ஜெபத்தை குறித்த இயேசுவின் உபதேசம்

 

ஜெபத்தை குறித்த இயேசுவின் உபதேசம்

(மத்தேயு சுவிசேஷம்) 



1. எப்படி ஜெபிக்க கூடாது


நீயோ ஜெபம்பண்ணும்போது 

மத் 6 : 5-8


      கிறிஸ்துவின் சீஷர்கள் எல்லோருமே ஜெபம்பண்ணவேண்டும். அவர்கள் ஜெபம்பண்ணவேண்டுமென்று இயேசுகிறிஸ்து வலியுறுத்தவில்லை. ஏனெனில் ஜெபிப்பது விசுவாசியின் கடமை. அவர்கள் ஜெபம் பண்ண வேண்டிய விதத்தை இங்கு தெளிவுபடுத்துகிறார். 


சுவாசம் இல்லாத மனுஷன் ஜீவனில்லாதவன். அதுபோல ஜெபிக்காத மனுஷன் ஜீவனுள்ள விசுவாசியல்ல. ஜெபம் இல்லையென்றால் நமது ஜீவியத்தில் தேவனுடைய கிருபையிராது. 


நமது ஜெபத்தில் இரண்டுவிதமான தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.  ஒன்று வீண் பெருமை மற்றொன்று வீண் வார்த்தைகளை அலப்புவது. 


நாம் ஜெபம்பண்ணவேண்டிய முறையைக்குறித்து இயேசுகிறிஸ்து தமது வியாக்கியானத்தைக் கூறுகிறார்.


மனுஷர் காணும்படியான ஜெபம்


அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 6:5).


நமது ஜெபத்தில் வீண் வார்த்தைகளை அலப்பக்கூடாது. மனுஷர் காணவேண்டுமென்று பெருமைக்காக ஜெபம்பண்ணக்கூடாது. மனுஷர் நம்மை புகழவேண்டும் என்று ஜெபிப்பதினால் நமக்கு எந்தவிதமான பிரயோஜனமுமில்லை.  இயேசுகிறிஸ்து மாயக்காரரைப்பற்றி இங்கு குறிப்பிடுகிறார். அவர்கள் மனுஷர் காணும்படியாக ஜெபிக்கிறார்கள். தங்களை சுற்றிலும் இருப்பவர்கள் தங்களை புகழவேண்டுமென்று அலங்காரமான வார்த்தைகளையும், சாதுரிய வார்த்தைகளையும்  தங்கள் ஜெபத்தில் பயன்படுத்துகிறார்கள். அவர்களுடைய ஜெபம் கர்த்தரை நோக்கி ஏறெடுக்கப்பட்டாலும் அவர்களுடைய கண்களோ பூமியை நோக்கியே பார்க்கிறது. அவர்களுடைய இருதயம் கர்த்தரைப் பார்க்காமல் மனுஷரை நோக்கிப்பார்க்கிறது. 


மாயக்காரர்கள் ஜெபம்பண்ணுவதற்காக தங்களுக்கு சாதகமான ஸ்தலங்களை தேர்வு செய்கிறார்கள். ஜெபாலயங்கள், வீதிகள், சந்திகள் ஆகியவை மாயக்காரர் ஜெபம்பண்ண விரும்பும் ஸ்தலங்களாகும். ஜெபாலயத்தில் மற்றவர்களோடு சேர்ந்து பொதுவான ஜெபங்களை ஏறெடுக்கலாம். ஆனால் அங்குள்ள கூட்டத்திற்கு நடுவில் தனிப்பட்ட முறையில் ஜெபிப்பது கடினம். அதுபோலவே வீதிகளில் ஜெபம்பண்ணும்போது அங்கு ஜனக்கூட்டம் அதிகமாக இருக்கும்.  இவர்களுக்கு நடுவில் நமது இருதயத்தை தேவனுக்கு நேராக திருப்புவது கடினம். ஆனால் மாயக்காரரோ இப்படிப்பட்ட இடங்களில் ஜெபிக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள்.


 கர்த்தர் தங்களுடைய ஜெபத்தைக் கேட்காவிட்டாலும் மனுஷர் தாங்கள் ஜெபம்பண்ணுவதை காணவேண்டுமென்று விரும்புகிறார்கள். 


