ஜெபத்தை குறித்த இயேசுவின் உபதேசம்

 


ஜெபத்தை குறித்த இயேசுவின் உபதேசம்

மத்தேயு சுவிசேஷம்


நாம் ஜெபம் பண்ண வேண்டிய விதம் - மத் 6 : 9-15


எவ்வாறு ஜெபிக்கவேண்டும் என்று நமக்குத் தெரியாது. நமது பலவீனங்களில் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவிபுரிகிறார்.  ஜெபம்பண்ணும்போது ஜெபிக்க வேண்டிய வார்த்தைகளை இயேசுகிறிஸ்து நமக்கு கற்றுத் தருகிறார். நீங்கள் ஜெபிக்க வேண்டிய விதமாவது என்று தமது உபதேசத்தில் முன்னுரையை கூறுகிறார். நாம் ஜெபிக்கும்போது இந்த வார்த்தைகளை மாத்திரமே பயன்படுத்தவேண்டும் என்னும் நியதியில்லை. ஜெப வார்த்தைக்கு கட்டுப்பாடு எதுவுமில்லை.  ஜெபத்தில் நமது பய பக்தியை கர்த்தருக்கு வெளிப்படுத்தவேண்டும். நமது உள்ளத்தின் எண்ணங்களை அவருக்கு மனத்தாழ்மையோடு  அறிவிக்கவேண்டும். நமது தேவைகளை வாஞ்சையோடு கர்த்தரிடத்தில் விண்ணப்பங்களாக ஏறெடுக்க வேண்டும். 


இந்த வசனப்பகுதியில் கர்த்தர் கூறியிருக்கும் ஜெபம் நமக்கு ஒரு முன்மாதிரியாக கூறப்பட்டிருக்கிறது. பரிசுத்தவான்கள் கர்த்தரோடு எவ்வாறு ஜெபிப்பது என்பதற்கு இயேசுகிறிஸ்து இங்கு ஆலோசனைகளைக் கூறுகிறார். காலாகாலமாக  திருச்சபைகளில் இந்த ஜெபங்களை ஏறெடுத்து வருகிறார்கள். இந்த ஜெபத்திற்கு கர்த்தருடைய ஜெபம் என்று பெயர். இந்த ஜெபத்தின் வார்த்தைகளை புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் பண்ணி சம்பிரதாயமாக ஒப்பிப்பதினால் பிரயோஜனம் எதுவுமில்லை. அது வீண் வார்த்தைகளை அலட்டுவதுபோலத்தான் இருக்கும். அதேவேளையில் கர்த்தருடைய ஜெபத்தை நமது உள்ளத்தில் புரிந்து கொண்டு, உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஜெபிக்கும்போது  நமது ஜெபத்தின்மீது கர்த்தர் பிரியமாயிருக்கிறார். 


கர்த்தருடைய ஜெபம் பூமியிலிருந்து பரலோகத்திற்கு அனுப்பப்படும் கடிதத்தைப் போலிருக்கிறது. இந்த கடிதம் கர்த்தராகிய நமது பிதாவுக்கு அனுப்பப்படுகிறது. அவருடைய முகவரி பரலோகம். கடிதத்தில் நமது விண்ணப்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முடிவுரையில் ராஜ்ஜியம் நமது பிதாவுடையது என்று அங்கீகரிக்கிறோம். கடிதத்தின் இறுதியில் ஆமென் என்று கூறி அதற்கு முத்திரையிடுகிறோம். நமக்கு விருப்பமானால்  இந்த ஜெபத்தை நாம் ஏறெடுக்கும் தேதியையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். 


பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே 


நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக (மத் 6:9).


பரலோகத்தின் தேவன் நமது பிதாவாக இருக்கிறார். அவரை அப்பா பிதாவே என்று அழைப்பது நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சிலாக்கியமாகும். அவரை பிதா என்று அழைக்கும்போது தேவனுக்கும் நமக்கும் இடையிலுள்ள நெருங்கிய உறவு வெளிப்படுகிறது. நாம் ஜெபிக்கும்போது நமக்காகவும் ஜெபிக்கவேண்டும். மற்றவர்களுக்காகவும் ஜெபிக்கவேண்டும். மற்றவர்களோடு சேர்ந்தும் ஜெபிக்கவேண்டும்.  நமது ஜெபத்தை தேவனிடத்தில் மாத்திரமே ஏறெடுக்கவேண்டும். பரிசுத்தவான்களிடமோ, தூதர்களிடமோ ஜெபிக்கக்கூடாது. 



தேவனை எவ்வாறு அழைக்க வேண்டுமென்று இயேசுகிறிஸ்து நமக்கு உபதேசிக்கிறார். தேவனை பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே என்று அழைக்க வேண்டும். அப்போது அவருடைய கிருபாசனத்தண்டையில் தைரியமாக சேரக்கூடிய சிலாக்கியத்தை நாம் பெற்றுக்கொள்கிறோம்.  அவரை பிதா என்று அழைப்பது அவரை மகிமைப்படுத்தும் நாமமாகும். அவர் பரலோகத்தில் பிதாவாக இருக்கிறார். 


கர்த்தரை பரமண்டலங்களிலிருக்கிற பிதாவே என்று அழைப்பதற்குப் பதிலாக, பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே என்று அழைக்கவேண்டும். தேவனை பிதாவே என்று அழைக்கும்போது தேவனுக்கு அது பிரியமாக இருக்கிறது. நமது உள்ளத்திற்கும் அது மகிழ்ச்சியை தருகிறது. இயேசுகிறிஸ்து தமது ஜெபத்தில் தேவனை பிதாவே என்று அழைக்கிறார். 


