பரிசுத்த வேதாகமத்தின் வரலாற்றுச் சுருக்கம் - A Historical Summary of the Holy Bible - (Part -1)

 பரிசுத்த வேதாகமத்தின் வரலாற்றுச் சுருக்கம்

A Historical Summary of the Holy Bible

(Part -1)


நீண்ட காலம் பழைய ஏற்பாடு எபிரேய, அரமேய மொழிகளில் மட்டுமே தோல்சுருள்கள் வடிவில் இருந்தது. பிலடெல்பஸ் (Philadelphus) என்பவன் கிரேக்க நாட்டை ஆண்ட காலத்தில் (கி.மு.285-247)

 72 யூத அறிஞரைத் தேர்ந்தெடுத்துப் பழைய ஏற்பாட்டைக் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கும் பணியை ஒப்படைத்தான். அவர்கள் அப்பணியை 72 நாள்களில் செய்து முடித்தனர். இதனால் இதற்கு 'செப்துவஜின்த்' என்று பெயரிடப்பட்டது. (இச்சொல்லுக்கு ‘ எழுபத்திரண்டு' என்று பொருள்).


‘புதிய ஏற்பாடு' என்று முதன்முதலில் கருதப்பட்ட புத்தகத்திலிருந்தவை அப்போஸ்தலர் பவுலின் நிருபங்கள் மட்டுமே. பின்பு அருட்செய்தி நூல்கள் சேர்க்கப்பட்டன. கி.பி.369-இல் தான் 66 புத்தகங்களும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டன.


நீண்ட காலத்துக்கு அதாவது கி.பி.14-ஆம் நூற்றாண்டு

 வரை தூய வேதாகமம் ஆங்கிலத்தில் கூட மொழிபெயர்க்கப்படாமலிருந்தது. அதுவரை ‘வல்கேட்' என்றழைக்கப்பட்ட இலத்தீன் வேதாகமமாகவே இருந்தது. அதுமட்டுமல்ல வேதாகமத்தையோ அதன் பகுதிகளையோ மொழிபெயர்ப்பது சாவுக்கேதுவான தண்டனைக்குரிய செயலாகக் கருதப்பட்டது. அதையும் மீறிச் செய்தவர்களை அரசாங்கமே தண்டித்துத் துன்புறுத்தி வந்தது.


நாட்டுக்கு நல்லனவற்றைத் துணிவோடு செய்தவர்கள் அக்காலத்திலும் இருந்தனர். அவர்களுள் சிறப்பிடம் பெறுபவர் ஜான் விக்ளிப் என்ற பெரியார். இவர் 1382-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலத்தீன் மொழியில் இருந்த வேதாகமப் பிரதி ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவர் செய்தது 

பெருங் குற்றமென்று கருதப்பட்டதால் 1401-இல் கூடிய பாராளுமன்றம் இட்ட ஆணைப்படி அவர் வெளியிட்ட ஆங்கிலப் பிரதிகளை எரித்து அழிக்கவேண்டுமென்று ஆணையிட்டது. அடுத்த ஆணை, அவரையும் நெருப்பிலிட்டுச் சாகடிக்க வேண்டுமென்பது. ஆனால், அவரோ 1384-லேயே இறந்துவிட்டார். ஆனாலும், அவர்கள் ஆணையை நிறைவேற்றினர் எப்படி?

 1428ஆம் ஆண்டு அதாவது, அவர் இறந்து 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது கல்லறையைத் தோண்டி அவர் எலும்புகளைச் சுட்டெரித்தனர். ஆணையை நிறைவேற்றியதில் அவர்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.


மீண்டும் 1530-ஆம் ஆண்டு வில்லியம் திண்டேல் என்பவர் மீண்டும் வேதாகமத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இங்கிலாந்தில் இவருக்கு மிகுந்த எதிர்ப்பும் அதன் காரணமாக ஆபத்தும் இருந்தன. எனவே, தம்மைக் காத்துக்கொள்ள அவர் ஜெர்மனிக்கு விரைந்தார். அங்கு கூடன்பர்க் என்ற நகருக்குப் போனார். பின்பு வித்தன்பர்க்கில் மார்டீன் லுத்தரைச் சந்தித்தார். பின்பு அவர் கெலௌன்' என்ற ஊருக்குப் போனார். 150 ஆம் ஆண்டிலேயே அச்சுப்பொறி கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் அவ்வூரில் புதிய ஏற்பாட்டை வெளியிட்டார். அங்கிருந்த திருச்சபைத் தலைவர்கள் அப்பிரதிகளுள் பலவற்றைக் கைப்பற்றி எரித்துவிட்டனர். எனவே, மிகச் சில பிரதிகளே தப்பின. இவருக்கு இப்பணியில் மிகவும் உறுதுணையாக இருந்து அதே துணிவோடு செயல்பட்ட

நண்பர் திரு.ஜார்ஜ் ஜாய்ஸ் என்பவர் இவரது முயற்சியால் 1530 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதிய ஏற்பாட்டையும் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து ஆகமங்களையும் வெளியிட்டார். ஆனால் பிரதிகள் கைப்பற்றப்பட்டு எரித்துச் சாம்பலாக்கப்பட்டன.


