பாடுகளின் வாரம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வு - 1

 பாடுகளின் வாரம் 


ஞாயிற்றுக்கிழமை நிகழ்வு - 1 


எருசலேமுக்கு ஜெயபவனி 

        (மத்தேயு 21:1-9)


இயேசு எருசலேமுக்குள் வெற்றி பவனியாக வருகிறார் 

மத்தேயு 21:1-9; மாற்கு 11:1-10; லூக்கா 19:29-40; 

யோவான் 12:12-19


அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷரில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டு வாருங்கள். ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: 

இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி அவர்களை அனுப்பினார் 

(மத் 21:1-3).



இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று, தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது (மத் 21:4,5).



சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, 

அவரை ஏற்றினார்கள் (மத் 21:6,7).



திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். முன் நடப்பாரும் பின் நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்

 (மத் 21:8,9). 



அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்தில்-இருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்

 (மத் 21:10,11)



இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு எருசலேமுக்கு ஜெயபவனியாக வருகிறார். இந்த சம்பவத்தை நான்கு சுவிசேஷ ஆசிரியர்களும் தங்கள் சுவிசேஷங்களில் எழுதியிருக்கிறார்கள். எருசலேமுக்குள் பிரவேசிப்பதற்கு முன்பாக அந்த ஊருக்கு அருகிலிருந்த பெத்தானியா என்னும் கிராமத்தில் இயேசுகிறிஸ்து சிறிது காலம் தங்கியிருந்தார். மரியாள் இயேசுகிறிஸ்துவின் பாதங்களை பரிமள தைலத்தினால் அபிஷேகம் பண்ணுவதற்கு முன்பாக அவர் அங்கு இராப்போஜனத்தில் பங்கு பெற்றார் (யோவா 12:3).



இயேசுகிறிஸ்து பல கிராமங்களுக்கு பிரயாணம்பண்ணியிருக்கிறார். கலிலேயாவிலிருந்து எருசலேமுக்கு கால்நடையாகவே நடந்து பிரயாணமாக வந்திருக்கிறார். அவர் நன்மை செய்கிறவராக பல ஊர்களுக்கும் சுற்றி அலைந்திருக்கிறார். பாதைகள் கரடுமுரடாக இருந்தாலும் அவர் எல்லா இடங்களுக்கும் தமது கால்களால் நடந்தே பிரயாணம் பண்ணுகிறார். விசுவாசிகளாகிய நாமும் இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றவேண்டும். நமக்கு வசதி வாய்ப்புக்கள் அதிகமாக இல்லையே என்று  புலம்பிக்கொண்டிராமல், இருக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தி கர்த்தருக்கு ஊழியம் செய்யவேண்டும். 


இயேசுகிறிஸ்து தமது ஜீவியகாலத்தில் எருசலேமுக்குள் பிரவேசிக்கும் இந்த சம்பவத்தில் மாத்திரமே ஜெயபவனியாக செல்கிறார். எருசலேமுக்கு பாடுகளை அனுபவிக்கவும் மரிக்கவும் போகிறார். 



 எருசலேமுக்குப்  பிரயாணம்பண்ணுவதற்கு இயேசுகிறிஸ்து ஒரு கழுதையையும் அதன் குட்டியையும் பயன்படுத்துகிறார். கழுதையின்மீது ஏறிச்செல்வது ஏழைகளின் பிரயாணமாகும். இதை ஆயத்தம்பண்ணுவதற்கும் அவர் அதிக முயற்சி எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. எருசலேமுக்கு சமீபமாக வரும்போது தமக்கு இந்த கழுதையையும் அதன் குட்டியையும் பிரயாணம் பண்ணுவதற்கு ஆயத்தம்பண்ணுகிறார். 


