தாவீது சுந்தரானந்தம் || மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு ||

 மிஷனரிகளின் 

வாழ்க்கை வரலாறு


உயர்திரு. தாவீது சுந்தரானந்தம் 

(1771-1806)

(முதல் கிறித்தவ கிராமத்தைச் உருவாக்கியவர்)

தாவீது சுந்தரானந்தம் என்பவருடைய இயற்பெயர் சின்னமுத்து. இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் சாத்தான் குளம் மற்றும் முதலூர்க்கு இடையே உள்ள காலன்குடி என்ற கிராமத்தில் 1771 ம் ஆண்டு பிறந்தார்.இவருடைய பெற்றோர் பனை மரம் ஏறும் சாணார் குலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கருப்பட்டி வியாபாரம் செய்து வந்தார்கள்.

இளமை பருவம்:-

சின்னமுத்து சிறுவனாய் இருக்கும்போது ஏற்பட்ட வைசூரி நோயினால் இவருடைய பெற்றோர்கள் மரித்துப்போனார்கள். ஆகவே சின்னமுத்தும் அவர் சகோதரியும் விஜயராமபுரத்தில் இருந்த இவர்களுடைய தாய்மாமா வீட்டில் இருந்து வளர்ந்து வந்தார்கள்.சின்னமுத்து இளம் வயதிலேயே மிகவும் புத்திகூர்மை மிக்கவராய் இருந்தார். பல காரியங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார். கைநாட்டு வைத்தியம், ஜோதிடம், சிலம்பம் ஆடுதல் போன்றவற்றை கற்றுக்கொண்டார்.சின்னமுத்துவின் 17 ம் வயதாக இருக்கும்போது இவருடைய செயல்பாடுகளை அத்தைக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை இவருடைய அத்தை கொடுத்த வேலையை செய்ய தவறியதற்க்காக தயிர் கடையும் மத்தால் விரட்டி விரட்டி அடித்ததினால் அவமானத்தையும் வருத்தத்தையும் தாங்க முடியாமல் விஜயராமபுரம் கிராமத்தைவிட்டு வெளியேறி சாத்தான்குளம் வரை நடந்துசென்று அங்கிருந்து இராஜபாளையத்திற்கு கருப்புகட்டி ஏற்றி சென்று கொண்டிருந்த மாட்டு வண்டியில் பிரயாணப்பட்டு, பின்னர் அங்கிருத்து தஞ்சாவூருக்கு சென்றார்.

இரட்சிப்பின் அனுபவம்:-

தஞ்சாவூர் சென்றடைந்த சின்னமுத்து அங்கு ஒரு கடையில் வேலையாளாக சேர்ந்தார். அப்பொழுது ஒரு நாளில் தெருக்களில் நின்று நற்செய்திபணி செய்துகொண்டிருந்த குருவானவர் கிறிஸ்டியான் பிரடெரிக் சுவாட்ஸ் ஐயர் அவர்களின் நற்செய்தி பணியினால் கவரப்பட்டார். ஆகவே அவரிடம் நல்ல தொடர்பு ஏற்பட்டது. சுவாட்ஸ் ஐயர் மூலம் இயேசு கிறிஸ்துவைப்பற்றி கேள்விப்பட்டு பின்னர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு 1790 ம் ஆண்டு தாவீது சுந்தரானந்தம் என்று ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். இவர்தான் திருநெல்வேலி பகுதியில் சாணார் குலத்தை சேர்ந்த முதல் கிறிஸ்தவர் ஆவார்.பின்னர் தாவீது சுந்தரானந்தம் விசுவாசத்தில் பலப்பட்டு கிறிஸ்துவுக்கு நல்ல போர் சேவகனாய் செயல்பட தன்னை அற்பணித்தார். சுவாட்ஸ் ஐயர் தான் செல்லும் இடமெல்லாம் தாவீது சுந்தரானந்தத்தை அழைத்து செல்வார். இந்நிலையில் திருநெல்வேலி பகுதியில் குளோரிந்தா அம்மையார் நற்செய்திபணி மூலமாக அநேகர் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.

