பாடுகளின் வாரம் வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்

 


பாடுகளின் வாரம் 


வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்


பிலாத்து இயேசுவை விசாரிக்கிறான்


(மத்தேயு 27:2,11-14 ; மாற்கு 15:1-5 ; லூக்கா 23:1-5 ; யோவான் 18:28-38)



தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்து



விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி, அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்        

  (மத் 27:1,2).



பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இயேசுவை பிடித்து கைதுபண்ணி, யூதருடைய ஆலோசனைச்சங்கத்திற்கு முன்பாக நிறுத்தி அவர் மரணத்திற்கு பாத்திரமானவர் என்று தீர்ப்பு கூறுகிறார்கள்.  ஆனால் ஒருவருக்கு மரண தண்டனை கொடுக்கும் 

அதிகாரம் யூதருடைய ஆலோசனைச்சங்கத்திற்கு இல்லை. மரண தண்டனை கொடுக்கும் அதிகாரத்தை ரோமப்பேரரசு யூதரிடமிருந்து ஏற்கெனவே பறித்துக்கொண்டது. ஆகையினால் அவர்களால்  யாருக்கும் மரண தண்டனை கொடுக்க முடியாது. இயேசுவை கொலை செய்யவேண்டுமென்று விரும்பியும் அவர்களால் அவரை கொலைபண்ண முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வது என்பதை தீர்மானம்பண்ணுவதற்காக விடியற்காலமானபோது ஆலோசனைச்சங்கத்தார் மறுபடியும் கூடுகிறார்கள். 



இயேசுகிறிஸ்துவை தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுக்கிறார்கள். இயேசு மரணத்திற்கு பாத்திரவான் என்று தாங்கள் கொடுத்த தீர்ப்பை பிலாத்து அங்கீகரித்து, இயேசுவுக்கு மரண தண்டனை கொடுப்பார் என்று ஆலோசனைச்சங்கத்தார் எதிர்பார்க்கிறார்கள்.  இக்காலத்தில் பிலாத்துவைக் குறித்து யூதர்கள் மத்தியில் நற்பெயர் எதுவுமில்லை. அவன் ஒரு முரடனென்றும், யூதர்களை கொடுங்கோலாக ஆட்சிசெய்கிறவனென்றும் அவனுக்கு அவப்பெயர் உள்ளது. ஆகையினால் யூதர்கள் பிலாத்துவை நேசிக்கவில்லை. தங்களை அவன் ஆளுவதையும் அவர்கள் விரும்பவில்லை. பிலாத்திற்கு விரோதமாக யூதர்கள் பகையோடிருந்தாலும், இயேசுகிறிஸ்துவுக்கு மரண தண்டனை கொடுக்கும் விஷயத்தில் யூதர்கள் பிலாத்துவின் அதிகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். 



இயேசுவை அவர்கள் கட்டுகிறார்கள். அவருடைய கரங்களை முதுகிற்கு பின்பாக கட்டி, குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை இழுத்துச்செல்வதுபோல, கைகளை கட்டி இயேசுவை இழுத்துச்செல்கிறார்கள். இயேசு ஏற்கெனவே மனுஷர்மீது தமது அன்பினால் கட்டப்பட்டிருக்கிறார். தெய்வீக சித்தத்தின் பிரகாரமாக இப்போது சிலுவையில் அறையப்படுவதற்கு இயேசுகிறிஸ்து தம்மையே ஒப்புக்கொடுத்திருக்கிறார். மனுஷர் மீதுள்ள அன்பின் கட்டினால், யூதர்கள் தம்மை கயிறுகளால் கட்டுவதை சகித்துக்கொள்கிறார். இயேசு மனுஷர்மீது அன்பினால் கட்டப்படவில்லையென்றால் அவர் அப்போதே தம்மை கட்டியிருக்கும் கயிறுகளை, சிம்சோனைப்போல அறுத்துப்போடுவார். 



ஆலோசனைச்சங்கத்தார் இயேசுகிறிஸ்துவைக் கட்டி பிலாத்துவினிடத்தில் கொண்டுபோகிறார்கள். இயேசுவின்மீது தாங்கள் வெற்றிபெற்றதாக நினைக்கிறார்கள். அவரோ அடிக்கப்படுவதற்கு கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டியைப்போல தமது வாயை திறவாமல், அவர்களுக்கு பின்பாக அமைதியாக போகிறார். காய்பாவின் அரண்மனையிலிருந்து பிலாத்துவின் அரண்மனை வரைக்கும் இடையிலுள்ள தூரம்  சுமார் ஒரு மைல் ஆகும். அந்த ஒரு மைல் தூரத்திற்கும் எருசலேமின் வீதிகள் வழியாக  ஆலோசனைச்சங்கத்தார் இயேசுகிறிஸ்துவை கட்டி இழுத்து வருகிறார்கள். விடியற்காலை வேளையாக இருப்பதினால் ஜனங்கள் எல்லோரும் இயேசு இழுத்துச் செல்லப்படுவதை தங்கள் கண்களால் பார்க்கிறார்கள்.



தாம் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போவதை இயேசுகிறிஸ்து  ஏற்கெனவே முன்னறிவித்திருக்கிறார். அதன் பிரகாரமாக யூதர்கள் இயேசுவை தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில்  ஒப்புக்கொடுக்கிறார்கள். இயேசுகிறிஸ்து யூதருக்கும் புறஜாதியாருக்கும் இரட்சகராக இருக்கிறார். ஆகையினால் யூதருக்கு முன்பாகவும் புறஜாதியாருக்கு முன்பாகவும் இயேசு நியாயம் விசாரிக்கப்படுகிறார். இயேசுவின் மரணத்தில் யூதரும் புறஜாதியாரும்  பங்குபெறுகிறார்கள். 



ஒரு பயங்கரமான குற்றவாளியைக் கட்டுவது போல இயேசுவைக் கட்டினார்கள். தப்பித்து ஓட முயற்சி பண்ணும் குற்றவாளிகளைத்தான் கட்டுவார்கள். ஆனால் இயேசுவோ தாமாகவே மனம் உவந்து தம்மைக் கைது பண்ணுவதற்கு ஒப்புக் கொடுத்திருந்தார். இயேசு கிறிஸ்துவின் அனுமதியில்லாமல் அவரை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. (யோவான் 18:6)



நீ யூதருடைய ராஜாவா



 இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீ சொல்லுகிறபடிபதான் என்றார் (மத் 27:11).



யூதா தேசம் ரோமப்பேரரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள ஒரு சிறிய பிரதேசமாகும். ரோமப்பேரரசார் யூதா தேசத்திற்கு பிலாத்து என்பவனை தேசாதிபதியாக நியமித்திருக்கிறார்கள். யூதருடைய பெரிய வழக்குகளையெல்லாம் இந்த தேசாதிபதியே விசாரிக்க வேண்டும். ஆலோசனைச்சங்கத்திற்கும் வழக்குகளை விசாரிக்க ஓரளவு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் ஒருவனுக்கு மரணதண்டனை கொடுக்கும் அதிகாரம் தேசாதிபதிக்கு மாத்திரமே உண்டு.  இயேசுகிறிஸ்துவுக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் அவரை தேசாதிபதிக்கு முன்பாக ஆலோசனைச்சங்கத்தார் நிறுத்துகிறார்கள். 



ஒரு நியாயாதிபதிக்கு முன்பாக சிறைக்கைதி நிற்பதுபோல இயேசு தேசாதிபதியாகிய பிலாத்துவுக்கு முன்பாக நிற்கிறார். இயேசுகிறிஸ்து நமக்காக பாவமானார். நமக்காக கல்வாரி சிலுவையில் தம்முடைய ஜீவனையே ஒப்புக்கொடுத்தார். அவர் நமக்காக மரித்து தமது இரத்தத்தை நமது மீட்பின் கிரயமாக செலுத்தவில்லையென்றால், நமது பாவத்தின் நிமித்தமாக நம்மால் தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக ஒருபோதும் நிற்கமுடியாது. நாம் பாவத்திலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என்பதற்காக அவர் பாவமானார். நாம் விடுதலை பெறவேண்டும் என்பதற்காக அவர் கட்டப்பட்டிருக்கிறார். 



தேசாதிபதியாகிய பிலாத்து இயேசுவை நோக்கி ""நீ யூதருடைய ராஜாவா'' என்று கேட்கிறான். அக்காலத்தில் கிறிஸ்து என்பவர்  யூதருடைய ராஜா என்னும் நம்பிக்கை யூதர்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்தது. கிறிஸ்துவாகிய அந்த ராஜா ரோமப்பேரரசின் பிடியிலிருந்து யூதர்களை விடுவித்து, யூதருக்கென்று ஒரு  தனிராஜ்யத்தை ஸ்தாபிப்பார் என்று ஜனங்கள் நம்பினார்கள். அவர்கள் தேசாதிபதிக்கு முன்பாக இயேசுவை கிறிஸ்து என்று குற்றம்சாட்டி, அவர் தம்மை யூதருக்கு ராஜாவாக்க முயற்சிபண்ணுகிறார் என்று பிராது பண்ணுகிறார்கள். ஒருவர் தன்னை யூதருக்கு ராஜாவாக விளம்பரம்பண்ணும்போது அவர் ரோமப்பேரரசின் நுகத்தை எதிர்க்ககவேண்டும்.  யூதருக்கு ராஜா என்று கூறிக்கொள்கிறவரை ரோமப்பேரரசார் தேசத்துரோகி என்று தீர்மானம்பண்ணி அவருக்கு மரண தண்டனை கொடுத்துவிடுவார்கள். 



இயேசு தம்மை கிறிஸ்து என்று கூறுவதினால், அவர் தம்மை யூதருக்கு ராஜாவாக்க முயற்சி பண்ணுகிறார் என்று ஆலோசனைச்சங்கத்தார் தேசாதிபதியிடம் கூறுகிறார்கள். தேசாதிபதி ரோமப்பேரரசுக்கு உண்மையுள்ளவராக நடந்துகொள்ளவேண்டும். ரோமப்பேரரசின் ஆளுகைக்கு விரோதமாக எழும்பும் கலகங்களையும், சதி ஆலோசனைகளையும் கண்டுபிடித்து அழித்துப்போடவேண்டும். யூதா தேசம் ரோமப்பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கவேண்டும் என்பதும், யூதா தேசத்திற்கென்று தனியாக ஒரு ராஜா இருக்கக்கூடாது என்பதும், ரோமப்பேரரசின் ராயனே யூதாதேசத்திற்கும் ராஜாவாக இருக்கவேண்டும் என்பதும் ரோமப்பேரரசின் அரசியல் கொள்கையாகும். இயேசுகிறிஸ்து தம்மை கிறிஸ்து என்று கூறி, யூதருக்கு ராஜா என்று அறிக்கை செய்தால், அவர் ரோமப்பேரரசிற்கு எதிராக கலகம் செய்வதாக பொருள்படும். இதை உறுதிபண்ணுவதற்காகவே  தேசாதிபதி இயேசுவிடம் ""நீ யூதருடைய ராஜாவா'' என்று கேட்கிறான். 



இயேசுகிறிஸ்து தேசாதிபதிக்கு பிரதியுத்தரமாக ""நீர் சொல்லுகிறபடிதான்'' என்று பதில் கூறுகிறார். தேசாதிபதி நினைப்பதுபோல இயேசுகிறிஸ்து இந்த பூமிக்குரிய ராஜா அல்ல. அவர் ராஜாதி ராஜா. கர்த்தாதி கர்த்தா. இயேசுகிறிஸ்து யூதருடைய ராஜாவாக இருப்பாரோ என்று பிலாத்து சந்தேகப்படுகிறான். தன் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காகவே ""நீ யூதருடைய ராஜாவா'' என்று இயேசுவிடம் கேட்கிறான். தேசாதிபதி நினைப்பதுபோல இயேசு யூதருடைய ராஜா அல்ல. ஆயினும் அவனுக்கு பிரதியுத்தரம் கூறும்போது ""நீர் சொல்லுகிறபடிதான்'' என்று கூறி, இயேசு தமது தெய்வீக ஆளுகையை வெளிப்படுத்துகிறார்.



பிலாத்தின் ஆச்சரியம்



பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான் (மத் 27:12-14).



பிரதான ஆசாரியரும் மூப்பரும் இயேசுவின்மீது குற்றம்சாட்டுகிறார்கள். இயேசுவின்மீது பிலாத்து ஒரு குற்றமும் காணவில்லை. இயேசுவின்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் சரியாக நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாததினால் பலவந்தத்தினாலும், பெருத்த சத்தத்தினாலும், அமளியினாலும், கூக்குரலினாலும்

 தங்களுடைய வழக்கை நியாயப்படுத்தவேண்டுமென்று பிரதான ஆசாரியரும் மூப்பரும் தீர்மானம்பண்ணுகிறார்கள். 



பிரதான ஆசாரியரும் மூப்பரும் இயேசுவின்மேல் குற்றம் சாட்டுகையில் அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அவர்களுடைய குற்றச்சாட்டில் உண்மை எதுவுமில்லை என்பது இயேசுவுக்கு நன்றாக தெரியும். இயேசு உண்மையை எடுத்துக்கூறினாலும் அதை அவர்கள் அங்கீகரிக்கமாட்டார்கள். ஆகையினால் இயேசு அவர்களோடு விவாதம்பண்ணவில்லை. பிதாவின் சித்தத்திற்கு தாம் ஒப்புக்கொடுக்க வேண்டிய தம்முடைய வேளை வந்துவிட்டது என்பதை அறிந்து இயேசு ஒரு வார்த்தையும் அவர்களுக்கு மாறுத்தரமாக சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். தம்முடைய சித்தமல்ல, பிதாவின் சித்தம் நிறைவேறட்டும் என்று அமைதியாக காத்துக்கொண்டிருக்கிறார். 



இயேசு அமைதியாக இருப்பது பிலாத்துவிற்கு ஆச்சரியமாக இருக்கிறது. பிலாத்து இயேசுவை நோக்கி ""இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களை சாட்டுகிறார்களே, நீ அவைகளை கேட்கவில்லையா'' என்று கேட்கிறான். ஆனால் இயேசுவோ அப்போதும் ஒரு வார்த்தையும் மாறுத்தரமாக சொல்லவில்லை. பிலாத்துவிற்கு இயேசுவின்மேல் விரோதமோ குரோதமோயில்லை. உண்மையில் இந்த வழக்கில் எது நீதியானது, நியாயமானது என்பதை தெரிந்துகொள்ள பிலாத்து விரும்புகிறான். ஆனால் இயேசுவோ ஒரு மாறுத்தரமும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்படுகிறான். அவர் அமைதியாக இருப்பதைப்பார்த்து மிகுந்த ஆச்சரியப்படுகிறான்.  



இயேசு அமைதியாக இருப்பதைப்பார்த்து பிலாத்து கோபப்படவில்லை. தான் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு வார்த்தையும் பிரதியுத்தரமாக கூறாத இயேசுவின்மீது மூர்க்கவெறி கொள்ளவில்லை. கைதிகள் விசாரிக்கப்படும்போது பொதுவாக அவர்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள். தங்களுடைய நியாயத்தை முடிந்தவரையிலும் எடுத்துக்கூறுவார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ ஒன்றும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பிலாத்துவின் அரண்மனையில் இதுபோன்ற விசாரணை இதற்கு முன்பு நடைபெற்றதேயில்லை. எல்லாம் புதுமையாக இருக்கிறது. இயேசு தமக்கு ஆதரவாக ஒரு வார்த்தையும் பேசாமல் இருப்பதை பிலாத்து பார்த்து மிகுந்த ஆச்சரியமடைந்தான். 

ஏரோது இயேசுவிடம் கேள்வி கேட்கிறான்

லூக்கா 23:6-12.



ஏரோதுவின் விசாரணை



கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து,  அவர் ஏரோதின் அதிகாரத்துக்குள்ளானவர் என்றறிந்து, அந்நாட்களில் எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான். ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பி யிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு, அநேக காரியங்களைக்குறித்து அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொழியாகஅவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.  பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவர்மேல் பிடிவாதமாய்க் குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்றார்கள்.  அப்பொழுது ஏரோது தன் போர்ச்சேவகரோடுகூட அவரை நிந்தித்துப் பரியாசம்பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.  முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் சிநேகிதரானார்கள்  (லூக் 23:6-12).



பிரதான ஆசாரியர்களும் ஜனங்களும் இயேசுகிறிஸ்துவின்மீது குற்றம் சுமத்துகிறபோது அவர் கலிலேயா நாடு தொடங்கி ஜனங்களை  கலகப்படுத்துவதாக கூறுகிறார்கள். பிலாத்து கலிலேயா என்பதைக் கேட்டபோது, இயேசுகிறிஸ்து ஒரு கலிலேயன் என்பதை விசாரித்து அறிந்துகொள்கிறான். ஏரோது கலிலேயா தேசத்தின் தேசாதிபதியாக ஆட்சிபுரிகிறான். ரோமப்பேரரசின் சட்ட அதிகாரத்தின்படி இயேசுகிறிஸ்து கலிலேயா சேதத்தைச் சேர்ந்தவராக இருப்பதினால் அவர்  ஏரோதின் அதிகாரத்திற்குள்ளானவர். ஆகையினால் பிலாத்து இவரை விசாரிக்காமல்,  கலிலேயா தேசத்தின் தேசாதிபதியாகிய ஏரோதுவினிடத்திற்கு இயேசுகிறிஸ்துவை அனுப்புகிறான். பிலாத்து இயேசுகிறிஸ்துவை விசாரிக்கு இந்த சமயத்தில், ஏதோ ஒரு வேலையாக, அந்நாட்களில் ஏரோது எருசலேமுக்கு வந்திருக்கிறான். எவ்வித சிரமமுமில்லாமல் எருசலேமில் தற்சமயத்தில் தங்கியிருக்கும் ஏரோதுவினிடத்திற்கு இயேசுகிறிஸ்துவை அனுப்பி, இயேசுகிறிஸ்துவை விசாரிக்கும் பிரச்சனையிலிருந்து பிலாத்து தன்னை விலக்கிக் கொள்ள விரும்புகிறான்.



ஆனால் ஏரோதுவோ இயேசுகிறிஸ்துவை  விசாரிக்க வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறான். இயேசுவைக் குறித்து  அநேக காரியங்களை ஏரோது ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறான். அத்துடன் அவரால் செய்யப்படும் அடையாளத்தை பார்க்க வேண்டும் என்றும் விரும்புகிறான். இதற்காக அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருக்கிறான்.