அவர் நமது பிதாவாக இருக்கிறபடியினால்  நமது பலவீனங்களினிமித்தம் அவர் நமக்காக பரிதபிக்கிறார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல கர்த்தர் தமக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறார் (சங் 103:13). 

ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ் செய்கிற தன்னுடைய குமாரனை கடாட்சிக்கிறதுபோல  கர்த்தர் நம்மை கடாட்சிக்கிறார் (பாதுகாக்கிறார்) (மல் 3:17). 



நமது கிரியைகள் குறைபாடுள்ளவைகளாக இருந்தாலும் நமது பரலோகப்பிதா அவற்றை திருத்துகிறார். நம்மை ஆசீர்வதிக்கிறார். நன்மையான சகல ஈவுகளையும் நமக்கு கிருபையாக தருகிறார்.  ""உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?  பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா'' 

(லூக் 11:11-13). தேவன்  நமக்குத் தேவையான எல்லா நல்ல ஈவுகளையும் குறைவில்லாமல் நிறைவாக தருகிறார். 


நம்முடைய பாவங்களுக்கு மனம்வருந்தி தேவனுடைய கிருபையை எதிர்பார்த்து வரவேண்டும். கெட்ட குமாரன் புத்தி தெளிந்து மறுபடியுமாக தன் தகப்பனிடம் மனந்திருந்தி பணிவுடன் வந்ததுபோல         (லூக்  15:18).  நாமும்  நமது பரலோகப் பிதாவிடம் மனந்திருந்தி வரவேண்டும். நமது பரலோகப்பிதா அன்புள்ளவர், கிருபையுள்ளவர், நமது தப்பிதங்களை மன்னிக்கிறவர். நம்மை அன்போடு ஏற்றுக்கொண்டு ஆதரிக்கிறவர். 



நமது தேவன் பரலோகப்பிதாவாக இருக்கிறார். அவர் பரலோகத்திலிருக்கும் பிதா.  வானம் அவருக்கு சிங்காசனம். ஆயினும் வானத்தினால் அவரை அடைத்து வைக்க முடியாது. அவர் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறார். கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார். அவருடைய ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது (சங் 103:19). அவருடைய சிங்காசனம் வானத்திலிருந்தாலும் அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு கர்த்தருடைய சிங்காசனம் கிருபாசனமாக இருக்கிறது. நாம்  அந்த கிருபாசனத்தை நோக்கித்தான் ஜெபிக்கிறோம். 


நமது இருதயத்தின் வாஞ்சைகள், நமது ஜீவியத்தின் தேவைகள், நமது உள்ளத்தின் பாரங்கள், நமது பலவீனங்கள் ஆகிய அனைத்தையும் நமது பரலோகப்பிதா முழுவதுமாக தெரிந்து வைத்திருக்கிறார். அவர் நமக்கு உதவிபுரிய விரும்பும் சாதாரணமான பிதாஅல்ல. அவர் பரலோகப்பிதா. அவரால் கூடாதகாரியம் ஒன்றுமில்லை. தாம் விரும்புகிற  அனைத்தையும் நமக்காக செய்து நிறைவேற்றுவார். நமக்காக பெரிய காரியங்களை செய்யக்கூடியவர். நாம் கேட்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் அதிகமாக நமக்குச் செய்து நம்மை ஆசீர்வதிக்கிறவர். நமது தேவைகளையெல்லாம் சந்திக்கிறவர். நன்மையான எல்லா ஈவுகளும் பரலோகத்திலிருந்தே வருகிறது. 


அவர் நமது பிதாவாக இருப்பதினால் அவருடைய சமுகத்திற்கு முன்பாக தைரியத்தோடு பிரவேசிக்கவேண்டும். அதே சமயத்தில் அவர் நமது பரலோகப்பிதாவாக இருப்பதினால் அவருடைய சமுகத்தில் பயபக்தியோடு பிரவேசிக்கவேண்டும். 


கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுகிறிஸ்து  ஆறு விண்ணப்பங்களை பற்றிக் குறிப்பிடுகிறார். அவற்றில் முதலாவது மூன்று விண்ணப்பங்கள் கர்த்தருடைய மகிமையைப் போற்றுகிறது. மற்ற மூன்று விண்ணப்பங்கள் நம்மைப் பற்றியவையாகும். கர்த்தருடைய ஜெபத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் நமது ஜெப வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவையாகும். முதலாவது தேவனையும் அவருடைய நீதியையும் தேடவேண்டும். பின்பு மற்ற காரியங்களெல்லாம் நமக்கு கூட்டிக்கொடுக்கப்படும் என்னும் சத்தியத்தை கர்த்தருடைய ஜெபம் தெளிவுபடுத்துகிறது. 


உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக


ஜெபத்தில் நாம் தேவனுக்கு மகிமையை செலுத்துகிறோம். தேவனுடைய கிருபையையும் இரக்கத்தையும் பெற்றுக்கொள்வதற்கு முன்பாக  நாம் தேவனை துதிக்கவேண்டும். அவருடைய பரிபூரணத்தினால் அவர் நமது துதிக்கு பாத்திரராக இருக்கிறார். அவரை துதிக்கும்போது பரிபூரணராகிய அவருடைய கிருபை நமக்கு கிடைக்கிறது. 



