பாடுகளின் வாரம் - திங்கட்கிழமை நிகழ்வு - 3

  பாடுகளின் வாரம் 


திங்கட்கிழமை நிகழ்வு - 3


குருடரும் சப்பாணிகளும்


அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவர் இடத்திற்கு வந்தார்கள், அவர்களை சொஸ்தமாக்கினார் (மத் 21:14).



இயேசுகிறிஸ்து தேவாலயத்திலிருந்து விற்கிறவர்களையும், கொள்ளுகிறவர்களையும், காசுக்காரரையும் துரத்திவிடுகிறார். அதன்பின்பு குருடரையும் சப்பாணிகளையும் தம்மிடமாக அழைக்கிறார். தேவாலயத்தில் இயேசுகிறிஸ்து இருக்கும்போது அங்கு அவருடைய சமுகத்தில் பிரவேசிப்பது ஆசீர்வாதமானது. வியாபாரம்பண்ணுகிறவர்களை இயேசுகிறிஸ்து  துரத்திவிடுகிறார். ஆனால் தாழ்மையோடு தம்மை தேடுகிறவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். 


தாவீதின் அரண்மனையில் குருடர்களும் முடவர்களும் அங்கீகரிக்கப்படவில்லை. தாவீது அவர்களை தமது அரண்மனையைவிட்டு வெளியே துரத்திவிட்டார். ஆனால்      தேவனுடைய ஆலயத்தில் அவர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள். ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். தேவாலயம் சந்தைவெளியாகும்போது அது மாசுபடுகிறது.  இதே தேவாலயம் வியாதியஸ்தரை குணப்படுத்தும் ஸ்தலமாக மாறும்போது மகிமையடைகிறது. கிருபை பெறுகிறது. தேவனுடைய ஆலயத்தில் நன்மையான காரியங்களை மாத்திரமே செய்யவேண்டும். தேவாலயத்தில் பணம் சம்பாதிப்பதைவிட பக்திவிருத்திக்கு ஏதுவான காரியங்களையும், தேவனை மகிமைப்படுத்தும் காரியங்களையும் செய்யவேண்டும். 



""இவர் யார்'' என்று எருசலேம்  நகரத்தார் இயேசுவைப்பற்றி கேட்கிறார்கள். இயேசுகிறிஸ்து குருடர்களையும் சப்பாணிகளையும் சொஸ்தமாக்குகிறார். இயேசுகிறிஸ்துவின் சுகமாக்கும் கிரியை அவர்களுடைய கேள்விக்கு பதில் கொடுக்கிறது. ஜனங்கள் ""ஓசன்னா'' என்று கூறி ஆர்ப்பரிக்கிறார்கள். அவரை மகிமைப்படுத்துகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் அற்புதமான கிரியைகள் அவருடைய தெய்வத்துவத்தை உறுதிபண்ணுகிறது.



தேவாலயத்தில் யூததேசத்து ஜனங்களும், புறதேசத்து ஜனங்களும் கூடியிருந்தார்கள். அவர்களுக்கு நடுவே இயேசு கிறிஸ்து தமது தெய்வீக வல்லமையை வெளிப்படுத்தினார். தாமே மேசியா என்பதை வலியுறுத்துவதற்காக இந்த அற்புதங்களையெல்லாம் செய்தார். தேவாலயத்தில் தவறான காரியங்கள் நடக்கக்கூடாது என்பதை ஜனங்களுக்குக் காண்பிப்பதற்காகக் காசுக்காரர்களையெல்லாம் துரத்தினார். அதேசமயத்தில் தேவனுடைய ஆலயத்தில் தெய்வீக வல்லமை வெளிப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இயேசு கிறிஸ்து குருடர்களையும், சப்பாணிகளையும் சொஸ்தமாக்கினார்.

பிரதான ஆசாரியரும் வேதபாரகரும்

அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து,   (மத் 21:15).