மாயக்காரர் ஜெபம்பண்ணும்போது நின்று கொண்டு ஜெபிக்கிறார்கள். நின்றுகொண்டு ஜெபிப்பதில் தவறொன்றுமில்லை. வேதாகமத்திலும் நின்று கொண்டு ஜெபிப்பது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் தேவனுக்கு முன்பாக முழங்கால் படியிட்டு ஜெபிக்கும்போது அங்கு நமது தாழ்மையும் பயபக்தியும் வெளிப்படுகிறது. நின்று கொண்டு ஜெபிக்கும்போது நமது பெருமை வெளிப்படுகிறது. 

பரிசேயன் ஒரு சமயம்   நின்றுகொண்டு  ""தேவனே, நான் பறிகாரர், அநியாயக்காரர், விபச்சாரக்காரர் ஆகிய மற்றமனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். வாரத்தில் இரண்டு தரம் உபவாசிக்கிறேன். என் சம்பாத்தியத்திலெல்லாம்  தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்'

 (லூக் 18:11,12). 


ஆனால் அந்த பரிசேயனின் ஜெபம் அங்கீகரிக்கப்படவில்லை. இவன் தன் ஜெபத்தினால் நீதிமானாக்கப்படவில்லை. ஏனெனில் தன்னை உயர்த்துகிறவன் எவனும் தாழ்த்தப்படுவான். தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். 


பொதுவான இடங்களில் ஜெபம்பண்ண விரும்புவது மாயக்காரரின் பெருமையை வெளிப்படுத்துகிறது. இவர்கள் தேவனிடத்தில் ஜெபிக்க விரும்பவில்லை. தங்களுடைய சுயநலத்திற்காக ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்தில் ஜெபிக்க விரும்புகிறார்கள். தங்களை எல்லோரும் கவனிக்கவேண்டுமென்று பொது இடங்களில் ஜெபிக்கிறார்கள். தேவன் தங்களை பார்க்காவிட்டாலும் மனுஷர் தங்களை பார்க்கவேண்டுமென்று விரும்புகிறார்கள். தேவன் தங்களுடைய ஜெபத்தை அங்கீகரிக்காவிட்டாலும் மனுஷர் தங்களுடைய ஜெபத்தைக் கேட்டு தங்களை அங்கீகரிக்கவேண்டும் என்பது இவருடைய விருப்பம். மனுஷர் தங்களை போற்றவேண்டும், புகழவேண்டும். இதற்காகவே மாயக்காரர் வீதிகளிலும் சந்திகளிலும் நின்று ஜெபிக்கிறார்கள். 


 


மாயக்காரர் தங்கள் பலனை அடைந்து தீர்ந்துவிட்டார்கள். வீதிகளிலும் சந்திகளிலும் ஜெபிக்கும்போது மனுஷர் தங்களை அங்கீகரித்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அதுவே இவர்கள் எதிர்பார்க்கிற பலன். பொது இடங்களில் ஜெபிக்கும்போது இவர்களுக்கு நிச்சயமாகவே மனுஷர் மூலமாக இந்த பலன் கிடைக்கிறது. ஆனால் தேவன் இவர்களுக்கு பதில் கொடுப்பதில்லை. 


மனுஷர் நம்மை எவ்வளவுதான் புகழ்ந்தாலும் கர்த்தர் நம்மைப் பார்த்து நல்ல வார்த்தைகளை கூறவேண்டும். நல்லது, உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என்று கர்த்தர் நம்மைப் பார்த்து அழைக்கவேண்டும். இதுதான் மெய்யான ஆசீர்வாதம். மனுஷர் நம்மை பக்திமான் என்று கூறுவதினால் நமக்கு ஒரு பயனுமில்லை. ஆனால் மாயக்காரரோ மனுஷர் தங்களை பெருமையாக பேசவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். தேவனுக்கும் நம்முடைய ஆத்துமாவிற்கும் இடையில் நடைபெறும் சம்பாஷணையை யாராலும் பார்க்கமுடியாது. நமது இருதயத்திலிருக்கும் எண்ணங்களை தேவனிடத்தில் தெரியப்படுத்துவதே மெய்யான ஜெபம்.  ஆகையினால் தனிமையான இடத்தில்  தேவனுடைய சமுகத்தில் நமது இருதயத்தை ஊற்றி ஜெபிப்பதே ஆசீர்வாதமாக இருக்கும். 


அந்தரங்க ஜெபம்


நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்தி-ருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்  (மத் 6:6). 