பிலாத்து இயேசுகிறிஸ்துவை ஏரோதுவினிடத்தில் அனுப்புகிறான். ஏரோது இயேசுவைக் கண்டபோது மிகவும் சந்தோஷப்படுகிறான். அவர் எப்படிப்பட்டவரோ என்பதை பார்க்கும் ஆசை ஏரோதுவின் உள்ளத்தில் இருக்கிறது. தன்னுடைய கலிலேயா தேசத்தில் இயேசுகிறிஸ்துவைப்பற்றி ஏராளமான வார்த்தைகளை ஏரோது கேள்விப்பட்டிருக்கிறான். அவர் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்கிறவரானபடியினால், தனக்காக அவர் ஒரு அற்புதம் செய்து காண்பிப்பார் என்று ஏரோது எதிர்பார்க்கிறான். இதற்காக அநேக காரியங்களைக் குறித்து இயேசுகிறிஸ்துவினிடத்தில் ஏரோது விசாரிக்கிறான். ஆனால் இயேசுகிறிஸ்துவோ மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. அவனுடைய விருப்பத்தின் பிரகாரமாக இயேசுகிறிஸ்து அவனுக்காக எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. 



ஒரு சமயம் வழியருகே பிச்சைக்கேட்டுக்கொண்டிருந்த குருடன் ஒருவன்  இயேசுகிறிஸ்துவிடம் ஒரு அற்புதம் செய்து தனக்கு பார்வை உண்டாக்குமாறு கேட்டுக்கொண்டான். இயேசுகிறிஸ்து அவனுடைய விண்ணப்பத்தை மறுக்கவில்லை. அவனுடைய விண்ணப்பத்தை ஏற்று, அற்புதம் செய்து அவனுக்குப் பார்வை கொடுத்தார். ஆனால் சிங்காசனத்தில்  வீற்றிருக்கும் ஏரோது, உள்ளத்தில் பெருமையோடு, இயேசுவை ஒரு அற்புதம் செய்யுமாறு கேட்கிறான். ஆனால் இயேசுகிறிஸ்துவோ அவனுக்கு ஒரு அற்புதமும் செய்யவில்லை. 



கலிலேயா தேசத்தில், இயேசுகிறிஸ்துவையும், அவருடைய அற்புதமான செய்கைகளையும் அவன் விரும்பியிருந்தால் அங்கே பார்த்திருக்கலாம். ஆனால் ஏரோது அதை விரும்பவில்லை. கலிலேயா தேசத்தில் இயேசுவின் அற்புதத்தை காணவில்லை. இப்போதோ எருசலேமில் இயேசுவின் அற்புதத்தை பார்க்க வேண்டுமென்று விரும்புகிறான். ஆனால் அவனால் பார்க்க முடியவில்லை. உண்மையான மனதோடு இயேசுகிறிஸ்துவை ஆராதிக்கிறவர்கள் மாத்திரமே அவரை தரிசிப்பார்கள். இருதயத்தில் பெருமையோடு, வீண் சிந்தையோடு தேவனை ஆராதிக்கிறவர்கள் அவரை தரிசிக்கமாட்டார்கள். 



இயேசுகிறிஸ்து அற்புதங்களையும் அடையாளங்களையும் தேவநாம மகிமைக்காகவே செய்கிறார். அற்புதங்களை நாம் எளிதாக நினைக்கக்கூடாது. ஏளனம் பண்ணக்கூடாது. தேவன் சர்வவல்லமையுள்ளவர். நாம் கேட்கும் போதெல்லாம் அவர் நமக்குக் கீழ்ப்படிந்து,  நமக்கு  அற்புதம் செய்வார் என்று எதிர்பார்க்கக்கூடாது.  ஏரோது கலிலேயா தேசத்திற்கு தேசாதிபதியாக இருந்தாலும், இயேசுகிறிஸ்துவின் அற்புதம் செய்யும் வல்லமைக்கு அவன் தேசாதிபதியல்ல.  இயேசுகிறிஸ்துவின் சர்வவல்லமையை ஏரோதுவினால் ஆளுகை செய்ய முடியாது. 



ஏரோதுவுக்கு முன்பாக இயேசுகிறிஸ்து நின்று கொண்டிருக்கிறார். அப்போது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவர்மேல் பிடிவாதமாய் குற்றம் சாட்சிக்கொண்டே நிற்கிறார்கள். ஆலோசனைச்சங்கத்தாரின் பிடிவாதம் சிறிதும் குறையவில்லை. இயேசுகிறிஸ்துவின்மீது குற்றம் சுமத்தி அவரை மரணத்திற்குட்படுத்த வேண்டுமென்பதில் வைராக்கியமாக இருக்கிறார்கள். 



ஏரோதுவுக்கும் இயேசுவின்மீது கோபம் உண்டாயிற்று. ஏனெனில் ஏரோது அநேக காரியங்களைக் குறித்து இயேசுகிறிஸ்துவிடம் வினவுகிறான். அவரோ மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. பிரதான ஆசாரியரும் இயேசுவின்மேல் பிடிவாதமாய் குற்றம் சாட்டிக்கொண்டே நிற்கிறார்கள். கோபமடைந்த ஏரோது தன் போர்ச்சேவகரோடேகூட இயேசுகிறிஸ்துவை நிந்தித்து பரியாசம் பண்ணுகிறான். நிந்தித்து பரியாசம்பண்ணுதல் என்னும் வார்த்தைக்கு இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு வல்லமையும் இல்லை  என்பதை  காண்பித்தல் என்று பொருளாகும். இயேசுகிறிஸ்து தன்னுடைய அற்புதம் செய்யும் வல்லமையையெல்லாம் இழந்துவிட்டார் என்று  அவரை ஏளனம்பண்ணி நிந்தித்து பரியாசம் பண்ணுகிறார்கள். கலிலேயாவில் அவர் அற்புதம் செய்தாலும், இப்போது ஏரோதுக்கு முன்பாக அவரால் ஒரு அற்புதமும் செய்யமுடியவில்லை என்றும், சாதாரண மனுஷனைப்போல அவர் இப்போது பலவீனமாக இருப்பதாகவும் அவரை நிந்தித்து பரியாசம்பண்ணுகிறான். 



பிலாத்துவைவிட ஏரோது இயேசுகிறிஸ்துவை அதிகமாக நிந்தித்து பரியாசம்பண்ணுகிறான். இயேசுகிறிஸ்துவை ஒரு ராஜா போல வேடம் அணியச்செய்ய வேண்டுமென்று நினைத்து அவருக்கு மினுக்கான வஸ்திரத்தை உடுத்துகிறான். இந்த வஸ்திரத்தோடே இயேசுவை பிலாத்துவினிடத்திற்கு திரும்ப அனுப்புகிறான்.  இயேசுகிறிஸ்துவை இந்த மினுக்கான வஸ்திரத்தில் பிலாத்துவின் போர்ச்சேவகர்கள்  பார்க்கும்போது, அவர்களும் அவரை நிந்தித்து பரியாசம் பண்ணுவார்கள் என்று எதிர்பார்க்கிறான். 



இதுவரையிலும் பிலாத்துவும் ஏரோதுவும்  ஒருவருக்கொருவர் பகைவராயிருந்தார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவை ஏரோது பிலாத்துவினிடத்தில் மறுபடியும் திருப்பி அனுப்பின அன்றையதினம் இருவரும் சிநேகிதராகிறார்கள். ஏரோது இயேசுகிறிஸ்துவை ஒரு தேசத்துரோகி என்று குற்றம் சுமத்தவில்லை. இயேசுகிறிஸ்து கலிலேயா தேசத்தவராக இருக்கிறபோதிலும், அவர் தன்னுடைய அதிகாரத்திற்கு உள்ளானவராக இருக்கிறபோதிலும், ஏரோது இயேசுவின்மீது ஒரு குற்றமும் சுமத்தவில்லை. அவரை திரும்ப பிலாத்துவினிடத்திற்கு அனுப்புகிறான். 



தன்னிடத்தில் அனுப்பப்பட்ட குற்றவாளியை, ஏரோது தண்டிக்காமல், தனக்கு மரியாதை கொடுத்து அவன் தன்னிடமே திருப்பி அனுப்பியதை நினைத்து, பிலாத்து ஏரோதுவின்மீது பிரியப்படுகிறான்.  இதுவரையிலும் இருவரும் பகைஞராக இருந்தார்கள். இப்போதோ அவன் இயேசுகிறிஸ்துவை திருப்பி அனுப்பியதினால் அவர்கள் இருவரும் தங்கள் பகையை மறந்து  சிநேகிதர்களாகிவிடுகிறார்கள். இயேசுகிறிஸ்துவை விசாரிக்கும் பொறுப்பில்  இருவரும் பங்கு பெற்றதினால், இருவரும் சிநேகிதராகிறார்கள். பொதுவான காரியத்தில்  இருவர் ஈடுபடும்போது, அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஒத்துப்போனால்தான் தாங்கள் ஈடுபட்டுள்ள காரியத்தை சிறப்பாக செய்து நிறைவேற்ற முடியும். 



ஏரோதுவும் பிலாத்தும் இதற்கு முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்தார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். ரோமப்பேரரசருக்கு முன்பாக இவர்கள் இருவரும்  ஒருவருக்கு விரோதமாக மற்றொருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருந்தார்கள். இதுவரையிலும் பகைஞராக இருந்த இவர்கள் இருவரும் இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாக ஒன்று சேருகிறார்கள். இயேசுகிறிஸ்து சமாதானம் பண்ணுகிறவர். இயேசுகிறிஸ்துவிடத்தில் இவர்கள் இருவருமே ஒரு குற்றமும் காணவில்லை. இயேசுகிறிஸ்து குற்றமற்றவர் என்னும் எண்ணம் பிலாத்துவின் உள்ளத்திலும்  ஏரோதுவின் உள்ளத்திலும் இருக்கிறது. இந்த பொதுவான எண்ணம் அவர்கள் இருவருடைய உள்ளங்களிலுமிருந்த பகையை நீக்கிற்று. இயேசுகிறிஸ்து இருக்கும் இடத்தில் சமாதானம் இருக்கும். 



ஏரோது என்பவன் கலிலேயாவின் ஆளுநரான ஏரோது அந்திபாஸ். இவன் யோவான் ஸ்நானனைச் சிரச்சேதம் பண்ணினவன். பஸ்கா ஆசரிப்பதற்காக ஏரோது எருசலேமிற்கு வந்திருக்கிறான். குற்றமில்லாத ஒரு மனுஷனைக் கொல்லும் பொறுப்பிலிருந்து தப்பிப்பதற்கு பிலாத்து எடுத்துக் கொண்ட முதலாவது முயற்சி. ஏரோது ஒரு கலிலேயன். ஒருவேளை ஏரோது இயேசுவைத் தண்டித்தாலும் தண்டிப்பான். விடுதலை பண்ணினாலும் விடுதலை செய்வான். இயேசு கிறிஸ்துவை விடுதலை பண்ணுவதற்கு மேலும் மூன்று முறை முயற்சி பண்ணுகிறான். ஒவ்வொரு முறையும் இயேசுவிடத்தில் குற்றமில்லை என்பதை அறிக்கை செய்கிறான். 



ஏரோது இயேசுவைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டான். ஏரோது அடுத்த முறை இயேசுவைப் பார்க்கும்போது, மிகுந்த வருத்தமடைவான். தன்னுடைய பாவங்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பைப் பெற்றுக் கொள்வான். நித்திய ஆக்கினையிலிருந்து இயேசு கிறிஸ்துவால் தன்னை விடுவிக்க முடியும் என்று அப்போது நினைப்பான். ஏரோதுவினுடைய முழங்கால்களும் எல்லா முழங்கால்களும், கர்த்தருக்கு முன்பாக முடங்கும்.  



இயேசுவைக் காணும்படி வெகுநாளாய் ஏரோது ஆசைப்பட்டுக் கொண்டிருந்தான்.  இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்தான். அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்க வேண்டுமென்று ஏரோது விரும்பினான். அதனால் அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். இயேசுவைப் பரியாசம் பண்ணியதற்காக அவனுடைய நியாயத்தீர்ப்பு நாளில் ஏரோது மிகுந்த வேதனைப்படுவான்.



இயேசுகிறிஸ்துவால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று ஏரோது விரும்பினான். இயேசுகிறிஸ்து அற்புதங்களைச் செய்கிறவர் என்பது ஏரோதுவிற்கு நன்றாக தெரிந்திருந்தது. இருந்தாலும் பரிசேயரைப் போல அவன் இயேசுவைப் பரியாசம் பண்ணினான். இயேசு கிறிஸ்து பல அற்புதங்களைச் செய்தார். மனுஷருக்கு உதவி செய்ய வேண்டுமென்பதற்காகவே அவர் அற்புதங்களைச் செய்தார். மனுஷரைத் திருப்திப்படுத்துவதற்காக அவர் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நாம் விசுவாசத்தோடு ஜெபிக்கும்போது அவர் இன்றும் நம் மூலமாக அற்புதங்களைச் செய்கிறார்.   



 இயேசுவே மேசியா என்பதை உறுதிபண்ணுவதற்கு ஏரோது ஒரு அடையாளத்தைக் காணவேண்டுமென்று விரும்பினான். இயேசு கிறிஸ்து ஏற்கெனவே பல அற்புதங்கள் மூலமாகவும், அடையாளங்கள் மூலமாகவும் தாமே மேசியா என்பதை நிரூபித்திருக்கிறார். மூன்று வருஷ காலமாக அவன் இயேசு கிறிஸ்து செய்த காரியங்களைக் கேட்டறிந்து, மனந்திரும்பியிருந்திருக்கலாம். தனக்குக் கிடைத்த எல்லா வாய்ப்புக்களையும், ஏரோது தவறவிட்டுவிட்டான். அவனொரு மாய்மாலக்காரன். இயேசு கிறிஸ்துவிற்கு அவனுடைய மாய்மாலம் நன்றாகத் தெரிந்திருந்தது. ஆகையினால் இயேசு கிறிஸ்து மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. (லூக்கா 23:9).



பிரதான ஆசாரியரும் வேதபாரகரும்  இயேசுகிறிஸ்துவின்மேல் பிடிவாதமாய்க் குற்றஞ்சாட்டிக் கொண்டே நின்றார்கள். இயேசு கிறிஸ்து ஒரு பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் தம்மீது குற்றம் சாட்டுவதற்கு அனுமதிக்கிறார். 



ஏரோது தன் போர்ச்சேவகரோடுகூட  இயேசுகிறிஸ்துவை நிந்தித்துப் பரியாசம்பண்ணினான். இயேசு கிறிஸ்துவைப் பரியாசம்பண்ணி, அவரைப் பிலாத்துவிடம் திருப்பி அனுப்பி விட்டான். இயேசு கிறிஸ்து பரியாசம் பண்ணப்பட்டபோது, யூதருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும். 



மினுக்கான வஸ்திரம் என்பது  வெள்ளைநிற வஸ்திரமாகும். ரோமாபுரியில் தலைவர்கள் அணியும் வெள்ளைநிற வஸ்திரம். ஏரோது இயேசுவைப் பரியாசம் பண்ணுகிறான்.  இயேசு கிறிஸ்து தேவனுடைய ராஜ்ஜியத்தைப் பற்றிக் கூறியதினால் அவரை ஒரு ராஜாவாக பரியாசம்பண்ணி, மினுக்கான வெள்ளை வஸ்திரத்தை இயேசு கிறிஸ்துவிற்கு உடுத்துகிறான்.



இயேசு கிறிஸ்துவிற்கு மரண தண்டனை கொடுப்பதற்கு எந்த காரணத்தையும் ஏரோதுவினால் கண்டுபிடிக்க முடியவில்லை. இயேசு கிறிஸ்து ஒரு குற்றமும் செய்யவில்லை என்பது மறுபடியுமாக நிரூபணமாகிறது. யூதேயாவின் ஆட்சியாளரும், கலிலேயாவின் ஆட்சியாளரும், இயேசுகிறிஸ்துவிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை. ஆகையினால் இயேசு கிறிஸ்துவிற்கு மரணதண்டனை கொடுக்கக்கூடாது. இருந்தாலும் தேவனுடைய தெய்வீக சித்தம் ஏற்கெனவே வெளிப்படுத்தப் பட்டுவிட்டது. ஜனங்களின் பாவத்திற்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்க வேண்டும். இது தேவனுடைய சித்தம். 



முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் சிநேகிதரானார்கள்.  பிலாத்து கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளில் கலந்தான். இதனால் கலிலேயனாகிய ஏரோதுவும், பிலாத்துவும் பகைவரானார்கள்.             (லூக்கா 13:1-2)



இயேசுவை மறுபடியும் பிலாத்துவிடம் அழைத்து வருகிறார்கள் 


மத்தேயு 27:15-26 ; மாற்கு 15:6-15 ; லூக்கா 23:13-25 ; யோவான் 18:39-19:16




நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும்



பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடி வரச்செய்து,  அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை (லூக் 23:13,14).   



இயேசுகிறிஸ்துவின்மீது பிரதான ஆசாரியர்களும், தேவாலயத்தின் அதிகாரிகளும் ஜனங்களும் பலவிதமான குற்றச்சாட்டுக்களை கூறுகிறார்கள். அவர்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் பிலாத்து இயேசுகிறிஸ்துவினிடத்தில் காணவில்லை. மரணத்திற்கு பாத்திரமாக இயேசுகிறிஸ்து 

எந்த ஒரு தவறும் செய்யவில்லையென்று அறிவிக்கிறான். தன் உள்ளத்தில் இயேசுகிறிஸ்து குற்றம் செய்யாத நிரபராதி என்று உறுதியாக நம்பினால், அவன் உடனடியாக இயேசுகிறிஸ்துவை விடுதலைபண்ண வேண்டும். ஆனால் இந்த பிலாத்துவோ தன் சுபாவத்தில் மோசமானவன்.  இயேசுகிறிஸ்துவின்மீது இவனுக்கு அன்போ, இரக்கமோ, கரிசனையோயில்லை. இயேசுகிறிஸ்துவுக்கு சாதகமாக ஏதாவது செய்துவிட்டால், ஜனங்கள் தன்மீது கோபப்படுவார்களோ என்று பயப்படுகிறான். 



ஜனங்களுக்குப் பயப்படுகிறதினால், இயேசுகிறிஸ்துவை தன்னிடத்தில் ஒப்புக்கொடுத்த பிரதான ஆசாரியர்களையும், தேவாலயத்தின் அதிகாரிகளையும், ஜனங்களையும் கூடிவரச்செய்கிறான். தன்னுடைய மனதில் தான் நினைப்பதைப்பற்றி  ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை  பிலாத்து அறிய விரும்புகிறான். ""இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டு வந்தீர்கள்'' என்றும், ""நான் உங்களுக்கு முன்பாக இயேசுகிறிஸ்துவை விசாரித்தேன்'' என்றும் ஜனங்களுக்கு முன்பாக அறிவிக்கிறான். இயேசுகிறிஸ்துவின்மீது இவர்கள் பலவிதமான குற்றச்சாட்டுக்களை கூறுகிறார்கள். ஆனால் இயேசுவை தான் விசாரித்தபோதோ அவர்கள் சாட்டுகிற குற்றங்களை ஒன்றையும், தான் அவரிடத்தில் காணவில்லையென்று அறிவிக்கிறான். ""நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும், நான் இவனிடத்தில் காணவில்லை'' என்பது பிலாத்துவின் தீர்ப்பாகும். 