இயேசுகிறிஸ்து தேவாலயத்தில் அதிசயங்களை செய்கிறார். ஜனங்கள் அதைப்பார்த்து ""தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா'' என்று கூறி ஆர்ப்பரிக்கிறார்கள். நடைபெறும் இந்த சம்பவங்களை பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தேவனை மகிமைப்படுத்த வேண்டியவர்கள். ஆனால் இவர்களோ கிறிஸ்துவுக்கு சத்துருக்களாக இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து செய்த அற்புதங்களையெல்லாம் பார்த்து கோபப்படுகிறார்கள். 


பிரதான ஆசாரியராலோ, வேதபாரகராலோ ஒரு அற்புதத்தையும் செய்ய முடியவில்லை. இவர்கள் ஜனங்களுக்கு ஏதாவது நன்மை செய்தாலும் மனப்பூர்வமாகவோ, அன்பாகவோ செய்யமாட்டார்கள். இயேசுகிறிஸ்துவை எதிர்க்கவேண்டும் என்பதே இவர்களுடைய நோக்கம். குருடர்கள் பார்வையடையாவிட்டாலும், சப்பாணிகள் நடக்காவிட்டாலும் இவர்கள் கவலைப்படமாட்டார்கள். இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமைப்படக்கூடாது என்பதிலேயே கருத்தாய் இருக்கிறார்கள். 



இவர்கள் பெருமையுள்ளவர்கள். தங்களுக்குத் தாங்களே தீங்கு செய்துகொள்வார்கள். பிறருடைய மேன்மையை அங்கீகரிக்கமாட்டார்கள்.  பொறாமை குணமுள்ளவர்கள். ஜனங்கள் இயேசுகிறிஸ்துவை போற்றிப் புகழும்போது இவர்கள் கோபப்படுகிறார்கள். ""தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா'' என்று ஜனங்கள் ஆர்ப்பரிக்கும்போது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் இயேசுகிறிஸ்துவிடம் வந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். 



இயேசுகிறிஸ்துவுக்கு மகிமையில்லையென்றும், இந்த ஜனங்கள் தேவையில்லாமல் அவரை கனப்படுத்துவதாகவும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் நினைக்கிறார்கள். ஜனங்கள் தங்களை மாத்திரமே போற்ற வேண்டும், புகழவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஜனங்கள் மற்றவர்களைப் புகழும்போது அந்த புகழ்ச்சி இவர்களுக்கு பொறாமையாக மாறுகிறது. தாங்கள் மாத்திரமே துதிக்கும் கனத்திற்கும் பாத்திரவான்கள் என்று நினைக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை நாம் எப்போது மகிமைப்படுத்தினாலும் அப்போதெல்லாம்  சத்துரு வருத்தப்படுகிறான். 


இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களை அவருடைய சத்துருக்கள் கண்டார்கள். யூதர்கள் மேசியாவை மறுதலிக்க போகிறார்கள்.

 (லூக்கா 19:41-44) இது மிகப்பெரிய பாவம். இந்தப் பாவத்தை யூதர்கள் சீக்கிரமாகவே செய்யப்போகிறார்கள். இயேசு கிறிஸ்து செய்த இந்த அற்புதம் தாமே மேசியா என்பதை இஸ்ரவேலருக்குக் காண்பிப்பதற்காக அவர் எடுத்துக் கொண்ட கடைசி முயற்சி. 

குழந்தைகளும் பாலகரும்

அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்  (மத் 21:16).



தேவாலயத்தில் குழந்தைகளும் பாலகரும் இருக்கிறார்கள். ஜெபவீட்டிற்கு சிறு பிள்ளைகளை அழைத்துவருவது மிகவும் நல்லது. பரலோக ராஜ்யம் இப்படிப்பட்டவர்களுடையது. தேவ பக்தியில் பிள்ளைகளை வளர்க்கவேண்டும். தேவனுடைய வல்லமையை பெற்றுக்கொள்வதற்கு நாம் சிறு பிள்ளைகளை வழிநடத்தவேண்டும். தம்முடைய மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகள்மீது இயேசுகிறிஸ்து எப்போதுமே கரிசனையுள்ளவராக இருக்கிறார். 