எல்லா விசுவாசிகளும் தனி ஜெபம் ஏறெடுக்கவேண்டும். இது விசுவாசிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள கடமை. நாம் ஜெபாலயங்களிலும், வீதிகளிலும், சந்திகளிலும் ஜெபம்பண்ணுவதற்குப் பதிலாக பூட்டப்பட்டுள்ள அறையில் ஜெபிக்கவேண்டும். நாம் ஜெபிக்கும் இடம் தனிமையானதாக இருக்கவேண்டும். மற்றவர் பார்க்கவேண்டுமென்று ஜெபிக்காமல் தேவன் நம்மை பார்க்கவேண்டுமென்று ஜெபிக்கவேண்டும். 


அமைதியான இடம் ஜெபம்பண்ணுவதற்கு ஏற்ற ஸ்தலம். ஈசாக்கு சாயங்கால வேளையிலே ஜெபம்பண்ண வெளியிலே (வயலிலே) போனான்              (ஆதி 24:63).


 இயேசு கிறிஸ்து அதிகாலையில்  மலைப்பகுதிக்கு சென்று ஜெபித்தார். 


பேதுரு மேலறையில் ஜெபித்தார்.  


நாம் எந்த இடத்தில் ஜெபிக்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் ஜெபிக்கும் இடம் தேவனுக்கும் நமக்கும் இடையே உள்ள ஐக்கியத்தை உணரக்கூடிய இடமாக இருக்க வேண்டும். தேவனுடைய சமுகத்தை நெருங்கிச் சேருவதற்கு  உதவிபுரியும் ஸ்தலமாக இருக்க வேண்டும்.  நமது ஜெபத்தை ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்னும் அவசியமில்லை. கர்த்தர் நமது ஜெபத்திற்கு பதில் தருகிறாரா என்பதே முக்கியம். 


 சிலருக்கு ஜெபம்பண்ண தனிமையான இடம் இருக்காது. மற்றவர்கள் மத்தியில்தான் ஜெபிக்கவேண்டிய சூழ்நிலையில் இருப்பார்கள். இப்படிபட்ட சூழ்நிலையிலும் நாம் தேவனிடத்தில் மாத்திரமே ஜெபிக்கவேண்டும். நாம் ஜெபிப்பதைப் பார்த்து மனுஷர் நம்மை ஏளனம் செய்வார்களோ என்று கவலைப்படக்கூடாது. நாம் மனுஷருக்காக ஜெபிக்கவில்லை. நமக்காக கர்த்தரிடத்தில் ஜெபிக்கிறோம். ஆகையினால் ஜெபிப்பதற்கு முடிந்தவரையிலும் தனிமையான இடமாக இருப்பது நமக்கு நல்லது. தனிமையான இடமில்லையென்றால், இருக்கும் இடத்தில் கருத்தோடு ஜெபிக்கலாம்.  


நாம் ஜெபம்பண்ணும்போது நமது அறைவீட்டிற்குள் பிரவேசித்து, நமது கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற நமது பரலோகப்பிதாவை நோக்கி ஜெபம்பண்ணவேண்டும். அவர் அந்தரங்கத்தில் பார்க்கிறவர். நமது பரலோகப்பிதா நமக்கு வெளியரங்கமாய் பலனளிப்பவர். பரிசேயர்கள் தேவனிடத்தில் ஜெபிப்பதற்குப் பதிலாக மனுஷரிடத்தில் ஜெபித்தார்கள். நாம் தேவனிடத்தில் ஜெபித்தால் போதுமானது. அவரை நமது பரலோகப்பிதாவாக நினைத்து அவரிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டும்.  அவர் நமது ஜெபத்தைக்கேட்டு ஜெபத்திற்கு பதில் கொடுக்க ஆயத்தமாகயிருக்கிறார். அவர் கிருபை நிறைந்தவர். இரக்கமுள்ளவர். நம்மீது அன்பாக இருக்கிறவர். அவர் அந்தரங்கத்தில் இருக்கிறவர். நமது அறைவீட்டிற்குள் பிரவேசித்து நமது கதவை பூட்டும்போது அங்கு நம்மைத்தவிர வேறு மனுஷர் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் நமது பரலோகப்பிதா அங்கும் நம்மோடுகூட இருக்கிறார். பொதுவான இடங்களில் இருப்பதைவிட நமது பரலோகப்பிதா அந்தரங்கத்தில் நமக்கு மிகவும் அருகாமையில் இருக்கிறார். 