நமது ஜெபத்தின் துவக்கமும் முடிவும் தேவனை துதிப்பதாகவே இருக்கவேண்டும். தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். நமது வேண்டுதல்களும் விண்ணப்பங்களும் தேவனுடைய மகிமைக்கு உட்பட்டதாகவே இருக்கவேண்டும். தேவனுடைய மகிமைக்கு விரோதமாக நாம் எதையும்   விண்ணப்பம்பண்ணக்கூடாது. 


நம்முடைய அன்றன்றுள்ள அப்பத்தை தந்து, நம்முடைய பாவங்களை மன்னித்து பிதாவே உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும்  என்று நாம் ஜெபிக்கவேண்டும். எல்லா ஆசீர்வாதங்களும் தேவனிடத்தில் இருக்கிறது அவர் மூலமாகவே நமக்கு வருகிறது. எல்லா ஆசீர்வாதங்களும் அவருக்குரியது. அவருக்காக உள்ளது. ஜெபத்தில் நமது சிந்தனைகளும் வார்த்தைகளும் தேவனைத் துதிக்கவேண்டும் என்னும் பிரதான நோக்கத்துடனே வெளிவரவேண்டும். 


நமது ஜெபத்தில் தேவனுடைய நாமத்தை  பயன்படுத்துவதற்கு வாஞ்சிக்கவேண்டும். தேவன் தாமே தம்மை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அவரை நாம் பரிசுத்தப்படுத்தவேண்டும். அவர் தாமே தமது நாமத்தை பரிசுத்தப்படுத்துகிறவர். அவர் தம்மை பரிசுத்தப்படுத்தும்போது நாமும் அவரை மகிமைப்படுத்தவேண்டும். பிதாவே உமது நாமம்  பரலோகத்தில் மகிமைப்படுவதாக. உமது நன்மையையும் மேன்மையையும் மகிமைப்படுத்தும். உமது கிருபையும் ராஜரீகமும்  மகிமைப்படுவதாக என்று பரிசுத்தமான வார்த்தைகளை நமது ஜெபங்களில் பயன்படுத்தவேண்டும். 


பரமண்டல ஜெபத்தில் கூறப்பட்டிருக்கிற அம்சங்கள்


    1. உறவு - எங்கள் பிதாவே

    2. அங்கீகாரம் - பரமண்டலங்களில் இருக்கிறவர்

    3. போற்றுதல் - உம்முடைய  நாமம் பரிசுத்தப்படுவதாக

    4. எதிர்பார்ப்பு - உம்முடைய ராஜ்யம் வருவதாக

    5. பொருத்தனை - உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக

    6. முழு உலகத்திற்கும் - பூமியிலே

    7. உறுதி - பரலோகத்திலே செய்யப்படுகிறது போல

    8. விண்ணப்பம் - எங்களுக்குத்தாரும்

    9. நிச்சயம் - இன்று

    10. தேவை - எங்களுக்கு வேண்டிய ஆகாரம்

    11. தவறுக்கு வருந்துதல் - எங்களுக்கு மன்னியும்

    12. கடமை - எங்கள் கடன்கள்

    13. மன்னிப்பு - நாங்கள் மன்னிக்கிறதுபோல

    14. அன்பும், இரக்கமும் - எங்கள் கடனாளிகள்

    15. வழிநடத்துதல் - வழிநடத்தும்

    16. பாதுகாப்பு - சோதனைக்கு உட்படப் பண்ணாமல்

    17. இரட்சிப்பு - எங்களை இரட்சித்துக் கொள்ளும்

    18. நீதி - தீமையினின்று

    19. விசுவாசம் - இராஜ்ஜியம் உம்முடையது

    20. தாழ்மை - வல்லமையும் உம்முடையது

    21. பக்தி - மகிமையும் உம்முடையது

    22. நித்தியம் - என்றென்றைக்கும்

    23. உறுதிப்பாடு - ஆமென்.


பரமண்டல ஜெபத்தில் முதல் மூன்று விண்ணப்பங்கள் கர்த்தரைப் பற்றியவை.

 இறுதியில் வரும் 4 நான்கு விண்ணப்பங்கள் மனுஷனைப் பற்றியவை.


 விசுவாசிகள் தேவனுடைய இராஜ்யம் பூமிக்கு வரவேண்டுமென்றும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காகவும் ஜெபம் பண்ண வேண்டும்.  


உம்முடைய ராஜ்யம் வருவதாக



உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக (மத் 6:10).


பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று இயேசுகிறிஸ்து ஏற்கெனவே பிரசங்கம் பண்ணியிருக்கிறார். அந்த உபதேச வார்த்தைகளை நமது ஜெபத்தில் ஏறெடுக்கிறோம். நமது பரலோகப் பிதாவின் ராஜ்யம் சமீபித்திருக்கிறது. அவர் பரலோகத்திலிருக்கிறார். அந்த பரலோக ராஜ்யம்  பூமிக்கு வருவதாக என்று நாம் ஜெபிக்கவேண்டும். நாம் இந்த ஜெபவார்த்தைகளை கூறும்போது நமது இருதயம் இதை வாஞ்சிக்கவேண்டும். இருதயத்தின் சிந்தனைகள் பரலோக ராஜ்யம் வரவேண்டுமென்று பிரதிபலிக்கவேண்டும். இதோ சீக்கிரமாக வருகிறேன் என்று இயேசுகிறிஸ்து வாக்குப்பண்ணியிருக்கிறார். சீக்கிரம் வாரும் ஆண்டவரே என்று            நாம் அவரை அன்புடன் அழைக்கவேண்டும். நமக்கு வாக்குப்பண்ணப்பட்டிருக்கும் சத்தியங்கள் ஒருபோதும் அழிந்துபோவதில்லை. நாம் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறவேண்டுமென்று ஜெபிக்கும்போது நமது உள்ளம்             அந்த வாக்குத்தத்தத்தை வாஞ்சிக்கிறது. ஜெபத்தில் இந்த வார்த்தைகளை                நாம் கூறும்போது அவருடைய ராஜ்யம் விரைவில் வரவேண்டுமென்று விரும்புகிறோம். நமது ஜெபத்தைக்கேட்டு கர்த்தர் சீக்கிரம் வருவார். 


உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக 


தேவனுடைய ராஜ்யம் வருவதாக என்று ஜெபிக்கும்போது அவருடைய பிரமாணங்களுக்கு  கீழ்ப்படிய நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். தேவனுடைய ராஜ்யத்தின் எல்லா நியதிகளுக்கும், ஒழுங்குகளுக்கும், சட்டங்களுக்கும், பிரமாணங்களுக்கும் கீழ்ப்படிய  நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். நாம் இயேசுகிறிஸ்துவை ராஜா என்று அழைத்து, அவருடைய கட்டளைக்கு கீழ்ப்படியவில்லை யென்றால் நாம் பரிதபிக்கப்படத்தக்கவர்களாக இருப்போம். தேவனுடைய ராஜ்யம் வரவேண்டும் என்று ஜெபிக்கிறவர்கள் அவருடைய சித்தத்தை செய்வதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் சித்தத்தை நிறைவேற்றாமல்  அவரை வாரும் என்று அழைப்பதினால் நமக்கு ஒரு பிரயோஜனமுமில்லை. அவருடைய ராஜ்யம் வரும்போது அவர் நம்மை ஆளுகை செய்வார்.  நமது ஜீவியத்தின் எல்லா பகுதியையும் அவர் ஆளுகை செய்யவேண்டுமென்று நாம் ஜெபிக்கவேண்டும்.


உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று நாம் வாஞ்சையோடு ஜெபிக்கவேண்டும். என் சித்தமல்ல, உமது சித்தம் நிறைவேறட்டும் என்று இயேசுகிறிஸ்து பிதாவிடத்தில் விண்ணப்பம்பண்ணினார். உமக்கு பிரியமானதைச் செய்ய என்னைத் தகுதிப்படுத்தும் என்று நாம் ஜெபிக்கவேண்டும். உமது சித்தத்தை சரியாக புரிந்து கொள்வதற்கு  தேவையான ஞானத்தை எனக்குத் தந்து, உமது சித்தத்திற்கு நான் பூரணமாக கீழ்ப்படிய எனக்கு கிருபை தாரும் என்று நாம் ஜெபிக்கவேண்டும்.    தேவனுடைய சித்தம் எல்லாமே நமக்கு சந்தோஷமானதாக இருக்கவேண்டும். தேவனுடைய கிரியைகளை கண்டு சந்தோஷப்படாமல் வருத்தப்படுகிறவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கமாட்டார்கள்.  இவர்கள் தேவனிடத்தில் உமது ராஜ்யம் வருவதாக என்று  ஜெபிக்கமாட்டார்கள். நம்முடைய ஜீவியத்தில் நாமும் தேவனுக்கு பிரியமான காரியங்களை மாத்திரமே செய்யவேண்டும். 



தேவனுடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படவேண்டும். இந்த பூமியில் நமது வேலைகளை நாம் செய்யவேண்டும். நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் கடமைகளை நாம் நிறைவேற்றவேண்டும். கர்த்தர் நமக்கு கொடுக்கும் வேலையை நாம் ஒழுங்காக செய்யவில்லையென்றால் அந்த வேலை அறைகுறையாக நிற்கும். நிறைவுபெறாது. தேவனுடைய சித்தம் பூமியிலே செய்யப்படும்போது இந்த பூமியும் பரலோகம் போலிருக்கும். இங்கு தேவனுடைய சித்தம் பூரணமாக நிறைவேறும்.


தேவனுடைய சித்தத்தைப் பற்றிய சத்தியங்கள்


    1. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. (மத் 6:10)


    2. நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. 

(யோவான் 4:34)


    3. எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே தேடுகிறேன். (யோவான் 5:30)


    4. கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள். 

(எபே 5:17)


    5. மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். 

(எபே 6:6)


    6. தேவனுடைய சித்தத்தின் பிரகாரம் ஜீவிக்க வேண்டும். 

 (1 பேதுரு 2:11-17)


    7. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், தேவனை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். (1தீமோ 2:4;  2பேதுரு 3:9).


    8. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத் தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

 (ரோமர் 12:2)


    9. நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 

(1தெச 4:3-4; 1 கொரி 3:16-17; 1 கொரி 6:19-20)


    10. நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். (யோவான் 15:7)


எங்களுக்கு வேண்டிய ஆகாரம்


எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்

 (மத் 6:11).



நமது ஆவிக்குரிய ஜீவியம் இந்த உலகத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு நமது இயற்கையான ஜீவியமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். ஆகையினால் தேவனுடைய மகிமை, ராஜ்யம், சித்தம் ஆகியவற்றிற்காக ஜெபித்த பின்பு நாம் இந்த பூமியில் ஜீவிப்பதற்கு  தேவையான ஆகாரங்களுக்காகவும் ஜெபிக்கவேண்டும். 


