பாடுகளின் வாரம் செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 3

 


பாடுகளின் வாரம்

செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 3



வேதபாரகரும் பரிசேயரும்


ஜனங்களும் இயேசுவின் சீஷர்களும்



பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: (மத் 23:1).



வேதபாரகரையும் பரிசேயரையும் பற்றி இயேசுகிறிஸ்து வேறு எந்த இடத்திலும் இவ்வளவு கடினமான வார்த்தைகளைக்கூறி அவர்களை கடிந்து கொள்ளவில்லை. ஆயினும் ஜனங்களோ அவர்களை தங்களுடைய மதிப்புக்கும் மரியாதைக்குரியவர்களாக நினைக்கிறார்கள். பரலோகத்தில் இரண்டுபேர் பிரவேசித்தால் அவர்களில் ஒருவர் பரிசேயராக இருப்பார் என்பது ஜனங்களுடைய நம்பிக்கை. இப்போது இயேசுகிறிஸ்து தம்முடைய உபதேசத்தை ஜனங்களுக்கும், தமது சீஷர்களுக்கும் கூறுகிறார். பரிசேயரையும் வேதபாரகரையும் குறித்து அவர்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணங்களை திருத்துகிறார். அவர்களுடைய மெய்யான சுபாவங்களை வெளிப்படுத்துகிறார்.


மனுஷருடைய உண்மையான சுபாவங்களை அறிந்துகொள்வது நமக்கு எப்போதுமே நல்லது. அவர்களுக்கு பெரிய பெயர்களும், பட்டங்களும், அதிகாரங்களும் இருக்கலாம். சமுதாயத்தில் அவர்கள் எவ்வளவுதான் பெரியவர்களாக இருந்தாலும், அவர்களுடைய உண்மையான சுபாவத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்து  தம்முடைய சீஷர்களுக்குக்கூட பரிசேயரைப்பற்றி எச்சரிக்கவேண்டியதாக இருக்கிறது. ஏனெனில் அவர்களும் பரிசேயரின் உண்மையான சுபாவம் தெரியாமல், அவர்களை உயர்வாக நினைக்கிறார்கள். அவர்களுடைய உலகப்பிரகாரமான ஆடம்பரத்தைப் பார்த்து, கிறிஸ்துவின் சீஷர்கள் அவர்களுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள். 



மோசேயின் ஆசனம்



வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; (மத் 23:2).



யூதமார்க்கத்தில் வேதபாரகர், பரிசேயர் ஆகியோரின் ஊழியங்களை இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கிறார். அவர்கள் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருப்பதாக கூறுகிறார்.  ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தை இவர்கள் உபதேசம்பண்ணி வியாக்கியானம் பண்ணுகிறார்கள். இவர்கள் ஜனங்களை நியாயம் விசாரிக்கிறார்கள். யூதமார்க்கத்தின் ஆலோசனைச்சங்கத்திற்கு இவர்கள் ஒப்பானவர்களல்ல. இவர்களுடைய அதிகாரம் வேறு. ஆலோசனைச்சங்கத்தின் அதிகாரம் வேறு. 


பரிசேயரும் வேதபாரகரும் நியாயப்பிரமாணத்தை வியாக்கியானம்பண்ணி அதை ஜனங்களுக்குப் போதிப்பார்கள். ஒவ்வொரு சூழ்நிலையிலும் நியாயப்பிரமாணத்தை எவ்வாறு பயன்படுத்தவேண்டுமென்று இவர்கள் ஆலோசனை கூறுவார்கள். மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள் தோறும் ஜெபாலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறது. பூர்வகாலம் தொடங்கி சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களை பரிசேயர்கள் பிரசங்கித்து வருகிறார்கள் (அப் 15:21). மோசேயின் ஆகமங்களை பிரசங்கிப்பதே பரிசேயரின் ஊழியம். யூதமார்க்கத்தார் மத்தியில் இது நீதியான ஊழியமாகவும், மதிப்புமிக்க ஊழியமாகவும் கருதப்பட்டு வருகிறது. நியாயப்பிரமாணத்தைக் குறித்து விசாரிப்பதற்கு  யூதமார்க்கத்தார் மத்தியில், பரிசேயரைப்போலவும் வேதபாரகரைப்போலவும்  வேதபண்டிதர்கள் தேவைப்படுகிறார்கள். 



பரிசேயர், வேதபாரகர் ஆகியோரின் ஊழியம் மிகவும் நல்லஊழியம். ஆனால் இந்த நல்ல ஊழிய ஸ்தானத்தை மோசமான இவர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். தங்களுடைய ஊழிய ஸ்தானத்திற்கு தகுந்தபடி இவர்கள் நடந்துகொள்வதில்லை. இவர்களுடைய துன்மார்க்கத்தின் மூலமாக அந்த ஊழிய ஸ்தானங்களுக்கே அவப்பெயர் உண்டாயிருக்கிறது. சில சமயங்களில் நல்ல பதவிகள் மோசமானவர்கள் கைகளில் வந்துவிடும். அதற்காக அந்த பதவிகளை நாம் குறைகூறமுடியாது. அந்த பதவியில் இருக்கும் தகுதியற்றவர்களே அந்த பதவிகளை களங்கப்படுத்திவிடுகிறார்கள். 



மாய்மாலக்காரரின் சுபாவங்கள்



    1. போதகருக்குரிய மரியாதையை எதிர்பார்க்கிறார்கள் (மத் 23:2)

    2. அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்-யும் செய்யாதிருக்கிறார்கள் (மத் 23:3)

    3. மற்றவர்களுக்குப் பெரிய வேலை கொடுக்கிறார்கள். தாங்கள் ஒரு வேலையும் செய்வதில்லை. (மத் 23:4)

    4. மனுஷருடைய புகழ்ச்சியை விரும்புகிறார்கள் (மத் 23:5)

    5. தங்கள் மார்க்கப் பாரம்பரியத்தின்படி நடக்கிறார்கள் (மத் 23:5)

    6. விருந்துகளில் முதன்மையான இடங்களை நாடுகிறார்கள் (மத் 23:6)

    7. ஜெபாலயங்களில் முதன்மையான ஆசனங்களை விரும்புகிறார்கள். (மத் 23:6)

    8. மனுஷர் தங்களைப் புகழ வேண்டுமென்று விரும்புகிறார்கள்           (மத் 23:7)

    9. தங்களுக்குப் பெரிய பட்டங்கள் வேண்டுமென்று விரும்புகிறார்கள்          (மத் 23:7)

    10. சத்திய மனுஷரையும் அவர்களுடைய ஜீவனையும் கொள்ளையிடுகிறார்கள் 

 (மத் 23:13)

    11. சத்தியத்தையும், ஜீவனையும் புறக்கணிக்கிறார்கள். (மத் 23:13)

    12. விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப் போடுகிறார்கள். (மத் 23:14)

    13. பார்வைக்காக நீண்ட ஜெபம் பண்ணுகிறார்கள் (மத் 23:14)

    14. ஒருவனைத் தங்கள் மார்க்கத்தானாக ஆக்குவதற்கு பிரயாசப்படுகிறார்கள். ஆனால் தேவனிடத்தில் யாரையும் வழிநடத்துவதில்லை. (மத் 23:15)

    15. தங்களுடைய மார்க்கத்தார் ஆனவர்களை மாய்மாலத்தில் பழக்குகிறார்கள். தேவனுடைய வார்த்தையை உபதேசிப்பதில்லை.  (மத் 23:15)

    16. அவர்கள் சத்தியத்திற்குக் குருடராக இருக்கிறார்கள்.                (மத் 23:16-22)

    17. தங்கள் சுய ஆதாயத்திற்காகவும், தங்கள் சுய மகிமைக்காகவும் ஊழியம் செய்கிறார்கள். (மத் 23:16-22)

    18. கொசு இல்லாதபடி வடிகட்டுகிறார்கள். ஆனால் ஒட்டகத்தை விழுங்குகிறார்கள். (மத் 23:23-24)

    19. வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறார்கள். ஆனால் அவர்களுடைய உட்புறம் அசுத்தமாக இருக்கிறது.

 (மத் 23:25-26)

    20. மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறார்கள். ஆனால் தங்கள் ஜீவியத்திலும் நடத்தையிலும், மாயமும் அக்கிரமும் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். (மத் 23:2,7-28)

    21. தங்கள் முற்பிதாக்களை விட தாங்கள் பெரிய நீதிமான்கள் என்று காண்பிக்க விரும்புகிறார்கள். (மத் 23:29-33)



சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்



ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்-யும் செய்யாதிருக்கிறார்கள் (மத் 23:3).



வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் மோசேயின் பிரமாணத்தை வாசித்து அதை ஜனங்களுக்கு உபதேசம்பண்ணுகிறார்கள். ஆகையினால் அவர்கள் சொல்லுகிற யாவையும் நாம் கைக்கொண்டு செய்யவேண்டும். வேதவாக்கியங்களை புரிந்து கொள்வதற்கு இவர்கள் உதவிபுரிகிறார்கள். நன்றாக வியாக்கியானம் கூறுகிறார்கள். வேதவசனங்களை தெளிவுபடுத்துகிறார்கள். அவர்கள் தேவனுடைய பிரமாணத்தைத்தான் விளக்கிக் கூறுகிறார்கள். ஆகையினால் அவர்கள் கூறும் உபதேசத்தை நாம் கவனிக்க வேண்டும். அவற்றிற்கு கீழ்ப்படியவேண்டும்.


ஆனால் வேதபாரகர், பரிசேயர் ஆகியோரின் ஜீவியமோ மிகவும் மோசமாக இருக்கிறது. துன்மார்க்கமான செய்கைகளை செய்கிறார்கள். ஆகையினால் நாம் அவர்களுடைய செய்கையின்படி செய்யக்கூடாது. இவர்கள் கெட்ட ஊழியக்காரர்களாக இருந்தாலும் நல்ல சத்தியங்களையே பிரசங்கம்பண்ணுகிறார்கள். சில சமயங்களில் நீதிபதி மோசமானவராக இருப்பார். சட்டம் நேர்மையானதாக இருக்கும்.  நீதிபதி மோசமாக இருப்பதினால், நாம் சட்டத்திற்கு கீழ்ப்படியாமல் இருக்கக்கூடாது. அதுபோலவே ஊழியக்காரர்கள் மோசமானவர்களாக இருப்பதினால் நாம் வேதவசனத்திற்கு கீழ்ப்படியாமல் போய்விடக்கூடாது. 



ஒவ்வொரு மனுஷருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். நம்முடைய போஜனபாதார்த்தங்களை தேவதூதர்கள் கொண்டு வந்து அவற்றை நமக்கு முன்பாக படைத்தால் அது நல்லது என்று நாம் நினைப்போம். ஆனால் தேவன் சில சமயங்களில் காகங்களின் மூலமாக நமக்கு போஜனம் கொடுத்து அனுப்புகிறார். அந்த போஜனம் நல்ல போஜனமாகவும், பூரணமாகவும் இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. போஜனம் கொடுத்த தேவனை நாம் துதிக்கவேண்டும். 


வேதபாரகரையும், பரிசேயரையும் இயேசுகிறிஸ்து கடிந்துகொள்கிறார். தம்மிடத்தில் கூடியிருக்கும் திரளான ஜனங்களிடமும், சீஷர்களிடமும் அவர்களுடைய உபதேசங்களை கைக்கொண்டு செய்யுமாறு கூறுகிறார். ஆனால் அவர்கள் செய்கையின்படியோ நாம் செய்யாதிருக்கவேண்டும். அவர்களுடைய புளித்த மாவைக்குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். ஒருவர் எவ்வளவுதான் வல்லமையாக பிரசங்கித்தாலும், அந்த உபதேசம் கள்ளஉபதேசமாக இருக்குமென்றால், அதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஊழியக்காரர்களின் மோசமான முன் உதாரணத்தை நாம் பின்பற்றக்கூடாது. ஊழியக்காரர்கள் சத்தியத்தை பிரசங்கித்தாலும், அவர்களுடைய ஜீவியம் துன்மார்க்கமாக இருந்தால், நாம் அவர்களை பின்பற்றி துன்மார்க்கமாக ஜீவிக்கக்கூடாது. அவர்களுடைய நல்ல உபதேசங்களை நாம் ஏற்றுக்கொள்ளலாம். அவர்களுடைய  துன்மார்க்க ஜீவிய முறைகளை நாம் அங்கீகரிக்கக்கூடாது. 


பரிசேயர், வேதபாரகர் ஆகியோரைக்குறித்து இயேசுகிறிஸ்து நான்கு விதமான காரியங்களை கூறுகிறார். அவையானவன : 

1. அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்             

  2. சுமப்பதற்கரிய பாரமான சுமைகளை கட்டி மனுஷர் தோள்களின் மேல் சுமத்துகிறார்கள். 

 3. தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்.

 4. சந்தைவெளிகளில்  வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ என்று அழைக்கப்படுவதையும்  விரும்புகிறார்கள்.



வேதபாரகர், பரிசேயர் ஆகியோரின் பேச்சும் கிரியையும் வெவ்வேறாக இருக்கிறது.  அவர்கள் சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.  அவர்கள் நியாயப்பிரமாணத்தை உபதேசிக்கிறார்கள். அது மிகவும் நல்லது. ஆனால் தங்களுடைய சுபாவங்களிலும், சம்பாஷணைகளிலும் பொய்யராக இருக்கிறார்கள். தங்களுடைய பாவங்களை ஒருவன் அங்கீகரித்து, மனந்திரும்பி மன்னிப்புக் கேட்டால் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும். பாவம் செய்தும் தங்களிடத்தில் பாவம் இல்லையென்று இறுமாப்பாக இருக்கிறவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படாது. பரிசேயரும் வேதபாரகரும் பாவம் செய்தும், தங்களிடத்தில் பாவம் உள்ளது என்று அங்கீகரிப்பதில்லை.


இவர்களைப்போலவே துன்மார்க்கமான ஊழியக்காரர்களும் மாய்மாலமாக கிரியை செய்கிறார்கள். தங்களுடைய உபதேசங்களை மற்றவர்களுக்கு கூறுகிறார்கள். தங்களுக்குத்தாங்களே இவர்கள் உபதேசித்துக் கொள்வதில்லை. தங்களுடைய உபதேசத்தை இவர்கள் விசுவாசிப்பதில்லை. இவற்றிற்கு கீழ்ப்படிவதுமில்லை. பிரசங்க மேடைகளில் நல்ல வசனங்களை பிரசங்கம்பண்ணுகிறார்கள். மேடையைவிட்டு கீழே இறங்கியவுடன் இவர்களுடைய கிரியைகளுக்கும், பிரசங்கத்திற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது.  தேவாலயத்தில் ஒலிக்கும் மணி எல்லோரையும் ஆலயத்திற்கு அழைக்கும். ஆனால் இந்த     மணி ஒருக்காலும் தேவாலயத்திற்கு உள்ளே போகாது.  வெளியே இருந்துதான் ஒலித்துக்கொண்டிருக்கும். இதைப்போலத்தான் பரிசேயரும் எல்லோரையும் பரலோகத்திற்குள்  பிரவேசிக்குமாறு அழைக்கிறார்கள். ஆனால் இவர்கள் ஒருபோதும் பரலோகத்திற்குள் பிரவேசிப்பதில்லை. 



பரிசேயர் வேதபாரகர் ஆகியோரைப்பற்றிய எச்சரிப்பு எல்லா ஊழியக்காரர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய பிரசங்கச் செய்திக்கும், ஜீவியத்தின் கிரியைகளுக்கும் தொடர்பு இருக்கவேண்டும். நமது பேச்சும் செயலும் ஒத்துப்போகவேண்டும். பேச்சு ஒன்றும், செயல் ஒன்றுமாக மாய்மாலம் காண்பிக்கக்கூடாது. பேச்சை அதிகரித்து வேலையை சுருக்கிவிடக்கூடாது. பேச்சு குறைவாக இருக்கவேண்டும். பணி நிறைவாக இருக்கவேண்டும்.



தேவனுடைய வார்த்தை யாரிடமிருந்து வந்தாலும் அதற்குக் கீழ்ப்படியலாம். மாயக்காரர் தேவனுடைய வார்த்தையை உபதேசம் பண்ணினாலும் அந்த வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில் எந்தத் தவறும் இல்லை. ஏனெனில் அது தேவனுடைய வார்த்தை. ஆனால் நாம் அவர்களைப்போல ஜீவிக்கக் கூடாது. அவர்கள் நன்றாகச் சொல்வார்கள். ஆனால் சொன்னபடி நடந்துகொள்ள மாட்டார்கள்.



சுமப்பதற்கரிய பாரமான சுமை


சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு           விர-னாலும் அவைகளைத் தொடமாட்டார்கள் (மத் 23:4).



பரிசேயரும் வேதபாரகரும் மற்றவர்களுக்கு அதிகமாக உபதேசம்பண்ணுகிறார்கள். அவர்கள்மீது ஏராளமான விதிமுறைகளை சுமத்துகிறார்கள். ஆனால் இவர்களோ ஒரு பிரமாணத்திற்கும் கீழ்ப்படிவதில்லை. ஒரு பாரத்தையும் தங்கள்மீது சுமப்பதில்லை. மனுஷர் தோள்களின்மேல் சுமப்பதற்கரிய பாரமான சுமைகளை கட்டி சுமத்துகிறார்கள். ஆனால் இவர்களோ ஒரு விரலினாலும் அவைகளை தொடமாட்டார்கள். நியாயப்பிரமாணத்தின் நுணுக்கமான பகுதிகளைகூட ஜனங்களுக்கு உபதேசம்பண்ணுவார்கள். எந்தெந்த சூழ்நிலைகளில் நியாயப்பிரமாணத்திற்கு எப்படி வியாக்கியானம் கூறவேண்டுமென்று விளக்குவார்கள். ஆனால் ஜனங்கள்மீது தங்களுடைய சொந்த பாரம்பரியத்தையும், கண்டுபிடிப்புக்களையும் உபதேசமாக கூறிவிடுவார்கள். அவற்றிற்கு கீழ்ப்படியவில்லையென்றால் ஜனங்களை அதிகமாக தண்டிப்பார்கள். நியாயப்பிரமாணத்தை உபதேசிக்கும்போது அதில் தங்களுக்குள்ள அதிகாரத்தையும், அதை நிறைவேற்றுவதற்கு தாங்கள் மாத்திரமே தகுதியுள்ளவர்கள் என்பதையும் கூறுவார்கள். 


இவர்கள் மாய்மாலக்காரர்கள். ஜனங்கள்மீது பாரமான சுமைகளை சுமத்துகிறார்கள். ஆனால் இவர்கள் தங்களுடைய ஒரு விரலினால்கூட அவைகளை தொடமாட்டார்கள். ஜனங்களுக்கு மார்க்க காரியங்களை மிகவும் கடினமாக உபதேசம்பண்ணுவார்கள். ஆனால் தங்களுடைய ஜீவியத்தில் மார்க்க உபதேசங்களுக்கு ஏற்ற பிரகாரம் ஜீவிக்கமாட்டார்கள். நியாயப்பிரமாணம் தங்களை ஆளுகை செய்ய அனுமதிக்கமாட்டார்கள். மற்றவர்களுக்கு உபதேசம்பண்ணுவதிலேயே பெருமைப்படுவார்கள். தங்களுடைய  சொந்தக் கருத்துக்களையும், பாரம்பரிய பழக்கவழக்கங்களையும் தங்கள் உபதேசத்தில் சேர்த்துக்கொள்வார்கள். ஜனங்களுடைய பாரத்தை ஒருபோதும் எளிமையாக்கமாட்டார்கள். பாரத்திற்குமேல் பாரத்தை அதிகரிப்பார்கள்.


