கிறிஸ்து இயேசு சிலுவையில் அருளிய ஏழு வாக்கியங்கள்

 கிறிஸ்து இயேசு சிலுவையில் அருளிய ஏழு வாக்கியங்கள்.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரட்சகர் இயேசு சிலுவையில் மரித்ததை

 'புனித வெள்ளி' என்று கிறிஸ்தவர்கள் உலகமெங்கும் அனுசரித்து வருகிறோம்.

 புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் இயேசு சிலுவையில் தொங்கிய

போது சொன்ன ஏழு வாசகங்களைக் குறித்து பிரசங்கிப்பது - வழக்கமாக இருந்து வருகிறது. 

அந்த ஏழு வாசகங்களையும் அதன் அர்த்தங்களையும் கவனிப்போம்.


ஆண்டவர் இயேசுவின் எல்லா உபதேச போதனைகளின் சுருக்கம்தான் இந்த ஏழு வாக்கியங்கள் என்றும் சொல்லலாம்.



ஆண்டவர் இயேசு சொன்னதைப் போன்ற வார்த்தைகளை சிலுவையில் அறையப்படுபவர் களிடமிருந்து எதிர்பார்க்க முடியாத ஒன்று தான். 

பொதுவாகச் 'சிலுவையில்

 அறையப்படும் போது தாங்க முடியாத வேதனை ஏற்படும்.

 சாவது வரை மிகக் கொடிய வேதனை இருக்கும். 


எனவே சிலுவையில் அறையப்படுபவர்கள் வேதனையைத் தாங்க முடியாமல் அழுவார்கள். உலகைத் தூற்றுவார்கள். சபிப்பார்கள். கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவார்கள். சிலுவை அருகே வேடிக்கை பார்த்து நிற்பவர்களைக் காறித் துப்புவார்கள். இதுதான் சாதாரணமாக நடை பெறுவது. ஆனால் இயேசு இதற்கெல்லாம் மாறுபாடகச்செயல்படுகின்றார்! அவர் யாரையும் குற்றம் சொல்லவில்லை. அவருக்கு கோபம் இல்லை, வெறுப்பு இல்லை. மாறாக இயேசு வேதனைகளின் மத்தியில் ஜெபித்தார்.


இயேசுவின் வாழ்வில் ஜெபம் மிக மிக முக்கியமானதாக இருந்தது. தன் ஊழியத்தை ஆரம்பிக்கும் முன் நாற்பது நாட்கள் உபவாசம் இருந்து ஜெபித்தார். ஊழிய காலத்தில் அதிகாலை இருட்டோடே எழுந்து ஜெபிக்கும் படியாகச் சென்றார். தனித்தும், சீடருடன்

 சேர்ந்து ஜெபித்தார். 

கெத்சமனே தோட்டத்தில் இரத்தத்தின் பெரும் துளிகள் வியர்வையாக விழும் அளவு ஜெபித்தார்.


சிலுவையில் தொங்கும் போது கூட வேதனையின் மத்தியிலும் பிதாவை நோக்கி ஜெபிக்கிறார். இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பமும், முடிவும்

ஜெபமாகவே இருந்தது.




முதலாம் வாக்கியம்


மன்னிப்பின் வார்த்தைகள்



"பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.” (லூக்கா. 23:34)


சிலுவையின் ஊர்வலம் கல்வாரியை அடைந்த போது, இயேசுவின் வஸ்திரங்கள் உரியப் பட்டன; ஐந்து நாட்களுக்கு முன்பு தான், எருசலேமில் இருந்தவர்கள், இயேசு வரும் வழியில் விரிக்கத் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றினார்கள்; இப்பொழுதோ அவர்கள் இயேசுவின் வஸ்திரத்தை உரித்தார்கள்.


தமக்குத் தண்டனையை நிறைவேற்றுவோரிடம் இயேசு தமது கரங்களை விரித்துக்கொடுத்தார். அந்தக் கரங்கள் யாருக்கும் தீமை எதுவும் செய்ததில்லை, உலகத்திற்கு ஆசிர்வாதங்கள் அளித்த உன்னத கரங்கள் அவை. அவருடைய கரத்தில் ஆணிகள் அடிக்கும் சத்தமானது கல்வாரி மலை அடியிலிருந்த நகர மதில்களில் எதிரொலித்தது. அதன் பிறகு சிலுவையானது மெதுவாக உயர்த்தப்பட்டு, வானத்தையே குலுக்கும் திடும் என்ற ஒரு சத்தத்துடன் குழியில் நிறுத்தப்பட்டது.