ஆகாரத்திற்காக ஜெபிக்கும்போது தினமும் நமக்கு மிகப்பெரிய விருந்து கிடைக்கவேண்டுமென்று எதிர்பார்க்கக்கூடாது.  பெருந்தீனி உண்பது நமது சரீரத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆகாரத்தை நமக்கு தருமாறு தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணும்போது நமது ஜீவியம் உழைக்கக்கூடியதாகவும் கண்ணியமுள்ளதாகவும் இருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் அன்றன்று தேவையான ஆகாரத்திற்காக ஜெபிக்கவேண்டும். நாளை தினத்தைக் குறித்து கவலைப்படக்கூடாது. நாளைய தினம் தன்னுடையவைகளுக்காக கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்

 (மத் 6:34). ஒவ்வொரு நாளும் நமது ஆகாரத்திற்காக ஜெபிக்கும்போது நமது அன்றாட தேவைகளுக்காக தேவனுடைய கிருபையையும் பராமரிப்பையும் நாம் சார்ந்து நிற்கிறோம். 



நமக்கு வேண்டிய ஆகாரத்தைத் தருமாறு தேவனிடத்தில் பணிவோடு விண்ணப்பம் பண்ணவேண்டும். தேவனுடைய இரக்கத்திற்காக அவரிடத்தில் கெஞ்சவேண்டும். நமக்காக மாத்திரமல்லாமல் நம்மைச் சார்ந்திருக்கிறவர்களுக்காகவும் ஜெபிக்கவேண்டும். நாம் புசித்து திருப்தியாக இருக்கும்போது, நம்மை சார்ந்திருப்பவர்கள் பசியோடிருப்பது நல்லதல்ல. தரித்திரரையும் தேவையுள்ளவர்களையும் நாம் நினைவுகூரவேண்டும். நம்மால் முடிந்தளவிற்கு அவர்களுக்கு உதவிபுரியவேண்டும். 


ஒவ்வொரு நாளும் நமது தேவைகளை சந்திக்குமாறு தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணும்போது நமது ஆத்துமாவையும்,  தேவனிடத்திலுள்ள நமது விசுவாசத்தையும் புதுப்பிக்கிறோம். நமது சரீரத்தின் தேவைகளும் புதுப்பிக்கப்படுகிறது.  ஆகாரமில்லாமல் நாம் ஒரு நாளை போக்கிவிடலாம். ஆனால் ஜெபிக்காமல் எந்த நாளையும் போக்கிவிடக்கூடாது.


எங்கள் கடன்களை மன்னியும்


எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் (மத் 6:12).


நமது பாவங்கள் மன்னிக்கப்படவில்லை யென்றால் நித்திய நரகம் நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. நமது பாவங்கள் மன்னிக்கப்படாமல்,  அன்றாடம்  நாம் ஆகாரத்தைப் புசிப்பதினால் ஒரு பிரயோஜனமுமில்லை. அடிக்கப்படுவதற்காக கொண்டுபோகும் ஆட்டுக்குட்டிக்கு எவ்வளவுதான் ஆகாரம் கொடுத்தாலும் அதனால் அந்த ஆட்டுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை. அது விரைவில் மரிக்கப்போகிறது. அதுபோல நாம் பாவிகளாக இருக்கும்போது அன்றாடம் ஆகாரம் புசித்தாலும்  அதனால் நமக்கு, ஒரு பிரயோஜனமும் இருக்காது. அன்றன்றுள்ள ஆகாரத்தை எங்களுக்குத் தாரும் என்று ஜெபிக்கும்போது, அன்றன்றுள்ள பாவங்களை எங்களுக்கு மன்னியும் என்றும் ஜெபிக்கவேண்டும். 


பரலோகப்பிதா நமது கடன்களை நமக்கு மன்னிக்கவேண்டும். நமது பாவங்களே நமக்கு  கடன்களாக உள்ளன. நமது கடமைகளை நிறைவேற்றுவதில் நாம் கடன்பட்டிருக்கிறோம்.  நமது சிருஷ்டிகருக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம்.  நாம் பட்டிருக்கும் கடனை திரும்ப செலுத்தவில்லையென்றால் அந்த கடனுக்குரிய தண்டனை நமக்கு கொடுக்கப்படும். ஒவ்வொரு நாளும் நமது பரலோகப் பிதாவிடம் ஜெபிக்கும்போது எங்கள் கடன்களை மன்னியும் என்று விண்ணப்பம் பண்ணவேண்டும். கடன்கள் மன்னிக்கப்படும்போது நமது ஆத்துமாவிற்கு ஆறுதல் உண்டாகும். 


நமது கடனாளிகளுக்கு நாம் மன்னிக்கவேண்டும். நமது கடனாளிகளுக்கு  நாம் மன்னிப்பதினால், தேவன் நம்மையும் மன்னிக்கவேண்டுமென்று அவருக்கு கட்டளை கொடுக்கமுடியாது. தேவன் தமது கிருபையினால் மாத்திரமே நம்மை மன்னிப்பார். எதையாவது ஒன்றை செய்து நமது மன்னிப்பை சம்பாதிக்கமுடியாது. நமது கடனாளிகளுக்கு மன்னிப்பது நமது கடமை. பிறர் நமக்கு செய்திருக்கும் தவறுகளை தாங்கிக்கொள்ள வேண்டும், மன்னிக்கவேண்டும், மறக்கவேண்டும். நமது உள்ளத்தில் சமாதானமும் நமக்கு மன்னிப்பும் உண்டாகவேண்டுமென்றால் நாம் மற்றவர்களை மன்னிப்பது அவசியம். நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது தேவன் நம்மையும் மன்னிப்பார் என்னும் விசுவாசம் நமக்குள் உண்டாகும். தேவன் நமது தப்பிதங்களை மன்னிப்பதினால் நாமும் மற்றவர்கள் நமக்கு செய்யும் தப்பிதங்களை மன்னிக்கவேண்டும். நாம் மற்றவர்களை மன்னிப்பது தேவன் நம்மை மன்னித்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் அடையாளமாகும். 


