மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாறு
கிரகாம் ஸ்டெயின்ஸ்
(1941-1999)
இளமை வாழ்க்கை:
கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்கள் 1941 ம் ஆண்டு வில்லியம்ஸ் மற்றும் எலிசபெத் தம்பதியினருக்கு மகனாக ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் சிறுவயதிலிருந்தே ஒழுக்கத்திலும் தெய்வ பக்தியிலும் வளர்த்தார்கள்.
ஊழிய அழைப்பு
இவர் 15 வயது இருக்கும்போது அங்குள்ள திருச்பையில் இந்தியாவில் தொழுநோயாளிகள் மத்தில் நற்செய்திபணி செய்துகொண்டிருந்த ஆஸ்திரேலிய மிஷனெரி ஒருவர் இந்தியாவில் உள்ள தொழுநோயாளிகளின் அவலநிலையை புகைப்படங்கள் மூலம் கிரகாம் ஸ்டெயின்ஸ் திருச்சபையில் அறிவித்து இந்தியாவில் தொழுநோயாளிகளின் காயத்தை கட்டவும் அவர்களுக்கு நற்செய்திபணி அறிவிக்கவும் அறைகூவல் விடுத்தார். இதைக்கேட்ட கிரகாம் ஸ்டெயின்ஸ் மனபாரம் அடைந்து தன்னை அந்த அழைப்பிற்க்கு ஒப்புக் கொடுத்தார்.
இந்திய வருகை
கிரகாம் ஸ்டெயின் தன்னுடைய கல்லூரி படிப்பில் புள்ளியில் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற்று நிறைவு செய்தார். தன்னுடைய 24 ம் வயதில் இந்தியாவில் தொழுநோயாளிகளின் மத்தியில் Evangelical Mission Society மூலம் சேவைசெய்ய தன்னை அற்பணித்தார்.
1965 ம் ஆண்டு கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்கள் ஒரிஸ்சாவில் உள்ள மயூர்பஞ்ச் என்ற பகுதிக்கு வந்து அங்கிருந்த ஆதிவாசி மக்கள் மத்தியில் தங்கி இருந்து தொழுநோயாளிகளுக்கு சேவைசெய்யவும் நற்செய்திபணி அறிவிக்கவும் வந்து சேர்ந்தார்.
ஒரிஸ்சாவில் கிரகாம்:
கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்கள் ஒரிஸ்சாவில், மயூர்பஞ்ச் பகுதியில் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலநிலையை கண்டு மனம் உறுகிப்போனார். பெற்றோராலும், உற்றார் உறவினர்களாலும் கிராமத்து மக்களாலும் விரட்டப்பட்ட இம்மக்களை சந்தித்து, அவர்களை ஆறுதல்படுத்தி, அவர்கள் காயங்களை சுத்தம் செய்து, அவர்களுக்கு இயேசுவின் தெய்வீக அன்பை எடுத்துரைத்து, அவர்களோடு தன்னை இணைத்து வாழ்ந்தார்.
இந்நிலையில் 1966-ம் ஆண்டு 15 பேர் தங்கி சிகிச்சை எடுக்கக்கூடிய சிறிய தொழுநோய் மருத்துவமனையை கட்டி அதை அரசாங்கத்தில் பதிவு செய்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார். அப்படியே மயூர்பஞ்ச் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆதிவாசி மக்களுக்கு தொழுநோய் பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதிக உழைப்பால் 1980-ம் கிரகாம் ஸ்டெயின் 100 தொழுநோயாளிகள் தங்கி சிகிச்சை எடுக்கூடிய அளவில் அந்த சிறிய கட்டிடத்தை பெரிய தொழுநோய் மருத்துவமனையாய் விரிவுபடுத்தினார்.
கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்கள் குறுகிய காலத்திலேயே ஒரியா, சந்தாலி மற்றும் ஹோ மொழிகளை கற்று அங்குள்ள ஆதிவாசி மக்கள் மத்தியில் நற்செய்திபணி செய்து அநேகரை ஆத்தும ஆதாயம் செய்தார். எனவே ஆங்காங்கே திருச்சபைகள் ஏற்படுத்தப்பட்டது.