 இயேசு கடைசியாக சிலுவை என்கிற தமது பிரசங்க மேடையில் உயர்த்தப்பட்டார்.


சிலுவையில் இயேசு கூறிய முதல் வசனம்மன்னிப்பின் வசனம் ஆகும்


"பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது

இன்னதென்று அறியாதிருக்கிறார்களே'' 

(லூக்கா. 23:34b). 


இயேசு சிலுவையில் பேசின முதலாவது, நான்காவது மற்றும் ஏழாவது வார்த்தைகள் ஜெப வார்த்தைகள் ஆகும்.


சிலுவையில் அறையப்பட்ட மனிதர்கள் ஜெபிப்பது என்பது அரிது. மரணத்தை எவ்வளவு வலிமிக்கதாய் மாற்ற முடியும் என்று சிந்தித்த வக்கிர மனங்களின் கண்டுபிடிப்பே சிலுவை யாகும். 

அப்படிப்பட்ட பயங்கரமான தண்ட னையைப் பெறும் குற்றவாளிகள் வழக்கமாக வலியினால் துடித்து மயங்கி, அலறி, கெஞ்சி, சபித்து, சிலுவையில் இருக்கும் தன்னைப் பார்ப்பவர்கள் மேல் துப்புவார்கள். ஆனால் இயேசுவோ ஜெபித்தார்.


தமது நேரடியான ஊழியத்தில் இயேசு மன்னிப்பு என்ற பொருள் பற்றி அடிக்கடி போதித்துள்ளார்

( மத்தேயு. 6:12,14,15. 18:21,22 மற்றும்

33 ஆம் வசனங்களில் மன்னிப்பைக் குறித்து போதித்திருந்தார். தான் போதித்ததை சிலுவையில் செயல் முறைப்படுத்தினார்.


ஒரு சிறு குழந்தை தவறு செய்யும்போது அறியாமல் செய்து விட்டது என்று சொல்லி, சுலபமாக நாம் மன்னிப்பது போல, இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார்.


அவர்கள் செய்கிறது

இன்னதென்று

அறியாமல் செய்துவிட்டார்கள்

என்கிறார். 

அவரது கொலைக்குக் காரணமாக இருந்த ரோம அதிகாரிகளும், 

யூத மக்களும், அவரை சிலுவையில் அறைந்த போர்ச் சேவகர்களும் எப்படி இதை அறியாமல் செய்திருக்கக்கூடும்? அதுவும் அந்த நாட்டின் மிகக் கொடூரமான குற்றவாளியான பரபாஸ் என்பவனை விடுதலையாக்கி, நன்மைகள் மாத்திரம் செய்துவந்த

 இவரைக் கொலை செய்தவர்கள் எப்படி அறியாமல் செய்துவிட்டார்கள் என்று சொல்ல முடியும்?


உண்மை என்னவென்றால், அன்றைக்கு நடந்தது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு காரியம். இருளின் சக்திகள் இந்த

 மனிதருடைய மனக்கண்களைக் குருடாக்கி, இவர்களது இருதயத்தைக் கடினப்படுத்தி, இப்படி ஒரு கொடூர செயலை செய்ய ஏவின. தங்களுடைய - சுய புத்தியின் படி செயல்படுகிற எவரும் இப்படி ஒரு நல்ல மனிதரைக் கொடூரமாகச் சிலுவையில் அறைய

மாட்டார்கள்.

 ஆகவேதான் இயேசு, 'இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்துவிட்டார்கள்' என்று சொல்லி மன்னிக்கிறார்.


கர்த்தருடைய சித்தம் என்ன?

இந்த உலகத்திலே, 

நாம் யாரையெல்லாம் மன்னிக்கிறோமோ, அந்தத் தன்மை கிறிஸ்துவின் சித்தமாகும். நமக்கு சத்துருவாய் இருப்பவர்களை, வேதனைப்படுத்துகிறவர்களை

நாம் மன்னிக்க வேண்டும்.