இயேசுகிறிஸ்துவிடம் ஒரு குற்றமும் காணவில்லை என்று பிலாத்து இரண்டாம் முறையாக அறிக்கை செய்கிறான். கலிலேயாவின் தேசாதிபதியாகிய ஏரோதும், இயேசுவின்மீது ஒரு குற்றமும் சுமத்தவில்லை என்று பிலாத்து கூறுகிறான். (லூக்கா 23:4,13-15) பிலாத்து இப்போது இயேசுவை விடுவிக்கத் திட்டமிடுகிறான். இயேசுவை இன்னும் கொஞ்சம் தண்டித்தால் ஜனங்கள் திருப்தியடைந்து விடுவார்கள் என்று நினைத்தான். ஆனால் அவனுடைய எண்ணம் தவறு. இயேசுவை எப்படியும் கொல்ல வேண்டுமென்று ஜனங்கள் தீர்மானமாக இருந்தார்கள். அதன்பின்பு, இயேசுவை விடுதலை பண்ண வேண்டுமா அல்லது பரபாசை விடுதலைபண்ண வேண்டுமா என்று கேட்கிறான்.  ஒருவேளை இயேசுவை விடுதலை பண்ண வேண்டும், குற்றவாளியாகிய பரபாசை கொல்ல வேண்டும் என்று ஜனங்கள் கூறுவார்கள் என்று நினைத்தான். மறுபடியும் அவனுடைய எண்ணம் தவறாகிவிட்டது.



தண்டித்து விடுதலையாக்குவேன்



 உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.  ஆனபடியால் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.  பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது அவசியமாயிருந்த படியால் அப்படிச் சொன்னான் 

 (லூக் 23:15-17).  



தன்னுடைய முடிவை உறுதிபண்ணுவதற்காக பிலாத்து ஏரோதுவைப்பற்றியும் பேசுகிறான். ""உங்களை ஏரோதினிடத்திற்கும்  அனுப்பினேன்'' என்று கூறுகிறான். ஏரோதும் இயேசுகிறிஸ்துவினிடத்தில்  குற்றம் காணவில்லை. இயேசுகிறிஸ்து மரணத்திற்கேதுவான குற்றம் எதுவும் செய்யவில்லை என்பது ஏரோதுவின் கருத்து.  ஏரோது இயேசுகிறிஸ்துவை நிந்தித்து பரியாசம்பண்ணினான். அவருக்கு மினுக்கான வஸ்திரத்தை உடுத்தினான். அதேவேளையில்  மரணத்துக்கேதுவான இயேசுகிறிஸ்து ஒன்றும் செய்யவில்லையென்று ஏரோது தீர்மானம்பண்ணி, அவரை பிலாத்துவிடம் மறுபடியும் அனுப்பிவிடுகிறான். 



இயேசுகிறிஸ்துவை விடுதலைபண்ணி விடலாமென்று பிலாத்து ஆலோசனை கூறுகிறான். அதே வேளையில், தன்னுடைய ஆலோசனைக்கு ஆலோசனைச்சங்கத்தார் ஒப்புதல் தரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறான். பிலாத்து விரும்பினால் ஆலோசனைச்சங்கத்தாரின் ஒப்புதல் இல்லாமலேயே, தன்னுடைய விருப்பப்படி  இயேசுகிறிஸ்துவை விடுதலை செய்துவிடலாம். ஆனால் பிலாத்துவோ ஆலோசனைச்சங்கத்தாருக்குப் பயப்படுகிறான்.  இவன் மனுஷருக்குப் பயப்படுவதினால் இப்படிப்பட்ட கண்ணியில் சிக்கிக்கொள்கிறான்.  ஆலோசனைச்சங்கத்தார் இயேசுகிறிஸ்துவுக்கு  அநியாயம் செய்வார்கள் என்று பிலாத்துவுக்குத் தெரியும். தெரிந்திருந்தும் அவர்களை சந்தோஷப்படுத்த விரும்புகிறான். 



பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை விடுதலையாக்குவது பல வருஷங்களாக நடைபெற்று வரும் வழக்கம். இயேசுகிறிஸ்துவை குற்றவாளியென்று தீர்மானம் செய்தாலும், பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒரு குற்றவாளியை விடுதலை செய்யும் வழக்கத்தின் பிரகாரம், இயேசுகிறிஸ்துவை விடுதலை செய்துவிடலாம் என்று ஆலோசனை கூறுகிறான். இயேசுவை விடுதலை செய்வதற்கு முன்பாக அவரை தண்டிக்கலாமென்றும் கருத்து கூறுகிறான். இயேசுகிறிஸ்துவிடத்தில் ஒரு குற்றமும் காணாதபோது அவரை தண்டிக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை.



பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும்



 ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக் கேட்டார்கள்.  அந்த பரபாசென்பவன் நகரத்தில் நடந்து ஒரு கலக்கத்தினிமித்தமும் கொலை பாதகத்தினிமித்தமும் காவ-லே வைக்கப்பட்டிருந்தான்  (லூக் 23:18,19). 



இந்த பண்டிகை நாளில் இயேசுகிறிஸ்துவை விடுதலைபண்ணுமாறு கேட்டுக்கொள்ள ஆலோசனைச்சங்கத்தாருக்கு இஷ்டமில்லை. இயேசுவை விடுதலை பண்ணுவதற்குப் பதிலாக பரபாசை விடுதலைபண்ணுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.  பரபாஸ் ஒரு கொலைகாரன். நகரத்தில்         நடந்த  ஒரு கலகத்தினிமித்தமும், கொலைபாதகத்தினிமித்தமும்  இந்த பரபாஸ் காவலிலே வைக்கப்பட்டிருக்கிறான். இவன் இப்படிப்பட்ட துன்மார்க்கனாக இருக்கிற போதிலும், ஜனங்கள் இயேசுகிறிஸ்துவை விடுதலைபண்ணுவதற்குப் பதிலாக, பரபாசை விடுதலைபண்ணுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை அகற்றும் என்று சத்தமிட்டுக் கேட்கிறார்கள். அகற்றும் என்னும் வார்த்தைக்கு அவருக்கு மரணதண்டனை கொடுத்து கொன்றுபோடும் என்று பொருள்.  



ஜனங்கள் எல்லாரும் மொத்தமாக சத்தமிட்டு, கேட்கிறார்கள். பிலாத்து குழம்பி விடுகிறான். தனது தீர்மானத்தை மாற்றிக் கொள்கிறான். பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான். ஆனால் ஜனங்களோ பிலாத்துவிற்குச் செவிசாய்க்க வில்லை. 



சிலுவையில் அறையும்



 பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.  அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள் (லூக் 23:20,21). 



இயேசுகிறிஸ்துவை எப்படியாவது விடுதலைபண்ணிவிட வேண்டுமென்று பிலாத்து விரும்புகிறான். இதற்காக அவன் மறுபடியும் ஜனங்களிடம் இயேசுகிறிஸ்துவை விடுதலை பண்ணலாமென்று ஜனங்களிடம் பேசிப்பார்க்கிறான். ஆனால் அவர்களோ ""அவனை சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்'' என்று கூக்குரலிடுகிறார்கள். இயேசுகிறிஸ்துவை எப்படியாவது சிலுவையில் அறைந்து கொன்றுவிட வேண்டுமென்று இவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள். 



சத்தம் மேற்கொண்டது



 அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.   அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள்          உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது 

 (லூக் 23:22,23).



பிலாத்து மூன்றாந்தரமும் ஜனங்களிடம் பேசுகிறான். இயேசுகிறிஸ்துவை எப்படியாவது விடுதலை செய்துவிட வேண்டுமென்று விரும்புகிறான். ஏனெனில் மரணத்திற்கேதுவான குற்றம் ஒன்றும் இயேசுகிறிஸ்துவினிடத்தில் பிலாத்து காணவில்லை. குற்றமற்ற ஒருவருக்கு மரணதண்டனை கொடுத்து அதனால் உண்டாகும் பாவபழிக்கு பிலாத்து உடன்பட விரும்பவில்லை. ஜனங்கள் கூக்குரலிட்டுக்கொண்டிருந்தாலும் பிலாத்து அவர்களிடம் ""ஏன் இவன் என்ன பொல்லாப்பு செய்தான்'' என்று கேட்கிறான். இயேசுகிறிஸ்து செய்த குற்றத்தை தன்னிடம் கூருமாறு கூறுகிறான்.  ""மரணத்திற்கேதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே, ஆகையால் நான் இவனை தண்டித்து விடுதலையாக்குவேன்'' என்று பிலாத்து தன்னுடைய கருத்தை கூறுகிறான்.



ஆனால் அவர்களோ உரத்த சத்தத்தோடே பிலாத்துவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுவரையிலும்  இயேசுகிறிஸ்துவின்மீது குற்றம் சுமத்தியவர்கள், இப்போது அவரை சிலுவையில் அறைந்து கொல்லவேண்டுமென்று தண்டனையை தாங்களே நிர்ணயம் பண்ணிவிடுகிறார்கள். இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறையவேண்டுமென்று உரத்த சத்தத்தோடே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு குற்றமும் செய்யாத கள்ளம் கபடமில்லாத ஒருவருக்கு, தாங்கள் விரும்பினால், மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.  அதுபோலவே       தாங்கள் விரும்பினால் பரபாசைப்போன்ற கொலைபாதகனாக இருந்தாலும்,  அப்படிப்பட்டவனையும் விடுதலை பண்ணவேண்டும் என்று சத்தமிட்டுக் கூறுகிறார்கள். ஜனங்களும், தேவாலயத்தின் அதிகாரிகளும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொள்கிறது. பிலாத்துவின் ஆலோசனை அவர்கள் மத்தியில் எடுபடவில்லை.



இயேசுகிறிஸ்துவை விடுதலை பண்ண வேண்டுமென்று பிலாத்து விரும்பினான். இயேசுவைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று ஜனங்கள் விரும்பினார்கள். ஜனங்களே ஜெயித்தார்கள். பிலாத்து ஜனங்களுடைய சித்தத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தான்.  



கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும்



அப்பொழுது அவர்கள் கேட்டுக் கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,  கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும்         காவ-ல் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான்      

    (லூக் 23:24,25).  



அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்பு செய்துவிடுகிறான். அவர்கள் கேட்டுக்கொண்டபடியே இயேசுவை அவர்கள் இஷ்டத்திற்கு ஒப்புக்கொடுக்கிறான். அவர்கள் கேட்டுக்கொண்டபடியே பரபாசை விடுதலைபண்ணுகிறான். இந்த ஜனங்களோ இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறையவேண்டுமென்று இஷ்டப்படுகிறார்கள்.  பிலாத்து இயேசுவை தன் விருப்பத்தின்படி விடுதலைபண்ணுவதற்குப் பதிலாக, அவர்கள் இஷ்டத்திற்கு இயேசுவை ஒப்புக்கொடுக்கிறான்.   நியாயத்திற்கு விரோதமாக கூக்குரலிடும் இந்த ஜனங்களை பிலாத்துவினால் அமைதிபடுத்த முடியவில்லை. 



போர்ச்சேவகர் இயேசுவைப் பரியாசம்பண்ணுகிறார்கள்


மத்தேயு 27:27-30 ; மாற்கு 15:16-19



தேசாதிபதியின் அரமனையிலே



அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமணையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, (மத் 27:27).



தேசாதிபதியின் போர்ச்சேவர்கள் இயேசுகிறிஸ்துவை பிலாத்துவின் அரமனையிலேயே சித்திரவதை பண்ணுகிறார்கள். ரோமப்பேரரசாரின் பிரமாணத்தின்படி ஒருவரை சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்த பின்பு, அந்த நபருக்கு சற்று காலஅவகாசம் கொடுக்கப்படும்.  மரிப்பதற்கு ஆயத்தமாவதற்கு அந்த நபருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். மரணதண்டனை கொடுக்கப்பட்ட பத்துநாட்களுக்குப் பின்பே அந்த தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது ரோமப்பேரரசின் பிரதிநிதிகள் சபை அங்கீகரித்திருக்கும் முடிவாகும். ஆனால்  இயேசுகிறிஸ்துவுக்கோ அவர்கள் சில நிமிஷத்தைக்கூட அவகாசமாக கொடுக்கவில்லை. தேசாதிபதி இயேசுவை வாரினால் அடிப்பித்து சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்த உடனேயே, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவை தேசாதிபதியின் அரமனைக்கு கொண்டுபோய்  சித்திரவதை பண்ணுகிறார்கள். போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும்        அங்கு வரவழைத்து இயேசுவை கொடுமைப்படுத்துகிறார்கள். இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்கும்போது இடைவெளியில்லாமல் ஒவ்வொரு பாடாக தொடர்ந்து அவர்மீது வருகிறது.



இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தபின்பு அவரை சிலுவையில் மாத்திரம்தான் அறையவேண்டும்.  அது மாத்திரமே அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை. நியமிக்கப்பட்டிருக்கும் தண்டனைக்குமேல் வேறு எந்த தண்டனையும்  அவருக்கு கொடுக்கக்கூடாது. இயேசுகிறிஸ்துவும் தம்மை சிலுவையில் அறைவதற்கு ஒப்புக்கொடுக்கிறார். ஆனால் கிறிஸ்துவின் சத்துருக்களோ அவருடைய சிலுவை மரணத்தில் திருப்தியடையவில்லை. அவருக்கு மேலும் அதிக தண்டனையை கொடுக்க விரும்புகிறார்கள்.



தேசாதிபதியின் போர்ச்சேவகர்கள் இயேசுவை சிலுவையில் அறைவதற்கு முன்பாக  அவரை அவமானப்படுத்துகிறார்கள். அவர்மேல் துப்புகிறார்கள். அவரை ஒரு விளையாட்டுப் பொருளாக நினைத்து இயேசுவை பாடாய் படுத்துகிறார்கள். அவரை பரியாசம்பண்ணுகிறார்கள். முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி அவருடைய சிரசின் மேல் வைக்கிறார்கள்.  இயேசுவை கொடுமைப்படுத்தும்போது தேசாதிபதியின் போர்ச்சேவகர்கள் தங்களுடைய பொழுது போக்கிற்காக, சுய சந்தோஷத்திற்காக இயேசுவை மேலும் அதிகமாக கொடுமைப்படுத்துகிறார்கள். தங்களுக்கு இயேசுவை என்ன செய்தால் சந்தோஷமாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ, அதை மனிதாபிமானமில்லாமல் இயேசுவுக்கு செய்கிறார்கள்.  



இயேசுகிறிஸ்துவை கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்யும் சம்பவமெல்லாம் தேசாதிபதியின் அரமனையிலேயே நடைபெறுகிறது. ஒடுக்கப்படுகிறவர்களுக்கும், நியாயம் மறுக்கப்பட்டவர்களுக்கும் தேசாதிபதியின் அரமனை அடைக்கல ஸ்தலமாக இருக்கவேண்டும். ஆனால் அடைக்கலமாக இருக்கவேண்டிய அரமனையோ கள்ளர்கள் வெறியாட்டம்போடும் குகையாயிற்று. தங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்களை சரியாக கவனியாதவர்கள்மீது நியாயத்தீர்ப்பு வரும். 



அதிகாரத்திலுள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தை  துஸ்பிரயோகம்பண்ணினால் அவர்கள்மீதும்  தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்பு வரும். அதிகாரத்திலுள்ளவர்கள் தவறு செய்யவில்லையென்றாலும், தங்களுடைய அதிகார வரம்பிற்குட்பட்ட எல்லையில் தவறுகள் நடப்பதை தடைபண்ணவில்லை யென்றாலும் அவர்கள்மீது தேவனுடைய கோபம் வரும். பிலாத்து தன்னுடைய அரமனையில் நடைபெறும்  மனிதாபிமானமற்ற கொடுமையான காரியங்களை தடைபண்ண தவறிவிடுகிறான். இயேசுகிறிஸ்துவை ஒரு போர்ச்சேவகரோ அல்லது இரண்டு போர்ச்சேவகரோ கொடுமைப்படுத்தவில்லை. தேசாதிபதியின் போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதும் இயேசுகிறிஸ்துவை கொடுமைப்படுத்துகிறார்கள்.  



அரமணையில் விசாரணை நடைபெறுகிறது.

  (மாற்கு 15:16; யோவான் 18:28,33; யோவான் 19:9).  


இது ஒரு திறந்தவெளி. இது போர்ச்சேவகர்கள் தங்கியிருக்கும் இடம். பிலாத்துவின் அரண்மனை சீயோன் மலையில் உயர்ந்த இடத்தில் கட்டப்பட்டிருந்தது. இந்த இடத்தில் பிலாத்துவின் வீடும், அவனுடைய போர்ச்சேவகரும் இருந்தார்கள்.  (மாற்கு 15:16)



சிவப்பான மேலங்கி



அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, (மத் 27:28). 



போர்ச்சேவகர்கள் இயேசுகிறிஸ்துவின் மேலங்கியை கழற்றுகிறார்கள். நிர்வாணத்தின்  அவமானம் பாவத்தினால் வந்த விளைவாகும் (ஆதி 3:7). அவர்கள் இயேசுவுக்கு சிவப்பான மேலங்கியை உடுத்துகிறார்கள். ரோமபோர்ச்சேவகர்கள் சிவப்பான மேலங்கியை உடுத்துவது வழக்கம். அதை உடுத்தும்போது வீரர்கள் கம்பீரமாக தோற்றமளிப்பார்கள். அப்படிப்பட்ட சிவப்பங்கியைப்போன்ற தோற்றமுடைய ஒரு சாதாரண சிவப்பங்கியை அவர்கள் இயேசுவுக்கு உடுத்துகிறார்கள். கெம்பீரமான சிவப்பு மேலங்கிகளை ரோமப்பேரரசின் ராஜாக்களும், ராயன்மார்களும், பிரபுக்களும் உடுத்துவது வழக்கம். இயேசுகிறிஸ்துவுக்கு சிவப்பான மேலங்கியை உடுத்தி, அவரை ராஜா என்று அழைத்து பரியாசம்பண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்துவோ போர்ச்சேவர்களுக்கு மத்தியில் பரிதாபமாக நிற்கிறார். இவர்களோ அவருக்கு சிவப்பு மேலங்கியை உடுத்தி, அவரை கம்பீரமானவர் போன்று  காண்பித்து பரியாசம்பண்ணுகிறார்கள். இயேசுவை பெருமைப்படுத்தவேண்டுமென்பது அவர்களுடைய நோக்கமல்ல. அவரை சிறுமைப்படுத்தி அவமானப்படுத்தவேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம். 