கிறிஸ்தவர்களை விசுவாசத்தில் பலப்படுத்த ஒரு உபதேசியாரை திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்குமாறு குளோரிந்தா அம்மையார் தஞ்சாவூரில் நற்செய்திபணி செய்து கொண்டிருந்த சுவாட்ஸ் ஐயருக்கு கடிதம் எழுதினார்கள்.ஆகவே சுவாட்ஸ் ஐயர் அவர்கள் 1796 ம் ஆண்டு திருநெல்வேலி பகுதிக்கு உபதேசியார் திரு. கற்பகம் சத்தியநாதன் அவர்களோடு, தாவீது சுந்தரானந்தத்தையும் பாளையங்கோட்டைக்கு அனுப்பி வைத்தார்கள்.

சொந்த ஊரில் சாட்சி:-

இந்நிலையில் 1796 ம் ஆண்டு பாளையங்கோட்டையில் குளோரிந்தா அம்மையாரின் தலைமையில் நற்செய்திபணி செய்து கொண்டிருந்த தாவீது சுந்தரானந்தம் தான் வளர்ந்த விஜயராமபுரத்திற்கு உறவினர்களை காண வந்தார்.தாவீது சுந்தரானந்தம் நாகரிகமான ஆடை அணிந்து கம்பீரமாக நடந்து சென்றதை கண்ட அவரது உறவினர்கள் இவரை ஒரு அரசாங்க அதிகாரி என்று நினைத்தனர். அப்போது மரித்து விட்டார் என்று கருதப்பட்டு வந்த நிலையில் தாவீது சுந்தரானந்தம் என்ற சின்னமுத்து வீடு திரும்பியது கண்டு அவருடைய உற்றார் உறவினர்கள் யாவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். தாவீது தன்னுடைய விவரத்தை சொன்னவுடன் அவருடைய மாமாவும் அத்தையும் அளவு கடந்த மகிழ்ச்சியுடன் இவரை கட்டி தழுவிக்கொண்டார்கள். 

தாவீது சுந்தரானந்தம் அவருடைய சொந்தக்காரர்களுக்கெல்லாம் கிறிஸ்துவின் நற்செய்திபணியை அறிவித்தார். இதனால் விஜயராம புரத்தில் இவருடைய நான்கு சொந்தகார குடும்பத்தினரை சேர்ந்த 18 பேர்கள் பதனீர் காலம் முடிந்த பின்னர் ஞானஸ்நானம் பெற்றார்கள். ஆகவே இவர்கள் ஆண்டவரை ஆராதிக்க பனை ஓலையினால் கூரை செய்யப்பட்ட ஆலயம் கட்டப்பட்டது. விஜயராம புரத்தில் குளோரிந்தா அம்மையார் மூலம் ஒரு பள்ளிக்கூடமும் ஆரம்பிக்கப்பட்டது. விஜயராம புரத்திலிருந்து தான் கிறிஸ்தவ சமயம் திருநெல்வேலி சாணார் இன மக்கள் மத்தியில் பரவியது.

தாவீது சுந்தரானந்தம் அவர்கள் சாத்தான் குளத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நற்செய்திபணி செய்ய ஆரம்பித்தார். இதனால் பலர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். இதனால் 1797 ம் ஆண்டு அக்டோபர் மாதம் சண்முகபுரத்தை சேர்ந்த 40 பேருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. ஆகவே அவர்கள் ஆண்டவரை ஆராதிப்பதற்கு சண்முக புரத்தில் பனை ஓலை மூலமாக கூரை அமைத்து ஆலயம் ஏற்படுத்தப்பட்டது. 

கிபி 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தாழ்த்தப்பட்ட ஜாதியாய் கருதப்பட்ட சாணார் குலத்திலிருந்து நற்செய்திபணியை பறைசாற்ற கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட தாவீது சுந்தரானந்தம் சாத்தான் குளம் பகுதியில் உபதேசியாராக சுவாட்ஸ் ஐயர் மூலம் நியமிக்கப்பட்டார். இவர்தான் சாணார் குல மக்களின் முதல் உபதேசியாரும் ஆவார். 