இரண்டாம் வாக்கியம்


நம்பிக்கையின்வார்த்தைகள்.


 “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய். (லூக்கா 23:43)


சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளின் நிலைமை ஒரு முடிவில்லாததாகக் 

காணப்பட்டிருக்கும். கேலி செய்யும் கூட்டமானது வெறியுடன் சிலுவையைச் சுற்றிலுமிருந்து தங்களது வேலையைச் செய்து கொண்டிருந்தது. அவர்கள்: "மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக் கொள்ளத் திராணியில்லை. நாம் கண்டு விசுவாசிக்கதக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும்” என்று ஆர்ப்பரித்தார்கள்

 (மாற்கு 15:31b, 32a). 


மேலும் மாற்கு, "அவரோடே கூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்” (மாற்கு. 15:32b) என்று எழுதியுள்ளார்.


சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்களில் ஒருவன் படிப்படியாக இயேசுவை வித்தியாசப் பட்ட நோக்கில்காணத் தொடங்கினான். இயேசுவைப் பற்றிய ஏதோ ஒன்று அந்ததிருடனின் இதயத்தைத் தொட்டது.


ஒரு வேளை, மரிக்கும் வேளையில் இயேசுவின் முகத்திலிருந்த பெருமிதம் அவனைத் தொட்டிருக்கலாம். 

ஒருவேளை அவர் மறுபடி மறுபடி "பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்று சொல்லிக் 

கொண்டிருந்தது அவன் இருதயத்தைத்தொட்டிருக்கலாம். எதுவாயிருப்பினும், அத்திருடனின் இருதயத்தில் திடமான விசுவாசம் வளர்ந்து உறுதியானது. (லூக்கா.23:39-43)


சிலுவையிலும்கூட, இயேசுவின்

மீதான தாக்குதலை சாத்தான் குறைக்கவில்லை. வனாந்தரத்திலே சாத்தான், இயேசுவிடம், அவர் சிலுவையில் அறையப்படாமலேயே உலகத்தின் இராஜ்யங்களைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்று

சொன்னான். (மத்தேயு 4:8,9).


இயேசுவின் நேரடியான ஊழியத்தின் முடிவு நேரத்தில், பேதுரு இயேசுவிடம் சிலுவையை மறந்துவிடும்படி கூறச் சாத்தான் தூண்டினான். 

(மத்தேயு 16:21,23).


 இப்பொழுது சிலுவையில் இயேசு மரிக்கின்ற வேளையில், சாத்தான் ஒரு கள்ளன் மூலமாக

பேசி, இயேசுவைச் சிலுவையிலிருந்து இறங்கி, அதன்மூலமாய் மரணத்திற்குத் தப்பித்துக்கொள்ளும்படிக்கு சவால் விடுகிறான்.


அதனால் தான், விசுவாசமில்லாத கள்ளன், அவர் தம்மையே காத்துக் கொள்ளும் செயல்பாட்டைத் தேர்ந்தெடுக்க அவரிடம் பேசினான் "நீ கிறிஸ்துவானால் உன்னையும், எங்களையும் இரட்சித்துக் கொள்'' (லூக்கா 23:39.

 சாத்தான் வனாந்தரத்தில்

 "நீ தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங் களாகும்படி சொல்லும்” (மத், 4:3) 

என்று சொன்ன அதே

அணுகுமுறையை இந்தக் கள்ளனும் கையாண்டான்.


இன்றைக்கும் மனிதர்கள் இப்படி இரண்டு விதமாகத்தான் இருக்கிறார்கள் என்பதை இந்த இரண்டு கள்ளர்கள் மூலம் காண முடிகிறது. இந்த மனிதர்களுக்கு நடுவேதான் இயேசு சிலுவையில் தொங்கினார்.


விசுவாசத்திற்குள் வந்த கள்ளனோ, இயேசு தம்மையே பலியாக்கும் அந்தச் செயலையே விரும்பினான்.

 "ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” (லூக்கா 23:42).