""சிவப்பான மேலங்கி'' என்பது ரோமருடைய இராணுவ உடையாக இருக்கலாம். யூதருக்கு ராஜாவாக இருப்பவரைப் பரியாசம் பண்ணுவதற்காக போர்ச்சேவகர்கள் இயேசுவிற்குச் சிவப்பான அங்கியை உடுத்தியிருக்கலாம்.



முள்ளுகளால் ஒரு முடி



முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி,          (மத் 27:29).



இயேசுகிறிஸ்துவை போர்ச்சேவகர்கள் ஒரு ராஜாவைப்போல 

சித்தரித்து அவரை பரியாசம்பண்ணுகிறார்கள். ராஜாவுக்கு கிரீடம் இருக்கும். இவர்கள் முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி இயேசுவின் சிரசின்மீது வைக்கிறார்கள். இயேசுவை அவமானப்படுத்த வேண்டுமென்றால் சாதாரண புல்லுகளாலோ, சாதாரண இலைகளினாலோ ஒரு கிரீடத்தை செய்து இயேசுவின் சிரசின்மீது வைத்திருக்கலாம். ஆனால் அவர்களோ இயேசுகிறிஸ்துவை பரியாசம்பண்ணும்போது அவருக்கு வேதனையையும் கொடுக்கிறார்கள். 



முட்கள் பாடுகளுக்கும் வேதனைகளுக்கும் அடையாளம். இப்படிப்பட்ட முள்ளுகளால் ஒரு முடியைபின்னி அதை

 இயேசுவின் சிரசின்மீது வைத்து, அவருக்கு வேதனையை உண்டுபண்ணி, அவரை அவமானப்படுத்துகிறார்கள். இயேசுகிறிஸ்து இந்த அவமானங்களையெல்லாம் நமக்காக தாங்கிக்கொள்கிறார். அவர் பாடுகள் மத்தியிலும் மகிமையுள்ளவராக இருக்கிறார்.  அவர்கள் இயேசுவை எவ்வளவுதான் வேதனைப்படுத்தினாலும், பரியாசம்பண்ணினாலும் அவருடைய மகிமையை யாராலும் குறைத்துப்போட முடியாது. 



இயேசுகிறிஸ்துவுக்கு முள்முடியை சூட்டுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதல்ல என்பதை முள்முடி தெளிவுபடுத்துகிறது. இந்த உலகத்திற்குரிய ராஜாக்கள் பொன்னாலும், வைரத்தாலும் கிரீடத்தை சூட்டிக்கொள்வார்கள். இவர்களுடைய மகிமை அவர்களுடைய கிரீடத்தின் பொன்னிலும் வைரத்திலும் இருக்கிறது. ஆனால் இயேசுகிறிஸ்துவின் மகிமையோ அவருடைய பாடுகளிலும் வேதனைகளிலும் இருக்கிறது. இயேசுகிறிஸ்து நமக்காக பாடுகளையும் வேதனைகளையும் சகித்துக்கொண்டதன் மூலமாக அவருடைய மகிமை வெளிப்படுகிறது.



அவர்கள் இயேசுகிறிஸ்துவின் வலதுகையில் ஒரு கோலைக் கொடுக்கிறார்கள்.  ராஜாக்களின் கையில் செங்கோல் இருக்கும். அந்தக் கோல் மரியாதைக்குரியது. அது ராஜாவின் அதிகாரத்திற்கு அடையாளம். இயேசுகிறிஸ்துவை பரியாசம்பண்ணுவதற்காக அவருடைய கையில் ஒரு சாதாரண கம்பைக் கொடுக்கிறார்கள். ராஜாதி ராஜாவின் கையில்  செங்கோலுக்குப் பதிலாக சாதாரண கம்பு கொடுக்கப்படுகிறது. பலவீனமான இந்த சாதாரண கோலைப்போல இயேசுகிறிஸ்துவும் போர்ச்சேவர்கள் மத்தியில் பலவீனமாக நிற்கிறார். சாதாரண கோலைப்போல இயேசுவும்  பிரயோஜனமற்றவர் என்று போர்ச்சேவகர்கள்  நினைக்கிறார்கள்.ஆனால்  அவர்களுடைய நினைவு தவறு. இயேசுகிறிஸ்துவின் செங்கோல்     நித்திய காலமாக நிலைத்துநிற்கும். இயேசுகிறிஸ்துவின் ஆளுகை ஒருபோதும் ஒழிந்துபோவதில்லை. அவர் நித்திய ஆளுகை செய்கிற நித்திய ராஜாவாக இருக்கிறார். 



போர்ச்சேவகர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாக முழங்கால் படியிடுகிறார்கள். தங்கள் ராஜாவுக்கு முன்பாக முழங்கால் படியிடுவதுபோல முழங்கால் படியிட்டு அவரை பரியாசம்பண்ணுகிறார்கள். ராஜாவுக்கு முன்பாக  முழங்கால் படியிடும்போது போர்ச்சேவகர்கள் ராஜாவை வாழ்த்துவது வழக்கம். அதுபோல இவர்களும் இயேசுவை ""யூதருடைய ராஜாவே வாழ்க'' என்று கூறி அவரை பரியாசம்பண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்து சர்வ மகிமையுள்ளவர். முழங்கால் யாவும் அவருக்கு முன்பாக முடங்கும். போர்ச்சேவகர்களோ கிறிஸ்துவின் மகிமையை அறியாமல், அவரை பரியாசம்பண்ணுவதாக நினைத்துக்கொண்டு,  அவருக்கு முன்பாக முழங்கால் படியிடுகிறார்கள்.  



 கொடூரமான முறையில் இயேசுவைப் பரியாசம் பண்ணுகிறார்கள். தம்மைப் பற்றி இயேசு கிறிஸ்து கூறிய தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது (மத் 20:17-19). இயேசு கிறிஸ்துவின் சிரசில் வைக்கப்பட்ட முள்முடி எந்த முள்ளால் ஆனது என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் குத்தினால் இரத்தம் வரக்கூடிய கடினமான முள்ளாக இருக்க வேண்டும்.  



அவர்மேல் துப்பி



 அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள் (மத் 27:30).



போர்ச்சேவகர்கள் இயேசுவின்மேல் துப்புகிறார்கள். ஏற்கெனவே பிரதான ஆசாரியனுடைய அரமனையில் இயேசுகிறிஸ்து  இந்த அவமானத்தை சகித்திருக்கிறார் (மத் 26:67).

 ராஜாவின் அதிகாரத்தை அங்கீகரிப்பதற்கு அவருடைய கரத்தை முத்தமிடுவது வழக்கம். ஆனால் இங்கோ ராஜாதி ராஜாவின் அதிகாரத்தை அங்கீகரித்து அவரை முத்தம் செய்வதற்குப் பதிலாக, அவரை அவமானம்பண்ணும் விதமாக, அவருடைய முகத்திலே துப்புகிறார்கள். மனுஷகுமாரன் மீது மனுஷர்கள் இவ்வளவு மோசமாக நடந்துகொள்வதும், மனுஷர்மீது மனுஷகுமாரன் இவ்வளவு பொறுமையோடிருப்பதும் இந்த வசனத்தில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.  



போர்ச்சேவகர்கள் இயேசுகிறிஸ்துவின் வலதுகையில் ஏற்கெனவே கொடுத்திருந்த அந்த கோலை, அவருடைய கரத்திலிருந்து வாங்கி அவருடைய சிரசில் அடிக்கிறார்கள். அவருடைய வலதுகரத்தில் கோலைக்கொடுத்து அவருடைய அதிகாரத்தை பரியாசம்பண்ணினார்கள். இப்போதோ அதே கோலினால் அவருடைய சிரசின்மீது அடித்து தங்களுடைய மூர்க்க குணத்தை வெளிப்படுத்துகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் சிரசின்மீது ஏற்கெனவே முள்முடி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த முள்முடியின்மீது இவர்கள் கோலால் அடிக்கிறார்கள். அடிக்கும்போது முள்முடியிலுள்ள முட்களெல்லாம் இயேசுகிறிஸ்துவின் சிரசிற்குள் புகுந்திருக்கும். இயேசுகிறிஸ்துவின் வேதனை அதிகரித்திருக்கும். இயேசுகிறிஸ்து இவ்வளவு அவமானத்தையும் பாடுகளையும் தாங்கிக்கொள்கிறார். நமக்கு நித்திய ஜீவனையும், சந்தோஷத்தையும், சமாதானத்தையும் மகிமையையும் கிரயத்திற்கு வாங்குவதற்காக இயேசுகிறிஸ்து இந்த கிரயத்தை செலுத்துகிறார். 



இயேசுவைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோகிறார்கள்


(மத்தேயு 27:31-34 ; மாற்கு 15:20-23  லூக்கா 23:26-32 ; யோவான் 19:16,17)



சிரேனே ஊரானாகிய சீமோன்



அவர்கள் இயேசுவைக் கொண்டு போகிறபோது, நாட்டி-ருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்  (லூக் 23:26).



இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைவதற்கு முன்பாகவே அவரை அதிகமாக துன்புறுத்துகிறார்கள். விடியற்காலமானபோது இயேசுகிறிஸ்துவை ஆலோசனைச்சங்கத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். அதன்பின்பு அவரை பிலாத்துவிற்கு முன்பாக நிறுத்துகிறார்கள். அதன்பின்பு ஏரோதுவுக்கு முன்பாகவும், அதன்பின்பு மறுபடியும் பிலாத்துவுக்கு முன்பாகவும் நிறுத்துகிறார். இயேசுகிறிஸ்துவைக் குறித்து பிலாத்துவுக்கும்  ஜனக்கூட்டத்திற்கும் மிகப்பெரிய பிரச்சனை உண்டாயிற்று. இயேசுகிறிஸ்துவை நிந்தித்து பரியாசம்பண்ணுகிறார்கள். அவருக்கு முள்முடியை சூட்டுகிறார்கள். வாரினால் அடிக்கிறார்கள். அவருக்கு விரோதமாக தூஷண வார்த்தைகளைப் பேசுகிறார்கள். இவையெல்லாம் ஐந்து அல்லது ஆறு மணிநேர கால அவகாசத்தில் நடைபெறுகிறது. ஒன்பதாம் மணி வேளைக்கும் பன்னிரண்டாம் மணி வேளைக்கும்  நடுவே இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்படுகிறார். இயேசுகிறிஸ்துவைப்போல   வேறு யாரும் இவ்வளவு பரிதாபமாக இந்த உலகத்தைவிட்டு துரத்தப்படவில்லை. இந்த உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்ப்பதற்காக வந்த தேவஆட்டுக்குட்டியை கல்வாரி சிலுவையில் அறைகிறார்கள். 



இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைவதற்காக கொண்டுபோகும்போது, அந்த வழியாக சிரேனே ஊரானாகிய சீமோன் என்பவன் வருகிறான். அவனைப்பிடித்து இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அவன்மேல் வைத்து, அதை அவர் பின்னே சுமந்துகொண்டு வரும்படி கூறுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின்மீது  சுமத்தப்பட்ட சிலுவை இப்போது சிரேனே ஊரானாகிய சீமோன் மீது சுமத்தப்படுகிறது.  இவன் இயேசுகிறிஸ்துவுக்குப் பின்னாக அவருடைய சிலுவையை சுமந்து கொண்டு வருகிறான். ஒருவேளை மிகுந்த களைப்பினாலும், சரீர வேதனையினாலும் இயேசுகிறிஸ்துவினால் தம்முடைய சிலுவையை சுமக்க முடியாமல், அவர் மயங்கி கீழே விழுந்திருக்கலாம். இயேசுகிறிஸ்து மிகவும் பரிதாபமாக காயப்பட்டு, களைப்படைந்தவராக  தமது சிலுவைப் பாதையை நோக்கி முன்னேறிச் செல்கிறார்.  



புலம்பி அழுகிற ஸ்திரீகள் 



திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்   (லூக் 23:27). 



அவர்கள் இயேசுகிறிஸ்துவைக் கொண்டுபோகிறபோது திரள்கூட்டமான ஜனங்களும், அவருக்காக புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின் செல்கிறார்கள். இயேசுகிறிஸ்து அநியாயமாக தண்டிக்கப்படுவதினால் திரளான ஜனங்கள் அவருக்கு இரக்கம் காண்பிக்கிறார்கள். பொதுவாக ஒருவரை சிலுவையில் அறையும்போது, அவருக்குப் பின்னாக இவ்வளவு திரள்கூட்டமான ஜனங்கள் பின்செல்லமாட்டார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ அநியாயமாக தண்டிக்கப்படுவதினால், தங்கள் இருதயத்தில் பாரமடைந்து, இயேசுகிறிஸ்துவுக்காக பரிதாபப்பட்டு, திரள்கூட்டமான ஜனங்கள் அவருக்குப் பின்செல்கிறார்கள். அந்தக்கூட்டத்தில் அவருக்காக புலம்பி அழுகிற ஸ்திரீகளும் இருக்கிறார்கள். 


பிலாத்துவுக்கு முன்பாகவும், ஏரோதுவுக்கு முன்பாகவும் தேவாலயத்தின் அதிகாரிகளும், பிரதான ஆசாரியர்களும், திரளான ஜனங்களும்  இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாக வைராக்கியம் காண்பித்து, அவரை சிலுவையில் அறையவேண்டுமென்று கூக்குரலிட்டபோதிலும், அவர்மீது அன்பு செலுத்துவதற்கும் திரள்கூட்டமான ஜனங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் இயேசுகிறிஸ்துவை மதிக்கிறார்கள். அவர் படுகிற துன்பத்தைப்பார்த்து அவருக்காக பரிதாபப்படுகிறார்கள்.



இயேசுகிறிஸ்துவின்மீது விசுவாசம் வைக்காதவர்கள்கூட அவர் படுகிற துன்பத்தைப்பார்த்து அவருக்காக பரிதாபப்படுகிறார்கள். அவர்மீது அன்பு செலுத்தாதவர்கள்கூட, இப்போது அவர் அடைந்திருக்கும் ஆக்கினையைப்பார்த்து அவருக்கு இரக்கம் காண்பிக்கிறார்கள். இயேசுகிறிஸ்து அவர்களுடைய கண்ணீரைக் காண்கிறார். தம்முடைய வேதனையின் மத்தியிலும் அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.   இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில்   அறைவதற்காக கொண்டுபோகப்படும்போது  ஏராளமான ஸ்திரீகள் அவருக்காக புலம்பி அழுகிறார்கள். இயேசுகிறிஸ்து அவர்களைப்பார்த்து, அவர்கள் தமக்காக அழாமல், தங்களுக்காகவும் தங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுமாறு கூறுகிறார்.



உங்களுக்காக அழுங்கள்



இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.  அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக் கொள்ளுங்களென்றும் சொல்லத் தொடங்குவார்கள் 

(லூக் 23:28-30). 



புலம்பி அழுதுகொண்டு தம்மைப் பின்பற்றி வரும் ஸ்திரீகளைப்பார்த்து, அவர்கள் எதற்காக அழவேண்டுமென்று அவர்களுக்கு பொதுவான ஆலோசனை கூறுகிறார். எருசலேமின் குமாரத்திகள் தமக்காக அழவேண்டாம் என்று கூறுகிறார். தாம் இவ்வளவு பாடுகள் அனுபவித்தாலும் அவர்கள் தமக்காக அழவேண்டியதில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் தங்களுக்காகவும் தங்கள் பிள்ளைகளுக்காகவும் அழவேண்டும். கல்வாரி சிலுவையில் அறையப்பட்டிருக்கும் இயேசுகிறிஸ்துவை நமது மனக்கண்களால் பார்க்கும்போது, நாம் அவருக்காக அழாமல் நமக்காக அழவேண்டும்.    இயேசுகிறிஸ்துவின் மரணம் ஒரு விசேஷித்த மரணமாகும். தமது மரணத்தின் மூலமாக இயேசுகிறிஸ்து தம்முடைய சத்துருக்களின்மீது வெற்றி பெறுகிறார். இயேசுகிறிஸ்துவுக்கு அவருடைய மரணமே வெற்றியாயிற்று. நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்பதற்காக இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் தம்முடைய சுயஇரத்தத்தை சிந்தி, நமக்காக தம்முடைய ஜீவனையே ஒப்புக்கொடுத்தார். இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக நம்முடைய பாவங்களிலிருந்து நமக்கு மீட்பு உண்டாயிற்று.  இயேசுவின் மரணம் நம்முடைய மீட்பு.  தம்முடைய மரணத்தின் மூலமாக,  இயேசுகிறிஸ்து தமது சுயஇரத்தத்தை கிரயமாக செலுத்தி, நமக்காக  நித்திய ஜீவனை கிரயத்திற்கு வாங்கியிருக்கிறார்.


இயேசுகிறிஸ்துவின் மரணத்தில் நமக்கு பாவமன்னிப்பும், ஆத்தும மீட்பும், நித்திய ஜீவனுமுள்ளது. ஆகையினால் நாம் அவருக்காக அழாமல் நம்முடைய பாவங்களுக்காக   மனம்வருந்தி அழவேண்டும். நம்முடைய பிள்ளைகளின் பாவங்களுக்காக நாம் அழவேண்டும். ஏனெனில் நம்முடைய பாவங்களும், நம்முடைய பிள்ளைகளின் பாவங்களும் இயேசுகிறிஸ்துவினுடைய மரணத்திற்கு காரணமாயிற்று.



அவர்கள் தங்களுக்காகவும் தங்கள் பிள்ளைகளுக்காகவும் ஏன் அழவேண்டும் என்பதற்கு இயேசுகிறிஸ்து காரணத்தை அறிவிக்கிறார். எருசலேம் நகரத்தின்மீது மிகவும் துக்ககரமான நாட்கள் வரப்போகிறது. சமீபத்தில்தான் இயேசுகிறிஸ்து எருசலேம் நகரத்திற்காக கண்ணீர்விட்டு அழுதார். இப்போது அந்த நகரத்தின் ஜனங்களும், தங்கள் நகரத்திற்காக கண்ணீர்விட்டு அழவேண்டுமாறு கூறுகிறார்.  ஒரு நகரத்திற்காக இயேசுகிறிஸ்து கண்ணீர் சிந்தும்போது நாமும் அதற்காக கண்ணீர் சிந்தவேண்டும். இயேசுகிறிஸ்துவின் கண்ணீர்  நம்மையும் அழவைக்க வேண்டும். 