இயேசுகிறிஸ்து மனத்தாழ்மையோடு ஊழியம் செய்கிறார். அதே சமயத்தில் அவரிடத்தில் தெய்வீக மகிமையும் உள்ளது. மனுஷகுமாரனாகிய இயேசுகிறிஸ்து, தேவ மகிமையுள்ளவராக இருந்தாலும், ஒரு பாவியைப்போல கல்வாரி சிலுவையில் மரிக்கிறார்.


இயேசுகிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் எருசலேமுக்கு சமீபமாக வருகிறார்கள். பெத்பகே என்னுமிடத்திற்கு அருகாமையில் இவர்கள் வந்திருக்கிறார்கள். ஒலிவ மலைக்கு அருகில் இந்த பகுதி உள்ளது. இதில் நீளமான தெருக்கள் அங்கும் இங்குமாக சிதறியுள்ளன. இயேசுகிறிஸ்து பெத்பகேயுக்கு  வந்தபோது தம்முடைய சீஷரில் இரண்டு பேரை ஒரு கழுதையை அவிழ்த்து வருமாறு அனுப்புகிறார்.



""பெத்பகேயு''  என்னும் பெயருக்கு அத்திப்பழங்களின் வீடு என்று பொருள். பெத்தானியாவிலிருந்து எருசலேம் செல்லும் பாதையில் ஒருமைல் தூரத்தில் உள்ள பட்டணம்.

கழுதையும் அதன் குட்டியும்

உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டு வாருங்கள். ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார் (மத் 21:2,3).


கழுதை ஒரு சாதாரண மிருகம். கழுதைக்காகவும் அதன் குட்டிக்காகவும் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரில் இரண்டு பேரை அனுப்புகிறார். கிராமங்களில் பிரயாணம் பண்ணுவதற்கு கழுதைகளை பயன்படுத்துகிறார்கள். ஐசுவரியவான்களும், போர்க்களத்தில் போர்புரியும் போர்வீரர்களும் மாத்திரமே குதிரைகளை பயன்படுத்துவார்கள். இயேசுகிறிஸ்து கர்த்தாதி கர்த்தாவாகவும், ராஜாதிராஜாவாகவும் இருக்கின்றபோதிலும், அவர் தம்மை தாழ்த்தி ஒரு சாதாரண கழுதையின்மீது பிரயாணம்பண்ணுகிறார். 



இயேசுகிறிஸ்து பிரயாணம் பண்ணும் கழுதையும் அவருக்கு சொந்தமானதல்ல. அவர் அதை இரவலாகவே வாங்கியிருக்கிறார். அவருக்கென்று இந்த உலகத்தில் உலகப்பிரகாரமான எந்த சொத்தும் இல்லை. அவருக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டது அல்லது அவர் இரவலாக வாங்கியது மாத்திரமே அவரிடம் இருக்கிறது. 


சீஷர்கள் கழுதையையும் அதன் குட்டியையும் அவிழ்த்து இயேசுவிடம் வரவேண்டும். ""இவைகள் ஆண்டவருக்கு வேண்டும்'' என்று கூறவேண்டும். கழுதையும் அதன் குட்டியும் எங்கு கட்டப்பட்டிருக்கும் என்பது இயேசுவுக்குத் தெரியும். இயேசுகிறிஸ்துவின் ஞானம் தெய்வீக ஞானம். தம்முடைய சீஷர்களிடம் அவர்கள் எங்கே போகவேண்டுமென்றும், அங்கு அவர்கள் எதை காண்பார்கள் என்றும் முன்னறிவிக்கிறார்.


கழுதையையும் அதன் குட்டியையும் அவிழ்க்கும்போது அதன் சொந்தக்காரன் சீஷர்களிடம் என்ன கூறுவான் என்பதும் இயேசுவுக்குத் தெரியும். சீஷர்களுக்கு கொடுக்கப்படும் ஊழியங்களில் என்னென்ன இடையூறுகளெல்லாம் வரும் என்பதை இயேசுகிறிஸ்து ஏற்கெனவே அறிந்து வைத்திருக்கிறார். ஆகையினால் அவர்களை ஒரு காரியமாக அனுப்புவதற்கு முன்பாக, அந்த தடைகளைக் குறித்து எச்சரித்து, அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் பேசவேண்டிய வார்த்தைகளையும் அவர்களிடம் கூறுகிறார். 


""ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால் இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்'' இயேசுகிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து, அவர் கூறிய வார்த்தைகளை கூறும்போது தடைகள் அகன்றுபோகும். ""உடனே அவைகளை அனுப்பிவிடுவான்'' என்று வாக்குப்பண்ணுகிறார்.   



கழுதையின் சொந்தக்காரனுக்குத் தெரியாமல் அவற்றை இயேசுகிறிஸ்து திருடிக்கொண்டு வரச்சொல்லவில்லை. அவனுடைய அனுமதியோடே அவற்றை அவிழ்த்து வரச்சொல்லுகிறார். இயேசுகிறிஸ்து எப்போதுமே கண்ணியமும் நீதியும் நிறைந்தவர். 

சீயோன் குமாரத்தி

இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று, தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது  (மத் 21:4,5).



இந்த சம்பவத்தின் மூலமாக தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட வாக்கியம் நிறைவேறுகிறது. இயேசுகிறிஸ்துவின் கிரியைகளும், அவருடைய பாடுகளும், அவருடைய மரணமும் ஏற்கெனவே முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு கூறப்பட்டிருக்கும் சம்பவம் சக 9:9-ஆவது வசனத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனமாகும். மேசியாவின் ராஜ்யத்தைப்பற்றி சகரியா இவ்வாறு முன்னறிவித்திருக்கிறார்.  



""சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்'' (சக 9:9). இந்த தீர்க்கதரிசனம் இயேசுகிறிஸ்துவின் ஜீவிய காலத்தில் இப்போது நிறைவேறுகிறது.



இயேசுகிறிஸ்துவின் வருகையை சகரியா தீர்க்கதரிசி முன்னறிவித்திருக்கிறார். ""உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்'' என்று சகரியா கூறுகிறார். இயேசுகிறிஸ்து சபையின் ராஜாவாக இருக்கிறார். தமது சபைக்காக சபையின் ராஜா வருகிறார். சபை ஸ்தாபிக்கப்படும் முன்பாக சபையின் ராஜாவுடைய வருகையைப்பற்றி கர்த்தர் தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தியிருக்கிறார். 



""சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்''  கிறிஸ்துவின் வருகையை சபை எதிர்ப்பார்க்கிறது. அவருக்காக காத்திருக்கிறது. சபையின் விசுவாசிகள் ஜெபத்தோடும் விசுவாசத்தோடும் அவருடைய வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு காத்துக்கொண்டிருக்கும் சபையாருக்கு இயேசுகிறிஸ்துவின் வருகையைப்பற்றி சொல்லவேண்டும். 



ஒரு ராஜா வரும்போது அவருடைய வருகை ஆடம்பரமாகவும், அலங்காரமாகவும் இருக்கும். அவர் தமது பரிவாரங்களோடு வருவார். ஜனங்களும் ராஜாவின் வருகையை எதிர்பார்க்கும்போது அவருடைய அலங்காரமான, ஆடம்பரமான வருகையையே எதிர்பார்ப்பார்கள். ஆனால் இங்கு இயேசுகிறிஸ்துவின் வருகை ஆடம்பரமாக இருக்கும் என்று அறிவிக்கப்படவில்லை. ""உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய் கழுதையின்மேலும், கழுதைக்குட்டியாக மறியின்மேலும் ஏறிக்கொண்டு உன்னிடத்தில் வருகிறார்'' என்று இயேசுகிறிஸ்துவின் வருகையைப்பற்றி இங்கு முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. 