வில்லியம் திண்டேல், அதன் பின்பு ஆன்ட்வெர் என்ற நகரில் கைதாகி 16 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார். 1536-ஆம் ஆண்டு அக்டோபர், 6 ஆம் நாளன்று அவரது கழுத்தை நெறித்துக் கொலைசெய்து அத்துடன் ஆத்திரம் தீராமல் நெருப்பிலிட்டு எரித்தனர். அவர் இறப்பதற்கு முன் செய்த சிறிய ஜெபம் 'ஆண்டவரே, இந்த இங்கிலாந்து மன்னனின் கண்களைத் திறந்தருளும்' என்பதாகும்.


காலம் மாறியது. கடவுள் மனிதர்களையும் மாற்றுகிறார். திண்டேலின் ஜெபம் கேட்கப்பட்டது. தூய ஆவியானவர் செயலாற்றினார். 1611-ஆம் ஆண்டு ஜேம்ஸ் என்ற இங்கிலாந்து மன்னன். வேதாகமத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஒரு குழுவை ஏற்படுத்தினான். அக்குழுவினரின் முயற்சியால் வேதாகமம் முழுவதும் மொழிபெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்டு விற்பனைக்கும் விடப்பட்டது. 

இதற்கு (King James Version) என்றும் Authorised Version என்றும் பெயர். 

இது பல்வேறு திருத்தங்களுக்குப் பிறகு 1764-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்குப் பின் அது திருத்தப்படவே இல்லை. ஆங்கில இலக்கியச் சுவை மிகுந்த இந்த மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள நாடுகளில் இன்றும் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டு வருகிறது. 

இஃது ஏற்றுக்கொள்ளப்பட்ட வாசகம் (Textus Receptus) என்ற ‘ஸ்தெபானோசின் மூலம்' என்று அழைக்கப்படும் மூலத்தை அடிப்படையாகக் கொண்டது.


வில்லியம் திண்டேல் இறந்த ஆண்டு 1536. மன்னன் ஜேம்ஸ் மொழிபெயர்ப்புக் குழு அமைத்த ஆண்டு 1611. இடைப்பட்ட காலத்தில் வேறு சில மொழிபெயர்ப்புகளும் வெளிவந்தன.


அகஸ்தீனியன் சந்நியாசி மைல்ஸ் கவர்டே என்பவர் தாம் வாழ்ந்த சமுதாயத்தை விட்டு வெளியேறி 1528-க்குப் பின் திண்டேல் மொழிபெயர்ப்புக்கு இணையான மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.


1537-ஆம் ஆண்டு தாமஸ் மத்தேயு என்பவரும் இப்பெரும்பணியைச் செய்து வேதாகம மொழிபெயர்ப்பை வெளியிட்டார். இது ஜான் ராஜெஸ் என்பவரின் புனைப் பெயராகும். கையெழுத்துப் பிரதிகளாக இருந்த திண்டேல் மொழிபெயர்த்த நூல்களையும் சேர்த்து வெளியிட்டார். 

‘மாபெரும் வேதாகமம்' (The Great Bible) என்ற பெயரில் 1539-இல் ஒன்றும் ‘ ஜெனிவா வேதாகமம்' என்ற பெயரில் 1560-இல் ஒரு வேதாகமமும் வெளிவந்தன.


இங்கிலாந்தை முதலாம் எலிசபெத் ஆண்ட போது கான்டர்பரியின் பிரதமப் பேராயராக இருந்த பேரருள் பெருந்திரு. மத்தேயு பார்க்கர் என்பவருக்கு முழு அதிகாரம் வழங்கவே

 ‘மாபெரும் வேதாகமம்' திருத்தி 1568-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதற்குப் பேராயர் வேதாகமம் (The Bishop's Bible) என்று பெயரிடப்பட்டது. 


இதற்கிடையில் ஆங்கிலேய ரோமன் கத்தோலிக்கச் சபையார் தங்கள் பங்குக்கு, அதுவரை வெளிவந்த வேதாகமப் பிரதிகளுக்கு ஈடாக ஒரு மொழிபெயர்ப்பை வெளியிட்டனர். இஃது அறிஞர் ஜெரோம் என்பவர் மொழிபெயர்த்த இலத்தீன் வல்கேட் என்ற மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. 


