காயீனின் அடையாளம் வேத ஆராய்ச்சி

 


வேத ஆராய்ச்சி


காயீனின் அடையாளம்


ஆசிரியர் : 

சகோ. எம்.எஸ். வசந்தகுமார் (பிரபல வேத ஆராய்ச்சியாளர் இலங்கை)



ஆதியாகமப் புத்தகத்தில் நாம் ஆய்வு செய்ய வேண்டிய அடுத்த சர்ச்சைக்குரிய பகுதியும் காயீனுடைய வாழ்வோடு தொடர்புள்ளது. தான் செலுத்திய காணிக்கையை நிராகரித்த தேவன் தன் சகோதரனுடைய காணிக்கையை ஏற்றுக் கொண்டமையினால் ஆத்திரமடைந்த காயீன்

 (ஆதி 4:2-5) தன் சகோதரனை தனியான இடத்திற்கு அழைத்துச் சென்று கொன்று விடுகிறான். (ஆதி 4:8) மனிதக் கொலை பாரதூரமான குற்றம் என்பதால் தேவன் காயீனைச் சபிக்கிறார் (ஆதி 4:11-12). 

அதேசமயம் தேவன் தனக்குக் கொடுத்த தண்டனையை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று தேவனிடம் முறையிட்டு (ஆதி 4:13) தன்னைக் கண்டுபிடிக்கின்ற எவனும் தன்னைக் கொன்று போடுவான் என்று புலம்புகின்றான். (ஆதி 4.14) இதனால் தேவன் யாரும் கொன்றுவிடாதபடி அவனுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். இதுபற்றி ஆதியாகமம் 4:15  அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்று போடாதபடிக்கு கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காயீனின் அடையாளம் பற்றிய இவ்வசனம் மூன்று விதமான சர்ச்சைகளை உருவாக்கி வைத்துள்ளது.



முதலாவது இவ்வசனத்தின் கடைசி வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு பற்றியதாகும். நமது தமிழ் வேதாகமம் உட்பட பழைய ஆங்கில வேதாகமங்களில் இவ்வாக்கியம் தேவன் காயீனின் ஒரு அடையாளத்தைப் போட்டார் எனும் அர்த்தம் தரும் வண்ணமாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனால் தேவன் காயீன் சரீரத்தின் மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். (01) சிலர் கருதுவதோடு அது எத்தகைய அடையாளமாய் இருக்கும் என ஊகிக்க முற்படுகின்றனர். 


“புராதன யூதர்கள் காயீன் குஷ்டரோகியதாக கருதினர்(02). அவன் சரீரத்தில் ஏற்பட்ட குஷ்டரோகம் தேவன் அவன் மீது போட்ட அடையாளம் என்பதே புராதன யூதர்களின் கருத்தாக இருந்தது. வேறு சிலர் “மற்றவர்கள் கண்டால் பயந்துவிடும் விதமாக காயீனின் சரீரத் தோற்றம் விகாரடைந்ததாக எண்ணினர். (02). பெரும்பாலான கிறிஸ்தவர்கள் காயீன் கொலைகாரன் என்பதை அறியத் தரும் ஒரு அடையாளக்குறி அவனது முகத்தில் போடப்பட்டதாக கருதுகின்றனர். . ”காயீனின் நெற்றியில் ஒரு அடையாளக்குறி பச்சைக் குத்தப்பட்டிருந்தது”(03). எனினும் காயீனின் சரீரத்தின் ஒரு அடையாளக் குறி போடப்பட்ட இருப்பின் அது அவனைப் பாதுகாக்கும் ஒரு அடையாளமாய் இராமல், அவன் யார் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளவைக்கும் அடையாளமாகவே இருந்திருக்கும். (04). அதாவது அடையாளத்தின் மூலம் அவன் கொலைக்காரன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள். எனவே காயீனின் அடையாளத்தை அவனது சரீரத்தின் மீது போடப்பட்ட அடையாளக்குறியாக கருத முடியாதுள்ளது. அதேசமயம் இவ்வாக்கியம் மூல மொழியில் காயீனின் மீது அடையாளம் போடப்பட்டது எனும் அர்த்தம் உடையதல்ல. ”காயீனுக்கு ஒரு அடையாளம் கொடுக்கப்பட்டது என்பதையே மூலமொழியில் இவ்வாக்கியத்தின் இலக்கண அமைப்பு முறை அறியத் தருகிறது. எனவே தேவன் காயீனின் மீது ஒரு அடையாளத்தைப் போட்டார் என்பதல்ல. மாறாக தேவன் காயீனுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தார் என்பதே இவ்வாக்கியத்தின் சரியான அர்த்தமாய் உள்ளது.



