வேதத்தில்பெயர் சொல்லப்படாத பெண்கள் - பகுதி-3. (Anonymous Women's in the Bible )

 Anonymous Women's in the Bible 


வேதத்தில்பெயர் சொல்லப்படாத பெண்கள்


பகுதி-3


3.பிலாத்துவின் மனைவி


( மத்தேயு 27:19)


பிலாத்துவின் மனைவியின் பெயர் வேதத்தில் சொல்லப்படவில்லை. இவளைப் பற்றி ஒரே 

ஒரு வசனத்தில்தான் சொல்லப்பட்டுள்ளது. இருந்தாலும் அது ஆழமான கருத்தைக் கூறுகிறது. இவளுடைய கணவன் பொந்தியு பிலாத்து ரோமாபுரியின் ஆளுகைக்குட்பட்ட யூதேயா, சமாரியா பகுதிகளின் தேசாதிபதியாக இருந்தான். பிலாத்து தேசாதிபதியாய் இருந்த நாட்களில்தான் இயேசு கிறிஸ்துவின் பாடும் மரணமும் சம்பவித்தது. பிரதான ஆசாரியரும், ஜனத்தின் மூப்பர்களும் இயேசு கிறிஸ்துவைக் கொலை செய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனை பண்ணி அவரைப் பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.


அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது அவன் மனைவி ஆளனுப்பி நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம். அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லி அனுப்பினாள். அக்காலத்தில் பெண்கள் தங்கள் வீட்டில் கூட தங்கள் கருத்துக்களைக் கூறமுடியாது. அப்படிப்பட்ட காலத்தில் அதுவும் வீட்டிற்கு வெளியே மத சம்பந்தமான கலவரம் நிறைந்த சூழலில், நீதிமன்றத்திற்கு தனது மனக் கருத்தைச் சொல்லி அனுப்பிய இப்பெண்ணின் செயல் துணிச்சலானது என்றுதான் சொல்லவேண்டும். அவள் தைரியம் பாராட்டுதற்குரியது.


பிலாத்துவின் மனைவி இயேசுவைப் பின்பற்றாதவள். ஆனால் அவள் கண்ட சொப்பனத்தின் மூலம் 'இயேசு நீதிமான்' என்று அறிந்து தனது மனதிலே மிகவும் வியாகுலம்

அடைந்தாள். ஒருவேளை இயேசு அநியாயமாய் நடத்தப் படுகிறார் என அவள் உணர்ந்திருக்கக்கூடும். 


ஆகவே அவள் தன் கணவனுக்கு இயேசு கிறிஸ்துவை ‘நீதிமான்' என்றும் அவருக்குத் தீமையானது ஒன்றும் செய்ய வேண்டாம் 

என்று தைரியமாய்ச் சொல்லியனுப்பினாள். இச்செயலின் மூலமாய் அவள் இயேசு யார்? என்ற உண்மையை நான் மாத்திரம் அல்ல, அங்குள்ள அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்றே சொல்லி அனுப்பியிருக்க வேண்டும். அதே சமயம் தனது கணவன் நியாயாசனத்தில் தவறான நீதி வழங்கிவிடக் கூடாதே என்று எச்சரிப்பாகவும் சொல்லி அனுப்பியிருக்க வேண்டும். தனக்குச் சொப்பனத்தில் வந்த வெளிப்பாட்டை உண்மை என்று ஏற்றுக்கொண்டு, தைரியமாக உள்ளதை உள்ளதென்று சொல்லி தன் கணவனுக்கு ஏற்ற ஆலோசனை கொடுத்த இப்பெண் பாராட்டுதற்குரியவளே.


அதே சமயத்தில் தீர விசாரித்து இயேசுவைக் குற்றமற்றவர் என அறிந்தும் தன் மனைவி மூலம் இயேசு ‘நீதிமான்' என்று இயற்கைக்கு அப்பாற்பட்ட தெளிவைப் பெற்றும், பிலாத்து, மதத் தலைவர்களையும் அரசியல் மேலதிகாரி களையும் பிரியப்படுத்துவதற்காகவும், தன் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காகவும் இயேசு கிறிஸ்துவை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தது எவ்வளவு பரிதாபமான செயல்! பிலாத்துவுக்கு எத்தனையோ தருணங்கள் கொடுக்கப்பட்டன. இயேசு கிறிஸ்து நீதிமான், குற்றமற்றவர் என்று தெரிந்தும் தன்னுடைய மனச்சாட்சிக்கு விரோதமாகவும், ரோம நீதிச் சட்டத்திற்கு முரண்பட்டும் குற்றமற்ற இயேசுவை அவன் சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தது எத்தனை அநியாயமான செயல்!


பிலாத்துவின் மனைவியின் செயல், 'மரணத்துக்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும் கொலையுண்ணப்போகிறவர் களையும் விடுவிக்கக் கூடுமானால் விடுவி. அதை அறியோம்

என்பாயாகில் இருதயங்களை சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ?' நீதி 24:11,12 என்ற வசனங்களின்படியாக நேர்மையான செயலிற்கு ஒப்பாயிருக்கிறது. 

பிலாத்துவின் அநீதியான செயல் 'துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும் நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவ னுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்' நீதி 17:15 என்ற வசனத்தின்படியாக சாபச் செயலிற்கும் ஒப்பாயிருக்கிறது.


இந்த உலகின் கடைசி நாட்களில் வாழும் நாம் குடும்ப நிகழ்வுகளில், வேலை ஸ்தலத்தில், வாழும் பகுதியில், நமது காரியங்களில் மற்றும் ஊழியப் பாதையில் தவறுகள், இழப்புகள், நேர்ந்தாலும் தயங்காமல் சுட்டிக்காட்டி நம்மால் முடிந்தவரை அவற்றைச் சரி செய்கிறோமா? அல்லது சம்பந்தப்பட்ட நபர்கள் பெரியவர்கள், அதிகாரிகள், ஐசுவரியவான்கள், உயர்மட்ட மேட்டுக் குடிமக்கள் எனப் பயந்து மவுனமாகி விடுகிறோமா? அல்லது பிலாத்துவைப்போல நீதியை அநீதியாகத் தீர்ப்புச் சொல்லுகிறோமா? நாம் அறிந்த உண்மையைத் தைரியமாய்ச் சொல்ல நம்மை அர்ப்பணிப்போம். '


உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்' (மத் 5:37)...

Post a Comment

0 Comments