அழிவுக்கு நேரான பாதையில் மார்க்கத்தலைவர்கள் ஜனங்களை வழிநடத்துகிறார்கள். மார்க்கத்தைப் பின்பற்றுவது தவறல்ல. ஆனால் அதை ஒரு விளம்பரத்திற்காகப் பின்பற்றுவது தவறுதான். மனுஷர் காணவேண்டுமென்று நாம் நற்கிரியைகளைச் செய்யக்கூடாது. அவற்றை தேவநாம மகிமைக்காகவே செய்ய வேண்டும். 



காப்பு நாடாக்கள்


 தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, 

(மத் 23:5).



பரிசேயரும் வேதபாரகரும் தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டும் என்பதற்காகவே செய்கிறார்கள். மார்க்க உபதேசங்களுக்கு கீழ்ப்படிந்து இவர்கள் எதையும் செய்வதில்லை. இவர்களுடைய கிரியைகளில் எதுவும் உண்மையில்லை. எல்லாம் வேஷமாக இருக்கிறது. நாம் நற்கிரியைகளை செய்யவேண்டும். நமது நற்கிரியைகளை பார்க்கிறவர்கள் தேவனை மகிமைப்படுத்த வேண்டும். நம்மை மற்றவர்கள் மகிமைப்படுத்தவேண்டும் என்பதற்காக, நம்முடைய நற்கிரியைகளை விளம்பரப்படுத்தக்கூடாது. மனுஷர் காணவேண்டும் என்பதற்காக நாம் நற்கிரியைகளைச் செய்தால், தேவஆசீர்வாதம் நமக்கு வராது. நமது தெய்வபக்தி உண்மையானதாக இருக்கவேண்டும். பக்தியின் வேஷம் தரித்துவிடக்கூடாது. பக்தியின் வேஷத்தை தரித்து, மாய்மாலமாக கிரியைசெய்கிறவர்கள், எந்தவித குறிக்கோளும் இல்லாமல் ஜீவிக்கிறார்கள். 



இப்படிபட்ட மாய்மாலக்காரர்கள் இரண்டு காரியங்களை செய்கிறார்கள். 

அவையாவன: 

1. தங்கள் காப்பு நாடாக்களை அகலமாக்குகிறார்கள். 

2. தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களை பெரிதாக்குகிறார்கள்.


காப்பு நாடா என்பது ஒரு சிறிய தோல் சுருள். 


இதில் யாத் 13:2-11; 13:11-16; உபா 6:4-9; 11:13-21 ஆகிய நான்கு வேதவசனப்பகுதிகள் எழுதப்பட்டிருக்கும். இதை ஒரு தோல் சுருளில் எழுதி தங்களுடைய முன் நெற்றிப்பட்டத்திலோ, இடது கைகளிலோ கட்டியிருப்பார்கள். இது யூதருடைய வழக்கம். பரிசேயர்கள் இந்த காப்பு நாடாக்களை அகலமாக்குகிறார்கள். அகலம் அதிகமாக இருந்தால் பரிசுத்தமும் அதிகமாக இருக்கும் என்று இவர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள். மற்றவர்களைவிட தங்களுக்கு நியாயப்பிரமாணத்தின்மீது அதிக மதிப்பும் பக்தியுமுள்ளது என்று காப்பு நாடாக்களை அகலமாக்கி சுய விளம்பரம் செய்கிறார்கள். 



நியாயப்பிரமாணத்தை ஒருவர் அதிகமாக நேசிக்கும்போது அவருடைய பக்திவிருத்தி வெளிப்படுகிறது. ஆனால் தன்னுடைய பக்தியில் அவர் பெருமைப்படும்போது, அவருடைய பக்தி ஒன்றுமில்லாமல் பயனற்றுப்போகிறது. கர்த்தரிடத்தில் பயபக்தியாக இருப்பது நல்லது. ஆனால் வெளிவேஷத்திற்காக பக்தியின் வேஷத்தை தரித்துக்கொள்வதினால் எந்தப் பிரயோஜனமுமில்லை.



தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களை பெரிதாக்குகிறார்கள். யூதர்கள் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களில் தொங்கல்களை உண்டாக்கவேண்டும். இதைத் தேவன் அங்கீகரித்திருக்கிறார். ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவை கட்டவேண்டும் என்று தேவன் இஸ்ரவேல் புத்திரருக்கு நியமித்திருக்கிறார் (எண் 15:38). 


ஏனெனில் இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு விசேஷித்த ஜனங்கள். மற்ற ஜனங்கள் மத்தியில் இவர்கள் தங்களை வேறுபிரித்து காண்பிக்கவேண்டும். ஆனால் பரிசேயருக்கோ தங்கள் வஸ்திரங்களினுடைய தொங்கல்களின் அளவில் திருப்தியடைவதில்லை. மற்றவர்களின் சாதாரண தொங்கல்களைவிட அதை பெரியதாக்குகிறார்கள். எல்லோரும் இந்த தொங்கல்களை பார்க்கவேண்டும் என்பது இவர்கள் விருப்பம். மற்றவர்களைவிட தாங்கள் பக்தியில் சிறந்தவர்கள் என்பதை இதன் மூலமாக தெரியப்படுத்த விரும்புகிறார்கள்.  



மற்றவர்கள் தங்கள் கிரியைகளைக் காணவேண்டும் என்பதற்காக மாயக்காரர்கள் பல காரியங்களைச் செய்கிறார்கள். வெளி வேஷத்திற்கும், வெளி அலங்காரத்திற்கும் அதிக முக்கியத்துவம் தேவையில்லை. உள்ளான அலங்காரமே மகிமை பெறும்.



""காப்புநாடாக்கள்''   என்பவை தோலினால் செய்த சிறிய சதுரப் பெட்டியாகும். யாத் 13:1-10; உபா 6:4-9; உபா 11:13-21 ஆகிய வசனங்கள் இதில் எழுதப்பட்டிருக்கும். இவற்றைப் புருஷர்கள் கைகளிலும், நெற்றியிலும் அணிந்திருப்பார்கள். பொது ஜனங்கள் விசேஷித்த ஜெபநாட்கள் மட்டும் காப்பு நாடாக்களை அணிவார்கள். ஆனால், பரிசேயர்களோ காப்புநாடாக்களை எப்போதும் அணிந்திருப்பார்கள். அவற்றின் அளவும் பெரிதாக இருக்கும். மற்றவர் காண வேண்டுமென்பதாக பெரிய காப்புநாடாக்களைச் செய்து அணிவார்கள். அவர்கள் வசனங்களை அதில் எழுதி வைத்திருந்தாலும் அவர்களுடைய நோக்கம் தவறானது. தங்களுக்குப் பெருமை சேரவேண்டுமென்பதற்காகவே இதைச் செய்கிறார்கள். தேவநாம மகிமைக்காக மட்டும் நாம் கிரியை செய்ய வேண்டும். நமது சொந்த நாமத்தை மகிமைப்படுத்த முயற்சி பண்ணக்கூடாது. பரிசேயர்கள் இதை மாய்மாலமாகவும், பிசாசுகளைத் துரத்தும் கருவியாகவும் பயன்டுத்தினார்கள்.



ரபீ, ரபீ



விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்,  (மத் 23:6,7).



பரிசேயரிடத்தில் பெருமை என்னும் பாவம்  பிரதானமாக காணப்படுகிறது. மற்ற எல்லோரையும்விட தாங்களே முக்கியமானவர்கள், உயர்ந்தவர்கள் என்னும் எண்ணம் அவர்களுடைய உள்ளத்தில் உள்ளது.  விருந்துகளிலும், ஜெபாலயங்களிலும் அவர்கள் முக்கியத்துவத்தையும், மரியாதையையும் எதிர்பார்க்கிறார்கள். பொது இடங்களில் முதன்மையான இடங்களையும், முதன்மையான ஆசனங்களையும் எதிர்பார்க்கிறார்கள். மற்றவர்களைவிட தங்களுக்கு முக்கியமான ஸ்தானம் கொடுக்கப்படவேண்டுமென்பது இவர்களுடைய இருதயத்தின் விருப்பம். முதன்மையான இடங்களிலோ, முதன்மையான ஆசனங்களிலோ அமர்வது பாவமல்ல. ஆனால் இவற்றை இச்சிப்பது பாவமாகும். 



முதன்மையான இடங்களும், முதன்மையான ஆசனங்களும் நமக்கு விக்கிரகங்களாகிவிடக்கூடாது. இவற்றை இச்சிக்க ஆரம்பித்தால் நாம் இவற்றை சாஷ்டாங்கமாக விழுந்து, ஆராதிக்க ஆரம்பித்துவிடுவோம். உயர்பதவிகளை இச்சிப்பது மிகப்பெரிய விக்கிரகாராதனை. 



பொதுஇடங்களில் மாத்திரமல்ல.    இவர்கள் ஜெபாலயங்களிலும் முதன்மையான ஆசனங்களை விரும்புகிறார். ஜெபாலயத்தில் தேவனை ஆராதிக்கவேண்டும். அவரை துதிக்கவேண்டும். அவரை கனப்படுத்தவேண்டும். ஆனால் இவர்களோ ஜெபாலயத்திலும் தங்களை கனப்படுத்தவே விரும்புகிறார்கள். தேவனுக்கு முன்பாக தங்களை தாழ்த்துவதற்குப் பதிலாக, தேவனுடைய பிரசன்னத்தில் தங்களை உயர்த்துகிறார்கள். இது தேவனை ஆராதியாமல் அவரை அவமரியாதை செய்யும் செயலாகும். 



ஆலயத்திற்கு போவோரில் சிலர் பரிசேயரைப்போல பெருமையோடும், மாய்மாலத்தோடும் போகிறார்கள். தங்களுக்கு சபையில் முக்கியத்துவம் இல்லையென்றால் இவர்கள் சபைக்கு போவதையே தவிர்த்துவிடுவார்கள். தேவனைவிட சபையில் தாங்களே முக்கியத்துவம் பெற்றிருக்கவேண்டும் என்பது இவர்களுடைய ஆசை

சந்தைவெளிகளில் எல்லோரும் தங்களுக்கு வந்தனம் பண்ணவேண்டும் என்று விரும்புகிறார்கள். பொதுமக்கள் தங்களை பொது இடங்களில் பார்க்கும்போது தங்களுக்கு மரியாதை செலுத்தவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். ஜனங்கள் கொடுக்கும் மரியாதை இவர்களுக்கு விருந்து போஜனத்தைப்போல சுவையாக இருக்கிறது.  



ஒருவருக்கு ஜனங்கள் வந்தனம் செலுத்துவதினால் அவர் உயர்ந்தவராகி விடுவதில்லை. அவரைப்பற்றி ஜனங்கள் தங்கள் உள்ளத்தில் எப்படி நினைக்கிறார்கள் என்பதே உண்மையான மரியாதை. இவர்கள் சந்தைவெளிகளில் இருந்தாலும், வேறு எங்கு இருந்தாலும், ஜனங்களுடைய உள்ளத்தில் நன்மதிப்பை பெற்றிருக்கவேண்டும். சில சமயங்களில் முகத்திற்கு முன்பாக வந்தனம் செய்வது முகஸ்துதியாககூட இருக்கலாம்.



வந்தனமும் மரியாதையும் இருதயத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும். நாம் அதை தேடிப்போகக்கூடாது. அது நம்மை தேடி வரவேண்டும். நமக்கு வந்தனம் செலுத்தவேண்டுமென்று நாம் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்களாகவே மனமுவந்து நமக்கு வந்தனம் செலுத்தவேண்டும். இதுவே உண்மையான மரியாதை. வந்தனம் செலுத்தவேண்டுமென்று  கட்டாயப்படுத்துவது பாவம். பரிசேயர்கள் ஜனங்களுக்கு அன்பைப்பற்றி போதனை செய்கிறார்கள். போதிக்கிறவர்கள் முதலாவதாக கற்றுக்கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்துவின் பாடசாலையில் தாழ்மையே முதலாவது பாடம். ஆவிக்குரிய ஜீவியத்தில் பெருமைக்கு இடமேயில்லை.



""ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்கள்'' என்பது உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் போடப்பட்டிருக்கும் இருக்கைகள் ஆகும். 


மூப்பர்களுக்கும், வேதபாரகர்களுக்கும் இவை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன. சபையாரைப் பார்க்கும் பிரகாரமாக இந்த ஆசனங்கள் இருக்கும். (மாற்கு 12:39; லூக்கா 11:43)



""ரபீ''  என்பது போதகருக்குக் கொடுக்கப்படும் பட்டமாகும். (யோவான் 3:2; லூக்கா 9:38) பரிசேயர் இந்தப் பட்டத்தை மிகவும் விரும்பினார்கள்.     (மத் 23:7) 


ஆலோசனைச் சங்கத்தார் ஒருவர்மீது தங்களுடைய கைகளை வைத்து அவரை ரபீயாக அங்கீகரிப்பார்கள். வேதவாக்கியங்களை மற்றவர்களுக்கு  உபதேசம் பண்ணுவதற்கு அதிகாரம் கொடுக்கும்விதமாகவும், வேதவாக்கியங்களைத் தியானிப்பதற்காகவும் அவருக்கு ஒரு திறவுகோலும், புஸ்தகத்தோடு கூடிய மேஜையும் கொடுக்கப்படும். ரபீ அந்தத் திறவுகோலை தன்னுடைய பெருமைக்காக எப்போதும் அணிந்திருப்பார். 

ரபீ மரிக்கும்போது அவருடைய திறவுகோலையும், அவரோடு சேர்த்துப் புதைத்து விடுவார்கள். யூதர்கள் யோவானை ரபீ என்றார்கள்.

 (யோவான் 3:26) அவர்கள் இயேசுவையும் ரபீ என்று அழைத்தார்கள். ஆனால் இவர்கள் இருவருமே ரபீயாக பிரதிஷ்டை பண்ணப்படவில்லை. 

 (யோவான் 20:16)


கிறிஸ்துவே போதகர்



நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்தி-ருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்  

(மத் 23:8-10).



வேதபாரகரும், பரிசேயரும் ஜனங்கள் தங்களை ரபீ என்று அழைக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ரபீ என்பதற்கு போதகர் என்று பொருள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ நம்மை யாரும் ரபீ என்று அழைப்பதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்று கூறுகிறார். ரபீ என்னும் வார்த்தை இரண்டு முறை தொடர்ந்து ""ரபீ, ரபீ'' என்று வருகிறது. 


கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் மிகவும் எச்சரிப்போடு ஊழியம் செய்யவேண்டும்.  தங்களை எல்லோரும் ரபீ அல்லது போதகர் என்று அழைத்து மரியாதை செலுத்தவேண்டு மென்று எதிர்பார்க்கக்கூடாது.  நம்மை மற்றவர்கள் ரபீ என்று அழைக்கும்போது, நாம் சாதாரண ஜனங்களிலிருந்து வேறுபட்டு வித்தியாசமானவர்களாக இருக்கிறோம். சுவிசேஷத்தின் எளிமைக்கு இது எடுத்துக்காட்டல்ல. ரபீ என்னும் பெயரிலுள்ள அதிகாரத்தை ஊழியக்காரர்கள் இச்சிக்கக்கூடாது. ஊழியம் கொள்வதற்குப் பதிலாக ஊழியம் செய்வதையே நாம் விரும்பவேண்டும். 



கிறிஸ்து ஒருவரே நமக்கு போதகராக இருக்கிறார். அவர் மாத்திரமே நமக்கு ரபீ.  அவருடைய ஊழியக்காரர்கள் எல்லோருமே அவரிடத்தில் கற்றுக்கொள்ளும் மாணவர்களாகவே இருக்கிறோம். 



நாம் எல்லோரும் சகோதரர்களாக இருக்கிறோம். ஒரே போதகரின்கீழ் பயிற்சி பெறும் ஊழியக்காரர்களாக இருக்கிறோம். ஒரே கலாசாலையில் பயிற்சி பெறுகிற மாணவர்கள் எல்லோருமே சகோதரரைப்போலவே இருக்கிறார்கள். மாணவர்கள் தங்களுடைய பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஒருவருக்கொருவர் உதவி புரியவேண்டும். மாணவன் ஒருபோதும் ஆசிரியரின் ஆசனத்தில் அமரவேண்டுமென்று இச்சிக்கக்கூடாது. கலாசாலையின் சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிந்து கல்வி பயிலவேண்டும். இயேசுகிறிஸ்துவின் கலாசாலையில், அவரிடம் பயற்சி பெறும் மாணவர்கள் யாரும், தங்களை யாரும் ரபீ என்று அழைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது.



பூமியில் நாம் ஒருவனையும் நம்முடைய பிதா என்று சொல்லக்கூடாது. பிதா என்னும் வார்த்தைக்கு நம்முடைய மார்க்கத்தின் தகப்பன் என்று பொருள். நம்முடைய மார்க்கத்திற்கு      எந்த மனுஷனையும் தகப்பனாகவோ தலைவனாகவோ ஆக்கக்கூடாது. தேவனே நம்முடைய மார்க்கத்திற்கு ஸ்தாபகராக இருக்கிறார். அவரே நம்முடைய தலைவர். ஆகையினால் எந்த மனுஷனையும் நாம் பிதா என்று அழைக்கக்கூடாது. நம்முடைய பிதாவாகிய தேவன் மாத்திரமே ""ஆவிகளின் பிதா'' வாகயிருக்கிறார் (எபி 12:9). நம்முடைய மார்க்கம் எந்த ஒரு மனுஷனிடமிருந்தும் வரவில்லை.  நாம் எந்த மனுஷனையும் சார்ந்திருக்கக்கூடாது. நம்முடைய மார்க்கமும் ஒரு மனுஷனை சார்ந்திருக்கக்கூடாது. நமது விசுவாசத்தை ஒரு மனுஷன்மீதும் வைக்கக்கூடாது. எந்த மனுஷனாலும் நம்மை பரலோகத்திற்கு அழைத்துச் செல்லமுடியாது. தேவனால் மாத்திரமே நம்மை பரலோகத்திற்குள் பிரவேசிக்கப் பண்ணமுடியும். 



அப்போஸ்தலர் பவுல் தன்னை தகப்பன் என்று அழைத்துக்கொள்கிறார்

 (1 கொரி 4:15;  பிலே 10). இது அதிகாரத்தை வெளிப்படுத்தும் வார்த்தையல்ல. அன்பை வெளிப்படுத்தும் வார்த்தை. தன் மூலமாக இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளை பவுல் ""தனக்குப் பிரியமான பிள்ளைகள்'' என்று அழைக்கிறார். இவர்களை ""தன்னுடைய அதிகாரத்திற்கும், தன்னுடைய கட்டுப்பாட்டிற்கும் உட்பட்ட பிள்ளைகள்'' என்று அழைக்காமல், ""தனக்கு பிரியமான பிள்ளைகள்'' என்றே அழைக்கிறார். 



ஆலோசனைச் சங்கத்தின் அங்கத்தினர்களைப்  பிதாக்கள் என்று அழைத்தார்கள்.

 (அப் 7:2; அப் 22:1) கிறிஸ்தவ விசுவாசியின் மத்தியில் இந்தப் பழக்கம் இல்லை. 

வேதாகமத்தில் 244 இடங்களில் தேவன் பிதா என்று அழைக்கப்படுகிறார்

140 இடங்களில் உலகப்பிரகாரமான தந்தைமார்களை இந்தச் சொல் குறிப்பிடுகிறது. விக்கிரகாராதனை செய்த ஆசாரியர்கள் பிதாக்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.  (நியா 17:10) ஆபிரகாமைப் பிதா என்று அழைத்தார்கள்.  (ரோமர் 4:11-18)



 இயேசு கிறிஸ்து மட்டுமே நமக்கு குரு. தேவனுக்குரிய மகிமையை நாம் மனுஷருக்குத் தரக்கூடாது. கிறிஸ்துவே சபையின் தலைவர்.          (எபே 1:20-23;   கொலோ 1:18,24).