காயீனை கொலை செய்யாதபடிக்கு தேவன் அவனுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்துள்ள போதிலும் , அவ்வடையாளம் யாதென்பதை பற்றி ஆதியாகம ஆசிரியர் எதுவும் குறிப்பிடாதமையால் தேவ வியாக்கியானிகள் மத்தியில் அதை பற்றிய ஊகங்கள் உள்ளன. காயீனுடைய அடையாளத்தைப் பற்றிய இரண்டாவது சர்ச்சை இதுவாகும். ”தேவன் அவனுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அடையாளமாக அவனுக்கு ஒரு நாயைக் கொடுத்துள்ளதாக பலர் கருதுகின்றனர். (07). எனினும் காயீன் சென்ற இடங்களிலெல்லாம் அவனோடு சென்ற நாய் அவனை கொன்று விடாதபடி பாதுகாக்கும் அடையாளமாக இருந்ததாக கூறும் இவ்விளக்கத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இதே விதமாக “காயீனுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளம் ஒரு வண்ண ஆடை என்ற சிலர் கருதுகின்றனர். வேறுசிலர் நெற்றியில் ஒரு கொம்பு கொடுக்கப்பட்டது (07) என விளக்குகின்றனர். எனினும் இவ்விளக்கங்கள் அனைத்தும் தேவ வியாக்கியானிகளின் ஊகங்களே தவிர இவற்றுக்கு எவ்வித ஆதரமும் இல்லை. காயீனுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளம் என்ன என்பதை பற்றி வேதாகமத்தில் எதுவும் குறிப்பிடப்படாதமையால் அதைப் பற்றி ஊகித்து ஒரு கற்பனை விளக்கத்தை கொடுப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.



“தேவன் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கும் போது அதை உறுதிப்படுத்தும் அடையாளம் ஒன்றை கொடுப்பது வழக்கம். (06). அதை வேதாகமத்தில் நாம் அவதானிக்கலாம். உலகளாவிய ஜலப்பிரளய அழிவின் பின் இனிமேல் ஜலப்பிரளயத்தினால் உலகம் அழியாது என நோவாவிற்கு வாக்களித்த தேவன் .அதை உறுதிப்படுத்த வானவில்லைத் தோன்ற பண்ணினார். அவ்வானவில்லானது தேவனுடைய வாக்குத்தத்ததை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருந்தது. (ஆதி 9:8-17). 


யாத்திரகாமம் 3.12 இல் இஸ்ரவேல் ஜனங்கள் ஓரேப் எனப்படும் சீனாய் மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வது தேவன் மோசேயை அனுப்புவதற்கான அடையாளமாக சொல்லப்பட்டது. (ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக தேவன் தன் வார்த்தையை உறுதிப்படுத்த ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். ஏசாயா 7:11-14). “இவ்வாறு ஒன்றை உறுதிப்படுத்துவதற்காக அடையாளங்கள் கொடுக்கப்படுவது அக்காலத்தில் சாதாரண ஒரு வழக்கமாய் இருந்தது. (02). 1 சாமு 16:7, 2இராஜா 19:29, எரே 44:29 இலும் இதை நாம் அவதானிக்கலாம். இதேவிதமாக காயீனைக் கண்டுபிடிக்கின்ற எவனும் அவனை கொலை செய்யமாட்டான் எனத் தேவன் அவனுக்கு உறுதிப்படுத்துவதற்காக அவனுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளார். எனினும் இவ்வடையாளம் என்ன என்பது பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப்படாமையினால் அதைப்பற்றி நம்மால் அறிய முடியாதுள்ளது.