திருமணம் வாழ்க்கை
1980-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து Operation Mobilization என்ற கிறிஸ்துவின் நற்செய்தி இயக்கத்தின் மூலம் கிளாடிஸ் (Gladis) என்ற பெண்மணி இந்தியா வந்து வாலிபர்கள் மத்தில் நற்செய்திபணி செய்யும்படியாக வந்தார். இவர்கள் செவிலியர் துறையில் பட்டபடிப்பு படித்திருந்தார். ஆண்டவர் நற்செய்திபணிக்கு அழைக்கவே இவர்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்து குறிப்பாக கிறிஸ்தவ வாலிபர்களின் மத்தியில் நற்செய்திபணி செய்து அநேக வாலிபர்களுக்கு முன்மாதிரியாக இருந்து அவர்களை விசுவாசத்தில் வளர்த்தார்கள்.
இந்நிலையில் 1981-ம் ஆண்டு ஒருமுறை ஒரிஸ்சா வந்து பின்னர் கிரகாம் ஸ்டெயின் மூலம் தொழுநோயாளிகள் மத்தியில் நடைபெற்ற சேவைபணியும், நற்செய்திபணியும் பார்த்த கிளாடிஸ்க்கு, தன்னுடைய சேவை இந்த மக்களுக்குத்தேவை என்று ஆழமாக உணர்ந்தார். எனவே தொழுநோய் பாதித்த மக்களுக்கும் ஆதிவாசி மக்கள் மத்தில் நற்செய்திபணி செய்யவும் தன்னை அற்பணித்தார்.
கடவுளின் வழிநடத்துதலின்படிம் தேவ ஊழியர்களின் ஆலோசனைப்படியும் கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களை 1983-ம் ஆண்டு ஜீன் மாதம் 16-ம் தேதியில் கிளாடிஸ் திருமணம் செய்துகொண்டார். கணவனும் மனைவியுமாக சேர்ந்து தொழுநோயாளிகள் காயங்களை கட்டவும், சேவை செய்யவும் மற்ற ஆதிவாசி இன மக்களுக்கும் நற்செய்திபணியும் செய்து வந்தார்கள்.
கிளாடிஸ் அம்மையாரும் செவிலியர் படிப்பு படித்திருந்ததால் இந்த தொழுநோய் மருத்துவமனை இன்னும் சிறப்பாக செயல்பட்டது. கர்த்தர் இவர்கள் குடும்ப வாழ்க்கையை ஆசீர்வதித்து எஸ்தர், பிலிப் மற்றும் தீமோத்தேயு என்ற மூன்று பிள்ளைகளை கொடுத்தார்.
ஊழிய வளர்ச்சிகள்
கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களுக்கு ஆண்டவர் பல தாலந்துகளையும் திறமைகளையும் கொடுத்திருந்தார். இவர் ஆதிவாசி இன மக்களின் மொழியறிவை மேம்படுத்த மொழியாக்கப் பணிகளையும், கிறிஸ்தவ சீஷத்துவம், திருச்சபை நாட்டுதல், கல்வி அறிவு, சுகாதாரம், தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் பல சமுதாய சேவைகளை செய்ததினால் அநேக ஆதிவாசி மக்கள் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.
இந்நிலையில் ஹோ இன ஆதிவாசி மக்களுக்கு என்று புதிய ஏற்பாட்டை அவர்கள் மொழியில் மொழிபெயர்த்து கொடுக்க முடிவு செய்தார். ஆகவே பகல் முழுவதும் சமுதாய மேம்பாட்டு பணிகள் செய்துவிட்டு, இரவில் வேதாகமத்தை ஹொ மொழியில் மொழியாக்கம் செய்து கொண்டு இருந்தார். அப்படியே நற்செய்திபணியில் ஈடுபட்டு அநேக ஆதிவாசி இன மக்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்ததினால் அநேகர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள். எனவே அவர்களுக்கு என்று ஆங்காங்கே ஆலயங்கள் கட்டப்பட்டது. இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இந்துமத பூசாரிகள் கிரகாம் ஸ்டேயின்ஸ் மதமாற்றம் செய்வதாக குற்றம் சாட்டியது. ஆனால் அரசாங்கம் மூலம் விசாரணை நடத்தப்பட்டு, கிரகாம் ஸ்டெயின்ஸ் மதமாற்றம் செய்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று அறிக்கையை சமர்பித்தது.
