வேதத்தில்பெயர் சொல்லப்படாத பெண்கள் (பகுதி -2) (Anonymous Women's in the Bible)

 Anonymous Women's in the Bible 

வேதத்தில்பெயர் சொல்லப்படாத பெண்கள்


(பகுதி -2)


2. போத்திபாரின் மனைவி


(ஆதி 39:1-20)


போத்திபார் மனைவியின் பெயர் என்னவென்று வேதம் நமக்கு அறிவிக்கவில்லை. இவள் ஓர் எகிப்தியப் பெண். இவள் கணவன் போத்திபார் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய பிரதானியும், தலையாரிகளுக்கு அதிகாரியுமாயிருந்தான். இப்படிப்பட்ட பெரிய பதவியில் இருந்த அவனுடைய மனைவிக்கே கர்த்தருக்குப் பயப்படும் பயம் இல்லை. ஆடு மேய்க்கும் தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பை எகிப்து தேசத்தை அரசாளவும், அதற்காகப் பயிற்றுவிக்கப் படவும் போத்திபார் வீட்டுக்குக் கொண்டுவருவது தேவனுடைய திட்டமாய் இருந்தது. தேவனுடைய திட்டம் நிறைவேற தன் சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டு குழியில் தள்ளிவிடப்பட்ட யோசேப்பை விலைக்கு வாங்கிய இஸ்மவேலரான, மீதியானிய வணிகர் எகிப்து தேசத்தில் போத்திபாரிடம் கொண்டுவந்து விற்றனர். இந்த யோசேப்பு என்ற வாலிபன் அழகும், சௌந்தரியமும் உள்ளவனாய் இருந்தான். கர்த்தருடைய தீர்மானத்தின்படி பலவகை நிர்வாகங்கள் நிறைந்ததும் புதியதுமான கலாச்சாரத்துக்குள் வந்து சேர்ந்தான்.


யோசேப்பை போத்திபார் கண்டவிதம் வேறு. அவனு டைய மனைவி கண்டவிதம் வேறு. கர்த்தர் யோசேப்போடே இருக்கிறார் என்றும் அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப் பண்ணுகிறார் என்றும் போத்திபார் கண்டான். எனவே அவன் மீது தயவு வைத்து தனக்கு ஊழியக்காரனாக வும், அதோடு தன் வீட்டு விசாரணைக்காரனுமாக்கினான். தனக்கு உண்டான எல்லாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். யோசேப்பினிமித்தம் கர்த்தர் போத்திபார்வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர் வதித்தார்.


போத்திபாரின் மனைவியோ அவன் மேல் தவறான நோக்குடன் கண் வைத்தாள் (மத் 5:29). அவளுடைய கண் அவளுக்கு இடறல் உண்டாக்கியது. அவள் மாம்ச இச்சைக்கு இடம் கொடுத்தாள். காமவெறிக்குத் தன்னை விற்றுப்போட்டாள். யோசேப்போ திருமணமாகாத ஓர் இளைஞன். இவளோ திருமணமான ஒரு பெண். வயதிலும் யோசேப்பை விடப் பெரியவளாக இருந்திருப்பாள். தன்னுடைய வீட்டில் வேலைக்காரனாயும், விசாரணைக்காரனுமாய் இருந்த யோசேப்பை தன்னோடே தவறான உறவு


கொள்ள அழைத்தாள். அவனோ அதற்கு மறுப்பு தெரிவித்தான். அச்செயலைப் பெரிய பொல்லாங்கானதாகவும், தேவனுக்கு விரோதமான பாவமாகவும் அவன் கருதியதால் அவளுக்கு அவன் இணங்கவில்லை. அனுதினமும் போத்திபாரின் மனைவி இப்படிப் பேசிக்கொண்டிருந்தாலும் யோசேப்பு அவளோடே தவறான உறவு கொள்ளவும், அவள் கூட இருக்கவும் மறுப்புத் தெரிவித்தான். இந்தச் சோதனையில் யோசேப்பு தேவ ஒத்தாசையால் வெற்றி கொண்டான்.