பெரியவன்


உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனா யிருக்கக்கடவன் (மத் 23:11).



நமக்கு ஒரே ஒரு பிதா இருக்கிறார். பரலோகத்திலிருக்கிற ஒருவரே நமக்கு பிதாவாக இருக்கிறவர். நமது ஆவிக்குரிய ஜீவியத்திற்கு    பிதாவாகிய தேவனே ஸ்தாபகர். இவரே நமது ஆண்டவர். நமது கர்த்தர். இவரே நமக்கு ஜீவனைக்கொடுக்கிறவர். இவரே ஆதியும் அந்தமுமாக இருக்கிறவர். இவரில் நாம் சார்ந்திருக்கவேண்டும். இயேசுகிறிஸ்து       நமக்கு ஜெபிக்க கற்றுக்கொடுத்தபோது ""பரலோகத்திலிருக்கிற எங்கள் பரமபிதாவே''  என்று கூறுகிறார். பரலோகத்திலுள்ள  நம்முடைய தேவனை மாத்திரமே பிதா என்று அழைக்க வேண்டும். ஆகையினால் இந்த பூமியில்  ஒருவனையும் நம்முடைய பிதா என்று சொல்லக்கூடாது. 


நாம் ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையாய் இருக்கவேண்டும். நம்மில் பெரியவனாக இருக்கிறவன் நமக்கு ஊழியக்காரனாக இருக்கவேண்டும். நம்மில் பெரியவனாக இருக்கிறவன் நம்முடைய ஆண்டவனல்ல. அவன் நம்முடைய ஊழியக்காரன். தன்னை உயர்த்துகிறவன் எவனும் தாழ்த்தப்படுவான்.



தன்னை உயர்த்துகிறவன்


தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்  -  (மத் 23:12).



பெருமையுள்ளவனுக்கு தண்டனை நியமிக்கப்பட்டிருக்கிறது. தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். கர்த்தர் ஒருவனுக்கு மன்னிப்பை கொடுக்கும்போது, அவன் தன்னுடைய பார்வையில் தாழ்மையுள்ளவனாகவே காணப்படுவான். கர்த்தர் தன்னை மன்னித்ததற்காக கர்த்தருடைய சமுகத்தில் அவன் தன்னை தாழ்த்துவான். அவனிடத்தில் பெருமை காணப்படாது. ஒருவன் தன் பாவங்களிலிருந்து மனந்திருந்தவில்லையென்றால், இந்த உலகத்தில் அவன் தன்னை உயர்ந்தவனாகவே நினைத்துக்கொள்வான். தன்னை ஒருபோதும் தாழ்த்தமாட்டான்.



தாழ்மையுள்ளவனுக்கு வெகுமதி கொடுக்கப்படுகிறது. தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். இந்த உலகத்தில் தன்னை தாழ்த்துகிறவனை பரிசுத்தமான தேவன் உயர்த்துகிறார். தாழ்மையுள்ளவர்களுக்கு நல்லோரும் ஞானிகளும் மதிப்பு கொடுக்கிறார்கள். தேவனுடைய உன்னதமான ஊழியத்தை செய்வதற்கு தாழ்மையுள்ளவர்களே தகுதியானவர்கள். புகழ்ச்சி நிழலைப்போன்றது. அதைத் தேடினால் அது நம்மைவிட்டு விலகிப்போகும். அதைவிட்டு விலகிப்போனால் அது நம்மை பின்தொடரும். இம்மையில் தன்னை தாழ்த்துகிறவன் மறுமையில் உயர்த்தப்படுவான். தங்கள் பாவங்கள் நிமித்தமாக இம்மையில் தங்களை தாழ்த்தி மனம்வருந்துகிறவர்கள், மறுமையில் தேவனுடைய மகிமையில் பங்கு பெறுவார்கள். 



இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தின் பிரகாரம் மனுஷர் யாருமே தங்களை உயர்த்தக்கூடாது. தாழ்மை உடையவர்களாக இருக்க வேண்டும். தாழ்மையுள்ளவர்களுக்குத் தேவன் கிருபை அளிக்கிறார். பெருமையுள்ளவர்களுக்கோ தேவன் எதிர்த்து நிற்கிறார். 



உங்களுக்கு ஐயோ



பரலோக ராஜ்யத்தை பூட்டுதல்


மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள் நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை (மத் 23:13).



இயேசுகிறிஸ்து பரிசேயருக்கும் வேதபாரகருக்கும் எட்டு முறை ஐயோ என்று கூறுகிறார். சீனாய் மலையில் தேவன் மோசேயிடம் பேசியபோது அங்கு மின்னலும் இடி முழக்கமும் உண்டாயிற்று. அதுபோல இயேசுகிறிஸ்து பரிசேயரையும் வேதபாரகரையும் ஐயோ என்று கடிந்து கூறும்போது இடி முழக்கம்போன்ற சப்தம் உண்டாகிறது.             மத் 5-ஆவது அதிகாரத்தில் இயேசுகிறிஸ்து ""பாக்கியவான்கள்'' என்று எட்டுமுறை கூறியிருக்கிறார் (மத் 5:3). இயேசுகிறிஸ்துவின் வாயிலிருந்து பொதுவாக ஆசீர்வாதமான வார்த்தைகளே வரும். அவருடைய வார்த்தைகள் மென்மையானவைகளாக இருக்கும். ஆனால் இங்கோ பரிசேயரையும், வேதபாரகரையும் ""உங்களுக்கு ஐயோ'' என்று கடினமான வார்த்தைகளை கூறுகிறார். 



இயேசுகிறிஸ்து மனுஷரை ஆசீர்வதிப்பதற்காகவே இந்த பூமிக்கு வந்திருக்கிறார். அவர் ஆசீர்வாதத்தை விரும்புகிறவர். ஆனால் பரிசேயரும் வேதபாரகரும் இயேசுகிறிஸ்துவை கோபப்படுத்தியிருக்கிறார்கள். கோபப்படுவது இயேசுகிறிஸ்துவின் சுபாவமல்ல. ஆயினும் பரிசேயர், சதுசேயர் ஆகியோருடைய துன்மார்க்கமான பேச்சும், கிரியைகளும் இயேசுகிறிஸ்துவுக்கு கோபத்தை உண்டுபண்ணிற்று. அவர்கள்மீது இயேசுகிறிஸ்துவுக்கு ஏற்பட்ட கோபத்தினால், அவர் வாயிலிருந்து கோபமான வார்த்தைகள் புறப்பட்டு வருகிறது. 



""மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ'' என்னும் வார்த்தை  மிகவும் பாரமான வார்த்தையாகும்.  வேதபாரகரும் பரிசேயரும் மாயக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய எல்லா தீய சுபாவங்களும் மாய்மாலத்தில் சங்கமமாக இருக்கிறது. மாயக்காரன் நாடகமேடையில் வேஷம் போட்டு நடிக்கிறவன். இவன் தன்னுடைய பாத்திரத்திற்குத் தகுந்தபடி வேஷம் போடுவான். இவனுடைய வேஷம் இவனுக்கு உண்மையான சுபாவமல்ல. தன் உண்மையான சுபாவத்தை மறைத்து, வேஷம்போட்டு, வேறு யாருபோலவோ நடித்து காண்பிப்பான். 



இயேசுகிறிஸ்து ஒவ்வொரு முறையும் வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் ஐயோ என்று கூறும்போது, அதற்கான காரணத்தையும் அதோடு சேர்த்து கூறுகிறார். அவர்களை கடிந்துகொள்ளும் வார்த்தைகளை நியாயப்படுத்துகிறார். இயேசுகிறிஸ்து ஒருபோதும் யாரையும் காரணமில்லாமல் சபிப்பவரல்ல. 



பரிசேயரும் வேதபாரகரும் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு சத்துருக்களாக இருக்கிறார்கள். இதனால் மனுஷனுடைய ஆத்தும இரட்சிப்புக்கு இவர்கள் சத்துருவானார்கள். மனுஷர் பிரவேசியாதபடி பரலோக ராஜ்யத்தை இவர்கள் பூட்டிப்போட்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து பரலோக ராஜ்யத்தை திறப்பதற்காக வந்திருக்கிறார். இயேசுவின் மூலமாக இதன் மூலமாக தேவனுடைய ராஜ்ஜியத்திற்குரியவர்களுக்கு பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் சிலாக்கியம் கிடைத்திருக்கிறது. 



பரிசேயரும் வேதபாரகரும் மோசேயின் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். வேதவாக்கியத்தின் அறிவு என்னும் திறவுகோல் இவர்களிடம் உள்ளது. இந்த திறவுகோலைப் பயன்படுத்தி, ஜனங்கள் பரலோகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இவர்கள் உதவிபுரியவேண்டும்.  ஆனால் பரலோகத்தின் கதவை திறப்பதற்குப் பதிலாக, அதை பூட்டிப்போட்டிருகிறார்கள். 



மோசேயின் பிரமாணத்தை இவர்கள் ஜனங்களுக்கு விளக்கி கூறவேண்டும். இயேசுகிறிஸ்துவைப்பற்றி பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் வெளிப்படுத்தியிருக்கும் முன்னறிவிப்புக்களையெல்லாம் இவர்கள் ஜனங்களுக்கு எடுத்துக்கூறவேண்டும். இவர்களிடம் மிகப்பெரிய ஊழியப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான ஜனங்கள் பரலோகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இவர்கள் காரணமாக இருக்கவேண்டும். ஆனால் இவர்களோ பரலோகத்திற்குள் பிரவேசிப்பவர்களையும் தடைபண்ணிவிடுகிறார்கள். பரலோகத்தின் வாசல்களை அடைத்துப்போடுகிறார்கள். 



இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை ஜனங்கள் கேட்கக்கூடாதவாறு, இவர்கள் ஜனங்களுக்கு மாற்று உபதேசங்களை போதிக்கிறார்கள். தங்கள் போதகத்தின் மூலமாக ஜனங்களுக்கு இயேசுகிறிஸ்துவின்மீது வெறுப்பையும் கோபத்தையும் உண்டுபண்ணுகிறார்கள். இயேசுவுக்கு எதிராக விஷவிதைகளை தூவுகிறார்கள்.



பரிசேயரும் வேதபாரகரும் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கமாட்டார்கள். ""பரிசேயரில் யாரும் இயேசுவை விசுவாசித்ததில்லை'' 

(யோவா 7:48). இவர்கள் பெருமையுள்ளவர்கள். இயேசுகிறிஸ்துவின் தாழ்மையை இவர்கள் அங்கீகரிக்கவில்லை. அவரை ஏளனம்பண்ணுகிறார்கள். தாழ்மையின்மீது கட்டியெழுப்பப்படும் மார்க்க உபதேசங்களை இவர்கள் விரும்பவில்லை. பரலோகராஜ்யத்திற்குள் மனந்திரும்பியவர்கள் மாத்திரமே பிரவேசிக்க முடியும். மனந்திரும்புதலே பரலோகராஜ்யத்தின் கதவாக இருக்கிறது. ஆனால் பரிசேயர் ஒருபோதும் மனந்திரும்புவதில்லை. மனந்திரும்பவேண்டுமென்று யோசிப்பதுமில்லை. ஆகையினால் இவர்கள் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கிறதில்லை. 



பரலோக ராஜ்யத்திற்கு பிரவேசிக்கப்போகிறவர்களையும் இவர்கள் பிரவேசிக்க விடுகிறதில்லை. நாம் இயேசுகிறிஸ்துவின் சமுகத்தைவிட்டு விலகியிருப்பது பாவம். மற்றவர்களை இயேசுகிறிஸ்துவின் சமுகத்தில் கிட்டிச் சேரவிடாமல் அவர்களை தடைபண்ணுவது மிகப்பெரிய பாவம். பரிசேயரும் வேதபாரகரும் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசியாமல், மற்றவர்கள் அதில் பிரவேசிப்பதற்கு தடையாக இருக்கிறார்கள். இவர்களுடைய உபதேசத்தின் மூலமாகவும், தவறான தலைமைத்துவத்தின் மூலமாகவும், ஏராளமான ஜனங்கள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்திருக்கிறார்கள். 



இயேசுகிறிஸ்து பாவிகளோடு பழகுவதை  பரிசேயர்கள் எதிர்க்கிறார்கள் (லூக் 7:39). அதுபோலவே பாவிகளும் இயேசுகிறிஸ்துவிடத்தில் வருவதற்கு இவர்கள் எதிர்ப்பு காண்பிக்கிறார்கள். சமுதாயத்தில் தங்களுக்கு இருக்கும் உயர்ந்த அந்தஸ்துக்களையும், தங்களுடைய அதிகாரங்களையும், செல்வாக்குகளையும் பயன்படுத்தி இயேசுவை எதிர்க்கிறார்கள்.  இதன் மூலமாக இவர்கள் பரலோகத்தின் வாசலை பூட்டிப்போடுகிறார்கள். இதன் வாசல்கள் பூட்டப்பட்டிருப்பதினால் பரலோகத்திற்குள் பிரவேசிக்க விரும்பும் ஜனங்கள் பலவந்தமாகவே பிரவேசிக்க வேண்டியதாக இருக்கிறது யோவான்ஸ்நானன் காலம்முதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம்பண்ணப்படுகிறது. பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதை பிடித்துக்கொள்கிறார்கள் (மத் 11:12). 



தேவனுடைய ராஜ்யம் ஜனங்களுக்கு  சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பரிசேயரும் வேதபாரகரும் பரலோக ராஜ்யத்தை பூட்டிப்போட்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க விரும்புகிற யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள் 

(லூக் 16:14). 


வேதபாரகரும், பரிசேயரும் மாயக்காரர்கள். அவர்கள் தவறான உபதேசங்களைப் போதிக்கிறார்கள். இதனால் அவர்களாலும், பரலோக ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க முடியவில்லை.           மற்றவர்களையும் பிரவேசிக்க விடுவதில்லை.



நீண்ட ஜெபம் 


மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்              (மத் 23:14).



பரிசேயரும் வேதபாரகரும் விதவைகளின் வீடுகளை பட்சித்துப்போடுகிறார்கள். அவர்களை  தங்கள் சுயநலன்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். விதவைகளுக்கு ஆதரவாக யாரும் இருப்பதில்லை. இவர்கள் விதவைகளிடத்தில் பிரியமாக இருப்பதுபோல நடித்து, அவர்களுடைய நன்மதிப்பை பெற்று, அவர்கள் சொத்துக்களையெல்லாம் தங்கள் வசமாக்கிக்கொள்கிறார்கள். இவர்களுடைய இச்சக பேச்சுக்களினால், விதவைகள் ஏமாந்துபோய் தங்கள் சொத்துக்களையெல்லாம் இவர்களிடத்தில் இழந்துவிடுகிறார்கள். தங்களுடைய ஐசுவரியங்களை பெருக்கிக்கொள்ள வேண்டுமென்பதே இவர்களுடைய விருப்பம். தங்களுடைய கிரியைகள் துன்மார்க்கமானதாக இருந்தாலும், அவற்றை நியாயப்பிரமாணத்தின் போர்வையிலே மறைத்து, தங்கள் துன்மார்க்கமான கிரியைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறார்கள். மிகவும் கவனமாகவும், வஞ்சமாகவும் இவர்கள் கிரியைசெய்வதினால், இவர்களுடைய துன்மார்க்கத்தை கண்டுபிடிப்பதும் அரிதாக இருக்கிறது. 



இவர்கள் பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணுகிறார்கள். சில சமயங்களில் இவர்களுடைய ஜெபம் மூன்றுமணி நேரம் தொடரும் என்று யூதமார்க்கத்து வரலாற்று புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இதுபோல மூன்றுமுறை ஜெபிப்பார்கள். சுமார் நாள் ஒன்றுக்கு ஒன்பது மணி நேரம் ஜெபிக்கிறார்கள். தங்கள் நீண்ட ஜெபங்களின் மூலமாக ஜனங்களை ஏமாற்றிவிடுகிறார்கள். ஜனங்கள் இவர்களை நல்லவர்கள் என்று      நம்பி தங்களுடைய சொத்துக்களையும் பொருட்களையும் இவர்களிடத்தில் பொறுப்பாய் ஒப்படைத்துவிடுகிறார்கள். 



அதிக நேரம் ஜெபிப்பதை இயேசுகிறிஸ்து தடைபண்ணவில்லை. ஆனால் நம்முடைய ஜெபம் மாய்மாலமாக இருக்கக்கூடாது. இயேசுகிறிஸ்து இரவு முழுவதும் தமது பிதாவிடத்தில் ஜெபம்பண்ணியிருக்கிறார். இயேசுகிறிஸ்துவிடத்தில் பலர் வந்து தங்கள் பாவங்களை அறிக்கை செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்காகவும் ஜெபிக்கும்போது இயேசு அதிகநேரம் ஜெபத்தில் தரித்திருப்பார்.


நம்மிடத்தில் பலர் வந்து தங்கள் தேவைகளையெல்லாம் கூறி, தங்களுக்காக ஜெபிக்குமாறு கேட்டுக்கொள்ளலாம். கர்த்தர் தங்களை அதிகமாக ஆசீர்வதித்தற்காக நம்மிடத்தில் பலர் வந்து கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பண்ணுமாறு நம்மிடத்தில் கேட்டுக்கொள்ளலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாமும் அதிகநேரம் ஜெபம்பண்ணுவோம். ஒவ்வொருவருக்காகவும், அவர்களுடைய தேவைகளையெல்லாம் ஒவ்வொன்றாக சொல்லி ஜெபிக்கும்போது நேரம் அதிகமாகும். ஆனால் பரிசேயருடைய நீண்ட ஜெபமோ பார்வைக்காக செய்யப்படுகிறது. 



பரிசேயர் பார்வைக்காக நீண்ட நேரம் ஜெபம்பண்ணுகிறார்கள். இதன் மூலமாக தாங்கள் அதிகபக்தியுள்ளவர்கள் என்றும், ஜெபத்தை அதிகமாக நேசிக்கிறவர்கள் என்றும், பரலோக ராஜ்யத்தைக்குறித்த கரிசனை தங்களிடத்தில் அதிகமாக உள்ளது என்றும் தங்களைப்பற்றிக் காண்பித்துக்கொள்கிறார்கள். தங்களை நல்லவர்கள் என்று ஜனங்கள் நம்பவேண்டும் என்பதே இவர்களுடைய உள்நோக்கம். இவ்வளவு நீண்ட ஜெபம்பண்ணுகிறவர் ஜனங்களை ஏமாற்றமாட்டார் என்னும் மாயத்தோற்றத்தில் ஜனங்கள் இருக்கிறார்கள். ஜெபம்பண்ணும்போது இவர்களுடைய கைகள் பரலோகத்தை நோக்கி ஏறெடுக்கப்பட்டாலும், இவர்களுடைய மனக்கண்களோ பூமிக்குரிய காரியங்களை இச்சிக்கும். ஜனங்களை எவ்வாறு ஏமாற்றலாம் என்று வஞ்சிக்கும். எந்த விதவையின் வீடுகளை பட்சிக்கலாம் என்று சதிஆலோசனை செய்யும். தங்களுடைய வசதிவாய்ப்புக்களை எவ்வாறு அதிகரிக்கலாம் என்று திட்டமிடும். பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணுவது அன்று இருந்ததுபோலவே இன்றும் இருக்கிறது. மாய்மாலமான இந்த ஜெபத்தை இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கவில்லை. 