எருசலேமின் அழிவு இரண்டு தீர்க்கதரிசன வாக்கியங்களினால்   முன்னறிவிக்கப்படுகிறது. இவ்விரண்டுமே மிகவும் பயங்கரமான சம்பவங்களாகும். எருசலேம் அழியும்போது ஜனங்களுக்கு மிகுந்த துன்பம் உண்டாகும். இக்காலத்தில் மலடிகள் பாக்கியவதிகள் என்று சொல்லப்படுவார்கள்.  தங்களுக்கு பிள்ளைகளே இருக்கக்கூடாது என்று விரும்புவார்கள். மலைகள் தங்கள்மேல் விழவேண்டுமென்றும், குன்றுகள் தங்களை மறைத்துக்கொள்ள வேண்டுமென்றும் சொல்லுவார்கள். தாங்கள் உயிரோடிருக்கும்போதே மண்ணில் புதைக்கப்பட வேண்டுமென்று விரும்புவார்கள். எருசலேம் அழியும்போது அப்படிப்பட்ட பயங்கர சம்பவங்கள் நடைபெறும்.



பிள்ளை பெற்றிருக்கிற ஸ்திரீகள், பிள்ளை பெறாத மலடிகளைப்பார்த்து இக்காலத்தில் பொறாமைப்படுவார்கள். மலடிகள் பாக்கியவதிகள் என்பார்கள். பிள்ளைபெறாத கர்ப்பங்கள் பாக்கியமுள்ளவைகள் என்று சொல்வார்கள். தாங்கள் உயிரோடிருக்கும்போதே மண்ணில் அடக்கம்பண்ணப்பட்டால் நலமாயிருக்கும் என்று நினைப்பார்கள். மலைகளை நோக்கி எங்கள்மேல் விழுங்கள் என்றும், குன்றுகளை நோக்கி எங்களை மறைத்துக்கொள்ளுங்கள் என்றும் சொல்லத் துவங்குவார்கள். 



எருசலேம் அழியும்போது மரணத்தின் ஓலங்களும், பயங்கரமான அலறல் சத்தமும் உண்டாகும். இவையெல்லாவற்றையும் கேட்க முடியாமல், இதன் பயங்கரத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், தங்களை குகைகளில் ஒளித்துக்கொள்ள விரும்புவார்கள்.  ஏதாவது ஒரு வழியில் தங்களை மறைத்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்று  விரும்புவார்கள்.  எருசலேம் நகரமோ நிர்மூலமாக்கப்படும். இதன் அழிவு மிகவும் பயங்கரமாயிருக்கும். 



இந்த வசனப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஸ்திரீகள் எருசலேமில் உள்ளவர்கள். இவர்கள் கலிலேயாவிலிருந்து வந்தவர்கள் அல்ல. இந்த ஸ்திரீகள் தங்களுக்காகவும், தங்கள் பிள்ளைகளுக்காகவும் அழவேண்டும்.  40 வருஷங்களுக்குப் பின்பு, எருசலேம் பட்டணத்திற்கு வரப்போகும் அழிவை இயேசு கிறிஸ்து காண்கிறார். எருசலேம் பட்டணம் அழிக்கப்படும். எருசலேமில் உள்ளவர்கள் கொலைசெய்யப்படுவார்கள்.  


எருசலேமை ரோமாபுரியார் முற்றுகையிட்டார்கள். பசியினாலும், பட்டினியினாலும் ஆயிரக்கணக்கான சிறுபிள்ளைகள் மடிந்துபோனார்கள். அப்போது ஏராளமான ஸ்திரீகள் இந்த வாக்கியங்களைக் கூறியிருப்பார்கள்.


""அப்பொழுது'' என்னும்

 வாக்கியம் எருசலேம் கி.பி. 70-இல் அழியப்போகும் தீர்க்கதரிசனத்தோடு தொடர்புடையது. வெளி 6:12-17 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் ஆறாவது முத்திரையை இந்த வசனம் குறிப்பிடாது.  தானியேலின் 70 ஆவது வாரத்தின் முதல் பாதிப்பகுதியில் சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு, ஆறாவது முத்திரையைப் பற்றிய காரியம் நிறைவேறும். எருசலேம் ஜனங்கள் எப்படியும் சாகப்போகிறார்கள். ஆனாலும் தங்களுக்கு இப்படிப்பட்ட மரணம் வரக்கூடாது என்று நினைத்து இந்த வசனங்களைக் கூறுவார்கள்.



பச்சைமரம்



 பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்  

 (லூக் 23:31).



இயேசுகிறிஸ்து தாம் அனுபவிக்கும் பாடுகளை அவர்களுக்கு வெளிப்படுத்தி, இதைவிட அதிகமான பாடுகள் அவர்களுக்கு உண்டாகும் என்று எச்சரிக்கிறார். இயேசுகிறிஸ்து பச்சைமரத்திற்கு ஒப்பாக இருக்கிறார். ஜனங்களோ பட்ட மரத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள். பச்சை மரத்தைப்போன்ற தமக்கே இவ்வளவு அநியாயம் செய்தால், பட்டமரத்தைப் போன்ற ஜனங்களுக்கு என்ன செய்யமாட்டார்கள் என்று இயேசுகிறிஸ்து தமக்கு பின்பாக புலம்பி அழுகிற ஸ்திரீகளிடமும், திரள்கூட்டமான ஜனங்களிடமும் கூறுகிறார்.



இயேசுகிறிஸ்து கனிதரும் பச்சைமரத்தைப்போல இருக்கிறார். ஏராளமான  இலைகள் துளிர்த்து முளைத்துள்ள பசுமையான பச்சைமரமாக இருக்கிறார். இப்படிப்பட்ட இயேசுகிறிஸ்துவுக்கு இவர்கள்  ஏராளமான கொடுமைகளைச் செய்கிறார்கள். ஜனங்களோ  காய்ந்துபோன பட்ட மரத்தைப்போல இருக்கிறார்கள். ஒரு மரத்தில் தீ வைக்கப்பட்டால்  அது அந்த காடு முழுவதையும் அழித்துவிடும்.  மரங்கள் அழிவதை யாராலும் தடுக்க முடியாது.  எருசலேமின் ஜனங்களுக்கு அழிவு வரும்போது  அதற்கு எதிர்த்து நிற்க அவர்களால் கூடாமல் போகும்.


பட்டமரமாக இருக்கும் இந்த ஜனங்கள்  தங்கள் ஜீவியத்தில் கனிகொடுக்க ஆரம்பிக்க வேண்டும். பட்டுப்போயிருக்கிற இவர்கள் பச்சைமரமாக மாறவேண்டும். இவர்களுடைய ஜீவியத்தில் மாற்றம் உண்டாக வேண்டும். ஜனங்கள் மனந்திரும்பவில்லையென்றால் தேவனுடைய கோபாக்கினையிலிருந்து இவர்களால் தப்பித்துக்கொள்ள முடியாது. இயேசுகிறிஸ்து தம்முடைய ஜீவியத்தில் பாடுகளை அனுபவிக்கும்போது, அவரைப் பின்பற்றுவதற்கு  தீர்மானம் செய்திருக்கும் நம்முடைய ஜீவியத்திலும் பாடுகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. 



""பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள்'' என்பது  யூதருடைய வழக்குச்சொல். இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும்,

 கி.பி. 70 ஆம் ஆண்டில் யூதருக்கு வரும் பாடுகளையும் இந்த வாக்கியம் ஒப்பிட்டுக் கூறுகிறது. இயேசு கிறிஸ்து பச்சை மரத்திற்கு ஒப்பானவர். அழகானவர், கனிகொடுக்கிறவர். யூதர்கள் பட்ட மரத்திற்கு ஒப்பானவர்கள். மரித்துப் போனவர்கள். கனியற்றவர்கள். ஒரு பாவமும் செய்யாத இயேசு கிறிஸ்துவையே ரோமாபுரியார் சிலுவையில் அறைவார்கள் என்றால் பாவத்தில் மூழ்கியிருக்கும் யூதருக்கு அவர்கள் அதிகமான தண்டனையைக் கொடுப்பார்கள் என்று இந்த வாக்கியம் விளக்குகிறது. பச்சைமரம் இயேசு கிறிஸ்துவின் மனுஷத்துவத்தைக் குறிக்கிறது.



இயேசுகிறிஸ்துவின் மனுஷத்துவத்தைக் குறிக்கும் காரியங்கள்



    1. மானிடப்பெயர்கள் (மத் 1:1,21; மத் 2:2)     

  

    2. மானிட தாய் (ஆதி 3:15; 

ஏசா 7:14)  


    3. மானிட குழந்தைப்பருவம் (லூக்கா 2:16), பிள்ளைப்பருவம் (லூக்கா 2:40,52), வளர்ந்து பெரியவரான பருவம்  (1தீமோ 2:5)


    4. மானிட சரீரமும், மாம்சமும் (யோவான் 1:14; எபி 2:14-18)   

     

    5. எல்லா மனுஷரையும் போலவே மனுஷனாக இருந்தார். (எபி 2:9-18; எபி 4:14-16)


    6. பூமியில் மனுஷ ஜீவியம் (லூக்கா 2:40,52; யோவான் 5:30-46; யோவான் 6:57)  

 

    7. மனுஷருக்குரிய வரையறைகள் இருந்தது.

 (1). சரீரத்திலும் ஆவியிலும் வளர்ந்தார். (லூக்கா 2:40,52),

        (2). அழுதார்  (யோவான் 11:35), 

         (3) பசியண்டாயிற்று  (மத் 4:1-11; மாற்கு 11:12), 

        (4). தாகம் உண்டாயிற்று (யோவான் 4:7; யோவான் 19:28), 

        (5). உறங்கினார் (மத் 8:24), 

        (6). களைப்படைந்தார் (யோவான் 4:6), 

        (7). வருத்தப்பட்டார் (ஏசா  53:3-4),


        (8).  சரீர வேதனையை அனுபவித்தார் (லூக்கா 22:44; 1பேதுரு 3:18;  1பேதுரு 4:1); 


        (9). பிதாவிடம் இரக்கத்திற்காக ஜெபித்தார்

 (மத் 26:36-40; லூக்கா 22:15-27), 


        (10). சோதிக்கப்பட்டார்  (மத் 4; எபி 4:14-16),


        (11). சரீரத்தில் மரித்தார் (யோவான் 19:30; அப் 1:3; அப் 2:23; 1பேதுரு 2:24), 


        (12). மறுபடியும் உயிர்த்தெழுந்தார், நித்திய காலமாக ஜீவிக்கிறார் (லூக்கா 24:49; யோவான் 20:27; 1கொரி 5; சக 13:6) 



இயேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள்


(மத்தேயு 27:35-56 ; மாற்கு 15:24-41  லூக்கா 23:33-49 ; யோவான் 19:18-30)



இயேசுவின் கடைசி ஏழுவார்த்தைகள்



 1. பிதாவே இவர்களுக்கு மன்னியும்

2. இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்

3. அதோ உன் மகன் அதோ உன் தாய்

4. ஏலீ, ஏலீ, லாமா சபக்தானி

5. தாகமாயிருக்கிறேன்

6. முடிந்தது

7. பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்




இயேசுவின் சரீரத்தை கல்லறையில் வைக்கிறார்கள்


(மத்தேயு  27:57-60 ; மாற்கு 15:42-46  லூக்கா 23:50-54 ; யோவான் 19:31-42)



பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாள்



அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள் 

 (யோவா 19:31).  



இயேசுகிறிஸ்துவின் விலாவிலே போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே குத்திய சம்பவம் யோவான் சுவிசேஷத்தில் மாத்திரமே  எழுதப்பட்டிருக்கிறது. யூதர்கள் துன்மார்க்கராகயிருந்து இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைகிறார்கள். ஆகிலும் தங்களுக்கு யூதமார்க்கத்தில் அதிக பக்தியிருப்பதுபோல காண்பித்துக்கொள்கிறார்கள். இயேசுகிறிஸ்துவைச் சிலுவையில் அறையப்பட்ட  அந்தநாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாகயிருக்கிறது. அந்த ஓய்வுநாளில் உடல்கள் சிலுவைகளில் இருக்கக்கூடாது என்று   யூதர்கள் விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள்  பிலாத்துவினிடத்திற்குப்போய், அவர்களுடைய கால் எலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொள்கிறார்கள். தங்கள் கண்களில் தென்படாதவாறு இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை  வெளியே எங்கேயாவது புதைத்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள். 


பெரிய ஓய்வுநாள் சமீபித்திருக்கிறது.  இந்தநாள் அந்தப் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்த நாளாகயிருக்கிறது. ஒவ்வொரு ஓய்வு நாளுமே  பரிசுத்த நாள்தான். ஒவ்வொரு ஓய்வு நாளும்  யூதருக்கு நல்ல நாள். ஆனால் இந்த ஓய்வுநாளோ பெரிய ஓய்வுநாளாக இருக்கிறது.  யூதருக்கு இது பிரதான ஓய்வுநாள். ஆகையினால்  சாதாரண ஓய்வுநாளுக்குத் தங்களை ஆயத்தம்பண்ணுவதைவிட, இந்தப் பெரிய ஓய்வுநாளுக்குத் தங்களை அதிகமாய் ஆயத்தபண்ணவேண்டுமென்று யூதர்கள் விரும்புகிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு எல்லா நாளுமே பரிசுத்த நாள்தான். அதிலும் சில நாட்களை நாம் விசேஷித்த நாட்களாக பாவிக்கிறோம். சபையில் திருவிருந்து நடைபெறும் நாள், விசேஷித்த அபிஷேகக் கூட்டங்கள் நடைபெறும் நாள் ஆகிய நாட்களெல்லாம் முக்கியமான விசேஷித்த நாட்களாகும்.  இந்த நாட்களுக்காக நாம் விசேஷித்த வழியில் ஆயத்தமாயிருக்கவேண்டும். 



பெரிய ஓய்வுநாளின்போது சிலுவையில் மரித்துப்போன சரீரம் தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது என்று யூதர்கள் நினைக்கிறார்கள். அது ஓய்வுநாளை அசுத்தப்படுத்தும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. மரித்துப்போன சரீரங்களை உடனே அடக்கம்பண்ணிவிடவேண்டும். அதை அப்படியே வைத்திருப்பது நல்லதல்ல.



எருசலேமில் இப்போது பண்டிகைக்காலமாக இருக்கிறது. பஸ்கா பண்டிகைக்காக தேசத்தின் எல்லா பகுதியிலிருந்தும் யூதர்கள் எருசலேமுக்கு வருவது வழக்கம். அவர்கள் எருசலேமின் வழியாக வரும்போது, நகரத்திற்கு வெளியே, நகரவாசலுக்கு அருகே இயேசுகிறிஸ்துவின் சரீரம் சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதை  ஜனங்கள் பார்த்தால் அவர்களுடைய மனது மிகவும் புண்படும். உள்ளத்தில் வேதனையும் பயமும் உண்டாகும்.   மரித்துப்போன சரீரத்தை  யாரும் பார்க்க விரும்பமாட்டார்கள். அதிலும் பெரிய ஓய்வுநாளாக இருக்கிறபடியினால், மரித்த சரீரத்தைத் தொடுவதும், பார்ப்பதும்கூட தீட்டு என்று நினைப்பார்கள். 


சிலுவையில் அறையப்பட்டிருக்கும் இயேசுகிறிஸ்துவின் சரீரம் மரித்துப்போயிற்று. கள்ளர்களும் ஓரளவு மரித்துப்போயிருக்கிறார்கள். அவர்களுக்கு  சிறிது உயிர் இருந்தாலும், அவர்களுடைய கால் எலும்புகளை முறித்து, அவர்களை பெரிய ஓய்வுநாளுக்கு முன்பாக கொன்றுபோடவேண்டுமென்று யூதர்கள் விரும்புகிறார்கள். இதற்காக பிலாத்துவினிடத்தில் அனுமதி கேட்கிறார்கள்.   இயேசுகிறிஸ்து ஏற்கெனவே சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கிறார். மரணவேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். அவர் மரித்துப் போய்விட்டார். அவர் மரித்துப் போனது யூதருக்குத் தெரியாது. ஆகையினால் அந்த மரண வேதனையோடு அவருடைய கால்களை முறித்தும் அவருக்கு வேதனை உண்டாக்கவேண்டுமென்று யூதர்கள் விரும்புகிறார்கள். 


யூதர்கள் தங்களுடைய துன்மார்க்கத்திற்கு  மார்க்கக் காரியங்களை காரணமாகச் சொல்லுகிறார்கள். ஓய்வுநாளையும், பரிசுத்தத்தையும், தீட்டையும் காரணமாகச் சொல்லி அவர்கள் இயேசுகிறிஸ்துவை மேலும் அதிகமாய் துன்பப்படுத்த வகைதேடுகிறார்கள்.  ஒரு பாவமும் செய்யாத இயேசுகிறிஸ்துவைச்  சிலுவையில் அறைந்ததற்காக அவர்கள் சிறிதும் மனவேதனைப்படவில்லை. ஆனால் ஓய்வுநாளின்போது அவருடைய சரீரம் சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்குமோ  என்று வேதனைப்படுகிறார்கள். 


அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தது. மறுநாள் பெரிய ஓய்வுநாளாகும்.  இது பண்டிகையின் பிரதான ஓய்வுநாள். இந்த ஓய்வுநாளும், வாரத்தின் ஓய்வுநாளும் வெவ்வேறானவை. வாரத்தின் ஓய்வுநாள் மேலும் இரண்டு நாள் கழித்து வருகிறது.  ""இரவிலே பிரேதம் மரத்திலே தொங்கலாகாது'' என்று யூதருடைய பிரமாணம் கூறுகிறது.  



ஒரு குற்றவாளியைச் சிலுவை மரத்தில் தொங்கவிடும்போது அந்த நபரை விரைவாகச் சாகவைப்பதற்காக அந்த நபருடைய காலெலும்புகளை முறிக்கும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது.  ஆனால் இயேசு கிறிஸ்துவின் காலெலும்புகளை அவர்கள் முறிப்பதற்கு முன்பாகவே அவர் மரித்துவிட்டார். ஆகையினால் அவருடைய காலெலும்புகளைப் போர்ச்சேவகர் முறிக்கவில்லை.             



காலெலும்புகள்



அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள் (யோவா 19:32).  



காலெலும்புகளை முறிக்கும்படிக்கு யூதர்கள் உத்தரவு கேட்டுக்கொண்டதற்கு, பிலாத்து உத்தரவு கொடுக்கிறான். பிலாத்துவின் உத்தரவுப் பிரகாரம் போர்ச்சேவகர் வந்து சிலுவையில் அறையப்பட்டிருக்கும் கள்ளர்களுடைய கால் எலும்புகளை முறிக்கிறார்கள். யூதர்கள் விரும்பிய பிரகாரமாகவே பிலாத்து அவர்களுக்கு உத்தரவு கொடுக்கிறான். சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்ளர்களில் ஒருவன் மனந்திரும்பியிருக்கிறான். மற்றொருவனோ இன்னும் மனந்திரும்பவில்லை. 