எங்களைச்  சோதனைக்குட்படப் பண்ணாதேயும் 


எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே (மத் 6:13).


நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று ஜெபித்த பின்பு, நாம் மறுபடியும் பாவத்தில் விழுந்துவிடாதவாறு தேவன் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். தீமையிலிருந்து கர்த்தர் நம்மை இரட்சித்துக்கொள்ள வேண்டுமென்றும், நாம் சோதனைக்கு உட்படக்கூடாது என்றும் ஜெபிக்கவேண்டும். 



தீமை என்பது பிசாசை குறிக்கும் வார்த்தை. அவனே சோதிக்கிறவன். சாத்தான் நம்மை தாக்காதவாறு தேவன் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்று ஜெபிக்கவேண்டும். 


தீமையான காரியங்களிலிருந்தும் தேவன் நம்மை பாதுகாக்கவேண்டும். தீமையான காரியம் என்பது பாவக்காரியங்களாகும். தேவன் தீமையை வெறுக்கிறார். சாத்தானோ தீமையை விரும்புகிறான். நம்மை தீமை செய்யுமாறு தூண்டுகிறான். பாவக்காரியங்களை நாம் செய்யாதவாறு தேவன் நம்மை பாதுகாக்கவேண்டுமென்று ஜெபிக்க வேண்டும். நாம் பாவம் செய்தால் நமது ஆத்துமா அழிந்துபோகும். நம்மை தீமைக்கு நேராக வழிநடத்தி, சாத்தான் நம்மை அழித்துப்போட வகை பார்க்கிறான். 


தேவனுடையவைகள் 


ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் தேவனுடையவைகள். நமது விசுவாசத்தை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளினால் தேவன் நமது வாயை நிரப்பவேண்டும். கர்த்தர் கொடுக்கும் ஆறுதலான வார்த்தைகள் தேவனிடத்திலுள்ள நமது பக்தியை அதிகரிக்கும். தேவன் தம்மைப்பற்றி நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.  தமது சுபாவத்தை நமக்கு காண்பிக்கிறார். அவரது மகிமையையும், மாட்சிமையையும் நமக்கு  புரியவைக்கிறார். ராஜ்யமும் வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் தேவனுக்கே உரியது என்னும் சத்தியம் தேவன் நமக்கு தம்மைப்பற்றி  வெளிப்படுத்தியுள்ள வெளிப்பாடாகும்.


  யாக்கோபு ஜெபத்தில் கர்த்தரோடு போராடினான். அதுபோல நாமும் போராடி ஜெபிக்கவேண்டும். நமது சுயபலத்தினால்  போராட முடியாது. கர்த்தர் நமக்கு கொடுக்கும் பலத்தினால்தான் போராடமுடியும். ராஜ்யம் தேவனுடையது. தேவன் நம்மை ஒரு ராஜாவைப்போல இரட்சிக்கிறார். ஒரு ராஜாவுக்குரிய ஆசீர்வாதங்களை நமக்குத் தருகிறார். 


வல்லமை அவருக்குரியது. தேவனுடைய ராஜ்யத்தை பாதுகாக்கக்கூடிய வல்லமை அவரிடத்திலுள்ளது. தம்முடைய ஜனங்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்யும் வல்லமையை தேவன் வெளிப்படுத்துகிறார். மகிமை தேவனுக்குரியது. தேவன் தமது மகிமையை தமது பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்துகிறார். தேவனிடத்தில் நாம் ஜெபிக்கும்போது அவருடைய மகிமையில் நம்மையும் பங்குபெறச்செய்கிறார்.


ராஜ்யமும் வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே என்று ஜெபத்தில் நாம் கூறும்போது தேவனை துதிக்கிறோம். அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். தேவனோடு போராடி ஜெபிக்கும்போது நாம் அவரை துதிக்கவேண்டும்.  துதிப்பதன் மூலமாக தேவனுடைய இரக்கமும் கிருபையும் நமக்கு அதிகமாக கிடைக்கும். தேவனை துதிக்கும்போது அவருடைய கிருபையை பெற்றுக்கொள்ளும் சிலாக்கியம் நமக்கு கொடுக்கப்படுகிறது. 


நாம் தேவனை துதித்து மகிமைப்படுத்தினால்தான் அவர் மகிமையோடிருப்பார், துதிக்கு பாத்திரராக இருப்பார் என்று நாம் தவறாக நினைக்கக்கூடாது. நாம் தேவனைத் துதித்தாலும், துதிக்காவிட்டாலும் அவர் துதிக்குப் பாத்திரராகவே இருக்கிறார். நாம் தேவனுக்கு மகிமையை செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் அவர் மகிமையுள்ளவராகவே இருக்கிறார். 