கிளாடிஸ் அம்மையாரும் இந்த ஆதிவாசி மக்களின் வாழ்க்கை மேம்படும்படி துணி நெய்தல், பாய் முனைதல், தையல் கலையை கற்று கொடுத்தும், கயிறு திரித்தல், கூடை பின்னுதல் என்று பல தொழில்களை கற்றுக்கொடுத்து அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தினார். இதனால் அநேக பெண்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.
கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்கள் ஒரிஸா முழுவதும் சென்று போலியோ நோய் பற்றியும் தொழுநோய் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சாதாரண மிதிவண்டியில், தொப்பி அணிந்து கொண்டு, கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கு போலியோ நோய் தடுப்பு முறைகளையும், சுகாதாரத்தையும் கற்றுக்கொடுத்தார்.
அப்படியே ஆதிவாசி மக்களுக்கு வேதாகமத்தை கற்றுக்கொடுத்து அவர்களை ஒழுக்கத்திலும், சுகாதாரத்திலும் மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கையை மேம்படுத்தினார். இதனால் இம்மக்கள் கிரகாம் ஸ்டெயிஸ் அவர்களை "படா பாய்" அதாவது பெரிய அண்ணன் என்று பாசமாக அழைத்தார்கள்.
இறுதி நேரங்கள்:-
தனது 59-ம் வயதில் கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்கள் 1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் நாள் ஒரிஸாவின் தலைநகர் புவனேஸ்வர் பகுதியிலிருந்து 250 கி.மீ தொலைவிலுள்ள மனோகர்பூர் என்ற இடத்தில் "கிறிஸ்தவ ஆதிவாசி குடும்பங்களின் கூடுகை"-ல் பங்கு பெற செல்வதாற்க்கு ஆயத்தப்பட்டார்.
இந்நிலையில் தமிழ்நிட்டில் ஊட்டியில் ஆங்கில வழி கல்வி படித்துக்கொண்டு, விடுமுறைக்காக வீட்டிற்குவந்த தன்னுடைய 10 வயதான பிலிப் மற்றும் 6 வயதான தீமோத்தேயுவை தன்னுடன் அழைத்துக்கொண்டு போனார். நெடுந்தொலைவு பயணமும், கடுமையான குளிரின் நிமித்தமாகவும் இரவு நேரத்தில் அங்கிருந்த ஆலயத்தின் முன்பகுதியில் அவர்களுடைய வாகனத்தை நிறுத்தி அதில் உள்ளே தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
இவர்கள் குடும்பத்தை கொலை செய்யும்படி இந்து மத பூசாரிகளின் தூண்டுதலின் பேரில் 50 பேர் கொண்ட வன்முறை கும்பல், கோடாரிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களோடு, அவர்கள் தங்கி இருந்த வாகனத்தை அடித்து நொறுக்கி வாகனத்தை தீ வைத்தார்கள்.
கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகளும் விளித்துக்கொண்டு தப்பித்துக்கொள்ள வெளியே ஓடிவர முயற்சி செய்தபோது, அந்த வன்முறை கும்பல் அவர்களை வாகனத்தைவிட்டு வெளியேவர விடாமல் பார்த்துக்கொண்டார்கள். இதனால் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவருடைய இரண்டு பிள்ளைகளும் வாகனத்திற்குள்ளேயே தீயினால் கரிக்கட்டையாகி போனார்கள். இந்த வண்முறை கும்பல் அடங்கா வெறியுடன் அங்கிருந்த ஆலயத்தையும் சேதப்படுத்தி தங்கள் வக்கிரபுத்தியை காட்டி, கடந்து சென்றார்கள்.
இந்த சம்பவம் நடந்தபோது கிளாடிஸ் அம்மையாரும் அவருடைய மகள் எஸ்தரும் மயூர்பஞ்ச் பகுதியில் அமைந்திருந்த தொழுநோய் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சேவை செய்துகொண்டு இருந்தார்கள். கிரகாம் ஸ்டெயின் மற்றும் 2 மகன்களும் மரித்துப்போன செய்தியை கேள்விப்பட்டு, கிளாடிஸ் அம்மையாரும், எஸ்தரும் அங்குவந்து, கரிக்கட்டையாகிபோன கிரகாம் ஸ்டெயின்ஸ், பிலிப் மற்றும் தீமோத்தேயுவின் கரிக்கட்டையான சரீரத்தை கண்டு தாங்கொண்ணா துயரம் அடைந்தார்கள். பின்னர் நடைபெற்ற அடக்க ஆராதனையில் ஆயிரக்கணக்கான ஆதிவாசி குடும்பங்கள் கலந்துகொண்டு தங்கள் பாசமான பெரிய அண்ணன் குடும்பம் அழிக்கப்பட்டதை பார்த்து மார்பில் அடித்துக்கொண்டு, கண்ணீர்விட்டு புலம்பினார்கள்.