இதன் நிமித்தமாக அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்று இயேசுகிறிஸ்து கடிந்துகொள்கிறார். நியாயப்பிரமாணத்தின் பேரினால், தேவனுடைய பேரினால் இவர்கள் அநியாயங்களையும், அக்கிரமங்களையும் செய்யும்போது தேவன் இவர்களை சகித்துக்கொண்டிருக்கமாட்டார். தம்முடைய ஆக்கினைத்தீர்ப்பை இவர்கள்மீது சடுதியாக அனுப்புவார். 


யூதமார்க்கத்தலைவர்கள் சில வேளைகளில் மூன்று மணி நேரம் ஜெபிப்பார்கள். ஒரு நாளுக்கு மூன்று தடவை நீண்ட ஜெபம் ஏறெடுப்பார்கள். (மத் 6:5-9)



நரகத்தின் மகன்



மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள் 

(மத் 23:15).



ஜனங்கள் இயேசுகிறிஸ்துவினிடத்தில் வராதபடி பரிசேயரும் வேதபாரரும் பரலோகத்தை அடைத்துப்போடுகிறார்கள். ஆனால் ஜனங்களை தங்கள் மார்க்கத்தானாகும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறார்கள். புறஜாதி ஜனங்களை யூதமார்க்கத்தாராக ஆக்குவதற்கு  கடினமாக உழைக்கிறார்கள். இதற்காக இவர்கள் எல்லா இடங்களுக்கும் பிரயாணம் பண்ணுகிறார்கள். தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்பது இவர்களுடைய நோக்கமல்ல. ஆத்துமாக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்பது இவர்களுடைய விருப்பமல்ல.  ஏராளமான ஜனங்களை தங்கள் மார்க்கத்தில் சேர்த்தால் தங்களுக்கு பெருமையுண்டாகும் என்பதற்காகவே இந்த வேலைகளையெல்லாம் செய்கிறார்கள். 



புறஜாதி மார்க்கத்திலிருக்கும் ஒருவருக்கு  தேவனுடைய அன்பையும், அவருடைய திட்டத்தையும் எடுத்துக்கூறி அவர்களை தேவனிடத்தில் அழைத்து வருவது மிகவும் நல்ல ஊழியம். இந்த ஊழியத்தை செய்கிறவர்கள் அழிந்து போகும் ஆத்துமாக்கள்மீது கரிசனையுள்ளவர்கள். அழிந்து போகும் ஆத்துமாக்களை மரணத்திலிருந்து காப்பாற்றி அவற்றிற்கு மறுபடியும் ஜீவனைக் கொடுக்கிறவர்கள். ஆனால் பரிசேயர், வேதபாரகர் ஆகியோரின் ஊழியங்கள் ஆத்துமாக்கள்மீது கரிசனைகொண்ட ஊழியமல்ல. தேவநாமம் மகிமைப்படவேண்டும் என்னும் நோக்கத்திற்காக செய்யப்படும் ஊழியமல்ல. தங்கள் சுயபெருமைக்காகவும், சுயமகிமைக்காகவும், சுயகௌரவத்திற்காகவும் இவர்கள் புறஜாதியாரை தங்கள் மார்க்கத்தாராக்குகிறார்கள்.


இவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் இவர்களுடைய நோக்கம் சரியானதல்ல. இவர்கள் எல்லா இடங்களுக்கும் பிரயாணம் பண்ணுகிறார்கள். ஆனால் இவர்களுடைய குறிக்கோள் நேர்மையானதல்ல. இவர்கள் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை பரப்பும் ஊழியத்தை செய்யவில்லை. தங்கள் சொந்தக் கொள்கைகளையும், பாரம்பரியக் கருத்துக்களையும் ஜனங்களிடத்தில் பரப்புகிறார்கள்.


இவர்களுடைய ஊழியத்தின் மூலமாக புறஜாதி மார்க்கத்தைச் சேர்ந்த பலர் இவர்களுடைய மார்க்கத்தாராகிறார்கள். புறஜாதியார் இவர்களுடைய மார்க்கத்தாரான பின்பு அவர்களையும் தங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறார்கள். புறஜாதி மார்க்கத்திலிருந்து பரிசேயரின் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டவன் ""நரகத்தின்மகன்'' என்று அழைக்கப்படுகிறான். ஏனெனில் பரலோக ராஜ்யத்திற்கு விரோதமான வேர் இவர்களுடைய உள்ளத்தில் முளைத்திருக்கிறது. பரிசேயரின் கொள்கைகளும், கோட்பாடுகளும் பரலோக ராஜ்யத்திற்கு எதிரானவை. 


ஒருவன் உண்மையாக மனந்திரும்பவில்லையென்றால் அவனுடைய நிலமை மிகவும் பரிதாபமாக இருக்கும். இவனால் அவனுடைய பழைய மார்க்கத்தையும் மனப்பூர்வமாக அனுபவிக்கமுடியாது. அதேவேளையில் இவன் அரைகுறையாக மனந்திரும்பியிருப்பதினால், புதிய மார்க்கத்திலுள்ள                  ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளமுடியாது. 


சில சமயங்களில் ஒரு மார்க்கத்திலிருந்து மற்றொரு மார்க்கத்திற்கு மனந்திரும்புகிறவர்கள்  அந்த மார்க்கத்தில் மிகவும் வைராக்கியமாக இருப்பார்கள். தங்களை அந்த மார்க்கத்திற்கு வழிநடத்தியவர்களைவிட, வேகமாகவும் விருவிருப்பாகவும் மார்க்க காரியங்களில் ஈடுபடுவார்கள். அப்போஸ்தலர் பவுல் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக ஒரு பரிசேயனாக இருந்தார். கிறிஸ்தவர்கள் பேரில் மூர்க்கவெறி கொண்டவராக இருந்தார் (அப் 16:11). இவர் கமாலியேலின் மாணவர். கமாலியேல் பவுலைப்போல கிறிஸ்தவர்கள்மீது மூர்க்கவெறி கொண்டவரல்ல. சாந்தகுணமும் இணக்க குணமுமுள்ளவர். ஆனால் பவுலோ தன் ஆசிரியரைவிட தன் மார்க்ககாரியங்களில் மிகவும் வேகமாகவும், வைராக்கியமாகவும் நடந்துகொண்டார்.


""ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்''  என்னும் இந்த வாக்கியம் யூதருடைய வழக்குச்சொல் ஆகும். ஒருவனைத் தன்னுடைய மார்க்கத்தானாகும்படி எல்லா விதமான முயற்சியும் பண்ணுதல் என்பது இதன் பொருள். இவர்கள் மனுஷரைத் தேவனிடத்தில் வழிநடத்தாமல், தங்களிடமே வழிநடத்துகிறார்கள்.



யூதமார்க்கத்தமைந்தவர்களில் இரண்டு பிரிவினர்கள் இருந்தார்கள். அவர்களைப்பற்றிய விவரம் வருமாறு  :



    1. நீதியின் பிரகாரமாக யூத மார்க்கத்தமைந்தவர்கள். இவர்கள் விருத்தசேதனம் பண்ணிக்கொள்வார்கள். மோசேயின் பிரமாணங்களைக் கைக் கொள்ளப் பொருத்தனை செய்து கொள்வார்கள். யூதமார்க்கத்தின் எல்லா பழக்கவழக்கங்களையும்                 கடைப்பிடிப்பார்கள்.



    2. வாசல்களில் இருக்கிற யூத மார்க்கத்தமைந்தவர்கள்.

 (யாத் 20:10; உபா 5:14; உபா 24:16-21) 

இவர்கள் இஸ்ரவேல் ஜாதியார் மத்தியில் வசித்து வந்தார்கள். விருத்தசேதனம் பண்ணுவதில்லை. 


ஆனால் நோவாவின் ஏழு ஆலோசனைகளை இவர்கள் கடைப்பிடித்தார்கள். 


அவையாவன: 

  • விக்கிரகாராதனை, 

  • தேவதூஷணம், 

  • கொலை பண்ணுதல், 

  • கற்பின்மை,

  •  திருடுதல்,

  •  கலகம் பண்ணுதல், 

  • மாம்சத்தையும், இரத்தத்தையும் பயன்படுத்துதல்.



சத்தியம்பண்ணுதல்


குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள் (மத் 23:16).



சத்தியம்பண்ணுவது எல்லா மார்க்கத்திலும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சாதாரணமாக கூறுவதற்கும், ஒரு காரியத்தை சத்தியம் பண்ணுவதற்கும் வித்தியாசமுள்ளது. சத்தியம்பண்ணும்போது, சத்தியம்பண்ணுகிறவர், எதன் பேரில் அல்லது யார் பேரில் சத்தியம்பண்ணுகிறாரோ, அதையும் அல்லது அவரையும் தன்னுடைய வார்த்தைகளுக்கு சாட்சியாக நியமிக்கிறார். வேதபாரகரும் பரிசேயரும் சத்தியம்பண்ணும் விஷயத்தில் மிகப்பெரிய தவறு செய்கிறார்கள். இவர்கள் குருடரான வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். ஏராளமான ஜனங்களுடைய இரத்தப்பழிக்கு இவர்கள் காரணமாக இருக்கிறார்கள். பலருடைய ஆத்துமாக்களை இரத்தம் சிந்த வைத்துவிட்டார்கள். ஆகையினால் குருடரான இந்த வழிகாட்டிகளை ஐயோ என்று கூறி அவர்களை சபிக்கிறார். 


வேதபாரகர், பரிசேயர் ஆகியோரின்  உபதேசத்தை இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கவில்லை. அவர்கள் தேவாலயத்தின் பேரில் சத்தியம்பண்ணுவதையும், தேவாலயத்தின் பொன்னின் பேரில் சத்தியம்பண்ணுவதையும்  வெவ்வேறாக பிரிக்கிறார்கள்.     


தேவாலயத்தின் பொன்னின் பேரில் ஒருவன் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளி என்று கூறுகிறார்கள். அதேவேளையில் அவன் தேவாலயத்தின் பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்று கூறிவிடுகிறார்கள். இவர்களுக்கு தேவாலயத்தைவிட தேவாலயத்தின் பொன்னே மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. 


பரிசேயரும் வேதபாரகரும் இரண்டுவிதமான துன்மார்க்கமான காரியங்களை இதன் மூலமாக செய்கிறார்கள்.  சத்தியம்பண்ணுவதை இவர்கள் இரண்டுவிதமாக பிரிக்கிறார்கள். ஒன்று சாதாரணமான சத்தியம். மற்றொன்று முக்கியமான சத்தியம். ஒரு உண்மையை வலியுறுத்துவதுதான் சத்தியம்பண்ணுவது. சத்தியம்பண்ணுவதை சாதாரணமானது என்றும், முக்கியமானது என்றும் இரண்டாக பிரிக்கக்கூடாது. ஒரு காரியத்தை சத்தியம் பண்ணினாலே அது முக்கியத்தும்  பெற்றுவிடுகிறது. தேவன் சத்தியம்பண்ணுவதை இரண்டாக பிரிப்பதில்லை.


தேவாலயத்தைவிட, தேவாலயத்தின் பொன்னுக்கு இவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பலிபீடத்தைவிட, பலிபீடத்தின்மேல் இருக்கிற காணிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பலிபீடத்திற்கு காணிக்கைகளையும், தேவாலயத்தின் பொக்கிஷங்களுக்கு பொன்னையும் கொண்டு வருமாறு ஜனங்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.  இதன் மூலமாக தங்களுக்கு வரும் ஆதாயமே இவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சத்தியம் பண்ணுவது இவர்களுக்கு முக்கியமானதல்ல.



மதிகேடரே, குருடரே



மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? மேலும், எவனாகிலும் ப-பீடத்தின்பேரில் சத்தியம் பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின் பேரில் சத்தியம்பண்ணினால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?  (மத் 23:17-19).



பரிசேயரையும் வேதபாரகரையும் இயேசுகிறிஸ்து மதிகேடரே என்றும், குருடரே என்றும் கடிந்து கூறுகிறார். அவர்கள் சத்தியம்பண்ணுவதை சாதாரணமான சத்தியம் என்றும், முக்கியமான சத்தியம் என்றும் இரண்டாக பிரிப்பதை இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கவில்லை. காணிக்கை முக்கியமானதா அல்லது பலிபீடம் முக்கியமானதா என்று பார்க்கும்போது, காணிக்கையை பரிசுத்தமாக்குகிற பலிபீடமே முக்கியமானதாக இருக்கிறது. அதுபோலவே  பொன் முக்கியமானதா அல்லது தேவாலயம் முக்கியமானதா என்று பார்க்கும்போது, பொன்னைவிட பொன்னை பரிசுத்தமாக்குகிற தேவாலயமே முக்கியமானதாக இருக்கிறது. 


தேவாலயத்திலுள்ள பொன்னின் பேரில் சத்தியம்பண்ணுகிறவர்களுடைய பார்வையில் பொன் பரிசுத்தமானதாக இருக்கும். ஆயினும் இந்த பொன்னைவிட இதை பரிசுத்தப்படுத்துகிற தேவாலயமே முக்கியமானது. தேவாலயமும், தேவாலத்தில் நடைபெறும் ஊழியங்களும் பரிசுத்தமானது. எந்தவிதத்திலும் தேவாலயம் பொன்னைவிட குறைந்துபோய்விடவில்லை. மெய்யாகவே பொன்னைவிட தேவாலயமே பரிசுத்தமானது.



பொருத்தனை செய்தால் அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இல்லையென்று பரிசேயர்கள் நினைத்தார்கள். 

(மத் 23:16,18) 

ஆனால் இயேசு கிறிஸ்துவோ பொருத்தனை செய்தால் அதைச் செலுத்தவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். நாம் செய்யும் பொருத்தனையைவிட தேவாலயம் பெரியது. பலிபீடத்தின்மீது வைக்கப்படும் பலியை விட பலிபீடம் பெரியது. (மத் 23:17, 19-22)



தேவன் பேரில் சத்தியம்


ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.  தேவாலயத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம் பண்ணுகிறான். வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர் பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்

 (மத் 23:20-22).



சத்தியம் பண்ணுவதன் மெய்யான நோக்கத்தை இயேசுகிறிஸ்து வெளிப்படுத்துகிறார். பொன்னின் பேரில் சத்தியம்பண்ணினாலும், தேவாலயத்தின் பேரில் சத்தியம்பண்ணினாலும், பலிபீடத்திலுள்ள காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினாலும், பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணினாலும், எல்லா சத்தியங்களும் தேவன் பேரிலேயே சத்தியம்பண்ணப்படுகிறது. 


பலிபீடத்தின் பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின் பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். தேவாலயத்தின் பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின் பேரிலும், அதில் வாசமாயிருக்கிறவர் பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். வானத்தின் பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின் பேரிலும், அதில் வீற்றிருக்கிறவர் பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். ஒருவன் இவற்றின் பேரில் சத்தியம்பண்ணும்போது தன்னுடைய வார்த்தைக்கு தேவனை சாட்சியாக நியமிக்கிறான். ஒருவன் பலிபீடத்திற்கு அருகில் போகும்போது, அவன் தேவனுடைய சமுகத்திற்கருகில் போகிறான். 


ஒருவன் தேவாலயத்தின் பேரில் சத்தியம்பண்ணும்போது, அவன் தேவாலயத்தை தேவனுடைய வீடாக  அங்கீகரிக்கிறான்.  தேவன் இந்த ஸ்தலத்தை அங்கீகரித்து இதில் வாசம்பண்ணுகிறார். தமது நாமத்தை இங்கு பிரஸ்தாபப்படுத்தியிருக்கிறார். பரிசுத்தப்படுத்தியிருக்கிறார். தேவாலயத்தின் பேரில் சத்தியம்பண்ணுகிறன் அதில் வாசமாயிருக்கிற தேவன் பேரிலேயே சத்தியம் பண்ணுகிறான்.


வானத்தின்பேரில் சத்தியம்பண்ண வேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்  (மத் 5:34) என்று இயேசுகிறிஸ்து ஏற்கெனவே உபதேசம்பண்ணியிருக்கிறார். சத்தியம்பண்ணவேண்டாம் என்று இயேசுகிறிஸ்து கூறினாலும், நம்முடைய வார்த்தைகள் எப்போதும் சத்தியமுள்ளதாகவே இருக்கவேண்டும். சத்தியம்பண்ணியதை நாம் நிறைவேற்றவேண்டும். வானம் எனக்கு சிங்காசனம் என்றும் பூமி எனக்கு பாதபடியென்றும் கர்த்தர் சொல்லியிருக்கிறார் (ஏசா 66:1). வானத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் வானத்திலுள்ள சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் தேவன் பேரிலேயே சத்தியம்பண்ணுகிறான். 



தசமபாகம் 


 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே 

(மத் 23:23).



வேதபாரகரும் பரிசேயரும் நியாயப்பிரமாணத்திலுள்ள மிகவும் சிறிய காரியங்களுக்குக்கூட அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் வேதாகமத்தின் மிகவும் முக்கியமான உபதேசங்களில் கவனக்குறைவாக இருந்து அவற்றை அசட்டை செய்துவிடுகிறார்கள். நியாயப்பிரமாணத்தை பூரணமாக கடைபிடிக்காமல் அரைகுறையாக கடைபிடிக்கிறார்கள். தேவனுடைய பிரமாணத்தில் கீழ்ப்படிதல் மிகவும் முக்கியமானது. தேவனுடைய பிரமாணம் எதுவாக இருந்தாலும் நாம் அதற்கு கீழ்ப்படியவேண்டும். தேவனுடைய பிரமாணம் அனைத்திற்கும் நாம் மதிப்பு கொடுக்கவேண்டும்.  ஆனால் வேதபாரகரும் பரிசேயருமோ தங்களுக்கு பிடித்தமான பிரமாணத்திற்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து, மற்றவற்றை அசட்டை செய்துவிடுகிறார்கள். 


இவர்கள் சிறிய காரியங்களை செய்கிறார்கள். பெரிய காரியங்களை ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். தசமபாகம் செலுத்துவதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். ஒற்தலாமிலும், சீரகத்திலும், வெந்தையத்திலும்  தசமபாகம் செலுத்துகிறார்கள். இவற்றில் தசமபாகம் செலுத்தும்போது இவர்களுக்கு அதிக செலவு இராது. எது செலவு குறைந்ததோ அதை சந்தோஷமாக செய்கிறார்கள். தங்களிடத்திலுள்ள எல்லாவற்றிலும் தாங்கள் தசமபாகம் செலுத்துவதாக இவர்கள் பெருமைப்படுகிறார்கள். ""என் சம்பாதியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன்'' என்று பரிசேயன் தனக்குள்ளே ஜெபம்பண்ணினான் (லூக் 18:12). தசமபாகம் செலுத்துவது இவர்களுடைய கடமை. இவைகளை விடாதிருக்கவேண்டுமென்று இயேசுகிறிஸ்து வலியுறுத்துகிறார்.


