சார்லஸ் மீட் || மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு ||

 மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு


சார்லஸ் மீட்


 (1782-1873)


இங்கிலாந்து தேசத்தில் கிளவ்செஸ்டர் மாநிலத்தில் பிரிஸ்டல் என்னுமிடத்தில் பக்தியாக பெற்றோருக்கு மகனாக 1782 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் நாள் சார்லஸ் மீட் பிறந்தார்.


இங்கிலாந்து தேசத்தில் Dr. Bogue வாலிபர்கள் மத்தில் மிஷனெரி தரிசனத்தை பகிர்ந்துகொண்டு இருந்தபோது 22 வயது வாலிபனான சார்லஸ் மீட், மிஷனரி பணிக்கு ஆண்டவர் தன்னை அழைப்பது உணர்ந்து டாக்டரிடம் தன்னை ஆண்டவர் இந்தியாவில் ஊழியம் செய்ய அழைப்பது உணர்வதாக கூறினார்.


டாக்டர் போக் சார்லஸை உற்சாகப்படுத்தி காஸ்போர்ட் என்ற இடத்தில் உள்ள வேதாகம கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவி செய்தார். பயிற்சி முடிந்ததும் 1816 ஆம் ஆண்டில் இங்கிலாந்து திருச்சபையில் குருவானவராக பிரதிஷ்டை செய்யப்பட்டார்.


இந்நிலையில் லண்டன் மிஷனரி சங்கத்தாரால் இந்தியாவில் திருவிதாங்கூர்  சமஸ்தானத்திற்கு நற்செய்திபணி செய்ய அனுப்பப்பட்டு, மருத்துவ வசதி இல்லாததாலும், தட்பவெப்பநிலை சரியாக இல்லாததினாலும் சுகவீனம் ஆகி, இங்கிலாந்துக்கு திரும்பும் ரிங்கல் தொபே யின் ஊழியங்களை தொடர்ந்து நடந்த சார்லஸ் மீட் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இங்கிலாந்தில்  குருவானவர்  ஹண்ட் என்பவரின் மகளை திருமணம் செய்து 1816 ஆம் ஆண்டு இந்தியாவில் நற்செய்திபணி செய்ய பயணமானார்.


நான்கு மாத கடல் பயணத்திற்கு பின் சென்னை துறைமுகத்திற்கு  வந்த சார்லஸ் மீட் வெயிலின் கொடுமையை தாங்கமுடியாமல் சுகவீனம் ஆனார். ஆகவே சென்னையில் ஒரு ஆண்டு தங்கியிருந்து தமிழ்மொழியை படிப்பதிலும், மிஷனெரிபணி செய்வதிலும் செலவழித்தார். அப்பொழுது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.


பின்னர் சுகம் பெற்ற சார்லஸ் மீட் ஐயர் தன் மனைவி மற்றும் குழந்தையோடு 1817 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் செல்ல சென்னையிலிருந்து கப்பல் ஏறினார். பிரசவத்திற்கு பின் பலவீனமாக இருந்த திருமதி. மீட் பயணத்தில் அதிக வியாதிப்பட்டு பினாங்க் என்ற இடம் சேரும் பொழுது கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.


அந்நிய தேசத்தில் மிஷனரிப் பணி செய்ய ஆவலாய் புறப்பட்டு வந்த சார்லஸ் மீட் ஐயருக்கு தாங்கொனா வேதனையாய் இருந்தது. ஆயினும் கிறிஸ்துவுக்குள் ஆறுதல் அடைந்து, கலப்பையில் கை வைத்த பின்பு பின்னிட்டுப் பார்க்காது தன்னை அழைத்தவர் இறுதிவரை நடத்துவார் என்று விசுவாசித்து கைக்குழந்தையுடன் குளச்சல் துறைமுகத்திற்கு கப்பலேறி, தனக்கு குறிக்கப்பட்ட மயிலாடி மிஷனெரி பணி தளத்திற்கு வந்து சேர்ந்தார். 