 வேறு வார்த்தைகளில் இதைச் சொன்னால் அவன் இயேசுவிடம்,

 "நீர் சிலுவையிலே மரித்து உமது இராஜ்யத்தை ஜெயங்கொள்ளும்” என்று உற்சாகப்படுத்தினான். இந்த மனிதனின் விசுவாசம்

தான் எவ்வளவாயிருந்தது! 


தண்டனை பெற்ற குற்றவாளியாக இயேசுவை அவன் பார்க்கவில்லை; மாறாக ஒரு இராஜாவாகப்

பார்த்தான்! முள்முடிக்குப் பதிலாக மேன்மையான மகுடத்தை அவன் கண்டான்.


இயேசுவின் கைகளிலிருந்த ஆணிகளுக்குப் பதிலாக செங்கோலை அவன்

கண்டான்!


 இயேசுவின் சரீரத்தில் இருந்து வெளியேறிய அவர் மேல் உறைந்து கிடந்த அவரது இரத்தம் அவனுக்கு ராஜரீகமான இரத்தாம்பரமாய்த் தோன்றியது.


விசுவாசித்த அந்தக் கள்ளனுக்கு இயேசு அளித்த பதில் ஒரு நம்பிக்கையின் செய்தியாக இருந்தது: 

"இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (வ. 43).


வேறு எவ்வழியில் இயேசுவின் இவ்வார்த்தைகள் நம்பிக்கையின் செய்தியாய் உள்ளன? 

முதல் கள்ளனின் ஆலோசனையை அவர் மறுத்து, இந்த இரண்டாம் கள்ளனின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டதால் இது நம்பிக்கையின்

செய்தியாயிருக்கிறது.


 "மெய்யாகவே” என்ற வார்த்தை "ஆமென்” என்ற வார்த்தைக்குரிய கிரேக்கப் பதத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இயேசு கூறியது, ஆமென்! "அப்படியே ஆகட்டும்". எல்லா மனிதரும் பரதீசுக்குச் செல்லும் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காக நான் மரிப்பேன்! தேவனுடைய திட்டத்தை இப்படி நான் முழுமையாக நிறைவேற்றுவேன்” 

என்று ஆகும். அப்போது பரலோகம் முழுவதும் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்க வேண்டும்.


இரண்டாவதாக, எல்லா மனிதரும், அவர்கள் வாழ்க்கை எவ்வளவுதான் நம்பிக்கையற்றதாகக் காணப்படினும் இரட்சிக்கப்பட முடியும் என்பதால் இது நம்பிக்கையின் செய்தியாக 

இருக்கிறது.

 "ஒரே முறை கேட்டு, ஒரே முறை தேடி, ஒரே முறை தட்டி, வாழ்வின் கடைசி நாளில் இந்தத் திருடன் இரட்சிக்கப்பட்டான்” 

என்று யாரோ ஒருவர் கூறியுள்ளார்.


தாம் நேசித்தும், இன்னும் தம்மிடம் திரும்பாதவர்களுக்கு கர்த்தரின் நம்பிக்கை காத்திருக்கின்றது. எனவே இதை விட்டு விடாதீர்கள். திருடனுக்கு இந்நம்பிக்கை இருக்குமேயானால், இன்றுள்ள அப்படிப்பட்டவர்களுக்கும் கூட அந்த நம்பிக்கை நிச்சயம் உண்டு! இயேசு கிறிஸ்துவால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை!





மூன்றாம் வாக்கியம்


 அன்பின்வார்த்தைகள்.


 "இயேசு தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார் (யோவான் 19:26,27).


இயேசு பிறப்பதற்கு முன்னரே, இவர் உலக இரட்சகர் என்பதை தேவதூதன்

உலகத்திற்கு அறிவித்திருந்தான். மேலும், சிலுவையின் கோர மரணத்தின் மூலமாக தான் 

இவர் உலகத்தை இரட்சிப்பார் என்பதை பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட சிமியோன் என்னும் ஒரு மனுஷன், 

"உன் ஆத்துமாவை ஒரு பட்டயம் உருவிப்போம் என்று

தீர்க்கதரிசனமாக மரியாளுக்கு அறிவித்திருந்தார். இதெல்லாம் அறிந்தவளாகத் தான் இயேசுவின் தாயாகிய மரியாள் சிலுவையின் அருகில் நின்றிருந்தாள்.


