பரிசுத்த ஆவியானவர்
ஒரு ஆய்வு
ஆண்டவராகிய இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பிறகு இந்த உலகத்துக்கு வல்லமையாக அனுப்பபட்டவர் பரிசுத்த ஆவியானவர். இந்த யுகத்தை ஆவியானவரின் யுகம் என்று சொன்னால் மிகையாகாது. ஏனெனில் இந்த கடைசி யுகத்தில் நடக்கும் எல்லா கிரியைகளும் ஆவியானவர் மூலம் நடைபெறுகிறது அதை இயேசுவும் முன்னறிவித்து சென்றிருக்கிறார்.
பரிசுத்த ஆவியானவர் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் வழிகாட்டி மற்றும் ஆலோசகர்
பரிசுத்த ஆவியானவர் திரித்துவத்தின் மூன்றாவது நபர் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
மத்தேயு:28:19
"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,"
இங்கு இயேசு கிறிஸ்து பிதா குமாரன் ஆகியோருக்கான அதே ஸ்தானத்தை தான் பரிசுத்த ஆவியானவருக்கும் கொடுக்கிறார்.
தேவனால் செய்யப்படும் அனைத்து வேலைகளையும் பரிசுத்த ஆவியானவரும் செய்கிறார்.
வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்
(ஆதி:1:2, யோபு:26:13)
மரித்தோரை எழுப்பினார் (ரோமர்:1:5)
மறுபடியும் பிறப்பதற்கு காரணமானார் (யோவான்:3:5-7)
நியாயத்தீர்ப்பை குறித்து உலகத்துக்கு கண்டித்து உணர்த்துவார் (யோவான்:16:8)
பிசாசுகளை துரத்துவார் (மத்தேயு:12:28)
பரிசுத்த ஆவியானவருக்கு தேவனின் எல்லா குணாதிசயங்களும் உண்டு.
சர்வத்தை அறிந்தவர் - Omniscient (1கொரி:2:10)
சர்வ வல்லவர் - Omnipotent (லூக்கா:1:35)
சர்வ வியாபி - Omnipresent (சங்:139:7,8)
நித்தியமானவர் - Eternal (எபிரேயர்:9:14)
பரிசுத்த ஆவியானவர் ஆள்தத்துவமானவர்.
யோவான்:15:26 - பிதாவினிடத்திலிருந்து
நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.
யோவான்: 16:7,8,13,
"நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான்
போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.அவர் வந்து, பாவத்தைக்குறித்தும்,
நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
பரிசுத்த ஆவியானவர் ஒரு உண்மையான நபர். அவருக்கு அறிவு, உணர்வு, சித்தம் ஆகியவைகள் உண்டு. அவர் நம்மில் அமர்ந்து நம்மிலே செயல்படுகிறார்.
தேவனை போல அவரும் பூரணர்!
பரிசுத்த ஆவியானவரின்
பெயர்கள்:
1. பரிசுத்த ஆவி:
1 தெசலோ:4:7,8 - "தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். ஆகையால் அசட்டை பண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டை பண்ணுகிறான்."
திரித்துவத்தின் மூன்று நபர்களுள் பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தம், தூய்மை சம்பந்தப்பட்ட வேலைகளை செய்கிறார்.
பரிசுத்த ஆவியானவரின் உதவியால் தேவனுடைய ஆவி எது? பிசாசின் ஆவி எது? என்றும் விளங்கிக் கொள்ளலாம்.
2. தேவ ஆவி:
எபேசியர்:4:30 - "அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்."
பரிசுத்த ஆவியை வேதாகமும் தேவ ஆவி என அழைக்கிறது. ஏனெனில் அந்த ஆவி தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டது.
1 கொரி:2:12
"நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
தேவன், பரிசுத்த ஆவியின் மூலம் கிரியை செய்கிறார்.
பாவிகளை, இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிடம் இழுக்கிறார்.
யோவான்:6:44 - "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்.
சத்தியத்தை வெளிப்படுத்துகின்றார்.
மத்:11:25 - "அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தின படியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
விசுவாசிகளை நடத்துகிறார்.
(ரோமர்:8:14 - "மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.")
3. கிறிஸ்துவின் ஆவி:
ரோமர்:8:9 - "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல."
பரிசுத்த ஆவியானவர் 'கிறிஸ்துவின் ஆவி' என்றும் அழைக்கப்படுகின்றார். ஏனெனில், இயேசு பிதாவினிடமிருந்து பரிசுத்தாவியை பெற்று விசுவாசிகள் மீது பொழிந்த அருளினார்.
அப்:2:33 - "அவர் தேவனுடைய வலதுகரத்தினால் உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின் படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.
4. தேற்றரவாளன்:
யோவான்:15:26 - "அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்."
இயேசு பரிசுத்த ஆவியானவரை 'தேற்றரவாளன்' என்று அழைக்கிறார். அது எல்லையற்ற இரக்கத்தின் பெயர்.
பரிந்து பேசுகிறவர்
தேற்றரவாளன்
Greek word: Paraclete பொருள்: ஒருவர் பக்கமாக பேசுவது
யோவான்:14:16 -
"நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்."
முதலாம் தேற்றரவாளன் - இயேசு
இரண்டாம் தேற்றரவாளன் - பரிசுத்த ஆவியானவர்...
வேதத்தில் உள்ள பரிசுத்த ஆவியானவரின் அடையாளங்கள்
1. தண்ணீர்
யோவான்:7:37,38
"பண்டிகையின் கடைசி நாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால்
என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்."
பரிசுத்த ஆவியினால் நாம் மீண்டும் பிறந்திருக்கிறோம். (யோவான்:3:5)
தொடர்ந்து பரிசுத்த ஆவியை பருகுவதினால், நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்வை காத்து கொள்ள முடியும். தாகமே அடையாத திருப்தியான வாழ்க்கை நடத்த பரிசுத்த ஆவியானவர் உதவுகிறார்.
யோவான்:4:13,14,
"இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்."
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை பரிசுத்த ஆவியால் தினமும் கழுவப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம் இருதயத்தை புதிதாக்குகிறார்.
தீத்து:3:5
"நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்."
2. அக்கினி
மத்தேயு:3:11 "மனந்திரும்புதலுக்கு என்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளை சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்."
பழைய ஏற்பாடு முழுவதிலும் தேவனுடைய சமூகம் அக்கினியின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது.
யாத்திராகமம்:3:1-5 -
முட்செடியின் நடுவிலிருந்து அக்கினியின் மூலம் தேவன் மோசேயை சந்தித்தார்.
1இராஜாக்கள்:18 -
"அக்கினியால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்" என்பதை பாகால் தீர்க்கதரிசிகள் உணர்ந்து கொள்ளும்படியாக எலியாவின் நாட்களில் பரிசுத்த ஆவியானவர் அக்கினியின் மூலம் வெளிப்பட்டார்.
அப்போஸ்தலர்:2:2,3
"அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது."
எல்லாவகையான அசுத்தமான பொருட்களையும் அக்கினி சுட்டெரிக்கிறது. அவர் நம்மிலுள்ள பாவங்களை அழிக்கிறார்.
எபிரேயர்:12:29 ,
"நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே."
அக்கினி ஒளியை கொடுக்கிறது. பரிசுத்த ஆவியானவர் வரும்போது பரலோகத்தின் தெய்வீக ஒளியை பாய்ச்சி, நித்திய ஜீவனையும் பரலோகத்தின் இரகசியங்களையும் உணர உதவி செய்கிறார்.
அக்கினி வல்லமையையும் வாஞ்சையையும் தருகிறது.
3. காற்று
யோவான்:3:8
"காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்."
கிரேக்க வார்த்தை:
நியூமா (Pneuma) - பரிசுத்த காற்று
காற்று பூமியில் எங்கும் நிறைந்திருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் இல்லாத இடம் எங்கும் இல்லை. அவர் எங்கும் எப்போதும் கிரியை செய்து கொண்டிருக்கிறார்.
காற்று தொடர்ந்து அசைவிலேயே இருக்கிறது. தட்ப வெப்ப நிலைக்கேற்ப உயர் அழுத்த மண்டலத்திலிருந்து குறைவான அழுத்த மண்டலத்திற்கு காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. அதேபோல் பரிசுத்த ஆவியானவரும் பழைய ஏற்பாட்டுக் காலத்திலும் புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் கிரியை செய்தததுபோல் இப்போதும் கிரியை செய்து கொண்டிருக்கிறார்.
4.எண்ணெய்
1சாமுவேல்:16:13
"அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினார்; அந்த நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்."
தேவனுக்கென்று பிரித்தெடுக்கும் படி அபிஷேகம் செய்யப்படுவதற்கு அடையாளமாக எண்ணெய் சொல்லப்படுகிறது.
பரிசுத்த ஆவியானவரின் எண்ணெயில் எரியும் வெளிச்சம் மட்டுமே தேவனுடைய வசனத்தை பிரகாசிக்கச் செய்யும். பரலோகத்திலுள்ள பரிசுத்த ஸ்தலத்தின் இரகசியங்களை வெளிப்படுத்திக் காட்டும்.
5. மழை
சங்கீதம்:72:6
"புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப் போலவும் இறங்குவார்".
மழை இல்லாமல் கனிகளை காண முடியாது. ஆவிக்குரிய ஜீவியத்திலும் ஆவிக்குரிய கனிகளும் ஆவிக்குரிய வல்லமைகளையும் பெற்று எழுப்புதலை அடைய வேண்டுமானால் பரிசுத்த ஆவியாகிய மழையை பெற்றால் மட்டுமே முடியும்.
பரிசுத்த ஆவியானவரின் "முன்மாரி" பழைய ஏற்பாட்டு காலத்திலும், பெந்தேகோஸ்தே நாளில் மேல் வீட்டறையில் கூடியிருந்த 120 பேர் காலம் வரைக்கும் பொழிந்தருளப்பட்டது. தற்போது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக "பின்மாரி" பொழியப்படுகிறது.
6. புறா
யோவான்:1:32
"பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல் வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதை கண்டேன்."