மயிலாடி பகுதியில் ரிங்கல் தொபே ஐயர் ஏற்படுத்தி இருந்த ஏழு திருச்சபைகளை, வேதமாணிக்கம் உபதேசியார் மிகவும் கண்ணும் கருத்துமாக கட்டிக்காத்து திருச்சபையின் பொறுப்புகளை சார்லஸ் மீட் ஐய்யரிடம் ஒப்படைத்தார்.


இந்தியாவில் தென்கோடியில் இருக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உயர் ஜாதி மற்றும் தாழ்ந்த ஜாதி என்ற பிரிவினையால் தாழ்த்தப்பட்ட மக்களை தீண்டத்தகாதவர்களாக அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். தாழ்ந்த சாதி மக்களாக கருதப்பட்ட சாணார், சாம்பவர், ஈழவர், சேரமர், குறவர் இனத்தார்  பொது கிணறுகளிலும், குளங்களிலும், உயர்சாதியானர் வசிக்கும் தெருக்களிலும், இந்து கோயில்களிலும், செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அப்படி செல்வதாக இருந்தால் தீட்டுபட்டுவிடுமாம். இவர்கள் அங்கிருந்த பண்ணையார்களுக்கும் நிலச்சுவான்தாரர்களுக்கும், ஜமீன்தார்களுக்கும் அடிமைகளாகவும், கூலிகளாகவும், வேலை செய்து வந்தார்கள். 


திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்ட இனபெண்கள் அதிகம் இழிவுபடுத்தப்பட்டார்கள். அங்கிருந்த பெண்கள் மார்பை மறைக்க இரவிக்கை அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆண்கள் இடுப்புக்கு மேலும் முட்டுக்கு கீழும் ஆடை அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. தேவைப்பட்டால் வைக்கோல் பிரியை எடுத்து சுற்றிக்கொள்ள வேண்டும்.


திருவிதாங்கூர் சமஸ்தான மக்களுக்கு தலைவரி, தாலி வரி, வலை வரி, செக்கு வரி, ஏணிக்கு வரி, அரிவாளுக்கு வரி, மார்புக்கு வரி, குடுவைக்கு வரி என்று பலவகை வரிகளை செலுத்தும்படி நிர்ப்பந்தப் படுத்தப்பட்டு இருந்தனர். இந்த வரிகளை செலுத்தாவிட்டால் குனிந்து நிற்கச்சொல்லி முதுகின்மேல் பாராங்கல்லை தூக்கிவைத்து வெயிலில் பலமணிநேரம் நிற்க வேண்டியதாயிருக்கும்.


சார்லஸ் மீட் ஐயர், கைக்குழந்தையுடன் ஒவ்வொரு திருச்சபைகளிலும், கிராமங்களிலும் சுவிசேஷ பணியை துவக்கினார். புதிய கிராமங்களில் சுவிசேஷம் அறிவித்து, அங்கு ஆராதனை குழுக்களை ஏற்படுத்தி உபதேசிமார்களை நியமித்தார்.


நாகர்கோவிலில் ரெசிடென்ட் அதிகாரி தங்கும் பங்களாவைவையும், தோட்டத்தையும் மிஷனெரிகள் பணிக்கு என்று இங்கிலாந்து ராணியிடம் தானமாகப் பெற்று, அங்கிருந்து நற்செய்தி பணியையும் கல்விப்பணியையும் செய்துவந்தார்.


நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் கிறிஸ்தவரை நீதிபதியாக நியமித்தால் வழக்குகள் நியாயமாக நடைபெறும் என்று ஆங்கிலேய கர்னல் மன்றோ, சார்லஸ் மீட் ஐயரின்  பெயரை இங்கிலாந்து ராணியிடம் பரிந்துரைத்தார்.  இது நல்லது என்ற கண்ட ராணி, சார்லஸ் மீட் ஐயரை மாவட்ட நீதிபதியாக நியமித்தார்.