தேவ தூதர்களெல்லாம் கர்த்தரை துதிக்கிறார்கள். ஏனெனில் அவர் எல்லோருடைய துதிக்கும் பாத்திரராக இருக்கிறார். பரலோகத்தில் எப்போதுமே தேவனை துதிக்கும்  சத்தம் உண்டாயிருக்கும். கர்த்தரை துதிப்பதினால் பரலோகம் சந்தோஷமடைகிறது.  பரலோகத்திற்கு போகிறவர்கள் இந்த பூமியிலேயே பரலோகத்தின் ஆசீர்வாதங்களை அநுபவிக்கவேண்டும். நாம் தேவனை துதிக்கும்போது பரலோகத்திலுண்டாகும் சந்தோஷத்தை இந்த பூமியிலேயும் அநுபவிக்கலாம். பரலோகத்திற்கு செல்லும் பாதை இந்த பூமியிலேயே ஆரம்பமாகிறது. 


நாம் எவ்வளவுதான் கர்த்தரை துதித்தாலும் நம்மால் போதுமானஅளவு அவரைத் துதிக்கமுடியாது. அவரை துதிப்பதில் நாம் குறைவுள்ளவர்களாகவே இருப்போம். ஏனெனில் அவர் அந்த அளவிற்கு துதிகளுக்கு பாத்திரராக இருக்கிறார். மகிமை என்றென்றைக்கும் தேவனுக்குரியது என்று கூறி  நாம் துதிக்கவேண்டும். நித்தியகாலமாக அவர் துதிக்கப்படத்தக்கவராக இருக்கிறார். நாமும் இம்மையிலும் மறுமையிலும் அவரைத் துதிக்கும் சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும். ""நானோ எப்பொழுதும் நம்பிக்கொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்'' என்று சங்கீதக்காரன் பாடுகிறான்

 (சங் 71:14). 


ஆமென் 


நமது ஜெபத்தின் முடிவில் ஆமென் என்று கூறுகிறோம். இதற்கு அப்படியே ஆகக்கடவது என்று பொருள். தேவன் ஆமென் என்று கூறும்போது அப்படியே உண்டாகக்கடவது என்று பொருள். ஜெபத்தில் நாம் ஆமென் என்று கூறும்போது நமது விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் ஒருமித்துக் கூறுகிறோம். நாம் ஜெபத்தில் கேட்டதை ஆமென் என்று கூறி உறுதிபண்ணுகிறோம். ஆமென் என்று கூறும்போது நமது உள்ளத்தில் சந்தோஷமும் விசுவாசமும் பொங்கி எழும்பவேண்டும். கர்த்தர் நமது ஜெபத்திற்கு முழுமையாக பதில்கொடுப்பார்  என்று விசுவாசிக்கவேண்டும். ஆமென் என்று கூறியவுடன் நமது ஜெபத்திற்கு பதில் கிடைத்ததுபோன்ற உணர்வு நமது உள்ளத்தில் உண்டாகவேண்டும். 


நாங்கள் மன்னிக்கிறதுபோல 


கர்த்தருடைய ஜெபத்தில் கூறப்பட்டிருக்கும் இந்த வார்த்தைகளை யூதர்கள்

 தங்கள் ஜெபங்களில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் ""எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல'' என்னும் வாக்கியத்தை பயன்படுத்துவதில்லை. இயேசுகிறிஸ்து இந்த வாக்கியத்தை தமது ஜெபத்தில் சேர்த்து அதற்கான காரணத்தையும் குறிப்பிடுகிறார். நாம் மற்றவர்களை மன்னிப்பது தேவையானது. முக்கியமானது. தேவன் நம்மை மன்னிக்கும்போது நாமும் மற்றவர்களை மன்னிக்கவேண்டும் என்று விரும்புகிறார். நாம் தேவனிடத்தில் மன்னிப்புக்காக ஜெபிக்கும்போது  நாம் மற்றவர்களை மன்னித்திருக்கிறோம் என்னும் நல்மனச்சாட்சி நமக்குள் இருக்கவேண்டும். நாம் மற்றவர்களை மன்னிக்காமல் தேவன் நம்மை மன்னிக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது முறையல்ல.


நமது தப்பிதங்கள் மன்னிக்கப்படும்


மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்          (மத் 6:14).


நமது தப்பிதங்கள் மன்னிக்கப்படுவதற்கு  நாம் மற்றவர்களுடைய தப்பிதங்களை மன்னிப்பது மாத்திரமே தேவையான நிபந்தனை என்று கூறமுடியாது. ஏனெனில் நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு மனந்திருந்துதல், விசுவாசம், கீழ்ப்படிதல் ஆகியவையும் தேவை. ஒருவன் தன் சகோதரனுடைய தப்பிதங்களை மன்னித்தால் அவன் தன் தப்பிதங்களுக்காக தேவனிடத்தில் மனம் வருந்துவான். நமக்கு மற்றவர்கள் காயம் உண்டாக்கும்போது அதன் வேதனை எப்படியிருக்கும் என்று நமக்குத் தெரியும். அதுபோல நாம் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்யும்போது அவருடைய மனது எவ்வாறு காயப்படும் என்பதையும் நாம் புரிந்துகொள்வோம். 


ஒருவர் நமக்கு விரோதமாக வேண்டுமென்றே காயம் உண்டாக்காமல், கைபிசகாக எதிர்பாராதவிதமாக காயம் உண்டாக்கினால் அந்த நபரை உடனே மன்னித்துவிடவேண்டும். தெரிந்தே காயப்படுத்தியவரைக்கூட, அவர் ஏதோ தெரியாமல் காயப்படுத்திவிட்டார் என்று நினைத்து, அந்த துயர சம்பவத்தை நாம் மன்னித்து மறந்துவிடவேண்டும்.