யோசேப்போ இப்போது தன் வீட்டை விட்டு அந்நிய தேசத்தில் இருக்கிறான். தன் வீட்டாரோடு இனி உறவு கிடைக்கும் என்கிற துளி நம்பிக்கை கூட அவனுக்கு இல்லை. எஜமானின் மனைவி தன் கைவசமிருந்தால் வேறென்ன வேண்டும்? வாழ்க்கையில் கிடைக்காத பாதுகாப்பும் சுகபோக அனுபவமும் கிடைக்குமே. ஆனால் அவன் தேவன் தன்னைக் காண்கிறார் என்ற உணர்வோடு வாழ்ந்ததால் பாவத்தை வெறுத்துத் தள்ளினான். உடலின் இன்பத்தை விட தேவனைப் பிரியப்படுத்துவது அவனுக்கு முக்கியமானதாக இருந்தது (சங் 139:1-8). நாமும் கூட என்ன செய்தாலும் தேவன் நம்மைக் காண்கிறார் என்ற உணர்வோடு வாழ வேண்டும். யோசேப்பு இது எனக்கு விரோதமான, அல்லது உனக்கு விரோதமான பாவம் என்று கூறவில்லை. என் தேவனுக்கு விரோதமாக நான் பாவம் செய்வது எப்படி என்று கூறினான். 2 தீமோ 2:22 சொல்லுகிறபடி பாலியத்திற்குரிய இச்சைகளுக்கு விலகி ஓடினான். யோசேப்பைப் போல் பாவங்கள் தேவனுக்கு விரோதமானவை என்ற எண்ணம் நம்மில் எப்போதும் காணப்படவேண்டும்.


இப்படி எதிர்ப்புத் தெரிவித்த யோசேப்பிடம் காமவெறி கொண்ட போத்திபாரின் மனைவி தன்னை அடக்கமுடியாமல், ஒரு நாள் வீட்டில் யாருமில்லாத நிலையில் துணிச்சலுடன் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து என்னோடே சயனி என்று பலவந்தம் செய்தாள். வஸ்திரம் கறைபட்டால் வெளுக்கலாம். ஆனால் வாழ்க்கை கறைபட்டால்? 

 மானம் பறிபோனால்? கேவலமே. யோசேப்போ தான் பாவம் செய்யாதபடி தன்னைக் காத்துக்கொள்ள தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு விட்டு வெளியே ஓடிப்போனான்.


மாம்ச இச்சையை நிறைவேற்ற முடியாத போத்திபாரின் மனைவி நடந்த காரியங்கள் யாவற்றையும் தன் வீட்டு மனிதரிடமும், தன் கணவன் வந்தபின் அவனிடமும் அப்படியே தலைகீழாய் மாற்றி, துணிகரமாய், நெஞ்சழுத்தத்தோடு, யோசேப்பின் மீது பொய்யாய்க் குற்றம் சுமத்தினாள். யோசேப்பின் மீது நல்லெண்ணம் கொண்டிருந்த தன் கணவன் அவன் மீது கோபமடையுமாறு பேசினாள். இதன் விளைவு யோசேப்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டான். இப்போது யோசேப்பு போத்திபார் வீட்டிற்கு அதிகாரியல்ல. எகிப்து தேசத் திற்கே அதிகாரியாக வருவதற்கு சிறைச்சாலை ஆசீர்வாதமாய் இருந்தது.


போத்திபாரின் மனைவி யோசேப்பைக் கறைப்படுத்தி அவனுடைய எதிர்காலத்தைப் பாழ்ப்படுத்த ஒரு விஷமுள்ள பாம்பைப் போலிருந்தாள். தன் கணவனுக்குத் துரோகம், சமுதா யத்திற்குக் கறை, பிள்ளைகளுக்கு முன்மாதிரியற்ற வாழ்க்கை வாழ்ந்தாள். அவளது அசுத்தமான எண்ணங்களும், சிந்தை களும் அவளைக் கீழ்த்தரமான நிலைக்குக் கொண்டுவந்தது.


எதிர்பாலரோடு நாம் எப்படிப் பேசுகிறோம்? வீட்டில், வேலை செய்யும் இடத்தில் அவர்களோடு எப்படி நடந்து கொள்கிறோம்? எதிர்பாலரோடு மிகவும் நெருங்கிப் பழகுவது ஆபத்தை விளைவிக்கும். நாம் விழிப்போடு கவனமாக இருந்தாலும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளை மேற்கொள்ள போத்திபார் மனைவியைப் போலல்ல. யோசேப்பைப் போல விலகி ஓடுவோம். விபசாரம் செய்யாதிருப்பாயாக என்பது 10 கட்டளைகளில் ஒன்று (யாத் 20:14). 1 கொரி 6:18ல் வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள் என்று நம்மை எச்சரிக்கிறார். 1 கொரி 6:15ல் நம்முடைய சரீரங்கள் கிறிஸ் துவின் அவயவங்கள் என்றும் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கக் கூடாது என்றும் கூறுகிறார். 1 கொரி 6:20ன்படி நம்முடைய சரீரத்தினால் தேவனை மகிமைப்படுத்தும்படியாகவும், பிரியப்படுத்தும்படியாகவும் வாழ வேண்டும். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடந்து ஆக்கினைக்குத் தப்புவோம் (ரோ 8:1). மேலும் நமது தவறான செயல்களுக்கு மற்றவர் களை இழுக்கும் முயற்சியோ, கெடுக்கும் செயலையோ தவிர்ப்போம்…

Post a Comment

0 Comments