சுவிசேஷப் பணியில் மத்தியிலும் நீதிபதியாக பணியாற்றுவது மிகுந்த சிரமமாக இருந்தாலும் கிறிஸ்துவுக்குள் மகிமையாகவும், மிகுந்த ஜெபத்துடனும் வழக்குகளுக்கு தீர்ப்பு கூறி மக்களின் பாராட்டை பெற்றார். அதுவரை கிறிஸ்தவர்களை அற்பமாக எண்ணிய உயர்சாதி இனத்தவர்கள், அதுமுதல் கிறிஸ்து மார்க்கத்திற்கு மதிப்புக் கொடுத்து, தங்கள் கிராமத்தில் வந்து கூட்டங்கள் நடத்த அழைப்பு கொடுத்தார்கள்.


சார்ஸ் மீட் ஐயர் வாரத்தில் ஒருநாள் உபதேசியார்களையும் ஆசிரியர்களையும் அழைத்து, வேதாகமத்தை பற்றியும் அடுத்த வாரம் நடத்தவேண்டிய பள்ளி பாடங்களை பற்றியும் பயிற்சி கொடுத்து இறைபணியையும் கல்விப்பணியையும் ஊக்கப்படுத்தினார். இதனால் சுமார் 3000 ஆத்துமாக்கள் கிறிஸ்து மார்க்கத்தில் புதிதாக இணைந்தார்கள்.


திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு இன்னும் அதிக மிஷனெரிகள் தேவை என்பதை உணர்ந்த சார்லஸ் மீட், 1820 ம் ஆண்டு இங்கிலாந்து சென்று அங்கிருந்த திருச்சபைகளில் இந்திய தேசத்திற்கு மிஷனெரிகள் தேவை என்று அறைகூவல் விடுத்தார். பின்னர் தனது மகனுக்கும் தனக்கு ஆதரவாக இருக்க கணவனை இழந்த ஒரு போதகரின் மகளை திருமணம் செய்து புதிதாக 5 மிஷனெரிகளுடன் கொல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.


மிஷனெரிகள் கிராமம் கிராமமாய் சென்று சுவிசேஷபணி செய்யவும், ஆராதனை நடத்தவும், உபதேசம் செய்யவும் மிகவும் சிரமப்பட்டார்கள். ஏனெனில பிரயாண வசதிகள் மிக குறைவாகவே இருந்தது. குதிரையிலோ அல்லது மாட்டு வண்டியலோ தான் செல்ல வேண்டும். ஆகவே ஒவ்வொரு சபைகளில் இருந்து நற்செய்திபணியில் ஆர்வமுள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கல்வியும் வேத அறிவு புகட்டி உபதேசியார்களாக நியமிக்க வேண்டும் என்று திட்டமிட்டு சார்லஸ் மீட் ஐயர் 1821 இல் நாகர்கோவிலில் வேதாகமக் கல்லூரி ஒன்றை நிறுவினார். இதில் தமிழும் ஆங்கிலமும் வேதாகமும் கற்றுக் கொடுக்கப்பட்டது.


இந்நிலையில் லண்டன் மிஷனெரி சங்கத்தின் மூலம் 1827 இல் நாகர்கோவிலில் 15 சபைகள், 7 உபதேசியார்கள், 1410 விசுவாசிகள், மற்றும் 36 பள்ளிக் கூடங்கள் இருந்தன. அப்படியே நெய்யூர் பகுதியில் 11 சபைகள், 16 உபதேசியார்கள்,  1441 விசுவாசிகள், மற்றும் 20 பள்ளிகள் இருந்தன. இந்த பள்ளிகூடங்களே ஏழைமக்களின் அறிவு கண்களை திறந்தது. இவர்கள் பொருளாதாரத்தில் வளருவதற்கு சார்லஸ் மீட் அச்சு கூடங்களையும், தரை ஓடுகள், கூரை ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளையும் ஏற்படுத்தி கொடுத்தார். 


கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்திற்கு செல்வதால் அன்று வேலைக்கு வர மாட்டோம் என்றும், விக்கிரக கோவிலில் வேலைகளுக்கும் வர முடியாது என்றும் கூறினார்கள். மிஷனெரிகளின் மனைவிமார்கள் அங்கிருந்த பெண்களுக்கு தையல் கலையை கற்றுகொடுத்து வேலைவாப்புகளை உறுவாக்கி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தினார்கள். கிறிஸ்தவ பெண்கள் இரவிக்கை தைப்பதை கற்றுக்கொண்டு மாராப்பு அணிந்து ஆலயத்திற்கு சென்றார்கள். இதற்கு காரணம் கிறிஸ்தவ மிஷனெரிகளும், திருச்சபைகளும் மற்றும் பள்ளிக்கூடங்களும்தான் காரணம் என்று பண்ணையார்கள் நினைத்தார்கள்.


ஆகவே உயர்சாதி பூசாரிகளின் தூண்டுதலின் பேரில் வன்முறையாளர்கள் தென்னை ஓலையினால் கட்டப்பட்டிருந்த  பள்ளிகூடங்களையும், கிறிஸ்தவ ஆலயங்களையும் தீ வைத்து கொளுத்தினார்கள். கிறிஸ்தவ பெண்களின் மேலாடைகள் கிழித்து அவமானப்படுத்தி, மிஷனரிகளையும், உபதேசியார்களையும், ஆசிரியர்களையும் பொது இடங்களில் வைத்து  அடித்து, சித்திரவதை செய்தார்கள். கிறிஸ்தவர்கள் ஆராதனைக்கு வருவதை தடுத்து நிறுத்தி, அவர்களை அடித்து விரட்டி, வேதப் புத்தகங்களை எரித்தார்கள். கிறிஸ்தவர்களின் உடைமைகளை சூரையிட்டும் தீயிலிட்டும் எரித்தார்கள். கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக பொய்யாக திருட்டு மற்றும் அடிதடி வழக்குகளை புனைந்து சிறையில் அடைத்தார்கள். 


இந்நிலையில் சார்லஸ் மீட் ஐயர் கிறிஸ்தவர்களுக்காக வழக்காடி சிறையிலிருந்தவர்களை விடுவித்தார். இவ்வாறு கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்து வரும் சார்லஸ் மீட் ஐயரை கொலை செய்ய திட்டம் தீட்டி, ஆயுதமேந்திய 300 பேர் கூடிவந்து  வீட்டை நொறுக்கினார்கள். இதை உதயகிரி கோட்டையில் ஆங்கிலேய கேப்டன் சிபால்ட் அறிந்து, உடனே ஒரு படையை அனுப்பி வன்முறை கும்பலை சிதறடிக்க செய்தார்.


ஒருமுறை தாழக்குடி என்னும் கிராமத்தில் இருந்த பண்ணையார், சாணார் இனத்தை சேர்ந்த ஒரு நிறை மாத கர்ப்பிணியையும், ஒரு காளை மாட்டையும் ஏரில் பூட்டி வயலை உழுதிட கட்டளையிட்டார். அவள் இயன்ற அளவு ஏரை இழுத்தாள். முடியாதபோது விழுந்தாள். விழுந்தவள் மீண்டும் எழும்பாமல் மரித்துப்போனாள். இதைக்கண்டு சார்லஸ் மீட் ஐயர் கொதித்துப்போனார். பெண்களின் உரிமைக்காகவும், தோல் சீலை அணிவதற்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தினார். இது 1822 ம் ஆண்டும் 1829 ம் ஆண்டும் கலவரமாக வெடித்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். மிஷனெரிகளின் கடும் போராட்டத்தினால் கீழ்சாதி பெண்களும் மேலாடை அல்லது இரவிக்கை அணியலாம் என்று திருவிதாங்கூர் சமஸ்தானம் சட்டத்தை இயற்றியது.