தாவீது சுந்தரானந்தன் உபதேசியார் திருநெல்வேலியின் தென் கிழக்கு பகுதியான சாத்தான் குளம், திசையன்விளை, உவரி, குலசேகர பட்டினம், தென்திருப்பேரை, ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களில் நற்செய்திபணி அறிவித்தார். இதன் விளைவாக அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். அங்கும் சிறிய ஆலயங்கள் கட்டப்பட்டன.

இந்நிலையில் தாவீது சுந்தரானந்தம் அவர்களின் நற்செய்தி பணியினால் சாணார் குலத்திலிருந்து அநேகர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த இந்துமத பூசாரிகள் தங்கள் கடும் எதிப்பை வெளிப்படுத்தினார்கள். ஆகவே விஜயராமபுரம், சண்முக புரம், சந்திர ராயர் புரம், சாமி தோப்பு, தட்டார் மடம் போன்ற பல கிராமங்களில் ஏற்படுத்தப்பட்ட ஆலயங்களை தீயிலிட்டு கொளுத்தினார்கள். கிறிஸ்தவர்கள் மேலும் கிராமங்களில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். கிறிஸ்தவர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். கிறிஸ்தவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டது. அநேகர் கிறிஸ்தவர்களுக்கு விவசாய வேலைகள், பனை ஏறும் வேலைகள், கருப்புகட்டி வியாபாரங்கள் செய்வது எல்லாம் மறுக்கப்பட்டது. கிறிஸ்தவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்திரவாதம் இல்லாமற் போயிற்று. இந்நிலையில் கிறிஸ்தவர்கள் உபத்திரவங்களில் இருந்து ஒதுங்கி இருந்து நிம்மதியாய் வாழ விரும்பினார்கள்.

இந்நிலையில் கிறிஸ்தவர்கள் பாதுகாப்பாய் இருக்க ஒரு ஆங்கிலேய இராணுவ அதிகாரி எவரெஸ்ட் என்பவரின் பண உதவியினால் சாத்தான் குளம் அருகே அடையல் கிராமத்தின் அருகே தரிசு நிலமாக இருந்த நிலத்தை வாங்கி, அங்கு கிறிஸ்தவர் குடியேற்றப்பட்டார்கள். அவர்களுக்கு என்று ஒரு சிறிய ஜெப ஆலயமும் கட்டப்பட்டது. அங்கே ஒரு கிணறும் தோண்டப்பட்டது.

முதலூர்  உதயம்:-

1799 ம் ஆண்டு கிறிஸ்தவர்கள் விஜயராம புரம் மற்றும் சண்முக புரத்தை விட்டு வெளியேறி சுமார் 28 குடும்பங்கள் வீடுகளை கட்டி குடியேறினார்கள். இது முற்றிலும் கிறிஸ்தவர்கள் அடங்கிய முதல் ஊர் என்பதினால் தாவீது சுந்தரானந்தம் அவர்களின் விருப்பப்படி முதலூர் என்று பெயரிடப்பட்டது. இது கிறிஸ்தவர்களுக்கு ஒரு அடைக்கலப்பட்டணமாக இருந்தது.

1800 ல் முதலூரில் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை 200 ஆக உயர்ந்தது. தாவீது சுந்தரானந்தம் முதலூரின் உபதேசியாராக இருந்து நற்செய்திபணி செய்து வந்தார். அவருடைய சொல்லும், செயலும், ஜனங்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் சாணார் குல மக்கள் அநேகர் மந்தை மந்தையாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். 

1801-ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் ஆங்கிலேய படை வீரர்களுக்கும் கட்டப்பொம்மன் படைவீரர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், இந்துமத பூசாரிகளின் தூண்டுதலின்படி கட்டப்பொம்மன் படை வீரர்கள் முதலூர் கிறிஸ்தவர்களை தாக்கி அவர்கள் வீடுகளை தீக்கிரையாக்கினார்கள். அநேகர் கொல்லப்பட்டார்கள். முதலூர் ஆலயமும் தீக்கிரையானது. இவற்றையெல்லாம் கிறிஸ்தவர்கள் சகித்துக்கொண்டார்கள்.