நமது பரலோகப்பிதா அந்தரங்கத்தில் பார்க்கிறார். நாம் அந்தரங்கத்தில் ஜெபிக்கும்போது திடீரென்று அங்கு வந்து நம்மை பயமுறுத்தமாட்டார். நாம் ஜெபிக்கும் வேளையில் அவர் நம்மோடு கூட இருந்து நமது ஜெபத்தை கவனித்துக் கேட்கிறார். நமது பரலோகப்பிதா அந்தரங்கத்தில் பார்க்கிறவராக இருந்தாலும் நமக்கு வெளியரங்கமாக பலனளிக்கிறார். நாம் ஜெபிக்கும்போது தேவன் கொடுக்கும் பலனை இழந்துபோகக்கூடாது. அவர் தமது கிருபையினால் நமக்கு பலனளிக்கிறார். தமது கிருபையை நமக்கு கடனாக கொடுக்கவில்லை. அதை இலவச ஈவாக கொடுக்கிறார். தேவன் நமது அந்தரங்க ஜெபங்களுக்கு நம்மை வெளியரங்கமாக ஆசீர்வதித்து, தம்முடைய அன்பையும், கிருபையையும், இரக்கத்தையும், வல்லமையையும் வெளிப்படுத்துகிறார். 


வீண்வார்த்தைகளை அலப்பும் ஜெபம்


அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும் போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்  , (மத் 6:7).


நமது ஜெபத்தில் வீண் வார்த்தைகளை அலப்பக்கூடாது. ஜெபம் என்பது நமது ஆத்துமாவை தேவனுக்கு நேராக உயர்த்தி, நமது இருதயத்தை கர்த்தருடைய சமுகத்தில் ஊற்றுவதாகும். 


ஆயினும் ஜெபத்தில் வார்த்தைகளுக்கும் முக்கியமான பங்குள்ளது. நாம் மற்றவர்களோடு இணைந்து ஜெபிக்கும்போது வார்த்தைகளை பயன்படுத்துவது அவசியம். நாம் தனியாக ஜெபித்தாலும், மற்றவர்களோடு சேர்ந்து ஜெபித்தாலும் வீண் வார்த்தைகளை அலப்பக்கூடாது. பக்தியான வார்த்தைகளைச் சுருக்கமாகப் பயன்படுத்தவேண்டும். 


நாம் ஜெபிக்கும்போது வீண் வார்த்தைகளை அலப்புவது உதடுகளின் பிரயாசம் மாத்திரமே. இயேசுகிறிஸ்து அடிக்கடி ஜெபம்பண்ணுவதை தடைபண்ணவில்லை.   நமது ஜெபத்தில் வீண் வார்த்தைகளை அலப்புவதையே தடைபண்ணுகிறார். இயேசுகிறிஸ்து ஜெபித்தபொழுது சில சமயங்களில் ஏற்கெனவே பயன்படுத்திய வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார். ""இயேசு மறுபடியும் தமது சீஷர்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்'' (மத் 26:44). அதே வார்த்தைகளை சொல்லி ஜெபம்பண்ணும்போது இயேசுகிறிஸ்து மிகவும் வியாகுலப்பட்டு அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் தரையிலே விழுந்தது (லூக் 22:44).


நாம் அதிக வார்த்தைகளை பயன்படுத்தும்போது சில சமயங்களில் நமது கருத்தையே       மறந்துவிடுகிறோம். நாம் நினைப்பது ஒன்றும் சொல்லுவது ஒன்றாகவும் இருக்கும். நமது கருத்தை சுருக்கமான வார்த்தைகளால் வெளிப்படுத்துவது மிகவும் நல்லது. அதிகமான வார்த்தைகளினால் தேவனை பிரியப்படுத்தலாம் என்று நினைக்கிறோம். ஆனால் அதிக வார்த்தைகள் தேவனைப் பிரியப்படுத்தாது.


கருத்தான ஜெபமே தேவனுக்கு பிரியமானது. ஞானிகளும் அதிக வார்த்தைகளை விரும்புவதில்லை


நாம் ஜெபத்தில் அதிக வார்த்தைகளை பயன்படுத்தும்போது நாம் பேசின வார்த்தைகளை நாமே கேட்டு சந்தோஷப்பட விரும்புகிறோம். நமது ஜெபம் நமக்கு பிரியமானதாக இருக்கவேண்டும் என்பதே நமது எண்ணம். நமக்கு பிரியமானபடி ஜெபம்பண்ணுவதற்குப் பதிலாக தேவனுக்கு பிரியமானபடி ஜெபம்பண்ணவேண்டும். 