இதன் புதிய ஏற்பாடு 1578-இல் ரீம்ஸ் என்ற நகரிலும் பழைய ஏற்பாடு 1609-10 இல்

 ‘டியூஐ' வேதாகமம்

 (The Rheim Douai Bible) என்று பெயரிடப்பட்டது. இவற்றுக்குப் பின்னரே ‘மன்னர் ஜேம்ஸ் மொழியாக்கம்' வெளிவர ஏற்பாடுகள் நடந்தேறின.


இதுவரை சொல்லப்பட்டவை வேதாகம ஆங்கில மொழிபெயர்ப்புகள், உலகிலிருந்த மொழிகளுள் அடுத்தப்படியாக வேதாகமம் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இதைச் செய்தவர் மார்டீன் லுத்தராவார். இவர் காலத்திலும் இவர் நாட்டிலும் வேதாகமத்தை மொழிபெயர்ப்பது பெருங்குற்றமாகக் கருதப்பட்டது. எனினும் மார்டீன் லுத்தர் 1521-ஆம் ஆண்டு வொர்த்பர்க் கோட்டையில் தனித்து வாழ வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டது, அக்காலத்தை வீணாக்காமல் வேதாகமத்தைத் தம்முடைய தந்தை மொழியான ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். 

1522-ஆம் ஆண்டு புதிய ஏற்பாடு முழுவதையும் மொழிபெயர்த்து முடித்தார். 

1531-ஆம் ஆண்டு தீர்க்கதரிசன ஆகமங்களையும் மொழிபெயர்த்து முடித்தார்.

 1534-ஆம் ஆண்டு ஜெர்மன் மொழியில் முழுவேதாகமமும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.


 தமிழ் வேதாகமத்தின் வரலாற்றுச் சுருக்கம்


ஆசிய மொழிகளிலேயே தமிழ் மொழியில் தான் தூய வேதாகமம் முதன்முதலாக மொழிபெயர்க்கப்பட்டது. 

தமிழ் வேதாகமத்தின் புதிய ஏற்பாடு 1711-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 3ஆம் நாள் வெளிவந்தது. கடந்த 280 ஆண்டுகளில் 

புதிய ஏற்பாடு 9 முறையும் முழுவேதாகமம் 6 முறையும் திருத்தி எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. .


 முதல் முதலாகத் தமிழில் மொழிபெயர்த்தவர் பர்தலொமேயு சீகன்பால்கு என்பவர். இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அருட்பணியாளர். 

இவர் 1706-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் நாள் தஞ்சை மாவட்டத்திலுள்ள (தற்போது நாகை மாவட்டம்) தரங்கம்பாடியில் வந்து இறங்கினார். இவருடன் வந்த மற்றொருவர் புளுச்சோ ஆவர். இவர்களை வரவேற்றுப் பணியிலமர்த்த வேண்டிய டேனிஷ் அரசாங்கப் பிரதிநிதிகள் அவர்களை வரவேற்காமல் தொல்லைகள் தந்தனர். சிறையில் அடைத்துத் துன்புறுத்தினர். இதன் விளைவாகப் புளுச்சோ தாய்நாடு திரும்பிவிட்டார்.

ஆனால், சீகன்பால்கு மனந்தளராமல் ஆண்டவர் வழிநடத்துதலை உணர்ந்து வேதாகம மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொண்டார். 


சீகன்பால்கு பகல் நேரங்களைப் படிப்பதிலும் இயன்றவரை அருட்பணி செய்வதிலும் செலவு செய்தார். இரவு நேரங்களில் மொழிபெயர்ப்பு பணியைச் செய்து வந்தார். தமிழ் மொழியைக் கற்பதில் ஒரு நாளைக்கு ஏறக்குறைய பத்து மணி நேரம் செலவிட்டார்.



1708 ஆம் ஆண்டு அக்டோபர் 17ம் நாளன்று ஊக்கமான ஜெபத்துடன் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்கத் தொடங்கினார். 

இரண்டரை ஆண்டு மொழி பெயர்ப்புப் பணியில் ஆட்சியாளர்களின் நேர்மையற்ற குற்றச்சாட்டுகளுக்காக நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பகலா, இரவா என்று அறிந்துக் கொள்ள இயலாத சிறைச்சாலையிலும் தம் பணியைத் தொடர்ந்தார்.


முதன்முதலில் அவர் மொழிபெயர்த்து முடித்தது புதிய ஏற்பாடு தான். சீகன் பால்கு தமிழ்நாட்டுக்கு அளித்த மாபெரும் கொடை தூய வேதாகமமே.


1714-இல் அவர் ஐரோப்பாவுக்குப் பயணமானார். அவர் தம்முடன் மலையப்பன் என்ற தமிழரை அழைத்துச் சென்றார். அவர் உதவியுடன் ஆதியாகமம் தொடங்கி யோசுவா வரை மொழிபெயர்த்து முடித்தார்.