இந்நிலையில் இந்துமத பூசாரிகள் பொது மக்கள் மீது கொடுத்த கெடுபிடிகள், நெருக்கடிகள், அநியாய வரி விதிப்புகள், கூலி கொடுக்காமல் வேலை வாங்குதல், கொடுமைகள், வேதனைகள் மத்தியில் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.

1802 ம் ஆண்டு ஏப்ரல் முதல் 1803 ம் ஆண்டு ஜுன் மாதத்திற்கு இடையே 70 கிராமங்களை சேர்ந்த 5382 பேர் குருவானவர் கற்பகம் சத்தியநாதன் மூலம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள். இதில் 66 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களும் அடங்குவார்கள். இக்கால கட்டத்தில் சாணார் இன மக்கள் மத்தியில் மாபெரும் எழுப்புதல் உண்யிற்று. இதில் தாவீது சுந்தரானந்தத்தின் பங்கும் செயல்பாடும் அதிகமாக இருந்தது. திருச்சபை வளர்ந்து பெருகியது.

1802 ம் ஆண்டு முதல் கிறிஸ்தவர்களின் பாதுகாப்புக்கு என்று அநேக அடைக்கல பட்டணங்கள் உறுவாக்கப்பட்டது. இவற்றில் முக்கியமானது சாயர்புரம், நாசரேத், சமாரியா, பெத்லகேம், எருசலேம், கடாட்சபுரம், அன்பின் நகரம், கிறிஸ்தியான் நகரம், சுவிஷேச புரம் போன்ற பல கிறிஸ்தவ குடியேற்ற கிராமங்கள் உறுவாக்கப்பட்டன. 

இந்துமத பூசாரிகள் கிறிஸ்தவர்களை எந்த அளவு ஒடுக்கினார்களோ அந்த அளவு கிறிஸ்தவர்கள் பெருகினார்கள். ஆயினும் இந்துமத பூசாரிகள் கிறிஸ்தவர்களின் அடைக்கல பட்டணங்களுக்குள் புகுந்து 1803 ம் ஆண்டு மே மாதம் 22 ம் நாள் முதலூர் உட்பட பல கிறிஸ்தவ கிராமங்களில் கட்டப்பட்டிருந்த ஆலயங்களை தீக்கொளுத்தி, கிறிஸ்தவர்களின் வீடுகளை தீக்கிறையாக்கப்பட்டது. பல கிராமங்கள் சூறையாடப்பட்டது. பல இன்னல்கள் மத்தியிலும் கிறிஸ்தவர்கள் பின்வாங்காமல் விசுவாசத்தில் உறுதியாய் நின்றார்கள். அவர்களை தாவீது சுந்தரானந்தம் தைரியப்படுத்தினார். ஆயினும் கிறிஸ்தவர்களுக்கு நேரிட்ட துன்பம் அதிகமானது.