ஜனங்கள் மத்தியில் தங்களுக்கு நற்பெயர் கிடைக்கவேண்டும் என்றும், தங்களுடைய பக்தியை எல்லோரும் புகழவேண்டுமென்றும், தாங்கள் தசமபாகம் செலுத்துவது எல்லோருக்கும் தெரிந்திருக்கவேண்டுமென்றும் பரிசேயரும் வேதபாரகரும் விரும்புகிறார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு உபதேசம்பண்ணுகிறார்கள். தாங்கள் கூறும் உபதேசத்தின் பிரகாரம் இவர்கள் நடந்துகொள்வதில்லை. வேதவாக்கியங்களில் இவர்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால்  இவர்கள் கற்றுக்கொண்ட வேதவாக்கியம் இவர்களுடைய உள்ளத்திற்குள் போய்ச் சேரவில்லை. நாமும் சுவிசேஷத்தைக் கேட்கும்போது, அதன் சத்தியத்திற்கு பூரணமாக கீழ்ப்படியவேண்டும். நமக்கு பிடித்த சத்தியத்திற்கு மாத்திரம் கீழ்ப்படிந்துவிட்டு, மற்றவற்றிற்கு கீழ்ப்படியாமல் போய்விடக்கூடாது. சுவிசேஷத்திற்கு நாம் பூரணமாக கீழ்ப்படியவில்லையென்றால் நமது இரட்சிப்பு உறுதியாகயிராது. 


நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவை நியாயப்பிரமாணத்தில் கற்பிக்கப்பட்டிருக்கும் மிகவும் முக்கியமான சத்தியங்களாகும். பரிசேயரும் வேதபாரகரும் இந்த முக்கியமான சத்தியங்களை விட்டுவிடுகிறார்கள். தேவனுடைய பிரமாணங்கள் அனைத்துமே முக்கியமானவை. நம்முடைய இருதயத்தை  சுத்திகரிக்கும் சத்தியம் எல்லாமே மிகவும் முக்கியமான பிரமாணமாகும்.  மனுஷர்மீது நாம் கிருபையும் இரக்கமும் காண்பிப்பது, தேவனிடத்தில் விசுவாசமாக இருப்பது, தேவனிடத்தில் பயபக்தியோடிருப்பது ஆகியவற்றை உபதேசிக்கும் வார்த்தைகள் எல்லாமே மிகவும் முக்கியமானவை. 


நன்மை இன்னதென்று தேவன் நமக்கு அறிவித்திருக்கிறார். நியாயம் செய்து, இரக்கத்தை சிநேகித்து, நம் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை கர்த்தர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார் (மீகா 6:8). இதுவே கீழ்ப்படிதல். பலியையும், தசமபாகத்தையும் பார்க்கிலும்  கீழ்ப்படிதலே உத்தமம். தேவன் பலியையல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும் விரும்புகிறார் (ஓசி 6:6). தெய்வீக வெளிப்பாட்டில் நீதியும் இரக்கமும் விசுவாசமும் சேர்ந்தே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. தேவன் தமது சத்தியத்திலும், தமது நியாயப்பிரமாணத்திலும்  மகிமையடைகிறார்.   


தசமபாகம்



மோசேயின் பிரமாணத்திற்கு முன்பாக தசமபாகம் செலுத்துதல்.



மோசேக்கு 430 வருஷங்களுக்கு முன்பாகவே தசமபாகம் செலுத்தும் வழக்கம் இருந்தது. 

(ஆதி 14:20; ஆதி 28:22; எபி 7:1-11)



மோசேயின் பிரமாணத்தின்பிரகாரம் தசமபாகம் செலுத்துதல்



    1. கர்த்தருடைய கட்டளை (லேவி 27:30; மல் 3:10)


    2. தசமபாகம் செலுத்துவதன் நோக்கம்

        (*) லேவியருக்காக (எண் 18:21-24)

        (*) ஆசாரியருக்குத் தசமபாகத்தில் தசமபாகம் (எண் 18:26; நெகே 10:37; நெகே 12:44)

        (*) ஏழைகளுக்கும், ஊழியக் காரர்களுக்கும் மூன்று வருஷங்களில் ஒருமுறை தசம பாகத்தில் தசமபாகம்.              (உபா 14:27-29; உபா 26:12-14)

        (*) தேவனுடைய ஆலயத்தின் பண்டக சாலைக்கு (மல் 3:10)

        (*) தேவனை மகிமைப்படுத்துவதற்காக

 (நீதி 3:9-10)


    3. ஒவ்வொரு வருஷமும் பண்டிகையின் மற்ற காணிக்கைகளோடு தசமபாகத்தையும் கொண்டு வரவேண்டும். (உபா 12:6-7; உபா 14:22-26)


    4. தசமபாகம் கர்த்தருக்குரியது. (லேவி 27:30-34; மல் 3:8)


    5. தசமபாகத்தை எங்கு கொண்டு வரவேண்டும். (2நாளா 31:12)           


    6. தசமபாகத்திற்குக் கடன்பட்டால் அதற்கு 20 சதவீதம் கூடுதலாகச் செலுத்த வேண்டும். (லேவி 27:31)


    7. தசமபாகத்தை மாற்றினால் இதையும் மாற்றப்பட்டதையும் சேர்த்துச் செலுத்த வேண்டும். (லேவி 27:33)



புதிய ஏற்பாட்டில் தசமபாகம்



    1. கிறிஸ்து உபதேசம் பண்ணினார் (மத் 23:23; மத் 11:11-14;லூக்கா 11:42)   


    2. பவுல் உபதேசம் பண்ணினார்

        (1)கோவில்களைக் கொள்ளையிடக் கூடாது 

(லேவி 27.மல் 3:8-10, ரோமர் 2:22)


        (2) உபதேசியார்கள் செலுத்த வேண்டும். (கலா 6:6)


        (3) ஊழியர்காரர்களுக்கு ஆதாரவாக தேவன் நியமித்திருக்கிறார்

  (1கொரி 9:7-14; 1தீமோ 6:17-18)


        (4) தேவன் தங்களை ஆசீர்வதிப்பதற்கு விசுவாசிகள் தசமபாகம் செலுத்த வேண்டும். (1கொரி 16:2)


        (5) மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவம் நித்தியமானது. ஆபிரகாமின் பிள்ளைகள் அதனால் ஆதரிக்கப்படவேண்டும். (எபி 6:20; எபி 7:1-11,17,21)


        (6) ஆபிரகாமின் பிள்ளைகள் அவனுடைய பாதைகளில் விசுவாசத்தோடு நடக்க வேண்டும். (ரோமர் 4:12; எபி 7)


        (7) தசமபாகம் செலுத்துதல் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கும் தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு நன்றி சொல்வதற்கும்அடையாளம். 

(ரோமர் 4:12;  1கொரி 9:7-14)  



தசமபாகம் செலுத்துவதினால் உண்டாகும் ஆசீர்வாதங்கள்



    1. கீழ்ப்படிவதினால் வரும் ஆசீர்வாதங்கள்


    2. தேவனுடைய பண்டகசாலை நிரம்பியிருக்கும். (மல் 3:10)


    3. தேவனுடையஊழியக்காரர்கள் குறைவில்லாமல் இருப்பார்கள்.

 (நெகே 13:10; மல் 3:8-10; 1கொரி 9:7-14; 1தீமோ 5:17-18).


    4. ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும், உலக ஆசீர்வாதங்களும் வரும்.

 (2நாளா 31; நெகே 13; நீதி 3:9-10; மல் 3:8-10)



தசமபாகம் செலுத்தியவர்களுக்கு எடுத்துக்காட்டுக்கள்



    1. ஆபிரகாம்

 (ஆதி 14:20; எபி 7:1-11)


    2. யாக்கோபு (ஆதி 28:22)


    3. ஆபிரகாமில் லேவி (எபி 7:9)


    4. எசேக்கியாவும், இஸ்ரவேலும் (2நாளா 31)


    5. நெகேமியாவும், இஸ்ரவேலும் (நெகே 13)


    6. மாயக்காரர் (மத் 23:23; லூக்கா 11:42)  


    7. விசுவாசிகள் (1கொரி 9:7-14)            



தசமபாகம் செலுத்துவதற்குப் பதிலாக வேறு எதையாவது செய்யலாம் என்று புதிய ஏற்பாட்டில் எந்த வசனமும் கூறவில்லை.



""ஒற்தலாம்'' என்பது ஒரு நறுமணமுள்ள செடி. ""வெந்தையம்'' என்பது சமையலுக்குப் பயன்படும் பொருள். ""சீரகம்'' என்பதும் சமையலுக்குப் பயன்படும் பொருள்.



மார்க்கப்பிரகாரமான சடங்குகளை விட தேவனுடைய நீதியும், இரக்கமும் விசுவாசமும் முக்கியமானவை. தசமபாகம் செலுத்திவிட்டு எப்படியும் நாம் ஜீவிக்கலாம் என்று நமக்கு இஷ்டமானபடி ஜீவிக்கக்கூடாது.



 தசமபாகம் செலுத்துவதை இயேசு கிறிஸ்து அங்கீகரித்திருக்கிறார். நியாயப்பிரமாணத்தில் தசமபாகத்தைப் பற்றிக் கூறப்பட்டிருப்பதனால் அது பழைய ஏற்பாட்டுப் பிரமாணம். புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் தசமபாகம் செலுத்த வேண்டியதில்லை என்று கருதக்கூடாது. (மத் 11:11-13; லூக்கா 16:16) ஆகையினால் நாம் தசமபாகமும் செலுத்தவேண்டும். ஆவிக்குரிய ஜீவியமும் ஜீவிக்கவேண்டும். 



குருடரான வழிகாட்டிகளே



குருடரான வழிகாட்டிகளே, கொசுகில்லாதபடி  வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்             (மத் 23:24).


 வேதபாரகரும் பரிசேயரும் சிறிய பாவங்களை செய்யாமல் தங்களை காத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் பெரிய பாவங்களை செய்துவிடுகிறார்கள். இவர்கள் குருடரான வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். இவர்களுடைய உபதேசமும் கள்ளஉபதேசமாக இருக்கிறது. இவர்களுடைய ஜீவியமும் சாட்சியில்லாமல் இருக்கிறது. இவர்கள் குருடராகவும் இருக்கிறார்கள். பட்சபாதமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். கொசுகில்லாதபடி வடிகட்டுகிறார்கள். ஆனால்  ஒட்டகத்தை விழுங்கிவிடுகிறார்கள். 


தங்களுடைய உபதேசத்தின் பிரகாரமாக இவர்கள் கொசுவைக்கூட வடிகட்டி அகற்றிவிடுகிறார்கள். ஜனங்களுக்கு மிகுந்த எச்சரிப்போடு பிரசங்கிக்கிறார்கள். முன்னோர்களின் பாரம்பரியங்களில் எதையும் மீறிவிடக்கூடாது என்று எச்சரித்துக் கூறுகிறார்கள். சிறிய சிறிய காரியங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை அகற்றவேண்டுமென்று வலியுறுத்துகிறார்கள். கொசுகில்லாதபடி வடிகட்டி சுத்தம்பண்ணுகிறார்கள். தங்களுடைய ஜீவியத்தில் சிறிய பாவமும் பிரவேசித்து விடக்கூடாது என்று உபதேசம்பண்ணுகிறார்கள். 


ஆனால் பரிசேயர் வேதபாரகர் ஆகியோரின் ஜீவியம் அவர்கள் பிரசங்கிக்கும் உபதேசத்தின் பிரகாரமாகயில்லை. சிறிய காரியங்களைகூட தவிர்க்கவேண்டும் என்று கூறும் இவர்கள், பெரிய பெரிய பாவங்களை செய்து விடுகிறார்கள். கொசுகில்லாதபடி வடிகட்டுகிறார்கள். ஆனால் ஒட்டகத்தைக்கூட விழுங்கிவிடுகிறார்கள். பாவம் எதுவாக இருந்தாலும் அதை வடிகட்டி அகற்றிப்போடவேண்டும். பாவத்தை வடிகட்டுகிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒட்டகத்தை விழுங்குவது மாய்மாலம்.


ஒரு பூச்சி கூட நமக்குள் போய்விடக்கூடாது என்று மிகுந்த எச்சரிப்போடு வடிகட்டுகிறோம். ஆனால் சமயம் கிடைத்தால் ஒட்டகத்தையே விழுங்கி விடுகிறோம்.



வெளிப்புறம்



மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜன பானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது - (மத் 23:25).


வேதபாரகர், பரிசேயர் ஆகியோரின் எல்லா கிரியைகளும் வெளிப்புறத்தை சுத்தம்பண்ணுவதுபோலவே இருக்கிறது. அவர்களுடைய உட்புறமாகிய இருதயத்தை சுத்திகரிப்பதற்கு அவர்கள் எதுவுமே செய்யவில்லை. இயேசுகிறிஸ்து இவர்களை போஜனபான பாத்திரங்களுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார். இதன் வெளிப்புறம் சுத்தமாக்கப்பட்டிருக்கிறது. வெளியே பார்ப்பதற்கு  சுத்தமாகவும் அழகாகவும் இருக்கிறது. ஆனால் இந்த பாத்திரங்களின் உட்புறம் சுத்தமாக்கப்படவில்லை. அதற்குள்ளே கொள்ளையும் அநீதமும் நிறைந்திருக்கிறது. 


பரிசேயர்களும் வேதபாரகரும் வெளித்தோற்றத்திற்கு பரிசுத்தமானவர்களாக இருக்கிறார்கள். மனுஷர் மத்தியில் தங்களுடைய நற்பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அவ்வப்போது தங்களுடைய வெளிப்புறத்தை சுத்திகரிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய இருதயமோ துன்மார்க்கத்தினால் நிறைந்திருக்கிறது. இருதயத்தை சுத்தப்படுத்துவதற்கு இவர்கள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. இருதயமே நமது பரிசுத்தமான தேவனை ஆராதிக்கவேண்டும். மனுஷன் முகத்தைப்பார்த்தாலும் தேவன் நம்முடைய இருதயத்தையே பார்க்கிறார். ஆகையினால் நம்முடைய இருதயம் எப்போதும் சுத்தமானதாக இருக்கவேண்டும். 


பரிசேயர்கள்  தங்களுடைய வெளிப்புறத்தை சுத்தமாக்குகிறார்கள். மற்றவர்கள் தங்களைப் பார்க்கும்போது தங்களை பரிசுத்தவான்களாகவும், பக்தியுள்ளவர்களாகவும் காணவேண்டுமென்று விரும்புகிறார்கள். ஜனங்கள் பொதுவாக நமது வெளித்தோற்றத்தையே பார்ப்பார்கள். நமது உள்தோற்றம் எப்படியிருக்கிறது என்று வெளியில் தெரியாது. பரிசேயரின் உட்புறம் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. அவர்கள் வெளித்தோற்றத்திற்கு பக்திமான்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் நீதியோ, இரக்கமோ, விசுவாசமோ சிறிதுகூடயில்லை. நம்முடைய உள்தோற்றமே நம்முடைய உண்மையான சுபாவமாகும். 


மார்க்கச்சடங்குகளின் பிரகாரமாக பரிசேயர்கள் தங்களை வெளிப்புறமாகச் சுத்தப்படுத்தி அலங்கரித்தார்கள். அதற்கு ஏற்ற பிரகாரமாக நீண்ட அங்கிகளை அணிந்து கொண்டார்கள். ஆனால் அவர்களுடைய இருதயமாகிய உட்புறமோ மகா கேடுள்ளதாக இருக்கிறது. அது கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது

 (மத் 15:18-20; மாற்கு 7:19-21, லூக்கா 4:28)



உட்புறம்



குருடனான பரிசேயனே! போஜன பானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு (மத் 23:26).



வெளிப்புறத்தை சுத்தமாக்குவதற்கு முன்பாக பாத்திரத்தின் உட்புறத்தை முதலாவதாக சுத்தம்பண்ணவேண்டும். இவர்கள்  குருடரான பரிசேயராக இருக்கிறார்கள். கிறிஸ்துவின் பார்வையில் இவர்கள் சத்துருக்களல்ல, அந்நியராக இருக்கிறார்கள். தங்களுடைய இருதயத்தின் துன்மார்க்கத்திற்கு   இவர்கள் சத்துருக்களாகயில்லை. அவற்றிற்கு அந்நியராக இருக்கிறார்கள். தங்களுடைய துன்மார்க்கத்தை இவர்கள் காணவில்லை. அவற்றை வெறுக்கவில்லை. தங்களுடைய ரகசிய பாவங்களை விரும்பி செய்கிறார்கள். 


தங்களிடத்தில் பாவம் உள்ளது என்பதை அறியாமல் இருக்கிறார்கள். தங்களுடைய பாத்திரத்தின் உட்புறம் அசுத்தமாக இருப்பதைக்கூட இவர்கள் அறியவில்லை. அறியாமையும் பாவமே. ஆகையினால் இயேசுகிறிஸ்து இவர்களிடம் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு என்று கூறுகிறார். 


விசுவாசிகளாகிய நமக்கும் இயேசுகிறிஸ்து  இந்த எச்சரிப்பைக்கொடுக்கிறார். நமது ஆவியிலுள்ள அசுத்தங்களையெல்லாம் அகற்றி சுத்திகரிக்கவேண்டும். மனுஷரால் பார்க்கமுடியாமல், தேவனால் மாத்திரமே பார்க்கக்கூடிய ரகசிய பாவங்கள் அனைத்தையும் நம்மைவிட்டு அகற்றி, நமது உட்புறத்தை சுத்தமாக்கவேண்டும். உட்புறத்தை  முதலாவது சுத்தமாக்கு என்று இயேசுகிறிஸ்து கட்டளையிடுகிறார். உட்புறத்தை மாத்திரம் சுத்தமாக்கு என்று இயேசு கூறவில்லை. உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கவேண்டும்.   நாம் உட்புறத்தை சுத்தமாக்கும்போது அதன் வெளிப்புறமும் சுத்தமாகும். 


நமது ஆத்துமா பரிசுத்தமாக்கப்பட வேண்டும். புதுப்பிக்கப்படவேண்டும். நமது உள்ளான மனுஷன் சுத்திகரிக்கப்படவேண்டும். அப்போது நமது வெளிப்புறமும் சுத்தமாகும். நமது இருதயத்திலிருந்து நல்ல சிந்தனைகள் வெளிவரும். அப்போது நமது பேச்சும் கிரியைகளும் சுத்தமாக இருக்கும். நமது இருதயம் பரிசுத்தமாக இருந்தால் எல்லாமே பரிசுத்தமாக இருக்கும். நமது இருதயம் ஆரோக்கியமாக இருந்தால் நமது முழு சரீரமும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் நமது இருதயத்திலிருந்தே ஜீவனுக்குரிய காரியங்கள்  புறப்பட்டு வருகிறது. ஆகையினால் நாம் முதலாவதாக நமது உட்புறத்தை சுத்தமாக்கவேண்டும். இதுவே நமது பிரதான வேலையாக இருக்கவேண்டும். 


 மார்க்கத்தலைவர்களின் குருட்டுத்தன்மையைக் குறிப்பதற்கு இயேசு கிறிஸ்து ""குருடன்''  என்னும்  வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்.  இந்த அர்த்தத்தில் வேறு சிலரும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒளியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருட்டில் குருடரைப் போன்று இருப்பார்கள்.  இவர்கள் குருடராக இருக்க வேண்டுமென்று தாங்களே தீர்மானம் பண்ணிக்கொண்டவர்கள்   பரிசேயர் குருடராக இருப்பதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களையும் ஆவிக்குரிய குருடராக்குகிறார்கள். 



வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை



மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்  

(மத் 23:27,28).