பற்பல இடங்களின் காரணமாகவும் சரியான உணவு இல்லாத காரணத்தாலும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆகவே, 1719-ஆம் பிப்ரவரி மாதம் 23-ஆம் நாள் ஆண்டவரின் திருவடியை அடைந்தார். அப்போது அவருக்கு வயது 37. அவருடைய சடலம் தரங்கம்பாடி புது எருசலேம் தெய்வாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர் 'ரூத்தின் சரித்திரம்' வரை மொழிபெயர்த்து முடித்திருந்தார்.


சீகன்பால்கு விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து செய்தவர் ஜெர்மனி யிலிருந்து வந்த அருட்பணியாளர் பெஞ்சமின் சூல்ச் ஐயராவார். சூல்ச் ஐயருக்குப் பிறகு ஜாண் பிலிப் பெர்ரீஷியஸ் என்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் இப்பணியில் ஈடுபட்டார். இதற்குப்பின்பு சென்னை சூளையில் தூய பவுல் ஆலயப் போதகராக பணியாற்றிய ஹென்றிபவர் என்பவரது கரத்தில் ஒப்படைக்கப்பட்டது. இவரது திருத்தப்பட்ட வேதாகமம் 1871-இல் வெளியிடப்பட்டது. இதற்கு ஐக்கிய மொழிபெயர்ப்பு என்று பெயர். இந்த மொழிபெயர்ப்பைத் தான் தற்போது பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


1939-ஆம் ஆண்டு, லார்சன் என்பவரால் திருத்தப்பட்ட வேதாகமம் மறுபடியும் திருத்தி வெளியிடப்பட வேண்டும் என்று வேதாகமச் சங்கம் முடிவெடுத்தது. எனவே, 

இப்பணியை C.H. மோனகன் என்ற போதகரிடம் சங்கம் ஒப்படைத்தது. இவருக்கு உதவிட ஏழுபேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இவரும் 'கடவுள்' என்னும் சொல்லையே பயன்படுத்தினார்.


மீண்டும் புதிய ஏற்பாட்டில் கவனம் செலுத்தவேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. எனவே இப்பணி பேராயர் C.G. டீல் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவருக்கு உதவிட ஐந்துபேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.


மோனகன் மொழிப்பெயர்ப்பில் வெளிவந்த வேதாகமப் பதிப்பில் பல அச்சுப் பிழைகள் காணப்பட்டன. மேலும், சில வசனங்கள் விடப்பட்டும் இருந்தன. எனவே, இந்திய வேதாகமச் சங்கம் இதனைத் திருத்தியமைக்கும் பணியை மறைத்திரு. 

தே. ராஜரீகம் என்பார் பொறுப்பில் விடப்பட்டது. இப்பணி நடந்து கொண்டிருந்தபோது திருத்தும் பணியை நிறுத்திவிட்டுப் புதிதாக மொழிபெயர்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

அதுவரை, வேதாகமத்தை மொழிபெயர்த்தவர் அத்தனை பேரும் வெளி நாட்டவராக இருந்தனர். முழு வேதாகமத்தையும் மொழிபெயர்த்த முதல் தமிழ்ப் போதகர் இவரே.


 இவரும் இவருக்கு உதவிட்ட குழுவினரும் சேர்ந்து புதிய ஏற்பாடு, சங்கீதம், நீதிமொழிகள், ரூத் ஆகியவை வெளியிடப்பட்டன. ராஜரீகம் தனிப்பட்டவராக முழுவேதாகமத்தையும் மொழிபெயர்த்து முடித்துவிட்டார். குழுவினராக எசேக்கியேல் புத்தகம் வரை இறுதி வடிவம் கொடுத்தனர்.


எசேக்கியேல் ஆகமத்துக் குழுவினர் இறுதிவடிவம் கொடுத்த பின்னர், தே. ராஜரீகம் அயராத ஓய்வற்ற உழைப்பால் குளத்தில் இரத்த நாளங்கள் வெடித்துச் செயலிழுந்து 1978-ஆம் ஆண்டு தம் 72ஆவது வயதில் இயற்கை எய்தினார். இவர் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் உழைத்தார். இவருடைய மொழிபெயர்ப்பில் பல சிறப்புத் தன்மைகள் உள்ளன.


கடைசியாக, வெளிவந்தது ‘திருவிவிலியம்' இதனை ஓர் இலக்கிய நூலாக்கும் எண்ணத்தோடு பழைய ஏற்பாட்டு நூல்களான 39 புத்தகங்களை மொழிபெயர்க்க அமர்த்தப்பட்டவர்கள் மொத்தம் 20பேர். புதிய ஏற்பாட்டை நகல் எடுத்தவர்கள் 18பேர். 


மொழிபெயர்ப்புப் பணி என்பது ஒரு தொடர்கதை……..


Post a Comment

0 Comments