இயேசுவும் இவைகள் எல்லாம் கடவுளின் சித்தப்படி நடக்கிறது என்பதை நன்கு அறிந்தவராய், அந்த வேதனையின் நேரத்தில் கூட தன்னுடைய தாயின் எதிர்காலப் பராமரிப்பிற்குத் தேவையானதைச் செய்தார். சிலுவையில் தொங்கும் போது கூட, “உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக என்ற கட்டளையின் படி தன்னுடைய தாயை

யோவானிடத்தில் ஒப்படைத்தார். இது இயேசு கடவுளுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளத் தவறவில்லை என்பதையும், நாமும் நம்முடைய பெற்றோரைக் கனப்படுத்த வேண்டும் என்பதையும் மிகச்சரியாக உணர்த்துகிறது.




நான்காம் வாக்கியம்


பாடுகளின் வியாகுல வார்த்தைகள்.


ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். (மத்தேயு 27:46).


ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்பதற்கு "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக்

கைவிட்டீர் என்று அர்த்தமாம்.


நல்ல காரியங்களுக்காக உயிரை விட்ட மகான்கள் தைரியத்தோடும், சந்தோஷத்தோடும் தங்கள் உயிரை விட்டார்கள் என்று சரித்திரம் கூறுகிறது. அப்படியானால், இவர் மட்டும் ஏன் இப்படி மிகுந்த சத்தமிட்டுக் கதற வேண்டும் என்றும், கடவுளுடைய சித்தத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு மரிக்க வேண்டியது தானே என்றும் சிலர் கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால், உலகத்தில் எவரும் இதுவரை இப்படிப்பட்ட 

ஓர் கோர மரணத்தை அனுபவித்ததில்லை, அனுபவிக்கப் போவதுமில்லை. உலகத்தின் பாவம்முழுவதும் இயேசுவின் மீது அன்றைக்கு சுமத்தப்பட்டது. 

அந்தப் பாவத்திற்கான தண்டனையையும் அவர் தம்மீது ஏற்றுக் கொண்டார். எவருமே அறிந்திராத சொல்லொண்ணா வேதனையை அவருக்குத் தந்தது. மேலும் இயேசு நித்திய நித்தியமாக கடவுளோடு கூட இருந்த தேவகுமாரன். ஆனால், இவர் மனுக்குலத்தின் பாவத்தை சுமந்த போது, பாவத்தை நோக்கிப் பார்க்கக்கூடாத சுத்தக் கண்களை உடைய தேவன் இவரிடத்தில் இருந்து தமது முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டியதாயிற்று. 

இது எல்லா சரீர வேதனையைக் காட்டிலும் மிகப் பெரிய வேதனையை இவருக்கு உண்டாக்கிற்று.


எந்த ஒரு மொழியிலும், "கைவிடப்படுதல்” என்ற இவ்வார்த்தை மிகுந்த வருத்தத்திற்கு உரிதாய் உள்ளது. 


கிரேக்க மொழியில்

இவ்வார்த்தை, "விட்டு விடுதல்,” "கைவிடுதல்” மற்றும்

 "கீழே விடுதல்" என்ற வார்த்தைகளின் கூட்டுச் சொல்லாக உள்ளது. இது தோல்வியுற்று, உதவியற்று இருக்கும் நிலையைக் குறிக்கிறது.


ஆனால் இதன் மூலம் மனுக் குலத்திற்கு மிகப் பெரிய நன்மைகளும் உண்டாயிருக்கிறது. கடவுள் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றிலும் மிகவும் மேலான வாக்குத் தத்தம் "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்ற வாக்குத்தத்தம்தான். 


நம்மில் ஒருவரையும் கடவுள் கைவிடாமலும், விலகாமலும் இருக்க வேண்டும் என்பதால் தான், இந்த ஒருவர் மீது நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையும் சுமத்தி, இவரைச் சிலுவையில் பாவத்தின் நிமித்தம் கைவிட வேண்டியதாயிற்று. தாங்கிக்கொள்ள

முடியாத இந்த வேதனையின் காரணமாகத்தான் இயேசு,

 “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கதறினார். இதையெல்லாம் அறிந்து கொள்ளாத காரணத்தினால் தான் சிலர் தன்னையே காப்பாற்றிக் கொள்ள

முடியாத இவரால் நம்மை எப்படிக் காப்பாற்ற முடியும் என்று கேட்கிறார்கள்.