இயேசுகிறிஸ்து  மனந்திரும்பிய  கள்ளனைப்பார்த்து ""இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய்'' என்று வாக்குப்பண்ணியிருக்கிறார். இவனுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் ஆசீர்வாதமானதாக இருந்தாலும், இவனும் மற்ற கள்ளனைப்போலவே மிகுந்த வேதனையோடு மரிக்கிறான். இவனைப்போலத்தான் இந்த உலகத்தில் நல்லோருக்கும் பொல்லாருக்கும்  மரணம் வரும். நன்மையும் தீமையும் ஒன்றுபோலவே சம்பவிக்கும். நாம் மரித்த  பின்பு  பரலோகம் போவதற்கு ஆயத்தமாகயிருக்கிறோம். என்றாலும் நமக்கும்  வேதனையான மரணம் வருவதற்கு வாய்ப்புள்ளது. 



இரத்தமும் தண்ணீரும்



 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது (யோவா 19:33,34). 



சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் இயேசுகிறிஸ்து மரித்துப்போய்விட்டாரா அல்லது  இன்னும் உயிரோடிருக்கிறா என்பதை போர்ச்சேவகர்கள் சோதித்தறிகிறார்கள். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து அவர் மரித்துப்போயிருக்கிறதைக் காண்கிறார்கள். ஆகையினால் அவருடைய காலெலும்புகளை அவர்கள் முறிக்கவில்லை. சாதாரணமாக ஒருவர்  சிலுவையில் அறையப்படும்போது, அவர் எவ்வளவு சீக்கிரத்தில் மரிப்பாரோ, அதைவிட சீக்கிரமாகவே இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்துப்போகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய ஜீவனையே ஒப்புக்கொடுத்தாரென்பதை பிரத்தியட்சமாகக் காண்பிப்பதற்காகவே அவருக்கு மரணமுண்டாயிற்று. அவர் தம்மை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். ஆனாலும் மரணம் அவரை  ஜெயிக்கவில்லை. இயேசுகிறிஸ்து தம்முடைய சரீரத்தில் மெய்யாகவே மரித்துப்போனார். இதைப் பார்த்தபோது அவருடைய சத்துருக்களுக்கு சந்தோஷமும், சமாதானமும், திருப்தியும் உண்டாயிற்று. 


இயேசுகிறிஸ்து மெய்யாகவே சிலுவையில் மரித்துப்போய்விட்டாரா என்னும் சந்தேகம் போர்ச்சேவகரில் ஒருவனுக்கு உண்டாயிற்று. ஆகையினால் அவன் இயேசுகிறிஸ்துவினுடைய விலாவில் ஈட்டியினாலே குத்துகிறான். உடனே  அவருடைய சரீரத்திலிருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டு வருகிறது. 


தங்களுடைய சந்தேகத்தைப் போக்குவதற்காகவே, போர்ச்சேவகரில் ஒருவன்  இயேசுகிறிஸ்துவின் விலாவிலே ஈட்டியால் குத்துகிறான். மற்ற இரண்டு கள்ளரையும்  போர்ச்சேவகர்கள் ஈட்டியினால் அவர்களுடைய விலாவில் குத்தவில்லை. இயேசுகிறிஸ்துவுக்கு மாத்திரமே இந்த விசேஷித்த காயம் உண்டாயிற்று. கள்ளர்களுடைய காலெலும்புகள் முறிக்கப்பட்டது. இயேசுகிறிஸ்துவின் காலெலும்புகளோ முறிக்கப்படவில்லை. யூதமார்க்கத்து வரலாற்றின் பிரகாரம், இயேசுகிறிஸ்துவின் விலாவில் குத்திய போர்ச்சேவகனுக்கு ""லாங்கினஸ்'' என்பது பெயராகும். 


தேவனுடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாகவே, போர்ச்சேவகரில் ஒருவன் இயேசுகிறிஸ்துவின் விலாவிலே ஈட்டியினால் குத்துகிறான். அவர் மெய்யாகவே தம்முடைய சரீரத்தில் மரித்துப்போனார் என்பதை உறுதிபண்ணுவதற்காகவே இந்தச் சம்பவம் நடைபெறுகிறது. மூன்றாம் நாளில் இயேசுகிறிஸ்து மறுபடியும் உயிரோடு எழும்பப்போகிறார். அவர் உயிர்த்தெழுவதற்கு முன்பாக, அவருடைய மரணம் உறுதிபண்ணப்படுகிறது. அவர் மெய்யாகவே தம்முடைய சரீரத்தில் மரித்துப்போனார். அவரை விலாவிலே ஈட்டியினால் குத்தியதினால் அவருடைய சரீரத்திலிருந்து ஜீவஊற்றுப் புறப்பட்டு வருகிறது. இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம் தேவனுடைய தெய்வீக திட்டமாகும். அவருடைய மரணத்தில் தேவனுடைய ரகசியம் அடங்கியிருக்கிறது. 



இயேசுகிறிஸ்துவின் மரணம் பிரத்தியட்சமாக நடைபெற்ற ஒரு சம்பவம். அவருடைய மரணமே ஒரு அற்புதம். இயேசுகிறிஸ்துவின் மரணம் மிகவும் விசேஷித்த மரணமாகும். இயேசுகிறிஸ்துவின் மரணத்தைப்பற்றி யோவான் தன்னுடைய நிருபத்தில் எழுதுகிறபோது ""இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.  பரலோகத்திலே  சாட்சியிடுகிறவர்கள்  மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது'' (1யோவா 5:6-8) என்று எழுதியிருக்கிறார்.


இயேசுகிறிஸ்துவின் விலா எலும்பு குத்தப்படுவதும் ஒரு விசேஷித்த சம்பவமாகும்.  பல சமயங்களில் நம்முடைய இருதயத்தின் சிந்தனை நமக்கே தெரியாமலிருக்கும். நம்முடைய மனச்சாட்சிக்குள் போராட்டம் உண்டாகும். நம்முடைய இருதயத்தின் சிந்தனையை நோக்கிப் பார்த்தால் நமக்கு நலமாகயிருக்குமே என்று நாம் எதிர்பார்ப்போம்.  நம்முடைய இருதயம் மற்றவர் பார்க்கும் வண்ணமாக, அதில் ஒரு திறப்பு இருக்குமென்றால், நம்முடைய இருதயத்தின் சிந்தனைகளை எல்லோரும் பார்த்துக்கொள்ளலாம். அப்படிப்பட்ட திறப்பு மனுஷருடைய இருதயத்திற்குக் கொடுக்கப்படவில்லை. 



ஆனால் இயேசுகிறிஸ்துவின் விலாவில்  ஈட்டியினாலே குத்தப்பட்டிருப்பதினால், அவருடைய இருதயத்திற்கு ஒரு திறப்பு உண்டாயிருக்கிறது. அந்தத் திறப்பின் வழியாக  இயேசுகிறிஸ்து நம்மீது வைத்திருக்கும் அன்பை நாம் காணலாம். கல்வாரி சிலுவையில் அவர் அனுபவித்த மரண வேதனையை அந்தத் திறப்பின் வழியாக நாம் பார்த்துப் புரிந்துகொள்ளலாம்.  இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தினவுடனே, அதிலிருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டு வருகிறது. 



இரத்தமும் தண்ணீரும் கர்த்தரை விசுவாசிக்கிற நமக்கு மிகவும் விசேஷமானதாகும். இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனுடைய சமுகத்திற்கு வந்திருக்கும் விசுவாசிகளாகிய நம்மை கர்த்தர் தம்முடைய இரத்தத்தினாலும் தண்ணீரினாலும் ஆசீர்வதிக்கிறார். இரத்தம் பாவநிவாரணத்திற்காகச் சிந்தப்படுகிறது. தண்ணீர் சுத்திகரிப்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது. நம்முடைய மனச்சாட்சியிலுள்ள அசுத்தங்களையும் குற்றவுணர்வுகளையும் இரத்தத்தினால் கழுவி சுத்திகரிக்கவேண்டும். நம்முடைய பாவக்கறைகளெல்லாம் தண்ணீரினால் கழுவி  சுத்திகரிக்கவேண்டும். இவை இரண்டுமே சேர்ந்து நடைபெறவேண்டும். பாவமன்னிப்பும் சுத்திகரிப்பும் இணைந்து கிரியை செய்தால்தான்  நம்முடைய ஜீவியம் பரிசுத்தமாகயிருக்கும். 



இயேசுகிறிஸ்து இவ்விரண்டு சம்பவங்களையும் ஒன்றாக இணைக்கிறார். ஆகையினால்தான் அவருடைய விலாவில் ஈட்டியால் குத்தியவுடனே இரத்தமும்  தண்ணீரும்  சேர்ந்து புறப்பட்டு வருகிறது. நம்முடைய இரட்சகரின் சரீரத்தில், குத்தப்பட்ட இடத்திலிருந்து இவை இரண்டும் புறப்பட்டு வருகிறது.  இரத்தமும் தண்ணீரும் கர்த்தருடைய பந்திக்கும், தண்ணீர் ஞானஸ்நானத்திற்கும் அடையாளமாகும். வெண்கலத் தொட்டியிலுள்ள தண்ணீரினால் நாம் சுத்தரிகப்படவில்லை.  மறுஜென்ம முழுக்கினால் சுத்திகரிப்படுகிறோம்.  இயேசுகிறிஸ்துவின் விலாவிலிருந்து புறப்பட்டு வருகிற தண்ணீரினாலே நாம் சுத்திகரிப்படுகிறோம். நமக்கு இந்தத் தண்ணீரினால் மறுஜென்ம முழுக்கு கொடுக்கப்படுகிறது.  கர்த்தருடைய பந்தியின்போது திராட்சரசத்தினால்  நம்முடைய ஆத்துமா சுத்திகரிகப்படுவதில்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் விலாவிலிருந்து  புறப்பட்டு வருகிற இரத்தத்தினாலே நம்முடைய ஆத்துமா சுத்திகரிக்கப்படுகிறது. 



கண்டவன் சாட்சி கொடுக்கிறான்



அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய       சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருந்தான்

  (யோவா 19:35). 



இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட சம்பவத்தை அப்போஸ்தலனாகிய யோவான் தன்னுடைய கண்களால் கண்டவன். அவன் அதைக்குறித்து சாட்சிகொடுக்கிறான். இவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது. தான் கண்டதைக் குறித்து மாத்திரமே அவன் சாட்சியாய் அறிவிப்பதினால்  அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது. அவனுடைய சாட்சியை நாம் விசுவாசிக்கும்படி, அவன் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான். தான் கண்டதின் ஒரு பகுதியை மாத்திரம் யோவான் சொல்லாமல், தான் கண்டதை முழுவதுமாகச் சொல்லுகிறான்.  முழுசத்தியத்திற்கும் சாட்சிகொடுக்கிறான்.



சத்திய ஆவியானவர் ஏவுகிற பிரகாரம் யோவான் இந்த சுவிசேஷத்தை எழுதியிருக்கிறான். ஆகையினால் இவனுடைய வார்த்தைகள் மெய்யாயிருக்கிறது. தான் சொல்லுவது மெய்யென்று யோவான் அறிந்திருக்கிறான். நாம் சுவிசேஷத்தை விசுவாசிக்க வேண்டுமென்பதற்காகவே யோவான் தான் கண்டதைச் சாட்சியாக அறிவிக்கிறான்.



இயேசுகிறிஸ்து சிலுவையில் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்ததையும், மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழும்பினதையும் ஒரு சிலர் விசுவாசிப்பதில்லை. அவர்கள் தங்கள் விசுவாசத்தில் பலவீனராக இருக்கிறார்கள். அவர்களுடைய விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்விதமாக யோவான் தான் கண்டதை சாட்சியாக அறிவிக்கிறான். இயேசுகிறிஸ்துவின் விலாவிலிருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டு வருகிறது. நம்மை நீதிமான்களாக்குவதற்கும் பரிசுத்தப்படுத்துவதற்கும் இயேசுகிறிஸ்துதாமே  தம்முடைய இரத்தத்தையும் தண்ணீரையும் சிந்துகிறார். இந்தச் சத்தியத்தை நாம் நம்பவேண்டும். இந்தச் சம்பவத்தைக் கண்டவன் சாட்சி கொடுப்பதினால், அவன் சாட்சியை ஏற்றுக்கொண்டு, நாம் இந்தச் சம்பவத்தை நம்பும்போது நமது ஆத்துமாவுக்கும் ஆவிக்கும் ஆசீர்வாதமாயிருக்கும். 



எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை



 அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது

  (யோவா 19:36).



சிலுவையில் தொங்குகிறவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கு யூதர்கள் பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டுக்கொள்கிறார்கள். அந்தப்படி போர்ச்சேவகர் இரண்டு கள்ளரின் காலெலும்புகளை முறித்துப் போடுகிறார்கள். ஆனால் அவர்கள் இயேசுகிறிஸ்துவின் காலெலும்புகளை முறிக்கவில்லை. வேதவாக்கியம் நிறைவேறும்படியாகவே இயேசுகிறிஸ்துவினுடைய காலெலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படாமலிருக்கிறது. நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும். கர்த்தர் அவர்களெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார். அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை (சங் 34:19,20).



எண்ணாகமம் புஸ்தகத்தில் பஸ்கா ஆட்டுக்குட்டியைப்பற்றி ""அதில் ஒரு எலும்பையும் முறிக்காமலும், பஸ்காவினுடைய சகல முறைமைகளின்படியும் அதை ஆசரிக்கக்கடவர்கள்'' (எண் 9:12) என்று எழுதப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவே நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாக இருக்கிறார். அவரே உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவஆட்டுக்குட்டி (யோவா 1:29). வேதவாக்கியத்தில் எழுதியிருக்கிற பிரகாரமாக, தேவஆட்டுக்குட்டியான இயேசுகிறிஸ்துவின் எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படாமலிருக்கிறது. 



இயேசுகிறிஸ்துவின் எலும்புகள் முறிக்கப்படாமலிருப்பதில் ஆவிக்குரிய சத்தியம் இருப்பதாக வேதபண்டிதர்கள் வியாக்கியானம் சொல்லுகிறார்கள். சரீரத்திற்கு எலும்புகளே பெலனாகயிருக்கிறது. அவர் தம்முடைய பலவீனத்தில் சிலுவையில் அறையப்பட்டாலும், அவருடைய பெலன் முறிக்கப்படவில்லை. நம்மை இரட்சிக்கும் தேவவல்லமை அவரிடத்திலிருந்து முறித்துப்போடப்படவில்லை. பாவம் நம்முடைய எலும்புகளை முறிக்கிறது. இயேசுகிறிஸ்துவிடமோ ஒரு பாவமுமில்லை.  ஆகையினால் பாவத்தினால் இயேசுகிறிஸ்துவின்  எலும்புகளை முறிக்கமுடியவில்லை. இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தாலும், அவருடைய சரீரத்திலிருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டு வந்தாலும், அவர் எலும்புகள் முறிக்கப்படாதவராக, நம்மை இரட்சிப்பதற்கு பெலமுள்ளவராக இருக்கிறார்.  



தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் 



அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது (யோவா 19:37).



கல்வாரி சிலுவையில் இயேசுகிறிஸ்து தொங்கிக்கொண்டிருக்கும்போது, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக அவருக்கு ஒவ்வொரு சம்பவமாக நடைபெறுகிறது. இயேசுகிறிஸ்துவின்  எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை  என்பது வேதவாக்கியத்தின் நிறைவேற்றமாகும்.  வேறொரு வேதவாக்கியமும் இந்த சமயத்தில் நிறைவேறுகிறது. ""தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள்'' என்னும் வேதவாக்கியம் நிறைவேறுவதாக யோவான் எழுதுகிறார். இந்த வாக்கியத்தை சகரியா தீர்க்கதரிசி இவ்வாறு முன்னறிவிக்கிறார். ""நான் தாவீது குடும்பத்தாரின் மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்'' 

(சக 12:10). 



இயேசுகிறிஸ்து குத்தப்படுகிறாரென்பது  இந்த வாக்கியத்திலிருந்து தெளிவாகிறது. இயேசுகிறிஸ்து தம்முடைய விலாவிலே ஈட்டியினால் குத்தப்படுகிறார். அது மாத்திரமல்ல அவருடைய கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் குத்தப்படுகிறார். பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படும்போது, அவர்கள் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள். அதைப் பார்த்துப் புலம்புவார்கள். இயேசுகிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்தவர்களும், அவரைச் சிலுவையில் அறைவதற்கு துணைபோனவர்களும், இயேசுகிறிஸ்துவை நோக்கிப்பார்த்து தங்கள் இருதயத்தில் குத்தப்படுவார்கள். இயேசுகிறிஸ்துவை மேசியா என்று விசுவாசிப்பார்கள். 



தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைக் கல்வாரி சிலுவையிலே குத்துகிற குற்றத்தைச் செய்கிறோம். நாம் குத்திய இயேசுகிறிஸ்துவை நோக்கிப்பார்த்து மனந்திருந்தவேண்டும். நமக்காகத் தம்முடைய ஜீவனையே ஒப்புக்கொடுத்த இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூரவேண்டும். 



அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு



இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான் (யோவா 19:38).



இயேசுகிறிஸ்துவின் சரீரம் கல்லறையில் அடக்கம்பண்ணப்படும் சம்பவம் இந்த வசனப்பகுதியில் எழுதப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டாலும் மூன்றாம் நாளில் உயிரோடு எழும்புகிறார். கல்லறையினால் அவரை காவல்வைத்திருக்க முடியவில்லை. அவருடைய கல்லறை வெறுமையாகவே இருக்கிறது. இயேசுகிறிஸ்து அடக்கம்பண்ணப்பட்ட கல்லறை அவருக்குச் சொந்தமானதல்ல. அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புக்குச் சொந்தமானது.  இரவலாக வாங்கப்பட்ட அந்தக் கல்லறையில் இயேசுகிறிஸ்துவின் சரீரம் தற்காலிகமாக அடக்கம்பண்ணப்படுகிறது.


அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பைப்பற்றி, இயேசுகிறிஸ்து அடக்கம்பண்ணப்படுவதைப்பற்றி எழுதப்பட்டிருக்கும் வசனப்பகுதியில் மாத்திரமே எழுதப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாட்டில் வேறு எங்கும் இவனைப்பற்றிய குறிப்பு காணப்படவில்லை. இவன் இயேசுகிறிஸ்துவுக்கு  அந்தரங்க சீஷனாகயிருக்கிறான். இயேசுகிறிஸ்துவுக்கு சிநேகிதன்தான். ஆனால்  தன்னை இயேசுவின் சீஷனென்று இவன் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. இயேசுகிறிஸ்துவின் சீஷனாகயிருப்பது இவனுக்குக் கிடைத்திருக்கும் சிலாக்கியம். ஆனால் இந்தச் சிலாக்கியத்தை அனுபவிக்காமல் இவன் இயேசுகிறிஸ்துவுக்கு அந்தரங்க சீஷனாகவே இருக்கிறான்.