காயீனுடைய அடையாளத்தோடு தொடர்புடைய மூன்றாவது சர்ச்சை தேவன் அவனுக்கு கொடுத்த பாதுகாப்பு நியாயமானதா என்பதாகும். ஆதி 9:6 இல் மனிதக் கொலைக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று தேவன் அறிவுறுத்தியுள்ளார். இதனால் தன் சகோதரனைக் கொலை செய்த காயீனுக்கு தேவன் மரண தண்டனை கொடுக்காமல் அவனை உயிரோடு விட்டதோடு, வேறுஎவரும் கொன்று விடாதபடி பாதுகாப்பதாக கூறியதோடு அதை உறுதிப்படுத்தும் அடையாளமொன்றையும் அவனுக்கு கொடுத்தது எவ்விதத்திலும் நியாயமான செயலாகுமா என பலர் கேட்கின்றனர். அதாவது கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை விதித்த தேவன், காயீனுக்கு ஏன் அத்தண்டனையைக் கொடுக்கவில்லை என்பதே அவர்களது கேள்வியாகும். உண்மையில் கொலைக்குற்றத்திற்கு மரணதண்டனை என தீர்ப்பு வழங்கிய தேவன் உலகின் முதலாவது குற்றவாளியைத் தண்டிக்காது விட்டது நமக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்துகின்றது. இதற்கு தேவவியாக்கியானிகள் சில காரணங்களை கற்பித்துள்ளனர். “மரண தண்டனையை விட தேவன் அவனுக்கு அளித்த தண்டனை கடுமையானது என்பது சிலரது விளக்கமாகும்(02). அதாவது காயீன் வாழ்நாள் முழுவதும் பூமியில் நிலையற்று அலைகின்றவனாய் தீர்ப்பளித்தது (ஆதி 4.14) மரண தண்டனையை விட கடுமையானது என்பதே இவர்களது எண்ணமாகும். அதேசமயம் தேவனுடைய சமூகத்திலிருந்து துரத்தப்படுவதும் மரண தண்டனையை விட கடுமையானதாகக் கருதப்படுகின்றது. (05). எனவே தேவ சமூகத்திற்கு விலகி வாழ்ந்த காயீன் (ஆதி 4:14) கடுமையான தண்டனையை அனுபவித்துள்ளான் என்று சிலர் கூறுகின்றனர். காயீன் முதல் மனிதரான ஆதாம் ஏவாள் என்போரின் மகனாக இருந்தமையால் “மானிட வம்சம் விருத்தியடைவதற்காக (05) என்று கருதுபவர்களும் நம்மத்தியில் உள்ளனர். தேவகட்டளையை மீறி பாவம் செய்த முதல் மனிதரான ஆதாமும் ஏவாளும் தேவ அறிவுறுத்தலின்படி பாவம் செய்த உடனேயே மரணமடையாமல் பாவத்தின் பின்பும் நீண்டகாலம் உயிர்வாழ அனுமதிக்கப்பட்டது போலவே (ஆதி 2:17,) தன் சகோதரனைக் கொலைசெய்த காயீன் உடனடியாகத் தண்டிக்கப்படாமல், உலகில் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளான் என சிலர் கருதுகின்றனர்(02).. கொலை செய்த காயீனுக்கு மரண தண்டனை கொடுக்கப்படாதமைக்கான காரணம் எதுவாயிருப்பினும், கொலை குற்றத்திற்கு மரணதண்டனை என தேவன் தீர்ப்பளித்ததிற்கும் முன்பே அதாவது அத்தகு தண்டனையை பற்றி தேவன் அறிவிப்பதற்கும் முன்பே காயீன் தன் சகோதரனை கொலை செய்துள்ளான் என்பதை நாம் மறக்கலாகாது. ஆதி. 9ம் அதிகாரத்திலேயே கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் எனத் தேவன் அறிவித்தார். ஆனால் ஆதி. 4ம் அதிகாரத்தில் தன் சகோதரனை கொன்றுள்ளான். எனவே குறிப்பிட்ட தண்டனை பற்றிய அறிவிப்பு கொடுக்கப் படுவதற்கு முன்பு காயின் கொலைகாரனாகியமையால் தேவன் தன் நீதியின்படியே அவனுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments