யோசபாத் || அறிந்து கொள்வோம் பகுதி -77 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி -77


யோசபாத் 


யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் குமாரன். ஆசாவுக்கு  பிறகு ஆளுகைக்கு வந்தான் (2 நாளா. 17:1, 2)

கி. மு. 874 - கி. மு. 850 வரையில் 24 ஆண்டுகள் ஆளுகை செய்தான்.

2 நாளாகமம் 17-20 அதிகாரங்களில் யோசபாத்தை பற்றிய குறிப்புகள் உள்ளன.


யோசபாத்தின் சீர்திருத்தங்கள்


இவன் தேசமெங்கும் இருந்த விக்கிரகங்களை அழித்தான், ஆனால் தூபம் காட்டப்படும் மேடைகள் அழிக்கப்படவில்லை. (1 இரா.22:43).

இவன் தனது ஆளுகையின் 3-ம் ஆண்டில் தேசமெங்கும் லேவியர்களை அனுப்பி அவர்கள் மக்களுக்கு நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும்படி செய்தான் (2 நாளா. 17:7-9). 

இவனுடைய ஆளுகை காலத்தில் இஸ்ரவேல் ராஜ்யம் எங்கும் சமாதானம் நிலவியது. தேசம் செழிப்பான நிலையை அடைந்தது.


யோசபாத்தின் தவறான  உறவும் உடன்படிக்கையும்.


இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபுடன் நட்பும் உடன்படிக்கை செய்துகொண்டது இவன் செய்த மிகப் பெரிய தவறாக இருந்தது.சீரியருக்கு எதிரான போரில் இவன் ஆகாபுக்குத் துணையாகச் சென்றான். இந்தப் போரில் ஆகாப் கொல்லப்பட்டான். ஆனால் யோசபாத் உயிர்தப்பி  பிழைத்தது பெரிய காரியமாக இருந்தது (1 இரா. 22:1-33).

இதைக் குறித்துத் தீர்க்கதரிசியாகிய யெகூ யோசபாத்தைக் மிகவும் கடிந்துகொண்டான் (2 நாளா. 19:1-3).


யோசபாத் உடனடியாக தேசமெங்கும் சுற்று பயணமாகச் சென்று மக்களைத் தேவனிடம் திருப்பும் வேலையில்  ஈடுபட்டான். தலைவர்களைக் கூட்டி ஆலோசனைகூறியபோது "உத்தமனுக்குக் கர்த்தர் துணை” என்று அவன் அறிவித்தான் 

(2 நாளா. 19:11).


வடக்கு ராஜ்ஜியத்தோடு தோழமை


இவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய அகசியாவுடன் சேர்ந்து வாணிபம் செய்யும்படி ஏசியோன் கேபேரில் கப்பல்களைச் செய்வித்தான். ஆனால் அவை உடைந்துபோயின.

 (2 நாளா. 20:35-37).

பிறகு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமுடன் சேர்ந்து, மோவாபியருக்கு எதிராகப் போரிட்டு அவர்களை முறியடித்தான். ஆனால் மோவாபிய ராஜாவாகிய மேசா தன்னுடைய முதல் குமாரனைப் பலியிடுவதைக் கண்டு கோபத்துடன் திரும்பி விட்டார்கள்.

 (2 இரா. 3:4-27).


யோசபாத்திற்க்கு  விரோதமான போர்


"மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்" (2 நாளா. 20:1).


யோசபாத் நாட்டு மக்கள் எல்லோரும் உபவாசித்து ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டான். யோசபாத் கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்தில் நின்று ஜெபித்தான்.

(2 நாளா. 20:6-12).

அப்போது அந்த யுத்தம் அவர்களுடையது அல்ல, கர்த்தருடையது என்ற வாக்கு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.போருக்குச் சென்றபோது தேவனைத் துதிக்கும் பாடகர்கள் முதலில் அனுப்பப்பட்டார்கள். அப்போது யூதாவை எதிர்த்துவந்த எதிரிகள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு அழிந்துபோகும்படி தேவன் கிரியை செய்தார். ஒருவரும் தப்பவில்லை.அவர்களுடைய ஆடைகளையும், ஆயுதங்களையும் மூன்று நாட்கள் கொள்ளையிட்டார்கள். மக்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, அந்த இடத்துக்கு "பெராக்கா"என்று பெயரிட்டார்கள்.

இதற்குப் பிறகு அதுவரை 25 ஆண்டுகள் ஆளுகைசெய்திருந்த யோசபாத் மரித்துப் போனான்.அவனுடைய இடத்தில் அவனுடைய குமாரன் யோராம் ஆளுகைக்கு வந்தான். (1 இரா.22:50)


யோசபாத் தன் முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடினான் என்ற நற்சாட்சி இவனைக் குறித்துக் உள்ளது.

(2 நாளா. 22:9).


Post a Comment

0 Comments