இயேசுகிறிஸ்து இங்கு தம்முடைய மகத்துவத்தை வெளிப்படுத்தவில்லை. தம்முடைய தாழ்மையையும், ஏழ்மையையும், சாந்தகுணத்தையும் வெளிப்படுத்துகிறார். ராஜாவின் தோரணை கெம்பீரமாக இருக்கும். ஆனால் இயேசுகிறிஸ்துவோ சாந்தமுகத்தோடு வருகிறார். சீயோனுக்காக எல்லா காயங்களையும், எல்லா பாடுகளையும் ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமுள்ளவராக வருகிறார்.



ராஜாவுக்கு அருகில் சாதாரண ஜனங்கள் யாரும் நெருங்கிப்போக முடியாது. ஆனால் இயேசுகிறிஸ்துவோ ஜனங்களோடு ஒருவராக மிகவும் ஏழ்மையாக வருகிறார். இயேசுகிறிஸ்துவை கிட்டிச்சேர்வது மிகவும் எளிது. அவருக்கு பணிவிடை செய்வதும் சுலபம். ராஜாவுக்குரிய ஆடம்பரமோ, கெம்பீரமோ இல்லாமல் இயேசுகிறிஸ்து வருவதினால் ஜனங்கள் அவருக்கு அருகாமையில் இருக்கிறார்கள். 


இயேசுகிறிஸ்துவின் ராஜ்யம் மென்மையானது. இயேசுகிறிஸ்துவின் பிரமாணங்கள் கடினமானவையல்ல. ரத்த காயம் உண்டாகுமாறு ஜனங்கள் தண்டிக்கப்படாமல், ஜனங்களுக்குரிய தண்டனைகள் அனைத்தையும் ராஜாவாகிய இயேசுகிறிஸ்துவே ஏற்றுக்கொள்கிறார். கல்வாரி சிலுவையில் தமது ரத்தத்தை சிந்துவதற்கு ஆயத்தமாக வருகிறார்.  அவருடைய நுகம் மெதுவானது  இலகுவானது.  



தேவன் கழுதையை சிருஷ்டித்தபோது அதை பொதி சுமப்பதற்காகவே சிருஷ்டித்தார். ஒரு ராஜா தன் அந்தஸ்தோடு ஏறி வருவதற்காக கழுதை சிருஷ்டிக்கப்படவில்லை. கழுதைகளை யுத்தக்களத்தில் பயன்படுத்தமுடியாது. இவை வேகமாக ஓடாது. சுமை சுமப்பதற்குத்தான் கழுதைகள் பயன்படும். யாரும் விரும்பாத இந்த கழுதையின்மீது இயேசுகிறிஸ்து ஏறி வந்து தம்முடைய தாழ்மையை வெளிப்படுத்துகிறார். கழுதை வேகமாக ஓடாமல், மெதுவாக நடந்தாலும், அது  தொடர்ந்து நடக்கும். பாதுகாப்பாக செல்லும். 



ஒரு ராஜா தன் குதிரையின்மீது கெம்பீரமாக வரும்போது ஜனங்களெல்லாம் அவருக்கு அருகில் செல்லாமல் பயந்து ஓடிவிடுவார்கள். ஆனால் சீயோனின் ராஜாவோ சாதாரண கழுதையின்மீது வருவதினால் ஜனங்கள் அவருக்கு அருகாமையில் வருகிறார்கள். ஜனங்களைப்போல இந்தக் கழுதையும் மெதுவாகவே நடக்கிறது. சீயோன் குமாரத்திகளில் புறக்கணிக்கப்பட்ட சாதாரண ஸ்திரீகூட இயேசுகிறிஸ்துவுக்கு அருகாமையில் வரலாம். தரித்திரரும், நோயாளிகளும் இயேசுகிறிஸ்துவுக்கு அருகாமையில் வரலாம். அவர் வேகமாக ஓடுகிற குதிரையின்மீது ஏறிச்செல்லவில்லை. சாதாரணமாக நடக்கிற கழுதையின்மீதே  ஏறி பவனி வருகிறார்.

இயேசு கட்டளையிட்டபடியே

சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள் (மத் 21:6,7).