இயேசுகிறிஸ்து பரிசேயரையும் வேதபாரகரையும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார். இவை புறம்பே அலங்காரமாய் காணப்படும். இந்த வார்த்தைக்கு வேதபண்டிதர்கள் பலவிதமாக வியாக்கியானம் கூறுகிறார்கள். யூதர்கள் கல்லறைகளின் பக்கம் போவதில்லை. அங்கு போகாமல் தவிர்த்துவிடுவார்கள். கல்லறைகளை தொடுவது மார்க்கப்பிரகாரமாக தங்களுக்கு தீட்டு என்று நினைக்கிறார்கள். யூதமார்க்கத்தில் நல்லோரும் ஞானவான்களும் கல்லறைபக்கம் போகாமல் தவிர்த்துக்கொள்வதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆயினும் தங்கள் மார்க்கத்தில் முக்கியமான தலைவர்களின் கல்லறைகளை அவர்கள் வெள்ளையடித்து  பராமரிப்பது வழக்கம். அவற்றை அழகுபடுத்துவார்கள். நீதிமான்களின் சமாதிகளை அவர்கள் சிங்காரிக்கிறார்கள். 


வேதபாரகர் பரிசேயர் ஆகியோரின் நீதி  சிங்காரிக்கப்பட்ட சமாதிகளைப்போல இருக்கிறது. அவர்கள் மனுஷருக்கு நீதிமான்கள் என்று   புறம்பே காணப்படுகிறார்கள். மனுஷரும் சிங்காரிக்கப்பட்ட சமாதிகளைப்பார்த்து நன்றாக இருப்பதாக ஆச்சரியப்படுகிறார்கள். அதுபோலவே இவர்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறார்கள். 


கல்லறைகளின் உள்ளே மரித்தவர்களின் எலும்புகளும், சகல அசுத்தங்களும் நிறைந்திருக்கும். அதுபோலவே இவர்களுடைய உள்ளம் மாயத்தினாலும், அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறது. சிலருடைய இருதயம் பாவத்தினால் நிறைந்திருக்கும். ஆனால் இவர்களோ வெளித்தோற்றத்திற்கு மிகவும் நல்லவர்களாக ஜீவிப்பார்கள். யாரும் இவர்களை  குற்றப்படுத்தமாட்டார்கள், குறைகூறமாட்டார்கள். இவர்களைப்பற்றி பெருமையாகவே பேசுவார்கள். ஆனால் உள்ளத்திலோ இவர்கள் பாவிகள். நாம் எப்படித்தான் வேஷம்போட்டாலும், நம்முடைய ஆண்டவர் நம்மைப்பார்த்து ""நல்லது, உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே'' என்று  நற்சான்றிதழ் கொடுக்கவில்லையென்றால், நாம் பரிதாபமானவர்களாகவே இருப்போம்.


பஸ்கா பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு கல்லறைகளை வெள்ளையடிப்பார்கள். அசுத்தத்தைத் தொடாமல் இருப்பதற்கு எல்லா மனுஷருக்கும் எச்சரிப்பாக கல்லறைகளுக்கு வெள்ளையடிக்கப்படும். (எண் 19:16) வெள்ளையடிப்பது தவிர மேலும் பல வழிகளில் கல்லறைகளை அழகுபடுத்தினார்கள். (மத் 23:29)


  ஒருசிலரை வெளித்தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது பக்திமான் போலவும், நீதிமான் போலவும், விசுவாசிகள்போலவும் இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய ஜீவியத்திலோ ஆவியின் கனி வெளிப்படாது. அவர்களுடைய இருதயத்தில் துன்மார்க்கமான சிந்தனைகள் நிறைந்திருக்கும்.  



தீர்க்கதரிசிகளின் கல்லறை



மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து: (மத் 23:29).



மரித்துப்போன தீர்க்கதரிசிகளுக்கு வேதபாரகரும் பரிசேயரும் கல்லறைகளைக் கட்டி அவர்களை மேன்மைப்படுத்துகிறார்கள். தங்களுடைய மரியாதையை காண்பிக்கிறார்கள்.  ஆனால் அந்த தீர்க்கதரிசிகள் அவர்களோடு ஜீவித்தபோதோ அவர்களை உபத்திரவப்படுத்தி துன்புறுத்தினார்கள். தேவன் தம்முடைய நியாயப்பிரமாணமும் கற்பனைகளும் பரிசுத்தமானதாகவும் மகிமையுள்ளதாகவும் காணப்படவேண்டுமென்று பக்திவைராக்கியமாக இருக்கிறார். அதேவேளையில் தம்முடைய தீர்க்கதரிசிகளும் ஊழியக்காரர்களும் கனப்படுத்தப்படவேண்டும் என்பதிலும் அவர் வைராக்கியமாக இருக்கிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்த சத்தியத்தை  மத் 23:29-37- ஆகிய வசனப்பகுதிகளில் முழுமையாக விளக்கிக் கூறுகிறார்.


தீர்க்கதரிசிகள்மீது தங்களுக்கு மரியாதை இருப்பதாக வேதபாரகரும் பரிசேயரும் பொய்கூறி நடிக்கிறார்கள். அதற்காக தங்களுடைய தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக்கட்டி, நீதிமான்களின் சமாதிகளை சிங்காரிக்கிறார்கள்.  தங்கள் பிதாக்களின் நாட்களில் தாங்கள் இருந்திருப்போமானால் அந்த தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழிக்கு தாங்கள் உடன்பட்டிருக்கமாட்டோம் என்று பக்திமானைப்போல வேஷம் போட்டு பேசுகிறார்கள். இது இவர்களுடைய மாய்மாலமான பேச்சு. ஜனங்கள் மத்தியில் தீர்க்கதரிசிகளுக்கும், நீதிமான்களுக்கும் மரியாதை கொடுப்பதுபோல நடிக்கிறார்கள். மரித்துப்போன தீர்க்கதரிசிகள் வருங்காலத்தைக் குறித்து முன்னறிவித்தார்கள். இவர்கள் எப்படி ஜீவிக்கவேண்டுமென்று தீர்க்கதரிசிகள் முன்னறிவித்திருக்கிறார்கள்.  இவர்கள் காலத்திலுள்ள உயிரோடிருக்கும் தீர்க்கதரிசிகளோ இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்கள். அதைக்கேட்டு இவர்கள் மனந்திரும்பவேண்டும்.


மத்தேயு 23-ஆவது அதிகாரத்தில் எட்டுவிதமான பாவங்களைச் செய்தவர்களைப் பார்த்து இயேசு கிறிஸ்து ஐயோ என்று கூறுகிறார். (மத் 23:13-29)



    1. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள். நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை. (மத் 23:13)



    2. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப் போடுகிறீர்கள். இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.  (மத் 23:14)



    3. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள். அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (மத் 23:15)



    4.  குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின் பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லை யென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்  (மத் 23:16-22)



    5.  மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்ய வேண்டும், அவைகளையும் விடாதிருக்க வேண்டுமே (மத் 23:23-24)



    6. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜன பான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.  (மத் 23:25-26)



    7. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்  (மத் 23:27-28)



    8. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து: எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்   (மத் 23:29-30)



தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழி



எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள் (மத் 23:30).



தீர்க்கதரிசிகளில் பலர் இரத்தசாட்சியாக மரித்துப்போனார்கள். அவர்களுடைய இரத்தப்பழிக்கு பலர் உட்பட்டிருந்தார்கள். பரிசேயரும் வேதபாரகரும் இந்த சம்பவத்தை தங்களுடைய பக்தியை வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்துகிறார்கள்.  அந்த தீர்க்கதரிசிகளின் காலத்தில் தாங்கள் உயிரோடே இருந்திருந்தால், அந்த தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு தாங்கள் உடன்பட்டிருக்கமாட்டோம் என்று தங்களை நல்லவர்களைப்போல காண்பிக்கிறார்கள். இவர்களுடைய துன்மார்க்கமான கிரியைகளுக்கு தேவன் உடனடியாக தண்டனை கொடுத்தால், இவர்கள் யாருக்கும் கைகளோ, கால்களோ, கண்களோ இருந்திருக்காது அந்த அளவிற்கு இவர்கள் கொடுமையானவர்கள். இயேசுகிறிஸ்துவைப்பற்றி எல்லா தீர்க்கதரிசிகளும் சாட்சி கொடுத்திருக்கிறார்கள். அந்த இயேசுகிறிஸ்துவை கொலைசெய்யவேண்டுமென்று வேதபாரகரும் பரிசேயரும் சதி ஆலோசனைபண்ணுகிறார்கள்.  இப்படிப்பட்ட துன்மார்க்கமான சிந்தை உள்ளவர்கள்தான் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு தாங்கள் உடன்பட்டிருக்கமாட்டோம் என்று வஞ்சனையாக பேசுகிறார்கள்.


பாவத்தில் மூழ்கியிருப்பவர்கள் இப்படித்தான் சம்பந்தமில்லாமல் கற்பனைபண்ணி, தங்களை நல்லவர்கள்போல காண்பிப்பார்கள். தங்கள் வாழ்நாட்களில் எல்லா பாவமும் செய்துவிட்டு, தாங்கள் முற்காலத்தில் ஜீவித்திருந்தால் ஒரு பாவமும் செய்யாமல் பாவத்திற்கு எதிர்த்து நின்றிருப்போம் என்று வீறாப்பு பேசுகிறார்கள். நாம் பழைய கதைகளை பேசிக்கொண்டிருக்காமல், நம்முடைய அன்றன்றுள்ள வாழ்க்கை பாதையில் சீராக நடக்க கற்றுக்கொள்ளவேண்டும். பாவத்தைவிட்டு விலகி பரிசுத்தத்தின் பாதையில்  விசுவாசத்தோடு முன்னேறிச் செல்லவேண்டும்.  


தற்காலத்தில் விசுவாசிகளில் சிலர் தாங்கள் இயேசுகிறிஸ்துவின் காலத்தில் உயிரோடிருந்திருந்தால் மிகவும் நன்றாக இருக்குமென்றும், எப்போதுமே அவர் பின்னாலேயே அவரை பின்பற்றி செல்வோம் என்றும் கற்பனையாக கூறுகிறார்கள். அவரை மறுதலித்திருக்கமாட்டோம் என்றும், யூதாஸ்காரியோத்தைப்போல அவரை காட்டிக்கொடுத்திருக்கமாட்டோம் என்றும் கற்பனையில் பேசுகிறார்கள். இரண்டாயிரம் வருஷத்திற்கு முன்பு இந்த உலகத்தில் ஜீவித்த அதே இயேசுகிறிஸ்து இன்றும் தமது ஆவியில் நம்மோடுகூட இருக்கிறார். அவருடைய வார்த்தை நம்மோடுகூட இருக்கிறது. தம்முடைய ஊழியக்காரர் மூலமாக இன்றும் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார். இரண்டாயிரம் வருஷத்திற்கு முன்பு நாம் உயிரோடிருந்திருந்தால், இயேசுவை விட்டுவிடாமல் பின்பற்றுவேன் என்று    வீறேசுகிறவர்கள், இக்காலத்திலும் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்றுவதற்கு தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும். 



நீங்களே சாட்சிகள்



ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள் 

(மத் 23:31).



வேதபாரகரும் பரிசேயரும் இயேசுகிறிஸ்துவுக்கு சத்துருக்களாக இருக்கிறார்கள். அவருடைய உபதேசத்திற்கு எதிர்த்து நிற்கிறார்கள். இதன் மூலமாக தங்கள்மீதும் தங்கள் பிள்ளைகள்மீதும் தேவனுடைய கோபாக்கினையை வருவித்துக்கொள்கிறார்கள். 


இயேசுகிறிஸ்து இவர்களைப்பார்த்து ""தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்கு புத்திரராயிருக்கிறீர்கள்'' என்று கூறுகிறார். இதற்கு தங்களைக்குறித்து தாங்களே சாட்சிகளாக இருப்பதாகவும் கூறுகிறார். தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து பாவிகளால்  தப்பிக்கமுடியாது. தங்களுக்கு விரோதமாக பாவங்கள் நிரூபிக்கப்படவில்லையென்றாலும், அவர்கள் பாவம் செய்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு. தங்களுடைய சொந்த சாட்சிகளினாலே இவர்கள் தண்டிக்கப்படுவார்கள். தங்களுடைய முற்பிதாக்கள் தீர்க்கதரிசிகளை கொன்றுபோட்டு அவர்களுடைய இரத்தப்பழிக்கு  உடன்பட்டிருக்கிறார்கள் என்று இவர்களே சாட்சி கூறுகிறார்கள். இவர்கள் தீர்க்கதரிசிகளை கொலைசெய்வதவர்களுக்கு புத்திரராக இருக்கிறார்கள். மற்றவர்களை பாவியென்று குற்றம் சுமத்துகிறவர்கள், அதே பாவங்களை தாங்களும் செய்கிறார்கள். அதைவிட அதிகமாகவும் செய்து தேவகிருபையை இழந்துபோகிறார்கள்

 (ரோம 1:32-2:1). 


தங்களுடைய சொந்த சாட்சிகளினால் இவர்கள் தங்களையே குற்றப்படுத்துகிறார்கள்.  தங்களுடைய முன்னோர்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டவர்கள் என்று சாட்சி கூறுகிறார்கள். இவர்கள் தீர்க்கதரிசிகளை கொலைசெய்தவர்களுக்கு புத்திரராயிருக்கிறார்கள். வேதபாரகரும் பரிசேயரும் தங்களை நீதிமான்களாகவும் நல்லவர்களாகவும் ஜனங்களுக்கு முன்பாக காண்பிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவோ அவர்களுடைய மெய்யான சுபாவத்தை வெளிப்படுத்துகிறார். அவர்களுடைய வரலாற்றையே கூறுகிறார். இவர்களுடைய முற்பிதாக்களும் பாவிகள். அந்த பாவிகளின் இரத்தமே இவர்களுடைய சரீரத்தில் ஓடுகிறது. தங்கள் பிதாக்களைப்போலவே இவர்களும் பாவிகளாகவே இருக்கிறார்கள். தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்கு புத்திரராக இருப்பதினால், அவர்களுடைய இரத்தப்பழிக்கு இவர்கள் பங்காளிகளாக இருக்கிறார்கள். 



அக்கிரம அளவு



நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள்

 (மத் 23:32).



இயேசுகிறிஸ்து வேதபாரகர்மீதும் பரிசேயர்மீதும் தம்முடைய ஆக்கினைத்தீர்ப்பை அறிவிக்கிறார். ""உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள்'' என்று கூறுகிறார். தம்மை கொலைசெய்வதற்காக இவர்கள் சதி ஆலோசனை பண்ணுகிறார்கள் என்பது இயேசுவுக்கு நன்றாக தெரியும். இவர்களுடைய முற்பிதாக்கள் தீர்க்கதரிசிகளை கொலைசெய்தார்கள். இவர்களோ தீர்க்கதரிசிகளால் சாட்சி கொடுக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை கொலைசெய்ய ஆலோசனைபண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்து இதை அறிந்து ""உங்களுடைய திட்டத்தை நிறைவேற்றுங்கள், உங்களுடைய இருதயத்தின் ஆலோசனையின் பிரகாரம் உங்களுக்கு பிரியமானபடி நடந்துகொள்ளுங்கள், உங்கள் கண்களுக்கு சரியாய் தோன்றுவதை செய்யுங்கள், அதன்பின்பு உங்களுக்கு என்ன நேரிடும் என்பதை நீங்களே பாருங்கள்'' என்று பொருள்படுமாறு கூறுகிறார்.


இவர்கள் அக்கிரமத்தின் அளவை நிரப்புகிறார்கள். இவர்கள் மூலமாக இவர்களுடைய பாவத்தின் அளவு நிரப்பப்படுகிறது. தேவன் பொறுமையுள்ளவர். ஆயினும் அவர் எல்லாக்காலத்திலும் பொறுமையுள்ளவராக இருக்கமாட்டார். பரிசேயர் வேதபாரகர் ஆகியோரின் முற்பிதாக்கள் அக்கிரம செய்கைக்காரராக இருந்தார்கள். அவர்களுடைய புத்திரர்களாகிய இவர்களும் அக்கிரம செய்கைகளை செய்கிறார்கள். அவர்கள் செய்யாமல் விட்டுப்போன அக்கிரமங்களை இவர்கள் செய்து நிறைவேற்றுகிறார்கள். அவர்களுடைய அக்கிரமத்தின் அளவை இவர்கள் நிரப்புகிறார்கள்.


பெற்றோர்கள் மரித்துப்போன பின்பு, அவர்களுடைய பிள்ளைகள் துன்மார்க்கராக  இருந்தால் தங்கள் பெற்றோர்களைப்போலவே துன்மார்க்கமாக ஜீவிப்பார்கள். அவர்களைப்போலவே தொடர்ந்து பாவம் செய்வார்கள். பிள்ளைகள் தொடர்ந்து பாவத்தில் ஜீவித்தால், அவர்கள் தங்கள்   பெற்றோரின் பாவ அளவை நிரப்புவார்கள். ஒரு தேசம் பல காலமாக தேவனுக்கு விரோதமாக தொடர்ந்து பாவம்செய்தால், அந்த தேசம் முழுவதும்  சபிக்கப்படும். பிதாக்களின் அக்கிரமத்தை தேவன் பிள்ளைகளிடத்தில் விசாரிப்பார். தேசத்தின் அக்கிரமத்தை தேவன் அந்த தேசத்தாரிடம் விசாரிப்பார்.


பரிசேயரும் வேதபாரகரும் இயேசுகிறிஸ்துவையும், அவரைப் பின்பற்றுகிறவர்களையும், அவருடைய ஊழியக்காரர்களையும் துன்புறுத்துகிறார்கள். உபத்திரவப்படுத்துகிறார்கள். இவர்களுடைய துன்மார்க்கமான செயல் இவர்களுடைய அக்கிரமத்தின் அளவை நிரப்புகிறது. 


வேதபாரகரும் பரிசேயரும் தங்கள் இருதயத்தில் அக்கிரம சிந்தையுடையவர்களாக இருக்கிறார்கள். தங்கள் இருதயத்தின் ஆசைகளை நிறைவேற்றுவதில் வைராக்கியமாக இருக்கிறார்கள். தங்களுக்கு இப்படிப்பட்ட தண்டனை வரும் என்று எச்சரித்துக் கூறினாலும்  இவர்கள் மனந்திரும்புவதில்லை. தாங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டுமென்று வெறியோடிருக்கிறார்கள். இவர்களுடைய முன்னோர்களும் இவர்களைப்போலவே துன்மார்க்கமான காரியங்களை செய்தார்கள். இவர்களும் அவர்களைத் தொடர்ந்து துன்மார்க்கமான காரியங்களை செய்து தங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புகிறார்கள். 



நரகாக்கினை



சர்ப்பங்களே, வீரியன்பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?          (மத் 23:33).



இயேசுகிறிஸ்துவின் வாயிலிருந்து பொதுவாக நலமான வார்த்தைகளும், கிருபையான வார்த்தைகளும், ஆசீர்வாதமான வார்த்தைகளுமே வரும். ஆனால் இங்கோ அவர் சாபமான வார்த்தைகளை பேசுகிறார். சர்ப்பங்களே விரியன் பாம்புக்குட்டிகளே, நரகாக்கினைக்கு எப்படி தப்பித்துக்கொள்வீர்கள் என்று கோபத்தோடு கேட்கிறார். இயேசுகிறிஸ்துவால் அன்பாகவும் பேசமுடியும். கோபமாகவும் பேசமுடியும். அவர் உள்ளத்தில் ஒன்றை நினைத்து வெளியில் வேறொன்றை பேசுகிறவரல்ல. 