தாவீது சுந்தரானந்தத்தால் அநீதியை தொடர்ந்து பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே கிறிஸ்தவர்களை பாதுகாக்கவும், தற்காத்துக்கொள்ளவும் "தடிகம்புகாரர்" 'கிறிஸ்தவ இளைஞர் குழு' என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் கற்றுக்கொடுத்தார். இதில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்த அநேக இளைஞர்கள் சேர்ந்து கொண்டார்கள். இவர்கள் எங்கெங்கெல்லாம் கிறிஸ்தவர்கள் இந்துமத பூசாரிகள் மூலம் தாக்கப்பட்டார்களே அங்கு தடிகம்புகாரர் கிறிஸ்தவ இளைஞர் குழு விரைந்து சென்று கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து விட்டு திரும்பினார்கள். தாவீது சுந்தரனாரின் இத்தகைய செயலால் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் சில காலம் குறைந்தது. தாவீது சுந்தரானந்தம் அவர்களின் இந்த நடவடிக்கைககள் கிறிஸ்தவ அன்பை வெளிக்காட்டாத படியினால், இந்த செயல்பாடுகள் கிறிஸ்தவ மிஷனெரிகளுக்குள் மிகவும் விமர்சனத்திற்குள்ளானது. இவருடைய செயல்பாடுகள் கிறிஸ்தவர்களின் தற்பாதுகாப்புக்கு தேவையாகத்தான் இருந்தது.தாவீது சுந்தரானந்தத்தின் துணிச்சல், மக்களிடம் அவர் காட்டிய பரிவு, மனித நேயம் மற்றும் கிறிஸ்தவர்களின் உரிமைகளை நிலைநாட்ட எடுத்த முயர்ச்சிகள் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு காரணமாயும் இருந்தது. முதலூரின் சுற்றுபுரத்தில் இருந்த இந்துமத பூசாரிகள் இந்த தடிகம்புக்காரர் கிறிஸ்தவ இளைஞர் குழுவிற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார்கள். ஆகவே அவர்கள் தாவீது சுந்தரானந்தத்தை கொலை செய்வதற்கு சதி திட்டம் தீட்டினார்கள். இந்நிலையில் பெத்லகேம் என்ற கிராமத்தில் நடைபெற இருந்த பண்டிகைக்கு சென்றார். அப்பொழுது சிலர் தந்திரக்காரர்களின் நயவஞ்சகமாக சூழ்ச்சியினால், தாவீது சுந்தரனந்தம் அவர்கள் உண்ணும் உணவில் விஷம் வைத்து கொடுக்கப்பட்டது. இதை அறியாமல் உணவு உட்கொண்ட தாவீது சுந்தரானந்தம், 1806 ம் ஆண்டு பெத்லகேம் என்ற கிராமத்தில் 36 ம் வயதில் அகால மரணமடைந்தார். தாவீது சுந்தரானந்தம் ஜாதிக்கொடுமை, பொறாமை மற்றும் சமய சகிப்பின்மை ஆகிய கொடுமைகளுக்கு பலியானார்.

தாவீது சுந்தரானந்தம் அவர்கள் தான் திருநெல்வேலி கிறிஸ்தவத்தில் சாணார் குலத்தில் இருந்து கிறிஸ்துவுக்காய் வைராக்கியமாய் எழுந்த முதல் கிறிஸ்தவர் மற்றும் முதல் உபதேசியார் ஆவார். இதைப்போல திருநெல்வேலி கிறிஸ்தவத்தின் முதல் இரத்த சாட்சியும் இவரே. அப்படியே திருநெல்வேலி கிறிஸ்தவத்தில், கிறிஸ்தவ இளைஞர் சேனையை ஏற்படுத்தியவரும் இவரே.

தாவீது சுந்தரானந்தம் அவர்கள் "முதலூரின் தந்தை" என்றுஅழைக்கப்படுகின்றார். இவருடைய நற்செய்தி பணியை நினைவுகூறும் படி தூத்துகுடி நாசரேத் திருமன்றத்தில் தாவீது சுந்தரானந்தம் சபை மன்றம் உறுவாக்கப்பட்டு 70 திருச்சபைகளுக்கு பொறுப்பாக இருந்து இன்றும் அவருடை நினைவுகளை தாங்கி இவருடைய நற்செய்திபணியை தொடர்ந்து வருகின்றது.இன்றைக்கு தாவீது சுந்தரானந்தம் போல துடிப்பான இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கிறிஸ்துவின் நற்செய்திப்பணி செய்ய தேவைபடுகின்றார்கள்.

 இளைஞர்களே!...யுவதிகளே!...


கிறிஸ்துவுக்காக உன்னை அற்பணிப்பாயா???......



Post a Comment

1 Comments

  1. An inspiring testimony of this man of God which moves our faith to the next level of sacrificial life to God

    Continue posting such articles for the glory of God

    ReplyDelete