ஏசாயா 59:1-2ல் பாவம் நம்மை தேவனைவிட்டுப் பிரிக்கிறதென்று காண்கிறோம்.

 2 கொரிந்தியர் 5:21ல் "பாவமறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" என்று

படிக்கின்றோம்.


இயேசு "நமக்காக பாவமான போது'' நமது பாவங்களுக்கான தண்டனையை அவர் பெற்றுக்கொண்டார். பாவத்தின் இறுதியான தண்டனை, தேவனால் கைவிடப்பட்ட ஒரு நிலையாகும்

 (2 தெசலோ. 1:9).


நம்மை இரட்சிக்க இயேசு எவ்வளவாய் சித்தங் கொண்டிருந்தார்? என்பதை மத்தேயு 27:46 நமக்குச் சித்தரிக்கின்றது. இயேசு பரலோகத்தின் மாட்சிமையை விட்டுஇறங்கினார். ஆனால் இன்னும் அதிக தூரம் சென்றார். அவர் இப்பூமியில் ஒரு மனிதனாக, அடிமையாக பிறந்தார், ஆனால் இன்னும் அதிகதூரம் சென்றார். வெட்கம் மற்றும் புறக்கணிக்கப்படுதல் ஆகியவற்றால் அவர் பாடுபட்டார், அவர் சிலுவை வரை சென்றார், ஆனால்பயணம் இன்னும் முடியவில்லை. நம்மை மீட்பதற்காக, அவர் தேவனால் கைவிடப்பட்ட நிலை வரைக்கும் செல்ல சித்தமானார்!


இதை என்னால் என்றுமே புரிந்து கொள்ள முடிவதில்லை. இயேசு இதை எப்படி நமக்காக செய்யக்கூடும்? இவ்வளவாய் அவர் உங்களையும் என்னையும் நேசிக்க முடிந்தது எப்படி?


சிலுவையில் அவர் எல்லாப் பாவிகளின் பாவங்களுக்கான நித்திய தண்டனையை ஒரு குறிப்பிட்ட கால வரையறையில் அவர் பெற முடிந்தது எவ்விதம்? இதையெல்லாம் நான் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், இதை விசுவாசத்தால் நான் ஏற்றுக்கொள்ள முடியும். ""தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக”

அவருக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.

 (2 கொரிந்தியர் 9:15).




ஐந்தாம் வாக்கியம்


சோர்வின் வார்த்தைகள்


 "தாகமாயிருக்கிறேன்”

 யோவான் 19:28


வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக "தாகமாயிருக்கிறேன் என்றார் என்று யோவான் கூறுகிறார். 


பழைய ஏற்பாட்டிலே "என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது. (சங்கீதம் 22:15), 

“என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள் 

(சங்கீதம் 69:21) என்று சிலுவையைக் குறித்து ஏற்கனவே தீர்க்கதரிசனங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.


இந்த தாகம் சாதாரணமான தாகமல்ல என்றும், அக்கினியின் மத்தியில் இருக்கிற ஒரு மனிதனுக்கு ஏற்படும் மரண தாகம் போன்றதுஎன்றும் வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

இது இயேசு அனுபவித்த நரக வேதனையைக் குறிக்கிறது. மனிதனுக்காக அவனுடைய நரக வேதனையை இவர் அனுபவித்தார். எந்த ஒரு மனிதனும் ஒருபோதும் நரக வேதனையை அனுபவிக்கக்கூடாது என்பதற்காகத் தான் இயேசு அந்த வேதனையை ஏற்றுக்கொண்டார்.


 நாம் எல்லோரும் பரலோக இன்பத்தை அனுபவிப்பது மட்டும் கடவுளுடைய விருப்பம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். மேலும் தாகமாக இருந்த அவர் புளித்த காடியைக் குடிக்க வாங்கிக்கொண்டது நம்மீது தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்து கொண்டிருந்த சாபங்களை அவர் அகற்றிவிட்டார் என்பதைக் காட்டுகிறது.