அதிக நேரம் ஜெபம்பண்ணுவது தடைபண்ணப்படவில்லை. ""இயேசுகிறிஸ்து ஒரு சமயம் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின் மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்'' (லூக் 6:12). 


அதிக நேரம் ஜெபம் பண்ணுவது நல்லது. ஆனால் அதிக நேரம் ஜெபம்பண்ணவேண்டும் என்பதற்காக நமது ஜெபத்தில் வீண் வார்த்தைகளை அலப்பிக்கொண்டிருக்கக் கூடாது. நாம் எப்போதும் ஜெபம்பண்ண வேண்டும். ஜெபத்தின் வார்த்தைகளைவிட நமது இருதயத்தின் நினைவுகளே முக்கியமானது.


அஞ்ஞானிகள் என்பவர்கள் புறஜாதியார்கள். இவர்கள் தங்கள் ஜெபங்களில் வீண் வார்த்தைகளை அலப்புகிறார்கள். புறஜாதியாரின் ஆராதனையைப்போல கர்த்தருடைய ஆராதனை இருக்கக்கூடாது. புறஜாதியாரின் தெய்வத்தையும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரையும் ஒரே மாதிரியாக நினைக்கக்கூடாது. ஏராளமான வார்த்தைகளைக் கூறி விளக்கினால்தான் நமது ஜெபம் கர்த்தருக்கு புரியும் என்று நினைக்கக்கூடாது. அதிக வார்த்தைகளை ஜெபத்தில் பயன்படுத்தினால்தான் கர்த்தர் நமது ஜெபத்திற்கு பதில்கொடுப்பார் என்பது தவறான எண்ணம். உதடுகளின் பிரயாசம் நல்ல பிரயாசமாக இருந்தாலும் அது பிரயோஜனமற்றது. உதடுகளின் ஊழியத்தினால் பயன் உண்டாவதில்லை. 


தேவன் நமது தேவையை அறிவார்


அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார் (மத் 6:8).


நமது தேவன் சர்வ ஞானமுள்ளவர். அனைத்தும் அறிந்தவர். நாம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்வதற்கு முன்பாகவே அவர் நம்முடைய தேவைகளை அறிந்திருக்கிறார். ஆகையினால் அதிக வசனிப்பினால் நாம் ஜெபம்பண்ணினால் மாத்திரமே கர்த்தர் கேட்பார் என்று நினைக்கக்கூடாது. நமது ஜெபத்தில் வீண் வார்த்தைகளை அலப்பவேண்டியதில்லை.  இதற்காக நாம் ஜெபிக்கக்கூடாது என்று முடிவு பண்ணிவிடக்கூடாது. நாம் கர்த்தரிடத்தில் ஜெபிக்க வேண்டும். நமது ஜெபத்தை கர்த்தர் விரும்புகிறார். கர்த்தரிடத்தில் ஜெபிப்பது நமது கடமை. நமது தேவைகளை கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டும். நமது ஆத்துமாவை தேவனுக்கு நேராக உயர்த்தி நமது இருதயத்தை அவருடைய சமுகத்தில் ஊற்றவேண்டும். கர்த்தர் தமக்கு சித்தமானதை நம்முடைய வாழ்வில் நிறைவேற்றட்டும் என்று பொறுமையோடு கர்த்தருடைய சமுகத்தில் காத்திருக்கவேண்டும். 


நமது ஜெபத்தை  கேட்கிற தேவன் நமது பரலோகப்பிதாவாக இருக்கிறார். பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் ஏராளமான வார்த்தைகளைப் பேசினால்தான் தங்களுக்கு தேவையானவற்றை அவர்கள் கொடுப்பார்கள் என்று நினைக்கக்கூடாது. நமது பெற்றோரிடம் நாம் அதிக வார்த்தைகளை பேச வேண்டிய அவசியமில்லை. நமது இருதயம் பெற்றோர் மீது அன்பாகவும் மரியாதையாகவும் இருக்கவேண்டும். நாம் பிதாவின் ஆசீர்வாதங்களுக்கு சுதந்தரவாளிகளாக இருக்கிறோம். பரலோகத்தின் தேவனை ""அப்பா, பிதாவே'' என்று அழைக்கும் சிலாக்கியத்தை பரிசுத்த ஆவியானவர் மூலமாக நாம் பெற்றிருக்கிறோம். 