கிறிஸ்து தங்களுக்கு கட்டளையிட்டபடியே சீஷர்கள் செய்கிறார்கள். கிறிஸ்துவின் கட்டளையை விவாதம்பண்ணக்கூடாது. அவற்றிற்கு கீழ்ப்படிய வேண்டும். கிறிஸ்துவின் கட்டளைக்கு உண்மையாக  கீழ்ப்படிகிறவர்கள் தேவஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வார்கள்.  கிறிஸ்து கட்டளையிட்டபடியே சீஷர்கள் கழுதையையும் அதன் குட்டியையும் இயேசுகிறிஸ்துவிடம் கொண்டு வருகிறார்கள். 


கழுதையின்மீது சேணம் வைத்து கட்டுவதற்கு அவர்களிடம் சேணம் எதுவுமில்லை. அவற்றின்மீது தங்கள் வஸ்திரங்களை சேணம் போல போடுகிறார்கள்.  தங்களால் முடிந்தவரையிலும் இயேசுகிறிஸ்துவுக்கு வசதி செய்து கொடுக்கிறார்கள். இயேசுகிறிஸ்து ஒருபோதும் ஆடம்பரமான வசதிகளை எதிர்பார்க்கவில்லை. அவருடைய ஊழியக்காரர்களும் ஆடம்பர வசதிகளை எதிர்பார்க்கக்கூடாது. இருக்கும் வசதிகளை பயன்படுத்தி தங்கள் ஊழியப்பிரயாணத்தில் முன்னேறிச்செல்ல வேண்டும்.


தங்களிடமிருந்த நல்ல வஸ்திரங்களை அவர்கள் இயேசுவுக்கு கொடுக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவுக்கு தேவைப்படும்போது தங்களுடைய சொந்த உடமைகளை அவருக்கு கொடுக்க முன்வருகிறார்கள். தங்களுடைய ஆண்டவருக்கு இவைகள் வேண்டும் என்று சீஷர்கள் நினைக்கிறார்கள். 


நம்முடைய மனப்பக்குவமும் சீஷர்களைப்போலவே இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு தேவை ஏற்பட்டபோது சீஷர்கள் தங்களுடைய சொந்த வஸ்திரங்களையே கழுதையின்மீது சேணமாக போடுகிறார்கள். தங்களுக்குரியதை இயேசுவுக்கு கொடுக்க முன்வருகிறார்கள்.                  நாமும் நமக்குரியதை கிறிஸ்துவின் ஊழியத்திற்கு கொடுக்க முன்வரவேண்டும். தேவைப்படுவோருக்கு உதவிபுரிய ஆயத்தமாக இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் வஸ்திரத்தை நமக்காக கிழித்தார்கள். நமக்காக அவர் பாடுகளை அனுபவித்தார். கிறிஸ்து தம்முடைய வஸ்திரத்தை மாத்திரமல்ல, தம்முடைய சரீரத்தையே நமக்காக அவர் ஒப்புக்கொடுத்தார். அதை பிட்கப்படுவதற்கும், பீறப்படுவதற்கும் ஒப்புக்கொடுத்தார்.


இயேசுகிறிஸ்து கழுதையின்மீது ஏறிவருகிறார். திரளான ஜனங்கள் அங்கு கூடியிருக்கிறார்கள். அவர்கள் மிகவும் சாதாரண ஜனங்கள். கிறிஸ்துவின் ஜெயபவனியில் பிரபுக்கள் யாரும் பங்குபெறவில்லை. போர்வீரர்கள் அணிவகுத்து நிற்கவில்லை. சாதாரண ஜனங்களே அங்கு திரளாக கூடியிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து மனுஷருடைய ஆத்துமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர். மனுஷருடைய மேன்மை, அந்தஸ்து, ஐசுவரியம் ஆகியவற்றைப்பார்த்து கிறிஸ்து இயேசு பட்சபாதம் காண்பிக்கிறவர் அல்ல. எல்லா ஆத்துமாக்களும் அவருக்கு முக்கியமானவை. ஆகையினால் இயேசுகிறிஸ்து எருசலேமுக்கு பவனி வரும்போது திரளான ஜனங்கள் அவரோடுகூட வருகிறார்கள். 

தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா

திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். முன் நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா!      கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்- ஆர்ப்பரித்தார்கள்  

(மத் 21:8,9).


இயேசுகிறிஸ்துவை சுற்றிலுமிருந்த திரளான ஜனங்கள் அவரை மகிமைப்படுத்துகிறார்கள். வழியில் தங்கள் வஸ்திரங்களை விரிக்கிறார்கள். வஸ்திரங்கள்மீது இயேசுகிறிஸ்து பிரயாணம் பண்ணவேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம். யெகூ ராஜாவாக அறிவிக்கப்பட்டபோது, படைத்தளபதிகள் தங்களுடைய வஸ்திரங்களை அவருடைய காலடியில் விரித்தார்கள். யெகூவின் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிவதற்கு இது அடையாளமாகும். இயேசுகிறிஸ்துவை நாமும் நம்முடைய ராஜாவாக அங்கீகரிக்கவேண்டும். அவருடைய பாதபடியில் நம்மை சமர்ப்பிக்கவேண்டும். வஸ்திரங்கள் இருதயத்திற்கு அடையாளம். இயேசுவின் பாதபடியில் நமது வஸ்திரங்களை விரிக்கும்போது, நமது இருதயங்களை அவரிடம் சமர்ப்பிக்கிறோம். 


திரளான ஜனங்களில் வேறு சிலர் மரங்களின் கிளைகளை தறித்து வழியிலே பரப்புகிறார்கள். கூடாரப்பண்டிகையின்போது மரக்கிளைகளை தறிப்பதுபோல இப்போதும் செய்கிறார்கள். இது வெற்றி, விடுதலை, சந்தோஷம் ஆகியவற்றிற்கு அடையாளமாகும். இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும் பின்பாகவும் திரளான ஜனங்கள் நடக்கிறார்கள். அவருக்கு முன்நடப்பாரும் பின்நடப்பாரும் ""தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா'' என்று கூறி ஆர்ப்பரிக்கிறார்கள். 


கூடாரப்பண்டிகையின்போது மரக்கிளைகளை தரித்து ஜனங்கள் சுமந்து செல்வார்கள். அப்போது அவர்கள் ""ஓசன்னா'' என்று ஆர்ப்பரிப்பார்கள். ஓசன்னா என்னும் வார்த்தைக்கு ""கர்த்தாவே இரட்சியும், கர்த்தாவே காரியத்தை வாய்க்கப்பண்ணும்'' என்று பொருள் (சங் 118:25,26). 


திரளான ஜனங்கள் இயேசுகிறிஸ்துவை   சுற்றிலுமாக நடந்து ""ஓசன்னா'' என்று கூறி ஆர்ப்பரிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் ராஜ்யத்தை இதன் மூலமாக அவர்கள் வரவேற்கிறார்கள். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். எல்லா ஜாதிகளும் அவரை பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள் (சங் 72:17). இயேசுகிறிஸ்துவை தங்கள் ஆண்டவராக அங்கீகரித்து அவரை கர்த்தராக விசுவாசிக்கிறவர்கள் எல்லோருமே அவரை வாழ்த்தவேண்டும். அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று கூறவேண்டும். இது ஒரு விசுவாச அறிக்கையாகும். நாம் கர்த்தருடைய நாமத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். 