முன்னோர் செய்த பாவத்தின் பலனை நாம் இன்றைக்கு அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்ட, “பிதாக்கள் திரட்சக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப் போயின"

 என்று அந்தக் காலத்தில் ஒரு பழமொழி இருந்தது. இந்த பழமொழி ஒருநாள் இல்லாமல் போகும் என்று பழைய ஏற்பாட்டுக் காலத்திலேயே கடவுள் சொல்லியிருந்தார். இருப்பினும், இவ்வசனம் கூறப்பட்ட வேளை யானது நமக்கு இதைக்காட்டிலும் முக்கியமான பாடத்தை உணர்த்துகிறது. "எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, அதன் பிறகு இந்த வார்த்தைகளைக் கூறினார். (யோவான்.19:28)


சிலுவையில் அவர் நரக வேதனையை அடைந்து தீர்ந்தபின்பே இவ்விதம் கூறினார். பாவத்தோடு போர் செய்து முடித்தபின்பு இயேசு தம்மைக் குறித்து எண்ணிப்பார்த்துக் கூறிய மிதமான வார்த்தைகள் ஆகும். ஜெயம் பெற்றவன் நீண்ட தூரம் ஓடி வந்தவன் எல்லை 

கோட்டைத் தொட்டு,

பிறகு "தாகமாயிருக்கிறேன்” என்று சொல்வது போல இயேசு இந்த சமயத்தில் கூறினார்.



ஆறாம் வாக்கியம்


 வெற்றியின்வார்த்தைகள்.


 "முடிந்தது" (யோவான் 19:30)


கிரேக்க மொழியில் 'டெட்டெலெஸ்டாய்' ( (tetelestai) என்ற வார்த்தையைத்தான் தமிழில் 'முடிந்தது' என்று 

மொழிபெயர்த்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் நிலத்தையோ, ஒரு விலையேறப் பெற்ற பொருளை வாங்கும் போது, அதற்கான முழு கிரயமும்

செலுத்தப் பட்டுவிட்டது என்பதைக் காட்ட 'டெட்டெலெஸ்டாய்'

 என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். 

அதாவது,

இந்தக் காலத்தில் ரசீதுகளில் 'PAID' என்று முத்திரை குத்துவது போல, அந்த வார்த்தையை பயன் படுத்தினார்கள்.

 ஆகவே இயேசு சிலுவையில் தொங்கிய போது முடிந்தது என்று சொன்னது நமது பாவ மன்னிப்பிற்கான முழு கிரயத்தையும் அவர் செலுத்திவிட்டார் என்பதைக் காட்டுகிறது.


முடிந்தது என்கிற அந்த ஒரு வார்த்தையில் பல காரியங்கள் அடங்கி இருக்கின்றன.


(i) சிலுவையைக் குறித்து கடவுள் திட்டமிட்டு முன்னறிவித்திருந்த எல்லாம் நிறைவேறி முடிந்தது.


(ii) பழைய ஏற்பாட்டில் அவருடைய பாடுகளைக் குறித்து சொல்லப்பட்ட அத்தனை காரியங்களும் நிறைவேறி முடிந்தது.


(iii) உலகத்தின் பாவம் தீர்ந்தது, முடிந்தது. அதாவது, பாவம் இனி ஒரு பிரச்சனையல்ல. ஏனென்றால் அதற்குப் பரிகாரம் வந்துவிட்டது. எத்தனையோ தீராத வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, தீர்வு வந்தது போல மனுக்குலத்தின் பாவ வியாதிக்கு தீர்வு வந்துவிட்டது.


(iv) இயேசு ஆவி, ஆத்துமா, சரீரத்தில் பட்ட பாடுகள் முடிந்தது.


(v) இயேசுவின் உலக வாழ்க்கை முடிந்தது.


(vi) மனுக்குலத்தின் மீட்பிற்காக அவர் செய்த எல்லாம் முடிந்தது.




ஏழாம் வாக்கியம்


மனநிறைவின்வார்த்தைகள்.


 "பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன். (லூக்கா 23:46)


இயேசு தமது ஜீவனை விட தயாரானார். இயேசு: 

"பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்'' என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார் (லூக்கா 23:46). அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து பின்பு ஆச்சரியப்பட்டான்


 (மாற்கு 15:44) முன்னதாகவே இயேசு "நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்து 

கொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதாஎன்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்

 நானே அதைக் கொடுக்கிறேன்” என்று கூறியிருந்தார் 

(யோவான் 10:17-18).