ஒரு சிலர் சமுதாயத்தில் நல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் தீயவர்களோடு கூட்டுச் சேர்ந்திருப்பார்கள். இது அவர்களுடைய பலவீனம். வேறு வழியில்லாமல் இவர்கள் தீயவர்களோடு  சேர்ந்திருப்பார்கள். அரிமத்தியா ஊரானாகிய யோசேப்போ இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவனாகயிருக்கிறான். ஆனால் அவருக்கு அந்தரங்க சீஷனாகயிருக்கிறான்.  இயேசுகிறிஸ்துவைவிட்டு விலகியிருப்பதைவிட, அவருக்கு அந்தரங்க சீஷனாகயிருப்பது பரவாயில்லை. ஆயினும் வெளிப்படையான சீஷனாகயிருந்தால்தான் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை முழுமையாகப் பெற்று அனுபவிக்கமுடியும். யோசேப்பைப்போல அந்தரங்க சீஷராகயிருக்கிறவர்கள், தங்களுடைய விசுவாசத்தில் நாளுக்குநாள் வளர்ச்சிப்பெற்று,  ஏற்றவேளை வரும்போது தங்களை இயேசுவின் சீஷரென்று எல்லோருக்கும் முன்பாக வெளிப்படுத்துவார்கள்.  



ஒரு சில விசுவாசிகளுக்கு சிறிய சோதனை வந்தாலே பயந்துவிடுவார்கள். ஆனால் வேறுசிலரோ எவ்வளவு பெரிய சோதனை வந்தாலும் அதைத் தாங்கிக்கொண்டு  கிறிஸ்துவுக்குத் தைரியமாக சாட்சிகளாயிருப்பார்கள். யோசேப்பு யூதருக்குப் பயந்ததினால் இயேசுகிறிஸ்துவின் அந்தரங்க சீஷனாகயிருக்கிறான். ஆனாலும் அவன் பிலாத்துவுக்குப் பயப்படவில்லை. பிலாத்துவினிடத்தில் தைரியமாகப் பேசுகிறான்.   


யோசேப்பைப்போலவே ஒரு சிலர்  பயம் நிறைந்தவர்களாகவும், கூச்ச சுபாவமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்கள்கூட வேளைவரும்போது எழும்பிப் பிரகாசிப்பார்கள். ஒரு சிலர் ஒன்றுமே பேசாமல் மறைந்திருப்பார்கள். வேளை வரும்போது தைரியமாகப் பேசுவார்கள்.


அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புக்கு  பிலாத்துவினிடத்தில் போய் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை சிலுவை மரத்திலிருந்து இறக்கி அடக்கம்பண்ணுவதற்கு, தன்னால் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்யவேண்டுமென்று  இந்த யோசேப்பு விரும்புகிறான்.  இயேசுகிறிஸ்துவின் சீஷர்களெல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போய்விடுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் சரீரத்தைச் சிலுவை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையில் அடக்கம்பண்ணுவதற்கு ஒருவரும் முன்வரவில்லையென்றால், போர்ச்சேவகர்களோ  அல்லது யூதர்களோ, கள்ளர்கர்களின் சரீரங்களோடு சேர்த்து இயேசுவின் சரீரத்தையும் அடக்கம்பண்ணுவார்கள்.



 தேவன் ஒரு காரியத்தைச் செய்ய தீர்மானித்திருக்கும்போது, அதை அவர் நேர்த்தியாகவும் முறையாகவும் செய்து முடிக்கிறவர். யூதமார்க்கத்துத் தலைவர்கள் இயேசுகிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனாக அங்கீகரியாமல்போனாலும், அவர் மெய்யாகவே  தேவனுடைய குமாரனாகவே இருக்கிறார். யூதர்கள் அவரைக் கனப்படுத்தவில்லையென்றாலும், இயேசுகிறிஸ்து கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரராகவே இருக்கிறார். தம்முடைய தெய்வீக திட்டத்தின் பிரகாரமாக, சிலுவையில் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்த இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை, மிகுந்த கண்ணியத்தோடு அடக்கம்பண்ணுவதற்கு பிதாவாகிய தேவன்  ஆவனசெய்கிறார்.



இயேசுகிறிஸ்துவின் சரீரம் சிலுவை மரத்திலிருந்து இறக்கப்படுகிறது. நூறு ராத்தல்   வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து அவருடைய சரீரத்தில் சேலையினால் சுற்றிக்கட்டப்படுகிறது. இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரனாகயிருந்தாலும், அவருடைய சரீரத்தைச் சிலுவையிலிருந்து இறக்குவதற்கு தேசாதிபதியின் அனுமதி தேவைப்படுகிறது. அவன் ஒரு புறஜாதியான்.  அவன் இரக்கப்பட்டு அனுமதிகொடுத்தால் மாத்திரமே, இயேசுவின் சரீரத்தை சிலுவையிலிருந்து இறக்கமுடியும். இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை அடக்கம்பண்ணுவதற்கு முன்பாக, தேசாதிபதியினிடத்தில் கிறிஸ்துவின்      சரீரத்தைக்  கெஞ்சி விண்ணப்பம்பண்ணி கேட்டுப்பெற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. 



அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு என்பவன் இயேசு கிறிஸ்துவின் இரகசிய சீஷர்களில் ஒருவன். ஆலோசனைச் சங்கத்தில் இவனும் ஒரு அங்கத்தினர். இவனுடைய சொந்த ஊர் ராமா  செப்துவஜிந்தில் இந்த ஊர் அர்மதாயீம்  என்று அழைக்கப்படுகிறது. 



நிக்கொதேமு



ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்  (யோவா 19:39).



இயேசுகிறிஸ்துவின் சரீரத்தைச் சிலுவையிலிருந்து இறக்குவதற்கு அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு உதவி செய்கிறான். அவருடைய சரீரத்தில் சுகந்த வர்க்கமிடுவதற்கு  நிக்கொதேமு என்பவன் உதவிபுரிகிறான். 

இவன் யூதருடைய ஆலோசனைச்சங்கத்தில் ஒருவன்.  ஆரம்பத்தில் ஒரு இராத்திரியில் இவன் இயேசுவினிடத்தில் வந்து நித்திய ஜீவனைப்பற்றி  விவரம் கேட்டான். இவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு ராத்தல் கொண்டு வருகிறான். நிக்கொதேமுவும்  அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும் இயேசுவுக்கு அந்தரங்க சீஷர்களாகவே இருக்கிறார்கள். 


ஆரம்பத்தில் நிக்கொதேமு இயேசுகிறிஸ்துவைப் பார்ப்பதற்காக இராத்திரியிலே வந்தான் (யோவா 7:50,51).  யூதருக்குப் பயப்பட்டதினால் யாருக்கும் தெரியாமல் அவன் ரகசியமாக இயேசுவினிடத்தில் வந்தான். ஆனால் இப்போதோ எல்லோருக்கும் முன்பாக வெளிப்படையாக இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை அடக்கம்பண்ணுவதற்கு முன்வருகிறான். ஆரம்பத்தில் இவனுடைய விசுவாசம் பலவீனமாகயிருந்தது. இப்போது பலப்பட்டிருக்கிறது. நெரிந்த நாணலைப்போல  இருந்த இவனுடைய விசுவாசத்தை கர்த்தர் முறித்துப்போடவில்லை. இப்போதோ கேதுரு மரத்தைப்போல விசுவாசத்தில் பலமுள்ளவனாகயிருக்கிறான்.  



அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும்  நிக்கொதேமுவும், இதற்கு முன்பு இயேசுகிறிஸ்துவுக்காகப் பிலாத்துவினிடத்தில்  பரிந்துபேச முன்வரவில்லை. பிலாத்து இயேசுகிறிஸ்துவை விசாரித்துக்கொண்டிருக்கும்போது இவர்கள் இருவரும் எங்கே இருந்தார்களென்று தெரியவில்லை. இயேசுகிறிஸ்துவின் சரீரத்தைப் பிலாத்துவினிடத்தில் கேட்டுப்பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக, கிறிஸ்துவின் ஜீவனை பிலாத்துவினிடத்திலிருந்து விடுவிப்பதற்கு முன்வந்திருந்தால் அது இவர்களுக்கு மேன்மையாக இருந்திருக்கும்.  


கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் யாருக்காவது உதவிபுரியவேண்டுமென்றால், அவர்கள் உயிரோடிருக்கும்போதே அந்த உதவியை அவர்களுக்குச் செய்யவேண்டும். அவர்கள் செத்துப்போனபின்பு அவர்களுடைய அடக்க ஆராதனைக்கு உதவி செய்வதைவிட, அவர்கள் உயிரோடிருக்கும்போது அவர்களுக்கு உதவிபுரிந்தால் அது நலமாயிருக்கும்.



அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புக்கு  பிலாத்துவினிடத்தில் செல்வாக்கு இருக்கிறது.  தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறான். இயேசுகிறிஸ்துவின் சரீரத்தைச் சிலுவையிலிருந்து இறக்கி  எடுத்துக்கொண்டுபோய் அடக்கம் பண்ணுவதற்கு, பிலாத்துவினிடத்தில் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி உத்தரவு பெற்றுக்கொள்கிறான். 



நிக்கொதேமுவோ தன்னுடைய பணத்தினால் இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்தான். ஒருவேளை இவ்விரண்டு பேரும் சேர்ந்து, இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை அடக்கம்பண்ணுவதற்கு, கூட்டாகச் செயல்படலாம். தாங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்யவேண்டுமென்று இவர்கள் ஏற்கெனவே பேசி தீர்மானம் செய்திருக்கலாம். ஏனெனில்  இயேசுவின் சரீரத்தை அடக்கம்பண்ணுவதற்கு இவர்களுக்கு சொற்ப காலமே இருக்கிறது. 



இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை அடக்கம்பண்ணுவதில் இவர்கள் இருவரும் ஆர்வமாயிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து மரித்தாலும் மூன்றாம் நாளில் உயிரோடு எழும்பப்போகிறார். அவரை அடக்கம்பண்ணினாலும், அடக்கம்பண்ணாமல் அப்படியே விட்டுவிட்டாலும் அவர் உயிரோடு எழும்பிவிடுவார். ஆகையினால் அவரை அடக்கம்பண்ணவேண்டிய அவசியமில்லை என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். 



இயேசு இந்த உலகத்தில் ஒரு வழிப்போக்கரைப்போல சிறிதுகாலம் வந்திருந்தார். இப்போது தம்முடைய பரலோகத்திற்குத் திரும்பிப்போகப்போகிறார்.  அப்படிப்பட்டவருக்கு கல்லறை தேவையில்லையென்றும், சிலர் சொல்லுகிறார்கள். ஒரு இரவு அல்லது இரண்டு இரவுகள் அவருடைய சரீரத்தை எங்காவது விட்டு வைத்திருந்தால்கூட, அவர் உயிர்த்தெழுந்துவிடுவார் என்றும் இவர்கள் சொல்லுகிறார்கள். ஆகையினால் யோசேப்பும் நிக்கொதேமுவும் இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை  அடக்கம்பண்ணுவதற்கு செய்த முயற்சிகள் தேவையற்றது என்பது இவர்களுடைய கருத்து. 



யோசேப்பும் நிக்கொதேமுவும் மெய்யாகவே  இயேசுகிறிஸ்துவின்மீது தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். இவர்களுடைய அன்பு பெலமுள்ளது. இயேசுகிறிஸ்துவின் வார்த்தைக்கும், அவருடைய ஆள்தத்துவத்திற்கும் இவர்கள் அதிகமுக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவுக்குத் தங்களால் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்ய முன்வருகிறார்கள். கிறிஸ்துவுக்கு தங்களுடைய மதிப்பையும் மரியாதையும் காண்பிக்கிறார்கள். இவர்கள் செய்ததது மெய்யாகவே இயேசுகிறிஸ்துவின் குடும்பத்தாருக்குப் பேருதவியாக இருக்கிறது. அவர் கள்ளர்களில் ஒருவரைப்போல சிலுவையில் அறையப்பட்டாலும், இப்போது அவர் ஒரு பெரிய மனிதரைப்போல அடக்கம்பண்ணப்படுகிறார். 



யோசேப்பும் நிக்கொதேமுவும் இயேசுகிறிஸ்துவை அடக்கம்பண்ணினாலும், அவர் உயிர்த்தெழுவாரென்றும் அவர்கள் விசுவாசிக்கிறார்கள். பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனுடைய சரீரத்தைக் கனப்படுத்த  சித்தங்கொண்டிருக்கிறார். தேவனுடைய தெய்வீக தீர்மானத்தின் பிரகாரமாக இவர்கள் இருவரும் கிறிஸ்துவின் சரீரத்தை மகிமைப்படுத்துகிறார்கள். 



நிக்கொதேமு இயேசு கிறிஸ்துவிடம் முதலாவது வரும்போது, இராத்திரியிலே வந்தான் என்று வாசிக்கிறோம். இப்போது, அவனிடத்தில் பயமோ, வெட்கமோ இல்லை. வெளிப்படையாக வருகிறான். 



 மரித்தோரின் சடலங்களை அடக்கம் பண்ணும்போது, சரீரத்தின் துர்நாற்றம் வெளியே வராமல் இருப்பதற்காக அந்தச் சரீரத்தில் வாசனைத் திரவியங்களைத் தடவுவது வழக்கம். இறந்தவர் மரியாதைக்குரியவராக இருந்தால், வாசனைத்திரவியங்களை அதிகமான அளவு கொண்டு வருவார்கள். இந்த வசனத்தில்  நிக்கொதேமு நூறு இராத்தல் கொண்டு வந்தான் என்று வாசிக்கிறோம். சாதாரண சரீரத்தை அடக்கம் பண்ணுவதை விட, இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை அடக்கம் பண்ணுவதற்கு அதிக அளவில் வாசனைத் திரவியத்தைக் கொண்டு வருகிறார்கள். நிக்கொதேமுவைத் தவிர, ஸ்திரீகளும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு வந்தார்கள்.  கரியபோளம் நறுமணம் கமழும் ஒரு மரத்தின் பட்டையாகும்.   சரீரத்தை அடக்கம் பண்ணும்போது கரியபோளத்தைப் பயன்படுத்துவார்கள்.



சுகந்தவர்க்கங்கள்



அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்  (யோவா 19:40).



யோசேப்பும் நிக்கொதேமுவும் பிலாத்துவின் உத்தரவைப்பெற்று, இயேசுகிறிஸ்துவின் சரீரத்தைச் சிலுவையிலிருந்து இறக்குகிறார்கள். அவருடைய சரீரம் முழுவதும் இரத்தமாகயிருக்கிறது. அதைக் கழுவி சுத்தப்படுத்துகிறார்கள். அதன்பின்பு அவருடைய சரீரத்தை சீலைகளில் சுற்றிக்கட்டுகிறார்கள். யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே, இயேசுகிறிஸ்துவின் சரீரத்தில் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக்கட்டுகிறார்கள். 


மணவாளனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு அடக்கம்பண்ணப்படுவதற்கான கல்லறையின் வஸ்திரம் தரிக்கப்படுகிறது. நாம் கலியாண வஸ்திரத்தைத் தரித்துக்கொள்வதற்காக, அவர்  கல்லறையின் வஸ்திரத்தைத் தரித்துக்கொள்கிறார். நம்முடைய பாவங்களினிமித்தமாக நாமே மரிக்கவேண்டியவர்கள். நாமே கல்லறையில் அடக்கம்பண்ணப்பட வேண்டியவர்கள். கல்லறையின் வஸ்திரம் நமக்குத்தான் தரிப்பிக்கப்படவேண்டும். ஆனால் இயேசுகிறிஸ்துவோ கல்லறையின் வஸ்திரத்தைக்கூட தம்மீது ஏற்றுக்கொள்கிறார்.   



மரித்த சரீரங்களையும் கல்லறைகளையும்  ஜனங்கள் பார்க்கக்கூட விரும்பமாட்டார்கள்.  சிலர் இவற்றைப் பார்ப்பதற்குப் பயப்படுவார்கள்.  சிலர் இவற்றைத் தீட்டென்று சொல்லி விலகிவிடுவார்கள். மரித்த சரீரத்தின்மீது எவ்வளவுதான் சுகந்த வர்க்கங்களைக் கொட்டினாலும், அந்தச் சரீரம் மறுபடியும் உயிர்பெறாது. மரித்தோரின் பிரிவினால் வருத்தத்தோடிருக்கிறவர்களுக்கு, சுகந்தவர்க்கங்கள் சந்தோஷத்தையோ சமாதானத்தையோ தராது. 



இயேசுகிறிஸ்துவின் கல்லறையைப்பற்றி  தியானம்பண்ணும்போது, நமக்கு சந்தோஷமும் சமாதானமும் உண்டாகவேண்டும். ஏனெனில் அவர் நமக்காகவே மரித்திருக்கிறார். நாம் அவருடைய மரணத்தையோ, அல்லது அவருடைய கல்லறையையோ பார்த்து அசிங்கப்படக்கூடாது அதைத் தீட்டாகவும் நினைக்கக்கூடாது. இயேசுகிறிஸ்துவின் மரித்துப்போன சரீரத்தைத் தியானித்துப் பார்க்கும்போது, அந்தச் சரீரம் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததையும் விசுவாசத்தோடு பார்க்கவேண்டும். 



விசுவாசிகள் மரிக்கும்போது, அவர்களுடைய சரீரங்களை அடக்கம்பண்ணுவதற்கு ஆடம்பரமான அடக்க ஆராதனை அவசியமில்லை. அந்தச் சரீரத்தை  மண்ணுக்கு மண்ணாக கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் வருகையின் நாளின்போது மரித்துப்போய் அடக்கம்பண்ணப்பட்டிருக்கும் அந்தச் சரீரம் உயிர்த்தெழும் என்று விசுவாசித்து, அந்த நாளைக்காண நாம் வாஞ்சியாயிருக்கவேண்டும்.    



பரிசுத்தவான்களின் சரீரங்கள் இயேசுகிறிஸ்வோடு ஐக்கியமாயிருக்கிறது. இயேசுகிறிஸ்து தம்முடைய மரணத்திலிருந்து  உயிர்த்தெழுந்த நீதியினால், மரித்துப்போன பரிசுத்தவான்களும் உயிர்த்தெழுவார்களென்னும்  நிச்சம் உண்டாயிருக்கிறது. ஆகையினால் பரிசுத்தவான்களின் சரீரங்களை அடக்கம்பண்ணும்போது, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சரீரம் அடக்கம்பண்ணப்பட்ட சம்பவத்தையும் விசுவாசித்து நினைவுகூரவேண்டும். அதோடு அவர் உயிர்த்தெழுந்ததையும் விசுவாசித்து அறிக்கைபண்ணவேண்டும். 