நம்முடைய தேவைகளைப்பற்றி நமக்கு தெரிவதைவிட நமது பரலோகப்பிதாவிற்கு நன்றாக தெரியும். நமக்கு என்ன தேவை என்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார். நாம் கூப்பிடுகிறதற்கு முன்பே நமது பரலோகப்பிதா  நமக்கு மறு உத்தரவு கொடுப்பார். நாம் பேசும்போதே அவர் கேட்பார்

 (ஏசா 65:24). 


 நாம் வேண்டிக்கொள்கிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்ய அவர் வல்லவராக இருக்கிறார் (எபே 3:20). 


ஆகையினால் தேவனுடைய சமுகத்தில் விண்ணப்பம் பண்ணும்போது நம்மைப்பற்றி அதிகமான வார்த்தைகளை பயன்படுத்தி ஒரு விரிவான அறிமுகம் செய்து வைக்கவேண்டும் என்னும் அவசியமில்லை. நம்மைப்பற்றி நமக்குத் தெரிவதைவிட நமது தேவனுக்கு நன்றாகத் தெரியும். பரிசுத்த ஆவியானவர் நமக்காக பரிந்து பேசுகிறார். ஏராளமான வார்த்தைகளைவிட வாக்குக்கடங்காத பெருமூச்சுக்கள் வல்லமையுள்ளவை. பரிசுத்த ஆவியானவர் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியது இன்னதென்று   அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெரு மூச்சுக்களோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் 

(ரோம 8:26).  




கூடுதல் தகவல் :


மத்தேயு 5-7 ஆகிய அதிகாரங்களில் தேவனைப் பற்றி கூறப்பட்டிருக்கிற சத்தியங்கள்


    1. தேவனை தரிசிக்க முடியும். (மத் 5:8)


 2. நாம் ஜெபம் பண்ண வேண்டிய விதம் மத் 6 : 9-15


    2. சமாதானம் பண்ணுகிறவர்களைத்   தேவன் நேசிக்கிறார். (மத் 5:9)


    3. பரமண்டலங்களில் தேவன் வாசம் பண்ணுகிறார்.

 (மத் 5:16,34-48; மத் 6:9)


    4. மனுஷருடைய நற்கிரியைகளினால் தேவன் மகிமையடைகிறார்.(மத் 5:16)


    5. அவர் தீயோரையும், நல்லோரையும் ஆசீர்வதிக்கிறார்.  (மத் 5:45)


    6. தேவன் பூரண சற்குணர்.

 (மத் 5:48)


    7.  தேவன் கீழ்ப்படிதலுக்கு வெகுமதி அளிக்கிறார்.

 (மத் 6:1-6,18).


    8. அவர் சர்வஞானி 

(மத் 6:4,6,8,18,32)


    9. எல்லா பாவங்களையும் மன்னிக்கிறார். (மத் 6:12-15)


    10. கீழ்ப்படிகிற அனைவருக்கும் அவர் பிதாவாக இருக்கிறார்.

 (மத் 5:44-48;மத் 6:4,6, 8-15,33; 

 மத் 7:7-11,13-23).


    11. அவர் மாய்மாலத்தைத் வெறுக்கிறார். (மத் 6:1-8,16-18; 

மத் 7:1-5)


    12. அவர் எல்லா ஜெபங்களையும் கேட்கிறார்.

 (மத் 6:6,33; மத் 7:7-11)


    13.  தேவன் ஒரு ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பார். பூமியில் அவருடைய சித்தம் நிறைவேறும். (மத் 6:10,33)


    14.  அவருடைய பராமரிப்பு அனைவருக்கும் உரியது.

 (மத் 6:11-25)


    15. தேவன் தீமையினின்று  இரட்சித்துக் கொள்வார்.

 (மத் 6:13,33; மத் 7:11)


    16.  முழு இருதயத்தோடு செய்யப்படும் சேவையை அங்கீகரிப்பார். (மத் 6:24)


    17. அவர் நித்திய பிதா

 (மத் 7:7-11)


    18. அவர் எல்லாரையும் நியாயந்தீர்ப்பார். (மத் 7:21-23)

Post a Comment

1 Comments

  1. மிகவும் சிறப்பாக உள்ளது

    ReplyDelete