பாடுகளின் வாரம் செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 4

பாடுகளின் வாரம்

செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 4


காணிக்கைப் பெட்டி


(மாற்கு 12 : 41-44,

லூக்கா 21:1-54)



மாற்கு 12:41.

 இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப்பார்த்துக்கொண்டிருந்தார்; ஜசுவரியவான்கள் அநேகர் அதிகமாய் போட்டார்கள்.



மாற்கு 12:42. 

ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள்.


மாற்கு 12:43. 

அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.



மாற்கு 12:44. 

அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரண திலிருந்தெடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையி லிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.



ஐசுவரியவான்கள் 



இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; ஜசுவரியவான்கள் அநேகர் அதிகமாய் போட்டார்கள் 

(மாற்கு 12:41).



இந்த சம்பவம் மத்தேயு எழுதினசுவிசேஷத்தில் குறிப்பிடப்படவில்லை. மாற்கு எழுதின சுவிசேஷத்திலும், லூக்கா எழுதின சுவிசேஷத்திலும் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. காணிக்கைபெட்டியில்  ஒரு ஏழையான விதவை ஒரு துட்டுக்கு சரியான  இரண்டு காசைப் போடுகிறாள். இந்த ஏழை விதவை அதிகமாய் காணிக்கை போடுகிறாள் என்று இயேசுகிறிஸ்து கூறி அவளுடைய உதாரத்துவக் குணத்தை புகழ்ந்து கூறுகிறார். 


தேவாலயத்தில் ஏழை எளியவர்களுக்கு  உதவிபுரிவதற்காக ஒரு காணிக்கைப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும். இதில் சேகரிக்கப்படும் தருமபணத்தினால் ஏழைகளுக்கு உதவிபுரிவார்கள். கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களை செய்தான் என்றும், அவனுடைய தருமங்கள் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக  அவர் சந்நிதியிலே வந்தெட்டியிருந்தது என்றும்  அப்போஸ்தலருடைய நடபடிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது

 (அப் 10:2,4). நாம் அனைவரும் நம்முடைய வரவுக்கு தக்கதாக எதையாகிலும் தருமப்பணமாக நம்மிடத்திலே சேர்த்து வைத்திருக்க வேண்டும்

 (1கொரி 16:2). 

தருமம் பண்ணவேண்டிய தேவை உண்டாகும்போது இந்த தருமப்பணத்தை எடுத்து  ஏழைகளுக்கு உதவிசெய்யலாம். 


தேவாலயத்தில் ஒரு காணிக்கைப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து அதன் எதிராக உட்கார்ந்து அந்தக் காணிக்கைப் பெட்டியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இது ஏழைகளுக்காக சேகரிக்கப்படும் தருமப்பணமாகும். இந்தப் பெட்டியில் ஜனங்கள்  பணம் போடுகிறதை இயேசுகிறிஸ்து பார்த்துக்கொண்டிருக்கிறார். ஏழைகளுக்கு நாம் செய்யும் தருமத்தை நாம் ஆண்டவர் கண்ணோக்கிப் பார்க்கிறார். நாம் சிறிய உதவி செய்தாலும் அது தேவனுடைய சமுகத்தில் அங்கீகரிக்கப்படும். மனுஷர் காணும்படியாக தருமம் செய்யாமல் தேவனுடைய நாம மகிமைக்காகவும் ஏழைகளுடைய பிரயோஜனத்திற்காகவும் நாம் தருமம் பண்ணவேண்டும். நமது காணிக்கை உதாரத்துவமாக இருக்கவேண்டும். 


ஐசுவரியவான்கள் அநேகர் அந்தக் காணிக்கைப் பெட்டியில் அதிகமாய் பணம் போடுகிறார்கள். ஐசுவரியவான்கள் தருமம் பண்ணுவது மிகவும் நல்லது. அவர்களால் அதிகமாக தருமம் பண்ணமுடியும். எவனிடத்தில் அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவனிடத்தில் அதிகமாக கேட்கப்படும். ஐசுவரியவான்கள் பெரிய தொகையை தருமப்பணமாக செலுத்த வேண்டும். தேவன் நமக்கு ஐசுவரியத்தை தாராளமாக கொடுத்திருந்தால், நாமும் உதாரத்துவமாக தருமம் பண்ணவேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார். 



ஏழையான விதவை 



ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்    

(மாற்கு 12:42-44).

 

இயேசுகிறிஸ்து காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதை பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்போது ஏழையான ஒரு விதவை அங்கு வந்து, ஒரு துட்டுக்கு சரியான இரண்டு காசை அந்தக் காணிக்கைப் பெட்டியில் போடுகிறாள். அதைப் பார்த்த இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை  தம் பக்கமாக அழைத்து, அந்த காணிக்கையைப் பற்றிப் பேசுகிறார். 


காணிக்கைப் பெட்டியில் ஐசுவரியவான்களும் பணம் போடுகிறார்கள். இந்த ஏழையும் பணம் போடுகிறாள். ஆயினும்  காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்ற எல்லாரைப்பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று இயேசு தமது சீஷர்களிடம் கூறுகிறார். 


இந்த ஏழை விதவையிடத்தில் ஒன்றுமேயில்லை. இவள் வறுமையில் இருக்கிறாள். இவளுடைய ஜீவனத்திற்கு இந்த இரண்டு காசுதான் இருக்கிறது. இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்திற்கு உண்டாயிருந்ததெல்லாம் காணிக்கைப் பெட்டியில் போட்டுவிடுகிறாள். மற்றவர்களெல்லோரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்து காணிக்கைப் பெட்டியில் போடுகிறார்கள். இவர்களையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது  இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று இயேசு கூறுகிறார். 