சிறு பிள்ளைகளும் ""தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா'' என்று கூறி ஆர்ப்பரிக்கிறார்கள். பெரியவர்களிடமிருந்து சிறு பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். பெரியவர்கள்  பேசுவதையும், செய்வதையும் சிறு பிள்ளைகள் கவனித்துப் பார்த்து அப்படியே செய்வார்கள். பெரியவர்களைப்போல சிறு பிள்ளைகள் நடித்து காண்பிப்பார்கள். ஆகையினால் பெரியவர்கள் சிறு பிள்ளைகளுக்கு முன்பாக மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களுக்கு முன்பாக நன்மையான காரியங்களையே செய்யவேண்டும். பக்திவிருத்திக்கு ஏதுவான வார்த்தைகளையே பேசவேண்டும். நாம் தீயவர்களாக இருந்தால் நம்முடைய தீய சுபாவங்களை சிறு பிள்ளைகள் எளிதாக பற்றிக்கொள்வார்கள். தங்களோடிருக்கும் பெரியவர்களிடமிருந்து சிறு பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள். நாம் மற்றவர்களை சபித்தால் சிறு பிள்ளைகளும் சபிப்பார்கள். நாம் துதித்தால் சிறு பிள்ளைகளும் துதிப்பார்கள். நாம் ஜெபித்தால் சிறு பிள்ளைகளும் ஜெபிப்பார்கள். 


சிறு பிள்ளைகள் தம்மை துதிப்பதற்கு இயேசுகிறிஸ்து அனுமதிக்கிறார். இதில் அவர் பிரியமாக இருக்கிறார். இது வேதவாக்கியத்தின் நிறைவேற்றும் என்று இதை அங்கீகரிக்கிறார்.  ""பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களின் நிமித்தம் குழந்தைகள், பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்'' என்று தாவீது பாடுகிறார் (சங் 8:2).



சிறு பிள்ளைகள் தம்மை ஆராதிப்பதை இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கிறார். இவர்கள் வாயிலிருந்து வரும் துதி பரிபூரணமானது. சிறு பிள்ளைகள் ஒன்று சேர்ந்து தேவனை ஆராதிப்பது, தேவனுக்கு மிகவும் பிரியமான காரியமாகும். நாம் முழு ஈடுபாடோடு தேவனை துதிக்கவில்லையென்றால் நம்முடைய துதியும், ஸ்தோத்திரமும், ஜெபமும் குறைபாடுடையதாகவே இருக்கும். சிறு பிள்ளைகள் ஈடுபாடோடு தேவனை துதிப்பதற்கு பெரியவர்கள் கற்றுத்தரவேண்டும். சிறு பிள்ளைகள் பலவீனமானவர்கள். நமது பலவீனத்தில் கர்த்தருடைய பலம் நம்மை பூரணமாக தாங்கும்.  சிறு பிள்ளைகள் தேவனை துதிக்கும்போது, தேவனுடைய நாமம் மகிமைப்படும். 

பெத்தானியா

அவர்களை விட்டு நகரத்தி-ருந்து புறப்பட்டு, பெத்தானியாவுக்குப் போய், அங்கே இராத்தங்கினார்          (மத் 21:17).


நாம் இயேசுகிறிஸ்துவை மனப்பூர்வமாக  துதிக்கவில்லையென்றால், இயேசு நம் அருகே இருக்கமாட்டார். தேவாலயத்தில் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் இயேசுவைத் துதிக்கவில்லை. துதிக்கிறவர்கள்மீது கோபமடைகிறார்கள். ஆகையினால் இயேசுகிறிஸ்து அவர்களை விட்டு எருசலேம் நகரத்திலிருந்து பெத்தானியா என்னும் பட்டணத்திற்கு போகிறார். இது ஒரு அமைதியான பட்டணம். தொந்தரவில்லாமல் இங்கு இயேசுகிறிஸ்து தூங்கப்போகவில்லை. இங்கு ஜெபிப்பதற்காகவே போகிறார்….


Post a Comment

1 Comments