உலகத்தின் எல்லா பகுதிகளிலும் புறா சமாதானத்தின் சின்னமாக இருக்கிறது. தேவன் நோவா காலத்தில் உலகத்தை அழித்த போது கர்த்தருடைய கண்களில் நோவாவுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் கிருபை கிடைத்ததினால் பேழையினால் காக்கப்பட்டார்கள். தண்ணீர் வற்றி விட்டதா? என்பதை தெரிந்து கொள்ளும்படி நோவா புறாவை வெளியே விட்டான். அது ஒலிவ இலையை கொண்டு வந்தது. (ஆதி:8:10,11)
தேவனுடைய ஆக்கினை தீர்ப்பு கடந்து சென்றுவிட்டது என்பதையும், பூமியின் மீது சமாதானம் வந்துவிட்டது என்பதையும் காட்டும் முதல் ஆதாரம் புறா தான்.
புறா கபடற்றதும், தூய்மையுமான ஒரு உயிரினம். பரிசுத்த ஆவியானவர் புறா ரூபம் கொண்டு இறங்கி வந்தார். அவர் பரிசுத்தமுள்ள தேவன். அவரில் அசுத்தமில்லை.
புறா மிக சுலபமாக பயந்து விடும். மீண்டும் மீண்டும் துன்பப்பட்டால் நிரந்தரமாக அந்த இடத்தை விட்டு போய்விடும். நம் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் என்றும் தங்கியிருக்க வேண்டும் என்றால் நாம் மிகவும் கவனமும், பயபக்தியுடன் நடந்து அவரை துக்கப்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும். நாம் தொடர்ந்து எதிர்ப்போமானால் அவர் நம்மை விட்டு போய் விடுவார்.
எபேசியர்:4:30
"அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்."
7. திராட்சரசம்
எபேசியர்:5:18 - "துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறி கொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;"
பரிசுத்த ஆவியானவரின் நிறைவு திராட்சரசத்தை போல இருதயத்திற்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது. ஆவிக்குரிய மகிழ்ச்சியையும் பரலோக பேரின்பத்தையும் கொண்டு வருகிறது.
திராட்சரசம் மக்களை மகிழ்ச்சியூட்டுவது போல் தோன்றுகிறது. அநித்தியமான சமாதானத்தை தருகிறது.அச்சத்தையும் கவலைகளையும் பாரங்களையும் மறக்க வைக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் உலக கவலைகளை நம்மை விட்டு அகற்றி விடுகிறார்.
பரிசுத்தாவியின் நிறைவு பாவத்தின் மீது நாம் வெற்றிக்கொள்ள தைரியத்தையும் தந்து ஜெயஜீவியம் செய்ய ஏதுவாயிருக்கிறது.
பரிசுத்தாவியின் நிறைவு எதிர்ப்புகளின் நடுவே நாம் உறுதியாக நிற்பதற்கு பெலன் தருகிறது.
8. முத்திரை
"முத்திரை" என்பது திறக்காமல் இருப்பதற்கான ஒரு பாதுகாப்பு கவசம் எனலாம்.
எபேசியர்:1:13
"நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்."
இயேசுவின் இரத்தத்தால் முத்திரையிடப்பட்டால், நாம் பாவத்தில் வீழ்ந்து விடாதபடி பரிசுத்தாவியின் வல்லமையால் தேவன் நம்மை காத்துக்கொள்கிறார். பொல்லாங்கன் நம்மை தொடான்.
முத்திரை ஒரு தனி உரிமையை காட்டுகிறது.
நம் கையொப்பம் அல்லது முத்திரை இல்லாமல் வங்கியில் இருக்கும் நமது பணத்தை எடுக்க முடியாது. அதேபோல் தேவன் தம் மக்கள் மீதுள்ள தனிப்பட்ட உரிமையை நிரூபிக்க பரிசுத்த ஆவியின் முத்திரையை பதிக்கிறார். யாராவது அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு தீங்கிழைத்தால் தேவ கோபாக்கினை வரும்.
முத்திரை அதிகாரத்தை காட்டுகிறது.
சீஷர்கள் இயேசு தங்களோடு இருந்த வரையிலும் அதிகாரத்தோடும் வல்லமையோடும் செயல்பட்டனர். இயேசு பரமேறிய பின்பு தோல்வியடைந்தவர்களாக காணப்பட்டார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்ற பின் பெரிய அதிகாரத்தை பெற்றார்கள். வல்லமை வெளிப்பட்டது.
9. உத்தரவாதம்
2 கொரி:1:21,22
"உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம் பண்ணினவர் தேவனே.அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்."
நாம் இரட்சிக்கப்பட்டு இருந்தாலும் விசுவாசத்தில் குறைவு பட்டிருப்போம். சாத்தான் சந்தேக அம்புகளை எய்யும் போது சில சமயம் விழுந்துவிடுவோம்.
ஆனால் அவ்வாறு விழ்ந்து விடாமலிருக்க பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றவர்களுக்கு அவர் சத்திய வசனத்தின் மூலம் உத்திரவாதமளித்து கொண்டேயிருப்பார்... தொடரும்......
1 Comments
Great explanation
ReplyDelete