எகிப்தியர்கள் இறந்தோருடைய சடலங்களைப் பாடம்பண்ணிப் பாதுகாப்பார்கள்.   யூதர்கள் எகிப்தியரைப் போன்று, சரீரங்களைப் பாடம்பண்ணுவதில்லை. மரித்தவரின் சடலத்தின்மீது வாசனைத் திரவியங்களை ஊற்றி, அதைச் சீலைகளினால் சுகந்த வர்க்கங்களுடனே சுற்றிக் கட்டி விடுவார்கள். இயேசு கிறிஸ்துவின் சரீரத்தில் இந்தச் சடங்குகளை எல்லாம் செய்ய முடியவில்லை. ஏனெனில் ஓய்வுநாள் வந்துவிடுகிறது. ஆகையினால் அவருடைய சரீரத்தில் வாசனைத் திரவியங்களை வைத்து, அபிஷேகம் பண்ண முடியவில்லை. ஓய்வுநாள் முடிந்த பிறகு, ஸ்திரீகள் வாசனைத் திரவியங்களோடு வருகிறார்கள்.  இரண்டு கால்களையும், கைகளையும் சீலைகளினால் சுற்றுவார்கள். முகத்தை ஒரு துணியால் மூடுவார்கள்.  



புதிய கல்லறை



அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது  (யோவா 19:41). 



இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டம் இருக்கிறது. இந்தத் தோட்டம் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புக்குச் சொந்தமானது. இந்தத் தோட்டத்தில் ஒரு புதிய கல்லறையும் இருக்கிறது.  இந்தக் கல்லறையில் இதுவரையிலும் யாருடைய சரீரத்தையும் வைத்து அடக்கம்பண்ணவில்லை.   


இயேசுகிறிஸ்துவின் சரீரம் நகரத்திற்குப் புறம்பே அடக்கம்பண்ணப்படுகிறது. இது யூதர்களின் வழக்கம். யூதர்கள் தங்களில் மரித்தோரை நரகத்திற்கு புறம்பேதான் அடக்கம்பண்ணுவார்கள். யூதர்களில் யாராவது  கல்லறையைத் தொட்டால் அது அவர்களுக்குத் தீட்டாகக் கருதப்படும். ஆகையினால் யூதர்கள் யாரும் கல்லறைக்கு அருகாமையில் போகமாட்டார்கள். கல்லறையைத் தொடமாட்டார்கள். தொட்டால் யூதருடைய மார்க்கச் சடங்குகளின் பிரகாரம் அவர்கள் தங்களைச் சுத்திகரிப்புச் செய்யவேண்டும். 


ஒரு சாதாரண மனுஷரைப்போலவே இயேசுகிறிஸ்துவின் சரீரமும் கல்லறையில் அடக்கம்பண்ணப்படுகிறது. சாதாரண ஜனங்களுடைய சரீரங்கள் கல்லறைகளில் அடக்கம்பண்ணப்படும்போது, அந்தச் சரீரங்கள் கல்லறையிலேயே இருக்கும். ஆனால் அடக்கம்பண்ணப்பட்ட இயேசுகிறிஸ்துவின் சரீரம் கல்லறையில் நித்தியமாக இருக்கப்போவதில்லை. மரித்த இயேசுகிறிஸ்து  மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருக்கிறார்.  ஆகையினால் இயேசுகிறிஸ்துவின் கல்லறையைத் தொடுவதினால் யாருக்கும் தீட்டுவந்துவிடாது. ஏனெனில் அவர் உயிரோடிருக்கிறவர்.



நாமும் பரிசுத்தவான்களின் கல்லறைகளைப் பார்க்கும்போது அதைத் தீட்டானதாக எண்ணக்கூடாது. இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்ததினால் மரித்துப்போன பரிசுத்தவான்களும் அவருடைய வருகையின்போது உயிர்த்தெழுவார்கள்.  அதுவரையிலும் பரிசுத்தவான்களின் சரீரங்கள்  அவர்களுடைய கல்லறைகளில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆகையினால் கல்லறைக்கு அருகாமையில் போவதற்கு நாம் பயப்படவேண்டியதில்லை. அங்கு அசுத்த ஆவிகள் சுற்றிக்கொண்டிருக்குமோ என்று பயப்படவேண்டியதில்லை. இப்பிரபஞ்சத்திலிருக்கும் சந்தடிகளைவிட கல்லறை அமைதியாகத்தான் இருக்கும். நாம் விசுவாசத்தோடு பரிசுத்தவான்களின் கல்லறைகள் இருக்கும் இடத்திற்குப்போகலாம். அதனால் நமக்கு ஒரு தீட்டுமில்லை. 



இயேசுகிறிஸ்து ஒரு தோட்டத்தில் அடக்கம்பண்ணப்படுகிறார். இந்தத் தோட்டத்திற்குச் சொந்தக்காரனாகிய யோசேப்பு,  தனக்காக ஒரு கல்லறையை வெட்டி வைத்திருக்கிறான். தான் மரித்துப்போன பின்பு  தன்னை அந்தக் கல்லறையில் அடக்கம்பண்ண வேண்டுமென்றும், அது ஒரு நினைவுச்சின்னமாக இருக்கவேண்டும் என்றும் தீர்மானித்து, யோசேப்பு தனக்காக அந்தக் கல்லறையைச் செய்திருந்தான். யோசேப்பு  தான் உயிரோடிருக்கும்போதே, மரித்துப்போனபின்பு  தன் சரீரத்தை அடக்கம்பண்ணுவதற்கு, ஒரு கல்லறையை ஆயத்தம்பண்ணுகிறான். 



பொதுவாக தோட்டத்திற்குள் போனால் அங்கு  தேவனைப்பற்றியும், அவருடைய வார்த்தையைப்பற்றியும் தியானிப்பதற்கு வசதியாக இருக்கும். அதிலும் அந்தத் தோட்டத்தில் கல்லறை இருக்குமென்றால், நம்முடைய மரணத்தைப்பற்றியும், நித்திய ஜீவனைப்பற்றியும் தியானிப்பதற்கு மிகவும் வாய்ப்பாக இருக்கும். யோசேப்பு மரித்தபின்பு, அவனுடைய சந்ததியார் அவனுடைய தோட்டத்திற்கு வந்து, தியானம்பண்ணுவதற்காக  ஒருவேளை தன்னுடைய கல்லறையை தோட்டத்தில் உண்டுபண்ணியிருக்கலாம். 



நம்முடைய முன்னோர்களின் கல்லறைகளைப் பார்ப்பது தவறல்ல. நல்லதுதான்.  அந்தக் கல்லறைகளுக்குப்போய், அவர்கள் உயிரோடிருக்கும்போது, அவர்கள் நமக்குச் செய்த நன்மைகளையெல்லாம் நினைவுகூரவேண்டும். அவர்கள் நமக்கு முன்மாதிரியாக ஜீவித்த நல்ல பழக்க வழக்கங்களையெல்லாம் நாம் நினைவுகூர்ந்து, நம்மிடத்திலும் நல்ல பழக்கங்களை உண்டுபண்ணிக்கொள்ளவேண்டும். மரித்தோரை வழிபடுவது தவறு. ஆனாலும் மரித்துப்போனவர்களின் நலமான ஆலோசனைகளை நாம் பின்பற்றலாம். அதில் தவறில்லை. 



தோட்டத்திலுள்ள கல்லறையில் இயேசுகிறிஸ்துவின் சரீரம் அடக்கம்பண்ணப்படுகிறது. ஏதேன் தோட்டத்தில்  ஆதாமும் ஏவாளும் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தார்கள். இதனால் மனுக்குலத்திற்கு மரணமுண்டாயிற்று. ஏதேன் தோட்டத்தில்தான் மரணமும் கல்லறையும் முதன்முதலாக வல்லமையடைந்தது. இப்போது இயேசுகிறிஸ்து அடக்கம்பண்ணப்பட்டிருக்கும் இந்தத் தோட்டத்தில் மரணம் தன்னுடைய வல்லமையை இழந்துவிடுகிறது. இயேசுகிறிஸ்து         மரணத்தை ஜெயித்தவர். 



இயேசுகிறிஸ்துவை ஒரு புதிய கல்லறையில் அடக்கம்பண்ணுகிறார்கள்.  இயேசுகிறிஸ்துவுக்கு  கனமும் மகிமையும் உண்டாகும் வண்ணமாக அவருடைய சரீரம் புதிய கல்லறையில் அடக்கம்பண்ணப்படுகிறது. கன்னிகையினிடத்தில் பிறந்தவர்,  புதிய கல்லறையிலிருந்து உயிர்த்தெழுகிறார். ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் அவன் புதுசிருஷ்டியாகிறான். எல்லாம் புதிதாகிறது. பழையவைகள் ஒழிந்துபோகிறது. இயேசுகிறிஸ்துவே எல்லாவற்றையும் புதிதாக்குகிறவர். புதிதாக்குகிற இயேசுகிறிஸ்து  புதிய கல்லறையில் அடக்கம்பண்ணப்படுகிறார்.   


இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. வேதாகமத்தில் நாம் நான்கு விதமான தோட்டங்களைக் குறித்து வாசிக்கிறோம். இவை மனுஷருடைய பாவங்களோடும், இரட்சிப்போடும் தொடர்புடையவை. அவையாவன:



    1. ஆதாமுக்கு முந்திய காலத்திலிருந்த ஏதேன் தோட்டம். இங்கு லூசிபர் ஆட்சி புரிந்து கலகம் பண்ணினான்.  (எசே 28:13) 


    2. ஆதாமின் காலத்திலிருந்த ஏதேன் தோட்டம். இங்கு ஆதாம் ஆட்சி புரிந்து கலகம் பண்ணினான். (ஆதி 2:8-3:24)


    3. கெத்செமனே தோட்டம். இங்கு இயேசு கிறிஸ்து மனுஷருடைய பாவத்தினால் வியாகுலமடைந்தார். (மத் 26:36-56)

 

    4. யோசேப்பின் தோட்டம். இயேசு கிறிஸ்து இந்தத் தோட்டத்தில் அடக்கம் பண்ணப்பட்டார். (யோவான் 19:41) 




கல்லறை சமீபமாயிருந்தது



 யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள் (யோவா 19:42).



இயேசுகிறிஸ்து பெரிய ஓய்வுநாளுக்கு  ஆயத்தநாளிலே மரித்திருக்கிறார். அந்த ஓய்வுநாளிலே கிறிஸ்துவின் சரீரம் சிலுவையில் இருக்கக்கூடாது என்று யூதர்கள் விரும்புகிறார்கள். அந்த ஆயத்த நாளிலேயே, இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை அடக்கம்பண்ணுவதற்கு, அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும், நிக்கொதேமுவும் தேவையான எல்லா காரியங்களையும் செய்து, அவருடைய சரீரத்தை தோட்டத்திலுள்ள கல்லறையில் வைக்கிறார்கள். 


யூதர்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரிக்க விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு ஆயத்தநாளிலோ எல்லா அநியாயங்களையும் அக்கிரமங்களையும் செய்கிறார்கள். ஆயத்தநாளை பிரதான ஆசாரியர் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை.  தேவாலயத்தில் நடைபெறும் எல்லா ஆராதனைகளுக்கும் தாங்களே பிரதிஷ்டைபண்ணப்பட்டிருக்கிறவர்கள் என்று பிரதான ஆசாரியர்கள் கூறுகிறார்கள்.  தங்களைப் பரிசுத்தவான்களாகக் காண்பித்துக்கொள்கிறார்கள்.  தேவாலயத்திற்குத்  தங்களைப் பொறுப்பானவர்கள்போல பிரகடனம் செய்கிறார்கள். ஆனால் தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவையோ சிலுவையில் அறைந்து கொன்றுபோடுகிறார்கள். 



தேவாலயத்தின் ஆராதனையைக் கவனிக்கிறார்கள். ஆனால் தேவாலயத்தில் ஆராதனை செய்யவேண்டிய தேவகுமாரனையே கொன்றுபோடுகிறார்கள். இயேசுகிறிஸ்துவை அவருடைய சீஷர்களையும்  தேவனுக்கும் தேவாலயத்திற்கும் சத்துருக்கள் என்று கூறுகிறார்கள். ஓய்வுநாள்  பரிசுத்தமான நாளும், மனமகிழ்ச்சியின் நாளும், ஓய்வு எடுக்கவேண்டிய நாளுமாயிருக்கிறது. இந்த  ஓய்வுநாளில் இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை அடக்கம்பண்ண பிரதான ஆசாரியர் விரும்பவில்லை. ஆகையினால் தாமதம்பண்ணாமல் ஓய்வுநாளுக்கு ஆயத்த நாளிலேயே இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை அவசரம் அவசரமாக அடக்கம்பண்ணுமாறு வற்புறுத்துகிறார்கள். 



யூதமார்க்கத்துத் தலைவர்கள் அவசரப்படுத்துவதினால், யோசேப்பும் நிக்கொதேமுவும், இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை,  அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்திற்கு சமீபமாயிருந்த ஒரு கல்லறையில் அடக்கம்பண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் சரீரம் அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் சிறிது நேரம் இறக்கி வைக்கப்பட்டிருக்கிறது. பிரதான ஆசாரியர் அவசரப்படுத்தியதினால், இயேசுவின் சரீரத்தை  வேறு இடத்திற்கு கொண்டுபோக முடியவில்லை.  ஆகையினால் அவசரம் அவசரமாக இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை அந்த இடத்திற்கு அருகாமையிலுள்ள ஒரு கல்லறையிலேயே அடக்கம்பண்ணிவிடுகிறார்கள். அந்தக்  கல்லறை புதிய கல்லறையாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை அடக்கம்பண்ணுவதற்கு இந்த இடமே தேவனுக்குச் சித்தமான இடமாயிற்று.  



  கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும்  சில காரியங்களை எப்படிச் செய்வது என்று  தெரியாமல் தவித்துக்கொண்டிருப்போம். கர்த்தருக்குச் சித்தமான காரியம் அவருடைய கையினால் நமக்கு வாய்க்கும். நாம் ஜீவனோடிருக்கும்போதும், மரிக்கும்போதும் கர்த்தருடைய சித்தத்தின்படிதான் எல்லாம் நடைபெறும். ஆகையினால் எல்லாக் காரியங்களைக் குறித்தும் நாம் அதிகமாய் கவலைப்பட்டுக்கொண்டிருக்கக்கூடாது. அதிலும் நாம் உயிரோடிருக்கும்போதே, நம்முடைய அடக்க ஆராதனை எப்படி நடைபெறுமென்றும், 

நாம் எங்கு அடக்கம்பண்ணப்படுவோமென்றும்  தேவையில்லாமல் சிந்தித்துக்கொண்டிருக்கக்கூடாது. 



தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவை எங்கு அடக்கம்பண்ணவேண்டுமென்று யோசிக்கக்கூட அவர்களுக்கு நேரமில்லை. அது ஆயத்தநாளாக இருந்தபடியினால், பிரதான ஆசாரியர் அவசரப்படுத்தியதினால், இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட இடத்திற்குச் சமீபமாயிருந்த ஒரு கல்லறையிலேயே அவருடைய சரீரத்தை அடக்கம்பண்ணுகிறார்கள். கர்த்தருடைய கிருபையினால் அந்தக் கல்லறை புதிய கல்லறையாக இருக்கிறது. 



ஆடம்பரமான அடக்க ஆராதனை எதுவும் நடைபெறாமல் இயேசுகிறிஸ்துவின் சரீரம் மிகவும் அமைதியாக, சமீபமாகயிருந்த ஒரு கல்லறையில் வைக்கப்படுகிறது. மரணத்தை ஜெயித்தவர் இந்தப் புதிய கல்லறையில் வைக்கப்படுகிறார். தேவனுடைய வல்லமையினால் மூன்றாம் நாளில் அவர் மறுபடியும் உயிரோடு எழும்புகிறார். தேவன் அவரை உயிரோடு எழுப்புகிறார். மரணம் தோற்றுப்போயிற்று. ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.  



யூதருடைய ஓய்வுநாள் நெருங்கிவிட்டது. யூதருக்கு ஓய்வுநாள் மாலை வேளையில் சூரியன் அஸ்தமனமாகும்போது ஆரம்பமாகும். இயேசு கிறிஸ்துவை அதற்குள் அடக்கம் பண்ண வேண்டுமென்று, அவசரமாக அடக்கம் பண்ணுகிறார்கள். இயேசுவை நல்ல கல்லறையில் வைத்து அவரைப் பாதுகாக்க வேண்டுமென்பது  அவருடைய சீஷரின் விருப்பம். அவர் உயிர்த்தெழுவார் என்று அவர்கள் நம்பவில்லை. ஆனால் ஓய்வுநாள் ஆரம்பமாகப் போகிறபடியினால், இயேசு கிறிஸ்துவைச் சீக்கிரம் அடக்கம் பண்ண வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார்கள். இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்த இடத்திற்கு அருகிலுள்ள கல்லறையில் அவரை அடக்கம் பண்ணுகிறார்கள். 



இயேசு கிறிஸ்துவின் கல்லறையைக் குறித்து, ஜனங்கள் வெவ்வேறு விதமான நம்பிக்கைகளைக் கொண்டிருந்தார்கள். இயேசு கிறிஸ்துவின் கல்லறை புனிதமானது. பலவிதமான அற்புதங்களை இயேசு கிறிஸ்து அந்தக் கல்லறையிலிருந்து செய்வதாக கிரேக்கரும், அர்மேனியரும் நம்பினார்கள். ஒவ்வொரு ஈஸ்டர் தினத்தின்போதும் பரலோகத்திலிருந்து ஒரு அக்கினி இந்தக் கல்லறைக்கு வரும் என்பது இவர்களுடைய நம்பிக்கை.  இந்தக்  கல்லறையிலிருந்து  ஒரு விளக்கை ஏற்றி, மரித்துப்போன மற்றவர்களுடைய கல்லறையில் வைத்தால், அவர்கள் நரகத்தின் அக்கினியிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்றும், பரலோகத்திற்குச்  செல்வார்கள்  என்றும் அவர்கள் நம்பினார்கள். ஓரளவு இயேசு கிறிஸ்துவின் கல்லறையை விக்கிரகாராதனை செய்யும் ஸ்தலம் போல மாற்றிவிட்டார்கள். 


அந்த இடத்தில் பரிசுத்த கல்லறையின் தேவாலயம்   என்று ஒரு ஆலயத்தையும் கட்டிவிட்டார்கள். சுமார் 1,400 வருஷங்களாக இந்த விக்கிரகாராதனை முறைமை நடைபெற்று வந்தது. இந்த ஆலயம் 1808 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் எரிக்கப்பட்டு, அழிக்கப்பட்டதாக திருச்சபை வரலாறு கூறுகிறது…



Post a Comment

0 Comments