இயேசுகிறிஸ்துவை நாம் பின்பற்றும்போது நாமும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். அவர் நம்மை தமது ஆசீர்வாதங்களினால் நிரப்புகிறார். கூடியிருக்கும் ஜனங்கள் ""ஓசன்னா'' என்று கூறி ஆர்ப்பரிக்கும்போது, தேவனுடைய ராஜ்யம் வருவதை அவர்கள் விரும்புகிறார்கள். இதை இந்த வார்த்தையினால் அறிவிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் ராஜ்யம்  ஜெயராஜ்யம். இது பூமிக்குரிய ராஜ்யமல்ல. தற்காலிகமான ராஜ்யமல்ல. இந்த உலகத்தில் கிறிஸ்துவின் ராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதை நாம் நேசிக்கவேண்டும். அதற்காக ஜெபிக்கவேண்டும். 



""உமது ராஜ்யம் வருவதாக'' என்று நாம் ஜெபிக்கும்போது, இந்த பூமியில் இயேசுகிறிஸ்துவின் ராஜ்யம் வரவேண்டுமென்று ஜெபிக்கிறோம். இந்த ஜனங்கள் ""உன்னதத்திலே ஓசன்னா'' என்று ஆர்ப்பரிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் நாமம் எல்லா நாமங்களையும்விட உயர்ந்தது. அவருடைய சிங்காசனம் எல்லா சிங்காசனங்களையும்விட உயரமும் உன்னதமுமானது. 



இயேசுகிறிஸ்து எருசலேமுக்குள் பிரவேசிக்கையில் நகரத்தார் யாவரும் ஆச்சரியப்படுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் வருகையை எல்லா ஜனங்களும் கவனிக்கிறார்கள். அங்கு நடைபெறும் காரியங்களைப்பார்த்து மிகுந்த ஆச்சரியப்படுகிறார்கள். ஒரு சிலர் இதை ஏளனம்பண்ணி நகைக்கிறார்கள். பலர் சந்தோஷப்படுகிறார்கள். பரிசேயர்கள் பொறாமையினால் கோபப்படுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் ராஜ்யம் வரும்போது ஜனங்களுடைய மனப்பாங்கு இதுபோல வித்தியாசமாகவே இருக்கும்.



வஸ்திரங்களை வழியில் விரிப்பதும், மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்புவதும் யுத்தகாலத்தில் வெற்றி பெற்ற இராஜாவிற்கும், அவனுடைய சேனைக்கும் கொடுக்கப்படும் வரவேற்பு. ஜனங்கள் இராஜாவையும், அவனுடைய வெற்றியையும் கொண்டாடும் விதமாக இவ்வாறு செய்வது வழக்கம். (2இராஜா 9:13)



ஓசன்னா என்பது எபிரெயச்சொல். இதற்கு இரட்சியும், இப்பொழுது உதவி புரியும் என்று பொருள். கூடாரப்பண்டிகை ஏழுநாட்கள் அனுசரிக்கப்படும். அப்பொழுது அனுதினமும் ஒருமுறை ""ஓசன்னா'' என்று ஜனங்கள்  கூறுவார்கள். பலிபீடத்தைச் சுற்றிலும் ஜனங்கள் மரக்கிளைகளைக் கைகளில் ஏந்திய பிரகாரமாக சுற்றி வந்து ""ஓசன்னா'' என்று கூறுவார்கள். இவ்வாறு ஏழு நாட்களுக்குத் தினமும் ஒருமுறை சுற்றிவருவார்கள். எட்டாவது நாளில் ஜனங்கள் ஏழு முறை பலிபீடத்தைச் சுற்றுவார்கள். அது ""மஹா ஓசன்னா'' என்று அழைக்கப்படுகிறது. இந்த வசனத்தில் ஜனங்கள் ஓசன்னா என்று ஓலமிடுகிறார்கள். தங்கள் விரோதிகளிடமிருந்து இயேசு கிறிஸ்து தங்களை இரட்சிப்பார் என்று எதிர்பார்த்து, ""தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா'' என்று ஆர்ப்பரித்தார்கள். ஆனால் இதே ஜனங்கள் ஐந்து நாட்களுக்குப் பின்பு ""இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும்'' என்று ஆர்ப்பரித்தார்கள்





Post a Comment

0 Comments