வேதபாரகரையும், பரிசேயரையும்  ""சர்ப்பங்களே'' என்று இயேசுகிறிஸ்து அழைக்கிறார். வெளித்தோற்றத்திற்கு பரிசேயரும் வேதபாரகரும் மனுஷராக இருந்தாலும், அவர்களுடைய இருதயமோ சர்ப்பத்தைப்போல வஞ்சனையுள்ளதாக இருக்கிறது. இவர்கள் விரியன் பாம்புக்குட்டிகள். இவர்களும் இவர்களோடு சேர்ந்து இருப்பவர்களும் விரியன் பாம்பின் சந்ததியை சேர்ந்தவர்கள். விஷமுள்ளவர்கள். கிறிஸ்துவைக் குறித்தும், அவருடைய சுவிசேஷத்தைக் குறித்தும் தூஷண வார்த்தைகளை பேசுகிறார்கள். விஷ வித்துக்களைத் தூவுகிறார்கள். ஆகையினால்தான் இயேசுகிறிஸ்து இவர்களை சர்ப்பங்களே என்றும் விரியன் பாம்புகளே என்றும் அழைக்கிறார்.  அவர்களுடைய மெய்யான சுபாவத்தை வெளிப்படுத்துகிறார். பெருமையுள்ள இவர்களை சர்ப்பத்திற்கு ஒப்பாக்கி தாழ்த்துகிறார்.


நரகாக்கினைக்கு எப்படி தப்பித்துக்கொள்வீர்கள் என்று இயேசுகிறிஸ்து அவர்களுடைய அழிவைப்பற்றி கூறுகிறார். இயேசுகிறிஸ்து நரகத்தைப்பற்றியும், நரகாக்கினையைப்பற்றியும் பிரசங்கித்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவுக்கு முன்பு தீர்க்கதரிசிகளில் பலர் நரகாக்கினையைக் குறித்து எச்சரித்திருக்கிறார்கள். இவையெல்லாவற்றையும்விட இயேசுகிறிஸ்துவின் வாயிலிருந்து புறப்பட்டு வருகிற இந்த எச்சரிப்பின் சத்தம் அதிக வல்லமையுள்ளது. மிகவும் பயங்கரமானது. ஏனெனில் இயேசுகிறிஸ்துவே மனுஷரை நியாயம்தீர்க்கிற நியாயதிபதியாக இருக்கிறார். ஒருவரை மரணத்திற்கும், நரகாக்கினைக்கும் உட்படுத்தும் திறவுகோல் இயேசுகிறிஸ்துவின் கரங்களில் உள்ளது. இந்த நரகாக்கினையிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமென்றால் நாம் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து மனந்திரும்பி இரட்சிக்கப்பட வேண்டும்.


பரிசேயரும் வேதபாரகரும் தங்கள் இருதயத்தில் பெருமையோடிருக்கிறார்கள். கிறிஸ்துவுக்கும் அவருடைய சுவிசேஷத்திற்கும் விரோதமாக கிரியை செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களை தாழ்த்தி, இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, மனந்திரும்பி மன்னிப்பு கேட்கமாட்டார்கள். ஆகையினால் இவர்களுக்கு நரகாக்கினை நிச்சயமாகவே வரும். இதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு இவர்களுக்கு வழியேயில்லை.


ஆயக்காரரும் வேசிகளும் தங்களுடைய பாவங்களை உணர்ந்திருக்கிறார்கள். தங்களுடைய ஆத்தும வியாதியை உணர்ந்து பரமவைத்தியராகிய இயேசுகிறிஸ்துவிடம் வந்து சுகம்பெற்றிருக்கிறார்கள். தங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு இவர்கள் நரகாக்கினையிலிருந்து தப்பித்துக்கொண்டார்கள். இயேசுகிறிஸ்து தங்களை பரலோகத்திற்கு அழைத்துச் செல்வார் என்னும் நிச்சயத்தோடு இருக்கிறார்கள். ஆனால் வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் நரகாக்கினையே நியமிக்கப்பட்டிருக்கிறது.



நீதிமான்களின் இரத்தப்பழி



சிலுவைகளில் அறைவீர்கள்


ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள் (மத் 23:34).



குருடரான வழிகாட்டிகள் பார்வை தெரியாமல் குழிகளில் விழுந்துவிடுவார்கள். இந்த வழிகாட்டிகளை பின்பற்றுகிறவர்களும் குழிகளில் விழுவார்கள். குருடர்களை பின்பற்றும்  எருசலேமுக்கு என்ன சம்பவிக்கும் என்று இயேசுகிறிஸ்து இங்கு விவரித்துக் கூறுகிறார். 


இயேசு தமது கிருபையை அவர்களுக்கு தொடர்ந்து வெளிப்படுத்துகிறார். ""இதோ தீர்க்கதரிசிகளையும், ஞானிகளையும், வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்'' என்று அன்போடு கூறுகிறார்.  வேதபாரகரும் பரிசேயரும் தீர்க்கதரிசிகளை கொலை செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மத்தியில் இனிமேல் இயேசுகிறிஸ்து தீர்க்கதரிசிகளை அனுப்பமாட்டார் என்று தான் ஜனங்கள் பொதுவாக நினைப்பார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ ""தீர்க்கதரிசிகளை உங்களிடத்தில் அனுப்புகிறேன்'' என்று கூறுகிறார். அவர்கள் மனந்திரும்புவதற்கு மறுபடியும் ஒரு வாய்ப்பை கொடுக்கிறார். இனிமேலும் அவர்கள் தீர்க்கதரிசிகளுக்கு செவிகொடாமற்போனால் அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படாது. 


தீர்க்கதரிசிகளை இயேசுகிறிஸ்துவே அனுப்புகிறார். தமது தெய்வீக அதிகாரத்தை இதன் மூலமாக வெளிப்படுத்துகிறார். தீர்க்கதரிசிகளை அனுப்பும் அதிகாரமும், அவர்களுக்கு தீர்க்கதரிசன வரங்களை கொடுக்கும் அதிகாரமும் இயேசுகிறிஸ்விடம் உள்ளது. இயேசுகிறிஸ்து ராஜாதி ராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தாவாகவும் இருக்கிறார். அவர் சர்வ அதிகாரம் உள்ளவர். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு ""பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்'' என்று சொல்லி தம்முடைய சீஷர்கள்மேல் ஊதி, பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார் (யோவா 20:21). 


இயேசுகிறிஸ்து தீர்க்கதரிசிகளை முதலாவதாக யூதர்களிடத்தில் அனுப்புகிறார். இங்கு அவர் கூறும்போது ""உங்களிடத்தில் அனுப்புகிறேன்'' என்று கூறுகிறார். அவர்கள் எருசலேமில் தங்கள் தீர்க்கதரிசன ஊழியத்தை ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் எந்த இடங்களுக்குச் சென்றாலும் இந்த கட்டளைக்கு கீழ்ப்படிந்து, சுவிசேஷத்தின் கிருபையை முதலாவதாக அந்தந்த இடங்களிலுள்ள யூதர்களுக்கே அறிவிக்கிறார்கள் (அப் 13:46). 


இயேசுகிறிஸ்து தீர்க்கதரிசிகளையும், ஞானிகளையும், வேதபாரகரையும் யூதர்களிடத்தில் அனுப்புகிறார். புதிய ஏற்பாட்டுக்கால ஊழியக்காரர்களுக்கு பழைய ஏற்பாட்டுக்கால பெயர்கள் கொடுக்கப்படுகிறது.  புதிய ஏற்பாட்டுக்காலத்தில் தீர்க்கதரிசிகளை அப்போஸ்தலர்கள் என்றும், ஞானிகளை சுவிசேஷகர்கள் என்றும், வேதபாரகரை போதகர் என்றும் அழைக்கிறோம். வேதபாரகர்கள் பரலோக ராஜ்யத்திற்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டு தேறினவர்கள் (மத் 13:52).  வேதபாரகரின் ஊழியம் மதிப்புள்ள ஊழியம். ஆனால் வேதபாரகரோ தங்களுடைய ஊழியங்களை அசுத்தப்படுத்தி, அவமானப்படுத்திவிட்டார்கள். 


தாம் அனுப்பும் ஊழியக்காரர்களுக்கு என்ன சம்பவிக்கும் என்பதை இயேசுகிறிஸ்து முன்னறிந்து, அவர்களிடத்தில் முன்னறிவிக்கிறார். ""அவர்களில் சிலரை கொன்று சிலுவைகளில் அறைவீர்கள்'' என்று முன்னறிவிக்கிறார். அவர்கள் ஊழியக்காரர்களை சிலுவையில் அறைந்தாலும், தம்முடைய ஊழியக்காரர்களை அவர்களிடத்தில் அனுப்புவதாக வாக்குப்பண்ணுகிறார். தம்முடைய ஊழியக்காரர்களுக்கு என்னென்ன பாடுகள் வரும் என்பது இயேசுவுக்கு நன்றாக தெரியும். அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறவர்.      சர்வ ஞானமுள்ளவர். தம்முடைய ஊழியக்காரர்களுக்கு பாடுகள் வந்தாலும், அவர் தொடர்ந்து தம்முடைய ஊழியக்காரர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார். அவர்களுடைய பாடுகளின் மூலமாகவும் தேவனுடைய நாமம் மகிமைப்படும். ஊழியக்காரர்கள் பாடுகளை அனுபவிப்பார்கள் என்பதற்காக, இயேசுகிறிஸ்து அவர்களை அனுப்புவதை நிறுத்திக்கொள்வதில்லை. அவர்களை தொடர்ந்து அனுப்புகிறார். ஊழியக்காரர்கள் இரத்தசாட்சிகளாக மரித்தாலும், அவர்களுடைய ஊழிய ஸ்தானங்களுக்கு புதிய ஊழியக்காரர்களை அனுப்புகிறார். எந்த பாடுகளும், உபத்திரவங்களும் இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தை தடைபண்ண முடியாது.


இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களில் சிலரை அவர்கள் கொன்று சிலுவைகளில் அறைவார்கள். பரிசேயர்கள் சாதாரண இரத்தத்தினால் திருப்தியடைவதில்லை. ஊழியக்காரர்கள் உயிரோடிருக்கும்போதே அவர்களுடைய இரத்தத்தை எடுக்க வேண்டுமென்று வெறியோடிருக்கிறார்கள். இரத்த வெறி பிடித்தவர்கள். தலையாகிய கிறிஸ்துவையும் அவர்கள் பாடுகளுக்கு உட்படுத்தி சிலுவையில் அறைந்து கொன்றார்கள். அதுபோலவே அவருடைய ஊழியக்காரர்களுக்கும் சம்பவிக்கும். கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் இதுபோன்ற பாடு மரணங்களின் வழியாக செல்வதற்கும் ஆயத்தமாக இருக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களில் சிலரை அவர்கள் ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவார்கள். அப்போஸ்தலர்கள் ஒவ்வொரு பட்டணமாக சுற்றித்திரிந்து சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள். யூதர்கள் அவர்களை தேடிப் பிடித்து கண்டுபிடித்து, அவர்களுக்கு விரோதமாக கலகத்தை எழுப்பிவிட்டு, அவர்களை  துன்பப்படுத்தினார்கள் 

(அப் 14:19; 17:13). 


இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களை  பரிசேயர்கள் அவர்களுடைய ஆலயங்களில் வாரினால் அடிக்கிறார்கள். ஜெபாலயத்தில் நடைபெறும் ஆராதனையின் ஒரு பகுதியாக பரிசேயர்கள் இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களை துன்புறுத்துகிறார்கள். இதனால் தாங்கள் தேவனுக்கு ஊழியம் செய்வதாக தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். 



ஆபேலின் இரத்தம்



நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம் வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள் (மத் 23:35).



பரிசேயரும் வேதபாரகரும் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களை துன்பப்படுத்துகிறார்கள். பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் தங்கள்மேல் வரும்படியாக இப்படி செய்கிறார்கள். தங்கள் முற்பிதாக்களைப்போலவே இவர்களும் பாவம் செய்கிறார்கள். தம்முடைய ஊழியக்காரர்களுக்கு  ஏற்பட்ட துன்பங்களையெல்லாம் தேவன் இதுவரையிலும் பொறுமையோடு சகித்து வந்திருக்கிறார். ஆனால் அவர் இனிமேலும் சகித்துக்கொள்ளமாட்டார். தேவனுடைய பொறுமையை பரிசேயரும் வேதபாரகரும் அவமதித்துவிட்டார்கள். இதுவரையிலும் பொறுயோடிருந்த தேவன் இனிமேல் தமது கோபாக்கினையை வெளிப்படுத்தப்போகிறார். 


நீதியின் நிமித்தமாக நீதிமான்கள் தங்கள் இரத்தத்தை சிந்தினார்கள். பூமியின்மேல் இதைப்போன்று ஏராளமான நீதிமான்கள் தங்கள் இரத்தங்களை சிந்தியிருக்கிறார்கள். இரத்தம் சிந்துதலின் வரலாற்றை இயேசுகிறிஸ்து இங்கு விவரிக்கிறார். நீதிமானாகிய ஆபேல் முதலாவதாக இரத்தம் சிந்தினான். அக்காலத்திலேயே ஆபேல் இரத்தசாட்சியாக மரித்துவிட்டார். அதன்பின்பு பரகியாவின் குமாரனாகிய சகரியா என்னும் நீதிமான் நீதியின் நிமித்தமாக தன்னுடைய இரத்தத்தை சிந்தினான். இவன் யோய்தாவின் குமாரனாகிய சகரியாவாக இருக்கவேண்டும் (2நாளா 24:20). 


சகரியாவுக்கு விரோதமாக கட்டுப்பாடுபண்ணி,கர்த்தருடைய ஆலயப்பிரகாரத்தில், ராஜாவினுடைய கற்பனையின்படி அவனை கல்லெறிந்து கொன்றார்கள். இவனுடைய தகப்பனின் பெயர் பரகியா என்று இங்கு எழுதப்பட்டிருக்கிறது. பரகியா என்னும் பெயரும் யோய்தா என்னும் பெயரும் ஒரே நபருடைய பெயராகும். யூதமார்க்கத்தில் ஒரே நபருக்கு இதுபோல இரண்டு பெயர்கள் இருப்பது இயல்பு. 



இயேசுகிறிஸ்து நீதிமான்களின் இரத்தப்பழியைப்பற்றி கூறும்போது ""நீங்கள் கொலைசெய்தீர்கள்'' என்று கூறுகிறார். ""நீங்கள்'' என்று கூறுவது இந்த சந்ததியை குறிப்பிடாது. இது இவர்களுடைய இஸ்ரவேல் தேசத்தைக் குறிப்பிடும் வார்த்தையாகும். 


தேவன் தமது ஒரேபேறான குமாரனை நமக்காக அனுப்பினார். இவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளாமல் சிலுவையில் அறைந்து கொலைசெய்தார்கள். தேவனுடைய இரக்கத்தினால் வெளிப்பட்ட எல்லா அடையாளங்களையும், அற்புதங்களையும் காணாதவாறு தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள். ஆகையினால் இவர்கள் மீது இரத்தப்பழிகள் வரும். இதுவரையிலும் இல்லாத அளவிற்கு இவர்கள் மிகவும் கடுமையாக நியாயந்தீர்க்கப்படுவார்கள்.


""பரகியாவின் குமாரனாகிய சகரியா'' என்னும் பெயர் சகரியா தீர்க்கதரிசியைக் குறிக்கும்.

 (சக 1:1)  வேறொரு சகரியாவைப் பற்றிய குறிப்பு 2நாளா 24:20-21 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். இவன் யோய்தாவின் குமாரன்.



இந்தச் சந்ததியின் மேல் வரும்



இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 23:36).



நீதிமான்களின் இரத்தப்பழிகளெல்லாம் இந்த சந்ததியின்மேல் வரும். இந்த இரத்தப்பழிகளுக்குரிய தண்டனைகளெல்லாம் இந்த சந்ததியின்மேல் வரும். இவர்களுடைய அழிவு தீர்மானமாக இருக்கும். இந்த சந்ததியை மொத்தமாக சங்காரம் பண்ணவேண்டுமென்று தேவன் தீர்மானித்துவிட்டார். இந்த பூமியில் இதுவரையிலும் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழிகளெல்லாம் இப்போது இந்த சந்ததியின் மேல் வரப்போகிறது. அந்த பழியும், அதன் தண்டனையும் இவர்கள்மீது விரைவாக வரப்போகிறது. இப்போது ஜீவிக்கிற இவர்களில்  சிலர் அந்த ஆக்கினைத்தீர்ப்பை தங்கள் கண்களாலேயே காண்பார்கள். பாவத்திற்கான தண்டனை அருகாமையில் இருக்கும்போது, மனந்திரும்புவதற்கான அழைப்பின் சத்தம் வலுவாக ஒலிக்கும்.  



எருசலேமே எருசலேமே



எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று 

(மத் 23:37).



தன் பாவத்திலிருந்து மனந்திரும்புவதற்கு தேவன் எருசலேமிற்கு பல வாய்ப்புக்களை கொடுத்திருக்கிறார். ஆனால் அவர்களோ இதுவரையிலும் மனந்திரும்பவில்லை. அவர்களிடத்தில் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளையும் கொலை செய்துவிட்டார்கள். நீதிமான்களின் இரத்தப்பழிகளெல்லாம் அவர்கள்மீது வரப்போகிறது. எருசலேமின் துன்மார்க்கத்தை நினைத்தும், அவர்கள்மீது வரப்போகிற ஆக்கினைத்தீர்ப்பை நினைத்தும் இயேசுகிறிஸ்து இங்கு புலம்புகிறார். 


எருசலேம் நகரத்தின்மீது இயேசுகிறிஸ்து மிகுந்த கரிசனையோடிருக்கிறார். அந்த நகரத்தைப்பார்த்து ""எருசலேமே, எருசலேமே''  என்று பரிதாபமாக அழைக்கிறார். எருசலேம் என்னும் பெயரை இரண்டுமுறை தொடர்ந்து அவர் பயன்படுத்துவதினால், அந்த நகரத்தின்மீது அவருக்கு இருக்கும் கரிசனை வெளிப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் இயேசுகிறிஸ்து இந்த நகரத்திற்காக கண்ணீர்விட்டு அழப்போகிறார். இப்போதோ அந்த நகரத்தை நினைத்து பெருமூச்சுவிட்டு தன் ஆவியில் கலங்குகிறார். 


எருசலேம் என்னும் பெயருக்கு சமாதானத்தின் நகரம் அல்லது சமாதானத்தின் தரிசனம் என்று பொருள். ஆனால் இப்போதோ இது யுத்தத்தின் நகரமாகவும், குழப்பத்தின் நகரமாகவும் இருக்கிறது. எருசலேம் பயங்கரமான பாவங்களையெல்லாம் செய்கிறது.  கர்த்தரும் இந்த நகரத்தின்மீது இதுவரையிலும் மிகுந்த கிருபையோடிருந்திருக்கிறார். 


தேவனுடைய ஊழியக்காரர்களை எருசலேம் துன்புறுத்தியிருக்கிறது. அவர்கள் தீர்க்கதரிசிகளை கொலைசெய்திருக்கிறார்கள். தன்னிடத்தில் அனுப்பப்பட்ட ஊழியக்காரர்களை கல்லெறிந்து கொன்று போட்டிருக்கிறார்கள். இந்த இரத்தப்பழி எருசலேம் நகரத்தின்மீது விசேஷமாக வருகிறது. ஏனெனில் யூதரின் பிரதான சபையாகிய ஆலோசனைச்சங்கம் இந்த நகரத்தில்தான் உள்ளது. சபை சம்பந்தமான எல்லாக் காரியங்களும் இந்த நகரத்திலேயே நிர்வாகம்பண்ணப்படுகிறது. எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லை       

  (லூக் 13:33). 


இவர்கள் தீர்க்கதரிசிகளைப்பிடித்து கொலைசெய்திருக்கிறார்கள். அவர்களை கல்லால் எரிந்து கொன்றுபோட்டிருக்கிறார்கள்.  ஸ்தேவானை கொன்றதுபோல பல தீர்க்கதரிசிகளை இவர்கள் கொன்றார்கள். தீர்க்கதரிசிகளை கொல்வதற்கு ரோமப்பேரரசை தங்களுக்கு சாதகமான கருவிகளாக பயன்படுத்தியுள்ளார்கள். 