இந்த ஏழை விதவையிடம் இருப்பதே இந்த இரண்டு காசுகள்தான். இதை வைத்துத்தான் அவள் ஜீவிக்கவேண்டும். இதையும் காணிக்கைப் பெட்டியில் போட்ட பின்பு அவளுடைய ஜீவனத்திற்கு ஒன்றுமேயில்லை. இருந்தாலும் இந்த ஏழை விதவை மற்றவர்களுக்கு உதவிபுரியவேண்டுமென்று விரும்புகிறாள். தருமம் பண்ணுவது வீட்டில் ஆரம்பமாக வேண்டும். நமது குடும்பத்தாருக்கு நாம் செய்ய வேண்டிய உதவிகளை குறைவில்லாமல் செய்யவேண்டும். பொதுவாக இந்த ஏழை விதவையைப்போல யாரும் உதவிபுரியமாட்டார்கள். தங்களுக்குப் போக  மீதியைத்தான் தருமம் பண்ணுவார்கள்.       ஆனால்  இவளோ தன் ஜீவனத்திற்கு உண்டாயிருந்ததையெல்லாம் தருமப் பெட்டியில் போட்டுவிட்டதை இயேசுகிறிஸ்து பார்த்து, அவளைப் புகழ்ந்து கூறுகிறார். 


ஏழைக்கு தருமம்பண்ணுவது மிகவும் நல்ல காரியம். தேவனுடைய பார்வையில் நாம் தருமம்பண்ணுவது பிரியமாக இருக்கிறது. தேவனும் நமது கிருபையான இந்த செயலை அங்கீகரிக்கிறார். நாம் உதவி செய்யும்போது சூழ்நிலைகள் ஒன்றுபோலிராது. சில சமயங்களில் நமக்கு பாதகமான, வறுமையான  சூழ்நிலைகளிருக்கும். அதன் மத்தியிலும் நாம் பிறருக்கு உதவிபுரியவேண்டும். 


நம்மிடத்தில் சிறிதுதான் பணம் இருக்குமென்றால், அதிலிருந்தும் ஒரு பகுதியை  தனியாக எடுத்து வைத்து, அதை தருமம் பண்ணவேண்டும். ஆனால் நாமோ பல வேளைகளில் நமது தேவைகளை சந்திப்பதற்கே  அதிக முக்கியத்துவம் கொடுப்போம். ஏழைகளுக்கு  உதவிபுரியும் விஷயத்தில் கஞ்சத்தனமாக நடந்துகொள்வோம். நமக்கு தேவைகள் இருப்பதுபோலவே பிறருக்கும் தேவைகள் இருக்கும். நம்மிடத்தில் நாம் அன்பு கூருவதுபோல பிறரிடத்திலும் அன்பு கூரவேண்டுமென்பது தேவனுடைய பிரதான கற்பனைகளில் ஒன்று. ஆகையினால் மற்றவர்களின் தேவையையும் நாம் நோக்கிப் பார்த்து, அவர்களுக்கு உதவிபுரிய  முன்வரவேண்டும். 


ஏழைகளுக்கு உதவிபுரிவதை நாம் உற்சாகப்படுத்த வேண்டும். பலருடைய தருமப்பணத்தை ஒன்றுசேர்த்து உதவிசெய்யும் போது, பெரிய உதவிகளை ஏழைகளுக்கு செய்யமுடியும். சில சமயங்களில் தருமப்பணங்களை நிர்வாகம் பண்ணுகிறவர்கள் கண்ணியமாக நடந்துகொள்ளாமல் முறைகேடு செய்துவிடுவார்கள். அவர்களிடத்தில் காணப்படும் குறைபாடுகளை காரணமாக கூறி ஒரு சிலர்  தருமம் செய்யமாட்டார்கள். மற்றவர்களிடத்தில் குறைகள் இருந்தாலும் நாம் தருமம் செய்வதை நிறுத்திவிடக்கூடாது. 


நாம் செய்யும் தருமம் சிறிதளவாக இருந்தாலும் இயேசுகிறிஸ்து அதை அங்கீகரிக்கிறார். நம்மிடத்தில் உள்ளதில் ஒரு பகுதியைத்தான் நாம் தருமம் பண்ணவேண்டுமென்று இயேசுகிறிஸ்து எதிர்பார்க்கிறார். நம்மிடத்தில் இல்லாததை தருமம் பண்ணவேண்டுமென்று இயேசுகிறிஸ்து ஒருபோதும் நம்மை வற்புறுத்தமாட்டார். காணிக்கைப் பெட்டியில் போடுவது இரண்டு காசாக இருந்தாலும், அதை மனப்பூர்வமாகவும் உதாரத்துவமாகவும் போடவேண்டும். அப்போது அது நம்முடைய தருமக்கணக்கில் ஏற்றி எழுதப்படும். அதிக பணத்தை போடும் ஐசுவரியவான்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களைப்போல கொஞ்சம் பணத்தைப்போடும் ஏழைகளுக்கும் தேவனுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். 


சில சமயங்களில் நாம் ஏழைகளாக இருந்தாலும், நம்முடைய திராணிக்கு அதிகமாகவும் கொடுக்கப் பழக வேண்டும். மக்கெதோனியா நாட்டு சபையார் தங்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், அவர்கள் கொடிய தரித்திரமுடையவர்களாக இருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய் கொடுத்தார்கள். மேலும் அவர்கள் தங்கள் திராணிக்கு தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க அவர்கள் மனதுள்ளவர்களாக இருந்தார்கள் (2கொரி 8:2,3).


 ஏதாவது ஒரு வழியில் தேவன் நமது தேவைகளை சந்திப்பாரென்றும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு நம்மை ஆசீர்வாதிப்பாரென்றும் நாம் கர்த்தரையே சார்ந்திருக்க வேண்டும்.


Post a Comment

0 Comments