இந்த கொடுரமான சம்பவத்தை உலகநாடுகளின் மனித உரிமை கண்காணிப்பு குழு மற்றும் பல உலக நாடுகள் இந்திய அரசாங்கத்தை கண்டனம் செய்து, இந்திய அரசாங்கம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டியது. இந்த சம்பவத்திற்காக உலக அரங்கில் இந்தியா தலைகுனிந்தது. ஆனால் இந்த செயலை செய்த வன்முறை கும்பலை, இந்துமத பூசாரிகள் நியாயப்படுத்தி பேசினார்கள். இது இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த மிருகத்தனமான செயலை ஆரம்பத்தில் எந்த ஒரு பத்திரிக்கையும், தொலைக்காட்சியும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
ஆனால் கிளாடிஸ் அம்மையார் ஒரு முறை பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கும்போது,
"இந்த மாபாதக செயலை செய்த நபர்களை நான் மன்னிக்கின்றேன் என்றும் அவர்களை நான் இன்னும் நேசிக்கின்றேன்" என்று அறிவித்ததன் மூலம், இயேசு கிறிஸ்துவின் மூலம் பெற்றுக்கொண்ட அன்பை, இந்தியா மட்டுமல்லாமல் அகில உலகமே கிளாடிஸ் அம்மையாரை பாராட்டியது மேலும் இதை பத்திரிக்கை செய்திகளில் தலையங்கமாக எழுதினார்கள்.
அதன் பின்னர் தான் கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்கள் தொழுநோயாளிகள் மத்தியில் செய்துவந்த சேவைப்பணி இந்தியாவிற்கே பெருமை தேடி தந்தது. கிளாடிஸ் அம்மையார் ஒரிஸாவில் தொழுநோயாளிகள் மருத்துவமனையில் 2004 ம் ஆண்டுவரை தொடர்ந்து சேவை செய்து வந்தார்கள்.
பின்பு கிளாடிஸ் அம்மையார் தன் மகள் எஸ்தரோடு ஆஸ்திரேலியா சென்று விட்டார்கள்.
கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்கள் மூலமாக இந்திய மக்களுக்கு செய்யப்பட்ட சேவையை கனப்படுத்தும்படியாக
2005 -ம் ஆண்டு இந்திய ஜனாதிபதிK. R. நாராயணன் அவர்கள் "பத்மஷிரி" என்ற பதக்கத்தை கொடுத்து கௌரவப்படுத்தினார்கள்.
2016 -ம் ஆண்டு அன்னை தெரசா ஞாபகார்த்த பதக்கமும் கொடுத்து கௌரவிக்பட்டார்கள்.
இந்தியாவில் அன்னை தெசாவிற்கு பின்பு அதிகமாக புகழப்பட்டது கிளாடிஸ் அம்மையார் மட்டுமே.
கிரகாம் ஸ்டெயிஸ் அவர்கள் ஒரிஸா மக்களுக்காக 34 ஆண்டுகள் சேவை செய்து தன்னையே அற்பணித்தார்கள். இவர் ஒரிஸாவின் அப்போஸ்தலன் என்று இந்திய திருச்சபைகள் புகழாரம் சூட்டுகின்றது.
கிரகாம் ஸ்டெயின்ஸ் ஒரு கோதுமை மணியாக விதைக்கப்பட்டார். அதன் பிரதிபலனாக இன்று தமிழ்நாட்டிற்கு பிறகு ஒரிஸாவில் இருந்துதான், ஏராளமான மிஷனெரிகள் இந்தியா முழுவதும் நற்செய்திபணி அறிவிக்க வந்துகொண்டு இருக்கின்றார்கள். ஆண்டவர் இந்தியாவுக்கு கொடுத்த பரிசு கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துவோம்.
இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்போம். தேவ ராஜ்யம் நம் மூலமாய் இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
0 Comments