இந்த உபத்திரவத்திற்கு பிறகு, சார்லஸ் மீட் ஐயர் நெய்யூரில் தங்கியிருந்து மிஷனெரி பணி செய்து வந்தார். நெய்யூரில் 1831 ஆண்டு ஆலயம் கட்டப்பட்டது. அங்கு மாணவர்கள் தங்கி படிப்பதற்கு பள்ளிக்கூடமும் விடுதியும் நிறுவப்பட்டது.


இந்நிலையில் சார்லஸ் மீட் ஐயருடைய 3 குமாரர்கள் 1832, 1836, 1838 ம் ஆண்டுகளில் சீதோஷனநிலை சரீயில்லாத காரணத்தினால் ஒன்றன்பின் ஒன்றாக மரித்தார்கள். இது தாங்கமுடியாத துக்கத்தை கொடுத்தாலும் மிஷனெரிபணியை தொடர்ந்து ஊக்கமாக செய்துவந்தார்.


சார்லஸ் மீட் ஐயரின் வேண்டுகோளுக்கு ஏற்ப லண்டன் மிஷனெரி சங்கம்  1339 ம் ஆண்டு  மருத்துவ மிஷனெரி டாக்டர் ராம்சே என்பவரை அனுப்பி வைத்தார்கள்.  ஆகவே நெய்யூரில் மருத்துவமனை அமைக்கப்பட்டு, வியாதியஸ்தர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. இன்னும் அநேக மருத்துவ உதவியாளர்களை உறுவாக்க பயிற்சியும் தொடங்கப்பட்டது.  1840 ஆம் வருடத்தில் 1867 கிறிஸ்தவர்களும், நூறு உபதேசியார்களும்,  2703 பள்ளி மாணவர்களும், பதினெட்டு வேதாகம கல்லூரி மாணவர்களும் இருந்தார்கள்.


சார்லஸ் மீட் தனது இறுதி நாட்களில் ஏழை, தாய், தந்தை இழந்த பிள்ளைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் அநாதை பள்ளிகளுக்கும்,  அச்சு கூடங்களுக்கு  பொறுப்பாக திருவனந்தபுரத்தில் பணிபுரிந்தார். 1873 ஆம் ஆண்டு, ஜனவரி 13 ம் நாள் சார்லஸ் மீட் தனது 87 ம் வயதில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். இன்று தென் திருவித்தாங்கூர் மிஷனின் தந்தை என்று சார்லஸ் மீட் அழைக்கப்படுகிறார். இவருடைய புகழ்பெற்ற வாசகம்: இந்திய கிறிஸ்தவர்களோடு மரிப்பேன் அல்லது அவர்களோடு உயிரோடு இருப்பேன்.


1818 ஆம் ஆண்டு குளச்சல் துறைமுகத்தில் கையில் குழந்தையுடன் வந்திரங்கிய சார்லஸ் மீட் ஐயர் தமது 35 வருட மிஷனெரிபணி மூலம் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை நாகர்கோவிலில் சம்பாதித்தார்.  இன்று உலகம் முழுவதிலும் இந்த ஆத்மாக்கள் மிஷனெரிகளாக, சுவிசேஷகர்களாக, போதகர்களாக, வேதாகம பண்டிதர்களாக புறப்பட்டு சென்று கிறிஸ்துவின் வருகைக்கு அநேக ஆத்துமாக்களை ஆதாயம் படுத்தி வருகிறார்கள்.


இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற  உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக.




(நன்றி:- Gamaliel Bible College..)


Post a Comment

2 Comments

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. Wonderful and very challenging 💪. May God bless you brother 🙏

    ReplyDelete