எருசலேம் நகரத்தில்தான் முதன்முதலாக  சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது. இதே நகரத்தில்தான் இயேசுகிறிஸ்துவின் சபைக்கு முதன்முதலாக மிகுந்த துன்பமும் உண்டாயிற்று (அப் 8:1). 


துன்புறுத்துகிறவர்களின் தலைநகரமாக எருசலேம் விளங்கிற்று. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களை எல்லாம் துன்புறுத்துவதற்காக அவர்களைக் கட்டி எருசலேமுக்கு கொண்டு வந்தார்கள் (அப் 9:2). தங்களிடத்தில் அனுப்பப்பட்ட ஊழியக்காரர்களை கல்லெறிந்து கொன்றுபோட்டார்கள். இவர்களை இயேசுகிறிஸ்து அழைக்கும்போது  ""கல்லெறிகிறவளே'' என்று அழைக்கிறார். ஊழியக்காரர்களை துன்புறுத்துவது தவிர, எருசலேமில் மேலும் பல அக்கிரமமும் துன்மார்க்கமும் உள்ளன. எல்லா அக்கிரமங்களையும்விட, ஊழியக்காரரை துன்புறுத்தும் அக்கிரமமே, தேவனுடைய பார்வையில் மிகப்பெரிய பாவமாக இருக்கிறது. மற்ற எல்லா பாவங்களையும்விட, ஊழியக்காரர்களை துன்புறுத்தும் பாவத்தை அதிகமாக தண்டிப்பதற்கு கர்த்தர்  சித்தங்கொண்டிருக்கிறார். 


இவர்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் மறுதலித்துவிட்டார்கள். அவருடைய சுவிசேஷத்தையும் அங்கீகரிக்கவில்லை. இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கும்போது அவர்களுடைய பாவங்களுக்கு பாரிகாரம் இல்லாமல் போகிறது.  சுவிசேஷத்தை மறுதலிக்கும்போது, அவர்கள் தங்கள் பரிகாரத்திற்கு விரோதமாகவே பாவம் செய்கிறார்கள். இந்த சூழ்நிலையிலும் இயேசுகிறிஸ்து இவர்கள்மீது கிருபையாக இருக்கிறார்.


கோழி தன் குஞ்சுகளை தன் சிறகுகளின் கீழே கூட்டிச்சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக, இயேசுகிறிஸ்து எத்தனை தரமோ எருசலேமின் பிள்ளைகளை கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தார். அவர்களை கூட்டிச்சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பதே இயேசுகிறிஸ்துவின் விருப்பம். காணாமல் போன ஆத்துமாக்களை ஒன்றுசேர்ப்பதே இயேசுகிறிஸ்துவின் திட்டம்.  பாதை தெரியாமல் பல இடங்களிலும் அலைந்து திரியும் ஆத்துமாக்களை இயேசுகிறிஸ்து தம் பக்கமாக கூட்டிச்சேர்க்க விரும்புகிறார்.  தமது விருப்பத்தை ஒரு சாதாரண எடுத்துக்காட்டினால் விளக்குகிறார். கோழி தன் குஞ்சுகளை தன் சிறகுகளின் கீழே கூட்டிச்சேர்த்துக்கொள்ள விரும்புகிறது. 


இயேசுகிறிஸ்துவும் தம்முடைய பிள்ளைகளை கூட்டிச்சேர்த்துக்கொள்ள விரும்புகிறார். ஒரு கோழிக்கு தன் குஞ்சுகளின்மீது இருக்கும் பிரியத்தைப்போல, இயேசுகிறிஸ்துவும் தமது பிள்ளைகள்மீது  பிரியம் வைத்திருக்கிறார். கோழி தன் சிறு குஞ்சுகள்மீது பிரியமாக இருக்கும். அதுபோலவே கிறிஸ்துவும் சிறு பிள்ளைகள்மீது பிரியமாக இருக்கிறார். கிறிஸ்து தமது அன்பினால் ஆத்துமாக்களை கூட்டிச்சேர்க்கிறார் (எரே 31:3). 


கோழி தன் குஞ்சுகளை தன் சிறகுகளின் கீழே கூட்டிச்சேர்த்துக்கொள்கிறது. கோழியின் சிறகுகள் குஞ்சுகளுக்கு பாதுகாப்பைத்தரும்.  சிறு குஞ்சுகளுக்கு கோழியின் சிறகுகளின் கீழ்இருப்பது வெதுவெதுப்பாகவும், சௌகரியமாகவும் இருக்கும். குஞ்சுகள் அங்கங்கு ஓடித்திரிந்தாலும், தங்கள் தாய்கோழியின் சிறகுகளுக்குள் புகுந்து கொள்ளும்.  வேறு பெரிய பறவைகள் குஞ்சுகளை தாக்க வரும்போது, இவை தங்கள் தாய்கோழியின் சிறகுகளின்கீழ் பாதுகாப்பாக அடைக்கலம் பெற்றுக்கொள்ளும். இயேசுகிறிஸ்து பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தத்தை இங்கு பயன்படுத்துகிறார். ""தேவன் தமது சிறகுகளால் உன்னை மூடுவார், அவர் செட்டைகளின்கீழே அடைக்கலம் புகுவாய்'' (சங் 91:4) என்பது தேவனுடைய வாக்குத்தத்தமாகும். 


கோழி தன் குஞ்சுகளை தன் சிறகுகளின் கீழே கூட்டிச்சேர்த்துக்கொள்ளும். கிறிஸ்துவின்  செட்டைகளின் கீழ் ஆரோக்கியமுள்ளது.      கோழி தன் குஞ்சுகளுக்கு கொடுக்கும் ஆரோக்கியத்தைவிட, இயேசுகிறிஸ்து தமது பிள்ளைகளுக்கு கொடுக்கும் ஆரோக்கியம் அற்புதமானது. இயேசுகிறிஸ்து எருசலேமின் ஜனங்களை கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தார். ஒருமுறை மாத்திரமல்ல பலமுறை மனதாயிருந்தார். இயேசுகிறிஸ்து பலமுறை எருசலேமுக்கு வந்திருக்கிறார். அங்கு சத்தியத்தை பிரசங்கம்செய்து, அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்திருக்கிறார். 


சுவிசேஷத்தின் சத்தியத்தை நாமும் பலமுறை நமது காதுகளால் கேட்கிறோம். ஒவ்வொரு முறையும் தமது சுவிசேஷ சத்தியத்தின் மூலமாக இயேசுகிறிஸ்து நம்மை தம்மிடமாக கூட்டிச்சேர்த்துக்கொள்ள விரும்புவதை வெளிப்படுத்துகிறார். ஆயினும் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷ அழைப்பை நாம் பலமுறை ஏற்றுக்கொள்ளாமல் அசட்டை செய்து விடுகிறோம். 


எருசலேமின் ஜனங்கள் தேவனுடைய கிருபையையும், அவருடைய இரக்கத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்து விடுகிறார்கள். தேவன் இவர்களை தம்மிடமாக சேர்த்துக்கொள்ள மனதாயிருக்கிறார். ஆனால் இவர்களுக்கோ தேவனிடம் சேர்ந்துகொள்ள மனதில்லாமல் போயிற்று. இயேசுகிறிஸ்து அவர்களை இரட்சிக்க விரும்புகிறார். ஆனால் அவர்களுக்குகோ அவர் மூலமாக இரட்சிப்பை பெற்றுக்கொள்ள மனதில்லாமல் போயிற்று.



வீடு பாழாக்கிவிடப்படும்



இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும் (மத் 23:38).



எருசலேமின் அழிவை இயேசுகிறிஸ்து முன்னறிவிக்கிறார். அவர்களுடைய அக்கிரமத்தினிமித்தமாக அவர்களுடைய வீடு அவர்களுக்கு பாழாக்கிவிடப்படும். அவர்களுடைய நகரமும், அவர்களுடைய தேவாலயமும் பாழாக்கிவிடப்படும். அவர்களுக்கு சொந்தமானது எல்லாமே பாழாய்ப்போகும். தேவனுடைய வீடும் அதிலுள்ள எல்லா பரிசுத்த பணிமுட்டுக்களும் பாழாக்கிவிடப்படும். தங்கள் தேவாலயத்தைக்குறித்து யூதர்கள் பெருமையோடிருக்கிறார்கள். எதற்கு அழிவு வந்தாலும், தங்கள் தேவாலயத்திற்கு அழிவு வராது என்று இறுமாப்பாக இருக்கிறார்கள். தேவாலயத்தின்மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பாழாக்கிவிடப்படும். 



அவர்களுடைய வீடு அவர்களுக்கு பாழாக்கிவிடப்படுகிறது. பாழாக்கிவிடப்படும் அந்த வீடு யூதர்களுக்கு கொடுக்கப்படுகிறது.  இயேசுகிறிஸ்து இப்போது தேவாலயத்திலிருந்து  புறப்பட்டுப்போகிறார். மறுபடியும் அவர் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை.  இயேசுகிறிஸ்து தங்களைவிட்டு அகன்றுபோவதை யூதர்களும் விரும்புகிறார்கள்.  அவர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு  தேவாலயத்தில் எந்த இடமும் கொடுக்கவில்லை. ஆகையினால் இயேசுகிறிஸ்துவுக்கும் யூதர்களுடைய தேவாலயத்தில் ஆர்வமில்லாமல் போயிற்று. 



அந்த தேவாலயத்தை இயேசுகிறிஸ்து யூதர்களுக்கே கொடுக்கிறார். அதை அவர்கள் எடுத்துக்கொண்டு, அதில் தங்களுக்குப் பிரியமான எல்லா காரியங்களையும் செய்து கொள்ளலாம். இயேசுகிறிஸ்து அவர்களுடைய கிரியைகள் எதிலும் இனிமேல் தலையிடமாட்டார்.  அவர்களுடைய பட்டணமும் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்த பட்டணத்தில் இனிமேல் தேவனுடைய பிரசன்னமும் கிருபையும் தங்கியிருக்காது. ஒரு இடத்தில் தேவக்கிருபையும் அவருடைய பிரசங்கமும் இல்லையென்றால் அந்த இடம் பாழாக்கிவிடப்படும் இடமாகவே இருக்கும். இயேசுகிறிஸ்து எருசலேமைவிட்டும் தேவாலயத்தை விட்டும் புறப்பட்டுப் போன பின்பு, அந்த இடங்கள் அவர்களுக்கு பாழாக்கிவிடப்பட்டிருக்கிறது. 



இயேசுகிறிஸ்து எருசலேமைவிட்டு புறப்பட்டவுடனே அந்த நகரம் அவர்களுக்கு பாழாக்கிவிடப்படுகிறது. இயேசுகிறிஸ்து ஓர் இடத்தைவிட்டு அகன்றுபோய்விட்டால், அந்த இடம் வெறுமையாகவே இருக்கும். இயேசுகிறிஸ்து வனாந்தரத்தில் இருந்தாலும் அந்த வனாந்தரம் சோலையாக இருக்கும். இயேசுகிறிஸ்து ஒரு சோலையில் இல்லையென்றாலும், அந்த சோலை வனாந்தரம் போல வறட்சியாகவே இருக்கும்.



தேவாலயத்தைவிட்டு இயேசுகிறிஸ்து கடந்துபோனபின்பு, அந்த அழகான தேவாலயம்  வனாந்தரம் போல இருக்கிறது. ஓரிடத்தில் இயேசு இல்லையென்றால் அங்கு அழகு இல்லை, அமைதியில்லை, ஆராதனையில்லை, விசுவாசமில்லை, பக்தியில்லை. தேவாலயத்தில் உலகப்பிரகாரமான பணிமுட்டுக்கள் ஏராளமாக இருந்தாலும், இயேசு அங்கு இல்லையென்றால் அவற்றால் ஒரு பிரயோஜனமுமில்லை. இயேசு தேவாலயத்தைவிட்டு வெளியேறியபின்பு,  மகா பரிசுத்த ஸ்தலத்தில் தேவனுடைய பிரசன்னமும் வெளியேறிவிடுகிறது. 



எருசலேம் நகரத்தாரைப்போல, நாமும் இயேசுகிறிஸ்துவை நமது உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துவிட்டால், நாமும் பாழாய்போனவர்களாகவே இருப்போம். நம்மிடம் என்ன இருந்தாலும், நமக்குள் இயேசு இல்லையென்றால், நாம் ஒன்றும் இல்லாதவர்களாகவே இருப்போம். எருசலேம் நகரத்தார் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல், அவரை புறக்கணித்து, தங்கள் நகரத்தைவிட்டே துரத்திவிட்டார்கள். இதன்பின்பு வெகு விரைவில் அவர்களுக்கு அழிவு உண்டாயிற்று. எருசலேம் நகரம் பாழாய்போயிற்று. எருசலேமின் தேவாலயம் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடி அழிந்துபோயிற்று.



தேவனுடைய பிரசன்னம் தேவாலயத்தைவிட்டு அகன்றுபோனபின்பு, பரிசுத்தமான தேவாலயம் பாழாய்போயிற்று. அழகான தேவாலயம் அலங்கோலமாயிற்று. ஓரிடத்திலிருந்து தேவன் புறப்பட்டுப்போய்விட்டால் அந்த இடத்திற்குள் சத்துரு வந்துவிடுவான். 



""இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்'' என்னும் வாக்கியம் தேவாலயத்தையும், இஸ்ரவேல் தேசத்தையும் குறிக்கும். 

(2சாமு 7:5,18-19) இரண்டுமே பாழாக்கிவிடப்படும். ஆனாலும் இரண்டுமே திரும்பக் கட்டப்படும். தானியேலின் 69-ஆவது வாரத்தின் முடிவில் இஸ்ரவேல் தேசம் பாழாக்கிவிடப்பட்டது.

 (தானி 9:27)



தேவாலயம் பாழாக்கிவிடப்பட்டதற்குக் காரணங்கள்



    1. அவர்களுடைய பாவங்கள்

    2. யூதமார்க்கம் தொடர்வதற்கான வாய்ப்புக்களை அகற்றுதல்

    3. நியாயப்பிரமாணம் முடிவுக்கு வருதல். யூதருடைய மார்க்கம் ஒழிந்து, கிறிஸ்தவ மார்க்கம் தோன்றுதல்.



காணாதிருப்பீர்கள் 



கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்

 (மத் 23:39).



இயேசுகிறிஸ்து எருசலேம் நகரத்தையும், தேவாலயத்தையும்விட்டு புறப்பட்டுப்போகும்போது  ""என்னை காணாதிருப்பீர்கள்'' என்று அவர்களுக்கு அறிவிக்கிறார். ""கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்'' என்று அவர்கள் சொல்லுமளவும் அவரை காணாதிருப்பார்கள்.



இயேசுகிறிஸ்து அவர்களைவிட்டு கடந்துபோகிறார். விரைவில் அவர் இந்த உலகத்தை விட்டு தம்முடைய பிதாவிடத்திற்கு போகப்போகிறார். அதன்பின்பு அவரை யாரும் காணமுடியாது. இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு, ஒருசிலர் மாத்திரமே அவரை தங்கள் கண்களால் கண்டார்கள். அவர் பரமேறிப்போனபோது ஒரு சிலர் மாத்திரமே அந்த சம்பவத்தை தங்கள் கண்களால் கண்டு  சாட்சி பகர்ந்தார்கள். அதன்பின்பு அவர்கள் இயேசுவை காணவில்லை. பிரத்தியட்சமான இந்த உலகத்திலிருந்து, அவர் அதரிசனமான உலகத்திற்கு கடந்துபோய்விட்டார். 



எல்லாக் காரியங்களும் மறுபடியும் சீராக்கப்படும் காலம் வரும். இயேசுகிறிஸ்து தமது இரகசிய வருகையின்போது இந்த பூமிக்கு  மறுபடியும் வருவார். அப்போது நம்முடைய கண்கள் அவரை பிரத்தியட்சமாக காணும். அப்போது ஜனங்கள் ""கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்'' என்று சத்தமாக முழங்கி, அவரை வரவேற்பார்கள். இயேசுகிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவரை ஆராதிக்கிறவர்கள் மாத்திரமே, அவரை வரவேற்பார்கள். நாமும் கர்த்தரை ஆராதிக்கும் பரிசுத்தவான்களின் கூட்டத்தாரோடு இப்போதே சேர்ந்துகொள்ள வேண்டும்.



மறுபடியும் இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வரும்வரையிலும், ஜனங்கள் அவரை காணாதிருப்பார்கள். அவர்களுடைய ஆவிக்குரிய கண்கள் குருடாகயிருக்கும். ""கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்'' என்று அவர்கள் அங்கீகரித்து சொல்லவேண்டும். அப்போதுதான்  அவர்களுடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படும். இயேசுகிறிஸ்துவை தங்கள் கர்த்தராக விசுவாசித்து அங்கீகரிக்கும்போதுதான் யூதர்கள்,  தங்கள் சமாதானத்திற்குரிய காரியங்களை  காண்பார்கள். இயேசுகிறிஸ்துவை கர்த்தர் என்று தங்கள் நாவினால் அறிக்கை செய்யும் வரையிலும் அவர்கள் ஆவிக்குரிய குருடர்களாகவே இருப்பார்கள். இயேசுவை காண விரும்பாமல் இவர்கள் தங்கள் கண்களை வேண்டுமென்றே  மூடிக்கொள்கிறார்கள். கண்கள் இருந்தும் குருடர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட துன்மார்க்கர்களுக்கு நியாயப்படி தண்டனை கொடுக்கப்படும். இவர்கள் கண்ணை திறந்து பார்க்கவில்லையென்றால், ஒன்றையும் காணமாட்டார்கள். இந்த வார்த்தையோடு இயேசுகிறிஸ்து தமது பிரசங்கத்தை நிறைவுசெய்கிறார். 



கர்த்தர் தம்முடைய ஆயிரக்கணக்கான பரிசுத்தவான்களோடு இந்த பூமிக்கு மறுபடியும் வருவார். அப்போது எல்லா கண்களும் அவரைக்காணும். இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்று எல்லோரும் புரிந்துகொள்வார்கள். இயேசுகிறிஸ்துவை துன்புறுத்தியவர்களும், அன்று அவரை கர்த்தர் என்று புரிந்துகொள்வார்கள். கர்த்தருடைய பரிசுத்தவான்கள் ""ஓசன்னா'' என்று கூறும்போது அவர்களை பரியாசம்பண்ணியவர்களெல்லாம், இயேசுவை கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். தாங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இயேசுகிறிஸ்து மறுபடியும் வரும்போது அவர்கள்  ""கர்த்தருடைய நாமத்தினால் வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்'' என்று அறிக்கையிடுவார்கள். இந்த விசுவாச வார்த்தையை அறிக்கை செய்வதற்கு அவர்கள் அது வரையிலும் காத்திராமல், இப்போதே அறிக்கைசெய்து இயேசுகிறிஸ்துவை தங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு ஆசீர்வாதம் உண்டு. 


இயேசு கிறிஸ்துவை நாம் மறுபடியும் காண்போம். யூதர்களும் காண்பார்கள். அவர்கள் சந்தோஷமாக இயேசு கிறிஸ்துவைத் தங்கள் மேசியாவாக ஏற்றுக் கொள்வார்கள்.   யூதர்கள் ஏற்கெனவே ""கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்'' 

என்று கூறியிருக்கிறார்கள். 

(மத் 21:9; சங் 118:26)

Post a Comment

0 Comments