கர்த்தர் நம்மை மன்னிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நாம் மற்றவர்களை மன்னிக்கவேண்டுமென்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். நாம் சுகமாக வாழவேண்டுமென்று விரும்புகிறோம். மற்றவர்கள் சுகமாக வாழ நாம் விரும்பவேண்டுமென்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். நமக்கு விரோதமாக தீங்கு செய்தவர்களுக்கு, வேறு ஏதாவது ஒரு வழியில்  தீங்கு வந்து அவர்கள் கஷ்டப்பட்டால், நாம் அவர்களுடைய கஷ்டத்தில் சந்தோஷப்படக்கூடாது. நம்மால் முடிந்த நல்ல உதவிகளை அவர்களுக்குச் செய்ய முன்வரவேண்டும். அவர்கள் நம்மோடு ஒப்புரவாகி நட்புடன் பழக விரும்பினால் அவர்களை சிநேகிதர்களாக ஏற்றுக்கொள்ள நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும்.


நமது தப்பிதங்கள் மன்னிக்கப்படாது


மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார் (மத் 6:15).


கர்த்தர் நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கு நாம் மனந்திருந்த வேண்டும், கர்த்தரை விசுவாசிக்கவேண்டும், மறுபடியும் பாவம் செய்யாதவாறு நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். ஆயினும் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு இந்த நிபந்தனைகள் மாத்திரம் போதுமானவையல்ல.  நாம் மற்றவர்களுடைய தப்பிதங்களையும் மன்னிக்கவேண்டும். அவர்களுக்கு நாம் மன்னியாதிருந்தால் கர்த்தரும் நம்முடைய தப்பிதங்களை நமக்கு மன்னிக்கமாட்டார். 


நாம் எவ்வளவுதான் கிருபையுள்ளவர்களாக இருந்தாலும், அன்புள்ளவர்களாக இருந்தாலும், தானதர்மங்களை செய்தாலும், மற்றவர்களை மன்னிக்கும் சுபாவம் நம்மிடத்தில் இல்லையென்றால் நாம் குறைவுள்ளவர்களாகவே இருப்போம். இப்படிப்பட்டவர்கள், தங்களுடைய தப்பிதங்களை தேவன் நமக்கு மன்னிப்பார் என்று எதிர்பார்க்கக்கூடாது. மற்றவர்களை மன்னிக்கவில்லையென்றால் அந்த குற்றவுணர்வோடுதான் தேவனிடத்தில் ஜெபிப்போம். தேவனுடைய இரக்கங்களை பெற்றுக்கொள்ளுகிறவர்கள் மற்றவர்களுக்கும் இரக்கம் காண்பிக்கவேண்டும்.


மற்றவர்கள் மீது நாம் கோபத்தை வைத்துக்கொண்டு தேவனிடத்தில் ஜெபித்தால், தேவனும் நமக்கு தமது கோபத்தை வெளிப்படுத்தலாம். கோபத்தோடு ஏறெடுக்கப்படும் ஜெபம் விஷத்தன்மையுடையது. கர்த்தர் நமக்கு  மற்றவர்களை மன்னிக்கும் தாலந்துகளை கொடுத்திருக்கிறார். அதை நாம் பயன்படுத்தவேண்டும். கர்த்தர் கொடுக்கும் தாலந்துகளை பயன்படுத்தாதவர்கள் கர்த்தருக்கு  கடனாளிகளாகவே இருக்கிறார்கள். நாம் கர்த்தருக்கு கடன்பட்டிருக்கும்போது எங்களுடைய கடன்களை மன்னியும் என்று ஜெபிக்கிறோம். மற்றவர்கள் நமக்கு கடன்பட்டிருக்கும்போது அவர்களுடைய கடன்களை நாம் மன்னிக்காவிட்டால் கர்த்தர் நமது கடன்களை மன்னிக்கமாட்டார். 


இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு சமாதானம்பண்ணுகிறவராக வந்திருக்கிறார்.  அவர் சமாதானப்பிரபு. மனுஷனை தேவனோடு ஒப்புரவாக்குவது இயேசுகிறிஸ்துவின் ஊழியம்.  அதே சமயத்தில் நம்மை ஒருவரோடொருவர் ஒப்புரவாக்கி, நமக்குள் சமாதானத்தை உண்டுபண்ணும் ஊழியத்தையும் அவர் செய்கிறார். இயேசுகிறிஸ்துவின் சமாதான ஊழியத்திற்கு நாம் முக்கியத்துவம் தரவேண்டும்.  இந்த உன்னதமான ஊழியத்தில் நாமும் பங்குபெறவேண்டும். இயேசுகிறிஸ்து       முக்கியம்   என்று நினைப்பதை நாம் அசட்டைபண்ணிவிடக்கூடாது. தேவனுடைய வார்த்தைக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். தேவன் பொறுமையாக இருக்கிறார் என்று நினைத்து அவருடைய வார்த்தையை அவமதித்து விடக்கூடாது. அவர் பொறுமையுள்ளவர். அதே சமயத்தில் அவர் நீதியுள்ளவர். நாம் மனுஷருடைய தப்பிதங்களை அவர்களுக்கு மன்னியாதிருந்தால் நமது பரலோகப் பிதா நமது தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார் என்பது இயேசுகிறிஸ்து நமக்கு கூறும் எச்சரிக்கையின் வாக்கியமாகும்

Post a Comment

0 Comments