இயேசுவிடம் மரணம் நெருங்கவில்லை, மாறாக இயேசுவே மரணத்தைச் சந்தித்தார்.


சாதாரணமாக சிலுவையில் மரணமடையும் முன் ஒருவர் தமது தலையைத் தூக்குவார் இது நுரையீரல்களை பிராண வாயுவினால் நிரப்புவதற்கென்று இயற்கையில் நடக்கும் கடைசி முயற்சியாகும் பின்பு அவரின் தலை கீழே சாயும். 

ஆனால் இயேசு,

 "தலையைச் சாய்த்து, ஆவியைஒப்புக்கொடுத்தார்”யோவான்.19:30b, இது இயேசுவே தாமாக முன்வந்து தமது ஜீவனை ஒப்புக்கொடுத்ததைத் தெளிவாக்கு கின்றது.


" அவர் தாமே விரும்பியவண்ணம் தமது ஜீவனைக் கொடுத்தார். ஏனென்றால், அவர்

அதை விரும்பிச் செய்தார், 

அவர் தாம் விரும்பியபடியே செய்தார்” என்று

 அகஸ்டின் என்பவர் கூறினார்.


இயேசுவின் சிலுவை மரணம் கடவுள் காலகாலமாய்த் திட்டமிட்டு 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பித்த ஒரு சரித்திர சம்பவம் என்பதை நாம் இன்றைக்கு

எண்ணிப் பார்ப்பது 

அவசியமாகும்.


 இரட்சிப்பின் ஊழியத்தை இயேசு நிறைவேற்றிய பின்பு, 

"பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்''

என்று கூறினார் (லூக். 23:46).


இயேசு தமது வாழ்வை தேவனுக்கு ஒப்புவிக்க முடிந்தது. அவ்வாறே நீங்களும் நானும் நமது ஆவியைத் தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமானால், இந்த

வாழ்க்கையையும் தேவனுக்கு ஒப்புவித்து வாழ வேண்டும். ஏதோ ஒரு நாள் இயேசுவின் சிலுவை மரணத்தை தியானிப்பது

 அல்ல, வாழ்நாள் முழுவதும் தியானிப்போம்,தேவ பெலன் அடைவோம்.

 

கிறிஸ்து இயேசுவின் மரணத்தினால்'..


(1) பாவப் பரிகாரம் ஏற்பட்டது.

(எபி9:26)


 (2) நியாயப்பிரமாண சாபத்திலிருந்து விடுதலை கிடைத்தது. (கலா 3:13)


(3) யூத-புறஜாதி வேறுபாடு நீங்கியது (எபே 2:14-16)


(4) தேவனுடன் ஒப்புரவாகி அவருக்குச் சமீபமானோம்

 (ரோம 5:1, எபே 2:13)


(5) புத்திரத்துவம் கிடைத்தது.(கலா4:3-5)


(6) பாவமன்னிப்புக் கிடைத்தது. (எபேசியர்.1:7)


(7) நீதிகரிப்புக் கிடைத்தது (ரோமர்.5:9)


(8) சுத்திகரிப்பு கிடைத்தது.

 (1 யோவான். 1:7-9)


(9) மரண பயத்திலிருந்து விடுதலை கிடைத்தது. (எபிரெயர்.2:14-15)


(10) ஆக்கினை அகற்றப்பட்டது. (ரோமர். 8:1-3)


(11) அனைத்து ஆசீர்வாதங்களும் வாக்குறுதி செய்யப்பட்டது (ரோமர்.8:32, 2 கொரிந்தியர் 9:15)


(12) நமது எதிரியான சாத்தான் வல்லமை உரியப்பட்டு தோற்கடிக்கப்பட்டான்

 (கொலோ 2:14-15)


1 கொரி. 15:3-5


3. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,


 4. அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங் களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,


 5. கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.


கர்த்தர் ஆசிர்வதிப்பாராக.


 ஆமென் ……….

Bro.Paul Prabhakar








Post a Comment

2 Comments