே. 41:23, 24.- 1 இரா.6:31-35

எசேக்கியேல் தரிசனமாகக் கண்ட ஆலயத்தில் ஆலயத்துக்கும், பரிசுத்த ஸ்தலத்துக்கும் இரண்டு வாசல்கள் இருந்தன. அவை இரட்டைக் கதவுகளால் மூடப்பட்டிருந்தன.


அலங்கார வாசல்:

  • அப். 3:2

தேவாலய வாசல் அலங்கார வாசல் என்று அழைக்கப்பட்டது.


கல்லறை வாசல்

  • மத். 27:60-

வெட்டப்பட்ட கல்லறைக்கும்

வாசல் இருந்தது. இயேசுவானவர் வைக்கப்பட்ட கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல் புரட்டி வைக்கப்பட்டது.


சிறைச்சாலை வாசல்

  • அப். 16:27

பவுலும் சீலாவும் பிலிப்பி

பட்டணத்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோது, சிறைச் சாலையின் வாசல்கதவுகள் தாமாகவே திறந்து கொண்டன.


குகையின் வாசல்

  • 1 இரா.12:13

எலியா தீர்க்கதரிசி தேவனுடைய சத்தத்தை கேட்கும்படி தான் ஒளிந்திருந்த கெபியின் வாசலுக்கு வந்தார். தேவன் அவருக்கு முக்கிய கட்டளைகளை கொடுத்தார்.


பாளையத்தின் வாசல்

  • யாத். 32:26

மோசே பாளையத்தின் வாசலில் நின்று கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார் என்று கேட்டபோது, லேவியர்கள் அவர் பக்கம் வந்து விட்டார்கள். கர்த்தருடைய கட்டளையை மீறி பொற்கன்றுகுட்டியை வணங்கிய

அநேகரை அவர்கள் கொன்று போட்டார்கள்.


இயேசுவால் கட்டப்படும் சபையைப் பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்வதில்லை - மத். 16:18.

சாத்தானின் வல்லமையை இந்த வாசல்கள் குறிக்கிறது, அவனுடைய வல்லமையால்  சபையை அழிக்க முடியாது.கிறிஸ்துவின் சபையை யாராலும் அழிக்க முடியாது.


"திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள்" என்று பவுல் கேட்டுக்கொண்டதை நம்

 கொலோ. 4:4-ல் பார்க்கலாம்.


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை வாசல் என்றார்.


"நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான்” என்று இயேசு திட்டவட்டமாக அறிவிக்கிறார்.

யோவ 10:9.


நாம் இரட்சிப்புக்குள் பிரவேசிப்பதற்கு அவர் மட்டுமே ஒரே வழியாகவும் வாசலாகவும் இருக்கிறார்.




Post a Comment

1 Comments

  1. Very clear and basic information. May God bless you brother

    ReplyDelete